நல்லதை நாடி நின்று நாமம் சொல்ல வேண்டுமே !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் குருவே சரணம்

நலமே தரும் குசா எண் தத்துவம்

இறைவனிடமிருந்து தோன்றிய சக்திகள் பலப்பல. அவற்றில் ஒன்றே எண் சக்தி. ஒன்று முதல் ஒன்பது வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்களைப் பற்றி ஒரு மனித வாழ்நாளில் முழுமையாகப் புரிந்து கொள்வது மிகக் கடினம். இறைவனைப் புரிந்து கொண்டவர்களால் தான் எண்களைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். சதா சர்வ காலமும் இறைவன் திருவடியில் உறையும் சித்தர்கள் மட்டுமே எண்களை முழுமையாகப் புரிந்து கொண்டவர்கள்.

எங்கும் எண்கள் எதிலும் எண்கள்

நாம் உலகில் காணும் எல்லாப் பொருட்களின், ஜீவ ராசிகளின் தோற்றத்திற்கும், ஆதாரத்திற்கும், இருப்பிற்கும், அழிவிற்கும், மறைவிற்கும், இவ்வாறு எல்லாவற்றிற்குமே காரணம் எண் சக்திகள்தான்.

சாதாரண மனிதன் ஒரே ஒரு எண்ணைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள மட்டுமே, குறைந்தது 20 வருடங்கள் ஆகும். சற்குருநாதர் ஒருவர் கூறும் பூஜை முறைகளை இடைவிடாது நம்பிக்கையுடன் கடைபிடித்து வருவதால் மட்டுமே எண் சக்திகளை முழுமையாக அறிந்து, நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியும். ஆனால், குருநாதரைப் பெறாதோரும் எண் சக்திகளை ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்த சித்தர்கள் பல எளிய வழிமுறைகளை அருளியுள்ளனர்.

1. இறைவனைப்போல் வேதமும் அநாதியானது. ஆதி அந்தம் இல்லாதது. ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் இறைவனின் கண்களாகப் போற்றப்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வேத மந்திரங்களை முறையாக ஓதுவதால் எண் சக்திகளை எளிமையாகப் பெறமுடியும். இதிலும் சிறப்பாக சாம வேத மந்திரங்களை ஓதுவதால் கிட்டும் பலன்களோ அளப்பரியவை. தேவமொழி அறியாதோர் தமிழ் மொழியில் உள்ள தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற பதிகங்களை ஓதி வரலாம்.

எண் சக்தி அனைவருக்கும் இன்றியமையாதது என்பதால் தான் வேதம் ஓதி, எண் சக்தியைப் பெறும் முறையை “ஓதாமால் ஒரு நாளும் இருக்க வேண்டாம்,” என நம் பெரியோர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

2. ஒவ்வொரு தெய்வத்தின் கல்யாண குணங்களை வர்ணித்து 108, 300, 1008 என்ற எண்ணிக்கையில் இறை நாமங்கள் உள்ளன. இவற்றையே அந்தந்த தெய்வத்திற்குரிய அஷ்டோத்திர சத நாமாவளி, திரிசதி, சகஸ்ரநாமம் என்று அழைக்கிறோம். இவைகளில் ஏதாவது ஒன்றை ஓதி, சுவாமிக்கு மணமுள்ள மலர்களால் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவதால் எண்சக்திகளின் பலன்களைத் துரிதமாகப் பெறலாம்.

3. நமது கையில் கட்டை விரலைத் தவிர ஏனைய விரல்கள் மூன்று பிரிவுகளாக உள்ளன. இவ்வாறு ஒவ்வொரு பிரிவைக் குறிக்கும் கோடு அல்லது கோடுகளை அங்குலாஸ்திதி என்று அழைக்கிறோம். இந்த அங்குலாஸ்திதியில் கட்டைவிரல் நுனியை வைத்து எண்ணும் முறை உண்டு. முருகா, கோவிந்தா, ராமா, கிருஷ்ணா, சிவா, நாராயணா என்று இறை நாமங்களைக் கூறி ஜபிக்கும் போது அந்த ஜப எண்ணிக்கையைக் குறிப்பதற்கு இவ்வாறு அங்குலாஸ்திதிகளைப் பயன்படுத்தி வந்தாலும் எண் சக்திகள் பெருகும்.

மேற்கூறிய வழிபாடுகள் அனைத்தும் எண்கள் முலம் பெறக்கூடிய பலன்களைப் பாமர மக்களும் பெற ஏதுவானவை.

எண்சக்திகள் பொலியும்
திருமலை திருத்தலம்

திருமங்கலம் திருத்தலம்

4. எண் சக்திகள் மிகுந்த திருமலை (திருநெல்வேலி-செங்கோட்டை அருகே), திருச்சி லால்குடி அருகே திருமங்கலம், குசா சக்திகள் பொலியும் ஒன்பத்துவேலி போன்ற தலங்களிலும், எண்கள் பெயரில் அமையும் ஓரிகை, நான்குநேரி, எண்கண், எட்டுக்குடி போன்ற தலங்களிலும் எண் சக்திகள் பெருகும். இத்தலங்களில் தசமி திதிகளில் வழிபட்டு வருதல் நலம் தரும்.

ஒன்றிலிருந்து ஒன்பது வரை உள்ள எண்களில் ஒரு எண்ணைப் பற்றிய அறிவை பெறுவதற்கு மட்டுமே 20 ஆண்டு காலம் தேவைப்படும் என்றால் ஒரு சாதாரண மனிதனால் அனைத்து எண்களைப் பற்றியும் தன்னுடைய ஆயுள் காலத்தில் அறிந்து கொள்ள முடியாது அல்லவா? அப்படியானால் ஒன்றிரண்டு எண்களைப் பற்றி மட்டுமாவது ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்நாளில் அறிந்து கடைபிடிக்க முயற்சி செய்தல் சிறப்பாகும்.

தங்களுடைய பிறந்த ஆண்டு எண், பிறந்த நாள் எண், வீட்டு எண், கார் எண், போன் எண், வங்கிக் கணக்கு எண், பாஸ்போர்ட் எண், தனது குருநாதரின் பிறந்த எண், இஷ்ட தெய்வத்தின் பிறந்த எண், தனது குழந்தையின்  பிறந்த எண், மனைவியின் பிறந்த எண் என எத்தனை எத்தனையோ எண்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் தொடர்பு கொண்டிருக்கும். இந்நிலையில் எந்தெந்த எண்களைத் தேந்தெடுத்து பூஜை செய்வது என்ற குழப்பம் ஏற்படலாம்.

பொதுவாக, ஒருவருடைய வாழ்வில் மிகவும் நெருக்கமான தொடர்புடைய எண்களை முதலில் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது நல்லது. உதாரணமாக சில விஷயங்களைப் பார்ப்போம்.

1. ஒருவர் தன்னுடைய பிறந்த எண், விதி எண், பிறந்த நாள் எண், பிறந்த நட்சத்திர எண், தன்னுடைய பெயருக்கு அமையும் எண் இவைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதைத் தீவிரமாகப் பயன்படுத்தலாம்.

2. தன் மனைவியின் பிறந்த எண், தன்னுடைய குழந்தைகளின் பிறந்த எண் இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதைச் சிறப்பாக வழிபடலாம்.

3. தனது குல தெய்வம், இஷ்ட தெய்வத்திற்கு உகந்த எண், இஷ்ட தெய்வம் தோன்றிய எண், தனது குருநாதரின் பிறந்த எண் இவைகளில் ஏதாவது ஒன்றையும் கூடத் தேர்ந்தெடுக்கலாம்.

இவ்வாறு எண்களைத் தேர்ந்தெடுத்த பின்னர் தங்கள் வாழ்க்கையில் நிகழும் அன்றாட நிகழ்ச்சிகள் அனைத்திலும் இந்த எண்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வர வேண்டும். முடிந்தபோதெல்லாம் எல்லா இறை வழிபாடுகளிலும், பூஜைகளிலும் இந்த எண்களைப் பிரயோகம் செய்யும் முறைகளையும் ஆராய்ந்து செயல்படுத்தி வருதல் சிறப்பாகும்.

உதாரணமாக, மே மாதம் 21ம் தேதி பிறந்த ஒருவர் தன்னுடைய பிறந்த தேதியான மூன்றைத் தேர்தெடுத்து அதை வழிபடுவதாக வைத்துக் கொண்டால் அதை எப்படி எல்லாம் சிறப்பாக நிறைவேற்ற முடியும் என்பதை அறிவோம்.

1. முக்கண் ஈசனாம் சிவபெருமானை தினமும் அவருக்குரிய 300 நாமங்களை ஓதி, மூன்றாம் எண்ணுக்கு உரித்தான மஞ்சள் நிறக் கொன்றை, அரளிப் பூக்களால் அர்ச்சித்து வழிபடலாம்.
2. இட்லி, சப்பாத்தி, இனிப்புகள் என எந்த உணவை, பொருளை தானமாக வழங்குவதாக இருந்தாலும் 3, 12, 30, 300 என மூன்றின் எண்ணிக்கையில் அமையும்படி தானம் அளிப்பது சிறப்பு.

3. முடிந்த மட்டும் மூன்றாம் எண்ணுக்கு உரித்தான வடக்கு திசையை நோக்கி அமர்ந்திருத்தல் சிறப்பானது.

4. ஆடைகளை அணியும்போது அந்தந்த நாளுக்கு உரித்தான வண்ணங்களில் அணிவதால் பல நன்மைகளைப் பெறலாம். இவ்வாறு ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கையாள நினைக்கும்போது அதற்கு உரித்தானப் பொருட்களையும் தினமும் பயன்படுத்தி வருதல் நலம். வெள்ளிக் கிழமை அன்று, அன்றைய தினத்திற்கு உரித்தான வான நீல வண்ணத்தில் உடைகளைப் பயன்படுத்தினாலும், மஞ்சள் நிற கர்ச்சீப், தலையில் மஞ்சள் ரோஜா, மஞ்சள் நிற டை, மஞ்சள் வண்ண லெட்டர் பேட் போன்றவைகளைப் பயன்படுத்துவதால் எண் மூன்றின் சக்திகள் பெருகும்.

கிழமைநிறம்
  
ஞாயிறு  ஆரஞ்சு / ரோஸ்
திங்கள்  வெண்மை + சிவப்பு
செவ்வாய்   சிவப்பு
புதன்  பச்சை
வியாழன் மஞ்சள்
வெள்ளி     வெளிர் நீலம்
சனி   கறுப்பு / கருநீலம்
  

5. பணம் கொடுக்கும் போதும், வாங்கும் போதும் முடிந்த மட்டும் மூன்று எண்ணிக்கையை மனதில் கொண்டு செயல்படவும். ஒருவருக்கு ரூ1,500 தர வேண்டுமென்றால் அவருக்கு மூன்று 500 ரூபாய் நோட்டுக்களைத் தரலாம் அல்லவா? இவ்வாறு எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் எண் மூன்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்யவும். அதேபோல, ஒருவருக்கு ரூபாய் 400 தர வேண்டியிருந்தால் அவருக்கு முதலில் 300 ரூபாயையும், அதைத் தொடர்ந்து 100 ரூபாயையும் தருவதால் ஓரளவிற்கு எண் மூன்றின் சக்திகளை அந்தச் செயலில் நிலவச் செய்யலாம்.

6. காரியங்கள் செய்யும்போது கூடாநாள், சூன்ய திதி போன்ற பல்வேறு அம்சங்களைக் கணக்கில் கொள்வதுடன் மூன்றாம் தேதி, மூன்று மணி, மூன்று நிமிங்கள் போன்ற மூன்றின் தொடர்புகளையும் இணைக்க முயற்சி செய்யவும். உதாரணமாக, 6 மணி முதல் 7.15 மணி வரை ஒரு நற்காரியத்திற்கு முகூர்த்தம் குறிப்பதாக இருந்தால் இதை 6.15 முதல் 7.14 வரை என்று குறிக்கும்போது எண் மூன்றின் சக்திகள் அந்த முகூர்த்த நேரத்தில் நிரவி நிற்கும் என்பது நிச்சயம்.

ஸ்ரீசோமநாதர் நீடூர்

ஸ்ரீவேயுறுதோளியம்மை நீடூர்

7. எண் மூன்றின் சக்தியைப் பிரதிபலிக்கும் பொருட்களை முடிந்தபோதெல்லாம் வழிபடுவதும் சிறப்பான ஒரு செயலே. உதாரணமாக, சோமாஸ்கந்த மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, சூலாயுதம், தேங்காய், மூன்றாம் பிறை, பூண்டி மகான் போன்று சின் முத்திரை தரித்த மகான்கள், தெய்வ மூர்த்திகள் ஆகியோரை வணங்கலாம்.

8. மூன்று நதிகளின் சங்கமமாகத் திகழும் பவானி, லால்குடி அருகே நத்தம், அலகாபாத் திருவேணி சங்கமம் போன்ற இடங்களுக்குத் தீர்த்த யாத்திரை செய்து, அங்கு இயன்ற தான, தர்மங்களை நிறைவேற்றுதல்.

உலகில் உள்ள எந்த பொருளையும் நல்லது, கெட்டது என்று உறுதியாகப் பாகுபடுத்த முடியாது. பொதுவாக, நல்ல பொருள் என்று கருதப்படும் பொருளை தகாத காரியத்திற்கும், கெட்டது என்று கருதப்படும் பொருளை நல்ல காரியத்திற்கும் பயன்படுத்துவது இயற்கையே. தூய்மையான திருநீறு, எலுமிச்சம் பழத்தை செய்வினை, வசியம் போன்ற காரியங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். பாம்பின் விஷத்தை நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல் எந்த ஒரு பொருளும் பயன்படுத்தும் காரியத்தைப் பொறுத்து அதன் தன்மையில் மாறுபாட்டை அடைகின்றது. உதாரணமாக, ஒரு கத்தியை எடுத்துக் கொள்வோம். அதை நாம் அன்ன தானத்திற்குக் காய் நறுக்கவும் பயன்படுத்தலாம். பதிலாக அதை வேறு தகாத காரியத்திற்கும் பயன்படுத்தலாமே.

முழுக்க முழுக்க நன்மை மட்டுமே செய்யக்கூடிய பொருள் ஒன்று உண்டா? ஆம் என்று இதற்கு விடையளிக்கின்றார்கள் ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள். குசா என்ற ஓர் அற்புதமான எண் சக்தியை உலகத்திற்கென தாரை வார்த்துக் கொடுத்துள்ளார் திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மஹா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள்.

சித்தர்களால் அருளப் பெற்ற இந்த குசா சக்தி நன்மையை மட்டுமே நல்கக் கூடிய ஓர் ஒப்பற்ற சக்தியாகும். வருங்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஒரு சாதாரண மனிதனால் சமாளிக்க முடியாத அளவிற்கு உயர்ந்து விடும். இந்நிலையில் உணவுக்குக்கூட சம்பாதிக்க முடியாத நிலையில் உள்ள ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் உதவக் கூடிய மாமருந்தே, அரிய பொக்கிஷமே சித்த ரகசியமான குசா எண் சக்தியாகும்.

இந்த குசா தத்துவத்தின் அற்புதம் என்னவென்றால் இதைப் பிரயோகம் செய்வதற்கு எந்த மந்திரமும் கூற வேண்டியதில்லை. ஒரு நொடியில் இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம். எவரும் அறியாமல் ரகசியமாகவும் குசா சக்தியைப் பிரயோகம் செய்யலாம். சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், பல்வேறு துறைகளில் உள்ளவர்களும் அவரவர் சூழ்நிலைக்கேற்ப இதை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.

தமது குருநாதரிடம் கடுமையான குருகுல வாசத்தில் பன்னெடுங்காலம் தனது உடல், மனம், ஆவி அனைத்தையும் இறைச் சேவையிலேயே முழுமையாக அர்ப்பணித்த ஸ்ரீ-ல-ஸ்ரீ ஸ்வாமிகளின் திருஅருட் கருணையில் விளைந்த நல்முத்தே இந்த குசா என்னும் சித்த வேத தத்துவமாகும்.

குசா என்னும் எண் தத்துவத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரயோக முறைகளை சித்தர்கள் வகுத்துத் தந்துள்ளனர். இதில் கலியுக நியதியாக 1008 முறைகளை மட்டுமே ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள் அருளியுள்ளார்கள். அவற்றில் ஒரு சிலவற்றை மட்டுமே இங்கு அளிக்கிறோம்.

குசா முதல் தத்துவம்

ஒன்று, இரண்டு, மூன்று என்று தொடரும் எண்ணிக்கையில் ஒன்பதை அடுத்து, பத்திற்கு முன் வருவது குசா.
இந்த முதல் தத்துவத்தை எப்படிப் பயன்படுத்துவது?

எண்ணால் கணக்கிடக் கூடிய பொருட்களை எண்ணும் போது ஒன்று, இரண்டு, மூன்று... என்று எண்ணிக் கொண்டே வந்து, பத்தாவது பொருளை எண்ணும் போது பத்து என்று எண்ணாமல் குசம் என்று வாய்விட்டோ, மனதிற்குள் சொல்லியோ எண்ண வேண்டும்.

ஸ்ரீதுர்கை ஒன்பத்துவேலி

உதாரணமாக, உங்களிடம் பத்து ஆப்பிள் பழங்கள் இருந்தால் அவற்றை வரிசையாக வைத்து ஒன்று, இரண்டு, மூன்று..... என்று எண்ணிக் கொண்டே வந்து பத்தாவது ஆப்பிளை எண்ணும்போது பத்து என்று சொல்வதற்குப் பதிலாக குசம் என்று சொல்ல வேண்டும். குசம் என்ற வார்த்தையை வாய்விட்டோ மனதிற்குள்ளோ சொல்லிக் கொள்ளலாம்.

இங்கே குசம் என்பது ஒரு சித்த வேதப் பிரயோக பதமாகும். இதை எந்த மதத்தவரும், சாதி, இன, குல பேதமின்றி கூறலாம். குசம் என்பது ஜாதி மத, இன பேதம் கடந்த ஒரு சித்த வேதப் பிரயோக முறையாகும். இதில் வேறு எவ்வித மந்திர, தந்திர பிரயோகமும் சேர்க்க வேண்டியதில்லை.

இவ்வாறு எண்ணுவதால் என்ன பலன் என்று பார்ப்போமா?

குசா பிரயோகத்தின் பலன்களை வார்த்தைகளால் விளக்குவதை விட ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள் தாமே நடத்திக் காட்டி அருளிய அனுபவப் பாடங்கள் மூலமாகவே இங்கு உங்களுக்கு விளக்குகிறோம்.

ஒரு முறை ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் ஒரு ஹாலில் பத்து டியூப் லைட்டுகள் போட வேண்டியிருந்தது. அப்போது ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள் யாருக்கும் தெரியாமல் அந்த பத்து டியூப் லைட்டுகளை ஒரு மேஜை மேல் வரிசையாக அடுக்கி வைத்தார். அவற்றை ஒன்று, இரண்டு, மூன்று ... எட்டு, ஒன்பது, குசம் என்று எண்ணி வைத்துவிட்டார்.

மின்சார வேலைகளைச் செய்யும் ஒரு அடியாரை அழைத்து, அவரிடம் அந்தப் பத்து டியூப் லைட்டுகளைக் கொடுத்து, எந்தெந்த இடத்தில் அவற்றை மாட்ட வேண்டும் என்று நேரிடையாக விளக்கினார். ஸ்வாமிகள் கூறியபடியே அந்த அடியாரும் ஒவ்வொரு டியூப் லைட்டாக அவர் கூறிய இடத்தில் மாட்டிக் கொண்டு வந்தார்.

ஸ்ரீவன்மீகநாதர் ஒன்பத்துவேலி

ஒன்று, இரண்டு... என மாட்டிக் கொண்டே வந்தவர் ஒன்பது டியூப் லைட்டுகளை மாட்டிய பின்னர் பத்தாவது டியூப் லைட்டை மாட்ட நினைக்கும் போது அந்தப் பத்தாவது டியூப் லைட்டால் அப்படி ஒன்றும் அதிகமான வெளிச்சம் கிடைத்து விடாது. ஒன்பது டியூப் லைட்டுகளே அந்த இடத்திற்குத் தேவையான வெளிச்சத்தைத் தந்து விடும் என்ற முடிவுக்கு வந்தார். எனவே, ஒரு டியூப் லைட் மிச்சமாகியது.

வேலை முடிந்த விபரத்தை ஸ்வாமிகளிடம் தெரிவிக்கவே அவரும் அந்த இடத்தை வந்து பார்த்தார். அடியாரின் கருத்து சரியாகவே இருந்தது. ஒன்பது டியூப் லைட்டுகளே போட்டிருந்தாலும், அவை பத்து டியூப் லைட்டுகள் தரக் கூடிய வெளிச்சத்தைத் தரும் வகையில் அமைந்து விட்டன.

ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள், ஏன் சார், ஒன்பது லைட்டுகள் போதுமா? இதையும் மாட்டி விடுங்களேன் என்று கூறினார். அடியாரும் வாத்யாரே, இந்த இடத்தில் பத்தாவது லைட் போடுவதால் எந்த விதத்திலும் அதிகப் படியான வெளிச்சம் வரப் போவதில்லை. ஒன்பது லைட்டுகளே இந்த இடத்திற்குப் போதும் என்பது அடியேனுடைய கருத்து, நீங்கள் விரும்பினால் அந்தப் பத்தாவது லைட்டைப் போட்டுத் தருகிறேன். என்று கூறி விட்டார். ஸ்வாமிகளும் அவர் கருத்தை ஏற்று, ஒன்பது ட்யூப் லைட் போதும் எனச் சொல்லிவிட்டார்.

இதுவே குசா நிகழ்த்தும் அற்புதம். நூற்றுக்குப் பத்து என்ற கணக்கில பொருள் செலவும், மின் கட்டணமும் குறைந்தால் அது ஒரு நடுத்தர குடும்பத்தில் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தானே?

அன்னதானத்தில் குசா தத்துவம்

நமது ஆஸ்ரமத்தில் எப்போதுமே மந்தார இலையில் தான் அன்னதானம் தருவது வழக்கம். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும், நாம் சூடான பொங்கல், பிரிஞ்சி, பிரியாணி இவைகளில் மணம் கமழும் ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், ஜாதிக்காய் போன்றவற்றைச் சேர்த்துச் சமைப்பதால், மற்ற இலைகளில் வைத்துப் பரிமாறும்போது இலைகளில் திரவியங்களின் மூல வாசனையில் மாறுபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஆனால், மந்தார இலையின் சிறப்புத் தன்மை என்னவென்றால் எவ்வளவு சூடான உணவுப் பொருளை அதில் வைத்தாலும் அதன் குணம், மணம், சுவை, இரசாயனத் தன்மையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. அது மட்டுமல்லாமல் உணவு உண்ட பின்னர் அந்த இலைகள் கீழே எறியப்பட்டாலும் அதை உண்ணும் ஆடு, மாடுகள் மிக்க விருப்பத்துடன் உண்ணும் வகையில் இலைகள் பசுமையாகவே இருக்கும்.

ஸ்ரீசோமகமலாம்பாள் ஒன்பத்துவேலி

மந்தார இலையின் தெய்வீக குணங்கள்
மந்தார இலையை தையல் இலை என்றும் சொல்வார்கள். சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்ட பிரம்மாவின் மண்டை ஓட்டிற்குச் சாப விமோசனம் அளிப்பதற்காகப் பெருமான் பல இடங்களிலும் சென்று பிட்சை ஏற்று திருவிளையாடல் நிகழ்த்தினார் அல்லவா? ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் என்ற பெயர் கொண்ட நமது ஆஸ்ரமத்திலும் சிவபெருமான் காசி விசாலாட்சி தேவியிடம் பிட்சை ஏற்றுத் திருவிளையாடல் புரிந்த, அற்புத தெய்வீக நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் இங்கே அன்னதானம் நிகழ்த்தப் பெறுகிறது.

பல இலைகளை ஒன்று சேர்த்துத் தைக்கப்பட்ட காரணத்தால் மந்தார இலை கபால பாத்திரம் என்ற பெயரைப் பெற்று எம்பிரான் கையிலமர்ந்த பிரம்மாவின் கபாலமாக அனுகிரகச் சக்திகளை வாரி வழங்குகின்றது.

உயிர் நீத்த பின்னும் உன்னத சேவை

தன்னலம் கருதாமல், எங்கு ஆயிரம் பேருக்குக் குறையாமல் அன்னதானம் வழங்கப்படுகிறதோ, அங்கே ஆயிரத்து ஒன்றாம் பக்தராக ஒரு மகான்

பிரசாதம் ஏற்றுக் கொள்வார் என்பது இறை நியதி. இந்த நியதிக்கேற்ப திருஅண்ணாமலை புண்ணிய பூமியில் அன்னதானம் வழங்கப்படும் போது எண்ணற்ற மகான்களும், யோகியரும், சித்தர்களும் பிரசாதம் ஏற்று அன்னதானம் வழங்கும் அன்பர்களுக்குத் தங்கள் அருளை வாரி வழங்குகின்றனர். அத்தகைய உத்தமர்கள் பிரசாதம் ஏற்ற இலைகள் காய்ந்து சருகாகும் போது, அவைகளை மற்ற இலைகளுடன் சேர்த்து நெருப்பில் ஆஹதியாக அளித்து விடுகிறோம். அப்போது அவற்றில் ஓர் அற்புதம் நிகழும்.

பகைமையை வேரறுக்கும் பங்காளிச் செடி

திருஅண்ணாமலையில் ஒவ்வொரு கணமும் விதவிதமான அற்புதமான மூலிகைச் செடி, கொடிகள் பூத்துக் குலுங்கும். பங்காளிச் செடி என்று சித்தர்களின் பரிபாஷையில் அழைக்கப்படும் ஒரு மூலிகைச்செடி சந்திர பகவான் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது முளைத்து, மூல நட்சத்திரம் நிலவும் நேரம் முழுவதும் திஅண்ணாமலையில் சேவை புரிந்து, சந்திர பகவான் மூல நட்சத்திரத்திலிருந்து பூராட நட்சத்திரத்தில் பிரவேசம் செய்யும் போது சருகாகி, மண்ணில் மறைந்து விடும்.

இந்தச் செடிகளின் விசேஷத் தன்மை என்னவென்றால் திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கிரிவலம் வருகின்ற அடியார்கள் மூச்சுக் காற்றில் வெளியாகும் கார்பன்-டை-ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு போன்ற உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நச்சுக் காற்றை இழுத்துக் கொண்டு, ஆக்ஸிஜன் என்ற தூய்மையான காற்றை வெளிவிடும்.

மூல நட்சத்திரம் நிலவும் காலம் மட்டுமே மண்ணில் தங்கும் இந்த அற்புத மூலிகைகளின் மேல் பட்டு வரும் காற்றானது கிரிவலம் செல்பவர்கள்மீது தவழும் போது, ஆஸ்துமா போன்ற மூச்சுக் குழல், நுரையீரல் நோய்களையும், தம்பதிகளிடையே ஏற்படும் மனத்தாங்கல்கள், சகோதரர்கள், சகோதரிகள், பங்காளிகளிடையே நிலவும் சொத்துத் தகராறு போன்ற பிரச்சனைகளையும் தீர்கக வல்லதாகிறது.

பங்காளிச் செடியின் பங்காளி யார் ?

அந்த அற்புதமான பங்காளிச் செடிகளுக்கு ஜீவ சக்தி அளிக்க வல்லதே மகான்களின் பிரசாத இலையிலிருந்து வெளியாகும் ஹோமப் புகையாகும். இவ்வாறு திருஅண்ணாமலையின் பரவெளிக்கும், அங்கு கிரிவலம் வருகின்ற அடியார்களின் மனத் தூய்மைக்கும் உறுதுணையாக நிற்பதே மந்தார இலையில் வழங்கப்படும் அன்னதானமாகும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மந்தார இலைகளை ஐம்பது, ஐம்பதாகக் கட்டி வைத்து அன்னதானத்திற்குப் பயன்படுத்துவதே நம் ஆஸ்ரம வழக்கம். ஒரு முறை அன்னதானம் செய்கையில் இந்த மந்தார இலைகளில் பத்துக் கட்டுக்களை, அதாவது 500 இலைகளை அடியார்களிடம் கொடுத்து பயன்படுத்தச் சொன்னார் ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள்.

அன்னதானம் வழங்கும் போது அதில் ஒன்றிரண்டு இலைகள் தையல்கள் பிரிந்தும், ஓட்டைகள் விழுந்தும், பூச்சி அரித்தும் இருந்ததால் சில சமயங்களில் ஒரு இலைக்கு பதிலாக இரண்டு இலைகளை ஒரு அன்பருக்கே வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 400 அன்பர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்குவதற்குள் 500 இலைகளும் தீர்ந்து விட்டன. பின்னர் இன்னும் 100 இலைகளுக்கு மேல் கொடுத்து அன்னதானத்தை நிறைவு செய்தார்கள்.

பிறிதோர் சமயத்தில் இவ்வாறு அன்னதானம் வழங்க வேண்டியிருந்த போது முன்னதாகவே ஸ்வாமிகள் அங்கு வந்து, 10 மந்தாரை இலைக் கட்டுகளை வரிசையாக வைத்தார்கள். அந்த பத்துக் கட்டுகளையும் ஒன்று, இரண்டு...எட்டு, ஒன்பது, குசம் என்று எண்ணினார்கள். அவ்வாறு எண்ணிய 10 கட்டுகளில் உள்ள 500 இலைகளை அன்னதானத்திற்கென கொடுத்து அனுப்பினார்கள்.

அது எவ்வாறு பயன்படுகிறது என்பதை கவனித்துப் பார்க்கும்படி ஆஸ்ரம அடியார்களிடம் சொல்லி வைத்தார்கள் ஸ்ரீ-ல-ஸ்ரீ ஸ்வாமிகள். குசா சக்தி பெற்ற அந்த இலைகள் அன்னதானத்திற்காகப் பயன்படுத்தப்பட்டபோது சுவையான சில நிகழ்ச்சிகள் நடந்தன.

கிரிவலம் வரும் ஒரு அன்பருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது அடுத்து வந்த ஒருவருக்கும் இன்னொரு இலையில் அன்னம் வழங்கினர். ஆனால், அந்த அன்பரோ, ஐயா முன்னால் இருப்பவர் என்னுடைய நண்பர்தான் அதனால், எனக்குத் தனியாக இலை எதுவும் வேண்டாம். என்னுடைய பங்கிற்கான சாதத்தையும் அவருடைய இலையிலேயே போட்டு விடுங்கள், நாங்கள் இருவரும் அதைப் பகிர்ந்து எடுத்துக் கொள்கிறோம் என்று கூறவே, ஒரே இலையில் இருவருக்கான பிரசாதம் வழங்கப்பட்டது.

சற்று நேரத்தில் ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பம் வந்தது. அவர்களில் ஒருவர் மட்டும் முன்னால் வந்து, சுவாமி, நாங்கள் ஆறு பேர் இருக்கிறோம். எங்களுக்குப் பிரசாதம் தாருங்கள். ஆனால், இரண்டு இலைகள் மட்டும் போதும். நாங்கள் அனைவரும் எங்களுக்குள் அதைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று கூறினார்.

இவ்வாறு பல அன்பர்கள் தங்களுக்குள்ளேயே அன்னதானத்தைப் பகிர்ந்து கொண்டதால், 400 இலைகளை வைத்தே 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்க முடிந்தது. இவ்வாறு குசா சக்தியின் மகிமையை அடியார்களுக்கு அனுபவப் பூர்வமாக விளக்கிக் காட்டினார் ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள்.

நான்காய் விரிந்து இரண்டில் அடங்கும்

ஒரு பொருளை நான்காய்ப் பிரித்து, அதை இரண்டில் அடக்கினால் அந்த நான்கு பிரிவுகளிலும் குசா சகதிகள் பரிணமிக்கும் என்பதே குசா எண் சக்தியின் இரண்டாம் தத்துவத்துக்கான விளக்கம்.

பயன்படுத்தும் முறை
மிகவும் பயனுள்ள இந்த இரண்டாம் தத்துவத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைச் சற்று விளக்கமாகக் கூறுகின்றோம். நான்கு நிலைகளாக இயக்கி இந்த இரண்டாம் தத்துவத்தைச் செயலாக்க வேண்டும். இதில் ஒவ்வொரு நிலையையும் கவனித்து, நன்றாகப் புரிந்து கொண்டு அடுத்த நிலைக்குச் செல்லவும். உதாரணமாக, உங்களிடம் நான்கு 500 ரூபாய் நோட்டுகள், (மொத்தம் ரூ 2000) இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

முதல் நிலை
இரண்டு நோட்டுகளை மட்டும் எடுத்து ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வைக்கவும்.

இரண்டாம் நிலை
அடுத்த இரண்டு நோட்டுகளை எடுத்து, முதல் வரிசைக்குக் கீழ் வைக்கவும்.

மூன்றாம் நிலை
இரண்டாம் வரிசையில் உள்ள நோட்டுகளை ஒன்று சேர்க்கவும்.

நான்காம் நிலை
முதல் வசையில் உள்ள நோட்டுகளை ஒன்று சேர்க்கவும்.

இப்போது முதல் வரிசையில் ஒன்று சேர்த்த ரூபாய் நோட்டுகளை எடுத்து வைத்து, உங்கள் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த 1,000 ரூபாய் செலவழிந்த பின்னர், இரண்டாம் வரிசையில் ஒன்று சேர்த்த ரூபாய் நோட்டுகளை செலவழித்துப் பாருங்கள்.

இவ்வாறு பணத்தைச் செலவழித்துப் பார்க்கும் போதுதான் இதுவரையில் நீங்கள் பணத்தைச் செலவழித்ததற்கும், குசா சக்தி பெற்ற பணத்தைச் செலவழிப்பதற்கும் உள்ள வேற்றுமையை உங்களால் உணர முடியும்.

குசா சக்தி பெற்ற பணம் நிச்சயமாக நல்ல காரியத்திற்குத்தான் பயன்படும். மேலும், பண விரயம், பொருள் விரயம் ஏற்படாமல் வருமானத்திற்குள்

உங்கள் செலவுகள் அனைத்தும் அடங்கி விடுவதை உங்களால் அனுபவ ரீதியாக உணர முடியும்.

சம்பளப் பணம், வங்கியில் போடும் பணம், மற்றவர்களிடமிருந்து கடனாகப் பெறும் பணம், மற்றவர்களுக்குக் கடனாகத் தரும் பணம், உண்ணும் உணவு (இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவை), பயணம் செல்லும் திசை, வாகன எண்கள், தொலைபேசி எண்கள், வங்கிக் கணக்கு எண்கள் இவ்வாறு எங்கெல்லாம், எதிலெல்லாம் எண்கள் சம்பந்தப்பட்டுள்ளதோ அவை எல்லாவற்றிலும் குசா சக்தியை நிரவி வரலாம்.

இவ்வாறு செய்வதால் உங்கள் வாழ்வில் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் சமாளிப்பதுடன் சமுதாயத்தில் நல்ல சக்தியையே நிரவச் செய்த புண்ணிய காரியத்திற்கான வெகுமதியும் இறைவனிடமிருந்து உங்களுக்கு வந்து சேரும். இத்துணை மிகமிக எளிய பூஜையால் கிட்டும் பலன்களோ அபரிமிதமானவை.

எளிமையோ எளிமை

குசா பூஜையின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் இந்த பூஜைக்கென ஒரு தனி இடமோ, அதிகப்படியான நேரமோ, அறியாத பாஷையில் சொல்ல வேண்டிய மந்திரமோ, பணச் செலவோ எதுவுமே கிடையாது என்பதுதான்.

இது மிகவும் ரகசியமான பூஜை முறையும் கூட. குசா தத்துவங்களில் பலவற்றை உங்கள் மனதிற்குள்ளேயே மிகவும் எளிமையாக நிறைவேற்றிவிடலாம்.

சாதி, மத, இன, குல பேதத்தைக் கடந்த பூஜையாக குசா நிலவுவதால் அனைவருக்கும் இந்த பூஜையை விளக்கிக் கூறி உலக மக்கள் அனைவருமே இந்தத் தத்துவத்தால் பலன் அடைய வழி வகுக்கலாம்.

நற்காரியங்களைச் செய்பவர்களுக்கும், சமூக நற்பணியாளர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் குசா எண் சக்தி ஓர் ஒப்பற்ற வரப்பிரசாதமாகும். அவரவர் அனுபவரீதியாகப் பயன்படுத்திப் பார்த்தால்தான் அதன் மகத்துவம் புரிய வரும்.

நல்லதே நடக்கட்டும்

பணம் மட்டும் அல்லாது ஒருவர் பயன்படுத்தும் எந்தப் பொருளை வேண்டுமானாலும் மேற்கூறிய முறையில் அமைத்து குசா சக்தியை அந்தப் பொருட்களில் நிரவச் செய்யலாம். இவ்வாறு குசா சக்தி பெற்ற பொருட்கள் நற்காரியங்களுக்கு மட்டுமே பயன்படும் என்பதால் குசா என்னும் நற்சக்தியை உலகில் நிலவச் செய்வதையே ஒரு ஆன்மீகத் தொண்டாக நாம் அனைவரும் ஆற்றி வரலாம் அல்லவா?

இங்கு நாம் குறிப்பிடும் குசா என்னும் அற்புத எண் சக்தி பல யுகங்களைக் கடந்து நிற்பது, பல்லாயிரக் கணக்கான முனிவர்களும், யோகிகளும், சித்தர்களும், மகான்களும் இந்த குசா சக்தியை மனித சமுதாயத்தின் நன்மைக்காகப் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்பதே நாம் இதுவரை அறியாத ரகசியம்.

குசாவின் இரண்டாம் தத்துவத்தை அவரவர் வசதி, தேவை, சூழ்நிலை, அனுபவத்திற்கேற்ப ஆயிரம், லட்சம் முறைகளில் பயன்டுத்திக் கொள்ளலாம்.

இங்கு சில முறைகளை மட்டுமே உங்கள் வசதிக்காக அளிக்கிறோம். இவற்றைத் தொடர்ந்து பழகி வந்தாலே மற்ற முறைகள் அனைத்தும் தானாகவே உங்களுக்கு மெல்ல மெல்லப் புரியவரும்.

எண் கணிதம்

ஒருவர் பிறந்த தேதிக்குரிய குசா எண்ணைக் கணித்து, அதை அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவதால் தொடர்ந்து நற்பயன்களைப் பெறலாம்.

உதாரணமாக, ஒருவருடைய பிறந்த தேதி 1-2-1980 என்று வைத்துக் கொண்டால் அவர் தன்னுடைய பிறந்த தேதி எண்ணான 1ம் தேதிக்கு உரித்தான குசா எண்ணைக் கணக்கிட வேண்டும். எண் 1க்கு உரித்தான குசா எண் 2. அதாவது, எண் ஒன்றை நான்கு மடங்காக விரித்தால், பெருக்கினால் 4 ஆகும். இந்த நான்கை இரண்டில் அடக்கினால் அதாவது, நான்கை இரண்டால் வகுத்தால் இரண்டாகும். இவ்வாறு ஒவ்வொரு எண்ணையும் நான்கால் பெருக்கி, இரண்டால் வகுப்பதால் கிட்டும் எண்ணே அந்த எண்ணின் குசா எண் ஆகும்.

எண் கணித சூத்திரங்களின்படி ஒன்றாம் தேதியில் பிறந்தவர்களுக்கு 1, 2, 3 எண்கள் சாதகமான பலன்களைத் தரும் என்பது விதி. இதில் எண் 2 குசா எண் சக்தியைப் பெற்றிருப்பதால், இரண்டாம் தேதியில் நிகழ்த்தும் காரியங்கள் நற்பலன்களை மட்டுமே தரும் என்பது குசா விதியாகும்.

இவ்வாறு ஒவ்வொரு எண்ணுக்கும் உரித்தான குசா எண்ணைக் கணக்கிட்டு நற்பலன்களை மட்டுமே அடைய இந்த சூத்திரம் வழி வகுக்கிறது.

மற்றொரு உதாரணம். ஒருவரின் பிறந்ததேதி 17-5-1990 என வைத்துக் கொள்வோம். இவருடைய பிறந்த எண் (1+7)=8 விதி எண் (1+7+5+1+9+9+0)=32=3+2=5. பிறந்த எண்ணான எட்டிற்கு உரித்தான அதிபதி சனீஸ்வர பகவான் ஆயுள் காரகனாக காரகத்துவம் பெற்று இருந்தாலும் உலகியல் நற்காரியங்களில், உதாராணமாக, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் எட்டாம் எண்ணைப் பயன்படுத்துவது இல்லை என்பதால் இந்த அன்பர் விதி எண்ணான ஐந்தை நற்காரிய சித்திக்காகப் பயன்படுத்தலாம். அல்லது பிறந்த எண் எட்டிற்கான குசா எண்ணைக் கணக்கிட்டால், அதாவது எட்டை நான்கால் பெருக்கி, இரண்டால் வகுத்தால் ஏழு (அதாவது, 8x 4= 32/2=16=1+6=7) வரும். இந்த அன்பர் குசா எண் 7ஐ எல்லா நற்காரியங்களுக்கும், சுப நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்திச் சிறப்படையலாம்.

எட்டுத் திக்கில் கிட்டி வரும் பலன்

ஒவ்வொரு திசைக்கும் உரித்தான எண் சக்திகள்  உள்ளன. அவற்றையும் சித்தர்கள் வகுத்துத் தந்துள்ளார்கள்.

எண்திசை
  
ஒன்று கிழக்கு
இரண்டு மேற்கு
மூன்று வடக்கு
நான்கு  தென்கிழக்கு
ஐந்து தெற்கு
ஆறு  தென்மேற்கு
ஏழு  வடமேற்கு
எட்டு  மேற்கு
ஒன்பது வடகிழக்கு
  

இந்தந்த தினத்திற்கு உரித்தான திசைகளில் அமர்ந்து காரியங்களைச் செய்வதால் நாம் செய்கின்ற காரியங்களில் வெற்றியும், தெளிவும் ஏற்படும். உதாரணமாக, 3-6-2010 அன்று மூன்றாம் தேதிக்கு உரித்தான வடக்கு திசையில் ஒரு மாணவர் அமர்ந்து படிப்பதால் கடினமான விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளமுடியும்.

அதே போல அன்றைய தினத்திற்கு உரித்தான குசா எண்ணைக் கணக்கிட்டு, அதாவது மூன்றாம் தேதியை நான்கால் பெருக்கி இரண்டால் வகுப்பதால் கிட்டும் ஆறாம் எண்ணுக்கு(3X4=12/2=6) உரித்தான தென்மேற்கு திசையான நிருதி திசையை நோக்கி அமர்ந்து படிப்பதால் அல்லது நிருதி திசைக்கு உரித்தான கன்னி மூலை கணபதியை வணங்கிய பின்னர் பாடங்களைப் படிப்பதால் பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வாழ்வில் உயர்நிலைகளை அடையலாம்.

ஓடியிட்ட பிச்சையால் நாடி வரும் யோகம்

ஒருபடி அரிசியை சாதமாக வடித்து காஞ்சீபுரத்தில் அன்னதானம் செய்தால் பத்து மடங்கு பலன் என்றால் திருஅண்ணாமலையில் அதே தானம் ஆயிரம் மடங்கு பலனைத் தருகிறது அல்லவா? அதேபோல ஒரு இடத்தில் நிகழ்த்தப் பெறும் தான, தர்மத்தின் பலன்களைப் பன்மடங்காகப் பெருக்கித் தருவதே குசா எண் சக்தியாகும்.

உதாரணமாக, நீங்கள் இட்லி தானம் தருவதாக இருந்தால் அதை மேற்கூறிய முறையில் குசா சக்தியால் பெருக்கி தானம் அளிக்கும் போது அந்த தானத்தின் பலன் பன்மடங்காகப் பெருகி உங்களுக்குச் சகாயம் செய்யும். நீங்கள் 2-5-2010 அன்று அன்னதானம் செய்யும் போது, 4, 22, 40 என்று இரண்டாம் தேதிக்கு உரித்தான குசா எண்ணிக்கையில் தானம் செய்வதால் அளப்பரிய நற்பலன்களைப் பெறலாம்.

இரண்டாம் தத்துவ சந்தேகங்கள்

இரண்டாம் குசா தத்துவம் எனப்படும் நான்காய் விரிந்து இரண்டில் அடங்கும் கோட்பாட்டை நடைமுறை வாழ்வில் கடைபிடிக்கும் போது சில சந்தேகங்கள் தோன்றலாம்.

1. உதாரணமாக, ஒருவருடைய பிறந்த தேதி 30-6-1990 என வைத்துக் கொள்வோம்.

அவருடைய பிறந்த எண் =3+0=3
அவருடைய விதி எண் =(3+0+6+1+9+9+0=28) அதாவது, (2+8=10=1+0=1)1

பிறந்த எண் மூன்றாகவும், விதி எண் ஒன்றாகவும் அமைந்து, பிறந்த எண், விதி எண் இரண்டும் ஒன்றுக்கொன்று நட்பு பாவத்துடன் விளங்குகிறது. இது அவருக்கு அனுகூலத்தைத் தரக் கூடியதாகும்.

இப்போது அவருடைய பிறந்த தேதிக்கான குசா எண்ணைக் கணக்கிடுவோம். 3X4=12/2=6. எண் கணித முறைப்படி பார்த்தால் மூன்றாம் எண்ணுக்கும் ஆறாம் எண் பகை எண்ணாக அமைகிறது. இது நன்மையைத் தர முடியுமா?  என்ற குழப்பம் ஏற்படலாம்.

எண் கணிதம் என்பது ஒரு பொதுவான கணித முறை. ஆனால், குசா என்பது சித்தர்கள் அருளிய சிறப்பு எண் கணித முறை. பொதுவான கணித முறைக்கும், சிறப்புக் கணித முறைக்கும் இடையே பேதம் ஏற்படும்போது சிறப்புக் கணித முறைக்கே முதலிடம் அளிக்க வேண்டும் என்பது சித்தர்கள் கொள்கை. ஆகவே, கண்மூடி வந்தவர் மண்மூடிப் போகார் என்ற முதுமொழிக்கேற்ப குசா தத்துவத்தை நம்பிக்கையோடு, முறையாக அணுகினால் நன்மையை மட்டுமே பெறுவர் என்பது உறுதி.

2. சாதம், எண்ணெய், அரிசி போன்று எண்ண முடியாத அளவில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தும் போது நாம் குசா தத்துவத்தை உபயோகிப்பது எப்படி?

இவ்வாறு எண்ணிக்கையில் அடங்காத பொருட்களை வேறு அளவு முறையில் கணக்கெடுத்துக் கொண்டு அதற்குரித்தான குசா சக்தியைப் பெருக்கலாம். உதாரணமாக, நான்கு கிலோ அல்லது நான்கு படி அரிசியை நான்கு குவியலாகக் குவித்து வைத்து, மேலிரண்டு குவியல்களையும், கீழிரண்டு குவியல்களையும் சேர்த்து அக்குவியல்களுக்குக் குசா சக்தியை ஏற்படுத்தலாம். இதனால் எல்லா அரிசி மணிகளிலும் குசா சக்திகள் நிரவி அமையும்.

குசா தத்துவம் மூன்று

ஒரே மாதிரியான மூன்று பொருட்கள் ஒரே வரிசையில் இருக்கும் போது நடுவில் இருக்கும் பொருள் குசா சக்தியைப் பெறும். அதாவது, திசைகளில் நடுவில் அமைவதும் குசா சக்தியே.

வரிசையான மூன்று தீபங்கள் இருந்தால், நடுவில் இருக்கும் தீபம் குசா சக்தியைப் பெறும். பெரும்பாலான தெய்வ மூர்த்திகளும், தேவதைகளும் தங்கள் கையில் சூலாயுதம் ஏந்தியிருப்பது இவ்வாறு குசா சக்தியால் நல்லருள் புரிவதற்காகவே. சூலாயுதத்தால் ஒரு அசுரனை சம்ஹாரம் செய்யும் தெய்வம் எந்த அசுரனை மாய்ப்பதில்லை, அந்த அசுரனின் தீய சக்திகள் மட்டுமே மாய்க்கப்படுக்கின்றன என்று சொல்வதின் தாத்பர்யம் இதுவே ஆகும். திரிசூலத்ததின் நடுவே உள்ள சூலமானது அந்த அசுரனுக்கு நன்மையையே செய்கிறது. உலகில் நல்ல சக்திகளையே நிரவுகிறது.

கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல் ஒன்றாக இணைந்த மூன்று தீபங்கள் அமைந்த குத்து விளக்குகளை ஏற்றி வழிபடுவதால் நடுவில் உள்ள தீபத்தில் குசா சக்திகள் பெருகும். இது நன்மையை மட்டுமே அனைவருக்கும் வாரி வழங்கும் தீப வழிபாடாகும்.

இவ்வாறு குசா சக்தியை பெறும் வழி முறைகளை எமது ஆஸ்ரம வெளியீடுகள் பலவற்றிலும் தொடர்ந்து அளித்து வருகிறோம். உதாரணமாக, சரஸ்வதி பூஜை அன்று நிறைவேற்ற வேண்டிய பூஜை முறைகளைப் பற்றி பூக்கள் தரும் புனிதங்கள் என்னும் எமது ஆஸ்ரம வெளியீட்டில் விவரித்துள்ளோம்.

சரஸ்வதி பூஜை தினத்தன்று ஐந்து முகங்களுடைய குத்து விளக்கில் ஐந்து தீபங்கள் ஏற்றி அதில் 21 முழம் ராம பாணப் பூவைச்சுற்ற வேண்டும். குத்து விளக்கின் நான்கு திசைகளிலும் நான்கு விளக்குகளை ஏற்றி, அவைகளைப் பூச்சரங்களால் இணைக்க வேண்டும். இவ்வாறு வழிபடும்போது நடுவில் உள்ள குத்து விளக்கில் குசா சக்திகள் பல்கிப் பெருகும்.

அனைவருக்கும் கலைவாணியின் நற்காரிய சித்திகிரணங்களை அனுகிரகமாகப் பெற்றுத் தரும் பாக்கியத்தை அனைவரும் இனியாவது நன்முறையில் கடைபிடித்துப் பயனடைய வேண்டுகிறோம்.

இதுவரை குறிப்பிட்ட குசா தத்துவங்களை எப்படி எல்லாம் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்தி வெற்றி பெறலாம் என்பதையும், வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் குசா தத்துவத்தைச் சிறப்பாக கையாளலாம் போன்ற நடைமுறை விளக்கங்களை இனி காண்போம்.

வியாபார மேன்மைக்கு குசா

மனிதனைச் சுற்றியுள்ள நடவடிக்கைகளில் சதா சர்வ காலமும் பணம் அல்லது பொருள் கொடுக்கல், வாங்கல் செயல்முறைகளே பெருகி உள்ளன. இந்தச் செயல் முறைகள் லாப நோக்கில் செய்யப்படும் போது அதை வியாபாரம் என்கிறோம். எனவே, மனித வாழ்க்கையின் அத்தியாவசிமான ஒரு விஷயமாக வியாபாரம் அமைந்திருப்பதால் குசா தத்துவத்தோடு மிகவும் தொடர்பு கொண்டது வியாபாரம் என்பதில் சந்தேகமில்லை.

இங்கு வியாபாரத்தில் பயனாகும் எண் தத்துவ இரகசியங்களை மட்டும் அளிக்கிறோம். வியாபாரிகள் நிறைவேற்ற வேண்டிய நித்திய பூஜை முறைகள் பற்றிய விவரங்களை அறிய விரும்புவோர் எமது ஆஸ்ரம வெளியீடான வியாபாரிகளுக்கு உரித்தான நித்திய பூஜைகள் என்ற நூலைப் படித்துப் பயனடைய வேண்டுகின்றோம்.

ஜாதகம் காலத்தின் கண்ணாடியே

பொதுவாக, ஒருவருக்கு வியாபாரம் ஒத்து வருமா என்பதை அவர் ஜாதகத்தில் நான்காம் இடத்தின் தன்மையைக் கொண்டு கணிக்க முடியும். அவரவர் செய்த பூர்வ ஜன்ம வினைகளின் படி இப்பிறவியில் வாழ்க்கை முறைகள் அமைகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.

முற்பிறவிகளின் பிரதிபலிப்பாகவே ஒருவருடைய ஜாதகம் அமைவதால், இப்பிறவியில் அவர் செயல்பட வேண்டிய வழிமுறைகளை, இயற்ற வேண்டிய பூஜைகளை ஒருவருடைய ஜாதகக் கட்டத்தில் அமர்ந்துள்ள சூரியன் முதல் கேது வரை அருளும் நவகிரக மூர்த்திகளை வணங்கி நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த தெய்வ மூர்த்திகளை முறையாக வழிபட்டு வருவதால் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை நன்முறையில் பெருக்கிக் கொள்ளமுடியும். அனைத்து நவகிரக மூர்த்திகளும் சித்தர்கள் அருளிய குசா தத்துவத்திற்கு அருள் கூட்டுவதால் குசா தத்துவம் உள்ளடங்கிய பூஜைகளை நிறைவேற்றும்போது தெய்வ, தேவதா மூர்த்திகளின் அனுகிரக சக்திகள் பன்மடங்காய்ப் பல்கிப் பெருகுகின்றன.

வர்த்தகம் கொழிக்க

முதலாவதாக, வியாபாரத்திற்கான பொருட்களை வாங்கும் போது அவரவருக்கு உரிய பிறந்த தேதிக்கான குசா எண்ணைக் கணக்கிட்டு வாங்குதல் நலம். உதாரணமாக, 3-5-1980 அன்று பிறந்தவர்கள் தன் பிறந்த தேதியான மூன்றாம் தேதிக்கு உரித்தான குசா தேதியான 6, 15, 24 போன்ற தேதிகளில் வாங்குவது உசிதம்.

தேதிகள் மட்டுமல்லாது முடிந்த வரையில் வியாபார நடிவடிக்கைகளில் 6ம் எண்ணின் குசா சக்திகளைப் பரிணமிக்கச் செய்வதும் சிறப்பான பலன்களைப் பெற்றுத்தரும். உதாரணமாக, தொலைபேசியில் பேசும்போது 6 மணி, 5-10 மணி, 1-05 மணி இது போன்ற நேரத்தில் தங்கள் வியாபாரத் தொடர்புகளை ஆரம்பிக்கலாம்.

வாங்கும் பொருள்களுக்கு முன் பணம் தருவதாக இருந்தால் அதையும் ஆறின் மடங்கிலேயே தருவது நலம், அதாவது, 6,000, 60,000 என்று தருவதோ, அனுப்புவதோ நன்று.

உதாரணமாக, அவர் ஆப்பிள் பழங்களை வியாபாரத்திற்காக வாங்குவதாக இருந்தால் 600, 1,500, 6,000 என்றவாறு ஆறின் மடங்கில் வாங்கலாம். அதேபோல ஆப்பிள் பழங்களைப் பார்வைக்காகக் கண்ணாடி அலமாரிகளில் வைக்கும் போதும் 6, 60 என்று ஆறின் மடங்கிலேயே வைத்தல் நலம்.

மிளகாய், நெல்லிக்காய் போன்ற சிறு பொருட்களை உபயோகப்படுத்துகையில் அவற்றை நான்கு கூறுகளாக மேற்கூறிய முறையில் வைத்து, அதில் குசா சக்திகளை நிரவச் செய்து, வியாபாரத்திற்காகப் பயன்படுத்தலாம்.

இத்தகைய வியாபாரிகளிடமிருந்து பெறப்படும் உணவுப் பொருட்களும், மற்ற சாதனங்களும் மக்களுக்கு நன்மையே செய்யும் தன்மையைப் பெற்றிருக்கும். இதனால் வாடிக்கையாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். வியாபாரமும் நன்முறையில் பெருகி சமுதாயத்தில் அமைதியும், ஆனந்தமும் நிலவும்.

சதுர ஆவுடை மகத்துவம்

கோயில்களில் சிவலிங்க மூத்திகளைப் பார்த்திருப்பீர்கள். இந்த லிங்க மூர்த்திகள் சதுரம் அல்லது வட்ட வடிவ ஆவுடை வடிவங்களைத் தாங்கி இருப்பார்கள். இவ்வாறு சதுர வடிவ ஆவுடை லிங்கங்கள் வியாபார அபிவிருத்திக்குப் பெரிதும் அனுகிரகம் அளிக்கக் கூடிய மூர்த்திகள்.

சதுர ஆவுடையில் பொலியும்
ஈசன் திருவிசயமங்கை

இத்தகைய தெய்வ மூர்த்திகள் அருள்புரியும் திருத்தலங்களில் இயற்றப்படும் வழிபாடுகள் வியாபாரம், கல்வி போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றத்தை நல்கும். சதுர ஆவுடையை உடைய சிவத்தலங்கள் நமது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகெங்கிலும் பரவி உள்ளன.

இத்தகைய வர்த்தக ரீதியான சக்திகள் பரிணமிக்கும் சிவத்தலங்களுள் மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர் சிவத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இத்தல மூலவராம் ஸ்ரீஸ்வர்ணவாரீஸ்வரரை வணங்கி, திசைக்கு நான்கு தீபங்களாக நான்கு திசைகளிலும் பசு நெய் தீபம் ஏற்றி வருதலால் வியாபாரிகள் நலம் அடைவர். சதுர்த்தி, அஷ்டமி திதிகளில் இந்த வழிபாட்டைத் தொடர்ந்து நிறைவேற்றி வருதலால் தொழிலில் ஏற்படும் போட்டி, பொறாமை, எதிர்பாராத பண நெருக்கடி போன்ற துன்பங்களிலிருந்து எளிதில் மீள முடியும்.

வியாபாரமும் வாஸ்துவும்

கோயில்கள், பள்ளிகள், வியாபாரத் தலங்கள், குடியிருக்கும் வீடுகள் இவ்வாறு ஒவ்வொரு கட்டிடத்திற்கும் உரிய சிறப்பான வாஸ்து லட்சண முறைகள் உண்டு. அதுபோல வியாபாரிகள் எந்த திசை நோக்கி அமர வேண்டும், எந்த இடத்தில் பணப் பெட்டியை வைக்க வேண்டும், வாசல் எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும், விளம்பரப் பெயர்ப் பலகைகள் எந்த வடிவத்தில், எந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் வாஸ்து லட்சண முறைகள் உண்டு.

இவை அனைத்தையும் கடைபிடிப்பது பலருக்கும் சாத்தியமில்லாமல் போகலாம், இக்காரணத்தை ஒட்டியே எமது ஆஸ்ரமத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் திருஉருவப்படத்தைக் கிழக்கு அல்லது வடக்குத் திசையை நோக்கி இருக்கும் வண்ணம் வியாபாரத் தலத்தில் வைத்து வழிபட்டு வந்தால் வாஸ்து தோஷங்கள் ஓரளவிற்கு நிவர்த்தியாகும்.

கொடி மரம் தரும் கோடி வரம்

வியாபாரத் தலத்தில் உள்ள வாஸ்து தோஷங்களைக் களைந்தால் மட்டும் போதுமா? அவ்விடத்தில் அவரவர் வியாபாரத்திற்கு அனுகூலமான வாஸ்து சக்திகளையும் நிரவச் செய்ய வேண்டும் அல்லவா? பிரகாரத்தில் எட்டு கொடி மரங்கள் அமைந்துள்ள திருத்தலங்கள் இவ்வாறு வியாபாரத் தலங்களுக்கு உரித்தான வாஸ்து சக்திகளை நல்குகின்றன.

உதாரணமாக, திருச்சி திருஆனைக்காவல் திருக்கோயில் பிரகாரத்தில் எட்டுக் கொடி மரங்கள் அமைந்துள்ளதால் இவை குசா சக்திகளைப் பொலியும் வாஸ்து ஸ்தம்பங்களாக விளங்குகின்றன. தங்கள் வியாபாரம் நல்ல முறையில் எந்தக் குறையும் இல்லாமல் செழித்து வளர வேண்டும்

என்று விரும்புவோர் இந்தக் கொடிமரப் பிரகாரத்தில் ஒவ்வொரு கொடி மரத்தையும் சுற்றி எட்டு பசு நெய் தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும்.

அதோடு இத்திருக்கோயிலில் உள்ள பசு மாட்டுத் தொழுவத்தைப் பராமரிப்பதை ஒரு திருப்பணியாக ஏற்று நிறைவேற்றுதல், பசு, கன்றுகளுக்குத் தேவையான உணவை வழங்குதல், முடிந்தால் நல்ல கறவை மாடுகளைத் தானமாக வழங்குதல் போன்ற நற்காரியங்களை நிறைவேற்றி வருதல் சிறந்த முறையில் வியாபாரம் செழித்தோங்க உறுதுணை புரியும்.

விநாயகச் சக்கர மகிமை

ஸ்வஸ்திக் சக்கரத்தில் வலஞ்சுழி, இடஞ்சுழியாக அமைந்துள்ள வடிவங்களில் வலஞ்சுழி சக்கர (வீடியோ பார்க்கவும்) வழிபாட்டு முறையையே சித்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

பலரும் விநாயகச் சக்கரம் என்னும் சிறப்புப் பெற்றுள்ள இந்த ஸ்வஸ்திக் சக்கரத்தைப் பன்னெடுங் காலம் பயன்படுத்தி வந்தாலும் இதில் முக்கியமான இரகசியம் ஒன்று உண்டு. அது என்னவென்றால் இந்தச் சக்கரத்தை வரையும் விதத்தை வைத்துப் பலன்கள் மாறுபடும் என்பதே.

எண் சக்திகள் மிகுந்த
ஸ்வஸ்திக் திருக்குளம்
திருவெள்ளறை

அதாவது, முதலில் இடமிருந்து வலமாக உள்ள மூன்று ஆரங்களை வரைந்து கொண்டு, பின் கீழிருந்து மேலாக மற்ற மூன்று ஆரங்களையும் வரையும் முறையே வியாபாரிகளுக்கு  உரித்தான குசா சக்திகளைப் பெற்றுத் தரும். வண்ணங்களால் இந்தச் சக்கரத்தை அலங்கரிக்க விரும்பினால் மஞ்சள் பொடியால் பட்டையான ஆரங்களை வரைந்து, ஆரங்களின் நடுவில் குங்குமத்தால் கோடிட்டு அலங்கரிப்பது சுபமான பலன்களை வர்ஷிக்கும்.
இவ்வாறு அமையும் விநாயகச் சக்கரம் அற்புதமான ஸ்வர்ணவாரச் சக்திகளை நிரவும் தன்மையை உடையது. இந்த விநாயகச் சக்கரத்தின் நடுவில் ஒரு பசு நெய் தீபத்தை குபேர திக்கான வடக்கு திசையை நோக்கியும், நான்கு ஆரங்களில் நான்கு பசு நெய் தீபங்களை நடுவில் உள்ள தீபத்தை நோக்கியும்அமையுமாறு ஏற்றி வைத்து வழிபட்டு வருவதால் வியாபாரத்தில் புதுப்புது நுணுக்கங்களையும், யுக்திகளையும் பெற்று தொழிலில் மேன்மை அடையலாம்.

இத்தகைய வழிபாடுகளால் வியாபாரத்தில் ஏற்படும் புதிய மாற்றங்கள் மக்களுக்கும் பயனுடையதாகவே அமையும் என்பதே இங்கு குறிப்பிடத்தக்கதாகும். விநாயகச் சக்கர வழிபாட்டின் நிறைவில் பாதாம் பருப்பு கலந்த பால் தானம் பண வரவை நிலையாக்கும். அனுபவம் இல்லாத வேலையாட்கள், பணியாளர்களால் ஏற்படும் விரயத்தைக் குறைக்கும்.

வியாபாரத்தில் பலரும் தற்காலத்தில் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை வேலைக்கு ஏற்ற தகுதியான பணியாளர்கள் அமையாததே. அவ்வாறு தகுதியான பணியாளர்கள் அமைந்தாலும், அவர்கள் நிரந்தரமாக பணியில் தங்காமல் வேறு பணிகளைத் தேடிச் சென்று விடுவதுதான்.

இத்தகைய பிரச்சனைகளால் அவதியுறுவோர் ஸ்வஸ்திக் சக்திகள் மிகுந்த திருச்சி-மணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை, திருச்சி-லால்குடி அருகே உள்ள சிறுமயங்குடி போன்ற திருத்தலங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி 108 தாமரை மலர்களால் மாலைகளைச் சூட்டி ஆராதிப்பதால் திறமை வாய்ந்த, நிரந்தரமான பணியாட்கள் வாய்க்கப் பெறுவார்கள். திருவெள்ளறை ஸ்ரீபுண்டரிகாக்ஷ பெருமாள் கோயிலிலும், ஸ்ரீவடஜம்புநாதர் சிவத் தலத்திலும் கூட மேற்கண்ட வழிபாடுகளை நிறைவேற்றலாம்.

எட்டாததை எட்டிப் பிடிக்கும் வழி

சிலர் வியாபாரம் ஆரம்பித்த சில காலத்திலேயே வியாபாரத்தைத் துரிதமாக அபிவிருத்தி செய்து முன்னேற்றம் அடைகிறார்கள். ஆனால், பலரோ எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையிலேயே ஏதோ வாங்கினோம், விற்றோம் என்ற நிலையில் பயனில்லாமல் தங்கள் வியாபாரத்தை, தொழிலை நடத்தி வருகிறார்கள்.

இதற்கு முன்வினைக் காரணங்கள் பல இருந்தாலும், தங்கள் முன்வினையின் வேகத்தைக் குறைக்கும் வழிகளைக் கண்டறிந்து அதில் தீவிரமாக ஈடுபடாததுதான் முக்கியமான காரணமாகும். இவ்வாறு விதிப்படி வந்தமைந்த பணப் பற்றாக் குறையை, கஷ்ட ஜீவனத்தை, தொழில் மந்தத்தை அறவே நீக்க முடியாவிட்டாலும் ஓரளவிற்கு முன்வினையின் வேகத்தைக் குறைத்து தங்கள் வியாபாரத்தைச் சிறப்பாக நடத்த வழிகோலுவதே சித்தர்கள் அருளிய அஷ்ட நமஸ்கார முறை.

சஞ்சித கர்மாவைக் கழிக்க உதவும் சக்தி வாய்ந்த வழிபாட்டு முறைகளுள் அஷ்ட நமஸ்காரமும் ஒன்று. இது வியாபாரிகளுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதமாகும். மிகவும் எளிமையான இந்த நமஸ்காரத்தை சுயம்பு மூர்த்திகள், சதுர ஆவுடையுடன் எழுந்தருளியுள்ள லிங்க மூர்த்திகள், மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதிகள், சிதம்பரம், திருஆனைக்காவல் போன்று நான்கு வாயில்கள் அமையப் பெற்ற திருத்தலங்களில் சமர்ப்பிப்பது மிகவும் சிறப்பாகும்.

அஷ்ட நமஸ்காரம்

அஷ்டாங்க நமஸ்காரம் அல்லது சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது இறைவனை அல்லது பெரியோர்களை, தாய், தந்தையரை வணங்கும்போது பாதங்கள், கால் முட்டிகள், உள்ளங்கைகள், மார்பு, நெற்றி என உடலின் எட்டு அங்கங்களும் பூமியில் படுமாறு வணங்குவதாகும். பக்தனின் பணிவைக் காட்டுவதே சாஷ்டங்க நமஸ்காரம்.

பஞ்சாங்க நமஸ்காரம் என்ற முறையில் பெண்கள் இறைவனை, கணவனை, பெரியோர்களை வணங்குவது சிறப்பு. இம்முறையில் பாதங்கள், கால் முட்டிகள் நெற்றி தரையில் படுமாறு வணங்குவதாகும். கைகளைக் கூப்பிய நிலையில் அல்லது நெஞ்சில் வைத்து வணங்கலாம்.

அஷ்ட நமஸ்காரம் என்பது எல்லா தெய்வங்களுக்கும் உரித்தான நமஸ்கார முறை. சிறப்பாக ஜீவ சமாதிகளிலும், அதிஷ்டானங்களிலும், பிருந்தாவனங்களிலும் செய்யப்படும் அஷ்ட நமஸ்காரம் வழிபாட்டுப் பலன்களைப் பன்மடங்காக விருத்தி செய்கின்றது. இம்முறையில் முதலில் கோயில் அல்லது ஜீவசமாதியின் பிரதான வாயிலில் மூலவரை நோக்கி முதல் நமஸ்காரத்தையும், அடுத்து வலஞ்சுரியாக அதாவது பிரதட்சிணமாக ஒவ்வொரு திசையிலும் மூலவரை நோக்கி ஒவ்வொரு முறை நமஸ்காரம் செய்யவும்.

இவ்வாறு நான்கு திசைகளில் நான்கு நமஸ்காரங்களை நிறைவேற்றிய பின்னர் இந்த நான்கு திசைகளின் இடையிடையே மற்ற நான்கு நமஸ்காரங்களை நிறைவேற்ற வேண்டும். ஆண்களாக இருந்தால் சாஷ்டாங்க நமஸ்காரமாகவோ, பெண்களாக இருந்தால் பஞ்சாங்க நமஸ்காரமாகவோ செய்யலாம். நமது ஆஸ்ரம பாரம்பரிய சத்ய பீட நமஸ்கார முறையில் (வீடியோ பார்க்கவும்) வணங்குவதும் உத்தமமானதே. (சத்யபீட நமஸ்கார முறை பற்றிய மேலும் பல விளக்கங்களை எமது ஆஸ்ரம வெளியீடான அள்ளித்த தந்த அனந்த சயனா - அடிமை கண்ட ஆனந்தம் தொகுப்பு -24 என்ற நூலில் காணலாம்.)

உதாரணமாக, கிழக்குத் திசையை நோக்கிப் பிரதான வாயில் அமைந்து, மூலவர் கிழக்கு நோக்கி இருந்தால் முதலில் கோயிலைச் சுற்றி மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு திசைகளை நோக்கி (அதாவது மூலவரைப் பார்த்து) நான்கு நமஸ்காரங்களையும், பின்னர் வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்குத் திசைகளை நோக்கி நான்கு நமஸ்காரங்களையும் மூலவரைப் பார்த்து நிறைவேற்றவும்.

இந்த எட்டு நமஸ்காரங்களே அஷ்ட நமஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இது மிகவும் சக்தி வாய்ந்த நமஸ்கார வழிபாட்டு முறையாகும். குறிப்பாக, வியாபாரிகளுக்கு குசா சக்திகளைப் பெற்றுத் தரும் பிரார்த்தனை பூஜையாகவும் அமைகின்றது. இந்த அஷ்ட நமஸ்கார வழிபாட்டிற்குப் பின்னர் முந்திரி பருப்பு கலந்த புளியோதரை தானம் செய்தல் சிறப்புடையது.

குறைந்த மூலதனம் நிறைந்த வருவாய்

வியாபாரிகளுக்கு மட்டும் அல்லாமல் உற்பத்தியாளர்களுக்கும் தங்கள் தொழிற்சாலைகளில் கச்சாப் பொருட்களின் சிக்கனத்தைப் பெற்றுத் தருவதற்கு குசா சக்திகள் பெரிதும் உதவும். அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து குசா சக்திகளின் அபரிமிதமான பலன்களைக் கண்கூடாகத் தங்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தி உணரலாம்.

உதாரணமாக, ஒருவர் பள்ளிக் குழந்தைகள் எழுதுவதை அழிக்கப் பயன்படுத்தும் ரப்பரை உற்பத்தி செய்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு கிலோ கச்சா ரப்பரில் 100 ரப்பர் துண்டுகளைச் செய்வதாகக் கணக்கிட்டால் அவர் வழக்கமாகப் பயன்படுத்தும் ஒரு கிலோ கிராம் கச்சா ரப்பருக்குப் பதிலாக அதில் 100 கிராமைக் குறைத்து 900 கிராம் கச்சா ரப்பரை மட்டும் பத்துப் பங்காக (ஒரு பங்கிற்கு 90 கிராம்)வைத்து அந்தப் பத்துப் பகுதிகளையும், ஒன்று, இரண்டு,... ஒன்பது, குசம் என்று எண்ணிப் பயன்படுத்தி வந்தால் ஒரு கிலோ கச்சா ரப்பரைப் பயன்படுத்தி என்ன லாபம் ஈட்டினாரோ அதே லாபத்தை 900 கிராம் கச்சா ரப்பரைப் பயன்படுத்திப் பெறலாம்.

நம்புவதற்கு மிகவும் கடினமானது இந்த மூலதனச் சிக்கனம். இதை நடைமுறையில் அனுபவித்தால்தான் குசா எண் சக்தியின் மகத்துவம் புரியும். இவ்வாறு கச்சாப் பொருட்களை நான்காய் விரித்து வைத்து, அதை இரண்டாகச் சேர்த்தும் தங்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தி, குசா எண் சக்திகளின் அனுகிரத்தைப் பெறலாம்.

மேலும், இந்த குசா சக்திகள் நிறைந்த ரப்பரை பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும்போது அந்த குழந்தைகளுக்குப் படிப்பில் ஆர்வமும், நற்செயல்களில் ஆர்வமும், ஊக்கமும் ஏற்படும். குசாவின் பயன் அளப்பரியது அனுபவித்துப் பார்த்தால் தான் அதன் மகிமை ஓரளவாவது புலப்படும்.

தொடரும் குசா எண் சக்திகள் ...

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam