நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பதொன்றுதான் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

எது நல்ல காரியம் ?

கேள்வியோ மிகவும் சாதாரணமானது தான். இந்த கேள்வியைப் பலரிடம் கேட்கும்போது இதற்கு வரும் பதிலோ நாம் எதிர்பாராத வகையில் வரும்போதுதான் இந்தக் கேள்வியின் முக்கியத்துவமே தெரிகிறது. இந்த ஒரே கேள்விக்கு சற்குரு வெங்கடராமன் அளித்த பதில்கள் ஏராளம், ஏராளம். அவற்றில் முடிந்தவற்றை தொகுத்து இங்கு அளிக்கிறோம். உதாரணமாக, மேலே உள்ள வெள்ளை கட்டத்தில் ஒன்றும் போடவில்லை என்று நினைப்பது ஒரு வகை, இங்கே படம் இல்லை, காலி இடமே இருக்கிறது. இந்த காலி இடத்தை நாம் விரும்பும் படத்தால் நிறைத்துக் கொள்ளலாம் என்பது மற்றோர் வகை. ஒன்றும் இல்லை என்று நினைப்பதை விட இதில் ஏதோ இருக்கிறது என்று நினைப்பதே அடுத்தபடியான ஆத்ம விசாரத்தின் திறவுகோல். இத்தகைய ஆத்ம விசாரத்திற்கு இடமளிப்பதற்காகவே நம்முடைய பல திருத்தலங்களிலும் ஒரு விக்ரஹத்திற்கான காலி இடம் அமைந்திருக்கும். அந்த இடத்தையும் பூர்த்தி செய்யும் முறையில் ஒரு விக்ரஹத்தை அங்கு அமைப்பது பிரமாதமில்லை. ஆனால் அங்கு காலி இடத்தை அமைத்தால் அத்திருத்தலத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தாங்கள் விரும்பும் ஒரு விக்ரஹத்தை அங்கு அமைத்துக் கொள்ளலாம் அல்லவா ? அவ்வாறு பார்த்தால் ஒரு காலி இடத்தை நிறைக்கும் விக்ரஹங்கள் எத்தனை எத்தனை ? இதுவே நம் முன்னோர்களின் அறிவுத் திறன்.

மானாம்பள்ளி

தஞ்சை பெரிய கோவிலை கட்டும்போது ராஜராஜ சோழன் அந்த கோயில் நிர்வாகத்திற்காக, பராமரிப்பிற்காக ஆயிரக் கணக்கில் ஏக்கர் நிலங்களை இனாமாக வழங்கினான். அத்தகைய பெரிய கோவில் இன்று தீபம் ஏற்றுவதற்குக் கூட வுழியின்றி இருக்கிறது என்பது வேறு கதை. தான் என்னதான் ஏற்பாடு செய்தாலும் எதிர்காலத்தில் வரும் சந்ததிகளை, அந்தக் கோயிலை பராமரிக்கும் பக்தர்களின் திருப்பாதங்களை தன்னுடைய தலையில் தாங்குவதாக கூறிய கல்வெட்டு இன்றும் தஞ்சை பெரிய கோவிலில் காணக் கிடைக்கிறது. ஒரு கோயிலை நிர்மாணித்தபின் அடியார்களை இறைவன் காத்த, அடியார்களுக்கு இறைவன் அருள் கனிந்த எத்தனையோ நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து அடியார்கள் அந்த காலி இடத்தை நிறைவு செய்வதற்காகவும் உள்ள ஏற்பாடு அது. இவ்வாறு ஒரு காலி இடத்தை நிரப்புவதால் கிட்டும் பலன் யாதோ என்பதே நம் மனதில் உதிக்கும் கேள்வி. ஒரு காலி இடத்தை அது வெப் தளமாக இருந்தாலும் அல்லது திருக்கோயிலில் ஒரு மூலையாக இருந்தாலும் சரி, அவ்வாறு நிரப்பும்போது உங்கள் மூளையில் குறைந்தபட்சம் ஒரு செல் ஆக்கம் பெறுகிறது என்பதே சித்தர்களின் பதில். நாம் கஷ்டப்பட்டு நிறைவேற்றும் இந்த வேலைக்கு ஒரே ஒரு செல்தான் ஆக்கம் பெறுகிறது என்பது நிறைந்த வைலைக்கு குறைந்த சம்பளம் போல் உங்களுக்குத் தோன்றலாம். உண்மையில் இதன் பின்னணியில் உள்ள இரகசியங்கள் தெரிய வந்தால்தான் கடவுளின் பெருங்கருணையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஒருவருடைய ஆயுள் நூறு வருடங்கள் என்று கொண்டால் அவர் மூளையில் உள்ள ஒரு செல் அவருடைய தூக்கத்தைப் பராமரிக்கிறது. அதாவது அவர் ஐம்பது ஆண்டுகளில் செய்யும் காரியத்தையே ஒரே ஒரு செல் நிர்வகிக்கிறது என்றால் மனித மூளையில் உள்ள ஒரு செல்லின் செயல் திறன் எவ்வளவு சக்தி உடையதாக இருக்கும். இவ்வளவு சக்தி உள்ள ஒரு செல் நீங்கள் ஒரே ஒரு காலி இடத்தை நிறைவு செய்வதால் ஆக்கம் பெறும் என்றால் கடவுளின் நினைவு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று சற்றே எண்ணிப் பாருங்கள்.

ஸ்ரீமெய்ஞானபுரீஸ்வரர்
மெய்ஞானபுரி

நீங்கள் ஒரு திருக்கோயிலைச் சுற்றி வரும்போது அங்குள்ள முருகன் விக்ரஹத்தைப் பார்க்கும்போது ஒரு செல் ஆக்கம் பெறுகிறது என்று கூறினோம் அல்லவா? இவ்வாறு அந்த முருகப் பெருமானின் அபிஷேகத்திற்காக நீங்கள் தயாரிக்கும் பஞ்சாமிர்தத்தால் வேறொரு செல் ஆக்கம் பெறலாம். முருகனுக்காக நீங்கள் ஓதும் ஒரு திருப்புகழ் பாடலால் மற்றோர் செல் ஆக்கம் பெறும். இந்த வழிபாட்டை சஷ்டி திதியில் நிகழ்த்துவதால் அல்லது முருகனுக்கு உரிய கிருத்திகை தினத்தன்று நிகழ்த்துவதால் இன்னும் சில செல்கள் ஆக்கம் பெறும். இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். இந்த செல்கள் அனைத்தும் தனித்தனியே இருக்கும், தனியாகவே இயங்கும். நீங்கள் இந்த வழிபாட்டை உங்கள் குடும்பத்திற்காக இயற்றும்போது உருவாவதே குடும்பம் என்ற நெட்வொர்க். நீங்கள் உங்களுடைய சற்குரு கூறினார் என்பதற்காக இதே வழிபாட்டை நிறைவேற்றினால் அப்போது உங்களுடைய மூளையில் உங்களுடைய சற்குரு விரும்பும் அளவிற்கு செல்கள் ஆக்கம் பெறும் என்பதே உண்மை. தனியாக சுற்றிய வாத்துகள் எப்படி ஒரே வரிசையில் இணைந்தன என்பதே சற்குரு கூறிய முறையில் நீங்கள் இயற்றும் வழிபாட்டின் மகத்துவத்தைப் புலப்படுத்துவதாகும். இதை முறையில்தான் மூளையில் உள்ள செல்களும் ஒன்றுக்கொன்று தொடர்பைப் பெறுகின்றன அல்லது ஏற்படுத்திக் கொள்கின்றன. இதனால் என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம் ? தீர்த்தத்தில் நீந்தும் மூன்று வாத்துக்களாக இவை தெரிந்தாலும் தெய்வீக கண்கள் படைத்தவர்களுக்கு இவை காமதேனு, பட்டி, ஆச்சா என்று மூன்று தலைமுறையைக் குறிக்கும் தெய்வீக வழிபாடாகவே தெரியும். இந்த வீடியோ பட்டீஸ்வர திருக்குளத்தில் எடுக்கப்பட்டதாகும் அங்கே காமதேனுவின் புத்திரியாக பட்டி வழிபட்டு அந்த வழிபாட்டின் பலனை தன்னுடைய தாய்க்கும் மகளுக்கும் பகிர்ந்தளித்ததில் வியப்பென்ன ?

தொழுநோய்களையும் குணப்படுத்தும்
தில்லையாடி திருத்தலம்

இத்ததைகய தெய்வீக கண்கள் படைத்தவர்கள் தாங்கள் பெற்ற அதீத சக்தி உடைய பார்வையால் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இவர்களையே நாம் மகான்கள் என்ற பொதுப் பெயரில் அழைக்கிறோம். உதாரணமாக ஸ்ரீஅகத்திய மகரிஷி தோல் வியாதியால் வாடும் கோலத்தை தில்லையாடி திருத்தலத்தில் காணலாம். பலருடைய கர்ம வினைகளை தம்முடைய உடலில் தாமே ஏற்றுக் கொள்வதால் இவ்வாறு குஷ்டம், கொப்புளம் போன்ற தோல் வியாதிகளை மகான்கள் ஏற்று மற்றவர்களுக்கு கருணை புரிகிறார்கள். இது ஏதோ ஒரு காலத்தில் நடந்தது, குருவின் கருணையை விளக்கும் அதீத செயல் என்று எண்ண வேண்டாம். குருவின் கருணை என்பது இன்றும் என்றும் தொடரும் பாரம்பரியமாகும். முருகப் பக்தரான அருணகிரி நாதர் மக்களைக் காப்பதற்காக குஷ்டரோக வியாதியை தன்னுடலில் ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர் கருணை இன்றும் தொடர்கிறது என்பதை தம்முடைய அருணகிரி கண்ட ஆறுமுகம் என்ற சொற்பொழிவின் மூலம் நிரூபித்துக் காட்டுகிறார் சற்குரு வெங்கடராமன் அவர்கள். சற்குருவின் சொற்பொழிவைக் கேட்க உடல் சிரமமும் பொருள் செலவும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அத்தகைய சிரமத்தை மேற்கொண்டோருக்கே ஸ்ரீஅருணகிரி நாதர், அருணாசல ஈசனின் திருவருள் சுரக்கும் என்பதாகவும் மற்றவர்கள் அத்தகைய உடல் சிரமங்களை ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் இத்தகைய பெரும்பேற்றை அவர்கள் பெறமுடியாது என்பதை இங்கு நீங்கள் கேட்கும் சொற்பொழிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். சாதாரணமாக ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் நீங்கள் கேட்கும் சற்குருவின் உரை பத்து நிமிடத்தில் சிறப்பாக முடிவதும் நீங்கள் இரசிக்க வேண்டிய சித்த பெருங்கருணயாகும். தில்லையாடி திருத்தலத்தில் ஸ்ரீஅகத்திய மகரிஷியை வணங்கி கோதுமை உணவுப் பண்டங்களை ஏழைகளுக்கு தானமளித்தலால் குஷ்டம் போன்ற கடுமையான தோல் வியாதிகளிலிருந்தும் சிக்கன் குனியா போன்ற காய்ச்சல் நோய்களிலிருந்தும் நிவாரணம் கிட்டும். வாகனங்கள் ஓட்டுநர்கள், உயர் கனரக தொழிலாளிகள், அணு மின் உலைகளில் பணிபுரிவோர் இத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுவதால் நற்பலன் பெறுவார்கள். ஸ்ரீஆபத்சகாய ஈஸ்வரன் என்ற பெயரில் பொலியும் ஈசன் பெயருக்கேற்றாற்போல் தன்னை வழிபடும் அடியார்களை எத்தகைய ஆபத்துகளிலிருந்தும் காக்கக் கூடியவர் என்பது உறுதி. ஒரு முறை இத்தல ஈசனை வணங்கச் சென்ற ஒரு அடியார் இங்குள்ள அண்டாவில் ஏதோ அசைவதைப் பார்த்து அருகில் சென்றபோது ஒரு அணில் அண்டாவில் குறைவாக இருந்த நீரில் விழுந்து வெளியே வர முடியாமல் தத்தளிப்பதைப் பார்த்து அந்த அணிலை எடுத்து வெளியே விட்டார். ஆனால் வெகுநேரம் நீரில் விழுந்து உயிருக்கு போராடிய களைப்பால் அந்த அணில் உயிரோடு அசையாமல் அந்த அண்டாவின் அருகிலேயே மயங்கிக் கிடந்து பின்னர் மெதுவாக அசைந்து வெளியேறியதாம். எனவே ஸ்ரீஆபத்சகாய ஈசனை நம்பிய சிற்றுயிருக்கும் அருள் சுரக்கும் என்பது அந்த அடியார் நேரில் கண்ட உண்மையாகும்.

சிதம்பரம் ஆலயமணி

வேறெங்கும் காண இயலாதபடி சிதம்பரம் ஆலயமணி இரண்டாகத் துலங்குவதன் இரகசியம் உணர்ந்தவர்களே மனித உடலில் துலங்கும் சித்தம் பற்றிய இரசியத்தை உணர்ந்து கொள்ள முடியும். ஒலி நாடி ஒலியாகி ஒலிக்குள் ஒளிந்தவனே சிதம்பரத்தான் என்று சிதம்பர இரகசியத்தை எளிமையாக விவரிக்கிறார் நமது சற்குரு. இந்த ஒலி ஒளி இரகசியங்கள் உணர்வதற்காக உதவுபவையே சிதம்பர ஆலய மணியும் சிதம்பர ஆலயத்தில் சிவாயநம எழுத்துக்களுடன் பொலியும் 33000 தங்க ஓடுகள் பதித்த மேற்கூரையும் உள்ளன. மேற்கூரையில் 21600 மூச்சுக்களை குறிக்கும் தங்க ஓடுகள் உண்டு என்பது சிதம்பர தரிசனத்தின் ஆரம்ப நிலையாகும். இவ்வாறு ஒளி ஒலி இரகசியங்கள் பற்றிய உண்மைகளை அறிய உதவுவதே சிதம்பர ஆலயத்தின் மணி ஓசையும் மூலவருக்கு நிகழ்த்தும் ஸ்படிக லிங்க பூஜையாகும். தில்லையாடி என்பது சித்தத்தில் உறையும் ஈசனின் நடனம் என்று பொருள் கொள்வது போல தில்லை ஆடி அதாவது சித்தத்தில் உறையும் ஈசனின் நடனத்தை பிரதிபலிப்பதே தில்லையாடி திருத்தலம் என்று ஆராய்வதும் ஈசனை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து தெளிவு பெறும் முயற்சியாகும். இதை விளக்குவதும் சிதம்பரம் ஆலயமணியின் ஓசையாகும். ஒரு கை ஓசை பற்றி சித்தர்கள் அருள்வதை இங்கு நினைவு கூர்க. சிதம்பர ஆலயத்திலுள்ள இரண்டு மணிகளின் ஓசை முதலில் ஒரு மணியாக ஒலிக்கும், இந்த ஒரு மணியின் ஓசை ஓங்காரத்தில் இலயிக்கும், ஓங்காரம் இலயிக்கும் இடமே சிதம்பரம் என்று சிதம்பர இரகசியத்தை அழகாக விவரிக்கிறார் நம் சற்குரு. இந்த ஒலியின் பிரதிபலிப்பே தில்லையாடி என்று கொள்வதும் தவறில்லை. சூரியன் பிரதிபலிக்கும் பொருள்களைக் கொண்டுதானே முதலில் சூரியன் என்று ஒன்று உண்டு என்பதையே உணர முடியும். இதை உணர உதவுவதே தில்லையாடி திருத்தலமாகும். கடவுள் மீது அன்பு ஏற்படுவதற்கு முன் கனிவதே நாட்டுப் பற்று. இதையே அமெரிக்காவிலிருந்து தாய் நாட்டிற்குத் திரும்பிய விவேகானந்தர் கல்கத்தாவில் கப்பலிலிருந்து இறங்கியவுடன் தரையில் குனிந்து முத்தமிட்டு என் தாய் நாட்டை வணங்குகிறேன் என்று கூறியதன் பொருளை விளக்குகிறது. தாயை, தாய் நாட்டை மதிக்கத் தெரியாதவனுக்கு நிச்சயமாக கடவுளின் அன்பைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது என்று நம் சற்குரு அடிக்கடி கூறுவது வழக்கம். ஒன்பது வயது சிறுமியாக இருந்த சற்குருவின் தாயார் மகாத்மா காந்தி சென்னைக்கு வருகை தந்தபோது அவருடன் இருந்த ஆயிரம் தேசபக்தர்களுக்கும் சுவையான அறுசுவை விருந்து படைத்த மகாத்யமியத்தை இன்றும் நினைவு கூறுவார்கள்.

இறைவன் ஒருவனே !

நாம் நினைத்த மாத்திரத்தில் நம் மனமானது இறைவனிடம் நிச்சயம் லயித்து லயமாக முடியாது என்பதை உணர்ந்தவர்கள் நம் பெரியோர்கள். அதனால் குடும்பம், ஊர், நாடு, இறைவன் என்று படிப்படியாக நம் மனமானது விசாலம் அடையும் விதத்தில் பக்தியை வளர்த்துக் கொள்ளும் முறைகளை விவரித்தார்கள். இம்முறையை ஒட்டியே தேசபக்திக்காக உயிர்துறந்த வள்ளியம்மை இன்று தில்லையாடி திருத்தலத்தை காண வரும் பக்தர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து இறை பக்தியில் சிறந்து விளங்கும் உண்மையைத் தெரிவிப்பவரே நம் சற்குரு ஆவார்கள். கடல் பறவையாக இருந்தாலும், கடல் அலையாக இருந்தாலும், கடல தீண்டும் மலையாக இருந்தாலும் எண்ணம் எண்ணவோ இறைவனை நோக்கித்தான் திரும்பும் என்பதே இங்கு நீங்கள் காணும் படத்தின் மேலோட்டமான சிந்தனை. உங்கள் சிந்தனை குவியும்போது நீங்கள் காணும் காட்சிகள் பலப்பல. எண்களும் வண்ணங்களுமே உலகை ஆளும் என்று கூறியவர் சாக்ரடீஸ் என்ற தத்துவ ஞானி. எண்ணங்களும் வண்ணங்களுமே உலகை ஆளும் என்பவர் நம் சற்குரு. ஒருவரை ஆண் என்றோ பெண் என்றோ நினைக்கும் எண்ணமும் அவர் நல்லவர் தீயவர் என்று நினைக்கும் வண்ணமுமே இவ்வுலக இயக்கத்தில் பிரதானமாக இருக்கின்றன, இவை தாண்டி இருக்கும் உலகிற்கு உங்களை அழைத்துச் செல்வதே சித்தர்களின் குறிக்கோள் என்று தமது கடமையைச் சித்தரிக்கிறார் நம் சற்குரு. பல்குனி நதி தீரத்தில், கயா புண்ணிய பூமியில் இயற்றும் வழிபாடுகளும், தான தர்மங்களும், தில்லையாடி திருத்தலத்தில் ஸ்ரீஅகத்திய மகரிஷி தரிசனமும் வழிபாடும் இத்தகைய தேசபக்தி உடையவர்கள் அடுத்த நிலையை அடைய அருள்புரியும் என்பது உண்மையே.

சிறுவாணி தீர்த்தம்

பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டாம் இடம் வலது கண்ணையும் 12ம் இடம் இடது கண்ணையும் குறிப்பதால் இரண்டாம் 12ம் அதிபதிகள் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் அமர்ந்து சற்குருவின் ஜாதகத்தைப் போல் அமர்ந்து அருள்புரிதல் என்பது கண்ணால் காணும் காட்சிகள் அனைத்தும் நலமாய் முடியும் என்பதைக் குறிக்கும். எனவே இரண்டாம் 12ம் ராசி அதிபதிகளான சூரியனும் புத மூர்த்தியும் 11ம் வீடான ரிஷப ராசியில் இணைந்து அருள்புரிவதால் சற்குருவின் ஜாதகத்தை வைத்து வழிபடுவோருக்கு நல்ல காட்சிகளே கிட்டும் என்பதும் அந்தக் காட்சிகள் காண்பவருக்கு நன்மையையே அளிக்கும் என்பது உண்மையே.

ஸ்ரீபாகம்பிரியாள் அம்பிகை
மெய்ஞானபுரி

இதை விளக்குவதே கோயம்புத்தூரிலுள்ள வெள்ளியங்கிரியில் சற்குரு பெற்ற அனுகிரகமாகும். வெள்ளியங்கிரி யாத்திரைக்கு முன்னால் ஒரு தெய்வம் நேரில் பிரசன்னமாக உண்ட பிரசாதத்தை தானும் உண்டே யாத்திரையை ஆரம்பிக்க வேண்டும் என்பது விதி. இது ஏதோ கடினமான விதியாகத் தோன்றினாலும் இதன் பின்னால் உள்ள காரண காரியங்களைத் தெரிந்து கொண்டால் மகான்கள் எதெற்காக இத்தகைய கடினமான விதிகளை நிர்ணயித்துள்ளனர் என்பது ஓரளவு புரியவரும். வெள்ளிப் பணித் தலையர் என்று ஈசனை வர்ணிக்கக் கேட்டிருக்கிறோம். அதாவது வெள்ளிபோல் பிரகாசிக்கும் பாம்பை அணிந்த ஈசன் என்பது இதன் மேலோட்டமான பொருள். எதற்காக ஈசன் பாம்பை அணிந்துள்ளான். சற்குரு அவர்கள் தான் நிர்விகல்ப சமாதி அடைந்த நிலையை வர்ணிக்கும்போது, “அந்நிலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அதீத நிலையாகும் அது. ஆனால் அந்நிலையைக் கடந்து பல படித்தரங்கள் கீழே வந்த பின் நமக்கு ஏற்படும் நிலையை ஓரளவிற்கு வர்ணிக்கலாம். அந்நிலையில் பூமிக்கு அடியில் உள்ள அனைத்து பொருட்களும் தெரியவரும். அனைத்து ஜீவராசிகளின் பாஷைகளும் புரியும்,” என்பார்கள். இத்தகைய உத்தம சமாதி நிலையில் ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் இலயித்து இருக்க முடியாது. காரணம் அப்போது தோன்றும் அதீத உஷ்ண நிலையைத் தாங்கும் அளவிற்கு நம் உடல்நிலை கிடையாது. அப்படியானால் அனைத்தும் உணர்ந்த ஈசன் அதே நிலையில் நிலைத்திருக்க முடியுமா? அதற்கு உதவுவதற்காகவே அவன் சில்லென்ற பாம்புகளை தலையில் மட்டுமல்லாது உடல் முழுவதும் அணிந்துள்ளான் என்பது அடுத்த கட்ட விளக்கமாகும். இவ்வாறு வெள்ளிப் பணித் தலையரான ஈசன் தான் பெற்ற அதீத சக்திகளை வெள்ளியங்கிரியில் தன்னுடைய சக்திக் கிரணங்களாக வெளிவிடும்போது அதை ஏற்று சிறுவாணி தீர்த்தத்தில் கலக்கும் அற்புத திருப்பணியை நிறைவேற்றும் சித்தர்களும் வெள்ளியங்கிரியில் வாசம் செய்கிறார்கள். இத்தகைய சித்தர்கள் நீலவேணு என்னும் நாகங்கள் வடிவில் வசிக்கிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட தினங்களில் திருஅண்ணாமலையை வலம் வரும் சிறப்பைப் பற்றியும் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இறைவனின் பிரசாதத்தை உண்டவர்களே இத்தகைய நீலவேணு நாகங்கள் ஊட்டும் குளிர்ச்சியைத் தாங்க முடியும் என்பதும் வெள்ளியங்கிரி யாத்திரை உணர்த்தும் மகாத்மியமாகும்.

திருகோடிக்கா

திருகோடிக்கா திருத்தலத்தில் வெள்ளிக்கிண்ணத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தானம் அளிக்கும்படி சித்தர்கள் தெரிவித்துள்ளனர் அல்லவா ? இது முடவன் முழுக்கு தினத்தில் மட்டுமல்லாமல் வெள்ளியங்கிரி ஈசனின் திருவருளைப் பெற்றுத் தரும் ஒரு தான வழிபாடாகவும் அமைகிறது. வெள்ளி அளிக்கும் குளிர்ச்சி பற்றியும் எள்ளில் பதிந்துள்ள பித்ரு சக்திகள் பற்றியும் அறிந்து கொள்ள உறுதுணையாக அமைவதும் மேற்கூறிய தான வழிபாடாகும். இதற்கு உறுதுணையாக அமைவதே சற்குருவின் ஜாதகக் கட்ட வழிபாடாகும். ரிஷப ராசியில் உச்சம் பெற்று விளங்கும் சந்திர பகவான் தெரிவிக்கும் வெள்ளியின் உஷ்ணம் தாங்கும் நிலைபற்றியும் பித்ருக்கள் உறையும் எள் பற்றிய இரகசியங்களையும் இதன் மூலம் ஓரளவு உணர்ந்து கொள்ளலாம். இங்கு கறுத்த மேகமாகத் திகழ்பவை சந்திர பகவானின் வீடான கடக ராசியில் உறையும் சனீஸ்வர மகாத்மியங்களை உரைக்கின்றன. எள்ளில் உறையும் சனி பகவான் வெள்ளியில் ஊறும் எண்ணெயுடன் இணைவது வெறும் மேம்போக்கான காரணமல்ல. கரும் மேகத்தைச் சூழ்ந்த வெண் மேகங்களும் காரணத்தை விளக்க வந்தவையே. சென்னை ஸ்ரீவெள்ளீஸ்வரர் திருத்தலம், வெள்ளியங்கிரி, வெள்ளியம்பலம் திகழும் மதுரை போன்ற திருத்தலங்களில் வெள்ளிக் கிழமை சனிக்கிழமையிலும் மேற்கூறிய தான வழிபாட்டை நிகழ்த்துதல் சிறப்பாகும். எள்ளில் பொதிந்துள்ள பித்ரு சக்திகளைப் புரிந்து கொள்ளும்பாது ஒருவருடைய மூதாதையர்களே அவர்களின் வழித் தோன்றல்களை அடுத்த நிலைக்குச் செல்கின்றனர். எவரும் மேலுலகில் இறைவனைச் சந்திப்பதில்லை என்பதே சித்தர்கள் கூறும் உண்மை. சித்தம், இருதய ஆகாசம், சிதம்பரம் இவை அனைத்தும் ஒரே பொருளை குறிக்கும் பல்வேறு பெயர்களே.

இதற்கு ஆரம்ப கட்டமாக அமைவதும் எள் நீர் கலந்த வழிபாடாகும். கங்கை, காவிரி என்ற எத்தனையோ புனித நதிகள் இருக்கும்போது சற்குரு அவர்கள் அடியார்கள் பிரயோகத்திற்காக சிறுவாணி தீர்த்தத்தை அவர்களுக்கு அளித்ததை இங்கு நினைவு கூறுங்கள். கங்கைக்கு தாமிர சக்தியும், காவிரிக்கு பொன் சக்தியும், சிறுவாணிக்கு வெள்ளி சக்தியும் இருப்பது மேலோட்டமான காரணங்களே. கோயம்புத்தூரில் செய்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி மாங்கல்யம் அளித்த சற்குருவைப் புரிந்து கொள்தல் என்பது நாமும் அத்தகைய தான தர்மங்களை நிறைவேற்றி பயன்பெற வேண்டும் என்ற காரணத்தால்தான். தங்கம் வேறு, தங்க சக்தி என்பது வேறு. வெள்ளி சக்தியை அளிப்பவன் வெள்ளியங்கிரி ஈசன், காவிரி நதிக்கு தங்க சக்தியை அளிப்பது சற்குருவான அகத்தீசன். இந்த தங்க சக்தி துலங்கும் அகத்திய தீர்த்தத்துடன் வெள்ளி சக்தி நிறைந்த சிறுவாணி தீர்த்தத்தை கலந்த சற்குருதான் வெள்ளி மாங்கல்யத்திற்கு தங்க முலாம் பூசி சிவசக்தி ஐக்ய தரிசனத்தில் ஹோமம் நிகழ்த்தி அதை கடவுளை நம்பும் உத்தம அடியார்களுக்கு தானமாக அளித்தார் என்றால் சற்குருவின் கருணைக்கு எல்லைதான் ஏது ?


திருஆமாத்தூர் திருத்தலம்

60, 80 போன்ற பிறந்த நாள் வழிபாடுகளைக் கொண்டாட விரும்புவோர்களும், கணவனின் கெட்ட பழக்கம் சகவாசங்களால் துன்பம் அடைவோரும் திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய தரிசனப் பகுதியில் இவ்வாறு தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி மாங்கல்யங்களை தானமாக அளித்தலால் குடும்ப ஒற்றுமையும் நீண்ட அமைதியான தாம்பத்ய வாழ்க்கையையும் பெறுவர் என்பது உறுதி.

ஸ்ரீகாலபைரவர்
மெய்ஞானபுரி

இத்தகைய தானத்திற்குப் பின்னால் அமைந்த தெய்வீக தத்துவங்களைத் தெரிவிக்காவிட்டாலும் அந்த மாங்கல்யங்கள் வெள்ளியால் ஆனவை என்பதை தானம் பெறும் அடியார்களுக்கு தெரிவித்தல் அவசியம். சிவசக்தி ஐக்ய தரிசனத்தில் நிகழ்த்தும் இத்தகைய தானமானது குறைந்தது ஒரு தம்பதியருக்கு அளிக்கையில் தானம் அளிப்பவரின் இரண்டு மூளை செல்களை ஆக்கப்படுத்தும் என்று தெளிவுபடுத்துகிறார்கள். இத்தகைய தானங்களை மேற்கொள்ளும் அடியார்களுக்கு இவ்வளவு பொருள் செலவு, சிரமப்பட்டு நிகழ்த்தும் ஒரு தானத்திற்கு கிட்டும் பலன் குறைவாகவே தோன்றும். உண்மையில் இவ்வாறு இரண்டு செல்களை ஆக்கப்படுத்துவதற்கு ஆயிரம் பிறவிகள் கூட எடுத்துக் கொள்ளும் என்று செல் ஆக்க இரகசியங்கள் புரிந்து சித்தர்கள் கூறும் உண்மையாகும்.

ஸ்ரீஉதயமார்த்தாண்டம்
கரிவலம்வந்தநல்லூர்

ஆயிரம் பிறவிகளில் நிகழ்த்தும் சாதனையை சில மணி நேரங்களில், நிமிடங்களில் நிகழ்த்துவது உத்தம சற்குருவைப் பெற்றோரின் பாக்கியமாகும். ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் தன் சற்குருவை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்ற ஒருவர் தனது சற்குருவை பிறந்த நாள் அன்று தரிசனம் செய்தபோது, இன்று உனக்குப் பிறந்த நாளா, ரொம்ப சந்தோஷம், இன்று கடவுளை நோக்கி ஓர் அடி முன்னே எடுத்து வைக்கிறாய் என்று கூறினார். இதுவே சற்குருவைப் பெற்றவர்கள் அடையும் பாக்கியம். ஒருவர் சற்குருவைப் பெற்றாலும் பெறாவிட்டாலும் நிச்சயமாக ஒருவருக்கு கடவுளின் கருணை உண்டு. ஆனால் அந்த கருணயைப் பெற ஒருவர் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்று புரியாது. இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். கிருஷ்ண பரமாத்மாவை சற்குருவாக ஏற்றுக் கொண்டது இடையர் குலம். அவ்வாறு சற்குருவாக கிருஷ்ணனை ஏற்றுக் கொண்டிருக்கா விட்டால் அவர்களின் நிலை என்ன ஆகி இருக்கும் என்று சற்று சிந்திப்போமா ? ஏகலைவன் தொடுத்த அம்பால் தன்னுடைய ஆவி பிரிய வேண்டும் என்ற விதி இருந்ததால் ஸ்ரீகிருஷ்ணர் ஏகலைவனின் அம்பு தைத்தவுடன் வைகுண்டம் ஏகி இருப்பார். ஆனால் அவர் சற்குருவாகி தான் உதித்த இடையர் குலத்திற்கும் நல்லருள் புரிய வேண்டும் என்று விரும்பியதால் துர்வாச முனிவர் மூலம் ஒரு நாடகத்தை நிகழ்த்தினார். ஒரு முறை துர்வாச முனிவர் காட்டுப் பாதை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது இடையர் குலத்தைச் சேர்ந்த சிலர் ஒரு சிறந்த குலத்தில் உதித்து விட்டோம் என்ற போதையால் ஒருவனுக்கு கர்ப்பிணி வேடமிட்டு துர்வாச முனிவரின் முன் கொண்டு வந்து நிறுத்தி, “சுவாமி, இவளுக்கு பிறப்பது பெண்ணா ஆணா, அது எப்போது பிறக்கும் ?” என்று கேட்டார்கள். அந்த மாமேதைக்கு தெரியாத விஷயமா ? அவர் அந்த கோபியர்களைப் பார்த்து, “இவனுக்கு ஆணும் பிறக்காது பெண்ணும் பிறக்காது இடையர் குலத்தைக் கெடுக்க வந்த கோடரி காம்புதான் பிறக்கும்,” என்றாராம். அதைக் கேட்ட கோபியர்கள் சிரித்து அந்த கோபியின் வயிற்றைப் பிரித்துக் காட்ட முயற்சி செய்தார்களாம். அப்போது அந்த கோபியின் வயிற்றில் இருந்த இரும்பு கோடரியைக் கண்டு திகைத்து விட்டார்கள். உடனே செய்வதறியாது அந்த கோடலியை துண்டுகளாக்கி அருகில் இருந்த கடலில் வீசி விட்டார்கள். இரும்பு விதியைக் குறிப்பதல்லவா ? சில நாட்கள் கழித்து அந்த இரும்புத் துண்டுகளைப் போல கடற்கரையில் புற்கள் வளரவே அந்த புற்களால் மதுவின் போதையில் இருந்த கோபியர்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாண்டனர். அவர்கள் இறப்பதற்கு காரணமாக இருந்த இரும்புத் துண்டை ஒரு மீன் விழுங்க அந்த மீனை கண்ட ஏகலைவன் அதன் வயிற்றிலிருந்த இரும்புத் துண்டை தன் அம்பில் வைத்து பகவான் கிருஷ்ணர் வைகுண்டம் செல்ல துணை புரிந்தான், துர்வாச முனியின் சாபத்தை நிறைவேற்றும் ஒரு பாத்திரமானான். இடையர்குலத் தோன்றல்கள் எல்லாம் ரிஷிகள் என்பதால் அவர்கள் எத்தனை பிறவிகள் கழிந்தாலும் இறுதியில் அவர்கள் வைகுண்டம் அடைவார்கள் என்றாலும் அவர்கள் எடுக்க வேண்டிய பிறவிகளைக் குறைத்து அவர்களை விரைவில் வைகுண்ட வாசிகள் ஆக்கிய பெருமை பகவான் கிருஷ்ணரையும் மகரிஷி துர்வாசரையுமே சாரும்.

ஸ்ரீஅகத்திய முனிவர் கரிவலம்வந்தநல்லூர்

நித்திய பிரதோஷ நேரத்தைப் போல நற்சக்திகளுடன் திகழும் முகூர்த்த நேரங்களில் ஒன்றே உதய மார்த்தாண்ட நேரமாகும். மாலை நாலரை மணி முதல் ஆறரை மணி வரை திகழும் நேரம் நித்திய பிரதோஷ நேரமாக அமைவதைப் போல நித்திய மார்த்தாண்ட உதய நேரமாக அமைவதே தினந்தோறும் காலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை திகழும் இரண்டு மணி நேரமே உதய மார்த்தாண்ட நேரமாகும். இத்தகைய சூரிய சக்திகளை கிரகிக்கும் சக்தி பெற்ற ஒரே மூர்த்தியே கரிவலம்வந்தநல்தூரில் அருள்புரியும் உதய மார்த்தாண்ட லிங்க மூர்த்தி ஆவார். இவ்வாறு உதய சூரிய சக்திகள் என்பவை சூரிய உதயத்திற்குப் பின் தோன்றுபவையாகவும் உதய மார்த்தாண்ட சக்திகள் சூரிய உதயத்திற்கு முன் உள்ள ஐந்து நாழிகை நேரத்தில் விளங்கும் மார்த்தாண்ட சக்திகளாகவும் துலங்குகின்றன. இந்த மார்த்தாண்ட சக்திகளை கிரகிக்கும் சக்தி உள்ள ஒரே மகரிஷியே ஸ்ரீஅகத்திய பிரபு ஆவார். எனவே ஸ்ரீஅகத்திய மாமுனி அருளிய சூரிய நமஸ்கார பூஜையே சூரிய சக்திகளை கிரகிக்கும் சக்தி பெற்ற பூஜையாக விளங்குகிறது. சூரிய சக்திகளை கிரகிப்பதால் என்ன பலன் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? சூரியன் என்பவர் நவகிரக மூர்த்திகளில் முதன்மையானவராய்த் துலங்குவதால் சூரிய சக்தியை கிரகிக்கத் தெரிந்த ஜீவ ராசிகளே இறைவனைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு இறைவனைப் புரிந்து கொண்டவர்களில் முதன்மையாய்த் துலங்குபவர் ஸ்ரீஅகத்திய பிரான் ஆதலால் அவர் வழிநிற்கும் சற்குரு வெங்கடராமன் அவர்கள் அருளும் முறைகளைப் பின்பற்ற முயற்சி செய்வோம். இது எந்த அளவிற்கு மனித சக்தியால் முடியும் என்பதை உணர்ந்தால்தான் இதன் மகத்துவம் புரியவரும். இருள் என்பது ஒளி இல்லாத நிலை என்பதை நாம் அறிவோமே தவிர ஒளி தோற்றம் கொள்ளாத நிலையை அதாவது ஒளி உண்டாவதற்கு முன் இருந்த நிலையை நாம் அறியமாட்டோம். இந்த இரகசியத்தை உணர்விப்பதே தில்லை இரகசியம். ஒலி நாடி ஒலியாகி ஒலிக்குள் ஒளிந்த சிதம்பரத்தான் உணர்த்துவதே ஒலிக்கு முந்தைய நிலை. இதுவே மாணிக்கவாசகர் கூறும் நள்ளிருள். ஒளி இல்லாத இருட்டு நிலையைப் பிரித்துக் காட்டவே மணிவாசகப் பெருமான், “நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்,” என்று கூறுகிறார். இதுவே ஒலிக்குள் ஒளிந்த சிவனின் பரதேச நடனம். இந்த சிருஷ்டிக்கு முந்தைய இருள் நிலை திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் கூட அறிந்திரா நிலையே. அதனால்தான் நாயன்மார்களின் பட்டியலில் மாணிக்கவாசகர் இடம் பெறவில்லை. மாணிக்கவாசகரின் தெய்வீக நிலை நாயன்மார்களையும் தாண்டிய அதீத ஞான நிலை. இதனால் மாணிக்கவாசகரின் பெருமை உயர வேண்டுமே தவிர தேவார அடியார்களின் பெருமையை இம்மி அளவு கூட குறைத்து எடை போடக் கூடாது என்பதே சற்குரு வெங்கடராமன் அவர்கள் கூறும் ஞான விளக்கம், அன்பு விளக்கம். காரணம் இறை அடியார்களின் பெருமையை குறைத்து மதிப்பிட்டால் நாம் தாழ்ந்து போவோம் என்பதும் உறுதி. ஒளி ஒலி பற்றிய இரகசியங்களோடு மட்டுமல்லாது நிழல் பற்றிய இரகசியங்களும் இறை அடியார்களுக்கு அவசியமானவையே. இதுபற்றி உணர்ந்து கொள்ளவே உமாபதி சிவாச்சாரியார் கொடிக்கவி துதியை அருளியுள்ளார்கள். இருள் வேறு நிழல் வேறு. மகான்கள் இருளைச் சந்திப்பதில்லை ஆனால் மற்றவர்களின் வினையை எடுத்து அனுபவிக்கும் காரணத்தால் அவர்கள் உடலுக்கும் நிழல் உண்டு. இவ்வாறு மற்றவர்களின் வினையால் ஏற்படும் நிழலே கொடி மர நிழல். இவ்வாறு மற்றவர்களின் வினைகளை பஸ்மம் செய்வதற்காக கொடி மர நிழலிலேயே அமர்ந்து சேவை செய்தார் உமாபதி சிவாச்சாரியார்.

ஸ்ரீநந்திமூர்த்தி லால்குடி

சற்குரு வெங்கடராமன் அவர்கள் பெரும்பாலும் கால்நடையாகவோ சில சமயங்களில் மொபெட் மூலம் பெரும்பாலான இடங்களுக்கு செல்வதுண்டு. ஒரு முறை சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பல்லவன் ரயிலைப் பிடிக்க அந்த அடியாருடன் பேருந்து நிலையத்திற்கு வந்தார். பேருந்தில் அதிகம் பயணம் செய்யாத காரணத்தால் எக்மோர் செல்லும் பேருந்தின் எண் சற்குருவிற்கு தெரியவில்லை. அதனால் ஒரு பேருந்தில் அந்த அடியாருடன் ஏறிக் கொண்டு நடத்துனரிடம் அந்த பேருந்து எக்மோர் செல்லுமா என்று விசாரித்தார். அந்த நடத்துனரோ சற்றும் மரியாதையின்றி பேருந்து எக்மோர் போகுமா போகாதா என்பது பற்றியே கூறாமல், “அடி சீ இறங்குய்யா”, என்று கூறினார். சற்குருவோ அவருக்கே உண்டான அமைதியுடன், “ ...... இந்த வண்டி எக்மோர் போகாதாம், வேறு பஸ் நாம் கேட்டுப் பார்ப்போம்,” என்று கூறி அந்த அடியாருடன் இறங்கி விட்டார். இந்த நிகழ்ச்சி பற்றி ஏற்கனவே விவரித்துள்ளோம். அந்த அடியாருக்கோ ப்ளெட் பிரஷர் தலைக்கு ஏறி விட்டதாம். அந்த நடத்துனரின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை அறையலாம் என்ற அளவிற்கு அவருக்கு கோபம் ஏற்பட்டதாம். இந்த நிகழ்ச்சி சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இப்போது அந்த அடியார் இதே நிகழ்ச்சியைப் பற்றி விவரிக்கும்போது அந்த நடத்துனர் கன்னத்தில் அறையலாம் என்று தோன்றியதற்கு காரணம் நடத்துனருடைய நடத்தையோ சற்குரு மேலுள்ள அபிமானமோ காரணம் கிடையாது. தன்னுடைய குருநாதர் என்ற தான் என்ற அகந்தையால் விளைந்த கோபமே அது. இந்த தான் என்ற எண்ணம் அந்த அடியாரிடம் இருப்பதை தானாக உணர்ந்து தெளிவடைவதற்காகவே சற்குரு இந்த நாடகத்தை ஏற்று நடிக்க வேண்டியிருந்தது. அதனால் இப்போது அதே நிகழ்ச்சியை விவரிக்கும் அடியார் கண்களில் குருவின் தியாகத்தை குறித்து கண்ணீர் மல்குகிறது என்பதை சொல்லவும் வேண்டுமோ ?

ஒருமுறை திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்திற்காக அன்னதான சேவைக்கு பணம் வசூல் செய்யச் சென்ற சற்குருவிடம் ஒருவர், “சார், சுவாமி தலையில் பால், மோர் என்று ஊற்றுவது எல்லாம் வேஸ்ட்,” என்று வெறுப்புடன் கூறினார். அவர் கூறும் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சற்குரு ஒன்றும் கூறாமல் திரும்பி விட்டார். “சுவாமிக்கு அபிஷேகம் செய்வதால் உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் நலம் பெறும். இதை உணராமல் ஒருவன் சுவாமிக்கு அபிஷேகமே வேஸ்ட் என்றால் அவனிடம் என்ன பதில் சொல்வது?” என்று அடியார்களைக் கேட்டார். அப்போது அடியார்களால் ஒன்றும் பதில் கூற முடியவில்லை என்றாலும் ஒருவேளை சற்குரு அந்த நபரையும் இறைவனாகப் பார்த்தாரோ என்னவோ?

ஸ்ரீஸ்ரீமதி அம்மன் லால்குடி

இதே போல சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நடந்த போரின்போது சீனர்கள் பல பெண்களை நிர்வாணமாக தங்கள் எல்லையில் நிறுத்தி இருந்தனர். இது ஒரு யுத்த தந்திரம் என்று அறியாத பல இந்திய வீரர்கள் அந்த பெண்களை நெருங்க முயன்றபோது எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகி தங்கள் உயிரைத் துறக்க வேண்டி வந்தது. இதையெல்லாம் நேரில் கண்டு மனம் இறங்கியவரே சற்குரு. அந்தப் பிறவியில் கேப்டன் கந்தர்வா என்ற திருநாமத்துடன் பூமியில் உலவி வந்தார். அப்போது தன்னருகில் சண்டைக்காக வெட்டப்பட்ட ஒரு பள்ளத்தில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த ஒரு சிப்பாய் மீது சீனர்களின் குண்டு பாயவே அந்த சிப்பாயின் உயிர் பிரிந்தது. ஆனால் எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற வெறியில் அந்த சிப்பாய் இருந்ததால் உயிர் இல்லா அந்த உடலானது தன் இரு கரங்களால் துப்பாக்கியை ஏந்தி எதிரியை வீழ்த்த குறி பார்த்தது. அருகிலிருந்த கேப்டன் கந்தர்வா அந்த வீரனின் கையைத் தட்டி உன்னுடைய உயிரோ பிரிந்து விட்டது. இனி உனக்கு துணை என்பவர் சிவன் ஒருவனே என்பதை செய்கையால் உணர்த்தவே அந்த சிப்பாய் அமைதி அடைந்தான். இவ்வாறு போர்க்களத்திலும் பலருக்கு தெய்வீகத்தை புகட்டிய கேப்டனின் உயிர் பாரத மண்ணிற்காக பாரத தேசத்திலேயே பிரிந்தது என்பதை ராணுவ தஸ்தாவேஜுகளும் உறுதி செய்யும். இவ்வாறு இறை சக்தி ஒன்றே என்று புகட்டுவதே இறைவனாகவும், கேப்டன் கந்தர்வாவாகவும், சற்குரு வெங்கடராமனாகவும், நடத்துனராகவும் துலங்கும் அருளாளன் அருணாசல ஈசன்.

ஸ்ரீமுருகப் பெருமான்
மெய்ஞானபுரி

இறைவனின் மகிமையை உணர சற்குரு வெங்கடராமன் அவர்களால் அருளப்பட்டதே தேவாரத் திருப்பதிகங்களாகும். இந்த 32 பதிகங்களை திருத்தவத்துறை லால்குடி அம்மன் ஸ்ரீஸ்ரீமதி தலத்தில் ஓதுவது சிறப்புடையதாகும். இந்த திருத்தலத்தில் ஸ்ரீஸ்ரீமதி அம்மன் அறம் வளர்த்த நாயகியாக 32 அறங்களைக் குறிக்கும் பிரதட்சண தூண்களுடன் விளங்குவது சிறப்பாகும். இத்துடன் இறைவணக்கமாகிய இடர்களையும் பதிகத்தை ஓதும்போது அது 33 பதிகங்களாகி எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா அருணாசலா என்ற சித்த மந்திரத்தின் விளக்கமாக குருவருள் வழங்கும் இனிய பிரசாதமாக மலர்கிறது. இதுவும் குரு கருணையே. தேவாரப் பதிகங்களை தினமும் திருத்தவத்துறை அம்பாள் முன்னிலையில் ஓதுவது இயலாத காரியம் என்றாலும் ஒருமுறை ஸ்ரீபெருந்திருப்பிராட்டியாரை தரிசனம் செய்து அறம்வளர்த்த தூண்களை வணங்கி பின்னர் தங்கள் சொந்த ஊரில், இல்லத்தில் லால்குடி அம்பாளையோ, இந்த தூண்களையோ, நந்தியெம்பெருமானையோ நினைவு கூர்வதாலும் இந்த 32 பதிகங்களின் பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும் என்று சித்தர்கள் உறுதியளிக்கிறார்கள். சற்குரு வெங்கடராமன் அவர்கள் இத்தலத்திற்கு வருகை தந்தருளி இந்த அறம்வளர்த்த தூண்களை தரிசனம் செய்த பின்னரே ஸ்ரீஅகத்தியர் அருளிய 32 தேவாரப் பதிகங்களை இந்தப் பிரபஞ்ச நலனுக்காக அளித்தார்கள். இன்று உலகெங்கும் சற்குருவின் திருநாமத்தால் நடக்கும் நற்காரியங்கள் அனைத்திலும் மிளிரும் புண்ணிய பலன்கள் அனைத்தும் இத்தூண்களில் கனிகின்றன, தெய்வீகப் பங்கீடு செய்யப்படுகின்றன என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். ஸ்ரீமதி என்னும் சொல் குருவிற்கு உரிய மூன்று அட்சரங்களுடன் திகழ்வதால் சற்குரு அமையப் பெறாதவர்கள் ஸ்ரீமதி அன்னையை தங்கள் குருவாக பாவித்து வழிபாடுகளை இயற்றுதல் என்பது கலியுகத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

ஸ்ரீதுர்கை
மெய்ஞானபுரி

அம்பாள் சன்னதியில் பொலியும் (39) தூண்களும் அன்னை ஜகத் குருவாய் துலங்கும் பாங்கை வர்ணிக்கின்றன. அனைத்து தூண்களும் அறம் வளர்த்த தூண்களுக்கு குசாவாகப் பொலிவதும் அன்னையின் பெருங்கருணையாகும், பெருந்திருப் பிராட்டியின் கருணை மழையாகும். இக்காரணம் பறறியே சற்குரு வெங்கடராமன் அவர்கள் அன்னை ஸ்ரீமதி அம்மனிடம் எந்த பிரார்த்தனையையும் முன் வைக்க வேண்டாம் என்ற அன்புக் கட்டளையை விடுத்துள்ளார்கள். “நீங்க என்னதான் மாஞ்சு மாஞ்சு கேட்டாலும் அம்மா கொடுக்க நினைப்பதை விட நீங்கள் கேட்பது குறைவாகவே இருக்கும்,” என்பதே சற்குரு அளிக்கும் விளக்கமாகும். ஸ்ரீ என்னும் சொல் லட்சுமியைக் குறிப்பதால் திருமகள் இத்தலத்தில் குபேர திக்காகிய வடக்கில் எழுந்தருளியிருப்பது சிறப்பாகும். இத்தகைய குபேர சக்திகளை திருஅண்ணாமலையை வலம் வரும் பக்தர்களுக்கு அளிப்பதற்காக சற்குரு வெங்கடராமன் அவர்கள் லால்குடியிலேயே ஒரு அடியார் இல்லத்தில் நெல் மணிகளைப் பாதுகாத்து வைத்திருந்து திருகார்த்திகை தீப அன்னதானத்திற்கு பயன்படுத்தினார்கள். அந்த நெல் மணிகளில் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் தீய சக்திகளை ஈர்ப்பதற்காக தேள், பாம்புகள் இந்த நெல்மணிகளின் மேல் விளையாடிய இரகசியம் இன்று வரை எவருக்கும் புரியாத புதிராகும்.

ஒரு சுப முகூர்த்த நாளில் சற்குரு வெங்கடராமன் அவர்கள் அந்த இல்லத்திற்கு எழுந்தருளி நெல் தானிய மணிகளுக்கான பூஜையையும் நிறைவேற்றினார்கள். அப்போது சற்குரு அவர்கள், “நெல்லையும் அரிசியையும் கூட்டி வைத்திருக்கும் இந்தப் பசையை எந்த விஞ்ஞானத்தாலும் உருவாக்க முடியாது. அது மட்டுமல்ல இந்த அரிசி உணவால் கிட்டும் குடும்ப ஒற்றுமையை வேறு எந்த உணவாலும் பெற இயலாது. அதனால் இன்று வரை அரிசி சாதமே நம் ஆஸ்ரமத்தில் பிரதான தானமாக வழங்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்கள். எனவே அரிசி சாதம் அன்னதானத்தால் உருவாக்க முடியாத குடும்ப ஒற்றுமை வேறு எந்த தானத்தாலும் உருவாக்க முடியாது என்று சித்தர்கள் ஆணித்தரமாக உரைக்கிறார்கள். அரிசி சாத அன்னதானம் பலருக்கும் சாத்தியம் என்றாலும் உமியுடன் கூடிய நெல் தானிய மணிகளை பூஜித்தல் என்பது ஆயிரத்தில், லட்சத்தில் ஒருவருக்கே கிட்டும் வாய்ப்பு என்பதால் அந்த பூஜையையும் சற்குரு அவர்கள் மக்களின் குடும்ப ஒற்றுமைக்காக ஏற்று நடத்தினார்கள். வசதி படைத்தவர்கள் நெல் தானிய மணிகளுக்கு வழிபாடுகள் இயற்றி தங்கள் வீட்டு உபயோகத்திற்காக நெற்குதிர்களில் சேமித்து வைத்துக் கொள்வதும் திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் நடக்கும் அன்னதான வைபவத்திற்கு அளிப்பதும் மிகவும் சிறப்புடைய லட்சுமி கடாட்ச வழிபாடாகும்.

நித்திய பிரதோஷ நேரத்தில் உதயமாகும்
பூவாளுர் நந்தி கலம்பகம்

திருசோற்றுத்துறையில் அன்னபூரணி அம்பிகையானவள் உமி இல்லாமல் நெல்லை விளைவித்தாலும் அந்த நெல்லிலும் இந்த சோற்றுப்பசை இருந்தது. அதனால்தான் அத்திருத்தலம் இன்றும் திருசோற்றுத்துறை என்றே வழங்கப்படுகிறது. திருவையாறு சப்தஸ்தானம் சமயத்தில் நம் ஆஸ்ரமம் சார்பாக நிகழ்ந்த அன்னதானம் இக்காரணம் பற்றியே திருசோற்றுத்துறையில் நிகழ்ந்தது என்பது ஒரு சிலரே அறிந்த இரகசியமாகும். இவ்வாறு உமி இல்லாமல் சோறு மட்டும் வளரும் விளைநிலத்தில் வழிபாடுகள் இயற்றிய பெருமை நம் ஆஸ்வரமத்தையே சேரும். மேலும் திருசோற்றுத்துறை திருக்கோயிலும் மாறன்பெருந்துறையான் என்ற சோழ அரசனால் கட்டப்பட்டு சற்குரு அவர்களால் புனருத்தாரணம் செய்யப்பட்டதாகும். மாறன்பெருந்துறையான் என்ற மாமன்னன் சித்த குலத் தோன்றலே, சற்குருவின் அவதாரமே.
பொதுவாக சிவத்தலங்களில் மூன்று நந்தி மூர்த்திகள் அமைந்திருப்பர். நந்தி மூர்த்தியே மூலவருடைய மூச்சுக் காற்றாக அமைந்திருப்பதால் இந்த மூன்று நந்தி மூர்த்திகளும் பூரகம், ரேசகம், கும்பகம் என்ற மூச்சுக் காற்று நிலைகளை நிர்வகிக்கும் மூர்த்திகளாகத் திகழ்கிறார்கள். இவ்வாறு கும்பக சக்திகளை நிர்வகிக்கும் மூர்த்திக்கே பிரதோஷ பூஜைகளை திருத்தலங்களில் நிகழ்த்துவர். உண்மையில் இந்த மூச்சுக் காற்று அல்லாது அனைத்து ஜீவ சக்திகளையும் நிர்வகிப்பதே இந்த நந்தி மூர்த்திகளின் பணியாகும். அதனால் நந்தி மூர்த்திக்கு அறக்கடவுள் என்ற நாமமும் உண்டு. இவ்வாறு மூச்சுக் காற்று அல்லாது அனைத்து ஜீவ சக்திகளையுமே நந்தி கலம்பகம் என்ற பதத்தால் சித்தர்கள் குறிக்கிறார்கள். நந்தி என்ற நாமம் சிவபெருமானின் வாகனத்தை மட்டுமல்லாது சிவபெருமானையும் இந்த பதம் குறிக்கும். இந்த நந்தி கலம்பக சக்திகளை சிறப்பாக வழங்கும் மூர்த்திகளாக பித்ரு மூர்த்திகள் அமைவதால் நந்தி கலம்பக சக்திகளை பெரும் இடம் திருச்சி பூவாளூர் திருத்தலமாக அமைகிறது. வழிபாட்டின் மூலம் இந்த நந்தி கலம்பக சக்திகளை பெற விழையும் ஆன்மீக அன்பர்கள் நித்ய பிரதோஷத்தை அனுஷ்டிப்பதும், பித்ரு பூஜைகளை மேற்கொள்வதும் சிறப்பாகும். இதற்கு மாற்று முறையாக சித்தர்களால் அளிக்கப்படுவதே சூரிய நமஸ்கார பூஜையாகும். இதில் ரேசகம், பூரகம் என்ற சக்திகள் அனைத்தும் கும்பகத்தில் லயமாவதால் நந்தி கலம்பக சக்திகளை கும்பகத்திலிருந்தே நேரிடையாக பெறுவதாக சற்குரு வெங்கடராமன் அவர்கள் அமைத்துள்ளது கலியுக மக்கள் பெற்ற பெரும் பேறாகும். இவ்வாறு சிவ சக்தி, வாகன சக்தி (இங்கு உத்தி), சூரிய சக்தி, ஜீவ சக்தி அனைத்தும் லயமாவதே கலம்பகம் ஆகும். இவ்வாறு பூவாளூர் திருத்தலத்தில் சுவாமி, அம்பாள், நந்தி மூர்த்தி இவர்களுடன் சூரிய பகவான், அஸ்வதம் என்னும் அரசமரம், பல்குனி நதி தீரம் இவற்றின் ஒருங்கிணைந்த சக்திகளை சற்குரு வெங்கடராமன் அவர்கள் அருளிய சூரிய நமஸ்கார வழிபாடு பெற்றுத் தருகிறது என்றால் சற்குருவிற்கு நாம் எந்த அளவிற்கு கடமைப்பட்டுள்ளோம் என்பது புலனாகின்றது அல்லவா ?

ஸ்ரீசூரிய சாயை கணபதி
திருதவத்துறை லால்குடி

லால்குடி திருத்தலத்தில் அம்பிகை அம்மனைச் சுற்றியுள்ள தூண்களில் இரண்டாவது தூணில் ஸ்ரீசூரிய சாயை கணபதி எழுந்தருளி உள்ளது மிகவும் அபூர்வமான காட்சி ஆகும். ஒரே வரிசையில் வலது பக்கம் உள்ள வீடுகளில் இரண்டாவது வீடு குசா சக்தியுடன் பொலியும். இவ்வாறு அம்பிகைக்கு வலது பக்கம் இரண்டாவது தூணில் ஸ்ரீசூரிய சாயை கணபதி எழுந்தருளி இருப்பது குசா சக்திகளைக் குறிப்பது மட்டுமல்லாமல் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் கணபதி மூர்த்தி இவரே. லால்குடி திருத்தலத்தில் சுவாமி அம்பாள், மகாவிஷ்ணு மகாலட்சுமி இவர்கள் திருமணக் கோலத்தில் எதிரெதிரே எழுந்தருளி இருப்பது மட்டுமல்லாமல் ஸ்ரீஆதிரை கணபதி மூர்த்தியும் ஸ்ரீசூரிய சாயை கணபதி மூர்த்தியும் முறையே சுவாமி அம்பாளின் வலது பக்கத்தில் எதிரெதிரே எழுந்தருளி இருப்பதும் பெரும் சிறப்பாகும். பெண்கள் ஜாதகத்தில் ஏழாமிடத்தில் செவ்வாய் எழுந்தருளி இருப்பது களத்திர தோஷத்தைக் குறிப்பதால் அத்தகைய பெண்களுக்கு அருள் புரிபவரே ஸ்ரீசூரிய சாயா கணபதி மூர்த்தி ஆவார். மூலம், திருவாதிரை, வளர் சதுர்த்தி, சப்தமி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆதிரை கணபதி மூர்த்தியையும் ஸ்ரீசூரிய சாயா கணபதி மூர்த்தியையும் வழிபடுவதால் அற்புதமான பலன்களைப் பெறலாம். இத்தகைய களத்திர தோஷங்கள் உடைய பெண்கள் திருமணங்களை தவிர்த்தல் நலமே என்றாலும் அவர்கள் திருத்தவத்துறை தலத்தில் இயற்றும் வழிபாடு சற்றும் வீண்போவதில்லை. அத்தகைய பெண்கள் முறையான திருமணத்தால் எத்தகைய பாதுகாப்பைப் பெறுகிறார்களோ அதே அளவு சிறந்த பாதுகாப்பையும் நல்ல எதிர்காலத்தையும் வகுத்துத் தரும் மூர்த்திகளே ஸ்ரீஆதிரை கணபதியும் ஸ்ரீசூரிய சாயா கணபதி மூர்த்தியும். திருமணமான தம்பதிகளுக்கு நல்ல குடும்ப ஒற்றுமையையும் அன்யோன்யத்தையும் வளர்ப்பது இந்த மூர்த்திகளின் வழிபாடு ஆகும். அம்பாள் சன்னதியில் உள்ள தூண்கள் மொத்தம் 39. இவற்றில் பிரதட்சிணத்தில் வராத தூண்களையும் அம்மன் சன்னதியில் உட்புறத் தூண்களையும், ஸ்ரீசூரிய சாயை கணபதிக்கு முன் உள்ள தூணையும் கழித்தால் மிஞ்சும் தூண்களின் எண்ணிக்கை 28ஆக அமையும். இவையே சூரிய சாயை தூண்கள். இந்த 28 தூண்களையும் ஓம் கம் கணபதியே நமஹ என்று மனதினுள் ஓதி ஒவ்வொரு தூணையும் தொட்டு வணங்கியவாறு அம்மன் சன்னதியை வலம் வருதல் எளிமையான சூரிய சாயா வழிபாடு ஆகும். ஞாயிற்றுக் கிழமை இயற்றும் இத்தகைய வழிபாட்டிற்குப் பின் அருகம்புல் சாறு அருந்துவதால் நல்ல கண் பார்வை கிட்டுவதுடன் கண்ணாடி போடாத நிலையுடனே வயதான பின்னரும் திகழ உதவும் அற்புத வழிபாடாகும். அப்பா மகன் போன்று ஆண் சந்ததிகளுக்கு இடையே தோன்றும் போட்டி பொறாமை, குடும்ப சச்சரவுகள் தீர்க்க உதவும் வழிபாடு இது. சர்க்கரைப் பொங்கல் தானம் சிறப்பு. குறைந்தது அம்பாள் சன்னதியை இத்தகைய பிரதட்சிணத்தால் ஏழு முறை வலம் வருதல் நலம். அம்பாள் பிரகாரத்தில் கன்னிமூலை கணபதி, சூரிய சாயா கணபதி, நர்த்தன கணபதி என்று மூன்று கணபதி மூர்த்திகளின் தரிசனம் ஒருங்கே கிட்ட இதில் ஸ்ரீசூரிய சாயை கணபதி நடுநாயகமாகத் திகழ்வது குசா சக்தியின் பொலிவைக் குறிக்கும். எனவே புதன் கிழமை, வளர் சப்தமி திதி, சித்திரை நட்சத்திரம் நிலவும் தினங்களில் இந்த கணபதி மூர்த்தியை வணங்கி நிகழ்த்தும் காரியங்கள் நற்பலனையே வர்ஷிக்கும்.


திருதவத்துறை திருத்தலம்

சப்த கணபதிகள், சப்த நாகர்கள், சப்த கோபுர கலசங்கள் என்றவாறாக மட்டுமல்லாமல் அனைத்திற்கும் மேலாக சப்தரிஷிகளுடன் திகழும் தலமே திருத்தவத்துறையாகும். எனவே இத்தலத்தை குசா சக்திகளின் கோட்டை என்று சொன்னால் மிகையாகாது. இத்தல அம்மன் மீது ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை அருளிய பிள்ளைத் தமிழ் துதியும் குசா சக்திகளுடன் பொலிவது அதிசயமே. இத்தனை குசா சிறப்புகளுடன் பொலியும் தலம் ஆதலால்தான் சற்குரு வெங்கடராமன் அவர்கள் இத்தலத்தைச் சேர்ந்த அடியாருக்கு குசா சக்திகளின் மேன்மை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்களோ என்னவோ ? வேறெங்கும் இல்லா வகையில் இத்தல நடராஜ மூர்த்தி பின்னழகுடன் திகழ்கிறார். இறைவனின் பின்னழகு என்பது குருவழகுதானே ! இவ்வாறு இறைவனின் சப்தாவர்ண பெருமைகள் நவாவர்ணமாக பிரகாசிக்கும் தலமே திருதவத்துறை ஆகும். இந்திர தனுசு அல்லது வானவில்லைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். திருதவத்துறையில் பொலியும் வானவில் மற்ற எவ்விடத்திலும காணக் கிடையாத புதுமையாகும். திருதவத்துறை திருத்தலத்தில் சப்தகணபதி மூர்த்திகள், சப்தரிஷிகள், சப்தநாகர்கள் உட்பட அனைத்து சக்திகளும் கிழக்கு திசையிலிருந்தே பொலிகின்றன. இத்தலத்தில் அனைத்து நவகிரக மூர்த்திகளும் சூரிய பகவானை வணங்கி அவர்களிடம் தங்கள் சக்தியை அர்ப்பணிக்க சூரிய பகவான் இந்த நவ சக்திகளை தன்னுடைய ஏழு குதிரைகள் உடைய இந்திர தனுசாக சப்தரிஷிகளிடம் அளிக்க சப்தரிஷிகள் இந்த தனுசை ஸ்ரீசப்தரிஷீஸ்வருக்கு ஹரிதஸ்வ ஆரமாக அர்ப்பணிக்கின்றனர். ஹரிதஸ்வம் என்றால் நடுவில் பச்சை வண்ணத்தை உடைய இந்திர தனுசு என்று பொருள். இத்தகைய ஆரத்தை நம் சற்குருவிற்கு ஒரு பிரபல சன்னிதானம் சூட்டினார். அதன் பலனாய் அவர் வருடத்திற்கு ஒரு முறை ஸ்ரீசப்தரிஷீஸ்வரருக்கு திருப்பணி நிகழ்த்தும் பெருமையையும் அடைந்தார். சப்தரிஷிகளை தரிசனம் செய்த பின்னர் இத்தல ஆஞ்சநேய மூர்த்தியையும் தரிசனம் செய்தல் சிறப்பாகும்.

காமத்தீயை அணைப்பதே இல்லறம்
அனைத்திற்கும் அப்பாற்பட்டதே இறையறம்

சபரிமலையில் சுவாமி ஐயப்பனே மகர ஜோதியாய் காட்சி தருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இது அனைவரும் வணங்கி வழிபடும் தெய்வீக சக்தியாகும். ஆனால் இந்த சக்தியைப் புரிந்து பயன்படுத்த முடியாதவர்களுக்கும் காட்டுத் தீயாய் சபரிமலையில் தரிசனம் அளிக்கும் கருணை வள்ளலே ஸ்ரீஐயப்ப சுவாமி என்பதைப் புரிந்து கொண்டால்தான் இறைவனின் சக்தியைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டதாகும். இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குகிறோம். சற்குருவின் மகளுக்கு திருமணம் நடக்க இருந்தது. பொதுவாக திருமணத்தை கோயில்களில் அதுவும் திருக்கோயில் கருவறை அருகிலேயே அதாவது 12 அடிக்குள்ளாகவே மாங்கல்ய தாரண வைபவத்தை நிகழ்த்த வேண்டும் என்பது நமது சற்குருவின் விருப்பம். இதற்கு காரணம் திருமணம் என்பது மணமகன் மணமகள் இவர்கள் இறைவனை அடைய ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தால் தாங்கள் பயனடைவது மட்டுமல்லாது உத்தம சந்ததிகளை உருவாக்கி அவர்களும் இறைநெறியில் நிலைத்து நிற்க உதவும் ஒரு தெய்வீக ஏற்பாடு இது. அது மட்டுமல்லாமல் இந்த திருமணத்தை தரிசனம் செய்யும் அடியார்களின் குடும்பத்திலும் ஏன் அவர்கள் வம்சாவளியிலுமே நற்சக்திகள் பெருகும் என்பது உண்மையே. இவ்வாறு திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த சற்குருவிற்கு கிடைத்த பரிசோ திருமணம் நடத்த வேண்டிய இடத்தில் மாங்கல்ய தாரணத்திற்கான அனுமதி கிட்டாததுதான். ஒரு மனிதனாக தன் ஒரே மகளின் திருமணத்திற்கு தடைகள் வருவதென்றால் அதைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அந்த தடங்கலை ஏற்படுத்தியவரோ சற்குரு தன்னுடைய தந்தையாக மதித்த தமிழகமே போற்றும் ஒரு சிவாச்சாரியார். அந்த சிவாச்சாரியரின் மகனோ சில வருடங்களுக்கு முன் சபரிமலை சென்றிருந்தபோது ஒரு காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டான். இது பற்றி அறிந்தார் அந்த சிவாச்சாரியார். தொலை பேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதால் தன் மகனின் நிலைபற்றி எதுவும் அறிந்து கொள்ள முடியாமல் சற்குருவிடம் சரணடைந்தார் அவர். சற்குரு தன்னுடைய தீட்சண்ய மிகு கண்களால் நடந்ததை அறிந்து கொண்டு அந்த சிவாச்சாரியாருக்கு ஆறுதல் அளித்து, “உங்கள் பையன் ஐயப்ப தரிசனத்தைத்தான் ஏதோ ஒரு விதத்தில் பார்த்துக் கொண்டு இருக்கிறான். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம், சென்று வாருங்கள்,” என்று விடைகொடுத்து அனுப்பினார். சற்குரு கூறிய வண்ணமே அவருடைய மைந்தன் ஒரு வாரம் கழித்து எந்தவித ஆபத்தும் இல்லாமல் பத்திரமாக திரும்பி வந்தான். இவ்வாறு தன்னுடைய பூஜா பலன்களை அளித்து உயிரை மீட்ட மைந்தனின் தந்தைதான் சற்குருவின் மகளின் திருமணத்திற்கு ஆட்சேபணை தெரிவித்தது. “எனவே ஒரு உயிரைக் காப்பதோடு நம் கடமை முடிந்து விட்டது. அடியேனுடைய மகள் திருமணத்தை கடவுள் பார்த்துக் கொள்வார்,” என்றார். அது உண்மைதான். சற்குருவின் மகளின் திருமணத்தை கடவுள் சிறப்பாக நடத்திக் கொடுத்தார் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. சற்குரு திருஅண்ணாமலை தீபப் பண்டிகையின்போது நிகழ்த்திய அன்னதான மண்டபத்தில் காவல் பணியில் ஒரு அடியார் நியமிக்கப்பட்டு இருந்தார். சற்குரு அந்த அடியார் என்ன செய்கிறார் என்று தலைமைப் பொறுப்பில் இருந்த மற்றோர் அடியாரைக் கேட்டபோது அவர், “வாத்யேரே, அவர் சென்ட்ரி டூட்டி பாரத்துக் கொண்டிருக்கிறார்,” என்று தெரிவித்தார். அதற்கு சற்குரு, “இல்லை சார், அந்த அடியார் நம் அனைவருக்கும் எனர்ஜி (சக்தி) கொடுத்துக் கொண்டிருக்கிறார்,” என்றாராம். அந்த அடியாருக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் பின்னர் அந்த காவல் பணியில் இருந்த அடியாரை அழைத்து அவர் என்ன பூஜை செய்கிறார் என்று வினவினார். காரணம் ஒருவர் அனைவருக்கும் சக்தி கொடுக்கும் ஒரு காரியத்தைச் செய்கிறார் என்றால் அதை மற்றவர்களும் பின்பற்றலாமே என்ற எண்ணத்தில்தான் அந்த அடியார் கேட்டார். அதற்கு காவலாளி அடியாரோ, ”எனக்கு பூஜையும் தெரியாது, ஒன்றும் தெரியாது நான் சும்மாதான் உட்கார்ந்து கொண்டு இருந்தேன்,” என்றாராம். அப்போதுதான் அந்த காவல் புரிந்த அடியாரின் பணி புரிந்ததாம். அவருக்குப் புரிந்த விஷயம் மற்றவர்களுக்கும் புரிவதற்காக இங்கு அளிக்கிறோம்.

எங்கும் நிறைவு எதிலும் நிறைவே

சற்குரு நிகழ்த்தும் அன்னதானம், உழவாரத் திருப்பணி, மருத்துவ முகாம் போன்ற நற்காரியங்களில் ஈடுபடும் அடியார்கள் தாங்கள் ஒரு இறைக் கருவி என்ற எண்ணத்தை எந்த அளவு பூர்ணமாக கொண்டிருக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களை வைத்து தேவையான காரியங்களை சற்குருவே நிகழ்த்தி விடுவார். ஒரு கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து விளக்கு எரிகிறது என்றால் அந்த மின்சாரக் கம்பியை மற்றவர்கள் தொட்டுவிடாமல் பாதுகாப்பதே ஒயரின் (அல்லது இன்சுலேசன் டேப்) பணி. இவ்வாறு ஒரு இன்சுலேசன் டேப்பாக அடியார்கள் இருந்தாலே போதும் அவர்களை வைத்து அனைத்து நற்காரியங்களையும் சற்குரு இயற்றி விடுவார். இதையேதான் சத்ய சாய்பாபாவும் கூறுவார்கள். “எனக்கு தாங்களாக யோசிக்கும் புத்திசாலிகள் தேவையில்லை, நான் சொல்வதை அப்படியே நிறைவேற்றும் முட்டாள்கள் போதும்.” இவ்வாறு அடியார்கள் செயல்பட ஆரம்பித்தால் அவர்கள் உள்ளே எந்த தீய சக்தியும் செல்லாது அவர்கள் உள்ளே உள்ள நல்ல சக்திகள் பாதுகாக்கப்பட்டு நற்காரியங்களைச் செய்யும், காரணம் உள்ளே இருப்பது இறைவன் என்ற நற்சக்தியே. ஆனால் உள்ளே இருப்பதும் வெளியே இருப்பதும் ஒரே சக்திதான் என்பதை உணரும் நிலைக்கு சீடன் வரும்போது அங்கு குருவும் மாயம் சீடனும் மாயம், அனைத்தும் இறைவனே, அனைத்தும் பிரம்மமே. எனவே அந்த காவல் அடியார் ஒரே ஒரு நிமிடம் தன்னுடைய பணியை நினைவு கூர்ந்து அதை மட்டும் தன்னுடைய வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தால் போதும். அவர் நிச்சயம் கரை சேர்ந்து விடுவார். இது அந்த காவல் அடியாருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான சற்குருவின் ஆலோசனையே, வழிகாட்டுதலே, அன்புக் கட்டளையே.
திருதவத்துறை திருத்தலத்தின் முகப்பில் எம்பெருமான் எழுந்தருளிய கோலத்தை இங்கு சித்தரிக்க காணலாம். ஆனால் இந்தச் சிவக்குடும்பத்தில் முருகப் பெருமானை தரிசிக்க இயலாது. சூட்சுமமாக பதிந்திருக்கும் ஜுரஹரேஸ்வரரின் திருஉருவத்தைப் போல் இங்கு ஸ்ரீமுருகப் பெருமானின் உருவமும் சூட்சுமமாக எழுந்தருளி உள்ளது. இறைவனின் ஒவ்வொரு காட்சியிலும் எத்தனையோ காரண காரியங்கள் உண்டு அல்லவா ? இவ்வாறு தங்கள் வாழ்க்கைக்கு பொருள் தெரியாதவர்கள், எதற்காக வாழ்கிறோம் என்று விரக்தியுடன் உழல்பவர்கள் இந்த சிவக்குடும்பத்தை தரிசனம் செய்து ஆத்மவிசாரம் செய்து வந்தால் அவர்கள் சிவக்குடும்பத்தை முழுமையாகக் காணும் முன் தங்கள் வாழ்க்கைக்கு உரிய அர்த்தத்தை கண்டு இன்பம் பெறுவார்கள். உத்திரம் விடையளிக்கும்.

ஸ்ரீமுருகப் பெருமான்
திருதவத்துறை லால்குடி

திருமணத்தின்போது சப்தபதி என்ற ஒரு முக்கிய வைபவம் உண்டு. இதில் மாங்கல்ய தாரணத்திற்குப் பின் மணமகன் மணமகளின் கையைப் பிடித்துக் கொண்டு அக்னியை வலம் வருதல் வேண்டும். இவ்வாறு வலம் வரும் ஏழு அடிகளே சப்தபதி எனப்படும். இந்த ஒவ்வொரு அடியிலும் ஓத வேண்டிய மந்திரங்களும் அந்த மந்திரங்களுக்கான ஆழ்ந்த அர்த்தங்களும் உண்டு. உண்மையில் இந்த சப்தபதி நிறைவு அடையும்போதுதான் திருமணமே நிறைவு அடைவதாக அர்த்தம். இவ்வளவு பொருள் பொதிந்த திருமண வைபவம் பல திருமணங்களில் சரியாக நிகழாததால் சற்குருமார்கள் திருமணங்களை திருக்கோயில்களை நிகழ்த்துமாறு அருளியுள்ளார்கள். இத்தகைய திருமணங்கள் எத்திருத்தலத்தில் நடந்தாலும் அந்த சப்தபதி நிகழ்ச்சி லால்குடி திருத்தவத்துறையிலேயே நடைபெற்றாத கணக்கில் கொள்ளப்படும் என்பது சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். ஆனால் இது சித்தர்கள் தெரிவிக்க வேண்டிய அவசியமே கிடையாது, காரணம் சுவாமியின் பெயரே சப்தரிஷீஸ்வரராக இருக்கும்போது சப்தபதிக்கான அனுகிரக சக்தியை வேறு எந்த மூர்த்தி அளிக்க முடியும் ? ஆனால் தற்காலத்தில் பல திருமணங்களில் இந்த சப்தபதி நிகழ்ச்சி முறையாக வேதியர்களைக் கொண்டு நிகழ்த்தப்படாததால் பல திருமணங்கள் இத்தகைய தோஷங்கள் நிறைந்ததாகவே உள்ளன. இதற்கு ஓரளவு பிராயசித்தம் நல்குவதே வளர்பிறை சப்தமி திதிகளில் குறிப்பாக சூர சம்ஹாரத்தை அடுத்து வரும் சப்தமி திதி அன்று அபூர்வமாக வடக்கு திக்கில் தட்சிணா மூர்த்தியாய், குருவாய், குகனாய் தம்பதி சமேதராய் எழுந்தருளியிருக்கும் திருதவத்துறை முருகப் பெருமானை உரிய தான தர்மங்களுடன் வழிபடுவதாகும். சூர சம்ஹாரம் என்பது முக்கியமாக எட்டு திக்குகளிலிருந்து வரும் தீய சக்திகளை, அசுர எண்ணங்களை மாய்ப்பதே ஆகும். இக்காரணம் பற்றியே இத்தலத்தில் ஸ்ரீமாங்கல்ய மகரிஷி எழுந்தருளி உள்ளார் என்பதும் பலரும் அறியாத இரகசியமாகும். திருமணத்திற்கு முன்னும் பின்னும் விளையும் எத்தனையோ தோஷங்களை களையும் பெருமானே ஸ்ரீமாங்கல்ய மகரிஷி ஆவார். “அறம் வளர்த்த நித்ய கல்யாணி” என்று அருணகிரி நாதர் புகழும் ஸ்ரீமதி அம்மனும் ஸ்ரீசப்தரிஷீஸ்வரரும் அனைத்து திருமண தோஷங்களையும் நீக்கவல்லவர்களே.

ஸ்ரீஅகத்திய பெருமான் சுவாமிமலை

அனைவர்க்கும் குருவாய் விளங்குபவர் ஸ்ரீஅகத்திய பெருமான். அகத்திய பெருமானின் குருவோ சுவாமிநாதன். அந்த குகனுக்கும் குருவாய்த் துலங்குபவனே பிரணவத்தின் பொருள் கேட்டுத் தெளிந்த சர்வேஸ்வரன். இவ்வாறு முருகப் பெருமானின் கருணையை விளக்க வந்ததே திருதவத்துறை திருத்தலமாகும். இங்கு முருகப் பெருமானின் குரு சக்திகள் பூரணம் பெறுகின்றன. குகன் தோன்றியது குருவின் பாதத்தில் திகழும் விசாக நட்சத்திரம், முருகப் பெருமான் தெய்வானையை மணந்து கொண்டது (12=1+2=3) குரு சக்திகள் கொண்ட உத்திர நட்சத்திரம். முருகப் பெருமான் வள்ளியை மணந்து கொண்டது மூன்று சக்திகளான குரு சக்திகள் பூர்ணம் பெறவே என்பது சித்தர்கள் தெரிவிக்கும் ஆனந்த இரகசியம். இத்தகைய குரு சக்திகள் பூர்ணம் பெறுவதற்காக சிவக் குடும்பத்தில் தான் பங்கு பெறாது திருதவத்துறையில் விளங்கியதும் தத்துவத்திற்காக தன்னை ஈந்த அல்லது மறைத்த குகனின் கருணையைக் குறிக்கும். சஷ்டி திதியும், ஆறுமுகங்களும், ஆறு கார்த்திகை பெண்டிரும் குரு சக்தியின் குசா சக்திகள்தானே. குகன் தோன்றிய நெற்றிக் கண் ஜோதியும் குரு சக்தியுடன் பொலியும் குசா சக்திதானே. முருகப் பெருமான் தோன்றிய வைகாசி விசாகம் என்பது சூரியன் ரிஷப ராசியில் இருக்க அதன் ஆறாம் ராசியான துலா ராசியில் சந்திரன் இருப்பது என்பது பகவானின் உபசய சக்திகளைக் குறிக்கிறது அல்லவா ? இதன் மூலம் சூரபத்மளை அழிப்பதற்கு மட்டும் ஏற்பட்டதன்று முருக அவதாரம், நொடிதோறும் இப்புவியில் தோன்றும் அசுர எண்ணங்களை மாய்ப்பதே குகன் சிந்தனையும் வழிபாடும். இத்தனை குரு சக்திகள் நிறைந்த குமரகுருவாய் முருகப் பெருமான் விளங்கினாலும் சுவாமி தரிசிக்க விரும்பியது தன் தந்தையின் திருப்பாதங்களையே என்பது முருகப் பெருமான் பிட்சாடனரின் எதிரில் துலங்கும் திருதவத்துறை தரிசனத்தை விளக்கும். தந்தைக்குப் பிரியமான தனயனின் பெருமையை உலகில் நிலைநாட்டவே பிரணவத்திற்கு பொருள் அறிய விழைந்தது போல் எம்பெருமான் ஒரு திருக்கூத்தை நிகழ்த்தியபோது நான் மட்டும் என்ன சளைத்தவனா என்று கேட்கும் தொனியில், “அப்பா, அப்பா, அப்பா,” என்று மும்முறை கூறி ஈசனை அழைத்தான் குகன் என்று பிரணவத்திற்குப் பொருள் தந்த அழகை வர்ணிக்கிறார்கள் சித்தர்கள். இவ்வாறு பணிந்தவனே பக்தன் என்று பக்திக்கு இலக்கணம் வகுத்த திருதவத்துறையை விட சிறந்த தலம் உலகில் ஏதேனும் உண்டோ ? குரு தத்துவத்திற்கே சாட்சியாய் விளங்கும் ஒரு தலத்தை விட சிறந்த தலம் இப்பூவுலகில் இருக்கத்தான் முடியுமா ?

பித்ரு படிக்கட்டு அண்டமி

படி என்றாலே முன்னேற்றம், நிலையைக் குறிப்பதுதானே ? இதில் திருத்தலங்களில் அமைந்துள்ள படிக்கட்டுகள் அனைத்துமே நமது முன்னேற்றத்தைக் கருதி அமைக்கப்பட்டவையே, நமக்கு முன்னேற்றத்தை அளிப்பவை என்பதில் சந்தேகமில்லை. ஆனல் முன்னேற்றம் என்பது ஆன்மீக முன்னேற்றத்தைக் குறிப்பதால் நமது ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றி உறுதியாகக் கூறக் கூடியவர் அவரவர் சற்குரு மாத்திரமே. உதாரணமாக சில படிக்கட்டுகளின் மகிமையைப் பற்றி இங்கு கூறுகிறோம். வாரம், மாதம், வருடங்களைக் குறிக்கும் படிக்கட்டுகள் சுவாமிமலை, திருவீழிமிழலை போன்ற திருத்தலங்களில் அமைந்திருப்பவை. ஆயுளை வளர்ப்பவை திருவெள்ளறையில் அமைந்திருக்கும் திருப்படிகள். இத்திருப்படிகளை சற்குரு வெங்கடராமன் அவர்கள் தொட்டு தம் கண்களில் ஒற்றிக் கொண்டு தம்முடைய அடியார்கள் நீண்ட ஆயுளுடன் திகழ்ந்து நற்காரியங்களை இயற்றவும், அபமிருத்யு தோஷங்களால் அவர்களோ அவர்கள் குடும்பத்தவரோ பாதிக்கப்படாமல் காக்கவும் பூஜை செய்த திருப்படிகள் இவை. ஓங்காரம் அல்லது பிரணவ படிக்கட்டுகள் திருச்சி உய்யக்கொண்டான்மலை, திருவிடைமருதூர் போன்ற தலங்களில் அமைந்ருப்பவை. ஓங்கார சக்திகளை நமது அடியார்கள் பெற சற்குரு அவர்களால் பூஜிக்கப்பட்ட திருப்படிகள். ஐயர்மலையில் உள்ள 1500க்கும் மேற்பட்ட படிகள். அடியார்கள் அவர்கள் தகுதிக்கு ஏற்ப நற்சக்திகளைப் பெற சற்குருவால் பூஜிக்கப்பட்ட அசுரப் படிகள். நமது பெண் அடியார்கள் நல்ல சந்ததிகளைப் பெறவும், அவர்கள் பிரசவ காலத்தில் துன்பத்தை அடையாமல் காக்கவும் சற்குரு அவர்களால் வணங்கி ஏத்தப்பட்ட ஸ்ரீதாயுமான ஈசர் படிக்கட்டுகள். வற்றாத வர நிதியும் நவ நிதியும் மனோ தைரியமும் அடியார்கள் பெற சற்குருவால் உழவாரப் பணிகள் செய்யப்பட்ட திருச்சி ஸ்ரீநரசிங்கப் பெருமாள், ஸ்ரீரங்கப் பெருமாள் படிக்கட்டுகள். அடியார்கள் கண் நோய்களால் வருந்தாமல் அவர்களைக் காக்க சற்குருவால் பூஜிக்கப்பட்ட திருவெள்ளரை சிவத்தல திருப்படிகள். வேத சக்திகளே என்றும் நிலைத்த சக்திகள் என்று சற்குருவால் தொட்டுக் காட்டப்பட்ட திருக்கழுக்குன்ற ஸ்ரீவேதபுரீஸ்வரர் திருத்தல திருப்படிகள்.

கணக்கும் விஞ்ஞானமும் கூட கைலைக்கு அழைத்துச் செல்லும் என்று உணர்த்தும் பெருநகர், காஞ்சிபுரம் படிக்கட்டுகள். ஏற்றம் தருபவை மட்டும் படிக்கட்டுகள் அல்ல இறக்கம் தருவதைப் போல தோன்றினாலும் அவையும் தெய்வீக முன்னேற்றத்தை தருபவையே என்று உணர்த்தும் திருச்சி மலைக்கோட்டை பாதாள ஐயனார், திருஅண்ணாமலை பாதாள லிங்கம் போன்ற திருத்தல படிக்கட்டுகள். நந்தி சேகரம் தரித்த ராம ராம ராமமே என்பது போல மந்திர சக்திகளுடன் திகழும் படிக்கட்டுகளோ கோடி கோடி. இவற்றுள் உத்தராயண தட்சிணாயன படிக்கட்டுகளையும் பித்ரு படிக்கட்டுகளையும் நமது கலியுக நியதிக்கு ஏற்றதாக சற்குரு வெங்கடராமன் அவர்கள் குறிப்பிடுவதால் இந்த இரண்டு படிக்கட்டுகளே நமது திருஅண்ணாமலைய ஆஸ்ரமத்தில் சிறப்பாக இடம் பெற்றுள்ளன. அனைவருக்கும் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டாது என்பதால் மற்ற தலங்களில் இத்தகைய சக்திகளைப் பெறுவதற்காக சற்குரு கூறும் முறையில் அன்னதானம் நிறைவேற்றுவதே சாலச் சிறந்ததாகும். இவ்வாறு அவர்கள் அன்னதானம் நிகழ்த்துகையில் அவர்களின் பித்ருக்கள் மகிழ்வடைவதால் அவர்கள் செல்லும் திருத்தலங்களில் உள்ள படிக்கட்டுகளை மிதிக்கும்போது அவர்களையும் அறியாமல் பித்ரு சக்திகளை அவர்கள் பெறுகிறார்கள். அவர்கள் அளிக்கும் தர்ப்பணத்தால் மகிழும் பித்ரு தேவதைகள் இந்த ஆலய தரிசன சக்தியையும் அவர்கள் இயற்றிய புண்ணிய சக்தியையும் இறைவனிடம் அர்ப்பணிக்கும்போது அவர்கள் எத்தகைய இடர் வந்தாலும் அவற்றை நிவர்த்தி செய்து இறைவனுடன் என்றும் வாழும் சிரஞ்சீவித் தன்மையை அடைகிறார்கள். இதுவே சற்குரு நிகழ்த்தும் அரிய இறைப்பணி. இறைவனை நம்பி வாழும் அனைவரும் நற்கதி அடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் சற்குரு வெங்கடராமன் அவர்கள் ஏறி இறங்காத திருத்தல படிக்கட்டுகளே இப்புவியில் இல்லை எனலாம்.

சிவகங்கை தீர்த்தம் என்று வழங்கப்படும் திருஅண்ணாமலை, லால்குடி திருத்தல தீர்த்தங்கள், திருவிடைமருதூர் பித்ரு முக்தி தீர்த்தம், திருமழபாடி லட்சுமி தீர்த்தம், திருஅண்ணாமலையில் உள்ள 11022 தீர்த்தங்கள், சர்வ நோய் நிவாரணியான கொல்லிமலை ஆகாச கங்கை, திருப்பதி மலையில் உள்ள சஞ்சீவி உள்பட 108 தீர்த்தங்கள், கும்பகோணம் மகாமகத் தீர்த்தம் என்றவாறாக கோடி கோடியாக உள்ள தீர்த்தங்களின் மகிமை கோடி கோடியே. திருத்தல படிக்கட்டுகளுக்கு இணையான மகிமையை உடையவையே தீர்த்தப் படிக்கட்டுகளாகும். கும்பகோணம் சக்கரப்படித்துறையில் ஒருமுறை சற்குரு கூறியபடி அமாவாசை அன்று நம் திருச்சி அடியார்கள் தயிர்சாத அன்னதானம் நிகழ்த்தினர். அப்போது பல பள்ளி மாணவர்கள் அந்த பிரசாதத்தை வாங்கிய போது ஒரு அடியார் அங்கு அன்னதானம் வாங்கிய ஒரு மாணவனுடைய பெயரைக் கேட்டு அதிர்ந்தார். காரணம் அவன் கூறியது அந்த அடியாரின் அப்பாவுடைய முருக நாமம். அதே போல கங்கையில் வருண் முதலாக அஸ்ஸி வரையுள்ள படித்துறைகளுமே அனைத்து படிகளுமே பித்ருக்கள் வாசம் செய்யும் திருத்தலங்களே. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நித்ய சூரிகள் வாசம் செய்யும் மகிமை பற்றி சற்குரு வெங்கடராமன் அருளிய மகிமைகளை ஏற்கனவே விளக்கியுள்ளோம். சொல்லவும் பெரியதே குணசீலத்தில் காவிரி திருப்படிகளின் பெருமை. உச்சிப்பிள்ளையார், தாயுமானவர், அரங்கநாதன் என்ற முப்பெரும் தெய்வங்களின் இணைந்த சக்தியுடன் அகத்திய மகரிஷியின் சித்தாமிர்த சக்திகளும் பொலிவதே காவிரி தீர்த்தமாகும். அன்னதானம் பெறும் அடியார்கள் மட்டுமல்ல நமது மருத்துவ முகாம்களில் மருந்து, மாத்திரைகள் பெறும் நோயாளிகளும், தொழுநோய் காப்பகங்களில் நம் சேவையைப் பெறுபவர்களும், நாம் தூய்மை செய்யும் மனநோய் விடுதிகளில், அநாதை இல்லங்களில் வசிப்போரும் நம் உறவினர்களே, நம்முடன் தொடர்பு கொண்டவர்களே. எனவே இப்பூமியில் சிரமப்பட்டு வாழ கடவுள் நம்மை அனுப்பவில்லை, நம் உறவினர்களுடன் நண்பர்களுடன் பயனுள்ள முறையில், உபயோகமான வழியில் நேரத்தைக் கழிக்கவே இந்தப் பூமியில் இறைவன் நம்மைப் படைத்துள்ளான் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

பலருக்கும் வீட்டில் சுத்தமாக குளித்து விட்டு வந்து இறைவனை தரிசனம் செய்யலாமே. இவ்வாறு அழுக்கடைந்து நாற்றமடிக்கும் தீர்த்தத்தில் முங்கி எழுவது ஏனோ என்ற வினா தோன்றுவது இயல்பே. உண்மையில் ஒரு கோயில் தீர்த்தத்தில் சோப்பின்றி நீராடுவதால் கிட்டும் உடல் தூய்மை, மனத் தூய்மை, உள்ளத் தூய்மையை நூறு சோப்புகளாலும் கொடுக்க முடியாது என்பது உண்மையே. சுருக்கமாகச் சொல்வானதால் திருத்தல தீர்த்தங்களில் நீராடும்போது கிட்டும் பல சக்திகளில் ஒன்று அறிதுயில் என்பதாகும். கையில் மணமாலையுடன் உலகை வலம் வந்து மகாலட்சுமி தேவியானவள் தன்னை ஏறெடுத்தும் பார்க்காத பெருமாளுக்கு திருமாலையைச் சூட்டி திருமால் பாதசேவையிலே அமர்ந்து விட்டாள் என்று கூறுகிறோம். அப்போது திருமால் அறிதுயில் என்ற இறை சேவையில் இலயித்திருந்தார் என்பது சித்தர்கள் கூறும் இரகசியம். அதை அறிந்தவள், உணர்ந்தவள் லட்சுமி தேவி. இவ்வாறு சுவாமிக்கு பாதசேவை சாதிக்கும் லட்சுமி தேவியை தியானித்தாலே போதும். இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் உணர்ந்து கொள்ளலாம். கணவனின் காலடியில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி தேவிக்கு எப்படி உலக விஷயங்கள் தெரியும் என்ற கேள்வி எழலாம். இதுவே அறிதுயிலின் தன்மை. கண் மூடி சயன நிலையில் இருப்பது போல் தோன்றினாலும் விஷ்ணுபகவான் இந்த பிரபஞ்சத்தில் நடப்பது அனைத்தையும் தன்னுடைய அறிதுயில் மூலமாக அறிந்து கொள்கிறார்.

ஸ்ரீமகாலட்சுமி திருசெங்கட்டாங்குடி

பெருமாளுக்கு பாதசேவை செய்யும் தேவியானவள் தன்னுடைய சேவை மூலமே பெருமாள் அறியும் விஷயங்களைத் தானும் அறிந்து கொள்கிறாள். இதற்காகவே பெரியோர்களைக் காணும்போது அவர்கள் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற நியதி ஏற்பட்டது. ஆனால் பெருமாளுக்கு, பெற்றோர்களுக்கு, பெரியோர்களுக்கு பாத சேவை செய்யும் பாக்கியம் பலருக்கும் கிடைக்காது என்ற காரணத்தால்தான் திருக்குளங்களை நம் பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள். எனவே இத்திருக்குளங்களில் குறித்த முகூர்த்த நேரத்தில் மூழ்கி எழுவதால் மகாலட்சுமி பெற்ற அறிதுயில் சக்தியை உணரும் தன்மையை சாதாரண பக்தர்களும் பெறுவார்கள் என்பது உண்மை. இந்த அறிதுயில் உணரும் சக்தியுடன் திருக்கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கும்போதுதான் இறைவன் இறைமூர்த்தியாகத் தெரிவார், இல்லாவிட்டால் பெருமாள் கல்லாகத்தானே தெரிவார். இதை எவரும் வெளியில் சொல்லாவிட்டாலும் அனைவர் மனதிலும் மறைந்திருக்கும் இரகசியம் இதுதானே. பொதுவாக இறை மூர்த்திகள் ஒரே வாகனத்துடன் தோன்றுவதே இயல்பு என்றாலும் கஜலட்சுமி தேவி இருபுறமும் யானைகளுடன் தரிசனம் அளிக்கிறாள். இதற்கு பல தெய்வீக காரணங்கள் இருந்தாலும் கணவனை சந்தர்ப்ப வசத்தால் விதி வசத்தால் பிரிந்து வாழ்பவர்கள் இத்தேவிகளை சிறப்பாக சுதை மூர்த்திகளை வணங்கி முழுத் தாமரை மலர்களால் அர்ச்சித்து வணங்குதலால் தாங்கள் கணவனுடன் சேர்ந்து வாழும் அனுகிரகத்தைப் பெறுவார்கள். யானைகள் அளிக்கும் இரு தாமரை மலர்கள் பெருமாளின் வலது இடது பாதங்களின் பூஜைக்காகவே. தனித்து வாழும் பெண்கள் தங்கள் கணவன்மார்களின் பாதக் குறடுகளுக்கு அல்லது சற்குருவின் பாதக் குறடுகளுக்கு முழுத் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வதால் தக்க பாதுகாப்பைப் பெறுவார்கள் என்பது உறுதி. தங்கள் ஜாதக ரீதியாக களத்திர தோஷம் உள்ள பெண்களும் இத்தகைய வழிபாட்டால் தக்க பாதுகாப்பைப் பெறுவார்கள். மலர் வழிபாடு அளிக்கும் பாதுகாப்பே பெண்களுக்கு மகத்தான பாதுகாப்பு என்பதை தானே முன்னின்று உணர்த்துபவளே மகாலட்சுமி தேவியாவாள். பலரும் தங்கள் கணவன் அல்லது பெற்றோர் தங்களை விட குறைந்த கல்வி அறிவுடன் இருப்பதால் தங்களுக்கு இருக்கும் அறிவு அவர்களுக்கு இருக்காது என்ற அறியாமையுடன் பல தவறுகளைச் செய்து அல்லல்படுகிறார்கள். அனைத்திலும் உறைந்து அனைவரையும் இயக்குபவன் இறைவனே என்ற அறிவைத் தருவதும் மேற்கூறிய மலர் வழிபாடாகும். சாரதா அம்மையாரைப்போல் தன் கணவன் மறைந்த பின்னும் இந்த அறிதுயில் ஞானத்தைப் பெறும் வழிமுறையாக அமைவதே பாதக் குறடுகளை வழிபடும் முறையாகும்.

ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயம்
அங்காளம்மன் கோவில் சென்னை

வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீவஜ்ரேஸ்வரி அம்மனை (கல்மண்டபம் ராயபுரம் சென்னை) வழிபடுவதும் அடிப்பிரதட்சிணமாக இவ்வாலயத்தை வலம் வருவதும் நலம். திருமணமாகாத பெண்களுக்கும், திருமணமாகி தனித்து வாழும் பெண்களுக்கும் பாதுகாப்பை அளிப்பவள் இவளே. சற்குருவின் தூல உடல் மறைந்த பின்னும் தங்கள் சற்குரு அளித்த காரியங்களை தொடர்ந்து செய்து வருவதன் மூலமும் அதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் சற்குருவின் பாதக்குறடுகளை வழிபடுவதன் மூலமும் தகுந்த வழிகாட்டுதலைப் பெறலாம் என்பது உண்மையே. இரண்டு என்ற எண்ணம் இருக்கும் வரை சற்குருவின் திருப்பாதங்களை வழிபட்டே ஆக வேண்டும். ஸ்ரீவஜ்ரேஸ்வரி அம்மனைப் பற்றிய ஒரு சுவையான தகவல். சுப்பையா நாயுடு என்பவரின் புதல்வி காயத்ரீ. பார்ப்பதற்கு லட்சுணமாக இருந்தாள். அவளை ஒரு நல்ல மாப்பிளைக்கு மணமுடித்து வைத்தார் சுப்பையா. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக காயத்ரீயின் கணவர் திடீர் காய்ச்சலால் மரணமெய்த தான் அடைக்கலம் புகுந்த தந்தையும் அவளைத் தவிக்க விட்டு விட்டு வானுலகம் சென்று சேர்ந்தார். இருந்த கொஞ்சம் செல்வத்தை மட்டும் வைத்துக் கொண்டு செம்மையாக வாழ்ந்தாள் காயத்ரீ. அவர்கள் வாழ்ந்த சென்னை மாடம்பாக்கத்தில் ஒரு காமுகன் வாழ்ந்து வந்தான். காயத்ரீயின் பேரழகில் மயங்கிய அவன் அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் வீட்டை சுற்றி சுற்றி வந்தான். அவளோ தன்னுடைய தந்தை காட்டிய வழியில் ஸ்ரீவஜ்ரேஸ்வரி அம்மன் தியானத்திலேயே பொழுதைக் கழித்து வந்தாள். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அந்த அம்மனை ஆலயத்திற்கு சென்று நேரில் கூட தரிசித்தது கிடையாது அவள். இவ்வாறு இருக்கையில் தன்னுடைய ஆசை நிறைவேறாது என்பதை அறிந்த அந்த முரடன் ஒரு நாள் நள்ளிரவு காயத்ரீ வீட்டை அடைந்து அவள் வீட்டுக் கதவைத் தட்டினான். ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்த காயத்ரீ கதவைத் திறக்கவில்லை. அந்த முரடனைப் பற்றி நன்கு அறிந்திருந்ததால் அக்கம்பக்கத்தவர் எவரும் உதவிக்கு வரவில்லை. தன்னுடைய செயல் பலனளிக்காததை கண்ட அந்த முரடன் அந்த வீட்டு மேலிருந்த சீமை ஓட்டின் மேல் ஏற எத்தனித்தான். அச்சமயத்தில் காயத்ரீயின் பிரார்த்தனை ஸ்ரீவஜ்ரேஸ்வரியின் செவிகளில் விழுந்தது போலும். ஓட்டின் மேல் ஏறிய அந்த முரடன் மேல் ஒரு இடி பாய்ந்தது போல் சப்தம் கேட்கவே அவன் அம்மா என்று அலறிக் கொண்டே கீழே சாய்ந்தான். வஜ்ரம் என்றால் இடி என்று பொருள். அவன் மூர்ச்சை தெளிந்து எழும்போது கிட்டத்தட்ட பொழுது புலரும் சமயம் வந்து விட்டது. அன்று முதல் ஸ்ரீவஜ்ரேஸ்வரி காயத்ரீக்கு மட்டும் பிரியமானவள் அல்ல, அனைவருக்கும் அன்புத் தாய் ஆகி விட்டாள் என்பதைக் கூறவும் வேண்டுமோ ? அந்த உத்தமியே அடுத்து வந்த பிறவியில் தன் கணவருடன் மாறா அன்பு கொண்டு வாழ்ந்தாள் என்ற வரலாற்றையும் நீங்கள் சற்றே ஆத்மவிசாரம் செய்தால் உணர்ந்து கொள்ளலாம். சென்னையும் மாறவில்லை, பாத்திரங்களும் மாறவில்லை.

அறிதுயில் பற்றி சற்குரு வெங்கடராமன் அளித்த விளக்கங்களை இங்கு அளிக்கிறோம். கண்களை மூடி உறங்குவதுபோல் நித்திரைகொண்ட நிலையில் தம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் உணர்வதே அறிதுயில் யோகமாகும். இந்த யோகக் கலையில் வல்லவரே ஸ்ரீமகாவிஷ்ணு ஆவார். அதனால் இந்த யோகத்திற்கு அரிதுயில் என்ற பெயரும் உண்டு. ஆனால் இந்த யோகக் கலையை தான் மட்டும் வைத்துக் கொள்வதால் யாது பயன் என்பதால் தன்னுடைய அவதாரமான ஸ்ரீராமர் ஒரு சாதாரண மனிதனைப் போல் வாழ்ந்தாலும் இந்த யோக நிலையிலேயே திகழ்ந்தார். விஸ்வாமித்திரர் நிகழ்த்திய யாகத்தை அசுரர்களிடமிருந்து காக்க சிறுவனாக இருந்த ராமச்சந்திர மூர்த்தியை அழைத்துக் கொண்டு வனத்திற்குச் சென்ற போது மறுநாள் காலையில் அறிதுயில் யோக நிலையில் இருந்த ஸ்ரீராமரை எழுப்புவதுபோல் விசுவாமித்திர மகரிஷியும், “கௌசல்யா திருமகனே எழுவாயாக,” என்று சுப்ரபாதம் பாடினார் என்றார் மூன்றாவது சிவாலியரான சற்குரு வெங்கடராமன் அவர்கள். நமது சற்குரு அவர்கள் ஒரு நொடிக்கு சுமார் 50000 காரியங்களை நிறைவேற்ற வல்லவர். திருஅண்ணமாலை கார்த்திதை தீபம் போன்ற சமயங்களில் இந்த எண்ணிக்கையானது சுமார் ஒரு லட்சத்தை எட்டும் என்பார். சற்குரு அவர்கள் தினமும் தன்னைச் சேர்ந்த சுமார் 150000 அடியார்கள் நன்னிலை பெற பிரார்த்தனை செய்வதாக கூறினார். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட நேரம் சுமார் மூன்று மணி நேரம். சற்குருவின் காரியம் இயற்றும் காலத்தைக் கணக்கிட்டால் இத்தனை பேருக்கு பிரார்த்தனை செய்ய மூன்று விநாடி நேரம்தானே ஆகும். சற்குரு தன்னுடைய பிரார்த்தனைக்கு மூன்று மணி நேரமாகும் என்றால் ஒவ்வொரு அடியாரைச் சேர்ந்த சந்ததிகள் சுமார் 3000 பேருக்கும் சற்குருவின் பிரார்த்தனை போய்ச் சேருவதாகத்தானே அர்த்தம். இவ்வாறு சற்குருவைப் போல் தினமும் மற்றவர்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செய்பவர்கள் இந்த அறிதுயில் யோகத்தின் அடிச்சுவடியைப் படிக்கலாம். ஆரம்பத்தில் சற்குருவைப் போல் அடியார்களின் உருவத்தை சினிமாப் படத்தைப் போல் ஓட்ட முடியாது என்றாலும் ஒவ்வொரு அடியார், அவர் குடும்ப அங்கத்தினர்களை மனத் திரையில் கொண்டு வந்து அவர்களுக்காக ஒரு காயத்ரீ மந்திரத்தையோ ராமா, கிருஷ்ணா, கோவிந்தா என்ற இறை நாமத்தையோ கூறலாம். ஒரு நாளைக்கு உறவினர்கள், மறு நாளைக்கு நண்பர்கள் என்றவாறு தங்கள் உற்றம் சுற்றத்தை பிரித்து வைத்துக் கொண்டு அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதும் எளிதில் இந்த அறிதுயில் யோகத்தில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இந்த அறிதுயில் யோகத்தை எந்த திருத்தலத்தில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்றாலும் சற்குரு அவர்களால் இலஞ்சி முருகத் தலமே இத்தகைய அறிதுயில் யோக ஆரம்பத்திற்கு சிறந்த தலமாக மேற்கோள் காட்டப்படுகிறது. காரணம் யாதோ?

ஸ்ரீமுருகப் பெருமான் இலஞ்சி

ஒருமுறை சற்குரு வெங்கடராமன் சில அடியார்களுடன் இலஞ்சி திருத்தலத்தை அடைந்தார். அதற்கு முன்னரே ஐந்தருவியில் அனைவரும் நீராடிச் சென்றதால் கோயில் நடைசார்த்தும் நேரம் வந்து விட்டதால் கோயில் தரிசனத்திற்கு சிறிது நேரம் அனுமதிப்பதையும் பொருட்படுத்தாமல் சற்குரு, “இங்கேயே (கோயில் முன் இருந்த திண்ணையைச் சுட்டிக் காட்டி) படுத்து சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு சன்னதி திறந்ததும் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம்,” என்று கூறவே கூட இருந்த அடியார்கள் சற்குருவுடன் சேர்ந்து படுத்துக் கொண்டு கண்ணயர்ந்து விட்டனர். ஒரு அடியார் மட்டும் வழக்கம்போல் பகல் தூக்கம் என்ற காரணத்தால் உறங்காது கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார். நடை திறந்த பின்னர் சற்குரு, “இங்கு படுத்துறங்க வேண்டும் என்பது விதி. அதனால்தான் அனைவரையும் உறங்குமாறு கூறினேன்,” என்றார். படுத்து உறங்கிய அடியாருக்கு, “சற்குரு சொன்ன இந்த ஒரு வேலையையாவது உருப்படியாக செய்தோமே,” என்று நினைத்து சந்தோஷப்பட்டாராம். ஆனால், சற்குரு குறிப்பிட்டது சாதாரண உறக்கத்தை அல்ல, அறிதுயில் யோகமே என்று அறிந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிவிட்டனவாம். இலஞ்சியில் அருள்புரியும் ஈசன் திருநாமம் ஸ்ரீஇருவானுக ஈசன் என்பதாகும். இருவானுக என்றால் நான் என்ற எண்ணம் இருக்கும் அல்லது இல்லாத நிலை என்று கூறலாம். ஆனால் இந்த “நான்” இல்லாத பிறப்பே பூமியில் கிடையாது என்ற காரணத்தால் இந்த நிலையை புரிந்து கொள்வது மிக மிக கடினம். நமக்குப் புரிந்த இந்த சாதாரண விஷயத்தை இறை அவதார மூர்த்திகள் புரிந்திருக்க மாட்டார்களா என்ன ? அதற்காகவே ஸ்ரீஇருவானுக ஈசன் வலது பக்கம் ஸ்ரீகுமரன் எழுந்தருளி அடியார்களுக்கு இந்தக் கருத்தை புரிந்து கொள்ள அனுகிரகம் செய்யும் மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தற்காலத்தில் இந்த அறிதுயில் யோக நிலையை மற்றவர்கள் காணும் வண்ணம் நிகழ்த்தியவரே சத்ய சாய் பாபா ஆவார். சற்குரு வெங்கடராமனும் அரிய இந்த அறிதுயில் யோக நிலையை மற்றவர்கள் காணும் வண்ணம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் நிகழ்த்திக் காட்டினார்கள். திருஅண்ணாமலை தீப மகிமை பற்றி விஜய் டீவியில் விளக்குவதற்கு முன்னால் இந்த அறிதுயில் யோக முறையில் அனைவருக்கும் திருஅண்ணாமலையாரின் ஜோதி சக்திகளை அருணாசல பிரசாதமாக விநியோகம் செய்வதற்காகவே சற்குருவின் இந்த ஏற்பாடு. சற்குரு இந்த யோகத்தை பயில்கையில் எவருமே அவரை நெருங்க முடியாத அளவிற்கு சற்குரு அக்னி பிழம்பாக ஜொலித்தார் என்றால் அது சற்குருவின் அருள் சக்தியா அண்ணாமலையின் ஒளி பிழம்பா, அந்த ஈசனே அறிவான்.

ஸ்ரீஇருவானுக ஈசன் இலஞ்சி

கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் ஏழு கிரகங்களும் நடுவில் ஒரு காந்த மண்டலத்தை ஏற்படுத்துகின்றன. இதில் பல தெய்வீக தாத்பர்யங்கள் இருந்தாலும் மேலோட்டமாக இந்த காந்த மண்டல சக்தியை ஸ்ரீஐயப்ப சுவாமி மகர ஜோதியாக பக்தர்களுக்கு காந்தமலையில் அளிக்கிறார். பெண் மோகத்தை துறந்த ஆண்களே இந்த மகர ஜோதி சக்தியை முழுமையாகப் பெற முடியும் என்பதால் சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆண் கிரகமான சூரிய பகவான், ஆண் நட்சத்திரமான உத்திராடம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்போது தோன்றுவதுதானே மகரஜோதி. ஒரு மண்டல பிரம்மசர்ய விரதத்தை பக்தர்கள் அனுஷ்டிக்கும்படி வலியுறுத்துவதும் இக்காரணம் பற்றியே. ஆனால் முதல் தேதியில் பெறும் சம்பளத்தை மனைவி கையில் கொடுத்தலே சிறப்பு என்பதைப் போல மகர ஜோதியில் விளையும் தெய்வீக சக்திகளை முறையாக தங்கள் குடும்பத்தினருக்கும் சமுதாயத்திற்கும் பகிர்ந்தளிக்கும் முறைகளை சித்தர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். இவ்வாறு லால்குடி திருத்தலத்தில் வடக்கு நோக்கி கிழக்கில் எழுந்தருளி உள்ள சப்த நாகர்களை முறையாக வழிபடும் பக்தர்கள் இந்த காந்தசக்தியை எளிதில் பெற்று தங்கள் குடும்பத்தினருக்கும் சமுதாயத்திற்கும் பகிர்ந்தளிக்க முடியும் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களே பிறன்மனை நோக்கா பேராண்மையுடன் திகழ முடியும் என்பது உண்மை. தற்காலத்தில் கரப்பான் பூச்சி, எலிக்கெல்லாம் பயந்து நடுங்கும் ஆண்கள் தைரியத்துடன் நடமாட வழிவகுப்பதே லால்குடி சப்தநாகர்கள் தரிசனமும் வழிபாடும். திருமணத்திற்கு முன் குறைந்தது ஒரு மண்டல காலத்திற்கு ஆண்களும் பெண்களும் வடக்கே துலங்கும் சப்தரிஷி மண்டலத்தை தினமும் வழிபடுவதும் சிறப்பாக வசிஷ்டர் அருந்ததி தரிசனமும் நல்ல திருமண வாழ்விற்கு வழிகோலும். இவ்வாறு சப்தரிஷி மண்டலத்தை இனங்கண்டு பார்க்க முடியாமல் போனாலும் வடக்கு நோக்கி திருத்தலங்களிலோ தங்கள் இல்லங்களிலோ வானத்தைப் பார்த்து அமர்ந்து தங்கள் கண்ணுக்குத் தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்து வழிபடுவதையும் வசிஷ்டர் அருந்ததி வழிபாடாகாவே ஏற்றுக் கொள்வதே இறைவனின் பெருங்கருணை.

ஸ்ரீமுப்பெரும் தேவியர் இலஞ்சி

இவ்வாறு முறையான திருமண வாழ்வை அனுபவித்தவர்களே ஆண் பெண் என்ற நிலையைத் தாண்டிய தெய்வீக நிலையில் நிலைத்திருக்க முடியும். இதுவே பேரின்பம். இதற்கு உதவி செய்வதே ஐயப்ப வழிபாடு. பெண் போகத்தை துறப்பதற்காகவோ, பெண்களை நிராகரிப்பதோ ஐயப்ப வழிபாடு கிடையாது. பெண்களுக்கு உரிய மரியாதையைத் தந்து அனைவரையும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வதே நம் திருத்தல வழிபாடுகளாகும். எனவேதான் எந்த மகானும் சித்தர்களும் இல்லறத்தை, இல்லற வாழ்வை புறக்கணிக்கும்படி ஒருகாலும் சிபாரிசு செய்வதில்லை. துறவறம் என்பது நிற்க வைத்த கத்தியைப் போன்றது, அதில் நடப்பது மிகவும் சிரமம், இல்லறம் என்பது படுக்க வைத்த கத்தியைப் போன்றது அதில் நடப்பது மிகவும் சுலபம். இந்த சுலபமான காரியத்தில் அடியார்களைத் தயார் செய்வதே ஐயப்பன் வழிபாடு ஆகும். ஸ்ரீஐயப்ப சுவாமி தரித்திருக்கும் யோகப் பட்டைக்கு ஆயிரமாயிரம் விளக்கங்கள் இருந்தாலும் அனைவருக்குமான ஒரு எளிய விளக்கத்தை இங்கு அளிக்கிறோம். தான் ஆண் அல்லது பெண் என்ற நிலையைக் கடந்தவர்களே இத்தகைய யோகப் பட்டையை அணிய முடியும். இந்த யோகப் பட்டையை தரித்து தன்னுடைய சூட்சும சரீரத்தை விருத்தி செய்ய வேண்டும். இவ்வாறு தன்னுடைய சூட்சும சரீதத்தை 30 மைல்களுக்கு விஸ்தாரமாக்கியவர் புத்த பிரான். ஒரு லட்சம் மைல்களுக்கு சூட்சும சரீரத்தை விரித்தவர் சத்ய சாய் பாபா அவர்கள். இவ்வாறு சூட்சும சரீரத்தை விஸ்தாரமாக்கி இதில் எந்த பேதமுமின்றி தங்கள் அருட்புனலில் அனைவரையும் மூழ்கி எழ வைப்பதே எளிய அளவிலான அறிதுயில் யோகம். இதை விஸ்தாரமாகப் பயில்பவரே ஸ்ரீஐயப்ப சுவாமி. அதற்கு உதவியாக நின்றதே இந்த யோகப்பட்டை. திருச்சி திருநெடுங்களத்தில் இத்தகைய யோகப்பட்டையுடன் திகழும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியை தரிசனம் செய்யலாம். மனிதனின் தான் என்ற அகங்கார எண்ணம் அவன் உறங்கும்போதுதான் மிகக் குறைந்த அளவில் செயல்படுவதால் மகான்கள் மனிதர்களின் தூக்கத்தை அங்கீகரிக்கிறார்கள். தூக்கத்தில் விளையும் இந்த நான் என்ற எண்ணத்தை குறைக்க உதவுவதே திருநெடுங்கள தட்சிணா மூர்த்தி வழிபாடும் ஐயப்ப வழிபாடும் ஆகும். அனைத்து யோகத்திற்கும் இதுதானே ஆரம்பம். எனவே கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் எல்லாம் இறைமூர்த்திகளை, தெய்வ விக்ரஹங்களை இத்தகைய அறிதுயில் யோக நிலைக்கு கொண்டு செல்வதும் மீண்டும் அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வரும் ஒரு முயற்சியே என்றால் அது மிகையாகாது.

திருக்குற்றாலம்

ஒருமுறை ஒரு முருகன் கோயிலை இடித்துக் கட்ட விரும்பினார்கள் ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள். பக்தி இருந்தாலும் பணம் புழங்காத ஊர் அது. எனவே முருக பக்தனாக அவ்வூரில் இருந்த ஒரு அடியாரை அவர்கள் அணுகி யோசனை கேட்டபோது அவரும், “முருகனை ஒரு குடத்தில் ஆவாஹனம் செய்து மீண்டும் அவரை ஒரு பெரிய விக்ரஹத்தில் ஆவாஹனம் செய்யும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். மற்ற வேலைகளை நீங்கள் கவனியுங்கள்,” என்றாராம். அவர் சுத்தமாக விளக்கப்பட்ட ஒரு செம்பு பாத்திரத்தில் தூய்மையான காவிரி நீரை நிரப்பி அக்குடத்திற்கு விபூதி மஞ்சள் குங்குமம் அனைத்தும் பூசி அந்த முருக விக்ரஹத்திற்கு அருகில் வைத்துக் கொண்டு ஒரு தர்பைக் கட்டையால், “வந்துரு, சாமி வந்துரு,” என்று விக்ரஹத்தை தர்பையால் வருடுவதும் செப்புக் குடத்தைத் தட்டுவதுமாக அரை மணி நேரத்திற்குக் குறையாமல் அந்த முருக விக்ரஹத்திடம் போராடிய பின்னர் இறைவன் அந்த அடியார் வைத்திருந்த திருக்குடத்தில் எழுந்தருளினாராம். திரும்பவும் அந்த கோயில் கும்பாபிஷேக திருப்பணி நிறைவேறி ஒரு பெரிய முருகப் பெருமான் விக்ரஹம் தயாராகி பிரதிஷ்டை ஆனதும் அந்த பக்தர் முன் போலவே அந்தப் பெரிய முருக விக்ரஹத்திடம் சென்று, ”வந்துரு, சாமி வந்துரு,” என்று வேண்டிக் கொண்டே செப்புக் குடத்தையும் முருக விக்ரஹத்தையும் தர்ப்பைகளால் வருடிக் கொண்டே இருந்தாராம். சற்று நேரத்தில் முருகப் பெருமான் செப்புக் குடத்திலிருந்து அந்த விக்ரஹத்தில் ஆவாஹனம் ஆகி இன்று பக்தர்களுக்கு அருள்மழையை பொழிந்து கொண்டிருக்கிறாராம். இடைப்பட்ட காலங்களில் அந்த முருக பக்தர் தான் உண்ணும் உணவையே அந்த குடத்திலிருந்த முருகப் பெருமானுக்கு தவறாமல் நைவேத்யமாக அளித்துக் கொண்டிருந்தாராம். அந்த முருக பக்தரோ நைவைத்யம் அளிப்பதற்குக் கூட அந்த கிராமத்து மக்களிடம் தட்சிணை பெறவில்லை என்பதே முக்கியம். எனவே மந்திரமல்ல, தந்திரமல்ல, நம்பிக்கையே அனைத்தையும் சாதிக்கும். பல பிறவிகளுக்கு முன் முருக பக்தராக திகழ்ந்த அருணகிரி நாதரின் வாழ்க்கையே இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஅருணகிரி நாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த முருகத் தலம் இன்றும் பக்தர்களுக்கு பக்தியையும் இறை நம்பிக்கையையும் ஊட்டிக் கொண்டிருக்கிறது என்பதே அத்திருத்தலத்தின் மகிமையாகும்.

சிவனும் சக்தியும் சேர்ந்து
வந்த மெய்ஞானபுரி

இவ்வாறு இறை சக்திகள் நிறைந்த கலச தீர்த்தத்தை இறை மூர்த்திகளுக்கும் கோயில் கோபுர கலசங்களுக்கும் அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை கோமுகம் வழியாகவோ அபிஷேக பிரசாதமாகவோ பெறுதலையே கும்பாபிஷேகம் என்கிறோம். என்னே நம் மூதாதையர்களின் அறிவுத் திறன், தியாக உள்ளம். இத்தகைய கும்பாபிஷேக இறை சக்திகளை ஊட்டியவரே சற்குரு வெங்கடராமன் ஆவார்.

ஒரு முறை காரைக்குடி அருகில் உள்ள மெய்ஞானபுரி திருத்தலத்தில் ஹோமம் நடைபெற்றபோது ஹோம நிறைவில் சற்குரு வெங்கடராமன் தட்சிணாமூர்த்தியாய் ஞான குருவாய் அனைவருக்கும் ஒரு உத்தரணியில் ஹோமாக்னி பிரசாதத்தை வழங்கினார்கள். ஆனால் எத்தனை பேருக்கு இந்த குரு பிரசாதத்தின் அருமை புரிந்தது என்பது தெரியாது. திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய தரிசனம் முதலாக மெய்ஞானபுரி நிறைவாக தன் வாழ்நாள் முழுவதும் தம்பதிகளுக்கு இறைஞானம் என்னும் மெய்ஞ்ஞானத்தை ஊட்டி வளர்த்தவரே சற்குரு வெங்கடராமன் ஆவார்கள்.

தன் வாழ்நாளில் அதற்கு முன்னரோ பின்னரோ சற்குரு அவர்கள் இவ்வாறு தீர்த்தப் பிரசாதம் வழங்கியது கிடையாது. சிவ சக்தி ஐக்ய சக்திகளே அனைத்திலும் சிறந்தது என்பது அந்த சக்திகள் செறியும் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆஸ்ரமம் நிர்மாணித்து கோடிக் கணக்கான இறைவல அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி சிவ சக்தி ஐக்ய சக்திகள் செறியும் மெய்ஞானபுரியில் சிவசக்திகளை ஆவாஹனம் செய்து அந்த சக்திகளுக்கு ஹோம ஆஹூதி அளித்து அந்த இறைப் பிரசாதங்களை அடியார்களுக்கு பிரசாதமாக ஒரு ஞானகுரு வழங்குகிறார் என்றால் தாயின் கருணையை மிஞ்சிய இந்த காரியத்திற்கு நாம் எப்படி நன்றி சொல்ல முடியும் ?

நாம் நன்றி சொல்லத் தேவையில்லை, “நான் சற்குருவின் இந்த அன்புப் பிரவாகத்தால் மகிழ்ந்து விட்டேன்,” என்பதற்கு சாட்சியாய் ஒரு சிலருக்கே அளிக்கக் கூடிய அளவில் ஒரு சிறிய பாத்திரத்தில் இருந்த ஹோம பிரசாதம் எடுக்க எடுக்க குறையாத அட்சய பாத்திரமாய் மாறி நூற்றுக் கணக்கான அடியார்களுக்கு பிரசாதம் அளிக்க துணை புரிந்தது என்றால் இது குரு கருணையா இல்லை அந்த உண்ணாமுலைத்தாய் அண்ணாமலையாரின் பெருங்கருணையா ?!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி மெய்ஞானபுரி

நெல்லுக்கும் உமிக்கும் உள்ள அன்புப் பிணப்பே கணவன் மனைவியிடத்தில் திகழ வேண்டிய குடும்ப ஒற்றுமை. நெல்லைப் பாதுகாப்பது மட்டுமல்ல உமியின் பணி, அதற்கு ருசியைச் சேர்ப்பதும் அதுவே, இதுவே ஒரு மனைவியின் கடமை. இதை உணராமல் பலரும் தற்காலத்தில் பசையற்ற, சுவையற்ற அரிசியை மட்டுமே பெறுவதால் உணவு ருசியற்ற, துணையற்ற வாழ்க்கையைப் போல் ஆகிவிடுகிறது. இதுவே மெய்ஞானம். இதை உண்மையை உணர்த்துவே மெய்ஞ்ஞானபுரி.

இவ்வாறு சற்குருவானவர் என்னதான் முயற்சி செய்து தம் குழந்தைகளுக்கு ஞானத்தை வழங்கினாலும் அக்குழந்தைகளின் பிடிவாதத்தால் சில விபரீதங்களும் நிகழ்ந்து விடுவதுண்டு. இத்தகைய பரிணாமங்களைக் கடந்த பரிமாணங்களால் விளையும் வேதனைகள் ஏராளம். குழந்தைகளிடம் செல்போன், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களை அவர்களின் மனோ வளர்ச்சி, உடல் வளர்ச்சி தெரியாமல் கொடுக்கக் கூடாது என்று பெரியோர்கள் வலியுறுத்துவது இதற்காகவே.

சேஷாத்ரி சுவாமிகள் இரண்டு மூன்று நாட்கள் கழிந்த பழைய சாதத்தை கூட பிரியமாக ஒரு மூதாட்டியிடம் பெற்று உண்டு வந்தார். அந்த பாட்டிக்கு ஒரு ஆசை. அதாவது இந்திரனை நேரில் பார்க்க வேண்டும் என்பது. இதுவே தகுதிக்கு மிஞ்சிய தலையீடு. விளைவை எண்ணிப் பார்த்த அந்த மகானும் இந்திர தரிசனத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். ஆனால் பாட்டியோ விடுவதாக இல்லை.

இறுதியில் ஒரு நாள் சுவாமிகளும், “சரி பாட்டி, கண்களை மூடிக் கொள். உனக்கு இந்திரனின் தரிசனம் கிடைக்கும். ஆனால் எக்காரணம் கொண்டும் கண்களைத் திறக்கக் கூடாது. அவ்வாறு மறந்து போய் கண்களைத் திறந்து விட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அடியேன் பொறுப்பேற்க முடியாது,” என்று பலமுறை எச்சரித்து இந்திர தரிசனத்தை அந்த மூதாட்டிக்கு பெற்றுத் தந்தார்.

இந்திரனைப் பார்க்கும் ஆவலில் அந்த மகான் கூறிய அனைத்து விஷயங்களையும் காதில் கேட்டும் கேட்காமலும் தலையை ஆட்டிக் கொண்டிருந்த அந்த மூதாட்டி கண்களை இறுக மூடிக் கொண்டாள். முதலில் கண்களை மூடியவுடன் எங்கும் கருமையான இருளையே காண முடிந்தது. சற்று நேரம் கழித்து அந்த இருளில் ஒரு வெண் திரை தோன்றியது. இன்னும் சற்று நேரம் கழித்து அந்த வெண் திரையில் மேகங்கள் சூழ அந்த வெண் மேகக் கூட்டங்கள் மறையும் தருணத்தில் இந்திரன் வெள்ளைக் குதிரை மேல் பவனி வரும் அற்புதக் காட்சியைக் கண்டாள் அந்த மூதாட்டி.

அவ்வளவுதான். “ஆஹா இந்திரன் வந்து விட்டான்,” என்று கூறிக் கொண்டே கண்களைத் திறந்து விட்டாள் மூதாட்டி. பரிணாமத்தைக் கடந்த பரிமாணம். விளைவு அந்த மூதாட்டி காட்சியை இழந்தாள், கண்களையும் இழந்தாள். சேஷாத்ரி சுவாமிகள் தன் கிரிவலத்தைத் தொடர ஆரம்பித்தார். பல வருடங்களுக்குப் பின் அந்த மூதாட்டி சேஷாத்ரி சுவாமிகளின் பெருங்கருணையால் கண் பார்வையைத் திரும்பப் பெற்றாலும் அரிதிலும் அரிய ஒரு உத்தமருக்கு உணவு படைக்கும் சந்தர்ப்பத்தை இழந்தாள் அந்த மூதாட்டி.

“ஒன்னுமே புரியல ஒலகத்துல”
ஸ்ரீராமர் ஸ்ரீஅகத்தியர் நாச்சியார்கோவில்

கணவன் மனைவியருக்கு இடையே அன்புப் பிணைப்பை ஏற்படுத்துவது திருமண பந்தம் என்றால் அந்த திருமண பந்தம் உண்டாக வழிவகுப்பதே கோயில் உழவாரத் திருப்பணிகள். சற்குரு காட்டிய முறையில் உழவாரத் திருப்பணிகளை மேற்கொண்டோர் ஏதோ ஒரு காலத்தில் உத்தம நல்வாழ்வைப் பெற்றார்கள் என்றில்லாமல் இன்று உழவாரத் திருப்பணிகள் அருகி விட்டாலும் சற்குரு கூறிய முறையில் திருத்தல கோமுகங்களைச் தூய்மை செய்தல், பிரகாரங்களில் உள்ள புல் பூண்டுகளை அகற்றி தூய்மை செய்தல், கோயில்களில் பச்சரிசி மாவால் கோலமிட்டு விளக்கேற்றி தேவாரத் திருப்பதிகங்களைப் பாடுதல் போன்ற நற்காரியங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி நற்பலன் பெறலாம்.

ஒருமுறை சற்குரு திருச்சி நாச்சியார்கோவில் வசந்த மண்டபத்தில் பெண்களைக் கோலமிடச் சொன்னபோது சில திருமணமான பெண்களும் அந்தத் திருப்பணியில் கலந்து கொண்டனர். அதைப் பார்த்த சற்குரு, “இந்த ..... (பெண்களுக்கு) தான் திருமணம் ஆகி விட்டதே. அவர்கள் வழிவிட்டு நின்றால்தானே திருமணமாக வேண்டிய இளம் பெண்கள் வசந்த மண்டபத்தில் மாக்கோலம் போட்டு இறைவனை மகிழ்வித்து தக்க துணையைத் தேட முடியும்,” என்று பேரிளம் பெண்களின் பொறுப்பை அழகாகச் சுட்டிக் காட்டினார்கள் சற்குரு.

அதே போல தான் பீமரத சாந்தி (70 வயது பூர்த்தி) செய்து கொண்டதாக ஒரு அடியார் தெரிவித்தபோது சற்குரு வெங்கடராமன் அவர்கள், “சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் சாஸ்திரங்களால் அங்கீகரிக்கப்பட்டவையே என்றாலும் நம் குடும்பத்தைச் சேர்ந்த, நமது அடியார்கள் குடும்பத்தைச் சேர்ந்த திருமண வயதைத் தாண்டிய பல பெண்களும் ஆண்களும் இருக்கையில் நாம் அவர்களுடைய திருமணத்திற்கான முயற்சியில் ஈடுபடுவதே முறையே தவிர இவ்வாறு ஏற்கனவே திருமணமானவர்கள் மீண்டும் மீண்டும் திருமணம் செய்து கொள்வதால் என்ன பலன்?

“இவ்வாறு தாமதமாகி திருமணங்கள் நடைபெறாத ஏக்கங்களை நாம் பிறருக்கு நிகழ்த்தும் சஷ்டியப்தபூர்த்தி, ஹோமங்கள், வேதபாராயணயங்கள், அபிஷேக ஆராதனை போன்ற வைபவங்களின் மூலம் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாமே தவிர நமக்கு நாமே இத்தகைய திருமணங்களை நிகழ்த்திக் கொள்வதால் என்ன பயன் ?” என்று கேட்டார். அனைரும் ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டிய ஒரு அம்சமே நம் சற்குரு தெரிவித்தது. காரணம் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மாங்கல்ய, மங்கள தானங்கள் அளித்தவரே நம் சற்குரு.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam