பழிக்குப் பழி கடுகளவு இன்பம், மன்னிப்பதோ மலையளவு இன்பம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கமணீய பிரணவ நாதர்

உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் மூலமாய் இருப்பது ஓங்காரம் என்னும் பிரணவ நாதமே. இறைவனை வழிபடும் உபாசனை மார்கமான சாக்த உபாசனை, கௌமார உபாசனை போல் பிரணவ நாதத்தையே ஆதியந்த உபாசனையாக கைக்கொள்ளும் மார்கமும் உண்டு. பிரணவ நாத மார்கத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டும் பல பிரணவ தலங்கள் உலகெங்கிலும் வியாபித்துள்ளன. குறிப்பாக, திருவிடைமருதூர் ஓங்கார பிரகாரத் தலமாகவும், திருச்செந்தூர் ஓங்கார பிரணவ நாத தலமாகவும், செங்கோட்டை அருகே உள்ள திருமலை பிரணவ வாயுத் தலமாகவும், திருச்சி உஜ்ஜீவநாதர் திருத்தலம் பிரணவ பிந்துத் தலமாகவும் பொலிகின்றன. ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் திருத்தலம் ஸ்ரீசக்கரத்தின் மேருவைப்போல பிரணவத்தின் மேருவாகப் பொலிகிறது என்பது இதுவரை வெளிவராத தேவ இரகசியமாகும்.

பிரணவ நாதம் அ, உ, ம என்ற மூன்று ஒலி கூறுகளையும், 1001 பீஜாட்சர கூறுகளையும் உடையது. இந்த சகஸ்ர பீஜாட்சரங்களில் மூன்றாவதாக அமைந்த பீஜாட்சர சக்தியே கமணீயம் என்னும் சக்தியாகும்.

ஓங்கார பிரகாரம், உய்யக் கொண்டான்மலை

நமது பாரத பூமியில் தேவியின் 51 சக்தி பீடங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு திருக்கோயில்கள் எழுந்தருளியிருப்பதுபோலவே பிரணவத்தின் 1001 பீஜாட்சர கூறுபாடுகளுக்கும் பல சிவலிங்கங்கள் தோன்றி அனைத்து உயிர்களையும் காத்து வருகின்றன. இந்த ரகசியங்கள் அனைத்தும் இலிங்க வித்து கூறு வித்தை என்னும் சித்த கிரந்தங்களில் விளக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சிறுகமணி திருதலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் பிரணவத்தில் பொதிந்திருக்கும் கமணீய சக்திகளை பூவுலகில் நிரவும் அனுகிரக மூர்த்தியாக தோன்றியுள்ளது நமது பெரும்பாக்கியமே.

கமணீய சக்தி விளக்கம்

கமணீயம் என்னும் பீஜாட்சர சக்தியை மனிதர்களுக்குப் புரியும் விதத்தில் விளக்குவது மிகவும் கடினமான செயல். பீஜாட்சர ரகசியங்களை மனித மனம் புரிந்து கொள்வது கடினம் என்பதால்தான் இறைவனின் பரம ரூபத்தை கல்யாண குணங்களாக வர்ணித்து சகஸ்ர நாமம் என்று ஆயிரம் நாமங்களால் வழிபடும் முறைகளை வகுத்துத் தந்துள்ளனர் நமது முன்னோர்கள். விஷ்ணு சகஸ்ர நாமம், லலிதா சகஸ்ரநாமம் போன்ற சகஸ்ர நாம துதிகளில் இத்தகைய பிரணவ கூறுபாடுகளே இறைவனின் திருப்பெயர்களாக, இறைவனின் எல்லை இல்லா லீலைகளாக, அவதார கிருத்தியங்களாக வர்ணிக்கப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் பீஜாட்சர சக்தியால் மனிதர்களுக்குக் கிடைக்கும் பலனை விளக்குவது எளிதாகும். மனித உடலில் உள்ள சூட்டை மூன்று விதமாகப் பிரிக்கலாம், அதாவது உள் சூடு, நடு சூடு, வெளி சூடு என்று மூன்று வித உஷ்ண நிலைகள் மனித உடல், மன இயக்கத்தைப் பரிபாலனம் செய்கின்றன. நாம் ஏற்கும் உணவு, நம்முடன் பழழும் மனிதர்கள், நம்மை ஆட்கொள்ளும் எண்ண அலைகள் நம்முடைய உடலில் உள்ள அந்தந்த வகை சூட்டுடன் பரிமாற்றம் அல்லது பரிவர்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்பது விதி. இந்த விதிக்கேற்ப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இதில் எதிர் எதிரான பரிவர்த்தனை அல்லது தொடர்பு ஏற்படும்போது உடல் வியாதிகளும் மன வியாதிகளும் நிச்சயம் நம்மைத் தாக்கும்.

உதாரணமாக, இளநீர் உள் சூடு சக்தியை உடையது. அதனால் இளநீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தும்போது அது நமது உடலில் உள்ள உள்சூட்டுடன் தொடர்பு கொள்வதால் உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து சிறுநீரகங்கள். மலக்குடல் போன்ற உறுப்புகள் வலிமை பெறுகின்றன. இந்த உறுப்புகளில் உள்ள நரம்புகளும் இரத்தக் குழாய்களும் தூய்மை அடைகின்றன. ஆனால், ஐஸ்கிரீம், செயற்கையாக குளிரூட்டப்பட்ட பானங்களை நாம் ஏற்கும்போது இந்தப் பானங்களில் உள்ள வெளிசூடு என்னும் தத்துவம் உடலில் உள்ள உள்சூட்டுடன் தொடர்பு கொள்வதால் விரைவில் உடல் உள் உறுப்புகள் பலவீனம் அடைந்து இறுதியில் தங்கள் இயக்கங்களையே இழந்து விடுகின்றன.

அதே போல முறையான திருமணத்தில் நிகழும் உறவு நிலை மனிதர்களை நல்ல ஆரோக்கியமான உடல், மன வள நிலையில் வைத்திருப்பதுடன் அவர்களுக்குப் பிறக்கும் சந்ததிகளுக்கும் பூரண ஆரோக்கியத்தைத் தரும்.

ஓங்காரத் திருக்குளம்
உய்யக் கொண்டான் மலை

ஆனால், சுயஇன்பம், ஓரினச் சேர்க்கை போன்ற தகாத உறவு நிலைகளில் மனிதர்கள் ஈடுபடும்போது இந்த உள் சூடு, உள் சூடு என்ற முறையான பரிமாற்றம் நிகழாமல் உள் சூடு, வெளி சூடு அல்லது உள் சூடு, நடு சூடு என்ற பரிமாற்றம் நிகழ்வதால் மனிதர்களின் உடல் உறுப்புகளும், நரம்புகளும், இரத்தக் குழாய்களும் விரைவில் பழுதடைந்து விடுகின்றன.

சமுதாயத்தில் விரைந்து பரவி வரும் இத்தகைய சீர்கேடுகளுக்கு பிராயச்சித்தம் தர வல்லதே கமணீய சக்திகளாகும். சமுதாயத்தில் காமக் குற்றங்களும், முறைகேடான பழக்க வழக்கங்களும் பெருகா வண்ணம் காக்க உறுதுணை புரிவதே கமணீய நாத கூறுகளாகும். எந்த அளவிற்கு சமுதாயத்தில் கமணீய சக்திகள் பெருகுகின்றதோ அந்த அளவிற்குச் சமுதாயம் அமைதிப் பூங்காவாக மலரும் என்பதே சித்தர்கள் நமக்குக் காட்டும் நல்வழியாகும்.

ஒரு மனிதனின் எதிர்காலம் அவன் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்துதானே அமைகிறது? சரியான முடிவுகளை எடுக்கும்போது பிரகாசம் அடையும் அவனுடைய எதிர்காலம், தவறான முடிவுகளால் பாதிக்கப்படுகிறதே. மனிதன் சரியான முடிவுகளை எடுக்க உதவுவதே மனித மூளையில் இயங்கும் கபால வாயுவாகும். நமது உள்ளங்கை, மூளையில் இயங்கும் கபால வாயு, மருதாணி, சந்தனம், எள் போன்ற மூலிகை வகைகள் நடுச் சுடு இயக்கத்தைக் கொண்டவை. இதனால்தான் சந்தனம் அரைத்தல், உள்ளங்கையில் மருதாணி இடுதல், எள் நீர் வார்த்து தர்ப்பணம் அளித்தல் போன்றவை நமது மூளைச் செல்களை ஆக்கப்படுத்தி நமது எதிர்காலத்தை வளமாக்குகின்றன. எள் நெய் எனப் புகழப்படும் நல்லெண்ணெய் தேய்த்து வாரம் இருமுறை நீராடுவதால் கபால வாயு சீர் பெற்று நம்முடைய எண்ணங்களில் தெளிவு ஏற்படுகிறது.

ஆனால், மின்சாரம், மின்காந்த அலைகள் போன்றவை உள் சூடு இயக்கத்தைக் கொண்டிருப்பதால் செல்போன், டீவி, கம்ப்யூட்டர் போன்ற மின் சாதனங்களை மனிதன் தொடர்ந்து கையாளும்போது அவை மனிதனின் உடல் நரம்புகளை எளிதில் பாழ்படுத்து விடுகின்றன. மூளையில் இயங்கும் கபால வாயு அளவுக்கு அதிகமாக உஷ்ணம் அடைவதால் மனமும் உள்ளமும் தங்கள் வலிமையை விரைவில் இழக்கின்றன.

மேலும் கபால வாயு அளவுக்கு அதிகமாக உஷ்ணம் அடையும்போது தேவையற்ற காம எண்ணங்களும் அதிகரிக்கும். இத்தகைய பிரச்னைகளால் மனித சமுதாயம் அவதியுறும் என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த முன்னோர்கள் இப்பிரச்னைகளுக்கு உரிய தீர்வை பல யுகங்களுக்கு முன்னரே அருளியுள்ளனர்.

இந்திரனின் அரிய வேண்டுகோள்

இந்திரன் தேவ லோகத்தின் தலைவன். தேவேந்திரன், விஜயேந்திரன் என்பவை இந்திரனுக்கு விளங்கும் வேறு பெயர்கள். அதாவது இந்திரிய சுகங்களை வென்றவன், இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட தேவ நிலையை அடைந்தவன் என்று பொருள். ஆனால், இந்திரன், பிரம்மா முதலானோர் பல தவறுகளைச் செய்து விட்டு, அதனால் பல சாபங்களையும் பெற்ற வரலாறுகளைக் கேள்விப்படுகிறோம். இவை எல்லாம் தேவ நிலையில் உள்ளவர்களும் மனிதர்களின் தவறுகளை ஏற்றுக் கொண்டு பல துன்பங்களை மனித உடலில் அனுபவித்து, மனித சமுதாயத்தைக் கரையேற்றும் வழிமுறைகளைக் காட்டிய நிலையே ஆகும். இதுவே இந்திரன் அகலிகை சாப விமோசன வரலாறும் ஆகும்.

அதை விரிவாகக் காண்போமா?

ஸ்ரீநந்தி மூர்த்தி
சிறுகமணி

மனிதனுடைய எல்லாத் துன்பத்திற்கும் காரணம் ஆசையே. ஆனால், ஆசையை அறுத்தல் என்பது அவ்வளவு எளிதான காரணம் அன்று. இப்பாடம் புகட்ட எம்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடலே இந்திரனின் சாப விமோசன லீலையாகும். ஒரு யுகத்தில் தேவலோக அதிபதியான இந்திரன்  ஈசனை நோக்கித் தவம் இயற்றினான். அவனுடைய விருப்பம் எம்பெருமானைக் காண ஆயிரம் கண்கள் பெற வேண்டும் என்பதே. பல யுகங்கள் தவத்திற்குப் பின் எம்பெருமான் இந்திரன் முன் தோன்றி, உன்னுடைய தவத்திற்குக் காரணம் என்ன? எதை நோக்கி இந்தக் கடும் தவம் மேற்கொண்டுள்ளாய்? என்று வினவ, இந்திரனும், சுவாமி, எல்லையில்லா அழகு வாய்ந்த தங்கள் திருஉருவை அடியேனுடைய இரு கண்களால் பார்க்க இயலவில்லை. உங்கள் திருவடியை நோக்கும் அதே சமயம் தங்கள் திருக்கரங்களைக் காண வேண்டும், தங்கள் திருக்கரங்களைக் கண்ணுறும் அதே சமயம் தங்கள் திருமுகத்தைக் காண வேண்டும்.

ஆனால், தங்கள் திருவடியிலிருந்து கண்களை விடுவித்து தங்கள் முழங்காலிற்கு வருவதற்குள் 300 சதுர்யுகங்கள் கழிந்து விடுகின்றன. தங்கள் முழங்காலில் பதிந்த கண்களை விடுவித்து தங்கள் திருஉந்தியைக் காண விழையும்போது 600 யுகங்கள் கழிந்து விடுகின்றன. தங்கள் திருஉந்தியில் பதிந்த நேத்திரங்களை அடியேன் விடுவித்து தங்கள் திருமுகத்தைக் காண முயன்றால், அடியேனின் இந்திரப் பதவிக் காலமே முடிந்து விடும்போல் தோன்றுகிறதே, சுவாமி. இந்நிலையில் தங்கள் திருஉருவத்தை எப்படி முழுவதுமாக தரிசனம் செய்ய முடியும்? எனவே, தாங்கள் பெருங் கருணை கூர்ந்து அடியேனுக்கு ஆயிரம் கண்கள் அருளினால் தங்கள் முழு உருவத்தையும் தரிசித்த பாக்கியத்தைப் பெற்றவன் ஆவேன், என்று மனமுருகிப் பிரார்த்தித்தான்.

எம்பெருமான் புன்னகை புரிந்தார். இந்திரன் கூறியது முற்றிலும் சரியே. அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகனை முழுமையாகத் தரிசனம் செய்வது எவராலும் இயலாத காரியம் என்பது உண்மையே. தேவர்களும், யோகிகளும், மகான்களும், சித்தர்களும் எம்பெருமானின் திருஉருவத்தின் ஒரு அணு அளவு தரிசனத்தையே பெற்றுள்ளனர் என்றால் மற்றவர்களின் நிலையை என்னவென்று கூறுவது?

எம்பெருமான் தொடர்ந்தார், இந்திரனே, இறைவனை முழுமையாகக் காண வேண்டும் என்ற உன்னுடைய எண்ணம் நல்ல எண்ணம்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்கான தகுதி உன்னிடம் இருக்கிறதா என்று யோசித்துப் பார். என்னுடலில் பாதியைப் பெற்ற சக்தியும், என் வழித் தோன்றல்களான பிள்ளையாரும், முருகனுமே என்னை முழுமையாக உணர்ந்து கொண்டது கிடையாது.  அவ்வாறிருக்க ஒரு தேவ நிலையில் உள்ள நீ என்னை முழுமையாகத் தரிசிக்க வேண்டும் என்று நினைப்பது பேராசை அல்லவா? தகுதிக்கு மீறிய ஆசை கொள்ளலாமா? என்று கேட்டார். இந்திரனும், ஐயனே, தங்களால் இயலாத காரியம் ஒன்று உண்டா? விதியை விதித்தவர் விதியை மாற்றலாம் அல்லவா? எப்படியாவது அடியேனுடைய இந்தச் சிறிய ஆசையை தாங்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும், என்று பிடிவாதமாகக் கூறினான்.

ஸ்ரீகற்பக விநாயகர்
சிறுகமணி

எம்பெருமான் மீண்டும் எச்சரிக்கை செய்தார், இந்திரா, உன்னுடைய தகுதிக்கு மீறிய ஆசையால் விளையப் போகும் விபரீதத்தை உணரும் நிலையில் நீ இல்லை. எனவே, உன்னுடைய விருப்பத்தை விரைவில் நிறைவேற்றுகிறேன், என்று அருளி மறைந்தார். இந்திரனும் ஒரு பெரிய காரியத்தை நிறைவேற்றி விட்ட பெருமிதத்தில் தேவ லோகத்தை அடைந்தான்.

சித்தர்களுடைய கண்ணோட்டத்தில் இறைவனை ஒருவன் தரிசிக்க வேண்டும் என்று நினைப்பதே சுயநலம்தான். மற்றவர்களுக்கு இறைவனின் தரிசனத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே ஒருவனின் நியாயமான பொதுநல விருப்பம். எனவே, இந்திரனின் சுயநல ஆசையால் அவன் பெற்ற இறை தரிசனம் அவனுக்கு நல்லது கெட்டதை பகுத்தறியும் ஆற்றலை அளிக்கவில்லை. மாறாக அவனுடைய காம எண்ணத்தைப் பல மடங்காக பெருக்கி விட்டது. புண்ணிய சக்தி எதையும் பன்மடங்கு பெருக்கும் என்பது நீங்கள் அறிந்ததே.

காம நோய் பெருகிய காரணத்தால் இந்திரனுக்கு கௌதம ரிஷியின் பத்தினியான அகலிகை மீது மோகம் ஏற்பட்டது. அதனால் அவன் ரிஷியின் சாபத்திற்கு ஆளாக நேரிட்டது. இந்திரன் பெற்ற வரத்தால் அவன் விருப்பப்படியே அவனுக்கு ஆயிரம் கண்கள் இறைவனால் வழங்கப்பட்டன. ஆனால், சுயநலத்தால் இந்திரன் பீடிக்கப்பட்டதால் அகக் கண்களுக்குப் பதிலாக ஆயிரம் யோனிக் கண்கள் எம்பெருமானால் அளிக்கப்பட்டன. இந்திரனுடைய உடலும் கரிய நிறமாக மாறிவிட்டது. அவன் தன்னுடைய தேவ ஒளியை இழந்தான்.

மிகுந்த அவமானம் அடைந்த இந்திரன் சிறுகமணியை அடைந்து அங்கு குடி கொண்டிருந்த ஈசனைச் சரண் அடைந்தான். அத்தருணம் சிறுகமணி ஈசனின் திருநாமம் பால்வண்ண நாதர், வெண்மணி ஈசன் என்பதாகும். அக்காலத்தில் திருக்கோயிலைச் சுற்றி மாடுகள் மந்தை, மந்தையாக மேயும். எம்பெருமானும் திறந்த வெளியில்தான் வீற்றிருந்தார். பசுக்கள் எல்லாம் அருணோதய வேளையில் எம்பெருமானின் லிங்கத் திருமேனியில் தாங்களாகவே பால் சொரிந்து செல்லும். எம்பெருமானின் லிங்க வடிவமும் பால் வண்ண நிறத்தில் வெண்மையாக ஒளிரும். பால் சுரந்த திருமேனியில் காலைக் கதிரவனின் செங்கதிர்கள் வீசும்போது அக்காட்சி கைலாயத்தை நேரில் தரிசிப்பது போல் கண்கொள்ளாக் காட்சியாக ஜொலிக்கும்.

தமிழ் உயிரெழுத்து சாளரம்
சிறுகமணி

சிறுகமணி திருத்தலத்தில் ஆயிரம் யுகங்கள் இந்திரன் தொடர்ந்து தவம் இயற்றினான். ஒவ்வொரு யுக முடிவிலும் இந்திரன் உடலில் இருந்த ஒரு யோனிக் கண்ணை எம்பெருமான் தன்னுடைய லிங்கத் திருமேனியில் ஏற்றுக் கொண்டார். அதனால் அவருடைய உருவமும் கொஞ்சம் கொஞ்சமாக கரிய நிறமாக மாறத் தொடங்கியது. மாறாக இந்திரன் சிறிது சிறிதாக தன்னுடைய சுய உருவத்தையும், தேவ ஒளியையும் பெற ஆரம்பித்தான்.

தவறு செய்தவர்கள் தங்கள் தவறுக்கு உரிய தண்டனையை பெற்றே ஆக வேண்டும். தண்டனையிலிருந்து எவருமே தப்ப முடியாது. இது இறைவன் விதித்த விதி. இறைவனின் இந்த விதியிலிருந்து எவருக்கும் விலக்கு கிடையாது. அதனால் இந்திரன் உடலிலிருந்த கண்களையும் கரிய நிறத்தையும் எம்பெருமானே ஏற்றுக் கொண்டார்.

ஓராயிரம் யுகங்கள் முடிவடைந்தவுடன் இந்திரன் பூரணமான சாப விமோசனத்தைப் பெற்றான். அவன் உடலிலிருந்த கண்கள் அனைத்தையும் எம்பெருமானே ஏற்றுக் கொண்டார். இறைவனின் எல்லை இல்லாக் கருணையைக் கண்ட இந்திரன் மனம் உருகி ஆனந்தக் கண்ணீர் மல்க எம்பெருமானை, பக்தவச்லா, பக்வவத்சலா, பக்தவத்சலா என்று கூவி அழைத்துக் கூத்தாடினான். அன்று இந்திரன் துதித்த நாமத்தையே இறைவன் அன்புடன் ஏற்றுக் கொண்டு இன்றும் அந்த திவ்ய நாமத்தில் அருள் பாலிக்கிறார். இந்திரன் எம்பெருமானை வணங்கி, ஈசனே, அடியார்களின் நேசனே, அடியேனின் அறியாமையால் தங்களிடம் ஆயிரம் ஊனக் கண்களைக் கேட்டு விட்டேன். அபசாரம் செய்து விட்டேன். ஆனால், தாங்களோ பெரும் கருணை கூர்ந்து அடியேனுக்கு அகக் கண்ணான ஞானக் கண்ணை வழங்கி விட்டீர்கள். ஆயிரமாயிரம் ஊனக் கண்களை விட ஒரு அகக் கண்ணே உயர்ந்தது என்ற அற்புத பாடத்தை இன்று புகட்டி விட்டீர்கள். தங்கள் கருணைக்கு எல்லை உண்டோ? என்று மனம் விட்டுக் கதறி அழுதான்.

இந்திரனுக்கு சாப விமோசனம் அளித்து அவனுடைய கண்களை லிங்கத் திருமேனியில் ஏற்றதால் சித்தர்கள் சிறுகமணி ஈசனை சகஸ்ராக்ஷ நாதர் அதாவது ஆயிரம் கண்களை உடையவர் என்று போற்றுகிறார்கள். இறைவனின் திருமேனியில் ஆயிரம் கண்கள் உறைவதை இன்றும் பக்தர்கள் தரிசித்து அனுகிரகம் பெறலாம். இத்திருத்தலத்தில் இயற்றப்படும் வழிபாடுகள் ஆயிரம் மடங்காக விருத்தியாகும் என்பதே இறைவன் நமக்கு உணர்விக்கும் பாடமாகும். ஆனால், பக்தர்கள் அந்தப் பலனை சுயநலத்திற்குப் பயன்படுத்தாமல் மற்றவர்களுக்காக, சமுதாயத்திற்குப் பயன்படுத்துவதே சிறப்பு என்பதே இந்திரன் சாம விமோசனம் நமக்குப் புகட்டும் பாடமாகும்.

முறையற்ற காமத்தால் அறிந்தோ அறியாமலோ தவறு செய்தவர்கள் மனம் திருந்தி தங்கள் தவறுகளுக்கு பிராயசித்தம் பெற உதவும் அற்புதமான தலம். ஆனால், மனம் திருந்தி மீண்டும் இத்தகைய தவறுகளைச் செய்வதில்லை என்ற உறுதி பூண்டால்தான் பிராயசித்தம் முழுமை அடையும் என்பதை நினைவில் கொள்ளவும்.

தற்காலத்தில் செல்போன், கம்ப்யூட்டர், தொலைக் காட்சி போன்றவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் பார்வைக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, உடல் மன பலவீனம் போன்ற துன்பங்களால் வருந்துவோர் பெருகி வருகின்றனர். இத்தகைய துன்பங்களுக்கு நிவாரணம் அளிக்க வல்லவரே சிறுகமணி ஆயிரம் கண்ணுடைய மூர்த்தி ஆவார்.

கற்பகாம்பிகையின் அருளாட்சி

படைப்புத் தொழிலுக்கு மூலாதாரமான பிரணவத்தின் பொருள் தெரியாததால் பிரம்மாவை முருகப் பெருமானை சிறையில் அடைத்தார் அல்லவா? அதனால் எல்லா உயிர்களும் படைக்கப்படாமல் சிருஷ்டியில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. இக்குறையை சீர்செய்யும்படி எம்பெருமான் முருகனை அழைக்க முருகப் பெருமான் எதையுமே தாயிடம் இருந்து பெறுவதுதான் சிறப்பு என்ற காரணத்தால் அன்னை பார்வதி தேவியை வணங்கி தனக்கு சிருஷ்டி தத்துவத்தைப் புகட்டும்படி கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
சிறுகமணி

லலிதா பரமேஸ்வரியின் திருப்பாதங்களின் ஒரு தூசுதானே பல கோடி அண்டங்களையே உருவாக்குகிறது. அம்பிகையைத் தவிர சிருஷ்டி தத்துவத்தை வேறு யாரால் முறையாகப் புகட்ட முடியும். எனவே, முருகப் பெருமானின் விருப்பத்திற்கிணங்கி பார்வதி தேவியும் அனைத்து உயிர்களின் சிருஷ்டி தத்துவத்தை முருகப் பெருமானுக்கு முறையாகப் புகட்டினாள். அவ்வாறு குமரனுக்கு சிருஷ்டி ரகசியத்தை அருளிய கோலமே இத்திருத்தலத்தில் அம்பிகை நான்கு கரங்களுடன் அருளும் கோலமாகும். சிருஷ்டி தொடங்கிய காலம் முதல் இன்று வரை தூய்மை நிலையில் விளங்கும் தாமரை மலர்களை இரு கரங்களில் தாங்கி இருப்பது சிருஷ்டி உபதேச நிலையைக் குறிப்பதாகும்.

புதிதாக எத்தொழிலைத் தொடங்குபவர்களும் இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகற்பகாம்பிகையை வேண்டி அம்பிகைக்கு தங்கள் கைகளால் அரைத்த மஞ்சள் பொடியால் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற ஒன்பது கஜ புடவை சார்த்தி வழிபடுதலால் தங்கள் தொழிலில் மேன்மை அடைவர்.

முதல் சம்பளம், முதலில் விளைந்த நெற்கதிர்கள், காய், கனி போன்ற அனைத்துப் பொருட்களையும் கற்பகாம்பிகையிடம் சமர்ப்பித்தலால் வாழ்வில் நிலையான செல்வத்தைப் பெறுவார்கள். வருமானம் நிரந்தரமாகும். வீண் செலவுகள், பொருள் விரயம் தவிர்க்கப்படும்.

பூலோகக் கணக்கில் பல லட்சம் ஆண்டுகளை உடையதே ஒரு கல்பம் என்பது. இது பிரம்ம தேவருக்கு ஒரு பகல் காலம் ஆகும். கல்ப ஆரம்பம் என்பது பிரம்ம லோகத்திற்கு உதய சந்தியாகவும், கல்ப இறுதி என்பது அங்கு அஸ்தமன சந்தியாகவும் அமைகிறது.

தவறை உணர்ந்த பிரம்ம தேவர் முருகப் பெருமானின் கருணையால் மீண்டும் தன்னுடைய பிரம்ம பதவியைப் பெற்று சிருஷ்டியைத் தொடங்கியபோது தன்னுடைய தவறுக்கு பிராயச் சித்தமாகவும் மீண்டும் இத்தகைய தவறுகள் தன்னுடைய பதவிக் காலத்தில் ஏற்படாது இருக்கவும் சிறுகமணி கற்பகாம்பிகையை வணங்கி வழிபட்டார். இவ்வாறு ஒரு உதய கல்பத்திலும், அஸ்தமன கல்பத்திலும் பிரம்ம தேவர் வழிபட்டதால் சிறுகமணி அம்பிகைக்கு கல்பகாம்பிகை என்ற திருநாமமும் ஏற்பட்டது. பிரம்ம தேவரால் அந்த யுகத்தில் தோன்றிய வழிபாடு இன்றும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருவது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். கல்பங்கள் கடந்த நாயகியே கல்பகாம்பிகை.

ஸ்ரீமுருகப் பெருமாள்
சிறுகமணி

காவல்துறை, நீதித் துறை, அரசியல், ஆன்மீகம், சமூகசேவை போன்ற பொதுத் துறைகளில் இருப்போர் தங்கள் தவறுகளால் லட்சக் கணக்கான மக்களுக்குத் துன்பம் ஏற்படாதிருக்க விரும்பினால் அவர்கள் இத்தல அம்பிகையை வழிபட்டு வருதலால் தங்கள் துறையில் தவறுகள் ஏற்படாமலும், செய்யாத தவறுக்கு பழி ஏற்க வேண்டிய சூழ்நிலையிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் ஸ்ரீகற்பகாம்பிகை துணை புரிவாள்.

தற்காலத்தில் சூழ்நிலை காரணமாக பெண்கள் பள்ளி, அலுவலகம், கடைவீதி போன்ற பல பொது இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் பெண்களுக்கு அதிகமான பாதுகாப்பு சக்திகள் தேவைப்படுகின்றன. எதிர்காலத்தில் இத்தகைய பிரச்னைகளை பெண்கள் சமுதாயம் சந்திக்க வேண்டி வரும் என்பதை உணர்ந்த ரிஷிகள் அதற்கான பாதுகாப்பு பூஜைகளை அருளியுள்ளனர். இத்தலத்தில் உறையும் ஸ்ரீகற்பாகாம்பிகை வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு சக்தியைச் சிறப்பாக அருளவல்லவள்.

பல யுகங்களுக்கு முன் மைத்ரேயி தேவியால் ஆராதிக்கப்பட்டவள். மைத்ரேயி தேவி அந்த யுக நியதிப்படி பூணூல் அணிந்து ஒரு கோடி காயத்ரீ மந்திரம் ஜபித்து, ருத்ர, சமக வேத மந்திரங்களை ஒரு லட்சம் தடவை ஓதி, 12 லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்து அந்தப் பலன்களை எல்லாம் தேவியிடம் அர்ப்பணித்து இனி வரும் யுகங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேண்டிய பாதுகாப்புச் சக்தியை அருளும்படி தேவியை வேண்டினாள். தற்காலத்தில் பெண்கள் மைத்ரேயி தேவியைப் பின்பற்றி பூணூல் அணிந்து இத்தலத்தில் காயத்ரீ மந்திரம் ஜபித்தல் நலம். சமூக, குடும்ப, பாரம்பரிய காரணங்களால் பூணூல் அணிய இயலாதவர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு, மணிக் கட்டில் காசிக் கயிறு போன்ற காப்பு இரட்சைகளையாவது அவசியம் அணிதல் வேண்டும்.

சுத்தமாக தயாரிக்கப்பட்ட குங்குமத்தை விரல் நுனிகளால் தொட்டுக் கொண்டு கீழ்க் கண்ட துதியை ஓதுதல் நலம்.


ஹரித்ரா குங்கும தேவ்யை நமஹ
மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஹரித்ரா குங்குமாயை நமஹ
யத் பூஜிதம் மயா தேவி பரிபூர்ணம் ததஸ்துதே
அநயா பூஜயா ஸ்ரீஹரித்ரா குங்கும தேவி ப்ரியதாம்
யா தேவீ சர்வ பூதேஷூ ஹரித்ரா குங்கும ருபேண சமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

இவ்வாறு ஒன்பது வியாழக் கிழமைகளில் தேவியை வழிபட்டு வந்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என்பது தர்மத்வஜாய ரிஷியின் புதல்வியான துளசி தேவியின் வரமாகும். இத்துடன் கிருஷ்ணர் அருளிய தர்மத்வஜாய துதியையும் ஓதுவது சிறப்பு. இவ்வழிபாட்டின் மேலும் பல அற்புத இரகசியங்களை தக்க குருநாதர் மூலம் தெரிந்து கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து 48 வியாழக் கிழமைகள் வழிபட்டு வந்தால் பெண்கள் தங்கள் பெயருக்கு உரிய பீஜாட்சர சக்திகளையே அறியும் அளவிற்கு ஞானத்தைப் பெறுவர்.

ஸ்ரீதுர்கா தேவி சிறுகமணி

பிரணவமே எல்லா பீஜாட்சர சக்திகளுக்கும் மூலமாக இருப்பதால், கமணீய பீஜாட்சர சக்திகள் பொலியும் இத்தலத்தில் சுயநாம ஜபத்தை ஓதி ஈசனையும் அம்பிகையையும் வழிபடுவதால் கிட்டும் பலன்கள் அபரிமிதமானவை. உதாரணமாக, ப்ருந்தா என்ற நாமம் கீழ்க் கண்ட பீஜாட்சர சக்திகளை உடையது.

     ப் ..  ஐம், க்லீம், வம்
     ரு .. ரீம், ஹம்
     ந்  ..  லம், ஹம்
     தா ..  ரீம், லம், கம், க்ரீம்

பிருந்தம் என்ற நாமம் துளசி என்ற பொருள் உடையதாக இருப்பதுடன் அந்த நாமத்தில் மேற்கண்ட 11 பீஜாட்சர சக்திகள் பிரகாசிக்கின்றன. அதனால்தான் ப்ருந்தா என்ற நாமம் உடையவர்கள் ஸ்ரீமந் நாராயணனை ஆராதனை செய்வதால் குறையற்ற செல்வத்தையும் வளமான வாழ்வையும் பெறுவார்கள் என்று ஆன்றோர்கள் உறுதி அளிக்கின்றனர்.

இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் பெயரின் மகிமையை அறிய உதவும் அற்புத தலமே சிறுகமணி திருத்தலமாகும்.

கௌலினீ குங்கும பூஜை

பெண்கள் தங்கள் கணவன்மார்களுக்கு ஆயுளை விருத்தி செய்து தருவதற்கு உரிய அற்புத பூஜையே கௌலினீ குங்கும பூஜையாகும். சிவ சக்தி ஐக்ய மங்கள பூஜை எனவும் சிறப்புற்ற இந்த பூஜை கணவனுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அளிப்பதுடன் குடும்பத்தில் ஒற்றுமையையும் சமுதாயத்தில் அமைதியையும் நிலை நாட்டும் சிறப்பான வழிபாடாகும். மைத்ரேயி தேவி அருளிய இப்பூஜையைப் பெண்கள் கூட்டாக நிறைவேற்றுவது பூஜா பலன்களைப் பன்மடங்காக விருத்தி செய்யும்.

ஒரு மரத் தட்டில் அல்லது வாழை இலையில் பிள்ளையார் சுழியிட்டு ஒரு முக்கோணம் வரைந்து கொள்ளவும். முக்கோணத்தின் மேல் நுனி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்குமாறு அமைத்துக் கொள்ளவும். அந்த முக்கோணத்திற்குள் ஒரு வட்டத்தை முக்கோணத்தின் பக்கங்களை தொட்டுக் கொண்டிருக்குமாறு வரைந்து கொள்ளவும். அந்த வட்டத்திற்குள் மேலும் ஒரு முக்கோணத்தை, நுனி கீழ் நோக்கி அமையுமாறு வரைந்து கொள்ளவும். அந்த முக்கோணத்திற்குள் ஒரு ஸ்வஸ்திக் சக்கரத்தை வரைந்து கொள்ளவும். இந்தச் சக்கரம் கௌலினீ பிந்து சக்கரம் என்று அழைக்கப்படும். மனிதப் பிறவியின் அடிப்படை சக்திகளைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தை பச்சரிசி மாவு, மஞ்சள் பொடி, திருநீறு, வெண்மையான வாசமுள்ள மலர்கள் போன்றவற்றால் அவரவர் விருப்பப்படி வரைந்து கொள்ளலாம்.

லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரீ, தேவார பஞ்சாட்சரப் பதிகங்கள் போன்றவற்றை ஓதி சக்கரத்தை குங்குமத்தால் அர்ச்சிக்கவும். இவ்வாறு அர்ச்சித்த குங்குமத்தை எடுத்து தனியாக ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். இந்தக் குங்குமத்தை பெண்கள் தினமும் நெற்றியில் அணிந்து வந்தால் பலவிதமான ஆபத்துகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளலாம். கர்ப்பப்பை கோளாறுகள், மாத விலக்கு போன்ற துன்பங்கள் பெண்களை அணுகாது. அச்சுறுத்தும் கனவுகள், தூக்கத்தில் பிதற்றுதல் போன்ற பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிட்டும்.

பறக்கும் தட்டு பறக்காத தலம்

பறக்கும் தட்டுகள் உண்மையா? உண்மையே. மற்ற கிரகங்களில் பூலோகத்தை விட உயர்ந்த மனோ சக்திகள் படைத்த ஜீவன்கள் வசிக்கிறார்கள். அவர்களுடைய வாகனமே பறக்கும் தட்டுகளாகும். பொதுவாக, மற்ற கிரகவாசிகள் பூலோகத்திலுள்ள மனிதர்களை தங்கள் கிரகத்திற்குப் பிடித்துக் கொண்டு சென்று பல விஞ்ஞான ஆய்வுகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். நாம் வெள்ளை எலி போன்ற ஜீவன்களைப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்துவதுபோல அவர்கள் மனிதர்களைப் பயன்படுத்துவது இயல்பு. இத்தகைய பறக்கும் தட்டுகளின் நடமாட்டம் இறை சக்தி மிகுந்துள்ள தென்னிந்தியாவில் மிகவும் குறைவு. அதிலும் திருஅண்ணாமலை, வள்ளிமலை, ஐயர் மலை போன்ற மலைத் தலங்களை இவைகள் நெருங்குவதே கிடையாது. காரணம் இத்தலங்களில் உள்ள ஈர்ப்பு சக்திகள் பறக்கும் தட்டுகளில் உள்ள உபகரணங்களையே ஸ்தம்பிக்கப் செய்யும் அக்னி சக்தியை உடையவை என்பதுதான்.

ஸ்ரீபைரவ மூர்த்தி
சிறுகமணி

மேலும், ஐயர் மலையைச் சுற்றி எத்தகைய நவீன பறக்கும் தட்டுகளும், அணு சக்தி ராக்கெட்டுகளும் நெருங்க முடியாத அளவிற்கு தெய்வீக பாதுகாப்பு உடைய தலமாகும். ஈஸ்வரப் பட்டம் பெறுவதற்கு முன்னால் ஒரு முறை சனீஸ்வர பகவான் தேவ லோக சஞ்சாரம் மேற்கொள்ளும்போது தன்னுடைய வாகனமான காகத்தில் ஏறி தவறுதலாக ஐயர் மலை வழியாக வந்து விட்டார். உடனே நந்தீஸ்வரர் காக்கை வாகனத்தை அவரிடமிருந்து பறித்துக் கொண்டு விட்டார். ஐயர் மலைக்கு மேல் எந்தத் தேவ லோகத்து புஷ்ப விமானங்களோ, வான ஊர்திகளோ பறக்கக் கூடாது என்பது தேவ சட்டம். இதை அறியாததால் சனி பகவான் தன்னுடைய வாகனத்தை இழக்க நேரிட்டது. தேவ சட்டத்தை மீறிய தவறுக்குப் பிராயச் சித்தமாக சனி பகவான் பல காலம் தவமியற்றினார். அப்போது சனீஸ்வரர் மூன்று தலங்களில் தவம் இயற்றினார். அதில் முதல் தலம் காவிரி ஆற்றுக் கரையில் உள்ளது.

தமிழ் ஐப்பசி மாதத்தில் முடவன் முழுக்கு நாளில் சனி பகவான் இத்தலத்தில் நீராடி பூஜைகளை ஆற்றினார். சனி பகவான் நீராடும் சமயத்தில் காவிரியின் அப்பகுதியில் யார் நீராடினாலும் அவர்கள் என்றும் வற்றாத செல்வத்தைப் பெறுவார்கள். அதனால் காவிரிக் கரையிலுள்ள அந்தத் தீர்த்தக் கட்டம் இன்றும் சித்தர்களால் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக சனி பகவான் திருஈங்கோய் மலையில் படி பூஜைகளை இயற்றி வழிபாடுகளை நிகழ்த்தினார். சனி பகவான் மூன்றாவதாக வழிபட்ட தலமே சிறுகமணி திருத்தலமாகும். அட்சய திருதியை நாளில் அறுபது நாழிகையும் நூற்றுக் கணக்கான பசு நெய் தீபங்களை ஆலயம் முழுவதும் ஏற்றி வழிபட்டார். இவ்வாறு பல யுகங்கள் தொடர்ந்து வழிபட்ட பின்னரே ஐயர்மலை நந்தீஸ்வர மூர்த்தியால் மீண்டும் வாகனம் பெற்று, ஐயர் மலை ஈசனால் ஈஸ்வரப் பட்டம் பெறும் பேற்றையும் பெற்றார்.

எவ்வளவு வறுமை நிலையில் உள்ளவர்களும், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களும், தொற்று வியாதிகளால் துன்புறுவோரும் இத்தலத்தில் சுத்தமான பசு நெய் 100 தீபத்திற்குக் குறையாமல் ஏற்றி வழிபடுதலால் விரைவில் தங்கள் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறுவர். அட்சய திருதியை, மூன்றாம் பிறை, கரி நாட்களில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதல் சிறப்பான பலன்களை வர்ஷிக்கும்.

கமணீய கலாநிதி பெருமான்

இறைவனைப் போன்று வேதமும் அநாதியானது. என்றும் உள்ளது. சமீப காலத்தில் சிறுகமணி கிராமத்தில் வேதம் ஓதும் உன்னத பரம்பரையில் பரந்தாமன் என்ற திருநாமத்துடன் ஒரு உத்தமர் வாழ்ந்து வந்தார். திருஅண்ணாமலை மகிமையைக் கேள்வியுற்ற அவர் திருஅண்ணாமலை சென்று அடிக்கடி ஈசனை வழிபட்டு வந்தார். அவ்வாறு சிறிது காலம் சென்றவுடன் அங்குள்ள ஒரு மகானால் ஈர்க்கப்பட்டு அவரிடம் அடைக்கலம் ஆனார். அந்த மகான் பரந்தாமனுக்கு மௌனமாகவே பல தெய்வீக விஷயங்களை உபதேசித்து வந்தார்.

ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி
சிறுகமணி

திருஅண்ணாமலையை ஆயிரம் முறை கிரிவலம் வந்தால் மனிதப் பிறவியிலிருந்து விடுதலை பெற ஈசன் அருள் புரிவான். அருணையை பத்தாயிரம் முறை வலம் வந்தால் சாட்சாத் தட்சிணா மூர்த்தியின் தரிசனம் கிட்டும். இவ்வாறு திருஅண்ணாமலையை பத்தாயிரம் முறை மானசீகமாக கிரிவலம் வந்தவரே அந்த மகான். ஆனால், அவருக்கு தட்சிணா மூர்த்தியின் தரிசனம் கிட்டவில்லை. அதன் காரணம் என்னவென்று அவருக்குப் புரியவில்லை. புராணங்கள் பொய்க்காது. எனவே, அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேற்கூறிய விளக்கத்திற்கு சரியான பொருளை எப்படித் தெரிந்து கொள்வது அவர் யோசித்தபோது அவருக்கு விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு திருத்தலத்தில் வாழ்ந்து வந்த மாம்பட்டாடை சித்தரின் திருஉருவம் அவர் கண் முன் தோன்றியது. ஆம், தன்னுடைய கேள்விக்கு உரிய சரியான விடையை இவரே அளிக்க முடியும் என்று முடிவு செய்து தன்னுடைய சீடரான பரந்தாமனை அந்த சித்தரை தரிசித்து வருமாறு கூறினார்.

காசியைப் போலவே திருஅண்ணாமலையிலும் பொதுவாக மனிதர்கள் இறுதிக் காலத்தில்தான் தங்க வேண்டும். ஒரு முறை திருஅண்ணாமலைக்கு அடைக்கலம் என்று வந்து விட்டால் மீண்டும் அத்தலத்தை விட்டுச் செல்லக் கூடாது என்பது இறை நியதி. இந்நியதியை மீறக் கூடாது என்ற காரணத்தால் தான் மாம்பட்டாடை சித்தரை தரிசிக்கத் தான் செல்லாமல் தன்னுடைய சீடரை அனுப்பி வைத்தார் அந்த மகான்.

மாம்பட்டாடை சித்தரை தரிசித்து தன்னுடைய குருநாதருடைய சந்தேகத்திற்கான விடையை அளிக்குமாறு பரந்தாமன் கேட்டார். சித்தரும், பத்தாயிரம் முறை திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தால் சாட்சாத் தட்சிணாமூர்த்தியே காட்சி அளிக்க வேண்டும் என்று புராணத்தில் கூறப்பட்டிருப்பது உண்மையே. ஆனால், புராணத்தில் கூறப்பட்ட கிரிவலம் உடல் ரீதியாக, கால்களால் நடந்து ஆற்ற வேண்டியது. உடல் ஆரோக்கியம் பூரணமாகப் பெற்றுள்ள உன்னுடைய குருநாதர் மானசீகமாக கிரிவலம் வந்ததால் அதைத் தெய்வீகச் சட்டம் ஏற்றுக் கொள்ளாது. மேலும், தான் ஒருவன் தட்சிணாமூர்த்தியைக் காண வேண்டும் என்று முயற்சி செய்வது சுயநலமான எண்ணம் தானே? மற்றவர்களுக்கும் தட்சிணா மூர்த்தியின் திருஉருவ தரிசனத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று உன்னுடைய குருநாதர் விரும்பியிருந்தால் அந்த சுயநலமற்ற எண்ணத்தை இறைவன் ஏற்று மானசீகமாக கிரிவலம் வந்தாலும் அதற்கு விலக்கு அளித்து தன்னுடைய தரிசனத்தைக் கொடுத்து கருணை புரிந்திருப்பான். எனவே, மானசீக கிரிவலத்திற்கு என்ன பலன் உண்டோ அதை மட்டும் திருஅண்ணாமலையார் அவருக்கு அளித்து விட்டார். அது என்னவென்று உன்னுடைய குருநாதருக்குப் புரியும்.

நரம்பும் சதையுமாக உள்ள தட்சிணாமூர்த்தியின் தரிசனத்தை மனிதனுடைய ஊனக் கண்ணால் பெற வேண்டுமானால் அது மானசீகக் கிரிவலத்தால் இயலாது. கால்களால் பத்தாயிரம் முறை நடந்துதான் இறைவனுடைய தூல வடிவைக் காண இயலும். இதை உன் குருநாதரிடம் தெரிவித்து விடு, என்று கூறினார். பரந்தாமனும் சித்தர் கூறிய விஷயங்களை கவனமாகக் கேட்டு மனதினுள் இறுத்திக் கொண்டான்.

ஸ்ரீஅஷ்டலட்சுமிகள்
சிறுகமணி

சித்தர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். பிறகு தொடர்ந்தார். விதி என்று ஒன்று இருந்தால் அதற்கு விலக்கும் உண்டல்லவா? சித்தர்களால் மட்டுமே இந்த விதிக்கு விலக்கு அளிக்க முடியும். உன்னுடைய குருநாதரை ஒரே ஒரு முறை திருஅண்ணாமலையாரை நடந்து கிரிவலம் மேற்கொள்ளச் சொல். குறைந்தது பத்தாயிரம் அடியார்களை அவர் தன்னுடன் கூட்டிக் கொண்டு கிரிவலம் வர வேண்டும். இவ்வாறு ஒரு முறை அவர் கிரிவலம் வந்தாலும் அவர் பத்தாயிரம் பேர் திருஅண்ணாமலையை கிரிவலம் வரச் செய்த புண்ணியச் செயலைச் செய்வதால் அவரே பத்தாயிரம் முறை கிரிவலம் வந்ததாக தெய்வ லோகத்தில் கணக்கு வைத்து விடுகிறார்கள். அதனால் அவருக்கு நிச்சயமாக தட்சிணா மூர்த்தியின் தரிசனம் கிட்டும் என்று கூறினார்.

பரந்தாமன் மாம்பட்டாடை சித்தரை வணங்கி விடை பெற்றான். திருஅண்ணமாமலைக்குத் திரும்பி வந்து தன்னுடைய குருநாதரிடம் சித்தர் கூறிய உண்மைகளை விளக்கிக் கூறினான். அந்த மகானும் சித்தருக்கு மானசீகமாக நன்றியைத் தெரிவித்து விட்டு ஒரு நல்ல முகூர்த்த நாளைத் தேர்ந்தெடுத்து நூற்றுக் கணக்கான அடியார்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு திருஅண்ணாமலையை வலம் வர ஆரம்பித்தார். இந்த செய்தியைக் கேள்விப்பட்டு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அவருடைய சீடர்கள் அவருடன் சேர்ந்து கிரிவலம் வர ஆரம்பித்தனர். மிகவும் மெதுவாக அவர் கிரிவலம் வந்ததால் பல வாரங்களுக்கு அவருடைய கிரிவலம் நீட்டித்தது. அவருடன் தொடர்ந்து கிரிவலத்தை மேற்கொள்ளா விட்டாலும் பலரும் அவருடன் பல நாட்கள் தங்கியிருந்து அவருடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இறைவன் அவர்களும் கிரிவலம் வந்ததாகவே கணக்கில் எடுத்துக் கொண்டதால் அந்த மகான் கிரிவலத்தை முடிக்கும்போது பல்லாயிரக் கணக்கான அடியார்களுடன் கிரிவலம் வந்ததாக கணக்கிட்டு அவருக்குத் தன்னுடைய அற்புதமான தெய்வீக தரிசத்தைத் தந்தருளினார். அந்த மகானும் திருஅண்ணாமலையாரின் திவ்ய தரிசனத்தைப் பெற்று திருஅண்ணாமலை ஜோதியில் கலந்தார்.

அதனால் தெய்வீகத்தில் எந்த உயர் நிலையை மனிதர்கள் அடைந்தாலும் அதற்கும் மேல் அவர்கள் அடைய வேண்டிய நிலை எவ்வளவோ உண்டு. தெய்வீகத்தில் இறுதி நிலை என்று ஒன்று இல்லவே இல்லை என்பதை மேற்கூறிய உண்மை நிகழ்ச்சி நமக்கு உறுதிப் படுத்துகின்றது.

ஸ்ரீசூரிய பகவான்
சிறுகமணி

இவ்வாறு அந்த மகானிடம் பல காலம் தங்கியிருந்த பரந்தாமன் தான் திருஅண்ணாமலையிலேயே தன்னுடைய இறுதிக் காலத்தைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தெரிவித்தான். ஆனால், அந்த மகானோ, நீ பூமியில் ஆற்ற வேண்டிய இறைப் பணிகள் நிறைய உள்ளன. அதை எல்லாம் நிறைவேற்றிய பின்தான் நீ இங்கு நிரந்தரமாகத் தங்க முடியும், என்று கூறி பரந்தாமன் நிறைவேற்ற வேண்டிய இறைப் பணிகளில் ஒன்றிரண்டைக் கோடிட்டுக் காட்டினார். அதில் ஒன்றே திருஅண்ணாமலையில் விளங்கும் கமணீய சக்தியை சிறுகமணித் திருக்கோயிலில் நிரவும் திருப்பணியாகும். திருஅண்ணாமலையில் அடிஅண்ணாமலை அருகே பிறை தரிசனம் என்ற ஒரு அற்புதமான தரிசனம் உண்டு. அந்த பிறை தரிசனத்தை அடுத்து வருவதே கமணீய சக்தி தரிசனமாகும். இந்த தரிசனத்தில்தான் ஓங்கார பிரணவத்தில் மூன்றாவதாக விளங்கும் கமணீயம் என்னும் சக்தி செறிந்துள்ளது. இந்த இரகசியத்தைப் பரந்தாமனுக்கு அந்த மகான் விரிவாக எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு மாதம் மூன்றாம் பிறை தரிசன நாளில் கமணீய தரிசனத்திலிருந்து கமணீய சக்தியை ஈர்த்து சிறுகமணி திருத்தலத்தில் நிரவும் சக்தியை பரந்தாமன் ஏற்றுக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் நிறைவேற்றி வந்தார். இறுதியாக ஒரு மூன்றாம் பிறைநாளில் சிறுகமணி திருத்தலத்தில் தன்னுடைய இறுதி மூச்சை எம்பெருமானுடன் ஐக்கியமாக்கினார். அன்று முதல் பரந்தாமன் என்ற பக்தர் கமணீய கலாநிதி என்ற திருப்பெயருடன் சிறுகமணி திருத்தலத்தில் உறைந்து வருகிறார்.

ஒவ்வொரு மூன்றாம் பிறை தரிசன நாளிலும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து கமணீய சக்தி தரிசனம் பெற்று சிறுகமணி ஸ்ரீபக்தவத்சலேஸ்வரரை தரிசனம் செய்வதால் கிட்டும் பலன்களோ ஏராளம்.

  1. எதிர்காலத்தில் கடவுள் நம்பிக்கை மிகவும் குறைந்து விடும். இறந்தவர்களையும் மீண்டும் உயிர் பெற்று எழச் செய்யும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேற்றம் அடையும். அந்நிலையிலும் உண்மையான கடவுள் நம்பிக்கையை விருத்தி செய்யக் கூடியதே மேற்கூறிய கமணீய வழிபாட்டு முறையாகும்.

  2. ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க வியாபாரப் பொருளாக மாறி விடும். அதனால் நம்முடைய அன்றாட செயல்பாடுகளுக்கான சரியான வழிகாட்டுதல்களை ஜோதிடம் மூலம் பெற இயலாமல் போய்விடும். இவ்வாறு இறைவனை நம்பி எடுக்கும் முடிவுகளே திருமணம், படிப்பு, வேலை வாய்ப்பு போன்ற விஷயங்களில் சரியான தீர்வைக் கொடுக்கும்.

  3. கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளை, முதலாளி தொழிலாளி, காதல், நட்பு போன்ற அனைத்து உறவு முறைகளிலும் சந்தேகங்கள் ஏற்பட்டு அதனால் மன வருத்தமும், பகையும் உண்டாகி பல வேதனைகளைச் சந்திக்க வேண்டிய நிலைகள் எதிர்காலத்தில் குடும்பங்களில் நிறையவே ஏற்படும். இந்நிலையிலிருந்து மீள உதவ மேற்கூறிய வழிபாடே உற்ற துணையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
  4. அரசியல், அலுவலகம், சமுதாயம், குடும்பம் இவை அனைத்திலும் தான் என்ற அகம்பாவம் தலை விரித்தாடும். இதனால் அனைத்து துறையைச் சார்ந்தவர்களும் பலவிதமான துன்பங்களைச் சந்திக்க நேரிடும். இத்தகைய கொடுமைகளிலிருந்து தங்களை ஓரளவேனும் காத்துக் கொள்ள விரும்புபவர்களுக்கு மேற்கூறிய வழிபாடு உறுதுணையாக இருக்கும்.

வேத கீத நாத தலம்
வேத சக்திகள் பொங்கிப் பரிணமிக்கும் திருத்தலங்களில் ஒன்றே சிறுகமணி திருத்தலமாகும். திருக்கழுக்குன்றம், சென்னிமலை, திருச்சி அருகே சஞ்சீவிராயர் மலை போன்ற திருத்தலங்கள் வேத சக்தியை கற்பாறைகளில்  கிரகித்து வைத்திருக்கின்றன அல்லவா? இதே போன்று சிறுகமணி திருத்தலமும் வேத சக்திகளை கமணீய சூத்திர முறையில் கிரகித்து வைத்துள்ளது என்பது இது வரை வெளி வராத தேவ ரகசியம் ஆகும்.

கமணீய சூத்திரம்

வேதங்களுக்கு ஒலி வடிவமும், ஒளி வடிவமும் உண்டு. வேதங்களை எழுத்தில் வடிக்க இயலாது. ஆனால், தற்கால கலியுக மக்களால் இந்த ஒலி, ஒளி வடிவ வேத அட்சரங்களை கிரகிக்க முடியாது என்பதால் வேதத்தின் ஒரு சிறு பகுதியை மட்டும் எழுத்து வடிவத்தில் மகான்கள் அளித்துள்ளனர். இருந்தாலும் வேத மந்திரங்களை உரியவர்கள் மூலம் முறையாக வாயால் சொல்லக் கேட்டுப் பழகினால்தான் அதன் முழுமையான பலனைப் பெற முடியும். வெறும் புத்தகங்களை மட்டும் வாசித்து எந்த வேத சக்தியையும் முழுமையாகப் பெற முடியாது என்பதே உண்மை.

தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ் வேத மந்திரங்கள் தற்போது புத்தக வடிவில் கிடைத்தாலும் அதை அந்தந்த திருத்தலங்களில் ஒரு முறையாவது வாய் விட்டு ஓதி அத்திருத்தலத்தில் உறையும் இறைவனை வணங்கி வழிபட்டால்தான் தமிழ் வேதங்களின் மகிமையையும் உணர முடியும். எந்த இறை விஷயத்தையும் குரு மூலமாகவே உணர வேண்டும் என்ற விதிக்கு எக்காலத்திலும் விலக்கு கிடையாது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

அநாதியான காலம் தொட்டு உலகில் நிலவி வரும் வேத சக்திகள் கால மாற்றத்தால் மாறுபாடு அடையாமல் காப்பதற்காக ரிஷிகளும், முனிவர்களும் பல்வேறு உபாயங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றில் ஒன்று கண பாடம் என்பதாகும். வேத மந்திரங்களை பல சீர்களாகப் பிரித்து அதை கண முறையில் ஓதுவதே கணப் பாடமாகும். இவ்வாறு எவ்வளவு காலம் ஆனாலும் வேதத்தில் ஏதாவது புது வார்த்தைகள் இடைச் செறுகலாக புகுந்து விடாமலும், இருக்கும் வாக்கியங்களில் உள்ள வார்த்தைகள் குறைந்து, மறைந்து விடாமல் பாதுகாத்து வருகிறார்கள். இவை காதால் கேட்டு மீண்டும் மீண்டும் ஓதிப் பழகி வேதத்தைப் பாதுகாக்கும் ஒரு முறையாகும்.

அது போல வேத மந்திரங்களுக்கு ஒளி வடிவங்கள், சக்கர வடிவங்களும் உண்டு. வேதங்களின் ஒளி வடிவங்களைப் பாதுகாக்கும் தெய்வீக முறையே கமணீய சூத்திரம் என்னும் தத்துவமாகும்.

ஓர் ஊர் அல்லது கிராமத்தில் உறையும் தெய்வத்தின் மகிமை, புனிதத்துவம், அத்திருக் கோயிலில் வழிபாடுகள் இயற்ற வேண்டிய முறை, அத்திருக் கோயிலில் உள்ள இயந்திரங்கள், தேவதைகளின் வரலாறு, திருக்கோயிலுக்கு உள்ள சொத்து விவரங்கள், நிபந்தங்கள், அவ்வூரில் உள்ள நீர்நிலைகளின் தன்மைகள், பயிர்கள், மூலிகைகளின் வளம் போன்ற அனைத்து விவரங்களையும் விளக்கி, இவை எல்லாவற்றையும் சூத்திரங்களாக அவ்வூர் எல்லையில் உள்ள கள்ளி, கற்றாழைச் செடிகளில் பதித்து வைக்கும் வழக்கம் உண்டு. அவ்வூர் வழியே செல்லும் மகான்கள் இந்தச் சூத்திரங்களைப் படித்துத்தான் அந்த ஊர் தெய்வத்தைப் பற்றியும் மற்ற பொதுவான விவரங்களையும் தெரிந்து கொள்வார்கள். இவ்வாறு ஒளிச் சக்கரங்களாக ஒரு விஷயத்தைத் திரட்டி சுருக்கி வைக்கும் ஒரு சூத்திர முறையே கமணீய சூத்திரம் எனப்படும்.

கமணீய சூத்திரத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்தச் சூத்திரங்கள் அனைத்தும் ஒளிப் பரிமாணம் கொண்டுள்ளதால் வெயில், மழை, வெள்ளம் போன்ற எந்த இயற்கைச் சீற்றங்களாலும் இந்த சூத்திரங்களில் உள்ள செய்திகள் மாறுபாடு அடையாமல் யுகம் யுகமாக அழியாமல் பாதுகாக்கப்படும் என்பதாகும்.

வேதம் தோன்றிய நாள் முதல் இன்று வரை உலகில் உலவி வரும் அனைத்து வேத சக்திகளும் இவ்வாறு கமணீய சூத்திரங்களாக ஸ்ரீபக்தவத்சலேஸ்வரரின் லிங்கத் திருமேனியில் பொலிகின்றன. சுவாமியின் திருமேனிக்கு தீபாராதைனைகள் நிகழும்போது உலகம் முழுவதும் இந்த கமணீய சக்திகள் வியாபிக்கின்றன. எனவே சிறுகமணி திருத்தலத்தை வேத சக்திகளின் மேருமலை என்று சொன்னால் அது மிகையாகாது.

எந்த அளவிற்கு இத்திருத்தலத்தில் தீபங்கள் ஏற்றப்படுகின்றனவோ அந்த அளவிற்கு உலகில் வேத சக்திகள் பல்கிப் பெருகும். பொதுவாக, தேவாலயங்களில் தீப ஆராதனைகளைத் தரிசிக்கும்போது கண்களை மூடக் கூடாது என்பது நியதி. தீப ஆராதனையில் சுவாமிக்குக் காட்டப்படும் நட்சத்திரம், புருஷா மிருகம், நாக தீபம், பஞ்ச தீபம் என்ற ஒவ்வொரு தீபத்திற்கும் ஒவ்வொரு விதமான அனுகிரக சக்திகள் உண்டு. ஆனால், எந்த அனுகிரக சக்தியாக இருந்தாலும் அது மூலவரின் லிங்கத் திருமேனியில் பிரதிபலிக்கப்பட்டு பக்தர்களின் கண்கள் மூலமாக உடலில் பாய்ந்தால்தான் அந்தத் தீப ஒளியின் அனுகிரக சக்தியை நாம் முழுமையாகப் பெற முடியும். சுவாமி தரிசனத்தின்போது மேல் சட்டை இல்லாமல் இருப்பதும், பெண்கள் குளித்து, தூய்மையான உடலுடன் மஞ்சள் பூசிய முகத்துடன் இருப்பதும் இந்த தீபங்களின் சக்திகளை பன்மடங்காகப் பெருக்கித் தரும்.

சிறுகமணியில் வாழ்ந்த கமணீய கலாநிதி என்ற பக்தர் இத்தகைய கமணீய சூத்திர முறையில்தான் ஒவ்வொரு மூன்றாம் பிறை தரிசன தினத்தின்றும் திருஅண்ணாமலையில் கமணீய சக்தி தரிசனத்தில் பெற்ற வேத சக்திகளை சிறுகமணி ஈசனின் லிங்கத் திருமேனியில் நிரவி அற்புத ஆன்மீகப் பணி ஆற்றினார்.

தற்காலத்தில் பூஜ்யம், ஒன்று என இரண்டு சங்கேத குறிகளை மட்டும் கொண்டு இயங்கும் கம்ப்யூட்டர் துறையானது எதிர்காலத்தில் கமணீய சூத்திர முறையில்தான் மாற்றி அமைக்கப்படும் என்பது சித்தர்கள் வாக்கு. எனவே, கம்ப்யூட்டர் துறையில் சாதனைகள் புரிய விரும்புவோர், கம்ப்யூட்டர் என்ஜீனியர்கள், சங்கேத துறையில் உள்ளவர்கள் (file compression, encoding) சிறுகமணி நாதரை வழிபட்டு வருவதால் தங்கள் துறையில் சிறப்பான முன்னேற்றம் பெறலாம்.

சகஜ வாஸ்து மகிமை

நாம் அறிந்துள்ள வாஸ்து சாஸ்திரம் அணுவிலும் சிறிய அளவே. வாஸ்து ரகசியங்களில் நிகாய வாஸ்து, சகஜ வாஸ்து, சௌம்ய வாஸ்து போன்ற பல உள்பிரிவுகள் உள்ளன. ஒரு வீட்டிலுள்ள அறைகளின் நீள, அகலம், ஒவ்வொரு திசையிலும் இருக்க வேண்டிய பொருட்கள் இவை மட்டும் வாஸ்தி நியதிகளுக்கு உட்பட்டவை என்று கிடையாது.

உதாரணமாக, நிகாய வாஸ்து சாஸ்திர நியதிகளில் கட்டிடங்களை கட்டுவதற்கு எத்தகைய பொருட்களை உபயோகிக்க வேண்டும், எந்தெந்த கட்டிடத்திற்கு எந்த விகிதத்தில் அந்தப் பொருட்கள் இருக்க வேண்டும் என்ற விளக்கங்கள் உள்ளன. ஒரு குளவிக் கூட்டை எடுத்துக் கொண்டால் அது குறிப்பிட்ட மண்ணை வைத்துத்தான் கட்டப்பட்டிருக்கும். தூக்கணாங் குருவிக் கூடு ஒரு குறிப்பிட்ட தேங்காய் நாரினால்தான் பின்னப்பட்டிருக்கும். அது போல அக்காலத்தில் பர்ணசாலைகள் அமைப்பவர்கள் செம்மண் அல்லது களிமண் அல்லது மூங்கில் என ஒரே வகைப் பொருட்களால் ஆன குடிசைகளைத்தான் அமைத்து வந்தார்கள். அப்போதுதான்  நிர்குண தியானம், குண்டலினி யோகம் போன்ற தவ முயற்சிகள் எளிதில் சித்திக்கும். நிகாய வாஸ்து சாஸ்திர முறையில்தான் மனிதனின் கர்ப்ப வாசம் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் ஒரே மாதிரியான கட்டுமானப் பொருட்களால் அமைந்த கட்டிடங்கள் மன அமைதியை அளிப்பததோடு சிந்திக்கும் ஆற்றலையும் பெருக்குகின்றன. எகிப்திய பிரமிட்டுகளிலும் ஒரே வகைக் கற்களால் எழுப்பப்பட்ட அறைகளில்தான் பல ரகசிய தியான பீடங்கள் இன்றும் துலங்குகின்றன.

சௌம்ய வாஸ்து சாஸ்திர முறை கஜானா, தானியக் களஞ்சியங்கள் அமைக்க வேண்டிய நியதிகளைக் குறிக்கின்றன. ஒருவரிடம் உள்ள செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்பது மனிதர்களின் பொதுவான விருப்பம். ஆனால், செல்வம் எவ்விடத்திலும் எக்காலத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் யாருக்கும் எந்த விதப் பயனும் விளைவதில்லை. எந்த அளவுக்கு பணத்தை நியாயமான முறையில் செலவு செய்கிறோமோ, அவசியமான காரியங்களுக்குப் பயன்படுத்துகிறோமோ, என்னென்ன தர்ம காரியங்கள், நற்காரியங்களில் ஈடுபடுகிறோமோ அந்த அளவிற்கு பணத்தில் உள்ள தோஷங்கள் குறையும் என்பது சித்தர்களின் கொள்கை. எனவே, வீட்டில் பீரோவில் உள்ள பணத்தைக் கொண்டு நல்ல செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும். அது முடியாதபோது இருக்கும் பணத்தை மாற்றி அல்லது ரூபாயை சில்லைரையாகவோ அல்லது சில்லைரையை ரூபாயாகவோ மாற்றி பணத்தை ஓரிடத்தில் தங்கி விடாமல் கவனமாக வைத்துக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் அந்தப் பணத்தில் தீய எண்ணங்கள் அமர்ந்து, தீய சக்திகளே பெருகிப் போய் நாளடைவில் அந்தப் பணம் உரியவருக்கோ அல்லது அவருடைய சந்ததியினருக்கே கூட பயன்படாமல் போய் விடும். இதைத்தான் பூதம் காத்த காசு என்று சொல்வதுண்டு. இவ்வாறு நமது பணத்தைப் பூதம் காக்கும் நிலை ஏற்பட்டால் வரும் பிறவிகளில் நிரந்தர கடனாளியாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இவ்வாறு தானியக் களஞ்சியங்களையும் முறையான வாஸ்து நியதிகளின்படி அமைத்தால்தான் அவை புழு, பூச்சிகள் தாக்காமல் முழுமையாக மற்றவர்கள் பசி தீர்க்க பயன்படும். பொதுவாக, தானியங்களை மரத்தாலான குதிர்களில் வைத்துப் பூஜிப்பது முறை. பண்டைக் காலத்தில் அனைவராலும் கையாளப்பட்டு வந்த இந்த பூஜை முறைகள் தற்காலத்தில் மறைந்தே போய் விட்டது. அவரவர் தங்கள் வீடுகளில் இத்தகைய மரக் களஞ்சியங்களை பாதுகாக்க முடியாத நிலையில் இருந்தாலும் கோயில்களில் உள்ள மரக் குதிர்களையாவது உரிய முறையில் பெயிண்ட் அடித்து, சீரமைத்து பாதுகாக்க உதவு புரிவதால் தானியங்களால் வரும் ஒவ்வாமை, தோல் நோய்கள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சகஜ வாஸ்து சாஸ்திரம் ஒரு வீடு அல்லது கட்டிடத்தில் உள்ள வாஸ்து சக்திகளை எப்படி அடுத்தடுத்துள்ள வீடுகளுக்குப் பயன்படும்படி அமைப்பது என்ற ரகசியங்களைத் தெரிவிக்கிறது. ஒருவர் சகஜமாகப் பழகுகிறார் என்றால் மற்றவர்களுடன் மனம் விட்டுப் பேசி அவருக்கு உதவி செய்ய ஆயத்தமாய் இருக்கிறார் என்பதுதானே பொருள். அம்முறையில் சகஜ வாஸ்து சாஸ்திரம் ஒரு இடத்தில் உள்ள வாஸ்து சக்திகளைப் பெருக்கி மற்ற இடங்களையும் தூய்மைப்படுத்தும் நுணுக்கங்களைத் தெரிவிப்பதாகும்.  

உதாரணமாக, ஒருவர் புது மனை வாங்கும்போது வாங்கும் மனை வடகிழக்கில் இருந்தால் நலம் தரும். வடக்கில், வடமேற்கில், கிழக்கில் இருந்தால் நலம் தரும். மற்ற இடங்களில் இருந்தால் முறையாக வாஸ்து யந்திரம், சங்குகள் வைத்து பூஜித்து குரு மூலமாய் எந்த காரியம் அதில் செய்தால் நலம் தரும் என்று அறிந்து செய்ததால் நன்மை கிட்டும்.

அந்தப் புது மனையில் கிணறு, போர்வெல் குழாய் கிணறு அமைக்கும்போது அதை வீட்டில் வடகிழக்குப் பகுதியில் அமைப்பது மிகச் சிறந்தது. முடியாவிட்டால் கிழக்கு, மேற்கு, வடக்குப் பகுதிகளில் அமைக்கலாம்.

மனையின் திசைகள் எந்தத் திசையில் எத்தனை டிகிரியில் இணைய வேண்டும் என்ற கணக்கு உண்டு.

தென் மேற்கு திசை 90 டிகிரியில் இணைதல் நலம்.
வடகிழக்கு திசை 90 டிகிரிக்கும் குறைவாக இருத்தல் நலம்.
தென் கிழக்கு திசை 90 டிகிரிக்கு மேலே இருக்க வேண்டும்.
வட மேற்கு திசை 90 டிகிரிக்கு மேலே இருக்க வேண்டும்.

வீட்டின் தலை வாசல் அளவு வீட்டுச் சொந்தக்காரரின் தொப்புளுக்கு மேல் இருக்கக் கூடாது. அதாவது, தரையிலிருந்து நிலைவாசல் அமையும் உயரம் வீட்டுக்காரரின் தொப்புள் உயரத்தைத் தாண்டக் கூடாது.

தற்காலத்தில் பலரும் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட முடியாமல் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளையும், ப்ளாட்டுகளையும்தான் வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அத்தகையோர் மேற்கூறிய சகஜ வாஸ்து முறைகளை கடை பிடிக்க இயலாது அல்லவா? இவ்வாறு சகஜ வாஸ்து சக்திகளைப் பெற உதவி செய்யும் திருத்தலமே சிறுகமணி ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் ஆலயம் ஆகும்.

இத்தலத்தின் ஈசான்ய திசையில் அமைந்துள்ள பாம்புப் புற்றில் கண்டீர சௌம்யம் என்ற நாக தேவதை வசித்து வருகிறது. இந்தத் தேவதையின் தரிசனம் பெற்றவரே இத்தலத்தில் சூட்சுமமாக பவனி வரும் கமணீய கலாநிதி ஆவார். அஸ்தீக சித்தரின் அருள் பெற்ற கண்டீர சௌம்யம் நாக தேவதையே இத்தகைய சகஜ வாஸ்து சக்திகளை நிரவச் செய்யும் அற்புத அனுகிரக சக்திகளை உடையது.

தற்காலத்தில் பல கட்டிடங்களும் வாஸ்து சாஸ்திர இலக்கணமான 90 டிகிரி கோண இணைப்பைப் பெறாததால் அக்கட்டிடத்தில் ஒலி, ஒளிப் பரிமாணங்களில் பலவித குழப்பங்கள் ஏற்படுகின்றன. கண்டீர நாக தேவதையின் நாக்கானது 90 டிகிரி கோண அளவைக் கொண்டுள்ளது. மேலும், அதனுடைய உடம்பில் ஆறு பக்கங்களுடன் கூடிய அறுகோண பதக்கங்களும் சமக் கோண அளவில் அமைந்துள்ளன. இந்தக் கோண சூட்சும இலக்கணங்கள் எத்தகைய கடுமையான சகஜ வாஸ்து குறைபாடுகளையும் நீக்கும் வல்லமை உடையதால் சிறுகமணி திருத்தலம் அற்புத வாஸ்துத் தலமாகவும் சித்தர்களால் போற்றப்படுகிறது.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தொடரும் மகிமைகள் ...

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam