என் சொல் உன் மந்திரம், என் பணி நின் முத்திரை !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

எமலோக, மார்கண்டேய மண்டலங்களில் பழனிச்சாமிக்கு நிகழ்ந்த அனுபூதிகளைத் தனக்கே உரித்தான பாணியில் கோவணாண்டிப் பெரியவர் மிகவும் சுவைபட விளக்கி வந்தாரல்லவா!

தப்பு என்றால் தப்பாதீர்!

நடுவில், அதற்குள் சிறுவனின் தலைக்குள் ஒரு கேள்வி, ஒரு கேள்வியென்ன, ஒரு நூறு கேள்விகள் முளைத்து விட்டன! ஏனென்றால் பெரியவர் அடிக்கடி உரைப்பது போல, கலியுகத்தில் அனைவருக்கும் “கேள்விகளைக் கேட்கத் தானே தெரியும்!”

ஸ்ரீலோபாமாதா சமேத அகஸ்தீஸ்வரர்
ரிஷிவந்தியம்

குழந்தை ஒன்று
ராமரை அழைத்தால்...!

சிறுவனும்தான், அவசரக் குடுக்கை ஆயிற்றே, தன் தலைக்குள் கேள்விகள் முளைத்த உடனேயே, அவனுக்குப் பெரியவரிடம் அவற்றைக் கொட்டியாக வேண்டுமே!

“ஏன் வாத்யாரே! எம லோகத்துலேயும், மார்கண்டேய லோகத்துலேயும் தப்பே நடக்காதே! தப்பு நடக்கவும் கூடாதே! எப்படி இப்படி நடந்துச்சு? இந்தப் பழனிச்சாமி சம்பவத்துல மட்டும் எப்படித் தப்பு நடக்கற மாதிரி ஆயிடுச்சே! இதெல்லாம் எமதர்ம ராஜருக்குத் தெரிஞ்சா என்னாறது? இந்த மாதிரிப் பெரிய தப்பு விண்ணுலகத்துலேயே எப்படி நடந்து போச்சு? இதைப் பார்த்துக்கிட்டு, மார்கண்டேய லோகத்து மகரிஷிங்க சும்மாவா இருந்தாங்க!”

பெரியவர் பதிலேதும் சொல்லவில்லை!

ஏதோ ஒன்றிரண்டு கேள்வி என்றால் பரவாயில்லை, புளி மூட்டையை அவிழ்த்துக் கொட்டினாற் போலச் சிறுவன், இப்படியா கேள்விகளைப் பொலபொலவென்று கொட்டுவது?

ஆனால் சிறுவன், வெள்ளியங்கிரி மலைப் பள்ளத்தாக்கை மிகவும் சுவாரசியமாகப் பார்த்தவாறே சொல்லிக் கொண்டிருந்தமையால், அவன் பெரியவர் முகத்தில் முகிழ்த்த கோபக் கனல்களைப் பார்க்கவில்லை!

சற்றே பார்த்திருந்தால் …!!! சிரசாதி பாத பஸ்மத்துக்கு ஆளாகி இருப்பான்!

உயிர் மீண்ட படலம்!

ஏதோ சிறுவனுக்கு அது நல்ல காலம் போலும், சற்றுக் குரலைத் தணித்துக் கொண்ட பெரியவர், பழனிச்சாமியின் அனுபூதிகளைத் தொடர்ந்தார்.

“உடனே அந்தப் பிராண யோகினி தேவதையும் தம் துணை யோகினிமார்களிடம், ‘இவரைத் திரும்பவும், பாரதப் பூமியில், வெள்ளியங்கிரியில் “மார்க்கண்டேயச் சுனை” அருகிலே விட்டு விடுங்கள்! இவரது தந்தையார் வெள்ளியங்கிரிச் சிவபெருமானுடைய பரம பக்தர்! எப்படியும் இவரைத் தேடிக் கொண்டு வெள்ளியங்கிரிக்கு வந்து விடுவார்! அவர் வருவதற்கு முன் இவரை அங்கே கொண்டு போய் விட்டு விடுங்கள்!” என்று ஆணை பிறப்பித்திட, இதெல்லாம் அங்கிருந்த பழனிச்சாமிக்கு நன்றாகவே கேட்டது!

ரிஷபாயன கோமுகம்
ரிஷிவந்தியம்

ஆனால் சிறுவனுக்கோ இதில் (அவனுக்கெனத்) தென்பட்ட ‘நெருடல்கள்’ கொஞ்சமும் பொறுக்கவில்லை!

“அதெப்படி வாத்யாரே, பூலோகத்துல நம்ப மக்கள் தப்புக் கணக்குப் போடற மாதிரி, அங்கேயும் அதுவும் மரணம் சம்பந்தப்பட்டதுலேயும் தப்பு நடக்க அனுமதிக்கறாங்க! நீ மட்டும் அங்கே இருந்தேன்னு வச்சுக்கோ, அவ்வளவுதான்! சகல பஸ்மப் படலம்தான்! (பெரியவர் பெரிதாகச் சிரிக்கிறார்) ஆமாம் வாத்யாரே அங்கேயும் அப்பா பெயர் தெரிஞ்சுதான் காரியம் நடக்குதா, இதனாலத்தான் தப்பு வருதா, ஒண்ணுமே புரியலையே வாத்யாரே!”

பெரியவரின் உக்ர ஸ்தம்பம்

இப்போது பெரியவர் அவனைப் பார்த்து முறைத்தவாறே எழுந்தாரே பார்க்கலாம், அதி உக்ரத்தோடு! சிறுவன் நடுங்கிக் கொண்டு எழுந்து விட்டான்!

“நீ யாருடா தேவலோலத்துல தப்பு நடந்ததுன்னு சொல்றதுக்கு! ஒனக்கு என்ன யோக்யதை இருக்கு இப்படிச் சொல்றதுக்கு! உடனே போயி இந்தச் சுனைக்குத் தெற்கால பார்த்து நின்னுக்கிட்டு 1008 தடவை முட்டி போட்டுத் தோப்புக் கரணம் போட்டுட்டு வா, போ! போ!”

அது மட்டுமா, அவரே அவனைத் தரதரவென்று சுனைக் கரைக்கு இழுத்துச் சென்று விட்டார்.

“ஏண்டா தெய்வீகத்துலேயே தப்புக் கண்டுபிடிக்கறதுக்கா உன்னைக் கஷ்டப்பட்டு வளர்த்தேன்?”

நல்ல உஷ்ணமான பகலில், முழங்கால் தரையில் படுவதான தோப்புக் கரணமாம்! திடீரென்று வெயிலும் மென்மேலும் இவனுக்காகவே நன்கு பழுக்கலாயிற்று போலும்! தன் சரமாரியான கேள்விகளுக்காக, சூரிய மூர்த்தியும், குருவுடன் சேர்ந்து தன்னைத் தண்டிப்பதாய்ச் சிறுவனுக்குத் தோன்றியது.

“நாங்க யாரையும் தண்டிக்கறதுக்காக பூமிக்கு வரலையப்பா, அது எங்க தொழிலும் கிடையாது! இதுலேயும் தப்புக் கணக்குப் போடாதே!” – பெரியவரின் குரல் எங்கோ மெல்லியதாக எதிரொலித்தது!

கரணத்தில் புலப்படாக் காரணம்

சிறுவன் திரும்பிப் பார்த்தான். அதற்குள் அவர்  நெடுந்தூரம் சென்று விட்டார். இந்தத் தோப்புக் கரண அத்யாயம் முடிந்தால்தான் அவன் ஓரங்குலம் கூட நகர முடியும். இல்லாடிவிடில் ‘பிரப்பம் பழம்தான்!’

அப்பப்பா குருகுல வாசத்தில்தான் எத்தனை எத்தனை சோதனைகள்! அத்தனையும் முட்டியையும், முதுகையும் பதம் பார்த்து விடுகின்றனவே! எதற்கு? நல்ல “பதமான” குரு வித்துதனைச் சாசுவதமாகப் பெற்றுத் தரத் தானே!

சனீஸ்வரர் வணங்கும் பிள்ளையார்
ரிஷிவந்தியம்

கண்களில் நீர் ததும்பிட, அவன் தரையை மட்டும் குனிந்து பார்த்தவாறே தோப்புக் கரணம் இட்டான். இட்டான், இட்டுக் கொண்டே இருந்தான்!

ஆனால் தோப்புக் கரணம் இட, இட, அவன் மனதுக்குச் சற்றும் பொறுக்கவில்லை! பெரியவர் தண்டனையாகக் கொடுத்த தோப்புக் கரணத்திற்காக அவன் ஒன்றும் பொறுமவில்லை! “மேலுலகத்தில் தப்பு நடந்தது” என அவன் எண்ணியதால் இதனை அவனால் சற்றும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை, ஜீரணிக்கவும் இயலவில்லை!

தனக்குள்ளேயே பெரியவரைக் கேள்வி கேட்டவாறே உக்கி போட்டுக் கொண்டு வந்தான்.

எந்தக் கேள்விகளை வாயால் கேட்டு ‘மாட்டிக் கொண்டானோ’ அது இன்னமும் மட்டுப்படவில்லை! மாறாக கேள்வித் தன்மைகளின் “உக்கிரமே” மென்மேலும் பெருகியது. காரணம், தேவலோகத்தில் “தப்பு” நடப்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை! அல்லது அதற்கான “காரணங்கள்” அவனுக்குச் சரியாகப் புலப்படவில்லையா!

ஏனிந்த தப்பு ஐயா, மேல்வர உலகந்தன்னில்!

“ஏன் வாத்யாரே! மெத்தை மேலேந்து வரவங்க, அங்கே இருக்கறவங்க கூட தப்புச் செய்வாங்களா வாத்யாரே?” (மெத்தை – மேலுலகம்)

என்ன இது? எதுக்காக இந்தத் ‘தோப்புக் கரணப் படலம்’ என்று சிறுவனுக்கு இன்னமும் புரிபடவில்லையா என்ன? அவன் பாட்டுக்கு இன்னமும் “ஏதோ பெரியவர் தன் முன் இன்னமும் இருப்பது போலவும்” சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகின்றானே!

“ஏன் வாத்யாரே! திரிகாலமும், முக்காலமும் அவங்களுக்குத் தெரிஞ்சு என்னதான் பிரயோஜனம்? அவங்களுக்கெல்லாம் தண்டனையே கிடையாதா வாத்யாரே?” – என்று சிறுவன் மேல் கேள்வி கேட்டுக் கொண்டே, ஆற்ற மாட்டாமையால் தோப்புக் கரணத்தை, இயந்திர கதியாய் ஆக்கிக் கொண்டிருந்தான்!

விடாக் (கரணக் காரணக்) கண்டன்

எந்த வகைக் கேள்விகளுக்காக அவனுக்குத் தோப்புக் கரணப் படலமே தண்டனையாக வந்ததோ, அது ஒன்றும் குறைந்ததான அடையாளமே தெரியவில்லையே!

இவ்வாறாகப் பலவாறாகவும் எண்ணி, எண்ணியே அவன் மனம் அலை பாய்ந்தது! ஊஹும், அவனால் “மேலுலகத் தப்பையே” ஒரு சிறிதும் ஏற்க முடியவில்லை!

“தனக்கு என்ன ஆனாலும் சரி, மறுபடியும் 1000 முறை தோப்புக் கரணம் போடச் சொன்னாலும் சரி, இதற்குச் சரியான காரணத்தைப் பெறும் வரை, இதனை இப்படியே விடுவதில்லை” எனச் சிறுவன் ஒரு தீர்கமான முடிவுக்கு வந்தான்! தன் இந்த “விடாக்கண்ட முடிவு” பற்றி அவனுக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

இப்படி ஏன் நடந்ததாக அவன் எண்ணும் “மேலுலகத் தப்பு” அந்த அளவிற்கு அவனை மிகவும் பாதித்து விட்டதே, என்ன செய்வது?

ஸ்ரீமகாவிஷ்ணு ரிஷிவந்தியம்

1008 முறைக்கு மேல் தோப்புக் கரணம் இட்ட களைப்பில் அவன் தடுமாறிக் கீழே அமர்ந்தான்.

சர்வலோக வாசியார்!

இப்போது, பெரியவர் சிரித்துக் கொண்டே, திடீரென்று அவன் முன் வந்தமர்ந்தார்!

ஆனால், அவரைப் பார்த்துப் பேசும் நிலையிலா அவன் இருந்தான், 1008 முறை தோப்புக் கரணம் இட்ட களைப்பில், அவன் விழிகள் வெளியில் பிதுங்கி இருந்தனவே! பார்ப்பதெல்லாம் பலப் பலவாக அவனுக்குத் தெரிந்தன. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் அவன் தோப்புக் கரணம் இட்டானே!

ஏதோ பெரிதும் களைத்த நிலையில் தன்னிலை அறியாது இருந்த சிறுவன்…

…. திடீரென்று பெரியவரிடம் ஓர் அதிசயத்தைக் கண்டான். “கம கமவென்று” அவர் உடலில் கஸ்தூரிச் சந்தனம் கலந்த தெய்வீக நறுமணம் தவழ்ந்தது! கை, கால்களில் மஞ்சள் பூசி இருந்தது!

சிறுவனுக்கு “என்ன நடந்ததென்று” புரிந்து விட்டது.

“ஏதோ கோபத்தில் தன்னை விரட்டும் சாக்கில், ஒன்றரை மணி நேரம் ஏதோ விண்ணுலகத்திற்குப் போய் வந்துள்ளார்! இதற்குத்தான் இந்த தோப்புக் கரண குருவிளையாடலோ?”

கொஞ்சம் இருடா ஒரு தேவலோகத்து callஐ attend பண்ணிட்டு வர்றேன்” என்று கூறிப் பெரியவர் அடிக்கடி மறைவதை அவன் பார்த்திருக்கிறான்.

“இத பாருடா வேற லோகத்துப் போகணும்னா அங்கே இருக்கற சித்தர்கள், மஹரிஷிங்களோட பேசணும்னா, அதுக்குன்னு நிறைய வடிவம் எடுக்கணும், யோகம் பயிலணும், இதை நீ நேரா பார்த்தா பயந்துடுவே! இதையெல்லாம் நல்ல பக்குவம் அடைஞ்சுத் தான் பார்க்க முடியும்! அதுக்குன்னு விசேஷமான நேத்திர சக்தி தேவை!” என்று பெரியவர் அடிக்கடி சொல்வதுண்டே!

ஏனிந்த லீலை ஐயா, சிறுவன் என்னிடத்தில்

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் ரிஷிவந்தியம்

இப்போது பெரியவர், “அவனுடைய சிந்தனைக் கீற்றைப்” பிடித்துக் கொண்டார்.

“ஏண்டாப்பா, நாங்க வேற லோகத்துக்கு போய்ட்டு வர்றதை எல்லாம் “கஸ்தூரிச் சந்தன வாசனை, கஸ்தூரி மஞ்சள் வாசனையை” வச்சுக் கிட்டுக் கண்டு பிடிக்கிறவனுக்கு, “மேலுலகத்துல தப்பு நடக்குமா இல்லையான்னு” தானே, சுயம்புவாத் தெரிஞ்சுக்க முடியாதா என்ன?”

சிறுவனும் விட்டு விடுவதாயவில்லை!

“நீ மேலே ஏதேதோ லோகத்துக்குப் போகணும்கறதுக்காகப் பொய்க் கோபத்துல, என்னைத் தோப்புக் கரணம் போட வச்சு, முட்டியைப் பேர்த்து, நானும் மயக்கத்துல சாஞ்சு… இந்த லீலை எல்லாம் எதுக்கு வாத்யாரே! எதுக்கும் இனிமே பிளெய்னா இருந்துடு வாத்யாரே!”

“அடிசக்கை! உனக்கு எப்படிடா திடீர்ன்னு இந்த மாதிரி அதீத தைரியம் வந்துடுச்சு! இனிமே நீ புத்திசாலித்தனமாப் பொழச்சுக்குவே!” எனக் கூறி ‘ஷொட்டு’ கொடுத்தார் பெரியவர்.

தோப்புக் கரணம் இட்டதில் அதுவும் அனைத்தும் பன்மடங்காய்ப் பெருகும் வெள்ளியங்கிரிப் புண்ணிய பூமியில் தோப்புக் கரணம் பூமியில் தோப்புக் கரணம் இட்டு விளைந்த புண்ய சக்தியால், அவனுக்கு இப்போதுதான் “மஹா தைரியம்” வந்து விட்டதே! எனவே, தனக்கே உரிய பாணியில் சற்றுக் கூடுதலாகவே ‘பினாத்தலானான்’ போலும்!

காரணத்தான் காட்டிய காரணத்தால்…

பெரியவர் தொடர்ந்தார்.

“ஏண்டா, நான் எது சொன்னாலும், செய்யச் சொன்னாலும், செஞ்சாலும் ஆயிரம் காரணம் இருக்குன்னு சொல்லி இருக்கேன் தானே! நீ தான் பொம்பளையாட்டம் தலையைக் குனிஞ்சுக் கிட்டே தோப்புக் கரணம் போட்டியே! இதனால உனக்கு முன்னால என்ன நடக்குதுன்னே தெரியலையே! இதோ பாரு!”

பெரியவர் எதிரே கையைக் காட்டிட…

அங்கே மலை வடிவமே “ஹேரம்பப் பிள்ளையார்” வடிவில் ஜோராக காட்சி அளித்தது!

“இன்னிக்கு சங்கட ஹர சதுர்த்தியும், புதனும் சேர்ந்த வர நாள்! இந்த அமிர்த நேரத்துல இந்த “வெள்ளைப் பிள்ளையார் மலை” தரிசனத்தைப் பார்த்துப் பூஜை பண்றவங்களுக்கு, குரு கடாட்சம் கேட்காமலேயே வந்து பொழியும்!”

அக்னி தீர்த்தம் ரிஷிவந்தியம்

தோப்புக் கரணத்தில் திளைக்கும் திவ்யமான யோகசக்திகள்

“அப்படீன்னா ஏன் வாத்யாரே முட்டி போட்டுத் தேய்க்க வச்சே?”

தெய்வீகத்தில் “அப்படீன்னாவே” வரக் கூடாது ராஜா!” நீ “முட்டிகளைத் தரையில் மாற்றி மாற்றி வைத்துத் தோப்புக் கரணம்” போட்டது – இந்த சங்கட ஹர சதுர்த்தி நேரத்துல செவ்வாய் ஹோரை நேரத்துல பூமா தேவியே செய்யறப் பிள்ளையார் பூஜை நேரம்! இதுக்குப் பலாபலன்கள் ஜாஸ்தி! முட்டாள்களுக்கும் நல்ல மனத் தெளிவு கிடைக்கும்! நல்ல ஞாபக சக்தி நிலைக்கும்!”

சிறுவன் தனக்குத் தானே நன்றாய்ச் சிரித்துக் கொண்டான்.

“எதிலேயும் தெளிவு கிடைச்ச உடனேயே வாய் ஓரத்துல தனக்குத் தானே சிரிப்பு வரும்கறது அங்க லட்சண சாஸ்திரம்டா கண்ணு!”

பெரியவர் நடுவில் இவ்வாறு ஒரு காரண ‘ஷாட்’ கொடுக்கவே, சிறுவன் நன்கு வாயாரச் சிரித்தான்.

இப்படி “முட்டி போட்டுத்” தோப்புக் கரணம் போடறதுக்கு “சிரபாத மூல யோகம்னு” பேரு! ஆனா, பிள்ளையாரை நெனச்சுக் கிட்டே, குருவை நெனைச்சுக் கிட்டே, தோப்புக் கரணம் போட்டிருந்தா, பெரிய விசேஷம்தான்! இல்லாட்டி, “அங்க எப்படித் தப்பு நடக்கலாம்னு, இங்க எப்படித் தப்பு நடக்கலாம்னு” கேட்டுக் கேட்டுத் திட்டிக் கிட்டே தோப்புக் கரணம் போட்டிருந்தா என்ன பண்ண முடியும்? தாகமுள்ள குதிரையைத் தண்ணிக் கிட்டே கூட்டிக் கிட்டுத்தான் போக முடியும், தண்ணியைக் குடிக்கவா வைக்க முடியும்?”

பெரியவர் கண்ணைச் சிமிட்டியவாறே சிரித்தார்.

சிறுவன் வழக்கம் போல் “சிக்கிக் கொண்டவனாய்த்” தலையைக் குனிந்து கொண்டான்! இது அவனுக்கு வழக்கமான, மிகவும் பழக்கமான ‘குருகுல வாச இலக்கணம்’ தானே!

அந்தந்த லோகத்துத் தெய்வீகச் சட்ட திட்டங்கள்!

“ஒண்ணு தெரிஞ்சுக்கடா ராஜா! எங்கே தப்பு செய்தாலும் நிச்சயமாத் தண்டனை உண்டு! ஆனா இது தப்பு, அது சரின்னு யாரு முடிவு பண்றது? நீ சுட்டிக் காட்டறது இன்னொரு லோகத்துல நடந்த வைபவம்! அதுவும் சத்குருவோட அருள்னால அறிஞ்சது! தானா தெரிஞ்சுக்க முடியாத பிற லோகத்து அனுபூதி! இது தேவலோக நிகழ்ச்சி! இதுக்கு நீ எப்படி பூலோக நியதிகளை வச்சு, ‘அது தப்புன்னு’ முடிவுக்கு வர முடியும்?”

சிறுவனுக்கு இப்போதுதான் சற்றே புரியத் தொடங்கியது!

திருமலை

“இதுல ஒரு விஷயம் எல்லாருக்குமே புரியாது! புரிஞ்சுக்க முயற்சி செய்யறதும் கிடையாது. இதைத் தெரிஞ்சுக்கறதுக்கு நல்ல ஞானம் வேணும்! என்ன அது?”

நடப்பதெல்லாம் நாராயணன் செயலே!

பெரியவர் சற்றே வானத்தைப் பார்த்தார். மேலே கருட தரிசனம் தெரியவே, எழுந்து நின்று சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிடவே, சிறுவனும் இதைப் பின்பற்றினான்!

“இதோ இந்த கருடன் நரசிம்ம லோகத்துக்குப் போகுது! இப்ப இது பூலோக கருட பட்சிக் குல நியதிக்கு ஆட்படாது! சாட்சாத் நாராயண வாகன தரிசனமே ஒரு நல்ல சகுனம் தானே!”

“இதனால என்ன புரிஞ்சுக்கணும்னா, எது நடந்தாலும் அது இறைவன் செயலே! நடப்பதெல்லாம் நாராயணன் செயல்தான்! இது மிகவும் ஒரு எளிமையான வாக்கியம்தான்! ஆனா புரிஞ்சுக்கறதுக்கு நிறைய ஞானம் வேணும், சத்குருவோட அருள் நிச்சயமா வேணும்! தேவலோகத்திலேயும், சொர்க்கத்திலேயும், நாக லோகத்திலேயும், பூலோகத்துலேயும் எங்கேயும், எப்பவும், எப்படியும் நடப்பதெல்லாம் நாராயணன் செயல்தான்!”

ஞானம் வரும் வரை கர்மவினை விளக்கங்களே காரணமாகும்!

“அப்படீன்னா…..!” என்று சிறுவன் குறுக்கிட்டான்!

“அப்படீன்னாங்கற கதையே தெய்வீகத்துல கிடையாது அப்பனே! இதனாலத்தான் “அப்பவே சொன்னேன் நடப்பதெல்லாம் நாராயணன் செயல்தான்னு!” இது ரொம்ப ரொம்ப எளிமையான வாக்கியம்தான் ராஜா! ஆனா, புரிஞ்சுக்கறதுக்கு நிறைய ஞானம் வேணுமே! என்ன செய்யறது?”

சிறுவன் விடவில்லை, “அப்படடீன்னா…, நல்லது, கெட்டது எல்லாம் அவங்கவங்க மனசுல படறதுதானா! அந்தந்த பூமியை, சூழ்நிலையைப் பொறுத்து நல்லது, கெட்டதுன்னு தரம் பிரிக்கிறாங்க அவ்வளவுதானா!”

“சபாஷ், சரியாச் சொல்லிட்டியே! இதுதான் உண்மை! இனிமே அந்த எம லோகத்துல தப்பு ஏன் நடந்ததுன்னு நீ கேட்கக் கூடாது சரியா?”

சிறுவன் தத்தளித்தான்! “தான் மடக்கப்பட்டு” விட்டதை அறிந்தான்.

“அடியேன் ஒண்ணும் உன்னை மடக்கலை ராஜா! நடப்பதெல்லாம் நாராயணன் செயல்னு அறியறதுதான் உத்தம முக்தி நிலை! அது அவ்வளவு சீக்கரம் வந்துடுமா என்ன? இனிமே உன் கிட்டே யாராவது முக்தி, மோட்சம்னா என்னன்னு கேட்டா, நடப்பதெல்லாம் நாராயணன் செயல்தான் என்று அறிஞ்சுக்கற நிலைதான் முக்தி, மோட்சம்னு தெளிவா, தைரியமாச் சொல்லு!”

“உதாரணமா, ஒரு விபத்து நடக்குதுனு வச்சுக்க, இதுல சில பேரு பிழைக்கறாங்க, சில பேரு பலத்த காயம் அடையறாங்க., இந்த நிகழ்ச்சியை எப்படிச் சொல்ல முடியும்? இதுக்கு பூர்வ ஜன்ம வினைகள்தான் காரணம்னு உண்மையைச் சொல்லும் போது, மனசு ஏத்துக்கும்! இதுவும் இறைச் சங்கல்பத்தாலேயே நடந்ததுன்னு சத்தியத்தைச் சொல்லும் போது, மனித மனம் ஏற்காது! இதையும் இறைவன் செயல்னு சொன்னா என்ன ஆகும்? நல்லா யோசிச்சுப் பாரு!”

“புரியுது வாத்யாரே! ஆனா இதைப் புரிஞ்சுக்க முடியாதவங்களுக்கு….”

“சத்குருவோட இருந்தாப் புரியும்! அதுவும் சத்குருவோட இருந்தாக் கூட பல பேருக்கு ரொம்ப வருஷங்கள் கழிச்சு லேட்டாத்தான் புரியுது?”

பெரியவர் சற்று நிறுத்திடவே, சிறுவனுக்குச் சிரிப்புத் தாளவில்லை!

“லேட்டாப் புரியறதும் இறைவன் செயல்தானே வாத்யாரே!”

சிறுவன் இப்போது பெரியவரிடம் சற்று “முனைந்து நுழைந்து” பார்த்தான்!

“கொஞ்சம் ஞானம் வந்துடுச்சுன்னா உடனே கோலத்துக்குள்ளாற புகுந்திடுவியே!”

இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்!

“இந்த ஞானத்தைக் கொடுத்த சத்குரு பியூஸைப் பிடுங்குவது போல, இருக்கற ஞானத்தையும் பிடுங்கி விட்டால் என்னடா செய்வாய்?”

சிறுவன் “கப்சிப்” ஆகி விட்டான்!

“ஆகையினால் நடப்பதெல்லாம் நாராயண செயல்னு காட்டறதுக்கு இறுதி வரை ஒரு சத்குரு இருந்தாகனும்!”

பெரியவர் எழுந்து நடக்கலானார்!

சுப முகூர்த்தம்

தற்காலத்தில் சுபமுகூர்த்த நாட்கள் சரிவரக் கணித்து அளிக்கப் பெறாமையால் சுபமற்ற நேரத்தில் கல்யாண வைபவங்கள் நிகழ்ந்து, தம்பதிகளுக்குள் பலத்த காலஆலவிட தோஷங்கள் சேர்ந்து, திருமண ஆரம்ப வாழ்க்கையிலேயே பலத்த சோதனைகள் ஏற்படுகின்றன.

வளர்பிறையில் தாம் திருமண முகூர்த்தங்கள் வைப்பது சிறப்புடையது என்று அறிந்தும், பஞ்சாங்கங்களில் தேய்பிறைகளிலும், கூடா நாட்களிலும் (பிரபலாரிஷ்ட யோக நாட்கள்), சூன்ய திதிகளிலும் முகூர்த்த நாளை வைத்து வருகின்றார்கள். தக்க சத்குருவே எத்தகைய கால தோஷங்களின் நிவர்த்திக்கான வழிகளையும் அளித்து விதிகளையும் மாற்ற வல்லார். ஆனால் கலியுகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உடையோர் மிகவும் அரிதாக இருத்தலினால், சத்குருவும் கலிகாலத்தில் விதி நியதிகளை மாற்ற முற்படுவது கிடையாது!

கரிநாள் போன்று தனியன் நாள் என்றும்  உண்டு. கரிநாட்கள் 34ம், தனியன் நாட்கள் 24ம் உள்ளன. இவற்றில் சுபமுகூர்த்த நாட்கள் அமைதல் கூடாது. மேலும், எந்த லக்னத்தில் தாலி கட்டும் வைபவம் நிகழ்கின்றதோ, அந்த லக்னத்திற்கு 5, 7, 8ம் இடங்கள் மங்களகரமாக இருத்தல் வேண்டும்.

கௌரீ பஞ்சாங்க முறையில் லாபம், தனம், சுக நேரத்தில் சுபமுகூர்த்தம் அமைவது சுப மங்கள சக்திகளை நன்கு விருத்தி செய்யும். ஆனால், தற்காலத்தில் பலரும் கௌரீ பஞ்சாங்க நியதிகளை எவரும் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. இதனால் இவ்வரிய கலை மறைந்து வருகிறது. இதனால் கலியுக மனிதச் சமுதாயத்திற்கே பேரிழப்பாகும்.

அந்தந்தச் சுப ஹோரைகளில், அந்தந்த நாளுக்கான பகை ஹோரை இல்லாது பார்த்துக் கணிக்க வேண்டும். உதாரணமாக, சுபமுகூர்த்த நாள் புதன்கிழமை எனில், புதனுக்குப் பகையான சந்திர, குரு ஹோரையில் முகூர்த்த நேரம் அமைவது கூடாது. இதனைப் பலரும், பஞ்சாங்கம் கணிப்பவர்களும் கூட சரியாகக் கணித்துப் பார்க்காது விட்டு விடுகின்றார்கள். ராகு காலம், எமகண்டம் தவிர குளிகை, காலன், அர்த்தப் பிரகணன் போன்ற நேரங்களிலும் சுபமுகூர்த்த நேரம் அமைதல் கூடாது.

கல்யாணத் தேதியின் எண் அம்சமும் மாப்பிள்ளை, பெண்ணுக்கு இருவருக்கும் ஏற்றவாறு அமைந்து வருதல் வேண்டும்.

ஒற்றைக் கண் நாட்கள், குருட்டு நாட்களில் சுப முகூர்த்தம் அமையக் கூடாது. முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டிய விஷ நேரமெனப்படும் தியாஜ்ய நேரத்தைப் பலரும் பார்ப்பதில்லை, லக்ன தியாஜ்யம், நட்சத்திரத் தியாஜ்யம், வாரத் தியாஜ்யம் போன்று உண்டு. இவை யாவும் பஞ்சாங்கத்தில் அளிக்கப்பட்டுள்ள எளிமையான காலக் குறிப்புகளே!

“பிரபலாரிஷ்ட (கூடா) நாட்களில் – குறித்த யோக – நட்சத்திரக் கூட்டமைப்பு நாட்களும் தவிர்க்கப்பட வேண்டியவையே என அறிந்தாலும், பஞ்சாங்கத்தில் இந்நாட்களைச் சுப முகூர்த்த நாட்கள் சேர்ப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். முகூர்த்த லக்னத்தின் இடங்களைக் கொண்டு சில வகைக் கத்தரி வகைத் தோஷங்கள் அமையும், இவையும் சுபமாகாது. இதோடு திதி கண்டாந்தம், நட்சத்திரக் கண்டாந்தம், ராசி கண்டாந்தம் என வரும் நாட்களும் கூடாது.

சுக்கிரனும், செவ்வாய் கிரகமும் முகூர்த்த லக்னத்தின் எட்டாம் இடத்தில் இருப்பது பல நியதிக் கூறுகளுக்கு உரியதாகும். ஆறு அம்சங்களை வைத்து முகூர்த்த லக்னத்தை வகை பிரிப்பார்கள். இதையும் நோக்கிட வேண்டும். இதில் சில நட்சத்திர நாட்களும் தோஷம் நிறைந்தவையே, இதோடு தாராபலன், சந்திர பலன்களும் மிகவும் முக்கியமானவையாகும். மேலும் ஒவ்வொரு மாதாந்திர வாரியாக, சுப முகூர்த்தத்திற்கான நல்ல திதிகள், நட்சத்திரங்கள், லக்னங்களும் உண்டு.

ஆமாம், இவற்றை எல்லாம் பார்த்தால் ஒரு வருடத்திற்கு ஒரு முகூர்த்த நாள் கூடத் தேறாதே என்று தோன்றும், உண்மையே! இதற்காகத்தான் ஒரு தக்க சத்குருவை நாடி, அவர் வைத்துத் தரும் நாளில் சுபமுகூர்த்தத்தை நடத்திடுதல் நன்று, கலியுகத்தில் சத்குரு அளிக்கும் முகூர்த்த நேரத்தில்தான் சகல தோஷங்களும் அகலும், தோஷ நிவர்த்திக்குரிய பல பரிகாரப் பூஜைகளும் தக்க முறையில் அளிக்கப் பெறும்.

அன்னதானத்தில் பலவகையான கால தோஷங்களும் நிவர்த்தியாக நிறைய வழி முறைகள் உண்டு. சத்குரு அளிக்கும் முகூர்த்தத்திலும் பல்வகைகள் உண்டு. அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து இது அமைவதாகும். பலரும் குறித்த பல ஜாதகங்களை இணைத்துச் சத்குருவிடம் அளிக்கையில், இதிலும் அவரவருடைய விருப்பமும் தொக்கி நிற்கிறது என உணர்க! இவருக்கு இவரே என விஸ்வாமித்திரரும், வசிஷ்டரும் சீதைக்கு, ராமரை நிர்ணயித்தது போல, சத்குரு நிர்ணயிப்பதில் தான் சத்குருவின் ஆசிகள் அருட் பூர்வமாகவே நிறையும். இதுவும் அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பரிபாலிக்கப்படும்.

நரசிம்ம ஸ்தம்பம்

ஆவணி மூலத்தில் நரசிம்ம ஸ்தம்ப வழிபாடு – ஆவணி மூல நாள் – 12.9.2005

அத்தாழநல்லூர் ஸ்ரீஆதிமூலப் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீநரசிம்மர் தோன்றிய நரசிம்ம ஸ்தம்ப மஹிமை – அட்டைப் பட விளக்கம்

திருநெல்வேலி – அம்பாசமுத்திரம் மார்கத்தில், வீரவநல்லூரில் இறங்கிக் கொள்ள வேண்டும், வீரவநல்லூரில் இருந்து திருப்புடைமருதூர் செல்லும் வழியில் அத்தாழநல்லூர் உள்ளது,

மூல நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபட வேண்டிய ஆயுட் காலத் தலங்களுள் அத்தாழநல்லூரும் ஒன்றே! ஆவணி மாதத்தின் மூல நட்சத்திரத் திருநாளில், திருச்சி மலைக் கோட்டையில், தெப்பக் குளத்தையும் சேர்த்து, மலையைக் கிரிவலமாக வந்து மலைக் கோட்டைப் பிள்ளையாரை வழிபடுதல் – வாழ்க்கையில் இழந்து விட்ட நற்பொருளைப் பெற உதவும் – விசேஷமான வழிபாடு ஆகும்.

ஆவணி மூலத் திருநாளில். திருமகள், உக்ர நரசிம்மருக்கு பானகம் படைத்து, உக்ரம் தணித்து, ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்ம அவதாரிகைக்கு அருள்வழி கூட்டியமையால், ஆவணி மூலத்தில் நரசிம்மர் வழிபாடும் முக்கியத்துவம் பெறுகின்றது.

மூலம் என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. மூல ஸ்தானம் என்பது இறைவன் வீற்றிருக்கும் கருவறையன்றோ! மூல ஸ்தம்பமாகிய கொடிக் கம்பமும் ஆத்ம சக்திகளின் மூலத்தைக் குறிப்பதே! முதுகெலும்பையும், அனைத்து எலும்புகளின் “மூல என்பு” என்றே உரைக்கின்றார்கள் அல்லவா!

ஓவ்வொரு நட்சத்திரமும் தோன்றிய மூலக் காலமும் உண்டு. ஆவணி மாதத்தில் தோன்றியதே மூல நட்சத்திரமாகும். நட்சத்திர வாக்கியத்தில், “மூலம்” என்பதற்கு “மூலாதாரத் தூண்” என்ற பொருளும் உண்டு.

நடுக்கமாய் உள்ளவற்றில் ‘நடுக்கத்தை’ அகற்றிச் சாசுவதமாக, நிலைத்து நிற்க உதவுபவையே ‘கம்பங்கள்’ (ஸ்தம்பங்கள்) ஆகும். நடுக்கமாகிய பயத்தை, பீதிகளைப் போக்கி நல்வாழ்வை அளித்துக் காப்பவரே கம்பஹரேஸ்வரர் ஆகிய சரபேஸ்வர மூர்த்தி ஆவார் என நாமஹிவாம்.

‘நரசிம்ம ஜெயந்தி’யானது நரசிம்மரின் அவதாரப் புலன்களை உணர்த்தும் நன்னாளாகும். பிரகலாதனுக்கு நரசிம்மர் காட்சியளித்த நேரமே அவதார ஜயந்தி தினம் என்பதன்று. எங்கும் நிறைந்திருக்கும் பெருமாளப்பர், நரசிம்மராய், மூல நட்சத்திர நாளில் பிரகலாதனுக்கும், ஏனைய பக்த கோடிகளுக்குமாய்க் காட்சி தந்தார்.

மூலத்துறை ஸ்ரீயோக மீனாக்ஷீ

19வது நட்சத்திரமாகத் துலங்கும் மூல நட்சத்திரம் சுப முகூர்த்த நட்சத்திரங்களில் ஒன்றாகும். ஆஞ்சநேயருக்கு உரித்தானதும், நால்வேத சக்திகளைப் பூண்டதும் மூல நட்சத்திரமே! யோக மீனாக்ஷீயாய் அங்கயற்கண்ணி தேவி மூலப் பரம்பொருளாம் சோமசுந்தரரை, யோகேஸ்வரச் சுந்தரராய்ப் பூஜித்ததும் மூல நட்சத்திரத் தினத்தில்தான்.

“ஆண் மூலம் அரசாளும்…” என்ற சொல் வழக்கில், “பெண்களுக்கு மூல நட்சத்திரம் அமைதல் கூடாது” என்று தவறான அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. உத்தம ரிஷிப் பத்னியர்கள் பலரும் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர்களே! “ஆண் மூலம் அரசாளும்” என்பதில், உயர் அரசுப் பதவிக்கான பேரம்சங்கள் மூல நட்சத்திரக்காரர்களுக்கு ஜாதக ரீதியாகப் பூரித்து நிறையும் என்பதாகும். உயர் நிலைப் பதவி அம்சங்கள் இருந்தாலும், அவரவருடைய கர்ம வினைகளின் விளைவுகளையும் இதில் கணித்தே முடிவு செய்ய வேண்டும்.

“பெண் மூலம் நிர்மலம்”

அம்பிகை மகத்தான நிர்மல சக்திகளை அளிப்பவள். கர்ம மலங்கள் அற்ற தூய நிலையே நிர்மலம் என்பதாகும். “பெண் மூலம் நிர்மலம்” என்பதே வேறு மாதிரியாகி மருவித் தவறான பொருளுடன் தற்போதைய வழக்கிற்கு வந்து விட்டது.

“நிர்மலம்” எனில், மாசு மருவற்ற புனிதப் பரல்களை அளிக்கும் தேவ சக்திகள் நிறைந்தது என்பது பொருள். மூல நட்சத்திரத்தில் பிறக்கும் பெண்கள், நல்லவிதமான நிர்மல சித்சுத்தியை அடைந்து, பிறருக்கும் அளிக்க வல்ல நல்வரம் பூண்டவர்கள் எனப் பொருளாகும்.

அதாவது நிர்மல சுத்தியை அளிக்கவல்ல யோகசித் சக்திகளை மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே பூண்டிருப்பர். ஆனால் இவற்றை வாழ்க்கையில் நன்கு பயன்படுத்திச் சீர்மையில் செறிதல் வேண்டுமே!

எனவே, நட்சத்திரங்களைப் பற்றிய பொதுப்படையான விளக்கங்களை படித்துக் குழப்பிக் கொள்ளாது, இவற்றுக்கான விளக்கங்களையும் தக்க சத்குரு அல்லது தாமறிந்த உத்தமப் பெரியோர்கள் மூலம் பெறுதல் வேண்டும்.

மூலம் என்பதற்கு, ஸ்தூபி, ஸ்தம்பம், ஸ்திரமானது எனப் பொருளும் உண்டு. இதனால் தான் மூல நட்சத்திரத் தலமாகிய மப்பேடு சிவத்தலத்தில் நவவியாகரண பலிபீடமே ஸ்தூபம் போல் சிறு சதுர மண்டபப் பரலாய் அமைந்துள்ளது.

எனவே ஸ்தம்ப, ஸ்தூப சக்திகள் நிறைந்தது, மூல நட்சத்திரமே! இதனால் தான் ஆலயங்களில் கொடிக்கம்பம், ஸ்தூபி போன்றவற்றிற்கான உற்சவங்கள், துவஜாரோகண வைபவங்களையும் மூல நட்சத்திர நாளில் வைப்பர்.

மூல நட்சத்திர மண்டலமும் நிறையத் தூண்களைக் கொண்டிருக்கும், மொத்தத்தில் மூலத்திற்கும், தூணுக்கும், ஸ்தூபிக்கும் நிறைய தெய்வீகப் பிணைப்புகள் உண்டு. இதனால்தாம் மூல நட்சத்திரத்திற்குரிய ஆஞ்சநேயரும் பல சிவாலயங்களில் தூணில் தோன்றிய நரசிம்ம அவதாரிகைக்கும், மூல நட்சத்திரத்திற்கும் தெய்வீகப் பிணைப்புகள் நிறையவே உண்டு.

மூல நட்சத்திரத்தில் மூல நரசிம்ம தரிசனம்

எனவே, இறைவனே அளித்த திவ்யப் பிரகாசமான நேத்திர சக்திகளைக் கொண்டு, நரசிம்மரை மானுடக் கண்களால் பக்த கோடிகள் தரிசிக்க முடிந்த காலமே மூல நட்சத்திரத் தினமாகும். நரசிம்ம மூர்த்தி ஒரு தூணில் மட்டும்தான் தோன்றினாரா? இல்லை! இல்லை! எத்தனையோ ஸ்தம்பங்களிலும், தூண்களிலும் நரசிம்ம ரூபம் தோன்றி அருளியது.

“தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் விஷ்ணு மூர்த்தி!” எனப் பிரகலாதன் உரைத்திட, “இத்தூணில் இருக்கின்றாரா?” என ஹிரண்யன் கேட்டிட, “இத்தூணென்ன, எத்தூணிலும் யாங்கனும் இருப்பார்!” எனப் பிரகலாதன் வாக்களிக்க,

பதினெட்டிற் புலரும் நரசிம்மப் புலன்கள்

உடனே, நரசிம்ம மூர்த்தி அனைத்துத் தூண்களிலும் திரும்பிய இடமெங்கும் காட்சி தந்தார். இவ்வாறு பிரகலாதனுக்காக, நரசிம்மர். தூண்களில் காட்சி அளித்த மண்டபத்திற்கு “ஆவணி மூல மண்டபம்” என்று பெயர். இதில் 18 தூண்கள் இருந்தன. இன்றும் இந்த “ஆவணி மூல மண்டபம்” நரசிம்ம லோகத்தில் தரிசனத்திற்காக உள்ளது. ஆவணி மூல நட்சத்திர நாளில் சித்தர்களும், மாமுனிகளும், முப்பத்து முக்கோடித் தேவர்களும் இங்கு பிரம்மோற்சவம் கொள்கின்றனர்.

“ஆவணி மூல மண்டபத்தின்” பதினெட்டுப் பிரம்மாண்டமான தூண்கள் அனைத்திலும் ஆக்ரோஷமாய் நரசிம்மர் வெளிப் போந்ததைக் கண்டு அண்ட சராசரமே அதிர்ந்தது.

உக்ரத்தின் மிகுதியால் ‘நரசிம்ம அர்ச்சமே’, பிரபஞ்சமே தாங்க இயலாத அளவிற்கு ஆடியது! பதினெட்டு மூல ஸ்தம்பங்களை பூமியெங்கும் நிறுவி, நடுக்கத்தால் ஆடிய லோகங்களை அடக்கிக் கட்டுப்படுத்தினார்கள். அஷ்டத் திக்குப் பாலகர்களும், எட்டுத் திக்குகளிலும் 18 தூண்களாலான மண்டபத்தைக் கொண்டே பூவுலகைத் தாங்குகின்றார்கள்.

மனித தேகத்திலும் நவாம்சத் தூண்கள்!

இதை ஒட்டித்தான், ஒன்பது + ஒன்பது வகைத் தூண்களை, ஜீவதேக அமைப்பிலும், ஜாதகத்திலும் துவித நவாம்சமாக அமைத்து விளக்குகின்றார்கள். வாஸ்து லோகங்களிலும், 18 வகை ஸ்தம்பங்கள் உண்டு. இதனாலேயே கலியுகத்தின் நவீனக் கட்டிடங்களிலும் pillar foundation அமைகிறது.

நரசிம்மர் தோன்றிய 18 தூண்களும், 18 உக்ர ஸ்தம்பங்களாக அகில உலகெங்கும் தூல, சூக்கும வடிவுகளில் காட்சி தருகின்றன. இவற்றுக்கு “நரசிம்ம உக்ர ஸ்தம்பங்கள்” என்று பெயர். இதனால்தான் நரசிம்மரைக் “கம்பஹரி” என்று அழைக்கின்றார்கள். வருங்காலத்தில் சித்தர்களால் இவை உணர்விக்கப் பெறும்.

மாதங்களில் ஆவணிதான் மூலத் தூணாக விளங்குகின்றது. ஆவணி மாதத்திற்கும் மூல நட்சத்திர நாளே மூலமாகும். இதனால்தான் வாஸ்து சாஸ்திரப்படிப் புது வீட்டைக் கட்டுகையில், மூல நட்சத்திர நாளில் தூண்கள் அமைக்கப் பெறும். இவ்வாறாகப் பல மஹாத்மிய அனுபூதிகளால், ஆவணி மூல நட்சத்திர நாளில், தூணில் தரிசனம் தந்த நரசிம்மருக்கு மிகவும் சிறப்புடையதாகிறது.

அத்தாழநல்லூரில் அருளும் நரசிம்மத் தூண்

இவ்வாறாக நரசிம்மர் தோன்றிய உக்ர ஸ்தம்பங்கள் இரண்டு ஆந்திராவில் அஹோபிலத் தலத்தில் உள்ளன. எகிப்து, பென்சில்வேனியாக, கியூபா எனப் பல நாடுகளிலும், உலகப் பகுதிகளிலும் இவை உண்டு. கேட்பதற்கே சற்றே ஆச்சரியமாக இருக்கிறதா! சனாதன நாடாக, உலகம் முழுதும் ஒரே நாடாகத் துலங்கிய தொன்மையான யுகத்தைச் சற்றே நினைந்து பாருங்களேன்! ராமராஜ்யம் உலகெங்கும் விரிந்து, பரந்து, நிறைந்து தானே இருந்தது.

மூல நட்சத்திரமும், விஷ்ணுபதி நன்னாளும், ஆவணி மாதம் கூடிய நாளில் பெருமாள் கூட்டிய இறை லீலைகள் எண்ணற்றவை! எனவே, ஆவணி மாத மூல நட்சத்திரமும், விஷ்ணுபதியும் கூடும் நாள் ஆயுளில் எப்போதோ ஒரு முறை வருவதால், இந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு, வாழ்வில் பெறுதற்கரிய பாக்கியமான நாளாக “நரசிம்ம வழிபாட்டில்” திளைத்திடுங்கள்!

இத்தகைய சிறப்புகள் நிறைந்த ஆவணி மூல நட்சத்திர நாளில், அத்தாழநல்லூர் ஸ்ரீஆதிமூலப் பெருமாள் ஆலயத்தில் உள்ள நரசிம்ம (உக்ர) ஸ்தம்பத்திற்குக் கோரோஜனை, அத்தர், கஸ்தூரி, புனுகு, ஜவ்வாது நிறைந்த (கைகளால் அரைத்த) சந்தனக் காப்பு இட்டுப் பூச்சரங்கள் இட்டு அலங்கரித்து, வழிபடுவது குடும்பத்திற்கு நல்ல க்ஷேமங்களை அருளும்.

பெற்றோர்களைப் பற்றி உருகி வாழும் பிள்ளை, பெண்களுக்கு நன்னிலை பெற உதவும் பூஜை, பகைமை, பழி, அவதூறுகளுடன் வாழ்வோரும், கணவன் வீட்டில் துன்பப்படுவோரும் நல்ல மாற்றங்களைப் பெற உதவும் வழிபாடு!

குடும்பத்தில் பிரிவு, மரணம், நஷ்டம் போன்றவை காரணமாக ஏற்பட்டுள்ள பெரு இழப்பில், இருந்து மீள முடியாது வேதனைகளில் உழல்வோர் ஜீவசக்திகளுடன் மீண்டு, நற்கடமைகளை ஆற்றிடப் புத்துண்டர்வுடன் வாழ உதவும் பூஜை!

பதினெட்டுப் படிகளுடன் அத்தாழநல்லூர் நரசிம்ம ஸ்தம்பம்

இங்கு, அத்தாழநல்லூரில் தாமிரபரணி ஆற்றரங்கரையில், 18 படிகளின் மேல் உள்ள மண்டபத் தூணே நரசிம்ம உகர ஸ்தம்பமாக வழிபடப் பெறுகிறது.

இத்தூணில் நரசிம்ம அவதாரிகைப் புலன்கள் அன்றும், இன்றும், என்றுமாய் அருள்கின்றன., இதே போன்று, அஹோபிலத் தலத்திலும் வேறு விதங்களில் “நரசிம்ம ஸ்தம்பங்கள்” உண்டு. இவற்றுள் ஒரு சில கலியுகத்தில் மானுடக் கண்களுக்குப் புலப்படும்.

ஆதிசங்கரருக்கு முதலில் ஸ்தம்பப் பூர்வமாகவும், பிறகு அர்ச்ச வடிவிலும்தாமே ஸ்ரீநரசிம்மர் காட்சி தந்து அருளினார். ஆவணி மூல நட்சத்திரந் தோறும் அத்தாழநல்லூர் பெருமாள் ஆலயத்தில் நரசிம்ம ஸ்தம்பத்திற்குத் தக்கக் காப்புகளை இட்டுப் பூச்சரங்களைச் சூட்டி, அபிஷேக ஆராதனைகளுடனும், பானக நைவேத்யம், ஏழைகளுக்குப் பானக தானத்துடன் வழிபடுவதானது,

குடும்பத்தை, தொழிலை பாதித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற தோஷங்களை, சாபங்களைப் போக்கி, அமிர்த சக்திகள் நிறைந்த நல்வரங்களைத் தந்து காக்கும்.

நன்றாய் நலந்தரும் நரசிம்ம வழிபாடு!

கலியுகத்தில் “நரசிம்ம வழிபாடு”  என்றாலே பலரும் அஞ்சுகின்றனர். தக்க உடல் சுத்தியுடன் வழிபட்டு வந்தால், உள்ளம் மற்றும் மனசுத்திக்கும் விரைவில் உதவுவது நரசிம்மரின் அருட்திறனாகும்., இதில் பயப்படத் தேவை இல்லை.

இத்தலத்தில், ஆவணி மூல நட்சத்திர நாளில் மட்டுமல்லாது, மாதந்தோறும் மூல நட்சத்திர நாளிலும், நரசிம்மக் கராவலம்பத் தோத்திரம், லக்ஷ்மி நரசிம்மத் துதி போன்ற நரசிம்ம ப்ரீதிக்கான இறைத் துதிகளை ஓதி,

18 பாத்திரங்கள் நிறைய பானகம் படைத்து, ஏழைகளுக்குத் தானமாக அளித்து, 18 படிகளுக்கும் பசுஞ்சாணமிட்டுக் கழுவி, நீர்க்கோலம் இட்டு வழிபட்டும், 18 படிகளில் அல்லது படிகளுக்கு முன் 18 பசுக்களைக் கன்றுகளுடன் வைத்து, கோ சூக்தத் துதிகளை 18 முறை ஓதி, கோ பூஜை வழிபாடு, பிறகு நரசிம்ம வழிபாடுகளை ஆற்றுதலால்,

கணவன் – மனைவி மற்றும் பெற்றோர்கள் – பிள்ளைகள், சகோதரர்கள் – சகோதரிகள் இடையே எழுந்துள்ள வெறுப்பு, பகைமை, குரோதம், விரோதம் தீரவும் உதவும்.

இங்கு, நரசிம்ம பூஜையுடன் தர்ப்பணப் பூஜைகளையும் ஆற்றி வருதலால், குழந்தை பாக்யம் இல்லாது வாடுவோர்க்குத் தக்க பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றிடவும் உதவும்.

இங்கு 18 படிகளிலும் மண்டியிட்டுப் படியேறி வழிபடுதல் விசேஷமானது. இயன்றவர்கள் முழங்காலுக்குப் பாதகமில்லாமல் இப்பிரார்த்தனைகளை ஆற்றிடுக! மிகவும் சக்தி வாய்ந்த வகையில் துரிதமாக அருள் தருவதான உடலை வருத்தி ஆற்றும் இறைவழிபாடுகள் கலியில் மறைந்து விட்டமையாலும், இவற்றைத் தற்போது தவறாகப் பொருள் கொள்வதாலும், மிகவும் கஷ்டப்பட்டுச் செய்தலைத் தவிர்க்கவும். எவற்றையும் இறையருளால் பொறுக்க வல்ல ஆழ்ந்த நம்பிக்கை உடையோர்க்கே இது சாத்தியமாகும்.

திருமகள் ஆவணி மூலத்தில் படைத்தளித்த பானக பூஜை!

நரசிம்மருடைய உக்ரத்தைத் தணிக்க, லக்ஷ்மீ தேவியார், ஆவணி மூல நாளில் பானகாபிஷேகம் செய்து, பானகமும் படைத்துப் பூஜித்திட,

அனைத்தையும் நரசிம்ம மூர்த்தி அருந்திப் பூவுலகில் பானக நீரோட்டத்தைப் பெருக்கி, விருத்தி செய்வித்தார். இதனால்தான் பானகத்திற்கு “மூலப்புனல்” என்றும் பெயர். திருமகள் அளித்த பானகத்தை அருந்தி, உக்ரம் (வெப்பம்) தணிந்த நரசிம்மர், விசேஷமான பானக நரசிம்ம அவதாரிகையையும் பிறிதொரு தலத்தில் (விஜயவாடா) கொண்டார்.

எனவே, குடும்பத்திலும், தொழிலும் நிலவும் – வெளியில் சொல்லொணாத் தரித்திர நிலைகளையும் போக்க வல்லதே அத்தாழநல்லூர் “நரசிம்ம ஸ்தம்ப” வழிபாடு!

பென்சில்வேனியா, எகிப்து, மெக்ஸிகோ, பீடர்ஸ்பர்க், நயாகரா, கௌதமாலா போன்றவையும் நரசிம்ம ஸ்தம்பங்கள், நரசிம்ம ஸ்தூபி சக்திகள் நிறைந்த பகுதிகளாகும். உலகில் தற்போதுள்ள நரசிம்ம, ஸ்தம்பங்கள் யாவும் பானக நீரோட்டங்களை உடையவையே, இவற்றை இன்றையக் கலியுக அரசியல் நாட்டு அமைப்பை வைத்து நோக்காதீர்கள். உலகம் முழுதும் ஒரே நாடாக, சனாதன தர்ம நாடாகத் துலங்கிய காலத்தை எண்ணிப் பாருங்கள்! நீங்களும் அக்காலத்தில் உலகின் பல இடங்களிலும் வாழ்ந்தவர்கள் ஆதலின், இன்று இங்கு இதனை அறிவதும் காலதேவச் சித்தமாகிறது என அறிக!

விஜயவாடாவில் பானக நரசிம்மரின் திருவாயில் ஊற்றும் பானகம் பூமியடியில் மறைவதும், எங்கு போகிறது என்று எவராலும் அறிய இயலாததும் இன்றும் கலியுகத்தில் நிகழும் தெய்வீக அற்புதங்களே! இதில் ஒரு பகுதி உலகின் பல நாடுகளிலும் உள்ள நரசிம்ம ஸ்தம்பங்களை அடைகின்றன.

சிவபாரிநாதச் சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! ஆவணி மாத சிவராத்திரி நாள் – 1.9.2005

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

தென்னாடுடைய சிவனருள் நாடு!

சித்தர்களும், மஹரிஷிகளும் இறைத் தூதுவர்களாக பூமியில் பிறந்து, பல குடும்பங்களிலும் தோன்றி, “இவரா சித்தர்பிரான். இவரா மஹரிஷி!” என்று எவரும் அறிய இயலா வண்ணம், எளிமையாக வாழ்ந்து, சமுதாயத்தில் மக்களுடன் மக்களாக உறைந்து, தம்மை நம்பி நாடுவோருக்கு அருள் வழிகாட்டும் அருள் வள்ளல்களாய் அன்றும், இன்றும், என்றுமாய்த் துலங்கிப் பிரகாசிக்கின்றனர்.

ஸ்ரீகணபதி ஆச்சாள்புரம்

பாரத நாட்டில் மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் சித்தர்களின் நடமாட்டம் உண்டு. அகில உலகிலும் சித்தர்கள், உலகத்தின் ஆன்மீகப் பெரு மையமாம் பாரதத் திருநாட்டில், இதிலும் தென்னாடுடைய சிவனுக்கு மிகவும் ப்ரீதியான தமிழ்நாட்டில்தாம் பெரிதும் நிறைந்த அளவில் உலாவிப் புழங்குகின்றனர். இதனை ஆன்மீக முன்னேற்றத்திற்காக நன்கு பயன்படுத்திக் கொள்ளாதது. பாரத மனித சமுதாயத்தின் மாபெருந் தவறுதானே!

மேலும், பாமரர் முதல் பழுத்த அறிவாளிகள் வரை அனைவரையும் கடைத்தேற்றும் வகையில், நல்வகைப் பூஜை முறைகளை அளித்தும், அவரவருக்குத் தேவையான அறிவு நிலைகளில், உரியோர்க்குத் தக்க அருட்பணியாற்றியும், இறுதியில் ஜீவசமாதி பூண்டும், ஜோதியாய்க் கலந்தும் சாசுவதமாகச் சித்தர்கள் எக்காலத்திலும் இப்பூவுலகில் அருள்கின்றனர். பாமரரோ, ஏழையோ, பரந்த அறிவு பூண்டவரோ, மிதமிஞ்சிய பணக்காரரோ எவராயினும் சரி, “சத்குருவிடம் ஆழ்ந்த நம்பிக்கை பூணுதலே” இதன் மகத்துவத்தை அறிய உதவும்.

சிவக் கொழுந்தாய்ச் சிவந்த குழந்தை!

இவ்வகையில், சிவ ஆணையால் பூவுலகிற்கு ஏகி, சாதாரண உழவர் குடும்பத்தில் உதித்த சிவபாரிநாதச் சித்தர், பஞ்சாட்சர அனுபூதிப் பூர்வமாக, தொட்டிற் குழந்தைப் பருவத்திலிருந்தே “சிவசிவ, சிவயசிவ, நமசிவாய, சிவாய நம” என்று “பஞ்சாட்சரத்தை” எப்போதும் ஓதியவாறே சிவத் தொட்டிலில் வளர்ந்தார்.

சிறு குழந்தைப் பருவத்திலேயே, சிரித்தாலும், அழுதாலும், தும்மினாலும், விக்கினாலும், “சிவ சிவ, நமசிவாய” என்ற பஞ்சாட்சர ஒலியே ஊரெங்கும் நன்கு நிரவி, பரவி, விரவிக் கேட்டது. சிவ பஞ்சாட்சரத்தினை ஓதி, ஓதியே, சிவக் கொழுந்துக் குழந்தையாய் வளர்ந்தமையால், பெற்றோர்களும், உற்றமும், சுற்றமும் அவரை வளர்க்கையில்,

குழந்தைகக்கென உணவு சமைக்கும் போதும், உணவு ஊட்டும் போதும், நீராட்டும் போதும், உறங்க வைக்கும் போதும் “ஓம் நமசிவாய! சிவ சிவ” என்றே ஒலித்து வளர்த்தனர். எப்போதாவது சிவநாம ஜபத்தை நிறுத்தினால், குழந்தை உடனேயே அழ ஆரம்பித்து விடும். மீண்டும் சிவபஞ்சாட்சர ஓதுதலைத் தொடர்ந்தால்தான் குழந்தை தன் அழுகையை நிறுத்தும்.

நகராத சிவநகர நாகரம்

அக்காலத்தில் திங்கள், மாத சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷம் போன்ற சிவபூஜா நாட்களில், “அகண்டகார பஞ்சாட்சர ஜபம்” என்பதாக 24 மணி நேரத்திற்கும் தொடர்ந்து,

“சிவய சிவ
சிவசிவ
நமசிவாய
சிவாய நம”

-என்ற சிவ பஞ்சாட்சர மாமறைத் துதியைச் சத்சங்கப் பூர்வமாக, பலரும் குழுக்களாய் அமர்ந்து, இடைவிடாது மாறி, மாறிப் பல ஊர்ச் சிவாலயங்களிலும் ஓதுவர். இத்தகைய சத்சங்கப் பூர்வமான பூஜைகளில், இறைநாமப் பலன்கள் பன்மடங்காகப் பெருகுகின்ற வகையில் துலங்கும் மகத்தான இறைசாதனத் துறைகளும் உண்டு.

ஸ்ரீருணஹரேஸ்வரர் ஆச்சாள்புரம்

இத்தகைய அகண்டகார (இடைவிடாது ஒலிக்கும்) இறைநாம ஒலித் துறைப் பூஜையில் பலரும் அவ்வப்போது இடம் மாறி, ஓய்வு மற்றும் பிற காரியங்களுக்காகச் சென்றிட, இச்சிவக் குழந்தையாகிய சிவபாரிநாதச் சித்தர் மட்டும், தான் இருந்த இடத்தை விட்டு, ஓரங்குலம் கூட அசையாது, நகராது, உணவிற்கோ, மலஜலக் கழிவிற்கோ கூட வெளிச் செல்லாது, இருந்த இடத்திலேயே நாள் முழுதும், அறுபது நாழிகையும் சிவசாரத்தில், பஞ்சாட்சரத்தில் துய்த்தது கண்டு பலரும் அதிசயித்து “அகிலத்தை ஆள வந்த அருள்நிறை பாலசித்த நமசிவாய மஹாபிரபு” எனப் போற்றிப் பேரானந்தம் கொண்டனர்.

லட்சோப லட்சம் சிவலிங்க மஹாதரிசனம்

சிறு வயதிலேயே, பாரதமெங்கும் உள்ள லட்சக்கணக்கான சிவாலயங்களைத் தரிசிக்கும் வண்ணம், “அகண்டகாரப் பஞ்சாசாட்சர ஜபத்துடன்” சிவபாத பாத யாத்திரையைத் தொடர்ந்த சிவபாரிநாதச் சித்தர்.

பாரத நாடெங்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிவலிங்க மூர்த்திகளைத் தரிசித்தமையால், இவருடைய உடல் அங்கங்களும், வெளியில் தெரியும் நரம்பு, எலும்பு, முடிகள், காது, நாசி யாவுமே சிவலிங்க வடிவாகவே தோன்றின.

முதலில் ஒரு கோடிப் பேரைப் பஞ்சாட்சர ஜபம் ஆற்றிடச் சங்கல்பம் பூண்டு பூஜித்து, இதற்கான இறைப் பணிகளை ஆற்றினார். பிறகு நாளடைவில், பாரதமெங்கும் ஒரு கோடி மானுடர்கள் ஒவ்வொருவரையும் தம் வாழ்வில் ஒரு கோடி முறையேனும் பஞ்சாட்சர ஜபம் செய்ய வைப்பதாக இமாலயச் சங்கல்பம் பூண்டார்.

முதலில், இதற்கு ஆரம்ப நிலையாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்களைப் பெரிய நதிக் கரைகளில் ஒருங்கே அமர வைத்துத் தொடர்ந்து பன்னிரெண்டு மணி நேரம் நமசிவாயப் பஞ்சாட்சர மந்திரத்தை ஓத வைத்து, பஞ்சாட்சர அகண்டகார நாமசாகர வழிபாடுகளை ஆற்றினார்.

அருணாசலப் பிரதேசத்தில் அருணாசலப் பிரவேசம்

ஆனால், இத்தகைய மாபெரும் சங்கல்பத்தில், இவருடைய பாரத க்ஷேத்திராடனத்தில், பல தடங்கல்களும் அவ்வப்போது ஏற்பட்டுத் தன் சங்கல்பப் பணி எதிர்பார்த்த அளவில், துரித கதியில் நிறைவேறாதது கண்டு மிகவும் வருத்தமுற்றார். திருக்கயிலாய மலையையும் அடைந்து, புனிதமான மானசரோவர் ஏரித் தீர்த்தத்தில் நீராடி, திருக்கயிலாயத்தைத் தரிசித்து அவருக்குத் தன் சங்கல்பத்தைக் காரியசித்தி ஆக்குவதற்கான மனோ தைரியம் வேண்டிப் பிரார்த்தித்தார்.

திருக்கயிலாயச் சிவமலைத் தரிசனம் நிறைவுற்றுத் திரும்புகையில், தற்போதைய அருணாசலப் பிரதேச மாநிலப் பகுதியில், ஒரு சுயம்பு சிவலிங்கத்தை வழிபடுகையில், விண்ணில் ஐந்து பஞ்சாட்சர நட்சத்திரங்கள் ஊர்வதைக் கண்டு அதிசயித்து வணங்கிட, “அருணசிவ நமசிவாயப் பஞ்சாட்சரப் பிரவேசப் பிரகாசம்” – உள்ளத்தில் கிட்டிடப் பேரானந்தமடைந்தார்.

“தொடர் நமசிவாயர்!”

பஞ்சாட்சர நட்சத்திரங்கள் ஐந்தையும் தொடர்ந்தவாறே சித்தர்பிரானும் தம் சிவத்தல யாத்திரையைத் தொடர்ந்தார். என்ன அதிசயம், இந்த ஐந்து பஞ்சாட்சர நட்சத்திரங்களும், பகலிலும் அவர் கண்களுக்கு மிகவும் நன்கு புலப்பட்டன. எங்கு அவை வானில் தங்கினவோ, அத்தலத்தில் அவரும் தங்கி அங்குள்ள சிவமூர்த்திகளை வழிபடுவார். அருணாசலப் பஞ்சாட்சர நட்சத்திரங்களின் தரிசனம் கிட்டியத்தில் இருந்து, அவை வானில் தங்கும் நேரத்தில் தானுள்ள இடத்தில் உள்ள சிவலிங்கங்களை மட்டும் தரிசித்து, வானில் பஞ்சாட்சர நட்சத்திரங்கள் நகர்ந்தவுடன், தானும் அவற்றின் தரிசனம் கிட்டும் பாதையில் நகரலானார்.

பஞ்சாட்சர நட்சத்திரங்கள், தம் வானியற் பயணத்தை தொடர்கையில் வானத்தில் அவற்றைத் தரிசித்தவாறே, தன் சிவத்தல யாத்திரையையும் தொடர்ந்தார். அந்த ஐந்து பஞ்சாட்சர நட்சத்திரங்களிலும் “நமசிவாய” என்ற ஐந்து பஞ்சாட்சர சிவ அட்சரங்கள் மாறி மாறி ஒளிர்ந்து, செல்லும் இடமெங்கும் பஞ்சாட்சர சக்திகளைப் சிவப் புஷ்ப மழைத் துளிகளாகப் பொழிவதைக் கண்டு, அதிசயித்துப் போற்றியவாறே அவற்றைத் தொடர்ந்து நடந்தார்.

காடு, மலை குறுகக் கண்ட (சிவக்) குறள்!

இந்த பஞ்சாட்சர நட்சத்திரங்களைத் தரிசிக்கும் வரையில், வழியில் எத்தனையோ காடுகளும், மலைகளும், நதிகளும் குறுக்கே இருந்தாலும், நடுவில் ஆங்காங்கே வழி கேட்டு நடந்து வந்த சிவபாரிநாதச் சித்தர், இந்நட்சத்திரங்கள் வழிகாட்டத் தொடங்கியவுடன், தமக்கு தானாகவே வழி புலப்பட்டதைக் கண்டும் வியந்தார்.

மத்தியில் நெடுந்தூரத்தில் உயர்ந்த மலைகளும், அடர்ந்த காடுகளும் தென்பட்ட போது, “இவற்றைக் கடக்கப் பல மாதங்கள் ஆகுமே!” எண்ணுவார். ஆனால், பஞ்சாட்சர நட்சத்திரங்கள் காட்டிய வழியில் நடந்து வந்தால், எத்தகைய உயர்ந்த மலைகளையும்,  காடுகளையும் எளிதில் கடந்தமை குறித்து மிகவும் அதிசயித்துப் போவார். “எல்லாம் அருணாசல ஈசன் செயல்” என அவர் உணர்ந்த தருணமும் வந்தது.

பஞ்சாட்சர நட்சத்திரங்களைத் கண்டது முதல், பல இடங்களிலும் அசரீரியாகவும், நேரிடையாகவும்,

“அருணாசல அருமாதவ அரனார் சிவசாரம்
சரணாகத சரம் ஓதுயர் சரவாரண சிவமே
கருணாமய கரவாசிவ கவிதாரணப் பரமே
பெருமாளுடை பிரமேசனும் அருணாசல பதமே!”

எனச் சித்த சாஹித்யம் த்வனிப்பதைக் கேட்டு உளம் பூரித்தார். பஞ்சாட்சர நட்சத்திர சக்திகளும், தமிழ் மாமறை மற்றும் தேவமொழி மறைகளை வானில் நிரவின.

கோடி, இங்கு பவசிவப் பல கோடியே!

“அருணாசலச் சிவபத பூமியில் கோடானு கோடியும், சதுர் கோடியும் கூடச் சதுராதிகச் சதுர் கோடியாய்ப் பெருகுமே! அனைத்தும் திருஅண்ணாமலை பூமியின் அருணாசல நமசிவாயப் பஞ்சாட்சர சக்தியால்!” என ஒலித்துக் கொண்டே இருப்பதையும் அவர் வழியெங்கும் நன்கு கேட்டார். வழியெங்கும் பல்லாயிரம் சிவ மூர்த்திகளைத் தரிசித்து, பஞ்சாட்சர நட்சத்திரங்கள் காட்டிய வழியில் நடந்து ஒரு மாதசிவராத்திரி நன்னாளில் திருஅண்ணாமலையை வந்தடைந்தார்.

திருஅண்ணாமலை தரிசனத்தை நெடுந்தூரத்தில் கண்ணுற்ற போதே ஆங்கே பல அபூர்வமான தேவகாட்சிகள் அவருக்குக் கிட்டின. எண்ணற்ற சித்தர்களும், மஹரிஷிகளும் பஞ்சாட்சர நட்சத்திரங்களைத் தரிசித்து நாகலிங்க புஷ்பத்தால் அர்ச்சித்திட, அவை ஐந்து பரஞ்சுடர் லிங்க ஜோதிகளாக, மலையில் ஐந்து பகுதிகளில் இணைந்ததை அவர் நெடுந்தொலைவில் இருந்தே கண்டு, தரிசித்துப் பேருவகை கொண்டார்.

அருணாசல கிரிவலத்தில் அமையும் இந்த இடத்திற்கு, பஞ்ச தாராப் புலம் (கண் காணா நட்சத்திரத் தளம் என்று பெயர்). இதுவே தற்போது மருவி, “பந்தாரை, பஞ்சாரை, பஞ்சரம், பஞ்சப் பாறை, பஞ்சுப் பாறை, பஞ்ச பாண்டவர் பாறை” என்று பல பெயர்களில் மருவி வந்துள்ளன. தக்க சத்குரு மூலமாகவே இதனைக் காணுதல் கூடும்.

அருணாசலத்தைக் கண்டதும், “இதுதானோ அருணைத் தலம்!” என்று அவருடைய உள்ளம் பேஹாக் (பேக+ஆகம) ராகத்தில் பாடித் துள்ளிக் குதித்துப் பரமானந்தத்தில் மூழ்கி எழுந்தது. அப்போதோ ஒரு கோடிப் பேரையும் ஒரு கோடி முறை பஞ்சாட்சரத்தை ஜபிக்கச் செய்த சிவானுபூதியைப் பெற்றது போல், அவர் பெரிதும் புளகாங்கிதம் அடைந்திட்டார்.

ஒவ்வொரு விநாடியும் அருணாசல கிரிவல யாத்திரையிலேயே!

தாம் அருணாசலத்தை அடைந்த மாதசிவராத்திரி நாளில் அருணாசலக் கிரிவலத்தைத் தொடர்ந்தாவர், தாம் அருணாசல ஜோதியில், சிவஜோதியாய் ஐக்யமாகி இணையும் வரை, ஓயாது, உறங்காது அருணாசலத்தைக் கிரிவலம் வந்து, அறச் சிவத் துறையில் உறைந்தார்.
அருணாசலத்தில் அந்தந்த நாள், நட்சத்திர, யோக, கரண பஞ்சாங்க கால நிலைகளுக்கேற்ப ஓதும் பஞ்சாட்சரங்களின் பலாபலன்கள் பன்மடங்காய், பல கோடியாய்ப் பெருகியதைக் கண்டு, சிவபாரி நாதச் சித்தர் பெருமகிழ்ச்சி அடைந்தாலும், மக்கள் இத்தலத்தின் மகத்தான சிவசக்திகளை உணராமல் இருக்கின்றார்களே என்றும் பெரிதும் வேதனைகளை அடைந்தார். பண்டைய காலத்தில் பிரசித்திப் பெற்று விளங்கிய அருணாசல மாத சிவராத்திரி கிரிவலம், பிறகு மக்கள் சமுதாய அசிரத்தையால் மறைந்தது. சிவபாரிநாதச் சித்தரின் காலத்தில்தாம் மக்களால் மறக்கப்பட்டிருந்த “மாதசிவராத்திரிக் கிரிவலத்திற்குப்” புத்துணர்ச்சி தரும் வகையில் இறையருளால் அருட்பணிகளை ஆற்றுவாரானார்.

அமரும் போதும், உறங்கும் போதும் எப்போதும், எந்நிலையிலும் 24 மணி நேரமும், 60 நாழிகையுமாக, பஞ்சாட்சரத்தை ஓதியவாறு கிரிவலம் வந்த சித்தரின் “நமசிவாயப் பஞ்சாட்சர” ஒலியானது. கிரிவலப்  பாதை முழுதும் சூக்குமமாக ஒலிப்பதைக் கண்டு மக்கள் வியந்து அதிசயித்தனர். இதிலும் மாத சிவராத்திரி நாளிலோ, அருணாசல மலையைச் சுற்றி எங்கும் எப்போதும்,

“ஓம் நமசிவாய, அருணாசல சிவாய, சிவ ஓம் நமசிவாய, சிவாய அருணாசலாய நம:”

என்று ஒலித்துக் கொண்டே இருப்பதைக் கண்டு, மாதசிவராத்திரி தோறும் லட்சம் லட்சமாய் மக்கள் மாத சிவராத்திரிக் கிரிவலத்தை மேற்கொள்ளலாயினர்.

தற்போதையப் பௌர்ணமியில் லட்சக்கணக்கான மக்கள் அருணாசலத்தைக் கிரிவலம் வருவது போல, அக்காலத்தில் மாத சிவராத்திரி நாளிலும் “ஓம் நமசிவாய!” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஓதியவாறு சிவபாரிநாதச் சித்தர் லட்சக் கணக்கான மக்களுடன் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்த போது, அருணாசல வளாகத்தைச் சுற்றிலும் எண்ணற்ற இடங்களிலும் பஞ்சாட்சர ஒலிப் பிரவாகம் தவழ்ந்தது, எப்போதுமே சத்சங்க வழிபாட்டிற்குப் பன்மடங்கான பலன்கள் உண்டு அல்லவா! அருணாசல வளாகமே, நமசிவாய விபூதி நறுமணத்துடன் பூரித்தது.

ஜீவன்களுக்கோ ஆயுள்விருத்தி, பூமிக்கோ பூபாரம்!

அருணாசலத்தில், மாத சிவராத்திரி நாளில். குறித்தத் தருணத்தில் ஒரு தருணத்தில் ஒரு முறை பஞ்சாட்சர நாமம் ஓதினால், பல கோடி மடங்காய்ப் பலா பலன்கள் விரியும் எனில், பல லட்ச மக்கள் பல்லாயிரம் முறை ஓதினால் கிடைக்கும் பலன்களை என்னென்பது!

நாளடைவில், சிவபாரிநாதச் சித்தரைத் தொடர்ந்து, தினந்தோறுமே ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் வருகின்ற புனித வைபவத் திருவிழாவாகவும் மாதசிவராத்திரி கிரிவல மகத்துவம் பூரணித்துத் திளைத்திடவே, எமலோகத்தில் பலத்த சர்ச்சையே எழுந்து விட்டது.

காரணம் என்ன?

பிரபஞ்சத்தின் ஆன்மீக மையமும், சர்வேஸ்வரப் பரம்பொருளே அருணாசல மலையாகவும் உறைந்தருளும் திருஅண்ணாமலையில், “சிவ பஞ்சாட்சரத்தைப்” பல கோடி முறை ஓதிய பலாபலன்களை பல லட்சக்கணக்கான ஜீவன்கள் பெற்றமையால், பூலோக ஜீவன்களின் ஆயுட்காலம் நன்கு விருத்தியாகி, அனைவரும் நீண்ட நெடுங்காலம் வாழலாயினர். இது ஒரு புறத்தில் ஜீவன்களுக்கு புண்ய சக்திகளையும்  பெற்று, ஆயுள் விருத்தியையும் அடைந்து கொண்டு, நல்வாழ்க்கையைக் கைக்கொண்டு, நற்காரியங்களை ஆற்றித் திறம்படவா வாழ்கின்றார்கள்?

தீயனவற்றைச் செய்வது, உடனே பரிகாரத்திற்காக அருணாசல கிரிவலம் வருவது, மீண்டும் தீவினைகளை ஆற்றுவது – எனக் கலியுக மனப் போக்கில் பல ஜீவன்களும் மன திடமின்றிப் பிறழ்ந்து கிடந்தனர். இதனால், மரண தேவதைகள், எமலோக தேவதா மூர்த்திகள் தத்தம் கடமைகளை, அவரவர் ஆயுள் முடிந்தவுடன் சரீரத்தை விடுவிக்கும் பணிகளை – நிறைவேற்ற இயலாது தவித்தனர். விதியையும் நன்முறையில் மாற்றும் உயர்வைக் கொண்டதன்றோ பஞ்சாட்சர அனுபூதிகள்!

ஸ்ரீஎமதர்மராஜ விஜயம்

இதனால் பூலோகத்தில் பூபாரம் பெருகலாயிற்று நல்லோரும், தீயோரும் ஆயுள் விருத்தியாகவே நாளடைவில் அவருடன் கிரிவலத்தை மேற்கொள்ளலாயினர். ஒரு நல்லவரை உருவாக்கிடப் பல்லாயிரம் தீயோருடன் உறைந்து வாழ்தல்தானே கலியுக நியதி!

ஒரு மாதத்தின் சதய நட்சத்திரம் கூடிய மாதசிவராத்திரி நாளில், எமதர்ம மூர்த்தியே நேரடியாக அருணாசல பூமிக்கு வந்திடவே, சிவபாரிநாதச் சித்தரும், அறக்கடவுளாம் எமதர்ம மூர்த்தியைச் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். எமதேவரும் சிவபாரிநாதரைக் கண்டு,

“மாமுனிச் சித்தர்பிரானே! லட்சக்கணக்கான பூவுலக ஜீவன்களைச் சென்றடையும் வண்ணம், தாங்கள் மகத்தான அருணாசல கிரிவலச் சிவத்திருத் தொண்டினை ஆற்றிக் கொண்டு இருக்கின்றீர்கள்! இதில் அடியேன் குறுக்கிடுவதாக எண்ணலாகாது, தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை! தங்களுடைய “பஞ்சாட்சர பீஜாட்சர ஓதலுடை அருணாசல கிரிவல மஹிமையால்” அனைத்தும் பலகோடி மடங்குகளாகப் பெருகி, அருணையின் கருணைப் புண்ய சக்தியும் பிரபஞ்ச அளவில் விரிந்து, நிறைந்து குறிப்பாக, “சிவேந்திரப் புண்யசக்தியும்” நன்கு விருத்தியாகி, உத்தமர்களும், பாமரர்களும், நல்லோரும், தீயோருமாய் யாவரும் ஆயுள் விருத்தி சக்திகளை அடைகின்றார்கள். எனவே, உலகின் இப்பகுதியில் லட்சக்கணக்கான உயிர்களின் “சரீர மாற்றுப் பரிபாலனம்” தடைபட்டுள்ளது.

’மரணத்தை அளிப்பது மட்டும் எங்கள் கடமை அல்லம் மற்றொரு சரீரத்திற்கு, அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப விதிக்கு ஏற்ப, இருக்கின்ற ஜீவ சரீரத்தை விடுத்து மரணத்தின் அடுத்த நிலைக்கு, ஜீவசக்தியை மாற்றுவதும் எங்களுடைய தலையாய தேவ கடமையாகும்! என்று தாங்கள் அறிவீர்கள் அன்றோ!”

“இவ்வாறாகத் தற்போது உலகின் ஒரு பகுதியில், “ஜீவபரிபாலனமே” ஸ்தம்பிக்கும் போல உள்ளது! எனவே, தற்போது யாது செய்ய வேண்டும் என்று தாங்களே உரைக்க வேண்டும்!” என உரைத்தார்.

“எமதர்ம மூர்த்தி பெருமானே! தர்ம சக்திகளை நந்தி மூர்த்தியுடன் இணைந்து பரிபாலிக்கும் தங்களுடைய திவ்ய தரிசனமே, சிவ பஞ்சாட்சர ஓதுதற்கானப் பலன்களாக வந்தடைந்தன்றோ! தாங்களே, பல கோடி யுகங்கள் இந்த திவ்யமான அருணாசலப் புனித பூமியில், சுயம்பு மூர்த்தியான “எமலிங்கத்தை” வழிபட்டு வந்துள்ளீர்கள் தாமே! எமதர்ம ராஜ மூர்த்தித் தரிசனமே, அருணாசலப் புண்ய பூமியில் பெறுதற்கரிய தெய்வ மூர்த்தித் தரிசனம் எனச் சித்தர்களும், மஹரிஷிகளும் உரைக்கின்றனரே! தாங்கள் கூறும் “ஜீவபரிபாலன மாற்றங்கள்” எல்லாம் இப்படி நிகழ்வதானது, அடியேன் அறியாத ஒன்றே! இதற்காக அடியேனை மன்னித்தருள வேண்டும்!” என்று சிவபாரிநாதச் சித்தர் பணிவுடன் உரைத்தார்.

ஸ்ரீவெண்ணீற்றம்பிகை ஆச்சாள்புரம்

கண்டவர் விண்டிடா “மிருத்யுஞ்ஜயத் தரிசனம்”

“எனவே தாங்கள் அடியேனுடைய உயிரை ஏற்றுக் கொண்டு, லட்சக்கணக்கான மக்களை மரணத்தில் இருந்து விடுவிப்பீர்களாக! எனத் தங்கள் திருத்தாள் பணிந்து வேண்டிக் கொள்கின்றேன்!” என்று சித்தர்பிரான், எமதர்ம மூர்த்தியிடம் பிரார்த்தித்தார்.

அந்த க்ஷணத்திலேயே அனைத்து மரண லோக தேவதா மூர்த்திகளுக்கும், தேவதைகளுக்கும், தர்மராஜ தேவ மூர்த்தியாம் எமதர்ம மூர்த்திக்கும், சிவபாரிநாதச் சித்தருக்கும் சேர்ந்துமாக, அருணாசலப் பெருமானே “ம்ருத்யுஞ்ஜய மூர்த்தியாக” காட்சி தந்தருளினார்.

சிவபாரிநாதர் சித்தர்பிரானையும் சர்வேஸ்வரன் ஜோதிப் பூர்வமாக ஆட்கொண்டு, “ம்ருத்யுஞ்ஜய தரிசனம்” எனும் அருணாசலத் தரிசனப் பகுதியில், சித்தர் பெருமானை ஜோதி ஸ்வரூபமாக, அருணாசல மலையில் ஐக்கியம் அடையச் செய்தார். சிவபாரிநாதச் சித்தரின் அருட்தொண்டினால், எமலோக மூர்த்திக்கும், தேவதைகளுக்கும் பெறுதற்கரிய் “மருத்யுஞ்ஜய சிவதரிசனம்” கிட்டியது கண்டு, எமதர்ம மூர்த்தியே பேரானந்தம் கொண்டார்.

“சிவபாரிநாதச் சித்தரளித்த சிவபஞ்சாட்சரச் சிந்தனையுடன் குறித்த மாத சிவராத்திரி நாளில் அருணாசலமாம் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருவோர்க்கு, மரண பய தோஷங்களை நிவர்த்தி செய்யும் “ம்ருத்யுஞ்ஜய மந்திர சக்திகளின் சிவேந்திரப் புண்ய அம்சங்களும்” , இத்தகைய அருணாசல மாத சிவராத்திரி கிரிவலப் பலாபலன்களாக ஜீவன்களுக்குக் கிட்டும்!” எனவும் சிவனருளால் கூடுதலாக எமதர்மராஜ மூர்த்தியே அருள் கூட்டித் தந்தார்.

மாதசிவராத்திரி கிரிவலப் பலாபலன்கள்!

மரண பயம், இறப்பை எண்ணி வரும் மன பீதிகள், பிரேத தோஷங்களை நீக்கும் நல்வர சக்திகளை அருணாசலத்தில் பார்த்திப வருட ஆவணி மாதச் சிவராத்திரி கிரிவலப் பலாபலன்களாகப் பெறுதல் மட்டுமல்லாது, மாதாந்திர சதய நட்சத்திர நாளில் திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி சிவத்தலத்தில் குடும்பப் பரிவாரத்தோடு அருள்பாலிக்கும் எமதர்ம மூர்த்தியைத் தரிசித்த பிறகு, இதே சதய நட்சத்திர காலத்திற்குள் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருவோர்க்கு, வாழ்வில் ஒரு போதும் “எமபயம்” அண்டாதவாறு, எமதர்ம மூர்த்தி காத்து அருள்பாலிக்கின்றார்.

எல்லாவற்றையும் விட, எவ்விதப் பலன்களையும் எதிர்பாராது, ஒரு துளியும் பிற எண்ணங்கள் அண்டாது, உத்தம சிவச் சிந்தனையில் துய்த்து, “நமசிவாயப் பஞ்சாட்சரத்தில்” உறைந்து, இம்மாத சிவராத்திரியில் “அருணாசல கிரிவலம்” வருவோர்க்கு, முக்தி, மோட்சத்திற்கான தெய்வீக நெறிகள் குருவருளால் சித்திக்கும். இதைவிடக் கலியுகத்தில் வேறென்ன பேறு வேண்டும் சுவாமி?

ஆச்சாள்புரம்

ஆச்சாள்புரத்தில் முக்திக்கான முத்தான மூதுரை அழைப்பு

சிதம்பரம் அருகே உள்ள ஆச்சாள்புரம் பஞ்சாட்சரத் தீர்த்தக் குளத்துடன் துலங்கும் மிகவும் சிறப்பான திருமண சக்தித் தலம். காகபுஜண்ட மஹரிஷி முக்திப் பேறு அடைந்த இந்த பித்ரு முக்திச் சிவத்தலத்தில், அம்பாள் திருச்சன்னதியில் விபூதி வழங்கப் பெறும் வைபவத்துடன் துலங்கும் திருமண பாக்யத் திருத்தலம்! அம்பிகையின் தீந்தமிழ்த் திருநாமங்களோ திருநீற்றம்மை, வெண்ணீற்று உமை மங்கை, சுவேத விபூதி நாயகி, விபூதி கல்யாணி என்பதாம். எத்தகையத் திருமண தோஷங்களையும், துயர்களையும், சாபங்களையும், தீர்த்து அருள்நலம் தருபவள்! இவ்வாலய முன் மண்டபத் தூணில் தோன்றி, ஞான சக்திகளை அருளும் அனுமார் பிள்ளைகளுக்கு நல்ல நினைவாற்றலை, நற்கல்வித் திறனை அருள்பவர்.

பஞ்சாட்சரத் தீர்த்தம் ஆச்சாள்புரம்

‘நல்லூர்ப் பெருமணம்’ எனப் போற்றப் பெறும் ஆச்சாள்புரம் ஸ்ரீசிவலோகத் தியாகேசர் சிவாலயத்தில் நிகழ்ந்த – திருஞானசம்பந்தர், தோத்திரப் பூரணாம்பிகையை மணந்த திருமண் வைபவத்தில், ஓர் அழகிய தேவ விமானம் கோயில் வளாகத்தில் வந்திறங்கிய போது, “அனைவரும் தேவ விமானத்தில் ஏறி, சிவஜோதியில் கலந்து முக்தி பெறுவோம் வாரீர்!” என ஞானசம்பந்தப் பெருமானே அழைப்பு விடுத்த போது, எவ்வளவு பேர்கள் அவருடைய திருவாய் மொழிகளை நம்பித் தேவ விமானத்தில் ஏறினர்? அருகில் சத்குருவாய் அமர்ந்து, சம்பந்தர் பெருமானே கூவி அழைத்தும், (தெய்வக்) குரல் கொடுத்தும், கலியுக மாயையால், அறியாமையால் – “சிவஜோதியை வேறேதோ” என எண்ணி அஞ்சிப் பலரும் விரைந்தோடி விட்டார்களே! அருகில் அரவணைக்கக் காத்திருக்கும் “சத்குருவை” நழுவ விட்டக் கலியுக மாயையை என்னென்பது!

அருணையில் பிறிதொரு அருட் கூவல் வாரீர், வாரீர்!

இதே போல்தான், சிவபாரிநாதச் சித்தர், சித்தானந்த ஜோதியாய் அருணாசலத்தினுள் ஒரு பார்த்திப ஆண்டின் ஆவணி மாதச் சிவராத்திரியில் ஐக்யமுற்றுக் கலங்குங்கால், அந்நேரத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அருணாசலத்தைக் கிரிவலம் வந்து கொண்டிருந்த அத்தனை ஜீவன்களுமே உய்வு பெற்றனர்.

அப்போது, பக்தர் ஒருவரின் கைப்பையில் இருந்த பாதக் குறடுகளும் கூட நற்கதியை அடைந்தன எனில், என்னே இந்த சிவபாரிநாதச் சித்தருடைய மாத அருணாசல மாத சிவராத்திரி கிரிவல அனுபூதிகளின் மஹிமை! ஆடும், வண்டும், ஆவாரையும், துவரையும், காகிதமும், கனகமணிப் பவளமும், பாசியும், பறந்த சிறு வண்டும் – அனைத்துமே உய்வு பெற்றன.

இவ்வாறு ஆழ்ந்த நம்பிக்கை பூண்டு அருணாசலத்தைக் கிரிவலம் வந்த சகல ஜீவன்களூம், சகலப் பொருட்களும் உய்வடைந்து முக்தி பெற்ற ஆவணி மாதசிவராத்திரித் திருநாளாகிய, சிவபாரிச் சித்தநாதர் திருஅண்ணாமலையில் சிவஜோதியில் ஐக்யமடைந்த அந்தப் பார்த்திப ஆண்டின் ஆவணி மாதச் சிவராத்திரித் தினப் பேரம்சங்கள் பலவும் திரண்டு, வரும் நம் காலத்து பார்த்திப ஆவணி மாதச் சிவராத்திரித் தினத்தில் பிரகாசிக்கிறது எனில், ஆச்சாள்புரத்தில் நிகழ்ந்தது போல், அறியாமையால், மாயைப் பெருவிளையாட்டால் தற்போதும் விட்டிடலாகுமோ மானுடர்காள்? இறைவனே மனமுவந்து அளித்துள்ள ஆறறிவுப் பேராண்மையுடன் சிந்தனை செய்திடுக!

ஸ்ரீஆஞ்சநேயர் ஆச்சாள்புரம்

வரும் ஆவணி மாதச் சிவராத்திரியில், சிவபாரிநாதச் சித்தர் தூல சூக்கும வடிவுகளில் அருணாசல கிரிவலத்தைக் கைக்கொண்டு அருள்கின்றார் பாக்யம் உள்ளோர்க்கு, அருணாசலத்தின் 64 தேவ திக்குகளிலும், பல இடங்களிலும் “பஞ்சாட்சர நாதம்” உற்பவித்துச் சுரப்பதைக் கேட்கும் தேவபுலம் கிட்டிடும். சத்சங்கமாகப் பலரும் ஒன்று கூடி, “சிவய சிவ, சிவசிவ, நமசிவாய, சிவாய நம:” என்பதான சிவபூதிக் காரண, சிவேந்திரப் பராபரப் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதியவாறு, இந்த மாத சிவராத்திரியில் அருணாசலத்தைக் கிரிவலம் வருதலால் கிட்டும் பலன்கள் மிகவும் விசேஷமானவை. வானில் “பஞ்சாட்சரப் பரல் துறைகள்” கோடானு கோடி உண்டு. பல பூமிகளிலும், உத்தமர்கள் தியாக உணர்வுடன், பிற ஜீவன்களின் நலன்களுக்காக ஓதிய பஞ்சாட்சர மந்திர சக்திகளும், அனுபூதிகளும் இத்தகைய வானியல் “பஞ்சாட்சரப் பரல் துறைகளில்’ நிறையும். இந்த மாதசிவராத்திரியில் ஒவ்வொருவரும் அருணாசலக் கிரிவலத்தில் ஓதும் ஒவ்வொரு நமசிவாய மந்திரத்துதிப் பலன்களும், 64 பங்குகளாய்ப் பகுக்கப் பெறும்.

பித்ருக்களுக்கு, குறித்த மூதாதையர்களுக்கு, பெற்றோர்களுக்கு, கூடப் பிறந்தோர்க்கு என பல்வகையில் உடலும், உணவு, உயிர், உதவி தந்தோர்க்குமாய் இவை முதலில் பகுத்தளிக்கப் பெறும். இவ்வாறு பல தலைமுறைகளுக்கும் சென்றடைந்து உதவுவதே, அருணாசல மாதசிவாத்திரி கிரிவலப் பலாபலன்களும்,

இவற்றின் பக்க பலத்துடன் சிவராத்திரியில் கிரிவலம் வந்து, மறுநாள் அமாவாசைத் திதியில், ஆச்சாள்புரம் “பஞ்சாட்சரத் தீர்த்தக் கரையில்” அளிக்கும் தர்ப்பணாதிகளும் பெருந்துணை புரியும் என இனியேனும் அறிந்து பயன் பெறுக!

உறவினர்களிடம் பலத்த அவமானப்பட்டு வாழ்வோர் நல்ல தீர்வுகளைப் பெறவும், வெளிநாடுகளில் வாழ்வோர் அனைத்துக் கடமைகளையும், சொத்துப் பரிவர்த்தனைகளையும் முடித்துக் கொண்டு தாய்நாடு திரும்புவதற்கான முயற்சிகள் நன்கு பலிதமாகவும், வெளிநாட்டு மோகங்கள் தீர்ந்து நன்முறையில் வாழ்வு சீர்மை பெறவும் இம்மாதக் கிரிவலப் பலாபலன்கள் உதவும்.

ஜாதக ரீதியாக அயல்நாட்டு வாழ்வினைக் குறிக்கும் கிரக அம்சங்கள் தற்போது மாற்றம் பெறுவதும், அனைத்துக் கிரக சக்திகளும், பிரபஞ்சத்தின் தெய்வீக மையமான அருணாசல கிரக காரகத்துவத்தில் பரிபாலனம் பெறுதலாலும், வெளிநாட்டு வாழ்வு சம்பந்தமான அனைத்திற்கும் நன்முறையில் தீர்வுகளை அளிக்க வல்ல பலாபலன்களைப் பெற வேண்டிய அரிய தருணமிது!

ரிஷி பஞ்சமி

பித்ருக்கள், முன்னோர்கள், சந்ததிகள் அனைவருக்கும் நல்வரம் தரும் மகரிஷிகளுக்கான அர்க்ய பூஜை, குடும்பத்தில் சாந்தம் நிலவிட, ரிஷி பஞ்சமி நாளில் சித்தர்கள், மஹரிஷிகளின் ஜீவசமாதியில் அன்னதானத்துடன் வழிபடுக!

அருந்தவத்தார் அரனாலயம் அணைந்தருளும் அரிய ரிஷிபஞ்சமி!

“ரிஷி பஞ்சமி” என்பது “மாமுனிகளின் மாதவத் திருநாள்” ஆகிய பஞ்சமித் திதிப் பண்டிகை தினம் ஆகும். விண்ணுலகில் உள்ள பல கோடி மஹரிஷிகளும், பல தலங்களிலும், தம் தபோ பலன்களுடன், மகத்தான தவ சங்கல்பத்துடன் நம் புனிதமான பூமியில் வந்திறங்கும் நன்னாளே “ரிஷி பஞ்சமித்” திருநாளாம்.

அகஸ்தியர், வசிஷ்டர் முதல் பலரும் அறியாத, “கரலாக் கட்டைச் சித்தர், ச்யவனர்” போன்ற பல சித்தர்களும், மஹரிஷிகளும் பூவுலகிற்கு வந்து, தம் தபோபலன்களை அர்ப்பணித்து, “ரிஷி பஞ்சமித் திதியின்” நிறைவில், மீண்டும் தமக்கென நிர்ணயித்து அளிக்கப்பட்டுள்ள லோகங்களுக்குத் தவம் புரியச் சென்று விடுகின்றனர்.

சித்திரசபை திருக்குற்றாலம்

கலியுகத்தில் பாமரர்களுக்கும், மஹரிஷிகளின் தரிசனம் கிட்டுமா? நிச்சயமாகக் கிட்டும். ஆழ்ந்த நம்பிக்கைதான் இதற்கான யோக்யதாம்சமே தவிர, இதில் ஜாதி, மத, இன, குலம், ஆண், பெண் போன்ற எவ்விதமான வேறுபாடுகளும் கண்டிப்பாகக் கிடையாது.

ஆனால், உலகின் அனைத்து ஜீவன்களுக்குமே அருள்வழி காட்ட வல்ல மஹரிஷிகளைக் கண்டால் கலியுக மனிதர்கள் தற்போது என் செய்வர்? அவர்களிடம் முக்திக்கா நல்வழியைக் கேட்பார்கள்? “கார் வேண்டும், நகை வேண்டும், வீடு வாசல் வேண்டும்….!” என்றவாறாக, எதையாவது லௌகீகமாக, சுயநலமாகக் கேட்டு, உத்தமப் பெரியோர்களைத் துரத்தித் துன்புறுத்தும் அவலமான புத்தி கலியில் நிலவுவதால்தான், இப்பூவுலகில், தற்போதையக் கலியுகத்தில், சித்தர்களின், மஹரிஷிகளின் போக்குவரத்து மிகவும் குறைந்து வருகின்றது.

பிற ஜீவன்களுக்குத் தொண்டாற்றும் தியாகமய உள்ளத்துடனும், ஆழ்ந்த நம்பிக்கையுடனும் துலங்குவோர்க்கும் அருள் புரியவும் “மாமுனிகள்” விழைகின்றனர் என்பதும் சத்தியமாக நிகழ்வதே! நல்லோர்க்கு மட்டுமன்றி, உண்மையிலேயே மனமாரத் திருந்தி நல்வாழ்க்கையைப் புலர வைக்க விழைவோர்க்கும், இவர்களுடைய அருட்சாரல் கலியுகத்தில் நன்கு கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பொன் சக்திகள் பூரிக்கும் பொற்சுடர் வல்லச் சித்தர்

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் திருத்தலத்தில், எதனையும் தங்கமாக மாற்ற வல்ல, உத்தமமான ரசவாதக் கலைகளை நன்கு அறிந்த வல்லச் சித்தர் உறைந்து வந்தார். இவர், கடுமையான பூஜா, விரத நெறிகள் நிறைந்த “ஸ்வர்ணாகர்ஷண பைரவ” உபாசனையில் வல்லவர் ஆவார். பைரவ உபாசனை கடைபிடித்தற்கு மிகவும் கடினமானது.

மிகவும் சிதிலமடைந்த ஆலயங்களில் திருப்பணிகளை ஆற்றவும், மற்றும் உத்தமத் தெய்வீகப் பணிகளுக்கு மட்டுமே, தன்னலமின்றித் தியாகமயமாய், இத்தெய்வீகக் கலையைச் சித்தர்பிரான் பயன்படுத்தி வந்தார். இவருடைய அருட்பணியால், பாரத நாடெங்கு பண்டைய ஆலயங்கள் பலவும் சீர் பெற்று, ஆறு கால பூஜைகளும் வளம் பெற்றன.

வல்லம் தஞ்சாவூர்

இக்கலையை அவரிடம் இருந்து கவரும் பொருட்டு அவரை மிரட்டித் துன்புறுத்திய போது, “எம் கலை இத்தோடு களை(ல)யட்டும்” என்று சாபமிட்டு, காற்றோடு காற்றாய் மறைந்தார். அதோடு அபூர்வமான ஸ்வர்ணாகர்ஷண சக்திகள் நிறைந்த “ரசவாதப் பூண்டு” எனும் சித்த மூலிகையும், இந்த பூமியினுள் தன்னை இழுத்துக் கொண்டு மறைந்தது. இதன் பிறகு, கலியுகத்தில் இவ்வரிய தெய்வீகக் கலையை அறிந்த ஒரு சிலரும் இவற்றைத் தெய்வீகக் காரியங்களுக்கு மட்டும் கடைபிடிக்கும் சங்கல்பம் பூண்டவர்களாய், தம்மை ஒரு போதும் வெளிக்காட்டாது, பூமியின் ஏதோ ஒரு மூலையில் மிகச் சாதாரணமாக வாழ்ந்து அருட்பணி ஆற்றி வருகின்றனர்.

மாமுனிகள் மறைந்து வருவது, மக்கள் சமுதாய உதாசீனத்தாலேயே!

கலியுக மக்களின் பேராசை, சுயநலம், பக்தியின்மை, உத்தமர்களை, சத்குருமார்களைத் துன்புறுத்துதல், சற்குணப் பெரியோர்களை மதியாமை போன்ற தீச்செயல்கள் காரணமாகவே, பல சித்தர்களும், மஹரிஷிகளும் காலப்போக்கில் பூவுலகை விட்டு மறைந்து விட்டனர்.

தற்போதையக் கலியுக பூமியில், மீண்டும் சித்தர்கள், மஹரிஷிகள் தோன்றுவது மிகவும் அரிதாகி வருகிறது. இதற்குக் காரணம் கலியுக மக்களின் – உத்தமரை மதியா உதாசீனத் தீயகுணமும், சுயநலப் போக்கும் பேராசையும், உழைக்காமல் சம்பாதிக்கும் துர்க்குணமும், ஏமாற்றிப் பொருளைப் பறிக்கும் துர்குணமும் ஆகும். கலியுகத்தில் உத்தம சத்குருமார்கள் படும் பெரும் வேதனைகளில் இயற்கையாகவே ஏற்படும் சாபங்களால்தாம் பகைமை, விரோதம், குரோதத்தாலும், வன்முறை, பயங்கரவாதம், போர்கள் போன்றவை கலியுலகில் பெருகி வருகின்றன.

ஸ்ரீநடராஜப் பெருமான் ரிஷிவந்தியம்

பூவுலகின் தெய்வீக மையமாகப் புனிதமான பாரதம் துலங்குவதால், இங்குதான் ஏதோ ஓரளவு சித்தர்களின், மஹரிஷிகளின் நடமாட்டம் உள்ளது. அதுவும் நல்லோர்களை, ’நம்பிக்கை உள்ளோரை, சத்தியப் பூர்வமாக நன்கு திருந்தி வாழ விழைவோரைக் காத்திடவும்’ எனவும் நன்கு அறிந்திடுக! எனவே, புனிதமான பாரதத்தில் பிறந்தோர்க்கு, அகில உலக ஜீவன்களின் நன்மைக்காகக் கடமைகளை ஆற்ற வேண்டிய பொறுப்புகளும் நிறையவே உண்டு. இவற்றில் எதையும் ஆற்றாது சுயநலமாக வாழ்வோர்க்கும் பிறவித் தளைகளே மிஞ்சுவதாகும்.

பூமியில் வந்திறங்கி வருத்தும் பிறலோகத் தீய சக்திகள்

கலியுகத்தில் தற்போது பிற லோகங்களில் இருந்து வந்திறங்கும் தீய சக்திகளும், தீயவர்களும் மானுட, உருவில் உள்ளே வந்து புகுந்து மானுடர்களைத் திசை திருப்பி, மனித மனதை ஆக்ரமித்துத் தீயவற்றைப் பரப்பி வருகின்றனர்.

எந்த தெய்வங்களிடம் இருந்து நல்வரங்களைப் பெற்றார்களோ, அதே தெய்வ மூர்த்திகளை எதிர்த்த அரக்கர்களைப் போல், தீய சக்திகளைப் பரப்புவதே இத்தகைய பிற லோகத் தீவினையாளர்களின் பெருந் தீய நோக்கமாகும். நல்லவிதமான தெய்வீகப் பூஜா பலன்களால்தாம் இவற்றிலிருந்து கலியுக மக்கள் தம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.

பூமியில் உள்ள தீயவர்களையாவது எவ்வகையிலேனும் தெய்வ வழிபாடுகளை, தக்க தான, தர்மங்களை ஆக்க வைத்து மாற்றி விடலாம். ஆனால் அரக்க குணங்களின் ஒட்டு மொத்த வடிவாய் வந்திருக்கும் பிறலோகத் தீயவர்கள் பூமிவாழ் மக்களை மது, போதை, வன்முறை, காமவெறிக் குற்றங்களைப் புரியத் தூண்டி விடுவார்கள். பஞ்சமா பாதகங்களுக்கும் மனிதன் அடிமையாவதால் தானே, நல்ல குணம் உடையவனும், கலியுகத்தில் சிறிது காலத்தில் தீய பழக்கங்களுக்கு ஆளாகி மீளா அடிமையாகி விடுகின்றான்.

ரிஷிவந்தியம்

கலியுகத்தில் பல நாடுகளிலும், குறிப்பாக மேலை நாடுகளில், மனித வடிவில் புகுந்திருக்கும் இத்தகைய தீய சக்திகளை வெல்வது, மாற்றுவது மிக மிகக் கடினமானதாகும்.

எனவே, இவர்களிடம் இருந்து நல்லோரையும், ஒன்றுமறியாப் பாமரர்களையும் காத்திடவே, பூவுலகிற்குச் சித்தர்களும், மஹரிஷிகளுடம் ஓரளவு வருகின்றனர். எனினும், உத்தமர்களின் சத்குருமார்களின் வேண்டுகோளுக்கு ஏற்பச் சித்தர்களும், ரிஷிகளும் குறித்த நாட்களில் பல தலங்களுக்கு வருகின்றனர். இதில் மஹரிஷிகளும், மாமுனிகளும் பூவுலகிற்கு முழுமையாக வந்தருளும் நாளே “ரிஷி பஞ்சமித் திதி” நாளாகும்.

உத்தம நிலைகளில் உவக்கும் தரிசனம்

எனவே, நல்லோர்கள் தெய்வீகத்தில் சற்றே உத்தம நிலைகளை அடைந்தால்தான், சித்தர்கள், மஹரிஷிகளின் மகத்தான தரிசனத்தைப் பெற்றிடலாமன்றோ! தியாகமயமாகப் பிற ஜீவன்களுக்கு உதவும் வகையில் – தினமும் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதித் துதி போன்ற மறை இறைத் ஓதி – இவற்றை உலக ஜீவன்களின் நலன்களுக்காக – சிறிது அன்னதானத்துடன் – அதாவது உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர்கள் உள்ளனரோ, அத்தனை உணவுப் பொட்டலங்களை நிதமும் அளிப்பதும் – சிறிது தியாகத்தைப் பூண்டு கொண்டு வாழும் முறைதானே!

நீங்களே அறியா வகையில் பல தலைமுறைகளைத் தாண்டிய உங்களுடைய முன்னோர்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காகத் தம் உயிரை ஈந்து தியாகம் புரிந்திருக்கையில், தினமும் குறைந்தது ஐந்து உணவுப் பொட்டலங்களை தினமும் அன்னதானமாக அளிப்பது கடினமானதா! மனமிருந்தால் நல்மார்கமுண்டே! இதனை காபி, டீ, சினிமா, ஹோட்டல் செலவுக்கு ஆவது போலக் கொள்ளலாமே!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ரிஷிவந்தியம்

மஹரிஷிகள் வந்திறங்கும் ரிஷிவந்திய ரிஷிகேந்திரம்

திருஅண்ணாமலை அருகே உள்ள ரிஷிவந்தியம் தலம் மாமுனிகளின் பூஜைக் கூடமாக அமைந்து சிவபெருமானே அருளும் தலம். பல்வகை அபிஷேகங்களிலும், சுயம்பு லிங்கத்தின் மேல் அம்பிகையின் திருமுகம் தோன்றும் அதியற்புதத் தலம். அனைத்து மஹரிஷிகளும் வருடம் ஒரு முறையாவது இங்கு வந்து தரிசித்து வழிபட்டுச் செல்ல வேண்டும் என்ற தேவ நியதி உள்ளது. மேலும், மஹரிஷிகள் பூவுலகில் குறிப்பாக இத்தலத்தில் மானுட வடிவில் வழிபடுவதையே பெரும் பேறாகக் கொள்வதால்,

நீங்கள் பார்க்கின்ற வகையில் வேட்டி, துண்டு, கோட், சூட், பாண்ட, அணிந்து எவ்வகையிலும் எம்மஹரிஷியும் வரக் கூடும், “சித்தர்கள், மஹரிஷிகள் ஜடாமுடியுடன் தான் கலியுகத்தில் வர வேண்டும். இப்படித்தான் வருவார்கள்!” எனக் கணக்குப் போடாதீர்கள்! உண்மையான இறைப் பகுத்தறிவைப் பூண்டால்தான், மஹரிஷிகளின் சத்திய வடிவம் புலப்படும்.

கலியுகத்தில், “ரிஷிவந்தியம்” சிவத்தலத்தின் மகத்தான மஹிமைகளைப் பலரும் அறியாது இருக்கிறார்கள். “வந்தியம்” என்பதற்கு எத்தனையோ தெய்வீக அர்த்தங்கள் உள்ளன. “வந்தியம்” எனில், ‘நிரந்தரமாகப் பூசித்தல், சாசுவதமான அருளைப் பெறுதல், என்ற அர்த்தங்கள் உண்டு. “ரிஷிவந்தியம்” சிவத்தலத்தில், ரிஷி பஞ்சமிநாளில், அனைத்துக் கோடி மஹரிஷிகளும் வந்து தரிசிப்பதால், இங்கு இத்தினத்தில் காலை முதல் இரவு வரை நாள் முழுதும் தங்கி இருந்து வழிபடுவோர்க்கு, வாழ்வில் பெரும் பேறுகள் கிட்டும்.

மஹரிஷிகள் பூஜிக்கும் ‘ரிஷிகளின் கேந்திராலயம்’

திருஅண்ணாமலை அருகில் “ரிஷிவந்தியம்” என்ற சிவத்தலம் ‘ரிஷிகளின் கேந்திராலயம் என்று சித்தர்களால் போற்றப்படுகின்ற – கோடானு கோடி மஹரிஷிகளின் போக்குவரத்து நிறைந்த தலம் எனில், இதனைத் தரிசிப்பதே பெரும் புண்ணியத்தால் வருவதன்றோ! அனைத்துக் கோடி மாமுனிகளின் வருகையை சாதாரண மானுடக் கண்களால் அல்லது மனிதக் கண்பூர்வமாகக் காண்பது அரிது ஆதலின், தேக ஸ்பரிசமாக, தேவேந்திர சக்திகமாக நிரவி, இங்கு “தேவ வந்திய சக்திகள்” ஆலயம் முழுதும் பரிபூரணிக்கின்றது.

ஸ்ரீமுருகப் பெருமான் ரிஷிவந்தியம்

ஒரு யுகத்தின் ரிஷி பஞ்சமி நாளில், மூன்று கோடி ரிஷிகளுக்கு மேல், தங்கிப் பூஜித்த அற்புதச் சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. அனைத்துக் கோடி மாமுனிகளும் தங்கிப் பூஜித்துச் சிறப்பித்தச் “சிவப்பிரகாச பூமி” எனில், என்னே இதன் மகத்துவம்! நம் மானுடக் கண்களால் காணும் “ரிஷி வந்தியம்” ஆலயம் வேறு, தேவர்களுக்குத் தோன்றும் ஆலய அமைப்பு வேறு, அத்தனை கோடி மகரிஷிகள் குழுமிய தலம் எனில் எத்தகைய பிரம்மாண்டமான “சிவபூமியாக” இது தோன்றிட வேண்டும்.

இத்தலத்தில் “ரிஷிபஞ்சமி” தினத்திலும், மாதந்தோறும் பஞ்சமித் திதியிலும் அபிஷேக, ஆராதனைகள் செய்து லிங்கத்தில் மனதில் தியானித்து வந்தால், அத்தனைக் கோடி மாமுனிகளும் பூஜித்த “சிவத் தருணம்” தத்ரூபமாக உங்களுக்குள் தோன்றி, குடும்பத்திலும் மங்கள சக்திகளை அளிக்குமே!

சிவபூமியில் சிவச் சிந்தனையாளர்கள்!

“ரிஷிவந்தியத்தில்”, ரிஷிபஞ்சமி நாளில் எண்ணற்ற தவலோக அனுபூதிகள் இன்றும் என்றுமாய் நிகழ்கின்றன். விண்ணுலகில் எத்தனையோ கோடித் தவலோகங்கள் இருந்தாலும், அனைத்து மகரிஷிகளும் பூவுலகில் தவம் பூணுவதையே பெரும் பேறாகக் கொள்கின்றனர். காரணம், அனைத்துத் தெய்வ அவதாரங்களும் சமைந்த புனிதமான பூமி அன்றோ நம் பூவுலகு!

ஓவ்வொரு மஹரிஷிக்கு அந்தந்தக் கல்ப காலத்திற்குமான உரிய சங்கல்ப நியதிகள் பூவுலகில்தாம் மஹரிஷிகளுக்குப் பெரும்பாலும் இத்தலத்தில் தான் அளிக்கப் பெறுகின்றன. உதாரணமாக, சுப மகரிஷி என்பார்க்குப் பழமையான சிவாலயங்களில் தீர்த்தங்களில் நீர்ச் சுனையை மீண்டும் தோன்ற வைக்கும் அருட்பணி பூவுலகில் தற்போதைய கல்ப காலத்தில் இத்தலத்தில்தான் அளிக்கப் பெறுகிறது.

தற்போது இமாலயத்தில் மறைந்து பூரிக்கும் “சரஸ்வதி” எனும் புனித நதி, பூவுலகெங்கும் 6000 பண்டையத் திருத்தலங்களில் மீண்டும் நீரோட்டமாகப் பூத்துப் பூரித்திட வேண்டும் என்பது சுபமண்டல மகரிஷிகளுக்கு அளிக்கப் பெறும் தற்போதையக் கல்ப நியதிகளாகும். இத்தகைய கல்ப காலச் சங்கல்ப நியதிகள் கோடானு கோடி மாமுனிகளுக்கும் இத்தலத்தின் அளிக்கப்படுகின்றன.

(இறை தரிசனம்) கண்டவர் மீண்டும் வருவரோ! யாமறியோம் பராபரமே!

ஸ்ரீமுத்தாம்பிகை ரிஷிவந்தியம்

கலியுலகில், சித்தர்களும், மஹரிஷிகளும் பூவுலகை விட்டுப் பிற லோகங்களுக்குச் சென்று வருகின்றார்கள் எனும் செய்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளதே, இது ஆன்மீகத்தை நம்பி வாழும் மக்களுக்கு பீதி அளிக்காதா?

மக்கள் முறையாகப் பூஜைகளை ஆற்றாததும், பூஜைகளை நடத்தித் தரும் உத்தமர்களைச் சமுதாயம் மதிக்கத் தவறியதும் தானே ஐயா, சித்தர்களும், மஹரிஷிகளும் மீண்டும் நிச்சமாகத் திரும்பி வந்திட நல்லருள் பூரிக்கும் அன்றோ! ஆனால் முனைந்து சேர்ந்து சத்சங்கமாக அரும்பாடு பட்டு நன்கு உழைத்திட வேண்டும்.

சமுதாயத்தில் இறைப் பூஜைகளில் அவநம்பிக்கையும், உத்தம சத்குருவை மதிக்காதத் தன்மைகளும் பெருகி வருவதால்தான் இவ்வாறு நிகழ்கிறது. எனவே, அனைத்து மஹரிஷிகளையும் பூவுலகிற்கு வந்து சேரும் “ரிஷிபஞ்சமி” நாளிலாவது உங்களுடைய அர்க்ய வழிபாடுகளில் அனைவரையும் ஒரு சேர போற்றிப் பிரார்த்தனைக்குள்ளாகி, உங்களுக்குத் தெரியாத அனைத்து மஹரிஷிகளின், சித்தர்களின் பெயர்களை எழுதிக் கொண்டு, ஒவ்வொருவரின் பெயரையும் ஓதி, ‘ஸ்ரீஅகஸ்திய மஹரிஷிம் தர்ப்பயாமி, ஸ்ரீவசிஷ்ட மஹரிஷிம் தர்ப்பயாமி, ஸ்ரீகௌசிக மஹரிஷிம் தர்ப்பயாமி’ என்பது போல, அந்தந்த சித்தருக்கு, மஹரிஷிக்கு என ஓதி மூன்று முறை பெயரைச் சொல்லி மூன்று முறை அர்க்யம் அளித்திடுக!

இவ்வாறு ஒவ்வொருவரும் 108, 1008, 100008 சித்தர்களுக்கு, மஹரிஷிகளுக்குத் தர்ப்பணம் அளித்தால், ரிஷிபஞ்சமி நாளே நன்கு பூரித்திடும் அன்றோ! ரிஷிகள் தினமும் வந்து வழிபடும் திருஅண்ணாமலை, லால்குடி, சித்துக்காடு, குற்றாலம் போன்ற ரிஷிகுணத் தலங்களும் பல உண்டு. இத்தலங்களில் பஞ்சாமிர்தக் காப்புப் படைத்து வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.

“ரிஷி பஞ்சமி நாளில்” 80 வயது நிறைந்து வாழும் உத்தமத் தம்பதிகளை உத்தம மாமுனித் தம்பதிகளாகப் பாவனையாகக் கொண்டு, பாதபூஜை நடத்தி வழிபடுதலால், குடும்பத்தைப் பீடித்திருக்கும் தரித்திர நிலைகள் அகல உதவும். பஞ்சமித் திதித் தோறும் இதனை நன்முறையில் ஆற்றி வருதலும் துரிதமான பலன்களைத் தருவதாகும்.

திருப்பாற்கடல்

திருப்பாற்கடல் ஸ்ரீநிறைவளையாம்பிகை

வளையல் சார்த்தி வழிபட வேண்டிய திருப்பாற்கடல் ஸ்ரீநிறைவளையாம்பிகை  (சென்னை – காவேரிப்பாக்கம் – வேலூர் மார்கத்தில், காவேரிப்பாக்கத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்திருப்பதே “திருப்பாற்கடல்” தலமாகும்.)

இரண்டு பழமையான சுயம்பு லிங்கச் சிவாலயங்கள் மற்றும் மிகவும் அபூர்வமாக ஆவுடை மேல் எழுந்தருளும் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாளின் ஆலயம் கூடிய திருத்தலமே “திருப்பாற்கடல்” ஆகும். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபட வேண்டிய நட்சத்திரத் தலம்.

இங்குள்ள ஸ்ரீவாலீஸ்வரர் சிவாலயத்தில் அருளும் ஸ்ரீநிறைவளையாம்பிகைக்கு ஆடிப் பூர நாளில் வளையல்கள் சார்த்தி, சிறிது வளையல்களை இறைப் பிரசாதமாகப் பெற்று, கர்பிணிப் பெண்களுக்குச் சீமந்த நாளில் சார்த்துவது விசேஷமானதாகும்.

ஆடிப்பூர நாளில்தான் அம்பிகைக்கு வளையல் சார்த்துதல் என்றல்லாது, மாதந்தோறும் பூர நட்சத்திர நாளிலும், ஏனைய நாட்களிலும் சார்த்தி வழிபட்டிடலாம். மேலும், வளையல்களில் “அட்சய அட்சர சக்திகள்” நிறைந்த அமிர்தபுல சக்திகளும் தோன்றி சந்ததிகளின்  நல்விருத்திக்கான சக்திகளையும் தோற்றுவிக்கின்றன. இவை சீதள சீதாம்பர சக்திகளைக் கொண்டவையாகும். ஆம், குளிர்ந்த தன்மை உள்ள அக்னி வகைகளும் உண்டு. இவை கபாலச் சூட்டைத் தணித்து மனதுக்கும் நல்அமைதியைத் தரவல்லன. வளையல் சப்தம் இல்லத்தில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தால்தான், வீட்டில் சாந்தம் நிலவும், இல்லையேல் தம்பதிகள், பெற்றோர்கள் – பிள்ளைகள் இடையே சண்டை சச்சரவுகள் உண்டாகிக் கொண்டிருக்கும்.

கண்ணாடி வளையல்களை நிறைய அணிந்தால் “உடைந்து போய் விடுமே, அபசகுனம் ஆகுமே!” என்று பலரும் எண்ணுகிறார்கள். கண்ணாடி வளையல் அணிவது உத்தம மங்கள சக்திகளைப் பொழிவதாக மட்டுமல்லாது, பெண்களுக்குக் கவன சக்தியும், நினைவாற்றலும் விருத்தியாக வேண்டும் என்பதற்காகவும் தானே! இத்தகைய பூர நட்சத்திர தின வளையல், வழிபாடுகள் சந்ததிகளையும் காக்க உதவும். பிளாஸ்டிக் வளையல்கள் கூடாது. இயற்கையான ரப்பர், கண்ணாடி வளையல்களே ஏற்புடையவை.

ஆவணி மூலம்

ஆவணி மூல வழிபாட்டுத் தலம் – மூல நட்சத்திரக்காரர்களுக்கான ஆயுட்கால பூஜைத் தலம் அத்தாழநல்லூர் ஸ்ரீஆதிமூலப் பெருமாள் ஆலயம்!

மூல நட்சத்திரச் சதுர் பாதங்கள்

27 நட்சத்திரங்களுக்கும் நந்நான்கு பாதங்கள் உண்டு. இதில் மூல நட்சத்திரத்திற்கு உள்ள நான்கு பாதங்களும், 
ஆ(த)பாதம்
வதூபாதம்
நீரஜ பாதம்
ஹிதபாதம்
-என்பதாக “ஆவநீ:” சக்திகளைக் கொண்டு துலங்குகின்றன. ஆவஹ்நீயம் என்பது ஒரு வகை அக்னியாகும். இது மூல நட்சத்திர மண்டலத்தில் தோன்றுவது. நரசிம்மரின் உக்ர சக்தியில் பூவுலகிற்கென விஷேமாகத் தோன்றி அருளப் பெற்றது.

பானகத்தில் பூரிக்கும் சதுராமிர்தங்கள்

நரசிம்மப் பெருமாளுக்கு மிகவும் ப்ரீதியான பானகத்தில், நீர், சுக்கு வெல்லம், ஏலக்காய் என்ற நான்கும் மிகவும் முக்கியமாகச் சேர்க்கப்படுகின்றன. இவற்றுக்குப் “பானகச் சதுர்பத பாதங்கள்” என்று பெயர். பானகம் தயாரிக்கும் போது ஓதப் பெறும் இறைத் துதியில் இவை நன்கு விளக்கப் பெறுகின்றன.

பானகத்தில் சேரும் தீர்த்த நீருக்கு “ஜலஜ்வாலம்” என்று பெயர். அரிதிப் பெரும்பான்மையான உஷ்ணத்தைக் கொண்ட இத்தீர்த்த நீரை அருட்புனலாக உலகிற்கு அளித்தவரே “ஜ்வாலா நரசிம்மர்” ஆவார்.

“வஷட்கார பதயே நம:” என்று விஷ்ணுவைப் போற்றுவது உண்டு. இந்த அத்தாழநல்லூர் தலத்தில் 18 நரசிம்மப் பதபாதப் படிகளிலும் “வஷட்கார நரசிம்மபதயே நம:” என ஓதியவாறு வழிபட்டுத் தியானம் புரிதல் சிறப்புடையதாகும். பழங்காலத்தில் இதனை 18 தலைமுறைகளுக்கான பித்ருப் படிக்கட்டுகளாகப் போற்றி வழிபட்டு வந்தனர்.

எனவே, மூல நட்சத்திரந் தோறும் நரசிம்மருக்குப் பானகம் படைத்து தானமளித்து வருவதால், குடும்பத்தில், வியாபாரத்தில், தொழிலில் உள்ள கொந்தளிப்புகளும் தணிய உதவும்.

ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள் கரூர்

கிரானைட் தொழில் வளர்ச்சிக்கு உதவும் நரசிம்மத் தலம்

கிரானைட் என்பது பூமி ஸ்தம்பக் கல் ஆதலினாலும், பானக நிறத்தை ஒத்து தூய மூல கிரானைட் கற்கள் அமைவதாலும், கிரானைட் தொழிலில் இருப்பவர்கள் அத்தாழநல்லூர் நரசிம்மரை அடிக்கடி வழிபட்டு வருதல் வேண்டும். கிரானைட் கற்கள் இறைப் பணிகளுக்கும், நற்பணிகளுக்கும், நற்காரியங்களுக்கும் நன்முறையில் பயன்படுவதே நன்று.

டெண்டர் எடுத்துத் தொழில் புரிவோர், கிரானைட் ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்காரர்கள், ஆவணி மூலத்திலும், மாதந்தோறும் மூல நட்சத்திர நாளிலும் நரசிம்மரை வழிபட்டு, 18 பாத்திரங்களில் பானகத்தைப் படைத்துத் தானம் அளித்து வரவேண்டும்.

அத்தாழநல்லூரில் நரசிம்மருக்கு பானகம் நைவேத்யம் செய்து, பானகத்தைப் பிரசாதமாகப் பெற்று, கிரானைட் கற்களின் மேல் தெளித்துப் பூஜித்து வந்தால், கற்களில் உள்ள பல தோஷங்களும் விலகும். மேலும், ஏற்றுமதியான, விற்பனையான கற்கள் தோஷங்கள், கல் குற்றங்களால் திருப்பி அனுப்பப்டாமல் தற்காத்துக் கொண்டிடலாம்.

ஏழரை நாட்டுச் சனி தசைக் காலத்தில், கர்ம வினைப் பூர்வமாகத் துன்பங்களுக்கு ஆளாவோர், மூல நட்சத்திர நாளில், பெருமாளை, குறிப்பாக கரிகிருஷ்ணப் பெருமாளையும், நரசிம்மரையும் வழிபட்டு வருதல் வேண்டும்.

எந்நேரமும் கையில் ஒரு சந்தனக் கோலை நரசிம்ம ஸ்தம்பமாக வைத்துக் கொண்டு எப்போதும் நரசிம்ம தியானத்தில் துய்த்து நன்முறையில்  ஆண்ட கேரள மன்னராகிய மார்த்தாண்ட வீரவர்மருக்கு, இத்தலத்தில் நரசிம்ம தரிசனம் கிட்டியவுடன் நரசிம்ம அர்ப்பணமாகச் சந்தனக் கோல் மறைந்து விட்டது!

பைரவருக்கு மரத்தாலான தண்டம் அளிப்பதாக நேர்த்திப் பிரார்த்தனை இருப்பது போல, அக்காலத்தில் இங்கு நரசிம்ம ஸ்தம்பத்திற்குச் சந்தனக் கோலை நேர்த்தியாக வைத்து அளிப்பர். சந்தான பாக்யத்திற்காக அதாவது குழந்தைப் பேறு நேர்த்திக்காக, நரசிம்மருக்கு “ஸ்வர்ண ஸ்தம்பம்” என்பதான “தங்கக் கோல்” அளிக்கும் நேர்த்தியும் சிறப்புடையதே!

ருண பாக்கி

தற்காலத்தில் கலியுகத்தில் உலக நாடுகள் பலவற்றிலும் – பணக்காரரோ, ஏழையோ, தொழிலதிபரோ, நடுத்தரக் குடும்பமோ – சகல மக்களின் உடலையும், மனதையும் பாதித்து, பலத்த மன வேதனைகளுக்கும், நோய்களுக்கும் ஆளாக்கிப் பெரும் துன்பங்களுக்கு ஆளாக்குவது அளவுக்கு மீறிய கடன் பிரச்னைகளே ஆகும்.

தான் வாங்கின கடன் தொகையை விட வட்டித் தொகை பன்மடங்காகப் பூதாகாரமாகப் பெருகி, தூக்கத்திலும் விழித்த நிலையிலும், அலுவலகத்திலும், நடுரோட்டிலும் பயமுறுத்துகின்ற பெரும் பிரச்னையாக உள்ளது. இதற்கெல்லாம் ஆன்மீகத்தில் தான் முழுமையுடன் தீர்வுகளைப் பெற முடியும்.

ஆனால் ஆன்மீகத் தீர்வு என்றாலே “காலையும், மாலையும், விளக்கோ, ஊதுவத்தியோ ஏற்றி வைத்து, இத்தனை முறை வலம் வந்தால் கடன் தீர்ந்து விடும்!” என்ற எளிய வகையிலான தீர்வுகளைத்தான் பலரும் எதிர்பார்க்கின்றார்கள். இது எப்படி ஐயா சாத்யமாகும்? ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் கடனை வாங்கி விட்டு, கடனைத் தந்தவருக்கு ஒரு பைசா கூடத் திரும்பித் தராது தப்பிக்க எண்ணுவது தர்மமாகுமா?

ஆனால் எவ்வகையில் “கடன் சேர்ந்தது” என்பதைப் பொறுத்துத் தான் இதற்கானத் தீர்வுகள் அமையும். பலருக்கும் வியாபாரம், திருமணம், அவசர மருத்துவச் செலவு, படிப்பு வீடு, நிலம் வாங்குதல் போன்றவற்றில் சற்றுக் கூடுதலாகவே, தன்னை விஞ்சிய நிலையில் கடன்கள் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

கடனை “ருண பாக்கி” அதாவது குறித்தவர்களிடம் இருந்து பல ஜென்மங்களிலும் திரண்டு வந்துள்ள “கர்ம வினைச் சொச்சம்” என ஆன்மீகத்தில் உரைக்கின்றார்கள் அதாவது “ருண பாக்கி” தீர்ந்தால்தான் கடன் தீரும்.

நல்முறையில் பண வரவிற்கு உதவும் “தன சக்திகள்” பல உண்டு. பணம் நிறைய வந்து சேர்வது மட்டும் “தனலக்ஷ்மி கடாட்சம்” என்று ஆகாது, வருகின்ற பணம் முறையாகத் தங்குவதும், முறையாக வளர்தலும், முறையாகச் செலவு ஆவதும், அதர்மமான வழிகளில் கரையாது இருப்பதும், சிலவகை “லட்சுமி கடாட்ச்” அம்சங்களாகும். எல்லாவற்றையும் விட, பண வரவால் பீதியோ, பயமோ ஏற்படாமல், நல்ல வகையில் மன நிம்மதியுடன் வந்து நிரந்தரமாகத் தங்க வேண்டும்.

உலகில் அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்கின்ற நூற்றுக்கு நூறு சதவிகிதத்தினர், வீடு வாங்கக் கடன், பண்டிகைக் காலக் கடன் என்று பல கடன்களை அலுவலகத்தில் வாங்கி, மாதா மாதம் வட்டியும், முதலும் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது மக்களுடைய டெபாசிட் பணத்திலிருந்து வருவதால் மிகவும் கவனமாக நன்கு சேவை புரிதல் வேண்டும்.

இவ்வாறு பல வகைகளில் சேரும் கடன் வகைகளுக்கான “காரண விளக்கங்களை” முதலில் நன்கு ஆன்மீக ரீதியாகப் புரிந்து கொண்டால்தான் பெருகி வரும் கடன் தொல்லைகளுக்கு ஆன்மீக ரீதியாகத் தீர்வுகளைப் பெற முடியும்.

செல்வம் வரும் முறை, செல்வம் தீரும் முறை, செல்வம் சொத்துக்களாகும் முறை, வரும் பணம் செலவாகும் முறை போன்ற அனைத்திலும், ஒவ்வொரு பைசாவின் வருமானத்திற்கும், செலவிற்கும் எத்தனையோ காரண, காரியங்கள் உண்டு.

“தன ரேகை சக்திகள், தன பாந்தவ சக்திகள், தனக் கூடல் சக்திகள்” எனப் பல உண்டு. இவற்றில் “தன ரேகை சக்திகள்தாம்” பெருகிய கடன்களைத் தீர்க்கவும், புதுக் கடன்களை சேர்ப்பதைத் தவிர்க்கவும், பண வரவைப் பெருக்கவும், தன வரவு சக்திகள் விருத்தியாகவும் உதவுவதாகும்.

பூக்களில் உள்ள மஞ்சள் நிறமான ஆன்ம சத்துப் பதிந்த “மகரந்தக் கேசரம், மகரந்த சேகரம், மகரந்தக் கேந்திரம்” ஆகிய மூன்று வகை மகரந்தப் பகுதிகள் உண்டு. இதில் மகரந்த சேகரம் தாவர இன விருத்திக்கு உதவுவதாகும் எனத் தொடக்கப் பள்ளிக் கல்வியில் கற்றிருப்பீர்கள். இவ்வாறு மகர சக்திகள் உள்ள திரவியங்களைச், சேர்த்து “தனசேகர ஸ்புடம், தன கேசர ஸ்புடம்” போன்ற வகையான வழிபாட்டு சாதனங்கள் சித்தர்களால் அளிக்கப்படுகின்றன. முதலில் “தன சேகர ஸ்புடத்தில்” வேத சக்திகள் நிறைந்த மூலிகைத் திரவிய சக்திகள் சேர்க்கப் பெறும். இவைதான் “தனகார்ஷண மூலிகைகளாக” ஆகி தனாகர்ஷணச் சக்கரங்கள், யந்திரங்கள், தனக்கோல் வகைகளாக அளிக்கப்படுகின்றன.

பொதுவாக மூதாதையருக்குரிய படையல், தர்ப்பண, திவசப் பிரார்த்தனைகளை ஒழுங்காகச் செலுத்தாதவர்களுக்கு, மூதாதையர்களின் சாபங்களே மருத்துவச் செலவு, களவு போனதான செலவு, விரயச் செலவு போன்றவையாக வந்து வருத்தும்.

மேலும் நிறையப் பிரார்த்தனைகளை, நேர்த்திக் கடன்களை வேண்டிக் கொண்டு விட்டு, அவை நிறைவேறிய பின் நேர்த்திக் கடன்களை மறத்தல் அல்லது நேர்த்திக் கடனாகச் செலுத்துவதற்குப் பணமும், மனமும் இல்லாமல் ஒதுக்கி விடுதல், “தம் பிரார்த்தனைகள் தாம் நிறைவேறி விட்டதே, இனி எதற்குக் காணிக்கை!” என்று உதாசீனம் செய்தல் போன்றவையும் பணக் கடன்களாக ஆகும்.

சில வகைத் திட்டங்களில், திட்டத்திற்கு மேல் அதிகம் செலவாகி, கடனாளியாகித் திரும்பச் செலுத்த முடியாமல் தவித்து, வட்டி மிகவும் பெருகி விடும். பிறரிடம் இருந்து பூர்வ ஜன்மங்களிலோ, தற்போதைய வாழ்க்கையிலோ கடன் தொகை பெற்று, அவற்றைத் திரும்பச் செலுத்துவதற்கான வாய்ப்புகள், உதவிகள் வந்தும் அவற்றை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாது ஏமாற்றுதல் அல்லது தவிர்த்தாலும் பணம் தவறான வழிகளில் விரயமாகிப் பெரும் கடன் சுமை ஏற்படும்.

குறிப்பாக, நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் கடன் வாங்கித் திருப்பித் தராமல் ஏமாற்ற அல்லது காலம் கடத்த முற்பட்டில், எவ்வளவு பணம் வந்தாலும் அதற்கு உடனேயே செலவுகள் வந்து அடிக்கடிக் கூடுதலாக கடன் வாங்க வேண்டிய நிர்பந்தங்கள் வந்து சேர்ந்து மாதாமாதமாகக் கடன் சுமையும் நன்கு பெருகி விடும்.

உலகில் ஒவ்வொருவருக்கும், பெற்றோர்கள், சகோதர, சகோதரிகளைப் பேணிப் பாதுகாத்து கல்வி கற்கச் செய்து, திருமணம் செய்து வைக்கின்ற நிலை வரையும் அதற்கு மேலாகவும் ஆற்ற வேண்டிய முறையானக் கடமைகள் நிறையவே உண்டு. ஆனால் தற்காலத்திலோ வேலைக்குச் சென்றவுடன், குடும்பத்தையே மறந்து சுயநலமாகச் சோம்பித் திரிகின்றவர்களே அதிகம். இவ்வாறு குடும்பத்திற்காக ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றாது சுயநலமாகத் தனக்குத் தானே வாழ்ந்து குடும்பக் கடமைகளை முடிக்காது இருப்போர்க்கு, வாழ்வில் எப்போதும் எந்நேரத்திலும் கடன் சுமை இருந்து கொண்டே இருக்கும். இதற்கான தக்க நிவாரணங்களை ஆற்றினாலன்றி ஒரு போதும் தீர்வுகளைப் பெற முடியாது.

தீயத்தூர்

நம்பிக்கை துரோகம் கடனை மலையளவாக்கும்

பிறர் தம்மைப் பரிபூரணமாக நம்பி, நம்பிக்கைப் பூர்வமாக ஒப்படைக்கும் பொருளைத் தனக்காகச் சுயநலமாக ரகசியமாக வைத்துக் கொள்தலும், பயன்படுத்துதலும், திருப்பித் தராமல் ஏமாற்றுதலும், குடும்பத்தில் பலத்த ஆடம்பரச் செலவுகளாக உருவெடுப்பதுடன், கணவன், மனைவி, பிள்ளை போன்றோர் தொடர்ந்து திசை மாறி வாழ்கின்ற நிலைகளும் ஏற்படும். இதன் மூலமும் பலவழிச் செலவுகளாகக் கடன்கள் மலையளவில் வந்து சேரும்.

தனக்குக் கௌரவம், பதவி, அந்தஸ்து வருவதற்குக் காரணமாகத் தனக்கு உதவியர்களை நன்றி மறந்து, ஏசி வாழ்வதாலும், தான் பெற்ற அனைத்து வசதிகளையும் இழக்கச் செய்து  பெரும் கடனாளியாக ஆக்கி விடும்.

இவ்வாறாக, ஒவ்வொருவரும் தனக்குக் கடன் சுமை சேர்ந்ததைப் பற்றி முதலில் தார்மீகமான முறையில் தனக்குள்ளேயே தீவிர மன விசாரம் செய்திடல் வேண்டும். இதற்குப் பல நாட்கள் ஆகும்.

கடனின் ருண பாக்கியை உணர்த்தும் தைல தீப சக்திகள்!

இதற்கான சிந்தனா சக்திகளை ஆக்கப்படுத்தவும், துரிதப்படுத்தவும், குறித்த வகைத் தைலங்களால் ஆன விளக்குகளை ஏற்றி வழிபட்டு வர, இத்தகைய தைல, ஜோதிக் கிரணங்கள் மூலம், கடன் வந்து சேர்வதற்கான காரணங்கள் முதலில் மன விசாரத்தில் நன்றாகவே புலப்படும். பிறகு, சிறிது சிறிதாக இவற்றைத் தீர்ப்பதற்கான மார்கமும், வழிபாட்டுப் பலன்களாகக் கிட்டும்.

மூன்றாம் பிறை நாளில், வெள்ளி சேர்ந்திட வரும் சுக்கிர கிரக நட்சத்திர நாட்களில் அம்பாள், பெருமாள் சன்னதிகளில் தனசேகர சக்தித் தைலங்களால் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், கடன் சுமைக்கான காரணங்கள் புலப்படுவதுடன், கடன் தீருவதற்கான வழிமுறைகளும் கிடைக்கும்.

நம்பிக்கை, விடாமுயற்சி, நன்மனச் சிந்தனை இவற்றை ஆக்கப்படுத்திக் கடன் நிவாரண முறைகளை அளிப்பவையே தனசேகரத் தைல சக்திகளாகும். பலரும் தனகார்ஷண சக்தி மூலிகைகளைச் சுயநலமாகத் தவறான முறைகளில் பயன்படுத்த விழைகின்றனர் என்பதால்தான், இவை சித்சக்தி ரகசியங்களாகவே வைக்கப்பட்டுள்ளன. இத்தைலங்களைக் கொண்டு, தாமரைத் தண்டுத் திரிகளால் விளக்குகளை ஏற்றி வழிபட்டு வருதலின் மூலம் “லக்ஷ்மீ கடாட்சம்” நிறைந்த தாமரை மலர்ச் சக்திகள் தைல விளக்குத் தீபங்களில் நிறைந்து நற்பலன்களை அளிக்கும். ஆலயங்களில் ஏற்றப் பெறும் இவ்வரிய மூலிகைத் தைல தீபக் கதிர்களில் பொலியும் தனசேகர சக்திக் கதிர்கள் ஆயிரக் கணக்கான மக்களையும் அடைந்து அவர்களுக்கும் நன்மை பயப்பதால், பல்லாயிரம் மக்களுக்குச் சேவை செய்த தனபூரிதப் புண்ய சக்தியும், நன்கு திரண்டு வந்து அபரிமிதமான, பலன்களை அளிக்கும்.

‘தனசேகர மூலத் தைலம்’ கொண்டு பெருமாளுடைய நின்ற கோல மூர்த்தி, அமர்ந்த கோலப் பெருமாள் மற்றும் லக்குமி நாமமுடைய மூர்த்திகள் அருளும் தீயத்தூர், திருநின்றவூர் போன்ற திருமகள் கடாட்சத் தலங்களில் தாமரைத் திரி கொண்டு தீபம் ஏற்றுவது மிகவும் விசேஷமானதாகும்.

மேலும், பாற்கடலில் சந்திர மூர்த்தியே திருமகளுடன் தோன்றிய காரணத்தாலும், மூன்றாம் பிறைச் சந்திரனைச் சிவபெருமான் தன் சிரசில் ஏற்றமையாலும், இந்த ஆதிமூல மூன்றாம் பிறை தரிசனத்தைத் திருமகளும் முதன் முதலில் சந்திர மௌளீஸ்வரத் தரிசனமாகப் பெற்ற தலங்களும் லட்சுமி கடாட்சத் தலங்களாகும்.

லட்சுமி கடாட்ச சக்திகள் நிறைந்த மூன்றாம் பிறை நாளில், தனசேகர மூலிகைத் தைல தீப ஒளியுடன் மூன்றாம் பிறையைச் சந்திர சேகரப் பெம்மானின் சிரசு தரிசனமாகப் பூஜிப்பதும் விசேஷமானதாகும்.

தனசேகர மூலிகைத் தைலம் கொண்டு ஐந்து விளக்குகளை ஏற்றி, இவற்றின் சாட்சியாக லக்ஷ்மீ ஹோமம் ஆற்றுதல் மிகவும் விசேஷமான பலன்களைத் தரும். பல நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து இழந்தவர்கள் ஆவுடையார் கோயில் அருகே உள்ள தீயத்தூரில் சஹஸ்ர லக்ஷ்மீஸ்வரருக்குத் தனசேகரத் தைலக் காப்பிட்டுச் சன்னதி முழுதும் தனசேகர மூலிகைத் தைல விளக்குகளை ஏற்றி வழிபட்டு, 1008 தாமரை மலர்களை ஆஹூதியாக இட்டு ஹோம வழிபாடு ஆற்றுவது முதலீடுகளைக் கணிசமாகப் பெற உதவும். நல்வகையில் கடன் நிவாரண வழிகளையும் பெற்றுத் தரும்.

மாளய பட்சம்

பித்ருக்களுக்கான மஹாசக்திப் பூஜை மாளய பட்சம் !

புரட்டாசி மாத அமாவாசை மாளய் பட்ச அமாவாசை என நாம் அறிவோம். பித்ரு மண்டலங்கள், பித்ருலோகங்கள் நிறையவே உண்டு. இவை அனைத்திலும் பித்ருக்களின் நாயகராகிய ஸ்ரீமன் சூரிய நாராயண மூர்த்திக்கான ஆலயங்கள், பூவுலகக் கோயில் அமைப்புகள் போலவே உண்டு. ஆனால், பூவுலக ஆலய பூஜைகள் பலவற்றிலும் பூஜைகள் முறையற்று நடப்பது போலன்றி, புனிதமான பக்தி துலங்கும் மண்டலங்களே பித்ரு மண்டலங்கள் ஆதலின், அங்கே விசேஷமான பூஜைகள் மிகமிகப் புனித சக்திகளுடனும் தினமுமே நிகழ்கின்றன. மாளய பட்சமாகிய 15 நாட்களிலும் பித்ரு மண்டலங்களில் ஸ்ரீமன்சூரிய நாராயண மூர்த்திக்கான பிரம்மோற்சவ ஆராதனைகள் நிகழ்கின்றன.

பூவுலக ஆலயங்களில் நிகழ்வது போல, பிரமோற்சவ நாட்களில் மட்டுமல்லாது நிதந்தோறுமே, காலையிலும் மாலையிலும் சுவாமி புறப்பாடுகளும், தேரோட்டங்களும் ஆங்கே நிகழும், கோடானு கோடி கிரகங்களிலிருந்தும், கோள்களிலிருந்தும் தேவாதி தேவ மூர்த்திகளும், சித்தர்களும், மஹரிஷிகளும் பித்ரு மண்டலங்களுக்கு வந்து இத்தகைய பிரம்மோற்சவங்களில் பங்கேற்கின்றனர்.

தேவ மொழி, தமிழ் மறைகள் மற்றும் அனைத்து மொழிகளிலும் உள்ள மாமறைத் துதிகள் நிதமும் இங்கு ஓதப் பெறும். ஆங்கே தமிழ் மாமறைகளை ஓதுவோர் உங்களுடைய பித்ருக்களாக, உத்தம மூதாதையர்களே கூட இருப்பர். எனவே, மாளய பட்சத்தின் 15 நாட்களிலுமே பூவுலகில் தினந்தோறுமே நித்தியத் தர்ப்பணம் அளித்திடுங்கள்.

குடும்பமே நொடிந்து போகும்படியாக வந்துள்ள நஷ்டங்கள், கஷ்டங்கள் தொழிலில் பலத்த இழப்பு ஏற்பட்டுத் திவால் ஆக வேண்டிய வறுமையான சூழ்நிலைகள், பல தலைமுறைகளாகச் சந்ததி இல்லாமை, தொடர்ந்து பல தலைமுறைகளில் புருஷன்மார்கள், இளவயது, நடுவயதிலேயே இறந்து, பெண்மணிகள் கைம்பெண் ஆதல் அல்லது மனைவி இறந்து கணவனும், பிள்ளைகளும் தத்தளித்தல் – போன்ற கடுமையான பிரச்னைகளால் வாடுவோர், புரட்டாசி மாதத்தில் வரும் மாளய பட்சத்தின் பதினைந்து நாட்களிலும், பல பித்ரு முக்தித் தலங்களில் வழிபடுதலால், வாழ்வில் நல்ல முன்னேற்றங்களையும், பலத்தத் துன்பங்களுக்கான நல்ல தீர்வுகளையும் பெறுவர்.

“இத்தகையத் துன்பங்கள் நமக்கு இல்லையே நாம் ஏன் கவலைப் பட வேண்டும்?” என மெத்தனமாக இருந்திடாதீர்கள். மேலும் இவ்வகைகளில் பாதிக்கப்பட்டோர்களின் நலன்களுக்காகப் பூஜிக்க வேண்டியதும் பாரதப் புண்ய பூமியில் பிறந்த உங்களுடைய கடமைகள் அல்லவா!

வருங்காலத்தில் தம் குடும்பங்களில் இத்தகைய நிலைகள் ஏற்படாது தற்காத்துக் கொள்ளவும். இத்தகைய பெருந் துன்பங்களால் வாடுவோர்க்கு மாளயபட்சத் தர்ப்பண மகிமைகளை எடுத்துரைத்து, அவர்களை நித்தியத் தர்ப்பணம் அளிக்கச் செய்வதும் அரிய சமுதாய இறைப் பணியாகும்.

பயங்கரவாதம், வன்முறை, தீவிரவாதம், பெண்களை இம்சித்தல், குண்டு வெடிப்பு, தற்கொலைப்படை வெடி வைத்தல் போன்ற தீய சம்பவங்கள் நிகழ்ந்து வரும் தற்காலக் கலியுகக் களத்தில், பித்ரு சக்திகள்தாம் சமுதாயத்தில் சாந்த சக்திகளை நிரவ வல்லவை.

நாம் ஏற்கனவே பன்முறை விளக்கியது போல, சில லோகங்களிலிருந்து அதிபயங்கரத் தீவினை உருக்கள் பலவும் மனித வடிவில் பல நாடுகளிலும் உட்புகுந்து மக்கள் சமுதாயத்தில் கலந்துள்ளனர். பிற லோகங்களிலிருந்து இவை வந்துள்ளமையால், இவர்களைப் பூவுலக நியதிகளால், சட்டங்கள், தற்காப்பு சக்திகளால் வெல்வது கடினமே. இவர்கள் எத்தகைய லோகங்களிலிருந்து வருகிறார்களோ, அந்தக் கிரக நட்சத்திர மண்டல தேவதா சக்திகளே இவர்களிடமிருந்து சமாளித்துத் தற்காத்துக் கொள்ள முடியும். இவர்களை வெல்லுதல் மிகக் கடினமே! இதற்குப் பித்ருக்களின் ஆசிகள் நிறையத் தேவையே. இவ்வாறு பிற மண்டலத் தீய சக்திகளை வெல்ல வல்ல பூஜா சக்திகள் நிறைந்த தலங்கள் சில உண்டு. இவற்றின் மகிமைகளை மக்கள் அறியாததால், இவை பூஜையற்றுக் கிடக்கின்றன. இத்தகைய வெளிலோகத் தீவினைகளை அகற்றிட, தர்ப்பணச் சதுர்த்தச் சக்திகள் நிறையத் தேவை.

இவற்றை வெல்வதற்கான மேலும் பல உத்தமமான பூஜை சக்திகளும் உண்டு. சதுர்த்த மூலகார சக்திகள் திருஅண்ணாமலையில் அமாவாசை தோறும் பொலிவதால், அமாவாசைத் திதிகளில், அருணாசலத்தைச் சோம சூக்தப் பிரதட்சிண முறை போலவும், ராகு, கேது கிரகங்கள் போலும், இடவலமாக, அப்பிரதட்சிணமாகச் சுற்றி வலம் வருவது சிறப்புடையது.

18.9.2005 காலை 7.31 மணிக்குப் பௌர்ணமித் திதி நிறைவடைகிறது. இதன் பிறகு மாளய பட்சம் துவங்குகிறது. இந்தப் பதினைந்து நாட்களிலும் தினந்தோறும் தர்ப்பணமும், அன்னதானமும், ஹோமமும் நிகழ்த்துதல் விசேஷமானது. இறந்தவர்களின் திதி நாளில் இந்த மாளயப் பட்சத்தில் திவசம், படையல் நிகழ்த்திடுக! திருஅண்ணாமலை, திருவிடைமருதூர், ராமேஸ்வரம், நெடுங்குடி, வேதாரண்யம், குருவி ராமேஸ்வரம், திருவள்ளூர், திலதைப்பதி, அகஸ்தியான் பள்ளி, பூவாளூர், கன்யாகுமரி, வாரணாசி, பிரயாக், கயா, கேதார்நாத், அகஸ்த்யமுனி கிராமம், பத்ரிநாத், மணமேல்குடி, திருப்புல்லாணி, விளங்குளம் போன்ற பதினைந்து இடங்களிலாவது தர்ப்பணம் அளித்திட வேண்டும். அன்னம், பழம், உடை, நகை, காலணி, பாத்திரங்கள் போன்ற 32 வகை தானங்களுடன் தினமும் தாய், தந்தையரின் தலைமுறையில் 36 முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்திடுக!

சற்குருவின் பரிபாலனம்

சத்குருவை அறிதல் எளிதல்ல, இருதயப் பூர்வமாகவே உணர முடியும். ஆழ்ந்த நம்பிக்கை தான் இதனை உணர்விக்கும். இவர்தான் “சத்குரு” என அறிகையில், மனமும் மௌனமாகும். அதன் பிறகு வாழ்வில் நடக்கும் அனைத்துமே பூர்வ ஜன்மக் கர்ம விளைவுகளால் ஆவதே, எதையும் ஏற்று அனுபவித்துக் கர்ம வினைகளைக் கழித்து வாழ்வோம் என்ற உணர்வுடன் செயல்படும் பாங்கும் தானாகவே உறைந்தமையும்.

சத்குருவின் பரிபாலனத்தில்…

அடியார்: வாழ்வில் சத்குருவைப் பெற்றால் அனைத்துத் துன்பங்களும் அகலும் என்பது உண்மைதானே! பின் ஏன் சத்குரு என ஒருவரை ஏற்ற பின்னும் துன்பங்கள் தொடர்கின்றன?

சத்குரு : கேள்வியே தவறானது! சத்குரு என ஒருவரை ஏற்ற பின்னும் துன்பங்கள் தொடர்கின்றன என சத்குருவை அடைந்தவர்கள் ஒரு போதும் எண்ண மாட்டார்கள்! எனவே, இது சத்குருவை அடைந்தவர்களைப் பற்றிப் பிறர் எண்ணுவதே!

மேலும், சத்குருவை அடைந்தவுடன் துன்பங்கள் அனைத்தும் தீரும் என எண்ணுவது பெரும் பேராசையே! உண்மையில், சத்குருவை ஆழ்ந்த நம்பிக்கையுடன் அடைந்தோர்க்கு இத்தகைய எண்ணங்களே தோன்றாது. அவரவர் தத்தம் வினைகளைத் தாமே அனுபவித்துக் கொள்ளும் மன்ப்பான்மையை பெறுதல் வேண்டும். என்பது சத்குரு போதிக்கும் முதற் பாடமாகும். சத்குருவை ஒரு ஜோதிடராகவும், அருள்வாக்கு சொல்பவராகவோ எண்ணும் போதுதான் “சத்குரு என ஒருவரை ஏற்ற பின்னும் துன்பங்கள் தொடர்கின்றன” என்ற எண்ணம் தோன்றும். அப்படித் தோன்றினால் அவர் எவரையும் சத்குருவாகப் பரிபூரண உள்ளத்துடன் ஏற்கவில்லை எனப் பொருளாகும்.

எனவே தாம் சத்குருவாக ஏற்றவரிடம், “எனக்கு அந்தப் பிரச்னை, இந்தப் பிரச்னை!” என்று எப்போதும் புலம்பிக் கொண்டிராமல், அவருடைய சத்சங்க நற்காரியங்களுக்குத் தியாகப் பூர்வமாகப் பெருந்துணையாக இருக்க வேண்டும். சத்குரு ஆற்றும் நற்காரியங்களில் விசேஷமான புண்ய சக்திகள் பொலிவதால், இவை துன்பங்களின் வன்மையைத் தணிக்கப் பெரிதும் உதவும்.

மேலும் அன்னதானம், வஸ்திர தானம் போன்ற பொதுநலக் காரியங்களில் தியாகமயமாக அடியார்கள் இறைச் சேவைகளில் ஈடுபடுகையில் அவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை நிலையைப் பொறுத்து, அவர்களை ஆன்மீகத்தில் மென்மேலும் முன்னேற்றிட, சத்குருவே அடியார்களின் துன்பச் சுமைகளைத் தம்முள் ஏற்று அனுபவிப்பது உண்டு. இதற்காக, தன் உடல் பிணிகள், கஷ்டங்கள் அனைத்தையும் சத்குருவே தம்முள் ஏற்றுத் தம்மை விடுவிக்க வேண்டும் என்று எண்ணுதலும் பக்கா சுயநலமும் பேராசையும் ஆகும்.

சத்குருவைப் பார்க்கும் போதெல்லாம் “எதையாவது வேண்டிப் புலம்புதல்” என்ற வழக்கத்தினால்தான் கலியுகத்தில் சத்குருவின் தரிசனமே அரிதாகி விடுகின்றது. சத்குருவே அனைத்துத் துன்பங்களுக்கு தீர்வுகளை அளிக்க வல்லவர் என்பது உண்மையே! உலகில் எத்தகைய கர்ம வினைக்குமான தீர்வுகளை அளிக்க வல்லவர் சத்குருவே! ஆனால், “இன்பமும், துன்பமும் அவரவர் வினையின் விளைவுகளே! தீதும் நன்றும் பிறர் தர வாரா!” என்ற அடிப்படை மூலதனத்தில் இது புலனாகும்!

ஆத்ம விசாரமும், தியானமும்

எளிமையான ஆத்ம விசாரமும், தியான முறையும்!

தியானத்தின் முதல்படியே ஆத்ம விசாரம்!

தியானத்திற்கு முதல் படியே ஆத்ம விசாரம் அதாவது தன்னையே நியாயமாகக் கேள்வி கேட்டுத் தன்னுள்ளேயே காரணங்களை அறிய விழையும் ஆன்மத் துறைப் படலமாகும். தியானத்தின் துவக்க நிலை இதுவே! ஆத்ம விசாரமின்றித் தியான நிலை நன்முறையில் ஒரு போதும் கைகூடாது.

ஆத்ம விசாரம் என்பதான – ஒவ்வொரு மனிதனும் தன்னுள் ஆன்மப் பூர்வமான விடை தேடும் பாங்கினைப் பற்றி – அவ்வப்போது, ஸ்ரீஅகஸ்திய விஜயத்திலும், அக்னிசிக்ஷா (http://www.agnisiksha.org) ஆன்மீக வெப்தளத்திலும் நன்கு விளக்கி வருகிறோம்.

தினசரி மனவிசாரணை மண்டபம்

கலியுலகில் ஒவ்வொருவரும் தினந்தோறுமே ஆத்ம விசாரம் செய்தாக வேண்டும். முதலில், தன்னுடைய தினசரிக் காரியங்களை ஆய்ந்து, ஆய்ந்து இவற்றில் எவை கடமைப் பூர்வமானவை எவை, நன்மை தருபவை, தீமை பயப்பவை, தேவையற்றவை, அதர்மமானவை, எவை கால விரயமானவை என்று நன்கு ஆராய்ந்து பார்த்து வைத்தல் வேண்டும். இவை வித்துக்களை விதைத்து, நாளடைவில் நல்ல நிரந்தரமான மாற்றங்களைப் பெற்றுத் தரும்.

இறைவனிடம் பேசுவது உங்களுக்குள்ளேயே ஆத்மப் பரலுடன் பேசுவதுதான்!

உண்மையில், ஆலயங்களில் “பிள்ளையாரப்பா! ஏனப்பா இப்படி இந்த ஏழையைப் படுத்துகிறாய்? முருகா! எனக்கு ஏனப்பா இவ்வளவு சோதனைகள்?” என நீங்கள் உரிமையுடன் தெய்வங்களைக் கேட்பதும், மனதாரப் பேசுவதும், ஒரு வகையில் ஆத்ம விசாரமாக, உங்களுக்குள்ளேயே நீங்கள் பேசுவதுதான்! அதாவது, நீங்களாக இறை மூர்த்திகளிடம் உரிமையுடனும், சந்தோஷத்துடனும், வேதனையுடனும் உரையாடுவது யாவும் உங்களுக்குள்ளேயே ஆத்மப் பரலுடனான ஆத்ம விசார வகைகளே!

எனவே, பூவுலகில் ஒவ்வொருவரும் பல்வகைகளில் ஆத்ம விசாரத்தைத் தம்மையும் அறியாமல் தினமுமே நிகழ்த்திக் கொண்டுதாம் இருக்கின்றார்கள். இவற்றைச் சுட்டிக் காட்டிப் பண்படுத்த வல்ல தக்க சத்குருவை நாடுதல் வேண்டும். எனவே இங்கு “ஆத்ம விசாரம்” என்பது புதிதாக உரைக்கப் பெறவில்லை! நம் உத்தமப் பெரியோர்கள் ஆண்டாண்டு காலமாக உணர்வித்ததையே மீண்டும், மீண்டும் புனரமைத்து நினைவுறுத்தப்படுகின்றது.

‘தினசரியே உங்களை கத்திகரித்துக் கொள்ள உதவும் ஆத்மவிசார சாதனம்!’

நன்முறையில் வாழ்வோர்க்கும் தங்களை மென்மேலும் பண்படுத்திக் கொள்ளவும், இளவயதினரை நன்னெறிகளில் செலுத்திடவும், ஆத்ம விசாரம் மிகச் சிறந்த நித்திய ஆத்மவளப் பயிற்சியாகும். தினந்தோறுமே தம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ சேரும் கர்ம வினைகளை எளிதில் களைந்திட்டு, நல்மார்கம் பெறவும் உத்தம ஆத்மவிசார நிலைகள் பலவும் நன்கு உதவும்.

ஆத்ம விசாரத்தில் அவரவருக்குள் உள்ள ஒன்பது சரீரங்களும் மாறி, மாறி உறைந்து சங்கமிப்பதால், பூர்வ ஜன்மத் தொடர்புகளும், இதில் பரிணமித்து ஆன்மீக ரீதியாக மறுமலர்ச்சி பெறவும் மிகவும் எளிதில் உதவும். அதாவது ஆத்மவிசாரம் என்பது தம்முள் தம்மையும் அறியாது நிகழும் பூர்வ ஜன்ம சிந்தைச் சீர்திருத்தச் சங்கமிப்புகளே!

மேலும், தன்னால் வேறு எவரிடம் கேட்டு விடை அறிந்து கொள்ள முடியாத வினாக்களுக்கும், சந்தேகங்களுக்கும் தக்க நிவர்த்திகளைப் பெற ஆத்ம விசாரமே துணை புரியும், உதாரணமாக, “தனக்கு ஏன் தீய எண்ணங்கள் அடிக்கடி வருகின்றன? – எவ்வகையிலேனும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றும், பிறரைத் துன்புறுத்த வேண்டும் என்றுமாக – வகை வகையான கேவலமான எண்ணங்களோ, அவலமான, குரோதமான காம உணர்ச்சிகளோ அடிக்கடித் தோன்றுவதேன்?” போன்ற வகையிலான வினாக்களுக்கு உள்ளிருந்து தானே விடைகளைப் பெற்றுத் தீர்வுகளை அடைய ஆத்ம விசாரம் உதவும். இதற்கான நல்மார்கங்களைப் பெறவும் முடியும். இவற்றைப் பிறிரிடமா வெளிப்படையாக எடுத்துச் சொல்ல முடியும்?

எதுவும் சாதாரணமானதல்ல, அனைத்தும் காரணங்களுடன் நிகழ்வதே! உலகில் உள்ள ஒவ்வொரு தென்னை மரத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் கூடக் காரணங்கள் உண்டு!

ஆத்ம விசாரத்தில், வாழ்வில் மிகவும் சாதாரணமாக நாம் கருதும் விஷயங்கள் கூட இடம் பெறலாம். ஏனெனில், இப்பூவுலகில் ஒவ்வொரு சிறு செயலும் கூட எத்தனையோ காரணங்களுடன் தானே நிகழ்கின்றன. இதுதானே ஸ்ரீகிருஷ்ண லீலை! இதனை உணர்விப்பதும்தானே ஆத்ம விசார லட்சியங்களுள் ஒன்றாகிறது. உதாரணமாக, உங்கள் வீட்டு முன் திடீரென்று வந்து ஒரு பசு மாடு நிற்றல், ஜன்னலில் காக்கைகள் நயந்து வந்து கரைதல், திடீரென்று தலைவலி ஏற்படுதல், கால் இடறுதல், பேனா தவறி வழுதல், தும்மல், விக்கல் ஏற்படுதல் – போன்ற பலவற்றிற்கும் எண்ணற்ற காரணங்கள் உண்டு. இவற்றுக்கான விடைகளை உங்களுக்குள்ளேயே தேட முற்பட்டால், சிறிது, சிறிதாக அனைத்துக்குமான காரணங்கள் புலப்படலாகி, மனம் நிம்மதி பெற்று நாளடைவில் அடைந்து விடும். அவரவர் பிறப்பு எடுத்ததற்கான காரணங்களும் படிப்படியாகப் புலப்படலாகும். தினசரி வாழ்க்கையில் ஏற்படும் மனத் துன்பங்களை, மனச் சுமைகளைத் தணிக்கவும், வாழ்க்கையில் மனோ தைரீயத்துடன் துலங்கவும் விசார சக்திகள் உதவும்.

ஆத்ம விசாரத்திற்குப் பின் அமையும் பூஜைகள், ஆலய வழிபாடுகளில் நல்மாற்றங்கள் தோன்றுவதை நீங்களே நாளடைவில் நன்கு காணலாம். பெரும் மனப் போரட்டங்களுடன் ஆலய வழிபாட்டிற்குச் செல்பவர்கள், விசார அனுபூதிகளுக்குப் பின் அமைதி துளிர்க்க வழிபடுவதைத் தன்னுள்ளேயே உணர்ந்திடலாம்.

வீட்டில் நிலவ வேண்டிய விசார சக்திகள்

இத்தகைய ஆழ்ந்த, சாசுவதமான மன நிம்மதி, ஆத்ம விசாரம் மூலமாகச் சுயம்புவாக அவரவர் மனதினுள்ளேயே தோன்றுவதாகும். இதற்கு ஈடு இணையே கிடையாது, உண்மையில், ஆலய வழிபாடுகளும் ஆத்ம விசாரத்தை மூலமாகக் கொண்டவையே!

குழந்தைப் பருவத்தின் தெய்வீகக் களையையும், நல்ஒழுக்கத்தையும் பாதிக்கும் வகையில் மூன்று வயதிலேயே கல்வித் திணிப்பா?

மூன்று வயதில், சிறு பிள்ளைகளிடம் முகிழ்த்துத் திளைத்துத் துலங்கும் முத்தான தெய்வீகத்தைக் களங்கப்படுத்தும் Nursery, Pre KG, UKG கல்வி முறை தேவையற்றதே! சிறு குழந்தைகளிடம் தவழும் தெய்வீக சக்திகளை பாதிக்கும் ஆரம்பக் கல்வித் திணிப்பைத் தடை செய்தல் வேண்டும்! நம் முன்னோர்கள் உரைத்துள்ளது போல, 5 வயதில் ஆரம்பக் கல்வியே ஏற்புடையது! மூன்று வயதுக் குழந்தைகளின் இளங்கபாலத்தில் சம்பந்தமில்லாதக் கல்வித் திட்டத்தைத் திணிக்காதீர்கள்! இது குழந்தைகளின் ஒழுக்கத்தை பாதிக்கும்! முரட்டுத்தனம், பிடிவாதமே இதனால் வளரும்! குழந்தைப் பருவத்திலேயே பெற்றோர்களிடம் வெறுப்பு வளர ஆரம்பிக்கும்.

கணவன, மனைவி இருவரும் அலுவலகம் செல்வதற்காக, வெறும் சம்பாதிப்பதற்காக, சுயநலமாக, காலையில் சிறு குழந்தைகளை Nursery பள்ளிக்குள் தள்ளி விட்டு ஆபீஸிற்கு ஓடாதீர்கள்! இந்த வகையிலான சுயநலமான வாழ்க்கை தேவையா?

உலகத்தில் ஜாதி, மத பேதமின்றி அனைத்துச் சிறு குழந்தைகளுக்குமென இறைப் பரிசாய் வந்தமையும் ஸ்ரீகிருஷ்ண கபாலத்தில் காக்கும் அமிர்தத்தைச் சுவைக்கும் பாலக நிலையே சிறு குழந்தைப் பருவமாகும். தன் கட்டை விரலை வாய்க்குள் வைத்துச் சூப்பி, இறைவனே உவந்து ஊட்டும் அமிர்தத்தைச் சுவைத்து வளரும் தெய்வீக நிலை கூடியதே குழந்தைப் பருவம், மூன்று வயதிற்குள் உள்ள ஒவ்வொரு குழந்தையும் ஸ்ரீகிருஷ்ண பிரேமியே! யாங்கணும் ஸ்ரீகிருஷ்ண தரிசனத்தைப் பெறுபவர்களே!

எனவே, ஸ்ரீகிருஷ்ண சக்திகள் நிறைந்த தெய்வீக பருவத்தில், குழந்தைகளை இல்லத்தில் தவழச் செய்தலே குடும்பத்திற்கு நன்மை பயக்கும். குழந்தைகள் இல்லத்தில் தவழ, தவழத்தான் சந்ததிகள் விருத்தியாகும். இல்லத்தில் சாந்தம் தவழும், நல்அமைதி பூரித்துப் பூக்கும், இறையமைதி நன்கு பரிணமிக்கும்.

சிறு குழந்தைகள் வீட்டில் நிறைய இருத்தலே நன்று, “இரு குழந்தைகள் போதும்” என மனிதனாக வகுத்துக் கொண்டுள்ள கலியுக நியதி, இயற்கைப் பூர்வமான நல்தேவ விதி நியதிக்கு முரணானது. எதிர்காலத்தில் விஞ்ஞானப் பூர்வமாகவே, நிறையக் குழந்தைகள் கூடிய குடும்பமே, மனநலத்திற்கு, மனித குலத்திற்கு, குடும்பத்திற்கு நல்லது எனக் கண்டுபிடித்து நம் பண்டைய பண்பாடு மீண்டும் உரைக்கப் பெறும் நன்னிலையும் கூடி வரும். சிறு குழந்தைகளிடம் எப்போதும் பரிணமிக்கும் தெய்வீகக் கிரணங்கள்தாம் இல்லத்தில் அமைதியை இயற்கையாகவே பொழிவிக்கும். எனவே, குழந்தைகளை ஐந்து வயது வரையில் இல்லத்தில் பேணுதலே நன்றும், சிறப்புடையதும் ஆகும்.

ஆனால், தற்காலத்திலோ குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக, கணவனும், மனைவியும் இருவருமே வேலைக்குச் செல்வதால், குழந்தையானது “CRECHE” என்பதாக, மூன்றாவது இடத்தில் வளர்கிறது. என்னதான் இருந்தாலும் தாய், தந்தையின் அன்பு, பரிவைக் குழந்தைகள் பிறரிடம் பெற முடியுமா? இத்தகைய “Creche” , Nusery கல்வி மற்றும் வகுப்பறைப் பாடத் திணிப்பு முறைகளினால், கலியுகக் குழந்தைகள் தூய அன்பு சக்தியுடன் வளராது, வெறுப்பு, தனித்த தன்மையுடன் வளர்ந்து முரட்டுத்தனம், பிடிவாதம் போன்ற பலத்த மனநோய்களுக்கு ஆளாகின்றனர்.

ஐந்து வயதிற்குள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தலாகாது, என்று சமுதாயத்தில் அனைவரும் உணர்தல் வேண்டும். உத்தமப் பெரியோர்கள், சத்குருமார்களின் வாக்கியங்களைப் பண்டைய காலத்தில் இறை ஆணையாகக் கடைபிடித்து வந்த மனிதச் சமுதாயம், இன்று “சட்டம்” என்ற செயற்கைக் கட்டுப்பாட்டிற்கு ஆட்பட வேண்டி உள்ளது என்பது மனிதன் தனக்குத் தானே வரித்துக் கொண்ட பணிவற்ற, நல்ஒழுக்கச் சீரழிவு நிலை தானே! ஆரம்பப் பள்ளிக் கல்வித் திட்டத்தில் உத்தம தெய்வீக வாழ்க்கை நெறிகள், தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருப்புகழ், திருக்குறள், அருட்பாக்கள் இடம் பெறுதல் வேண்டும். ஐந்து வயதிற்குள் குழந்தைகளின் கபாலத்தின் மூளைக்குள் திணிக்கப்படும் தேவையற்ற செயற்கைக் கல்வி, குழந்தையின் தெய்வீக குணங்களையே அடியோடு மாற்றி, பிடிவாதம், எதிர்த்துப் பேசுதல், பொய்மை, பொறாமை, பேராசை, திருடுதல், ஏமாற்றுதல் போன்ற தீய பண்புகளுக்கு வித்திட்டு விடுகின்றன. இறுகிய ஸாக்ஸ், ஷுக்களுக்குள் பல மணி நேரம் தினமும் சுதந்திரமின்றி அமர்ந்து, பாத நாளங்களின் வளர்ச்சி தடைப்படுதல், ஒரே இடத்தில் 5 மணி நேரம் அமர்ந்து இருத்தலாலும் முதுகு வலி போன்ற பல பாதிப்புகள் குழந்தைப் பருவத்தில் ஏற்படுகின்றன.

தற்போதைய ஆரம்பக் கல்வி முறையில், “பள்ளியில் Miss / ஆசிரியரிடம்” சொல்லி விடுவேன் எனப் பயமுறுத்தும் பெற்றோர்களுடைய ஆயுதமாகப் பள்ளிக் கல்வி மாறி வருகிறது. இதனால் புனிதமான கல்வித் துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையே, அச்சம், பீதி, பய உணர்வுகள் ஏற்படுகின்றன. பெற்றோர்கள் – குழந்தைகள் இடையே இறைப் பிணைப்புச் சாதனங்களாகச் செயல்படுவதால், ஆசிரியர் என்பார் சத்குருவைப் போன்று வாழ்க்கையில் கலியுகச் சூழ்நிலை, ஆரோக்கியமற்ற உணவு, தவறான பழக்க வழக்கங்களால் குறைந்த வயதிலேயே கண்ணாடி அணியும் நிலைக்குப் பிள்ளைகள் தள்ளப்படுகின்றனர். ஆகையால் ஐந்து, பத்து வயதிற்குள் நிறைய இறை மந்திரங்களைக் காதால் கேட்டு மனனம் செய்வதே வாழ்வின் இறுதி வரை இறைமையில் பண்படச் செய்து நிலைத்து நிற்கும்.

பெற்றோர்களும், ஐந்து வயதிற்குள் தம் பிள்ளைகளுக்கு நிறைய இறைத் தோத்திரங்களை, துதிகளை மனனம் செய்திடச் செய்து ஆரம்பப் பள்ளிக் கல்விக்குத் தயார் செய்தல் வேண்டும். இதுவே பிறகாலத்தில் எங்கும், எப்போதும் உதவும்.

வாய்ச்சொல் குற்றங்கள்

வாக்கு தோஷங்களால் விரிந்த உறவுப் பிளவுகள் சீரடைய….

வாழ்க்கையில் பலரையும் அவலமாக, அசிங்கமாக, கேவலமாக, தவறாக, அதர்மமாய்ப் பேசியவர்கள் உண்டு. இவர்கள் தம் வாழ்வின் இறுதிக்கு முன் தன் வாக்குக் குற்றங்களுக்கு, வாக்குத் தோஷங்களுக்குப் பரிகாரம் கண்டாக வேண்டும். இல்லையெனில் அடுத்தடுத்தப் பிறவிகளில் வாய் குழறுதல், ஊமைத்தனம், வாயில் புற்றுநோய், வாயில் துர்நாற்றம், வாயில் நுரை தள்ளும் நோய்கள், பாம்பு தீண்டுதல் போன்றவற்றிற்கு ஆளாவர்.

எனவே, இனியேனும் நல்ல வார்த்தைகளைப் பேசுதல் எனச் சங்கல்பம் செய்வதுடன், “ஸ்திர வாரம்” எனப் போற்றப் பெறும் சனிக்கிழமை தோறும் மானாமதுரையில் உள்ள ஸ்ரீவீரழகர் பெருமாள் ஆலயம் எனப்படும் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சப்தமித் திதி நாளில் பெருமாளை வணங்கி, இங்கு மிகவும் அபூர்வமாகக் கிரீடத்துடன் அருளும் ஆஞ்சநேயருக்குப் பெரிய மலர் கிரீடம் சார்த்தி, பானகம் நைவேத்யம் செய்து, 100 ஏழைக் குடும்பங்களுக்கேனும் பானகத்தைத் தானம் செய்து வருதலால், குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு நல்வழியில் நிவர்த்தி கிட்டும்.

பானகத்தின் இனிப்பு, ஏழைகளின் வாயில் சுரந்து, சுரந்து உண்டாகும் அமிர்தானந்த இழைகள், ஏழைகளை மகிழ்விக்க, மகிழ்விக்கத்தான், வாய்ப் பொருள்,  வாய்மொழி தோஷங்களுக்குப் பரிகாரங்களைப் பெற முடியும்.

மேலும், திருப்புகழ் பாடும் மறையவர்களுக்கு உதவி செய்து, தேனி மலை, குன்றக்குடி மற்றும் அருணகிரிநாதரின் பாடல் பெற்ற முருகன் ஆலயங்களில் செவ்வாய் தோறும் அவர்களைத் திருப்புகழைப் பாடவைத்து வழிபடுவதும், வாய்ச் சொற் குற்றங்கள் குடும்பத்தை, சந்ததிகளைத் தாக்காது, ரட்சித்துக் காக்கும்.

செப்டம்பர் 2005 பௌர்ணமி நாள்: 17.9.2005 சனிக்கிழமை காலை 10.49 மணி முதல், 18.9.2005 ஞாயிற்றுக் கிழமை காலை 7.31 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படிப் பௌர்ணமி திதி நேரம் அமைகின்றது. திருஅண்ணாமலை கிரிவல நாள்: 17.9.2005 சனிக்கிழமை இரவு.

1.9.2005 வியாழக்கிழமை இரவு 7.36 மணி முதல் 2.9.2005 வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆவணி மாதச் சிவராத்திரித் திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள்: 1.9.2005 வியாழக்கிழமை இரவு.

அமுத தாரைகள்

மூல நட்சத்திரத் தினத்திலும், வளர்பிறைத் திரிதியைத் திதியிலும் விரதம் பூண்டு, 36 முறை யோக மீனாக்ஷித் தோத்திரங்களை ஓதி, ஸ்ரீமீனாட்சி அம்மனைத் தரிசித்து, லட்டு, போண்டா போன்ற “உருண்டை” வகையான உணவுப் பண்டங்களை, கனிகளைத் தானமாக அளித்து வந்திட, “தன் பிள்ளைகளின் அசமந்தம், தறுதலைத்தனம், வெகுளித்தனம், முரட்டுத்தனம் பற்றி வேதனையடையும் தாய்மார்களின் வேதனைச் சாரல்கள் தணியும் வகையில், பிள்ளைகளிடம் நல்ல மாற்றங்களைக் காணப் பெறுவர்.

அழகுடை அழகியசிங்கர் – பெருமாள் மூர்த்திகளிலேயே மிகவும் சுந்தரவதனம் பூண்டு மிகமிக அழகாய்த் துலங்குபவர் “சிங்க முகமுடைய நரசிம்ம மூர்த்தியே!” எனச் சித்தர்கள் போற்றுவதால்தான், ஸ்ரீமஹாவிஷ்ணுவும் “அழகிய சிங்கர்” ஆனார். கேட்பதற்கே வியப்பாக உள்ளது அல்லவா! ஆனால், நவநாதச் சித்தர்கள்தாமே, தெய்வீகத்தில் எதற்கும் இறுதித் தீர்ப்பை அளிக்க வல்லவர்கள்  எனப் பரம்பொருளே இறையாணையாய்ப் பொறித்துள்ளாரே!

நரசிம்ம உக்ர ஸ்தம்பங்களில் “நீவார ஸ்தம்பம்” என்பதான நரசிம்மத் தூணாய், திருநெல்வேலி – வீரவநல்லூர் அருகே திருப்புடைமருதூர் செல்லும் வழியில், அத்தாழநல்லூரில் உள்ள ஆதிமூலப் பெருமாள் ஆலயத்தில் தோன்றி அருள்வது கலியுகத்தின் மஹா பெரும் பாக்யமே! ஸ்ரீநரசிம்மப் பெருமாள் தோன்றிய உக்ர ஸ்தம்பங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்தப் பெருமாள் ஆலய மூலவர் நாமத்திலும் “மூலம்” அட்சர நாமம் த்வனிப்பதை உணர்க! “ஆதிமூலமே!” என யானைக் கூவி அழைத்திடக் குரல் கொடுத்துக் காத்தப் பெருமாள்! இதனால்தான் “காத்தப் பெருமாள்” என்ற பெயரும் முகவை, நெல்லை மாவட்டங்களில் வழக்கில் அமைந்து வந்தது.

வேண்டுமென்றே துரோகிகளால் மறைக்கப்பட்டுள்ள பத்திரங்கள், பொய் சாட்சி, கோர்ட் வழக்குகள் காரணமாகச் சொத்தை இழந்தவர்கள், பிறருடைய அதர்மமான பொய் சாட்சியத்தால், பொய் வழக்குகளால் அவமானப்பட்டு, மதிப்பிழந்து இருப்பவர்கள் நன்னிலை பெற உதவும் வழிபாடே விசேஷமான மூல நட்சத்திர நாளில் அத்தாழநல்லூர் ஸ்தம்ப பூஜையாகும். எந்நாளிலும் இங்கு பூஜித்திடலாம்.

மூல நட்சத்திரத் தலமான சென்னை அருகே உள்ள மப்பேடு சிங்கீஸ்வரர் ஆலயமும் அழகிய சிங்கராய் நரசிம்மர் வழிபட்ட தலம் என்பதும், இங்குள்ள அபூர்வமான – வேறு தலங்களில் காணப் பெறாத – “நவவியாகரணப் பலி பீடத்தில்” ஆஞ்சநேயர் மூல நட்சத்திர நாளில் வழிபட்டு வருவதும், இத்தலத் தூணில் “நரசிம்மர்” அருள்வதும் ஆவணி மூலத்தின் சிறப்பை உணர்த்துகின்றன. அத்தாழநல்லூரும், மப்பேடு சிவத்தலத்தைப் போலவே, மூல நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபட வேண்டிய ஆயுட்காலத் தலங்களுள் ஒன்றே!

ஸ்ரீபரமூல நாராயணன் எனும் சித்தர் பெருந்தகை, கலியுகத்தில், மூல நட்சத்திரம் பற்றிய தவறான கருத்துக்கள் தோன்றும் என்பதைத் தீர்க தரிசனமாக உணர்ந்து, இவற்றைச் சீர் திருத்தவும், மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், வீண் பழிக்கு ஆளாகாது தற்காத்துக் கொள்ள வேண்டியும், ஆதிமூலப் பெருமாளிடம் மூல நட்சத்திர நாளில் விஷ்ணு லீலைகளை ஆற்றிடவும் பிரார்த்தித்து, மூல நட்சத்திரப் பெருமைகளை, நரசிம்ம ஸ்தம்பப் பூஜைகளின் மகத்துவமாகவும் விளக்கி உரைத்திட்டார். மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், மூல நட்சத்திர நாளில் பானகம் படைத்து நரசிம்மரை வழிபட்டு வருதலால் நல்ல பண்புள்ள கணவனையும், சீரிய குடும்ப வாழ்க்கையையும் பெற உதவிடும்.

திருமலை

வங்கித் துறை, அரசியல் துறை, stock market போன்ற துறைகளில் இருப்பவர்கள் அடிக்கடி மனக் கொந்தளிப்புகளுக்கு ஆளாவார்கள் கபாலத்தில் 27 நட்சத்திர மண்டலத் தொகுதிகள் உண்டு. இதில் மூளைக் கொதிப்பு நோய்க்கு ஆளாகும் செல்களின் பகுதி மூல நட்சத்திர மண்டலத்தில் பொதிவதாகும். மூளைக் கொதிப்புகளால் வாடுவோர் நல்ல நிவாரணம் பெற உக்ர நரசிம்ம பூஜைப் பலன்கள் உதவும். அத்தாழநல்லூர் நரசிம்ம ஸ்தம்பத்திற்குச் சந்தனக் காப்பு இட்டு, பானகம் படைத்தும், தானம் செய்தும் வழிபட்டு, இங்கு சித்த, ஆயுர்வேத மருந்துகளை வைத்துச் சிகிச்சைகளை ஏற்பதுடன், மூல நட்சத்திர நாளில் – நான்கு கால் (பசு, யானை, எருமை, காளை, ஆடுகள்) ஜீவன்களுக்கும், இவற்றைப் பராமரிக்கின்ற ஏழைகளுக்கும் நல்உதவிகளை ஆற்றி வர வேண்டும்,

பென்சில்வேனியா, எகிப்து, மெக்ஸிகோ, பீடர்ஸ்பர்க், நயாகரா, கௌதமாலா போன்றவையும் நரசிம்ம ஸ்தம்பங்கள், நரசிம்ம ஸ்தூபி சக்திகள் நிறைந்த பகுதிகளாகும். உலகில் தற்போதுள்ள நரசிம்ம, ஸ்தம்பங்கள் யாவும் பானக நீரோட்டங்களை உடையவையே, இவற்றை இன்றையக் கலியுக அரசியல் நாட்டு அமைப்பை வைத்து நோக்காதீர்கள். உலகம் முழுதும் ஒரே நாடாக, சனாதன தர்ம நாடாகத் துலங்கிய காலத்தை எண்ணிப் பாருங்கள்! நீங்களும் அக்காலத்தில் உலகின் பல இடங்களிலும் வாழ்ந்தவர்கள் ஆதலின், இன்று இங்கு இதனை அறிவதும் காலதேச சித்தமாகிறது என அறிக! விஜயவாடாவில் பானக நரசிம்மரின் திருவாயில் ஊற்றும் பானகம் பூமியடியில் மறைவதும், எங்கு போகிறது என்று எவராலும் அறிய இயலாததும் இன்றும் கலியுகத்தில் நிகழும் தெய்வீக அற்புதங்களே! இதில் ஒரு பகுதி உலகின் பல நாடுகளிலும் உள்ள நரசிம்ம ஸ்தம்பங்களை அடைகின்றன,

திருமலை

பல குடும்பங்களிலும் நிலவும் முக்கியமான பிரச்னைகளுள் ஒன்றே, தந்தை – பிள்ளை இடையே உள்ள பிணக்குகள் ஆகும். இது வெறுப்பாகி, நாளடைவில் வளர்ந்து முற்றி விடுவதற்கு முன், இதனை அன்புப் பரிமாற்றமாக மாற்றிச் சாந்தப் பிணைப்புடன் அன்பு செறிய மலர்வதற்கு உதவுவதே சிவகங்கை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருமலை ஆலய வழிபாடாகும். ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீமலைக்கொழுந்தீசர் அருளும் சிவாலயமே திருமலை. குடும்பத்தோடு திருவாதிரை நாளில் சென்று தரிசித்து, பால்பாயசம் படைத்து, இங்கேயே விறகு அடுப்பில் பொங்கல் வைத்துப் படைத்து வழிபட்டு வந்திடில், குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். ஏழைகளுக்கு அடுப்பு, விறகு, கரண்டி, பாத்திரங்களுடன் செட்டாகத் தானமளித்தல் மிகவும் சிறப்பான பலன்களைத் தரும்.

பூரம் என்பது மங்கள சப்தாக்னி நட்சத்திரமாகும். பெண்கள் தங்கள் கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் ஒன்றோடொன்று ஸ்பரிசிக்கையில் ஏற்படும் திவ்யமான சப்தத்தில் மங்களகரமான ஒலிக் கிரணங்களை உண்டாக்கி, இல்லத்தில் தவழ்ந்து, பூரித்துச் சாசுவதமான சாந்தத்தை விருத்தி செய்யும். பூர நட்சத்திரம் தோறும் திருப்பாற்கடல் ஸ்ரீநிறைவளையாம்பிகைக்கு நிறைய வளையல்களைச் சார்த்தி வழிபட்டு, ஏழைகளுக்கு வளையல்களைத் தானமாக அளித்து வருவதானது – கணவன் – மனைவி இடையே உள்ள மனஸ்தாபங்களைத் தணித்து, குடும்பத்தில் நல் அமைதி கொழிக்க துணை புரியும் மிகவும் சக்தி வாய்ந்த தலம்.

பூர நட்சத்திர நாளில் ஆலயங்களில் புன்னை மரத்திற்கு வளையல்களாலான மாலை சார்த்தி வழிபட்டு, ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஒரு வருடத்திற்கு வரும் வகையில் நிறைய வளையல்களைத் தானமாக அளித்து வருவதால், இல்லத்தில் சுமங்கலித்துவ சக்திகள் நன்கு விருத்தியாகும். திருமணமாகிச் சென்றுள்ள தம் புதல்வி புகுந்த வீட்டில் படும் கஷ்டங்களை எண்ணி, எண்ணி வேதனையுறும் தாய்மார்களின் வேதனைகள் தீரவும் உதவும். பூர நட்சத்திர நாளில் இரண்டு அம்பிகை உள்ள தலங்களில் இதனை ஆற்றுவது சிறப்புடையதாகும். ரிஷிவந்தியம், திருப்புகலூர் போன்றவை புன்னை மரத்தை தலவிருட்சங்களாக உடைய சில ஆலயங்களாகும்.

மது, புகை, புகையிலை, காமத் தீவினைகள் இவைதாம் உலகெங்கும் மக்கள் சமுதாயத்தை, குறிப்பாக இளைய சமுதாயத்தைச் சீரழிப்பதாகும். இத்தகைய தீய வழக்கங்களுக்கு ஆட்பட்டுள்ளோர் வலுக் கட்டாயமாக இவற்றிலிருந்து வெளிவர முடியாது, அல்லது வெளிவர முயற்சித்தாலும், மறைமுகமாக இது தினமுமே தொடரலாம் அல்லவா. எனவே, இவர்களும் தினமும் தன்னுடைய காரியங்களைப் பற்றித் தினமுமே அரை மணி நேரமேனும் மனவிசாரமாக ஆய்வு செய்து வருதலால், காலப் போக்கில் தாமாகவே திருந்தி வாழும் மார்கங்கள் நன்கு புலப்படும்.

சோழபுரம்

தீய வழக்கங்களில் இருந்து முற்றிலுமாக வெளி வர ஆத்ம விசாரம், மணி, மந்திரம், ஔஷதம் (மருந்து), தானம் ஆகிய ஐந்து வகை தர்ம சக்திப் பூஜைகளையும் கண்டிப்பாகக் கடைபிடித்தாக வேண்டும். கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் (தற்போது மிகவும் சிதிலமடைந்துள்ளது) ஆலயத்தில், எந்நாளிலும் குளிகை நேரத்தில் அல்லது தேய்பிறை அஷ்டமித் திதியில் ஒரு தாம்பாளத்தில் 5 விளக்குகளை ஏற்றி, அடிப்பிரதட்சிணமாக 12 முறை வலம் வந்து, ஆலயம் முழுதும் மணமுள்ள தூபங்கள், ஊதுவர்த்திகளை ஏற்றி வைத்து, கோதுமை உணவு வகைகளை ஏழைகளுக்குத் தானமாக அளிப்பதுடன், தினமும் முற்றிலும் கறுப்பு நிறமுடைய நாய்களுக்கு உணவிட்டு வந்திடில், வாழ்வில் நல்ல மாற்றங்கள் கிட்டும்.

தற்காலத்தில் வெள்ளம், பூகம்பம், ஆழிப்பேரலை, தீ விபத்துக்கள் போன்ற இயற்கைச் சீற்றங்கள் பெரிதும் தோன்றி மக்களை பாதிக்கக் காரணமென்ன? மனித சமுதாயம் இறைவழியில் சிறந்து துய்க்கும் உத்தமர்களுக்கு இழைக்கும் இம்சைகளைக் கண்டு வருந்தி, வருந்தியே, பூவுலகில் இருந்து சித்தர்களும், மஹரிஷிகளும் புறப்பட்டுத் தத்தம் லோகங்களுக்குச் சென்று விட்டமையும் இயற்கைச் சீற்றங்களுக்கான மூல காரணங்களுள் ஒன்றாகும். இவற்றுக்கு ஓரளவேனும் பரிகாரம் தேடிட, ஞாயிறு மற்றும் வியாழன் தோறும் சித்தர்களின், மாமுனிகளின் ஜீவ சமாதிகளில், குரு மூர்த்தங்களில், அதிஷ்டானங்களில், பிருந்தாவனங்களில் அபிஷேக, ஆராதனைகளை ஏழைகளுக்கான அன்னதான சேவையுடன் நிகழ்த்திட வேண்டும்.

ஒரு புறத்தில் உலக மக்களின் பேராசை, அதர்மம், காம வெறியாட்டங்கள், நாணயமின்மை,  அதர்மச் செயல்கள் காரணமாக, சித்தர்கள், மஹரிஷிகள் பூவுலகை விட்டும் பெரிதும் சென்று விட்டாலும், திருஅண்ணாமலை, பொதிய மலை போன்ற தலங்களில் சென்று தங்கி மனித வடிவில் வழிபட்டு வருகின்றனர். பண்டைய காலத்தில், அவ்வப்போது மானுட வடிவுகளில் பல ஆலயங்களிலும் சென்று வழிபட்டு எங்கும் நிறைந்திருந்த மஹரிஷிகளின் போக்குவரத்து, உலக மக்களின் அசிரத்தையால் தற்போது சில குறிப்பிட்ட தலங்களில் மட்டுமே நிறைய நிகழ்கிறது.

ஆனால், சூக்குமமான வடிவில் பழமையான சுயம்பு மூர்த்தித் தலங்கள் அனைத்திலும் சித்தர்களின் நடமாட்டம் நிறையவே நிகழ்கிறது. மானுட வடிவு தரித்து இவர்கள் பூஜை ஆற்றிய சிறப்பான காலத்தை மக்கள் சமுதாயம் நன்கு பயன்படுத்திக் கொள்ளாது கை விட்டு விட்டு, இவர்கள் சூக்குமச் சரீரம் தரித்து வருவதை உணரும் உத்தம நிலைகளை எப்போது அடைவது? இதனை இவ்வாறு கலியுகத்தில் அறிதிலும் கடினமே! இதுவே கலியுகத்தின் தலைஎழுத்து!

நல்முறையில் பண வரவிற்கு உதவும் “தன சக்திகள்” பல உண்டு. பணம் நிறைய வந்து சேர்வது மட்டும் “தனலக்ஷ்மி கடாட்சம்” என்று ஆகாது. வருகின்ற பணம் அதர்மமான வழிகளில் கரையாது இருப்பதும், சில வகை “லட்சுமி கடாட்ச” அம்சங்களாகும். எல்லாவற்றையும் விட, பண வரவால் பீதியோ, பயமோ ஏற்படாமல், நல்ல வகையில் மன நிம்மதியுடன் செல்வம் வந்து நிரந்தரமாகத் தங்க வேண்டும். இதற்காக சிறப்பான வழிபாடுகளை ஆற்ற வேண்டிய தலமே திருமகள் ஆயிரம் பொன் தாமரை மலர்களைக் கொண்டுப் பல யுகங்கள் வழிபட்ட ஸ்ரீலக்ஷ்மீ சஹஸ்ரேஸ்வரர் லிங்க மூர்த்தி அருளும் தீயத்தூர் தலமாகும். புதுக்கோட்டை – ஆவுடையார் கோயில் அருகே உள்ளது,

ஆத்ம விசாரமானது, பாமரர் முதல் பணக்காரர் வரை யாவருக்கும் உரித்தானதே! குறிப்பாக அனைத்துக் குடும்பத்தார்க்கும் இந்த விசார பூஜை நிச்சயமாகத் தேவையே! ஆம், ஆத்ம விசாரம் என்பது ஒரு வகை மானசீக ஆத்ம வழிபாடேயாம்! உண்மையில் ஆறறிவு வாசனையே சற்றும் இல்லாது, மது, புகை, பேராசை, பிறர் பொருளில் வாழ்தல், லஞ்சம், காமத் தீச்செயல்களுக்கு ஆட்பட்டு, ஈரறிவு, மூன்றறிவு நிலைகளுடன் மட்டுமே உலகெங்கும் வாழும் கலியுக மனிதன், என்றுதான் முழு மனிதனாக ஆறறிவுடன் வாழ்வது? எனவே, இறைவன் மனித குலத்திற்கெனப் பரிசாக அளித்துள்ள பரிபூரணமான ஆறறிவுப் பகுத்தறிவுடன் நிலைத்து வாழ உதவுவதும் ஆத்ம விசாரமே!

“திருந்த மாட்டார்கள்” எனக் கைவிடப்பட்ட தீயவர்கள் கூட, தம்முள் தினமும், ஆத்ம விசாரத்தைப் புலர வைக்கும் வண்ணம் இவ்வகையில்தான் வட்டமாக, பல சக்கர அமைப்புகளுடன், பல கண்ணாடிகளுடன், தனக்குத் தானே உரையாடிக் கொள்வதாகவும் அமைந்திருந்தது.

சிறப்பான ஆத்ம விசாரத்திற்கென உதவுகின்ற கடவுள் வழிபாடும் உண்டு. “குற்றம் பொறுத்த நாதராக” – ஸ்ரீஅபராதக்ஷமேஸ்வரராக – இறைவன் அருளும் ஆலயங்கள் இதற்கான சிறப்பைக் கொண்டவை. இத்தகைய ஆலயத்தைத் தேடிக் கண்டுபிடிக்கவும். தேடினால்தான் இதன் அருமை தெரிய வரும். உடனே கையில் விண்டு எடுத்துக் கொடுத்து விட்டால் அருமை தெரியாது, புரியாது போய் விடும். “இவ்வளவுதானா” என்ற அலட்சியமும் உண்டாகி விடும். இவ்வகையில் எண்ணற்ற திருத்தலங்கள் மறைந்து விட்டன. எதிர்கால சமுதாயத்தை இவையின்றி எப்படிக் சுட்டிக் காப்பது? நம் வாழ்க்கையையே மட்டும் எண்ணி வாழ்தல் அவலமான சுயநலமே!

தொடரும் ஆனந்தம்...

அம்பிகைகளின் அருட்பாங்கு மனித சக்தியால் புரிந்து கொள்ள முடியாதது, அளவிட முடியாதது. உதாரணமாக, காஞ்சனாகரம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீதுங்கஸ்தனாம்பிகை, திருமுருகன் பூண்டி திருத்தலத்தில் அருளும் ஸ்ரீமுயங்கு பூண்முலை வள்ளியம்மை போன்ற நாமத்துடன் இறை மூர்த்திகள் அருள்வதுண்டு. முயங்கு பூண்முலை வள்ளியம்மை என்றால் தளர்ந்த தனத்தை உடைய அம்பிகை என்று பொருள்.

ஸ்ரீதுங்கஸ்தனாம்பிகை காஞ்சனாகரம்

இந்த நாமத்தின் பொருளை மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள, “தளர் முலை தாய்மையால் நிமிருமே...!” என்பதான அகத்திய நாடிப் பாடலை அடியார்கள் தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தால் ஓரளவு புரிந்து கொள்ளலாம். ஒரு முறை ஒரு இளவயது சந்நியாசி ஒருவர் வீடு வீடாகச் சென்று கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தான். அவ்வாறு ஒரு வீட்டின் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்தபோது தாய்மையுற்ற பெண்ணொருத்தி அந்த சந்நியாசிக்கு பிச்சை அளிக்கும்போது பருத்திருந்த அவளுடைய தனத்தைக் கண்டு, “ஏனம்மா உன்னுடைய தனம் இவ்வாறு பருத்திருக்கிறதே, உனக்கு என்ன உடல் வேதனை?” என்று கேட்டான்.

அப்போது அந்த பெண்ணின் உடனிருந்த தாய், “அப்பா, இவள் பிள்ளையாண்டிருக்கிறாள் (கர்ப்பாக இருக்கிறாள்), பிறக்கப்போகும் குழந்தைக்காக கடவுள் இப்போதே வேண்டிய பாலமுதை அவள் தனத்தில் சேமித்து வைத்திருக்கிறார்...”, என்று கூறினாள். இதைக் கேட்ட அந்த சன்னியாசி மிகவும் ஆச்சரியப்பட்டு, “ஆஹா, எப்போதோ பிறக்க இருக்கும் குழந்தையின் உணவுக்காக இத்தகைய ஒரு ஏற்பாட்டை திட்டமிட்ட இறைவன் எனக்காக ஏன் அவன் உணவை அளிக்கமாட்டான். இந்த நம்பிக்கை கூட இல்லாத நான் எப்படி ஒரு இறைவனையே நம்பி வாழும் சன்னியாசியாக இருக்க முடியும்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

அன்றிலிருந்து அவன் பிச்சை எடுப்பதையே விட்டு விட்டான் என்று கூறவும் வேண்டுமோ?

முதுமை, மனத் தளர்ச்சி, உடல் நோய்கள் போன்ற பல்வேறு காரணங்களால் பெண்களின் தனத்தில் தளர்ச்சி ஏற்படுவதுண்டு. முதுமையால் ஏற்படும் தளர்ச்சி தவிர்க்க முடியாதது. மற்ற காரணங்களால் இவ்வாறு தளர்ச்சியால் வாடுவோர் ஸ்ரீமுயங்கு பூண்முலை வள்ளியம்மையை வணங்கி குறைந்தது 100 பேருக்காவது sanitary napkins மகப்பேறு இல்லங்களில் வசதியில்லாத ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு அளிப்பதால் நல்லருள் பெறுவர். குறிப்பாக, மார்பகம் போதிய வளர்ச்சி இல்லாததால் திருமணம் உரிய காலத்தில் ஆகாமல் தடுமாறும் பெண்களின் பெற்றோர்கள் இத்தகைய தானங்களை அளித்து வருதலால் நற்பலன் பெறுவர். மார்புப் புற்று நோய்களால் வாடும் பெண்களுக்கும் இத்தகைய தானங்கள் மன சாந்தியை அளிக்கும்.

சில குழந்தைகளுக்கு தாயாக இருந்து பாலமுது ஊட்டுவதால் மட்டும் தாய்மார்களின் கடமை முடிந்து விடுவது அல்ல. அமிர்தானந்தா அன்னையைப் போல் கோடிக் கணக்கான மக்களுக்கு தாயாக இருந்து அவர்களுக்கு ‘அமுதம்’ ஊட்டுவது என்பதே உண்மையான சேவை. இத்தகைய சேவையை சாதாரண மக்களும் மிக எளிமையாக ஆற்றக் கூடியதே மாளய பட்ச தினங்களில் ஆற்றும் தர்ப்பண வழிபாடுகளும் அன்னதான சேவையும் ஆகும்.

ஸ்ரீதுர்கை அம்மன் ரிஷிவந்தியம்

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam