அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீசாகம்பரி விரதம்

ஸ்ரீசட்டைநாத சித்தர் என்பார் அதிஅற்புதமான சித்புருஷர்களில் சிறப்புடையவர். சீர்காழியிலே சிவயோகம் பயின்று அன்றும், இன்றும், என்றுமாக ஏகாந்த ஜோதியாக பிரபஞ்சத்திற்கே அருட்பணி ஆற்றி வருகின்ற சித்புருஷர் ஆவார். இவர் நமக்கு அருளிய ஸ்ரீசாகம்பரி தேவி விரதமே பிரமாதி வருட சாகம்பரி நவராத்திரியில் நாம் கைக் கொள்ள இருப்பதாகும். ஸ்ரீசட்டை நாத சித்தர், ஸ்ரீசாகம்பரி தேவியின் மகிமையைப் பற்றி பல கிரந்தங்களாக வடித்துத் தந்துள்ளார். சத்சங்கமாகப் பலரும் கடைபிடிக்க வேண்டிய மிகவும் எளிமையான விரதம்,
ஆண்டுதோறும் வரக் கூடிய மிக முக்கியமான நான்கு நரவாத்திரிகளிலும் குறிப்பாக பிரமாதி வருடம் புரட்டாசி மாதம்தனில் விசேஷமாக கடைபிடிக்க வேண்டியதுமாகும். உண்மையில், தினசரிப் பிரதோஷம் போல, மாதந்தோறும் வரும் நவராத்திரி தினங்களும் உண்டு. ஒவ்வொரு அமாவாசைக்குப் பின்னர் பிரதமையில் துவங்கி நவமி வரை மாதாந்திர நவராத்திரியாக மாதந்தோறும் வருவதாகும். இந்த 12 நவராத்திரிகளானவை தாம் வருடத்திற்கு நான்கே நான்கு ருதுக்கால நவராத்தியாகச் சுருங்கி தற்போது ஒன்றே ஒன்றாக புரட்டாசி மாத நவராத்திரியாகத்தான் பெரும்பான்மையாகக் கொண்டாடப்படுகின்றது. இதுவே தான் கர்நாடகப் பகுதியில் தசரா என்றும் தமிழ்நாடு மற்றும் ஏனைய பாரதப் பகுதிகளிலும் நவராத்திரி என்றும் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றது. அதிலும் 60 வருடத்திற்கு ஒரு முறை பிரமாதி வருடத்திற்கான புரட்டாசி நவராத்திரியாக வருவதே ஸ்ரீசாகம்பரி நவராத்திரியாகும். இதுவே ஸ்ரீசட்டை நாத சித்தரின் பெருந்தவப் பேறாக நமக்குக் கிட்டியுள்ளதாம்.

ஸ்ரீசாகம்பரி விரதம் – அட்டைப்பட விளக்கம்
ஸ்ரீசாகம்பரி தேவி நவராத்திரி விரதத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய விரத முறையாக ஸ்ரீசட்டைநாத சித்தர் அருளியுள்ளதை காண்போமா! இந்த சாகம்பரி நவராத்திரியின் ஒன்பது, தினங்களிலும், தினந்தோறும் காலை 8 மணி முதல் 10 மணிக்குள்ளாக ஆராக் கீரையுடன் கலந்த உணவை மட்டும் உட்கொள்ள வேண்டும். ஆராக்கீரை என்பது அற்புதமான மூலிகையாக விளங்குவதோடு மட்டுமின்றி, மனிதர்களுடைய ஆரோக்கியத்திற்கான பல விசேஷமான மருத்துவ குணங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. ஸ்ரீசட்டைநாத சித்தரே இதற்குரிய சித்தரிஷிப் பெருமான் ஆவார். எனவே சாகம்பரி நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் காலை ஆராக்கீரையுடன் முக்கால் வயிற்றுக்கு மட்டும் உணவு உட்கொண்டு பிறகு நாள் முழுவதும் உண்ணாவிரதம் பூண வேண்டும். மாலையில் ஸ்ரீசாகம்பரி பூஜையை நிறைவேற்றிடுக!
இன்று ஜாதி, மத, குல வேறுபாடு இன்றி, ஏழைச் சுமங்கலிகட்கு பெரிய கண்ணாடி, சீப்பு, மஞ்சள் , குங்குமம், மாங்கல்ய சரடு, துணிமணி வகைகள் போன்ற மங்கலப் பொருடளையும் மற்றும் இனிப்பையும் ( sweets ) தானமாக அளித்திடல் வேண்டும். பிறகு இரவு 7 மணிக்கு சாகம்பரி விரத அமிர்தத்தைத் தயாரித்து ஸ்ரீசாகம்பரி தேவிக்குப் படைத்து, அதனைப் பிரசாதமாக அருந்தி அந்நாளைய விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
ஸ்ரீசாகம்பரி அமிர்தம்
ஸ்ரீசாகம்பரி தேவி அமிர்தம் என்பது எலுமிச்சம்பழச் சாற்றுடன் தக்காளி சாற்றைச் சேர்த்து தேன் கலந்து அமிர்தமாக ஆக்குதல் ஆகும். ஒரு எலுமிச்சைக் கனிக்கு மூன்று தக்காளிக் கனிகளாக வைத்து அதனுடைய புளிப்புச் சுவைக்கு ஏற்ப தேனைக் கலந்து ஸ்ரீசாகம்பரி அமிர்தத்தைத் தயாரித்திட வேண்டும். ஸ்ரீசாகம்பரி அமிர்தத்தைத் தயார் செய்யும் போது கீழ்க்கண்ட மந்திரத்தைத் துதித்தல் வேண்டும்.
ஸ்ரீசாகம்பரி அமிர்தத் துதி
சிவகனிச் சாறும், செம்பாரக் கனிச் சாறும்
பவகரண யோகமும் பரிந்து கூடியே
உவப்புடன் ஒளிர்கின்ற உமையருள் ஜோதியே!
பவதாரிணி சாகம்பரி பரிபாலயம் ஆகுகவே!
(சிவகனி = எலுமிச்சைக் கனி ; செம்பாரக்கனி = தக்காளி) சாகம்பரி விரதம் பூணுகின்ற நாள் முழுவதும் இந்த சித்த பீஜாட்சர மந்திரத் துதியை – ஸ்ரீசட்டைநாத முனியின் ஸ்ரீசாகம்பரி (சித்த பரிபாஷைத்) தமிழ் துதியை – ஓதிடுதல் சிறப்பானது. இந்த தோத்திரத்தை எப்போதும் குறிப்பாக உணவு உண்ணும் முன்னர் ஓதுதல் மிகவும் போற்றத் தக்கதாம். சித்தர்களின் வாக்கியம் என்றால் அது நான்மறை வேத மகாசக்தியைப் பெற்றுள்ளது அன்றோ!

சாகம்பரி நவராத்திரி – பூஜை மஹிமை
நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும், உலக அன்னையாம் உமையவள் பலவித வழிபாடுகள் மூலம் ஆண்டவனைப் போற்றி ஆராத்திக்கின்றாள். உலக ஜீவன்களின் நல்வாழ்விற்கான பூஜையிது! ஈஸ்வரியே சர்வேஸ்வரனை வழிபடுகின்ற நாட்களாதலின், நவராத்திரியில் நாம் செய்கின்ற பூஜைகள் அனைத்தும், விரதபூஜா தேவவிதானமாகப் பெருகி தேவியின் பூஜா பலன்களோடு இணைந்து மிளிர்கின்றன. நவராத்திரியின் மஹிமையை நவநாத சித்தர்கள் என அழைக்கப்படும் மிகவும் முக்கியமான ஒன்பது சித்தர்களுமே பரமானந்தத்துடன் நன்கு விளக்கியுள்ளனர். பிரமாதி வருட நவராத்திரிக்கு சாகம்பரி நவராத்திரி என்ற விசேஷப் பெயருமுண்டு. 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற இந்த சாகம்பரி நவராத்திரியை நன்முறையில் கடைபிடித்து அரிய பலாபலன்களைப் பெறுவீர்களாக!
ஸ்ரீசாகம்பரி தேவியின் படம் நம் ஆஸ்ரமத்தில் கிடைக்கும். ஒவ்வொரு மாதத்திலும், அமாவாசைக்குப் பின் வருகின்ற, சுக்லபட்சம் என்று சொல்லப்படுகின்ற, வளர்பிறையில் பிரதமை திதி முதல் நவமி திதி வரை அமைகின்ற ஒன்பது நாட்களுமே மாதாந்திர நவராத்திரி நாட்களாகும். ஆனால் நடைமுறையிலோ, பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் மாளயபட்ச அமாவாசையை ஒட்டி அமைகின்ற சாரதா நவராத்திரியும், வஸந்த ருதுக் காலத்தில் ஆனி மாதத்தில் வருகின்ற ஒன்பது நாட்கள் வஸந்த நவராத்திரியாகவும் – இந்த இரண்டு மட்டுமே முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகின்றன. இதிலும், சாரதா நவராத்திரியான புரட்டாசி நவராத்திரிதான் நடைமுறையில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.
பிரமாதி ஆண்டிற்கு உரித்தான மாளய அமாவாசையையடுத்து வருகின்ற வழக்கில் சாரதா நவராத்திரி என்று சொல்லப்படுகின்ற ஒன்பது தினங்கள் சாகம்பரி நவராத்திரியாக சித்புருஷர்களால் பெரிதும் போற்றப்படுவதால் சாகம்பரி நவராத்திரியாக இதனை இறைப்பாங்குடன் போற்றி வழிபட வேண்டியது இவ்வருடத்தில் நம் கடைமையாகும்.. ஸ்ரீசாகம்பரி தேவியைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா? நவராத்திரியின் போது அம்பிகையைப் பலவித பூக்கள், காய்கறி, கனி வகைகளால் அலங்கரித்துப் பூஜிக்கும் ஸ்ரீசாகம்பரி வழிபாடு பற்றி நீங்கள் கேள்வியுற்றிருப்பீர்கள். இப்பூவுலகில் மட்டுமின்றி பிரபஞ்சத்திலுள்ள அனைத்துத் தாவரங்களையும் படைத்து, காத்து, ஆண்டு கொண்டிருப்பவளே ஸ்ரீசாகம்பரி தேவியாவாள். மனித உலகம் மட்டுமின்றி எத்துணையோ கோடி உலகங்களிலும் உயிர்ச் சத்து அளிப்பதாக விளங்கும் காய்கறி, கனி, கிழங்கு, தாவர வகைகளைப் படைத்து நமக்கு ஜீவசக்தியளிக்கும் தெய்வமூர்த்தியான ஸ்ரீசாகம்பரி தேவியை நாம் தினந்தோறும் ஒரு முறையேனும் வணங்கி ஆராதிக்க வேண்டுமல்லவா? ஏன் இதனை நாம் மறந்தோம் இக்கலியுகத்தில்?
பலகோடி யுகங்களாகச் சிறப்புடன் விளங்கி மறைந்த அல்லது மறைந்து வருகின்ற ஸ்ரீஆயுர்தேவி வழிபாடு, ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகால பூஜை, ஸ்ரீசாகம்பரி பூஜை போன்ற அரிய பூஜை முறைகளை சித்புருஷர்களின் அருள்வழி மொழிகளாக, தம்முடைய சற்குருவாம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளின் குருவாய் மொழியாக நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் எடுத்துரைத்து வருகின்றார்கள். ஜாதி, இன, குல, மத பேதமின்றி யாவர்க்கும் ஸ்ரீசாகம்பரி நவராத்திரி பூஜையின் பலாபலன்கள் சென்றடைய வேண்டுமென்ற உத்தம நோக்குடன் இறைப்பணி ஆற்றி வருகின்ற நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ் மூலம் மட்டுமின்றி தீபகண்டி வழிபாடு, ஆன்மீகப் புத்தகங்கள் மூலமாகவும் எளியோர்க்கும் எளிதே புரியும் வண்ணம் பல அற்புத பூஜை முறைகளை அளித்தும் வருகின்றனர்.
ஸ்ரீசாகம்பரி தேவிதான் அனைத்துத் தாவர வகைகளுக்கும் உயிர்ச் சத்து அளிப்பதோடு, இத்தாவர ஜங்கம சக்தியானது, எத்துணையோ கோடி உயிரினங்கட்கும் சென்றடையும் வண்ணம் அருளாட்சியும் புரிகின்றாள். நீங்கள் இன்று ரசமாகவும், குழம்பாகவும், பொறியலாகவும் உண்ணும் காய்கறிகளை ஸ்ரீசாகம்பரி தேவியின் திருநாமத்தை ஓதி தியானித்து சமைத்து உண்ணுதலே சிறப்பானதாகும். இதுவரை இதனை அறியாமையால் செய்யாததாவது போகட்கும். இனியேனும், கீரையோ, காய்கறியோ, கிழங்கோ, பழவகையோ உங்கள் வாயில் சுவை பெறும் முன்னர், ஸ்ரீசாகம்பரியை ஒரு வினாடி நேரமேனும் நினைத்து நன்றிக் கடனைப் பிரார்த்தனையாகச் செலுத்துங்கள். வாழ்நாளில் இத்தனை காலம் ஸ்ரீசாகம்பரி வழிபாட்டைச் செய்யாமல் இருந்ததற்கு ஓரளவு பிராயசித்தமாக அமைவதே இந்த பிரமாதி வருட சாகம்பரி நவராத்திரி பூஜையாகும்.

லால்குடியில் கொலு பூஜை

தேவியின் தேவ பூஜை
அம்பிகையே, சாகம்பரி தேவி ரூபத்தில் ஈஸ்வரனை ஆராதிக்கும் அற்புதமான ஒன்பது தினங்களே இவையாம். ஸ்ரீதுர்க்கையாகவும், ஸ்ரீலட்சுமியாகவும், ஸ்ரீசரஸ்வதியாகவும் இறைவனை ஆராதிக்கின்ற சித்சக்தி ஸ்வரூபமாக உள்ள பராசக்தியே சாகம்பரியின் அவதார அம்சங்களைப் பெற்று இறைவனை வழிபடுகின்றாள் என்றால், அம்பிகையுடன் சேர்ந்து நாமும் இந்த ஒன்பது தின நவராத்திரி பூஜையை மேற்கொள்வதெனில் நம் ஆயுளிலும் பெறுதற்கரிய பாக்யம் அன்றோ! ஒவ்வொரு அறுபது ஆண்டுக்கும் ஒரு முறையே வருகின்ற இந்த சாகம்பரி நவராத்திரி வழிபாடானது, நம்முடைய வாழ்நாளில் பிரமாதி ஆண்டில் அமைவது நம் பூர்வ ஜென்ம புண்ணியத்தாலும், நம் மூதாதையரின் ஆசியாலுமே என்பதை உணருங்கள்.
ஸ்ரீசாகம்பரி தேவி நவராத்திரியை வழிபடுவது மிக எளிதான ஒன்றே! ஒவ்வொரு திதிக்கும் உரித்தான வழிபாட்டை சித்புருஷர்கள் அருள்கின்ற மொழியாக நாம் இங்கு அளித்துள்ளோம். தனிப்பட்ட முறையில் இவ்வழிபாட்டைச் செய்வதைவிட, ஜாதி, பேதமின்றிப் பல இல்லறப் பெண்மணிகள் ஒன்று சேர்ந்து, சத்சங்க வழிபாடாக இந்த சாகம்பரி நவராத்திரி பூஜையை ஒன்று கூடிக் கடைபிடித்தலானது கூட்டு பூஜையாக நவராத்திரி பூஜையின் பலன்களைப் பல்கிப் பெருக்குகிறது. சமுதாயத்தில் வன்முறை, கொலை, கொள்ளை போன்ற எவ்வித தீய சக்திகளுமின்றி நம் மனித சமுதாயம் அமைதிப் பூங்காவாக மலர சாக்த சக்தியைப் பரவெளியில் பரப்ப, சத்சங்க வழிபாடு ஒன்றே பலத்த அஸ்திவாரம் என்பது உறுதி!

ஏழைக்கும் எளிய கொலு!  நவராத்திரி பொம்மை விளக்கம்
ஒவ்வொரு வீட்டிலும் ஏழை, எளியவராயினும் சரி, கோடீஸ்வரரானாலும் சரி, நவராத்திரியில் கொலு பொம்மை வைத்து கண்டிப்பாக வழிபட வேண்டும். நான்கைந்து  பிள்ளையார், முருகன் போன்ற தெய்வ மூர்த்தி பொம்மைகளை வைத்து அவரவர் வசதிக்கேற்ப மண் குடிசையாயினும் சரி, ஒரு மர நாற்காலியிலோ அல்லது காகித அட்டைகளை அடுக்கி வைத்து இந்த தெய்வீக பொம்மைகளை வைத்து, மிக எளிய முறையில் இந்த அரிய பூஜையை மேற்கொள்ளலாம்! ஏதோ 50, 100 பொம்மைகள் இருந்தால் தான் அது நவராத்திரி கொலு என எண்ணாதீர்கள். உங்கள் வருமான வாழ்க்கை வசதிக்கேற்ப சில தெய்வ பொம்மைகள் இருந்தாலே போதும். அதுவே உங்கள் இல்லத்திற்கு நவராத்திரி பூஜையின் பலனை அவரவருடைய உண்மையான பக்திக்கு ஏற்ப நிறைவாக்கித் தரும் என்பதை உணருங்க்ள். வசதியுள்ளோர் நவராத்திரியின் போது ஏழைகட்குத் தெய்வீக பொம்மைகளை தானமாக வாங்கித் தருதலால் அளப்பரிய புண்ணிய சக்தியைப் பெறலாம். இந்த நவராத்திரி பூஜா புண்ணிய சக்தியைக் கொண்டு, நவராத்திரி தெய்வீக பொம்மைகளிலிருந்து நிரவுகின்ற இறை ஒளிக்கதிர்கள் பலாபலன்களாக கொண்டு நாம் எத்தனையோ தீய கர்மங்கட்கு, துன்பங்கட்கு எளிதில் நிவர்த்தி பெறலாமே! அன்னதானம், வஸ்திர தானம் போல, ஏழைகட்கு தெய்வீக பொம்மை தானமளித்தலும், உத்தமமான தானமாக அமைகிறது என சித்புருஷர்கள் அருள்கின்றனர்.

ஸ்ரீஅம்பாளின் நவராத்திரி
பூஜை லால்குடி

உங்கள் இல்லத்தில் ஒரு கோயில்! :-   நவராத்திரி கொலு வைப்பதற்கான முக்கியமான நியதி என்னவெனில், ஒருமுறை வைக்கப்பட்ட, பொம்மையை எக்காரணங் கொண்டும் ஒன்பது நாட்களுக்கும் அசைத்தலோ, நகற்றுதலோ கூடாது என்பதே! ஏனெனில், எவ்வாறு மூல மூர்த்தியானவர் ஆலயத்தில், கோடானு கோடி யுகங்கள் சுயம்பாகத் தானே தோன்றி அமர்ந்து அருள்பாலிக்கின்றாரோ, அதே போல் இந்த நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் நவஜோதி தெய்வ சக்தியானது பொம்மைகள் மூலமாக நம் இல்லத்தில் கூடி இருப்பதால், கொலுப்படி ஆலயம் போல நவராத்திரி கொலுவைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். நவராத்திரியின் போது நம் இல்லத்திற்கே அம்பிகை பூஜித்திட வருகின்றாள் என்றால், அதைவிடப் பெரும் பாக்கியம் நமக்கு வேறு என்ன இருக்க முடியும்? ஏனெனில், நம்மை என்றும், எப்போதும் காத்து வரும் உலக அன்னையாம், ஸ்ரீமந் நாராயணயன் உறைகின்ற ஸ்ரீவைகுண்டத்திலும் பூஜை செய்கின்ற அம்பிகையே ஒவ்வொரு இல்லத்திற்கும் வந்து, எங்கெல்லாம் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு நவராத்திரி பூஜை சிறப்பாக நடை பெறுகிறதோ, அங்கெல்லாம் தாமும் பங்கேற்று அருட்சுடர் ஏற்றப் பெரிதும் விரும்புகிறாள். இதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில், ஒவ்வொருவர் இல்லத்திலும், அவரவர் வசதிக்கேற்ப சிறிய அளவிலான நவராத்திரி கொலுவேனும் அமைக்கப்பட்டு நவராத்திரி பூஜையும் சிறப்பாக நடைபெற வேண்டும்.
நவராத்திரி கொலு அமைக்கும் முறை ஜாதி, இன, குல பேதமின்றி அனைவருக்கும் உரித்தானதே ! மாளயபட்ச அமாவாசை அமைகின்ற அன்று மாலையே நவராத்திரி கொலுவிற்குரித்தான அனைத்து ஏற்பாட்டையும் துவங்க வேண்டும். கொலுப்படி அமைத்தல், அலங்கரித்தல் பொம்மைகளை அடுக்கி வைத்தல் போன்ற கொலுவிற்கான அடிப்படைக் காரியங்களை அன்றே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விதிகளாவன :
1. கொலுப்படிகள் ஒற்றைப் படையாக இருத்தல் வேண்டும். ஏனெனில் நவராத்திக்குரித்தான, பீஜாட்சர மந்திரங்கள் யாவும், முக்கோண (∆) பீஜாட்சரங்களாக அமைவதால், ஆன்மீகப் பரிமாணக் கோணங்கள் சிறப்பாக அமைவதற்கு 1, 3, 5, 7, 9 என்ற முறையின் எண்ணிக்கையில் ஒற்றைப்படையில் கொலுப்படி அமைத்தலே சிறப்பானதாகும். வசதி இல்லாதோர் தம் வசதிக்கேற்ப அட்டைப் பெட்டிகள், மரப்பெட்டிகள் மூலமாகப் படி அமைத்து தூய்மையான துணி கொண்டு மூடி கொலுப்படிகளாக அலங்கரிக்கலாம்.
2. நவராத்திரி கொலுவில் வைக்கப்பட வேண்டிய பொம்மைகள், தெய்வ மூர்த்திகள், இயற்கைக் காட்சிகள், தாவரங்கள், மஹான்கள், ஜீவன் முக்தர்கள், யோகியர், சித்புருஷர்கள், கோயில் குள தீர்த்த வடிவங்கள், இல்லத்தில் இருக்கின்ற குடும்பத்திற்கு உபயோகப்படும் தெய்வாம்சம் மிக்க பொருட்கள் என்றவாறு நம்முடைய வாழ்வுடன் ஒட்டியதாக இருத்தல் சிறப்பாகும். ஏனோ, தானோ என கண்டபடியான வகையில் ஏதேனும் பொம்மைகளை வைத்தல் கூடாது.
3. மாளய அமாவாசையின் மாலையில் அடுக்கி வைக்கப்படும் பொம்மைகளை, எக்காரணங் கொண்டும். நவராத்திரியின் ஒன்பது தினங்கள் முடியும் வரை அசைக்கக் கூடாது. ஏனெனில் , இப்பொம்மைகளில் எல்லாம் கோடானு கோடி தெய்வ மூர்த்திகளும், நம் மூதாதையர்களும், ஆவாஹனமாகி, நம் வீட்டில் அமர்ந்து நம்முடன் பூஜை செய்து, நவராத்திரி பூஜைகளுக்குரித்தான சக்தியை நமக்கு வரமாக அளிப்பதால், அவர்கள் பூஜைக்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம், அசைக்காமல் காத்திட வேண்டும்.
4. அனைத்திற்கும் மாளய அமாவாசையன்றே மஞ்சள், குங்குமமிட்டு, கொலுப்படியில் அமர்த்திட வேண்டும். தினந்தோறும், காலை, மாலை, இரவில், நைவேத்யத்துடன் கற்பூர ஆரத்தியுடன் அவரவர் வசதிப்படி வழிபாடு செய்திட வேண்டும். நவராத்திரி கொலுவில், வைக்கப்படும் ஒவ்வொரு பொம்மைக்கும் ஒவ்வொரு தெய்வீக அர்த்தமுண்டு.
5. வசதியில்லாதோர் கூட களிமண் பிள்ளையார், பசு, கன்று போன்ற எளிய பொம்மைகளையும் வைக்கலாம். ஒவ்வொரு இல்லத்திலும் குறைந்தது நான்கைந்து பொம்மைகளைக் கொண்டேனும் கண்டிப்பாக நவராத்திரி பொம்மை கொலு அமைக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமானதாகும். ஏனெனில் நவராத்திரி தேவதைகள் பொம்மைகளில் ஆவாஹனமாகி நம் இல்லத்திற்கு வந்து தங்கி, பூஜை செய்து நமக்கு நல்வரங்களையும், ஆசீர்வாதத்தையும் அள்ளித் தரக் காத்திருக்கும் போது இதைப் பயன்படுத்த வேண்டியது நம் கடமையல்லவா?
இனி நவராத்திரியின் ஒவ்வொரு தினத்திலும் கடைபிடிக்க வேண்டிய நவராத்திரி பூஜையைக் காண்போம். சிலவித தான, தர்மங்கள் நவராத்திரிக்கு மிகவும் முக்கியமாகவும், விசேடமானதாகவும் விளங்குவதால், பலரும் சத்சங்கமாக ஒன்று சேர்ந்து இத்தகைய தான, தருமங்களைச் செய்தலால் தான் நவராத்திரியின் பூஜாபலன் பரிபூரணமடையும். பலன்களும் பெருகும். நம்மால், தனிப்பட்ட முறையில் செய்ய இயலவில்லையே என ஏங்காதீர்கள். சத்சங்கமாகப் பலரும் ஒன்று கூடினால் தான் இது மிகச் சிறந்த  சமுதாய பூஜையாக மலரும், பலாபலன்களும் பல்கிப் பெருகிடும். நவராத்திரி ஒரு சிறப்பான கூட்டு வழிபாடே!
பிரமாதி ஆண்டில் வரும் இந்த நவராத்திரியே ஸ்ரீசாகம்பரி நவராத்திரியாக விளங்குவதால் இந்த ஒன்பது தினங்களிலும், ஸ்ரீசாகம்பரி தேவியின் படத்தை வைத்துப் பூஜித்தல் மிகவும் விசேடமானதாகும். எத்துணையோ கோடி யுகங்களுக்கு முன் ஸ்ரீஅம்பிகை தாவரங்களை சிருஷ்டித்த பொழுதாக இது விளங்குவதால் பிரமாதி ஆண்டு நவராத்திரி சாகம்பரி நவராத்திரி என சித்புருஷர்களால் வழங்கப்படுகிறது. எனவே இந்த ஒன்பது தினங்களிலும் – கிழங்கு, கனி, பூ, தாவர வகைகளைப் படைத்து, நமக்கு பிரபஞ்ச ஜீவ வாழ்க்கையை அருளியுள்ள – ஸ்ரீசாகம்பரி தேவிக்கு நன்றிக் கடனாக காய்கறி, கனி, கிழங்கு வகைகளைப் படைத்து, அவற்றை ஏழை எளியோர்க்குத் தானமாக அளித்து, சாகம்பரி தேவியின் பரிபூரண அருளைப் பெறுவோமாக!
ஸ்ரீசாகம்பரி நவராத்திரி ( அந்தந்த திதிக்கான ப்ரத்யேக பூஜை முறைகள்)
பிரதமை திதி : நாம் செய்கின்ற நவராத்திரி வழிபாட்டில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அந்தந்த நாளுக்குரிய விதவிதமான பலனுண்டு. சித்திரை நட்சத்திரமும், பவகரணமும், சித்த யோகமும் கூடுகின்ற இந்த நாளில் காரட், பூசனி, சேம்பு, கிழங்கு, அவரை, தட்டப் பயிறு போன்ற காய்கறி வகைகளால் ஸ்ரீசாகம்பரியை அலங்கரித்து, மல்லிகைப் பூக்களால், நடுவிலும், ஓரத்திலும் அலங்கரித்து, ஸ்ரீசாகம்பரி தேவிக்குப் படைத்து  இக்காய்கறிகளை ஏழை எளியோர்க்கு தானமாக அளிக்க வேண்டும். காய்கறிகளை தானமாக அளித்தல் என்றால் 5, 6 என்ற எண்ணிக்கையில் அல்ல, குறைந்தது 5 குடும்பங்கட்காவது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நாளுக்குரித்தான முழுக்காய் கறிகளை தானமாக அளித்தல் சிறப்பானதாகும். இன்று நாவல் பழம், பன்னீர் திராட்சை, அன்னாசிப் பழம் போன்ற பழதானம் மிகவும் உத்தமமானது. பொதுவாக கணவன், மனைவி, குழந்தைகட்கிடையிலுள்ள மனவேறுபாடுகள் நீங்கி, குடும்பம் நன்முறையில் நடக்க இந்த தினத்தின் நவராத்திரி பூஜை பலனளிக்கிறது.
திங்கள்  :- துவிதியை திதியுடன் சுவாதி நட்சத்திரம் நிறைந்த இந்நாளில் விஷ்கம்ப யோகம் பரிபூரணமாக இருப்பதால் இன்று வெள்ளை முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, புடலங்காய், கொத்துமல்லி, பூவன்பழம் போன்றவற்றால் ஸ்ரீசாகம்பரி தேவியை அலங்கரித்து கோல அலங்கார வளைவு செய்து ராம பாணபுஷ்பம் சேர்த்து அம்பிகையை ஆராதித்து ஏழை எளியோர்க்கு தானமாக காய், கனிகளை அளிக்க வேண்டும். பல குடும்பங்களில் கணவன் / மனைவியின் சிறு/பெரும் தவறுகளினால் உறவினரிடையே அக்குடும்பத்தில் பழியும், கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்கும் அந்த அவர்ப் பெயர் நீங்க இந்த துவிதியை பூஜை தக்க நிவாரணம் அளிக்கும். முரட்டுத்தனம் மற்றும் தீய பழக்கங்கள் காரணமாகப் பொறுப்பின்றித் திரியும், கணவன்/பிள்ளைகள் நன்முறையில் திருந்தி வாழ இப்பூஜை உதவுகிறது.
செவ்வாய் :- த்ரிதியை திதியும், தைதுல கரணமும், விசாகமும் கூடியுள்ள இந்நாளில் சம்பங்கிப் புஷ்பத்தில் அம்பிகையை அலங்கரித்து, பீட்ருட், தக்காளி, வெங்காயம், தேங்காய், பீர்க்கங்காய், கொத்துக் கடலை, சுண்டைக் காய், பேரிக்காய், களாக்காய், ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றால் சாகம்பரியை அலங்கரித்து, சாகம்பரிக்குப் படைத்து ஏழைகளுக்கு தானமளித்திட இரத்தக் கோளாறுகளினால் அவதியுறுவோர் தக்க நிவாரணம் பெறுவர். குறிப்பாக மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை நோய்களுக்குத் தக்க நிவாரணம் அளிப்பதே இந்த நாள் பூஜையின் சிறப்பாகும்.
புதன் :- சதுர்த்தி திதி தேவமூர்த்தி, பூச நட்சத்திர தேவியின் அருளுடன் பூரிக்கும் நாளிது, இன்று மகிழம் பூவாலும், சாத்துக்குடி, சப்போட்டா, முட்டைக்கோஸ், குடமிளகாய் (capsicum), வெண்டைக்காய், கொத்தவரங்காய், புதினா, கருணைக்கிழங்கு போன்றவற்றால் அலங்கரித்து, வறியோர்க்கு தானமளித்திட உயரம் குறைவு, அழகின்மை, குறைந்த வருமானம் போன்ற பலவிதத் தாழ்வு மனப்பான்மையால் (Inferiority Complex ) அவதியுறுவோர் வாழ்வில் மனத் துணிவுடன் முன்னேறி நல்வாழ்வு மற்றும் நல்ல திருமண சம்பந்தம் பெற இப்பூஜை உதவுகிறது..
வியாழன் – கேட்டை நட்சத்திரமும், பஞ்சமி திதியும் பரிபூரணமாய் விளங்கும் இந்நாளில், சாமந்திப் பூக்களாலும், அத்திப்பழம், ரஸ்தாளிப் பழம், கரும்பு, நெய், அரிசி, புளி, பறங்கி, உருளை, கறிவேப்பிலை, பசலைக் கீரை, அரைக்கீரை, முளைக் கீரை போன்ற காய், கனி வகைகளால் அம்பிகையை அலங்கரித்து சாகம்பரி தேவிக்குப் படைத்து, தானமளித்திட கொழுப்பு சம்பந்தமான நோய்க்கு நிவாரணம் கிட்டுவதோடு வறுமையால் வாடுவோர்க்கு, பணக் கஷ்டத்தால் பரிதவிப்போர்க்குத் தக்க நிவர்த்தி கிட்டும்.
வெள்ளி – சஷ்டியுடன் வெள்ளியும், மூலநட்சத்திரத்துடன் பரிணமிக்கும் இந்நாளில், நித்ய மல்லிப் பூக்களால் அம்பிகையை அலங்கரித்து, அர்ச்சித்து, நார்த்தங்காய், கோவைப்பழம், சிறு திராட்சை (கிஸ்முஸ்), முந்திரி , வெள்ளை வெங்காயம், சேனைக் கிழங்கு, பீன்ஸ், இரட்டை பீன்ஸ் (Double Beans) பட்டாணி போன்ற காய்கறிகளால் அலங்கரித்து, ஏழ்மையால் வாடுவோர்க்கு தானமளிக்க வேண்டும். இன்று கரிநாளும் கூடியிருப்பதால் பொதுவாக சனி புத்தி, சனி தசையில் பல துன்பங்களால் வாடுவோர்க்கு, நல்ல தெய்வீகத் தீர்வை அளிப்பதோடு தொழில் சம்பந்தமான பலவித கஷ்டங்கட்கும் தக்க பிராயச்சித்தம் கிட்டுவதாக இந்த தின பூஜை அமைகிறது.
சனிக்கிழமை :- மூலமும், பூராடமும் கலந்து இன்று சப்தமி திதியின் ஆட்சியின் 60 நாழிகையும் முழுவதுமாக அமைவதால், இன்று சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, கீரைத்தண்டு, கருவேப்பிலை, வாழைக்காய், வெள்ளரிக் காய் போன்ற காய்கறிகளாலும், மனோ ரஞ்சிதப் புஷ்பத்தாலும் அம்பிகையை அலங்கரித்து, ஆராதித்து ஏழைகளுக்கு தானமளித்தல் சிறப்புடையதாம். பொதுவாக கணவனுடனோ, உறவினருடனோ கோபம் கொண்டு வெளியேறிய மனைவி நன்முறையில் இல்லம் திரும்பவும், பிடிவாத குணமுடைய பெண்கள் திருந்தி கணவனுடன் ஒற்றுமையாக வாழவும், இப்பூஜை பெரிதும் உதவுகிறது. கன்னிப் பெண்களுக்கு இனிய திருமண வாழ்வைப் பெற்றுத் தரும் பூஜையாகவும் அமைகிறது இந்த வழிபாடு!
ஞாயிறு – சப்தமி/அஷ்டமியுடன் இன்று பூராடமும், சேர்ந்து, சுபயோக நேர அம்சங்களுடன் விளங்குவதால், இன்று தேனில் ஊறிய நெல்லி, ராஜ்மா (தட்டைப் பயிறு – பட்டாணி போன்ற ஒரு வகை தானியம்), பப்பாளி, செவ்வாழை, கொய்யா, நாட்டுத் தக்காளி, நாட்டு வெள்ளரி மற்றும் இளஞ்சிவப்பு நிறக் காய்கறிகளால் அம்பிகையை அலங்கரித்து, ஆராதித்து இக்காய் கனிகளால் கோல வளைவுகள் போல் அலங்காரம் செய்து அம்பிகையை செண்பகப் பூவால் அர்ச்சித்து, ஏழைகட்கு தானமளித்தல் இன்றைய தினத்திற்குரிய நவராத்திரி பூஜையாகும். இதனால் கண் சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம் கிட்டுவதோடு பலவித திருஷ்டி தோஷங்களால் பாதிக்கப்பட்டுள்ள நில, தொழில், வியாபாரமும் நன்முறையில் ஆக்கம் பெறும்.
திங்கள் :- அஷ்டமி திதியும், பவயோகமும், அமைந்துள்ள இந்நாளில் கல்யாண பூசணி, மாங்காய், காலிபிளவர், இஞ்சி, பாதாம் பருப்பு, சுரைக்காய், நிலக்கடலை, மாகாளி, எலுமிச்சை, ரம்பூதான் எனும் ஒருவகைக் காய்கறி வகை மற்றும் தேங்காய் போன்றவற்றை அம்பிகைக்குப் படைத்து கொடி மல்லிகைப் பூவால் அர்ச்சித்து ஏழைகட்கு தானமாக அளித்திடல் வேண்டும். பொதுவாக பலவிதத் தடங்கல்களால் தடைபட்டுள்ள திருமணம் நன்முறையில் நிறைவேறிட உதவும் பூஜை இது. இன்று குறைந்தது பன்னிரண்டு மஞ்சள் பூசிய தேங்காய்களை பன்னிரண்டு ஏழை சுமங்கலிகட்கு வெற்றிலை, பாக்கு, தாம்பூலத்துடன் தானமாக அளித்தலால் கொந்தளிப்பான மனச் சுமைகள் நீங்கி மன அமைதி உண்டாகும்.
செவ்வாய்  - நவமி :- இன்று மாம்பழம், பலாக்காய், வாழைப்பூ, நச்சுக் கொட்டைக் கீரை போன்றவற்றை ஸ்ரீசாகம்பரி தேவிக்குப் படைத்து, ஆராதித்து வாசானையுள்ள சிவப்பு ரோஜாக்களால் அலங்கரித்து ஏழைகட்கு தானமளிக்க வேண்டும். பொதுவாக கல்வியில் மந்தமாக உள்ள பிள்ளைகள் நன்கு படித்து முன்னேற இப்பூஜை பெரிதும் உதவும்.
புதன் – தசமி :- பெருமாளுக்கு உரித்தான நன்னாள். இன்று நுங்கு, பட்டாணி, கத்தரிக்காய், சோளம், பலாப்பழம், மாதுளம் பழம், கிடாரங்காய் போன்றவற்றைப் படைத்து, கதம்ப மலர்களால் அலங்கரித்து, ஆராதித்து, ஏழைகட்கு தானமளிக்க வேண்டும். இன்று குறைந்தது 10 ஏழைச் சிறுமிகட்கு காதணிகள், பாதணிகளுடன் முறுக்கு, இனிப்புகளுடன் அளித்து நவராத்திரி பூஜையை விஜய தசமி பூஜையுடன் நிறைவு செய்திட வேண்டும். துன்பங்கள் முற்றி வரும் இக்கலியில் தம் பிள்ளைகள்/ பெண்கள் எதிர்கால வாழ்வு எவ்விதம் அமையுமோ என அஞ்சி வாழ்வோர், பீதி தணிந்து, ஆக்கமும், ஊக்கமும் கூடிய இறைப்பணியாற்றி, இறையருள் பெற இந்த தசமி பூஜை தக்க நற்பலனளிக்கிறது.
தினசரி தான, தர்மங்கள் :-  நவராத்திரியில் தினந்தோறும் சத்சங்கமாகச் செய்ய வேண்டிய முக்கியமான தான, தருமம் என்னவெனில்,
1. ஜாதி, மத, இன, குலம் பாராது இல்லறப் பெண்மணிகட்குக் குறிப்பாக ஏழைச் சுமங்கலிகட்கு தாம்பூலம், தேங்காய் அளித்தலோடு மட்டுமின்றி,
2. தேங்காய், சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்களைக் குறைந்தது 12 பேருக்கேனும் தாம்பூலத்துடன் தினந்தோறும் அளித்தல் வேண்டும். பலரும் சத்சங்கமாக ஒன்று சேர்ந்தால் இம்மங்களப் பொருட்களை மொத்த விலைக்கு வாங்கி அழகாக பூஜை செய்து பிரசாதமாக பாக் செய்து, கோயில்களில் ஏழைச் சுமங்கலிட்கு அளித்து சமுதாயம் எங்கும் சுபமங்களம் பொங்கிப் பெருகிட பெரும்பணி ஆற்றலாமன்றோ! பலரும் இதைக் கொண்டாட அவர்கட்கும், நவராத்திரி கொலு பொம்மைகளையும் மங்களப் பொருட்களையும், சாகம்பரி தேவியின் படத்தையும் அளித்து, சமுதாயம் எங்கும் பாரதமெங்கும், உலகெங்கும் நவராத்திரி விழாவானது எங்குமே திறம்பட நடக்கும் வண்ணம், அற்புத இறைப்பணி ஆற்றிட வேண்டுகிறோம். நாம் மட்டும், தீபாவளியையும், பொங்கலையும், நவராத்திரியையும் கொண்டாடுதல் என்ற சுயநல எண்ணம் மறைந்து நம்மைச் சுற்றியிருப்போரும், அண்டை வீட்டாரும், அனைத்து ஏழை மக்களும் கொண்டாடினால் தான் நாடு சுபிட்சமடையும், இதற்காக சுயநலமின்றி தியாக மனப்பான்மையுடன் தான, தருமம் செய்து சாகம்பரி நவராத்திரி பூஜை மூலம் சாகம்பரி தேவியின் பரிபூரண அருளைப் பெறுவீர்களாக! தினந்தோறும் குறிப்பாக நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் ஸ்ரீசாகம்பரி தேவியை வழிபடுதல் வேண்டும்.

தினந்தோறும் ஓத வேண்டிய ஸ்ரீசாகம்பரித் துதி
ஜகத் பிரம்ம விவர்த்தைக காரணே பரமேஸ்வரி!
நம: சாகம்பரி சிவே நமஸ்தே சதலோசனே!
உலகெலாம் ஓங்கிடும் உமையவள் உன்னருள்
நிலமெலாம் நிரவிடும் நின்பயிர் பொங்கிடும்
பலமுகக் கண்ணுடை பரமனின் பாகமே
கலம்பக ஜோதியே காத்தருள் கண்ணியே
சமைக்கும் போதும், உண்ணும் போதும் இத்துதியை ஓதி, “ஸ்ரீசாகம்பரி தேவியின் அருளால் தான் நாம் உண்டு, உயிர்த்து, உய்த்து ஜீவிக்கின்றோம். ஆயிரமாயிரம் கண்ணுடையவளான (ஸ்ரீசதாக்ஷி தேவி) ஸ்ரீசாகம்பரி தேவி தாவரங்களுக்கென அருள்கின்ற ஜீவசக்தியால் தான் நாம் வாழ்கின்றோம்” என்று உணர்ந்து இந்த தெய்வீக தியானத்துடன் நல்வாழ்க்கையை அடைவீர்களாக!

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள்)
ஒரு நாள், வழக்கம் போல் கோயில் தூணருகே அமர்ந்திருந்த பெரியவர் சிறுவனைக் கண்டதும் பரமகுஷியாய் குசலம் விசாரித்தார். “ஏண்டா, எப்படிப் படிக்கற! ஏதாச்சும் கஷ்டம் இருக்கா, ஏதோ வயித்து வலின்னுயே, என்னாச்சு” .
“இவர் ஏதாச்சும் மெதுவா கேட்டாலே பின்னாடி ஏதோ விஷயம் இருக்குமே, நாம ஏதாச்சும் தப்பு தண்டா பண்ணிட்டோமா...” சிறுவன் வெலவெலத்து விட்டான்!
“ஏண்டா, இன்னிக்கு நீ போஸ்டாபீஸுக்கு போய்ட்டு வந்த தானே!” உடனேயே சிறுவனுகு என்ன விஷயம் என்று தெரிந்து விட்டது! முதல் நாள், பெரியவர் ஏதோ மணி ஆர்டர் அனுப்பச் சொல்லிட போஸ்ட் ஆபீஸில் அருகிலிருந்த ஒரு வயதானவரிடம் பேனாவை ஓசி வாங்கி எழுதி விட்டுத் திரும்பிப் பார்த்தால் அந்த வயதானவரைக் காணோம்! பேனாவைக் கொடுத்தது அவருக்கு மறந்து போய்விட்டது போலும், அவர் கிளம்பி விட்டார்.
சிறுவன் பார்த்தான், ஓசி வாங்கிய பேனாவை எடுத்துப் போனால், “இது என்ன கர்ம மூட்டை”, என்று பெரியவர் திட்டுவார்! எனவே சற்று நேரம் யோசித்து விட்டு பேனாவை அங்கேயே வைத்து விட்டு நைஸாக நழுவி விட்டான். ஒரு வேளை அவர் திரும்பி வந்தால் எடுத்துக் கொள்ள தோதாக இருக்கும் அல்லவா!
“என்னா நைனா பேந்த பேந்த முழிக்கிறே! இப்ப இத என்ன பண்றது?” பெரியவர் கையில் அந்த நீல நிற பேனா சிரித்துக் கொண்டிருந்தது! போஸ்டாபீஸில் வைத்தது இங்கே எப்படி வந்தது?
“இங்கே வாடா கண்ணு! பயப்படாத, இத பத்திரமா எடுத்துக்கிட்டுப் போயி யார்கிட்ட வாங்கினியோ அவர்கிட்டேயே கொடுத்து விட்டு வா பார்க்கலாம்! அந்த கிழவன் கிட்ட கொடுத்ததுக்கப்புறம் தான் இந்த கிழவன் தரிசனம்...!”
அடுத்தவிநாடி அந்த இடத்தில் பெரியவரைக் காணோம், பேனா மட்டும் கீழே கிடந்தது! சிறுவன் சிலையாய்ச் சமைந்தான்.
“அப்பப்பா, தெய்வீகம்னா இவ்வளவு கஷ்டமா?” ..... ஒரு புறம் கோபம், மறுபுறம் அங்கலாய்ப்பு, வருத்தம், ஆதங்கம், இத்யாதிகள்!
“எல்லாம் என் தலை விதி”.... சிறுவன் பேனாவைத் தூக்கிக் கொண்டு போஸ்டாபீஸ் பக்கம் ஓடினான். அங்கிங்கெனாதபடி எங்கும் விசாரணை .. பலன் பூஜ்யம்! பேனாவை ஓசி வாங்கிய அவசரத்தில் பேனாவைத் தந்த அந்த முதியவருடைய உருவத்தை கவனிக்கத் தவறியமையால் வந்த வினையிது!
“பேனாவைக் கொடுத்தவர் தானே அக்கறையுடன் திரும்பி வாங்கிக் கொண்டிருக்க வேண்டும்!” இந்த முணு முணுப்புடன் சிறுவன் போஸ்ட் ஆபீஸை வளைய வளைய வந்தான், அருகிலுள்ள சந்து, பொந்து, வீதிகளிலும் தேடிவிட்டான்.
“அந்த வயதானவரிடம் பேனாவைக் கொடுத்து விட்டு என்னை வந்து பார்,” என்பதல்லவோ பெரியவரின் (military) ஆணை! சிறுவன் அலைந்து, அலைந்து நொந்து விட்டான்!
சில நாட்களுக்கு முன்தான் பெரியவருடன் திருஅண்ணாமலை யிலிருந்து திரும்பி வந்திருந்தான். மேலும் ஒரே நாளைக்குள் திருஅண்ணாமலையில் மூன்று கிரிவலம் தொடர்ந்து வந்தமையால் உடல் இன்னமும் normal-க்கு வரவில்லை! என்னதான் பெரியவரை உள்ளூர “வைது” கொண்டே சென்னையின் அந்தப் பகுதியில் உள்ள நெருக்களில் சுற்றினாலும், “எல்லாத்துக்கும் கடவுள் ஒரு அர்த்தம் வச்சுருக்காண்டா, ஆனா இதப் புரிஞ்சுக்கறதுதான் கஷ்டம்!” என்று பெரியவர் அடிக்கடி கூறுவதை சிறுவன் நினைவுபடுத்திக் கொண்டான். “இப்படியே வெட்டியாக என்னை சந்து, பொந்தெல்லாம் சுத்தச் செய்வதில் வாத்யாருக்கு என்ன அல்ப சந்தோஷமோ, என்ன காரணமோ தெரியவில்லையே!”
“ஏண்டா, வெறுமனேயே சுத்தின?” என்று பெரியவர் கேட்பார் என்ற பயத்தில் சிறுவன் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்திக்கான துதிகளையும், சுலோகங்களையும் ஓதியவாறே கையில் பேனாவை உயரப் பிடித்துக் கொண்டே சுற்றலானான். ஏனென்றால் பேனாவைப் பார்த்தாவது அந்த முதியவர் வரமாட்டாரா என்ன? வேதங்களையெல்லாம் ஓர் அசுரன் ஒளித்து வைத்த போது ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி தானே அவற்றைத் தேடிப் பிடித்து பூலோகத்திற்குத் தந்தருளினார். “ஏதாச்சும் காணாமப் போச்சுனா யாராச்சும் காணாமப் போயிட்டாங்கன்னா, ஒடனேயே ஸ்ரீஹயக்ரீவர் பேரைச் சொல்லி அவருக்கான மந்திரத்தைச் சொல்லி குடும்பத்தோட தியானம் பண்ணனும்!” பெரியவருடைய குருவாய் மொழிது இது! ஒரு முறை பெரியவர் இதைச் சொன்ன போது சிறுவன் முந்திரிக் கொட்டையாக, “ஏன், வாத்யாரே, ஹயக்ரீவர் மந்திரம் சொல்லியும் காணாமப் போனது ஒண்ணுமே கெடைக்கலேன்னாக்க என்ன பண்றது...”, என்று கேட்டுவிட்டு சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டான். அவருடைய முகம் திடீரென்று சாந்தமானதைக் கண்டு மேலும் பயந்து போய், “ஏன் இதனை வெடுக்கென்று கேட்டோம்”, என்று தன்னைத் தானே நொந்து கொண்டான்! “ஹயக்ரீவர் சுலோகம் சொல்லியும் காணாமப் போனது கெடக்கலைன்னா...”, பெரியவர் சற்றே நிறுத்தினார்.
சிறுவன் காதுகளை நன்றாகத் தீட்டிக் கொண்டான். “ஸ்ரீஹயக்ரீவர் சுலோகத்தை ஒழுங்காகச் சொல்லலை, ஏதோ அரைகுறை நம்பிக்கையோட சொல்லியிருக்காங்கன்னு அர்த்தம்!” பெரியவர் விருட்டென்று எழுந்து விட்டார். சிறுவனுக்கு ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது. இப்போதுதான், பேனாவைக் கொடுத்த முதியவரைத் தேடுகின்ற படலத்தில் தான் சிறுவன் பெரியவரின் அந்த வேதவாக்கை உணர்ந்தான்.
“பக்தியில்லாமல் சொன்னால் ஸ்ரீஹயக்ரீவருடைய அனுகிரகம் எப்படிக் கிடைக்கும்! நாம் நிச்சயமாக பக்திப் பரவசத்துடன் ஸ்ரீஹயக்ரீவர் நாமத்தை ஓதவில்லை”, சிறுவன் தீர்மானமாக ஒரு முடிவிற்கு வந்துவிட்டான் இதற்கு என்ன அர்த்தம் ? பேனாவைக் கொடுத்த, “அந்த முதியவரை நம்மால் கண்டுபிடிக்க முடியப் போவதில்லை!”
இந்த இரண்டு “conclusions”ம் ஒன்றுதானே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? கையில் பேனாவைப் பிடித்துக் கொண்ட சிறுவனுக்கு தான் உள்ளூர ஒலித்த ஸ்ரீஹயக்ரீவ நாமத்தில் அவ்வளவாக லயிப்பு ஏற்படவில்லை!
“தன்னை வீணாக வேகாத வெயிலில் வாத்யார் அலைய விடுகிறாரே, அந்த பேனா தாத்தா கிடைக்கிறாரோ இல்லையோ வாத்யாரை இன்றைக்கு ஒன்று கேட்டு விடுவோம்! வீதி வீதியாய் நான் ஏன் சுற்ற வேண்டும் ? என்ன விதி அது? அதுவும் காலில் செருப்பில்லாமல், மண்டையைக் கொளுத்தும் வெயிலில்!”
 இன்றைக்கு நித்ய கர்ம நிவாரண நியதியாக ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் படித்துப் பயம் பெறுகின்றீர்களே, இது பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே பெரியவர் சிறுவனுக்கு விளக்கிவிட்டார். “இன்றைக்கு இதைச் செய், நாளைக்கு அதைச் செய்”, என்று பெரியவரின் ஆணைகள் பறந்து கொண்டிருக்கும். ஆனால் உண்மையிலேயே மிகுந்த சிரத்தையுடன் அவற்றைச் செய்து முடித்ததாலோ என்னவோதான் அச்சிறுவனே இன்றைக்கு கர்மவினை தீர்க்கும் மானுஷ கண்டி தீபமாக, “குரு மங்கள கந்தர்வாவாக”, நல்லதோர் வழிகாட்டியாக, நம்பிக்கை கொண்டோர்க்கு நல்ல சற்குருவாக நம்மிடையே ஜ்வலிக்கின்றார்!
இவ்வாறாக, பெரியவரால் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட நித்ய கர்ம நிவாரண விதிகளுள் ஒன்றுதான் ஆயில்ய நட்சத்திரத்தன்று புரசை மரத்திற்கு மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு அடிப் பிரதட்சிணம் செய்தால் நல்ல அரிய தரிசனம் கிட்டும் என்பதாகும்.. ஏனென்றால் பலகோடி யுக தவத்திற்குப் பிறகு அம்பிகை இறைவனின் அரிய தரிசனம் பெற்று ஈஸ்வரனை ஆயில்ய நட்சத்திர நாளில் மணந்த தலமே மாயூரம் அருகில் உள்ள மூவலூர் தலமாகும். இதற்காக புரசை மரத்தைத் தேடி ஒருமுறை சென்னையெங்கும் தேடி அலைந்து இறுதியில் புரசைவாக்கம் ஸ்ரீகங்காதீஸ்வரர் ஆலயத்தின் தல விருட்சமாக புரசை மரம் இருப்பது கண்டு ஆனந்தமடைந்தான். நித்ய கர்ம, புரசை விருட்ச நினைவுகள் தற்போது ஏன் சிறுவனுக்கு வரவேண்டும்? ஏனென்றால் பேனா தந்த பெரிய முதியவரை நாடி அவன் புரசைவாக்கம் வரை வந்து கொண்டிருந்த போதுதான் ஸ்ரீகங்காதீஸ்வரர் ஆலயத்தின் வழியே செல்ல வேண்டியதாயிற்று!
“பெரியவர் இந்த கோயிலைப் பத்தி பிரமாதமாகச் சொல்லியிருக்காரே அதுவும் புரசை மரம் தலவிருட்சம்கிறது கிடைக்கறதே ரொம்ப அபூர்வம் என்று வேறு சொல்லியிருக்கிறாரே!” சிறுவன்  ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயிலுக்குள் சென்று தரிசித்து அடிப்பிரதட்சிணம் வந்து ஸ்தல விருட்சத்திற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து விட்டு வந்தான். அக்காலத்தில் ஒவ்வொரு கோயிலிலும் சந்தனக் கல், சந்தனக் கட்டை, மஞ்சள் வைத்திருப்பார்கள், நீராடி வந்து அவரவர்கள் சந்தனம், மஞ்சளை அரைத்துத் தந்திடலாம். தற்போதோ சந்தனக் கட்டையை வைத்தால் அடுத்த நிமிடம் காணாமற் போய்விடும்! ..
திருச்சி அருகே திருநெடுங்களம் ஆலயத்தில் காலம் காலமாக பழுத்த சுமங்கலிகள் அம்பிகைக்கென மஞ்சள் இடித்து அரைத்துத் தந்த தெய்வீக சக்திகள் நிறைந்த “கல் உரல்” இன்றும் காணப்படுகிறது. பெறுதற்கரிய பாக்யமான சுமங்கலித்வத்தைப் பெற இல்லற பெண்மணிகள் இன்றும் இந்த ஆலயத்தில் இந்த உரலில் மஞ்சள் இடித்து “ஆத்ம மஞ்சள்” பூஜையைச் செய்து அரிய பலன்களைப் பெற்றிடலாம். புரசைவாக்கம் கோயிலின் கொடிமரத்தருகே வீழ்ந்து நமஸ்கரித்து எழுந்த சிறுவன், “தம்பி காலை வேளைன்னா கிழக்க பார்த்து நமஸ்காரம் பண்றது, மத்யானம், சாய்ந்தரம்னா வடக்க பார்த்து நமஸ்காரம் பண்றது ரொம்ப விசேஷம் !”
சிறுவன் நிமிர்ந்து பார்த்தான்..... ஆம்! பேனா தந்த முதியவர் தான் நின்று கொண்டிருந்தார்! புரசை தந்த நல்ல தரிசனம் தான்!

தென்காசி மகாத்மியம்

தென்காசி மகாத்மியம் – திருநல்லூர்
வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி!! – தென்காசி மகாத்மியத் தொடர் – திருநல்லூர் -4.
கடந்த மூன்று இதழ்களாக காசிக்கு நிகரான நம் தென்னாட்டு தென்காசித் திருத்தல சிறப்பு பற்றி சித்தர்கள் அருளுரைப்படி நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள், தம் சற்குருவின் குருமொழிகளாக, எடுத்துரைத்து வருகின்றார்களல்லவா? இப்போது நான்காம் திருத்தலமாகிய கும்பகோணம் வலங்கைமான் அருகிலுள்ள திருநல்லூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் பற்றிக் காண்போமா? வெற்றிக்கு திருவடிவழகைத் தருபவரே தென்காசி நாதரல்லவா? அவ்வெற்றிக்கனி தானாக முளைப்பதில்லையே! பக்தி எனும் இறைநெறியை வித்திட்டு, அறம் எனும் தான, தர்ம நீரைப் பாய்ச்சி, உடலுழைப்பு எனும், தண்டாக மரமாக வளர்ந்து, முயற்சி, ஆழ்ந்த நம்பிக்கை, உறுதியான மனம் போன்றவை இலைகளாகவும், தழைகளாகவும், பூக்களாயும் பொருந்திட பின்னரேதானே வெற்றிக்கனி கிட்டுகிறது அல்லவா! திருநல்லூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வர மூர்த்தியின் விசேடமான அனுகிரஹ சக்தி என்னவெனில், வெற்றியை நோக்கிச் செல்கின்ற போது, எவ்வளவுதான் விடாமுயற்சி இருந்தாலும், அந்தக் காரியத்தில் ஏற்படுகின்ற சிறுசிறு தோல்விகளைக் கூட கண்டு மனந்தளராது, தம் உழைப்பையும், முயற்சியை தொடர்ந்திட அருள்பாலிப்பதாகும்.

திருநல்லூர் சிவாலயம்

ஸ்ரீசிவமூர்த்திகள்
திருநல்லூர் சிவத்தலம்

அதாவது, உங்கள் நற்காரியத்தில் சிறுசிறு காரியத் தடங்கல்களினால் தோல்விகள் வரலாம். பலவிதமான தாமதங்கள் ஏற்படலாம். இத்தகைய சிறுசிறு தோல்விகள் வந்தால் கூட அவற்றையும் வென்றால்தானே, இறுதியில் பரிபூரண வெற்றியை அடையமுடியும். என்ன காரியத் தடங்கல் வந்து விட்டதே என்று மனம் தளர்ந்து விடாதீர்கள். ஏனெனில் எங்கெல்லாம் தோல்விக்கான அறிகுறி தென்பட்டால் கூட முயற்சியையும், நம்பிக்கையையும் கைவிடாது தொடர்ந்திடவே திருநல்லூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வர மூர்த்தியின் அருள் தேவை! தோல்விக்கான அறிகுறி மட்டுமின்றி, சிறு தோல்வியே வந்தால் கூட அதையும், வெல்வதற்கான அதிகப்படியான உழைப்பை நல்வழிப் பாதையை வகுத்துத் தருபவராக இப்பெருமான் விளங்குகின்றார். அப்படியே தோல்வி பெரிதாக வந்தால் கூட, அத்தோல்விகளை மாற்றிட உண்மையான உழைப்பைத் தருபவரே ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர். ஏனென்றால் பல கோடி சதுர்யுகங்களுக்கு முன்னால், தௌம்ய முனி, உரோமசர முனிவர், பிருங்கி முனிவர் போன்ற மஹரிஷிகள் எல்லாம் பிரபஞ்ச ஜீவன்களின் நல்வாழ்விற்காக, வேள்விகள், யாகங்களை மேற்கொண்ட போது, பலகோடி அசுரர்கள் வேள்வியில் பலவித தீய பொருட்களைச் சேர்த்து விட்டு, அந்த ஹோமத்தின் புனிதத்தை பாதிக்கச் செய்தார்கள். பரம்பொருளின் நல்வரங்களை வெற்றிக் கனியாக்க முயற்சித்த மஹரிஷிக்கு, சிறுசிறு தோல்விகள் பல அதிர்ச்சிகளை உண்டாக்கின. ஏனென்றால் ஒரு யாகத்தை வளர்ப்பதற்கான, எத்துணையோ பொருட்களை, ஆண்டாண்டுகளாய்ச் சேமித்து, அதனை ஒரு நொடியில் அரக்க சக்திகள் பாழ்படுத்தி விட்டன எனில், மீண்டும் அந்த ஹோமத்தைத் துவங்குவதற்கு எத்தகைய கடுமையான முயற்சிகளை கொள்ள வேண்டும்? அத்தகைய மஹரிஷிகள் எல்லாம், திருநல்லூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரை நாடி, தங்களுடைய மகத்தான யாகங்களில் எத்தகைய தடங்கல்கள் ஏற்படினும், தோல்வி ஏற்பட்டாலும் இறுதியில் காரிய சித்தியுடன் பரம்பொருளிடமிருந்து பிரபஞ்சத்தின் ஜீவன்களுக்காக பல நல்வரங்களை அடைவதற்கான மனோதிடம் பெற்று ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரரைப் போற்றித் துதித்து மகிழ்ந்தனர். அதையேதான் சித்புருஷர்கள் மீண்டும் இப்போது நினைவு கூறுகின்றனர். இத்தகைய திருத்தல வழிபாட்டு நெறிமுறைப்படி. எனவே இடையூறு மட்டுமின்றி, தோல்வி வந்தாலும் கூட அவற்றையும் சமாளித்து நம்மை நல்வழி நடத்திச் சென்று, அத்தோல்வியை வெல்லக்கூடிய மனோசக்தியையும் தீவிர உடல் உழைப்பையும், விடா முயற்சியையும் திருநல்லூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் நம்முடைய வெற்றிப்பாதையில் பெற்றுத் தருகின்றார்.
நாம் தான் என்ன காரிய சித்திக்கு எந்த தெய்வமூர்த்தியை வழிபட வேண்டும் என்பதை அனைத்து தெய்வ மூர்த்திகளையும், இதே வரிசையில் போற்றி வணங்கி, துதித்து வந்தால் நம் வாழ்க்கை நற்காரியங்களில் ஏற்படுகின்ற துன்பங்கள் களையப் பெற்று, நற்காரிய சித்தியும், வெற்றியும் கிட்டும் என்பது உறுதி. அவரவர் கண்களுக்கு ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் எந்த நேரத்தில் எந்த வர்ணத்தில் காட்சி அளிக்கின்றாரோ அதைப் பொறுத்து அவர்தம் காரிய சித்தி பாங்கினை அறிந்திடலாம். உலகின் காலநிலை, அரசியல் பொருளாதார மாறுபாடு மட்டுமின்றி, உலக ஜீவன்களின் ஆன்மீக நிலைகளையும், பிரபஞ்சத்திலுள்ள அஃறினை, உயர்திணைப் பொருட்களின் எண்ணப் பிரதிபலிப்புகளாய் பலவண்ண நிறங்களாக உணர்த்துபவரே ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரராவார். பல தெய்வீக இரகசியங்கள் நிறைந்து விளங்குகின்ற ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் வழிபாடு பற்றி பெரியோரிடம் அறிந்து தெளிந்திடுக! பெறுதற்கரிய மூர்த்தி! காணுதற்கரிய மூர்த்தி! பலவித வண்ணங்களில் காரிய சித்திகளை, வெற்றிக்கான நல்உழைப்பைத் தந்தருளும் மூர்த்தி!  தென்காசி சிவபெருமானை தரிசிக்கும் முன்னர் இத்தொடரில் வரும் 12 திருத்தலங்களையும் இதே வரிசையில் வழிபடுவதே முக்கியமானதாகும்.

மாளயபட்ச மகிமை

சென்ற இதழ் தொடர்ச்சி. அஷ்டமி திதி தர்ப்பணம் பார்த்திப தர்ப்பணம் :- பலரும் ஜாதி, மதம், செல்வம், அந்தஸ்து, பதவி, கர்வம், காரணமாக பலருடைய மனதை நோகடிப்பதோடு அல்லாது அவர்களுக்குத் துன்பங்களையும் விளைவித்து, ஜாதி, குல, உயர்வு, தாழ்வு மனப்பான்மையுடன் அதர்மமான முறையில் வாழ்வதால் எத்துணையோ சாபங்கள் ஏற்படுகின்றன. இறைவன் படைப்பில் புல், பூண்டு, புழு பிறவி முதல் தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் வரை எவ்வித ஏற்றத் தாழ்வும் கிடையாது. உயிரோ உயிரற்ற பொருளோ அனைத்திலும் உறைவது இறைப் பரப்ரம்மமே. எனவே உயர்வு மனப்பான்மையில் (superiority complex) பலருக்கும் விளைவித்த துன்பங்களுக்கான பிராயசித்தங்களைப் பெறுவதற்கு இந்த அஷ்டமி திதி தர்ப்பணம் உதவுகிறது. ஆனால் மனம் திருந்தி நம் தவற்றையுணர்ந்து தம்மால் துன்பம் இழைக்கப் பட்டோருக்குத் தக்க நிவாரணம் தந்தால் தான் இந்த தர்ப்பணப் பலன்கள் பரிபூரணமாகும். பொதுவாக தேங்காய்க்கு பலவித தோஷங்களை நிவர்த்தி செய்யக்கூடிய தன்மை உண்டு. அதனால் தான் திருஷ்டி தோஷ நிவாரண வழிபாட்டில், சிதறுகாய் உடைத்தல் பெறும் பங்கு வகிக்கிறது.

கன்னியாகுமரி முக்கூடல்

இன்று முழுமையான அரிசி மணிகளைப் பொறுக்கி எடுத்து அதனுடன் மஞ்சள் கலந்து மஞ்சள் அட்சதைகளாக்கி அதனை ஒரு வாழை இலையில் வைத்துப் பரப்பி அதன்மேல் 6 தேங்காய்களை குடுமிப் பகுதி கிழக்கு திக்கில் இருக்குமாறு வைத்து தெற்கு நோக்கி அமர்ந்து கொண்டு இத்தேங்காய்களின் மேல் தர்ப்பைச் சட்டம் வைத்து தர்ப்பணம் அளிக்க வேண்டும். இதன் பிறகு இத்தேங்காய்களை பித்ரு சக்திகள் நிறைந்த குறிப்பிட்ட காய்களுடன் தானமாக அளித்திட வேண்டும். புடலங்காய், பாகல், வாழைக்காய், வாழைப்பழம், பிரண்டை, இஞ்சி போன்ற பித்ரு சக்தி நிறைந்த காய்களுடன் தேங்காயை வைத்து ஜாதி, இன, குல பேதமின்றி ஏழைகட்குத் தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறு தானம் அளிக்கும் போது, குறைந்தது மூன்று குடும்பங்கட்கு ஒரு நாளைக்குத் தேவையான காய்கனிகளாக இருப்பது சிறப்பானதாகும். இன்றைய தர்ப்பணத்திற்கான மிகச் சிறந்த தலம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத் துறையாம்.

நவமி திதி – ஜீவ காருண்ய தர்ப்பணம் :-

ஒரு மனிதன் தன்  வாழ்நாளில் நாக்கு ருசிக்காக எத்தனையோ ஆடு, மாடு, கோழி, நண்டு, மீன் போன்ற அசைவ உணவு உண்டு ஜீவ ஹிம்சைக்கு ஆளாகின்றான். எனவே, தன்னால் உண்டு களிக்கப்பட்ட உயிரினங்களுக்கு நற்கதி அளிப்பதற்காக இன்று காருண்யத் தர்ப்பணம் அளிக்க வேண்டும். அனைத்துவித விலங்குகளின் பெயர்களைச் சொல்லி இன்று அவற்றின் நற்கதிக்காக, பித்ரு தேவர்களை வேண்டுதல் வேண்டும். ஒரு வாழை இலையில் ஆவி பறக்கும் அளவிற்கு சூடான மூன்று மூன்றாக இட்லிகளை 4 வரிசையில் மொத்தம் 12 இட்லிகளை வைத்து அதன் மேல் தர்ப்பைச் சட்டம் பரப்பித் தர்ப்பணம் அளிக்க வேண்டும். உண்மையில் இது பித்ரு ஹோமத்திற்கு ஈடான பலனை அளிக்க வல்லது.
தான் உண்ட தாவர, விலங்கின வகைகளுக்கு மட்டுமின்றி பலவித விபத்துகளிலும், இயற்கையாகவும், அகாலமாகவும் மரணமடைகின்ற அனைத்து விலங்குட்கும் காருண்யத் தர்ப்பணம் அளிக்க வேண்டிய நாளாகும். இது மேலும் நாம் உண்கின்ற காய்கறிகள் கூட மகத்தான ஜீவசக்தி பெற்றவை தானே! எனவே இக்காருண்யத் தர்ப்பணத்தில் அனைத்து விதமான உயிரினங்கட்கும், காய்கறிகளோ, தாவரங்களோ, விலங்குகளோ அனைத்திற்கும் தர்ப்பணம் அளித்திடுக!  நண்பர்கள், அறிந்தோர், அறியாதோர் என ஜாதி, இன, குல பேதமற்ற காருண்யத் தர்ப்பணம் அளிக்க வேண்டிய நாளாகும். உதாரணமாக , துருக்கி நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனரல்லவா! அவர்தம் நல்வாழ்விற்கு இன்று காருண்யத் தர்ப்பணம் அளியுங்கள். தர்ப்பணத்திற்குப் பின் சுவையான தேங்காய் சட்னியுடன் இட்லிகளை தானமாக அளிக்க வேண்டும். பொதுவாக அனைத்து விதபூஜைகளின் பலாபலன்களும் அதனை ஒட்டி அமைகின்ற தான, தருமங்களில் தான் பரிபூரணம் அடைகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

திருவையாறு காவேரி நதிக்கரை

ஏனெனில், பூஜைகளில் ஏற்படுகின்ற மந்திர உச்சாடனப் பிழைகட்கும், அறிந்தும், அறியாதும், செய்யப்படுகின்ற தவறுகட்கும் இந்த தான, தர்ம, அன்னதான சக்திகளே தக்க நிவாரணம் அளிக்கின்றன. எனவே நிவர்த்தி தரும் பூஜைகளில் ஏற்படும் குறைகளுக்கு நிவர்த்தியாக அமைகின்றவையே தான, தருமங்கள் எனில் அது மிகையாகாது. இந்நாளுக்குரிய தர்ப்பணத் தலம் காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத் திருக்குளம்.
தசமி திதி – பால சஞ்சீவ தர்ப்பணம் :-  இன்று 5 வயதிற்குட்பட்டு இறந்த குழந்தைகட்குத் தர்ப்பணம் அளிக்க வேண்டிய சிறப்பான நாள், குழந்தை, மாணவப் பருவத்தில் இறந்தோருக்கும் தர்ப்பணம் அளிக்க வேண்டிய நாள், நீங்கள் அறிந்த பல குடும்பங்களில் இது நடந்திருக்கலாமல்லவா?  அவர்கள் தர்ப்பணத்தின் மஹிமையை அறியாது, “குழந்தை தானே தர்ப்பணம் தேவையில்லை” என விட்டிருக்கக் கூடும். எனவே இந்நாளையும், காருண்யத் தர்ப்பண நாளாக ஏற்று, குழந்தை, மற்றும் இளைய பருவத்தில் இறந்தோருடைய ஜீவ நற்கதிக்காக இத்தர்ப்பணத்தை அளியுங்கள். மா, பலா, மற்றும் அரசு மரப் பலகையில் மாவிலைகளையும், வில்வ இலைகளையும் பரப்பி, பலகையில் அரிசிக் கோலம் இட்டு அதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து தர்ப்பணம் அளிக்க வேண்டும். இன்று குழந்தைகட்கு உரித்தான பாயசம், கொழுக்கட்டை, இட்லி, தோசை போன்ற பலகார வகைகள், மற்றும் குழந்தைகட்குப் பிரியமானவற்றை ஏழைகளுக்கு தானமாக அளியுங்கள். இந்தத் தர்ப்பணத்திற்கான சிறப்பான இடம் திருவையாறு காவேரி நதிக்கரையாம்.
ஏகாதசி திதி – பித்ரு பரிபாலன தர்ப்பணம்
நமது இல்லத்தில், நம்முடைய பெரியோர்கள் பயன்படுத்திய பணப்பெட்டி, மரப்பெட்டிகள், பலவித பலகைகள், மரச் சாமான்கள், பொம்மைகள், விக்கிரகங்கள், சாளகிராம மூர்த்திகள், ருத்திராட்ச, ஸ்படிகங்கள், மாலைகள், ஜாதிக்காய் பெட்டி எனப்படும் விசேஷ மரப்பலகையிலான பெட்டிகள் மற்றும் பல அஃறிணைப் பொருட்கள் நம் இல்லத்தில் இருக்குமல்லவா? இவையெல்லாம் ஆண்டாண்டு காலமாக நம் இல்லத்தில் இருக்கின்றன எனில் அவைகட்கும் நமக்கும் பூர்வ ஜென்மத் தொடர்பு உண்டு என்பது பொருளாகும். இவற்றுடன் நம் முன்னோர்கள் பயன்படுத்திய கைத்தடி, கண்ணாடி, கட்டில், நாற்காலி போன்ற பொருட்களும் இல்லத்தில் இருப்பது உண்டு.
பலரும் தம் தாயின் நினைவாக, உத்தம தாய் பயன்படுத்திய சேலை, ஆடை, அணிகலன் போன்றவற்றை பத்திரமாக மடித்து வைத்து ஆன்ம நேயத்துடன் தொட்டு, கும்பிட்டுப் போற்றி வருவார்கள். இன்று இத்தகைய பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி, பூஜையில் வைத்து, அவற்றிற்கு மஞ்சள் குங்குமமிட்டு, அவற்றின் முன்னிலையில் ஒரு மரப்பலகையில் அரிசிமாவால் கோலம் இட்டு, அதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் இட வேண்டும். இதனால் நம்முடன் பல ஆண்டுகளாக இருந்து வருகின்ற அஃறிணை ஜீவன்கட்கும், நம் மூதாதையர்கள் பயன்படுத்தியமையால் இதன் மூலம் நம் மூதாதையர்களின் பித்ருலோக உத்தம தெய்வீக நிலைக்கும் பெரிதும் உதவும் உன்னதமான தர்ப்பண பூஜையிது. மிகவும் அபூர்வமாக வருவது! பிரமாதி வருடத்தில் இத்தர்ப்பணம் மிகவும் சிறப்பானதாகும்..
இன்றைய தப்பணத்திற்கு உகந்த தலமாக விளங்குவது திருச்சி அருகிலுள்ள அன்பில் கிராமத்திலுள்ள ஸ்ரீகாயத்ரி நதிக்கரை ஆகும். அலாகாபாத் எனப்படும் பிரயாகையில், கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்றும் சங்கமம் ஆவது போல் இவ்விடத்திலும், காவிரி, சரஸ்வதி, காயத்ரீ நதிகள் சங்கமம் ஆகி மிகச் சிறந்த திருவேணி சங்கமாக அன்பில் தலமும் ஒரு காலத்தில் விளங்கியது. இன்றும் இங்கு ஸ்ரீகாயத்ரீ நதிக்கரை என்ற சிறப்பான கரை ஒன்று உண்டு. இதனை நன்கு விசாரித்து அறிந்து அன்பிலில் உள்ள காவிரி நதிக் கரையிலோ, ஸ்ரீகாயத்ரீ நதிக்கரையிலோ, (தற்போதைய மலட்டாறு) தர்ப்பணம் இடுதல் சிறப்பானதாகும். இவ்விடத்தில் அலகாபாத் எனப்படும் பிரயாகை தலத்தைப் போல அன்னதானம், வஸ்திர தானம் போன்ற உங்களால் இயன்ற ஒன்பது வகை தான தருமங்களைச் செய்தல் சிறப்பானதாகும். மூதாதையரின் ஆசியைப் பெற இந்த ஏகாதசி தின பித்ரு தர்ப்பணம் பெரிதும் உதவுகிறது.

திருவிடைமருதூர் தீர்த்தம்

துவாதசி திதி தர்ப்பணம் – க்ஷீர அமிர்த தோஷ நிவர்த்தி தீர்த்த தர்ப்பணம்: பரிஹாரம் நிறைந்த இது மிகவும் அரிய தர்ப்பணமாகும். பல பெண்மணிகளும் தம்முடைய அலுவலகப் பணி, ஆரோக்யம், அழகு காரணமாக தம் தாய்ப் பாலைச் செயற்கையான முறையில் வற்றச் செய்து கர்ம வினைகளை வலியவே தேடிக் கொள்கிறார்கள். தாய்ப்பாலைச் செயற்கையான முறைகளால் மருந்துகளால் அடைத்து நிறுத்துதல் முறையன்று. தாய்ப்பால் இல்லாது ஏழ்மையில் பசியில், நோய்த் தடுப்பு சக்தியில்லாதூ மாண்ட எத்தனையோ குழந்தைகள் உண்டு. அவர்களுக்கெல்லாம் காருண்ய தர்ப்பணமாக இந்த தர்ப்பண பூஜையை நிகழ்த்தி இன்று பாலுள்ள விருட்சங்களுக்கு மஞ்சள் துணியைக் கட்டி சுற்றி, அடிப்பிரதட்சிணம் செய்து வருதல் வேண்டும். பாலுள்ள விருட்சங்களின் அடியிலேயே அமர்ந்து இன்று தர்ப்பணம் செய்தல் சிறந்த பலன்களைத் தருவதாகும் பெறுதற்கரிய பாக்கியமுமாம்.
இன்றைய துவாதசி திதிக்குரிய தர்ப்பணத் திருத்தலமாக விளங்குவது திருமுதுகுன்றம் என்று அழைக்கப்படும் விருத்தாசலம் சிவாலயம் ஆகும். மணிமுத்தாறு நதிக்கரையில் உள்ள இத்திருத்தலத்தின் நதிக் கரையிலோ, ஆலயத் திருக்குளத்திலோ தர்ப்பணம் இடுதல் விசேஷமானது. காசி போல விருத்தாசலம் திருத்தலத்தில் இறக்கின்ற பாக்யம் பெற்றோருக்கு இங்கு இறுதி நிலையில் அம்பிகை அவர்களுக்கு தன் வஸ்திரத்தால் விசிறிட சிவபெருமானே பஞ்சாட்சரம் உபதேசம் செய்கின்ற அருட்பெருந்தலமாக, முக்தி தரும் பெருந்தலமாக இது விளங்குவதால் இங்கு இன்று தர்ப்பணம் செய்வது தெய்வீக முக்யத்வம் பெறுகின்றது.
நன்முறையிலே தம்முடைய இறுதிக் காலம் அமைய விரும்புவோர் விருத்தாசல ஆலயத்திலுள்ள தீர்த்தங்களில் மற்றும் நதிக்கரையில் அமாவாசை தோறும் தர்ப்பணம் செய்து வருதலும், மாளயபட்ச துவாதசி திதியில் தர்ப்பண நீர்த்தாரை அளித்தலும் வேண்டும்! சிவசக்தி அம்சம் கூடிய முந்திரிப் பருப்பு பாயச தானம் இங்கு விசேஷமானதாம்..
திரயோதசி திதி – பிரம்ம சகட தர்ப்பணம் :- இன்று விசேஷமான பிரம்ம சகடத் தர்ப்பண முறையில் தர்ப்பணம் அளித்திடல் வேண்டும். கங்கை, காவிரி போன்ற நதிகளின் புனித மண்ணை நிரவி அதன் மேல் ஆறு சந்தனக் கட்டைகளை நிலை நிறுத்தி வைத்து அதன்மேல் தர்ப்பைச் சட்டத்தை வைத்து தர்ப்பண மிட்டிடுக! சந்தனக் கட்டைகளின் விலை அதிகமாயிற்றே! இல்லையெனில் என்ன செய்வது? எப்பாடுபட்டாவது இந்த அரிய பிரம்ம சகட பூஜையை நிகழ்த்துவதற்கு அவற்றைப் பெற்றுத்தான் ஆக வேண்டும். இதற்கு எவ்வித எளிய மாற்று முறையும் கிடையாது. அவரவர் வசதிக்கு ஏற்ப ஆறு மிகச் சிறிய சந்தன கட்டைகளையேனும் வைத்து அதன்மேல் தர்ப்பைச் சட்டத்தை அமைத்துத் தர்ப்பணம் செய்யலாம்.
ஏழ்மை நிலையில் இருப்போர் என் செய்வது? அவர்களுக்கு இத்தகைய சந்தனக் கட்டையுடன் கூடிய தர்ப்பண பூஜை செய்யும் பாக்கியம் கிட்டாதே! இதற்காகத்தான் வசதி உள்ளவர்கள் பல கோயில் திருத்தலங்களிலும், புனித நதிக் கரையிலும் சத்சங்கமாக இன்று ஒன்று கூடி இத்தகைய பிரம்ம சகடத் தர்ப்பணத்திற்கான ஆறு சந்தன கட்டைகளை அமைத்துத் தந்து இலவசமாக தர்ப்பைகளை அளித்து ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு இம்முறையில் தர்ப்பண பூஜை செய்வதற்கான வழி முறைகளையும், வசதிகளையும் செய்து தருதல் மிகச் சிறந்த தெய்வத் திருப்பணியாக விளங்குகின்றது என்பதை மனதில் கொள்ளுங்கள்.. இது போன்ற தெய்வத் திருவாய்ப்புகளெல்லாம் வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும்!

திருப்புனவாசல் திருத்தலம்

நம்மைத் தோளில் தூக்கிச் சுமந்த பெற்றோர்களின் இறுதிச் சடங்கில், அவர்தம் பூத உடலைத் தோளில் சுமப்பதே புனிதமானது. நல்ல விறகுகளை வைத்து சிதையூட்ட வேண்டிய இடங்களில் ரப்பர் டயர், குப்பை, காகிதம், பெட்ரோல், மண்ணெண்ணெய் கொண்டு உடலை எரிப்பதால் பல பிரேத தோஷங்கள் உண்டாகும். இவற்றிற்கு ஓரளவு நிவர்த்தியாக இந்த பிரம்ம சகடத் தர்ப்பணம் விளங்குகின்றது.
மாளயபட்ச சதுர்த்தசி திதி :- வெளியூரிலோ, வெளி மாநிலங்களிலோ, வெளிநாட்டிலோ வாழ்வோர் மரணம் எய்தும் போது அவர்தம் இறுதிச் சடங்கானது சொந்த நாட்டிலோ, சொந்த மண்ணிலோ நடக்க இயலாமல் போக நேர்வதுண்டு. மேலும் இறுதிச் சடங்கின் போது, அருகில் இருக்க வேண்டிய மூத்த மகனோ, சந்ததியினரோ, உறவினரோ இல்லாமல் சென்றாலும், அது பித்ரு தோஷமாக மாறி குடும்பத்திற்குப் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும், இத்தகைய சூழ்நிலைகளில் இறுதிச் சடங்கினை முறையாக நடத்த முடியாமல் போன உயிர்களுக்கு ஓரளவு பித்ரு சாந்தியாக இன்று தர்ப்பணம் இட வேண்டும்.
சந்தனக் கல்லின் மீது தர்ப்பையை வைத்து மல்லிகைப் பூக்களைப் பரப்பி தர்ப்பைச் சட்டம் அமைத்து இதன் மேல் தர்ப்பணம் இடவேண்டும். வெளிநாடுகளில் இறந்தோருக்காக அவர் சார்பில் பட்டு வஸ்திரங்களை ஏழைகட்கு தானமளிக்க வேண்டும். இறுதிச் சடங்கின்போது மூத்தபிள்ளை அருகில் இருக்க சந்தர்ப்பம் வாய்க்காவிடில், அவர்களும் இதற்குப் பிராயசித்தமாக இராமேஸ்வரம், கும்பகோணம் சக்கரப்படித்துறை, ஸ்ரீவாஞ்சியம், திருவிடைமருதூர் போன்ற திருத்தலங்களில் நீராடி விசேஷ தர்ப்பணங்களை அளித்திட வேண்டும். எனவே உங்கள் ஊரில் இன்றைய மாளயபட்சத் திதியில் பாமரர்களும் இத்தர்ப்பண பூஜையின் பலாபலன்களைப் பெறும் வண்ணம் அவர்களுக்குத் தர்ப்பண மந்திரங்களை எடுத்துரைத்து அவர்களும் பிரம்மசகடச் சக்கரத்தில் தர்ப்பணம் அளிக்கின்ற பாக்கியத்தை பெறுமாறு இறைப்பணி செய்தல் வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியம் அல்லவா!
மாளய அமாவாசை தர்ப்பணம்
மாளயபட்ச விசேஷ தர்ப்பண நாட்களில், பிரதமை முதல் சதுர்த்தசி திதிவரை 14 நாட்களுக்குரிய தர்ப்பண முறைகளையும், அவற்றின் சிறப்பையும் கண்டோமல்லவா? தினந்தோறும் நம் மூதாதையருக்குத் தர்ப்பணம் செய்கின்ற நல்வழிபாட்டு முறையை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர். ஆனால் நம் கலியுக வாழ்வில் தினசரித் தர்ப்பணம் என்பது மாதாந்திர அமாவாசைத் தர்ப்பணமாக மாறிவிட்டது. அதையும் பலரும் ஒழுங்காகச் செய்வது கிடையாது. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய மூதாதையர்களுக்கு 96 தர்ப்பணங்களை ஆண்டு ஒன்றுக்கு நிச்சயமாகச் செய்தாக வேண்டும். இது எல்லோராலும் செய்தாக முடியுமா என்று எண்ணத் தோன்றும், எந்த மூதாதையரின் சொத்துக்களை, ஆபரணங்களை நாம் பயன்படுத்தி அனுபவித்து வருகிறோமோ, 24 மணி நேரமும் அவர்தம் ஆசியால்தான், அவர்தம் புண்ணிய சக்தியால் தான் நாம் இன்று வாழ்ந்து வருகிறோமோ என்பதை உணர்ந்தால் தான், அவர்களை வேண்டி வழிபட்டு நன்றியுடன் இருந்தால்தான் நாம் நன்கு சிறப்புடன் வாழ முடியும்.
நாம் அறிந்தோ, அறியாமலோ செய்யாமல் விட்ட தர்ப்பண பூஜைகளுக்கு ஓரளவு நிவர்த்தியாகத்தான், மாளயபட்ச அமாவாசை தர்ப்பண பூஜை அமைகிறது. இன்று செய்யப்படும் மாளய அமாவாசைத் தர்ப்பண பூஜைகளுக்கு விசேடமான பலன்கள் உண்டு. இதுவரை விட்டுப் போன பலவித தர்ப்பணங்கட்கு இது ஓரளவு பிராயச்சித்தம் அளித்தாலும், இனியேனும் இவற்றை முறையாகக் கடைபிடித்தால்தான் பிராயசித்தமும் பயன் தரும்.
மாளயபட்ச அமாவாசைத் தர்ப்பணமானது பலவித பாவங்களுக்கும், மது, சூது, பிறன்மனை நாடுதல் போன்ற பலவித கொடிய தீய பழக்கங்களால் ஏற்பட்ட தீவினைகட்கும் தக்க பிராயச் சித்தம் அளிக்கிறது. ஆத்ம தியாகத்திற்கு வழிவகுக்கின்ற, உத்தம தர்ப்பணப் பூஜை இது. இந்த மாளயபட்ச அமாவாசை அன்று மூன்று தீபங்களை ஏற்றி வைத்து, அவற்றை சாட்சியாகக் கொண்டு தர்ப்பணம் அளித்தல் சிறப்பானதாகும். கிழக்கும், மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திக்கிலும் இத்தீபங்களை வைத்து அவற்றின் எதிரில் தர்ப்பைச் சட்டம் அமைத்து, எள்ளுடன் தர்ப்பணம் செய்திடல் வேண்டும். மாளயபட்சத்தின் அனைத்து 15 திதிகளிலும் எள்ளுடன் சேர்த்துத் தான் தர்ப்பணம் அளிக்க வேண்டும். இன்றைய மாளய அமாவாசைக்குரிய விசேடமான தர்ப்பணத் தலமாக விளங்குவது சென்னை அருகில் திருவள்ளூரிலுள்ள ஸ்ரீவீரராகவப் பெருமாள் தீர்த்தக் கரையும், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தமும், திருவிடைமருதூர் ஆலய தீர்த்தமும், புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் அருகிலுள்ள திருப்புனவாசல் ஆலயமும் ஆகும். பித்ரு தர்ப்பணங்களை கணவன்மார்கள் சரிவர செய்யாத நிலையில் இல்லறப் பெண்மணிகள் இந்த மாளயபட்சத்தின் மஹிமையை கணவன்மார்களுக்கு விளக்கி, தினந்தோறும் அவர்களைத் தர்ப்பணம் செய்ய வைப்பது பெண்களின் தலையாய கடமையாகும்.

ருத்ராஷ்டமி மகிமை

ருத்ராஷ்டமி விரதம்
கண்வியாதிகளால் அவதியுறுவோரும், தூரப் பார்வை, கிட்டப்பார்வை போன்ற பார்வைக் கோளாறுகளினால் பெரிய லென்ஸ் (கண்ணாடி) அணிந்து இருப்போரும் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விரதமே ருத்ராஷ்டமி விரதமாகும். கண்பார்வை அற்றோருக்குச் சேவை செய்ய வேண்டிய இறைச் சமுதாயப் பணிப் பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. ருத்ராஷ்டமி விரத நாளில் கிரிவலம், கோவில் அடிப்பிரதட்சிணம், புண்ய நதி/ கடல் நீர்/ நீராடுதல் போன்றவற்றை நிறைவேற்றிட பார்வையற்றோருக்கு உதவி செய்தல் மாபெரும் புண்ய சக்தியை அளிக்கிறது. கம்ப்யூட்டர் மற்றும் அதிக அளவு நெருப்பு, கரண்ட் கூடுகின்ற பாய்லர் போன்ற இடங்களில் பணிபுரிவோர்க்கு எவ்வித ஆபத்தும் இன்றி நன்முறையில் வாழ்க்கை அமைந்திட பெரிதும் உதவும் விரதம். Cataract போன்ற கண் நோய்களினால் அவதியுறுவோர்க்குத் துன்பங்களை ஓரளவேனும் குறைக்க, தணிக்க உதவுவதே அதிஅற்புதமான ருத்ராஷ்டமி விரதமாகும்.
அனைத்து திதிகளும் உத்தமமானவையே!
பிரதமை திதி முதல் அமாவாசை/பௌர்ணமி திதிகள் வரை 15 திதிகளுமே ஒவ்வொன்றும் தனித்த சிறப்புடையதாகும். அஷ்டமி, நவமி போன்ற திதிகளை எல்லாம் எதற்குமே தேவையில்லை என்று ஒதுக்கி விடாதீர்கள்! ஏனென்றால் இன்றைக்கும் நவமியிலே சுபமுகூர்த்தத்தை வைக்கின்ற வழக்கம் ஆற்காடு மாவட்டப் பகுதிகளில் உண்டு. அஷ்டமி, நவமி திதிகளில் நடத்த வேண்டிய விதிமுறைகளை தக்க குருவிடம் பெற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த திதியுமே கெடுதல் பயக்கும் என்று எண்ணாதீர்கள். ஒவ்வொரு திதிக்கும் ஒரு திதி தேவதா மூர்த்தி உண்டு. குறிப்பிட்ட சில காரியங்களைச் செய்வதற்கு உரித்த திதிகளாகவே ஒவ்வொரு திதியும் தனிப்பட்ட முறையில் விசேஷ குணங்களுடன் பரிமளிக்கின்றது.
தமிழகத்தில் பிரதமை திதியை திருமணங்களுக்கு அவ்வளவாக ஏற்பதில்லை. ஆனால் ஆந்திரப் பகுதிகளில் பிரதமை திதியில்தான் மிகவும் விசேஷமான திருமண முகூர்த்தத்தை வைக்கின்றார்கள். இதற்காகத்தான் தக்க பெரியோர்களை நாடி “காலவிதான” விசேஷத் தன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். அக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குல குரு இருந்தார். அவருடைய தெய்வீக ஆலோசனையின் பேரில் தான் அனைத்துக் காரியங்களும் நடைபெற்றன. அந்த அளவிற்கு சற்குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை ஓங்கி இருந்து வந்துள்ளது. இதுவே பல பெரும் பாக்கியங்களைப் பரிசாகத் தந்தது.
ருத்ராஷ்டமி என்பது இறைவனுக்கு உரித்தான அக்னி சக்திகள் பரிபூரணமடைந்து பிரபஞ்ச ஜீவன்களுக்கும், பிரபஞ்சத்திற்குமே அருள்பாலிக்கின்ற அஷ்டமி திதியாக விளங்குகின்றது. ருத்ரன் என்றால் சிவன் என்றும் கண் என்றும் பொருள் கொள்வோம் தானே! ஈச்வரனுடைய மூன்றாம் கண்ணிலிருந்து தோன்றிய அக்னிப் பிரவாகத்தின் பேருருப் பிரபஞ்ச ஜோதியே ருத்ர மூர்த்தி ஆவார். இதனால் தான் அஷ்டமி திதியில் இறைத்திரு வடிவிலிருந்து உருப்பெற்ற ஏழு சப்த ரிஷிகளும், அக்னி பூஜையை தமக்கு உவப்பானதாக, இஷ்ட மூர்த்தி பூஜையாக மிகவும் விசேஷமாக மேற்கொள்கின்றனர். இவ்வாறாக அக்னி சம்பந்தமுடைய நாளாகவும் ஸ்ரீருத்ராஷ்டமி விளங்குகின்றது.
பார்வை கூட்டும் பகலவ சக்தி தினம்
கண்பார்வை இல்லாத குருடர்களுக்கான நல்வாழ்விற்கான இறைச் சமுதாயப் பணிகளை ஆற்ற வேண்டிய மிக முக்கியமான நாளே ருத்ராஷ்டமி. மேலும் கண்பார்வை அற்றோரும் விசேஷமாகவும் வழிபட வேண்டிய நாளாகவும் விளங்குகின்றது. கிட்டப்பார்வை, தூரப்பார்வை காரணமாக அதிக “பவர்” கொண்ட “லென்ஸ்” உள்ள கண்ணாடி அணிந்து கொண்டிருப்போர் இன்று ஸ்ரீருத்ராஷ்டமி விரதத்தை முறையாக கடைபிடித்தால் பார்வைக் குறைவினால் ஏற்படுகின்ற துன்பங்கள் தணியும். மாலைக்கண், க்ளுக்கோமா (Glaucoma) காடராக்ட் போன்ற கடுமையான கண் வியாதிகளால் அவதியுறுவோர் இந்த ருத்ராஷ்டமி விரதத்தை ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கண்பார்வை பிரச்னைகள் மேலும் பெருகாமல், துன்பச் சுமைகளின் பாரமும் தணியும்.
மேலும் சூரிய நமஸ்காரம், ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜப தியானம் போன்ற அக்னி வழிபாடுகளையும் சூரிய ஹோமம் போன்ற அக்னி வழிபாடுகளையும், பாஸ்கர பூஜையையும் சிறப்பாக மேற்கொண்டு இருப்போர் நல்ல முறையிலே தீர்க்க தரிசனமான நேத்ர சக்தியைப் பெற இந்த ருத்ராஷ்டமி விரதம் பெரிதும் உதவுகின்றது  பொதுவாக கண்பார்வையற்றோருக்குப் பலவிதமான வழிபாடுகளைச் செய்ய முடியாமல் போய் விடுகின்றது அல்லது இதற்கான சூழ்நிலைகளை அவர்களால் பெற முடிவதில்லை! திருஅண்ணாமலை, கிரிவலம் போன்று மலைத்தல கிரிவலங்கள், கடல், நதி மற்றும் புண்ய தீர்த்த நீராடுதல்கள், அடிப்பிரதட்சிணம், ஆலயங்களில் அங்கப் பிரதட்சிணம், அஸ்வத பிரதட்சிணம் என்று சொல்லப்படுகின்ற அரசமரம், வேப்பமரம் போன்ற புனிதமான மரங்களைச் சுற்றி வலம்வருதல், சூரிய நமஸ்கார வழிபாடு போன்றவற்றை அவர்களால் கடைபிடிக்க முடிவதில்லை! ஆனால் இறையருளால் நல்ல கண்பார்வை உடையோர், தங்களுடைய சகோதர ஜீவன்களாக விளங்குகின்ற கண்பார்வையற்றோருக்கு திருஅருணாசல கிரிவலம், புண்ய நதி நீராடல் போன்ற இறை வழிபாடுகளை அவர்களும் நன்முறையில் மேற்கொள்ளும் வண்ணம் அத்தகைய இறைத் திருத்தலங்களுக்கு இட்டுச் சென்று வழிகாட்டியாக கிரிவலம் வருதல், புண்யநதி நீராடுதல் போன்றவற்றிற்கு உதவி செய்யும் பொருட்டு அமைந்துள்ள மிக முக்கியமான நாளே ஸ்ரீருத்ராஷ்டமி விரத நாளாகும்.
குறையின்றி நிறையுமுண்டு!
பார்வையற்ற தன்மை ஏற்படுவதற்கு எத்தனையோ பூர்வ ஜென்மக் காரணங்கள் உண்டு. இவை பிறவி ரகசியங்களாகவே அமைகின்றன. இதனை எடுத்துச் சொன்னாலும் மனித மனம் ஏற்காது. அதே சமயத்தில், பார்வையற்ற நம்முடைய உடன் பிறவாச் சகோதரர்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு மனிதனுடைய தார்மீகமான கடமையாகும் என்பதையும் உணர்ந்திடுக! ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்நாளில் குறித்த அளவு பார்வையற்றோர்க்காவது தங்களால் ஆன பொருளுதவி, சரீர சேவையை நிச்சயமாகச் செய்தாக வேண்டும். இதற்காகத் தான் உடலால் நலிந்தோருக்கு உதவிடவே பலவிதமான விரதங்களும், தான, தர்மங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்காலத்தில் கண் மருத்துவம் பெரிய அளவில் முன்னேறி விட்டது என்று நாம் பறைசாற்றிக் கொண்டிருந்தாலும் கூட மற்றொரு விதத்தில் அது நம்முடைய சுகாதாரமற்ற வாழ்வைத்தானே குறிக்கின்றது. நம்முடைய மூதாதையர்கள் கண்ணாடி அணியாமல் 80/90 வயதிலும் வாழ்ந்த நன்னிலைமையை நம்மால் இக்காலத்தில் மீண்டும் கொண்டு வர முடிகின்றதா?
பார்வைக் கோளாறுகள் இல்லாதவர்கள் ஒருவருமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இன்று கிட்டத்தட்ட 40 வயதிற்கு மேல் அனைவருமே கண்ணாடியை அணியத் தொடங்கி விட்டார்கள். இதுதான் தற்போதைய T.V திரைப்பட, விஞ்ஞானமய நவீன வாழ்வின் (அலங்)கோலமாகும் எனவே பார்வையற்றோர்க்கு நம்மால் முடிந்த சரீர சேவைகளையும், பொருளுதவிகளை செய்து வந்தால் தான் நமக்கு பார்வைக் குறைவால் ஏற்பட இருக்கின்ற பிரச்னைகளுக்கு ஓரளவு நிவாரணத்தை தெய்வீக ரீதியாகப் பெற முடியும் . விஞ்ஞானமும், மெய்ஞானத்தின் படைப்பே! ஆனால் விஞ்ஞானமானது ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பயன்படும் வகையில் அமைய வேண்டுமே தவிர எல்லாம் வல்ல பரம்பொருளையே ஆய்கின்ற அவல விஞ்ஞானமாகி விடக்கூடாது!
ருத்ராஷ்டமி விரத நற்காரியங்கள்
ருத்ராஷ்டமி விரத தினத்தில் இன்று பார்வையற்றோர்க்கு உதவி புரிவதை மனதில் கொண்டு பலரும் சத்சங்கமாக ஒன்று கூடி நம் உடன்பிறவாச் சகோதர்களாக விளங்குகின்ற பார்வையற்றோர்க்கு பல இறை தரிசன, நீராடல்களின் புண்ய சக்திகளைப் பெற்றுத் தரும் வகையில் இறைப்பணி ஆற்றிட அனைவரையும் வேண்டுகின்றோம்.
1. ருத்ராஷ்டமி விரதமான இன்று வறுமையில் வாடுகின்ற ஏழை எளியோர்க்கு சட்டை, புடவை, வேஷ்டி, பாதணிகள், கைத்தடிகள், Brailey Watches, Brailey Board போன்றவற்றை அளித்து அவர்களுடைய நல்வாழ்விற்கு அளித்து அவர்களுடைய நல்வாழ்விற்கு நம்மால் ஆன உதவியைச் செய்திடல் வேண்டும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை இதன் மூலமாகத்தான் நாம் உய்த்து உணர முடியும்.
2. இன்று நீங்கள் மட்டும் ருத்ராஷ்டமி விரதத்தை கொண்டாடுதல் என்று இல்லாது பார்வையற்றோர்க்கும் இன்று ருத்ராஷ்டமி விரதத்தின் மகிமையை உணர்த்தி இந்த ருத்ராஷ்டமி விரதத்தை அவர்களும் பூணுமாறு செய்திடல் வேண்டும். ஏனென்றால் பார்வையற்றோர், தம்முடைய மனதிலே லட்சக்கணக்கான ஏக்கங்களைச் சுமந்து கொண்டு இருப்பார்கள். அந்த ஏக்கங்கள் ஓரளவேனும் தணிவதற்கும், நீங்குவதற்கும் நம்முடைய கர்மவினைகளினால் ஏற்பட்டதே இத்தகைய குறைகள் என்பதை உய்த்து உணருமாறு செய்தால் இதுவே மிகச்சிறந்த இறைப்பணியாக மாறுகிறது. மேலும் “நமக்கு இவ்வுலகத்திலே நல்வாழ்க்கையில் இட்டுச் செல்வதற்கும், நம்மால் பெறமுடியாத பல இறை அனுபூதிகளைப் பெற்றுத் தருவதற்கும், நம்முடைய உடன்பிறவாச் சகோதர, சகோதரிகள் இப்பூவுலகில் நிறைந்து இருக்கின்றார்கள்”, என்று அவர்கள் ஒரு ஆன்மீக சந்தோஷத்தைப் பெறுவதற்கும் இந்த ருத்ராஷ்டமி விரதத்தை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பார்வையற்றோரும் பூஜை செய்யட்டும்!
இந்த ருத்ராஷ்டமி விரதத்தன்று பார்வையற்றோரைக் கொண்டு துளசி பூஜை, பசுக்களுக்கான பூஜை, நதி, கடற்கரைகளில் நீராடுதல், தர்ப்பணம் செய்ய வைத்தல், அவர்களுடைய கரங்களாலேயே இறைவனுக்கு அர்ச்சனை ஆராதனைகள், அபிஷேகங்கள் செய்ய வைத்து, கற்பூர ஆரத்தியும் காட்டச் செய்தல், அவர்களுடன் கிரிவலம் வருதல், கோயில்களில் அடிப்பிரதட்சிணம், அங்க பிரதட்சிணம் செய்தல், அவர்கள் கைகளினாலேயே அன்னதானம், வஸ்திரதானம், மாங்கல்ய தானம் போன்ற பலவிதமான தான, தர்மங்களைச் செய்ய வைத்தல், அவர்களுடைய நல்ல தெய்வீகமான விருப்பங்களை நிறைவேற்றி வைத்தல் போன்ற பலவிதமான கைங்கர்யங்களை, நற்காரியங்களை இன்று ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் கலியுகத்தில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருதல் வேண்டும் என்ற ஒரு பார்வையற்ற சகோதரரின் 30 ஆண்டு நல்ஆசையைப் பூர்த்தி செய்யும் ஒரு நல்வாய்ப்பு சமீபத்தில் நம் ஆஸ்ரம அடியார்களுக்குக் கிட்டியது. அவருடைய பிறந்த தினத்தன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதற்கான அனைத்து உதவிகளையும் நம் ஆஸ்ரமத்தின் பால் செய்து மகிழ்ந்தோம். திருஅண்ணாமலையை கிரிவலம் வரச் செய்வதோடு மட்டுமல்லாமல் அவருக்கு கிரிவல மலை தரிசனங்களின் மகிமையை உணர்த்தி உணருமாறு செய்தோம், “நம்மால் மலை தரிசனங்களை பெற முடியவில்லையே”, என்ற எண்ணத்தை விட நாம் எடுத்துச் சொன்னதை வைத்துக் கொண்டு இந்த மாதிரி மலை தரிசனங்கள் அமையும் என்று அவரே உணர்ந்து தம் கைப்பட பல மலை தரிசனங்களை தமக்குரிய முறையில் களிமண்ணால் மேடு கட்டி வரைந்து உணர்ந்து சந்தோஷம் கொண்டார். இதுதானே நாமும் பெறுகின்ற உண்மையான, நிரந்தரமான தெய்வீகமான ஆத்ம சந்தோஷம்.
ருத்ராஷ்டமி விரத முறை :
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 1.10.1999 இரவு சுமார் 10.30 மணிக்கு சப்தமி திதி முடிவதால் 10.31க்கு ருத்ராஷ்டமி விரதத்தைத் தொடங்குதல் வேண்டும். வியாழக்கிழமை இரவே நன்னீரில் காவிரி, கங்கை போன்ற புனித நீரைச் சேர்த்து துளசி, வில்வத்தை போட்டு வைத்து விடவேண்டும். வெள்ளி இரவு, வில்வம் அல்லது துளசி கலந்த நீரோடு தேனில் ஊறவைத்த ஒரே ஒரு அத்திப் பழத்தை மட்டும் உண்டு விரதத்தைத் தொடங்கிடுக! 2.10.1999 சனி முழுவதுமே உண்ணா விரதம் இருத்தல் சிறப்பானது. வேண்டுமாயின் வில்வம்/துளசி கலந்த நீரை வேண்டும் பொழுது சிறிதளவில் பருகிடலாம். 2.10.1999 சனிக்கிழமை இரவு 8.40 மணிக்கு அஷ்டமி திதி முடிவு அடைவதால் விரத முடிவில் தேனில் ஊறிய அத்திபழத்தை மட்டும் உண்டு விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.. 3.10.1999 ஞாயிற்றுக்கிழமையன்று நவமி திதியிலிருந்து சாதாரண உணவை மேற்கொண்டிடலாம்.
“என்ன இது, எல்லா விரத்திற்கும் பட்டினி முறைதானா?” என்று எண்ணாதீர்கள். உண்ணாநோன்போடு நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சில எளிய அறவழி முறைகள் ருத்ராஷ்டமி விரதத்தில் உண்டு. இன்று முழுவதும் பார்வையற்றோருக்கு உங்களுடைய நேரத்தை அவர்களுடைய நல்வாழ்விற்காகச் செலவிட முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் ஊரிலேயே பார்வையற்றோருக்கு உதவி செய்திடில் முடிந்தால் அவர்களையும் உண்ணாவிரதம் இருக்கச் செய்து, ருத்ராஷ்டமி விரத பலன்களை அவர்களும் பெறும்படி செய்திடுங்கள். ஆனால் அவர் ஏழ்மை நிலையில் இருப்பவராயின் பசி தாங்காது ஆதலின் இன்றாவது அவர்கள் நன்றாக வயிறார உண்ணும்படி அதற்கு ஒரு சிறந்த இறைக் கருவியாக நீங்கள் பயன்பட வேண்டும். உங்கள் ஊரிலேயோ, அருகிலேயோ உள்ள முக்கியமான ஆலய தீர்த்தங்கள், புண்ய நதிகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத் தலங்களில் புனிதமாக நீராட வைத்து அவர்களுடைய கைகளினாலேயே சந்தனம், மஞ்சள் அரைத்து இறைவனுக்குச் சார்த்தச் செய்து, அடிப்பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம், அபிஷேக ஆராதனைகள் பலவற்றையும் அவர்கள் முன்னிலையிலேயே அவர்கள் மூலமாக செய்து நீங்களும் மகிழுங்கள்.
உட்பார்வையில் உன்னத கிரிவலம் :
திருஅண்ணாமலை, திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்சி மலைக்கோட்டை, திருச்சி குளித்தலை அருகே உள்ள ஐயர்மலை போன்ற மலைத்தலங்களில் நீங்கள் பார்வையற்றோருடன் கிரிவலம் செய்ய விரும்பினால் உண்ணாவிரதம் இருப்பது சற்றே கடினம் அல்லவா! எனவே தேனில் ஊறிய அத்திப்பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு அவ்வப்போது சிறிதளவு மட்டும் உண்டு துளசி/வில்வம் நீரைப் பருகி உங்களுடைய ருத்ராஷ்டமி விரதத்தை கிரிவலத்தோடு நிறைவு செய்திடுக! மலைவலத்தினால் வரும் உடற்களைப்பிற்காக மட்டும் இந்த விதிவிலக்கு! பார்வையற்றோர்க்கு கஜபூஜை  (யானை பூஜை), கோபூஜை (பசுவிற்கான பூஜை) போன்றவற்றைச் செய்வதற்கான நல்ல வாய்ப்பு கிட்டுவதில்லை.

ஸ்ரீஇரட்டை கணபதிகள்
திருவீழிமிழலை

பார்வையற்றோரால் எந்த பூஜைகளை எல்லாம் செய்ய முடியவில்லை என்று ஏங்குகிறார்களோ  அவற்றை அவர்கள் முன்னிலையில் அவர்களே கடைபிடிக்குமாறு இன்று நீங்கள் அருட்பணி ஆற்றிட வேண்டும். இது ருத்ராஷ்டமி விரதத்தின் மகத்தான புண்ய சக்தியைப் பெற்றுத் தருவதற்கான உத்தம அறவழி ஆகும். இன்று பார்வையற்றோருக்குப் புத்தாடைகளை அணிவித்து அங்கப் பிரதட்சிணம், அடிபிரதட்சிணம்/கிரிவலம் வரச் செய்து மகிழ்ச்சி  அடையுங்கள்! இவ்வாறு நீங்கள் அவர்களுக்கு ஆற்றுகின்ற சமுதாய இறைப்பணிகள் யாவும் அவர்களுடைய உள்ளத்திலே பரமானந்தத்தை உருவாக்கும். இந்த பரமானந்தம்தான் உங்களுக்கு நிரந்தரமான ஆனந்தமாகும். ஏனென்றால் உண்மையான தெய்வீக ஆனந்தம் என்பது உங்களுடைய தொண்டின் மூலமாக பிறர் பெறுகின்ற ஆனந்தத்தில் வருவதாகும். நாமே நமக்கு சாப்பிட்டுக் கொண்டு, புத்தாடை புதிய நகைகளை அணிந்து பெறப்படுகின்ற ஆனந்தம் நமக்குள்ளே ஏற்படுவதால் அது நெடுநேரம் நிலைத்து நிற்காது. ஆனால் பிறருடைய ஆனந்தத்திற்காக நாம் இறைப்பணிகளைச் செய்யும் போது அது நிரந்தரமான ஆனந்தமாக இருக்கும். அதை எப்போதும் நினைத்து நினைத்து உள்ளம் உருகுவதற்கான ஆனந்தமய வழியையும் வகுத்துத் தரும்.
இன்று ருத்ராஷ்டமியைக் கொண்டாடுவதற்கான முக்கியமான இறைத்தலங்களும் உண்டு. ஸ்ரீகண்ணாயிரமூர்த்தி, ஸ்ரீகண்ணாயிரம் உடையார் போன்ற நாமங்களை உடைய மூர்த்திகள் உறைகின்ற திருத்தலங்களும், தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திருக்கறாயில், கும்பகோணம் அருகிலுள்ள திருக்கண்ணபுரம், கிருஷ்ணாபுரம், திருவீழிமிழலை போன்றவையும் முக்கிய திருத்தலங்களாகும்.
ரெட்டவயிலில் முக்கண்ணன்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் ரெட்டவயல் கிராமத்திலுள்ள ஸ்ரீகண்ணாயிர மூர்த்தி மிகவும் அற்புதமான சக்திகள் வாய்ந்த சிவமூர்த்தி ஆவார். பலரும் அறிந்திடாத ஆனால் மகத்தான தெய்வீக சக்திகள் நிறைந்த மூர்த்தி, ஆண்கள் மட்டுமே உட்சென்று வழிபடுகின்ற தலம். பெண்கள் கோயிலுக்கு வெளியே நின்றுவிடுவார்கள். இதே ஊரில் உள்ள ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி மிகவும் சக்தி வாய்ந்த அம்பாள். இந்த இரண்டு சிறிய ஆலயங்களையும் சேர்த்து தரிசித்தல் விசேஷமானதாகும். பலருக்கும் குலதெய்வமாக இன்றும் இந்த ஸ்ரீகண்ணாயிர மூர்த்தி விளங்குகின்றார்.  ருத்ராஷ்டமி விரதமன்று ஸ்ரீகண்ணாயிர மூர்த்திக்கு இங்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து பின்னம் அடைந்துள்ள இச்சிறு திருக்கோயிலுக்குரிய இறைப்பணிகளையும் செய்து வந்தால், கடுமையான கண் நோய்களால் அவதியுறுவோரும், பாரம்பர்யமாகக் கண் நோய்களால் அவதிப்படுவோரும் தக்க தீர்வுகளைப் பெறுவர்.
கண் நோய் சம்பந்தமான துன்பச் சுமைகளிலிருந்து விடுபட்டு வர இந்த ஸ்ரீகண்ணாயிர மூர்த்தி வழிபாடு பெரிதும் உதவும். பரம்பரை பரம்பரையாகக் கண்ணாடி அணிவோர், தங்களுடைய நேத்ர தோஷங்கள் தணிந்திட வழிபட வேண்டிய தலம். பெருமாள் கோயிலில் இந்த ருத்ராஷ்டமி விரதத்தை மேற்கொள்வோர் ருத்ராஷ்டமியின் மறுதினமான நவமி திதியன்று பெருமாளுக்கு பானகம் படைத்துப் பிரசாதமாக அனைவருக்கும் அளித்திடல் வேண்டும். இன்று கேரட், தேனில் ஊறிய அத்திப்பழம் போன்றவற்றை அன்னதானமாக இடுதல் விசேஷமானதாகும் ருத்ராஷ்டமி விரதமான இன்று மிகவும் அரிய “சாட்சுஷோபநிஷத்” என்ற கண் ஒளி தரும் மந்திரங்களை (வீடியோ பார்க்கவும்) 12 முறை காலை, மதியம், இரவு (மாலை) வேளைகளில் ஓதுதல் சிறப்புடையதாகும். இந்த மந்திரத்தை பிப்ரவரி 1999 ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வெளியிட்டுள்ளோம்.
ருத்ராஷ்டமி விரதத்தன்று சாட்சுஷோபநிஷத்  மந்திரங்களையோ அல்லது அதன் சூரியனுக்குரிய தோத்திரங்களை ஓதி பார்வையற்றோர்களையும் ஓதச் செய்து அவர்களுக்கும் ருத்ராஷ்டமி விரத மகா பலன்கள் சென்று அடையுமாறு இறைப்பணி செய்தல் உங்கள் வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியமாகும் பார்வைக் குறைக்கான எத்தனையோ தோஷங்களைத் தணிக்கவல்லதாகும்.. சுயநலமிக்கவராக இயந்திர கதியில் வாழ்கின்ற நீங்கள் இன்றைய நாளையாவது பிறருடைய நல்வாழ்விற்காக அர்ப்பணித்துப் பாருங்களேன். என்றுதான் இத்தகைய தியாக மனப்பான்மை கூடிய வாழ்க்கையை மேற்கொள்ளப் போகின்றீர்கள்? உங்களுக்கு என வாழ்ந்து வாழ்ந்து எத்தனையோ ஆண்டுகள் விரயமாக ஓடிவிட்டனவே! பிறருடைய நல்வாழ்விற்காக வாழ்வது தான் உண்மையான தெய்வீக வாழ்க்கை. அதற்கு உதவி புரிவதுதான் ருத்ராஷ்டமி விரதம் போன்ற மிகமுக்கியமான பண்டிகைகளாகும்.

திருஷ்டி கண்டி

அட்சர திருஷ்டி தோஷ தூப தீப நிவாரண கண்டி மஹிமை
பலவிதமான தோஷங்களில் நம்முடைய ஆயுளை பாதிக்கின்ற அபமிருத்யு தோஷம் என்ற ஒன்றும் உண்டு. இதனைத் தீர்ப்பதற்கு அட்சர திருஷ்டி தோஷ தூப தீப நிவாரண கண்டி பூஜை பெரிதும் உதவுகிறது. அபமிருத்யு தோஷம் என்பது ஆயுளை பாதித்து ஆயுளைக் குறைத்து துர்மரணம், விபத்து, கொடிய நோய்களை உருவாக்குகின்றது. இதற்குத் தக்க பரிகாரம் தருவதே திருஷ்டி தோஷ நிவாரண கண்டி பூஜையாம். ஸ்ரீமிருத்யுஞ்சய மூர்த்தியே ஆயுள் சம்பந்தமான தோஷங்களைப் போக்கி நிறைவான ஆயுளைத் தந்து பெண்களுக்குரிய புனிதமான சுமங்கலித்துவத்தையும் அருள்கின்றார். இதற்குப் பெரிதும் உதவுவதே திருஷ்டி தோஷ நிவாரண கண்டி வழிபாடாகும். (நம் ஆஸ்ரமத்தில் திருஷ்டி தோஷ நிவாரண தீபமும், ஸ்ரீமிருத்யுஞ்ஜய சிவமூர்த்தியின் படமும் கிடைக்கும்.)
ஸ்ரீமிருத்யுஞ்சய மூர்த்தியைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? முந்தையதோர் அகஸ்திய விஜயம் இதழில் ஸ்ரீமிருத்யுஞ்சய மூர்த்தியைப் பற்றிய சில விளக்கங்களைப் படத்துடன் அளித்துள்ளோம். கோடானு கோடி யுகங்களுக்கு முன்னர் பிரசித்தி பெற்று விளங்கிய ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி பூஜை, ஸ்ரீஆயுர்தேவி பூஜை, ஸ்ரீஅமிர்த மிருத்யுஞ்சய மூர்த்தி பூஜை, ஸ்ரீசாகம்பரி தேவி பூஜை போன்ற பல அற்புதமான பூஜை முறைகளும், விரதங்களும் காலப்போக்கில் மறைந்து தற்போது ஆங்காங்கே ஒருசில இடங்களில் மட்டும்தான் இவை காணப்படுகின்றன. இதற்குக் காரணம் மக்களின் அசிரத்தையும், பக்தியின்மையும் சுயநலமும் ஆகும். 
குருகுலவாச பண்பாடு என்பது பெரிதும் மறைந்து விட்டமையால் தான் கலியுகத்தில் இத்தகைய அற்புதமான தெய்வமூர்த்திகளும், பூஜைகளும் மறக்கப்பட்டு விட்டன. இதனால் பாதிக்கப்படுவது நம் மனித சமுதாயம் தானே! இத்தகைய பழந் தெய்வீக வழிபாடுகள் மங்கி வருவதே கலியுகத்தின் பெரும் துன்பங்களுக்கான மிக முக்கியமான காரணமாக விளங்குகின்றது. அதாவது பல முக்கியமான தெய்வ வழிபாடுகளை நாம் விட்டுவிட்டமையால் தான் நமக்கு நாமே பல தீவினைகளாகத் தேடிக் கொண்டு உள்ளோம். 12 வருடங்களாகத் தொடர்ந்து ஸ்ரீமிருத்யஞ்சய மூர்த்தி பூஜையை கடைபிடித்து வருவோர்க்கு தீர்க்கமான ஆயுள் கிட்டும். கேட்பதற்கு இது முடியுமா என்று மலைப்பாகத் தோன்றும்! ஆனால் எத்தனையோ ஆண்டுகளாக நோயால் பீடிக்கப்பட்டுத் துன்புறுவதை விட இது எளிய நிவாரண முறைதானே!
இந்த பூஜையின் பலனாக வாழ்க்கையின் எந்த நேரத்திலும் மரண பயம் ஏற்படாது. மரணத்தை வெல்வதற்கும் மரணத்திற்கு பயந்து பயந்து வாழாமல் மனத்துணிவுடன் இருப்பதற்கும், தீர்க்க ஆயுளைப் பெறுவதற்குமான பூஜையாக, தெய்வீக அருமருந்தாக ஸ்ரீமிருத்யுஞ்சய வழிபாடு துணை புரியும். நம்முடைய பலவிதமான அதர்ம காரியங்களினால்தான் நமக்கு தோஷங்கள் ஏற்பட்டு நம்முடைய ஆயுளை, பாதிக்கத் தொடங்குகின்றன. எனவே, இந்த அபமிருத்யு தோஷங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு திருஷ்டி, தோஷ நிவாரண கண்டியுடன் கூடிய ஸ்ரீமிருத்யஞ்ச மூர்த்தி வழிபாடு மிகவும் முக்கியமானதாகும்.
ஆயுளை பாதிக்கும் தோஷம் :- நம்முடைய ஆயுளை பாதிக்கக்கூடிய பலவிதமான தோஷங்களில் மிகவும் முக்கியமானது அச்சன் வேர்க் கண் காவு என்று சொல்லப்படும் ஒருவித அபமிருத்யு தோஷமாகும். அச்சன் காவு என்று இதனைச் சுருக்கமாக அழைப்பார்கள் “பல்லில்லாச் சொல்லால் வீழ்வது பாதாளம் தானே”, என்பது சித்தர்களின் பரிபாஷை. இதன் விரிபொருள் என்ன? ஒவ்வொருவரும் பேசும் பொழுது வாக்கில் ஏற்படுகின்ற தோஷங்களை ஓரளவு வடிகட்டித் தீர்த்து வைப்பது நம்முடைய பற்களே ஆகும். ஏதோ உணவை மெல்வதற்கு மட்டுமே பற்கள் என்று எண்ணாதீர்கள். நம் வாயிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் இயன்ற அளவு சுத்திகரித்து அனுப்பிட உதவுவதும் பற்களின் திருப்பணியாகும்.
ஆனால் பல்லிற்குரிய தந்த தேவதைகளை முறையாகப் போற்றி வழிபட்டால் தானே இந்த புனிதமான காரியத்தைச் செய்திட முடியும். பற்களுக்கு உரித்தான தந்த தேவதா மூர்த்திகளை வழிபடுகின்ற பழக்கம் நின்று போய் விட்டமையால்தான் கலியுகத்தில் எங்கு பார்த்தாலும் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளைப் பேசி வருகின்றவர்களே பெருகி வருகின்றார்கள். பிறர் மனதை நோகடிக்கும் வகையில் பேசுவதும், பெண் குலத்தை இழித்துப் பேசுவதும் தற்காலத்தில் சகஜமாகி விட்டன. இதற்குக் காரணம் பிள்ளைகளை ஒழுக்கமான கட்டுப்பாட்டுடன் பக்தி சிரத்தையுடன் வளர்க்கின்ற கல்விமுறை மறைந்துவிட்டதுதான். அக்காலத்தில் ஆரம்பக் கல்வியிலிருந்தே இறைவணக்கத்துடன் மற்றும் இறைபக்தியை ஊட்டுகின்ற தேவார, திருவாசக, மகாபாரத, இராமாயணப் பாடங்கள் நிறைந்திருந்தன. விஞ்ஞானமயம் என்ற பெயரில் இவையெல்லாம் மறைந்து போய் செயற்கை முறைக் கல்வி பெருகி விட்டதால், மாணவ, மாணவியர்களுக்கு ஒழுக்கம் என்பது அடிப்படைக் கல்வியிலேயே ஊட்டப்படாமல் தடுக்கப்பட்டு விட்டது. இதனால் தான் முறையற்றுப் பேசுகின்ற அநாகரீகம் மாணவப் பருவத்திலேயே குடி கொள்கின்றது. ஒழுங்கீனம் பெருகுகின்றது.
பல்லில்லாப் பழிச் சொல்
பல் இல்லாதோர் இடுகின்ற சாபங்களுக்கு பலிக்கும் சக்திகள் சில உண்டு. எனவேதான் “பெரியோர்களுடைய வாயில் விழாதே”, என்று அவர்களிடம் பணிவுடன் இருப்பதற்காக அடிக்கடி இல்லத்திலே வலியுறுத்துவார்கள். அதாவது, வயதான நிலையில் பல் இல்லாமல் ஒருவர் திட்டும் போதோ, வசைபாடும் போதோ, அச்சொற்களைத் தடுத்து தூய்மைப் படுத்துவதற்கான பற்கள் அவர்களுக்கு இல்லாமையால் அது பல சாபங்களைப் பலிக்கச் செய்து விடுகின்றது. இதற்காக பல் இல்லாதோர் இடுகின்ற சாபங்கள் எல்லாம் பலித்து விடும் என்று சொல்வதற்கில்லை.. இத்தகைய சாபத்திற்கே அச்சன் வேர்க் கண் காவு சாபம் என்று பெயர். ஆயுளை பாதிக்கின்ற தோஷங்களுள் இது ஒன்றாகும். இது தவிர அம்மன் ஏறிகலிமாடன் தோஷ திருஷ்டி என்ற ஒன்றும் உண்டு. அதாவது, வியாபாரத் துறையில் சக வியாபாரிகளிடையே ஏற்படுகின்ற குரோதம், பகைமை, விரோதங்களால் துர்மரணத்தை ஏற்படுத்துகின்ற ஒருவித அபிமிருத்யு தோஷமே இதுவாகும். எதிர்பாராத இழப்புகளையும், திடீர்க் கடன்களையும் பாதிப்புகளையும், தந்திடுமிது. இவற்றைத் தீர்ப்பதற்கு ஸ்ரீமிருத்யுஞ்சய மூர்த்தியை வழிபடுதல் வேண்டும்.
ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்தி
ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்தியை நீங்கள் தரிசித்து இருக்கின்றீர்களா? ஹரித்வாரில் ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்தியின் பிரம்மாண்டமான திருவுருவத்தைக் கண்டு தரிசித்திடலாம். அங்கு ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்திக்கென தனி ஆலயமே ஒன்ற் உண்டு. ஆயுள் விருத்திக்கு மிகவும் உதவுவது செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை, மகம், சித்திரை, அஸ்வினி நட்சத்திர நாட்களின் பூஜையாகும். மேற்கண்ட தினங்களில் ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்தியின் தெய்வத் திருஉருவப் படத்திற்கு முன்னால் அட்சர திருஷ்டி தீபதூப கண்டியை வைத்து அச்சன் வேர்க் காவு தோஷம் நீங்குவதற்காக நல்லெண்ணெய் ஊற்றி ஐந்துமுக அகல் விளக்குகளை தீப கண்டியில் ஏற்றி வழிபடுதல் வேண்டும். ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்திக்கு பிரீதி உடையதும் ஆயுளை வளர்க்கக் கூடியதுமான மல்லிகைப் பூவை மூன்று சரங்களாகக் கோர்த்து, சாற்றி, தீர்க்கமான ஆயுளைத் தரக்கூடிய நல்லெண்ணெய் கொண்டு ஐந்து தீபங்களை ஏற்றி ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்தி மந்திரத்தை ஓதி வழிபடுதல் வேண்டும்.
த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம்
உர்வாருக மிவ பந்தனான் மிருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் - (ஸ்ரீருத்ரம்)
பெரியோர்களிடம் இதனை உச்சரிக்கும் முறை கேட்டுப் பெற்று துதித்தல் நலம். இது ஸ்ரீருத்ரத்தில் வருகின்ற மிக முக்கியமான மந்திரமாகும். ஆயுளை வளர்க்கக் கூடியது. ஞானத்தைத் தரவல்லது. கடுமையான நோய்களின் துன்பங்களை நீக்க வல்லது. ஆயுள் முழுவதும் இதனை உச்சரித்துக் கொண்டேயிருந்தால் எப்போதும் மரண பயம் அண்டாது. மரணம் என்றால் என்ன, பிறப்பு என்றால் என்ன என்ற வகையிலான, இறப்பு, பிறப்பின் இரகசியங்களைத் தன்னகத்தே தானாக உணர்விக்க வல்லதே மேற்கண்ட தெய்வீக ரகசிய மந்திரமாகும். ஓம் ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்தியே போற்றி!

நோய் விளக்கங்கள்

கர்மவினைகளின் விளைவாக நோய்கள் – சில ஆன்மீக விளக்கங்கள்
தொழுநோய், “Down Syndrome”  என்ற மனவளர்ச்சி குன்றி இருக்கின்ற நோய் இவ்வாறாக ஆயிரக்கணக்கான கடுமையான நோய்களை பார்க்கின்றோம். ஆன்மீக ரீதியாக நோய் வருவதற்கான விளக்கங்களைச் சற்றே உணர்வோமா! நோய்களுக்கான காரணங்கள் தெய்வீக ரகசியமாகவே விளங்க வேண்டும் என்பது இறைநியதி. பொதுவாக, பிறப்பு, இறப்பு ரகசியங்களைப் போல நோய்கள், விபத்துகள் போன்ற பலவிதமான நிகழ்ச்சிகளின் காரண, காரியங்களும் தெய்வீக ரகசியமாக இயற்கை நியதியாகவே உள்ளது.
காரணம் என்ன? எந்த நோயும் எழுவதற்கும் அல்லது விபத்துக்கள் ஏற்படுவதற்கும் காரணமான ரகசியங்கள் தெரிய வருமேயானால் இந்த விஞ்ஞான உலகமானது அதனை முழுவதுமாக ஏற்காது, பல குழப்பங்களும் ஏற்படும் அல்லது அதற்குக் காரணமாக இருப்போரின் மேல் வெறுப்பும், குரோதமும் உண்டாகும். எனவேதான் இவையெல்லாம் தாமாகவே உய்த்துணரும் வரை மூடு ரகசியங்காகவே விளங்குகின்றன. ஆனால் தக்க சற்குருவை நாடுவோமேயானால் எந்த காரண காரியத்திற்கும் உரிய விளக்கங்களை நாம் எளிதில் பெற்றிடலாம். ஏனென்றால் அவரவர் மனநிலைக்கு ஏற்ப, ஆன்மீக நிலைக்கேற்ப, மனப்பக்குவத்துடன் தெய்வீக விளக்கங்களைத் தரவல்லவரே சற்குரு ஆவார்.’
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”, என்பதைப் போல நாம் செய்கின்ற காரியத்திற்கு உரித்தான கர்மவினைகளை நாம் பலவிதங்களில் அனுபவித்தே ஆக வேண்டும். அந்த விளைவுகள் இப்பிறவியிலோ அல்லது எதிர்வரும் பிறவியிலோ சேரக்கூடும். ஒரு சிறு தலைவலி ஏற்பட்டால் கூட அதற்குரிய எத்தனையோ காரணங்கள் உண்டு. ஆனால் சின்னசின்ன விஷயங்களுக்கெல்லாம் காரண, காரியங்களை ஆராய முற்பட்டால் நாம் எப்படிதான் வாழ்க்கையை நடத்தமுடியும் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா! இதனுடைய மூலாதார ஆன்மீகப் பின்னணியே “தீதும் நன்றும் பிறர் தராவாரா” என்ற ஒரே வாக்கியத்தின் வேதத் தத்துவமாகும். அதாவது நமக்கு வருகின்ற நல்லதோ, கெட்டதோ அனைத்துமே நம்முடைய பூர்வ ஜென்ம கர்மவினைகளின் தொகுப்பே, இதைத் தானாக உணர்ந்து புரியவைப்பதே ஒவ்வொரு காரண, காரியத்தின் “மூடு ரகசியம்” ஆகும்.
திரைப்பட உலக வேதனைகள்!
பல திரைப்படங்களிலும், பத்திரிகைகளிலும், T.Vயிலும், Ineternet-லும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களிடையேயும் முறையற்ற காமத்தை ஊட்டுகின்ற வகையில் வன்முறைகளுடன் பல நிகழ்ச்சிகளை, படம் முழுவதுமாகவே அமைத்து விடுகின்றார்கள். இதனால் ஒழுக்கம் குன்றி சிறு வயதிலேயே முறையற்ற காம உணர்வுகள் பொங்கி எத்தனையோ ஆயிரக்கணக்கான குடும்பங்களும், லட்சக்கணக்கான இளைஞர்களும் சீரழிக்கப்படுகின்றனர். இதற்குக் காரண காரியமாக விளங்குகின்ற அனைவருமே கொடுமையான பிறவிகளை எடுக்க நேரிடும். ஏனென்றால், எத்தனையோ ஆயிரம் மக்களின் உள்ளத்திலே, மனதிலே, நல்வித்துக்களை ஒழுக்க பண்பாட்டினை, இறைபக்தியை வளர்க்க வேண்டிய திரைப்படங்களில் தேவையற்ற காமம், வன்முறை, சண்டைகள் போன்றவற்றைப் புகுத்துவதனால் பல்லாயிரக்கணக்கான மக்களின் மனம் சீரழிகின்றதல்லவா!
இதற்கான தார்மீக பொறுப்பை அவரவர் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். தன்னுடைய பிள்ளைகள், பெண்கள், நல்முறையிலே ஒழுக்கத்திலே சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புவோர் திரைப்படம், நாடகம், புத்தகம் மூலமாகப் பிறருக்குத் தேவையற்ற காம உணர்ச்சிகளை ஊட்டினால் இது தர்மமானதாகுமா? காமத்தைப் பெருக்கும் பெரும்பாவமே பல பிறவிகளில் கடுமையான நோய்களாகவும், விபத்துக்களாகவும், நஷ்டங்களாகவும் இவ்வாறு காரணமானோர்க்கு வந்து சேர்கின்றன. சற்றே சிந்தித்துச் செயல்படுவீர்? இது தெய்வீகப் பகுத்தறிவு உணர்த்துகின்ற பாடமாகும்.
மது, சூது மகாவேதனை
இதே போன்றுதான் மதுபானத் தொழிற்சாலைகள், மதுபானக் கடைகள் வைத்திருப்போரும், பீடி, சிகரெட் விற்போரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிவதற்கான வழிவகை செய்வதால் பல சொல்லொணாப் பெரும் பாவங்களைச் சேர்த்துக் கொள்கின்றார்கள். இதனால் இவர்களுக்கு எதிர்வரும் பிறவிகள் மிகவும் கொடுமையானதாக இருக்கும். அதோடு மட்டுமல்லாது இப்பிறவியிலேயே லட்சக்கணக்கான குடும்பங்களைச் சீரழித்தமையால், அதன் விளைவுகளையும் இப்பிறவியிலே ஏற்க நேரிடும். தன் பிள்ளைகள், பெண்கள் மட்டும் மதுப் பழக்கத்திற்கோ அல்லது பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கோ அடிமையாகாது நல்ல ஒழுக்கத்துடன் வாழ விரும்புவர்கள் பிறர் எப்படிப் போனால் என்ன என்று கருதுவது அநீதிதானே!
மது தயாரிப்பதோ, மதுவை விற்பதோ தர்மம் ஆகுமா அல்லது தார்மீகச் செயல் ஆகுமா? இதனைச் சிந்தித்துப் பார்ப்பாதற்குத்தானே இறைவன் பகுத்தறிவை அளித்துள்ளான். எனவே இயன்ற வரையில் பலவிதமான கொடிய கர்மவினைகளைத் தரக் கூடிய தோல் தொழிற்சாலைகள், மதுபான தொழிற்சாலைகள், மதுபானக் கடைகள் போன்றவற்றில் பணிபுரிவதைத் தவிர்த்து விடுங்கள். இத்தகைய கொடிய பாவங்களுக்கு நீங்களும் துணைபோகாமல் இருப்பதுதான் உங்கள் வாழ்க்கையின் தலையாய பணி! நல்ல வார்த்தைகளைச் சொல்லவேண்டிய இந்த ஆன்மீக இதழில் பல தீவினைகளைப் பற்றியும் விளக்க வேண்டி உள்ளதே என்று எண்ணத் தோன்றுகின்றதா? தீய ஒழுக்கமும், தீவினையும் எந்த அளவுக்கு ஒருவரை பாதிக்கும் என்று உணர்ந்தால்தான் நம் மனதை பக்குவப்படுத்த முடியும். ஏனோ, தானோ என்று வாழாது, எப்படியும் நன்முறையில் வாழ வேண்டும் என்று வைராக்கியத்துடன் வாழ்ந்தால்தான் அது உண்மையில் தெய்வீக வாழ்வாகும். இல்லையெனில் இப்பிறவி மட்டுமல்லாது எத்தனையோ கோடி பிறவிகளுக்குமே இது வழிவகுக்கும்.
தீய வினைகளின் விளைவுகள்
பல கொடியோர்களுடனும், பாவிகளுடனும் சேர்ந்து கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, துரோகச் செயல்கள் போன்ற தீவினைகளில் ஈடுபடுகின்ற போது அப்பாவச் செயல்களின் ஒட்டு மொத்த விளைவுகள் தான் அடுத்த பிறவிகளில் கடும் நோய்களாக, பெரும் தீ விபத்துக்களாக மற்றும் பல துன்பங்களாக வருகின்றன. ஈவு, இரக்கம் அற்ற முறையில் தொழிலாளர்களை, சக அலுவலர்களை நடத்துவது சக பணியாளர்களை, அதிகாரம், பதவி காரணமாகத் துன்புறுத்துவது, பழிவாங்குதல், அதிகாரம், பதவி, அந்தஸ்து, கௌரவம் போன்றவை கொண்டு பலருடைய வாழ்வைச் சீர்குலைத்தல் இவையெல்லாம் எத்தனையோ பிறவிகளில் பெருந்துன்பங்களாக திரண்டு வந்து ஒருவரை பாதிக்கும். அது கடுமையான மன நோயாகவோ, உள்ளத்தைச் சுடும் வாழ்க்கை நிகழ்ச்சிகளாகவோ அல்லது வேதனை தரும் விபத்துக்களாகவோ, பெருங் குறைகளாகவோ அமைந்து விடும்.
மேலும், பிறருடைய உயிரை வதைக்கின்ற  செயலும், உயிரை மாய்க்கின்ற தீவினைக் காரியங்களும் அவருக்கே அவருடைய குடும்பத்திற்கே திரும்பி வந்து பழிவாங்கும்! எவருடைய உயிர் பழிவாங்கப் பட்டதோ அது ஆவி ரூபமாக வந்து அச்செயல்களைச் செய்தோரின் குடும்பத்தையும், அவரையும், பலவிதமான வழிகளில் துன்புறுத்திக் கொண்டேயிருக்கும். பில்லி, சூன்யம் வைத்து பலக் குடும்பங்களை சிதைத்தோரும் அதே விளைவுகளைத் தங்கள் வாழ்வில் மீண்டும் காண நேரிடும். மனநோய் உள்ளோரை, பார்வையற்றோரை, முடவர்களை ஏமாற்றி அவர்கள் சொத்துக்களை கையாடுதல், பொருட்களைப் பிடுங்குதல்  இவை யாவுமே , மீண்டும் இந்தப் பிறவியிலோ அல்லது வருகின்ற பிறவியிலோ திரும்பி வந்து பழிவாங்கும்..
நல்ல சந்ததியைப் பெறுவீர்!
பொதுவாக, மனவளர்ச்சி குன்றிய நிலையில் குழந்தைகள் பிறக்கக் காரணங்கள் எத்தனையோ உண்டு. கணவனும், மனைவியும் கூடுகின்ற போது நல்ல நேரம் பார்க்காது, தலையற்ற நாட்கள், கால் அற்ற நாட்கள், உடலற்ற நாட்கள் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நட்சத்திர நாட்களில் முறையின்றிக் கூடுதல் ஆகும். இதற்காகவே நம்முடைய சோதிட சாத்திரத்திலே பல நியதிகளை விஞ்ஞானக் கோணங்களில் பகுத்துத் தந்துள்ளனர். நன்முறையில் சந்ததி விருத்திக்காக அமைகின்ற நல்ல நாட்களை அறிகின்ற ஜோதிட முறைகள் பல உண்டு. வயிற்றில் மலம், மூத்திரத் தங்கல், சூன்ய திதி, கூடா நாட்கள், இரவு நேர ராகுகால, எமகண்ட அர்த்த பிரகரணம் மற்றும் சூரிய, கிரஹண நேரங்கள் போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மேற்கூறிய கர்ம வினைகளோடு காலந்தவறிய இவ்வகையிலான காரியங்களும்தான் ஊனம், மன வளர்ச்சி குன்றிய சந்ததிகளுக்கும், அங்கக் குறைவுகளுக்கும் வழிகோலும்.
எனவே, நல்ல சந்ததியைப் பெறுவதற்கான ஆன்மீக வழிமுறைகளைத் தக்க பெரியோர்களை நாடிப் பெற்றிடுக! நம் மூதாதையர்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திற்கும், பருவத்திற்குரிய எத்தனையோ அறவழி முறைகளையும், நல்வழிச்  செயல்களையும் நிச்சயமாகத் தந்துள்ளனர். நாம் தான் இவற்றைக் கைவிட்டு விட்டு கலியுகத் துன்பச் சூழ்நிலைகளில் வாடித் துடிக்கின்றோம் என்பதை இனியேனும் உணர்ந்திடுக! தக்க குலகுருவைப் பெறாததினால் தான் வாழ்க்கைக் காரியங்கள் யாவுமே பிரச்னைகளுக்கு உரியதாகி விட்டன கலியுலகில்!
தான தர்மங்கள் ஏன்?
தான தர்மங்கள் என்றால் ஏதோ செலவு item  என்ற எண்ணம்தான் தற்போது பரவிக் கிடக்கின்றது. “நமக்கே நம்முடைய வருமானம் போதவில்லை. இதில் தான, தர்மங்கள் செய்வதா, வெறுமனே பூஜை செய்தால் போதாதா, ஏன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தான, தர்மங்களில் விரயமாகச் செலவிட வேண்டும்?” என்று கேட்பவர்கள், கேட்காமல் நினைப்பவர்களும் நிறைய உண்டு! எதற்காக, தான தர்மங்களை நம்முடைய மூதாதையர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர் என்பதை ஸ்ரீஅகஸ்திய விஜய இதழில் அவ்வப்போது விளக்கி வருகின்றோம். இருந்தாலும் பலருடைய மனம் ஒப்பாது!
தற்காலத்தில் வியாபாரம், அலுவலகப் பணி, விவசாயம் போன்ற பலவிதமான முறைகளில் வருவாயைப் பெறுகின்றவர்கள் தங்களுடைய பணவரவு முறைகளிலே எவ்வளவு தான் நேர்மையாக இருந்தாலும் பலவிதமான அதர்மங்களுக்கு, ஊழல்களுக்கு, ஏமாற்று வேலைகளுக்கு, கலப்படங்களுக்கு இடம் கொடுக்க வேண்டியதாகி விடுகிறது. எவ்வளவுதான் சத்ய நெறியில் இருந்தாலும் உண்மையாக இருப்பவர்கள் கூட அவர்கள் அறிந்தும், அறியாமலே கூட அந்தந்தத் துறையிலே அதர்ம காரியங்கள் நடந்து விடுகின்றன. அலுவலகத்தில் பணிபுரிகின்றவர்கள் கை சுத்தமாக, லஞ்ச லாவண்யம் எதிலும் ஈடுபடாதவர்களாகப் பணிபுரிந்தாலும் கூட அலுவலக நேரத்தில் தம்முடைய சுயவேலைகளை முடித்துக் கொள்தல், ஓசியில் அலுவலக தொலைப் பேசியை, அலுவலகப் பொருட்களை உபயோகித்தல், வாடிக்கையாளர்களை தம்முடைய தனிப்பட்ட காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்தல் போன்ற பல அதர்ம காரியங்களில் ஈடுபடத்தான் செய்கின்றார்கள். இதனை இல்லை என்று எவரும் மறுத்தலும் முடியாது.
PF Loan, Consumer Loan, Computer Loan என்று பலவிதத்தில் எந்த காரியத்திற்காக, அலுவலகத்தில் கடன் வசதி அளிக்கப்படுகின்றோ அதற்காக அதைப் பயன்படுத்தி கொள்ளாது, வேறு சொந்த காரியங்களுக்குப் பயன்படுத்துவது கூட ஆன்மீகத்திற்கு முரணானதே, சத்ய நெறியின் கணக்கிலே! இதில் ஒரு பகுதியையாவது ஆன்மீகத்திற்காக, தான, தர்மத்திற்காக ஒதுக்கிடல் வேண்டும்! இவ்வாறாகத் தான் இத்தகைய கர்மவினைகளுக்கு ஓரளவு பிராயசித்தம் பெறலாம். ஸ்ரீகணபதி ஹோமம், Housing Loan என்று பலவிதமான காரியங்களுக்காக PF Loan மற்றும் பலவிதமான அலுவலக கடன் வசதிகளைப் பெற்று அதற்காகப் பயன்படுத்தாமல் வேறு எதற்கோ பயன்படுத்தினால் கூட அதுவும் அதர்மம் தானே!
எனவே மிகவும் சாதாரணமாக நாம் நினைக்கும் அதர்மச் செயல்களில் கூட பலவிதமான தோஷங்கள் ஏற்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் எனவேதான் இவ்வாறு அறிந்தும் அறியாமலும் வந்து சேர்ந்த தோஷங்களை உடைய பணமானது, தான, தர்மங்களிலே செலவானால் தானே அது முறையற்ற வகையில் வந்ததற்கான பாவங்களைக் களைவதற்கு, தோஷங்களை நீக்குவதற்கு உதவிடும். இந்தத் தான, தர்மங்களின் மகத்துவத்தை அவ்வப்போது சிறு சிறு தான, தர்மங்களின் மூலமாகவாவது நிதமும் பாவச் சுமைகளைச் களைந்தாக வேண்டும். இல்லையெனில் அவை பூதாகாரமாகப் பெருத்துவிடும்!

சிதம்பர சரபேஸ்வரர்

ஸ்ரீசரபேஸ்வரர் மஹிமை
சிதம்பர சிவாலய ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி – ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி எத்தனையோ ஆலயங்களில் பல வடிவங்களில் அருள்பாலிக்கின்றார் அல்லவா! கும்பகோணம் அருகே திருபுவனத்தில் ஸ்ரீகம்பஹரேஸ்வரராக, கம்பமாகிய தூணில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி பெரும்பாலான ஆலயங்களில் தூண்களில் தான் எழுந்தருளி உள்ளார். கம்பத்தில் /தூணில் அவர் எழுந்தருள்வதற்கான அவதார ரகசியக் காரணங்களை நாம் இத்தொடரில் முன்பே விளக்கியுள்ளோம். சிதம்பரம் பெரிய சிவாலயத்தில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி தனித்தன்மையுடையவர், விசேடமானவர், நல்வரங்களைத் தந்தருள்பவர், பிரத்யட்ச மூர்த்தியாக நற்காரிய சித்திகளை அபரிமிதமாக அளிப்பவர், மிகவும் சக்தி வாய்ந்தவராக “துஷ்டசமன கஷ்ட நிவாரண சரபமூர்த்தியாக” விளங்குபவர்.
பஞ்சபூதத் தத்துவங்களைத் தன்னுள் உற்பவிக்கச் செய்து, பிரபஞ்சத்திலுள்ள அனைத்து கோடி ஜீவன்கட்கும் அருள்பாலிக்கின்ற ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி! சிதம்பரத்தில் ஆகாசத் தத்துவ அருட்பெருஞ்ஜோதியாயும் விளங்குகின்றார். ஞாயிறு மாலை இராகு கால நேரத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை சிதம்பரம் சிவாலயத்தில் துஷ்டஸமன, கஷ்ட நிவாரண மூர்த்தியாய் விளங்குகின்ற ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியை அபிஷேக ஆராதனைகளுடன் வணங்குவது வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பாக்கியமாகும். ஏற்கெனவே நாம் பலமுறை விளக்கி உள்ளது போல, கலியுக மனிதனின் உள்ளத்தில் பகைமை, விரோதம், குரோதம், முறையற்ற காமம் போன்றவை அரக்க குணங்களாக விளங்குவதால், இரணியனின் தீய குணங்களை ஸ்ரீநரசிம்மர் அழித்தது போல, மனிதனின் அரக்கத் தன்மைகளை அழித்து, மனிதாபிமான, ஆன்ம நேயமுடைய, நல்ல பக்தியுடையோனாகச் சிறந்த நல்ஒழுக்கத்துடன் வாழ அருள் பாலிக்கும் அற்புத மூர்த்தி!
பஞ்சபூத சக்திகள் நிறைந்ததாகவே ஆலயங்கள் அனைத்தும் திகழ்ந்தாலும், சில இடங்களில் குறித்த சில தெய்வீக சக்திகள் பரிபூரணமாக நிறைந்து காணப்படும். இவ்வகையில் சிதம்பரம் ஆலயத்தில் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியானவர் துஷ்ட சக்திகளை துரிதமாக மாய்க்கின்ற மஹாதேவ மூர்த்தியாய் விளங்குகிறார். இராகு காலத்திலும், எமகண்ட நேரத்திலும் அரக்க குணங்கள் மிகவும் உச்சத்துடன் தலை தூக்கி நின்று ஆக்ரோஷத்துடன் தீவினைகளைப் புரிகின்றன. எனவேதான் இராகு காலத்தில் உச்சமாகத் திகழும் தீவினைகளை எதிர்த்து, இன்னல்களை வென்று நல்ல காரியசித்திகளைப் பெறுவதற்காகவே, ஸ்ரீதுர்க்கை பூஜை, ஸ்ரீசரபேஸ்வர பூஜை போன்ற அற்புதமான வழிபாடுகளை ராகு காலத்தில் மேற்கொண்டு அதனால் கிட்டுகின்ற மிகுந்த சக்தி வாய்ந்த அக்னிபிரவாக சக்திகளைக் கொண்டு தீவினைகளை நாம் இறையருளால் வெல்கின்றோம்.
இவ்வகையில் சிதம்பரம், ஸ்ரீநடராஜர் ஆலயத்திலுள்ள ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியை ஞாயிறு இராகு கால நேரத்தின் போது வெண்ணெய்க் காப்பு, மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு இட்டு அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபட்டு ஸ்ரீசரபேஸ்வர கவசத்தை ஆழ்ந்த நம்பிக்கை, பக்தியுடன் ஓதி வந்திடில் பலவித தீயசக்திகளும் மற்றும் எத்துணையோ பெரிய தோஷங்களும் அகல்வதுடன் பல காரியசித்திகளையும் எளிதில் பெறலாம். ஸ்ரீசரப மூர்த்திக்கு இனிப்பு சுய்யம் நைவேத்யமும், அன்னதானமும் நற்பலன்களைத் துரிதமாக்கும். தான, தர்ம சக்தியைக் கூட்டித் தருகின்றன. வீடு , பாக்டரி கட்டுதல், பதவி உயர்வு போன்று ஆண்டாண்டு காலமாகப் பலவித இன்னல்களாலும், தடங்கல்களாலும் தடைபட்டுள்ள பல நற்காரியங்களை இந்த சரபேஸ்வர வழிபாடு மூலம் எளிதில் நிவர்த்தி செய்து தொழிலிலும், அலுவலகப் பணிகளிலும் முன்னேற்றம் பெறலாம்..
வாதாடுந் திறன் வந்திட
வாதாடல் திறமை என்பது நீதி மற்றும் வழக்குத் துறையில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். சற்றே வாக்குத் தவறினால் வழக்கு நிலைமாறி பாதக விளைவு ஏற்பட்டுவிடுமல்லவா! லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்தும் பல ஆண்டுகளாக, சொத்து, பிரிவினை நில, புல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்திட, வாதாடும் திறனின்றி வாக் சக்தி சற்றே பிறழ்ந்து விட்டால் ஏற்படும் விளைவுகள் தான் எத்தனை! எத்தனை !! ஞாயிற்றுக் கிழமையிலான ஸ்ரீசரபேஸ்வர வழிபாட்டினை சிதம்பரத்தில் மேற்கொள்வதன் மூலம் நல்ல வாதாடும் திறனைப் பெற்றிடலாம். ஏனெனில் “அடிநாக்கு” என்று சொல்லப்படுகின்ற கரிக்கோடு நிறைந்த வாக்கில் கரிதோஷங்கள் இருந்தால், இதனால் பல தீய சக்திகள் எழும்பி பலருடைய வாழ்வை பாதித்து விடும். இத்தகைய கரிதோஷங்கள் பஸ்மமாகிட ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு பெரிதும் உதவுகிறது.
பேச்சுத் திறன் பெருகிட

பேச்சுத்திறன் கூடிய பல தொழில்கள் கலியுகத்தில் பெருகியுள்ளன. Sales Representatives, Sales officers, Marketing , etc.. போன்ற பேச்சுத் திறன் கூடிய தொழில் வாய்ப்புகள் கலியுகத்தில் அதிகமோ அதிகம். அதிலும் குறித்த Target-ஐ நிறைவு செய்யாவிடில் வேலையையே இழக்கும் துர்பாக்கிய நிலையும் கலியில் உண்டே! ஆனால் வியாபாரக் கடைகளிலும், அலுவலகங்களிலும் வியாபாரப் பொருட்கள் நிறைந்துள்ள கிடங்குகளிலும் குவிந்துள்ள தோஷங்கள் தான் கணக்கிலடங்கா! போட்டி, பொறாமை, குரோதம், விரோதம், பகை போன்ற அரக்க குணங்களும், பணப் பேராசையால் எழும் பேய் சக்திகளும் இவ்விடத்தில் குடி கொள்கின்றன. இச்சூழ்நிலையில் வியாபாரம் எப்பாடி சரிவர நடக்கும்? இந்நிலையில் பேச்சுத்திறன் மூலம் தீயசக்திகளை வென்று வாக்குவன்மை பெற்றாக வேண்டுமே, என் செய்வது?
இதற்கு அருள் பாலிப்பவரே ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாவார். இவ்வாறு பேச்சுத் திறமைக்கு மிகவும் உறுதுணையாய் இருப்பது நுனி நாக்கிலுள்ள லலாடங்க பூஷண சக்தியும். அடித் தொண்டையிலுள்ள கால துருவ சக்தியும் பற்களிலுள்ள தந்த சோபித சக்தியும் ஆகும். இவற்றைப் பெற உதவுவதே ஸ்ரீசரபேஸ்வர பூஜை மஹிமையாகும். எவ்வாறு? ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியின் பற்கள் நாம் நினைப்பது போல் சாதாரணமானவையல்ல! எத்துணையோ கோடி மஹரிஷிகள் ஆழ்ந்த தவமிருந்து, பலகோடி யுகங்களாக யோகநிலை பூண்டு தாமே தந்த மூர்த்திகளாக ஆகி ஸ்ரீசரபேஸ்வரரின் தந்தங்களாக, பற்களாக வீற்றிருக்கின்றனர். உருவமில்லா அருவப் பரம்பொருளான இறைவனுடன் ஐக்யமாதல் என்பது இதுவே! எனவே, சொல்லாற்றலைப் பெருக்குவதற்கு இத்தகைய தந்த தேவதா மூர்த்திகளின் ஆசியை நாம் பெற வேண்டும். அதை பெற்றுத் தருபவரே ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாவார்.
வாமன தந்திர சித்தி வளர்ந்திட  
கலியுகத்தில் வாமன தந்திரம் அறிந்தோர் ஒரு சிலரே! தந்திரம் என்றால் ஏமாற்றுதல் என்பது பொருளல்ல! பல நற்காரிய சக்திக்குப் பெரிதும் துணைபுரிவதே வாமன தந்திர மந்திரங்களாகும். ஆனால் இவற்றை முறைப்படி பயின்று நன்முறையில் பயன்படுத்த வேண்டும். தீயவற்றிற்கும், பெரும் செல்வம் ஈட்டுவதற்கும் வாமன மந்திர சக்தியைப் பயன்படுத்தினால் பெரும் சாபங்களே உண்டாகும். வாமன தந்திரங்களை ஓரளவு பயின்று தற்காலத்தில் அது முடிவு பெறாமல், பல ஏக்கங்களுடன் வாழ்கின்ற பலரும் உண்டும். இவர்களும் எவ்வளவோ முயற்சித்தும் சமுதாயத்தின் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்த முடியாமல் பலவித இடையூறுகள் ஏற்படுகின்றன.
எனவே வாமன தந்திர, மந்திர சக்திகள் சமுதாயத்திற்கு நன்கு பயன்பட, ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு, அதிலும் சிதம்பரத்தில் ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு பெரிதும் உதவுகிறது. ஏனெனில் சரபப் பறவையின் இறகுகள் ஒருமுறை அசைகையில் எழுகின்ற பீஜாட்சர சக்திகளே பல வேத, யோக, யாக, தியான, வாமன தந்திர மந்திரங்கட்கு அடிப்படையாய் அமைகின்றன. எனவே, சரபப் பறவையின் தரிசனமே வாமன தந்திர தீட்சைக்குப் பெரிதும் உதவுகிறது. முஷ்டிக வாமன தந்திரம், அஷ்டகள வாமன தந்திரம், சகடக ருத்ர வாமன தந்திரம், நீலாம்பரிப் பிரயோக வாமன தந்திரம் போன்ற தெய்வீக சக்திகள் நிறைந்த பலவித வாமன சக்திகளும் உண்டு. இவற்றை நன்முறையில் பயின்று சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் வாழ்ந்து தம்மை இறைப்பணிக்கு அர்ப்பணிக்க சிதம்பரம் ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடு பெரிதும் உதவுகிறது.
பில்லி, சூன்யம் பெரும் பகை அகல!  
பில்லி, சூன்யம் போன்றவற்றால் அவதியுறுவோர் ஏராளம்! ஏராளம்! பலவிதமான தீவினை மந்திரங்களுடன் பதிக்கப்பட்ட பில்லி, சூன்யத் தகடுகளால் உடல் வாடி, உள்ளம் வெந்து மாய்வோர் பலருண்டு. எனவே பில்லி, சூன்யத் தோஷங்களால் அவதியுறுவோர், சிதம்பரம் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியை ஞாயிறு, இராகு கால நேரத்தில் வழிபட்டிட பில்லி, சூன்ய சக்திகள் பஸ்மமாகி, அவற்றின் தீய விளைவுகளினின்றும் விடுபட்டு நல்வாழ்வு பெறுவர். பல அலுவலக, இல்ல அமைப்புகளும், நிலங்களும், கிணறு, படுக்கை அறை, சமையல் அறை போன்றவையும் குறித்த திக்குகளில் இருக்குமாறு அமைதல் வேண்டும். இது அவரவர் நட்சத்திர, ராசி நிலைக்கேற்பவும் மாறும். இவை சரிவர அமையாவிடில், தம்பதியரிடையே, குழந்தைகளிடையே ஏதேனும் பிரச்னைகள் இருந்தவாறிருக்கும். பல குறைகளுடனும் குழந்தைகள் பிறந்திடும்.
வாஸ்து சக்தி வர்ஷித்திட
வாஸ்து சாஸ்திரத்திற்கும், ஸ்ரீசரபேஸ்வர வழிபாட்டுக்கும் என்ன தொடர்போ? ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தை தணித்து அரவணைத்து அவரை ஆட்கொண்ட போது, சரபேஸ்வரர் கொண்டிருந்த திக்கு சயன நிலை விசேஷமானதாகும். சரபேஸ்வர உருவம், சரபப் பறவையின் கோண பீடங்கள், அவர்தம் நேத்திர திக்குகள், அமர்ந்த கோலங்கள் நின்ற நிலையாவும் பலவித திக்குகளை நோக்கியவாறு இருந்தன அன்றோ! இவையெல்லாம் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்த ஸ்ரீசரபேஸ்வர சிலாரூப நிலையாகும். இதனால்தான் வாஸ்து சாஸ்திரப்படி அமையாத பல நிலங்களில்/ வீடுகளில் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாக அமைவதே ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியின் நேத்திர தரிசனப் பலன்களாம். மஹான்களின் பார்வையே பலவித தோஷங்களை நீக்கும் என்பது போல, சிதம்பரம் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியின் அபூர்வமான நேத்திர நோக்குகள் யாவும் பலவிதமான நிலதோஷங்களை நீக்கவல்லதாகும்.
தீவினை மந்திரம் தீய்ந்திட
பல இடங்களிலும் தோஷ நிவர்த்திக்கு விபூதியை மந்திரித்துப் பெற்றுக் கொள்ளும் போது அது முறைப்படி நன்முறையில் மந்திரிக்கப்படாவிடில் இதன் விளைவுகளாக எத்தனையோ பின்னங்கள் ஏற்படும். அதிலும் மூலிகைகளாலான விபூதி முறையாகத் தயாரிக்கப்படாவிடில், அதில் நிறைய தோஷங்கள் கலந்து விடும். இதற்கும் நிவர்த்தியாக அமைவதே ஸ்ரீசரபேஸ்வர வழிபாடாகும். ஏனெனில் சரபேஸ்வர மூர்த்தியின் வடிவினின்று எழுகின்ற சரப அக்னிக்கு பஸ்மதாரணம் சம்பந்தப்பட்ட தோஷத்தையும் பஸ்மமாக்கும் சக்தி உண்டு. எனவே, பலவிதமான தவறான முறைகளால் மந்திரிக்கப்பட்ட விபூதியை, மாலைகளை, யந்திரங்களைப் பெற்று அவதியுறுவோர் சிதம்பரம் ஸ்ரீசரபேஸ்வர நாதரை ஞாயிறு, ராகுகாலத்தில் வழிபட்டு வந்தால் தீமைகள் நீங்கி நன்னிலை பெறுவர். 
சரப அஞ்சனம் என்ற அஞ்சன மை ஒன்று உண்டு. அஞ்சனம் என்றால் பலவித தோஷங்களையும் நீக்கும் மை என்று பொருள். கண் திருஷ்டியை நீக்குவதற்கான பொன்னாங்கண்ணி, கரிசலாங் கண்ணி போன்ற பலவிதமான மூலிகைத் தைலங்களிலிருந்து எடுக்கப்படுகின்ற கண்மையை இட்டு வர சிறு குழந்தைகள் தோஷ நிவர்த்தி பெறுவார்கள் என்பது நாம் நன்கு அறிந்ததே! அஞ்சனம் எனப்படும் மைக்கு பலவிதமான தோஷங்களையும், சாபங்களையும் நிவர்த்தி செய்யவல்ல தெய்வீக சக்தி உண்டு. அதிலும் சற்குருவின் அருளுரைப்படி நன்முறையில் அஞ்சனத்தைத் தயாரித்து ஸ்ரீசரபேஸ்வரருக்குக் காப்பாக இட்டு அதனை தினந்தோறும் பிரசாதமாக இட்டு வந்தால் எத்தனையோ தோஷங்கட்கு எளிதில் நிவர்த்தி கிட்டும். நல்ல நேரம் கணித்து பொன்னாங்கண்ணி தைலம், கரிசலாங்கண்ணி தைலம், செம்பருத்தி தைலம் ஆகிய மூன்றையும் கலந்து இதனின்று மை தயாரித்து ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திக்கு சிறிது காப்பாக இட்டு இதனைப் பிரசாதமாகப் பெற்று தினந்தோறும் இதனை குழந்தைகட்கும் இட்டு, மற்றோரும் இட்டு வந்தால் அவர்களுக்கு ஏற்படும் பலவித திருஷ்டி தோஷங்கள் தீருவதோடு சிறுவர், சிறுமியர்க்கும் பொறாமை, குரோத தோஷங்களால் ஏற்படுகின்ற மந்த புத்தியும் அகன்று நன்முறையில் படித்து முன்னேறுவர்,
பில்லி, சூன்ய சக்திகளையும் விரட்டியடிக்கும் அஞ்சனமிது! இந்த சரபச் சந்திர மையை தினந்தோறும் கன்னிப் பெண்கள் நெற்றியில் இட்டு வந்தால் எத்தகைய திருமண தோஷங்கட்கும் நிவர்த்தியாக அமைவதோடு ஸ்ரீசரபேஸ்வரரின் பெருங்கருணையால் எத்தகைய திருமணத் தடங்கல்கட்கும் தீர்வு ஏற்பட்டு, நன்முறையில் திருமணம் கைகூடும்.
சரபச் சந்திர அஞ்சனம் தயாரிக்கும் முறை
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, செம்பருத்தித் தைலம் மூன்றையும் சமமாக் கலந்து அகலில் இட்டு நல்ல சுத்தமான பருத்தி அல்லது பஞ்சால் திரிவைத்து தீபம் ஏற்றிடுக! சுத்தமான வெள்ளி அல்லது வெண்கலத் தட்டிலோ, தேங்காய் ஓட்டிலோ அரைத்த சந்தனம் தடவி அதில் தைல மூலிகை தீபப் புகையானது படியுமாறு  அத்தட்டை/ தேங்காய் ஓட்டை தீபத்தின் மேல் வைத்திட வேண்டும். இக்கரிப் புகையை அவ்வப்போது கொஞ்சம், கொஞ்சமாய்த் திரட்டி சரபச் சந்திர அஞ்சனத்தைத் தயாரிக்க வேண்டும். ஆலயத்தாரின் தக்க அனுமதியுடனோ அல்லது ஆலயத்திலேயே பலவிதமான பூஜைகளுடன் இத்தகைய அஞ்சனம் செய்து ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திக்கு மைக்காப்பிட்டு, அதனைப் பிரசாதமாக குடும்பத்தினர் தினந்தோறும் இட்டு வந்தால் வியாபாரம் மற்றும் அலுவலகம் போன்ற இடங்களிலுள்ள தோஷங்கள் அகல இந்த அஞ்சனப் பிரசாதம் பெரிதும் உதவும்.
ஆக்கம் தேவை, அழித்தல் அல்ல
ஆக்கப் பிறந்தவனே, ஆக்குந் தொழில் செய்யப் படைக்கப்பட்டவனே மனிதன். குண்டு, துப்பாக்கி, கத்தி, பகைமை, வஞ்சம் கொண்டு அழிப்பதற்கு அல்ல! துன்பங்கள் பூர்வ ஜென்ம வினைகளின் விளைவுகளே! லாட்டரிப் பரிசில் சோகங்களே குடியிருக்கும்! திருமணத்தின் ஆன்மீக இலக்கணங்களுள் ஒன்றே நல்லொழுக்கத்துடன், தெய்வீக நெறியுட கூடிய நற்சந்ததிகளை உருவாக்குவதாம்.
அபார்ஷன் எனப்படும் கர்பம் கலைத்தல் தற்போது மிகவும் சகஜமாகி விட்டது. பிரம்ம தெய்வீக சிருஷ்டியாக விளங்குகின்ற எந்தப் பிறவியின் ஆயுளிலும் குறுக்கிடுவதற்கு எந்தப் மனிதனுக்கும் உரிமை கிடையாது. இதற்காகத் தான் அக்காலத்தில் தியானம், ஜபம், யோகம், மூலமாக மனக் கட்டுப்பாட்டினைக் கொண்டு வருகின்ற அற்புதமான அறவழிமுறைகளை நம் மூதாதையர்கள் கொண்டிருந்தனர். கர்ப்பத்தைக் கலைப்பதால் அந்த சிசுவானது பழியுடன் காத்துக் கொண்டிருக்கும் அல்லது அதே தம்பதிகளுக்கு அந்த சிசு பிறக்கும் வரை அவர்களுக்கு எண்ணற்ற பிறவிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். எனவே, கர்ப்பத்தைக் கலைத்தல் என்பதும் பலவிதமான பாவங்களுக்குக் காரணமாகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு பிராயச்சித்தமே இல்லை!
இவையெல்லாம் நம்முடைய மூதாதையர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த அறவழிமுறைகளுக்கு முற்றிலும் முரண்பாடாக இருப்பதால் தான் கலியுகத்தில் பலவிதமான துன்பங்களை மனித சமுதாயம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. இந்த அவலத்தால் தான் சோக பிம்பமாய் மன அமைதியைத் தேடி மனிதன் அலைகின்ற நிலையைத்தான் உலகெங்கும் காண்கின்றோம். இவ்வளவு நல்லவர்களாக இருக்கின்றார்களே, இவர்களுக்கு இக்குறை ஏன் என்று நல்லோரைப் பற்றிப் பலருக்கும் கேட்கத் தோன்றும். எவ்வளவுதான் நல்லவர்களாக வாழ்ந்தாலும் அவர்களுக்கென்றே பூர்வ ஜென்ம தீவினைகள் சற்றேனும் தொக்கி இருக்குமல்லவா? அவைதாம் இப்பிறவியில் கொடிய நோய்களாகவும், வேறு பல குறைகளாகவும் வந்து சேர்கின்றன என்பதை உணர்ந்தால்தான் அவரவருடைய கர்ம வினைகளைத்தான் இன்ப, துன்பங்களாக அனுபவித்துக் கொண்டுள்ளோம். தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை என்ற தெய்வீக உண்மை புலப்படும்.
இத்தகைய தெய்வீக உணர்வுகள் தாம் ஒவ்வொருவரும் பெற வேண்டிய ஆன்மீகத்தின் முதல் பாடமாகும். எனவே உங்களுடைய பணிகளில் எவ்வித தீய கர்மங்களும், பாவ வினைகளும் நேரா வண்ணம், ஜாக்கிரதையாகக் கவனமுடன் செய்தல் வேண்டும். எத்தகைய வியாபாரமானாலும் சரி அதில் அதர்மங்களுக்கு, தீய வினைகளுக்கு இடம் தரக்கூடாது. அலுவலகப் பணிகளிலும், நேர்மையாகவும், இறைபக்தியுடன் இருக்க வேண்டும். தன்னால் தன்னுடைய சரீரத்தால் பிறருக்கு எவ்வகையில் உதவிட முடியும் என்ற உத்தம இறை எண்ணமே எதிலும் நிரம்பியிருக்க வேண்டுமே தவிர, எவ்வகையிலாவது பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் எண்ணத்தை கைவிட வேண்டும். தீய வழியில் வரும் பணம் லட்சுமி கடாட்சமாகாது. பேராசைப் பெரும் பேய்தான் அதில் குடிகொள்ளும்.
லாட்டரி சீட்டு ஆன்மீகத்திற்கு ஆகாது!
லாட்டரிச் சீட்டு என்பது தெய்வீகத்திற்கு ஒவ்வாதது என்பதை நாம் பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் எடுத்துரைத்து வந்துள்ளோம். ஆயிரக்கணக்கான மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களும், ஏழ்மையில் உள்ளோரும், எத்தனையோ ஏக்கங்களுடன் தான்., லாட்டரிச் சீட்டுகளை வாங்குகின்றனர். அதில் பலவித பரிசுகளைப் பெறும் போது, அப்பரிசுகளில் குடியிருப்பது என்ன தெரியுமா? வெறும் பணமா இல்லை! இல்லை!! அதில் பல லட்சக்கணக்கான மக்களின் ஏக்கங்களும், வறுமை படிவங்களும், தரித்திரக் கோடுகளும் சேர்ந்து தான் வரும். அதைப் பயன்படுத்தினால் அதிலும் சோகம் தான் வரும். எனவே, எத்தகைய லாட்டரிப் பரிசுப் பணம் உங்களுக்கு சரி, அது உங்களுக்கு எந்த நல்லுணர்வையும் நிச்சயமாகப் பெற்றுத் தராது. ஒருபோதும் லாட்டரிச் சீட்டை நாடாதீர்கள், மேலும் லாட்டரிச் சீட்டு விற்பனையில் ஈடுபடுவோரும் அவற்றில் பணிபுரிவோரும் பலவித கர்மவினைகளைத் தேடி தமக்குத் தாமே பல தீய கர்மவினையைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பே உண்டாதலின் இத்துறையினை விட்டு வெளிவந்து விட வேண்டும்.
ஆதலின் லாட்டரிச் சீட்டுத் தொழிலில் ஈடுபடுவதும் கூட ஆன்மீகத்திற்கு ஒவ்வாததே! ஏதோ ஐம்பதாயிரம் ரூபாய் லாட்டரியில் கிடைத்தால் அதில் 30 ஆயிரம் ரூபாயின் புண்ய சக்தி பலன் முழுவதும் அத்தனை ஆயிரம் லாட்டரிச் சீட்டுகள் வாங்கியவர் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்காகப் போகுமே யொழிய, பரிசாகப் பெற்றமையால் அப்பணத்தின் ஆன்மீக உரிமை, தெய்வீக ரீதியாக உங்களுக்கு வந்து சேராது, மேலும் மீதமுள்ள இருபதாயிரம் ரூபாயிலும், கோடிக்கணக்கான மக்களின் வறுமைத் துளிகளை, ஏக்கக் கோலங்களை, சோகப் பந்தல்களைதான் தாங்கி வருகிறது என்பதை உணருங்கள்.
அது உங்களிடமிருந்தால் அதே சோகமயமான ஏக்கங்கள்தான் படியும் என்பதை நன்கு உணர்ந்திடுக! எனவே, வாழ்ந்தால் பயனுற வாழ வேண்டும். இதற்கு ஒரே வழி தக்க சற்குருவை நாடி நல்ல ஆன்மீக வழியில் செல்ல வேண்டும். ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவருக்கும் உரித்தான இறைத் திருப்பணிகள் உண்டு. ஏழையாக இருந்தால் ஆலயத்திற்கு தினமும் சென்று ஆங்காங்கு கிடக்கின்ற குப்பைகளைப் பொறுக்கி சுத்தம் செய்தால் அதுவே அந்த ஏழைக்குரிய பெருந்திருப்பணியாக அமைகிறது. பணக்காரராக இருந்தால், கோயில், கிணறு, குளங்களைத் தூர்வாருதல், நல்ல கறவைப் பசுவை கோயில்களுக்கும், ஏழைகளுக்கும், தானமாக அளித்துக் கறவை நின்ற பசுவைப் பராமரிக்க கோசாலை அமைத்தல், நந்தவனம், கோசாலையை பராமரிக்கும் செலவை ஏற்றுக் கொள்தல், கோயில்களை நீர்விட்டுக் கழுவி சுத்தம் செய்ய உதவுதல் போன்ற எத்தனையோ நற்காரியங்களை எடுத்துச் செய்யலாம். இவையெல்லாங் கர்மங்களைக் களையும் பெரும் தெய்வீகப் பரிசுகளாம்.
நம் வாழ்வின் ஒவ்வொரு சாதாரண காரியமும் தன்னுள் எத்தனையோ கர்மவிளைவுகளைக் கொண்டுள்ளன. நல்ல வினைகள் புரிந்தால், நல்ல விளைவுகளும , தீயவினைகளை செய்தால் தீய விளைவுகளும் உண்டாகும். நற்புண்ய சக்தியின் தொகுப்பே செல்வமாம். ஆனால் அதனையும் நன்முறையில் செலவழிக்க வேண்டும். இவ்வாறாக அவரவர் கர்மவினைகளுக்கேற்பவே உடல், அழகு, ஆரோக்ய நிலை, அலுவலகப் பணி, வருமானம், வாழ்க்கை நிலைகள், சந்ததி, சொத்து, வீடு, நிலபுலன்கள் போன்றவை அமைகின்றன. நம்முடைய பல கர்ம வினைகளின் விளைவுகளே பலவித நோய்களாகவும், மன சங்கடங்களாகவும், குறைகளாகவும் வந்து சேர்கின்றன என்பதை நன்கு உணர்க!

சாண்ட் ப்ளாஸ்டிங் வேண்டாமே

கோயிலின் புனிதத்தைப் பாழாக்கும் SAND BLASTING
தற்போது ஆலய கும்பாபிஷேகங்களுக்காக ஆலயத் தூண்களையும், சுவற்றையும் சுத்தம் செய்வதற்காக Sand Blasting  என்ற முறையில் கல், மண் சிறிய இரும்பு உருண்டுகளை ஒரு மிஷினில் வைத்து வேகமாகப் பாய்ச்சித் தூண்களில் உள்ள சித்புருஷர்களின், மகரிஷிகளின், தெய்வத் திருவுருவங்களையும் சிதைத்து வருகின்றார்கள். மேலெழுந்தவாரியாக ஒரு சிறிய Layer மட்டும் தான் சுத்தம் செய்யப்படுகின்றது என்று சமாதானமாகச் சொல்லப்பட்டாலும், சித்புருஷர்களும், மகரிஷிகளும் கோடானுகோடி யுகங்கள் தவமிருந்து ஜீவசமாதி பூண்டுள்ள ஆலயத் தூண்களை இவ்வகையிலா பாழ்படுத்துவது?
இது ஆலயத்தின் புனிதத்திற்கு மாசு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் சொல்லொணா சாபங்களையும், பாவங்களையுமே சம்பந்தப்பட்டோருக்குப் பெற்று தரும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எந்தத் தூண்களில், சுவர்களில் கோடானு கோடி  தேவதா மூர்த்திகளும், சித்புருஷர்களும், மகரிஷிகளும், யோகியர்களும், தெய்வீக அருட் ஜோதியாக, அருட் ஜீவநதியாக, என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாக விளங்கி நிறைந்து உறைகின்றார்களோ, அவ்விடங்களில் எல்லாம் கல், மண், குண்டுகளைப் பாய்ச்சி அவர்களுடைய திருமுகங்களையெல்லாம் பின்னப்படுத்துதல் என்றால் உள்ளத்திற்கு எவ்வளவு வேதனையாக உள்ளது? சமுதாயத்திற்காக நன்மை பயக்கின்ற இறைப் பாசறையாக விளங்குகின்ற ஆலயங்களில் இத்தகைய சீர்கேடுகள் நடப்பதால் தான் பூகம்பம், சூறாவளி, விபத்துகள், பஞ்சம், போர் அபாயம் போன்ற பல இயற்கை கேடுகள் ஏற்படுகின்றன.
Sand Blastingல் தூண்கள் நன்கு தூய்மையாக ஆவதைப் போல், வெளியில் தோன்றினாலும், உண்மையில் நடப்பது என்ன? சற்று கூர்ந்து கவனித்தீர்களேயானால், அனைத்து தெய்வீக பிம்பங்களும் மூக்கு, முழிகளெல்லாம் சிதைந்து காணப்படும். இதுதானா தெய்வீக பிம்பத்தைப் பராமரிக்கும் முறை? எந்த இறையருளால் நாம் ஒவ்வொரு வினாடியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ, நம் இதயத்தில் குடிகொண்டுள்ள அந்த தெய்வத்தை இப்படியா வன்முறையில் சிதைப்பது? நம் குழந்தைகளை இவ்வாறு செய்வோமா? நாம் பேணி வளர்க்கின்ற விலங்குகளுக்காவது இவ்வாறு செய்வோமா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
மேலும் இந்த Sand Blasting  தொழிலில் உள்ளோரும், தாங்கள் செய்து கொண்டு இருப்பது தெய்வீகத்திற்கு முரண்பாடானது, ஆன்மீகத்திற்குப் புறம்பானது, சாபங்களையும், பாவங்களையும் அள்ளித் தருகின்ற அதர்மமான செயல் என்பதை உணர்ந்து இனியேனும் இத்தகைய தவறுகளை மீண்டும் தங்களுடைய வாழ்க்கையில் செய்தலாகாது என்று உணர்ந்து தெளிந்திட வேண்டுகிறோம். எந்த தெய்வ மூர்த்திகள் நம்மை வாழ வைக்கின்றார்களோ, எந்த யோகியர்கள், சித்புருஷர்கள், மஹரிஷிகள், பித்ரு தேவ மூர்த்திகள் ஆசிகளால் நாம் வாழ்கின்றோமோ அவர்கள் கோடானு கோடியாய் வாழ்கின்ற ஆலயத்தூண்களையும், சுவற்றையும் இப்படித்தானா சிதைப்பது? சற்றே இறைப் பகுத்தறிவுடன் சிந்தித்து, செயல்பட்டுத் திருத்திக் கொள்ளுங்கள். மூல மூர்த்திகளையும், சிலாரூபங்களையும், ஆலயத் தூண்களையும், சுவர்களையும், எவ்வித பங்கமுமின்றி சுத்திகரிப்பதற்கான பலவகையான கொள்காப்பு, எள்காப்பு, தானியக் காப்பு, மாவுகாப்பு என்ற சித்தர்வழி காப்பு முறைகள் பல உண்டு.
இதனைத் தக்க பெரியோர்களை, சற்குருவை நாடித் தெரிந்து கடைபிடித்தல் வேண்டும். எனவே இத்தகைய பழங்கால ஆன்மீக, தெய்வீக வழிமுறைகளைத்தான் கோயில் திருப்பணிகளில் கடைபிடிக்க வேண்டுமே தவிர, விஞ்ஞானமயம் என்ற பெயரில் தெய்வீகத்திற்கு பங்கம் விளைவிக்கக் கூடாது. விஞ்ஞானம் என்பது சமுதாயத்திற்கு நன்முறையில் பயன்படும்படி அமைந்து விட வேண்டுமே தவிர சமுதாய நலன்களுக்கு அருட்பெரும் இறைப் பெட்டகமாக விளங்குகின்ற புனிதமான ஆலயங்களுக்கு எவ்வித ஊறுகளையும் விளைவித்தல் கூடாது. எந்த விஞ்ஞானத்தை மெய்ஞானம் படைத்ததோ அந்த விஞ்ஞானத்தைக் கொண்டு மெய்ஞானத்தையே பதம் பார்த்திடலாமா?
எனவே தயவு செய்து பக்தகோடிகளும், அன்பர்களும், இறையடியார்களும், ஒன்று கூடி இப்படிப்பட்ட தெய்வீகத்திற்கு ஒவ்வாத, அதர்மமான Sand Blasting முறைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்குமாறு கரம் தூக்கி, சிரம் தாழ்த்திப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
தஞ்சையில் பெருநந்திக்கு ஆஸ்ரமத் திருப்பணி  :
சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் ஸ்ரீபிரகதீஸ்வர ஆலய பெரிய நந்தியின் திருவுருவத்தை சுத்திகரிக்கும் பணி நம்முடைய ஆஸ்ரமத்திற்கு அளிக்கப்பட்ட போது அதைப் பெரும் பாக்கியமாகக் கருதி, ஆஸ்ரமத்தின் இறைப்பணித் தொண்டாக நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் சீரிய குரு அருள்வழி முறைப்படி சித்தர்கள் அருளியபடி 72 வகையான மூலிகைகள், தானிய, மாவு காப்புகள் இட்டு மிகவும் மென்மையான தேங்காய் நார் கொண்டு தெய்வ சக்திக்கு, தெய்வ மூர்த்திக்கு எவ்வித பங்கமும் இல்லாத முறையில் திருமுகத்தை, திருவதனத்தை சுத்திகரிக்கும் இறைப்பணி நடந்து நான்கு நாள் காப்புகளுக்குப் பின், இறுதி நாளில் மிளகுக் காப்பிற்கு பின் நல்ல மழை பெய்து வருண பகவானே ஆசீர்வதித்த காட்சி பலருக்கும் நினைவு இருக்கும்.
இறைத் திருப்பணியில் ஸ்ரீநந்தி எம்பெருமானின் திருவதனத்தை சுத்திகரிப்பதற்காக எந்தவிதமான கூரிய கருவிகளோ, மரக்கட்டைகளோ எதுவுமே பயன்படுத்தப்படவில்லை. மாறாக எவ்வாறு ஒரு குழந்தையின் திருமேனியைச் சீராட்டி நீராட்டுவோமோ அதே போல் தஞ்சை ஸ்ரீநந்தியெம்பெருமானைச் சீராட்டி மென்மையான பெரிய நந்தியெம்பெருமானின்  திருவதனத்தை சுத்திகரிக்கின்ற அருட்பணியானது வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியமாக ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் குருவருளாலும், நம்முடைய குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராமன் அவர்களின் திருஅருட்கடாட்சத்தாலும் நம் ஆஸ்ரமத்திற்கு இப்பெரும் பேறாகக் கிட்டியது. இத்திருப்பணியின் நிறைவில் ஆங்கே வந்த ஒரு பெரியவர், “ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீநந்தி மூர்த்தி எந்த பச்சை நிறத்தில் இருந்தாரோ, அதே இயற்கை நிறத்தை நான் இங்கு இப்போது காண்கின்றேன்”, என்று கூறியது அருள் நந்தி சித்தர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றதாயிற்று.

ஸ்ரீகாயத்ரீ அர்க்யம்

ஸ்ரீகாயத்ரீ அர்க்யம்
ஸ்ரீகாயத்ரீ அர்க்யம் பற்றிய விளக்கங்களைப் பெற சுயமுகவரி கூடிய தபால் தலையுடனான உறையை அனுப்புமாறு சில இதழ்களுக்கு முன் கேட்டிருந்தோம். மிகக் குறைந்த அளவில்தான் அன்பர்கள் முன் வந்துள்ளனர் என்பது சற்று வேதனைக்குரியதுதான். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் அளப்பரிய சக்தியை, மஹிமையை ஏழை, எளியோர், செல்வந்தரெனவோ, ஜாதி, மத, இன, குலமோ பாராது, ஆண், பெண் பேதமின்றி யாவரும் உணர்தல் வேண்டும் என்பதற்காகத்தான் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலமாக நம் குருமங்கள் கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அரும்பாடுபட்டு வருகின்றார்கள்.
குறைந்த அளவு அடியார்களே இவ்விளக்கங்களை அறிய விருப்பந் தெரிவித்துள்ளனரெனினும் மனந்தளராது இந்த மகத்தான ஸ்ரீகாயத்ரீ யக்ஞத்தில், அனைவரும் ஸ்ரீகாயத்ரீ மந்திர விளக்கம் பெற்று ஸ்ரீகாயத்ரீ அர்க்யத்தைத் திருஅண்ணாமலையில் ஸ்ரீகாயத்ரீ தரிசனப் பகுதியில், அளித்திட வைக்கின்ற இறைப் பெரு வழிபாட்டினை உணர்விக்கும் ஞானப் பணியில் மேலும், மேலும் தளராத உள்ளத்துடன் எம்மை அர்ப்பணித்திட எல்லாம்வல்ல ஸ்ரீஅருணாசலப் பெருமானின் திருவருளை வேண்டுகின்றோம்.

ஸ்ரீஉண்ணாமுலயம்மன் மண்டபம்
திருஅண்ணாமலை

ஸ்ரீகாயத்ரீஅர்க்யம் என்பது ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதியவாறு, இரு குதிங்கால்களையும் உயர்த்திய நிலையில், இரண்டு கரங்களிலும் நீரை ஏந்தி, மார்புக்கு முன் உயர்த்தி, சற்றே சாய்த்து ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தி நிறைந்த நீரை, தாரையாக வார்த்தலாகும். இது காலை, மதிய, மாலை சந்தியா வந்தன வழிபாடுகளின் ஓர் அங்கமாகும். இந்த வழிபாட்டுடன் இதனைச் சேர்த்துச் செய்தலே உத்தமமானதாகும். ஆனால் எத்தனை பேர் இதனை முறையாகச் செய்கின்றார்கள்? எவ்வித வேறுபாடுமின்றி யாவரும் பூணூலை அணிந்திடலாம். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதிடலாம் என்ற வேத நிரூபண வாக்கியத்தை நிலைநிறுத்தி நாம் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் வலியுறுத்தி வந்துள்ளோம். பூணூல் அணிந்து ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்யதாரை பூஜையைச் செய்தலே விசேஷமானது.
திருஅண்ணாமலை கிரிவலம் வருகின்ற போது அடிஅண்ணாமலைப் பகுதிக்கு முன்னால், ஸ்ரீஉண்ணாமுலை அம்மன் சந்நிதியைக் கண்டு அம்பிகையை தரிசிக்கின்றீர்கள் அல்லவா! இங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்து வந்து வந்து திருஅண்ணாமலையை தரிசித்திடில் மூன்று பகுதிகளாக மலைக் காட்சியை தரிசித்திடலாம். ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீசாவித்ரீ, ஸ்ரீசரஸ்வதி என்ற மூன்று சக்தி அம்சங்களின் ஸ்ரீகாயத்ரீ சமஷ்டி தரிசனமாக முப்புரி மலைதரிசனம் தென்படும். எனவேதான் முப்புரி நூலாம் பூணூலை அணிந்து இங்கு மேற்கண்ட குதிங்கால்களை உயர்த்திய “நிரஞ்சன யோக” முறையில் ஸ்ரீகாயத்ரீ அர்க்யத்தை மும்முறை அளித்திடல் வேண்டும். பிறகு நீர்த்தாரை சிந்திய இடத்திலிருந்து வலது கை மோதிர விரல் நுனியால் மண்ணைத் தொட்டு நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். சந்தியாவந்தன வழிபாடுகளை அறிந்தோர், காலந்தவறாது குறித்த வேளைகளில் இங்கு சந்தியா வந்தன வழிபாடுகளுடன் ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்ய பூஜையை உண்மையான பக்தியுடன் செய்தால் பலன்கள் ஆயிரமாயிரம் மடங்காய்ப் பெருகும். இந்த ஸ்ரீகாயத்ரீ அர்க்யத் தாரை மிகவும் விசேஷமான சக்திகளைக் கொண்டது. கங்கை, காவிரி, போன்ற புண்ய நதி தீர்த்தங்களைச் சுமந்து சென்று திருஅண்ணாமலை ஸ்ரீகாயத்ரீ தரிசனப் பகுதியில் இதனைச் செய்திடில் விசேஷமான பலன்களைப் பெற்றிடலாம்.
எங்கும், எதிலும் தெய்வீகத்தைக் காண்போமா?
எங்கும், எதிலும் நிறைந்திருக்கும் தெய்வீகத்தைக் காண முடியுமா? ஏன் முடியாது? “இது மஹான்களின் நிலையாயிற்றே, ஆசாபாசங்களில் மிதக்கும் சாதாரண மனிதர்களுக்கு இது கை கூடாதே”, என்று எண்ணாதீர்கள்! ஒரு அறை முழுதும் ஊதுபத்தியின் நறுமணம் நிரவிட வேண்டுமென்றால் சும்மா உட்கார்ந்திருந்தால் வந்து விடுமா என்ன? ஒரு நறுமண ஊதுபத்தியை ஏற்றி வைத்தால் தானே அது நனவாகும். எனவே எங்கும் எதிலும் தெய்வீகத்தைக் கண்டிட உங்களுடைய ஒவ்வொரு காரியத்திலும் தெய்வீகச் சிந்தனையை, Divine appendages, divine applets-ஐ தெய்வீகக் கதிர்களை ஊன்றிடுங்கள்! உதாரணமாக, காலை, மாலை மட்டுமின்றி உங்கள் வீட்டில் எப்போதும் ஊதுபத்தி மணம் நிறையுமாறு செய்திடுங்கள்! ஆனால் ஊதுபத்தி ஏற்றும் வழக்கம் நின்று போய்விட்டமையால் “ஊதுபத்தி வாசனையா (Allergy) அலர்ஜி ஆயிற்றே, மூச்சு இழுப்பு (Wheezing) வந்து விடுமே” என்று இன்று பல வீடுகளில் சொல்லுமளவிற்கு தெய்வீகத்தையே ஒதுக்குகின்ற, வெறுக்கின்ற, விரட்டுகின்ற மனப்பான்மை வந்துவிட்டது.
ஸ்ரீலட்சுமி வாசம் செய்கின்ற பசுஞ்சாணத்தால் வீட்டு வாயிலை தினந்தோறும் மெழுகுகின்ற நற்பழக்கம் போய்விட்டது நவீனமய Flat System திருமகள் வாசத்தையே விரட்டி விட்டது! என்னே கலியுகத்தின் அலங்கோலம்! இவ்வாறாக நல்ல தெய்வீகச் சூழ்நிலைகளையே இல்லத்தில் ஒதுக்கி விட்டால் எப்படி ஐயா, துன்பங்கள் நீங்கும்? பிரச்னைகளும், எதிர்மறை வினைசக்திகளும் (Negative Forces) வந்து தங்கிடுவதற்கான வசதி நிறைந்த ஆனால் மாசு படிந்த இல்லறச் சூழ்நிலைகளைத் தானே நீங்கள் வளர்த்திருக்கின்றீர்கள். சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
ஸ்ரீபிரம்ம மூர்த்தி வழிபாடு
பிறந்த நாளை ஹோட்டலிலும், பீச்சிலுமாக வீணாக நேரத்தையும், பணத்தையும் செலவழித்துக் கொண்டாடுவதை விட நம்மைப் படைத்த ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு நன்றி செலுத்தும் விழாவாகக் கொண்டாடி மகிழுங்கள்! உங்களுடைய பிறந்த நாளன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து நம்மைப் படைத்த ஸ்ரீபிரம்ம மூர்த்தியே அருணாசலப் பெருமானுக்கு எழுப்பியுள்ள அடி அண்ணாமலை சிவாலயத்தை அடிப்பிரதட்சிணம் செய்து வலம் வந்து கொடி வகைக் காய்கறிகளைக் கொண்ட உணவை (அவரை, பாகல், பறங்கி, வெள்ளரி, etc…) அன்னதானமாக இட்டு வாருங்கள், தாயின் சிசுப்பைக் கொடிதானே நமக்கு உணவையும், ஜீவ சக்தியையும் தந்து கர்பப்பையுள் உறைந்த வாழ்விற்கு ஆதாரமாக அமைந்தது, மேலும் ஸ்ரீபிரம்ம மூர்த்தியே, ஸ்ரீமன்நாராயணனின் நாபியில் உதித்தவராதலின் ஸ்ரீபிரம்ம மூர்த்திக்குக் கொடிவகைக் காய்கறிகளை உணவாகப் படைப்பது மிக்க அருட்சக்தியைப் பெற்றுத் தருவதாகும்.
தன்னைத்தானே ஆத்ம விசாரஞ் செய்து கொண்டு நன்னிலைப் படுத்திக் கொள்ளவும். தவறான பழக்க வழக்கங்களிலிருந்து மீளவும் ஸ்ரீபிரம்ம வழிபாடு உதவுகிறது. பொதுவாக மூலஸ்தான கோமுகத்தின் மேற்புறத்தில் (அபிஷேக நீர் வரும் வழி) ஸ்ரீபிரம்ம மூர்த்தி வீற்றிருப்பார் அல்லவா! கோமுகம் “யோனி யோக சக்தி” கொண்டது. பெரும்பாலான ஜீவன்கள் யோனியிற் பிறப்பெடுத்து வருவதால் பிறந்த நாளன்று மட்டுமல்லாது மாதந்தோறும் பிறந்த நட்சத்திரத்தன்று ஆலய அனுமதியுடன் கோமுகத்தை சுத்திகரித்தலுடன் ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு எண்ணெய், தைலம், மஞ்சள், சந்தனம் கொண்டு காப்பிட்டு கொடிவகை காய்கறிகளை அன்னதானமாக அளித்து வாருங்கள். இதுவே பிறந்த நாளைக் கொண்டாடும் அற்புத வழிமுறையாகும்.

அமுத தாரைகள்

1. இறைவனை வசை பாடலாமா?

திருமருகல் சிவத்தலம்

ஏதேனும் துன்பங்கள் நெருங்கி வந்து விட்டால், “அட முருகா! ராமா! இப்படிச் செய்து விட்டாயே, உனக்கே இது அடுக்குமா, எவ்வளவு தடவை கோயிலுக்கெல்லாம் போய் வந்தேன், நேர்த்தி வைத்தேன்” என்று இறைவனையே வசைபாடும் அளவிற்குத்தான் நம் பக்தி வளர்ந்துள்ளது. எவ்வளவோ வசதிகள், குழந்தை குட்டி, வீடு, வாசல், நிலம், நல்ல காது, வாய், உடலைத் தந்த இறைவனை நன்றி மறந்து “அதைத் தரவில்லையே, இதைச் செய்து விட்டாயே, இந்த உயிரைப் பிரித்து விட்டாயே” என்று வசைபாடுதல் மனித இயல்பாகி விட்டது. இவ்வாறு எவ்வளவு முறை செய்திருப்பீர்கள், உங்கள் வாழ்வில்? இதற்கு பிராயச்சித்தம் வேண்டாமா? இதனையும் தவறென உணர்ந்து. “அப்பனே, அறிந்தோ, அறியாமலோ வசை பாடியதற்கு என்னை மன்னித்தருள்!” என்று வேண்டி உருகுவது தானே உண்மையான பக்தி! இதற்குத் தயாராகி விட்டீர்களா! அப்படியானால் நேரே தஞ்சை மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருமருகல் ஸ்ரீஇரத்னகீரிஸ்வரரிடம் தஞ்சம் புகுவீர்! திருமண நாளன்றே பாம்பின் விடத்திற்குத் தன் கணவனைப் பறிகொடுத்த பெண் ஒருத்தி அந்த சோகச் சுழலிலும் இறைவனை வசைபாடாது புகழ்ந்து தனக்கு நல்வழி காட்ட வேண்டிட, திருஞான சம்பந்தப் பெருமான் மூலமாக இறைவனே துன்பமிசையிலும் வசைபாடாது இசை கூட்டிய பெண்ணிற்குக் கணவனின் உயிரை மீட்டுத் தந்த அற்புதத் தலமிது!
2. பெண் குழந்தைகளுக்கு சுபிட்சமான வாழ்வு அமைந்திட
பலருக்கும் தமக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் உண்டு. இரண்டு, மூன்று பெண் குழந்தைகளுடன் வாழ்கின்ற இவர்கள், எவ்வளவுதான் இயற்கை தந்ததாக, தெய்வ வரமாகவே பெண் குழந்தைகள் அமைந்துள்ளதாக உணர்ந்தாலும், உள்ளூர தனக்கு ஆண் குழந்தைகள் இல்லையே என்ற எண்ணம் உறுத்திக் கொண்டுதான் இருக்கும். ஆனால் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் இத்தகைய எண்ணத்தைச் சுமந்து கொண்டிருக்க முடியும்? ஆணோ, பெண்ணோ அனைத்துமே தெய்வத்தின் பரிசே என்று மனம் தெளிதல் வேண்டும். ஆனால் இதனைச் செல்வது எளிது. கடைபிடிப்பது கடினம் தானே. மேலும் பெண் குழந்தைகளை மட்டும் பெற்று விட்டோம், ஆண் குழந்தை இல்லை என்று சொல்வதே தவறு. ஏனென்றால், இரண்டு, மூன்று குழந்தைகளோடு தற்காலத்தில் தாமாகவே நிறுத்திக் கொள்கின்றார்கள். எனவே, அவர்களுக்கு ஆண் குழந்தை இல்லை என்று செயற்கையாகவே எண்ணுவதே தவறானதாகும். ஆனால் தற்காலக் குடும்பச் சூழ்நிலை இவ்வாறு தானே அமைந்திருக்கிறது. எனவே, பெண் குழந்தைகளைப் பெற்று ஆண் மகன் இல்லையே என்று ஏக்கத்துடன் வாழ்கின்றவர்கள் சுவாமிக்கு வலப்புறம் அம்பிகை அமர்ந்துள்ள திருத்தலங்களை அறிவீர்களா? உத்தரகோசமங்கை, வைத்தீஸ்வரன் கோயில், தஞ்சாவூர் அருகே திருச்சோற்றுத்துறை, பாபநாசம் அருகே திருப்பாலை, கும்பகோணம் அருகே கஞ்சனூர், திருவலஞ்சுழி (வீடியோ பார்க்கவும்), திருவிடைமருதூர், etc.

பட்டமங்கலம் சிவத்தலம்

3. இழுப்பு நோய்க்கான நிவாரணம்
பல குழந்தைகளும் அடிக்கடி ஜ்வரத்தால் பாதிக்கப்பட்டு fits எனப்படும் இழுப்பு நோயால் பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இந்த வியாதியைக் கண்டாலே பெறோர்கட்கும் பீதி ஏற்படுகின்றது. “எப்போது ஜ்வரம் வருமோ, உள்ளங்கை, கால் சுடுமோ, கை, கால் இழுத்து பிள்ளை அவஸ்தைப் படுமோ” என பெற்றோர்கள் பெரிதும் பீது கொள்கின்றனர். சிதம்பரம் சீர்காழி அருகே திருமயிலாடியில் உள்ள ஸ்ரீமுருகப் பெருமானுக்கும், ஸ்ரீசீதளா தேவி அம்பிகைக்கும் தாமே அரைத்த சந்தனக் காப்பிட்டு ஏழைகளுக்கு இளநீரும், தேங்காய் சாதமும் தானமாக அளித்து வர fits எனப்படும் இழுப்பு நோய்க்குத் தக்க நிவாரணம் கிட்டும். ஸ்ரீமுருகப் பெருமானே ஸ்ரீசீதளா தேவியை வழிபட்டு தம் ஜ்வரத்தைத் தணித்துக் கொண்ட அற்புதத் தலம்.
4. குல தெய்வம் அறியாதோர்க்கு
பலரும் தங்களுடைய குல தெய்வம் யாதென அறியாது திகைக்கின்றனர். குலதெய்வம் யாதென அறிந்து முடியிறக்குதல், மாவிளக்கு இடுதல் என பல நேர்த்திகளைச் செய்து அவ்வப்போது குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நெடுங்காலம் தவமிருந்து பெற்ற பிள்ளையின்/ தம் குழந்தையின் முதல் முடியை இறக்குவதற்குக் குல தெய்வத்தின் திருத்தலமே உத்தமமானதாம். தம்முடைய குலதெய்வங்களை அறிந்திட தக்க சத்குருவை நாடிடுதல் வேண்டும். சற்குரு கிட்டும் வரை, குலதெய்வந்தனை அறியாதோர் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பெரியோர்களின் ஆசியுடன் தங்கள் குழந்தையின் முதல் முடியை இறக்குதல் மிகவும் விசேஷமானதாகும். ஸ்ரீமுருகனை வளர்க்க கார்த்திகை தேவமூர்த்திகள் (கார்த்திகைப் பெண்டியர்) அருள் பெற்ற தலமிது!
5. காணாமற் போனால் நல்வழி காட்டும் நாதன்
கணவனோ, பிள்ளையோ, சகோதரனோ, எவரேனும் வீட்டை விட்டுப் பிரிந்து விட்டால், எங்கு எப்படி வாழ்கின்றார் என்று அறியாது சோகமாக வாழ்வோரு உண்டு. இவ்வாறு பிரிவுச் சோகம் ஏற்படுவதற்குக் காரணம் தம் கர்மவினைகளே என்று தெளித்து, தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள ஸ்ரீருத்ர கங்கை கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரை வேண்டி கங்கை, காவிரி போன்ற ஒன்பது புண்ணிய நதி தீர்த்தங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்து மாதசிவராத்திரி தோறும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் வேண்டி வந்தால் தக்க நல்வழி காட்டப் பெறுவர். இங்கு மாத சிவராத்திரியில் பால் பாயச நைவேத்யமும், இதனைப் பிரசாதமாக ஏழைகளுக்கு தானமாக அளித்தலும் விசேஷமானதாகும்.. மாதந்தோறும் அமாவாசைக்கு முன் வருகின்ற சதுர்த்தசி திதியே மாத சிவராத்திரி நாளாகும்.
6. பெற்றோரைப் பணி! கணவனை வணங்கு!
தாயும், தந்தையுமே அனைவருக்கும் உற்ற தெய்வமாம், இல்லறப் பெண்மணிக்குக் கணவனே கண் கண்ட தெய்வம், தினந்தோறும் பெற்றோர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்கியோ, தொட்டு நமஸ்கரித்துத்தான் காலைப் பணியைத் தொடங்க வேண்டும். மனைவியும் விடியற்காலையில் எழுந்து கணவனின் பாதங்களைத் தொட்டு வணங்கிடுதல் வேண்டும். இதனால் உண்டாகும் பாத நமஸ்கார அனுகிரக சக்திகளால் பலவிதமான தீவினைகளை வராமலேயே தடுத்து விடலாம். பெற்றோரை விட்டுத் தணித்து வாழ்வோர் மானசீகமாக வேனும் தினந்தோறும் அவர்களை வணங்குகின்ற நல்ல வழிபாட்டை மேற்கொண்டிட வேண்டும். பசுவைத் தொட்டு வணங்குதல், துளசிச் செடி தரிசனம், வேப்பமரம், அரசமர பிரதட்சிணம்/தரிசனம், பிள்ளையாருக்கு 12 தோப்புக் கரணங்கள் – போன்ற சிறுசிறு வழிபாடுகளை முறையாகச் செய்து வந்தாலே எத்தனையோ பெரிய ஆபத்துகளை எளிதில் தடுத்திடலாம். நம் கர்மவினையாக வரும் பெரும் பாதகம் இந்த பாத நமஸ்காரத்தால், சிறிய வினையாக முடிந்து அல்லது நிவர்த்தியாகி நம்மைப் பெரும் நஷ்டத்திலிருந்து காத்து விடும்.

ஸ்ரீநர்த்தன கணபதி
அம்பாள் சன்னதி லால்குடி

7. கோஷ்ட மூர்த்திகள்
கோயில்களில் மூலவரைச் சுற்றி வருகையில் கோஷ்டச் [சுற்றுப்புறச்] சுவரில் பல மூர்த்திகளைக் காண்கின்றீர்கள் அல்லவா. பொதுவாக ஸ்ரீநர்தன கணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்க்கை என்ற வரிசையில் உள்ள மூர்த்திகளுக்கு கோஷ்ட மூர்த்திகள் என்று பெயர். மிகவும் சக்தி வாய்ந்த மூலவரின் அருகாமையில் அமைந்துள்ளவர்களாதலின் இம்மூர்த்திகளுக்கு ஏனைய சக்திகளுடன் “பரிபாலய சக்தி” அபரிமிதமாக இருக்கும். நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வைத் தருகின்ற விசேஷமான அனுகிரக சக்திகள் இவர்களுக்கு உண்டு. உதாரணமாக தினமும் போக்குவரத்து நெரிசலில் ஒழுங்காக, பத்திரமாக அலுவலகம், பள்ளி சென்று திரும்புவது, பள்ளி/கல்லூரி செல்லும் பெண் பிள்ளைகள் பத்திரமாக நன்முறையில் திரும்பி வருதல் என்று தினசரி “Tension” வாழ்க்கையிலிருந்து நன்முறையில் நிவர்த்தியைப் பெற கோஷ்ட மூர்த்திகள் அனுகிரஹம் தேவையே. இதில் ஒவ்வொரு கோஷ்ட மூர்த்தியின் அமைப்பு [நின்ற/அமர்ந்த நிலை] நோக்கும் திக்கு, கரங்கள் போன்றவற்றைப் பொறுத்து பலாபலன்களும் அமைகின்றன., இவ்வகையில் கோஷ்ட மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீநர்தன விநாயகருக்கு [நடனமாடும் கோலம்] நாவல் பழ நைவேத்யம் செய்து பிரகாரத்தை அடிப்பிரதட்சிணம் செய்து வந்தால் ஞாபக மறதியால் மற்றும் பிறரால் ஏமாற்றப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு ஓரளவு நிவர்த்தி கிட்டும். அமிர்தமுண்ட மயக்கத்தில் தேவர்கள் பரம்பொருளையே மறந்த போது ஸ்ரீநர்தன விநாயகர் தரிசனம் கண்டு அவர்தம் பாதாதி கேச தரிசனத்தாலும், அடிப்பிரதட்சிணத்தாலும் ஏற்பட்ட பலன்களாக பாத நரம்புகள் மூலம் உணர்வு பெற்றுத் தம்மை உணர்ந்து தெளிந்தனர்.

கோபுர கலச தரிசனங்கள்
தினந்தோறும் 21 கோபுர கலசங்களையாவது தரிசிப்பது என்று தினசரி நேர்த்தியை வைத்துக் கொள்ளுங்கள். ராஜ கோபுரம், மற்றும் ஆலய உள்விமானங்களின் உச்சியில் உள்ள 7, 9, 13 எண்ணிக்கையிலான கோபுர கலச தரிசனம் மிகவும் விசேஷமானதாகும். சித்புருஷர்களும், மஹரிஷிகளும், தேவாதி தேவ மூர்த்திகளும் கோபுர கலசங்களிலும், ராஜகோபுரங்களிலும் ஜோதிமயமான தம் உடலை நிலைநிறுத்தி மானுட வடிவோ அல்லது ஏதேனும் வடிவு கொண்டு ஆலயத்தை வலம் வந்து பூஜித்து  தரிசித்து ஆனந்தித்து தங்கள் தபோபலன்களையும் இறையருளால் பெற்ற நல்வரங்களையும், உலக ஜீவன்களின் நலன்களுக்காக கோபுர தரிசனத்தில் இட்டுச் செல்கின்றார்கள். இதுவே நல்மழையாக வர்ஷித்து புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது போல அனைத்து ஜீவன்களுக்கும் நிரவி, பரவி, விரவி பூமியெங்கும் அருள்பாலிக்கின்றது. கோபுரங்களில் விசேஷமான கோபுரங்களும் உண்டு. காசியைப் போல் மூலவருக்கு இரண்டு விமானங்களை உடையதே திருச்சி திருநெடுங்களத்தில் உள்ள திருநெடுங்கள நாதர் ஆலயமாகும். 11 கலசங்களுக்கு மேல் உள்ள கோபுரங்களில் ருத்ர தேவதா மூர்த்திகளின் தெய்வ சக்தி நிறைந்திருக்கும். காலையில் 6-6.45 வரையிலும் மாலையிலும் 5.45 – 6.30 வரையிலும் பொதுவாக சந்தியா தேவதைகள் கலசவழிபாடு செய்கின்ற புனித நேரமாதலின் இந்நேரங்களில் கோபுர தரிசனம் செய்வது மிகவும் சிறப்புடையதாகும். சென்னை மயிலாப்பூர், காஞ்சிபுரம், திருஅண்ணாமலை ஆலயங்களில் ஒரே இடத்திலிருந்து 12/21-க்கும் மேற்பட்ட கோபுர கலசங்களையும் நான்கைந்து விமானங்களையும் கோபுரங்களோடு சேர்த்து தரிசிக்கின்ற புனித இடங்களும் உண்டு. இத்தகைய இடங்களில்தான் திரிநேத்ர மூர்த்தி என்னும் மஹரிஷி தவம் செய்து கோபுர தரிசனம் காண்கின்றார். பொதுவாக தினந்தோறும் இந்த ஆலயங்களில் இத்தகைய புனித இடத்திலிருந்து அனைத்து கோபுரங்களையும் தரிசித்து வந்தால் நேத்ர சக்தி பெருகி தீர்க தரிசனம் உண்டாகும். வாக் சக்தி பெருகும். ஜோதிடர்களுக்கு உரித்தான முக்கியமான நித்திய வழிபாடு இது.

ஸ்ரீரங்க கோபுர தரிசனம்

“திருஅண்ணாமலையே சரி, திருவண்ணாமலை அல்ல”
தற்போதைய வழக்கில், “திருஅண்ணாமலை” என்பதற்கு பதிலாக “திருவண்ணாமலை” என்று எழுதி வருகின்றார்கள். இது தவறு, ஆன்மீக ரீதியாக “திருஅண்ணாமலை” என்று எழுதுவதே சரியானதாகும். எனவே அன்பர்கள் திருஅண்ணாமலை என்றே வாக்கிலும், நூலிலும், உரையிலும், சொல்லிலும், போர்டுகளிலும் எதிலும் எங்கும் உரைப்பீர்களாக /எழுதிடுவீர்களாக! தெய்வத் தமிழுக்குத் தண்டமிழ் இலக்கணம் தந்தவர் அகத்திய மாமுனிவர். கும்பகோணம் அருகே இன்னம்பூர் சிவத்தலத்தில் உள்ள எழுத்தறிநாதப் பெருமானே அகத்தியருக்கு இலக்கணஞ் செப்பியவர். அதிலும் அகத்திய முனிவரின் முதல் தமிழ்ப்பாவே ஆதி அருணாசலப் பெருமானாகிய திருஅண்ணாமலையானைப் பற்றிய பைந்தமிழ்ப் பாவாகும். எனவே சித்தர்களின் நாயகராம் ஸ்ரீஅகத்தியரின் வழக்கில் “திருஅண்ணாமலை” என்றே செப்புவோமாக! சாரியை, சந்தி இலக்கனக் கட்டுகளுக்கு அப்பாற்பட்ட பேரிறை நாமம் தெய்வீகப் பேரொலி(ளி)யாக “திருஅண்ணாமலை” இறைநாமம் முழங்கட்டும்! ஒளிரட்டும்!
பண்டிகைகள், விரதங்கள் ஏன் ?
பஞ்சாங்கம் என்பது மிகவும் புனிதமான காலக் கையேடு. நம்முடைய ஆயுளானது எத்தனை ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றதல்லவா! நம்முடைய ஆயுளின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும், விநாடியும், நன்முறையில் செலவழிக்கப்பட்டால் தான் அது முக்திப் பெருநிலைக்கு வழிவகுக்கும். ஆனால் நாம் அவ்வாறாகவா நம் வாழ்நாளை செலவிடுகின்றோம்? பொழுது போக்கிலும், டிவியிலும், அரட்டை அடிப்பதிலும், திரைப்படங்களைப் பார்ப்பதிலும், காணக் கூடாத காட்சிகளைக் காண்பதிலும் தான் எத்தனை வருடங்களை விரயமாகக் கழிக்கின்றோம்? இதனால்தான் ஒவ்வொருவருக்கும் பிறவி பெருகிக் கொண்டே செல்கின்றது. இறைவன் எதற்காக 60/70/80 ஆண்டுகள் என்று பொதுவாக சராசரியான ஆயுளை நிர்ணயித்திருக்கின்றான். இறைவனே நிரந்தரம் என உணர்வதற்கும், தன்னை நல்வழிப்படுத்திக் கொள்வதற்கும், இறைநெறியின்பால் செல்ல தன்னை, இறைநெறியில் பிணைத்துக் கொள்வதற்குமாக, சிறு பருவம் போக கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கிட்டுகின்றன. ஆனால் உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள் ஒவ்வொரு நாளிலும் உண்மையாகவே வாழ்ந்து இருக்கின்றீர்களா? எனவேதான் நாம் அறிந்தோ, அறியாமலோ நம்முடைய வாழ்க்கையில் இறைலட்சியத்தை உணராவிட்டாலும் அல்லது மறந்து விட்டாலும் இதனை நினைவு படுத்துவதற்காகத்தான் ஒவ்வொரு நாளுக்கும் உரித்த விசேஷ அம்சங்களைப் பஞ்சாங்கம் மூலமாக நமக்கு உணர்த்துகின்றார்கள். எனவே பஞ்சாங்கம் ஒரு காலக்கண்ணாடி, ஒவ்வொரு நாளிலும் ஏதேனும் சில தெய்வீகக் குறிப்புகளைப் பஞ்சாங்கத்தில் கண்டிடலாம். எத்தனையோ கோடி சித்புருஷர்களும், யோகியர்களும், மஹரிஷிகளும், பலவிதமான வழிபாடுகளை மேற்கொண்டு தாங்கள் கண்ட தெய்வீகக் காட்சிகளை, அனுபூதிகளை, அனுபவங்களை அந்தந்த திதி, கிழமை, நட்சத்திரத்திற்கு உரித்தானதாக அமைத்துத் தந்து இருக்கின்றார்கள். தினந்தோறும் நாள், கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்தைப் படித்தாலே கால தேவதைகளைத் துதிப்பதாகிறது.
அதனால் தான் மகரிஷிகளின் மகத்தான அனுபூதிகளாகவே பஞ்சாங்கத்தின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய குறிப்புகள் நமக்குப் பறைசாற்றுகின்றன. கொலு, நவராத்திரி, பொங்கல் போன்ற விசேஷமான பண்டிகைகள் எல்லாம் சத்சங்கப் பாங்காகப் பலரும் ஒன்று கூடி சத்சங்க ரீதியாகக் கொண்டாட வேண்டிய முறையில் அளிக்கப்பட்டுள்ளன. சத்சங்கமாகப் பலரும் சேர்ந்து கொண்டாடுகின்ற பூஜைகளுக்குத்தான், சக்தியும், மகத்துவமும் அதிகம், பலாபலன்களும், புண்ணிய சக்தியும் மிகுதி, செய்த தவறுகளுக்குப் பிராயசித்தம் அளித்துப் புனர்வாழ்வைத் தந்து முக்தி வழிகளைத் தரும் வாய்ப்புகளும் அதிகம். இதற்காகத் தான் ஆலய வழிபாடுகள் சமுதாய விரதங்களாகவும், பண்டிகைகளாகவும் நமக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விரமும் பலவிதமான மஹரிஷிகளால் கடைபிடிக்கப்பட்டு அதற்குரிய பலாபலன்களும் அந்தந்த நாளில் அதனைக் கடைபிடிப்போர்க்கு வந்து சேர்வதாக அளிக்கப்பட்டவைதான்.
பசி என்றால் புசித்தால் தானே பசி தீரும். அதே போல பண்டிகைகளை, விரதங்களைக் கடைபிடித்தால் தானே பலன்கள் நம் வாழ்வில் கிட்டும். வாழ்நாளில் கோடானு கோடி கர்மவினைகளைச் சேர்த்துக் கொள்கின்ற மனிதனுக்கு ஒவ்வொரு விரதமும் பலவிதமான கர்மவினைக் கழிப்பிற்கான நல்வரமாகவே விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எதற்காக மனிதப் பிறவியை எடுத்து நம்முடைய கர்மவினைகளைக் களைய வந்தோமோ, அதே பிறவியில் தினந்தோறும் ஏதேதோ புதிய தீவினைகளைத் தான் மனிதன் சேர்த்துக் கொள்கின்றானே தவிர அவன் என்றேனும் உண்மையான வாழ்வை ஒரு நாளேனும் வாழ்ந்திருக்கின்றானா என்பது ஒவ்வொருவரும் மனதைத் தொட்டுக் கேட்டுக் கொள்ள வேண்டிய தினசரிக் கேள்வியாகும். இதுவே, ஒவ்வொருவரும் தினந்தோறும் தூங்கும் முன் செய்ய வேண்டிய ஆத்ம விசாரமாகும். இன்று உண்மையாகவே வாழ்தோமா?
விசேஷ தினங்கள் – அக்டோபர் -1999
26.9.1999 முதல் 9.10.1999 வரை :- பிரமாதி வருட மாளயபட்ச தர்ப்பண விசேஷ தினங்கள்
2.10.1999 – ருத்ராஷ்டமி விரதம்
9.10.1999 – மாளய அமாவாசை
10.10.1999 முதல் 19.10.1999 வரை – நவராத்திரி பண்டிகை தினங்கள்
18.10.1999 – சரஸ்வதி பூஜை
19.10.1999 – விஜயதசமி
பௌர்ணமி திதி 24.10.1999 ஞாயிறு விடியற்காலை 5.33 முதல் அன்றைய நள்ளிரவு 02.32 வரை திருக்கணித முறைப்படி பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள் 24.10.1999 ஞாயிறு
28.10.11 (ஐப்பசி 11) – ஸ்ரீவாஸ்து பூஜை நாள் : அன்று ஸ்ரீவாஸ்து நள் அமைகிறது. திருச்சி மலைக்கோட்டை – காந்தி மார்க்கெட் அருகிலுள்ள ஸ்ரீபூலோகநாதர் ஆலயத்தில் ஸ்ரீவாஸ்து பூஜை கொண்டாடுதல் விசேஷமானது. ஸ்ரீபூலோகநாதர் ஆலய மஹிமை பற்றி, சித்புருஷர்கள் அருளியுள்ளபடி கடந்த சில இதழ்களில் அளித்துள்ளோமல்லவா! ஸ்ரீவாஸ்து பூஜை கொண்டாடுவதற்கான சில விசேஷமான தலங்களுள் ஒன்றே திருச்சி ஸ்ரீபூலோகநாதர் ஆலயமாகும். சென்னையை ஒட்டிய சூரிய உதயத்திற்கேற்ப 28.10.1999 அன்று காலை 6.53 முதல் 8.23 வரை 90 நிமிடங்களுக்கு ஸ்ரீவாஸ்து பூஜை நேரம் அமைகிறது.
காலை 6.53 முதல் 7.11வரை ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் தந்த சுத்தி பூஜை
காலை 7.11 முதல் 7.29 வரை ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் புனித நீராடல்
காலை 7.29 முதல் 7.47 வரை ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் பரமாத்ம வழிபாடு
காலை 7.47 முதல் 8.05 வரை ஸ்ரீவாஸ்து மூர்த்தி தாம்பூலம் தரித்தல்
இவற்றில் ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் பிரசாதம் ஏற்கும் (போஜனம்) நேரமும், தாம்பூலம் ஏற்கும் புனிதமான நேரமும் அஸ்திவாரம் போன்ற நில, வீடு பூஜைகளுக்கு, கிரஹப் பிரவேசத்திற்கும், புதுவீடு புகுதலுக்கும் மிகச் சிறந்த புனிதகாலமாக விளங்குகின்றது. அதாவது 28.10.1999 அன்று காலை 7.47 முதல் 8.25 வரையிலான ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் புனித நேரம் அடிக்கால் வைப்பதற்கும், புதுமனை புகுவிழாவிற்கும் மற்றும் புதிய, பழைய வீடுகளுக்கான வாசற்படி பூஜை நிலைப்படி பூஜைகளுக்கான மிகச் சிறந்த நேரமாக அமைகிறது. மேற்கண்ட இரண்டு நேரங்களும் நில, வீடு, பூஜைகட்கு புனிதமாகத் திகழ்ந்தாலும், ஸ்ரீவாஸ்து ஹோமமும், ஸ்ரீவாஸ்து மூர்த்தி தியானமும், 6.53 முதல் 8.23 வரை தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும். அதாவது வாஸ்து நேரம் முழுமையும், ஸ்ரீவாஸ்து ஹோமம், ஸ்ரீவாஸ்து தியானம், ஸ்ரீவாஸ்து திதி ஓதுதல் சிறப்பானதாகும். இங்கு சென்னை சூரிய உதய நேரத்திற்கு ஏற்றவாறு வாஸ்து நேர விளக்கங்களை அளித்துள்ளோம். உங்கள் ஊரின் சூரிய உதய நேரத்திற்கு ஏற்ப இதில் சிலநிமிட நேரங்கள் மாறுபடலாம்.

நித்ய கர்ம நிவாரணி

அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய ,திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்கலின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை / வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.
1.10.1999 – வல்லாரைக் கீரை பிசைந்து அன்னதானம் – வேலையில் வரும் கவனக் குறைவு தீரும்.
2.10.1999 – கறிவேப்பிலைப் பொடி அன்னதானம் – கணக்கில் வரும் வழக்குகள் தீரும்.
3.10.1999 – தக்காளி சாதம் கோயிலில் தானம் – சந்தேகத்தால் ஏற்பட்ட சச்சரவு தீரும்.
4.10.1999 – அக்கா-தங்கைகள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதால் மனஅமைதி பெறுவர்.
5.10.1999 – இன்று யானைகட்குக் கரும்பு தானம் – எடுத்து வைத்து மறந்து போன பொருள் நினைவுக்கு வரும்.
6.10.1999 – நந்தவனம் இல்லாத கோயில்களில் நந்தவனம் அமைத்தல் – திருமணம் கைகூடும்.
7.10.1999 – காளை மாடுகளுக்கு அகத்திக் கீரை, புல்கட்டு தானம் – மனத்தில் தெளிவு பெற்றுக் காரிய சாதனை புரியலாம்.
8.10.1999 – இன்று கோயிலில் துப்புரவுத் திருப்பணி செய்திட – நீண்ட நாட்களாய் வராத பணம் வந்து சேரும்.
9.10.1999 – பசுக்களுக்கு கீரை அளித்தல் – பித்ருக்கள் மகிழ்ச்சி கொள்வர்.
10.10.1999 – இன்று ஏழைப் பெண்களுக்கு ஸ்வர்ண (தங்கம்) தானம் – வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைத் தரும்.
11.10.1999 – இன்று ஏழைச் சுமங்கலிகளுக்கு வெள்ளி மெட்டி தானம் – குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
12.10.1999 – இன்று ஏழைகளுக்கு தங்க மோதிர தானம் – பலவிதமான நோய்களிலிருந்து நிவர்த்தியை பெற்றுத் தரும். வசதியில்லை எனில், பலருடன் சேர்ந்து கூட்டு தானமாகச் செய்திடுக!
13.10.1999 – இன்று ஏழைச் சிறுமிகளுக்கு தங்க மூக்குத்தி தானம் – தேவையற்ற பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.
14.10.1999 – இன்று ஏழை கன்னிப் பெண்களுக்கு தங்க காதணி தானம் – வெளியூரிலிருந்து நற்செய்தி தேடி வரும்.
15.10.1999 – இன்று ஏழைகளுக்கு குறிப்பாக ஏழைப் பூசாரிகளுக்கு தங்க கடுக்கன் தானம் – தவறிய பொருட்கள் மீண்டும் கிட்ட வழியுண்டு.
16.10.1999 – இன்று ஏழை தம்பதிகளுக்கு கல் வைத்த தங்க மோதிரம் தானம் – உத்தியோகத்தில் நல்ல மாற்றம் கிட்டும்.
17.10.1999 – இன்று ஏழை மாணவர்கட்கு பென்சில், பேனா, நோட்டுப் புத்தகங்கள், ஜியோமிதிப் பெட்டி (Geometry Box) தானம் – கல்வியில் நல்ல மதிப்பெண் பெறலாம்.
18.10.1999 – இன்று வஸ்திர தானம் – வியாபார விருத்தி தரும்.
19.10.1999 – ஏழைச் சுமங்கலிகளுக்கு பூக்கள் தானம் – கணவன், மனைவி ஒற்றுமை வளரும்.
20.10.1999 – ஏழைச் சிறுமிகளுக்கு காலணி தானம் – நல்ல செய்தி வரும்.
21.10.1999 – ஏழைகளுக்கு படுக்கை தானம் – வீட்டில் பஞ்ச நிலை மாறும். / புறாக்களுக்கு உணவிடுதலால் – நல்ல இடமாற்றம் அமையும்.
22.10.1999 – இன்று கிளிகளுக்குக் கொய்யா/கோவைப் பழம் அளிப்பதால் – குழந்தைகள் நலம் அடைவர்.
23.10.1999 – இன்று சனீஸ்வரர் சந்நிதியை சுற்றி வந்து கறிவேப்பிலை சாதம் தானம் – கஷ்டங்கள் தீரும்.
24.10.1999 – இன்று ஏழைகளுக்கு கங்கை / காவிரி போன்ற புனித நீர் தானம் – மன அமைதி பெறுவர்.
25.10.1999 – இன்று குழந்தைகளின் கைகளால் அன்னதானம் செய்திடில் குடும்பத்தினர் அளப்பரிய பெறுமகிழ்வு அடைவர்.
26.10.1999 – இன்று வான நிறப் புடவை (Sky Blue) தானமளித்திட – தம்பி, தங்கைகளின் குடும்பப் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு கிட்டும்.
27.10.1999 – இன்று யானைக்கு வயிராற உணவளித்தலால், வாழ்வில் வரும் தடங்கல்கட்கு நல்ல தீர்வு ஏற்படும்.
28.10.1999 – பலவித வண்ண வர்ணங்களை (Paints) தானமாய் கோயிலுக்கு அளித்தலால், தன் மீது சுமத்தப்படும் பழி, குற்றம் தவிர்க்கப்படும்.
29.10.1999 – குழந்தைகளுக்கு பழுப்பு நிற இனிப்பு (சாக்லெட், etc..) தானம் – மேல் அதிகரிகளின் தொல்லையால் வரும் இன்னல்கள் நிவர்த்தியடையும்.
30.10.1999 – ஊனமுற்றவர்களுக்கான விசேஷமான காலணி தானம் – சக வியாபாரிகளுக்குள் உள்ள விரோதம் தீரும்.
31.10.1999 – சரபேஸ்வரர் பூஜை – இனிப்பு, சுய்யம் அன்னதானம் – குழப்பங்கள் உள்ள குடும்பத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam