அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கத்ரி

சென்ற இதழில் கத்ரி பற்றிய சில பொதுவான விளக்கங்களை அளித்திருந்தோம். செவ்வாய் போன்ற அக்னி லோகத்திலிருந்தும் “கத்ரி” என்ற விசேஷமான அருட்சக்தி பூலோகத்தை வியாபிக்கின்றது. இவ்வருட்சக்தியை மனித சமுதாயம் நன்கு முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமெனில் அதற்குரித்தான, சித்தபுருஷர்கள் அருள்கின்ற எளிய விசேஷமான பூஜை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
1. திண்டுக்கல் – பழனி சாலையில் ரெட்டியார் சத்திரத்தில் உள்ள ஸ்ரீநரசிங்கப் பெருமாள் ஆலயம்.
2. அக்னி சம்பந்தமான மூர்த்திகள் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள்.
3. அக்னி க்ஷேத்திரமான திருஅண்ணாமலை, அக்னி சம்பந்தமான ரண நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீதிருவட்டீஸ்வரர் ஆலயம், எப்போதும் எந்நேரமும் சந்தனக் காப்போடு பரிணமிக்கும் சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் சிவமூர்த்தி ஆலயம்.
4. ஸ்ரீஅக்னீஸ்வரர் என்ற திருநாமத்தைத் தாங்கியுள்ள திருத்தலங்கள்.
5. அம்பிகை அக்னியில் தவம் புரிந்த திருத்தலங்கள் ( மாங்காடு, காஞ்சிபுரம், திருவொற்றியூர் etc….)
6.  செவ்வாய் பகவான் தனித்துச் சந்நதி கொண்டு அருள் புரியும் தலங்கள் (வைதீஸ்வரன் கோயில், வடபழநி) – போன்ற தலங்களில்,
            1. இளநீர், நீர்மோர், பழரசம், குடிநீர், தான தர்மங்கள்.
            2. குடை, காலணிகள் தானம்
            3. கோயில்களுக்குப் பெரிய குடைகளை உற்சவ மூர்த்திகளுக்காக அளித்தல்.
- ஆகியவற்றை மேற்கொண்டிட விண்ணுலக அக்னி லோகங்களின், தேவதைகளின் அருட்கடாட்சமாக கத்ரி என்னும் விசேஷ அனுகிரஹத்தைப் பெற்றிடலாம். இதன் பலாபலன்களைச் சென்ற இதழில் விவரித்துள்ளோம்.
கத்ரி தினங்கள்
3.5.191996 முதல் 28.5.191996 வரை இருபத்தி ஆறு கத்ரி தினங்களுக்கும் விசேஷமான பெயர்கள் உண்டு. ஒவ்வொரு நாளிலும் எந்த அக்னி லோகத்தின் தெய்வீக சக்தி நிறைந்துள்ளதோ அதையொட்டி அந்த தினத்தின் நாமம் அமைந்துள்ளது. கத்ரி தினங்களில் விசேஷ நாமங்களும் அந்தந்த தினத்திற்குரிய தான தர்மங்களும் இவ்விதழில் வழக்கம் போல் ஒவ்வொரு பக்கத்தின் அடிப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. அவற்றை நன்முறையில் நிறைவேற்றி, கத்ரி சக்தியின் மேலான சக்தியைப் பெற்று உய்யுமாறு வேண்டுகிறோம்.

மே 1996

கத்ரியின் பெயர்

கத்ரி சக்தியின் மேலான சக்தி பெற

3

 ருசித்ரய கத்ரி

கர்ப்பிணிப் பெண்கள் விரும்பிய சாப்பாடு தானம்.

4

தாண்டவ கத்ரி

பாரிசவாயு வந்தவர்கள் விரும்பிய பலகாரம் தானம்.

5

சிலமத கத்ரி

குடுமி வைத்து இருப்பவர்களுக்கு போஜனம்.

6

அஸ்படாலி கத்ரி

செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு ஆடை தானம்

7

பானுதேவ கத்ரி

வயதான அனாதை முதியோகளுக்கு உணவு, ஆடைதானம்.

8

சதுகுஞ்சித சுக்ர கத்ரி

பாதி தலை நரைத்தவர்களுக்கு அன்னதானம்

9

சகடோபரிதக கத்ரி

பிறக்கும் முன் தாயை இழந்தவர்களுக்கு தானம்.

10

சங்கம கத்ரி

பள்ளி முடிக்கும்முன் தந்தையை இழந்தவர்களுக்கு அன்னதானம்.

11

பண்டித கத்ரி

வேதம் படிக்கும் சிறுவனுக்கு ஆடை, உணவு தானம் செய்யவும்.

12

பினாக கத்ரி

சிவன் கோயிலில் உள்ள ஊழியருக்கு தானம் செய்க.

13

சோடம கத்ரி

மாங்கல்ய தானம் மிக விசேஷம்.

14

தக்ஷிண கத்ரி

குடை தானம் விசேஷம்.

15

சங்கட கத்ரி

பாதுகை தானம் விசேஷம்.

16

லாவக கத்ரி

யானைக்கு பூரண உணவு அளித்தல் நலம் தரும்.

17

கோதக கத்ரி

போதாயன வகையைச் சேர்ந்தவருக்கு கௌபீன தானம்.

18

சுலதின கத்ரி

ஒன்பது கஜபுடவை வேதம் படித்தவரின் தாய்க்குத் தானம்.

19

சாந்தபுரி கத்ரி

மூக்குத்தி தானம் சிறப்புடையது.

20

லோகதான கத்ரி

கோயிலுள்ள செடிகளுக்கு உரமிடல் மிக விசேஷம்.

21

ஜனக பஞ்சக கத்ரி

கோயில் தோட்டத்திற்குச் செம்மண் தானம் சிறப்புடையது.

22

மாதுர்ய கத்ரி

மூத்தவள் குழந்தைக்கு சின்னம்மாவினால் செய்யும் திருமண நகை தானம் சிறந்தது.

23

மேவக கத்ரி

வயதானவருக்கு பல்செட் தானம் சிறந்தது.

24

ஜீவசாந்தி கத்ரி

பங்காளி மகளுக்கு நகை தானம் சிறந்தது.

25

அந்தர்ம கத்ரி

கழிவு நீரில் வேலை செய்பவருக்கு ஆடைதானம் சிறந்தது.

26

பலாத கத்ரி

ஊமைக் குழந்தைகளுக்கு ஆடைதானம் சிறந்தது.

27

நிர்குண கத்ரி

ஏழைகளுக்குத் தலைக்கு எண்ணெய் தானம்.

28

சங்கவ கத்ரி

கோயில் வாத்தியக் கருவிகளைப் புதுப்பித்தல் நலம்.

நித்ய கர்ம சாந்தி ..
1.5.1996 - சிவதரிசனம்/அர்ச்சனை – கடன் தொல்லைகள் குறையும்..
2.5.1996 – வெள்ளை விநாயகருக்கு அர்ச்சகனை அபிஷேகம்.
29.5.1996 – பஞ்சவர்ணக் கிளிகளுக்கு உணவிடுதல் – தோல் வியாதிகள் தணியும்.
30.5.1996 – கருடனுக்கு உணவிடுதல் – காணாமல் போனவர் நன்னிலை பெறுவர்.
31.5.1996 – பாதாள கணபதி வழிபாடு – (விருத்தாசலம் , திருஅண்ணாமாலை etc…) வயிற்று நோய்கள் தீரும்.
விசேஷ தினங்கள் மே – ஜுன் 191996
2.5.1996 – சித்திரா பௌர்ணமி பூஜை ; 3.5.1996 – கத்ரி ஆரம்பம் ; 11.5.1996 – சித்திரை சதயம் ; 14.5.1996 – விஷ்ணுபதி புண்ய காலம் ; 17.5.1996 – அமாவாசை (ஜம்புவீத் தர்ப்பணம்) ; 28.5.1996 – கத்ரி முடிவு ; 1.6.1996 – பௌர்ணமி பூஜை.

விஷ்ணுபதி

“பிரதோஷ மஹிமை” என்னும் அரியநூல், ஆன்மீக உபந்நியாசங்கள், தெளிவுரை, உரையாடல்கள் போன்றவற்றின் மூலம் பிரதோஷப் புண்யகால மஹிமையைப் பரப்பி சீரிய இறைப்பணி ஆற்றி வரும் ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம சுவாமிகள பிரதோஷ பூஜையைப் போன்று ஸ்ரீவிஷ்ணுபதி பூஜையும் பிரசித்தி பெற்று அனைத்து  மக்களும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலப் பலன்களை அடையும் வண்ணம் குறித்த நல்வழிமுறைகளைத் தம் சற்குருவின் அருளாணைப்படி அவர்தம் அருள்மொழிகளுக்கேற்ப கடைபிடிக்கச் செய்து வருகின்றார்கள். வரும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலம் 14.5.1996 செவ்வாயன்று விடியற்காலை சுமார் 2 ½ மணி முதல் காலை 10 ½ மணி வரை அமைகின்றது. இப்புனிதமான நேரத்தில் செய்யப்படும் ஸ்நானம், த்யானம், யோகம், ஜபம், நாமாவளி, பூஜை, யாகம், ஹோமம், அர்ச்சனை, வேள்வி, அபிஷேகம், வஸ்திர தானம், மாங்கல்ய தானம், அன்னதானம் போன்ற அனைத்துவிதமான வழிபாடுகளுக்கும், பித்ரு தர்ப்பணத்திற்கும் ஆயிரமாயிராய்ப் பன்மடங்குப் பலன்கள் உண்டு. பித்ருக்களுக்கு நாயகரே ஸ்ரீமஹாவிஷ்ணு. இவ்விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் அனைத்துக் கோடிப் பித்ரு லோகங்களில் உள்ள நம்முடைய வசு, ருத்ர, ஆதித்ய மற்றும் ஏனைய பித்ரு தேவர்கள், பித்ரு தேவதைகள், ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி, ஸ்ரீசனீஸ்வர மண்டல தேவதைகள்  பித்ரு மண்டலமாகிய சூரிய லோக தேவதைகள், மாத்ரு லோகமாகிய சந்திரலோக தேவதைகள் போன்ற தேவதா மூர்த்திகளும் தெய்வாம்சங்களும், அவதார மூர்த்திகளும், சித்த புருஷர்களும், மஹரிஷிகள் போன்றவர்களும் சகல விஷ்ணு ஆலயங்கள், தீர்த்தங்கள், ஸ்தல விருட்சங்கள், கோவில் கோபுர விமானங்கள் போன்றவற்றில் குழுமுகின்றனர். இவ்விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் ஸ்ரீபெருமாள் தலங்களில் குறித்த முறையில் விஷ்ணுபதியைக் கொண்டாடுவோர்க்குக் கோடானுகோடி பித்ருதேவர்களின் ஆசி, நவக்கிரஹ மூர்த்திகளின் அருளுடன் கூடி ஸ்ரீமந் நாராயணனின் கருணைக் கடாட்சமும் பரிபூரணமாகக் கிட்டுமன்றோ!
விஷ்ணுபதியில் விஷ்ணுபதியை அடைந்தோர்
ஸ்ரீபீஷ்மர், ஸ்ரீகவேர மஹரிஷி, ஸ்ரீவிஸ்வாமித்திரர், ஸ்ரீவசிஷ்டர், ஸ்ரீநாரதர், ஸ்ரீபரத்வாஜர், ஸ்ரீசுகர், ஸ்ரீதுரோணர் போன்ற பல மகரிஷிகள், உத்தமப் பெரியோர்கள் ஒவ்வொரு யுக விஷ்ணுபதிக் காலத்தில் பெறற்கரிய பேறாம் விஷ்ணுபதி ஸ்தானத்தைப் பெற்றுள்ளனர். விஷ்ணுபதி என்பது சைவ, வைணவ இனபேதமின்றி அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அரிய புண்யகாலமாகும். ஒருயுகத்தில் வஸ்ந்த ருது விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் உன்னத தெய்வநிலையாம் விஷ்ணுபதிப் பேரினைப் பெற்ற, அவதார அம்சங்களின் பரிபூரண பரிபாலனமும் பெற்றவருடைய மஹிமையைக் காண்போமாக! ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்த ஸ்ரீலக்ஷ்மண மஹாபிரபு திரேதாயுகத்தில் ராமாயணத்தில் ஸ்ரீராமசந்திர மூர்த்திக்குக் கண் துஞ்சாத உத்தம சேவை புரிந்தார். இதைக்கண்டு ஆனந்தித்த ஸ்ரீராமர் தன் சகோதரருக்கே சேவைபுரியும் பாக்கியத்தைப் பெறவேண்டி ஸ்ரீமந்நாராயணனைப் பிரார்த்தித்திட, துவாபரயுகத்தில் ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணனாகவும் ஸ்ரீலக்ஷ்மணர், ஸ்ரீபலராமனாகவும் அவதரித்தனர். ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீபலராமனுக்கு அற்புதமான ஆராதித்து உவந்தார். எத்தகைய லீலைகள், சாகசங்கள், .ராஜ்யகாரியங்கள், தூது பரிபாலனங்கள் புரிந்திடினும் ஸ்ரீபலராமரைக் கலந்து ஆலோசியாது ஸ்ரீகிருஷ்ணன் எதனையும் செய்வதில்லை. உண்மையில் இன்றைக்கு நாம் பெற்றிருக்கும் மஹாபாரதம், மூலபாரதத்தின் ஒரு பகுதியே. சித்தர்களுடைய இருடிகள் பாரதம் என்ற ஒன்றுண்டு. இதில் முழுமையான பாரதத்தின் தொகுப்பினைக் கண்டு ஆனந்தித்திடலாம். இவை கிரந்த நாடிகளின் வடிவில் அமைந்துள்ளன.
துரியோதனனின் சூழ்ச்சி
அர்சுனனின் பிள்ளையான அபிமன்யுவை மணக்கவிரும்பினாள் ஸ்ரீபலராமனின் புதல்வியான வத்சலா. ஆனால் துரியோதனன் வத்சலாவைத் தன் மகன் இலக்கணக் குமாரனுக்கு மணம்புரிந்திட விரும்பினான். இதற்காகப் பல சூழ்ச்சிகள் செய்து, தன்னை ஒரு பக்தனாக ஸ்ரீபலராமர் அறிந்து கொள்ளும்படி நாடகமாடியும் பொய்மை நிறைந்த வஞ்சக எண்ணங்கள் கூடிய நிலையில் துரியோதனன் ஸ்ரீபலராமனைக் கவர்ந்து விட்டான். துரியோதனனின் கபடத்தை அறியாது ஸ்ரீபலராமரும் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டார். துரியோதனின் சூழ்ச்சியை அறிந்த ஸ்ரீகிருஷ்ணர், பீமனின் புதல்வனான கடோத்கஜன் மூலம் ஒரு மாயா வத்சலாவை உருவாக்கி, துரியோதனனின் கபடத்தை முறியடித்தார். துரியோதனின் தீய எண்ணத்தை அறிய வந்த ஸ்ரீபலராமர் தன் புதல்வி வத்சலாவின் மண வாழ்க்கை இருண்ட விட்டதோ என்று அஞ்சிட ஸ்ரீகிருஷ்ணர் நடந்ததை விவரித்திட தன் மகளின் துன்பங்கள் தீர்ந்தமை கண்டு ஆனந்தமடைந்தார் ஸ்ரீபலராமர். அப்போது அவர் ஸ்ரீகிருஷ்ணனிடம் இதற்குக் கைமாறாக யாது செய்ய வேண்டுமென்று கேட்க, ஸ்ரீகிருஷ்ணனும், ‘அண்ணா! கலியுகத்திலும் தங்களுக்குச் சேவை, செய்யும் பாக்கியத்தை அருள்வீர்களாக!’ என்று வேண்டினார். “இது என்ன, ஸ்ரீமஹாவிஷ்ணுவின் லீலையோ!” என்று எண்ணி மகிழ்ந்தார் ஸ்ரீபலராமர். இதன் பலனாய், கலியுகத்தில் ஸ்ரீஆதிசேஷனின் அவதாரமாய் உடையவராம் ஸ்ரீராமானுஜர் அவதரித்தார். ஸ்ரீராமானுஜருக்குச் சேவை செய்ய அவருடைய தமக்கை பூமி நாச்சியாரின் புதல்வனாக முதலியாண்டான் அவதரித்தார்.
ஆதிசேஷன் – ஸ்ரீலக்ஷ்மணர் – ஸ்ரீபலராமர் – ஸ்ரீராமானுஜர்.
ஸ்ரீராமானுஜருக்கு அனைத்துக் கைங்கர்யங்களையும் மனம், மெய், வாக்காலும் புனிதமான சேவைகள் செய்யும் பாக்கியத்தையும் ஸ்ரீமுதலியாண்டான் பெற்றுப் பரமானந்தமடைந்தார். ஸ்ரீமுதலியாண்டானின் புனிதமான சேவை கண்டு மனமகிழ்ந்த ஸ்ரீராமானுஜர் ஸ்ரீமுதலியாண்டாரை திரிதண்ட அவதார அம்சமாய் உலகிற்கு எடுத்துரைத்தார். திரிதண்டமே ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சமென, குறிப்பாக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அவதார அம்சங்கள் கூடியதாகப் பெரியோர்கள் வர்ணிக்கின்றனர். ஸ்ரீமுதலியாண்டானே ஸ்ரீராமனின் அம்சங்களைக் கூட்டி ஸ்ரீஆதிசேஷ, ஸ்ரீலக்ஷ்மண, ஸ்ரீபலராம மூர்த்தி அம்சங்கள் நிறைந்த ஸ்ரீராமானுஜருக்கு உன்னதமான சேவைகள் புரிந்து ஆனந்தித்தார். ஸ்ரீராமானுஜருக்கு அளப்பரிய சேவை புரிந்த ஸ்ரீமுதலியாண்டான் ஸ்ரீவிஷ்ணுபதியை அடைந்த உத்தமத் தலமே சென்னை பூந்தமல்லி அருகே நஸரத்பேட்டையில் உள்ள ஸ்ரீஹரிதவாரணப் பெருமாள் ஆலயமாகும். அதாவது இந்நாளில் தான் ஸ்ரீராமானுஜராலேயே திரிதண்ட அம்சமென ஸ்ரீமுதலியாண்டார் பறைசாற்றுவிக்கப்பட்டார். வேதமறைகளே திரிதண்டத்தை ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சமென உரைப்பதால் ஸ்ரீராமானுஜர் சூட்சுமமாக ஸ்ரீமுதலியாண்டானை ஸ்ரீராமரின் அம்சங்களைப் பூண்டவராக எடுத்துரைத்துள்ளார். இப்புனித நாளே அந்த யுகத்தின் ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ய காலமாகும். எனவே வரும் 14.5.1996 அன்று அமையும் ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்யகாலத்தை அனைத்து விஷ்ணு ஸ்தலங்களிலும் குறிப்பாக சென்னை ஸ்ரீபச்சைவாரணப் பெருமாள் ஆலயத்தில் கொண்டாடுவது மிகவும் சிறப்புடையதாகும்.
பலன்கள் :- மன அமைதி இல்லாதோர்க்கு சாந்தமான மனோநிலை கிட்டும். தொழிலில் முன்னேற்றத்தைப் பெறாதோர் இவ்விஷ்ணுபதி புண்ய காலத்தன்று  இத்திருத்தலத்தில் பெரியோர்களுக்கு பாதபூஜை செய்து தான தர்மங்கள் செய்து வழிபட்டிட தொழிலில் அபரிமிதமாக முன்னேறுவர். தாய், தந்தை, குரு பெரியோர்க்கு சேவை செய்யும் வாய்ப்பை இழந்தோர் இங்கு விஷ்ணுபதி வைபவத்தைக் கொண்டாடிட பெரியோர்களின் குறிப்பாகப் பித்ருக்களின் அருள்கிட்டும்.

திருஅண்ணாமலை கிரிவலம்

திருஅண்ணாமலை கிரிவல மஹிமை
(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகளுடன் பன்முறை திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரும் திருப்பேறினைப் பெற்ற நம் குருமங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தம் குருநாதரிடமிருந்து பெற்ற ஆன்மீக பொக்கிஷங்களை இத்தொடரில் அளித்து வருகின்றார்கள்.)
ஞாயிற்றுக்கிழமையன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவதால் கிட்டும் பலன்களை முன்னரே அளித்துள்ளோம். எந்நாளிலும் எந்நேரமும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திடலாம். அந்தந்தக் கிழமை, நட்சத்திரம், திதி, யோகம், கரணம், ஹோரைகளுக்கேற்பப் பலன்கள் மாறுபடும் என்பதை முக்கியமாகக் குறிப்பிட்டு வந்துள்ளோம்.லௌகீக காரியங்களுக்காக அதாவது குறித்த காரியம் நிறைவேறுதல் வேண்டும் என்ற பிரார்த்தனையிருப்பின் நாளும் கோளும் ஏனைய கால விதானங்களும் பலன்களை துரிதப்படுத்தி மேம்படுத்தும்.
1. திங்கள், மதிகாரகனாகிய ஸ்ரீசந்திரபகவானுக்கு உரித்தான நாள் . கார்ய சித்திக்கு வாக்கு இன்றியமையாதது. சிலர் இனிமையாகப் பேசுவர், செயலைக் கோட்டை விட்டுவிடுவார்கள். சிலருக்கோ பேச்சுத் திறமையிராது, ஆனால் எந்த காரியத்திலும் ஜயமடைவர். ஜாதகத்தில் இலக்கனாதிபதியும் இரண்டாமிடக்காரரும் இணைந்து இரண்டாமிடத்தில் நன்கு அமைந்திடில் வாக்சாதுர்யம் உத்தமமாக இருக்கும். எனவே தங்கள் பேச்சுத்திறன் மேம்பட விரும்புவோர் திங்களன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வருதல் வேண்டும்.
2. “நமக்கு வாக்சாதுர்யம் இல்லையே, நம்மால் பலருக்கும் புரியும்படி பேச இயலவில்லையே, வழவழா, கொழகொழவென்று  பேசுகிறோமே” என்று வருந்துவோர், தங்கள் தாழ்வு மனப்பான்மை (inferiority complex) தீர திங்களன்று கிரிவலத்தை மேற்கொள்தல் வேண்டும்.
3. ஜோதிடத் துறையில் சிறந்து விளங்குதற்கு வாக்சக்தி இன்றியமையாதது. ஜோதிடத்தில் எவ்வளவு கரை தேர்ந்திருந்தாலும் சிறந்த பூஜைகள், தான தர்மங்கள், சுயநலமற்ற சேவை, ஏழைகளுக்கு இலவச உதவி, ஜோதிடத்தால் செல்வம் சேர்க்கும் மனப்பான்மையை ஒழித்தல் – இவை கூடினால் தான் சத்யசக்தி பெருகி வாக்வன்மை கிட்டும். எனவே திங்களன்று ஜோதிடர்கள் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து மேற்குறித்தவற்றைக் கடைபிடித்திடில் அவர்கள் நிச்சயமாகத் தங்கள் துறையில் இறையருளால் பேறும் புகழும் பெறுவர். இவர்கள் கிரிவலப் பாதையில் அடிஅண்ணாமலைக் கோயிலில் சந்திரன் பூஜித்த லிங்கத்தை வழிபட்டு வெண்மை நிற உணவு, ஆடைவகைகளைத் தானம் செய்துவர மதிகூர்மையும், வாக்வன்மையும் கைகூடும். 
4. உயரதிகாரிகளின் ஏச்சிற்கும் பேச்சிற்கும் ஆளாவோர் பலர், எப்படி உழைத்தாலும் கெட்ட பெயரையே பெறுவோர் திங்களன்று கிரிவலம் மேற்கொண்டுவர உயரதிகாரிகள் போற்றும் வகையில் சிறப்புப் பெறுவர். இவர்கள் ஊமையர்க்கு உரிய உதவிகளைச் செய்வது பலன்களைத் துரிதப்படுத்தும்.
5. பலருக்கு உயர்பதவி (Promotion) கிட்டவில்லையே என்ற ஏக்கம் உண்டு. பல வருடங்களாக ஒரே பதவியில் உழல்வோரும் உண்டு. பொதுவாக ஜாதகத்தில் ஐந்தாமிட அதிபதியும் குருவும் பத்தாமிடத்தில் நன்கு அமைந்திடில் பல சிறப்பான நிலைகள் கிட்டும். ஆனால் அவற்றை முறையாகப் பயன்படுத்துதல் வேண்டுமே! எனவே பதவி உயர்விற்காகத் தேர்வு, நேர்முகத் தேர்விற்குச் (Exam, Interview) செல்வோர் திங்களன்று கிரிவலம் வருவதால் சிறப்பான பதவிகளைப் பெறுவர்.
6. சூர்ய சந்திரர்கள் லக்னத்திலோ ஏழாமிடத்திலோ இருப்பின் பேச்சிற்கு வன்மை, வாக்சக்தி குறையக்கூடும் முன் கோபக்காரர்கள், சிடுசிடுவென்று இருப்போர் திங்களன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வர, பேச்சின் வன்மை, காரம், உஷ்ணம் தணியும், இவர்கள் கிரிவலத்தில் இளநீர் , தேன் ஆகியவற்றைத் தானம் செய்திடல் வேண்டும்.
7. படித்தும் வேலையற்றோர், தகுந்த உத்யோகத்தைப் பெறாதோர் மூன்றாம் பிறையன்று சந்திரனை தரிசித்தவாறே “ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர்” துதிகளைப் பாராயணம் செய்து கிரிவலம் வந்திடில் நன்மை கிட்டும். மூன்றாம் பிறை திங்களன்று வருமாயின் இது கிடைத்தற்கரிய பாக்கியமாகும்.

சாந்தபாவ தரிசனம்
திருஅண்ணாமலை

8. பெரும் பதவி வகிப்போர்களுக்கும், குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. “அந்தக் கம்பெனியில் GM ஆகியிருக்கலாமே, இதில் GM பதவி வந்திருக்குமோ” – என்று பதவிகளுக்குத் தாவுதல் பற்றி இனம்புரியாத மனக்குழப்பங்கள் அலைபாய்ந்து மோதும்! இவர்கள் சந்திர ஒளியில், திங்களன்று கிரிவலம் வந்திடக் குழப்பங்கள் தாமாகவே தணியும்.
9. வியாபாரிகள் திங்களன்று சூரிய, புத ஹோரை நேரங்களில் கிரிவலத்தைத் தொடங்கி அன்று மனைவி, தாயார், பெண்கள் மூலமாக வியாபாரத்தைத் தொடங்குதல் பல தோஷங்களையும் திருஷ்டிகளையும் தடுத்து வியாபாரத்தில் மேன்மையையும் பெற்றுத் தரும்.
10. அலுவலகப் பிரச்சனைகள் தீர திங்களன்று குரு, சுக்ர ஹோரை நேரங்களில் கிரிவலம் வந்திடல் சிறப்பானதாகும்.
11. ரசாயனம், சரித்திரம், பொருளாதாரம், வாகனத் தொழில் சம்பந்தமான கல்வியைக் கற்கும் மாணவ, மாணவியர் திங்களன்று கிரிவலம் வந்து ஏழைக் குழந்தைகளுக்கு சிலேட், புத்தகங்கள், பேனா, பென்ஸில் அளித்துவர, கல்வியில் சிறப்படைவர். பிண்ணாக்குச் சித்தர் என்ற சித்தபுருஷர் திங்களன்று ஸ்ரீசந்திரலிங்க தரிசனப் பகுதியில், உருவமாகவோ, அரூவமாவோ, தரிசனம் தந்து குறைந்த மதிப்பெண்களுடன் “மக்காக” இருப்போர்க்கு அருள்புரிகின்றார்.
12. பல முதியோர்கள் “நம்மை யாரும் மதிப்பதில்லை, நம் சொல்லும் எடுபடுவதில்லை“ என்று மன விசாரப்படுவதுண்டு. இத்தகையோர் திங்களன்று கிரிவலம் வந்து ஏழை முதியோர்க்கு உணவு, கைத்தடி, பாய், தலையணைகளைத் தானமாக அளித்திட அவர்கள் தங்கள் குடும்பங்களில் சிறந்த மதிப்பைப் பெறுவர்.
13. திருமணத் தடங்களால் வருந்துவோர் திங்களன்று காலை 5½, முதல் 7½ ,மணிக்குள்ளாக அமுத நேரத்தில் தக்க துணையோடு கிரிவலம் மேற்கொண்டு ஏதேனும் அம்மன் சந்நதியில்  ஏழைக் கன்னிப் பெண்களுக்கு மங்களப் பொருட்களைத் தானமாக அளித்துவரத் திருமணத் தடங்கல்கள் தீரும்.
அடியார் : குருதேவா! திங்கள் கிரிவலம் எவ்வாறு மதியை மேம்படுத்தும்?
சற்குரு : திங்களன்றுதான் திருஅண்ணாமலையில் சோமபானு, சந்திர கனக குளிகை, சந்திர மூலம், சோம சூக்த மூலிகை, சோமவார சுத்த குளிகை போன்ற முக்கியமான மூலிகைகள் கண்களுக்குத் தென்படும். இதற்காகவே பல சித்த வைத்யர்கள் ரகசியமாகத் திங்களன்று கிரிவலம் வருவர். அற்புத சக்திவாய்ந்த இம்மூலிகைகளின் காற்று நம்மீது படுவதால் மன அமைதி உண்டாகி, மனக்குழப்பங்களும் தீரும், மூலிகைக் காற்றிற்கே இவ்வளவு சக்தி என்றால் அதன் குளிகை எவ்வளவு மகத்வம் உடையதாகிறது. இம்மூலிகைகளின் சக்தி, காற்றில் பரிணமிப்பதோடு, சந்திர கிரணங்களாலும் ஈர்க்கப் பெற்று ஒளிமாரி பெய்கிறது.
ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசரஸ்வதி தேவியை மணக்கும் பொருட்டுத் திங்கள் பௌர்ணமியன்று அருணாசலத்தைப் பல யுகங்கள் கிரிவலம் வந்து ஸ்ரீசரஸ்வதி தேவியை மணக்கும் பேறினைப் பெற்றார். எனவே திருமணத் தடங்களினால் துன்பப்படுவோர் திங்களன்று, குறிப்பாக, பௌர்ணமியும், திங்களும் சேர்ந்த நாளில், கிரிவலம் வந்தால் நற்பலன்கள் கிட்டும்.
தாராபல மூலிகை என்ற சக்திவாய்ந்த மூலிகை திங்களன்று விதையிலிருந்து வெடித்து முளைத்தெழும், அடுத்த திங்களுக்குள் மூலிகைச் செடியாகி, மூன்றாம் திங்களன்று இலை, பூக்கள், காய்கள் நிறைந்திடும், நான்காம் திங்களன்று மீண்டும் விதை வெடித்து முளைத்தெழும். தாராபல மூலிகையின் விசேஷ சக்தியினை ஸ்ரீபிரம்மதேவர் திருஅண்ணாமலை க்ஷேத்திரத்திலேயே பெற்றார். தாராபல மூலிகையின் சக்தியுடன் மதிகாரனாகிய ஸ்ரீசந்திர பகவானுக்குரிய திங்களும், 16 கலைகளுடன் முழுமையாகப் பரிணமிக்கும் பௌர்ணமி நிலவின் மூலம் சந்திரபலமும் கூடிட, தாராபல, சந்திர பலக்கூட்டினால் திருமணத் தடங்கல்கள் நீங்க ஏதுவாகின்றன. தாராபல, சந்திர பலன்பாராது நடக்கும் திருமண முகூர்த்தங்களுக்கு இதுவே பிராயச்சித்தமாகும்.
வக்கீல்களுக்கு :- வாக் சாதுர்யம், வாக்வன்மை இரண்டும் ஜோதிடர்களுக்கு மட்டுமின்றி வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் தேவையானதாகும் தொழில், சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாகவும், வாதம், பிரதிவாதம், சாட்சியம் போன்றவற்றிற்காகவும் வக்கீல்களும், நீதிபதிகளும்  சத்யம், அசத்யம் இவ்விரண்டிற்குமிடையே போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. எனவே இவர்கள் திங்களன்று, குறிப்பாக, திங்களும் பௌர்ணமியும் சேரும் நாளில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திட வாக்சக்தி, பெருகுவதோடு தார்மீகரீதியான வழக்குகளும் அமைந்து மேன்மை பெறுவர். அசத்தியத்தைக் கூற வேண்டிய சந்தர்ப்பங்களுக்கு இது ஒரு வகையில் பிராயச்சித்தமாகும். ஆனால் இதன்பின் நியாயமான வழக்குகளையே கையாள வேண்டும்.

திருச்சி மலைக்கோட்டை கிரிவலம்

அழற்பிழம்பாய் பிரகாசிக்கும் சிவபெருமான் தன்னை பூலோக மக்களும் தரிசனம் செய்து உன்னத நிலையை அடைய கிரிவடிவாய் கல் மலைத் தோற்றம் கொண்டு திருஅண்ணாமலையில் அமர்ந்திருக்கிறார். திருஅண்ணாமலையை வலம்வரும் பக்தர்கள் ஒவ்வொரு இடத்திலிருந்தும் மலை உச்சியை நோக்கும் போது ஒவ்வொரு விதமான தரிசனப் பலன்களை நல்கி கலியுக மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு ஓர் அருமருந்தாக, ஆன்மீக விருந்தாக அருள்பாலிக்கிறார் அருணாசல ஈசன். இந்த ஒப்பற்ற முகதரிசன இரகசியங்களை பல சித்தபுருஷர்கள்/மஹரிஷிகள் அருளியவற்றை மீண்டும் கலியுக மக்களின் நல்வாழ்விற்காக எடுத்துரைத்து வருபவர் திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரை வழித்தோன்றலான குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள்.
தன் குருநாதர் சிவகுரு மங்கள கந்தர்வாவாகிய ஸ்ரீ-ல-ஸ்ரீஇடியாப்ப ஈச சித்தரிடம் பெற்ற கடினமான குருகுலவாசத்தில், தாம் அறிந்த இந்த கிரிவல முகதரிசன மகிமைகளை விளக்கி வருகின்றார்கள்.

திருச்சி மலைக்கோட்டை

தாயுமான முகதரிசனங்கள் :- திருஅண்ணாமலை போன்றே தாயுமான ஈசனும் உச்சிப் பிள்ளையாரும் திருச்சி மலைக்கோட்டையை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அற்புதமான முக தரிசனங்களை அளித்து திருவருளைப் பொழிகின்றார்கள். இத்திருமுக தரிசனங்களே தாயுமானமுக தரிசனங்கள் என்றழைக்கப்படுகின்றன. தாயுமான முக தரிசனத்தை பலகோடி உள்ளன. ஆனால் மலைக்கோட்டையைச் சுற்றிக் கிரிவலப் பாதை முழுவதிலுமே தற்போது உயரமான கட்டிடங்களை எழுப்பியுள்ளதால் மிக மிகக் குறைவான தரிசனங்களையே தற்போது மக்கள் பெற முடிகிறது. எனவே தற்காலச் சூழ்நிலைக்கேற்ப முக்யமான பிரச்னைகளைத் தீர்க்கும் தரிசனங்கள் சிலவற்றின் மகிமைகளைப் பற்றி குருவருளால் இங்கு காண்போம்.
சுழிக்கோண கஜமுக தரிசனம்
உச்சிப் பிள்ளையார் கோயிலடிவாரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீமாணிக்க விநாயகரைத் தரிசனம் செய்து அவரை வலம் வந்து பிரதான கோபுர வாசல் வழியாக வெளியே வலப்புறமாகத் திரும்பி கிரிவலம் வருகையில் முதலில் வருவது கல்யாண விநாயகர் திருக்கோயில். (NSB சாலையும் நந்திக்கோயில் தெருவும் சந்திக்கும் இடம்.) ஸ்ரீகல்யாண விநாயகர் கோயிலிருந்து உச்சிப்பிள்ளையாரை தரிசிப்பது சுழிக்கோண கஜமுக தரிசனம் ஆகும். உயரமான கட்டிடங்கள் தற்போது மறைத்திருப்பதால் உச்சிப்பிள்ளையாரை இங்கிருந்து தரிசனம் செய்ய முடியாது. அதனால் உச்சிப் பிள்ளையாரை மானசீகமாக வணங்கி வழிபட்டுப் பிரார்த்திக்க வேண்டும். அற்புதமான பலவித அனுக்கிரகங்களை அளிக்கக்கூடியது சுழிக்கோண கஜமுக தரிசனம்.
சுழிக்கோண கஜமுக தரிசன மஹிமை
பல ஆண்டுகளுக்கு முன் பஞ்சருணன் என்ற ஒரு வியாபாரி மளிகை வியாபாரம் செய்துவந்தார். தினமும் மலைக்கோட்டை வழியாகச் செல்லும் போது சுழிக்கோண கஜமுக தரிசன இடத்தில் நின்று உச்சிப்பிள்ளையாரை வணங்கி “ஓம் கம் கணபதியே நம:” என்று ஒரே ஒரு முறை சொல்லிவிட்டு வியாபாரத்திற்குச் சென்று விடுவார். வியாபாரம் முடித்து மாலை திரும்பும் போது அதே இடத்தில் நின்று “ஓம் கம் கணபதயே நம:” என்று இரண்டாவது முறையாகத் துதித்து உச்சிப்பிள்ளையாரை வணங்கிவிட்டுத் தன் இருப்பிடம் சென்று விடுவார்.
இரவு உறங்குவதற்கு முன் சுழிக்கோண கஜமுக தரிசனத்தை கண்முன் கொணர்ந்து உச்சிப் பிள்ளையாரை மானசீகமாக வணங்கித் துதித்து “ஓம் கம் கணபதயே நம:” என்று நாமத்தை சொல்லிவிட்டு உறங்கி விடுவார். ஆழ்ந்த நம்பிக்கையுடனும் உண்மையான உள்ளத்துடனும் செய்த இந்த அற்புத வழிபாட்டால் மகிழ்ந்த உச்சிப் பிள்ளையார் பஞ்சருணனுக்குப் பலவிதமான அனுக்கிரகங்களைத் தொடர்ந்து அளித்து வந்தார். பஞ்சருணனின் வழிபாட்டையும் அவருக்கு உச்சிப்பிள்ளையார் அளித்த அனுகிரகத்தையும் அறிந்த நாரத மஹா பிரபு, “இந்த வியாபாரி போகும்போதும் வரும் போதும் மட்டுமே உச்சிப்பிள்ளையாரை வணங்கிச் செல்கிறான். இரண்டு, மூன்று முறைதான் அவர் திருநாமத்தை உச்சரிக்கிறான். மற்ற நேரங்கள் எல்லாம் உலக விஷயங்களிலும், மனைவி, மக்களுடனும் பொழுதைக் கழிக்கின்றான். இப்படிப்பட்ட வியாபாரிக்கு உச்சிப்பிள்ளையார் அளவற்ற அனுகிரகத்தை வாரி வழங்குகிற கருணைக் கடலாக இருக்கிறார்”.

ஸ்ரீகல்யாண விநாயகர் திருச்சி

“நானோ சதாசர்வ காலமும் “நாராயணா, நாராயணா” என்றே ஓதிக் கொண்டிருக்கிறேன். நாராயணனைத் தவிர வேறு எதையும் நினைக்காமல் பிரம்மச்சாரியாய் வாழ்கிறேன். இப்படிப் பட்ட பக்தனாகிய எனக்கு நாராயணன் அளிக்கும் அனுக்கிரகம் மிகவும் குறைவானதாகவே தோன்றுகிறது. உச்சிப்பிள்ளையாரை ஒப்பிட்டுப் பார்த்தால் நாராயணனின் அருட்கடாட்சம் குறைவாகவே தெரிகிறது. ஏன் இந்த பாரபட்சம்?” என்று நினைத்து இதைப்பற்றி மஹாவிஷ்ணுவிடமே முறையிடுகின்றார் நாரதமுனிவர். அனைத்தும் அறிந்த நாரத மஹரிஷிக்கா இத்தகைய எண்ணங்கள் என்ற வினா எழும். இறைவன் சித்தபுருஷர்களையும், மஹரிஷிகளையும், ஞானியரையும் பூலோகத்திற்கு அனுப்பி மக்களோடு மக்களாக வாழச் செய்து அவர்களுடைய காரியங்களின் மூலம் மக்களுக்குப் பல பாடங்களைப் புகட்டுகிறான்.. இத்தகைய அனுபவ ரீதியான நடைமுறை போதனைகளே மக்களின் மனதில் நன்கு பதியும். உத்தம அடியார்களும் கடவுள் தங்களுக்கு அளிக்கின்ற இப்பாத்திரங்களைச் செவ்வனே நிறைவேற்றி மீண்டும் பரம்பொருளையே அடைகின்றனர். ஸ்ரீராமனே மனிதரூபத்தில் எத்தகைய வாழ்க்கைச் சூழ்நிலைகளை ஏற்றார் என்பதை நாமறிவோம். நாரதரின் குறையைக் கேட்ட மஹாவிஷ்ணு, 108 துளசி மணிகளை அவரிடம் கொடுத்து அம்மணிகளைக் கோர்த்துக் கொண்டே மலைக்கோட்டையை வலம் வருவாயாக! கிரிவலத்தைச் சுழிகோண கஜமுக தரிசனத்தில் ஆரம்பித்து அதே இடத்தில் முடிக்க வேண்டும். மணிகளில் எதுவும் தொலைந்து போகாமல் கவனமாகக் கோர்க்க வேண்டும்” என்று கூறி அனுப்பினார் ஸ்ரீமஹாவிஷ்ணு.
ஸ்ரீநாராயண லீலை
துளஸி மணிகளுடன் சுழிகோண கஜமுக தரிசன இடத்தை அடைந்தார் நாரதர். உச்சிப் பிள்ளையாரை கையெடுத்து வணங்கி விட்டு வலம் வரத்தொடங்கினார். தாமரை நூலால் ஆன திரியால் ஒவ்வொரு மணியாக கோர்த்து வந்தார். துளைகள் சிறிதும் பெரிதுமாக இருந்தன. சிறிய துளைகள் உள்ள மணிகளை மிகவும் கவனமாக கோர்க்க வேண்டியிருந்தது. பொறுமையுடன் கவனமாக ஒவ்வொரு மணியாக கோர்த்துக் கொண்டே வந்து மீண்டும் சுழிக்கோண கஜமுக தரிசனத்தை அடைந்தார். அப்போது மாலை முழுமையும் கோர்க்கப்பட்டு இருந்தது. 108 மணிகளும் சரியாக இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தார் நாரதர். மூன்று மணிகள் குறைந்தன! வழியில் எங்கோ தொலைந்து போய் விட்டன! காணாமல் போன மணிகளைத் தேடி மீண்டும் ஒரு முறை கிரிவலம் வந்தார். அப்போது ஒரு மணி மட்டும் கிடைத்தது! அதை மாலையில் கோர்த்துவிட, எஞ்சிய இரு மணிகளைத் தேடி மூன்றாவது முறையாக உச்சிப்பிள்ளையாரை வலம் வந்தார். அப்போது இரண்டையும் கண்டெடுத்து மாலையில் கோர்த்து மணிமுடி போட்டு எண்ணிப்பார்த்தார் 108 மணிகள் சரியாக இருந்தன!
நாரதருக்கு மீண்டும் ஒரு சோதனை
ஸ்ரீமஹாவிஷ்ணு முன்னர் தனக்கிட்ட சோதனை அவருக்கு நினைவிற்கு வந்தது. கையில் ஒருசிறு எண்ணெய் கிண்ணத்துடன், ஒரு துளிகூட எண்ணெய் சிதறாது பூலோகத்தை வலம் வர வேண்டும் என்ற சோதனையில் தன் கவனத்தை எண்ணெய்க் கிண்ணத்திலேயே செலுத்தியமையால் நாராயண தியானத்தை மறந்த நிகழ்ச்சியானது நாரதரின் மனதில் பசுமையாக இருந்தமையால், துளஸி மணிகளைக் கோர்த்தவாறே அவர் கிரிவலம் வருகையில் நாராயண நாம ஜபத்தையும் அவ்வப்போது விட்டுவிடாமலிருப்பதற்காகச் சுயசோதனையுடன் நாராயண தியானத்தையும் தொடர்ந்தார். அப்போது உச்சிப்பிள்ளையார் ஒரு சிறுவன் வடிவில் நாரதர் முன் தோன்றி, “என்ன சுவாமி! உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?” என்றுக் கேட்டிடத் திடுக்கிட்டு நிமிர்ந்து ஆச்சரியத்துடன் சிறுவனைப் பார்த்தார், ‘சிறுவன் கேட்பதைப் பார்த்த நாரதர், ‘நமக்கு திருமணமாகவில்லை என்பது அவனுக்குத் தெரியும் போல் தோன்றுகிறதே! இது எப்படி சாத்தியமாகும்?’ என்று வியந்தவாறு “இன்னும் திருமணமாகவில்லை” என்று பதிலளித்தார். சிறுவனின் அடுத்த கூற்று நாரதரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.  .. “ஆஹா! இப்பொழுதான் தெரிகிறது. திருமணம் ஆகாததால் தான் உங்களால் 108 மணிகளைக் கோர்க்க முடியவில்லை., திருமணமாகி இருந்தால் எளிதாக மணிகளைக் கோர்த்து இருப்பீர்கள். திருமணமாகி இருந்தால் பொறுப்புகள் இருந்திருக்கும். பல பொறுப்புகளை நிறைவேற்றிய அனுபவத்தால் மணிகளைப் பொறுப்போடு கோர்த்திருப்பீர்கள் ”, சிறுவனின் வார்த்தைகளை மௌனமாய் கேட்டுக் கொண்டிருந்தார் நாரதர். சிறுவன் தொடர்ந்தான். “சுவாமி! பிள்ளையாரை வலம் வந்து கொண்டே எத்தனை முறை இறை நாமத்தைக் கூறினீர்கள்?” நாரதர் யோசித்துப் பார்த்தார், நிலை குலைந்தார். “பல்லாயிரம் முறை கூறியிருப்பேனே இதில் என்ன சந்தேகம்?” சிறுவன் சிரித்தான்.. “நாரதா! துளஸி மணிகளை நன்றாகப் பார்!” நாரதர் துளஸி மணிகளை ஒவ்வொன்றாகக் கையில் வைத்துப் பார்த்தார்! “ஆஹா! மணிகளில் நாராயணா என்ற நாமம் எழுதப்பட்டிருக்கிறதே! ஆமாம் என்ன இது, மூன்று மணிகளில் மட்டும் “ஓம் கம் கணபதயே நம:” என்றல்லவா இருக்கிறது!” சிறுவன் புன்முறுவலுடன், “பார்த்தாயா நாரதா! நீ பல லட்சம் முறை நாராயண நாமம் ஓதியும் அது 105 மணிகளில் தான் ஏறியிருக்கிறது. அந்த வணிகர் மூன்று முறை மட்டுமே சொன்ன நாமஜபம் மூன்று மணிகளிலும் ஏறியுள்ளது! எண்ணிக்கை முக்கியமல்ல எண்ணமே முக்கியம்”. சிறுவன் மீண்டும் நகைத்தான்.
“உனக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன்., நீ விரும்பினால் கல்யாணம் செய்து வைப்பேன், அப்போது தான் பொறுப்போடு காரியங்களைக் கவனிக்க முடியும்!” என்று கூறி தன் இறைதரிசனத்தை நாரதருக்கு காட்டி அருளாசி வழங்கி மறைந்தார் உச்சிப்பிள்ளையார்! எனவே சுழிக்கோண கஜமுக தரிசனம் திருமணங்களைக் கூட்டுவிக்கும் ஓர் அற்புத தரிசனமாகும். “கல்யாணம் செய்து வைப்பேன்” என்று அன்று நாரதகுரு வரமளித்த உச்சிப்பிள்ளையார் தன் வாக்கிற்கிணங்க இன்று கல்யாண விநாயகர் என்ற திருநாமம் பூண்டு தன்னை தரிசனம் செய்து உச்சிப் பிள்ளையாரை வணங்கும் பக்தர்களுக்கெல்லாம் திருமணப் ப்ராப்தி நல்கி அருள்பாலிக்கிறார். தற்போது கட்டிடங்கள் எழும்பி உச்சிப்பிள்ளையாரைத் தரிசனம் செய்ய முடியாதவாறு சூழ்நிலை இருந்தாலும், கல்யாண விநாயகரை வணங்கி உச்சிப் பிள்ளையாரை மானசீகமாக இவ்விடத்தில் வழிபட்டு ஏழை தம்பதியர்க்குப் பொன் மாங்கல்ய தானம் அளித்து வரத் திருமணத் தடங்கல்கள் நீங்கி நன்முறையில் திருமணங்கள் நடந்தேறும். இதை உலகிற்கு உணர்த்துவதே மேற்கண்ட நாரத லீலையாகும். கல்யாணமாகாத வாலிபர்களுக்கும் இளம் பெண்களுக்கும் ஓர் அருமருந்தாக அமைந்துள்ளது.

திருவெள்ளறை

திருவெள்ளறையில் ஸ்ரீகாயத்ரீ தேவி
ஸ்ரீகாயத்ரீ தேவியின் திருஉருவத்தைக் கோயிலில் காண்பது மிகவும் அரியதாகும். பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயிலில் ஸ்ரீகாயத்ரி லிங்கம் அமைந்துள்ளது. திருச்சி அருகே அன்பில் பகுதியில் காயத்ரீ ஆறும் உண்டு. திருச்சி அருகே திருவெள்ளறையில் ஸ்ரீகாயத்ரீ தேவியின் சிலாரூபம் சுதையில் அமைந்துள்ளது. பிரஹாரத்தில் ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீசாவித்ரீ, ஸ்ரீசரஸ்வதி மூன்று தேவியரும் நின்ற கோலத்தில் சுதைரூபத்தில்  அருள்பாலிக்கின்றனர்.

ஸ்ரீகாயத்ரீ திருவெள்ளறை

ஐந்து முகத்தையுடையவளன்றோ ஸ்ரீகாயத்ரீ தேவி! ஆனால் திருவெள்ளறை வைணவத் தலத்தில் ஒரே சிரசுடன் எழுந்தருளியுள்ளாள். திவ்யமான வைணவத்தலம்! இத்திருத்தலத்திற்கு வந்து ஸ்ரீபெருமானைச் சேவித்து ஸ்ரீகாயத்ரீ தேவியையும் வழிபட்டிருக்கிறார். ஸ்ரீஆதிசங்கரர் ஒவ்வொரு படியையும் இருகரங்களால் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு இத்திருக்கோயிலுக்குள் சென்று வழிபாடு முடிந்ததும் ஸ்வாமிக்குத் தன் பின்புறத்தைக் காட்டாது, ஸ்வாமியைப் பார்த்த நிலையிலேயே  பின்புறமாக நடந்து வந்து அதே நிலையிலேயே  குனிந்து ஒவ்வொரு படியையும் இரண்டு கைகளால் மீண்டும் தொட்டுக் கண்களில் ஒற்றியவாறு வெளிவந்தார். இம்முறையில் இத்திருக்கோயிலில் “படிவழிபாடு” செய்தே உட்சென்று வெளிவர வேண்டும். கோயிலில் ராஜகோபுரத்திற்கு முன் 18 படிகள் உண்டு. இதிலிருந்தே படிவழிபாட்டினைத் தொடங்க வேண்டும். பச்சரிசிமாவுக் கோலமிட்டுப் பெண்கள் இத்திருக்கோயில் படிகளை அலங்கரித்து வர தரித்திர நிலைமாறிடும்.
“தத்ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
 தியோ யோந: ப்ரசோதயாத்”
என்பதே ஸ்ரீகாயத்ரீ மந்திரம். 24 அட்சரங்கள் கூடியது. இதனுடன் ஓம் என்னும் பிரணவமும் பூர் புவ: சுவ: என்னும் வியாஹ்ருதிகள் சேர்ந்து நாம் ஜபிக்கும் ஸ்ரீகாயத்ரீ முழுமந்திரமாகிறது.
ஜாதி, இன குல பேதமின்றி  அனைவருக்கும் பூணூல் உண்டு. இது மதச் சின்னமன்று, மனிதன் தன்னை உணர்ந்து தன் நிலை அறிந்து உத்தம இறைநிலையடைய ஸ்ரீகாயத்ரீ மந்திரமே எளிய உபாயமாகும். இறை நிலையடைதல் மனிதனுடைய வாழ்க்கையை ஒட்டியதேயாம். அவனுடைய பூலோக வாழ்க்கையின் காலப் பரிமாணத்திற்குள் இறை நிலையடைய அவனுடைய உடலை ஒட்டிய பூணூல் தான் உதவுகிறது. எவ்வாறு ஒருவன் அடைகின்ற இன்ப, துன்பங்கள், இறைநிலைகள் அவனுடைய உடல், மன தேகங்களைப் பொறுத்ததோ அதற்காகவே இந்த தேகத்தை ஒட்டியே பூணூல் அமைந்துள்ளது.
ஸ்ரீகாயத்ரீ மந்திரம், பலகோடி சூர்யன்களைப் போல் பிரகாசம் உடையது. எவ்வாறு ஒரு சூரியனையே நம் கண்களால் பார்க்க முடிவதில்லையோ அதேபோல் ஸ்ரீகாயத்ரீயின் பிரகாசத்தையும் நம்மால் உணர இயலாது. ஆனால் எவ்வாறு சூரிய ஒளியின்றி உலக ஜீவன்களின் வாழ்க்கை இல்லையோ அதேபோல் ஸ்ரீகாயத்ரீ மந்திரமின்றி எவ்வித இறை நிலையும் கூடாது!.
திருவெள்ளறையைக் கண்டாயா?

திருவெள்ளறை

திருவெள்ளறைத் திருத்தல தரிசனமின்றி எம்மனித வாழ்வும் முழுமை பெறுவதில்லை. இத்தகைய சிறப்பு திருவெள்ளறைக்கு உண்டு. இப்பூவுலகை விடுத்துச் செல்லும் ஒவ்வொரு ஜீவனிடமும் மேலோகத்தில் கேட்கப்படும் முதல் கேள்வியே ‘திருவெள்ளறை கண்டாயா?” என்பதேயாம். எனவே ஸ்ரீபுண்டரீகாக்ஷப் பெருமாளின் திவ்ய க்ஷேத்திரத்தில் ஸ்ரீபெருமாளுக்குரிய சேவை, ஸ்ரீகாயத்ரீ தேவியின் அபூர்வமான ஒரு முக சுதை ரூபதரிசனம், படிவழிபாடு, “சாஸ்தா திருவடிகள்” எனப்படும் 18 படிகளின் பூஜாமுறை, கோயிலினுள் உள்ள அற்புதமான தீர்த்தம் ஆகியவற்றைக் கண்டு தரிசித்து ஆனந்தமடைந்து ‘திருவெள்ளறையைக் கண்டேன் எம்மிறைவனே!” என்ற விடைக்குத் தயாராகிவிடுவீர்களாக! ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைச் சரிவர ஜபிக்காதோர், ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபத்தை மேற்கொள்ள விரும்புவோர், ஸ்ரீகாயத்ரீ தரிசனம் பெற விழைவோர், ஸ்ரீகாயத்ரீ துதியைச் சரிவரச் செய்யாதோர், ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை முறையாக ஜபிக்காமைக்காகப் பரிஹாரம் பெற வேண்டுவோர்  திருச்சி-துறையூர் சாலையில் உள்ள திருவெள்ளறையில் ஸ்ரீபுண்டரீகாக்ஷப் பெருமாளின் கருணையுடன் ஸ்ரீகாயத்ரீ தேவியை வணங்கி ஒவ்வொரு (காயத்ரீ மந்திர) அட்சரத்திற்கும் ஒரு தானமாக உணவு, ஆடை, காலணி, புத்தகம், மங்களப் பொருட்கள் போன்று 24 விதமான தானங்களை நிறைவேற்றி வர, ஸ்ரீகாயத்ரீ மந்திரப் பொருளை அறியும் திருவழியைப் பெறலாம்! ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வெளிவரும் ஸ்ரீகாயத்ரீ தபஸ் முத்திரைகளை இங்கு ஸ்ரீகாயத்ரீ சிலா(சுதை) ரூபத்தின்முன் முறையாகச் செய்து ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்திட இம்மந்திரத்தின் பரிபூரணப் பலன்களைத் துய்த்து ஆனந்தித்திடலாம், பலன்களும் பன்மடங்காகும்.

தாது வருடம்

தாது வருஷம் – தொடர் கட்டுரை – சென்ற இதழ்த் தொடர்ச்சி’
சென்ற இதழில், உதாரணத்திற்காக மிருகசீரிஷ நட்சத்திர வாக்யம் அளிக்கப்பட்டிருந்தது. இதன் பொதுப் பொருளை மட்டும் அறிவது பெரிதல்ல, அரிய, அறியாத, சக்திவாய்ந்த பீஜாட்சரங்கள் பொதிந்தவையே (ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமுரிய) நட்சத்திர வாக்யமாகும். அந்தந்த நட்சத்திரக்காரர்கள் அவரவர்க்குரித்தான நட்சத்திர வாக்யத்தைத் தினமும் பாராயணம் செய்வது மட்டும் போதாது! உத்தம மந்திரத் துதிகளான இந்நட்சத்திர வாக்யத்தை நுண்ணி, ஆய்ந்து ஆத்ம விசாரம் செய்திடல் வேண்டும். தெளிந்த ஆத்ம விசாரத்தில்தான் அந்நட்சத்திர வாக்யத்தின் பொருளாம் பீஜாட்சர ரகசியங்கள் புலப்படும். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு பீஜாட்சரக் கருப்பொருள் உண்டு. இதில் தான், கம்ப்யூட்டரின் Hard Disk போல, அந்த ஜீவனின் தோற்றம், கர்மவினைப் பகுப்பு, பாவ, புண்ய விகிதாசாரங்கள், பக்தி நிலை போன்றவை பதிந்திருக்கும். இதற்காகவே “சுயநாம ஜபம்” என்ற அரிய தியான, முறையைப் பற்றி முன்னொரு இதழில் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் விளக்கியுள்ளார். அவரவர் நட்சத்திர, ராசி, லக்ன அம்சங்களுக்கும், பெயருக்கும், அவரவருக்குரித்தான பீஜாட்சர மூலத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவேதான் அவரவர் நட்சத்திரத்திற்கேற்ப இன்ன எழுத்தில் அவருடைய பெயரிருக்க வேண்டும் என அறிவிக்கும் “ஜாதக நாம பதக்கம்” என்ற அட்டவணையை பஞ்சாங்கத்தில் காணலாம். எனவே தாது வருடத்திற்குரிய நட்சத்திர வாக்யத்தை, பீஜாட்சரக் கூற்றினை அந்தந்த நடசத்திரக்காரர்கள் ஜபித்தலோடன்றி அதன் நுண்ணிய பொருளை ஆத்மவிசாரம் செய்து அறிந்து தெளிதல் வேண்டும்.
ஆத்ம விசாரம் என்றால்......
அடியார் : ஆத்ம விசாரம் செய்தல் எவ்வாறு குருதேவா?
சற்குரு : நட்சத்திர வாக்யம் மனதில் ஓடிக் கொண்டிருக்க, அதன் ஒவ்வொரு வார்த்தையின் பதத்தை அதாவது ஒலியை மட்டும் உற்றுக் கேட்டிட வேண்டும். ஏனெனில் நட்சத்திர வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளின் ஒலிப்பில் தான் பீஜாட்சரங்களின் சப்த தொனி கேட்டிடும். சொற் பொருள் கடந்த நிலைபோல பொருளை மறந்து சப்த ஸ்வரங்களில் லயிப்பதே பீஜாட்சர தியானமாகும். இவ்வாறு நட்சத்திர வாக்யத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் தியானிக்கின்ற அதன் ஒலியை மட்டும் கேட்கின்ற பயிற்சியைச் செய்து வந்தால் ஆத்மவிசாரம் தானாகவே முகிழ்க்கும். அதாவது நாமாக ஒரு பொருளை ஏற்று ஆய்வதை விட தானாகவே நன்முறையில் ஆத்ம விசாரம் முளைத்தெழும். இது மிகவும் எளிய பயிற்சியே! இம்முறையில் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையை, ஆன்மீகத்தில் ஒரு புதுக்கோணத்தில், அடைகின்ற  ஓர் உத்தம நிலையைப் பெறலாம். இயந்திர கதியில் வாழுகின்ற மனித சமுதாயத்திற்கு இந்த நட்சத்திர வாக்யம் சித்தபுருஷர்களின் அருட்ப்ரசாதமாக அளிக்கப் பெற்றுள்ளது.
ஒரே நட்சத்திரத்தில் பல்லாயிரம் பேர்கள் எனில்?....
அடியார் : ஒரே நட்சத்திரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் இருக்கின்றார்களே, அனைவருக்கும் ஒரே நட்சத்திர வாக்யம் பொருந்திடுமா குருதேவா?
சற்குரு : ஏற்கனவே நாம் எடுத்துரைத்துள்ளபடி ஒவ்வொரு நட்சத்திர வாக்யத்திலும் ஆயிரக்கணக்கான பீஜாட்சரங்கள் நிறைந்துள்ளன. பல சித்த புருஷர்களும் எண்ணற்ற மகரிஷிகளும் தங்களுடைய புண்ய சக்தியை இப்பீஜாட்சர மந்திர ஒலியில் பதித்துள்ளனர். எனவே ஒரே நட்சத்திர வாக்யமானது அதனைத் துதிக்கின்றவருடைய தேக நிலை, புண்ய சக்தி,  பூஜா சக்தி, மனோசக்தி ஆகியவற்றிற்கு ஏற்ப நட்சத்திர வாக்யத்தின் ஆத்ம விசார பாவம் மாறுபடும். பொதுவாக ஒவ்வொரு நட்சத்திர வாக்கியத்திற்கும் சந்திர கிரஹ சஞ்சாரத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. நவகிரஹங்களில் மதிகாரகனாகிய சந்திர பகவானின் பத்தினியரே இருபத்தி ஏழு நட்சத்திர தேவியர் ஆதலின் இங்கு நட்சத்திர வாக்யம் என்றே பொருத்தமாக அமைக்கப்பெற்றுள்ளது. சந்திர கதியானது எவ்வாறு விநாடிக்கு விநாடி மாறுபடுகின்றதோ அதே போல் மனிதனுடைய மனோ நிலைகளும் ஒன்றாக இல்லாது மாறுபடுவதால் நட்சத்திர வாக்ய தியானத்தின் பலன்களும் நிச்சயமாக மாறுபடும். பலன்களை விட, ஆத்ம விசாரத்தையே மனம் நாடுதல் வேண்டும். அவரவர் கர்மவினைகளுக்கேற்ப ஆத்மவிசார பாவமும் வேறுபடும். ஆனால் இவற்றை எல்லாம் எண்ணிக் குழப்பமடையாது ஆழ்ந்த நம்பிக்கையுடன் செயல்பட்டால் தான் தெளிவு கிட்டும். மேலோட்டமாக எதைப் பார்த்திடினும் தேவையற்ற குழப்பங்களே மிஞ்சும்.
அடியார் : குருதேவா! நட்சத்திர வாக்கியத்தைப் பாராயணம் செய்வது முக்கியமானதல்லவா?
சற்குரு: நட்சத்திர வாக்ய பாராயணம் துதி, வழிபாடு மட்டுமல்லாது அதுபற்றிய ஆத்ம விசாரமுமே உத்தம இறைநிலைதனை எளிதில் கூட்டுவிக்கும். இறை தரிசனம், முக்தி, கடவுளோடு ஒன்றுதல், இறைவனோடு இரண்டறக் கலத்தல், வைகுண்ட சேவை, சிவலோக ப்ராப்தி, மோட்சம், ஞானம், உன்னத பக்தி போன்று பலவிதமான இறைநிலைகள் உண்டு. ஆத்ம விசாரம் மூலம் அவரவருக்குரித்தான இறைநிலையை அடைய எளிய வழி தருவதே நட்சத்திர வாக்ய தியானமாகும்.  இதில் உடல், உள்ளம், மனம் யாவும் பீஜாட்சர சப்தங்களிலின் பால் செல்லுமாறு இயக்கப்படுவதால் தேகத்திற்குரித்தான, அவரவர் மனோ(தேக) நிலைக்கேற்ப ஆத்மவிசாரம் கைகூடும்.
ஆத்ம விசாரம்
அடியார் : குருதேவா! ஆத்ம விசாரம் என்றால் ஆத்மாவைப் பற்றிய விசாரம் (ஆய்வு) தானா?
சற்குரு: (சிரித்துக் கொண்டே) சென்னை அருகே திருப்போரூரில் உள்ள முருகன் ஆலயத்தில் ஸ்ரீநடராஜர் சந்நதியின் சுவற்றில் கட்டுசுமந்தான் ரிஷி என்ற ப்ரம்ஹ ரிஷியின் உருவத்தைக் காணலாம். இதுவே அவர் ஜீவசமாதி அடைந்த இடமாகும். எங்கு சென்றாலும் இவர் தன் தலையில் ஒரு பெரிய கட்டைச் சுமந்து செல்வார். அதாவது மற்றவருடைய கர்மவினைகளைத் தன்னுள் ஏற்று, பிணி, பஞ்சம், தரித்திரம், துர்குணம், ஆகியவற்றைப் போக்கி வந்தார். யாரைப் பார்த்தாலும் இவர் ஒரேயொரு கேள்வியைத் தான் கேட்பார்.
“மாட்டிற்குக் கொம்பு எங்கு இருக்கிறது?”
இக்கேள்விக்குத் தகுந்த விடையைப் பெறுதல் கடினம். ஏனென்றால் மிகச் சிறந்த ஆத்ம விசாரத்தை தரும் நட்சத்திர வாக்யமிது. இந்த ஒரே கேள்வியை “நீங்களே உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள்” , விதவிதமான விடைகள் கிட்டும். அதுமட்டுமா, “இது என்ன மிக சர்வ சாதாரணமான, வேடிக்கையான கேள்வி தானே, மாட்டின் கொம்பு அதன் தலையில் தானே இருக்கும் என்றெல்லாம் எண்ணத் தோன்றும்”. “இதனூடே மாட்டிற்குக் கொம்புகள் எங்கே என்றல்லவா பன்மையில் கேட்க வேண்டும். எண்சாண் உடம்பிற்கு சிரசேப்ரதானம் என்றால் கொம்பின் உச்சி மாட்டின் சிரசாகின்றது. மாட்டின் எந்த கொம்பைப் பற்றிக் கட்டும்சுமந்தான் ரிஷி கேட்கிறார். மாட்டிற்கு ஏன் இரண்டு கொம்புகள், குதிரையைப் போல் கொம்புகள் இல்லாமல் இருக்கக் கூடாதா – மனிதன் கட்டைத் தலையில் அல்லவா சுமக்கின்றான். ஆனால் மாடு உடலில் அல்லவா சுமக்கின்றது. அப்படியானால் கொம்புள்ளதற்கு ஐந்து, குதிரைக்குப் பத்து என்ற வாக்கியங்களின் பொருள் என்னவோ? – என்று பலவிதமான காரணங்களுடன் மனிதன் திகைத்திருக்க கட்டுசுமந்தான் ரிஷி அவன் தலையில் இரண்டு தட்டுத் தட்டிவிட்டு சென்றுவிடுவார். உடனே அவனுக்கு தலையில் இரண்டு இடங்களிலும் கொம்பு முளைத்தாற்போல் ஓர் உணர்ச்சி எழும்! உடனே அவன் உடலைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நிற்பான்! அதற்குள் அவனுடைய பசி, பிணி, ரோகம், பறந்தோடிவிடும். ஒருவேளை தன் அற்புதமான தெய்வீக சக்தியை வெளிக்காட்டாது தன்னை அண்டி வருகின்றவரை “மாட்டிற்கு கொம்பு எங்கு இருக்கிறது” என்ற ஒரே கேள்வி மூலம் அவனுக்கு பல தியான நிலைகளை அவனை அறியாமலேயே ஊட்டி விடுகிறாரா?. அவன் அவ்வாறு தன்னை மறந்த நிலையில் நிற்கையில் தன் தெய்வீக சக்தியை அவனுள் புகுத்தி அவன் துன்பங்களைக் களைந்து அவனுடைய கர்மவினைகளைக் “கட்டாகத்” தன் தலையில் ஏற்று அவ்விடத்தை விட்டு விரைவாகச் சென்றுவிடுகின்றாரோ!
திருவாய் மொழி மஹிமை
பாருங்கள், ஒரேயொரு சாதாரணமான கேள்வி எத்தகைய ஆத்ம விசாரத்திற்கு வித்திடுகின்றது. காரணம் அது சாதாரணக் கேள்வியன்று, உத்தம மகரிஷியாம் கட்டுசுமந்தான் ரிஷியின் திருவாயிலிருந்து மலர்ந்த அற்புத சக்திவாய்ந்த நட்சத்திர வாக்கியமாகும். இப்பொழுதாவது தெரிகிறதா, நட்சத்திர வாக்யத்தின் மஹிமை! எனவே ஆத்மவிசாரத்திற்காக இதை நன்கு பயன் படுத்திக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் பெறற்கரிய வாய்ப்பு இது. ஆழ்ந்த நம்பிக்கையே அதாவது குருவாய் மொழி மீது கொண்ட நம்பிக்கையே இதற்கு பலத்த அஸ்திவாரமாகும். எனவே உங்களுக்குரித்தான நட்சத்திர வாக்யத்தை நன்கு தியானித்து ஆத்மவிசாரம் செய்திடுக,  அனைத்தும் தானே விளங்கும்.
தாது வருட – நட்சத்திர வாக்கியங்கள்
தாது வருடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய சித்த புருஷர்களுடைய நட்சத்திர வாக்கியங்களை ஈண்டு அளிக்கின்றோம். 1.4.1996 தாது வருடப் பிறப்பு முதல் 365 நாட்களிலும் ஒவ்வொரு நட்சத்திரக்காரரும் எதிர்கொள்ள வேண்டிய கர்மபரிபாலனங்களைப் பற்றிய சூட்சுமமான வெளிப்பாடே சித்தர்களுடைய பரிபாஷை கூடிய இந்நட்சத்திர வாக்யங்களாகும். அனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காட்ட வல்ல “அகஆடியே” நட்சத்திர வாக்கியங்களாகும்.
“நான் யார்?”
“இறைவன் யார்?”
“உள்ளே உறையும் பொருள் யாதோ?”
“பிறவித் தளையறுக்கும் எளிய வழியாதோ?”
“ஜீவ வாழ்க்கையின் பொருள் என்ன?”
“இன்ப துன்பம் மாறிவருவதன் காரணமென்ன?”
இவ்வாறாக நம்மை நாமே உய்த்துணர, இதற்கு இடையூறாக இருக்கும் துன்பங்களைக் களைய நட்சத்திர வாக்யங்களை உண்ணித் துதித்து, ஆத்மவிசாரத்தில் மூழ்கி மோட்ச முத்தினைப் பெறுவீர்களாக!
நட்சத்திரம்
அஸ்வினி – கனக நிலையுடன் கருத்தூன்றி வாழ்வாய்
பரணி – பாலூட்டிப் பெருவாழ்வு பள்ளி கொண்டானுக்கே
கார்த்திகை – நிலையான சொந்தமுடன் நெடுங்குற்றம் காணாமல் வாழ்ந்திடுவாய்
ரோகிணி – பேச்சிலே பாசமுடன் பகுத்துணர்ந்து பாவ வினையை அறுத்திடுவாய்
மிருகசீரிஷம் – குழுதனைக் கூட்டி வாழுவாய்
திருவாதிரை – கேளப்பா குறிப்புடனே குறித்த ஒரு சம்பவத்தைப் புரிந்த புரிந்து கண்டு நீ தெளிந்திடுவாய்.
புனர்பூசம் – ஆமப்பா அதுதான் கேளு அந்தமுடன் சொந்தமாய் ஆகி பந்தமெலாம் எந்தமும் இருக்கும் நித்தம் நீ நினைத்து வாழ்ந்திடுவாயே
பூசம் – நன்றிதனைக் கொன்றார்க்கு நலமிகு வாழ்வுகாட்டி இன்று நீ அன்று போல என்றும் நீ இருந்திட தொடர்ந்து நீ பழநினைவைக் கூட்டிக் கண்டிடுவாயே!
ஆயில்யம் – ஆமப்பா அதுதான் கேளு நாமத்தால் வந்த வினை நல்லாதாரு நாக்கினிலே சொன்னவினை எந்த வினைக்கு முன்னுரிமை கொடுத்தாயோ அந்த வினையை கவனித்து வாழ்வாயே!
மகம் – நீயாச்சு உன் நிலையாச்சு எங்ஙனுமே யோசித்து எங்காச்சு உண்டவரை என்று எண்ணியாச்சு தன்னை நீ பகுத்தறிந்து பார் நலமுடனே வாழ்ந்திடுவாயே!
பூரம் – மாறுகொண்டோருடன் கூறு போடாதே
உத்திரம் – ஊருக்காகப் பேசி நீ வாழ்ந்தால் உனக்காக ஏது செய்தாய் என்றெண்ணி நிலையான காலை ஊன்றிடவே வழி செய்து கொள்வாய் நன்றே!

நட்சத்திர துதி ஓத உகந்த தலம்
திருமங்கலம் லால்குடி

ஹஸ்தம் – அல்லப் பல பட்டு அலைந்திருந்தாலும் சொல்லில் வந்ததே சுயவினை தானறிந்து எண்ணிய காரியத்தை எதிர்பார்த்திடாமல் செய்து முடித்திடுவாயே.
சித்திரை – பகுத்துணரும் பண்புளோரை பாசத்திற்கு அடிமையாக்கி சிகையில் பிறண்டிடுவாய் கவனமாய் யோசித்துக் கடமையை ஆற்றுவாய்.
சுவாதி – சொல்லொண்ணாத் துயரெல்லாம் தொடர்ந்துன்னை வந்திட்டால் சுயமாக நம்பியவரை நம்பியவரைச் சோதித்து நற்காரியம் செய்திடவே நலமுடன் வாழ வழி தேடுவாயே!
விசாகம் – ஆமப்பா அந்தமெல்லாம் அறிந்திட முனைந்தாலும் நிந்தனையோ வந்தனையோ சேர்ந்து நீ கண்டிடுவாய் சொல்லது பிறண்டு போனாலும் சுயநினைவுடன் ஆற்றிடுவாய் செயல்தனையே!
அனுஷம் – ஆபத்சகாயனை அனுதினமும் இரக்ஷி.
கேட்டை – போட்டியிட்டோர் பால் போய்ச் சேராதே.,
மூலம் – பெருத்த சாதனையைப் பொறுத்திருந்து கொள்.
பூராடம் – பொல்லாப்பு எல்லாமே பொருந்தி அணைந்து வந்திடாமல் எல்லாப் பொல்லாப்புகளையும் இல்லாப் பொல்லாப்புடன் சேர்ந்து இக்கணம் இன்று நீ எழுந்து நீ அறிந்திட வழி செய்திடுவாயே!
உத்திராடம் – உன்னையே நீ எண்ணி நீ உருவகித்து தன்னையே மறந்து தனித்து நீ ஏங்கிடாமல் பலரால் உறவோடு நல்சொல்லோடு சேர்ந்த குழுவோடு வாழ்ந்திடு நன்றாய்!
திருவோணம் – ஓடம் போல் மிதந்து நீ ஓரிடத்தில் ஒதுங்கிடத் தெரிந்திடாமல் பாரினில் பல கவலை வைத்திருந்தாலும் போரினில் சேர்ந்திடாது புரிந்து நீ வாழ்க்கையை வாழ்ந்திடுவாயே!
அவிட்டம் – எண்ண முகத்தில் எண்ணிய எண்ணமெல்லாம் திண்ணியது குழைந்து அது குறைந்து போகும் நிலை வந்தாலும் கூற்றினுக்குச் சொல்லும் வரை குட்டிபோல் ஆக்கு நீ நன்றாயே!
சதயம் – சங்கொலி கேட்குதப்பா நாதனொருவன் காதிலே நல்லதொரு வேதங்களை விவரிக்க இயலாது சொல்லு மதயானையும் சொல்லாமல் உன்னை மயக்கினாலும் அல்லல் பட்டாலும் அணைந்து வாழ்வாயே!
பூரட்டாதி – புரியாத சுகபோகம் சுற்றி வந்தாலும் சுந்தரா நீயும் சூட்சுமமாய் அறிந்து கொள் பின்னே வற்றிவிடும் வந்த போகர் ரகசியமெல்லாம்
உத்திரட்டாதி – அலுத்து உளுத்துப் போனாலும் உளுத்த பொருள் காய்ந்து போகாது எண்ணிய பொருள் ஏக்கமுடனே எடுத்திடு முன்னே எண்ணி நீ எடுத்து வாழ்ந்திடுவாயே!
ரேவதி – எல்லாத் தொல்லையும் ஏற்று ஏற்று இளைத்துப் போனாலும் கல்லாத நிலைகளெல்லாம் கடவுள் காட்டிய வழியைக் கொண்டு சொல்லாத நாள் அவன் நாமம் இல்லையென வாழ்ந்திடுவாயே.!

தாது வருடத்திற்குரித்தான ராக தாளங்கள்
கடந்த இரண்டு இதழ்களிலும் தாது (தாத்ரு) வருடத்திற்குரித்தான ஸ்ரீரஞ்சனி, தோடி, கௌள ராகங்களில் முறையே ஆதி, ஆதி, மிச்ர சாப தாளங்களில் கீர்த்தனைகளைப் பாடி வந்திடில் பித்ருக்ளின் ஆசியைப் பெற்றிடலாம் என்பதை நன்கு விளக்கியிருந்தோம்.
இம்மூன்று ராகங்களும் மனிதனுடைய தேகத்தில் தாது சக்தியைப் புகட்டும் தெய்வீகத் தன்மை கொண்டவை! ஆதி, மிச்ர சாப தாளங்கள் முறையே நரம்பிற்கும், நாளங்களுக்கும் வலுவூட்டுகின்றன! அதெப்படி மிருதங்கம், தபேலா, கடம் வாசிப்போருக்குத்தானே, நாடி, நரம்பு, நாளங்களுக்கு சக்தியுண்டாகும் என்று கேட்டிடலாம். வெறும் கண்ணசைப்பின் மூலம் கண்ணாடித் தம்ளரை உடைக்கும் மனோசக்தி உடையோரைப் பற்றி நாமறிந்துள்ளோம். ஸ்ரீஅகஸ்தியர் மீட்டிய வீணையிசையினால் கல் மலையே கரைந்தது கண்டு வியந்து நின்றானே இராவணன், அதே போல, ஏழு ஸ்வரங்களுக்குள் அடங்கி நிற்கும் இசைக்கு மனிதனுடைய தேகப் பரிமாணங்களில் அதிஅற்புதமான முறையில் பல மாறுதல்களை ஏற்படுத்தும் அபூர்வ சக்திகள் உண்டு. கோடி கொடுத்தாலும் தேடிக் கிடைக்காத தோடி ராகத்தில் தான் எதிர்விளைவுகள் தணியும், குடும்பத்தில், அலுவலகத்தில் எதிர்ப்புகள் குறைந்து வருடக் கணக்கில் பைசலாகாமலிருக்கும் வழக்குகளுக்கு ஒரு நன்மையான முடிவு ஏற்படும், தோடி ராகத்தில் இசைபாடி வந்திடில்! ஸ்ரீரஞ்சனி ராகம், மனதிற்குச் சாந்தத்தை அளித்து இரத்த அழுத்த நோய்களைத் தணிக்கின்றது. குடும்பத்தில் தம்பதிகளிடையே பூசல்கள் மறைந்து ஒருவர்க்கொருவர் மனம்விட்டுப் பேசுகின்ற நன்னிலை உண்டாகும். கௌளராக இன்னிசையானது வாழ்க்கையில் விரக்தி நிலையோடு ஏனோதானோவென்று வாழ்கின்ற குடும்பத் தலைவர்கள் பலருண்டு! இவர்களுடைய மேன்மைக்காக, குடும்பத் தலைவியர் கௌள ராகப் (மிச்ரசாப தாளம்) பாடலைத் தாது வருடம் முழுவதும் அடிக்கடி இசைத்து வந்திடில், குடும்பத் தலைவர்களுக்குப் பொறுப்பேற்பட்டு ஆனந்தமயமான குடும்பச் சூழ்நிலையையும் எளிதில் பெறலாம்.
“எனக்குப் பாடத் தெரியாது, நான் ஞானசூன்யம், என் குரலுக்கும் இசைக்கும் ஏழாம் பொருத்தம்” – என்று பலர் ஒதுங்கிவிடலாம். இது தவறு! தேவாரம், திருவாசகம், திருப்புகழில் மிகமிக எளிமையான பாடல்கள் உள்ளன. நல்ல இசைத் தட்டுகளும் உள்ளன. இருக்கின்ற குரல் வளத்தில், எவ்வளவு நன்றாகப் பாட முடியுமோ அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். முயற்சி செய்வது நம் கடமை! கடமையைச் செய்திடுக!

பித்ரு தர்ப்பணங்கள்

பித்ரு தர்ப்பணத்தின் முக்யத்துவத்தை வலியுறுத்திக் கடந்த பல “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழ்களில் எடுத்துரைத்துள்ளோம், தற்போது புத்தக வடிவில் “அமாவாசனைத் தர்ப்பணங்கள்” பற்றிய மந்திரங்கள், விளக்கங்கள் உள்ளனவெனினும் காலா காலத்தில் சுருங்கி அமைந்த, இடைச் செருகல்கள் நிறைந்தவையாகவே அவை காணப்படுகின்றன. உண்மையில் இறந்தவருடைய தொழில், இறப்பின் வகை (நோய், விபத்து, தற்கொலை, ஹார்ட் அட்டாக் etc.)  இறந்தவருடைய தேக அமைப்பு போன்றவற்றைப் பொறுத்தும் தர்ப்பண விதிகள் மாறுபடும். தக்க சற்குருவை நாடி இவ்விளக்கங்களைப் பெற்று உன்னதமான பலன்களைப் பெற்றிட வேண்டுகிறோம்.
உதாரணமாக சிவில் என்ஜினியராக ஒருவர் வாழ்ந்து இறந்திடில், அவருடைய பெரும்பாலான கர்மவினைகள் கட்டிடத் துறையைச் சார்ந்திருக்குமாதலின் அவருக்குக் குறித்தத் தர்ப்பண முறையில் அமாவாசை/கிரஹண/சிராத்தத் தர்ப்பணங்களை அளித்தால் தான் அவற்றின் பலன்கள் நன்கமையும். எந்தெந்தத் துறையைச் சார்ந்து வாழ்ந்து இறந்தோர்க்கு எவ்வகைத் தர்ப்பண முறை சிறப்பானது என்ற சித்த புருஷர்களின் ஆன்மீக இரகசியங்களை இங்கு அளிக்கின்றோம். அன்பர்கள் இவற்றை அறிவதோடன்றி ஏனையோரும் நற்பலன்களையடைய, சுயநலமற்ற முறையில் இவற்றைப் பரப்பிக் கடைமையாற்றிட வேண்டும். இதன் பலன்கள் சமுதாயத்தின் அனைத்து வகையினருக்கும் சென்றடைந்தால் தான்சாந்தமான சமுதாயத்தைப் பெறமுடியும்.

துறை

 தர்ப்பண முறை

கட்டிடத் துறை (பொறியாளர்கள், காண்டிராக்டர்கள், தொழிலாளர்கள் etc.)

குபேர திக்கிலுள்ள (வடக்கு) சிவலிங்கம் முன் தர்ப்பணம்.

கப்பல் துறை

தாமரையிலையில் அரிசியைப் பரப்பி தர்பை வைத்துத் தர்ப்பணம், தாமரையிலை நீரை பூமியில் விடாது தர்ப்பண நீரை ஓடுகின்ற நீரில் சேர்க்க வேண்டும்.

ஹோட்டல் துறை

பாசிப் பருப்பினைப் பரப்பி இதன் நடுவில் கருப்பு (முழு) உளுந்தினைப் பரப்பி இவற்றின் மேல் தர்பையை வைத்துத் தர்ப்பணம் பாசிப்பருப்பு வட்டம் பெரியதாகவும் உளுந்து வட்டம் சிறியதாகவும் இருக்க வேண்டும்.

இறப்பு முறை

 தர்ப்பண முறை

ஹார்ட் – அட்டாக்

ஹார்ட் அட்டாக்கில் இறந்தவர்களுடைய நல்ல ஏக்கங்கள் நிறை வேற்றப்பட வேண்டும். மந்தாரப் புஷ்பங்களைப் பரப்பி அதன் மேல் தர்ப்பைகளை வைத்துத் தர்ப்பணம்.

விபத்தால் இறப்பு (இரண்டு சக்கர வண்டிகள்)

சக்கரத்தாழ்வார் சந்நதியில் தர்ப்பைகளைப் பரப்பி இதன்மேல் நவதான்யங்கள், தர்பைகளை வைத்துத் தர்ப்பணம்.

மூன்று சக்கர வண்டிகள் (auto etc...)

அனுமார் சந்நதியில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம்.

நான்கு சக்கர வண்டிகள் (Four wheelers)

சுதர்சன ஆழ்வார் பத்னியுடன் இருக்கின்ற சந்நதியில்/தெய்வத் திருஉருவப் படத்திற்கு முன் மேற்கண்ட முறையில் தர்ப்பணம்.

பஸ், லாரி etc. (Heavy vehicles)

தர்ப்பைப் பாயில் முத்து (pearl) அல்லது முத்து வைத்த ஆபரணம் வைத்து இதன்மேல் தர்ப்பைகளைப் பரப்பித் தர்ப்பணம்.

இன்னும் நிறைய பித்ருத் தர்ப்பண ரகசியங்கள் உண்டு விளக்கங்கள் வேண்டுவோர் “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” அலுவலகத்திற்குக் கடிதம் மூலமாகத் தொடர்பு கொள்ளவும். ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் பித்ரு தர்ப்பணங்களைப் பற்றிய அற்புதமான விளக்கங்கள் காணப்படுகின்றன.
ஆத்ம விசாரத்தில்....
அடியார் : பிறப்பு என்பது புரியாததாக இருக்கிறதே, குருதேவா?
சற்குரு : சொல்லிப் புரிவதில்லை, அப்பனே பிறப்பின் ரகசியம்! இது சற்குருவால் தொட்டுக் காட்டப்பட்டு உள்ளத்தால் உணரும் நிலையிது! ஆனால் இதனை எளிதில் புரியும்படி செய்ய ஒரு வழி உண்டு. அதாவது உலகில் நடக்கும் ஒவ்வொரு அசைவிற்கும் கோடிக்கணக்கான இலை, தழை, காய், கனி, தூசிக்கும் – இவை அனைத்தும் அசைவதற்கும், அசையாமலிருப்பதற்கும் காரண காரியங்கள் உண்டு என்பதைத் தெளிவோடு மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஆறு மலையில் உருவாகி எங்கெங்கோ ஓடிக் கடலில் சேர்கிறது. ஆற்று நீரை ஒரே ஜீவனாக் கருவது கிடையாது. ஆற்றின் மழையின் ஒவ்வொரு நீர்த்துளியும் ஒரு ஜீவனே!
1. இதில் எவ்வளவு நீர் பயன்பட வேண்டும், எவ்வளவு நீர் கடலில் சேர வேண்டும்.
2. எவ்வளவு நீர் பாசனம், கிணறு, பூமியில் உறிஞ்சப்படுதல், காற்றின் மூலம் மேகமாதல், குடிநீர், கழிவுநீர் உபயோகம்.
3. மழைத்துளிகளில் ஒவ்வொரு செடியிலும் எவ்வளவு நீர்த்துளிகள் விழவேண்டும், காற்றால் எவ்வளவு அடித்துச் செல்லப்பட வேண்டும்.
4. இதுமட்டுமா, ஒவ்வொரு நீர் துளிக்கும் ஒரு பெயருண்டு!
-போன்ற அனைத்துமே இறைவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கோடி கோடியாம் நீர்த் துளிகளின் விதியினை இறைவன் வகுத்துள்ளார் என்றால்... இப்போது சொல்லுங்கள் இதைப் புரிந்து கொள்ள உனது அறிவு, மனம், உள்ளம், போதுமா? எனவே நன்முறையில் மட்டும் ஆத்மவிசாரம் செய்து, தேவையற்றவற்றை நினைத்து குழம்பாமல், குருவைத் தேடுவீர்களாக, ஏனென்றால் அவரே அனைத்தும் அறிந்தவர்.
அடியார் : குருவே! கங்கை,காவிரி போன்ற புண்ய நீர்த் துளிகள் ஏற்கனவே உத்தம நிலைமை அடைந்தவையா? (Elevated souls)
சற்குரு : ஒரு புழு, நல் வண்டாய் மாறுவது உன் வழக்கில் elevation ஆகும். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு மோட்சம் அல்லது உன் பாணியில் elevation தரவல்ல கங்கை, காவிரி, நீர்த்துளிகள் வெறும் elevated souls தானா! உண்மையில் கங்கை, காவிரியின் நீர்த்துளிகள் அனைத்தும் சித்த புருஷர்கள், யோகிகள், ஞானியரின் அருள் திரட்சியே!
அடியார் : அப்படியானால் இந்த ஆறுகள் “pollute”ஆவதாகக் கூறுவதேன்?
சற்குரு : பல இடங்களில் கழிவு நீர் இவற்றில் சேர்கின்றன. கழிவு நீராகப் புறக் கண்களுக்குத் தோன்றுகின்றது! அடியேன் என் குருநாதர் ஸ்ரீ-ல-ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளோடு கால் நடையாக பாரதத்தின் பல பகுதிகளுக்குத் திருத்தல யாத்திரை செல்லும் வாய்ப்பு கிட்டியது. அவ்வாறு செல்கையில் சதுரகிரி மலையிலும், திருஅண்ணாமலையில் பன்றிப் பள்ளப் பகுதி இரண்டிலுமே “மலப் புழுச் சித்தர்” என்ற அரிய சித்த புருஷரைத் தரிசித்துப் பேசி, அவரிடம் ஆசிபெறும் பாக்யமும் குருவருளால் கிட்டியது..
“ஏண்டா அந்தச் சித்தரு உனக்கு என்ன கொடுத்தாரு” 
“வாத்யாரே! எனக்கு ஆசிர்வாதம் பண்ணினாரு”
“அடடே அப்படியா, எனக்கு ஒண்ணும் தரலியே, உனக்கு மட்டும் ஆசிர்வாதம் கிடைக்கும் யோக்யதை இருக்கா என்ன?”
இவ்வாறு என் குருநாதர் கேட்டதும் எனக்கு சுருக்கென்று முள் தைத்தது போலிருந்தது. அன்று என் குருநாதர் அவரை “மலப்புழுச் சித்தர்” என்று தொட்டுக் காட்டியிராவிடில் அவரை ஒரு பையத்தியம் என்றே எண்ணியிருப்பேன், காரணம், திருஅண்ணாமலையில் பன்றிப் பள்ளத்தில் இருபது, முப்பது பன்றிகளோடு மலத்தைத் தேடி, கிண்டி மலப்புழுவை உண்டு கொண்டிருந்தார்! என் குருநாதர் சொல்லியபடியே, நாறிக் கொண்டிருந்த (உண்மையில் அது நாற்றமில்லை, வெறும் மாயையே) அவருடலைத் துடைத்து ஆடைகளை மாற்றி, அருகில் உணவு சமைத்துப் பலருக்கும் அன்னமிட்டு அவரிடம் சென்றபோது எனக்குக் கிடைத்த ஆசி என்ன தெரியுமா? சிறிது மலத்தை எடுத்து என் உடலில் பூசி “மோந்து பார்” என்று அவர் சொல்ல, என் உடலோ பாரிஜாத செண்ட் பூசினாற் போல் மணமணத்தது! சிறிது மலத்தையெடுத்து என் குருநாதர் திருவாயிலும் என் வாயிலும் சிறிது வைத்தார். அப்பப்பா... அது மதுரமாக, அமிர்தமாக இனித்தது! உலகத்தின் கண்களுக்கு Pollution! ஆனால் சித்தபுருஷர்களின் லீலா விநோதங்களை எந்த விஞ்ஞானத்திற்குள் அடக்க முடியும்? பூண்டி மஹான் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை, ஆனால் ஒரு நாற்றமும் கிடையாது! கழிவு நீர்ப் பகுதி என்று ஒதுக்குகின்றோம், அதில் எத்தனை வண்டுகள், கரப்பான்கள்! – அனைத்தும் இறைவன் செயலே” கங்கையும் காவிரியும் Polluted ஆகத் தெரிவது புறத்தளவே! அகக் கண் கொண்ட சற்குருவை நாடித் தெளிவு பெறுக!

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வாவின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள் – செஞ்சிமலை அனுபவத் தொடர்ச்சி..)
அந்த பயங்கரமான உருவத்தைக் கண்டு கலங்கினான் சிறுவன். பெரியவர் அவனுக்குப் பல கொடிய பேய், பிசாசுகளின் அகோரமான ரூபங்களைப் பற்றி நன்கு விளக்கியிருந்தார். மயானங்களில் சில சுடலைப் பேய்களின் காட்சிகளையும் பெற்றுத் தந்திருக்கிறார். இவையெல்லாம் ஆன்மீகத்தில் மன உறுதியுடன் செயல்படுவதற்கு உரித்தான அனுபவங்கள் ஆகும்.
“டேய்! நீ பெரியவனாகும் போது பல துஷ்ட சக்திகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். கலியுகத்தில் காலப் போக்கில் எதிர்வினைச் சக்திகளே (negative forces) பல்கிப் பெருகும். குறிப்பாக ஆன்மீகவாதிகளுக்குத்தான் பல சோதனைகள் ஏற்படும். கொல்லிவாய்ப் பிசாசுகளை விட, கோரமான குணங்களை உடைய பல தீய சக்திகள் தெய்வீகத்தில் உறுதியாக இருப்பவர்களை பாதிக்கும். இறுதியில் நற்சக்தியே (white or positive force) வெற்றி பெறும் என்றாலும் அதற்குள் அவர்கள் பல சோதனைகளைக் கடக்கவேண்டியிருக்கும். இதற்காகவே, உனக்குப் பல கடினமான சோதனைகளைத் தரப்போகிறேன். ஒவ்வொரு அனுபவத்தின் விளைவுகளும் பல ஆண்டுகளுக்குரித்தான மனோதிடம், உறுதியான வைராக்கியம், ஆழ்ந்த இறை நம்பிக்கையைத் தரும்”.
சிறுவனுக்கு இமைப்பொழுதில் இந்த நினைவுகள் நிழலாடின.

செஞ்சிலை

... சிறுவன் நடப்புலகிற்கு மீண்டான். “அப்பப்பா, எவ்வளவு பயங்கரமான உருவம்! பார்த்தாலே ரத்தம் உறைந்துவிடும் போலிருக்கிறதே” .... அவ்வுருவம் அருகில் நெருங்க நெருங்க.. பழைய நினைவுகள் கொஞ்சம் அரும்பிடவே சிறிதே தைரியம் கைகூடியது. எனினும் அக்கோரமான ரூபத்தின் அசைவுகள் பயங்கர பீதியைக் கிளப்பின. அவன் கால்கள் நகர மறுத்தன! கண்களும் குத்திட்டு நின்றன! அவ்வுருவத்தைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டதோ! ஆமாம், வாத்யார் சொல்லிக் கொடுத்த மந்திரங்கள் என்னவாயின! அவை மறந்து போய்விட்டனவா? ஏனைய சந்தர்ப்பங்களில் கைக்குதவிய மந்திரங்கள் இச்சமயத்தில் நினைவிற்கு வராதது ஏனோ? அச்சத்தை மீறி அவை வெளிவராது நின்றிடுமோ?
(இதற்கான விளக்கங்களைச் சிறுவன் பின்னர் பெரியவரிடம் கேட்டுப் பெற்றான். குருமூலமாக பெறும் மந்திரங்களை எப்போதும் ஜபித்து வந்தால் அவை உடலில் பல அவயங்களில் ஒன்றி நிற்கும். தேவையானபோது அவ்வப்போது தானாகவே அம்மந்திர சக்தி வெளிப்படும். ப்ரயோகிக்க வேண்டிய அவசியம் இராது. ஆனால் குரு அருளிய எண்ணிக்கையில் உச்சாடனம், ஜபம், த்யானம், புரஸ்சரணம் செய்திருக்க வேண்டும்.)
நடக்க மறுத்த கால்களை அனிச்சையாக நகர்த்திடவே சிறுவன் தடால் எனக் கீழே விழுந்தான். விழுந்த உடனேயே ஏதோ கனவுலகில் மிதப்பது போன்ற ப்ரமை ஏற்பட்டது. உருண்டவாறே எழ முயன்றான். புரண்டவாறே பெரியவர் இருக்குமிடத்திற்குச் செல்ல எத்தனித்தான். நூறு முறை உருண்டும், ஒரு முறை மட்டுமே ஏதோ கொஞ்சம் அசைந்தது போல் இருந்தது அவ்வளவே உடல் முழுதும் வியர்த்துக் கொட்டிட மேலும் மண்ணில் புரண்டான் சிறுவன். உருண்டு புரண்டு பெரியவரின் உடலருகே வந்து சேர்ந்தான் அல்லது ஏதோ ஒருதெய்வ சக்திதான் அவனைப் புரட்டியதோ! பல்லாயிரம் அடிகள் உருண்டது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. சிறுவன் பெரியவரின் பாதங்களைப் பற்ற முயன்றான். பல முறைத்தொட்டும் தொடாதது போன்ற உணர்வு! கண்ணில் நீர் மல்கியமையால் ஏதும் புரியவில்லை. “வாத்தியாரிடம் வந்து சேர்ந்து விட்டோம்” என்ற எண்ணம் வந்தவுடனேயே அலாதியான ஒரு தைரிய உணர்வு ஏற்பட்டிடவே சிறுவன் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். இதுவரையில் அது ஒரு பயங்கரமான உருவம் என்ற நினைவில் உழன்றவன் இப்போதுதான் ஓரளவேனும் அதனை நன்றாகப் பார்த்தான். நாயைப் போன்று மூன்று தலைகள்! நாயின் உடல், பாம்பைப் போன்ற வால்! அதன் மூன்று முகங்களின் வாயிலிருந்தும் ரத்தம் சொட்டியது. ஆனால் மிக அமைதியாகவே சிறுவனை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது.

“வருவது வரட்டும் வாத்யாரின் உடலைக் காப்பதே முதல் பணி”- என்று எண்ணியவாறே நடுங்கும் கரங்களால் அவன் பெரியவரின் பாதத்தைப் பற்றி இயன்றவரையில் அவர் உடலைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். ஒருபுறம் பார்த்தால் ஏதோ கனவுலக சம்பவங்கள் போல் பயங்கரமான சூழ்நிலை தோன்றியது. மறுபுறம் உண்மையிலேயே அக்கொடிய உருவம் தன் கூரிய நகங்களால் சிறுவனின் உடலை கீறிப் பிறாண்டியது. பாம்பினுடைய வால் போல் சுழற்றி அடித்து, கால் நகங்களினால் குத்தி அச்சுறுத்தியது. கூரிய பற்களை முதுகில் வைத்து அழுத்தியும் அவ்வுருவம் சிறுவனைப் படாதபாடு படுத்தியது. அதன் பற்களின் விஷம் ஏறிடவே சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் சுயநினைவை இழக்கலானான். . .....அதற்குப் பின் என்ன நிகழ்ந்ததோ யார் அறிவார் அதனை!
சிறுவன் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். இந்நிலையிலேயே அவன் எத்துணை நாட்கள் கிடந்தானோ! மிகுந்த அசதியுடன் நடந்தவற்றை எண்ணியவாறே எழ முயற்சித்தான். நடந்தது அனைத்தும் கனவுதானோ! ஆனால் அவன் உடல் எங்கும் பரவிக் கிடந்த ரணமான காயங்கள் தான் நடந்தவற்றுக்கு சாட்சியாம்! உண்மையில் இரண்டு நாட்கள் இந்நிலையிலேயே கழிந்துவிட்டன. சுற்றுப்புறத்தை ஆராயுமுன்னரே அவன் கண்களில் பட்டது அக்குரங்குக் குட்டிதான்! “சமயத்தில் உதவாது  என்னை பூதத்திற்கு இரையாக விட்டுவிட்டாயே” – என்று கேட்டிட எண்ணிய சிறுவன் உடனே அதை மாற்றிக் கொண்டான். காரணம், ஒருவேளை இக்குரங்குதான் தன்னைக் காப்பாற்றியதோ என்ற எண்ணம் வந்ததேயாகும்.
அப்போது தான் சிறுவன் அக்குரங்குக் குட்டியின் அருகில் இருந்தவரைப் பார்த்தான்.. “இது என்ன புது முகமாக இருக்கிறதே!” ஆறு அடிக்கு குறையாத உயரம்! நீண்ட வெந்நிற தாடி ப்ரகாசிக்கும் கண்கள்! தவத்தில் மிளிரும் முகம்! ஒளிரும் கொண்டை முடித்த தலை சிகை! மஞ்சள் நிற ஆடையில்  அவர் தவசீலராய்த் திகழ்ந்தார்! கழுத்தில் கதிரவனைப் போல ப்ரகாசிக்கும் ருத்ராட்ச மாலை!  அவருடைய தீர்கமான கண்களைப் பார்க்க இயலாது. சிறுவன் தலை குனிந்துக் கொண்டான்.. அப்பப்பா! என்னே ஜோதிமயமான தேகம்! சிறுவனுக்குக் கொஞ்ச கொஞ்சமான தெளிவு பிறந்தது! இதையெல்லாம் அவ்வெண்ணிய தாடி தபஸ்வி உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். இப்போது தான் தன்னையே பார்த்தான் சிறுவன்!
ஒரு பெரிய மரத்தொட்டி! அதனுள் மூலிகைச் சாறு தைலங்கள் நிறைந்த சுவையான தீர்த்தம்! “ஓஹோ ! தன் உடல் காயங்களுக்காக எவரோ என்னை இங்கு அழைத்து வந்திருக்கின்றார்கள் போலிருக்கிறது! ஒரு வேளை நான் மறுபிறவி எடுத்து விட்டேனோ!” அத்தைல நீரில் சிறுவன் கிடந்தான்.!

கரவீர விரதம்

பாண்டவர்கள் வனவாசமேற்ற பொழுது, வனத்தில் திரௌபதி தேவி பல அழகிய (தேவலோக) மலர்களைக் கண்ணுற்று அவற்றைப் பெற்றுத் தர வேண்டிட, பீமன் அம்மலர்களைப் பெற வனமெங்கும் அலைந்து, பல குகைகளில் புகுந்து பல விண்ணுலகங்களையும் அடைந்து பல அனுபூதிகளைப் பெற்றான். அபூர்வமான அத்தகைய ஒவ்வொரு மலரைப் பெறுகையிலும், அப்பப்பா! எத்தகைய அனுபவங்களை அவன் பெற்றான்! இவற்றை இருடிகளின் மகாபாரதத்தில் விளக்கமாகக் காணலாம்.
நேபாளத்தில் பசுபதிநாத்தை அடுத்து பரந்தவெளி (ஸ்ரீஆஞ்சநேயர் இன்றும் என்றும் குடிகொண்டு அருள்பாலிக்கும் திவ்யத் தலம்), பொதிய மலையில் கல்யாணி அருவியைத் தாண்டிய பகுதி, திருஅண்ணாமலையில் யானைப் பள்ளத்தையடுத்த பகுதி, புதுக்கோட்டை அருகே நார்த்தா மலையில் பாண்டவர் படுக்கை பாசறைப் பகுதி, இமயமலையில் கூலுவையடுத்த மலைச் சமவெளி போன்ற பல இடங்களில் ஸ்ரீஆஞ்சநேயரே, பீமனுக்குப் பல புஷ்பங்களைப் பெற்றுத் தந்திருக்கின்றார்.
ஒரு முறை.....
வழக்கம் போல் திரௌபதி ஓர் அழகிய மலரைக் கண்டிட, பீமனும் தன்னுடைய மிகவும் பிராபல்யமான (புஷ்பந் தேடும்) யாத்திரையை மேற்கொண்டான்! பிரசாந்த ஸ்ரீகந்த புஷ்பம் என்ற மிகவும் அழகான அப்புஷ்பத்தின் வாசனையை நுகர்ந்தவாறே அது இருக்குமிடம் தேடியலைந்தான். எங்கும் கிட்டவில்லை! தன் தமயனாம் வாயு குமாரனாம் ஸ்ரீஆஞ்சநேயரை பார்த்தாலாவது ஏதாவது ஆலோசனை பெறலாமென்றால் அவரிருக்குமிடமும் தெரியவில்லையே! “ஹரே! கிருஷ்ணா!” – ஸ்ரீகிருஷ்ணனை அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வந்தான் பீமன். கூவியழைத்தால் குரல் கொடுப்பானன்றோ கிருஷ்ணன்! “என்ன பீமா! வழக்கம் போல் திரௌபதி ப்ரீதிக்காகப் புஷ்பத்தைத் தேடுகிறாயா?” பீமன் வெட்கி நின்றான். “அப்பனே! இந்த பிரசாந்த ஸ்ரீகந்தபுஷ்பத்தைப் பெறுவது அவ்வளவு எளிதல்லவே! உன்னால் அந்தப் புஷ்பத்தைப் பறிக்கக் கூட முடியாதே பீமா?”
“என்ன கிருஷ்ணா, விளையாடுகிறாயா, என் பலம் நீ அறியாததா?”
ஸ்ரீகிருஷ்ணன் சிரித்தான். அதன் பின்னணியில் ஆயிரமாயிரம் தெய்வீக ரகசியங்கள் புதைந்து கிடந்தன!
“பீமா! ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒவ்வொரு மூலிகா தேவதை உண்டு என்று உனக்குத் தெரியுமல்லாவா? – இந்தா உனக்காக துவாரகையிலிருந்து மருதாணி எடுத்து வந்துள்ளேன். கைகளில் இட்டுக் கொண்டு தென்மேற்காகச் செல்! அருணாசல க்ஷேத்திரமருகே திருவிக்கிரம பூமியில் கிடைக்கிறதா பார்!” பீமன் கைகளில் மருதாணியிட்டுக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தான். அக்காலத்தில் திருஅண்ணாமலை க்ஷேத்திரம் செஞ்சி, திருக்கோயிலூர் பகுதிகள் வரை விரிந்திருந்தது.
திருஅண்ணாமலையில், யானைப் பள்ளப் பகுதியில்... ஸ்ரீஆஞ்சநேயர் ராம தியானத்தில் அமர்ந்திருக்க (இன்றைக்கும் திருஅண்ணாமலையைச் சுற்றிய பகுதிகளில் பல இடங்களில் 20 அடிக்கு உயரமான ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி ரூபங்களைக் காணலாம்.)
இம்முறை பீமன் ஸ்ரீஆஞ்சநேயரை நன்றாகவே அறிந்து கொண்டான். ஸ்ரீஆஞ்சநேயரின் கை, கால்களில் மருதாணிக் குப்பிகள்! ஆம் அவரும் மருதாணியிட்டிருந்தார். பீமன் திகைத்து நின்றான். “என்ன அதிசயமிது!” பீமன் தான் வந்த காரியத்தைத் தெரிவித்திட, “தம்பி பீமா! அப்புஷ்பத்தைப் பறிக்கும் சக்தி உன்னிடம்யிருக்கிறதா? –
பீமன் வெகுண்டான், “வேறு எவரேனும் இக்கேள்வியைக் கேட்டிருந்தால் நடந்திருப்பதே வேறு. ஆனால் கண்ணனும், ஆஞ்சநேயரும் ஒரே மாதிரியாகச் சொல்கின்றார்களே!”
“அதோ பார் பீமா! அந்த யானைப் பள்ளத்தில் உள்ளதே பிரசாந்த ஸ்ரீகந்தபுஷ்பம்” . அவன் கண்ணெதிரிலேயே பல யானைகள் அப்புஷ்பத்தின் காம்பைப் பிடித்து இழுத்தன. ஊஹும்! புஷ்பம் சிறிது கூட அசையவில்லை!
“இது தெய்வீக திருவிளையாடல்! நாம் தலையிட்டால் விளையாட்டு விபரீதமாகும்!”
பீமன் உஷாரானான்!
“பார்த்தாயா பீமா! இதிலிருந்து என்ன தெரிகிறது” பீமன் அசைவற்று நின்றான்!
“இந்தப் புஷ்பம் பிறந்த கதையைக் கேள்., ஸ்ரீமஹாவிஷ்ணு வாமனாவதாரம் பூண்டு, மூன்றாம் அடியாகக் காலை உயரத் தூக்கிட... அதனால் ஏற்பட்ட காற்றசைவில் பிரபஞ்சத்தில் வாயுப் பிரளயமே ஏற்பட்டுவிட்டது. கோடிக்கணக்கான லோகங்கள் காற்றசைவினால் ஆடலாயின! நல்லவேளை, ஸ்ரீமஹாவிஷ்ணுவே ஒரு புஷ்பத்தைக் கால் கட்டைவிரலில் சிருஷ்டித்துத் திரிவிக்ரமரின் கால் கட்டை விரலில் அதனைச் செருகிட, வாமனர் காலை உயரத் தூக்க, தூக்க, அவ்வளவு வாயுப் பிரளய சக்தியையும் அப்புஷ்பமே தன்னுள், ஏற்றது. அதுவே பிரசாந்த ஸ்ரீகந்தபுஷ்பம்!”
அப்புஷ்பம் உதித்த இடமே திருக்கோயிலூர்! திருவிக்கரமத் திருத்தலம்! முற்காலத்தில் இது திருஅண்ணாமலையின் பகுதியாக இருந்தது. ஸ்ரீவாமனரின் திருவிரலை அலங்கரித்த பிரசாந்த ஸ்ரீகந்த புஷ்பத்தைத்தன் தலையில் சூட ஸ்ரீமஹா லட்சுமி விரும்பிடவே, ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில் தன் கால் கட்டைவிரலில் ஸ்ரீமஹாலட்சுமியை ஏற்றார். எனவேதான் கால் கட்டை விரல் செல்வத்திற்கு ஈடானதாக இன்றும் கருதப்படுகிறது. பாதரட்சையில் கட்டை விரல் தாங்கும் தாங்கிக்குப் புஷ்பத்தால் அலங்காரம் செய்யப்படுகிறது. மருதாணியை முதலில் கட்டை விரலில் இட்டபின்னரே ஏனைய விரலுக்கு இடவேண்டும்.. மருதாணிக்கும் பிரசாந்த ஸ்ரீகந்த புஷ்பத்திற்கும் என்ன தொடர்போ? ஸ்ரீஆஞ்சநேயர் விளக்கலானார். பிரசாந்த ஸ்ரீகந்த புஷ்பத்தின் ப்ரத்யதி தேவதை தபதி தேவியாவாள். தபதி தேவியே பூலோகத்திற்கு மருதாணியைக் கொண்டு வந்தவள்.
புனிதமான கரங்களால் தான் பிரசாந்த ஸ்ரீகந்த புஷ்பத்தைத் தொட்டுப் பறிக்க முடியும். மருதாணி விரல்களுக்கும் உள்ளங்கை/கால்களுக்கும் புனித சக்தியைத் தருகின்றது. எனவே மருதாணியிட்ட கரங்களுடன் கரவீர விரதத்தை அனுஷ்டித்தப் பின்னரே பிரசாந்த ஸ்ரீகந்த புஷ்பத்தைப் பறிக்க இயலும்!” பின்னர் ஸ்ரீஆஞ்சநேயர் பீமனுக்குக் கரவீர விரத நெறியை உபதேசித்தார். இதனை முறையாகத் தான் கடைபிடித்த தோடன்றி திரௌபதியையும் பின்பற்றச் செய்து பெரும் பேற்றைப் பெற்றான்.
கரவீர விரதம்
ஆண், பெண் இருபாலாருக்குரிய அரிய விசேஷமான விரதம்.
1. முதல் நாளே கை, கால் விரல்கள் உள்ளங்கை, கால்களுக்கு மருதாணியிட வேண்டும்.
2. சந்தனத்தை சூரிய உதயத்திற்கு முன்பே முதல் முறை அபிஷேகத்திற்காகவும் மறுமுறை பாதபூஜைக்காகவும், ஆக இரண்டு முறை நிறைய சந்தனத்தை அரைத்து கொள்ள வேண்டும்.
3. அம்பிகை , பெருமாள், சிவனுக்குச் சந்தனாபிஷேகம்.
4. பெரியோர்களுக்குப் பாதங்களில் சந்தனமிட்டுப் பாதபூஜை.
5. மஞ்சள் அரைத்துப் பசுவிற்குச் சாற்றிக் குறைந்தது 21 முறை பிரதட்சிணம்.
6. கோபூஜை இயலாவிடில் வேப்ப மரத்திற்கு மஞ்சள் பூசி வலம் வந்து வழிபடுதல்.
7. இயன்றால் அகில் அரைத்து பெருமாள், சிவன், விநாயகர், முருகனுக்குப் பூஜை.,
8. ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில், குறிப்பாக ஸ்ரீதாஸ ஆஞ்சநேயர் சந்நதியில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் தாம்.
9. ஸ்ரீவாமன, திருவிக்ரமர் ஆலய ஸ்ரீஆஞ்சநேயருக்கான பூஜை மிகவும் விசேஷமானதாகும்.
10. மேற்கண்டவற்றை முடித்த பின்னர் உணவேற்பதே சிறந்தது.
11. ஸ்ரீபெருமாள், ஸ்ரீதிருவிக்ரமர் பாதங்களில் புஷ்பத்தைப் பெருமளவில் நிரவி, பாதார்ச்சனை.
12.  கேதாதி பாத, பாதாதி கேசத் துதிகளைப் பாராயணம் செய்தல்.
13. இல்லத்தில் மஞ்சள், சந்தனம் கொண்டு பெரியோர்களுக்குத் தம்பதி சகிதம் பாத பூஜையுடன் கரவீர விரதம் பரிபூரணமடைகிறது.
பலன்கள் : லஞ்சம், அதர்மமான முறையில் பணம், பொருள் பெறுதல் போன்ற “கறைபடியும்” பாவங்களுக்குக் கர வீரவிரதம் ஓரளவு பரிஹாரம் தரும்.

சந்தனக் காப்பு

சுற்றினால் கிட்டும் சுந்தரானந்தம்
அறிந்த ஆலயம் அறியாத களஞ்சியம்
நம் ஆலயங்களனைத்தும் தெய்வீகக் களஞ்சியங்களாக (spiritual treasures) விளங்குகின்றன. புண்ய சக்தி, பித்ருக்களின் ஆசி, தெய்வானுக்ரஹம், ஆன்மீக ஆற்றல், பக்தி, தார்மீக சிந்தனை, உன்னத ஆத்ம விசாரம், பாப விமோசனம், தோஷ ப்ரீதிகள், சித்த புருஷர்கள், மஹரிஷிகள் போன்ற உத்தம இறையடியார்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் போன்ற அனைத்தையும் ஒருங்கே தரவல்ல திருத்தலமே ஆலயங்களாம். நாம் அறிந்த ஆலயங்களின் சில (அறியாத) விசேஷமான மஹிமையினை அளிக்கின்றோம்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருவருளால் கடந்த ஸ்ரீராமநவமி உற்சவத்தில், மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்த ராமபிரான் கோயிலுக்காகச் சந்தனம் அரைத்துத் தரும் ஒரு சிறிய இறைத் திருப்பணியை நம் ஸ்ரீ-ல-ஸ்ரீலோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமம் (திருஅண்ணாமலை) மூலம் நிறைவேற்றும் பெறற்கரிய தெய்வீக பாக்யத்தைப் பல அடியார்கள் பெற்றனர் ஸ்ரீராமபிரானின் திருவருளாலும் அவர்தம் அடியார் குருவருளாலும்! பலவிதக் கர்ம வினைகளைச் சுமந்து வரும் இவ்வுடலால் ஏதேனும் திருப்பணிகளைச் செய்து வந்தால் தான் உடலால் செய்த தீவினைகளுக்கு விமோசனம் கிட்டும்.
ஸ்ரீமாசில்லாமணீஸ்வரருக்குச் சேவை செய்யும் ஓர் அரிய வாய்ப்பு
வருடந்தோறும் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று சென்னை – திருமுல்லைவாயிலில் உள்ள ஸ்ரீமாசில்லாமணீஸ்வரருக்குச் சந்தனம் சார்த்தப்படுகின்றது. வருடம் முழுது இச்சந்தனக் காப்பில்தான் பெருமான் அருள்பாலிக்கின்றார். வருடந்தோறும் சித்திரை மாத சதய நட்சத்திரத்தன்று மட்டுமே முந்தைய சந்தனக் காப்புக்களையப் பெறும். புதுச் சந்தனக் காப்பும் அன்றே இடப்படுகிறது! வருடத்திற்கு ஒரு முறையே கிட்டும் அரிய பாக்யம்! இம்முறையும் நம் ஆஸ்ரமம் சார்பில் ஸ்ரீமாசில்லாமணீஸ்வரருக்கு வரும் சித்திரை மாத சதய நட்சத்திரத்தன்று (11.5.1996) சந்தனக் காப்பிற்காக இயன்ற அளவு அரைத்த சந்தனம் அளிக்கும் சிறிய திருப்பணியை இறையருளால் நிறைவேற்ற உள்ளோம். எனவே இதில் பங்கு பெற விரும்பும் அன்பர்கள் 10.5.1996 இரவிற்குள் அரைத்த சந்தனத்தை “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” முகவரியில் அளிக்குமாறு பரிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஆஸ்ரமம் சார்பில் அன்பர்களிடமிருந்து சந்தனத்தைப் பெற சென்னை, தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்குறித்த இடங்களில் 10.5.1996 இரவு 7மணிக்குள் சந்தனத்தை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்வாமியின் திருமேனியில் ஒரு வருடகாலம் பரிணமிக்கவிருக்கின்ற சந்தனத்தை அரைப்பதற்கான எளிய விதிமுறைகளாவன :
1. கடையில் சந்தனப் பவுடரை  வாங்கிக் கரைத்தல் கூடாது..
2. குடும்பத்தினர், உறவினர், நன்பர்கள், ஜாதி, சமய,இன, குலபேதமின்றி ஆண், பெண், குழந்தைகள் அனைவரையும் ஈடுபடுத்திச் சந்தனத்தை அரைப்பதே உத்தமமானது.
3. சந்தனம் அரைக்கையில் கை, கால்களைக் கழுவிச் சுத்தம் செய்து கொண்டு, குடும்ப நெறிப்படி நெற்றிக்குத் திருமண், விபூதி, குங்குமமிட்டு இறைநாமம் ஜபித்தவாறே சந்தனத்தை அரைத்திடல் வேண்டும்.
4. இயன்றளவில் குறைந்த அளவு நீர் சேர்த்துக் கெட்டியாக அரைப்பது நல்லது.
5. கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதி நீர் சேர்த்து அரைத்தல் சந்தனத்தின் புனிதத் தன்மையை மேம்படுத்தும்.
6. சந்தனம் அரைக்கையில் அத்ரி, பிருகு, குத்சர், வசிஷ்டர், காஸ்யபர், ஆங்கிரஸர், கௌதமர் ஆகிய ஏழு மஹரிஷிகளின் நாமத்தை தியானித்து அரைத்திட வேண்டும்.
இதைக் கூற இயலாவிடில் “ஏழு முனி ஏற்று அருளணும் எம் குருதேவா” என்று துதித்து அரைத்திட வேண்டும் அன்பர்கள் இத்திருப்பணியில் பலரையும் ஈடுபடுத்திப் பெருமளவு (அரைத்த) சந்தனத்தை அளித்து ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் சேவைக்குப் பாத்திரமாக வேண்டுகிறோம்.
10.5.1996 இரவு 7 மணி வரை கீழ்க்கண்ட முகவரிகளில் பக்தர்கள் அளிக்கும் சந்தனம் பெறப்பட்டு 11.5.1996 அன்று பிரம்ம முகூர்த்தத்தில் “சந்தனத்திற்கு” சித்த புருஷர்களின் நியதிப்படி பூஜை செய்யப் பெற்று 11.5.1996 அன்று காலையில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் ஆலயத்தில் சமப்பிக்கப்படும். திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலும் 10.5.1996 அன்று இரவு 7மணி வரை அன்பர்களிடமிருந்து சந்தனம் பெறப்படும். மீண்டும் அறிவுறுத்துகின்றோம், கடையில் சந்தனப் பவுடரை வாங்கிக் குழைப்பது அறவே கூடாது. உடல் வருந்த அரைத்த சந்தனமே இறைவனுக்கு ப்ரீதியானதாகும். வருடத்திற்கு ஒரு முறையே, சித்திரை மாத சதய நட்சத்திரத்தன்று மட்டுமே கிட்டுகின்ற இவ்வரிய பாக்கியத்தைத் தவற விடாதீர்கள்! குறிப்பாகச் சதய நட்சத்திரக்காரர்களுக்கு இது ஓர் அற்புதமான வாய்ப்பாகும்!
அறியாத (கோயில்) களஞ்சியம்
1. சென்னை திருமுல்லைவாயிலிலுள்ள ஸ்ரீமாசில்லாமணீஸ்வரர் எப்போதும் சித்திரை சதயத்திலிட்டச் சந்தனக் காப்புடன் தான் பரிணமிக்கின்றார்! ஏனைய அபிஷேகங்கள் ஆவுடைக்கே!
2. மூலஸ்தான அர்த்த மண்டபத்தில் இரண்டு பெரிய (சுமார் 10 அடி உயரம், மூன்று, நாலடி அகலம்) வெள்ளெருக்குத் தூண்கள் இரு புறமும் உள்ளன. இவை சர்வரோக நிவாரணி! இவற்றைக் கட்டிப் பிடித்து வலம் வந்து பக்தர்கள் வணங்குவர். இதனால் பல்லாயிரக்கணக்கான சித்தர்கள், மஹரிஷிகள் உறைந்து அருள்பாலிக்கும் அளப்பரிய தெய்வீக சக்தி கொண்ட இத்தூண்கள் உடற்பிணிகளை, குறிப்பாக காசம், முலைப் புற்று நோய், தோல் நோய்களைத் தீர்க்கும்.
3. நரம்பு நோய்கள் குறிப்பாகக் கழுத்து நோய்கள் (cervical spondylosis etc..) கழுத்து, நரம்பு நோய்களைத் தீர்த்து அருள்பாலிக்கின்றார்! ஸ்ரீமாசிலாமணீஸ்வரர்.
4. தேவேந்திரன் தன் நாட்டியத் திறமையில் கொண்ட செருக்கால் பல மஹரிஷிகளின் சாபத்திற்குள்ளாகிக் கழுத்து நரம்புகளை இழந்து நாட்டிய அறிவையே இழந்து இங்கு தவம் புரிந்து பரிஹாரம் பெற்றான். நாட்டியத் துறையினர் இங்கு வழிபட்டுக் கிராமிய (ஏழை) கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளை செய்திட அவர்கள் நாட்டியத் துறையில் உன்னதம் பெறுவர்.
5. இங்கு அம்பிகை சன்னதி அருகில் ஸ்ரீதுவார சக்தி அம்பிகை அருள்பாலிக்கின்றாள். அபூர்வமாகச் சில இடங்களில் மட்டுமே எழுந்தருளியுள்ள அம்பிகை!
1. தக்க வயதில் பருவமடையாத பாலகியரை இங்கு வந்து வழிபடச் செய்து ஏழைப் (பிரசவித்த) பெண்களுக்கு உள்ளாடைகளை (sanitary napkins, cotton etc) தானமாக அறித்துவர, முறையான பருவநிலை கூடும்.
2. பருவமடைந்த கன்னிப் பெண்களை அடிக்கடி இங்கு கூட்டி வந்து வழிபட்டிட அவர்கள் நல்லொழுக்கத்துடன் பிரகாசித்து நன்முறையில் உத்தமமான திருமண வாழ்வை அடைவர்.
3. தீய வழிகளில் செல்ல முற்படும் கன்னிப் பெண்களுக்காக, பெற்றோர்கள் இங்கு வழிபட்டு ஏழைக் கன்னிப் பெண்களுக்கு ஆடைகள், வளையல்கள், சீப்பு கண்ணாடி போன்ற மங்களப் பொருட்களை அளித்துவர நல்லொழுக்கம் எளிதில் உண்டாகி அவர்கள் திருந்துவர்.
4. துவார சக்திக்குப் ப்ரீதியான தான தர்மங்களாவன : இளநீர், நுங்கு, தேங்காய் கலந்த உணவு, குங்கும நிற ஆடை தானங்கள்.
5. இங்குள்ள ஸ்ரீநந்தீஸ்வரர் “வாகன உத்தியில்” அதாவது மூலவர் உடனே வாகனமேறும் பாணியில் மூர்த்தி நோக்கும் திசையைப் பார்த்து அமர்ந்திருக்கிறார். இதன் பின்னணியில் பல ஆன்மீக ரகசியங்கள் உண்டு. தக்க சற்குருவை நாடி அறியவும். தங்களுடைய (நியாயமான) காரியங்களில் எதிரிகளின் சக்தி வலுவாக இருக்குமாயின் இந்த ஸ்ரீநந்தீஸ்வரருக்கு மிளகுக் காப்பு, எண்ணெய்க் காப்பு சார்த்தி பசும்பால் அபிஷேகம் செய்தபின், இறைவனுக்கும் நந்திக்கும் இடையில் செல்லாது, ஸ்ரீநந்தீஸ்வரரை அடிப்பிரதட்சிணம் செய்துவர எதிரிகளின் எண்ண அலைகளை எளிய முறையில் முறியடித்திடலாம்.
7. இங்குள்ள ஸ்ரீகாலபைரவரும் விசேஷமானவரே! இதன் ரகசியத்தை நேரில் தரிசித்து உய்வடைவீர்களாக! நாக பஞ்சமி, நாக சதுர்த்தி, கருட பஞ்சமி போன்ற நோன்பினை முறையாகச் செய்யாதோர் மற்றும் நாக தோஷங்களை உடையோர், நாகராஜன், நாகரத்தினம், நாகலெட்சுமி போன்ற “நாக” நாமம் உடையோர் இங்கு ஸ்ரீகாலபைரவருக்குப் பசும்பால் அபிஷேகம் செய்து பால்-இனிப்புகளை ஏழைக் குழந்தைகளுக்கு அளித்துவர நாக தோஷ நிவர்த்தியும் மிருத்யு தோஷம் பரிஹாரமும் கிட்டும். தனிச் சந்நதி கொண்டு அருள்பாலிக்கும் நாகவீதம் கொண்ட விசேஷமான காலபைரவ மூர்த்தி!
8. இங்குள்ள பாதரச லிங்க மூர்த்தியின் அபிஷேக நீர் பல மூலிகைகளின் சக்தியை ஒருங்கே கொண்டது.
நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகள், நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம சுவாமிகளுடன் இங்கு உழவாரத் திருப்பணிகள் புரிந்து இத்திருக்கோயிலின் மஹிமையினை எடுத்துரைத்துள்ளார்கள். அதில் ஒரு சிறிதே இங்கு அளிக்கப்பட்டுள்ளது. சொல்லவும் பெரிதே ஸ்ரீமாசிலாமணீஸ்வரரின் மஹிமையும்!

அமுத தாரைகள்

1. விபூதி, குங்குமம் இடுவது போல சந்தனத்தை அரைத்து 18 அவயங்களிலும் விபூதிப் பட்டைபோல் இட்டு ஸ்வயம்பு லிங்க மூர்த்தியை 21 முறை அடிப்பிரதட்சிணம் செய்துவர அலுவலகத்திலும், குடும்பத்திலும் எதிரி்களினால் வரும் துன்பங்கள் தணியும். கோர்ட் வழக்குகள் சுமூகமாகும்.
2. சந்தன மரத்தில் சப்தரிஷிகள் வாழ்வதால் சந்தனத்தை அரைத்திடுகையில் அத்ரி, பிருகு, குத்ஸர், வஸிஷ்டர், காஸ்யபர், ஆங்கிரஸர், கௌதமர் ஆகிய ஏழு ரிஷிகளையும் தியானித்திட அரைக்கும் சந்தனம் மேன்மேலும் புனிதமடைகிறது.
3. வாகனங்கள் வாங்குவோர்க்கு :- புதிதாக வாகனங்கள் மற்றும் பசு, எருமை, ஆடு, குதிரை போன்றவற்றை வாங்க விரும்புவோர் மிருகசீரிஷ நட்சத்திரம் உள்ள நாளையே தேர்ந்தெடுக்க வேண்டும். இந்நாளில் சிவபெருமானை முருங்கைப் பூவினால் அர்ச்சித்து அப்பூக்களைப் பிரசாதமாக பெற்றுச் சென்றால் நல்ல வாகனங்கள்/கால்நடைகள் அமையும்.
4. அரைத்த சந்தனமே சுவாமிக்கு ஏற்புடையது. கடையில் சந்தனப் பவுடரை வாங்கிக் குழைப்பதில் எவ்விதப் பிரயோஜனமும் கிடையாது. சுவாமிக்கு மார்பில் இடும் சந்தனத்தின் மேல் மட்டும் குங்குமமிடலாகாது. ஏனைய ஸ்தானங்களில் சந்தனம், குங்குமம் சேர்த்து இடலாம்.
5. கேட்டை நட்சத்திரமுடைய பெண்கள் திருமணத் தடங்களினால் வருந்திடில் வெள்ளை நிறப் பூக்களால் இந்திரனை (மானஸீகமாக) அர்ச்சித்து ஏதேனும் மலைமேல் உள்ள ஒரு நாகப் புற்றிற்குப் பால்வார்த்து சஞ்சண நாக தேவதையின் நாமத்தை 1008 முறை துதித்துப் புற்றை (மருதாணியிட்ட கால்களுடன்) 21 முறையேனும் அடிப்பிரதட்சிணம் செய்துவர நற்பலன்களைப் பெறுவர். கேட்டை நட்சத்திரத்தன்று இவ்வெளிய வழிபாட்டைச் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
6. கடுமையான மாதவிடாய் நோய்களால் துன்பமுறும் பெண்கள் பரணி நட்சத்திரத்தன்று துர்கை தேவியை வழிபட்டு ஏதேனும் ஒரு கோயிலில் மேற்கு திசையில் உள்ள பாம்புப் புற்றில் ஸ்ரீவாசுகி நாக தேவதையை 1008 முறை துதித்துப் பால் வார்த்திடில் மாதவிடாய்த் துன்பங்கள் தணியும்.
7. விவாகரத்து நிலையில் பல தம்பதிகள் உள்ளனர். கணவன், மனைவி ஒன்று சேர விரும்பிடினும் சூழ்நிலைகள் ஏற்புடையதாக இருக்காது. செங்கல்பட்டு-திருப்போரூர் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் திருஇடைச்சுரம் என்ற சம்பந்தர் பாடிய சிவத்தலமுள்ளது. இங்கு நந்தீஸ்வரர் அருகே இரண்டு (வேப்ப+வில்வ) மரங்கள் பிணைந்துள்ளன. மழு பர்வதாம்பா விருட்சம் என்ற பெயரைத் தாங்கி நிற்கும் இம்மரத்திற்கு அரைத்த மஞ்சளைச் சாற்றி 108 முறை அடிப்பிரதட்சிணமும் நமஸ்காரமும் செய்து, வறுமை காரணமாக வெறும் தாலிச்சரடை மட்டும் அணிந்திருக்கும் ஏழைச் சுமங்கலிப் பெண்களுக்கு பொன் மாங்கல்யம் தானம் அளித்து வர விவாகரத்து நிலையிலுள்ள தம்பதியினர் ஒற்றுமையுடன் இணைவர். வசிஷ்டர் – அருந்ததி மஹரிஷி தம்பதியினர் அருவமாக இன்றளவும் இப்புனித விருட்சத்தைத் தினமும் வலம் வருகின்றனர். மிகமிகப் புனிதமான விருட்சம்.
8. எப்பொழுதும் மணமுள்ள பூக்களையே இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும், நாமும் சூட வேண்டும். கனகாம்பரம், (மணமற்ற) காட்டு மல்லி, குரோட்டன்ஸ், பிளாஸ்டிக் பூக்கள் போன்றவற்றைப் பூஜைக்கோ, பெண்கள் தம் தலையில் சூடவோ பயன்படுத்தலாகாது. வாசனையற்ற பூக்களை வாசனை மலர்களுடன் சேர்த்தலும் கூடாது. மணமற்ற் பூக்களை அணிந்தால்/வைத்துப் பூஜித்தால் மன வேதனைகள் பெருகும்.
9. கோயிலில் மூலஸ்தானத்திலிருந்து வெளிவரும் அபிஷேக தீர்த்தத்திற்கு கோமுக நீர் என்று பெயர். ஆயிராமாயிரம் தேவதைகள் உறைந்து அருள்பாலிக்கும் இடமே கோமுகமாகும். விசாக நட்சத்திரத்தன்று கோமுக நீரைப் பெற்று அதனைத் தங்கள் கல்லாப்பெட்டி, கிடங்கு, வியாபாரத் தலங்களில் தெளித்து வந்தால் வியாபாரம் நன்கு செழிக்கும். ஆனால் நன்றியுடன் கோமுக தீர்த்தத்தைத் தந்த மூலவருக்கு இயன்றவற்றைச் செய்திடல் வேண்டும்.
10. கர்பப்பைக் கோளாறுகள் மற்றும் கர்ப சம்பந்தமான பிணிகளையுடையோர் திங்கட்கிழமையன்று ராகு கால நேரத்தில் (காலை 7.30 முதல் 9.00 மணிவரை) ஸ்ரீதுர்க்கையம்மனுக்குத் தூய (பசு) வெண்ணெய்க் காப்பிட்டு வழிபட்டிடில் வியக்கத்தக்க முறையில் பலன்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு வெண்ணெய் மற்றும் பால் சேர்ந்த இனிப்புகளை தானம் செய்திடில் விசேஷமானதாகும்.
11. பெண் குழந்தைகள் அளிக்கும் சகுனசாஸ்திரம் : - வெளியில் செல்கையில் பெண்குழந்தைகள் “நானும் வருகிறேன், எங்கு செல்கிறாய்?” என்று கேட்டிடில் குழந்தைகளை வையாதீர்கள். அவர்கள் தீர்க்க தரிசனமிக்கவர்கள், குழந்தைப் பருவம் முடியும் வரை. எனவே இவ்வாறு பெண் குழந்தைகள் கேட்டிடில் அக்காரியங்களை உடனே கைவிடுவதே சிற்ப்பானதாகும். குழந்தைகளால் காரியம் தடைபெற்றது என்று எண்ணாது காரியம் சுபமாக முடியாது என்பதை உணர்த்துவதை ஏற்றுக் குழந்தைகளுக்கு மானசீகமாகவேனும் நன்றி செலுத்த வேண்டும்.
12. அமாவாசைத் தர்ப்பணங்களில் குழந்தையில்லாது இறந்தோருக்குத் தர்பையினைத் தென்மேற்கு – வடகிழக்கு திசையில் வைத்துத் தர்ப்பணம் இடவேண்டும். மரணத்தறுவாயில் பேச இயலாது இறந்தோருக்குக் கிழக்கு – மேற்கு திசையில் தர்பைகளைப் பரப்பித் தர்ப்பணம் இடவேண்டும். பிண்டத் தர்ப்பணம் உத்தமமானதே. கயை செல்ல இயலாதோர் திருவிடைமருதூர் சிவத்தலத்தில் உள்ள திருக்குளக் கரையில் தாமே வடித்த சாதத்தினை இரு கைகளால் எவ்வளவு பெரிய சாதஉருண்டைகளைச் செய்ய முடியுமோ அந்த அளவில் மூன்று பெரிய உருண்டைகளை (பிண்டங்களை) வைத்துத் தர்ப்பை சார்த்தி தர்ப்பணம் இட்டால் காசி/கயாவிற்கு ஈடான பலன்களைப் பெறலாம்.
13. ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட, பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட தன் கணவனின் ஆயுளுக்கு பங்கம் நேரிடுமோ என்று பல இல்லறப் பெண்மணிகள் அஞ்சி அஞ்சி உள்ளூர அழுதே வாழ்கின்றனர். இவர்கள் ஸ்ரீவைதீஸ்வர மூர்த்திக்கு (மாயவரன் அருகே உள்ளது, சென்னை – பூந்தமல்லியிலும் உள்ளது) வைதிருதி யோக நேரத்தில் இனிப்புப் போளி வைவேத்யம் செய்து இளம் சிறார்களுக்கு தானம் செய்து வந்திடில் மனச் சஞ்சலங்கள் நீங்கி எமபயமும் அகலும்.
14. சென்னை சிங்கப்பெருமாள் கோயிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள திருக்கச்சூரில் ஸ்ரீஇருள்நீக்கியார் மலையடிவார சிவத்தலத்தில் நந்தீஸ்வரர் அருகே அதிஅற்புத சக்தி வாய்ந்த, மருத்துவ குணங்கள் நிறைந்த “மண்” இருக்கிறது. தீராத நோய்களையும் வினைகளையும் தீர்க்கும் தெய்வீக சக்திவாய்ந்த திருமண்! இங்கு கோயில் உண்டியலில் பணம் போட்டுத்தான் இம்மண்ணை சிறிதளவு தான் எடுக்க வேண்டும். சிறிது மண்னைக் கையில் தாங்கி ஸ்ரீமருந்தீஸ்வரரைக் குறைந்தது பன்னிரெண்டு முறையேனும் அடிப்பிரதட்சிணம் செய்து கீரை உணவினை தானம் செய்து மண்ணை வீட்டிற்கு எடுத்து வந்து தினந்தோறும் ஆழ்ந்த தெய்வ நம்பிக்கையுடன் முறையாக உணவிலோ நீரிலோ கடுகளவு மட்டும் சேர்த்து உண்டுவர ஆறாத ரணங்கள், ரத்த சம்பந்த நோய்கள், குடல் கர்பப் புண்கள், அறுவை சிகிச்சையின் பக்க விளைவுகள் நன் முறையில் குணமாகும். இத்திருக்கோயிலில் உழவாரம் மற்றும் ஏனைய திருப்பணிகளுக்கு சுயநலமின்றி இயன்ற உதவிகளைச் செய்துவர பலன்கள் துரிதமாகும்.
15. தாது வருட வைகாசி மாத அமாவாசையில் தர்ப்பணம் இடவேண்டிய முறையாவது : எட்டு தாமரை மொட்டுகளை சக்கர ஆரங்கள் போல் வட்டமாக அமைத்து மலர்களின் எட்டுக் கூம்புப் பகுதிகளும் ஒரு சிறு மத்திய வட்டத்தில் குமியுமாறு வைத்து இதன் மேல் தர்ப்பைச் சட்டத்தை அமைத்துத் தர்ப்பண நீரை வார்க்க வேண்டும். இதற்கு ஜம்புவீத் தர்ப்பணம் அல்லது தாமரைத் திடல் தர்ப்பணம் என்று பெயர். தர்ப்பணத்திற்குப் பின் தாமரை மொட்டுக்களை விரித்து பசுவிற்கு உணவாக அளித்திட வேண்டும்.

சித்ரா பௌர்ணமி

சித்திரா பௌர்ணமி பற்றிய பல விளக்கங்களை நாமறிவோம். சித்த புருஷர்கள் அளிக்கின்ற விளக்கமென்ன? சித்திரை தேவி, சந்திர பகவானுடைய பத்னியருள் முதல்வியாவாள்! பசுமையிற் பொன்னிறம் கலந்த நிறத்துடன் அழகிய கருவண்டு நிறக் கண்களையுடையவள்! பொதுவாக சித்திர நட்சத்திரத்தில் பிறந்தோர் இறைவனுக்குப் பூ தொடுத்தல், அலங்காரம் செய்வித்தல் போன்றவற்றில் விருப்பம் கொள்வர்.  மனிதனுடைய வாழ்க்கையை ஒட்டி இறுதிவரையில் தொடர்வது அவனுடைய நட்சத்திரமும் ராசியுமாம், எனவே அவரவர்க்குரிய நட்சத்திரத்தின் அதிதேவதை, பிரத்யதி தேவதையை அறிந்து கொண்டு தினமும் இரவில் வானில் ஒளிரும் நட்சத்திரங்களை நோக்கிய வண்ணம் அமர்ந்து, தினமும் அவரவர்க்குரித்தான
1.நட்சத்திர தேவதை, 2. அதிதேவதை, 3, பிரத்யதி தேவதை ஆகிய மூன்றையும் தியானித்து மானஸீகமாக வணங்கித் துதித்திடல் வேண்டும். இதற்கு “நித்ய நட்சத்திர பூஜை” என்று பெயர். உதக சாந்தி என்னும் வேத மந்திரப் பகுதியில் ஒவ்வொரு நட்சத்திரதிற்குமுரிய “நட்சத்திர மந்திரங்கள்” அளிக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்து பாராயணம்  செய்தல் உத்தமமானது. இவற்றிற்கீடான தமிழ்மறைப் பண்களும் உள்ளன. தக்க சற்குருவை நாடி விளக்கங்களைப் பெற்றுப் பயனடைய வேண்டுகிறோம்.
சித்ரா பௌர்ணமி கடல் ஸ்நானம்
சித்திரா பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் அற்புதமாகக் கூடுகின்றது. இந்நாளில் கடலில் நீராடுதல் விசேஷமானதாகும். குறிப்பாக நாம் அறிந்து சேர்க்கும் கர்மவினைகள் (உ.ம் பசுவை உதைத்தல், நாயைக் கல்லால் அடித்தல், பிறரை ஏமாற்றுதல் etc..) இதனால் ஓரளவு பிராயச்சித்தம் பெறுகின்றன. 27 நட்சத்திர தேவியரும் விதவிதமான செயற்கரிய இறைத் திருப்பணிகளை ஆற்றி ஸ்ரீசந்திரபகவானை மணக்கும் பாக்யம் பெற்றனரல்லவா? இதில் ஸ்ரீசித்திரை தேவியின் பங்கு என்ன என்பதைக் காண்போமாக! புனிதமான ஆற்று நீரில் எப்போதும் நீராடலாம். ஆனால் கடல் நீரில் விசேஷ தினங்களில் மட்டுமே புனித நீராடுதல் வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உப்பு நீரிற்குக் கர்மவினைகளை உறிஞ்சும் அல்லது வெளித் தள்ளும் குணமுண்டு. பித்ருக்கள், மஹரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர் போன்றோர் விசேஷ நாட்களில் கடல் நீரில் பிரசன்னமாகி அதில் நீராடுபவர்களின் கர்ம வினைகளில் சிலவற்றைக் கழித்தும், பலவற்றைத் தம்முள் ஏற்றும் அருள்புரிகின்றனர். இவ்வற்புதங்கள் பௌர்ணமி, அமாவாசை, மாதப்பிறப்பு, சங்கராந்திகள் போன்ற குறித்த சில முக்யமான தினங்களில் மட்டுமே நிகழ்கின்றன.
ஏனைய சாதாரணமான நாட்களில்.....
ஆற்றில் தினமும் நீராடலாம் அல்லவா! நிதமும் நீராடுகின்ற கோடிக்கணக்கானனோருடைய கர்ம வினைகளில் பலவற்றைச் சுமக்கும் புண்ய நதி தேவதைகள் அவற்றின் ஒரு தொகுதிச் சுமையைத் தாம் கலக்கும் கடலில்தான் சேர்க்கின்றன. இடையில் சூர்ய, சந்திரர்களும், நட்சத்திரங்களும், கோள்களும், பூமாதேவியும் கூடப் புண்ய நதி தேவிகளிடமிருந்து பலவிதமான கர்மச் சுமைகளை ஏற்றுப் புனிதமான நதிகளின் கர்மச் சுமையைத் தணிக்க உதவுகின்றன. எனவே சாதாரண நாட்களில் ஆறுகளின் மூலமாகக் குவியும் தீவினை சக்திகளோடு, இடி, மின்னல் வாயு மூலமாகப் பரவெளியில் மிதக்கின்ற தீய எண்ணங்களும் மேகங்கள் மூலமாய்க் கடலில் கலக்கின்றன. இவையனைத்தும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்தால் அது எத்தகைய வலுவுள்ள தீயசக்திப் படிகங்களாகக் கடலில் மிதக்கும்? சாதாரண நாட்களில் நீராடினால் நீராடுபவர்களின் தேகத்தில் இவை சேர்ந்து சொல்லொணாத் துயரங்களைத் தரும். எனவே, விசேஷ நாட்களைத் தவிர்த்துச் சாதாரண நாட்களில் எக்காரணங் கொண்டும் கடலில் நீராடலாகாது. சாதாரண நாட்களில் அறிந்தோ அறியாமலோ கடலில் நீராடியவர்களின் துன்பச் சுமையைக் கழிப்பதற்கு உரித்தான வரங்களை நாடி ஸ்ரீசித்ரா தேவி ஸ்ரீஅகஸ்தியரின் உதவியை நாட அவர் ஸ்ரீசித்ரா தேவியை திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஸ்ரீஅருணாசல சிவனை வணங்குமாறு அருளுரை கூறினார்.
அருணாசலத்தில் தவம்
ஸ்ரீசித்திரா தேவி ஸ்ரீஅகஸ்தியரின் ஆக்ஞைப்படி திருஅண்ணாமலையாம் அருணாசலத்தை முறையோடு கிரிவலம் வந்து சீரிய தவத்தைத் தொடங்கினாள். அதாவது சாதாரண நாட்களில் கடலில் நீராடுபவர்களுக்குச் சேரும் கர்மவினைகளைத் தாமே ஏற்கின்ற தியாக வாழ்க்கைக் காண தவமிது! பலகோடி யுகங்கள் திருஅருணாசலத்தைக் கிரிவலம் வந்த சித்திரா தேவிக்கு அருணாசலேஸ்வரர் காட்சி தந்து அருள்பாலித்தார். “சித்திரா தேவி! உன் சுயநலமற்ற தவம் மெச்சற்குரியது! உன் பிரார்த்தனை நிறைவேறுவதாக! எவரொருவர் உன் நட்சத்திரம் கூடி வரும் சித்திரா பௌர்ணமியில் சந்திரன் 16 கலைகளுடன் பரிணமிக்கும் பௌர்ணமி நாளில் கடலில் புனித நீராடுகின்றார்களோ அவர்களுடைய கர்மவினைகளில் ஒரு பங்கினை நீயேற்று அருள்பாலிப்பாயாக! சாதாரண நாட்களில் கடலில் ஸ்நானம் செய்து கர்மவினைகளைச் சேர்த்துக் கொண்டவர்கள், சித்திரா பௌர்ணமியன்று கடலில் நீராடினால் அத்தகைய கர்மவினைகளும் கழிக்கப்படுகின்றன”. சித்ரா தேவி மனமகிழ்ந்தாள். ஆனால் அந்த மகிழ்ச்சி சில நாட்களே நீடித்தது! காரணம் என்ன?
“எல்லா இடங்களிலுமா கடல் இருக்கிறது? எளிய மக்களால் கடல் இருக்குமிடம் நோக்கி யாத்திரை செய்ய முடியுமா? அப்படியானால் சித்திரா பௌர்ணமியின் கடல் ஸ்நானத்தின் புண்யம் ஒரு சிலருக்குத்தானா? பாமரர்கள், வயோதிகர்கள், முடவர்கள், குருடர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அன்று கடலில் நீராட இயலாதோர் என் செய்வது? இத்தகையோர் சாதாரண நாட்களில் கடலில் நீராடியதால் சேர்த்துக் கொண்ட கர்மவினைகளுக்குப் பிராயச்சித்தம் கிடையாதா? மேலும் சித்திரா பௌர்ணமியில் கடலில் நீராடுபவர்களின் கர்மவினைகளில் ஒரு பங்கை அடியேன் சுமக்கும் பாக்யத்தை எல்லாம் வல்ல சர்வேஸ்வரன் அருளியுள்ளாரே! இது அன்று கடலில் நீராடிடும் பாக்யம் பெறுவோர்க்கு மட்டும்தானே இது பொருந்தும். கோடிக்கணக்கான மக்கள் வறுமை, தரித்திரம், நோய், குடும்பச் சூழ்நிலைகள், அறியாமை, மாதவிலக்கு போன்ற அசந்தர்ப்பங்கள் காரணமாகக் கடலில் நீராட இயலாதே! அடியேனுடைய தவத்தினால் கிட்டும் பலன்கள் ஒரு சில ஆயிரம் பேர்களுக்கு மட்டும்தான் சேருமா... “
இந்த எண்ண அலைகளில் மூழ்கிய சித்திரா தேவி மீண்டும் திருஅருணாசலத்தை நோக்கி நடந்தனள். எதற்கு அருந்தவம் புரியத்தான்! தவத்தின் அருட்சக்தியும் பொலியப் பொலிய சித்திரா தேவியிடம் ஜீவ காருண்யமும், மனித நேயமும் பல்கிப் பெருகின. “ஜீவன்களுக்கு இன்ப துன்பங்கள் மாறி மாறித்தான் வரும். மஹரிஷிகள் போன்ற உத்தம இறை நிலை அடைந்தவர்களால் தான் இன்ப துன்பங்களை அவரவருடைய கர்மவினையாக ஏற்று எதையும் இறைவன்  செயலென உய்த்துணரும் உள்ளம் கிட்டும். இத்தகைய புனிதமான நிலையைச் சாதாரண ஜீவன்கள் பெறுவதற்கு எளிய வழிமுறையாதோ? இத்தகைய நல்வழியைக் கோடிட்டுக் காட்டுதல் எத்தகைய சிறந்த இறைப்பணி! எல்லாவற்றையும் அருளவல்ல பிரபஞ்சத்தின் ஆன்மீகச் சிகரமான அருணாசல கிரிவலத்தில் உலக ஜீவன்களுக்கான எளிய நல்வழியைப் பெற்று அளித்திட வேண்டும்!”
சித்திரா தேவியின் மனம், மெய்வாக்கனைத்தும் ஜீவன்களின் மேன்மைக்கென இயங்கின! உண்மையில் சித்திரா தேவி நட்சத்திர தேவமூர்த்தியின் அனுக்ரஹங்களைப் பெற்றிருந்தாலும் அடக்கத்துடன் ஒரு சாதாரண வாழ்க்கையையே மேற்கொண்டு அரும்பெருந் தவநிலைகளை ஏற்றாள்! எத்தனையோ மஹரிஷிகளுக்கும் அருள்வழி காட்ட வல்ல அற்புதத் தேவி பொறுமை, பணிவு, பக்தி காரணமாக எதையும் வெளிக்காட்டாது உலக ஜீவன்களுக்கு நல்லவழியைப் பெற்றுத் தரும் உத்தம தவத்தில் தீவிரமாக மூழ்கினாள். சித்திரா தேவியின் அருட்பெரும் புராணம் மூலம் அருணாசல சிவனும் பல அரிய பாடங்களைப் புகட்டுகின்றான். தானம், தவமிரண்டும் ஒரு தராசின் இரண்டு தட்டுக்களைப் போலுள்ளன. கலியுகத்தில் தவநிலை கடினமானது. தானதர்மங்களே ஜீவன்களுக்கு எளிய முறையில் பலன்களைத் தரும். ஓர் ஏழை கூடத் தனக்குக் கிட்டும் உணவை காகம், நாய், குரங்குடன் பகிர்ந்து தானத்தின் சக்திகளை எளிதிற் பெற்றுவிடலாம்.
பல மஹரிஷிகளும் சித்த புருஷர்களும் சித்திரா தேவியின் தவத்தில் பங்கு கொண்டனர், எவ்வாறு? அருட்பெருந்தவத்தினால் ஜோதியாய் ஜொலித்து, ஆனால் உடல் நலிவுற்றிருந்த சித்திரா தேவிக்கு அவர்கள் ஆபத்சகாயனாய் நின்று அறிவுரை தந்து அருள்புரிந்து காத்தனர். ஸ்ரீசித்திரா தேவி தன் கணவன் சந்திர பகவானுடன் கிரிவலப் பாதையில் சூர்யலிங்கம் அருகே கர்மயோகத் தவமாக பகல் முழுதும் பலவிதமான அன்னவகைகளை அன்னதானமாக அளித்திட வேண்டும். இரவில் தவத்தைத் தொடர்தல் வேண்டும் என்பதே உத்தமப் பெரியோர்களின் அறிவுரையாம். அதன்படியே அன்னதானத்தை மேற்கொண்டாள் சித்திரா தேவி! சித்திரா தேவி சித்ரான்னதானத்தை மிகுந்த ஆனந்தத்துடன் செய்துவர அவளுடைய தேஜோ சக்திகள் பரிமள காந்தியெனப் பரிணமித்தன! பாருங்கள், உத்தம இறை நிலையடைந்தவர்கள், அடுக்கடுக்காக எவ்விதச் சுயநலமுமின்றித் தியாகங்கள் புரிந்து கொண்டே செல்வதை! இத்தியாக சீலத்தையே நம் வாழ்நாளிலும் பெறுதல் வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் பிறருடைய நலவாழ்விற்கான தியானம், பிரார்த்தனை, துதி, தான தர்மங்கள், நற்காரியங்களிலேயே செலவழிக்கப்பட வேண்டும்.
சித்திரான்ன தானம்
அந்த யுககாலங்களில் பூலோக மக்களுடன் பல்லாயிரம் விண்ணுலகங்களிலிருந்தும் கோடிக் கணக்கான ஜீவன்கள் மானுட ரூபத்தில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவர். சித்ராதேவியின் அருட்கடாட்சம் நிறைந்த பலவித நிறங்களுடன் கூடிய சித்ரான்னத்தை அருட்பிரசாதமாக ஏற்றவர்கள் தங்கள் தேகத்தில் புத்தொளியும் புத்துணர்ச்சியும் இறையருளால் பல்கிப் பெருவதைக் கண்டு ஆனந்தித்தனர். இதனால் புதுத் தெம்புடனும், நல்லாரோக்யத்துடனும் அவர்களால் மேன்மேலும் கிரிவலத்தை மேற்கொள்ள முடிந்தது. ஒரு மண்டல கிரிவலத்திற்காக திருஅருணாசலத்திற்கு வந்தோரெல்லாம், சித்திரா தேவியின் சித்ரான்னதான மஹிமையால் அதன் தெய்வீக சக்தியினால் தங்களையும் மறியாமலேயே பல வருடங்களாகத் திருஅண்ணாமலையை கிரிவலம் வரலாயினர்! என்னே அன்னதானத்தின் மஹிமை! இதனால் அவர்கள் வேண்டிய வரங்களெல்லாம் தாமாகவே இறையருளால் கைகூடின.
அன்னதானத்துடன் கூடிய கிரிவலமன்றோ! அருணாசல ஈசனும் உடனேயே காட்சியளித்தார். “அம்மா சித்திரா தேவி! பிற ஜீவன்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உன்னுடைய தியாகம் நிறைந்த வாழ்க்கை, வரும் யுகங்களில் எல்லோருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கட்டும்! நீ வேண்டியபடியே யாம் வரமளிக்கின்றோம். எவரொருவர் உன்னைப் போல், சித்திரை மாதப் பௌர்ணமியில் சித்ரா அன்னங்களை (எலுமிச்சை, தேங்காய், தயிர் போன்ற பலநிற அன்னங்கள்) ஏழை, எளியோர்க்கு அன்னதானம் செய்து எங்கெல்லாம் கிரிவலம், புண்ய நதி/கோயில் தீர்த்த ஸ்நானம்/புரோக்ஷணம், பெரியோர்களுக்குப் பாத பூஜை, முறையான சந்திரபூஜை, 27 நட்சத்திர லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள், 32 விதமான அறங்கள் போன்றவற்றை முறையாகக் கடைபிடிப்போர்க்குச் சித்ரா பௌர்ணமியன்று சமுத்திர ஸ்நானம் செய்வதனால் கிட்டும் பலன்களை பரிபூரண்மாகப் பெறுவர்! பல கோயில்களில் உள்ள தீர்த்தங்களிலும் உன்னருள் நிரவி நின்று அன்று சித்ரா தீர்த்த பலனையும் தந்தருள்வாயாக! ஆனால் இவ்வற்புதமான காரியங்களை நிறைவேற்ற உனக்கு உதவிபுரிய இருப்போர் சித்தபுருஷர்கள் போன்ற உத்தம இறைநிலை அடைந்தோரே! ”
சித்திரைக் காட்டும் நல்வழி
ஸ்ரீஅருணாசல ஈஸ்வரனின் கருணைக் கடாட்சம் பெற்று மகிழ்ந்த சித்திரா தேவி இறைவனுக்கு நன்றி செலுத்திட “சித்திரா தேவி! மக்களுக்கு நல்வழி காட்டுவது மிகவும் அரிய, பெரிய பணியாகும். உன்னால் தனித்துச் செய்வது சற்றே கடினமாகும். எத்தனையோ மஹரிஷிகள் குருகுலவாசங்கள் மூலம் பலருக்கு நல்வழியைக் காட்ட பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றார்கள். இன்ப, துன்ப மாயைகளில் சிக்கும் மனிதனுக்கு நல்வழிதனைக் கூட்ட நீ அருட்பெருஞ் சித்தபுருஷர்கள், பிரம்ம ரிஷிகள், உத்தம முனிபுங்கவர்கள், புனித ஞானிகள், தேஜோமயமான யோகிகளுடைய உதவியைப் பெற்றுக் கொள்! அவர்களுடைய திரண்ட சக்தியுடன் உன் தீவிர (நல்) வைராக்கியத்தைச் செவ்வனே நிறைவேற்றிடுவாயாக!”
உடனே சித்திரா தேவி ஒரு நல்லவைராக்யத்தை மேற்கொண்டவனள்! என்ன அது? ஒவ்வொரு சித்திரா பௌர்ணமியன்றும் சகல கோடி விண்ணுலகங்கள், பூலோகத்தின் பல பகுதிகளிலுமுள்ள சித்தபுருஷர்கள், ஞானிகள், யோகிகள், மஹரிஷிகள், முமூட்சுக்களை திருஅண்ணாமலையில் ஒன்று கூட வைத்திடுவோம். இவர்கள் திருஅருணாசலத்தை கிரிவலம் வந்தவாறே, சித்திரா பௌர்ணமியன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் மேற்குறித்த தானதர்மங்களைச் செய்வோர்க்கு சந்திர கிரணங்கள் மூலம் இறையருளைப் பரப்புவர்.
“இத்தரையில் சித்தரை
சிவன் காணும் வண்ணம்
எத்தரையிலும் இருந்திடா வண்ணம்
இத்தரையில் இங்கு காண
வைப்பதே சித்திரையின்
முதல் வைராக்யமாம்”
எனவே திருஅண்ணாமலையில் (இத்தரையில்) சித்திரா தேவி, சித்திரா பௌர்ணமியன்று பலகோடி சித்த புருஷர்களையும், மஹரிஷிகளையும் அழைத்து வருகின்றனள். பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அந்தந்தப் பகுதிக்குரிய சித்தபுருஷர்கள், மஹரிஷிகள் போன்றோர் சித்ரா பௌர்ணமி நன்னாளில் இத்திருஅருணாசல க்ஷேத்திரத்தில் ஏதேனும் ரூபத்தில் பிரசன்னமாகி கிரிவலம் வந்தவாறு இருப்பர். அவர்களே எவராலு எளிதில் உய்த்துணர இயலா திருமலைத் திருமேனியாம் திருஅருணாசல மலையின் திவ்ய சக்தியினைத் தம் தேகத்தில் ஏற்று சந்திர கிரணங்கள் மூலம் மேற்கண்ட முறையில் வெவ்வேறு பகுதிகளில் அன்னதானத்துடன் மேற்குறித்த வழிபாடுகளை நிறைவேற்றுவோர்க்கு சித்திரா நட்சத்திர அருட்சக்தியினையும் அளிக்கின்றனர். இதுவே சித்திரை தவத்தின் மூலம் நாம் பெறும் அதிஅற்புத வரமாகும்.
சித்திரா பௌர்ணமியில் பூஜை
1. சித்ரான்ன வகைகளைச் (புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை, தயிர் சாதம் etc..) செய்து ஜாதி, மத, இனபேதமின்றி அன்னதானம்.
2. கடலில் நீராடுதல்
3. இயன்ற இடங்களில் புண்ய நதியில்/கோயில் தீர்த்தங்களில் நீராடுதல்/புரோக்ஷணம்.
4. 27 நட்சத்திர லிங்க வழிபாடு (உ.ம் சென்னை- திருவொற்றியூர் ஸ்ரீபடம்பக்க நாதர் சிவாலயம்).
5. உதக சாந்தி எனப்படும் 27 நட்சத்திர மந்திர கும்பபூஜை இதனையறியாதோர் இவ்விதழில் தரப்பட்டுள்ள சித்தபுருஷர்களின் 27 நட்சத்திர வாக்யங்களைக் கொண்டு ஹோமம் செய்திடலாம். ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயர், வாக்கியம் கூறி “ஸ்வாஹா” என்று அந்தந்த நட்சத்திர தேவிக்கு ஆஹுதியிட வேண்டும். இதனால் அவரவர் நட்சத்திர தேவ/தேவதைகள் ப்ரீதியாகி நல்ஆரோக்யம், குடும்பத்தில் அமைதியும் உண்டாகி கடன் நிவாரணம், வறுமை நிவர்த்தியுடன் சாந்தமும் ஏற்பட்டுப் பலவிதத் துன்பங்களும் தீரும். முதலில் இவ்வரிய அனுக்ரஹத்தை நமக்குப் பெற்றுத் தந்த ஸ்ரீசித்திரை நட்சத்திர தேவிக்கு முதல் ஆஹுதி தருதல் சிறப்பானதாம்.
6. 32 வித அற்ப்பணிகளை மேற்கொள்தல், பிரபஞ்சத்தின் பல பகுதிகளிலிருந்தும் கோடிக்கணக்கான சித்த புருஷர்களும் மஹரிஷிகளும் சித்திரா பௌர்ணமியன்று திருஅண்ணாமலையில் ஒன்று கூடி, கிரிவலம் மேற்கொண்டு தங்கள் தேகத்தில் திருஅருணாசல மலையின் திரண்ட அருட்சக்திதனை வேண்டுமட்டும் திரட்டிச் சந்திர கிரணங்கள் மூலம் அந்தந்தப் பகுதியில் சித்ராபௌர்ணமியை சித்ரான்னதானத்துடன் முறையாகக் கடைபிடிப்போர்க்குச் சென்றடையும் வண்ணம் ஓர் இறைக் கருவியாகச் செயல்படுகின்றனர்.
தேஜோ வஸ்து சுபந்த மஹரிஷி என்பார் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்து கருவிலேயே மஹரிஷிக்கான குணங்களைப் பூண்டு தன் தவசக்தியனைத்தையும் பச்சிளங் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே சித்திரா நட்சத்திர தேவிக்கே அர்ப்பணித்து வருகிறார். இன்றும் திருஅருணாசலத்தில் ஸ்ரீசூர்யலிங்கம் அருகே, சித்திரா பௌர்ணமியன்று சித்திரா நட்சத்திர தேவி தவமிருந்த இடத்தில் குருவருள் பெற்றோர்க்குத் தரிசனமளிக்கிறார். சித்திரா பௌர்ணமியன்று ஸ்ரீசூர்யலிங்கம் அருகே ஏதேனும் ரூபத்தில் தவம் பூண்டு ஸ்ரீசித்திரா நட்சத்திர தேவியின் பரிபூரணமான அருளைச் சந்திரகிரணங்கள் மூலம் தமிழகத்தில் மதுரைப் பகுதி பக்தர்களுக்கு அளிக்கின்ற மெய்ஞான மஹரிஷியே ஸ்ரீசுபந்த மஹரிஷியாவார்.
மதுரை – தேஜோவஸ்து சுபந்த மஹரிஷி
திருச்சி – காலய வனலய முனிவர்
பாண்டிச்சேரி – கருவெளிக் குப்பசித்தர்
கோவை – பஸ்ம பூஜிசாங்கரர்
மத்திய பிரதேஷ் – பாண்டுடக்கர் ரிஷி
ஆந்திரா – சிங்க வீரைய காருரிஷி
கர்நாடகா – மதிதிம்மண்ண முனி
கேரளா – அச்யுத வர்ம ரிஷி
டெல்லி – பஜன் சுந்தர ரிஷி
ஹரியானா – ஷ்யாம சுந்தரப்பிரபு ரிஷி
அஸ்ஸாம் – ஸ்ரீபகத் சிங்கர் ரிஷி
மஹாராஷ்டிரா – சுகுவீரதாஸ மஹரிஷி
உத்தரபிரதேசம் – ஞானாலயர்
ஒரிசா – துர்கா த்ரயலிங்கர்
ஹிமாச்சல பிரதேசம் – சோமயாஜுலு சுந்தர ரிஷி
ஸ்ரீஅருணாசலேஸ்வரர், “சித்திரா தேவி!  ஜீவன்களுக்குச் சிறந்த நல்வழியைக் காட்ட வேண்டுகின்றாய்! எந்த மனிதனும் சித்திரா பௌர்ணமியன்று ஏதேனும் ஒரு நற்காரியத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் செய்வதாகத் தீவிரமான ஒரு வாழ்க்கை வைராக்கியந்தனை மேற் கொள்ளட்டும். ஆனால் அதனை விட்டுவிடாது செய்திடல் வேண்டும். இந்த ஒன்றே போதும் அவனுக்கு எத்தகைய உயர்நிலையையும் தந்திடும்” என்று அருளி சில வைராக்ய தர்மங்களையும் எடுத்துரைத்தார். தினமும் பசுவிற்கு உணவளித்தல், ஏழை எளியோர்க்கு அன்னம், ஆடைதானங்கள், வறிய மணமக்களுக்குப் பொன் மாங்கல்ய தானம் மற்றும் ஏனைய திருமண உதவிகள், ஏழை மாணவர்கட்கு உதவி, போன்ற 32 விதமான அறங்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாழ்நாள் முழுதும் செய்து வருதலே மிகச் சிறந்த எளிய நல்வழியாம். சில அறங்களைத் தனித்துச் செய்ய இயலாவிடில் பலர் ஒன்று சேர்ந்து  சத்சங்கமாக இணைந்து நடத்திடலாம்.

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam