அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

விஷ்ணுபதி

15.5.1995 அன்று அமையும் விஷ்ணுபதிப் புண்ய காலத்தை மதுரை கொடை ரோடு அருகே அம்மை நாயக்கனூரில் உள்ள ஸ்ரீகதலி நரசிங்கப் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் மற்றும் தான தர்மங்களுடன் கொண்டாடுதல் மிகவும் சிறப்பானதாகும்.
ஸ்ரீ ஓஷதிபதி மஹரிஷி பறவையாக யஜுர் வேதத்தின் தைத்ரீயப் பகுதியை யாங்கணும் பரப்பி ஸ்ரீவிஷ்ணுவின் பாதங்களை அடைந்த நேரமே அந்த யுக, யுவ வருட விஷ்ணுபதிப் புண்ய காலம் ஆகும். 14.5.1995 விடியற்காலை 2 மணி முதல் 10.30 வரையுள்ள விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் தான தர்மங்கள், தர்ப்பணங்கள், பூஜைகள், ஹோமங்கள் போன்றவற்றை நற்காரியங்களை நிகழ்த்திட  பிரதோஷபூஜா பலன்கள் போன்று அவை பன்மடங்காகுப் பெருகுகின்றன.

ஸ்ரீவேதவியாஸர் வேத பரிபாலனத்திற்காக வேதத்தை ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்காகப் பிரித்து நான்கு மஹரிஷிகளிடம் வழங்கினாரல்லவா! அவற்றில் யஜுர் வேதத்தைப் பரிபாலிக்கும் திருவாய்ப்பைப் பெற்றவர் ஸ்ரீவைசம்யானர். அவருடைய ஆத்யந்த சிஷ்யனே யாக்ஞ்வல்கியர்.

சிஷ்ய பரிபாலனம்
தம்மிடமுள்ள அனைத்து சிஷ்யர்களுக்கும் அனைத்தையும் அவர் கற்றுத் தருவதில்லை. இதற்குத் காரணம் சிஷ்ய பேதமன்று! யாருக்கு எப்போது எதைப் புகட்ட வேண்டும் என்ற வரைமுறை உண்டு. ‘என்னிடம் இதைச் சொல்லவில்லையே. ‘அதை ஏன் சொல்ல வில்லை’ என்று எண்ணுவது மடமை. சிஷ்யனுடைய அறிவு, ஆற்றல், தகுதி எல்லாவற்றையும் விட குருபக்தி, நம்பிக்கை இவற்றைப் பொறுத்து ஒவ்வொரு சிஷ்யனுக்கும் அவன் பெற வேண்டியதைத்தான் அளிப்பார்.
சிலருக்கு எதையும் அளிக்காமல் விட்டுவிடுவதும் உண்டு. காரணம் ‘நமக்கு எது வேண்டும் வேண்டாம் என்பதை அறிந்தவர் சற்குரு ஒருவரே’ என்ற தீவிர நம்பிக்கையை ஒரு சிஷ்யன் பெறும்போது உளம் மகிழும் சற்குரு அந்த சிஷ்யன் உருவத்தில் அவனுக்கு வேண்டியதை, அவன் ஆற்ற வேண்டிய நற்காரியங்களை நிறைவேற்றுகின்றார்.
‘நம் மனதில் அவருக்கு இடம் கொடுத்தால் போதும், அதில் அவர் ஆவாஹனமாகிச் செய்ய வேண்டியதைச் செய்து விடுவார்’ என்ற பரிபூரண குரு நம்பிக்கையைப் பெற சத்சங்கத்திலுள்ள ஒவ்வொரு அடியாரும் வைராக்கியத்துடன் செயலாற்ற வேண்டும்.

யாக்ஞவல்கியர்

ஒரு சிஷ்யன் எத்தகைய சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர் யாக்ஞவல்கியர்! பரிபூரண குருபக்தி, புனிதமான மனம், தெளிந்த அறிவு, மாசு மருவற்ற குருசேவை போன்ற அரிய குணங்களுடன் நிறைகுடமாய் விளங்கினார். ஆனால் இத்தகையோரைத்தானே இறைவன் சோதிப்பான். காரணம், பொன்னை உருக்க உருக்க அதன் தரமா குறையும்? ஸ்புடம் போட்டத் தங்கம் போலன்றோ. சோதனைகளுக்கு இடையிலும் யாக்ஞவல்கியர் மிளிர்ந்தார்!
குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று கூறுவர். எந்த சிஷ்யனாலும் குருவை மிஞ்ச முடியாது. அந்த சற்குருவே தன் சிஷ்யன் அப்பிறவிக்கு உரித்தான குருகுல அம்சங்களைப் பயின்று விட்டான் என்று உணரும் போது அவனை குருகுலத்திலிருந்து விடுவித்து ‘இவன் சற்குருவாகப் பிரகாசித்துத் தான் அறிந்ததை ஆயிரமாயிரம் பேர்களுக்கு உணர்வித்து அதியற்புத சிஷ்யர்களை இறையடியார்களை உருவாக்க வேண்டிய நல்ல தருணம் வந்துவிட்டது’ என்று இறையருளால் அறிந்து அவனை வெளியுலகிற்கு அனுப்புகின்றார்.

குழந்தை தாயை விட்டுப் பிரியுமா? சற்குருவிடம் இணைந்து இறைப் பேரின்பத்தைக் துய்க்கும் சிஷ்யனுக்குக் குருவைப் பிரிய மனம் வராது! ஆனால் அவனடைந்த இறையனுபூதிகளை மற்றவர்களுக்கும் அளிக்கவேண்டும் எனில் ஆயிரமாயிரம் பேர்களை வெளியுலகில் சந்தித்தால்தானே விதவிதமான அனுபவங்கள் கிட்டும். அந்த சிஷ்யனை வெளியுலகிற்கு அர்ப்பணித்திட சற்குருவே பல சம்பவங்களைப் புனைந்து நடைபெறச் செய்வார்.
வேதத்தைத் தந்துவிடு.....
இவ்வாறாக ஸ்ரீவைஸம்பாயன மஹரிஷியின் குருகுலத்தில் ஞானசூரியனாகப் பிரகாசித்த யாக்ஞவல்கியரை பிரபஞ்சத்திற்கு சமர்பித்திடத் திருஉளங்கொண்டார் அவர்தம் சற்குரு. ஆனால் யாக்ஞவல்கியரோ குருவைப் பிரிய மனமில்லாது கண்ணீர் உகுத்தார். சற்குரு ஒரு நாடகமாடி ஒரு தர்கசம்வாதத்தை உருவாக்கிட யாக்ஞவல்கியர் தாம் அறிந்ததைத் தெளிவாக எடுத்து உரைத்திட ‘அகம்பாவம்’ காரணமாகவே குருவையே எதிர்ப்பதாக ஏனைய சிஷ்யர்கல் ஒன்று சேர்ந்து கூறிட ஸ்ரீவைஸம்பாயனர் யாக்ஞவல்கியரைத் தாம் கற்றதனைத்தையும் ‘கக்கி விட்டுச்’ செல்லுமாறு பணித்தார்.
உண்மையில் ஸ்ரீவைஸம்பாயனர் யாக்ஞவல்கியரின் எதிர்காலத்தைத் தீர்க்க தரிசனமாக உணர்ந்து தம் சிஷ்யன் ஸ்ரீசூர்ய நாராயண ஸ்வாமியிடமே நேரடியாக வேதம் கற்கும் பாக்யத்தைப் பெறவிருக்கிறான் என்பதை உணர்ந்து அதற்கு முன்னோடியாக இந்த சம்பவம் என்பதை உணர்ந்து நாடகமாடினார். உண்மையில் தம் சிஷ்யனின் ஞானப்ரகாசம் குறித்துப் பெருமிதம் அடைந்தார் அவர்.
யாக்ஞவல்கியர் குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றினார். தாம் கற்றவேதங்களைக் ‘கக்கி’ விட்டுக் குருவை நமஸ்கரித்து வெளியேறினார். அதன்பின் அவர் எவரும் அண்ட இயலா சூர்யமண்டலத்தை அடைந்து ஸ்ரீசூர்ய பகவானிடமே வேதம் கற்றது நாமறிந்ததே!
ஸ்ரீவைசம்பாயனர் சில சீடர்களை ஸ்ரீகதலீஸ்வரர் ஸ்வயம்புமாக எழுந்தருளியிருக்கும் சேத்திரத்தில் தீவிர தபஸை மேற்கொள்ளுமாறு பணித்தார் அல்லவா? ஓஷதிபதி என்ற சிஷ்யரே அதனை முன்னின்று நடத்திப் பெரும் புகழ் பெற்றார்.
ஸ்ரீவைஸம்பாயனர் “தபஸ் செய்து வருவாயாக! வேதபரிபாலனத்திற்கு உன் சேவை பெரிதும் தேவைப்படும்’ என்று ஆசி கூறி அவரை அனுப்பினார் அல்லவா!
‘குருவின் அருட்கட்டளையன்றோ! ஆனால் யாக்ஞவல்கியர் போன்ற அற்புத பால ஞானப்ரகாஸியோடு குருகுலம் பயின்றாலன்றோ ஏதேனும் ஒரு சிறிதேனும் வேதம் பயிலலாம். குருஅருளாணையிட்டால் அதற்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டே!
இச்சிந்தனையோடு ஓஷதிபதி ஸ்ரீகதலீஸ்வரர் உறையும் இறைத் தலத்தை அடைந்தார். ஏகாத்ம விசாரத்தில் குரு அருளியதையே பிரார்த்தனையாகக் கொண்டு ஓஷதிபதி தியானத்தில் ஆழ்ந்தார். வேத பரிபாலனம் என்ற உத்தம நற்காரியத்திற்காக அல்லவோ கடுந்தவம். எனவே கருணாகர மூர்த்தியாம் ஸ்ரீகதலீஸ்வரன் எளிதில் அருள்பாலிக்கக் கருணை கொண்டான்.
ஸ்ரீகதிலீஸ்வரர் மூர்த்தி பிரசன்னமானார். ‘நீ தித்ரி பறவையாக மாறிப் பல லோகங்களிலும் எப்போதும் சஞ்சரித்து வேத பரிபாலனத்தை மேற்கொள்வாயாக! நீ முதலில் யாக்ஞவல்கியர் உண்டு கக்கிய சேஷத்தை உன் முதல் உணவாக, பிரசாதமாக ஏற்பாயாக.

தித்ரிப் பறவை நேரே பறந்து சென்று .. இதோ சற்குருவின்ஆணப்படி அவரிடம் கற்றதை யாக்வல்கியர் கக்கிடட.... ஒளிப் பிழம்பாய் உணவு வெளிவந்திட......
அதனை ஒன்று விடாமல் தித்ரி பறவை பரிபூரண பக்தியுடன் உண்டது. அதனையே யஜுர் வேதத்தின் தைத்ரீயப் பகுதியாகப் பிரபஞ்சம் எங்கும் பரப்பியது, அந்த ஓஷதிபதி என்னும்  மஹரிஷி வேத நெறி காத்து ஸ்ரீவிஷ்ணுவின் பாதங்களை அடைந்தார். இத்திருத்தலமே அம்மை நாயக்கனூர் ஆகும்.


கோகிலா விரதம் : 11.7.1995 அன்று வருகின்ற கோகிலா விரதத்திற்கு முன் ஒரு மண்டல விரதம் மேற்கொள்ள வேண்டுமாதலின் 25.5.1995 வியாழன் முதலே விரதம் ஏற்றுத் தினமும் பால் கடம்பு/சீம்பால் (பசு கன்றை ஈன்ற பின் தரும் மஞ்சள் நிறப்பால்) பால் கொண்டு பால்கோவா செய்து தினமும் ஸ்ரீகிருஷ்ணனுக்குப் படைத்து உண்டு விரதம் ஏற்க வேண்டும்.
இத்தகைய விரதம்  ஏற்க இயலாதோர் தினமும் பசும் பாலில் பால் கோவா செய்து ஸ்ரீகிருஷ்ணனுக்குப் படைத்து 11.7.1995 வரை இயன்றளவு உபவாசம் மேற்கொள்ள வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தி

ஸ்ரீதத்தாத்ரேயர் ஸ்ரீகுந்தி தேவிக்குச் சங்கடஹர சதுர்த்தி பூஜையின் மஹிமைகளைப் புகட்டினார். இதனையே சித்த புருஷர்களும் உன்னதமான பூஜை முறைகளுள் ஒன்றெனப் போற்றுகின்றனர்.
சித்தபுருஷர்கள் அருளும் சங்கடஹர சதுர்த்திப் பூஜை முறை யாதோ, காண்போமா. சதுர்த்தி திதி ஆரம்பிக்கும் போதே சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டிட வேண்டும். பெரும்பாலும் பஞ்சாங்கத்தை அல்லது காலண்டரைப் பார்த்து “சங்கடஹர சதுர்த்தி” என்று போட்டிருக்கின்றதா என்று பார்த்து அந்நாளில் விரதத்தைத் துவங்கும் வழக்கம் நடைமுறையில் நிலவுகின்றது. இது தவறான முறையாகும்.
பௌர்ணமியிலிருந்து மூன்றாவது திதியான திரிதியைத் திதி முடியும் நேரத்தைக் கண்டு சரியாக சதுர்த்தித் திதியிலிருந்தே உபவாசத்தை ஏற்க வேண்டும்.
சதுர்த்தி திதி முடியும் வரை உறக்கம் கூடாது. இயன்றவரை மௌனமாய் இருப்பின் விரதத்தின் பரிபூரணத் தன்மை பெருகும்.
இந்த சதுர்த்தி முழுவதும் ஸ்ரீவினாயகருடைய ஆயிரக்கணக்கான நாமங்களுள் ஏதேனும் ஒன்றைத் தியானித்திருப்பது மிகவும் விசேஷமானதாகும்.
ஒருமுக தியானம்
ஏன் ஒரு நாமாவை மட்டுமே தியானிக்க வேண்டும்? சங்கடங்களை, துன்பங்களை விலக்குவதற்கு ஆயத்தமாகுமுன் அவற்றை எதிர் நோக்குவதற்கு, சமாளிப்பதற்கு மனோதைர்யம் (வீரம்) தேவை. இதற்கு அறிவு பூர்வமாகத் தேகமும் மனமும் ஒருமைப்பட்டுச் செயல்பட வேண்டும். உடலாற்றல் இருந்து மன தைர்யமில்லாவிடிலோ, மனம் திடமாயிருந்து உடல் ஒத்துழைக்காவிடிலோ எவ்விதப் பயனுமில்லை.
உபவாசம் எப்போது, ஏன்?
ஓரே நாமாவைத் தியானித்திட தேகமும் மனமும் ஒருமைப்படும். பொதுவாக சித்த புருஷர்கள் நாம உபவாசத்தை அமைக்கின்றனர். அதுவும் மிக எளிமையான உபவாச முறை! திதி, வார, நட்சத்திர, கோள் நிலைக்களுக்கு ஏற்ப எளிய உபவாச நியதிகளைத் தருகின்றனர். இதனால் உடலை மிகவும் வருத்தாது. கால நிலைகளும் கோள் அமைப்புகளும் தேகாம்ச ஆரோக்யத்திற்குத் துணை புரிகின்றன அல்லது உபவாசத்தின் ஊடே இயற்கைத் திரவியங்களைப் பிரசாதமாக அளித்து உடல் வருத்தத்தை உணராது பூஜையில் ஈடுபடச் செய்கின்றனர்.
ஸ்ரீவீர கணபதி
நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் “ஹோம மகிமை” என்னும் நூலில் ஒவ்வொரு திதியிலும் வழிபட வேண்டிய ஸ்ரீகணபதியின் ஒவ்வொரு நாமத்தையும் அவருடைய திருஉருவத்தையும் அளித்துள்ளார். 14 திதிகள், அமாவாசை, பௌர்ணமிக்கு ஒரு கணபதி ஆக 15 திதிகளுக்கும் உரிய பதினைந்து கணபதிகளின் திருஉருவங்கள், பதினைந்து நாமாக்கள் கூடிய வண்ணப் படமே நம் ஸ்ரீலஸ்ரீலோபா மாதா அகஸ்தியசபை அறக்கட்டளை வெளியிட்டுள்ள தினசரிக் காலண்டரின் (1994-1995) முகப்பாகப் பொலிந்து நிதமும் பதினைந்து விநாயக மூர்த்திகளின் அபூர்வமான ஒரு மொத்த தரிசனத்தை தந்தருள்கின்றது. காணக் கிடைக்காத அபூர்வ தெய்வ தரிசனம்!
பிரபஞ்சமெங்கும் ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு நாமந் தாங்கி ஸ்ரீவிநாயகப் பெருமான் அருள்பாலிக்கின்றார். அரசு, ஆல், மரத்தடிப் பீடங்கள், குளக்கரைகள், முச்சந்திகள், நடைபாதைத் திருமண்டபங்கள், குடியிருப்பு மையங்கள், பஸ் நிலையம், இரயில் நிலையம், மார்க்கெட்டுகள் என மக்கள் கூடும் இடங்கள் யாங்கணும் பிள்ளையாராக எழுந்தருளி யாவர்க்கும் அருள்பாலிக்கும் கலியுகத்தின் கண்கண்டமூர்த்தி!
ஒவ்வொரு திதிக்கும் அந்தத் திதியின் பிள்ளையாரின் நாமாவைத் தெரிந்து கொண்டால் அன்று முழுதும் எந்தப் பிள்ளையாரை எங்கு தரிசனம் செய்தாலும் அந்தத் திதிக்குரிய நாமத்தால் துதித்து வணங்கிட அவர் ஆனந்தித்து திதி தேவதையின் அருளையும் கூட்டிப் பன்மடங்கு அருளை வர்ஷிக்கின்றார்.
ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீசித்தி விநாயகர் என்று பல ஆவாஹனப் பெயர்களைப் பூண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீகணபதியினை, முதலில் அந்த திதிக்குரிய விநாயக நாமங் கொண்டு போற்றிட்டால் மிகவும் விசேஷமானதாகும்.
திதி   விநாயகரின் திருநாமம்

  1. பிரதமை – ஸ்ரீ பால கணபதி
  2. த்விதியை – ஸ்ரீதருண கணபதி
  3. திரிதியை – ஸ்ரீபக்தி கணபதி
  4. சதுர்த்தி – ஸ்ரீவீர கணபதி
  5. பஞ்சமி – ஸ்ரீசக்தி கணபதி
  6. சஷ்டி – ஸ்ரீசித்தி கணபதி
  7. சப்தமி – ஸ்ரீதுவிஜ கணபதி
  8. அஷ்டமி – ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி
  9. நவமி – ஸ்ரீவிக்ன கணபதி
  10. தசமி – ஸ்ரீஷிப்ர கணபதி
  11. ஏகாதசி – ஸ்ரீஹேரம்ப கணபதி
  12. துவாதசி – ஸ்ரீலக்ஷ்மி கணபதி
  13. திரயோதசி – ஸ்ரீமகா கணபதி
  14. சதுர்த்தசி – ஸ்ரீவிஜய கணபதி
  15. பௌர்ணமி, அமாவாசை – ஸ்ரீநிருத்த கணபதி

சதுர்த்திக்கு ஸ்ரீவீரகணபதி
சங்கடங்களை எதிர் நோக்கி வெல்லத் தேவையான மனோதைர்யமாம் வீரத்தையும், துன்பந் துடைக்கும் ஐஸ்வர்யங்களையும், அவற்றை முறையாக வைத்துப் போற்றிப் பாதுகாக்கும் மன ஆற்றல், வளம், ஆரோக்யம் தந்திடுபவரே ஸ்ரீவீர கணபதியாம்.
சங்கடஹர சதுர்த்தியன்று ஸ்ரீவிநாயகரின் எந்த நாமத்தைத் துதிப்பது என்ற எண்ணம் ஏற்படில் ஸ்ரீவீர கணபதி நாமத்தையே மேற்கொள்வது சிறந்ததாம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம், தியானம், பூஜை

  1. மேற்சொன்னபடி திரிதியை திதிமுடிந்து சதுர்த்தி திதி தொடங்கும்போதே விரதம் (உபவாசம்) மேற்கொள்ள வேண்டும்.
  2. சதுர்த்தி திதி – கால நேரம் முழுதும் உறங்காமலிருத்தல், இயன்ற அளவு மௌனமாயிருத்தல் உத்தமமானது.
  3. முதல் நாள் இரவே சதுர்த்தி திதி தொடங்கினாலும் சரி, எப்போது சதுர்த்தி ஆரம்பிக்கின்றதோ அந்நேரம் முதல் உபவாசமும், ஸ்ரீகணபதி தியானமும் தொடங்கப் பெற வேண்டும்.
  4. சதுர்த்தி திதி பொதுவாக 24 மணி நேரங்கள் (60 நாழிகை) எனில் அதனை ஒவ்வொன்றும் 8 மணி நேரங்களாக (20 நாழிகை) மூன்று விரத காலங்களாகப் பகுக்கப் படுகின்றது. இதற்குத் “த்ரிகுண உபவாச பூஜை” என்று பெயர்.
  5. இந்த எட்டு மணி நேர கால அளவில் : முதல் ஆறு மணி நேரம்
    1. ஸ்ரீவிநாயக தியானம்
    2. அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஒரு வெள்ளி/தாமிர/வெண்கல/மரக்கிண்ணத்தில் காய்ச்சிய பசும் பாலை ஊற்றி அதில் தர்பை, அருகம் புல்லை வைத்து அதை வலது கையால் தொட்டுப் பிடித்தவாறு ஸ்ரீவிநாயக தியானத்தைத் தொடர்தல்.
    3. இந்த இரண்டு மணி நேர தியானத்திற்குப் பிறகு பாலில் தேன் ஊற்றிப் பிரசாதமாக சிறிது அருந்த வேண்டும்.
  6. பிறகு மீண்டும் ஸ்ரீ விநாயக நாம தியானம் – ஆறு மணி நேரத்திற்கு, பிறகு மேற்கண்டவாறு பால் கிண்ணத்தில் தர்பை, அருகம் புல்லைப் பற்றியவாறே இரண்டு மணி நேரதியானம். பாலில் சிறிது தேனை ஊற்றிப் பிரசாதமாக மீண்டும் அருந்துதல்.
  7. மூன்றாவது எட்டு மணி நேர கால அளவிலும் மேற்கண்ட முறையிலேயே ஆறு மணி நேர தியானம் மற்றும் இரண்டு மணி நேர தர்பை, தூர்வா ஸ்பரிச தியானம்.

தியானம் என்றால்.....

  1. தியானம் என்றால் பலவித அர்த்தங்கள் உண்டு. இங்கு ஸ்ரீவிநாயக நாம தியானம் என்பது ஏதேனும் ஒரு ஸ்ரீவிநாயக நாமத்தை (ஸ்ரீமஹா கணபதி, ஸ்ரீவீர கணபதி, ஸ்ரீவிஜய கணபதி ) ..அச்சதுர்த்தி திதி முழுதும் மானசீகமாகவோ, வாயசைத்தோ, சப்தம் எழுப்பியோ உச்சரித்தல் ஆகும்.
  2. இந்த ஏக நாம தியானத்தால் மனம் எளிதில் ஒருமுகப்படும்.
  3. சதுர்த்தி திதியின் முடிவில் இனிப்புக் கொழுக்கட்டையை (12, 21,75, 102 … எண்ணிக்கை) நைவேத்யம் செய்து இயன்றால் அபிஷேகம், அஷ்டோத்திர பூஜையுடன் சங்கடஹர சதுர்த்தி பூஜையை நிறைவு செய்தல் வேண்டும்.
  4. சங்கடஹர சதுர்த்தி பூஜையை/விரதத்தைப் பலர் ஒன்றாக கூடி சத்சங்க பூஜையாக நிகழ்த்தி 3333 இனிப்புக் கொழுக்கட்டைகளை நைவேத்யம் அளித்திடில் அபரிமிதமான பலன்கள் உண்டாகும். இதனை ஏழைகளுக்குப் பிரசாதமாக அளித்திட அதன் பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும்.

அடியார் : குந்தி தேவி இந்த சங்கட ஹரசதுர்த்தியை முறையாகக் கடைப்பிடித்தனள் அல்லவா, குருதேவா!
சற்குரு : கடைபிடித்தனள் என்பதைவிட இன்றும் கடைப்பிடித்து வருகிறாள் என்பதே சரியானது!
பொதுவாக மனிதர்கள் குறிப்பாகப் பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எத்தகைய பெரிய துன்பங்களை எல்லாம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே அத்தகைய வாழ்வை தெய்வ வரமாகப் பெற்று வாழ்ந்தவள் குந்திதேவி. இன்னும் சொல்லப் போனால் எண்ணற்ற மகரிஷிகள், சித்த புருஷர்களின் நேரடியான அனுக்ரஹத்தைப் பெற்று வாழ்ந்தவள்.
அடியார் : அப்படியானால் குந்திதேவி ஏன் துன்பச் சூழ் நிலைகளிலேயே வாழ்ந்தாள்?
சற்குரு : பொதுவாக எந்த மஹரிஷியும், சித்த புருஷரும்,யோகியும், “நான் இதை ஆசியாக அளிக்கின்றேன்“ என்று கூறி வாழ்த்துவது கிடையாது.
ஆனால் குந்தி தேவிக்குரிய சிறப்பு என்னவெனில் அவளை ஆசிர்வதித்த ஆயிரக்கணக்கான மஹரிஷிகளும் , சித்த புருஷர்களும் தங்கள் ஆசிகள் அவளுக்கு எவ்வித சித்தியை, ஆற்றலை, தெய்வீக சக்தியைத் தரும் என்று நேரிடையாகவே குந்தி தேவியிடமே அறிவித்தனர். என்னே அதிசயம்!   அடியார் : பின் அவ்வளவு அளப்பரிய தெய்வீக ஆற்றலைக் கொண்டு என் செய்தாள் குந்திதேவி?
சற்குரு : மிக நல்ல கேள்வி! மஹரிஷிகள், சித்தர்கள் உள்ளிட்ட உத்தம இறையடியார்கள் பலருடைய உத்தம ஆசிகளைக் கொண்டு குந்திதேவி ஓர் உற்சவ மூர்த்தியாய்ப் பிரபஞ்சமெங்கும் வலம் வரக்கூடிய ஓர் உயரிய தெய்வ நிலையைப் பெற்றிருக்கலாம்.
ஆனால் அவ்வித தெய்வீக சக்தியைக் கொண்டு மஹாபாரத காலம் முழுதும் தன்னை நாடி வந்த கோடிக்கணக்கானக் குடும்பப் பெண்களின் துயரங்களைத் தீர்த்து வைத்தாள். உத்தமியாம் காந்தாரி தேவி கூடத் தன் கவலைகளைத் தீர்க்கும் அருமருந்தாய் குந்தி தேவியின் அருள்மொழிகளை நாடினாள். குந்தி தேவி மஹாபாரதப் பாத்திரம் துன்பமயமானது என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் உண்மை என்னவெனில் பிறருடைய துன்பங்களையும் கர்மச் சுமைகளையும் குந்திதேவி தன் உடல், பொருள், ஆவி அனைத்திலும் ஏற்று உத்தம தியாகச் செம்மலாய் ஒளிர்ந்தாள்.
இன்றும் தன்னிடம் தன் குறைகளையும் துன்பங்களையும் கூறிப் பிரார்த்தனை செய்வோருக்கு அவர்களுடைய கர்மவினைச் சுமைகளின் ஒருகணிசமான பகுதியினைத் தானே ஏற்று அனுபவித்து இக்கட்டான துன்பங்களிலிருந்து அவர்களைக் காக்கின்றாள்!

குந்திதேவி – தியாகச் சுடர்
எத்தனையோ சொல்லொணாத் துன்பங்களைக் கலியுக மக்கள், குறிப்பாகப் பெண்கள் அனுபவிக்கின்றனர். பிள்ளைகளை விட்டுப் பிரிந்து வாழ்தல், தன் புத்திர புத்திரிகளுடன் சேர்ந்து வாழ இயலா சூழ்நிலை, கண் எதிரே தன் கணவன் பல அக்கிரமங்களை, பாவங்களைச் செய்து வாழ்வதைக் கண்டும் ஒன்றும் சொல்ல இயலா நிலை, பணம், செல்வாக்கு, அந்தஸ்து இருந்தும் ஒன்று மாற்றி ஒன்றாக ஏதேனும் பிரச்னை ஏற்படுதல், வீடு, சொத்துக்களை இழத்தல், சில திருமண சம்பந்தங்களால் குடும்ப ஒற்றுமை பாதிக்கப்படுதல் போன்ற எண்ணற்ற துன்பங்களால் பெண்கள் வருந்துகின்றனர்.
இத்தகைய பெண்கள் குந்தி தேவியை எண்ணி தியானம் செய்து “அம்மா, தாயே! ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அருட்கடாட்சத்தைப் பெற்ற அன்னையே! இன்றைக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்துப் பல பெண்களின் துயரங்களைக் களைய உத்தம வழிபாட்டை முறையாகச் செய்து வரும் மாதேவியே! உன்னுடைய ஸ்ரீகிருஷ்ண தியானத்தில் எம்மையும் சேர்த்து எங்களை மீளாத் துயரங்களிலிருந்து நீக்கும் நல்வழியைக் காட்டுவாயாக!” – என்று உண்மையாக வேண்டி ஏழை பெண்களுக்கு கோயிலில் குங்குமம். கண்ணாடி, வளையல், மஞ்சள், மருதாணி போன்ற மங்கலப் பொருட்களை அளித்து வர நன்மைகள் பெருகும், துயரங்கள் மறையும்.!
ஸ்ரீகுந்திதேவி மாதா கீ ஜெய்!    

மறுமணம்

மறுமணம் என்பது எளிதில் அமையக் கூடிய ஒன்றல்ல. தியாக மனப்பான்மையுடன் கூடிய மறுமணமே ஏற்கத் தக்கது. மேலும் கணவனை இழந்த மனைவியோ, மனைவியை இழந்த கணவனோ எத்தகைய மன சஞ்லங்களுமின்றி ஏக பதி விரதனாக வாழ முடியுமெனில் அது உத்தமமான வாழ்க்கையே! ஆனால் அதே சமயத்தில் சில ஏழைப் பெண்களுக்குச் சிறப்பான வாழ்க்கையைத் தருவது, பெரியோர்களால் பரிபூரணமாக ஆசிர்வதிக்கப் பெற்ற மறுமணங்கள், பூர்வ ஜன்ம கர்ம வினைப் பிணைப்பாக, இறை பக்தியில் திளைக்கும் உத்தம ஜோதிடர்கள் ஜாதக ரீதியாக அமைக்கும் மறுமணங்கள் ஏற்புடையவையே!
கணவனை இழந்து மேற்கூறிய முறையான மறுமணம் புரியும் பெண் அக்கணவனையே “கண்கண்ட” தெய்வமெனப் பேணி உத்தம சேவை புரிய வேண்டும். இது எவ்வாறு விளக்கப்படும்? முறையான மறுமணம் உத்தமப் பெரியோர்களின் பரிபூரணமான ஆசியோடு நன்கு கணிக்கப் பெற்று ஜோதிட ரீதியான பிணைப்பாக அமையும்போது நிகழ்கின்ற ஆன்மீக இணைப்பு என்ன தெரியுமா?
உத்தமமான கணவனே அத்தகைய மறுமணத்தில் அமைவதால், பித்ருக்களின் ஆசியுடன் முதல் கணவனின் ஆன்மா மறுமண உத்தம புருஷனின் தேகத்தில் குடி கொண்டு திருமண வாழ்வை முழுமை பெறச் செய்கிறது. ஆனால் இத்தகைய ஆன்மீக இரகசியங்களைப் புரிந்து கொள்ளும் மனப் பக்குவம் பெற உண்மையான இறைபக்தி தேவை!
தற்காலத்தில் சில மறுமணங்களில் சோகமயமான வாழ்வு அமைந்துள்ளதே, ஏன்? அவை முறையான மறுமணங்களல்ல, முழுமை பெறாத, நட்பு, காமம் போன்ற காரணங்களால் அமைந்த மறுமணம் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்!

நித்திய பிரதோஷம்

 நித்யப் பிரதோஷம் – (நம் குருமங்கள கந்தர்வாவுடன் விளக்க உரையாடல்)
அடியார் : குருவே! நித்ய பிரதோஷம் என்பது எப்படி சாத்யமாகிறது? பட்சப்பிரதோஷமானது திரயோதசித் திதியில் அமைவதால் வருகின்றது எனக் கூறலாம். நித்ய பிரதோஷம் எப்படி உருவாகிறது?

சற்குரு : எளிய கேள்வி ஆனால் இதற்குப் பெரிய விளக்கமே அளிக்க வேண்டும். ஆனால் மனித மனம் அவற்றையெல்லாம் ஏற்காது. காரணம் அறியாமை என்ற மாயை தான்! இத்தகைய ஆன்மீக இரகசியங்களைப் புரிந்து கொள்ள ஆன்மீகத்தில் உத்வேகம் வேண்டும். ஒரு LKG பையனுக்கு  M.Sc Biochemistryஐ போதித்தால் எப்படியிருக்கும்? அதே போலத்தான் இதுவும்.
என்ன இருந்தாலும் கேட்டு விட்டாய்! சொல்வது என் கடமை! இயன்றவரை எளிமையாக விளக்குகிறேன்.
நான் அடிக்கடி சொல்லி வருவதுண்டு. இறைவனை அறிவதற்கு முன் ஒரு சாதகன் அறிய வேண்டியவை கோடி கோடியாக உள்ளதென்று!
தன்னுடைய  அறுபது எழுபது  வருட ஆயுளில் குழந்தை பருவம், மாணவப் பருவம், முதுமைப் பருவம், நோயில் கழிந்த காலம் இவ்வாறு போக எஞ்சிய கொஞ்ச காலத்தில் இருக்கின்ற வாழ்க்கை, தொழில், கல்வி, குடும்பப் பிரச்சனைகள் போக அவன் (கோடி கோடியான விஷயங்களில்) எதைக் கற்றுக் கொள்வான்? நித்யப் பிரதோஷம், சந்திர தரிசன மஹிமை, ஏகாதசி மகிமை, சூர்ய நமஸ்காரப் பலன்கள், பௌர்ணமி பூஜை, பிரம்ம முகூர்த்த நேர விசேஷங்கள், கோபூஜை, காக்கை கரைதலின் விளக்கங்கள், பல்லி குரலின் பலன்கள், யானை தரிசன விளக்கங்கள் – இவ்வாறு கோடி கோடியாக உள்ளனவே! எதை அறிவது, எதை விடுவது!
இதற்காகத்தான் “எதை அறிந்தால் வேறு எதையும் அறிய வேண்டியதில்லையோ அதை அறிந்தால் போதும்’ என்று சித்தர்கள் அருளியுள்ளனர்.
எல்லாம் அறிந்தவர் யார்? சற்குரு ஒருவரே அனைத்தையும் அறிந்தவர். அவரைச் சரணடைந்தால் போதும். நாம் எது எதை அறிய வேண்டும் என்பதை உணர்த்துவார். அதைப் பெறவில்லையே. இதை அறிவில்லையே என மனச் சஞ்சலம் ஏற்படாது.
இதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். இப்போது நித்யப் பிரதோஷத்தைப் பற்றி அறிவோமா!
கோடிக் கோடியான லோகங்கள் .......
ஆம்........... நாம் அறிந்தது இந்த பூலோகம் ஒன்றைத்தான்! அந்த சூரியன் ஒன்றைத்தான்!
ஆனால் உண்மையில் கோடிக்கணக்கான பூலோகங்கள், சூரியன்கள், சந்திரன்கள் உள்ளன. நாம் காண்கின்ற ஒவ்வொரு நட்சத்திரம் ஒன்வொன்றும் நம் பூமியை விடப் பன்மடங்கு பெரியதாம்.
கோடிக்கணக்கான பூலோகத்தில் ஒவ்வொன்றிலும் ஒரு யுகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நம் பூமியில் கலியுகம், பிறிதொரு லோகத்தில் திரேதாயுகம் மற்றொரு லோகத்தில் துவாபர யுகம்!..
அடியார் : அப்படியானால் இராமாயணம், மஹாபாரதம் ... இன்றும் நடைபெற வேண்டுமே குருதேவா!
சற்குரு : ஆம் உண்மையே! இராமாயணம் எங்கேனும் ஒரு லோகத்தில் எப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது! அப்படியே மஹாபாரதமும்!
ஸ்ரீதியாக ப்ரம்மத்திற்கு ஸ்ரீசீதாமேத ஸ்ரீராமசந்திர மூர்த்தி தரிசனம் தந்தபோது நடப்பு பூலோகத்தில் (தற்போது எங்கோ நடக்கும்  திரேதாயுக) இராமாயணப் புராணத்தின் நடுவில்தான் வந்து இப்பூமியில் காட்சி தந்தார்.
கோயம்பேடு சிவத்தல மஹிமை
இவ்வகையில் கோடிக்கணக்கான லோகங்களில் எங்காயினும் திரயோதசி திதி (நம் பூலோக தினசரி நாளில்) அமைந்துதானே இருக்கும்! அப்படியானால் அந்த லோகப் பிரதோஷத்தை நாம் இங்கு கொண்டாடுவது விசேஷமானது தானே!
 ஆனால். நாம் பூலோகத்தில் சென்னையில் உள்ள கோயம்பேடு திருத்தலத்தில் தான் முதல் பிரதோஷ பூஜை நடந்தது. எந்த ஒரு தெய்வாவதாரமும் ஆயிரம் முறை அன்போடு அழைக்கப் பெற்றால் அவ்விடத்தில் பிரசன்னமாக வேண்டும் என்ற இறை நியதி உண்டு! எனவேதான் எந்த மூர்த்திக்கும் ஸஹஸ்ர நாம அர்ச்சனை மிகவும் விசேஷமானதாகக் கூறுகிறோம்.
கோயம்பேடு திருத்தலத்தில் முறையான ஒரு பிரதோஷ பூஜையானது ஆயிரம் பிரதோஷ பூஜைகளுக்கு நிகரான பலனைத் தருகின்றது. அது மட்டுமல்ல, ஆயிரம் கோயில்களில் நிகழ்த்தப் பெற்ற பிரதோஷ பூஜைகளின் ஒருமித்த பலனைத் திரட்டித் தருகின்றது.
இங்கு நித்ய பிரதோஷத்தைக் கொண்டாடினாலோ! ஆயிரம் லோகங்களில் ஆயிரம் திரயோதசி பூஜைக் கொண்டாடிய பலன்களை எளிதில் பெறலாம்!
ஸ்ரீஅதிகார நந்தி எழுந்தருளியுள்ள சிவத் தலங்களில் நித்யப் பிரதோஷம் கொண்டாடுவது மிகவும் விசேஷமானதாகும்.
அடியார் : குருவே! ஏதேனும் ஒரு பூலோகத்தில் திரயோதசிப் பிரதோஷம் எனில் அங்கு பிரதோஷ நேரம் வேறாக இருக்குமல்லவா, நாமோ பொதுவாக மாலை 4½ - 6 மணி வரையான நேரத்தையல்லவா நித்யப் பிரதோஷம் என்கிறோம்! கால அளவு முரண்படாதா?
சற்குரு : பார்த்தாயா! நாங்கள் மெய்ஞ்ஞான விளக்கம் தந்தால் மனித மூளை விஞ்ஞானத்தால் எதிர்க் கேள்வி போடுகின்றது! (அடியார் தலையைக் குனிந்து கொள்கிறார்)
காலப் பாகுபாடு – மெய்ஞ்ஞான விளக்கம்
சற்குரு : (புன்முறுவலுடன்) பரவாயில்லை! உண்மையிலேயே ஒருவருக்கு நித்ய பிரதோஷத்தைப் பற்றிய ஞானம் பெற விழைந்தால் கோயம்பேடு சிவத்தலம் சென்று ஒரு நாள் நித்ய பிரதோஷ பூஜையை முறையோடு நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் அதன் மகத்துவத்தைத் துய்த்துணர முடியும்!
அது சரி! கனடா நாட்டில் உள்ள சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை நடக்கிறது. இங்கும் அதே பூஜை நடக்கிறது! ஒரே பூமிதானே! இடையில் ஆறேழு மணிநேர வித்யாசம் இருக்கின்றதே! விஞ்ஞானக் கணக்குப்படி உதாரணமாக 27.2.1995 அன்று அப்பிரதோஷ பூஜையை கனடா நாட்டில் மறுநாள் தான் கொண்டாடுகிறார்கள். ஒரே பூமிதானே! ஏன் இந்த மாற்றம்! இதை மட்டும் சூரியோதயப் பாகுபாடு, பூமியின் சுழற்சி என்று கூறி விஞ்ஞானம் விளக்கம் தருகிறது! ஆனால் ஏதோ ஒரு பூலோகத்தின் திரயோதசி பிரதோஷப் பூஜையையே நாம் நம் பூவுலக நித்ய பிரதோஷப் பூஜை எனக் கொண்டாடுகிறோம் என்று சொன்னால் மனம் அதனை ஏற்பதில்லை!
இத்தகைய குழப்பம் ஏற்படக் காரணம் மனிதனின் கால நேரப் பகுப்புதான்! Maharishis, Siddha Purushas Transcend Time!  சித்த புருஷர்கள் காலத்தை வென்றவர்கள். அவர்களால் இரவு, பகலை உருவாக்க முடியும், சூரிய சந்திரனின் உதவியில்லாமல்! காரிலோ, இரயிலிலோ திருப்பதி செல்வதற்கு நாலைந்து மணி நேரங்களாகும். ஆனால் தூக்கத்தில் கனவில் ஒருவர் திருப்பதி சென்று திரும்பி, திருப்பதி சென்று வந்த (அதே) புத்துணர்ச்சியுடன் எழுகின்றார்! எப்படி இதைக் கனவு என்று விஞ்ஞானம் ஒதுக்கும் அவ்வளவே! கனவில் பல ஆன்மீக இரகசியங்கள் உண்டு.
ஆனால் எங்கு விஞ்ஞானம் முடிகின்றதோ அங்குதான் மெய்ஞ்ஞானமே துவங்குகின்றது! இதை நன்கு உணர வேண்டும்.
கனவு என்பது சூட்சும தேக வாழ்வு! அதன் காலப் பரிமாணம் வேறு, பூலோகக் காலப் பரிமாணம் வேறு! இதனைப் புரிந்து கொள்ள மனித மனம் தெய்வீகத்தில் பக்குவப்பட வேண்டும்! இவ்வாறே நித்யப் பிரதோஷ கணிதமும்! நித்யப் பிரதோஷம் பற்றிய சிறு விளக்கமே இது. உங்களுக்கெல்லாம் ஓரளவு விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் அளிக்கப்பட்டது.. விஞ்ஞானமும் இறைவனால் படைக்கப்பட்டதே!
இது தவிர நித்யப் பிரதோஷம் பற்றிய (ஆன்மீக உயர்நிலையில்) பல விளக்கங்கள் உண்டு. அவ்வப்போது விளக்குகின்றேன்.

கோயம்பேடு திருத்தலம்

சுற்றினால் கிட்டும் சுந்தரானந்தம்
கோயம்பேடு சிவாலயம்  - ஊர்மிளை லிங்கம்
ஸ்ரீகாலபைரவரை  ஒட்டிய சுவற்றுத் தூணில் பல சிறு லிங்கங்கள் ஒன்றாய்க் காணப்படும். ஸ்ரீஆதிசேஷ அவதாரமான ஸ்ரீஇலட்சுமண சுவாமியின் பத்தினியான ஊர்மிளை வழிபட்ட லிங்கமாதலின் இதற்கு ஊர்மிளை லிங்கம் என்று பெயர். சீதாபிராட்டியின் குணங்கள் அனைத்தையும் பூண்டு தெய்வாம்சங்களுடன் விளங்குபவள் ஊர்மிளை தேவி! எதனையும் தீர்க தரிசனமாக அறியும் இறைசக்தி கொண்டவள், லிங்க வழிபாட்டில் உன்னத நிலை அடைந்தவள். சிவ பக்தியில் திளைத்தவள்.
பல குடும்பப் பிரச்சனைகளால் கணவனை விட்டு விலகி வாழ்கின்ற பெண்கள் ஊர்மிளையின் நினைவுடன் இந்த லிங்கமூர்த்திகளை வணங்கிப் பூஜித்து வளையல், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சீப்பு போன்ற மங்கலப் பொருட்களை ஏழை சுமங்கலிகளுக்கு வெள்ளிதோறும் அளித்துவர கணவருடன் இணைந்து வாழ்கின்ற நல்பாக்கியத்தைப் பெறுவர். இத்தகைய வழிபாட்டினால் மனமகிழும் ஸ்ரீஊர்மிளை தேவி, தானும் அவர்களுடைய நல்ல குடும்ப வாழ்க்கைக்காகப் பிரார்த்தனை செய்கின்றாள். எத்தகைய அரிய பிரார்த்தனை!
ஸ்ரீதர்ம சம்வர்தினி அம்பாள்
சொல்லவும் கூடுமோ அம்பாளின் மஹிமைகளை! காலை முன் வைத்துக் காட்டும் அற்புத தரிசனம்! முன் வைத்த பாத அம்பாளின் தரிசனம் காணக் கிடைக்காத்து. மிகவும் சக்தி வாய்ந்த அம்பிகை! தம் திருக்காலை முன்வைத்து தரிசனம் தருவதின் தாத்பர்யம் என்ன?
பாற்கடலில் அமுதத்தைப் பெறுகையில், ஆலகாலவிடம் திரண்டோடிப் பொங்கிட, அதன் (உஷ்ணம்) சக்தியைத் தாங்க இயலாது தேவர்களும், அசுரர்களும் பரமசிவனைத் தஞ்சமடைந்தனர். திருக்கையிலாயம் வரைக்கும் அனைவரையும் துரத்திச் சென்ற ஆலகாலவிடம் அங்கே திருவாயிலில் ஸ்ரீநந்தீஸ்வரர் அருகே நின்று விட்டது. விடத்தை எடுத்து வருமாறு பரமசிவன் ஆணையிட ஸ்ரீநந்தீஸ்வரர் தம் கையில் விடத்தை ஏந்தி சுந்தரரிடம் அளிக்க அவர் அதனைப் பரம்பொருளிடம் சேர்த்தனர்.
அப்போது ஏற்பட்டதாம் அகந்தை ஸ்ரீநந்தீஸ்வரருக்கு! “ஆனானப்பட்ட தெய்வமூர்த்திகளே ஆலகால விடத்தைக் கண்டு அஞ்சிட, யானோ அதனை எவ்வித இடையூறுமின்றித் தாங்கிச் சென்றேன், இது செயற்கரிய செயலன்றோ!”
என்ன இறுமாப்பு! என்ன பெருமிதம்! என்ன அகங்காரம்! நந்தீஸ்வரரின் ஆணவத்தை அடக்க ஆதிசிவன் எண்ணிட, உடனே சித்த கலக்கம் ஏற்பட்டது நந்தீஸ்வரருக்கு. சிவசித்தத்தில் உறைய வேண்டிய நந்தீஸ்வரர் ,சித்தம் கலங்கிச் சிரித்தார், சிரித்துக் கொண்டே இருந்தார். எவராலும் அதைத் தடுத்து நிறுத்த இயலவில்லை.
அப்பன் அடித்தால் அம்மையிடம் தானே வரவேண்டும். தம் குற்றத்திற்காகப் பரிகாரம் தேடி பூலோகம் வந்த நந்தீஸ்வரர் சென்னை கோயம்பேடுத் திருத்தலத்தை அடைய இங்கு தான் முதன்முதலில் நந்தீஸ்வரருக்கு மூக்குக் கயிறு (மூக்கணாங்கயிறு) இணைக்கப்பட்டு அதனைத் தம் முன்வைத்த காலால் ஸ்ரீஆதிபராசக்தி இழுத்திட ...
இதுவே, இங்கு குடிகொண்டிருக்கும் ஸ்ரீதர்மஸ்ம்வர்தினியின் திருக்கோலம்! அம்பிகை தன்னிடம் உள்ள மூக்குக் கயிறைச் சுண்டிட நந்தீஸ்வரரின் அகங்காரம் இழுக்கப்பட்டு.... பலயுகங்களாகச் சிரித்து, சிரித்துச் சித்தம் கலங்கி நின்ற நந்தீஸ்வரர், அம்பிகையின் (மூக்கணாங்கயிறு) ஈர்ப்பினால் சித்தம் தெளிந்து தன் நிலையை அடைந்தார்.
தமக்குத் தண்டனை வழங்கி நன்னெறிப்படுத்தி அருள் புரிந்த அம்மையப்பனைத் தம் திருக்கொம்புகளுக்கிடையே நடனம் புரிந்து தம்மை ஆனந்தமடையச் செய்யுமாறு வேண்டிட...
“அன்று பிறந்தது பிரதோஷம்’!
ஆம்! பிரபஞ்சத்தின் முதல் பிரதோஷம் கொண்டாடப்பட்டது கோயம்பேடு திருத்தலத்தில் தான்!
பிரதோஷ பூஜை உற்பத்தியான இடம் கோயம்பேடு திருத்தலமே! அண்டசராசரமெங்கும் பிரதோஷ விழா முதன் முதலில் நடைபெற்ற திருத்தலம் கோயம்பேடு சிவத்தலமே. இன்று பாரதமெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பிரதோஷ காலபூஜை உற்பவித்த இடம் இத்திருத்தலமே! சோமஸுக்தம் மற்றும் விதவிதமான பிரதோஷ கால பிரதட்சிணங்கள் தோன்றிய இடம் கோயம்பேடு சிவத்தலமே!
எனவேதான் இங்கு பிரதோஷ பூஜையைக் கொண்டாடுவது ஆயிரம் பிரதோஷ பூஜைகளைக் கொண்டாடுதற்கு ஈடானது என ஸ்ரீஅகஸ்திய மஹரிஷியே எடுத்துரைத்துள்ளார். சென்னை கோயபேடு ஸ்ரீகுறுங்காளீஸ்வரர் சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை கொண்டாடுவதன் பெருமை சொல்லவும் பெரிதே. இதைப் பற்றிய பல ஆன்மீக இரகசியங்களைத் தன் குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தரிடமிருந்து பெற்று, பிரதோஷ மஹிமை என்னும் நூல் வாயிலாக நமக்கு எடுத்து அருளியிருப்பவர் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள்!
படித்துப் பாருங்கள்! பிறவி நீக்கும் பேரிறைவழி காண்பீர்களே......!!!

நந்தி சேகரம் தரித்த ராமநாமம்

சற்குருவைக் கேட்பீரேல்.....
அடியார் : குருவே! நம்முடைய மாதாந்திரப் பௌர்ணமியின் நாம சங்கீர்த்தன முடிவில் தாங்கள் ‘நந்திசேகரம் தரித்த ராமநாம நாமமே!’ என்று சித்தர் பாடல் வரியைப் பாடுகையில் அதன் விளக்கம் கேட்க மனம் துடிக்கின்றது!
சற்குரு: முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடி வருகின்றேனே! ஒரு விளக்கம் பெற 30 வருடங்களா? கலியுகத்தில் இப்படித்தான் பல அரிய ஆன்மீக இரகசியங்களைக் கேட்டுப் பெறாமலேயே பல பொக்கிஷங்களை மனிதன் இழந்து விட்டான்.
(சிரித்துக் கொண்டே) பரவாயில்லை, பல வருடங்களுக்குப் பின் இப்போதாவது கேட்டாயே! தரப்படும்! எதையும் கேட்டால்தானே தரமுடியும்!
அடியார் : பூனைக்குட்டியைத் தாய்ப் பூனை வாயில் அரவணைத்துச் செல்லுதல் போலத் தாங்களே எங்களுக்கு அளிக்கலாகாதா?
சற்குரு : அப்படியானால் திருஅண்ணாமலையில் உங்களையெல்லாம் கிரிவலம் அழைத்துச் சென்ற போது நூற்றுக்கணக்கான அற்புதமான அண்ணாமலை தரிசனங்களைக் கூறி அவற்றின் மஹிமைகள், அவை தீர்க்கும் நோய்களைப் பற்றி விளக்கினேனே? அவற்றை எத்தனை ஆயிரம் பேருக்கு விளக்கி அதன் பயன்கள் யாவரையும் சென்றடைய வழிவகை செய்துள்ளீர்கள் ? (மௌனம் நிலவுகிறது)
அனைத்தையும் நினைவில் கொள்வது கடினம் என்பது எங்களுக்கு தெரியாதா? எனவேதான் நாங்கள் அவ்வவபோது தேவையானாவற்றை மட்டும் அளிக்கின்றோம்! அள்ளிக் கொட்டினால் மலை தரிசனங்களை மறந்து மறைத்தது போல் அவற்றின் மதிப்புத் தெரியாமற் போய்விடும்.!
எனவே எது தேவையோ அதையே அளிப்போம். எங்களைச் சரணடைந்தால்! உங்களுக்கு எது தேவையோ அதையே உங்கள் வாயால் கேட்க வைத்து விளக்கத்தையும் தருகிறோம் . கேள்வியும் நாமே, பதிலும் நாமே!

“ நந்திசேகரம் தரித்த ராமநாமம்”
புனித சேத்திரமாம் காசியில் இயற்கையாக உயிர் மரிப்பது உத்தமமானது. அத்தகைய பேற்றைப் பெற்றோர்களுடைய காதில் சிவபெருமான் “ராம நாமமாம் தாரக மந்திரத்தை” ஓதுகின்றார்!
ஒரு முறை நந்தீஸ்வரர் ‘ஐயனே!’ காசியில் மரிப்போரின் திருக்காதுகளில் தாங்கள் இராம நாமம் ஓதுகையில் தாங்கள் அடியேன் மீது அமர்ந்துதானே தாரக மந்திரத்தை ஜபிக்கின்றீர்கள். ஆனால் ஒருமுறையேனும் அதைகேட்கும் பாக்கியம் கிட்டவில்லையே! என்று சிவபெருமானிடம் பணிந்து கூறிட,
“நந்தீஸ்வரா! நான் காசியில் மட்டுமா இராம நாமம் ஓதுகின்றேன். அனைத்தையும் தரவல்ல தாரக மந்திரத்தை நான் ஓதாத நேரமுண்டோ! எப்போதும் அதைத்தானே ஜபித்துக் கொண்டிருக்கிறேன், உன் காதில் விழவில்லையா?”
ஸ்ரீ நந்தீஸ்வரர் வெட்கித் தலைகுனிந்தார்.
‘நந்தீஸ்வரா! எனினும் கேட்டு விட்டாய், உனக்கு ஒரு வரமே தந்து விடுகிறேன்! இன்று முதல் பிரபஞ்சமெங்கும் எங்கெங்கும் யாராரெல்லாம் ராம நாமத்தை ஓதுகின்றார்களோ அந்த தாரக மந்திர ஒலிப் பிரபாவத்தை உன் திருக்கொம்புகளில் தாங்கி நந்தி மலையில் எழுந்தருள்வாயாக! என்று அருள்பாலித்தார்.
கர்நாடக மாநிலத்தில் சாமுண்டி மலையில் நந்தி மலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நந்தீஸ்வரரே இப்பெரும் பேற்றைப் பெற்றவர். உலகெங்கும் யார், எங்கு ‘ராம், ராம்’ என்றோ, ராம, ராம என்றோ ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்’ என்று எவ்வகையில் ராம நாமத்தை ஒதிடினும் அவற்றைத் தம் திருக்கொம்புகளில் தரித்து அருள் பாலிப்பவரே இந்த நந்தீஸ்வர மூர்த்தியாவார்! அவர் திருநாமமே ஸ்ரீ நந்திசேகரமூர்த்தி!

இராம நாமத்தை தியானம் செய்யும் முன் நந்திமலை ஸ்ரீநந்திசேகரரைத் துதித்து இராம நாம தாரக ஜபத்தைச் செய்திடில் இந்த ‘நந்திசேகரம் தரித்த இராம நாம ஜபத்தின் பலன் பெருகும்’ இளவயதில் (இராமாயண) சபரி, இந்த நந்தீஸ்வரரை தினமும் இராம நாமத்தை ஜபித்தவாறே ஆயிரம் முறை அடிப்பிரதட்சிணம், முட்டிப் பிரதட்சிணம், முழந்தாள் பிரதட்சிணம் செய்தமையால் தான் முதிய வயதில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைத் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றாள். ஸ்ரீநந்திசேகரராம் நந்திமலை ஸ்ரீ நந்தீஸ்வர பகவானை முதலில் தியானித்த பிறகு செய்யப்படும் இராமநாம ஜபமானது பரிபூர்ணமான பலனைத் தருகின்றது. இவரே நந்திசேகரம் தரித்த, இராம நாம மூர்த்தியைத் தோத்திரம் செய்யும் நந்தீஸ்வர மூர்த்தி! ஸ்ரீநந்திசேகர மூர்த்தி!

அடிமை கண்ட ஆனந்தம்

செஞ்சி மலையில் கோவணாண்டிப் பெரியவர் தன் மானுட சரீரத்தை வைத்து விட்டுப் பல விண்ணுலக லோகங்க்களுக்கும் செல்லப் போகிறார் என்பதைக் கேட்டதும் சிறுவனுக்கு அச்சம் வந்துவிட்டது. சென்னையில் இராயபுரம் கல்மண்டபம், அங்காளம்மன் கோவிலில் அவரைப் பல நாட்களாகக் காணாமல் தரிசனம் கிட்டாமல் சிறுவன் தவித்திருக்கிறான். அப்போதெல்லாம், ‘என்னடா ராஜா! ரொம்பத் தவிச்சுப் போயிட்டியா’ என்று அபயக்குரல் கொடுத்தவாறே எங்கிருந்தோ வந்து தோன்றி பெரியவர் அவனை அரவணைத்திருக்கின்றார்.
எத்தனையோ மயானங்களிலும், நெல்லூர்ப் பகுதிகளில் சூறாவளியிலும் சிறுவன் பெரியவருடன் சேர்ந்து பல அனாதைப் பிரேதங்களைத் தக்க கிரியைகளுடன் தகனம் செய்து நல்ல ஆன்மீகப் பயிற்சியைப் பெற்றிருக்கின்றான். ஏன், பெரியவர் இட்ட ஆணைப்படி ஒரு சிறிய எறும்பைத் தொடர்ந்து சென்று அது ஒரு குறித்த இடத்தில் இறந்துவிட அதனை மண்ணில் புதைத்து மஞ்சள் குங்குமமிட்டு, பாலூற்றிப் பெரியவர் கூறியது போல் பூஜை செய்திட, அவ்விடத்தினின்று ஒரு ஜோதி கிளம்பி வானில் சென்று மறைந்த அதிசயத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்திருக்கின்றான்.
ஆனால், செஞ்சிமலையில் பாறைக்கடியில் அவ்வளவு பெரிய குகையில், பார்த்தாலே அச்சந்தரக் கூடிய இரண்டு பெரும் வேங்கைகளின் காவலுக்குக்கிடையில், எத்தனையோ சாதுக்கள், மஹரிஷிகள், யோகிகள்  தவம் புரிகின்ற காட்சியைக் கண்டு அவன் உடம்பு வெலவெலத்து விட்டது. ‘இதோ பாருடா இந்த வில்வமரத்துக் கீழதான் என் உடம்பைக் கெடத்திட்டுப் போறேன். கரெக்டா ஒரு வாரத்துல திரும்பிடுவேன்! பக்கத்திலேயே ஒக்காந்து இரு! யாரு கூப்பிட்டாலும் அசையாதே!...”
செஞ்சி மலைகளெல்லாம் சாதாரணமானவை அல்ல. சாட்சாத் சிவபெருமானே திருஅண்ணாமலையில் மலைவடிவில் அமர்ந்தபின் விஸ்வரூப தரிசனத்திற்காகக் கைகளைத் தட்டியவாறே எழுந்து நின்றார். அவர்தம் திருக்கரங்களிலிருந்து உதிர்ந்த மண்துகள்ளே, செஞ்சியில் பல்வேறு மலைகளாக உருப்பெற்றன. உலகத்தில் இமயமலை, பொதியமலை, ஆல்பஸ், செஞ்சி போன்ற சில இடங்கள் தாம் எவ்வித தேக (உடல்) ரூபங்களையும் வாடாமல், வதங்காமல், காக்கின்ற ஆன்மீக சக்தியைப் பெற்றுள்ளன. இது எவருமறியாத ஆன்மீக இரகசியமாகும். பாறைகளுக்கடியில் பல குகைகளும், சுரங்கங்களும் உள்ளன. இவற்றில் இன்றும், என்றும் இறையடியார்கள், சித்தர்களாக, மஹரிஷிகளாக, யோகிகளாக உலவித் தியானம் புரிகின்றனர் என்றவாராக செஞ்சியின் ஆன்மீக மஹிமைப் பற்றி ஒரு சிறு சொற்பொழிவே ஆற்றிவிட்டார்.
பிறகு தேசிங்கு மஹாராஜாவின் வியத்தகு ஆன்மீக சக்தியைப் பற்றியும், அவன் எவ்வாறு இறையடியார்களுக்குத் தியானங்களில் ஈடுபடுவதற்குப் பல இரகசிய குகைகளையும், சுரங்கங்களையும் அமைத்துத் தந்தான் என்பதையும் விளக்கித் கூறினார்.
இந்த விஷயங்கள் அனைத்தும் கேட்பதற்குச் சுவையாக இருந்தாலும், சிறுவனின் மனம் பெரியவர் தன்னைவிட்டு எப்போது பிரியப் போகிறாரோ என்ற மன பீதியிலேயே உழன்றது.
இதைப் பெரியவர் அறியாமல் இருப்பாரா என்ன?
ஒண்ணுமில்லடா ராஜா, ஒரே வாரத்துல திரும்பி வந்துடுவேன். அதுவரைக்கும் நான் சொல்லப் போற மந்திரத்தை ஜபிச்சுண்டே இரு. என் ஒடம்புலே ஏறி ஒக்காந்து கூட ஜபிக்கலாம். ஒண்ணோட பயம் தெளியறதுக்காக நான் ஒண்ணு செஞ்சிட்டுப் போறேன். நாளைக்குக் காலைல பிரம்ம முஹுர்த்தத்துல நான் கௌம்பிடுவேன். நான் மல்லாந்து படுத்ததும் என் நாபில உக்காரு!
தொப்புள் இருக்கற நூல் இழையை, இதை ஆஸ்ட்ரல் கார்ட் (ASTRAL CORD)  சில்வர் கார்டு (SLIVER CORD) னு கூடச் சொல்லுவாங்க. இதைப் புடிச்சுட்டு நம்ப குருமங்கள கந்தர்வலோகம் போய்ட்டு வந்துடறேன். ஜாக்கிரதையா இரு. இந்த Body ரொம்ப முக்கியமானது. கடவுளாப் பாத்து இதை dispose செய்யற வரைக்கும் நாம் பத்திரமா வச்சுக்கணும்...’ பெரியவர் பல முக்கியமான விளக்கங்களை அளித்தார்.
இவற்றையெல்லாம் கேட்டுக் கேட்டுச் சிறுவனுக்கு மண்டையே வீங்கி வெடித்துவிடும் போலிருந்தது!
“ஏன் வாத்யாரே நான்தான் மக்கு மன்னாருன்னு சொல்லுவியே! எனக்கு ஏன் இந்த புரியாத subject எல்லாம் சொல்லித் தர்றே. என்னவுட்டுடு. பேசாம நீ இந்த Bodyயோட அங்கே போய்ட்டு வந்துடேன். நான் அங்காளி கோயில்ல இருக்கேன்! இல்லாட்டாத் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்துடறேன்.....’ சிறுவன் பரிதாபமாகக் கேட்டான்.
பெரியவர் விடுவதாயில்லை!
‘இதெல்லாம் ஒனக்கு ஆரம்ப ட்ரெயினிங்தாண்டா! இதுல இன்னும் எவ்வளவோ விஷயம இருக்கு. எதிர்காலத்துல நீ நெறைய மஹான்களோட, யோகிகளோட பழகறத்துக்கு இந்த ட்ரெயினிங் சுலபமா இருக்கும். இன்னும் கொஞ்சநாள்ல உன்னை மும்முடிவரம் பாலயோகிக்கிட்ட அழச்சிக்கிட்டுப் போகப் போறேன் .அந்த மாதிரி யோகிங்க பூலோகத்துக்கு எப்படி மகத்தான சேவை செஞ்சிக்கிட்டு வர்றாங்க அப்படீன்னு தெரிஞ்சுக்கறதுக்கு இதெல்லாம் குரு தொட்டுக் காட்டுற வித்தைடா! ‘தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது! தெரிஞ்சுக்கோ”
“இந்த Physical Body யோட எல்லா லோகத்துக்கும் போக முடியாது. சித்தனோ, மகானோ எல்லாருக்கும் சட்டம் ஒண்ணுதான்! கடவுள் ஒரு மனுஷ ஒடம்பைக் கொடுத்தா அவன் அந்தக் கணக்கை முடிக்கிறவரைக்கும் தன்னோட ஒடம்பை இறைவனோடப் பிரசாதமா நெனச்சிச் சீராட்டி ஆரோக்கியமா வளக்கணும் . எந்த ஆன்மீக சக்தி வந்தாலும் அதை வெளிக்காட்டக் கூடாது. எந்த சித்தியையும் செய்யக் கூடாது. இப்படி இருந்து பழகிட்டா அவனைச் சுத்திச் சித்துகள் எல்லாம் தானாவே நடக்கும்!’
ஒனக்குத்தான் ஒருவாரம் பசி எடுக்காதே! அந்த மூலிகை தேவதையோட கருணைல..... பேசாம, நான் சொல்ற மந்திரத்தை நாள் பூராவும் ஜபிச்சுகிட்டு என் Body கிட்ட இரு. நீ பயப்படாம இருக்கிறத்துக்காகவும், இது உன் முதல்  அனுபவம் என்பதாலும் என் உடம்புல சூடு, உயிர்த்துடிப்பு ரெண்டை மட்டும் வச்சிட்டுப் போறேன்.”
இவ்வாறாகப் பெரியவர் சிறுவனுக்கு ‘பரகாயப் பிரவேச’ முறையை உபதேசித்தார். இரவெல்லாம் உறங்கினால் தானே? பக்பக்கென்று இருதயம் அடித்துக் கொள்ள சிறுவன் தூங்காமல் துடிக்க, மாறாகப் பெரியவரோ அந்த கும்மிருட்டில் பெரிய பெரிய குறட்டை ஒலிகளுடன் அந்த ஏரியாவையே அலற வைத்துக் கொண்டிருந்தார்!
சிறுவனுக்கோ அச்சத்தின் மேல் அச்சம். இவர் குறட்டைச் சத்தம் கேட்டு அந்த இரண்டு வேங்கைகளும் ஓடி வந்துவிட்டால்!.... சிறுவனால் நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது. காலை சுமார் 3½ மணி இருக்கும். பெரியவர் சிறுவனை அழைத்தார். தன் மார்பில் ஏறி உட்காரச் சொல்லிட..... சிறுவனுக்கு அழுகை வந்துவிட்டது! ஓவென்று கதறினான்!
பெரியவர் கலகலவென்று சிரித்தார். அதற்குப் பிறகு பெரிய நிசப்தம்! சுற்றிலும் இருட்டு! சிறுவன் வேகமாக மந்திரங்களை உச்சாடனம் செய்யத் துவங்கினான். கண்களை இறுக மூடிக் கொண்டான். பெரியவரின் உடல்மேல் நன்கு படுத்துக் கொண்டான். தூங்கிவிட்டால் பொழுது ஓடுவது தெரியாதே!....

ஸ்ரீவந்தன மகரிஷி

ஸ்ரீராம நவமி  ஸ்ரீவந்தன மஹரிஷி
கிளியாய் மாறிய ஸ்ரீவந்தன மஹரிஷி ஒரு சந்தன மரத்தில் அமர்ந்தவாறே ஸ்ரீராம நாம ஜபத்தைத் தொடர்ந்தார். ஸ்ரீகௌசல்யா தேவி சுகப் பிரசவம் கண்டு ஸ்ரீராமனை ஈன்றெடுத்த பின் ‘ஸ்ரீவந்தன மஹரிஷியின்’ பேரருளால் தான் சுகப்பிரசவம் கொண்டதாக நன்றிப் பெருக்குடன் பெருமகிழ்வுடன் கூறியதுமன்றி ஸ்ரீவசிஷ்டரிடம் கிளியாய் மாறி ராம நாமம் ஜபிக்கும் ஸ்ரீவந்தன மஹரிஷியைச் சந்தித்து வருமாறு பணிவுடன் ஸ்ரீவசிஷ்டரை வேண்டினாள். ஸ்ரீவசிஷ்டரும் அம்மாமுனியைக் கண்டு வணங்கி, ’யுகம் யுகமாக இராம நாமதாரக நாமத்தைத் துதித்து வரும் சித்புருஷரே! தங்களை நான் கிளியாய் மாறச் சபித்ததாக இவ்வுலகம் எண்ணுகிறது! ஆனால் நாமிருவரும் உண்மையை அறிவோம். தாங்கள் துவாபர யுக முடிவில் ஸ்ரீசுக மஹரிஷியைத் தரிசிக்கும் பாக்யம் பெறவிருப்பதோடன்றி இராம நாம ஜப மஹிமையால் உன்னதமான இறைப் பணிகளையும் மக்கட் சேவையையும் புரிந்து அதனை மக்களுக்கு உண்ர்த்த வேண்டிய தார்மீகப் பொறுப்பினை இதன் மூலம் ஏற்றுள்ளீர்கள் அன்றோ!” என்று உரைத்திட,
ஸ்ரீவந்தன மஹரிஷி பிரம்ம ரிஷியை வணங்கி அவருக்குப் பரிசாக ஒன்றை அளித்தார். என்ன  அது? ஒரு பழக் கொட்டை அது! அதனை பவ்யமாகத் தலைவணங்கிச் சகல அங்கந்யாஸ, கரந்யாஸ முத்திரைகளுடன் தம் இருகரங்களிலும் ஏந்தித் தம் கண்களில் ஒற்றிக் கொண்டார் ஸ்ரீவசிஷ்ட மஹரிஷி! அதில் என்ன விசேஷமோ?

ஸ்ரீராமர் சன்னிதி திருநீர்மலை

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்! அதன் ஆன்மீக இரகசியங்களைக் தெய்வீகப் பரிமாணங்களை மஹரிஷிகள் தாமே அறிவர்! இதனை சற்குரு மூலம் அறிவீர்களாக!

ஸ்ரீவந்தன மஹரிஷி  பல இலட்சம் ஆண்டுகளாகப் பலகோடி சந்தன மரங்களில் அமர்ந்து ஸ்ரீராம நாமத்தை ஜபித்து வந்தார்.. ஒவ்வொரு திருத்தலமாய்ச் சென்று யாங்கணும் ஸ்ரீராம நாமத்தைப் பரப்பி வந்தார்.  ஒரு நாள்........ துவாபர யுகமது!  அதோ ...கிளிமுகத்தை உடைய சுகபிரம்ம ரிஷி வந்து கொண்டிருக்கின்றார்.
‘என்னது இது எங்கும் ராம நாமம் ஒலிக்கின்றதே’
ஸ்ரீவசிஷ்டரின் வாக்குப்படி ஸ்ரீசுகப்பிரம்ம ரிஷியின் தீட்சண்யம் பெற்றதும் கிளிவடிவமும் தேஜோவடிவமாய் மாறி ஸ்ரீவந்தன மஹரிஷியாய்க் காட்சியளித்தார்.
ஸ்ரீசுகபிரம்ம ரிஷியே தலைவணங்கி நின்று ‘யுகயுகமாய் ராமநாம தாரக மந்திரத்தை ஜபித்து வரும் ஸ்ரீவந்தன மஹரிஷியே’ என விளித்துப் போற்றினார்.
இவ்விடத்தில் பஸ்மதாரிணி என்ற ஸ்ரீவிஷ்ணு லோக தேவதை பஸ்ம மலையாய், திருநீறு மலையாய் அமைந்திருக்கின்றாள் சிவ-விஷ்ணு பேதமின்றி உன்னத பக்தி நிலையில் ராம தரிசனம் வேண்டி பஸ்ம மலையாய்த் தவ பூண்டிருக்கின்றாள். சிவ-விஷ்ணு பூஜையில் மிளிர்ந்த அற்புதத் தவமாகும். சிவலிங்க பூஜையில் உன்னதம் பெற்ற ஸ்ரீராமனோ யாங்கணும் அருள் பாலிக்கின்றார். தொண்டனுக்குத் தொண்டனின் திருவடியே, அடியாரின் திருவடியன்றோ ஸ்ரீவிஷ்ணுவிற்குப் ப்ரீதி அளிக்கும். எனவே உம் திருவடியைக் கண்டாலே பஸ்மதாரிணியின் தவம் ஸ்ரீராம தரிசனத்துடன் முடிவு பெறும்.”

வாசவி ஜெயந்தி ஸ்ரீஇந்திர பகவானுக்கு உரித்தான விசேஷ நாள்! எண்ணற்ற புண்ணிய காரியங்களின் நற்பலனாலும், அற்புதத் தவமுறைகளாலும் இந்திர பதவி கிட்டுகிறது. இந்நாளில் இயன்றளவு ஜரிகை கூடிய வஸ்திரங்கள், வெண்ணிற ஆடைகள், தோடு, தலை கிளிப் போன்ற அழகு சாதனப் பொருட்கள், வளையல் போன்ற கலையழகு மிளிரும் பொருட்களை ஏழைகளுக்கு அளித்தல் வேண்டும். பொதுவாக, இந்நாளில் ஏழைகள் ஏங்குகின்ற சிறுசிறு பொருட்களை அவர்களுக்கு அளித்தால் அது இந்திரப் ப்ரீதியாக அருளைப் பெற்றுத் தந்து நம் வாழ்விலும் வீடு, வாசல், வாகனம், ஆபரணம் போன்ற முறையான நியாயமான சுகங்களைப் பெற்றுத் தரும்.

‘எனவே தவத்தின் மஹிமையால் தகதகவென்றிருக்கும் பஸ்மதாரிணி மலையாக வீற்றிருக்கும் பகுதியில் உத்தம ராம நாமம் ஓதி மகிழும் தங்களுடைய திருப்பாதம் படிந்திடில் திருநீறு மலையின் வெம்மை தணியும், பஸ்மதாரிணிக்கும் கிட்ட வேண்டிய ராம தரிசனம் கிட்டும்’ என்று அருளினார்.
ஸ்ரீசுகப்பிரம்ம ரிஷியின் அருளுரைப்படித் திருநீறு மலையை அடைந்த ஸ்ரீவந்தன மஹரிஷி உஷ்ணத்தால் தகித்த திருநீறுமலையின் மேல் முழந்தாளிட்டு மேல் ஏறிட,,...
ஆங்கே மலை உச்சியில்........
ஸ்ரீவந்தன மஹரிஷிக்கும் பஸ்மதாரிணி தேவிக்கும், ‘ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சீதா லக்ஷ்மணருடன் காட்சி அளித்திட, பஸ்மதாரிணி ஸ்ரீராமராக ஸ்ரீவிஷ்ணு அவதாரத்தைத் தரிசனம் செய்தவுடன் மீண்டும் வைகுண்டத்தை அடைந்திட......, ஸ்ரீவந்தன மஹரிஷி ஆங்கே ஜோதியாய் மாறி ஸ்ரீராமனின் பாதங்களில் ஒன்றினார்.

இன்றைக்குத் திருநீர்மலையாகப் பரிணமிக்கும் இந்த அற்புத மலையில் சித்தர்கள், மஹரிஷிகள், யோகிகள், ஞானிகளின் நடமாட்டம் என்றும் உண்டு. இங்கு முழந்தாளிட்டு மலையேறுவது மிகவும் விசேஷமானதாகும். நெடுங்காலமாக நிறைவேறாத நற காரியங்கள் நிறைவேற இராம நாம ஜபத்துடன் முழந்தாளிட்டுப் படியேறிப் பின் கீழிறங்கி ஸ்ரீஇராமனை தரிசித்திட அக்காரியங்கள் நன்கு நிறைவேறும். ஸ்ரீராமர் சந்நதி மலையின் கீழ் உள்ளது.!
மலையுச்சியில் அருளாட்சி புரியும் ஸ்ரீரங்கநாதர் ராமாவதாரத்திற்கும் முன்னரே தோன்றியவர்! ஒவ்வொரு மூர்த்தியின் அவதாரத்திற்கும் அந்தந்த யுக, மன்வந்திரங்களுக்கு ஏற்பப் பல ஸ்தல புராணங்கள் உண்டாகின்றன. ஒவ்வொரு தூணிலும் உறையும் சித்தர், மஹரிஷிம் யோகிகளின் காலத்திற்கேற்பத் தலபுராணங்கள் விரிவடையும், இன்றைக்குத் திருநீர் மலையாக, கல் மலையாகத் தோன்றும் மலையானது பஸ்ம (விபூதி) மலையாக, பவள மலையாக, செந்தூர மலையாக, சாளக்கிராம ரூபமாக, இவ்வாறாகப் பல ரூபங்களில் பல யுகங்களில் கோடிக்கணக்கான ஜீவன்களுக்கு அருள்பாலித்து வருகின்றது. காலப் போக்கில் பல ஸ்தல புராணங்கள் மறைந்துவிட்டன.
எனவேதான், மூலவர், அம்பாள், கோஷ்ட மூர்த்திகள், தேவதைகள், பிரஹார மூர்த்திகள், வாஹன மூர்த்திகள் என்றவாறாக ஒவ்வொரு ஸ்வயம்பு மூர்த்தி உற்பத்திக்கும் வெவ்வேறு யுகங்களில், காலங்களில் வெவ்வேறு புராண சம்பங்கள் இருக்கும். அதற்காக ஸ்தல புராணம் மாறுவதாகப் பொருள் கொள்ளலாகாது.
தஞ்சை ஸ்ரீபிரஹதீஸ்வரர் ஆலயத்தில் நூற்றுக்கணக்கான மூர்த்திகள் அருள்பாலிக்கின்றனர். அனைத்திற்கும் தனித்தனிப் பெயர்கள், அவதார சம்பவங்கள் உண்டு. அனைத்தும் இக்கோயில் ஸ்தல புராணமே! இங்கு ஒரு கோடியிலிருக்கும் நாகமூர்த்தியைத் தினமும் வணங்கி முக்தி பெற்றோர் பலருண்டு. அந்த ஸ்ரீபிரஹதீஸ்வரரே நாக மூர்த்தி ரூபத்தில் மட்டுமல்லாது சண்டீச்வரராக, சப்தலிங்கங்களாக, வராஹி அம்மனாக ..... அனைத்து ரூபங்க்ளிலும் அருள்பாலிக்கின்றார்.
எனவே எந்த மூர்த்தியையும் மனிதனின் விஞ்ஞான காலக் கணிப்பிற்குள் பகுக்க இயலாது! மெய்ஞ்ஞானத்திற்கு அதாவது இறையருளுக்குப் பாத்திரமானால் அனைத்தும் தானே விளங்கும்!

ராமலட்சுமண துவாதசி

ஸ்ரீராமனும் ஸ்ரீஇலக்ஷ்மணனும் நாட்டு மக்கள் எவ்வித விக்னமும் இன்றி வாழத் தகுந்த ‘பூஜை’ முறையை அளிக்குமாறு ஸ்ரீஆஞ்சநேயரிடம் வேண்டினர். தெய்வாவதாரமாக விளங்கியபோதும் ஸ்ரீராமன் கிஞ்சித்தும் தன் அவதார அம்சங்களைக் காட்டாது, அடக்கம், எளிமை, பணிவு இவற்றின் சின்னமாய் விளங்கி ஸ்ரீஆஞ்சனேயரையே விளக்கம் கேட்டு நின்றாரெனில் என்னே அவர்தம் மஹிமை!
ஆமாம், ஸ்ரீராமர் ஸ்ரீஆஞ்சநேயரை விளக்கம் தர நாடியதின் காரணமென்ன? வனவாசத்தில் எத்தனையோ பர்ணசாலைகளில் பல மஹரிஷிகளைக் கண்ட ஸ்ரீராமர் அவர்களிடம் தகுந்த வழிபாட்டு முறையைக் கேட்டுப் பெற்றிருக்கலாமே?
எந்நேரமும் இராம நாமத் தாரக மந்திரத்தை ஜபிக்கும் ஸ்ரீஆஞ்சநேயர் சிவபூஜையில் உத்தம நிலைகளைப் பெற்றவர். இன்றைக்கும் நிதமும் கைலாயம் சென்று வில்வதளங்களைப் பெற்றுப் பிரபஞ்சத்தின் பல்வேறு இடங்களில் தாம் பிரதிஷ்டை செய்துள்ள, ஸ்ரீராமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கங்களுக்கு தினமும் சிவபூஜை செய்து வருபவர். எனவேதான் சிவாலயங்களில் சிவனுக்கு அர்ச்சிக்கப்படும் வில்வதளங்களை முதலில் ஸ்ரீஆஞ்சநேயரிடம் சமர்ப்பித்து எடுத்துச் செல்ல வேண்டும் என சித்த புருஷர்கள் அருள்கின்றனர்.

ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் திருநீர்மலை

இது மட்டோ! தினந்தோறும் வைகுண்டம் சென்று அங்கிருந்து துளஸி தளங்களைப் பெற்று பிரபஞ்சமெங்கும் ஸ்ரீராமனையே ஸ்ரீமந் நாராயணனாக வரித்துப் பூஜை செய்யும் அதியற்புத தெய்வமூர்த்தியே ஸ்ரீஆஞ்சநேயர் ஆவார். சிவ-விஷ்ணு பேதமின்றி ராமதாரக மந்திரத்தை எந்நேரமும் ஓதி நிற்கும் சிவநெறிச் செல்வர். எனவே ஸ்ரீராமன் ஸ்ரீஆஞ்சநேயரிடம் ஓர் அற்புதப் பூஜை முறையினை எடுத்துரைக்குமாறு வேண்டுவதில் வியப்பென்ன?
ஸ்ரீவித்யா லக்ஷ்மி துவாதசி பூஜை
இதுவே ஸ்ரீஆஞ்சநேயர் அளித்த உத்தமமான பூஜை முறையாம். வித்யையாகிய கல்வியையளிப்பவள் ஸ்ரீசரஸ்வதி அன்றோ! அப்படியானால் ஸ்ரீவித்யா லக்ஷ்மியின் அவதார இரகசியங்கள் யாதோ? ஸ்ரீசரஸ்வதிதேவி தம்சற்குருவாம் ஸ்ரீஹயக்ரீவரை உபாசித்து அவரிடம் பலகோடி சதுர்யுகங்கள் குருகுலவாசம் செய்தபோது காலை, மதியம், மாலை ஆகிய மூன்று சந்தியா காலங்களிலும் சற்குருவாம் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியைக் குருபத்னியாம் ஸ்ரீலக்ஷ்மி தேவியோடு அமர்ந்திருக்க இத்திருக்கோலத்தை மூன்றுமுறை அடிப்பிரதக்ஷிணம் செய்து, வலம் வந்து தினமும் தம் வித்யையைத் தொடர்வாள்.
இதனைக் கண்டு ஆன்ந்தமுற்ற ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவதேவி ஸ்ரீஸரஸ்வதியிடம், “யாது வரம் வேண்டும் ?” என்று வினவ.
‘என்னை வழிபடுவோர்க்கு அழியாத கல்விச் செல்வம் தங்களால் கிட்டுமன்றோ! அக்கல்விச் செல்வம் நன்கு பயன்பட்டு, அறிவு விருத்தியாகி எக்காலத்திலும் எந்நிலையிலும் வாழ்க்கை முழுவதிலும், எல்லாவிதத் துன்பங்களையும் “களையும்” வண்ணம் அக்கல்வியறிவு பயன்படுமாறு தாங்கள் ஸ்ரீவித்யாலக்ஷ்மியாக அவதரித்து அனுக்ரஹிக்க வேண்டும்’ எனப் பிரார்த்தனை செய்து கொண்டாள் ஸ்ரீசரஸ்வதி தேவி!
இவ்வாறாக, ஸ்ரீ நாராயணியின் பரிபூரண அம்சங்களுடன் வித்யையின் (கல்வியின்) மஹிமையைப் பேணிப் பாதுகாப்பவளே ஸ்ரீவித்யா லக்ஷ்மியாவாள். இவ்வாறு, ஸ்ரீஸரஸ்வதி, ஸ்ரீவித்யா லக்ஷ்மியை வரம் வேண்டிய நாளே அந்த யுக யுவவருட  வைகாசி மாத துவாதசி திதியாகும்.
ஸ்ரீஆஞ்சநேயர் சகலகலா வல்லுநுர். நவவியாகரண பண்டிதர் என்ற பெயர் பெற்ற ஸ்ரீஆஞ்சநேயர்.  வேத, வியாகரண, மந்த்ர, யந்த்ர, தந்த்ர வழிபாடுகளில் உன்னத நிலையடைந்தவர். ஸ்ரீவித்யா லக்ஷ்மியையும் உபாசித்தாலும், இன்றும் பிரபஞ்சமெங்கும் புல், பூண்டு முதல் உத்தம இறை நிலையடைந்த இறையடியார் வரை அனைவருக்கும் புத்தி, பலம், தைர்யம் என அருட்கடாட்சத்தை வர்ஷிக்கும் கண்கண்ட தெய்வ மூர்த்தியாகப் பிரகாசிக்கின்றார். ஸ்ரீலக்ஷ்மணா ஏகாதசி விரத்தை மிகவும் சிறப்பாக அனுஷ்டிப்பவர். எனவே, ஸ்ரீராமனும், லக்ஷ்மணனும் ஸ்ரீவித்யா லக்ஷ்மி ஏகாதசி விரதத்தை முறையாக் அனுசரித்து மறு நாள் நெல்லிக்கனியை துவாதசி பாரணை உண்டு மீண்டும் ஊண், உறக்கம் பசியில்லா நிர்ஜலமாக இந்த ஸ்ரீவித்யா துவாதசி விரத்தை அனுஷ்டித்தனர். வனத்தில் உள்ள பல ஆஸ்ரமங்களுக்குச் சென்று வசதியற்ற சீடர்களுக்கு வேண்டிய திரவியங்கள், ஆடைகள், ஏட்டுச் சுவடிகள், பாதணிகள் ஆகியவற்றை அளித்து அவர்கள் குருகுலவாசத்தில் நன்கு உய்ய உற்சாகமூட்டினர். இத்தகைய இறையடியார்களின் ஆனந்தமே பல்கிப் பெருகி நாட்டு மக்களின் அறியாமை, வேலையின்மை, வறுமை போன்ற துன்பங்களைத் தீர்க்க அருள்பாலிக்கின்றது.
ஸ்ரீவித்யா துவாதசி வழிபாடு
இன்றைய தினம், ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்போர் துவாதசி பாரணையுடன் ஸ்ரீவித்யா துவாதசி விரதத்தைத் தொடரலாம். ஏனையோர் இந்தத் துவாதசி விரதத்தினை மட்டும் அனுஷ்டிக்கலாம், ஒவ்வொன்றிற்கும் விசேஷ பலன்கள் உண்டு.
இந்த துவாதசி விரதத்தின்போது, ஏழை மாணவர்களுக்குத் தேவையான ஆடைகள், சீருடைகள், சைக்கிள் போன்ற ஊர்திகள், உணவு, சிலேட், புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற எழுதுகோல்கள், பள்ளி, கல்லூரிக் கட்டணங்களை ஏற்றுக் கொள்ளுதல், ஊனமுற்ற மாணவருக்கு நாற்காலி சக்கர வண்டி போன்ற உதவிகள், கண் பார்வையிழந்த குருடர்களுக்குப் படித்துக் காண்பித்தல், ஏழைக் குழந்தைகளுக்குப் பாதணிகள் அளித்தல் போன்றவற்றைச் செய்திட, ஸ்ரீவித்யா லக்ஷ்மியின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம். இயன்றவரை மௌனம், உபவாசம் ஏற்க வேண்டும்.
ஸ்ரீவித்யா லக்ஷ்மியின் திருவுருவம் இல்லாத இடங்களில் பெருமாள் கோயிலில் ஸ்ரீதாயாரையே ஸ்ரீவித்யா லக்ஷ்மியாகத் தியானித்துப் பூஜிக்க வேண்டும். இதற்கு இராம லக்ஷ்மண துவாதசி எனப் பெயர் வழங்கப்படினும், ஸ்ரீவித்யா லக்ஷ்மி துவாதசி என்பதே இதன் ஆதிகாரணப் பெயராகும். இவ்வாறாக ஸ்ரீவித்யா லக்ஷ்மி துவாதசி திதியை முறையாகக் கொண்டாடிட

  1. பிள்ளைகளின் கல்வியறிவு விருத்தியாகும். உத்தியோகம், உயர்வு கிட்டும்.
  2. தற்காலத்தில் படிப்பதற்குரிய வேலைவாய்ப்புக் கிட்டுவதில்லை. தான் கற்ற கல்விக்கேற்ற உத்தியோகம் பெற ஸ்ரீவித்யா லக்ஷ்மி துவாதசி பூஜை அருள்புரிகின்றது.
  3. வேலையின்மையினால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அவதியுற்றுப் பெற்றோர்களின் கவலைகளுக்கு உள்ளாகின்றனர். எனவே பெற்றோர்களும், வேலை தேடி அலைவோரும் ஸ்ரீவித்யா லக்ஷ்மியைப் பூஜித்து மேற்கண்ட தான தர்மங்களை பிற நாட்களில் இயன்ற வரையில் செய்து வந்திட நிச்சயமாக இறையருளால் நற்பணிகள் கிட்டும். ஸ்ரீராமனும் ஸ்ரீலக்ஷ்மணனும் இந்த ஸ்ரீவித்யா லக்ஷ்மி துவாதசிப் பூஜையை அனுஷ்டித்துப் பூலோகமெங்கும் இதன் மஹிமையைப் பரப்பினர்.

ஸ்ரீவித்யா லக்ஷ்மி
ஸ்ரீவித்யா லக்ஷ்மியின் அம்சங்களைத் தக்க தருணத்தில் சித்புருஷர்கள் சற்குரு மூலமாக எடுத்துரைப்பர். ஸ்ரீஆயுர்தேவி என்ற அற்புதமான தெய்வ மூர்த்தியின் பரிபூரண அம்சங்களைச் சித்த புருஷர்கள் அருளியுள்ளதைப் போல் ஸ்ரீவித்யா லக்ஷ்மியின் அவதார அம்சங்களையும் எடுத்தருள்வர். எனினும் ஸ்ரீவித்யா லக்ஷ்மியைப் பற்றி அறிந்துள்ள பெரியோர்கள் பலர் உண்டு. அவர்களிடமிருந்து ஸ்ரீவித்யா லக்ஷ்மி அஷ்டோத்திரங்கள், துதிகளைப் பெற்றுப் பாராயணம் செய்து அனைவரும் நற்பலன்களைப் பெற வேண்டும்.
தங்கள் வீட்டிலுள்ள/தங்கள் ஊர்ப் பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீலக்ஷ்மியை/தாயாரின் அர்ச்சா ரூபத்தை/விக்ரஹத்தை ஸ்ரீவித்யா லக்ஷ்மியாக வரித்துப் பூஜை செய்து உரிய தான தர்மங்களைச் செய்துவரத் தகுந்த உத்யோகம், உத்யோக உயர்வுகள், Ph.D. M.Phil போன்ற மேல்துறைப் படிப்பில் சிறப்புப் பெறுதல் போன்றவை கிட்டுவதோடு தகுந்த வேலையின்மை, வருமானக் குறைவு போன்றவற்றால் ஏற்படும் துன்பங்கள் தணியும்.

பித்ரு தர்ப்பணம்

தர்ப்பண மந்திரங்கள் பல உண்டு. தர்ப்பண முறைகளும் பல குடும்பங்களில் மாறுபடுகின்றன. இத்தகைய வேறுபாடுகளினால் குழப்பமடையாது அவரவர் குடும்பப் பாரம்பரியத்திற்கேற்ப பெரியோர்கள் வகுத்த வழியின்படி தர்ப்பண பூஜையைச் செய்தலே உத்தமமானது.
நம் குருமங்கள கந்தர்வா போன்ற ஆன்மீகப் பெரியோர்கள் சுய நலமின்றி அருட்பெரும் மக்கள் சேவையையே இறைப் பணியென ஆற்றி வரும் அருளாளர்களின் வழிப்படி நடத்தல் சிறப்புடையதாகும்.
அடியார் : தந்தை, தாய் அற்றோர்கள் தர்ப்பணம் இடவேண்டுமா குருதேவா?
சற்குரு: இறந்த தாய், தந்தைக்குப் பிள்ளைகள் தர்ப்பணமிடல் வேண்டும். தந்தையிருப்பின் தாய்க்கு அவரே தர்ப்பணம் செய்து விடுவார். ஆனால் பிள்ளைகள், பெண்கள் தான, தர்மம் செய்வதில் உதவ வேண்டும். தர்ப்பணத்தோடு இறந்தவருக்குப் பிடித்தமான உணவை அவர்கள் தாமே சமைத்து அன்னதானமாக இடுதல் தர்ப்பணத்தின் பரிபூரண பலனைத் தரும். தர்ப்பண மந்திரக் குறைபாடுகள், உச்சரிப்புக் குறைகளுக்கு இவ்வித தான தர்மங்களே பரிஹாரங்களாகும்.
தாய் தந்தை இருக்கையில் பிள்ளைகள் எள்ளைத் தொடலாகாது, தர்ப்பணம் செய்யலாகாது என்பது தவறான கருத்து.
பெற்றோர்கள் உள்ள பிரம்மசாரிகள் செய்ய வேண்டிய நித்தியப் பூஜைகளுள் ஒன்றான பிரம்ம யக்ஞத்தில் தேவ, ரிஷித் தர்ப்பண மந்திரங்கள் உண்டே! தினசரி சந்தியா வந்தனத்திலும் யம வந்தனம், நவக்ரஹத் தர்ப்பண மந்திரங்கள் உள்ளனவே!
தற்காலத்தில் பெற்றோர்களே  சந்தியா வந்தனம், பிரம்ம யக்ஞம், ஓளபாசனம், வைச்வதேவம் போன்ற நித்ய கர்மங்களைச் செய்யாததினால் அவர்களுக்கே மந்திரங்கள், சம்பிரதாயங்கள் தெரியாமற் போய்விட்டது. இதனால் தந்தைமார்களே இன்னமும் வருடக்கணக்காகப் புத்தகத்தைப் பார்த்து தர்ப்பணம் செய்கின்ற நிலையைப் பார்க்கின்றோம்! எளிய நியதிகளை என்று கற்றுக்கொண்டு செய்யப் போகின்றார்கள்? இத்தகைய நிலையில் தன் பிள்ளை தர்ப்பையைத் தொடக் கூடாது. எள்ளைத் தீண்டலாகாது, தர்ப்பணம் செய்யலாகாது என்று எண்ணுவது அறியாமையினால் தானே!
காருண்ய பித்ரு தர்ப்பணம்
அடியார் : பெற்றோர்கள் இருக்கும்போது பிள்ளைகள் தர்ப்பணம் செய்யலாமா? யாருக்கு? எப்போது?
சற்குரு: இவ்வாறு விளக்கங்கள் கேட்டால் தானே அறிவு விருத்தியாகும், அறியாமை போகும்! உதாரணமாக ஒரு கல்லூரி மாணவனுடைய அல்லது அலுவலகத்தில் பணிபுரிபவருடைய சக மாணவர், அலுவலர் இறந்து விட்டதாக வைத்துக் கொள்வோம். நன்கு நெருங்கிப் பழகிய அந்த இறந்தவருடைய வீட்டில் தர்ப்பணம் செய்யும் வழக்கம் இல்லாவிடில் அந்த மாணவனோ, அலுவலகரோ, இறந்தவருக்காக அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் தர்ப்பணம் செய்வது மிகச் சிறந்த இறைப் பணியாகும், பெற்றோர்களும் இத்தகைய நற்காரியங்களை ஊக்குவிக்க வேண்டும்!
இவ்வாறாக எந்த ஒரு இறந்த ஜீவனுக்கும் எவரும் பித்ரு தர்ப்பணத்தைச் செய்யலாம். இதில் என்ன அறிய வேண்டுமெனில் அவரவர் வழித் தோன்றல்கள் குறித்த  தர்ப்பணங்களைச் செய்வாராயின் அதி பரிபூரணமாக இருக்கும் அந்த வம்சாவளி நன்கு தழைக்கும். இல்லாவிடில் ஏனையோர் செய்தல் வேண்டும்.
உதாரணமாக பஸ் விபத்து, பூகம்பம், புயல் போன்றவற்றில் இறப்போர்களின் ஆத்ம சாந்திக்காக பித்ருத் தர்ப்பணங்களையும் தான தருமங்களோடு பலர் ஒன்று கூடி கூட்டுத் தர்ப்பண பூஜைகளைச் செய்தல் மிகவும் விசேஷமானதாகும். தனிப்பட்ட பூஜை, யாகத்தை விடக் கூட்டு நாம சங்கீர்த்தனம், கூட்டு விளக்குப் பூஜை, கூட்டு ஹோமம் பலர் ஒன்று கூடிச் செய்வது போன்றவற்றிற்குப் பன்மடங்குப் பலன்கள் வந்து சேர்கின்றன. கலியுகத்தில் எதிர்காலத்தில் கூட்டுத் தர்ப்பண பூஜைகள் ஏற்படப்போவதாக ஸ்ரீஅகஸ்தியர் தீர்க்க தரிசனமாகத் தம் கிரந்தங்களில் அளித்துள்ளார்.
தர்ப்பண மந்திரங்கள்
தர்ப்பணம் மந்திரங்கள் தேவ மொழியில் (சமஸ்கிருதம்) உள்ளனவே என்ற ஐயப்பாடு எழும். உண்மையில் மந்திரங்கள் எந்த மொழியிலும் உருவாக்கப்படவில்லை. வேத மந்திரங்கள் இறைவனின் படைப்பே! அத்தகைய தெய்வீகச் சப்த ஒலி அணுக்களை, சக்திமிக்கப் பீஜாட்சரங்களை சங்கேதக் குறியில் வடிவமைத்துத் தந்துள்ளனர் . “ஓம்”‘ என்பது ஒரு பீஜம், க்லீம் என்பது மற்றொரு பீஜம், ஓம், க்லீம்,,,,,,, என்ற பீஜாட்சரங்களை நாம் அறிந்த மொழியில் உச்சரிப்பதற்காகத் தமிழ் போன்ற எழுத்து வடிவில் அமைக்கின்றோம்.
தமிழ், தேவமொழி, தெலுங்கு, ஆங்கிலம் என்று எந்த மொழியில் ஓம் என்று எழுதினாலும் அதனை ஓம் என்றுதான் உச்சரிக்கின்றோம். ஸ்ரீஅருணகிரிநாத சித்த சுவாமிகள் பல அற்புதமானப் பீஜாட்சரங்களைக் கொண்டு அமிர்தமெனத் திருப்புகழ் பாடல்களைத் தந்திருக்கின்றார். இன்னும் கூறுவோமாயின் தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திவ்வியப் பிரபந்தம் போன்ற தெய்வீகப் படைப்புகளில் இருப்பவை தமிழ்ப் பாடல்களாகத் தென்படினும் அவற்றில் பல இரகசியமான பீஜாட்சர ஒலிகளைப் பதித்துள்ளனர்.
தேவ மொழியிலுள்ள மறைகளுக்கீடானப் பீஜாட்சரங்களைக் கொண்டு இத்தமிழ் இறைத் துதிகள் விளங்குவதால் இதனைத் தமிழ் மறை என்று கூறுகிறோம். சமஸ்கிருதம் தேவமொழி என்பது உண்மையே! தேவர்கள் என்போர் யார்? பூலோகத்தில் ஜாதி, மத, இன பேதமின்றி மக்கள் சேவையை மகேசன் சேவையாகக் கருதி சுயநலமின்றி அன்னதானம், இலவச மருத்துவ உதவி, முதியோரைப் பேணுதல், அனாதைகளுக்கு உதவுதல், நோயாளிகளுக்குச் சரீர சேவை செய்தல் போன்ற நற்காரியங்களை நிறைவேற்றும் உத்தம மனிதர்களே தேவர்கள் ஆகின்றனர்.
வேத மந்திரங்கள் இறைவனின் வாக்கு என்பதால் அவற்றை அப்படியே எடுத்துரைத்தால் அதன் சக்திப் பல்கிப் பெருகும். பிரபஞ்சத்தில் வாயு போல யாங்கணும் விரவிக் கிடக்கும் வேத மந்திரங்களை, பீஜாட்சரங்களைப் பல மஹரிஷிகள் தம் தவப்பலனால் கிரஹித்து நமக்கு அருளியுள்ளனர். பூலோகத்திலுள்ள ஒவ்வொரு ஜீவனும் மரம், செடி, கொடி, புல், பூண்டு, விலங்கு, மனிதன் எதுவாயினும் சரி ஒவ்வொரு மஹரிஷியின் வழித் தோன்றலே! இதில் எள்ளளவும் ஐயம் கிடையாது. இதனை நன்கு அறிந்த பிறகாவது மந்திரங்களை அருளியவர்கள் நம் ஆதிமூல மூதாதையரான மஹரிஷியே என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும்! எந்த இன, மத குலத்தைச் சேர்ந்தவராயினும், அவருக்குரித்தான ஆதிமூல மஹரிஷி உண்டு. எனவே, பொருள் புரியாவிடினும் சில மந்திரங்களை அப்படியே உச்சரித்தால் அவற்றில் பொதிந்துள்ள பீஜாட்சரங்களின் முழு தெய்வீக சக்தியைப் பரிபூரணமாகப் பெறலாம். நவக்ரஹ ஸுக்தம் என்ற தேவமொழி மந்திரங்களில் உள்ள பீஜாட்சரங்களைத் தொகுத்து திருஞானசம்பந்தர் ‘கோளறு பதிகம்’ என்ற தமிழ் மறைப் பாடலை அருளியுள்ளார். மஹானின்  திருவாய் மொழியன்றோ!
இங்கு அளிக்கப்படும் எளியத் தர்ப்பண முறையில் முக்கியமான ஒரு சில மந்திரங்கள் அதே ஒலிக் கூறுபடி அளிக்கப்பட்டுள்ளது. இதனை நன்கு உச்சரித்துப் பழகித் தர்ப்பணம் இட்டால் அபரிமிதமான பலன்களைப் பெறலாம். இவற்றிற்கு ஈடான தமிழ் மறைத் துதிகள் உள்ளன. இதன் விளக்கத்தை தக்க சற்குருவை நாடிப் பெறுவீர்களாக!
தர்ப்பண முறை
FEB1995மாத அகஸ்திய விஜயம் இதழில் தர்ப்பைகளைப் பரப்ப வேண்டிய முறையைத் தக்க வரைபடங்களுடன் விளக்கியுள்ளோம். மந்திரங்களை முறையாக அறியாதோருக்காக இங்கு விளக்கங்கள் தரப்படுகின்றன.

எள் கலந்த நீரை தர்ப்பை நுனியில் ஊற்றும் போது சொல்ல வேண்டிய முககி்ய மந்திரம் ..

ஊர்ஜம் வஹந்தீ : அம்ருதம் க்ருதம் பய:
கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூன்
த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
முக்கியமான தர்ப்பண மந்திரங்களின் பொருள் : --

  1.   ஓ தீர்த்தமே! எங்களுடையப் பித்ருக்கள் எங்கெங்கோ மனிதர்களாகப் பிறந்திருந்தால் நீ அன்னமாக ஆகி அவர்களுக்கு உதவுவாயாக!
  2. அவர்கள் தேவர்களாயிருந்தால் நீ அமிர்தமாக ஆகி அவர்களை சந்தோஷப்படுத்துவாயாக!
  3. அவர்கள் கந்தர்வர்களாகயிருந்தால் நீ நெய்யாக மாறி ஆனந்தப் படுத்துவாயாக!
  4. அவர்கள் பாலை உண்பவராகயிருந்தால் நீ பாலாக மாறி அவர்களை மகிழ்விப்பாயாக!
  5. அவர்கள் இராட்சர்களாகயிருந்தால் அவர்தம் உணவான இரத்தமாக ஆவாயாக!
  6. அவர்கள் செடி, கொடிகளாயிருந்தால் அவைகளுக்குத் தேவையான ஜலம், ரசம் சத்தாக மாறிக் காப்பாயாக!

த்ருப்யத த்ருப்யத த்ருப்யத (திருப்தி ஆவீர்களாக) என்று மூன்று முறை சொல்லி வலதுகையை விரித்துக் கட்டைவிரல், ஆள்காட்டி விரல்களுக்கு இடைவழியே தீர்த்தத்தை எள்ளுடன் சேர்த்துத் தர்ப்பை நுனியின் மேல் சிறிது நீர் ஊற்றுதலே தர்ப்பணம் இடுதல்.

இதுவே தர்ப்பண மந்திரத்தின் முக்கியப் பகுதி, மூதாதையரின் பெயர் தெரிந்தால் அவரவர் பெயரைச் சொல்லி, நீர் வார்த்துத் தர்ப்பணம் இடுதல் மிகவும் விசேடமானதாகும். பெயர் அறியாவிடில் அவர் நினைவே (பார்த்திராவிடினும்) போதுமானதாகும். ஏனைய மன, உடல், சுத்திக்கான மந்திரங்களும் உண்டு.

தீர்த்தப் பிரசாத பௌர்ணமி

‘பால்ய விவேக பௌர்ணமியாக’ யுவ வருடச் சித்திரையில் வரும் பௌர்ணமிக்கு தீர்த்தப் பிரசாதப் பௌர்ணமி என்றும் பெயர். இரண்டு பௌர்ணமி திதிகள் அமையும் யுவ வருடச் சித்திரை மாதம் மிகச் சிறப்பானதாகும். இரண்டாவது பௌர்ணமியான யுவ வருடச் சித்ரா பௌர்ணமிக்கே ‘பால்ய விவேகக் கல்யாணப் பௌர்ணமி’ என்று பெயர்.
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ் நாளில் பொதுவாக ஆயிரம் விதமான தலையாயத் துன்பங்களைக் குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை சந்திக்க வேண்டியுள்ளது. தக்க சற்குருவை ஒருவன் இளம் வயதிலேயே பெறுவானாகில் அவன் தன் வாழ் நாளில் ஆயிரம் பௌர்ணமி பூஜைகளையும், ஆயிரம் மூன்றாம் பிறைச் சந்திரப் பிறை தரிசனங்களையும் செய்திடில் தம் வாழ்வின் தலையாயப் பிராரப்த கர்மங்களுக்குப் பிராயசித்தங்களை குருவருளால் எளிதில் பெற்றிடலாம். ஆனால் இள வயதிலேயே குருவைப் பெற வேண்டும் என்ற தெய்வீகப் எண்ணம் யாருக்கு ஏற்படுகிறது? இதை ஊட்டுவது பெற்றோருடைய, ஆசிரியருடைய கடமையன்றோ?

பௌர்ணமி பூஜையினை முறையாகச் செய்யச் செய்ய அதன் பலன் கள் பல்கிப் பெருகும். பூஜை செய்பவருடைய அருட்  தன்மை, பூஜை செய்யும் இடம், மந்திர உச்சாடனங்கள், சங்கல்ப முறைகள். வழிபடும் மூர்த்தியின் ஆவாஹன சக்தி போன்ற தன்மைக்கேற்ப பூஜாபலன்கள் மாறுபடும். ஆனால், சற்குரு தலைமையில் நடக்கின்ற சத்சங்கப் பூஜைகளில் தான் பரிபூரணப் பலனைப் பெறலாம்.
ஏனெனில் சற்குருவானவர் ஆயிரக்கணக்கானோரின் துன்பங்களுக்காகப் பிரார்த்தித்து, அவர்களுக்காகச் சங்கல்பம் செய்து கொண்டு பௌர்ணமி பூஜையின் பலனை தனக்கென ஒரு சிறிதும் வைத்துக் கொள்ளாது எவ்வித சுய நலமுமின்றி பிறருடைய நல்வாழ்விற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறார்.
ஒவ்வொரு பௌர்ணமி பூஜையும் ஒவ்வொருவிதத் துன்பந் தீர்க்கும் விசேடத் தன்மை வாய்ந்தது. இதனை நன்கு அறிந்தவர் சற்குரு ஒருவரே!
இவ்வகையில் கடந்த 14.4.1995 அன்று நடந்த பாலகிரணப் பூசந்திப் பௌர்ணமியானது அகால சிசு மரணம் பூண்ட ஜீவன்களின் ஆத்ம பரிபாலனத்திற்காகவும், அவர்களுடைய ஆன்ம நிலை மேம்பாட்டிற்காகவும் உரித்தானது என்று நம் குருமங்கள கந்தர்வா விளக்கியுள்ளார். வருகின்ற பௌர்ணமி திதியானது பால்ய விவேகக் கல்யாணப் பௌர்ணமியாக அமைகின்றது.

  1. பால்ய வயதிலேயே விவாகமாகிக் கணவனை இழந்தவர்கள்
  2. பால்ய வயதில் கல்யாணமாகிக் குழந்தைகளைப் பெற்று இளவயதிலேயே விதவைக் கோலம் பெற்றோர்.
  3. பால்ய வயது சம்பவங்களால் திருமணத் தடங்கல் பெற்று வருந்துவோர்.
  4. பால்ய வயது நிகழ்ச்சிகளினால் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தோர்.
  5. பால்ய வயதில் திருமணம் ஆகிச் சிறுவயதிலேயே இறந்த ஆண்/பெண் போன்றோருடைய இன்னல்களுக்கு நிவாரணமளிப்பதற்காக இந்தப் பௌர்ணமி விசேஷமான பலன்களை அளிக்கின்றது.

ஏனையோர் மேற்கண்டோருடைய நல்வாழ்விற்காகவும் அவர்களுடைய மனச்சுமைகள் தணியவும் வடுப்பெற்ற மனம் சாத்வீக முறையில் நிவாரணம் பெறவும் பிரார்த்துப் பௌர்ணமி பூஜாப் பலன்களை அவர்களுக்கென அர்ப்பணிக்க வேண்டும்.
மேற்கண்ட துன்பங்களை உடையோர் சிதம்பரம் அருகில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பெருமாள் கோயிலில் தாமரை/அல்லி மலர்களால் ஸ்வாமியை அலங்கரித்து வெண்பொங்கல்/தயிர் சாதம்தனை ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்,
ஏனையோரும் ஸ்ரீமுஷ்ணம் கோயிலில் இத்தகைய வழிபாட்டைச் செய்திட மாங்கல்ய தோஷங்கள் எப்போதும் அவர்களை அணுகாது. நல்ல நாள்/நட்சத்திரம், ஹோரை கணித்தே மாங்கல்யத்திற்கானப் பொன்னை உருக்க/வாங்க வேண்டும். இல்லையேல் அதில் தோஷங்கள் படிந்து கணவனின் ஆயுளை பாதிக்கும். இவ்வாறு நல்ல நாள் கணிக்காது மாங்கல்யம் செய்தோர் இப்பௌர்ணமி நாளில் ஸ்ரீமுஷ்ணம் கோயிலில்  மேற்கண்ட முறையில் வழிபட்டு இயன்ற அளவு பொன்னாலான மாங்கல்யத்தை ஏதேனும் ஓர் ஏழை சுமங்கலிக்கு, அறுபது, எழுபது வயதைத் தாண்டிய ஏழை தம்பதியர்க்கு அளித்திட இது மிகச் சிறந்த தான தர்மமாக அமைந்து எவ்வித மாங்கல்ய தோஷத்தையும் நீக்கும் அதியற்புதப் பரிஹாரமாகவும் சித்த புருஷர்களால் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக ஒவ்வொரு பௌர்ணமி பூஜையின் மஹிமை சொல்லவும் பெரிதே!

லாவண்ய கௌரி விரதம்

லாவண்ய கௌரி விரதம் 5-5-1995 வெள்ளியன்று கொண்டாடப்பட வேண்டிய மிகவும் விசேஷமான பூஜையாகும். சஸபதி என்ற உத்தம மஹரிஷி இன்றும் என்றும் எவரும் புரிந்திடா “மா தவத்தை” ஆற்றி வருகின்றார். ஒவ்வொரு நாள் முடிவிலும் அந்த நாளில் தாம் செய்த யோக, தியான, விரத பூஜா பலன்களை பிரபஞ்சத்திலுள்ள ஜீவன்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்து விடுகிறார். தனக்கென்று சிறிதளவு புண்ணியம் கூட வைத்துக் கொள்ளாது அனைத்தையும் பிறர் நலத்திற்காக ஈந்து இன்றும் பெரும் தவம் பூண்டு  வரும் சித்புருஷர்!
சிறிதளவு பாவம் கூடத் தீண்டாத தெய்வீக புருஷர்! பாவமே அண்டாத பரமயோகி! முப்பத்து முக்கோடி தேவர்களும் இன்றும் ‘எப்போது ஸஸபதி மஹரிஷி தியானத்தை முடித்துக் கண் திறப்பார். அவர் தீட்சண்யம் கொஞ்சமேனும் நம்மேல் படாதா, நாம் கடைத்தேற மாட்டோமா? என்று ஏங்கித் தவிக்கின்றனர். பாவம் தீண்டாத புனித தேகமாதலின் எப்போதும் ஜோதி மயமாக அவர்தம் திருமேனி மிளிரும். புண்ணிய தேவதை கூட அவர் அருகில் செல்ல இயலாதாம், ஏனெனில் பாவ, புண்ணியத்திற்கு அப்பாற்பட்ட அருட்பெரும் ஜோதியன்றோ அவர்தம் திருமேனி!
ஸ்ரீபிரம்மா கூடத் தன்சிருஷ்டியால் ஒரு சிறிதும் கூடக் கர்மேயற்ற. வினைகள் சூழாத, ஜன்மாந்திர வாசனையற்ற ஒரு ஜீவன் எவ்வாறு ஸஸபதி மஹரிஷியாக உருப்பெற்றது! என்று ஆத்ம விசாரம் செய்து நிற்க, பரம்பொருளாம் சிவபெருமானி திருவுளமோ வேறு விதமாக இருக்கின்றதே!
கௌரியின் பிரார்த்தனை
தன்னை வணங்கும் உத்தம் பெண்களுக்கெல்லாம் தீர்க்கமான மாங்கல்ய பாக்யம் அளித்து வரும் ஆதிபராசக்தியாம் ஸ்ரீபார்வதி தேவி தாம் மகேசனுடன் இணைந்து அர்த்த நாரீஸ்வரக் கோலம் பூண்டிடில். ‘அத்திருக்கோலத்தை வழிபடும் பூலோகப் பெண்கள் இறைப் பெருங்கருணையால் அபரிமிதமான பலன்களைப் பெறலாமன்றோ என்று எண்ணி வேண்டிட, ஸ்ரீபரமேஸ்வரனோ உமையவளின் விருப்பத்தை அவ்வளவு எளிதில் நிறைவேற்றுவதாக இல்லை!
‘உமையவளே! நீ மானுடப் பெண்ணாக வாழ்ந்து இன்ப துன்பங்களை அனுபவித்து சுமங்கலித் தவத்தின் பரிபூரணத் தன்மையை உய்த்து உணர்ந்தால்தான் எம்மில் ஒரு பாகம் பெறத் தகுதி பெறுகிறாய்!’’ஆண்டவனின் திருக்கட்டளையன்றோ! உளமுவந்து உடனே செயல்பட்டாள் ஸ்ரீபரமேஸ்வரி...
............................................. அதோ மானூடப் பெண்ணாக, கௌரியாக, உமையவள் அவதரித்து விட்டாள்! தான் அகிலம் காக்கும் ஆதிசக்தி என்ற எண்ணமோ, அகந்தையோ சிறிதுமின்றி அத்ரி மஹரிஷியின் பத்னியான ஸ்ரீஅனுசூயா தேவியிடம், பதிவிரதா குண நெறிகளைக் கற்றுக் கொண்டாள்.. (ஸ்ரீஅனுசூயா தேவியின் அரிய தவமுறையைப் பற்றிய விளக்கங்களை நம்குரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுமாமிகளின் ஆயுர்தேவி மஹிமை என்னும் நூலில் காணலாம்) இதனால் மகிழ்வுற்ற சிவபெருமான், ‘லாவண்ய கௌரி விரதம் என்ற அற்புதமான விரதம் ஒன்றுள்ளது. அதற்கான நல்ல நேரத்தை நீயே தேர்ந்தெடுப்பாயாக!’ என்று மீண்டும் அருளாணையிட்டார். கௌரிதேவியாம் ஸ்ரீபார்வதி பல மஹரிஷிகளைக் கலந்தாலோசித்தும் எளிதில் நல்ல நேரத்தைப் பெற இயலவில்லை. நாளோ, கோளோ, நட்சத்திரமோ, மாறி மாறி பல க்ரக சஞ்சாரங்களை உருவாக்கிட மானுடப் பெண்ணாக கௌரியை வரித்தமையால் அவற்றைக் கொண்டு மஹரிஷிகளால் எவ்வித நாளையும் நிச்சயிக்க இயலவில்லை.
ஸ்ரீபார்வதி தேவி திகைத்தனள், ‘இறைவா! என்ன சோதனை இது’? கௌரிதேவி, பொதிகை மலையை அடைந்து ஸ்ரீஅகஸ்தியரை நாடித் தன்னுடைய பிரச்சனைக்கு முடிவு கூற வேண்டினாள்.
சித்தர்களும் அமிர்த நேரமும்
ஸ்ரீஅகஸ்தியர் “என் அம்மையே! தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை. அனைத்தும் எம் அப்பனின் திருவிளையாடலே! அடியேனுக்கு சிவபெருமான் அருளியுள்ளபடி சித்தர்களுக்கே உரித்தான அமிர்த நேரக்கணிப்பின்படி யாம் அறிந்த ஒரு நல்ல நேரத்தை அளிக்கிறோம்! பிரபஞ்சத்திலேயே மிகப் புனிதமான நேரங்களில் ஒன்றாக அது அமைந்திருக்கின்றது. பாவமே தீண்டாத ஒரு தம்பதியரின் ஆசியைத் தாங்கள் முதலில் பெற வேண்டும். அதன் பின் தங்களுக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள லாவண்ய கௌரி பூஜா’ என்ற விரதத்திற்கான நல்லநேரம் தானாகவே கனியும். எல்லாம் வல்ல அம்மையப்பன் அருளால் இதனை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.”
ஸ்ரீஅகஸ்தியர் ஸ்ரீகௌரி தேவியை வணங்கி நின்றார். “பாவம் தீண்டாத தம்பதியினரா? பார்வதி மீண்டும் திகைத்து நின்றாள். ‘என்ன இது? சோதனை மேல் சோதனையாக வருகின்றது! அப்போது ஸ்ரீஅகஸ்தியர் பாவம் தீண்டாத் திருமேனியினரான சஸபதி மஹரிஷியின் மஹிமையை ஈஸ்வரிக்கு எடுத்துரைத்தார்.

ஸ்ரீஅன்னபூரணி வாரணாசியாம் காசியில் ஸ்ரீபரமேஸ்வரனுக்கு அன்னமிட்ட நாளே அட்சய திரிதியை. இந்நாளில் ஸ்ரீஅன்னபூரணி எழுந்தருளியுள்ள திருத்தலங்களிலும் காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேசுவரர் கோவிலில் சில ஆண்டுகள் முன்புவரை தரிசனம் தந்து அருள்பாலித்து இன்றும் ஜீவசமாதியில் இருந்து அருள்மழை பொழியும் புக்கொளியூர் போடாசித்தர் என்றும் நாகநாத சித்த சுவாமி என்றும் அழைக்கப்படும் உத்தம மஹாசித்த புருஷரின் காஞ்சீபுரம் ஜீவ சமாதியிலும் அன்னதானம் செய்வது மிகவும் விசேடமானதாகும். இதனால் அன்னபூரணியின் அருட்கடாட்சம் பல்கிப் பெருகி உணவிற்கு என்றுமே தரித்திரம் ஏற்படாது. தினமும் காக்கை, எறும்பிற்கு உணவிடாத தோஷத்திற்குப் பரிகாரமாக காக்கை, எறும்பு, நாய், யானை, குதிரை, பாம்பு, கீரி, பசு, எருமை, கிளி போன்ற சகல ஜீவன்களுக்கும் பலர் ஒன்றுகூடிக் கூட்டாகச் சேர்ந்து உணவிடுதல் உத்தம தர்ம காரியம் என சித்த புருஷர்கள் அருள்கின்றனர்.

“ஸ்ரீஅகஸ்திய மாமுனியே! ஸஸபதி மஹரிஷி நைஷ்டிக பிரம்மச்சாரியல்லவா? என் செய்வது?

புனிதத் திருமேனியுடைய மஹரிஷிக்கு நிகரான பாவந்தீண்டாத் திருமேனியுடைய ஒரு பத்தினிப் பெண்ணை சிருஷ்டிக்கத் தாங்கள் தவம் மேற்கொள்ள வேண்டும்! என்னே இறைவனின் திருவிளையாடல் என்று ஆனந்தித்த கௌரிதேவி ஸ்ரீஅகஸ்தியரின் ஆலோசனைப்படி வலதுகால் கட்டைவிரலில் நின்று கடுந்தவம் புரிந்தாள். எதற்காக? சஸபதி மஹரிஷிக்கு உத்தமப் பத்தினியை சிருஷ்டிக்க வேண்டி மாதவத்திற்குள் குறுந்தவமா?
சஸபதிக்கு ஓர் உத்தம பத்னி
தேவலோகத்தில் பலகோடிச் சதுர்யுகங்களாக மந்த்ரதரணி மணி என்ற தெய்வீக சக்தி நிறைந்த, எப்போதும் அருள்ஜோதி சூழ்ந்த நவரத்னம் போன்ற கல் ஒன்று இருந்தது, அதனை தேவர்களும் மஹரிஷிகளும் தினந்தோறும் பூசித்தனர். எவராலும் கையினால் கூடத் தீண்ட இயலாத மணி! அத்தகைய பெருஞ் ஜோதியை உடையது. பலகோடி சிருஷ்டி, மஹாபிரளயங்களையும் அக்கல் விஞ்சி நின்றது. “இதனை என் செய்வதென்று’” பல மஹரிஷிகளும் சிவபெருமானிடம் விண்ணப்பம் செய்து நின்ற போதும் இறைவன் அதற்குத் தம் திருச்செவியைச் சாய்க்கவில்லை போலும். ஆனந்த நடராஜன் திருவுளத்தை யாரறிவார்? ஆனால் அதற்கும் திருவேளை வந்துவிட்டது போலும்!
ஹேலையின் பிறப்பு
ஸ்ரீஆதிகாமாட்சியாய், கௌரியாய்த் தவம்புரிந்த அம்பிகையின் வலக்காலினின்று ஒரு ஜோதி எழும்பி, தேவ லோகத்திலுள்ள மந்த்ரதரணி மணியை அடைந்திட அதிலிருந்து ‘ஹேலை’ என்ற உத்தமி உருவானாள்!. பாவம் தீண்டாத் திருமேனியிலிருந்து பிறந்த பாவம் தீண்டாப் பாவையவள்!  ஸ்ரீஅகஸ்தியரே முன்னின்று ஸஸபதி ஹேலை திருமணத்தை நடத்தி வைத்திட்டார்.
மதுமான் மஹரிஷி
மதுமான் என்ற மஹரிஷி தவப்புதல்வனாக அவர்களுக்குப் பிறப்பெடுத்தார். ஆம்! அஷ்டவக்ர மஹரிஷி போல், பிறக்கும்போதே பாவம் தீண்டாப் புனித மஹரிஷியாய் ஒளிர்விட்டுப் பிரகாசித்தார். ஸ்ரீமதுமான் மஹரிஷி வளர்ந்து அற்புதத் தவசீலனாய்ப் பிரபஞ்சமே போற்றும் பெருமஹரிஷியாய்ப் பிரகாசித்திட......
கௌரி தேவியின் தவம் மேலும் தொடர்ந்தது. எதற்காக? லாவண்ய கௌரி விரதம் என்ற புனிதமான கௌரி விரத்தைத் துவங்குதற்காக! அந்த நல்நேரம் எப்படி அமையுமோ? அதுவும் இறைவன் திருவுளப்படிதானே நிகழும்!
மதுமான் மஹரிஷி ஸ்ரீராம பக்தனாக ஸ்ரீராமஜோதியாய்ப் பிரகாசித்தார். உத்தமப் பத்தினித் தாயாம் ஹேலையின் குணத்தைப் பூண்டதாலோ என்னவோ மகரிஷிகளுள் மாணிக்கமாய்ப் பிரகாசித்து ஸ்ரீராமனை, தசரத மைந்தனாய், சீதா பதியாய், மானுட உடலில் தரிசிக்க வேண்டும் என்று பூலோகம் எங்கும் ராம நாம தாரக மந்திரத்தை யாங்கணும் ஒலித்துக் கொண்டே உலவி வந்தார்.
நந்தி சேகரம் தரித்த ராம நாமம்
உண்மையில் வாயு பகவானுக்கே மதுமான் மஹரிஷியின் ராம நாம தியான தாரக மந்திர, சப்த சக்தியினைத் தாங்க இயலாது சிவபெருமானிடம் முறையிட வேண்டியதாயிற்று, இதன் விளைவாக சிவபெருமான் நந்தி சேகரம் தரித்த நந்தீஸ்வரரை படைத்துப் பிரபஞ்சத்தில் ஒலிக்கும் அனைத்து இராம நாம ஒலிப்பிரவாகங்களையும் மைசூர் சாமுண்டி மலையிலுள்ள ஸ்ரீநந்தீஸ்வரர் தரித்துள்ள திருக்கொம்புகளில் கிரகிக்கும்படி அவருக்கு அருளாணையிட்டார்.
நந்திசேகரம் தரித்த ராம நாம ராமமே! ஸ்ரீஇராமசந்திர மூர்த்தி கருணைக்கடலாயிற்றே அவரும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் மதுமான் மஹரிஷிக்கு அவர் விரும்பிய கோலத்தில் தரிசனம் தந்து தம்முள் அம்மஹரிஷியை ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
அத்திரு நாளே அந்த யுகத்திற்குரிய யுவ வருடப் பஞ்சமி திதியும், வெள்ளியும் கூடியச் சித்திரைத் திருநாளாகும்.
விரத நேரம்
ஸ்ரீமதுமான் மஹரிஷி ஸ்ரீராமனைத் தரிசித்து அவர்தம் திருவடிகளில் ஜோதியாய் ஐக்யமாகும் திருக்காட்சி கண்டு கௌரி தேவி பரமானந்தம் அடைந்தாள். தம் திரு தவப்புதல்வனின் ஜீவ பரமாத்மா ஐக்யத்தைக் காண நேரில் வந்த சஸபதி-ஹேலை மஹரிஷித் தம்பதிகளை கௌரி வணங்கி பாத பூஜை செய்து ஆசி பெற்றாள். இந்நாளில் தான், இந்நேரத்தில் தான் ஸ்ரீபார்வதி தேவி லாவண்ய கௌரி விரத்தை மேற்கொண்டாள். இது மிகப் புனிதமான நேரமாகும். கிடைத்தற்கு அரிது! அடுத்த யுவ வருடம் நாம் எங்கு இருப்போமோ நாம் அறியோம். எனவே அனைவரும் இந்த லாவண்ய கௌரி விரதத்தை அனுஷ்டித்து ஸ்ரீஆதிபராசக்தியின் பரிபூரண அருளைப் பெறுவோமாக!
பெறற்கரிய வாய்ப்பை நழுவ விடாது இந்த அமிர்தமயமான புனித நாளில், நேரத்தில் கௌரி விரதத்தை மேற்கொண்டு சகல பாவங்களுக்கும், தீவினைகளுக்கும் பரிஹாரம் பெறும் நல்வழியைக் குருவருளால் பெறுவோமாக!
இத்தகைய அபூர்வமான, அற்புதமான விரதத்தைப் பற்றி எடுத்துரைத்து அறவழி காட்டி நம்மைத் தெய்வீகப் பாதையில் இட்டுச் செல்லும் நம் குருமங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
ஸ்ரீலாவண்ய கௌரி விரத நேரம்
ஸ்ரீஅகஸ்தியர் ஸ்ரீகௌரியாம், உமையவளிடம், ‘ஈஸ்வராம்பிகையே’ இந்த விரதத்தின் சிறப்பம்சம் என்னவெனில், முதலில் தாங்கள் இவ்விரதத்தைத் தொடங்க நல்ல நாளைக் குறித்துத் தரும்படிக் கேட்டீர்கள் அல்லவா. இறைவனே மனமுவந்து அருளும் சில அமிர்தப் புனித நேரங்கள் உண்டு. அவற்றுள் ஒன்றுதான் பாவமே தீண்டாத தெய்வத் திருமேனியுடைய ஸ்ரீமதுமான் மஹரிஷி ஸ்ரீராமசந்திர மூர்த்தியைத் தரிசனம் பெற்று, அவர்தம் திருவடிகளில் ஐக்கியமான புனிதமான நேரமும்! பாவமே தீண்டாத திருமேனியுடைய மஹரிஷியாம் ஸ்ரீமதுமான் மஹரிஷியின் ஆசிகளையும் தரவல்லது இந்த லாவண்ய கௌரி விரதம் எனில் இதன் பலன்களை எடுத்துரைக்க யுகங்கள் கூடப் போதாது!
“எவ்வாறு ஈஸ்வரியாம் தங்களுக்கு இந்த அமிர்தமய புனித நேரம் ஈஸ்வர இச்சையில் தானாகக் கணிந்ததோ அதே போல் இவ்விரதத்தை வரும் யுகங்களில் கொண்டாடும் பெண்களுக்கும் இந்நேரம் இயற்கையாகவே அமையும். ஆனால் இந்நாள் முழுவதும் அவர்கள் இந்த எளிமையான லாவண்ய கௌரி விரத நியமங்களை முழு மனதுடன் பக்தி சிரத்தையுடன் அனுஷ்டிக்க வேண்டும்’  என்று இறையருளால் எடுத்துரைத்தார்.
கூவம் சிவாலயம்
ஸ்ரீகௌரி தேவியும் பூலோகமெங்கும் இந்த லாவண்ய கௌரி விரத மஹிமையைப் பரப்பி கூவம் என்னும் தலத்தில் எவரும் தீண்டாத திருமேனிச் சிவலிங்கத்தில் (திரிபுரசுந்தரேசர்) ஐக்யமானாள். மிகவும் சக்தி வாய்ந்த எவரும் தீண்டிடாத சிவலிங்கம்! பூஜைகள் கூட இந்த சிவலிங்கத்தைக் கையால் தீண்டாமல்தான் இன்றும்  நடைபெறுகிறது.

  1. விடியற் காலையில் எழுந்து நீராடி மஞ்சள், சந்தனம், குங்குமம் மூன்றுந் தரித்து மூன்று திரிகளுடன் பசு நெய் தீபம் ஏற்றி ஸ்ரீசஸபதி மஹரிஷி , ஸ்ரீஹேலை தேவி, ஸ்ரீ மதுமான் மஹரிஷி இவர்களை மானசீகமாகத் தொழுது விரதத்தைத் துவங்க வேண்டும்.
  2. இயன்ற வரையில் மௌனம், உபவாசம் ஏற்பது சிறந்தது.
  3. அறுபது வயதிற்கு மேற்குபட்ட தம்பதிகளுக்குப் பாதபூஜை செய்து சுமங்கலிக்குக் கால் விரல்களில் (வெள்ளி) மெட்டி அணிவித்து இருவரையும் மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்
  4. மஞ்சள், குங்குமம், தாலிச் சரடு, வெற்றிலை, பாக்கு, பூ, தேங்காய் ,பழம், வளையல், கண்ணாடி, சீப்பு, மெட்டி போன்ற மங்கலப் பொருட்களை இறைவனிடம் சமர்ப்பித்து அறுபது வயதிற்கு மேற்பட்ட (அவரவர் பெற்றோர்கள் உள்ளிட்டு) தம்பதிகளை, ஸ்ரீசஸபதி ஸ்ரீஹேலை தம்பதிகளாகப் பாவித்து அவர்களுக்கு வழங்க வேண்டும்.
  5. மாலையில் கோயிலில் ஸ்ரீஅம்பிகை தரிசனம் பெற்று விரதத்தை/உபவாசத்தை முடிக்க வேண்டும்.
  6. கௌரி விரதம் பரிபூரணம் பெற இந்நாளில் செங்கல்பட்டு அருகே “கூவம்” என்னும் ஊரில் தீண்டாத் திருமேனியராக விளங்கும் இந்தச் சிவலிங்கத்தை தரிசிக்க வேண்டும். இந்தச் சிவலிங்கத்தை எவரும் தீண்டுவதில்லை! தீண்டாத் திருமேணியர். அர்ச்சகர் கூடத் தொட்டு அபிஷேகம் செய்வதில்லை. சற்று உயரத் தூக்கிய நிலையில் தான் அபிஷேகம், ஆராதனைகள் நிகழ்கின்றன.

எனவே லாவண்ய கௌரி விரத நாளான்று எவரும் தொடாது/தீண்டாது பூஜை செய்யப்படும் கூவம் ஸ்ரீதிரிபுர சுந்தரேச சிவலிங்க நாதர் போன்ற தெய்வ மூர்த்தியைத் தரிசனம் செய்வது இவ்விரதத்தின் பரிபூரண பலன்களை குருவருளால் பெற்றுத்தரும்.

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam