பாக்கி தீராமல் பயணம் முடிவதில்லை !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

“பூலோக வாசம்” முடிந்தது என்பதால், எமலோகத்துக்குச் சென்ற அந்தப் புனிதமான பெரியவருக்காகச் சித்தர்களும், மஹரிஷிகளும் எம மூர்த்தியை வேண்டி, “இவருடைய அரிய பணிகள் பூவுலகிற்குத் தேவை!” என அரிதினும் அரிதாக உரைத்திட, அந்த ஜோதிடப் பெரியவரின் உயிர் மீண்ட புனிதமான படலத்தை, சத்குரு மூலமாகத்தானே அறிதலும், காண்தலும், உணர்தலும் இயலும்!

சிறுவன்தான் என்னே பாக்யசாலி!

கண்கள் பனிக்கப் பனிக்க அவன் பெரியவரை நோக்கினான். அந்தப் பெரியவருக்காக, எம லோகத்தில் மானுட உடலுடன் சென்ற காட்சியைக் கண்டவன், அதே சமயத்தில் அவருடன் பூவுலகிலும் இருந்தானே! நொடி நேரத்தில் அண்ட சராசர லோகங்களுக்கு சென்று வரவல்ல இவருடைய மஹிமையை என்னென்று சொல்வது!

ஆனால் பெரியவர் “திரும்பிப் பார்க்க வேண்டாம்” என்று சொல்லியும், அவன் அக்காட்சியை மீண்டும், மீண்டும் பார்க்க முயன்றதையும் என் சொல்வது?

நான் என்ன செய்ய
வேண்டும் தாயே!

“திரும்பித் திரும்பிப் பார்த்து என்னத்தையடா நீ அங்கே சாதிக்கப் போறே! நாங்க ஸ்விட்ச ஆப் பண்ணிட்டா உனக்கு எதுவுமே தெரியாதே! உனக்கு எதுக்குடா அந்த தேவலோகக் காட்சி எல்லாம்! நான்தான் ரேடியோ வாட்டம் ஏதேதோ லோகத்துல நடக்கறதை எல்லாம் கஷ்டப்பட்டு கிரகிச்சு எங்க குரு அருள்னாலே இங்கேருந்தே உனக்குச் சொல்லிக் கிட்டு வர்றேனே! இதை விட உனக்கு வேற என்னடா வேணும்?”

சிகிச்சை இல்லா அக்னிசிக்ஷா!

“இந்த வெங்கட சுப்ரமண்யம்.... அந்தப் பெரிய ஜோஸ்யரு.... அவங்க ஊர்ல அவருக்கு என்ன பெயரோ தெரியாது, அதே பெயராவும் இருக்கலாம்! ஆஸ்பத்திரிக் கணக்குல அவங்க ரெகார்டுப்படி, இவரு செத்துப் போயி 12 மணி நேரம் ஆகுதாம்! என்னிக்குடா இந்த உலகத்துல மனுஷன் கரெக்டா கணக்குப் போடுவான்? கலியுக மனுஷன் போடறதெல்லாம் தப்புத் தாளம், தப்புக் கணக்கே!”

பெரியவர் கலகலவென்று சிரித்தார்!

“ஆனா எங்க கணக்குப்படி, முழுசா, மனுஷ உடம்போட 12 மணி நேரமும் இவரு எமலோகத்துல தான் இருந்தாரு! இப்படித்தான் நசிகேதஸ் மனுஷ உடம்போட எம லோகம் போனான்! இதுவே பெரிய பாக்யம்! எத்தனையோ மகரிஷிங்க ஒண்ணு கூடி, இவர் இன்னமும் கொஞ்ச நாளைக்கு பூமியில வாழ்ந்து, நல்லா இருந்து பூலோக மக்களுக்கு இன்னமும் சேவை செய்யணும்னு எம தர்ம ராஜாகிட்ட ரொம்ப ரொம்ப வேண்டிக்கிட்டு இருக்காங்க! மகரிஷிங்களே இந்த மாதிரி கேக்கறாங்க! அதுவும் இவர் ஒண்ணும் தான் இன்னமும் பூமியில வாழணும்னு கேக்கலை! ஆனா மகரிஷிங்களே இவருக்காகப் பாடுபடறாங்கன்னா, எப்பேர்ப்பட்ட உத்தமரா இவரு இருக்கணும்! ஏழைகளுக்காகப் பாடுபடற உத்தமமான மனுஷனப்பா! அவ்வளவு சத்தியமான, நாணயமான, நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தவரு! ஏழை ஜனங்களுக்கு நெறய உதவி செஞ்சவரு!”

“மகரிஷிங்களே கேட்டுக் கிட்டதுனாலே, எமதர்ம ராஜ மூர்த்தி ரொம்பவும் ஆனந்தப்பட்டு, இவரோட பூலோக வாழ்க்கையை எக்ஸ்டென்ட் பண்ணி, நீட்டிச்சுக் கொடுத்துட்டாரு! இதுக்கு உதவுறதே அக்னிசிக்ஷான்னு ஒரு வகை தபஸ்! இதுதாண்டா அக்னிசிக்ஷாவோட மஹிமை! சிகிச்சைகளுக்கு அப்பாற்பட்ட அமுதமான உயிர் மருந்து! சாகாவரம் தரும் மருந்து! இதுதாண்டா அந்த ஆஸ்பத்திரியில நீ கடைசியாப் பார்த்த தேவ காட்சி!”

மிகவும் சுவாரசியமக அனைத்தையும் கேட்ட சிறுவனுக்கு... என்னதான் தேவ காட்சிகளைப் பெற்றுக் கொடுத்தாலும்.. ஒரு விஷயத்தில் பெரியவர் மேல் அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது!

பாதியும், மீதியுமாய், ஏனிந்த மாதிரி?

“அங்கே ஆஸ்பத்திரியில கொஞ்சம் நின்னு, அந்தப் புனிதமான ஜோஸ்யரைப் பார்த்து ரெண்டு வார்த்தை பேசலாம்தானே! எந்த அற்புதக் காட்சியை உள்ளங் கை டீவியில காமிச்சாலும் சரி.. இப்படித்தான் “படக் படக்குனு” பாதிலேயே குளோஸ் பண்ணிட்டு, என்னை இழுத்துக் கிட்டு வந்துடுவே! முழுசா எதையுமே பார்க்க விடறது கிடையாது!”

“இப்படித்தான் கொல்லி மலையில அகஸ்தியர் தரிசனம் கெடைச்சப்போ, அங்கேயும் இப்படித்தான் தரதரன்னு புடிச்சு இழுத்துக் கிட்டு வந்துட்டே! இப்படிப் பொசுக்கு, பொசுக்குனு எல்லாத்தையும் பாதியிலேயே விட்டுட்டு, ஒரு பாதியை மட்டும் காமிச்சா, கோவம் கோவமாத்தானே வரும்?”

சிறுவன் முணுமுணுத்தான் உள்மனதினுள் வெகு கோபமாய்!

கேட்டுப் பெறுவதை விடக் கேளாமல் வருவதே மேல்!

பெரியவர் அவனைத் தட்டிக் கொடுத்தார். “ஏண்டா மனசுக்குள்ளேயே முணுமுணுக்கறே! பாத்திரம் அறிஞ்சு பிச்சை போடணும்டா கண்ணு! உன்னை மாதிரித் தூங்கு மூஞ்சியை பஸ்ஸுலேயே விட்டுட்டு வந்திருந்தா, என்ன செஞ்சிருப்பே! உனக்கு இவ்வளவு சொன்னதே, காமிச்சதே பெரிய விஷயம்! எல்லாத்துக்கும் யோக்யதை வேணும்டா நயினா!” கலியுகத்துல, தெய்வீகத்துல எல்லாமே தானா வந்து கொட்டாது! உன்னை மாதிரி முட்டாளுக்குக் கூப்பிட்டு, கூப்பிட்டு அனுகிரகத்தை நாங்க வாரி, வாரிக் கொட்டறோம் பாரு, எங்களைச் சொல்லணும்!”

“எல்லாமே சத்குருவால வர்றதுதான், நமக்குன்னு எது, எவ்வளவு காலத்துக்குக் கிடைக்குமோ, அது, அவ்வளவு காலத்துக்குத்தான் கிடைக்கும்னு இனிமேலாச்சும் தெரிஞ்சுக்கோ! இது தெரியாம, நீ இந்த மாதிரி அகங்காரமா நெனச்சதுக்கு இன்னும் ஒரு மாசத்துக்கு எங்களை நீ பார்க்கவே முடியாது!”

அவ்வளவுதான், “இந்தா பிடி சாபம்!” என்பது போலப் பொரிந்து தள்ளிய பெரியவர், அடுத்த சந்தினுள் புகுந்து மறைந்தார்!

அவ்வளவுதான், அடுத்த ஒரு மாதத்தில் அவரை எங்கும், ஏன் கனவில் கூடச் சிறுவனால் பார்க்க முடியவில்லை! சிறுவன் ஏங்கி, ஏங்கி சாப்பாடு உள்ளே செல்லாமல் துரும்பாகி இளைத்தான்!

கண்டேன், காண வேண்டியதைக் காணாததையே!

அதன் பிறகு, தினமும் எப்போது அங்காளி கோயிலுக்குப் போனாலும், அங்கிருப்பவர்களும், “ஏம்பா, உன்னைப் பத்தித் தாம்பா இவ்வளவு நேரம் பெரியவரு கேட்டுக் கிட்டே இருந்தாரு! இப்பத்தான்... ஒரு நிமிஷத்துக்கு முன்னாடிதான் புறப்பட்டுப் போனாரு!” என்ற பதில்களே எப்போதும் கிடைத்தன!

சிறுவன் மிகவும் மனம் நொந்து விட்டான்!

அங்காளியை வெகு வேகமாக இரட்டிப்பாகச் சுற்றலானான்! குருகுலவாசத்தில் இந்த மாதிரிப் பிரிவும் பெரிய வகை தண்டனையோ?

“எல்லாரும் கடவுள் தரிசனம், கடவுள் தரிசனம்னு மனம் நெகிழ்ந்து போய் பூஜை பண்ணுவாங்க! ஆனா, இதுக்குப் பரிசா கோயில்ல சுயம்பு மூர்த்திக் கிட்டேயே இருந்து, தொட்டுப் பார்த்துப் பூஜை செய்யற பாக்யம் ஒரு பிறவியில கிடைச்சா, அதோட அருமை தெரியாம, தெனமுமே கல்லைப் பார்க்கற மாதிரி சுவாமியைப் பார்ப்பாங்க! தினசரிப் பூஜையே அலுத்துப் போயிடும்!”

“இதே மாதிரித் தாண்டா, சற்குருவும்! தன் பக்கத்திலேயே உக்கார்த்தி வச்சு, இது இப்படி, அது அப்படின்னு தொட்டுக் காட்டி பக்கத்துலேயே இருந்து நல்லாவே வழிகாட்டினாக் கூட, சத்குருவோட அருமை தெரியாமலேயே பலரும் முழிப்பாங்க!”

ஒவ்வொரு சுற்றிலும், அங்காளி கோயிலின் ஒவ்வொரு கல்லும், தூணும் பெரியவரின் இத்தகைய மொழிகளை ரீங்காரமிட்டன! சிறுவன், களைப்பினால் தட்டுத் தடுமாறி அங்காளியின் சன்னதியின் நிலைப்படி முன் சாய்ந்தான்!

இதுதான் பரிசுத்தமான அன்பு!

“எத்தனை நாளுக்குடா இந்த நடிப்பு? அங்காளி கிட்டேயே நடிக்கறியா?”

ஆம், பெரியவரின் குரல்தான் அவனை எழுப்பியது! ஆம், தலைமாட்டுக்கு மேல் அவர் நின்று கொண்டிருந்தார்!

“வாத்யாரே!” எனக் கதறிக் கொண்டே அவருடைய பாதங்களைப் பற்றினான்!

“எனக்கு இப்ப பேச நேரமில்லைடா! நாளைக்குச் சாயந்திரம் வா, பார்க்கலாம்!”

-என்று சொல்லியவாறே வாசலை நோக்கி நடையைக் கட்டினார் பெரியவர், பழைய சிறுவனாக இருந்தால் புலம்பித் தள்ளி இருப்பான்! ஆனால் ஒரு மாதமாய்க் காய்ந்த ரொட்டியான பக்குவத்தினால் சிறுவனுக்கு இப்போது அவரைத் துரத்த வேண்டும் என்ற எண்ணமே ஒரு துளியும் ஏற்படவில்லை!

“கிட்டிய வரைக்கும் போதும்!” என்பதாக வாழ்க்கையில் முதன் முதலாக, ஆறறிவுப் பகுத்தறிவு கூடிய முடிவிற்கு அவன் வந்தவுடன்,

பெரியவர் திரும்பினார்!

“பாவம், ஒரு மாசமாக ஏங்கிப் போய்ட்டே தானே! சரி வா, வா வந்து பக்கத்துல உக்காரு!” என்று சொல்லிக் கொண்டே, வழக்கமான தூணருகில் சிரித்துக் கொண்டே அமர்ந்தார் பெரியவர்!

சிறுவன் திகைத்து நின்றான்!

.... வெள்ளியங்கிரி மலையில் அமர்ந்து கொண்டு இந்த அனுபூதியை அசை போட்டவாறே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன்.

வெள்ளியங்கிரி மலையில் ஆண்டு முழுதும் பல கஷ்டங்களுக்கும் ஊடே மலையேறி, ஈசனை வழிபடுபவர்களும், அங்கேயே தங்கி யோகம், தவம் செய்யும் மனப் பக்குவம் உடையவர்களும் ஒரு சிலரே,

மாசி மாதம் தொடங்கி, சித்திரை மாதம் முடிய அடியார்கள் மலையேறிச் சென்று வர நல்ல வழிப்பாதை இங்கு அமைக்கப்படும், மற்றையக் காலங்களில் இந்த வழியில் புல், பூண்டு, ஆள்மடக்கி போன்ற நிழல் வகை மூலிகைகள் நிறைந்து, கொல்லி மலை போல, நடைவழியும் எவருக்கும் புரியாது, கொடிய மிருகங்களின் நடமாட்டமும் அப்போது அதிகமாக இருக்கும். இதுவும் இறை லீலையே!

மாசி, பங்குனி, சித்திரை ஆகிய மூன்று மாதங்களில் இறைவனை வேண்டி மலை ஏறி வரும் அடியார்களுக்கு, வன விலங்குகள், தேள், பூரான் போன்ற விஷப் பூச்சி இனங்களால் எந்த இடையூறும் வராது காத்திடச் சித்தர்கள், மகரிஷிகளின் தபோ பலன்கள் நன்கு துணை புரியும்.

மேலும் இரவு நேரமே, இதிலும் பௌர்ணமி இரவே மலையேறுதலுக்கு மிகச் சிறந்தது. ஆகவே, பௌர்ணமி நிலவும் மற்றும் குறிப்பிட்ட நட்சத்திரத் தினங்களில் இரண்டு தடிகளை எடுத்துக் கொண்டு, ஒரு தடியை ஊன்றிக் கொண்டிடுவர், ஒன்று நடையைச் சீராக்க! மற்றொன்று நடையை எளிமையாக்க!

அறியா மலையளவு!

பெரியவர் அவனை எண்ண அலைகளில் இருந்து மீட்டிட,

சிறுவன், தன்னை விட உயரமாக இருக்கும் தடியைப் பிடித்துக் கொண்டு பெரியவருடன் மலையில் ஏறலானான், அவ்வப்போது அருணாசல, திருக்கயிலாய, கேதார்நாத் அனுபூதிகள் அவனிடம் வந்து, வந்து நிறைந்தன!

“ஏன் வாத்யாரே, இந்த மலை எவ்வளவு உயரம் இருக்கும்? கண்ணுக்கு எட்டின வரை உச்சியே தெரியலையே!”

“ஆறாயிரம் அடிங்கறது மனுஷக் கணக்குடா! ஆனா தேவகணக்குன்னு ஒண்ணு இருக்கே! நீ தலையைத் தூக்கிப் பார்த்து ஒரு உச்சி தெரிஞ்சுதுன்னா அது ஒரு குன்றுன்னு அர்த்தம்!”

“இதே மாதிரி திருக்கயிலாயம் கிரிவலத்துல நெறையப் பார்த்த மாதிரி இருக்கே வாத்யாரே!”

“மாதிரி என்னடா மாதிரி, அதுவும் இதுவும் வேறயா என்ன? பல தெய்வீக விஷயங்களை என்னதான் அழுத்தமாச் சொன்னாலும், மனுஷ அறிவால புரிஞ்சுக்கறது ரொம்பக் கஷ்டம்டா ராஜா!”

நடுவில் பெரியவர் பல குகைகளைக் காட்டினார். சிலவற்றைத் திறந்தும் காட்டினார். ஒரு செங்கலளவு இடைவெளிதான்! லேசாக அதனைத் தள்ளினால், உள்ளே.....

“பளிச்சென்ற ஒளிப் பிரவாகத்தில்” நிறைய ஜடாமுடிச் சித்தர்கள், யோக நிலையில் ஆடாது அசங்காது அடங்கிக் கிடந்தனர்!

பெரியவர் டக்கென்று கல்லை இழுத்து மூடினார். செஞ்சியில் கண்ட சிவதவ லீலைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன!

இந்த்ர மாதவ மேக சக்திகள்

“இதுல மலை உச்சின்னு தனியா ஒண்ணும் கிடையாதுடா! இந்தக் குகைகள் வழியாப் போனாலும், ஒவ்வொரு திசையிலேயும் இருக்கற சில உச்சிகளுக்குப் போகலாம். அங்கே மேகங்கள் நம்ம மேலேயே பட்டுத் தவழ்ந்து போகும், இதுக்கு மேகபல ஸ்பரிசம்னு பேரு! இதனால யோக சக்திகள் நிறையக் கிடைக்கும். இந்த்ர மாதவம்னு பல யோக சக்திகள் இந்த மேக ஸ்பரிசத்துல கிடைக்கும். கையாலேயே பெரிய பாறையைப் புரட்டிடலாம்! பஞ்சைவிட லேசாவும் ஆயிடலாம். ஆனா இந்த சக்திகள் கெடைச்சதுக்கப்புறம், ஒருவன் இதை வச்சு என்ன செய்யப் போறான்கறதுதான் ரொம்ப, ரொம்ப முக்கியம்! அசுரர்களுக்கு நல்ல தபோ பலன்களா இதெல்லாம் நெறையவே கெடைச்சது! ஆனா என்ன பிரயோஜனம்! எல்லாத்தையும் தவறாப் பயன்படுத்தி, இருக்கற சக்தி எல்லாத்தையுமே இழந்துட்டாங்களே!”

அடுத்ததாக ஒரு தடாகம் வந்தது, அதில் நீர் நிறைய இருந்தது. நல்ல கமகமவென்ற மணம்!

“இதுலதாண்டா அந்தக் காலத்துல காடாறு மாசம் தவத்துக்காக ராஜாக்கள் வர்றப்போ இதுல முழுகினா இளமையாவோ, முதுமையாவோ ஆகித்தான் தன் அடையாளத்தைக் மாத்திக்கிட்டுத் தவத்துக்குப் போவாங்க! நாட்டுக்குத் திரும்பி போறப்போ அதே சங்கல்ப மந்திரம் சொல்லி, பழைய வடிவுக்கு வந்திடுவாங்க!”

“இப்பவும் இது இங்க நடக்குதா வாத்யாரே!” ஆவலை அடக்க முடியாது சிறுவன் கேட்டான்!

“இப்ப என்னடா, எப்பவுமே நடக்குதே! போன மாசம்தான் குபேரன் இந்தத் தடாகத்துல வந்து நீராடிட்டுப் போனாரு! பூலோகக்காரங்க என்னடா, தேவாதி தேவர்கள் எல்லாருமே இங்கதா வெள்ளியங்கிரிக்கு முதல் நுழைவு வழி! குபேரன் நீராடின உடனேயே யார் முதல்ல நீராடறங்களோ, அவங்க கோடீஸ்வரன் ஆயிடுவாங்க!” என்று சொல்லிக் கொண்டே கண்ணைச் சிமிட்டினார் பெரியவர்!

“ஆனா.........!” சற்றே பெரியவர் நிறுத்திடவே,

“அது சரி, குபேரன் வந்ததுக்கப்புறம் யாரும் இந்த அடர்ந்த காட்டுப் பக்கம் வந்ததாத் தெரியலையே! நம்மன்னா இங்க இப்ப குளிச்சுப் பார்க்கலாமாடா கண்ணு?” அவருடைய குறும்புச் சிரிப்புடன் இந்த வாக்கியங்கள் மலரவே, சிறுவன் உஷாரானான்!

கூகூர் ஸ்ரீகுஹேஸ்வரர்

ஸ்ரீகல்யாண சுந்தரி என்ற பெயரில் அம்பாள் அருள்வது மிக மிக அரிதே! கலியுலகில், திருமண தோஷங்கள் அதிகமாகி, குறிப்பாக, கன்னிப் பெண்கள் 35 வயது ஆகியும் திருமணமாகாது வேதனையுடன் வாழும் நிலைமை ஏற்படும் என்பதால்தான், இக்குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் சித்தர்களின், மஹரிஷிகளின் பிரார்த்தனைகளுக்கு ஏற்ப, ஸ்ரீகல்யாண சுந்தரர், ஸ்ரீகல்யாண சுந்தரி என்ற அரிய நாமங்களைத் தாங்கி இறை மூர்த்திகள் அருள்கின்றனர். “கல்யாண குணங்கள்” என்பது திருமணத்தை மட்டும் குறிப்பது அல்ல! தெய்வ மூர்த்திகளின் விசேஷமான அருள்பாலிப்பு சக்திகளைக் “கல்யாண குணங்கள்” என உரைப்பர்.

ஸ்ரீகல்யாணசுந்தரி கூகூர்

எனவே, “கல்யாண குணங்கள்” என்பது இறை மூர்த்திகளுக்கு உரித்தான சாசுவதமான, மங்களகரமான, சௌபாக்ய அனுகிரக சக்திகள் நிறைந்த அவதார சக்திகளாகும். ஜீவன்களுக்கே “குணங்களால்” வரும் குணாதிசயங்கள் பொருந்தும்.. கல்யாண குணம் எனில் திருமணம் என்று மட்டும் பொருளல்ல, “நித்ய கல்யாணப் பெருமாள்” என்ற பெயரிலேயே பெருமாளுக்குத் தினமுமே திருக்கல்யாண உற்சவங்கள் பொங்கிப் பூரித்து நிகழ்ந்த தலங்களுள் மிக மிக அரிதாக இரண்டு உண்டு.

ஒன்று சென்னைக்கு அருகில் திருவிடந்தையில் உள்ள – 108 வைணவத் தலங்களுள் ஒன்றாகத் துலங்கும் – ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள் ஆலயம் (ஸ்ரீவராஹ மூர்த்தி)!

மற்றொன்று பலரும் அறியாததாக, தினசரி பூஜைகளுக்கே வசதியற்றதாக இருக்கும் நேமம் ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள் ஆலயம். சென்னை – பூந்தமல்லி- திருமழிசை – வெள்ளவேடு அடுத்துள்ள நேமம் திருத்தலத்தில் ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீஆவுண்டீஸ்வரர் சிவன் கோயில் எதிரே செல்லும் பாதையில், ஒரு கி.மீ தொலைவில் உள்ளதே நேமம் ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள் ஆலயம் ஆகும். இனியேனும் பக்த கோடிகள் இந்தப் பழமையான ஆலயத்தின் மகிமைகளை உணர்ந்து, இங்கு வழிபட்டு எத்தகைய திருமண கோஷங்களுக்கும் தக்க நிவர்த்திகளைப் பெற்றிடுவார்களாக! இதன் மூலம் தங்களுடைய பிள்ளைகள், பெண்களுக்குத் தக்க வயதில் உத்தம திருமண வாழ்க்கை பாக்யத்தை அளிப்பார்களாக! இல்லற வாழ்வில் மாமனார், மாமியார், நாத்தனார், வரதட்சிணை, வேலைக்காரி போல் நடத்துதல் போன்ற துன்பங்கள் இருப்பின் இவற்றையும் நிவர்த்தி செய்து, நல்ல திருமண வாழ்க்கையை அமைத்துத் தர உதவும் தலம்.

இதே வகையில்தான், லால்குடி அருகே கொள்ளிடக் கரையில் கூகூரில் அமைந்துள்ள ஸ்ரீகல்யாணி சுந்தரி சமேத ஸ்ரீகுஹேஸ்வரர் சிவாலயமும் எத்தகைய கடுமையான தோஷங்களையும் நிவர்த்தி செய்து, நல்வகையிலான திருமண பாக்யத்தையும், சாந்தமான திருமண வாழ்க்கையையும் பெற்றுத் தருவதாகும்.

திருமண தோஷங்கள் இருந்தால்தான் இத்தகைய அபூர்வமான ஆலயங்களுக்குச் செல்தல் என்றில்லாது, பெண்கள் பருவத்திற்கு வருகின்ற வயதில் இருந்தாவது (சிறுவயதிலேயே தொடங்குவது சிறப்புடையது), வருடந்தோறும் இத்தலங்களில் குறிப்பாக, துவாதசி, அனுஷம், சுவாதி, ரோகிணி நாட்களில் வழிபட்டு வருதலால், தக்க வயதில் நல்ல வரன்களுடன், நல்வகையான திருமண வாழ்க்கை அமைய உதவிடும்.

அதர்வண வேத சக்திகள் நிறைந்த தலம்!

ராமாயண காலத்தில் இருந்தே துலங்கும் மிகவும் பழமையான தலமே கூகூர், மாத சிவராத்திரி தோறும் மஹரிஷிகளால் வழிபடப் பெற்ற தலங்களுள் கூகூர் ஆலயமும் ஒன்றாகும். இங்குதாம் ஸ்ரீராமரிடமிருந்து பாதரட்சைகளைத் தம்முடைய தினசரி பூஜைக்காக குகன் பெற்றார்.

பண்டையக் காலங்களில் நவநாத சித்தர்கள், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கங்களை அளித்திட, அந்தப் புராண பாத்திரங்களையே இறையருளால் நேரில் தரிசித்து, வரவழைத்து விளக்கங்களைப் பெற்ற தலங்களுள் அதர்வண வேத சக்திகள் நிறைந்த கூகூர் தலமும் ஒன்றாகும். இதற்காகவே எந்தத் தெய்வ மூர்த்தியையும் எத்தலத்திலும், எங்கும், எப்போதும் தரிசித்து உரையாடும் விசேஷமான நல்வரங்களைப் பூண்டவர்களே நவநாதச் சித்தர்கள் ஆவர்.

ஸ்ரீகுஹேஸ்வரர் கூகூர்

இவ்வகையிலும், ஸ்ரீராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்னர், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா போன்ற பல தெய்வ மூர்த்திகளும் மற்றும் புராண விளக்கங்களைப் பெற விழைந்த சித்தர்களும், மகரிஷிகளும் நவநாத சித்தர்களை நேரில் வந்து தரிசித்த, வழிபட்ட அரும் பெரும் தலமான கூகூரின் மகிமைகளை இவ்வுலகம் அறியாது இருக்கின்றது.

வானில் மின்சக்தித் தலம்!

அபூர்வமான வானியல் மின்சார சக்திகள் நிறைந்த கொள்ளிடக் கரைச் சிவத்தலம்., பண்டையக் காலத்தில் பிரளய சிருஷ்டிக்காக வானியல் மின்சக்திகளை அளித்தத் தலம்., எனவே, மின்சக்திகள் நிறைந்த தர்பையில் பூஜிப்பது விசேஷமானது.

மகாப் பிரளயத்திற்கு முன் சர்வேஸ்வரன் ஆழ்ந்த ஞான யோகத்தில் அமர்ந்த போது, கிராத மூர்த்தியாக அவருடைய சிவாவதாரமாக, சிருஷ்டிக்காகத் தோன்ற வேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால், சர்வேஸ்வரனே, ஞான யோகத்தில் அமர்ந்திட்டால் எவர்தாம் முன் சென்று நிற்க முடியும்? எனவே, அவர் முன் மத்ஸ்ய மூர்த்தியாகச் சாந்த குணங்களுடன் தங்கக் கவசம் போல் பிரகாசிக்கும் பெருமாள் தோன்றிட, அருகில் காமதேனுவுடன், தன் நான்கு காமதேனு புத்ரிகளுடன், சகலவிதமான கல்யாண குணங்களுடன் ஸ்ரீகல்யாண சுந்தரியாய் அம்பிகை ஆங்கே தோன்றி, மெல்லிய குரலில், “கூ, கூ” என வேத நாதங்களை, கீர்த்தனங்களை ஓதிடவே, இறைவன் ஞான யோகத்தில் இருந்து மீண்டு, சிருஷ்டி பரிபாலனத்திற்குப் பிரம்மாவிற்குத் துணை புரிந்தார்.

“கூவி அழைத்தால் குகன் வருவான்!” என்பது இதில் பிறந்த ஈஸ்வர வாக்கியமாகும். எனவே, கூவி அழைத்தல் என்பது கல்யாண சுந்தரியால் இறையருளால் ஞான யோகத்திலிருந்து மீண்ட சர்வேஸ்வரனையே கூவி அழைத்த அம்பிகைக்கு, அவதாரிகை மாண்பை எடுத்தளித்தத் தலமே கூகூர் ஆகும்.

மீனவர்கட்கு அருளும் தலம்

மத்ஸ்ய சக்திகள் நிறைந்த தலமாதலால் பண்டையக் காலத்தில் பலவிதமான மீன்கள் நிறைந்த தடாகங்கள் இங்கு நிறையவே இருந்தன. மீன் பிடிப்புத் துறை மற்றும் கடல் துறையைச் சார்ந்தோர்களுக்கும் அருள்பாலிக்கும் தலம். எல்லாவற்றையும் விட வரும் முன் காத்தளிக்கும் வரவாரி அர மூர்த்தியே கூகூர் ஸ்ரீகுஹேஸ்வரர் ஆவார். மந்தபுத்தியை போக்கும் தலம்!

“கூகை” என்பது அறிவு மந்தமாக உள்ள ஆந்தை போன்ற பறவையைக் குறிக்கும். ஒரு யுகத்தில் அனைத்துப் பறவை இனங்களும், கூகைப் பறவைக் குலத்தை “அறிவில்லாதவை” என ஏசி ஒதுக்கி வைத்தமையால், கூகை வகைப் பறவைகள் பலவும் ஒன்று கூடி இத்தலத்தில் நெடுநாள் வழிபட்டு வந்தன.

அப்போது இத்தலத்தில் வானில் விண்ணதிர அதர்வண தேவ கோஷங்கள், அதர்வண மந்திர ஹோமப் புகை விண்ணில் எழுந்து நிரவியமையால், கூகைப் பறவைகளும் இயற்கையாகவே ஞானம் பெறும் நல்மார்கங்களைப் பெற்றார்கள்.

“குக்குக் குக” என்ற வகையிலான மிகவும் கடினமான தமிழ் பீஜாட்சர வேத சக்திகள் பொங்கி பூரிக்கும் தலம். எனவே, இங்கு “குக்குக் குகு குகு” என்ற வகையில் அமையும் “குகார ஒலி வகைத்” திருப்புகழ் மற்றும் இதர பாடல்களையும் ஓதி வருதல், நல்ல அறிவு விருத்தியை, கல்வி ஞானத்தைப் பெற்றுத் தரும்.

எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது, நாம் உண்ணும் உணவிற்கும், படிப்பிற்கும் இடையே உள்ள் “வித்யான்னம்பல” அம்சங்களை உரைக்கும் தலம் இதுவாகும்.

இதனை இத்தலத்தில் வித்யாரண்ய மகரிஷி உணர்வித்தார், அதிக சாப்பாட்டினால் உடல் பருமனோடு, புத்தியும் மங்கும் என்ற தன்மைகளை மாற்றி உடல், மனம், உள்ளம், மூளை, புத்தி ஆகிய ஐந்தும் சிறப்படையும் வண்ணம் அன்ன சக்திகள் நிறைந்த தலம். மிகவும் குண்டாக இருப்பவர்கள் இங்கு அடிப்பிரதட்சிணம், இயன்றால் சிறிது தூரமாவது அங்கப் பிரதட்சிணம் செய்து வந்தால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல பலன்களைப் பெறலாம்.

அமாவாசைச் சித்தர் வழிபட்ட தலங்களுள் இதுவும் ஒன்று., இவர் உயரே ஏறி அமர்ந்து தவம் புரிந்த ஒரு சில மரங்களும் இப்பகுதியில் இன்றும் உண்டு., கூகூரில் 3.5.2005 ஞாயிற்றுக் கிழமை அன்று இங்கு நிகழ இருக்கும் சந்தனக் காப்பு இடும் வைபவத்தில் (விளக்கங்கள் சென்ற இதழில்) பங்கு பெற்றுத் திருமண தோஷங்கள், அறிவை மங்க வைக்கும் தோஷங்களுக்குத் தீர்வுகளைப் பெறுவீர்களாக!

மணி விசில் சித்தர்

“முகவீணை” என்றால் என்ன தெரியுமா? நாக்கை மடித்தும், உதடுகளைக் குவித்தும் எழுப்பும் புனிதமான விசில் நாத ஒலிக்கே “முகவீணை” என்று பெயர். ஆனால், பண்டையக் காலத்தில் கலியுகம் போல, கடவுள் கொடுத்துள்ள அற்புதமான “நா நாத” இசைப் படலத்தை, இவ்வகை “முகவீணை ஒலியை” , “விசிலால் எழும் ஒலியை”, எவரும் தவறாகப் பயன்படுத்தவில்லை!

ஆம் நாக்கை, உதடுகளை மடித்துப் புனிதமாக எழுப்பும் ஒலி இசையையே மிகவும் பவித்ரமாக “முகவீணை” என ஆன்மீகப் பண்புடன் நம் மூதாதையர்கள் விளித்தனர்! முற்காலத்தில் “நா(வால்ஆன) விசிலும்”, “பித்தளை விசிலும்”, “மர விசிலும்”, இலையைச் சுருட்டி அமையும் “தள (இலை) விசிலும்”, ஆலய உற்சவப் பெருங் கூட்டம், வனவாச யோகம் போன்ற பல நற்காரியங்களில், பிறருக்கு சமிக்ஞை கொடுத்து நல்வழி காட்டும் முகத்தானும், மற்றும் பல நல்முறைகளுக்குமாகவும், மன்னர்களுக்கான வனவாச, போர்க் கால சங்கேத மொழியாகவும் அமைந்து பயன்பட்டது.

ஆனால் தற்காலச் சமுதாயத்திலோ அவலமாகவும், ஆபாசமாகவும் விசில் ஒலியைப் பயன்படுத்துவது வேதனை தருவதாகும். சினிமாத் தியேட்டர்கள், கல்லூரிகள், கடற்கரைகள், சுற்றுலா மற்றும் கேளிக்கைத் தலங்களில் அவலமான, ஆபாசத்தைத் தழுவி ஊறி விட்ட தவறான எண்ணங்களுடன் “விசிலடிக்கும்” சாபக்கேடான விஷயத்திலிருந்து சமுதாயத்தை மீட்டல் மிகவும் கடினமே!

பலரும் Whistle என்பதை ஆங்கிலச் சொல் என்றே எண்ணுகின்றனர்., ஆங்கிலத்திற்கே பல மொழிகளில் இருந்து பிறழ்ந்து வந்ததாகும். விசில் என்பது பழந் தமிழ்ச் சொல்லின் திரிபே ஆகும். பரிசில், விரிசல், பரிசம் என்பதாக, விசில் என்பதும் ஆன்மப் பூர்வமானத் தமிழ்ச் சொல்லே ஆகும். உண்மையில் விசில் என்பதற்குத் தோஷமில்லாத “சுருள்துறைக் காற்று” என்று அர்த்தமாகும். அக்காலத்தில் தமிழ் மன்னர்கள், போர்த் துறையிலும், உளவுத் துறையிலும், மருத்துவ அவசர சிகிச்சைப் பிரிவிலும், நாக்கை மடித்து அடிக்கும் பல்வகை விசில் வகை சப்தகங்களையே “நா வகை நா முத்திரைகளாகப்” பகுத்து வைத்திருந்தனர். இதற்காகவே விசிலடிப்பதில் பல்லாண்டுகள் பயிற்சிகள் பெற்ற யோகத் துறை வீரர்கள் இருந்தனர்.

“பாளநாத விசில்” என்பது ஒரு மைல் தூரத்திற்கு மேல் சப்தம் கேட்கக் கூடியது. மலைப் பாங்கான பகுதிகளில் எதிரொலிக்கும் தன்மை அதிகம் ஆதலால் “கணிம விசில்” என்ற ஒலிப்பான் முறை பயன்படுத்தப் பெறும். இவை யாவும் சமுதாயப் பணிகளில், ஆன்மீக ரீதியாகவும் பயன்படுத்தப்பட்டன. தற்போதைய காலத்தில் உள்ளது போல கேலிக் கூத்திற்காக அக்காலத்தில் விசிலடிப்பது கிடையாது.

குகைப் பகுதிகளில் தெய்வ மூர்த்திகளின் சிலைகள், ஐஸ்வர்யங்களைத் தேடிச் செல்பவர்களும், அடர்ந்த காட்டில் தவம் புரியச் செல்பவர்களும் “கணிம விசில்” என்ற ஒலியோக முறையைப் பயன்படுத்துவர்.

மேலும், “உடுக்கு அடித்தலில்” ஒரு வகையாக, “விசில் சப்தம்” மூலமாக யோக சக்திகளை நிரவுவதும், தேவதைகளை அழைப்பதும், தேவதைகளை வழியனுப்புவதும் உண்டு, பல ஆண்டுகள் முன் வரை, திருஅண்ணாமலையில் நம் ஆஸ்ரம அன்னதான வைபவ நிறைவு நாளில் பாத்திரங்கள், அன்னதான திரவியங்களை வைத்து, அனைவரும் சுற்றி வந்திட, ஆஸ்ரமப் பெரியோர்களின் “அருட்துணை கரந்த விசிலொலி” யோக முறையில் விசில் ஒலியைத் தோற்றுவித்து, அன்னதான அடுப்பு, விறகு, பாத்திரங்கள், திரவியங்கள் மற்றும் அடியார்களின் உடலில் வந்தமர்ந்து அன்னதானக் கைங்கர்யங்களுக்குத் துணை புரிந்த பித்ரு மூர்த்திகள், பித்ரு தேவதைகள், பித்ரு பத்னிகள், அன்னதான தேவதைகள் பலருக்கும் ஒலி வகை நன்றி தெரிவித்து, அவர்கள் பூவுலகில் இருந்து தத்தம் லோகங்களுக்குச் செல்வதற்காக அன்புடன் அளிக்கப் பெறும் ஒலிப்பூர்வ யோக நாள வழிபாடும் நடைபெற்றது.

ஆனால், இதனைத் தற்காலத்தில் பலரும் தவறாகப் புரிந்து கொள்வதாலும், இதன் தாத்பர்யங்களை அறிந்துணர்வோர் அருகி வருவதாலும் பல பெருங் கோயில்களிலும், ஆஸ்ரமங்களிலும் இப்பண்டைய காலத்து “முகநாத ஒளிவழிப் பூஜை” மறைந்து வருகிறது.

கிராமப் புறங்களில் ஆலயத் திருவிழாக்களில் இன்றும் தாரை, முழவு, தப்பட்டை, பேரிகை, ஜெயங்கொண்டம் போன்ற பண்டைய வாத்யக் கருவிகளுடன் “நா நாதமாக” விசிலொளி எழுப்பி வான் தேவதைகளை, வானதேவப் பட்சிகளை அழைக்கும் தேவமுறை நிலவி வருகிறது.

நாக்கை மடித்து எழுப்பும் வாயுப் பூர்வ விசில் சப்தங்களில் ஆயிரத்தெட்டு வகைகளுக்கு மேல் உண்டு. அடர்ந்த காட்டில் எந்தெந்த இடத்தில் எத்தகைய விலங்கினங்கள், தாவரங்கள் அமைந்துள்ளன என்பதைப் பின் வருவோர்க்கு உணர்த்திட முன் செல்வோர் பலவிதமான விசில் சப்தங்களைக் கையாண்டனர். இவ்வாறு விசில் சப்தத்தின் மஹிமைகள் பலப் பலவாம்.

செவ்வாய் கிரகத்திலும் ப்ருத்வி, நீர், வாயு, காற்று, அக்னி ஆகிய ஐந்து மண்டலங்களும் உண்டு. அதாவது ஒவ்வொரு கிரகத்திலும் பஞ்ச பூத சக்தி மண்டலங்கள் உண்டு.

இவற்றோடு தேக சுத்தி, பூத சுத்தி ஆகிய இரண்டையும் சேர்த்து ஏழு கிரக வழிபாடாக ஜீவன்களுக்கு வந்து அமைந்தது. மேலும் யுகாதி ஜீவ வாழ்க்கை நிலைகள் மாற, மாற, பக்தி, சத்தியம், நேர்மை நிலைகளும் சமுதாயத்தில் மாறலாயின., எனவே, ப்ருத்வி, நீர், வாயு, காற்று, அக்னி, தேக சுத்தி, பூத சுத்தியோடு பித்ரு பாவனம், ஞான பாவனமும் கூடிட, இதனால் ஜீவ சக்திகளுக்கு உரியனவாக ராகு, கேது வழிபாடுகளும் சேர்ந்து நவகிரக வழிபாடுகளாக ஆயின.

நம் பூமியைப் போன்று எண்ணற்ற பூமிகள் உள்ளன. அவற்றில் த்வாதச (12) கிரகங்கள், ஷோடச கிரக வழிபாடுகள் (16 கிரகங்கள்) பிரசித்தி பெற்றுள்ளன. இவை யாவும் நம் பூமியிலும் மலர்ந்து 24, 36, 64 .... கிரகங்களாகவும், கலியுக இறுதியில் 108 கிரக வழிபாடுகளாகவும் மேன்மை பெறும். எனவே, பண்டைய முறையில் ஏழு கிரக வழிபாடுகள் தான் உள்ளன என்றெல்லாம் குழப்பிக் கொள்ளாது, தேவாரக் குரவர்கள் பாடிய தேவாரப் பதிகங்களில் நமக்கு இப்போது தேவையான சில மட்டுமே கிடைத்துள்ளன போல, வராகமிகிரர், ஆரியபட்டர் போன்றோரின் அற்புதமான வானியல் சூத்திரத் துதிகள் தக்க தருணத்தில் கலியுகத்தில் வெளி வரும்.

“மணி விசில் சித்தர்” மேற்கண்ட வகையில் செவ்வாய் கிரகத்தில் நாம் காணும் பஞ்ச பூதாதி மண்டலங்களில் இருந்து தோன்றிய சித்தர் ஆவார். ஆனால், ஜடாமுடி, கமண்டலம் சகிதமாகவோ, நீள் நெடுந்தாடி மேனி, நின்று திருநீறு பூசியவராய் நாம் எதிர்பார்க்கும் வகையில் அல்லாது, சாதாரணமாகப் புவியில் உலா வரும் உத்தமச் சித்தர்களும் உண்டு. இவர்கள் தங்களை எளிதில் வெளிக் காட்டிக் கொள்வதில்லை!

மணி விசில் சித்தர் காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பாமர மனிதனாகவே வாழ்ந்து உத்தமச் சித்தர்களின் சிவ உய்வு நிலைகளை உணர்வித்த, என்றும் வாழும் ஏகாந்த ஜோதிச் சித்தர்களுள் ஒருவராவார், மங்காத மங்கள லோகச் சித்தர் இவர். சுந்தர சிவம் என்பது இவருடைய குருவின் பெயர். பல பீடங்களில் குருவின் பெயரையே சிஷ்யப் பீடங்களும் தாங்கி வருவர்.

பல ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் காலத்து நீதிபதிகளுக்குப் “பங்க்கா” வீசும் பணி புரிந்த சித்தர் ஒருவர், சமீப காலம் வரைச் சென்னைப் பகுதியில் அருளமுதும் ஊட்டி வந்தார்.

“பங்க்கா” என்பது மேல் கூரைத் தள நீள சதுர வடிவிலான கம்பள விசிறி ஆகும். நாள் முழுதும் கைகள் அயரா வண்ணம் பலரும் வியக்கும் வண்ணம் பணி புரிந்த “பங்க்காச் சித்தர்” என்பவரைப் பற்றி இன்றைய முதியோர்கள் பலரும் அறிவர். நீதி ஒளி சிறக்க வேண்டிய வழக்கு மன்றத்தில் பகைமை, விரோதம், குரோதம் காரணமாகக் கொட்டிக் கிடக்கும் கர்ம வினைகளைக் களைந்து கவினொளி பாய்ச்சிய காரண மண்டலச் சித்தரே பங்க்காச் சித்தராவார். புனிதமான வழக்கறிஞர், நீதிபதித் தொழில்களில் உள்ளோர் தினமும் சத்யநாராயணப் பூஜைகளை ஆற்றி இவற்றிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் வழிபட வேண்டிய சிவத் தலங்களுள் ஒன்றே திருச்சி அருகே உள்ள திருவாசி ஆகும். இங்கு சிவாலயத்தில் உள்ள பேச்சியம்மனை இவர்கள் வழிபட்டு வருதல் சிறப்புடையது. வாக்குக் குற்றங்களை, வாக்குத் தோஷங்களைத் தீர்க்க வல்ல மூர்த்தி!

ஸ்ரீமாற்றுரை வாதீஸ்வரர் சிவாலயம் திருவாசி

மணி விசில் சித்தர் உத்தமப் புருஷராய்க் காவல் துறையில் பணிபுரிந்த காலத்தில் கன்னி மாடக் கள்ளன் என்ற பெரும் கொள்ளைக்காரன் தென்தமிழ் நாட்டுப் பகுதியில் தினமும் பலரை வதைத்துக் கொள்ளையடித்து எவராலும் பிடிக்க முடியாத பெரும் கொள்ளைக்காரனாக இருந்தான். ஜமீன் முறை ஆட்சி நிலவிய காலமாதலால், அக்காலத்தில் ஜமீன்தார்களும், மிராசுதார்களும், குறுநில மன்னர்களும் இவனைக் கண்டு அஞ்சுகின்ற அளவிற்குப் பக்காத் திருடனாக இருந்தான். காவல் துறைக்கே சவாலாய் விளங்கியமையால் “மணி விசில் சித்தர்” தம் குருவிடம் இக்கொள்ளைக்காரனைப் பிடித்துத் திருத்த விரும்புவதாக உரைத்தார்.

“நீயே உன் சத்தியத்தால் பலரையும் கவர்ந்த கள்ளனே! நீயா கன்னி மாடக் கள்ளனைப் பிடிக்கப் போகிறாய்? எவர் எவரைத் திருத்த வேண்டும் என்ற நியதி உண்டு. நீ அவனைப் பிடித்தால், அந்த விநாடியில் இருந்து உலக பந்தத்தை விட்டு விடுகிறாயா? அப்படிச் செய்வதானால், நீ இந்தக் காரியத்தில் இறங்கலாம்!” என்று அருளாணை பிறந்தது.

மணி விசில் சித்தர் தம்முடன் துணைக்குச் சிலரையும் சேர்த்திட்டாலும், அக்கள்ளன் கொலைகார வெறி உடையவன் ஆதலால், தம்முடைய துணையாளர் எவருடைய உயிருக்கும் பங்கம் வரலாகாது என்பதால், அவர் அந்தக் கொள்ளைக்காரன் பகுதியில் தனித்தே குதிரையில் சென்றார்.

நாகங்களும், கொடிய விலங்குகளும் நடமாடும் இடத்தில் எவரும் வர மாட்டார்கள் என்று அந்தக் கள்ளன் எண்ணிப் பதுங்கிய வன வளாகப் பகுதியில் திடீரென்று குதிரையில் வந்திறங்கிய மணி விசில் சித்தர் அவனை நேருக்கு நேர் சந்தித்து அவனைச் சரணடைந்து திருந்தி வாழுமாறு உரக்கக் குரல் கொடுத்தார். அவருடைய மன, உடல் உறுதியைக் கண்டு திகைத்த அவன் சற்றும் மனசாட்சி இல்லாது, துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுட ஆரம்பித்தான். அவரும் ஆங்காங்கே புதர்களில் புரண்டு சமாளித்தார். இறுதியில் ஒரே பாய்ச்சலில் அவனைப் பிடித்தார். அவன் உடலை உதறித் திமிறுகையில் கையை உடைத்துக் கொண்டான்.

எல்லாம் முடிந்தது என அவர் எண்ணுகையில், இறுதி நேரத்தில் அவனுடைய குதிரை வந்து விடவே, கை உடைந்த நிலையிலும், அவரை உதறித் தள்ளிப் புதருக்குள் சாய்த்து விட்டுத் திடீரென்று பாய்ந்து, ஒற்றைக் கையால் குதிரையைப் பிடித்துக் கொண்டு அப்போதைக்கு அவ்விடத்தில் இருந்து தப்பித்தான்.

தன் வாழ்க்கையில் ஒரு போதும் விசிலை ஊத வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படாது சத்திய நெறிச் செம்மலாய் வாழ்ந்த அவர், தன் விசிலை எடுத்து நெடுந் தொலைவு ஊதியவாறே அவனைத் துரத்தி ஓரிடத்தில் குறுக்காக மடக்கினார், நேருக்கு நேர் ஆயுதமின்றி அவர் வந்ததுடன், அவனை விடுத்துக் குதிரையிடமே பேசலானார். இதையெல்லாம் கண்டு அவன் வாயடைத்துப் போய், அவரிடம் மீண்டும் சிக்கினான். இதற்குள், வன எல்லையில் இருந்த அவருடைய துணையாளர்களும் விசில் சப்தம் கேட்டு விரைந்து, வந்திடவே ஊர் மக்களும் திரண்டு விட்டனர்.

ஆனால், தன் குருவிற்கு அளித்த வாக்குறுதியின்படி, கொள்ளையன் பிடிபட்டவுடன் ஆங்கே தன் உடைகள் அனைத்தையும் அந்த நொடி நேரத்திலேயே களைந்து விட்டுக் கோவணந் தரித்த அவர், திருந்தி வாழும்படி கொள்ளையனிடம் அனைவரெதிரிலும் மீண்டும் புத்திமதிகள் கூறி, வெகு விரைவாக நடக்கலானார். இதனை அதிசயத்துடன் பார்த்த ஊர் மக்கள், பல்லாண்டுகளாகத் தங்களை வதைத்து வந்த பெரிய கொள்ளைக்காரனிடமிருந்து தங்களைக் காப்பாற்றிய அவருடைய கால்களில் நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்தனர்.

ஆனால் இதனைக் கண்டு கொள்ளாது விரைவாக நடக்கலான அவருக்கு, இதற்குப் பிறகு, இந்த உலகில் என்ன நடந்தது என்றே தெரியாது.

இடுப்பில் கோவணம் மட்டும் அணிந்து விசிலையும் இடுப்புக் கயிற்றில் கட்டிக் கொண்டு அவருடைய சரீரம் அருணாசலப் புண்ணிய பூமியை நோக்கி நடக்கலாயிற்று. நீர் கூட அருந்தாது ஒரு வாரத்திற்கு மேல் நடந்த அவர் அருணாசலமாம் திருஅண்ணாமலையை அடைந்த பிறகு அருணாசலை எல்லையை விட்டு வெளிவரவில்லை! எவரும் அவருடைய வரலாற்றை அறியவும் இல்லை!

பன்னெடுங்காலம் கோவணாண்டியாகவே தினமும் அருணாசலத்தைக் கிரிவலம் வந்து கொண்டிருந்தார். தேவையான போது மட்டும் விசிலை எடுத்து வித விதமான சப்தங்களில் ஊதுவார். உடனே வானிலிருந்து நூற்றுக்கணக்கான விதவிதமான வண்ணப் பறவைகள் வந்து அண்ணாமலையை வட்டமடித்துச் செல்லும். இதன் பின்னரே நெடுங்காலத்திற்குப் பிறகு மணி விசில் சித்தர் என்று பக்தர்களால் அழைக்கப் பெற்றார்!

சிறிது, சிறிதாக அவருடைய மஹிமைகள் பலருக்கும் புலனாயின, தினமுமே அவர் அண்ணாமலையைக் கிரிவலம் வந்திட்டாலும், மாத சிவராத்திரியிலும், பௌர்ணமியிலுமே பலராலும் அவரைத் தரிசிக்க முடிந்தது. அவரைத் தரிசிப்பதற்கென்றே திருஅண்ணாமலையில் கிரிவலம் வருவோரின் எண்ணிக்கை நாளடைவில் ஆயிரக்கணக்காகப் பெருகியது. இத்தகைய பல அண்ணாமலை வாழ்ச் சித்தர்களின் மகத்துவங்களைப் பலரும் அறியார். தினமுமே சித்தர்களின் போக்குவரத்துகள் நிறைந்த சித்தாதி சித்தர் பூமியான திருஅண்ணாமலையில், மக்களுக்குப் புலப்படும் வண்ணமோ, அறியா வண்ணமோ, எப்போதும் ஒரு சித்தராவது, மஹானாவது பூவுடலில் இத்திருத்தலத்தில் வாழ்ந்து வருவர் என்பது நித்திய சத்தியமே!

காதால் கேட்பதெல்லாம் அருணாசல மணி ஒலியே!

“காதால் கேட்பதெல்லாம் அருணாசல மணி ஒலியே! எம் அண்ணாமலையானைப் பல திசைகளிலும் பார், அவரைக் கேள், அவரிடமே பேசு!” என்பதும் மணிவிசில் சித்தரின் அருள் வாக்கியங்களுள் ஒன்றாயிற்று!

கோவணத்தில் விசிலை மாட்டி வைத்துக் கொண்டு அவ்வப்போது பல அருட் காரணங்களுக்காக ஊதி வந்து, “மணி விசில் சித்தர்” என்று மக்களால் போற்றப் பெற்றுக் காரணப் பெயரைப் பூண்ட சித்தர்பிரான், இருநூறு ஆண்டுகளுக்கு மேல் மானுட சரீரந் தாங்கி வாழ்ந்து, பல்லாயிரக்கணக்கானோர்க்கு, விசில் ஊதி எழுப்பிய மணியான, அதீதமான பீஜாட்சர சப்த நல்வரங்களால் அருளமுது கூட்டித் தந்தார்.

குறிப்பாக, காது நோய்களால் வருந்துவோர்க்கு இவருடைய மணி விசில் சப்தமானது அருமருந்தாய் அமைந்தது, பலவிதமான காது நோய்களால் வாடியோர்க்கும், இவருடைய மணி விசில் சப்தமே அவர்களுடைய வாழ்க்கையில் கேட்கின்ற முதல் அமுத ஒலியாக அமைந்து நல்வாழ்க்கையைப் பெற்றுத் தந்த்து.

ஒரு முறை, பிறப்பிலிருந்தே காது கேளாத ஒருவர், மணி விசில் சித்தரின் மகிமையை அறிந்து, நெடுந்தொலைவுப் பிரயாணம் செய்து திருஅண்ணாமலைக்கு வந்தார். இங்கு அவர் முதன் முதலில் சித்தரைத் தரிசித்த போது, அவரோ வானில் வட்டமிட்டுக் காட்டி, “அண்ணாமலையை வலம் வா!” என்று சொல்லாமல் சொல்லி அருளுரை தந்தார். அவரும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் மூன்றரை ஆண்டுகளுக்கு இடைவிடாது அருணாசலத்தைத் தினமுமே கிரிவலம்  வந்திட்டார்.

ஒரு நாள் மாத சிவராத்திரியில், நல்ல இருட்டில் அவர் மண் சாலை நடுவில்....

சிவராத்திரி என்பதால், நாள் முழுதும் தொடர்ந்து கிரிவலம் வந்த களைப்பில் தட்டுத் தடுமாறி அவர் நடந்து வந்து கொண்டிருந்த போது....

“இருள்தானே, சாலையில் யார் இருக்கப் போகிறார்கள்?” – என்ற நினைப்பில் வந்து கொண்டு இருந்தார். அப்போது நான்கு குதிரைகள் பூட்டியதான மிகப் பெரிய வில் வண்டியில் வெகு வேகமாய் ஜமீன்தார் ஒருவர் விரைந்து வந்து கொண்டிருந்தார். வண்டியை ஓட்டிய சாரதியோ சர்வ அலட்சியமாக வில் வண்டியைச் செலுத்திட, குதிரைகள் தலைதெறிக்க ஓடி, வண்டியை இழுத்துக் கொண்டு விரைந்தன.

சிவராத்திரி என்பதால், கும்மிருட்டு வேறு! இருளின் காரணமாக, அப்போது சாலையின் நடுவில் களைப்பு காரணமாகத் தட்டுத் தடுமாறிக் கிரிவலம் சென்று கொண்டிருந்த அப்பிறவிச் செவிடரான மனிதரை, வண்டியிலிருந்த எவருமே பார்க்க முடியவில்லை.

குதிரைகள் பூட்டிய வண்டியோ வெகு வேகமாய் அவரை நெருங்கிக் கொண்டிருந்தது.

“அபயநாத போத யோகம்”

பின்னால்.. நெடுந் தொலைவில், எவரும் அறியா வண்ணம் நள்ளிருளில், கிரிவலம் வந்து கொண்டிருந்த விசில் மணிச் சித்தர் வெகு வேகமாக விசிலை எடுத்து ஊதிடவே.... அது அருணாசலத்தைச் சுற்றியே விண்ணதிர ஒலித்திட, அனைத்துக் கிராம மக்களுக்கும் அவ்வொலி கேட்டது! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித கீத நாதமாகக் கேட்டது! பலருக்கும் “முகவீணை நாதமாக!”,

“அருணா சலசிவ, அருணா சலசிவ, அருணா சலசிவ, அருணசிவா!”

என்பதாகக் கேட்டு மனநெகிழ்வை அளித்தது. இது நிகழ்ந்ததும் ஒரு மாத சிவராத்திரி அருணாசல அனுபூதியாகத்தான்! இவ்வாறு இருந்த இடத்திலிருந்தே, ஒரே நாதப் பரலால் பலருக்கும் பலவிதமாக உபதேசம் மற்றும் நல்வரங்களை அருள்வதையே, “அபயநாதபோதம்” எனச் சித்தர்கள் உரைக்கின்றனர்.

எந்த ஒலியையும் வாழ்க்கையில் இதுகாறும் கேட்டிடாத அந்தப் பிறவிச் செவிடர்...

நாற்பத்தைந்து வருடக் காலத்தில் முதன் முதலாகக் கேட்ட ஒலியே மணி விசில் சித்தர் அந்த மாத சிவராத்திரி நள்ளிரவில் எழுப்பிய, வேதாகர்ஷண சக்திகள் நிறைந்த கணீரென்ற “அபயநாத போத” விசில் ஒலியாகும்.

அந்த விசில் ஒலியைக் கேட்ட நேரத்தில் அவர் சடக்கென்று இடப்புறம் ஒதுங்கிட,

ஜமீன்தாரையும் அவருடைய கூட்டாளிகளையும், கூட வந்தவர்களையும் விட அறிவில் சிறந்த அந்த நான்கு குதிரைகளும், “விசில் மணிச் சப்தம்” தங்களுடைய கவனத்திற்காகவும் என எண்ணித் தாமாகவே நான்கும் ஒரே சமயத்தில் வலப்புறம் சற்றே வளைந்து திரும்பிட,

பெரும் குலுக்கலுடன் வில் வண்டி சற்றுத் தள்ளி, எகிறி நின்றது, குதிரைகள் கழன்று விரைந்தோடின! அக்காலத்தில் ஓடும் வண்டியில் இருந்து கழன்றோடும்  வண்டி, குதிரைகள், மாடுகள் எதையும் மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள். சித்தரின் கருணைக் கடாட்சத்தால் அவைகளுக்கு அன்று முதல் பெரும் விடுதலைதான்! காட்டுக்குள் நள்ளிரவில் விரைந்தோடி மறைந்த இதே குதிரைகள் மறுநாள் மணி விசில் சித்தரைத் தேடி வந்து அவற்றின் கண்கள் கலங்கிட மண்டியிட்டு வணங்கி அவரோடு கிரிவலம் வந்தன. தற்போது கேட்கும் சக்தி பெற்ற அப்பிறவிச் செவிடர் உட்பட ஊர் மக்களும், கிரிவலம் வந்த ஆயிரக்கணக்கானோரும் இதைப் பார்த்து அதிசயித்து மனம் நெகிழ்ந்தனர். இவ்வாறு மனித குலத்திற்கு மட்டுமன்றி மாக்களுக்கும், தாவரங்களுக்கும், புல், பூண்டு, புழுக்களுக்கும் முக்தி நிலைகளை அளிக்க வல்லவர்களே சித்தர்களும், மஹரிஷிகளும் ஆவர். திருஅண்ணாமலையின் ஒவ்வொரு சிறு கல்லும் சித்தர்கள் பூஜிக்கும் சுயம்பு லிங்கமன்றோ!

இதன் பிறகு அப்பிறவிச் செவிடர் தம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அற்புதத்தைப் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு உணர்த்திட்டு, அருணாசல கிரிவல மகிமையையும், “விசில் மணிச் சித்தரின்” மேன்மையையும் நன்கு பரப்பினார். இது நிகழ்ந்த காலமே ஒரு பார்த்திப வருடத்தின் சித்திரை மாதச் சிவராத்திரி தினமாகும்.

இதே தினத்தில் தற்போது மணி விசில் சித்தர் மீண்டும் இந்தச் சித்திரை மாதத்தில், தூல, சூக்கும, வடிவுகளில், “விசிலுடனும்” சூக்கும “நா நாத” ஒலியோடும் அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்றார். பாக்யம் உள்ளோர்க்குக் குருவருளால், சித்தரின் தரிசனமும், நாதமுகி ஒலி கேட்டலும் கிட்டும். இத்தகைய பெரும் மகத்துவம் வாய்ந்த மாத சிவராத்திரியில் அருணாசலத்தைக் கிரிவலம் வரும் பலன்கள் அளப்பரியன!

எனவே, இம்மாத சிவராத்திரி நாளில் 

பிறவிச் செவிடாக உள்ளவர்களும், காது மந்தமாக உள்ளவர்களும், ஒரு காதில் மட்டும் கேட்கும் சக்தி பெற்றவர்களும், விபத்து, நோய், இயந்திர சப்தங்களிடையே பணிபுரிதல் – போன்றவற்றால் காது கேட்கும் சக்தியைப் பெரிதும் இழந்தவர்களும், பல காரணங்களால் காதில் அங்கக் குறைவு அடைந்தவர்களும், காது வெட்டுப் பட்டவர்களும், காதுப் பகுதியே இல்லாதவர்களும், காது கேட்கும் கருவியைப் பயன்படுத்துபவர்களும், நல்ல தீர்வுகளை, நிவாரணங்களைப் பெற உதவுகின்ற, “கர்ணாம்ருத சக்திகள்” (கர்ணம் – காது) பூரிக்கும் மிக, மிக அபூர்வமான மாத சிவராத்திரித் தினமிது!

வாழ்க்கையில் இதன் மகத்துவத்தைப் பலருக்கும் எடுத்துக் கூறி, ஜாதி, மத பேதமின்றி அனைவரும் இதனை நன்கு பயன்படுத்துமாறு பணியாற்றுவதும் அற்புதமான சமுதாயப் பணியே!

திறமையின்மை, அடிமைத்தனம், பெருத்த கடன் வாங்கியமை போன்ற பல காரணங்களால் குடும்பத்திலும், அலுவலகத்திலும் பலவிதமான வசவுகளை வாங்கிக் கொண்டு வாழ்வோரின் வாழ்க்கை நன்கு சீரமைய உதவும் மாத சிவராத்திரித் திருநாள்!

பிறரை ஆபாசமான, அசிங்கமான கேவலமான, வார்த்தைகளால் பேசிப் பழி தீர்த்தவர்களும், மனந்திருந்தி வாக்குச் சாபத்திலிருந்து மீண்டு, வாழ்வில் தக்க தீர்வுகளைப் பெற இம்மாத சிவராத்திரியில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருதல் விசேஷமானது.

பொதுவாக, காதுகளில் கடுக்கன்கள் அணிந்து இந்நாளில் கிரிவலம் வருதல் விசேஷமான பலன்களைத் தரும். கிரிவலம் முடிந்தவுடன் எங்கேனும், எவருக்கேனும் புதுக் கடுக்கன்கள், தோடுகளைத் தானமாக அளித்தலும், கண் பார்வைக் குறைவாக உள்ள ஏழைகளுக்குத் தக்க கண் மருத்துவப் பரிசோதனைகளுக்கும், கண்ணாடி வாங்கித் தருவதற்கும் உதவுதலால் வம்சவாரியாகவும், சூரிய கிரக நீசத்தாலும், கண் நோய்களாக வரும் நேத்திரச் சாபத் தீவினைகள் அகல உதவும்.

கண் நாள பலவீனத்தாலும் குறைப் பார்வையாலும் ஆயுள் முழுதும் கறுப்புக் கண்ணாடி அணிய வேண்டிய நிலையில் இருப்பவர்கள். இம்மாத சிவராத்திரியில் கண்டிப்பாகக் கிரிவலம் வருதலே ஜன்ம, ஜன்மமாக நேத்திர வகைச் சாபங்கள் தொடராது நல்ல தற்காப்பினைத் தரும்.

மேலும், தவறான முறைகளில் தம் டிரைவர்கள் வாகனங்களை ஓட்டி மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் அடிபடுதலாலும், பாதிப்படைந்தாலும், இதனால் வாகன உரிமையாளருக்கு ஏற்படும் பலத்த சாபங்களுக்கும், கொடிய பாவ வினைகளுக்கும் முறையான பரிகாரங்களை பெறவும் உதவும். இதில் பரிகாரங்களையே முதலில் பெற முடியும், பிறகே தேவையான தீர்வுகளைப் பெற்று இத்தகைய கர்ம வினைகளிலிருந்து மீள முடியும் என்பதை அறிக!

மக நட்சத்திரம்

சென்ற இதழ் தொடர்ச்சி !

தர்மராஜ நட்சத்திர லிங்கம் எனவும், புண்ய சுத்தி லிங்கம் என்றும் போற்றப் பெறும் மக நட்சத்திர லிங்கம், மன சுத்தி, வரமார்கப் புண்ய சக்தி, தீர்த்தப் புல சக்தி போன்ற பத்து வகை தசாம்ருத சக்திகளைக் கொண்டதாகும். உலக ஜீவன்களின் பாவக் கறைகளைப் போக்கும் புனித நதி தேவதா மூர்த்திகளும், மக நட்சத்திர நாளில் நீராடி மென்மேலும் பவித்ர சக்திகளைப் பெறுகின்றனர் எனில் என்னே இதன் மஹிமை!

ஒரு மனிதன் தினமும் நன்கு ஜீவித்திட, இத்தகைய பத்து விதமான தசாம்ருத ஆரோக்யப் பூஷண சக்திகள் மிகவும் தேவையானதாகும். இவற்றில் எந்த அமிர்தாரோக்ய சக்தி அந்தந்த நாளில் குறைகின்றதோ, அதுவே, கண் நோய், தலைவலி, மன உளைச்சல், உடல் வலி, பகைமை, காரியத் தடங்கல் என்று பல விதமான துன்பங்களாக ஏற்படும்.

எப்போதும் மன வாகனப் பயணமா?

தர்ம ராஜாவாகிய எமமூர்த்தி பல அவதாரிகைகளைப் பூண்டு இருக்கின்றமையால், அவருக்கென நிறைய இறையவதாரப் பணிகள் உண்டு. தர்ம ராஜாவாக அவர் பொலிகையில், அவர் ஜீவன்களுக்கான ஜீவிதத் தர்மப் பரிபாலனத்தைப் பாரபட்சமின்றி ஆற்றுகின்றார். எமதர்மர் உயிரைப் பறிப்பவர் அல்லர். இறப்பு என்பது இரண்டு ஜீவிதங்களுக்கு இடையே உள்ள இடைவெளியே! அதாவது, மரணம் என்பது சக்தியை மற்றோர் இடத்திற்கு சரீரத்திற்கு மாற்றுவதாகும். இதற்கான ஜீவிதத் தர்ம பரிபாலன, கர்ம விப்ர பரித்துறையைச் செவ்வனே ஆற்றுபவரே எம மூர்த்தி! அஷ்டதிக்கு பாலகர்களுள் ஒருவராகவும், எமதர்மர் அவதார சக்திகளைப் பொழிகின்றார். சதய நட்சத்திர நாள் என்பது எம்மூர்த்தியின் உயிர்ப் பரிபாலன தேவ அம்சங்களைப் பூண்டதாகும்.

ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் தவசிமடை

தர்ம மண்டலத்தில் எமமூர்த்தியின் பரிபாலனம் நிகழ்கின்றது. இதனுள் மானுட வடிவில் செல்லுதல் இயலாது, தர்ம சக்திகள் தாம் கலியுகத்தில் எளிமையான முறையில் கர்மக் கழிப்பிற்கு உதவுவதாகும்.

தர்ம காரியங்களைச் செய்பவர்களும் ஒருபுறம் நல்லவர்களாகவும், மறுபுறம் கெட்டவர்களாகவும் நடந்து கொள்வது உண்டு. எத்தகைய காரியங்களும் நிகழ காரணமான மனித மனமானது, நல்லது தீயது என்ற வகையிலும், உபயோகமற்ற வகையிலும், நல்லதும் கெட்டதும் இல்லாமலும், எதையாவதும், எப்போதும் எண்ணிக் கொண்டும்தான் இருக்கும். காரணம், மன ஒழுக்கத்தைக் கலியுக மானுடச் சமுதாயம் முறையாகப் பேணுவதில்லை!

“சொல்லற இரு மனமே!
சும்மா இரு மனமே!”
சொல்லறச் சும்மா இரு மனமே!”

ஆகிய மூன்று வகை ஆன்ம மன நிலைப்பாடுகள் உண்டு. ஏனென்றால் உடல் பூர்வமாக அசைவற்று இருந்தாலும், மனப்பூர்வமாக அசைவுகள் இருக்கும் அல்லவா! மக நட்சத்திர நாளானது தர்ம வழியில் மனதைச் செலுத்த உதவுவதற்கான பூஜைகளை, அறப் பணிகளை, நல்வழி முறைகளை ஆற்ற வேண்டிய நாளாகும். இதில் இம்மூன்று நிலைகளுக்கான யோக, தியானக் கால அம்சங்கள் நன்கு நிறைகின்றன.

எவருக்கு மரண பயமும், தற்கொலை எண்ணங்களும் அடிக்கடி வருகின்றனவோ, மன பலவீனத்தால் வரும் இவற்றை அடியோடு வென்றிட, அவர்கள் மக நட்சத்திர லிங்க வழிபாட்டை அடிக்கடி ஆற்றி வர வேண்டும். மக நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபட வேண்டிய நட்சத்திரத் தலமாக விளங்குவதே திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடை ஸ்ரீமகாலிங்க சுவாமி சிவாலயமென நாம் நன்கறிவோம். மக நட்சத்திர தேவி, தலமயமாகப் பூஜைகளை ஆற்றியத் தலங்களுள் தவசிமடையும் ஒன்றாகும்.

திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையில் இன்றும் பல மகரிஷிகள், சித்தர்களின் ஜீவ சமாதிகள் பூமிக்குள்ளும், வெளியுமாக உள்ளன. இங்கு, பூமிக்குள் நெடுந் தொலைவு ஆழ்ந்திருக்கும் சித்தர்களின் எண்ணற்ற ஜீவாலயங்களும் உண்டு.

இல்லறத்தில் பலத்த மன வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்து வாழ்வோரும், மனக் கொந்தளிப்புகளுடன் மன ஒற்றுமை இல்லாது வாழ்வோரும் நல்ல தீர்வுகளைப் பெற்றுச் சாந்தமான இல்வாழ்க்கையைப் பெற, மக நட்சத்திர லிங்கப் பூஜைகளை இத்தலத்தில் ஆற்றி, இங்கு மக நட்சத்திர நாள்தோறும் வழிபடுவதுடன்,

நுனி வாழை இலையில் தர்மராஜ சக்திகள் நிறைந்த எள், பிரண்டை, அதிரசம், வாழைக்காய், பாகற்காய் போன்றவை கலந்த உணவுப் பண்டங்களைத் தானமாக அளித்து வர வேண்டும்.

தவமே மாதவமாய்த் துலங்கும் தவசிமடை

மக நட்சத்திரம் கூடும் சனிப் பிரதோஷ நாளில், பரத்வாஜ மகரிஷியே மக நட்சத்திர மண்டலத்தில் மக நட்சத்திர லிங்கப் பூஜைகளை ஆற்றிய கையோடு, பூவுலகிற்கு வந்து, இங்கு தவசிமடையில் மானுட வடிவில் வழிபடுகின்றார், பாக்யம் உள்ளோர்க்கு மக நட்சத்திரம் கூடும் சனிப்பிரதோஷ நாளில் தரிசனம் தருகிறார்.

மக நட்சத்திரத் தினம் மற்றும் சனிப் பிரதோஷ நாட்களில் இத்தலத்தில் வலியன் குருவியின் தரிசனம் கிட்டிடில், அன்று பரத்வாஜ மகரிஷி வழிபாட்டிற்குத் தூல சூக்கும வடிவில் வந்துள்ளார் எனப் பொருளாகும்.

“கோதூளி லக்னம்” எனப்படும் விடியற்காலை 4 மணி முதல் சூரிய உதயத்திற்குள்ளான காலத்தில் 27 வகையான நட்சத்திர லிங்கங்கள் உள்ள ஆலயத்திலும், இல்லத்திலும் மக நட்சத்திர லிங்கத்தையும் வழிபடுதலால்,

குடும்பத்தினரோ, பெற்றோர்களோ தன் பக்தி வழிக்குத் தடங்கல்களாக உள்ளனர் என எண்ணுவோர்க்குத் தக்க நிவர்த்திகள் கிட்டும். வியாபாரத் துறையிலும், அலுவலகப் பணியிலும், யார் யாரைச் சந்தித்து, எப்படிப் பேசிக் காரியத்தை முடிப்பது என்பதற்கான சிந்தனா சக்திகள் கிட்டிட உதவும்.

கும்பகோணம் ஸ்ரீமுப்புரிநாதர் மகத்துவம்

மாதந்தோறும் மக நட்சத்திர நாளில், கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடி, மக லிங்க பூஜை ஆற்றி, இங்கு மகாமகக் குளத்தருகே உள்ள ஸ்ரீகௌதமேஸ்வரருக்கு (ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரர் எனப்படும் முப்புரிநாதருக்கு), வெள்ளிப் பூணூல் சார்த்தி, மா, பலா, வாழை முக்கனிகள், பாயசம், வெண் பொங்கல், புளியோதரை போன்று இனிப்பு, புளிப்பு, காரம் ஆகிய முச்சுவை உணவுகளைப் படைத்து, வழிபட்டு, ஏழைக் குடும்பங்களுக்கு அளித்து வருவோர்க்கு, வாழ்க்கையில் ஊழ் வினையாக தினமுமே வந்து வருத்தும் பலத்த இன்னல் மயச் சோதனைகளில் இருந்து முழுமையான தீர்வுகள் பெற நற்காரியங்களை அளித்து உதவும். மேலும் தறிகெட்டு, நன்னெறி பிறழ்ந்து வாழ்கின்ற பிள்ளைகள், சீர் திருந்திடவும் துணை புரியும்.

மேலும், குடும்பப் பிளவுகள், கடுமையான நோய்கள், பணப் பிரச்னைகள் காரணமாக விரக்தி அடைந்து வாழ்வோரும் நல்ல மனோதிடம், மன வைராக்யம் பெறவும் உதவும் வழிபாடு இது!

எம மூர்த்தி பூஜிக்கும் மக நட்சத்திர லிங்கம்

மேலும் தர்மராஜர் வழிபட்டு அருட்பலன்களை நிரவி இருக்கும் மக நட்சத்திர லிங்க வழிபாட்டுப் பலா பலன்களாக – வீட்டை விட்டு ஓடிப் போதல் அல்லது வெளியேறுதல், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உண்டாதல், மன வேறுபாடு காரணமாகப் பிறந்த வீட்டிற்குச் செல்தல் – போன்ற வருத்தமான காரியங்களில், எண்ணங்களில் உழன்று கொண்டிருப்போரும்,

வெளியில் எடுத்துச் சொல்ல முடியாத பல வகையான மன சஞ்சலங்களில் இருந்து நிவர்த்தி பெறுவதற்குமான நல்வழிகளை அடைய உதவும் வழிபாடும் இதுவேயாம்.

சென்னை வேளச்சேரி ஸ்ரீதண்டீஸ்வரர் ஆலயத்தில்தான் எமமூர்த்தி வழிபட்டுத் தாமிழந்த “ஸ்வர்ணத் தண்டகாசம்” எனப்படும் அறக்கோலைப் பெற்றார்.

ஸ்ரீயமலிங்க மூர்த்தி திருஅண்ணாமலை

நல்ல பண வசதிகளால் வரும் தீய வழக்கங்களில் விளையும் மங்கிய மனநிலை, VRS வாங்கிய நிலையில் என் செய்வதென்று அறியாது சோம்பித் திரிந்து வாழ்பவர்கள், கணவன், மனைவி இருவருமே பணி புரிந்து அபரிமிதமானப் பண வரவால், கௌரவ மிதப்பில் பிறரை மதியாது வாழ்பவர்கள், சுகபோகமாக வாழ்ந்து சோம்பேறித் தனத்திலேயே எப்போதும் உழல்பவர்கள், அளவுக்கு மீறிய உறக்கம், ஒரு அரை பர்லாங்கு நடப்பதற்குக் கூட யோசித்துச் சோம்பித் திரிதல் – போன்றவற்றிற்கு ஆட்பட்டுப் பல உடல் உபாதைகளைத் தேடிக் கொள்வோர் கலியுகத்தில் பலரும் உண்டு.

இவர்கள் யாவரும் பெறுதற்கரிய இந்த மானுடப் பிறவியில், காலத்தின் மஹிமையை மதியாது, காலத்தை மிதித்தும் வாழ்வதாலும், அதிபயங்கரக் “காலவிரயச்” சாபத்திற்கும் மேலும் ஆளாகின்றனர்.

இத்தகையோர் மக நட்சத்திர நாள் மட்டுமல்லாது, தசமி நாளிலும், தர்மராஜ மூர்த்தித் தலங்களில், தர்மராஜாவின் பாதங்களுக்கு எள்ளுக் காப்பு இட்டு வழிபடுதல் வேண்டும்.

அருணாசல கிரிவலத்தில் எமலிங்க வழிபாடு!

திருஅண்ணாமலையில் உள்ள எமலிங்கம், அறக்கடவுளாம் நந்தீஸ்வரர் மற்றும் தர்மராஜ மூர்த்தி, எமமூர்த்திகளால் வழிபடப் பெற்றதாகையால், மக நட்சத்திர நாளில் இங்கு வழிபடுவோர் எமலிங்க சன்னதியில் வில்வம், மரிக்கொழுந்து, தவனம், பிரண்டை போன்றவை கலந்து தாமே தொடுத்த மாலைகளைச் சார்த்தி வழிபட்டு, தேங்காய், ஏலக்காய், வெல்லம் கலந்து படைத்துத் தானமளித்தலால்,

வீட்டில் இள வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகி, உடல் மெலிந்து அதிகமாக நடமாட முடியாது இருப்போர்க்கு நல்வழிகள் கிட்டிட உதவும். பொதுவாக, தர்மராஜ மூர்த்தி உள்ள தலங்களில் ஆண்கள் நன்கு சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கிட வேண்டும். அங்கப் பிரதட்சிணம் நல்ல பலன்களைத் துரிதமாகத் தரும்.

கணிதத்தில் infinity என்பதாக “முடிவற்றது” என்ற வகைக் குறியுடன் சில கணக்குகள், சூத்திரங்கள் அமையும். இத்தகைய சூத்திரங்களில் இன்னமும் ஆன்மப் பூர்வமாக ஆராய்ச்சி செய்து பெரிய முன்னேற்றம் அடைய விரும்புவோருக்கும் உதவும் பூஜையே மக நட்சத்திர லிங்கப் பூஜையாகும்.

தற்கொலை அசம்பாவிதம் மற்றும் கொடூரமான விபத்துகள் நிகழ்ந்த இல்லங்களில், இடங்களில் மிதந்து கிடக்கும் ம்ருத்யுதோஷங்கள் அகலவும் இப்பூஜைகளில் திரளும் ஆத்ம சக்திகள் உதவும். சிறைத் தண்டனைகளைப் பெற்று அனுபவிப்போரும், அனுபவித்து முடித்துச் சமுதாயத்தில் தலைகுனிவுடன் வாழ்வோரும் நன்கு சீர் திருந்தி வாழவும் மனச்சாந்தம் பெறவும் இப்பூஜை உதவும்.

பலரையும் குறிப்பாக முதிய வயதில் ஏற்படும் தேவையற்ற மரண பயங்களை அகற்றிடவும், மக நட்சத்திர நாளில், மக நட்சத்திர லிங்கப் பூஜைகளை ஆற்றி, திருச்சுழி அருகே உள்ள எமமூர்த்தி சிவபூஜைகளை ஆற்றி ஐக்யமுற்று உத்தம அவதார நிலைகளை அடைந்த எமனேஸ்வரம் சிவாலயத்தில் பூஜித்து வருதல் வேண்டும்.

அன்பு லிங்கம்

அன்பு என்பது இறைமையின் தூய்மையான சக்திப் பரிமளிப்புத் தலமாகும். அன்பின் முற்றிய, கனிந்த நிலையே பக்தி. ஆழ்வாராதியர்களும், நான்கு சமயக் குரவர்களும், நாயன்மார்களும், பக்த விஜய உத்தமர்களும் பூண்டிருந்ததே மிக மிகப் புனிதமான அன்பு ஆகும்.

பார்த்திப ஆண்டில் பரிமாற்ற அம்சங்கள் நன்கு பரிபூரணமாகப் பரிமளித்துப் பரிணமிக்கின்ற அற்புதமான ஆண்டாகும். எனவே இவ்வாண்டில் அன்பு லிங்க வழிபாடு தலையாயது. கலியுலகில் பெருகி வரும் பயங்கரவாதம், வன்முறை, கொலை, கொள்ளை, காமத் தீச்செயல்கள் போன்ற தீவினைகளுக்கு ஆன்மீக ரீதியாகத் தக்கத் தீர்வுகளை நல்குவதே அன்பு லிங்க வழிபாடு. இதற்கான உலகச் சமுதாயப் பொது வழிபாடான அன்பு லிங்கப் பூஜையை ஆற்ற வேண்டிய கடமை – பெறுதற்கரிய மானுடப் பிறப்பை, இதிலும் பூவுலகின் தெய்வீக மையமான பாரதத்தில் பிறந்துள்ளமையால் – ஒவ்வொரு பாரத வாசிக்கும் உரித்தான லட்சியக் கடமையாக, பிறவிக் கடமையாக அமைந்துள்ளது. இதிலிருந்து எவரும் பிறழ்தலாகாது.

ஸ்ரீபளஔஷதீஸ்வரர் ஆலயம்
திருத்துறைப்பூண்டி

“அன்பு லிங்கம்” என்பது ஆண்டு முழுதும், ஆயுள் முழுதும் வழிபட வேண்டிய சிவபீஜாட்சர சக்தி லிங்கமாகும். அன்பின் திரண்ட அம்சமே பக்தியாகும். அன்புதான் உலகெங்கும் ஒவ்வொருவரிடமும், ஒவ்வொன்றிலும் உறையும் ஆத்ம ஜோதியை எளிதில் உணர்விக்க வல்லதாம். ஆத்ம ஜோதியாக உறையும் இறைவனை அறிய ஆத்ம சக்தி தேவை, ஆத்ம சக்தியை அளிக்க வல்ல சாதனங்களுள் ஒன்றே அன்பு லிங்க வழிபாடு!

ஆன்ம சக்தி விருத்தியாகி, தேங்காய் போல நன்கு முற்றி, ஆத்ம சக்தியாகக் கனிகின்றது. வழிபாடுகள், ஹோமம், தவம், யாகம், யோகம், தியானம் மூலமும் ஆன்ம சக்திகளை நன்கு திரட்டிப் பெற்றிட முடியும். எங்கெல்லாம் மாற்றான் சொத்துக்கும், பிற நாடுகளின் நிலப் பகுதிக்கும், பிறன் மனை விழையும் அவலமும், பொறாமையும், குரோதமும், விரோதமும், பகைமையும், பேராசையும் புகுகின்றனவோ, அங்கெல்லாம் அன்பு மறைந்து விடும். அன்பு சக்திகள் மங்கி விடும். வன்முறை, பயங்கரவாதம், பாவப் பெருவினை போன்ற பலத்த கர்ம வினைகள் தொற்றிக் கொள்ளும் அவல நிலையும் ஏற்படும்.

ஸ்ரீவிமலலிங்கம் ஆதிகுடி

இயற்கையில் பூக்களாக, மூலிகைகளாக அன்பு சக்திகள் நிறையப் பரிமளிக்கின்றன. எனவே இவற்றைச் சமுதாயத்தில் நன்கு பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் அன்பு சக்திகள் நன்கு நிரவும். பார்த்திப ஆண்டில் அன்பு சக்திகள் நிறையவே பரிமளிப்பதால், இவ்வாண்டில் இயற்கைச் சாதனங்களாலான பூஜைகள், தான, தர்மங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகின்றன.

பார்த்திப ஆண்டிலாவது இயற்கையை, இயற்கையாகவே நிலைக்க விடுங்கள்!

பார்த்திப ஆண்டில் இயற்கை வகை உணவுகளை நிறைய உண்ணுதல் வேண்டும். பழங்கள், பொரி, அவல், பொட்டுக் கடலை, நிலக்கடலை, பனங்கிழங்கு, பனங் கற்கண்டு, மாங்காய், மாகாளி, நெல்லிக்காய் போன்றவை இயற்கையான வகையில் நிறைய உணவில் சேர்க்கப்பட வேண்டும். இவ்வகை இயற்கை வகை உணவுகள் உடலில் சூரிய சக்திகளைத் தாமாகவே மேம்படுத்தும். சூதமஹரிஷி “மா” மர சக்திகள் மூலம் வேத சக்திகளை அன்புக் கிரணங்களாய் – கும்பகோணம் – கூந்தலூர் – பண்டாரவாடை அருகே உள்ள கூகூர் சிவத்தலத்தில் “மா” மர சக்திகள் மூலம் வேத சக்திகளை அன்புக் கிரணங்களாய்ப் பரிணமித்துத் தருகின்றார்.

தற்போது கலியுலகில் பலரும்  கேஸ் அடுப்புச் சமையலுக்கு அடிமைப்பட்டு விட்டதால், சூரியனிடமிருந்து நேரடியாகப் பெற வல்ல பல்வகை அக்னி சக்திகளையும் உலகம் இழந்து வருகின்றது. மாதம் ஒரு முறையேனும் விறகு அடுப்பு, மண்ணென்ணெய் அடுப்பு, கரி அடுப்பு வைத்து, தாமே குடும்ப சகிதம் உணவு சமைத்துப் பிள்ளையாருக்கு, அம்மன் வகை மூர்த்திகளுக்குப் படைத்துத் தானமளிக்க வேண்டும். இதன் மூலமும் அன்பை அக்னி சக்தியாகப் பரவெளியில் சமுதாயத்திற்குப் பயன்படும் வண்ணம் நன்கு நிரவிடலாம்.

ஆத்ம சக்திகள் நிறைந்தமையால், அன்பு தோன்றுவதற்கான ஆன்ம அம்ச வழிமுறைகள் நிறையவே உண்டு. வெறும் உறவு முறையால், நட்பால், பாசத்தால் அன்பு வ(ள)ராது. ஏனெனில் இவை காலப் போக்கில் பல தன்மைகளால் மாறக் கூடியவை. பரிபூரணமான பிரேமை, பக்தி போன்றவைதாம் அன்பின் அம்சங்கள்! இதுவரையில் குடும்பத்தில் அன்புடன் பழகிடாதோர், பார்த்திப ஆண்டிலாவது அன்பு பொங்கிடக் குடும்பத்தில் பழகிடுவதற்கான முயற்சிகளை, அன்பு லிங்க வழிபாடுகளாக – அன்னாபிஷேகம் , தேனபிஷேகம், பூப்பாவாடை சார்த்துதல் போன்ற வகைகளில் மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக, விளக்குத் தீபம், சுடர்கள் அன்புப் பரிமாற்றத்தை நன்முறையில் நிரவ வல்லவை ஆகும். இதனால்தான் அன்பு சக்திகள் பரிமளிக்கும் ஆலயங்களில், எப்போதும் நிறைய விளக்குகள் பிரகாசித்துக் கொண்டு இருக்குமாறு, கோயில்களில் பெரிய அகல் விளக்குகள், உயரமான விளக்குகள், தூண்டா விளக்கு வகைகளை இவ்வாண்டில் ஆறு காலங்களிலும் தினமும் அடிக்கடி ஏற்றி வரவேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

இவ்வாண்டில் அறுவை சிகிச்சைகளை இயன்ற வரை முற்றிலுமாகத் தவிர்த்தல் நலம். கான்டாக்ட் லென்சைக் கண்ணுக்குள் பொருத்துவதைக் கண்டிப்பாகத் தவிர்த்திடுக. கண்ணுக்குள் லென்சை வைத்துத் தைக்கும் காடராக்ட் வகைக் கண் அறுவைச் சிகிச்சை முறை அல்லாது, கண்ணாடி அணியும் வகையில், காடராக்ட் சிகிச்சை முறையை ஏற்றலே நலம். இவ்வாண்டில் கண்ணாயிர மூர்த்தி, கண்ணாத்தாள் வழிபாடுகள் நன்கு விருத்தி பெற வேண்டும்.

மதுமேகம் சம்பந்தமான நோய்களால் அவதியுறுவோர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைத்யநாத சுவாமியை செவ்வாய்க் கிழமை தோறும் வழிபட்டு வருதல் வேண்டும்.

இவ்வாண்டில் அன்பு சிறக்க பலரும் வாய் திறந்து நன்கு மனம் விட்டுப் பேசுதல் வேண்டும். இதனால் பல பிரச்னைகள் எளிதில் தீர்வடையும். பருத்தி வகை ஆடைகளை அணிந்து பேசுதல் சாந்தமான முடிவுகளைத் தரும்.

இருதய அறுவை சிகிச்சைச் சம்பவங்கள் அதிகமாவதால், பல குடும்பங்களில் இவ்வாண்டில் சில அங்க வகைப் பாதிப்புகள் ஏற்படும். இதற்குத் தற்காப்பாக, லால்குடி அன்பில் அருகே ஆதிகுடியில் சனிக்கிழமை தோறும் ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீவிமல லிங்க வழிபாட்டை மேற்கொண்டு வரவேண்டும்.

எலும்பு நோய்கள் சம்பந்தமான குறைகளுக்கு, சிகிச்சைகளுக்கு கூடியவரை, ஆணி, நட்டு, பட்டை போன்ற அயல்வகைப் பொருளை (foreign bodies) எலும்பில் பதிக்கும் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும்.

தோல் சம்பந்தமான நோய்களின் நிவர்த்திக்கு, திருத்துறைப்பூண்டி ஸ்ரீபவஔஷதீஸ்வரருக்குப் புனுகு சார்த்தி வழிபட வேண்டும்.

இவ்வாண்டில், முடி வகைக் கர்மவினைப் பெருக்கத்தால், தலை மயிர் உதிர்தல் அதிகமாகும். கூந்தலூர், குடுமியான் மலை போன்ற சிரசு சிகை சக்தி ஆலயங்களில் வழிபட்டு வருதலால், முடி அதிகமாக உதிர்வதற்கான கர்ம வினை அழுத்தங்கள் தணியலாகும். நல்ல சுத்தமான தலை முடித் தைலங்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும். செயற்கை வகை ரசாயனக் கலவைகள் நிறைந்த ஷாம்பூ, ஹேர்ஆயில் போன்றவற்றை அறவே தவிர்க்கவும்.

செவ்வாய்ப் புல நீசமான சக்திகளால், நில புலன்களில் ஏமாற்றங்கள் ஏற்படுவதால், தன் சொந்தப் பெயரில் விற்று ஏமாற்றுபவர்களிடம் சிக்காமல் அதாவது power of attorney வகைக் காரியங்களில் ஈடுபடாது தற்காத்துக் கொள்ளவும்.

நரம்பு, கபாலம் சம்பந்தமான நோய்களுக்கான நிவாரணத்திற்கு பட்டுக்கோட்டை – பேராவூரணி இடையில் உள்ள மருங்கப்பள்ளம் ஸ்ரீஔஷதபுரீஸ்வரரை வழிபட்டு வருதல் சிறப்பான பலன்களைத் தரும். இங்குள்ள சனீஸ்வரர் குடும்ப, வியாபார ஒற்றுமைக்கு அன்பு சக்திகளுடன் அருளும் அற்புதச் சனீஸ்வரர் ஆவார்.

கடல் தீர்த்தவாரி

மனப் பேரலை, ஆழிப் பேரலை, ஊழிப் பேரலை – சென்ற இதழ் தொடர்ச்சி

கடல் தீர்த்தவாரி உற்சவங்கள் சமுதாய வழிபாடே!

பண்டைய காலத்தில், ஆலய மூர்த்திகள் அருகில் உள்ள கடல் தலம், புண்ணிய ஆறுகளில் மக நட்சத்திர நாளில் கடலில் தீர்த்த வாரியாக நீராடுவர். இதனால் கடல் தேவதைகளுக்கும், கடல் நிலப் பரப்பிற்கும் கிட்ட வேண்டிய மகத்தான தெய்வீக சக்திகளும் உரிய முறையில் கிட்டி வந்தன.

மேலும் அமாவாசை, சூரிய, சந்திரக் கிரகண நாட்களில், பக்தர்களின் புனிதமான கடல் நீராடலும் நிகழும். எனவே, இவற்றால் மக்களுக்குப் புனிதமான நீராடற் புண்ய சக்தியும் கிட்டுவதோடு, பலவகைக் கர்ம வினைகளும் கழிகின்றன. சாதாரணமாக, கடலில் எவரும் தினசரி நீராடுதல் கூடாது. கடல்வாழ் மீனவப் பெருங்குடி மக்களும், கடல் துறையை நம்பி வாழ்வோரும், மச்ச மூர்த்தியின் விசேஷமான அனுகிரங்களைப் பெறவல்லவர்களாதலின், அவர்களுக்கு இதிலிருந்து விதி விலக்குகள் உண்டு.

புனிதமான தீர்த்தவாரி வைபவங்களும், தெய்வ மூர்த்திகளின் கடல் நீராடல் உற்சவங்களும் கலியுகத்தில் தற்போது மிகவும் குறைந்து வருகின்றன. இதனால் – மலஜலக் கழிவுகள், ரசாயனக் கழிப்புகள், அணு ஆயுத சோதனைக் கழிவுகள் – போன்று மனித சமுதாயத்தால் கடல் நீரில் சேர்க்கப்பட்டுள்ள உள்ள மாசுகளையும், விஷக் கனல்களையும் களைய உதவும் ஆன்ம சக்திகளும் கடலுக்குக் கிடைக்காமல் போய்விடுகின்றது.

மேலும், காசி போன்ற நகரங்களில் துலங்கும் கங்கைப் புனித ஆற்றில் சாக்கடைக் கசிவுகளும், குப்பைகளும், மலஜலக் கழிவுகளும் கலந்து வருகின்ற வேதனையை இன்றும் நாம் காண்கின்றோம். இவை அனைத்தும் கடலில்தானே போய்ச் சேர்கின்றன. புண்ணிய நதிகளில் நீராடுவோரின் பாவக் கசிவுகளும் கடலைத்தாமே அடைகின்றன. இவற்றை எல்லாம் “நம்பாரக்கோளம்” என்ற முறையில் சுத்திகரித்துத் தருவதற்காகத்தான், இறைவன் கடல் நீரை உப்பு நீராகப் படைத்துள்ளான். ஏழு கடலையும் கட்டிக் காப்பவரே சமுத்திர ராஜர்! அன்றும் இன்றும், என்றுமாய் கடல் சாம்ராஜ்யத்தின் அதிபதியாகத் துலங்குபவர்.

இப்பூவுலகில் கடல் நீர் நன்னீராக முழுதுமாக இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? பூவுலகில் சிருஷ்டியை உருவாக்கும் தேவ வல்லமை பெற்றோர்க்கும் இந்த அம்சம் புரியாதா என்ன? இவ்வாறாக கடல் நீரே நன்னீராக படைக்கப்பட்டு இருந்தால் இன்றைய மனித உலகம், பாதிக் கடலைச் சுரண்டிச் சுயநலமாகச் சேதப்படுத்தி இருக்கும்.

இன்றைய பூவுலகின் நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐந்திலுமே, மனிதர்களுடைய தீய செய்கைகளால், எண்ணங்களால் பாவ வினைச் சுமைகள் அதிபயங்கரமான அளவில் கலந்து வருகின்றன. இத்தகையப் பாவ வினைச் சுமைகளைச் சுத்திகரிக்கும் இயற்கைப் பெம்மான்களே சூரிய ஒளி, சந்திர ஒளி, நட்சத்திர ஒளி, கோள்களின் பிரகாசக் கிரணங்கள், கடல் நீர் ஆகும்.

கடலுக்கு நன்றி காண்பீர்!

உலக மக்கள் தொகையை விடப் பன்மடங்குப் பெரிதாக உள்ள மீன், பாசிகள், நண்டுகள், கடல் தாவரங்கள் போன்றவைதாம், தினமுமே மனித குலம் நன்கு வாழ்வதற்கான நில, நீர், வான் பரப்புகளைச் சுத்திகரித்துத் தருகின்றன. ஆனால், இதற்கென ஒரு துளியும் நன்றி காட்டாது, கடந்த பல ஆண்டுகளில், விஞ்ஞானத் துறையில் மகத்தான முன்னேற்றம் பெற்றுள்ளதாகக் கூறிக் கொள்ளும் (பொளுளாதார ரீதியான) வளமான நாடுகள், அதிபயங்கரமான இரசாயனக் கலவைகள் நிறைந்த ராக்கெட்டுகள், அணுகுண்டுகள், வெடிமருந்துகளைக் கடலில் ஏவி விட்டு, அவை “கடலில் விழுந்தால், நிலவாழ் ஜீவன்களுக்கு நஷ்டமில்லை!” என்ற எண்ணத்தில்தானே பாவகரமான காரியங்களில் ஈடுபடுகின்றனர். பூகம்பங்கள் அடிக்கடி ஏற்படக் காரணமே இத்தகைய பூமியடி அணு ஆயுத வெடிப்பேயாகும்.

கடலுக்கே சோதனை தரும் கர்ம வினையாளர்கள்!

கொடிய விஷக் கலவைகள் நிறைந்த ரசாயன வெடிகள் மற்றும் அணு ஆயுதக் கலவைகளைக் கடலில் “பரிசோதனை” என்ற பெயரில் வெடித்துக் கரைத்து வருகிறார்கள். ஒரு ராக்கெட் கடல் தண்ணீருக்குள் விழுந்தால், கோடானு கோடிக் கணக்கான கடல் வாழ் ஜீவன்கள் மாள்வதுடன், பல்லாயிரக் கணக்கான சதுர மைல்களுக்கான கடல் நீரும், கடல் பரப்பும், நிலப்பரப்பும் விஷமாகிறது அல்லவா! இது, மனித குலம் தெரிந்தே செய்கின்ற ஜீவஇம்சைகள் நிறைந்த படுகொலை அல்லவா! இதுவே அந்தந்த நாட்டு மனித சமுதாயத்தையே பலத்த தோஷங்களாகத் தாக்கும்.

இதே போல, தற்காலத்தில் “யாருக்கும் பாதிப்பில்லை” என எண்ணி, பாலைவனத்தில், பரந்த வெளியில் அணுகுண்டை வெடித்துச் சோதனை செய்கின்றார்கள். இதனால் கோடிக்கணக்கான பூமியடி வாழ் தாவரங்களும், ஜீவன்களும் மடிவதுடன், பல்லாயிரக்கணக்கான சதுர மைல்களுக்குப் பூமியடி நீர் மட்டங்கள், தெய்வீக சக்திகள் நிறைந்த புனித நதி நீரோட்டங்கள், அரிய சுரங்கப் பாதைகள் போன்ற பலவும் அடிபட்டு மாய்கின்றன. பூமிஉறை தேவதைகளின் சாபங்களும் வந்து சேர்கின்றன. இவை அனைத்தையும் தாங்க இயலாத சமுத்திர தேவதைகள் என்னதான் செய்ய முடியும்?

எனவே, சமுத்திர தேவதைகளின் சாபங்களே சூறாவளி, ஹரிக்கேன், வெள்ளம், புயல், ஆழிப் பேரலை வகை ஆபத்துக்களாக மனித சமுதாயத்தை மிகவும் பாதிக்கின்றன. மேலும் இதனால் தரைப் பகுதியில், ஆழ்பூமியில், பூமியடியிலும் நிலப் பிளவுகளும் ஏற்பட்டு, பூகம்பங்களாகி, பூமி அடியில் உள்ள நீரோட்டங்கள், கடல் நீரின் மட்டங்கள் பலவும் பலத்த பாதிப்புகளுக்கு உள்ளாகி, இயற்கைக்கே கொடுமை செய்ததாகி விடுகிறது.

எண்ணங்களில் எழும் வல்வினைகள்!

இவ்வாறு இயற்கையை வதைத்தலும் பலத்த அதர்மச் செயல்களே ஆகும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் எதிர்பாராத விதமான ஆழிப் பேரலைகளாக உருவெடுத்துக் கிளம்புகின்றன. இப்பூவுலகில், ஒவ்வொரு மனிதனின் மனதில் விநாடிக்கு விநாடி தோன்றும் எண்ணங்கள் அனைத்தும் சுத்தமாகவா இருக்கின்றன? சூரிய, சந்திர சாட்சியாய்த்தான் ஒவ்வொரு மனிதனின் எண்ணமும், செயலும் நிகழ்வதால், அவரவர் மனசாட்சிக்கே இது நன்கு புலப்படலாகும்.

எப்போதும் மனித எண்ணம் புனிதமானதாகவா இருக்கிறது? மனிதன் பேசும் கெட்ட வார்த்தைகள் யாவும் பரவெளியில் மிதந்து, விஷம் பூத்து அவரவரையே பின் வாழ்வில் தாக்கும். விண்ணில் ஏற்படும் வான்வெளி விபத்துக்களுக்கான காரணங்களும் இதில் ஆன்மப் பூர்வமாக அடங்கி உள்ளன. அவலமான, அருவருப்பான, கேவலமான, ஆபாசமான, குப்பையான மனித எண்ணங்கள் யாவும், வானிலும், நிலத்திலும், கடலிலும் கரைந்து, கலந்து வானப் பரவெளி, காற்று வெளி, கடல் நீர்ப் பரவெளிகளை  விஷ தோஷத் தன்மை உடையவைகளாக ஆக்குகின்றன. எனவே ஒவ்வொரு மனிதனின் கெட்ட எண்ணமும், தீய வார்த்தைகளும் குடும்பத்தையும், சமுதாயத்தையும், சுற்றுப் புறச் சூழ்நிலைகளையும் புகைபிடிப்புப் பாதிப்புகள் போல நிறையவே பாதிக்கின்றன.

குப்பையில் மாணிக்கமாய்க் குப்பைச் சித்தர்!

இதற்காகவே, குப்பைச் சித்தர் எனும் அற்புதச் சித்தர்பிரான் எப்போதும் மல்லிகை மணம் இயற்கையாகவே கமழக் கமழ, குப்பைகளின் ஊடே எப்போதும் அமர்ந்து, தவம் புரிந்து ஜீவன்களின் மனக் குப்பைகளைச் சுத்திகரிக்கும் அதியற்புத இறைப் பணிகளை அன்றும், இன்றுமாய், என்றுமாய் ஆற்றி வருகிறார், அனைத்துலகங்களிலும் பவனி வருபவர்.

எனவே குப்பைச் சித்தரைச் சிந்தையில் வைத்து, தினமும் கோயிலில் குப்பைகளை அகற்றி வரும் எளிய அறப்பணியை ஆற்றி வந்தால், பாக்யம் உள்ளோர்க்குக் குப்பைச் சித்தரின் தரிசனமும் கிட்டும்.

மனிதனுடைய உடலில் தோன்றும் வியர்வை, மல மூத்திராதிகள் யாவுமே கர்ம வினைகளின் விளைவுக் கசிவுகளே ஆகும். மல, மூத்திராதிகளைக் கடந்த நிலையே நிர்மல நிலையாகும். இது பெறுதற்கு அரிய நிலை! கலியுக அற்புதச் சித்தரும், என்றும் வாழும் ஏகாந்த ஜோதியுமான பூண்டி மஹான் இத்தகைய தெய்வீக உத்தம நிலைகளை மானுட சரீரச் சட்டையில் நிரூபணம் செய்து காட்டி உள்ளார். எனவே மல, மூத்திராதிகளைக் கழிக்கும் நிலை இருக்கும் வரை, மனிதன் கர்ம வசப் பட்டவனாகவே இருக்கிறான். எனவே அவரவர் உடற்பாங்கில் இருந்தே அவரவர் உளப்பாங்கையும் அறியலாகும்.

மகம் புனிதமாக்கும் அகம்

ஒவ்வொரு மனிதனுடைய தீமையான உள்எண்ணங்களும், உட்செயல்களும், உணர்வுகளும், உள்வார்த்தைகளும் ஒவ்வொரு வெளி அங்கத்தையும், மனிதனுக்குள்ளும் வெளியிலுமாகவும், பரவெளியிலும் பலத்த விஷகரமான தோஷங்களுக்கு ஆளாகின்றன. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதாம் இவற்றை ஓரளவு நீக்க வல்லதாக, நம் முன்னோர்கள், கடலருகில் கோயில் கொண்டுள்ள மூர்த்திகள், அருகில் உள்ள கடல் தீர்த்தத்திற்கு, ஆற்றுக்குக் குறிப்பிட்ட விசேஷமான நாட்களிலும் அல்லது மக நட்சத்திர நாளிலும் தீர்த்தம் அளிக்கும் நல்உற்சவமாக அளித்துள்ளனர்.

இவையாவும் தற்காலத்தில் பெரிதும் மறைந்து வருதலால்தான் கடலில் கலக்கும் துர்சக்திகள் மாய்க்கப்படாமல் கடலிலேயே தங்கி, ஆழிப் பேரலைகளாக, புயலாக, சூறாவளியாக வந்து பாதிக்கின்றன. அதாவது மனித சமுதாயம் செய்தனவற்றின் பலாபலன்களே மனித சமுதாயத்தை ஊழ்வினைகளாக வந்து உறுத்துகின்றன.

இவ்வாறாக, கடல் நீரில் பலவிதமான தீய சக்திப் படிவுகள் இருப்பதால் தான் சாதாரணமாக மனிதர்கள், அமாவாசை, கிரகண நாட்கள் தவிர, தினந்தோறுமே கடலில் நீராடக் கூடாது என்ற நியதியும் உண்டு. ராமேஸ்வரம், வேதாரண்யம் போன்ற பித்ரு முக்தித் தலங்களை எப்போதும் பித்ருக்கள் கட்டிக் காப்பதால் இத்தகைய இடங்களில் எப்போதும் நீராடிடலாம்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் ஆற்றுதலால், ஐவகைப் பஞ்சபூத சக்திகளும் அந்தந்த நிலப்பகுதிகளில் உள்ள நிலம், நீர், அக்னி, காற்று, ஆறு, குளம், கடல், வான்வெளிகளைச் சுத்திகரிக்கின்றன என்பதை நாம் அறிவோம். மேலும் குடமுழுக்கு வைபவத்திற்கான பணிகளில் லஞ்சம், நாணயமின்மை, ஆலயச் சொத்துக்கள் மற்றும் நிலங்கள் அபகரிப்பு, ஆலயத்திற்கான குத்தகை வாரங்களைச் சரியாக அளக்காமை, ஆலய இடங்களுக்கு மிகக் குறைந்த வாடகை அளித்தல் போன்ற அதர்மச் செயல்கள் நடந்தால், இவையும் கடல் கொந்தளிப்புகள், ஆழிப் பேரலைகளுக்குக் காரணமாகின்றன.

கடலாடும் கடவுள் உற்சவம் தேவை

இறை மூர்த்திகளுடைய கடல் நீர் தீர்த்த வாரி உற்சவம் முறையாக நிகழ்ந்து வந்தால், சூறாவளி, புயல், ஆழிப் பேரலை வரும் விதி நியதிகளையே மாற்றி விடலாம். எனவே, ஆண்டுதோறும், ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது 108 இறை மூர்த்திகளுடைய கடல் நீர் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ந்தாக வேண்டும். அப்போதுதான் நாட்டில் ஓரளவு சமுதாய சுகந்தம் சாந்தம், அமைதிப் பரல்களுடன் நிலவும், மேலும் தேவமொழி மற்றும் தமிழ் மாமறையாளர்களுக்குத் தினமுமே பத்து மணி நேரம் வேதமோத வேண்டிய லட்சியக் கடமைகள் உண்டு. இக்கடமையில் இவர்கள் தவறினால் இதுவும் சமுதாயத்தைப் பல்வகைகளிலும் பாதித்து முறையாக மறையோதாப் பாவமும், முறையாக மறையோதாமையால் சமுதாய பாதிப்பிற்குக் காரணமான பாவமும் சேர்ந்து வந்து இவர்களை வல்வினைகளாக வந்தழுத்தும். எனவே வேதாகமர்கள் மற்றும் ஆலயப் பூஜகர்கள் கரணம் தவறினால் பிறவிப் பெருங்கடன் என்ற வேதவாக்கியத்தை உணர்ந்து நன்முறையில் பரந்த உள்ளத்துடனும், பொருட் செல்வத்தை நாடாது, அருட்செல்வப் பாங்குடன் வாழ்தல் வேண்டும்.

“நீருக்குள் நெருப்பு”

கலியுகத்தில் பசு வடிவில் வரும் தர்ம தேவதை, ஒற்றைக் காலில் நிற்பதை மிகவும் வேதனையுடன் உரைப்பர். அந்த அளவிற்கு அதர்ம சக்திகள், தற்போதையக் கலியுக பூமியில் பெருத்துக் கிடக்கின்றன. முதலில் கடல் அமைப்பு என்பதே மிகவும் அற்புதமான இயற்கை வடிவுகளுள் ஒன்றாகும். கடல் அலைகள் வெறுமனே பார்த்து ரசிப்பதற்காக அமையவில்லை. சாதாரணமாகவே, கடல் அலைகள் உயர்ந்து உயர்ந்து எழுந்து வருகையில் நீருக்குள் ஒரு விதமான அக்னி சக்தி ஏற்படும். இதனையே “நீருக்குள் நெருப்பு” என்று சித்தர்கள் உரைக்கின்றனர். கிணற்று நீர் சீர்மையான உஷ்ணமாக இருப்பதைப் பலரும் அறிவர். இதற்கு “ஜலபுஷ்பாக்னி” என்று பெயர். புதிதாக மலர்ந்த தாமரை மலருக்குள் கை வைத்துப் பார்த்தால் சூடாக இருப்பதை நன்கு உணரலாம். வேதசக்திகளை அக்னிப் புஷ்ப சக்திகளாக பெற்றுத் தருவதை இது குறிக்கின்றது. மந்த்ரப் புஷ்பம் என்பதாகப் பூஜை முடிவில் கைகளில் மலர்களைத் தாங்கி ஓதும் ஒரு வகை வேதமந்திரங்களில் நீர், காற்று, நெருப்பில் நிறையும் வேதாக்னி சக்திகளைப் பூக்கள் மூலமாக, சந்திர மண்டலக் கிரணங்கள் மூலமாகவும் பெறும் மந்திர ஜபிப்பு முறையும் உண்டு.

இந்த “ஜலபுஷ்பாக்னி” உஷ்ணமானது, பரவெளியில், அதாவது காற்று, ஆகாயம், வானத்தில் சேர்க்கப்படும் போது, வானத்தில் மிதந்து கிடக்கும் பலவிதமான தீய எண்ணங்களும், அவற்றின் விஷத் தன்மைகளும் ஓரளவு பஸ்மம் செய்யப்படுகின்றன. மனித மனதில் அவ்வப்போது கிளைக்கும் முறையற்ற காம எண்ணங்கள், பொறாமை, பேராசை, பகைமை, குரோதம், விரோதம் போன்ற விஷமான தீய எண்ணங்கள், எப்போதும் தீய எண்ண அலைகளாகவே இரா! குறித்த காலத்திற்குள் அவை கரைத்து தீர்வு செய்யப்படாவிட்டால் விஷக் கனல் எண்ணங்களாக மாறிவிடும்..!

கடலுறைக் கவின் வேத சக்திகள்

கடல் அலையில் எழும் உஷ்ணமானது, வேத மறைகளில் எழும் உஷ்ண சக்திகள் பலவற்றிற்கும் ஈடானதாகும் உண்மையில், கடல் அலையில் எழுகின்ற சப்தம் பலவிதமான பீஜ சக்திகளைக் கொண்டிருக்கும். கடலில், இறை மூர்த்திகளின் தீர்த்தவாரி உற்சவங்கள் நிறையவே நிகழ நிகழத்தான் அலைகளில் வேத சக்திகள் பெருகும். ஆனால், கடலில் தீய சக்திகளும், தீய எண்ணங்களும் பெருக்கெடுத்தால் அலைகளில் வேத சப்த சக்திகள் மங்கி விடும். இதுவும் இயற்கைச் சீற்றங்களுக்குக் காரணமாகின்றது.

பூகம்பம், சூறாவளி, வெள்ளம், புயல், ஆழிப்பேரலை போன்ற பலவும் இயற்கைச் சீற்றங்களாகிட இவற்றை இயற்கை தரும் தண்டனைகளாக சமுதாயத்தில் உண்மையாகவே உலகெங்கும் கருதுகின்றனர் அல்லவா! இது வேத சத்தியப் பூர்வமான வாக்கே! சமுதாயத்தில் தர்மம் தழைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஆற்ற வேண்டிய ஆன்மீகக் கடமை, மனித வாழ்க்கையின் லட்சியமானதாக உண்டு. ஆனால், இதனையும் ஆற்றாமல், அதர்மக் காரியங்களையும் செய்து வந்தால், ஒன்றுக்கு இரண்டு மடங்காக வல்வினைகள் மேற்கண்ட சீற்றங்களாக வந்து சேருமே!

எனவே, சமுதாயத்தில் சாந்தம் நிலவுவது என்பது, அந்தந்த நாட்டு, அந்தந்தப் பகுதியின் மனித சமுதாயத்தில், அனைத்து இல்லங்களிலும் அனைவரும் ஆற்ற வேண்டிய பூஜா பலன்களால் ஏற்படும் நல்வர விளைவுகள் ஆகும். வாழ்க்கை வசதிகள் பெருகுவது சாந்தம் ஆகாது, புண்ய சக்திகளால் வாழ்க்கை வசதிகள் வந்து அமைகின்றன. உலகம் இயங்குவது இறையருளால் என அறிதல் வேண்டும்.

பூசனைகள் பலவிதம்!

பூஜைகள் என்றால் அர்ச்சித்து, கண்டாமணி ஒலித்து ஆற்றும் பெரிய விஸ்தாரமான பூஜை என்று மட்டும் பொருள் அல்ல, நெற்றிக்கு விபூதி, குங்குமம், சந்தனம் இடுவது முதல், கோலம் இடுதல், மாங்கல்யம், பூணூலைத் தொட்டு வணங்குதல், பெரியோர்களை வணங்குதல், ஆலயத் தரிசனம், கோபுரத் தரிசனம், புனிதமான ஆற்றில் நீராடல், வழியில் ஆலயங்களைக் கண்டால் சற்று நின்று, வாகனத்தை முடிந்தால் நிறுத்தி, இறங்கிச் சென்றோ, கார், பஸ்ஸில் சென்றால் கையெடுத்துக் கும்பிட்டு வணங்குதல், பசு, நாய் போன்ற மிருகங்களுக்கு உணவளித்தல், வயதானோர், முதியோர்களுக்கு உதவுதல், பாதையில் உள்ள முட்கள், கற்களை அகற்றுதல், அனைவரிடமும் இனிய அன்பான வார்த்தைகளைப் பேசுதல், உணவு ஏற்கும் முன் நன்றிப் பூர்வமாக உணவை இறைவனுக்கு அர்ப்பணித்தல், ஏழைகள், வறுமையில் வாடும் கர்ப்பிணிகள், முதியோர்கள் போன்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தல், கோயிலில் உள்ள குப்பைகளை அகற்றுதல் போன்ற பலவுமே பூஜைகளாகவே ஆகின்றன.

நெற்றியில் திருநீறு, குங்குமம் இட்டு வெளியே செல்கையில் அதுவே நூற்றுக்கணக்கானோருக்கு விபூதி, குங்குமத் தரிசனமாகக் கிட்டுகையில் பலருடைய மனதிலும் நல்ல எண்ணங்களுக்கு வித்திடுவதால், விபூதி, குங்குமம், சந்தனம் இடுதலும் மகத்தான தெய்வீகச் சேவையாகும் என்ற தெய்வீக இரகசியத்தை இனியேனும் உணர்ந்திடுக!

இவ்வாறு ஒவ்வொருவரும் தானாகவும் தத்தம் குடும்பத்திலும் ஆற்றுகின்ற சிறு சிறு அறப்பணிகள், பூஜைகள், தான தர்மங்கள் தாம் சமுதாய சாந்தத்திற்கு வழி வகுக்கின்றன என்பது புலனாகின்றது அல்லவா! சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தத்தமக்குரிய இத்தகைய இறைக் கடமைகளில் இருந்து தவறுகையில் இவை சமுதாயத்தில் “ஜலபுஷ்பாக்னியின்” சாபங்களாக மாறி, கடல்வழித் துன்பங்கள், விபத்துகள், வன்முறைகள் போன்றனவாக வந்து தாக்குகின்றன என அறிதல் வேண்டும்.

இதற்கு நாம் காரணம் ஆகலாகுமா? நன்றாக ஆத்மவிசாரம் செய்து திருத்திக் கொள்க!

ஆலங்குடி ஸ்ரீஅபயவரதராஜர்

விஷ்ணுபதி புண்யகாலத் தலம்! ஆலங்குடி ஸ்ரீஅபய வரதராஜப் பெருமாள் ஆலயம்

ஓம் நமோ நாராயணாய ஸ்ரீமத் ராமானுஜாய நம:
திருமால் நெறி வழி! திருத்தொண்டர் செயல் வாழி!

ஸ்ரீஅபயவரதராஜ பெருமாள்
ஆலங்குடி

ஸ்ரீபெருந்தேவி ஆலங்குடி

விஷ்ணுபதி நாள்: 15.5.2005

கலியுக வரதர்கள் பலர் உண்டு. இங்கு ஆலங்குடியில் ஸ்ரீஅபயவரதராஜராகப் பரிமளித்து அருள்வது கலியுகத்தில் நமக்குப் பெரும் பாக்யமாகும். எத்தகையத் துன்பங்களின் ஊடேயும் “வரதா அபயம் தா!” என வேண்டிடில் அபயந் தந்து காத்தருளும் பெருமாள்.

அற்புதமான குரு தலங்களில் ஒன்றான ஆலங்குடியில், பெருமாளப்பர் திருமகள் சமேதராய், ஞானக் கடவுளாம் ஸ்ரீதட்சிணாமூர்த்தியைப் பூஜித்து, பிள்ளை வரம் வேண்டி, மங்கள மாதவனைத் தம் தெய்வப் புத்திரனாகப் பெற்றத் திருத்தலம் இதுவேயாம். ஸ்ரீஸூக்தம் எனும் வேதத் துதியில் லக்ஷ்மீ புத்திரர்களைப் பற்றிய குறிப்பு வருகின்றது.

சக்கராயுதத்தைப் பிரயோகிக்கும் நிலையில் அருளும் தெய்வ மூர்த்திகளின் ஆயுதங்கள் யாவுமே சித்தர்களின், மாமுனிகள் அருந்தவம் புரிந்து அடைந்த நிலைகளே ஆகும் என நாமறிவோம் எனவே தெய்வாயுதங்கள் எனில் வதைப்பதற்கே என்ற எண்ணம் கொள்ளல் வேண்டாம். அசுரர்கள் எந்தத் தெய்வ மூர்த்திகளால் தபோ பலன்களையும், நல்வரங்களையும் பெற்றார்களோ அவற்றாலேயே தெய்வங்களை எதிர்த்தமையால் தெய்வாயுதங்கள் பயனாயின!

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தமையால் பாற்கடலில் ஆலகால விடம் திரண்டதல்லவா! பாற்கடலில் விஷம் எவ்வாறு வர இயலும்? கயிறாயமைந்த வாசுகியின் திருமேனி அழுந்தியமையால் சிறிது விஷம் வெளி வந்ததெனினும் பாற்கடலிலிருந்து பெருங்கோளமாக விடந் திரண்டதற்கு எண்ணற்றக் காரணங்கள் உண்டு. அமிர்தத்தை உண்டு சாகாவரம் பெறுதல் வேண்டும் என்ற பேராசையும், தாமே அமிர்தம் உண்ணல் வேண்டும் பிறருக்குத் தரலாகாது என்பதும் விஷமான எண்ணந்தாமே! தேவர்களும், அசுரர்களும் தமக்கென அமிர்தம் வேண்டிக் கடைந்தார்களேயன்றி, அவர்கள் அண்டசராசர ஜீவன்களுக்கும் அமிர்த சக்தி சென்றடைதல் நன்று என எண்ணாததும் விஷமயச் சுயநலந்தானே!

பேராசையும், சுயநலமும் பெருவிஷமே!

பாற்கடலில் கிளம்பிய விஷம் கண்டு, அண்டசராசரங்களிலும் இருந்த விஷ சக்திகள் கோபமுற்று, தம்மைப் பாற்கடலில் இருந்து பிரித்த அசுரர்கள் மற்றும் தேவர்களின் மேல் சினம் பூண்டு, மாபெரும் விஷக் கோளாக்னியாய் வடிவெடுத்து, அவர்களைத் துரத்தின.

ஆலகால விடத்திற்கு அஞ்சி, எத்தனையோ அண்டங்களில் தேவர்களும், அசுரர்களும் பதுங்க முயற்சித்தாலும், ஆலகால விடமோ தேவர்களையும் அசுரர்களையும் துரத்துவதையும் சற்றும் நிறுத்தவே இல்லை. ஆலகால விஷம் அவர்களை அதிவேக உஷ்ணத்துடன் துரத்தியதெனில், இது ஒரு நாளில் நடந்து முடிந்த சில மணி நேர அனுபூதிக் கூத்தல்ல!

ஸ்ரீஆஞ்சநேயர் ஆலங்குடி

ஜடமாக நாம் நினைக்கும் வெறும் விஷக்கோள உருண்டையானது பூமியளவுக்கு மேல் பெருவடிவு கொண்டு, வேத, மந்திர சக்திகளில் வல்லவர்களான முப்பத்து முக்கோடித் தேவர்களும், லட்சக்கணக்கான அசுரர்களையும் பிரபஞ்சத்தில் எங்கெங்கோ பதுங்கிட்டாலும் அத்தகைய லோகங்களை எல்லாம் தீர்க தரிசனமாக அறிந்து துரத்தியதெனில், நன்கு விஷயமறிந்த விஷக் கோள உருண்டை அல்லவா அது! இறைவனின் திருக்கண்டத்தில் தரிக்கப்பட்டதெனில், இதற்கான கோடானு கோடிக் காரண, காரியங்களையும் அறிதல் வேண்டும். இந்த விஷக் கோளப் புராணமே பெரிதாகி விரியும்.

ஆதவ ஒளியும், அருமதி ஒளியுமிலா அண்டங்களும் உண்டே!

மேலும் பூலோகமதில்தான் இரவும், பகலும் 60 நாழிகைகளும் கூடிய நாள் கணக்கு உள்ளது, இதற்கு அப்பாற்பட்டதான தேவகால அம்சங்கள் மனிதப் பகுத்தறிவுக்கு எட்டாத ஞானப் பெருநிலையில்தான் அறிவதெனில், ஆலகால விடந் துரத்தித் தேவர்களும், அசுரர்களும் அலைந்த காலமானது, நீண்ட நெடுங்காலம் என்று மட்டும் தற்போதைக்கு உணர்க!

பூமிக்கான 60 நாழிகை (24 மணி நேரக் கணக்கு) நம் பூமிக்கு மட்டுமே! தேவ லோகக் கணக்கு வேறுவிதமானது. சூரிய, சந்திர கிரகங்களின் ஒளியில்லாத, சுயம்புப் பிரகாசமுடைய விண்ணுலக லோகங்கள் சிலவற்றில், பூஜைச் சங்கல்பங்களால் அங்கு காலக் கணக்கு மாறுபடும்.

நஞ்சு துரத்தியமையால் பன்னெடுங் காலம் அண்ட சராசரமெங்கும் ஓடி ஒளிந்த தேவர்களும், அசுரர்களும் தோல்வியுற்று, “அபயம்! அபயம்! ஆதிமூர்த்தியே!” என அபயக் குரல் கொடுத்து, சர்வேஸ்வரனிடம் அபயம் தர வேண்டினர். உடனே இறைவனும்,

“சுந்தரா, ஏந்துவாய்! பந்தாய் விடத்தை!”

-என்று அருளாணையிட, திருக்கயிலாயத்தில் சுந்தர மூர்த்தி நாயனாரும், பல அண்டசராசரங்களிலும் மிகப் பெரிதான அக்னிக் கதிர்கள் சிவந்து விரிக்கும் ஆலகால விஷக் கோளப் பந்தைச் சுந்தரர், தம் திருக் கரங்களில் ஒரு சிறு நாவல் பழமாய்த் தாங்கி, நந்தி மூர்த்தியிடம் அளித்தார். இதைக் கண்டு தேவர்களும், அசுரர்களும் திகைத்தனர்.

ஈஸ்வரனோ நந்தியிடமே இதனை நேரிடையாக் கூறி இருக்கலாமே! இடையில் சுந்தரனாருக்கு யாது பங்கோ? இதிலும் ஆண்டவன் பல லீலைகளைப் பிணைத்திட்டாரே! ஆலகால விஷப் பெருங்கோளத்தைத் தம் சிறு உள்ளங்கையில் நாவல் கனியாய்த் தாங்கிய சுந்தரரோ அடக்கத்துடன் கை கூப்பி நின்றிருக்க,

ஸ்ரீகருடாழ்வார் ஆலங்குடி

“அனைத்து தேவர்களையும், அசுரர்களையுமே துரத்தித் துரத்தி வந்த ஆலகால விடத்தைத் தாமோ வெகு சாதாரணமாகக் கையிலேந்தி இறைவனிடம் அளித்தோமே!” என்ற எண்ணம் சற்றே உதித்தமையால், நந்தீஸ்வரர் தேவர்களைப் பார்த்துப் பெருமிதத்தால், சற்றே ஒட்டிய அகங்காரத்துடன் சிரித்திடவே...

அச்சிரிப்போ, எவ்வகையிலும் திருத்த இயலாதச் சிரிப்பாய் ஆகி விடவே, நந்தி சிரித்துக் கொண்டே இருந்தார். அவரால் சிரிப்பை அடக்க இயலவில்லை! இதற்காகவே பிராயச்சித்தம் தேடி, ஸ்ரீராமரின் புதல்வர்களான லவனும் குசனும் பூஜித்த சென்னை – கோயம்பேடு ஸ்ரீகுறுங்காளீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து நந்தியார் வழிபட்ட பின்னரே, அம்பிகையும் இரக்கங் கொண்டு, மனங் கனிந்து, நந்திக்கு அருளிட முன் வந்தாள்.

நந்தி மூர்த்தியின் நிறுத்த முடியாத வகையிலான சிரிப்பை, ஈஸ்வரனின் அருளால் நிறுத்தி, உலகன்னை அருள்பாலித்தவுடன்தான், திருநீலகண்டப் பெம்மானாகிய இறைவனும் நந்தியெம்பிரானை மன்னித்து நந்தியின் திருக்கொம்புகளில் நடனமாடிட இதுவே திரயோதசித் திதி நடனமாக பிரதோஷ நடனமாக ஆயிற்று, இப்பிரதோஷப் புராண அனுபூதிகளை நாமறிவோம் தானே! இவ்வாறு அம்பிகையே முன் வந்து நந்திக்கு அருளிய கோலமே “நல்ல மங்கை” அம்பிகைக் கோலமாகும்.

இவை தவிர ஆயிரமாயிரம் இறை லீலைகளும் பாற்கடல் வைபவத்தில் நடந்தேறின! இவற்றை, எழுதாக் கிளவியாய், சித்தர்களின் குருவாய் மொழியாய் மட்டுமே மலருவதான, சித்தர்களுடைய “இருடிகள் ராமாயணம், இருடிகள் பாரதம்” மூலமாகவே அறிதல் கூடும்.

ஆனால், இந்த பிரதோஷ அனுபூதியைப் பல வரிகளில் இங்கு உரைத்தாலும் இத்தகைய இறையனுபூதிகள் யாவும், பன்னெடுங் காலத்திற்கு அண்டசராசரமெங்கும் நிரவி நடந்த புராணச் சம்பவங்களாகும். ஆதிசிவனாரின் பிரதோஷத் திருநடனத்தில் எண்ணற்ற சிவாவதாரத் தோற்றங்கள் உருக்கொண்டன. பல அண்டங்கள் சிருஷ்டிக்கப் பெற்றன. பாற்கடலிலும் கௌஸ்துபம், கற்பக விருட்சம் போன்று எத்தனையோ அருட்பொருட்கள் விளைந்தன.

சந்திரர் வந்தாரே!

திருமகளும், சந்திர மூர்த்தியும் பாற்கடலில் தோன்றிய போது, தேவர்களும், அசுரர்களும் இவர்களைத் தத்தம் லோகங்களில் நிலை நிறுத்திடப் போட்டியிட்டார்கள். ஆனால் சந்திரனுடைய ஒளிப் பரவசத்தைக் கண்டிட்ட மும்மூர்த்திகளும், சந்திர மூர்த்தியை வானில் நிறுவி, “சந்திரனின் மதியொளிப் பிரகாசப் பரவசம், அனைத்து லோகங்களையும், ஜீவன்களையும் சென்றடைவதாக!” என்ற நல்வரத்தைச் சந்திர மூர்த்திக்கு அளித்த தினமும் ஒரு யுகத்தின் விஷ்ணுபதிப் புண்ய காலமாகும்.

இவ்வாறு மும்மூர்த்திகளிடம் நல்வரம் பெற்றுச் சந்திர மூர்த்தி, முதன் முதலில் வானில் ஒளிப் பிரகாசம் கொண்ட தலமே நவகிரகச் சந்திரத் தலமான திங்களூர் ஆயிற்று.

திங்களூர் சிவாலயம்

பெருமாளுடைய சக்ராயுதம் அசுரர்களை அழித்திட மட்டுமே என்று பலரும் எண்ணுகின்றனர். பெருமாள் அணிந்திருக்கும் புஷ்ப மாலைகள், ஆபரணங்கள், வஸ்திரங்கள், மலர்கள், திருப்பாதணிகள் அனைத்துமே சித்தர்களும், மகரிஷிகளும் தவமிருந்து பெற்றனவாகும். இறையடியார்களின் பக்தி மேன்மையைப் பற்றி உரைக்கையில், இறைவன் திருமேனியில் ஆபரணங்களாய். ஆடைகளாய், திருப்பாத ரட்சையாய்த் துலங்குவதோடு, பெருமாளைத் தரிசிக்க வரும் பக்தர்கள் நடக்கும் மலைப் படியில், ஆலய வாசற்படிகளாய் அமையும், தாங்கும் பாக்யத்தைப் பெறுவதிலும் பரமான்ந்தம் கிட்டுவதும் உண்டு. எனவே, பெருமாள் தாங்கி இருக்கும் சங்கு, சக்ராயுதம் யாவையும் ஜீவன்களை உய்விப்பதற்கேயாம்!

அமிர்தத்தை விடுத்து அலைவது ஏனோ தேவர்காள்!

பாற்கடலில் விளைந்த பொருள்களைப் பெற்றிட அசுரர்களும், தேவர்களும் போட்டியிட்ட போது, சங்கு, சக்ரதாரியாய் வரதராஜப் பெருமாள் ஆங்கே தோன்றிடவே, அப்போதுதான் அவர்களுக்குத் தாங்கள் அமிர்தம் பெறவே பாற்கடல் வளாகத்திற்கு வந்தது புரியலாயிற்று. எனவே, அவரவருடைய தெய்வீகக் கடமைகளையும் உணர்த்துவதும் அபயவரதர் தாங்கும் சக்ராயுதத்தின் பாங்காகும். பெற்ற தாய்க்கு, தந்தைக்குச் செய்ய வேண்டியதை ஆற்றாதவர்களுக்கு இதுவே பித்ரு சாபமாய் நஞ்சு வடிவு கொண்டு துரத்தும், எனவே இவர்கள் அபயவரதரிடம் சரணடைந்து தக்க நிவர்த்திகளைப் பெறுதல் வேண்டும்.

ஸ்ரீகல்யாண நரசிம்மர் ஆலங்குடி

பாற்கடலில் தோன்றிய திருமகளைத் தன் மார்பில் ஏற்று முதலில் சங்கல்பித்த ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, லட்சுமி கடாட்ச சக்திகளைப் பூவுலகில் நிரவிடச் செய்தார். திருமகள் தேவியும் பூவுலகில் பல இடங்களில் தவம் புரிந்து, திருமாலின் பல்வேறு அவதாரிகைகளையும் தரிசித்துப் பேரானந்தம் அடைந்தாள். பார்வதி தேவிக்குத் திருமுருகன் வாய்த்தது போல், தனக்குப் பிள்ளை வரம் வேண்டிப் பல தலங்களில் பூஜித்து, பல மகரிஷிகளிடமும் மந்திர உபதேசங்களைப் பெற்று, பல தீர்த்தங்களிலும் நீராடி வழிபட்டு வந்தனள். ஸ்ரீதேவியும், பூதேவியும் லக்குமியைக் கண்டறியாது, இதைப் பற்றிப் பெருமாளிடம் வினவிட, பெருமாளும் பொதிய மலைப் பகுதியில், திருமகள் தவம் புரிவதாகக் கூறிடவே அங்கு சென்று தேடலாயினர்.

திருமகள் பொதிய மலை வளாகத்தில், அகஸ்தியரின் தபோவனத்தில் அருட்தவம் புரிந்து ஸ்ரீஅகஸ்தியரையும், லோபாமாதாவையும் தரிசித்துப் பல அரிய உபதேசங்களாய் “மங்கள மாதவன்” என்ற திருமகளைப் பெற்றாள். இதற்கான அனுகிரகத்தை, அபய வரதராஜப் பெருமாள் தட்சிணா மூர்த்தியிடம் பெற்றுத் திருமகளுக்கு அருளிய விசேஷத் தினமுமே விஷ்ணுபதிப் புண்ய காலமாகும்.

இவ்வாறாக, தேவாதி தேவர்களுக்கும், தெய்வ மூர்த்திகளுக்கும் அருளும் அபய வரதராஜப் பெருமாள் அருளிய விஷ்ணுபதிப் புண்ய கால அனுபூதிகள் நிறையவே உண்டு. அவை யாவும் தக்க சற்குருமார்கள் மூலம் தக்கத் தருணத்தில் உணர்விக்கப் பெறும்.

ஸ்ரீஅபய வரதராஜப் பெருமாள் அருளும் இத்தலத்திற்கு ஆலங்குடி என்பது பன்னெடுங்கால யுகமாகப் பொலிந்து வரும் பெயராகும். ஆலம் என்றால் நஞ்சு என்ற பொருளுமுண்டு. நச்சுத் தன்மை, பொதுவாக, உயிருக்குத் தீங்கு விளைவிப்பதாகும். குடி என்றால் “காத்து நிலை நிறுத்துதல்” என்று பொருள்.

ஆலகால விடமுண்டு விஷத் தன்மைகளை அகற்றும் ஆலங்குடிச் சிவ பூமியில், பெருமாளும் தோன்றி அருள்வது கலியுகப் பூவுலகத்தாருக்குப் பெரும் பாக்யமேயாகும். ஜீவன்களில் மனிதனை மட்டுமே பீடிக்கும் கொடிய விஷ குணங்களாகிய பொறாமை, விரோதம், முறையற்ற காமம் போன்ற நச்சுத் தன்மை உடைய குணங்களும், ஒரு போதும் அண்டாமல் காக்கவும், இவற்றால் பெருந்தவறுகளைச் செய்து வருந்துவோர் திருந்தி வாழவும், ஆலங்குடி அபய வரதராஜப் பெருமாள் நல்வரங்களை அருள்கின்றார்.

ஸ்ரீவரதராஜ பெருமாள் திருத்தலம்
ஆலங்குடி

திருத்திச் சீர்திருத்தும் அபயத் தலம்!

இத்தகைய தீய மனப்பான்மைகளுடன் தீயவர்களாய் வாழ்ந்து வருவோர், உண்மையாகவே மனம் திருந்தி வாழ முன் வந்தால் அவர்களுக்கும் அபயம் அளித்துச் சீர் திருத்திக் காக்கின்ற தலமே அபய வரதராஜப் பெருமாள் தலமாகும்.

திருமண தோஷங்களுமே சிலவிதமான பூர்வ ஜன்ம வினைகளால் தோன்றுவதாகும். நஞ்சைக் கொண்டுள்ள நல்ல பாம்பு, தெய்வீக அம்சங்களைப் பூண்டதாய் விளங்குகிறது. நாகபஞ்சமி நாளில் நாகமே தெய்வ மூர்த்தியாக வணங்கப்படுகின்றது அல்லவா, ஆலங்குடி என்றால் விஷத் தன்மைகளைக் கிரகித்து, பஸ்மம் செய்து நற்சக்திகளாக மாற்றிக் குடி காத்தருளும் எம்பிரானருளும் தலமெனப் பொருள் தரும். எனவே ஆலங்குடி எனில் எத்தகைய நச்சுத் தன்மைகளையும் கிரகித்து, ஜீவன்களைக் காக்கும் தலம் என்பதாகும்.

கால சர்ப தோஷம், நாக தோஷம், ராகுதசை, கேது தசை காலத்தில் எழும் தோஷங்கள், நாக நச்சு வியாதிகளைக் கொண்டவர்களுடைய துன்பங்களைத் தீர்க்க வல்ல தலமே ஆலங்குடி ஆகும். “பிள்ளைப் பேறு” எனப்படும் சந்தான பாக்யம், அஷ்ட மகா ஐஸ்வர்யங்களுள் ஆரோக்யத்துடன் சேர்ந்து போற்றப்படுகின்றது. பித்ருக்களின் நாயகராக ஸ்ரீமஹாவிஷ்ணு விளங்குவதால் பித்ருப் ப்ரீதிகள், பித்ரு ஆசிகளிப் பெற்றிட ஆலங்குடி அபய வரதராஜப் பெருமாள் அருள்புரிகின்றார். பிரளய காலத்தில் அபயம் வேண்டி வருகின்ற அண்டங்களையும் காப்பவர் காத்தல் பிரானாகிய அபய வரதரே ஆவார்.

விஷந் துரத்தி வந்தபோது, தேவர்களும், அசுரர்களும் திருமாலை நாடிட, அமிர்தத்தைப் பெற வேண்டிய லட்சியத்தில் பாற்கடலைக் கடைந்ததும், பாற்கடலில் தோன்றிய பிறவற்றைப் பேராசையில் பெற விழைந்தமையால் ஏற்பட்ட போராட்டம் ஆனமையால் இதனை அனுபவித்தே ஆக வேண்டும் எனத் துல்லியமாக உரைத்திட்டார். “ஆராதித்து எளிதில் கழித்திடலாமே!” எனப் பேராசையில் வந்தோர்க்கு “அனுபவித்துக் கழித்தலே மேல்!” என அமுதமயமாய்ப் பெருமாள் உரைத்திடவே, தேவர்கள், அசுரர்கள் அனைவரும் தங்கள் தவறுகளை உணரலாயினர்.

இதன் பிறகே மும்மூர்த்திகளும் முன்னின்று பாற்கடலில் விளைந்தவற்றைப் பரமனருளால் பகுத்துத் தந்தனர். உச்ரவஸ் எனும் தேவ குதிரையை இந்திரன் பெற்றிட, ஒளிப் பிரகாசமாய் ஆங்கே தோன்றிய திருமகளைப் பெருமாள் ஏற்றார். மச்சேந்திர வர்தமானப் புராணத்தில் இவை நன்கு விளக்கப் பெறுகின்றன.

நிற்பதெல்லாம் நெடுமாலே
ஆலங்குடி

“அபயம் அளித்தல்” என்பதற்கு எண்ணற்றப் பல அர்த்தங்கள் உண்டு. அபயம் என்றால் பயந்தோர்க்கு, துன்பத்தில் உழல்வோர்க்கு, ஆபத்துகளில் இருப்போர்க்கு அருள் அளித்து ஏற்றல் என்பது மட்டும் இதன் பொருளன்று. அபாயமான சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாது ஆழ்ந்து தவத்தில் நிலை கொண்டிருக்கும் சித்தர்களுக்கும், மகரிஷிகளுக்கும், பிரகலாதனைக் காத்தது போல, அபயம் தந்து இறைவனே முன் வந்து அவர்களை ரட்சிப்பதும் உண்டு.

பாற்கடலில் தோன்றிய லட்சுமி தேவிக்கும், பரந்தாமனாகிய பெருமாளே அபயம் தந்து ஆட்கொண்டார். முதலில் தம் மார்பில் இடம் தந்து ஏற்றிடச் சங்கல்பம் எடுத்துரைத்துப் பிறகு, பூவுலகில் பல கோடி வளங்களையும் பெற்றுத் தர திருமகளுக்கு அவதார சக்திகளைத் தந்து, மகாலட்சுமி, ஆதிலட்சுமி, வித்யா லட்சுமி எனப் பல திருமகள் அவதாரிகளைகளைத் தோற்றுவித்து, பக்தர்களின் பிறவித் துயர்களுக்குத் தீர்வு தந்தருளினார். திருமகளையும் தம் திருமார்பில் ஏற்றார்.

 ஆக, திருமாலை மணந்தது, லட்சுமி கடாட்ச சக்திகளைத் திருமகள் அவதார சக்திகளாகப் பெற்றது, அஷ்ட லட்சுமி தேவிகளாக அவதாரங்களைக் கொண்டது, பசு, வில்வம், அரிசிப் பானை, தாமரை போன்ற லட்சுமி கடாட்சத் திரவியங்களைப் பூவுலகில் நிரவியது, அனைத்திற்கும் மேலாகத் திருமாலின் திருமார்பில் பதிந்தது – ஆகிய ஐந்து லட்சுமி ஸ்ரீதனங்களைத் திருமகள் பெற்றதும், பல யுகங்களின் விஷ்ணுபதிப் புண்யகால அனுபூதிகளே ஆகும்.

இவை பலவும் நிகழ்ந்த திவ்யத் திருமால் தலமாக, ஆலங்குடி திகழ்கின்றது.

லக்குமியாம் திருமகளை ஏற்றவுடனே, பெருமாளுக்கே அதீதப் பிரகாசத் தன்மை பெருகியதாகச் சித்தர்களும், மகரிஷிகளும் போற்றி மகிழ்ந்தனர். பாற்கடலில் உதித்தக் கற்பக விருட்சத்தில் அனைத்துத் தருக்களும் (மூலச் செல்வக் கருக்கள்) அடக்கமாகும். கேட்டதை எல்லாம் தரும் கற்பக விருட்சம் இருக்கும் இடமே இலக்குமி கடாட்சம் நிறைந்த இடமாகும். எனவே, பாற்கடலில் இருந்து திருமகள் வெளிவந்து விட்டமையால், தாம் லக்குமியின் நிழலாக எப்போதும் துலங்க வேண்டும் என்ற வரத்தைக் கற்பக விருட்சம் வேண்டியபோது, இவ்வரிய நல்வரத்தைக் கற்பக விருட்சத்திற்கு அளித்த பெருமாளே அபயவரதராஜப் பெருமாள் ஆவார். கற்பகத் தருவிற்கும் கனிந்த அபயம் தந்தவர் ஆதலால் ஆலங்குடிக்குக் கற்பகபுரி என்ற பெயரும் உண்டு. இவை நிகழ்ந்ததும் பிறிதொரு விஷ்ணுபதிப் புண்யகால அனுபூதியில்தாம்!

அமிர்தத்தினும் அமிர்தமான நெல்லிக்கனி

பாற்கடலின் அமிர்தத் தன்மைகள் நிறைந்த அபூர்வமான பொருட்கள் பூவுலகிலும் உண்டு. பாற்கடலில் அமிர்தம் முகிழ்ந்தவுடன் இவற்றின் அமிர்தத் தன்மைகளும் பெருகின. நெல்லிக் கனிக்கு அமிர்தமாகிய இனிப்புத் தன்மை உண்டு. சிறிது நீர் அருந்தினால் தித்திப்பு உண்டாகும். இந்த இனிப்பு சற்றும் திகட்டாத இனிப்பாகும். ஆனால் வழக்கில் “நெல்லியை உண்ட பின் நீர் அருந்தலாகாது, இரவில் நெல்லிக் கனியை உண்ணக் கூடாது” எனச் சொல்வதுண்டு, இதற்கும் பல காரணங்கள் உண்டு.

நெல்லிக் கனியில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் உண்டு. நெல்லியை உண்ட பின், நீரை அருந்தும் போது இனிப்பு தனிமைப்படுகிறது அல்லவா! நெல்லியில் உள்ள அறுசுவைகளும், அதனுடைய தெய்வீக மாண்புகளுடன் ஐக்யமாகி இருப்பதால், இதில் அமிர்த சக்தியைப் பிரித்தல் ஆகாது என்பதற்காகவே “நெல்லியை உண்ட பின் நீர் அருந்தலாகாது!” என்ற முதுமொழி வாக்கு வழக்கும் நிலவுகிறது. இதற்கான தெய்வீகக் காரணங்களும் இன்னமும் நிறைய உண்டு.

ஸ்ரீசனீஸ்வர பகவான்
ஆலங்குடி

பாற்கடலில் இருந்து திருமகள் தோன்றிய போது, பாற்கடல் நீரையும் லக்குமியையும் இணைக்கும் தளமாக விளங்கியதே நெல்லி மரத் தளப் பலகையாகும். அதாவது நெல்லி மரப் பலகைத் தலத்தில், நின்ற நிலையில் பாற்கடலில் தோன்றிய திருமகளை அதில் அமர வைத்து அமர்ந்த கோலத்தில் பெருமாள் ஏற்றபோது, திருமகளின் பிரிவைத் தாங்க இயலாது, நெல்லி மரத் தளம் கண்ணீர் உகுத்தது.

“மகிழ்ச்சியான தருணத்தில் நெகிழ்ச்சியாக, வருத்தம் தரும் கண்ணீரா?” என வியந்த பெருமாள், அபய வரதராஜராகத் தோன்றி, நெல்லி மர தளத்திற்கும் அபயம் தந்து அரவணைத்து, “நின்னுள் எம் வாசம் அமிர்தமாய் நிறையும்! எம்முள் திருமகள்வாசம் அமிர்தத்தினும் அமிர்தமாய் நிலைக்கும்! நின்னுள் என்றென்றும் லக்குமிக் கடாட்சம் அமிர்தக் கடாட்சமாய் பொங்கிடுக!” என்று அருளினார்.

ஸ்ரீஆபத்சகாய ஈஸ்வரர்
ஆலங்குடி

இவ்வாறு, நெல்லி மர தளத்திற்கும் அபயம் தந்து அருளியமையால், நெல்லி மரமானது, மகாவிஷ்ணுவின் வாசத்திற்கு உரித்தானதாயிற்று.

கிராமப் புறங்களில் கிணற்றில் நெல்லிக் கட்டையைப் போடுவதற்குக் காரணம், நீரில் அமிர்தமய இனிப்புத் தன்மை ஏற்படவே ஆகும். இதனால் இல்லத்திலும் லட்சுமி கடாட்சம் நிறையும். நெல்லி மரம் உள்ள இல்லங்களில் மனநிறைவும் லட்சுமி கடாட்சத்துடன் நிறையும். பாற்கடல் நீரினுள் பதிந்து கிடந்தவர்தாமே கூர்ம மூர்த்தி! எனவே நெல்லியில் பலவிதமான திருமால் மூர்த்தியரின் வாசமும் நிறைந்துள்ளது. நெல்லியிலும் சில வகைகள் உண்டு. அனைத்திற்கும் மூத்ததே “அரநெல்லி” விருட்சம் ஆகும்.

நெல்லி மரத்தைப் போஷிப்பதாலும், நெல்லிக் கட்டையைக் கிணற்றில் இடுவதாலும், நீரில் நிலத்தில், இல்லத்தில் லக்குமி வாசம் கொண்டு, பாற்கடல் வைபவ அருளால், ஆதிலட்சுமியாகக் கூடுதல் அனுகிரகமும் கை கூடுகிறது. அதாவது, பாற்கடலில் லட்சுமி வாசம் கொண்டமையால், நெல்லிக் கட்டை மிதக்கும் கிணறும் பாற்கடல் ஆகின்றது. எனவே தான் அபய வரதராஜப் பெருமாளிடம் தீர்த்தம் பெற்றுக் கிணறு, ஆறுகளில் சேர்த்தலால் லட்சுமி கடாட்சம் நிறைந்த நீர் வளம் நிறையும்.

எருக்கு மர விநாயகர் போல, நெல்லி மரத்தில் வடிக்கப் பெறும் பெருமாள் வடிவுகளுக்கு, லட்சுமி கடாட்ச சக்திக் கலைகள் பூரித்து, பரிணமித்து அளிக்கும் மகா நல்வர சக்திகள் நிறையவே உண்டு. மும்மூர்த்திகளின் அருட்பாங்கில் பாற்கடலில் தோன்றிய திருமகளைத் திருமார்பில் மணம் புரிந்து ஏற்றமையால், திருமகளுக்கு அபயம் தந்த கோலத்தில் அபய வரதரஜப் பெருமாளாகவும், மணம் புரிய இருக்கும் கோலத்தில் சுந்தரராஜப் பெருமாளாகவும், மணம் புரிந்த கோலத்தில் மணவாளப் பெருமாளாகவும், அனைத்துப் பெருமாள் மூர்த்திகளுக்கும் அருளும் வரதராஜப் பெருமாளாகவும் பல்வேறு கோலங்களிலும் பல விஷ்ணுபதிப் புண்யகாலங்களில் அவதாரிகைகள் கொண்டார்.

காலமே புண்ணியமாகும் கோலம்!

விஷ்ணுபதிப் புண்ய காலமென, ஒரு பண்டிகைக் காலமே மிகவும் அரிதாகப் “புண்யகாலம்” என அடைமொழியுடன் வரக் காரணமே, விஷ்ணுபதியில் ஆற்றப் பெறும் தான, தர்மங்கள், அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், ஹோமம், தர்ப்பணம், தியானம், ஜபம், யோகம் அனைத்திற்குமே அபரிமிதமான புண்ய சக்திகள் விளைவதாகும்.

மேலும் தெய்வலோக, தேவலோகங்களில் சித்தர்கள், மஹரிஷிகள் ஆற்றும் பூஜாபலன்கள், புண்ய சக்திகளாகப் பூவுலகிற்கும் வந்து பரிணமிப்பதால், தேவலோகங்களுக்கு உரிய புண்யகால அடைமொழி பூவுலகிற்கும் கிட்டுவது நமக்குப் பெரும் பாக்யமே!

ஆதிசிவன் ஆலங்குடியில் விடமுண்ட கண்டராக அவதாரக் கோலங்களைத் தரிசித்த திருமால் மூர்த்திகளும் உண்டு. ஆலத்தை உண்ட அனுபூதியைப் பூவுலகிற்கு அளித்த ஞான சக்திகள் நிறைந்த தலங்களில் ஒன்றே ஆலங்குடி ஆகும். அதாவது, அபூர்வமான ஞானக் காட்சிகளைக் கண்டு உணரக் கூடிய பூலோகத் தலங்களில் ஆலங்குடியும் ஒன்றாகும். இதனால்தான் மகத்தான சிவா-விஷ்ணுத் தலங்களுள் ஒன்றாக ஆலங்குடி பரிமளிக்கின்றது.

ஸ்ரீஏலவார்குழலி அம்மன்
ஆலங்குடி

ஆலங்குடியை நவகிரக தலங்களுள் குருமூர்த்திக்கு உரிய தலம் என்று மட்டுமே பலரும் அறிவர். இனியேனும் ஆலங்குடியில் ஸ்ரீதட்சிணாமூர்த்தியைத் தரிசிப்பதோடு, ஸ்ரீஅபய வரதராஜப் பெருமாளையும் தரிசித்துப் பக்த கோடிகள் பன்மடங்காய் நல்வரங்களைப் பெறுவார்களாக!

வரம் என்றால் புதிதாகக் கிளைக்க வேண்டும் என்பது மட்டும்தானா? இறைவன் அளித்துள்ள கண்கள், காதுகள், அவயங்கள் யாவும் ஒவ்வொரு நொடியும் நன்கு செயல்படுதல் வேண்டுமல்லவா! மனித உடலில் உள்ள 72000 நாளங்கள் (இவை தாம் சிதம்பரத்தில் பொன் ஓடுகளால் குறிக்கப்படுவது), ஒவ்வொரு நொடியும் நன்றாகச் செயல்பட்டால்தானே ஐயா தினசரி வாழ்க்கையே நலமாய் நகரும்!

வரதர்கள் பலவிதம்!

எனவே அபயவரதரைச் சரணடைந்து வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு நாடியும், நாளமும், “வரதா! அபயம் தா, வரதா! அபயம் தா! வரதா! அபயம் தா!” என நாடித் துடிப்பில் அபயவரதச் சரண கீதம் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

வரத ராஜ மூர்த்திகளில், காஞ்சிபுரம் வரதராஜர், அத்திவரதர், நெல்லி வரதர் என ஒவ்வொரு வரத மூர்த்தியும் பலவிதங்களில் அருள்கின்றவர்கள் ஆவர். இதில் மனிதர்கள் பிற ஜீவன்களை விட ஆறாம் நிலைப் பகுத்தறிவை இறையருளால் பெற்றிருந்தாலும், மனம், உள்ளம், உடல், மூன்றாலும் ஒவ்வொரு நொடிக் காலத்திலும் தவறிழைக்கும் அவல நிலைக்கும் ஆளாகி உள்ளனர். எனவே பூவுலகில், அனைத்து ஜீவன்களும் சரணடைந்து அபயம் பெற வேண்டியக் கலியுக வரதராக, அபய வரதராஜப் பெருமாள் ஆலங்குடியில் அருட்பிரகாசம் கொண்டருள்வது இதுவும் திருமாலின் திருவருளால் கை கூடிய கலியுக மக்களின் பூர்வ ஜன்மப் புண்ய சக்தியால்தாம் என்பதை இனியேனும் உணர்ந்து செயல்படுவோமாக!

விஷ்ணுபதிப் புண்ய கால பூஜா பலன்கள்!

எத்தகையத் தவறுகளை நாம் வாழ்க்கையில் இழைத்திருப்பினும், தம்மால் துன்பங்களை அடைந்த வேதனையால் வாடுவோர்க்கு மனசாட்சிப் பூர்வமாக நிவாரண உதவிகளை அளித்து மனதாரத் திருந்தி வாழ முற்படுவோருக்கு அபயம் தந்து காத்தருளும் அற்புத ஸ்ரீஅபய வரதராஜப் பெருமாளே ஆலங்குடியில் அருள்கின்றார்.

பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவி, கணவனை இழந்து அனாதையாகப் பிறர் தயவில் வாழ வேண்டிய நிர்பந்தத்தில், பலத்த வேதனைகளுடன் வாழ்வோர்க்கு அபயம் தந்து காக்கும் அற்புதப் பெருமாள் மூர்த்தி.

சந்தான பாக்யமாகிய, பிள்ளைப் பெருவரம் பெற்றிட, இங்கு திருவோணம், ஏகாதசி, சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபட்டு வருதல் வேண்டும். தன் வாழ்வில் எப்போதோ செய்த பெருந்தவறுகளால், சமுதாயத்தில் உற்றம் சுற்றத்திலும் வதைபட்டு வாழ்வோர், மனந்திருந்தி வாழச் சங்கல்பம் பூண்டு பூஜித்து வந்திடில், இத்தகையோருக்கு அபயந்தரும் அற்புதத் திருமால் தலம்.

பலா மரம்
ஆலங்குடி பெருமாள் தலம்

முதியோர்கள், வயதானோர், பெற்றோர்களைப் பேணிக் காக்க வேண்டிய கடமை இருந்தும் அலட்சியம், வெளிநாட்டுப் பணி, செல்வம், பெரும் பதவி, அகம்பாவம் போன்ற காரணங்களால், இக்கடமைகளில் இருந்து தவறுவோருடைய முதிய நிலை வாழ்வும் அதிபயங்கரத் தன்மைகளாக அமைந்து விடும் என்பதை உணர வேண்டும். இதற்கு ஓரளவேனும் பரிகாரம் பெற, இங்கு சனிக்கிழமை, புதன்கிழமை தோறும் பூஜித்து அனாதை, முதியோர் இல்லங்களில், தக்க சரீர சேவைகளை ஆற்றி வர வேண்டும்.

ஸ்ரீதன்வந்திரி மூர்த்தி
நெல்லுவாயா நெல்லுவாய்புரம்

எல்லாவற்றையும் விட, “மேற்கண்ட துன்பங்கள்தாம் நம் குடும்பத்தில் இல்லையே! நாம் ஏன் இத்தலத்திற்கு சென்று வழிபடுதல் வேண்டும்?” என எண்ணுவது நன்றன்று.

1. இத்தகைய துன்பங்கள் தமக்கும் சந்ததிகளுக்கும் வருங்காலத்தில் எதிர்வரும் பிறவிகளிலும் வராது தற்காத்துக் கொள்ளவும்.

2. சிறந்த சமுதாய இறைப்பணியாக, இவ்வகையில் வாடுவோருடைய துன்பங்களைக் களைந்திட, நற்புண்ய சக்திகளை அளித்திடும் வகையில் தியாகமயமாக இவ்வகைப் பூஜைகளை ஆற்றி இங்கு வழிபடுதல் விசேஷமான புண்ய சக்தியைத் தரும்.

நவக்கிரகத் தல யாத்திரைக்குச் செல்வோரிடம், ஆலங்குடி ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆலயத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீஅபய வரதராஜப் பெருமாள் ஆலயத்திலும் சென்று தரிசித்திட செய்யுமாறு ஆன்மீகத் தகவல்களை அளித்தலும் மிகச் சிறந்த தெய்வீகச் சேவையாகும்.

14.5.2005 நள்ளிரவு 1.30 முதல் 15.5.2005 காலை 10.30 வரையிலான விஷ்ணுபதிப் புண்யக் காலத்தில் (இதில் துல்லியமன பூஜை நேரக் கணக்கும் உண்டு) 24 தலைமுறைகளைக் குறிக்கும் 24 விதமான அபிஷேக ஆராதனைகளுடனும், ஆறு வகைச் சுண்டல், ஏழு வகைக் காய் கறிகள் கலந்த உணவு, முந்திரி, திராட்சை போன்ற எட்டு வகைத் திரவியங்கள் கலந்த சர்க்கரைப் பொங்கல், திண்டு தோசை படைத்துத் தானமளித்தல் சிறப்புடையது.

விஷ்ணுபதிப் புண்ய காலத்தலம் ஆலங்குடி ஸ்ரீபெருந்தேவித் தாயார் சமேத ஸ்ரீஅபயவரதராஜப் பெருமாள் ஆலயம் கும்பகோணம் அருகே உள்ளது.

விஷ்ணுபதிப் புண்ய காலம் என்பது யாவரும் அறிந்த ஸ்ரீமகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் மட்டும் அல்லாது, எண்ணற்ற கோடானு கோடி நாராயண இறை லீலைகள் நிகழ்ந்த புனிதமான காலமுமாகும். இதில்தான் எத்தனை எத்தனை விஷ்ணு லீலைகள் பரிமளித்துள்ளன,  எத்தனை எத்தனை திருமால் மூர்த்திகள்தாம் தோன்றி உள்ளனர், எத்தனை கோடி மக்கள் தாம் உய்வு பெற்றுள்ளனர்.

நடப்பு வைகாசி மாத பார்த்திப வருட விஷ்ணுபதிப் புண்ய காலமானது, 14.5.2005 சனிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் தொடங்கி 15.5.2005 பகல் வரை நிரவுகின்றது, கங்கோத்ர புத்த மஹாவிஷ்ணுபதியாகப் போற்றப் பெறும் இதனைக் கடைபிடிக்க வேண்டிய திருத்தலமாகச் சித்தர்கள் அருள்வதே கும்பகோணம் நீடாமங்கலம் மார்கத்தில் உள்ள புகழ் பெற்ற நவகிரகத் தலமான, ஆலங்குடியில் அமைந்திருக்கும் ஸ்ரீஅபய வரதராஜப் பெருமாள் ஆலயம் ஆகும்.

சந்தான பாக்கியமாகிய பிள்ளைச் செல்வத்தை அளிக்கும் அற்புதப் பெருமாள் தலம்! பிறரால் வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, மன நிம்மதியின்றி திக்கற்று இருப்பவர்களுடைய வாழ்வில் மறுமலர்ச்சி, நலம் பயக்கும் மாறுதல்கள், நல்ல துணை பெற உதவும் தலம்! பலத்த வேதனைகளுடன் பிறருடைய தயவில், உதவியலில் வாழ்வோர், நன்முறையில் நல்வாழ்வு பெற உதவும் தலம்!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆலங்குடி

“கலியுக வரதனைக் கண்கண்ட தெய்வம்” எனப் போற்றுகின்றோம் அல்லவா! தெய்வ மூர்த்திகளுக்கும் நல்வரங்களை நல்குபவர் ஆதலின், பரம்பொருட் தெய்வமாகிய ஸ்ரீமன்நாராயண மூர்த்தியே, வரத மூர்த்திகளுக்கெல்லாம் (தெய்வ) ராஜ மூர்த்தியாகப் பல இடங்களிலும் சேவை சாதிக்கின்றார். குரு ஸ்தலமான ஆலங்குடியில், திருமகள் சமேதராய் பெருமாள் மூர்த்தி, பிள்ளை வரம் வேண்டி, ஞானக் கடவுளாம் ஸ்ரீதட்சிணா மூர்த்தியைப் பூஜித்து, மங்கள மாதவனை தம் தெய்வப் புத்திரனாகப் பெற்ற திருத்தலம் இதுவேயாம்.

சக்கராயுதத்தைப் பிரயோகிக்கும் நிலையில் அருளும் விஷ்ணு மூர்த்திகள் மிகச் சிலவேயாம், தெய்வ மூர்த்திகளின் ஆயுதங்கள் யாவுமே சித்தர்களின் மாமுனிகளின் வடிவங்களேயாம் என நாமறிவோம் அன்றோ! இறைவனே திருக்கொம்புகளில் நடனமாடிட இதுவே திரயோதசித் திதி நடனமாக, பிரதோஷ நடனமாக ஆயிற்று என்பதை நாம் நன்கறிவோம். ஆனால், இந்த அனுபூதியைச் சில வரிகளில் இங்கு உரைத்தாலும், பல கோடி யுகங்கள் கால அளவிற்கு நிரவி நடந்த அனுபூதிகளாகும். இத்திருநடனத்தில் எண்ணற்ற சிவாவதாரத் தோற்றங்கள் உருக்கொண்டன, பல அண்டங்கள் சிருஷ்டிக்கப் பெற்றன.

பாற்கடலிலும் எத்தனையோ பொருட்கள் விளைந்தன, சந்திர மூர்த்தியும், திருமகளும் பாற்கடலில் தோன்றியவர்களே! இவர்களைத் தத்தம் லோகங்களில் நிலை பெற்று வைத்திடத் தேவர்களும், அசுரர்களும் சண்டையிட்டுக் கொண்டபோது, அமிர்தப் பிரவாகத்தின் மகத்துவத்தை அறியாது இவர்கள் இவ்வாறு இருக்கின்றார்களே என வருந்திய ஸ்ரீமஹாவிஷ்ணு அவர்களைத் திருத்திட, தம்முடைய பிரயோகச் சக்கரத்தை ஏந்தி காட்சி அளித்திட, அந்தப் பிரயோகச் சக்கரத்தின் அருள் நோக்கால்தான், தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தது அமுதம் பெறுவதற்கே அன்றி அதில் விளையும் பொருட்களை அபகரிப்பதற்காக அன்று, என்று மனம் தெளிந்தனர்.

மேலும்  தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தது அமுதத்தைப் பெறுதற்காக மட்டுமே, இந்த இறை லீலையோடு மட்டும் அவர்களுடைய பங்கு முடிவுற்றது. ஏனைய இறை லீலைகள் யாவும் அண்டசராசரம் எங்கும் ஜீவ பரிபாலனத்தை விருத்தி செய்வதற்காகவே என்றும் தம்முடைய பிரயோகச் சக்கரத்தை ஏந்தி நின்ற நிலை மகிமையால் பெருமாள் அவர்களுக்கு எடுத்துணர்த்தினார், இது நிகழ்ந்த தலமே ஆலங்குடி ஆகும்.

பாற்கடலில் தோன்றிய ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியும், மருத்துவ சக்திகளை நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்சபூதங்களிலும் பதித்ததோடு, அனைத்து லோகங்களுக்கும் பொதுவான வஸ்து ஆனதால், சந்திரப் பிரகாச மண்டலத்திலும் தம்முடைய அமிர்த மருத்துவ சக்திகளைக் கூட்டி அருளினார். இவ்வாறாக ஔஷத மூர்த்தியாகப் பரிபூரணப் பௌர்ணமிச் சந்திர மூர்த்தி நல்வரம் பெற்ற காலமும் பிறிதொரு யுகத்தின் விஷ்ணுபதிப் புண்ய காலம் ஆகும்.

உத்தமத் தமிழ் ஆண்டு ஒவ்வொன்றிலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக, மாதப் பிறப்பை ஒட்டி அமைகின்ற விஷ்ணுபதிப் புண்ய காலத்தின் மகத்துவத்தை, கடந்த பல ஆண்டுகளாக, நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், மிகுந்த பக்த சிரத்தையுடன் தம் குருவருள் ஆணையாக, இறைப் பிரச்சாரங்கள், உபன்யாசங்கள், ஆன்மீக நூல்கள், அருட்பேருரைகள் மூலமாகப் பரப்பி வருகின்றார்கள்.

வைணவப் பீடாதிபதிகளும், வைணவச் சான்றோர்களும் கனிவுடன் முதற்பணி கொண்டு, திருமால் அடியார்களும், பக்த கோடிகளும் அனைத்து வைணவத் தலங்களிலும், விஷ்ணுபதிப் புண்ய காலத்தை மகத்தான கூடுதல் பிரம்மோற்சவமாக நிகழ்த்தி, எல்லாம் வல்ல பரம்பொருளாம் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் திருவருள், அனைத்து ஜீவன்களையும், சென்றடையும் வண்ணம், மகத்தான தெய்வீகச் சாதனங்களாய், இறைச் சிறுகருவியாய், அருட்பணி ஆற்றுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.

புண்ணியம் பாவம்

பொதுவாக, புண்ணியம், பாவம் என்பது, செய்யும் காரியங்களில் ஏற்படும் விளைவுகளின் பலன்கள் என நாமறிவோம். எந்தக் காரியத்திலும் விளையும் நற்பலன்களைப் பொறுத்துப் புண்ணியத் தன்மைகளும் மாறும். இருவர் ஒரே நற்காரியத்தைச் செய்திடில், இருவருடைய உள்ள, மனோநிலைகள், பூர்வ ஜன்ம அம்சங்கள் மாறுவதால், இருவருக்கும் ஒரே மாதிரிப் புண்ய சக்தி அமையாது. புண்ணியங்களில் நிறைய வகைகள் உண்டு.

புண்ணியங்கள் பலவிதம்

ஒவ்வொரு நற்காரியத்திலும் ஜீவன்களுக்கு வந்தமையும் புண்ணியம் வேறு, விண்ணுலகத் தேவ புண்யம் வேறு, நற்காரியங்களில் விளைவதே புனிதமான புண்யமாக இருப்பதால், கடமையால் ஆற்றுகின்ற செயல்கள் புண்ய சக்திகளைப் பொதுவாகத் தராது, உதாரணமாக, பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பது உத்தமப் பிறவிக் கடமையாவதால், இதில் வருவது புண்ணியமாகாது. எனினும் சந்ததியைக் கொணர்ந்ததற்கான பித்ரு புண்ய சக்திகள் தனித்த முறையில் கிட்டும்.

அறச் செயல்களைத் “தர்மம்” என்று பொதுப்படையாகக் குறிப்பிட்டாலும், அறிந்தோர்க்கு அளிப்பது தருமம், (முன் பின்) அறியாதோர்க்கு அளிப்பதுவே தானமாகிறது அல்லவா! தர்மத்தில் திரளும் புண்ணியத்தை விட, சுயநலமின்மை, தியாகம் சேர்வதால், தானத்தில் புண்ணியம் அபரிமிதமாகவே திரளும். ஆனால் புண்ணியக் கணக்கைப் பார்த்துப் பார்த்து, எந்தவிதமான எதிர்பார்ப்புகளுடன் தான, தர்மங்களை ஆற்றாது, தியாகமயமாக ஆற்றுதலே சிறப்புடையது. ஆனால் இந்நிலையை அடைதல் கடினமே!

ஸ்ரீபவானி அம்மன் பேரளம்

ஏனெனில் இப்போதைக்குத் தியாகமயச் சிந்தனைகள் பொங்கிப் பூரித்தாலும், பிற்பாடு ஒரு வேளை துன்பங்கள் வந்து சூழுகையில், ‘நாம்தான் இவ்வளவு தான, தர்மங்களைச் செய்தோமே, நமக்கேன் இவ்வளவு சொல்லொணாத் துன்பங்கள் வந்தடைகின்றன?”

-என்ற எண்ணம் சிறிதே, மனக் கீறலாக மனதோரத்தில் வந்தாலே போதும், அத்தகைய நற்காரியங்கள் ஆற்றிய போது, தோன்றிய எவ்வகைத் தியாகமும் விரைவில் கரைந்து, எதிர்பார்ப்புகளுடன் செய்த நற்காரியங்கள் என்ற வகையைச் சார்ந்து விடும். பரிகார, பிராயச்சித்தங்களில் குறிப்பிடப்படும் வழிபாடுகள், தான, தர்மங்கள் இவ்வகைத்தனவே!

எனவே, “இது நடக்க வேண்டும், அது கிடைக்க வேண்டும்!” என்ற சங்கல்ப விருப்பங்களுடன், எதிர்பார்ப்புகளுடன் அமையும் தான, தர்மங்களில் திரளும் புண்ணியங்கள் அந்தந்த விருப்பம் நிறைவேற, நிறைவேறக் கரைந்து கொண்டே வரும். தியாகமயமான தான சக்திகள் தாம், புண்ணியத்தைப் புண்யசக்திகளாக மாற்றித் தரவல்லனவாம்.

புண்ணியத்தை விட, புண்ய சக்திகள் தாம் நெடுங்காலத்திற்கு பல பிறவிகளுக்கும் கூடத் தொடர்ந்து வரும், இவற்றை நிர்வகிப்பதற்கென விசேஷமான புண்ய லோகங்களும் உண்டு. ஒவ்வொரு கிரகத்திலும், நட்சத்திர மண்டலத்திலும் புண்ய தேவதைகள் உறைந்து, அந்தந்த தசை, புக்தி, அந்தரம், நட்சத்திரக் காலப் பகுதிகளில் புண்ய பரிபாலனங்களையும் ஆற்றுகின்றனர். இவைதாம் ஜாதக ரீதியாக, பரிகாரம், பிராயச்சித்தமாக அமைகின்றன.

இப்பூவுலகில் உள்ள அனைத்து ஜீவன்களும் புண்யத்தைப் பெற்றவையே! ஏனெனில் இப்பூவுலகில் எவ்வகையிலும், இதிலும் குறிப்பாக, மானுடராகப் பிறப்பது, இதனிலும் பூவுலகிற்கே ஆன்மீக மையமான புனிதமான பாரத நாட்டில், இதிலும் சிவனுக்குரிய தென்னாட்டுத் தமிழகத்தில் பிறந்திருப்பது பூர்வ ஜன்மப் புண்யத்தாலன்றோ!

புண்ய பரிபாலனம்!

வாழ்வில் மூதாதையர்கள் அளித்துள்ள புண்ய சக்திகளையும், நன்கு விருத்தி செய்து வர வேண்டும். இல்லையெனில் அவ்வப்போது தவறுகளில் இருந்து காப்பதற்கான வழிமுறைகள், பலவகைச் சாப விளைவுகளைத் தணித்தல் போன்றவற்றில் அவை மிக விரைவாகக் கரையலாகும்.

தற்போதைய பிறவிகளில் அதிகாரம், பதவி, அந்தஸ்துக்களுடன் வரும் பெரிய, பெரிய பதவிகள் பூர்வ ஜன்மப் புண்யத்தால் வருவதே! ஆனால் அகங்காரம், ஆணவம், பதவி வெறி காரணமாக இவற்றில் அதர்மமாகச் செயல்பட்டால், புண்ணியம் விரைவில் கரையலாகும். இதனால்தான் திடீரென்று பதவி பறிபோகிறது.

இவையாவும், புண்ணிய பரிபாலனம் பற்றிய ஒரு சிறு குறிப்பே! இதில் மேலும் பல விளக்கங்களைப் பெறும் முன்னர், அவரவர் ஜாதகத்தில் உள்ள புண்ய ஸ்தான அம்சங்களைக் கருத்தில் கொண்டே எதையும் அறிதல் வேண்டும். அதாவது தத்துவார்த்தமாகப் புண்ய சக்திகளை அறிவதை விட, அவரவருடைய கர்ம வினைப் பரிபாலனத்தையும் சேர்த்து வைத்தே இதனைக் கணித்திட வேண்டும் என்பதே இதன் மூலம் புலப்படுத்தப்படுகிறது.

“புண்ய விருட்சம்” என்ற பெயரில் விசேஷமான புண்ய லோக மரங்கள் சில தலங்களில் உள்ளன, புண்ய விருட்சத்தின் இலை, தழைகள், வேர், தண்டு, பூக்கள் அனைத்துமே சித்தர்களின், மஹரிஷிகளின், யோகியரின், ஞானியரின், பித்ரு மூர்த்திகளின் தபோ பலன்களால் தவசக்திகளால், ஞானப் பூரணங்களால் ஆவதாகும். எனவே, புண்ய விருட்சத் தரிசனமே பெரும் பாக்யமாகும். இதனை வலம் வந்து வணங்குதல், அங்கப்பிரதட்சிணமாக வலம் வந்து வழிபடுதல், புண்ய லோக தரிசனம், சித்தர்களின், மஹரிஷிகளின் தரிசனப் பலன்களைத் தருவதாகும்.

“கோடீஸ்வரர்” என்ற பெயரில் இறைவனருளும் தலங்களில் (கொட்டையூர், திருக்கோடிக்கா) தான, தருமங்கள், ஆலயத் திருப்பணிகளை ஆற்றுதல் நற்காரியப் பலன்களைக் கோடி மடங்காக்கித் தரவல்லவையாகும். ஆனால் இத்தலங்களில் எண்ணும் எண்ணங்கள், நல்லனவோ, தீயனவோ அனைத்துமே பன்மடங்காகப் பெருகுவதால், காரியப் பலன்கள் அனைத்தையும் ஆலயத்திலேயே அர்ப்பணச் சங்கல்பம் செய்வதே நன்று.

கொட்டையூர்

பார்த்திப ஆண்டில், ஜோதி விருட்சங்கள் மூலமாக அன்பு லிங்க அருட்கிரணங்கள் பரிமளிக்கின்றன அல்லவா! திருஅண்ணாமலை, திருக்கயிலாயம், பொதிய மலை, சதுரகிரி மலை, வெள்ளியங்கிரி மலை, சிவமலை, கொல்லி மலை போன்றவற்றில் ஜோதி விருட்சங்கள், புண்ய விருட்சங்களைத் தரிசித்திடலாம். முதலில் பக்திப் பூர்வமாகப் புண்ய விருட்சத் தரிசனம் பெற்ற பிறகே, ஜோதி விருட்சத் தரிசனம் பிரத்யட்சமாகும்.

இவை தவிரப் பெயரறியாப் பெரு விருட்சங்களாக, சில அரிய தலங்களில் “எந்த வகை மரம், என்ன பெயர்” என அறியாத வகையில் உள்ளன, இறைமையைப் போல அநாதியான, சாசுவதமான, அற்புதமான தெய்வீக சக்திகளை உடையவையே இவையாவும், இத்தகைய பெயரறியாப் பெரு விருட்சங்களைத் தரிசித்தலிலும் சிறப்பான புண்ய சக்திகள் கிட்டுகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள “ஏரியூர்” குன்றுக் கோயிலில் இத்தகைய விருட்ச அம்சங்களைக் காணலாகும்.

எத்தனை கோடிப் பெயர்களுக்கும் அப்பாற்பட்டவனாக இறைவன் பொலிவதால், “நாமாதீதன்” என்ற பெயரிலும் அருள்கின்றான். இத்தகைய ஆயிரமாயிர நாம சக்திகளைக் கொண்டதே பேரளம் ஆலயமாகும். இங்குதான் லிங்க மூர்த்தி மேல் அனைத்து நாமங்களும் உறைதலை ஒரு மஹரிஷி தரிசித்தார்.

எனவே, இறைமையின் அற்புதங்களை விவரிக்கக் கோடானு கோடி யுகங்களும் போதாது! புண்ய சக்தி விளக்கம் என்பது நற்காரியங்களை ஆற்ற உதவும் மாமருந்தாகும். இதனை அளிக்க வல்லவையும் நற்காரியங்களே! எனவே எப்போதும் நல்ல எண்ணங்கள், நற்சிந்தனைகள், நற்காரியங்களின் ஊடே செறிவதும் புண்யலோகத்தில் உறைவதற்கு ஈடானதே!

எவ்வளவுதான் அறிவிற் சிறந்தவராக விளங்கினாலும், இத்தகைய புண்ய விளக்கங்கள் யாவும் சத்குருவின் அருளின்றி, தாமாக உணரப் பெற இயலாதவை! இவை தவிர சத்குரு மூலமாகவே அறியப் பெறுவதாக, புண்ய, பாவ அம்சங்களில் எண்ணற்ற விளக்கங்கள் உள்ளன.

பரணி நட்சத்திரம்

பரணி நட்சத்திரம் அட்டைப்பட விளக்கம்

பல்வேறு புராண வைபவங்களிலும், அரக்கர்களுடன் போருக்காவும், பல்வகை லோகங்களில் வழிபடவும், சாப நிவாரணத்திற்குமாகவும், தவத்திற்காகவும் பிராயச் சித்தத்திற்காகவும், இந்திர மூர்த்தி தேவலோகத்தை விட்டுப் பல அண்ட சராசரங்களில் வழிபாட்டிற்காகவும் செல்ல நேரிட்டதன்றோ! அப்போது, அவருடைய தெய்வீக வாகனமான ஐராவத யானை, தேவலோகத்தைக் கட்டிக் காக்கின்ற அருட் பணிகளை ஆற்றிய போது, அதற்குப் பலத்த சோதனைகள் ஏற்பட்டன. மேலும் பூலோகப் போர்களில் அந்த யுகத்தில் லட்சக் கணக்கான யானைகளும் மாண்டன.

இதற்குக் காரணம் யாதென ஐராவத யானையே தனக்குள் ஆத்மவிசாரம் செய்து கொண்ட போது, தனக்கு மட்டுமல்லாது, தன் யானைக் குலத்திற்கே பூஜை, தவம், யோகப் பலன்கள் அந்த யுகக் காலத்தில் போதவில்லை என்பதை உணர்ந்தமையால், தன் தலைவரான இந்திரனால் பூஜிக்கப் பெற்ற இந்திர லிங்கம் அமைந்துள்ள அருணாசலமாம் திருஅண்ணாமலையே இதற்குத் தக்க தெய்வ வழிமுறைகளை அருளவல்லதென, சித்தர்கள், மஹரிஷிகள் மூலமாக உணர்ந்துத் திருஅண்ணாமலைப் புனித பூமியை வந்தடைந்தது.

சகஸ்ர லிங்கம் பேரளம்

தேவாதி தேவ தெய்வ மூர்த்திகளும் அருள்வலம் வருவதாகவும், அருணாசலேஸ்வரரே, அம்பிகையுடன் ஆத்மப் பிரதட்சிணமாகக் கார்த்திகைத் தீபப் பெருவிழாவில் வலம் வருகின்ற திருஅண்ணாமலையாம் அருணாசலத்தைக் கிரிவலம் வருதலே, இதற்கான தக்கத் தீர்வுகளைத் தரும் என்று உணர்ந்து, பல்லாயிரம் ஆண்டுகளாக அருணாசலத்தைக் கிரிவலம் வரலாயிற்று.

தேவ மூர்த்திகளும், தேவாதி தேவ மூர்த்திகளும் காண்கின்ற அருணாசலம் மனிதப் பார்வையில், மனித பகுத்தறிவிற்கு, மானுடக் கண்களுக்குத் தென்படும் அருணாசலத்தை விட மாறுபட்டதாகும். ஆஞ்சநேய மூர்த்தி தம் விஸ்வ ரூபக் கோலத்தில் இங்கு வலம் வருகின்ற போது, முப்பத்தி மூன்று கோடானு கோடி கோடி மைல்கள் என்றவாறாக இதன் விஸ்தீர்ணமான நிலை பெருகி அமையும்., இத்தகையத் தேவ கணக்கு வகையின் முன்பு மனிதனின் ஆறறிவுப் பகுத்தறிவு எங்கே செயல்பட முடியும்.

எனினும் தேவாதி தேவ மூர்த்திகளும், சித்தர்களும், மகரிஷிகளும் சாதாரண மானுட வடிவில் வலம் வந்து, மானுட சரீரத்தில் அடைகின்ற பரமானந்தத்தையே பெரிதும் விரும்புவதால் தான், தினந்தோறுமே குறிப்பாக மாத சிவராத்திரியிலும், மாதாந்திரப் பௌர்ணமியிலும் கிரிவலம் வருகின்ற லட்சோப லட்சம் மனிதர்களுள், மானுட வடிவில் நாமறியா வண்ணம் கலந்து கிரிவலம் வந்து விடுகின்றார்கள்.

எனவே ஒவ்வொரு பௌர்ணமியிலும் நீங்கள் கிரிவலம் வருகையில், தெய்வ மூர்த்திகளோடும், சித்தர்களோடும், ஞானியரோடும், அன்புடைய இதர பூமிகளின் மக்களோடும், நம் பூமிவாழ் ஜீவன்களோடும் தான் வலம் வருகின்றீர்கள் என்பதைச் சிந்தனையில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

மாமன்னர்கள் பொலிந்த காலத்தில் யானை பலத்தை வைத்தே ராஜ்யத்தின் வலிமையை நிர்ணயித்தனர். எனவே ஐராவதம் தன்னுடைய சுயம்பிரகாசத் தன்மைகளையெல்லாம் என்னதான் பெரிதும் மறைத்துச் சாதாரண யானை போல அருணாசலக் கிரிவலம் வந்தாலும் அதனுடைய தேவ தேஜஸ் பிரகாசத்தை மறைக்க இயலவில்லை!

இருப்பினும் தன் தேஜோமயப் பிரகாசத்தைத் தக்க மூலிகைக் காப்புகளால் ஓரளவேனும் மறைத்து, தன் உடல் முழுவதுமாக விபூதி, குங்குமம், மஞ்சள், சிந்தூரம் பூசிச் சிவச் சிந்தனையுடன் வலம் வந்தது. தன் திருமேனி முழுதும் வெண்ணீறு பூசிய த்வனியிலேயே அதனுடைய சிவப் பிரகாசப் பேரொளி மென்மேலும் நன்கு பிரகாசித்தது.

இந்திர மூர்த்தியைச் சுமக்கும் பாக்யம் என்றால் எத்தகைய தேவ புண்யத்தை, தேவ பேரொளியைப் பெற்றிருக்க வேண்டும். இத்திருத் தலத்தில்தான் யானைக் குலத்திற்கும் உரித்தான பரணி நட்சத்திர லிங்க முக தரிசனத்தை ஸ்ரீஅகஸ்தியர், ஐராவதத்திற்கு ஓர் அற்புதமான பரணி (தீப) நட்சத்திர நாளில் பெற்றுத் தந்தார்.

என்னதான் ஐராவதம் பெரும் முழவு அதிரும் தேவலோக யானையாக இருந்தாலும், அந்தப் பரணி நட்சத்திர லிங்க தரிசனத்தின் அருகில் கூடச் செல்ல இயலாது, சற்றுத் தொலைவில் இருந்தே தரிசித்து மகிழ்ந்தது, யானை வடிவில் வந்ததால்தான் ஐராவதத்திற்கு இது கிட்டியது.

பிளிறு முக கம்பீர நடை, முழவு அதிர் முகப்பரிமாணம், கூட்டுக் கதிர் பொங்கு வேத நடை, ராஜ கம்பீர ரதோத்துவப் பரிமளம், தேவத் துறை முதிர் பூமாலைச் சுடர், புறத்துளிர்ப் பெருமணம், ஏலாதீத வன பாணம், களிறு மாதவப் பூ ஆகிய எட்டுக் குணங்களையும் பெற்றதாய் ஐராவதம் துலங்கியது. பிற்பாடு அஷ்டதிக் கஜங்களுள் ஒன்றாக ஆவதற்கான இத்தகைய எட்டு விதமான தெய்வீக சக்திகளைப் பூண்டிருப்பதால், ஐராவதத்திடம் இத்தகையத் தேவகுணங்கள் அவ்வப்போது அருணாசலப் புனிதப் பூமியில் வெளிப்பட்டவாறு இருந்தன.

எனவே, இவ்வாறு பல்வகையிலும் ஒளி பொருந்திய ஐராவதத்தின் அருணாசல கிரிவலம் பல்லாயிரக் கணக்கானோரைப் பெரிதும் ஈர்த்தது, ஐராவதத்தைக் கவர்ந்து சென்று, தம் யானைப் படைக்குப் பயன்படுத்திட எண்ணிய, சில மன்னர்கள், அம்பு மயக்கப் பாணங்களை நள்ளிரவில் எய்து, அதனைப் பிடிக்க முயன்ற நாட்களில், தீர்க தரிசனமாகவே, இதனை எதிர்பார்த்து அன்று ஐராவதம் “உதிர் பாண மூலிகா கஷாயத்தைத்” தன் உடலில் தடவி வலம் வந்தது. இதன் மருத்துவப் பெருமை என்னவென்றால், தனுர் வேத சக்திகள் நிறைந்த இந்த மூலிகைப் பூச்சின் மேல், எந்த பாணம் பட்டாலும் அது எய்தவர் மேலே திரும்பி வந்து தாக்கும்.

அப்போதெல்லாம் காடுகள் நிறைந்ததாய் கிரிவலச் சாலை அமைந்தது. இவ்வாறு ஐராவதத்தைக் கவரப் பல நாட்டவரும் முயன்று தோற்றனர், யானை பொதுவாக எட்டுப் புறமும், கவனத்துடன் பார்த்து நடந்து வரும் தன்மை உடையதாதலால், எந்த யானையையும் பிடித்திட, ஒன்பதாவதாக “ஊர்த்வ முகமாயக் கிரந்தி வேலியை” அமைத்துப் பிடித்திடுவார்கள். ஆனால் இதில் ஒன்பது பேர் மட்டுமே இருக்க முடியும், மேலும் “கரணம் தவறினால் மரணம்” என்பதாய், இவர்கள் கொம்புகளைக் குறித்த திசையில் ஓதி, யானையைப் பிளிற வைத்து, அங்குமிங்குமாக அதன் கவனத்தைத் திருப்பி, பொத்தைக் குழியில் விழவைப்பார்கள். இதில் சிறு பிழை வந்தாலும் ஒன்பது பேரும் மரணம் அடைவார்கள்.

இவர்கள் மன்னர்கள், இந்த யுக்தியைக் கடைபிடித்துத் தோல்வியுற்றுப் பலரையும் துர்மரணத்திற்கு ஆளாக வைத்தமையால், அவர்கள் “பிரம்ம ஹத்தி” தோஷத்திற்கு ஆளானார்கள். இந்தத் துர்மரணப் பழி பாவங்கள் எல்லாம் மன்னர்களையே சார்ந்து, பிற்பாடு ஐராவத யானையின் மூலமாகவே இறந்தோர்கட்கும் பரிகாரம் பெற்றுத் தரப்பட்டது.

நள்ளிருளில் நடுபாதைக் குழி அமைத்து, பதினோரு மரங்களை வெட்டி நிறைத்து, அதனைப் பிடிக்க முயன்ற போது, மூன்று மரங்களைச் சாய்த்துக் குறுக்கே வைத்து, ஐராவத யானை அப்பெரிய குழியைத் தாண்டியது.

மேலும் மறுநாளில், துதிக்கையில் தீப்பந்தத்துடன் கிரிவலம் வந்த காட்சியைக் கண்ட பின்னர் தான், இதற்கு ஏற்பாடு செய்த மாமன்னர்கள், அதன் மகிமையை அறிந்து ஆக்ரோஷமாகத் தீப்பந்தத்துடன் கிரிவலம் வந்த ஐராவதத்தின் பாதங்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரித்து மன்னிப்புக் கோரி, “தாங்கள் இந்திர வாகன மூர்த்தி அன்றோ!” என்று பெருமிதத்துடன் போற்றி மகிழ்ந்தனர்.

அன்று முதல் கிரிவலப் பாதை முழுதும் 360 இடங்களில், ஐராவத யானைக்குத் தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள், பல ஆண்டுகளுக்கு நிகழ்ந்தன, இச்சமயத்தில் தான், ஒரு பரணி நட்த்திர நாளில், ஐராவத யானையே காட்டியருளிய பரணி நட்சத்திர லிங்க முக தரிசனத்தைப் பலரும் தரிசித்து ஆனந்தம் கொண்டனர். ஆலயத்தில் ஏற்றப்படும் பரணி ஜோதிக் கிரணங்கள் இந்த முகட்டின் உச்சியில், லிங்க வடிவில் காட்சி தரும்.

இந்நிலையில் ஐராவத யானைக்கு உடல் பலவீனமுற்றது, இதையறிந்த இந்திர மூர்த்தியே நேரில் வந்து, அதன் நன்னிலைக்கு ஆசி வழங்கினார். சாதாரண யானை வடிவில் இரு தந்தங்களுடன் திருஅண்ணாமலைக்கு ஏகிய ஐராவதம், காலையில் நான்கு தந்தங்களுடனும், மதியம் ஆறு தந்தங்களுடனும், மாலையில் எட்டு தந்தங்களுடனும் பிரகாசித்தது.

இதன் மூலமாக, இந்திர மூர்த்தியும், அந்தப் பூவுலக யானை வடிவிலேயே ஐராவதத்திற்கு ஐக்ய நிலை வந்துற்றதை அறிந்திட்டார். ஒரு பரணி நட்சத்திர நாளில், அஷ்டதிக் கஜமாய் நிரந்தரமான தேவ மூர்த்தி நிலையைப் பெற்று, அருணாசலத்தின் பரணி நட்சத்திர லிங்க தரிசன முகட்டில் ஐராவதமானது கஜவாரண ஜோதியாய் ஐக்யமடைந்தது. இவ்வாறு பரணி நட்சத்திர லிங்கப் பூஜை மஹிமையாலும், அருணாசலத்தின் பரணி நட்சத்திர லிங்கமுக தரிசனத்தினாலும், ஐராவதம் பெறுதற்கரிய பாக்கியங்களைப் பெற்று இன்றளவும், என்றுமாயும், பரணி லிங்க மஹாத்மியத்தை அகிலமெங்கும் பல வடிவுகளிலும் பரப்பி வருகின்றது.

பரணி நட்சத்திர லிங்கப் பூஜைகளின் பலாபலன்கள்

வேலை கிட்டாதோர்க்கு நல்ல வேலை கிட்டும்., கல்வி, உடல் வளம், மனவளம், அறிவுக்கு ஏற்ற வகையில் தகுந்த பணியைப் பெறாதோர், நல்ல வேலையைப் பெற உதவும்., தமக்கு நல்ல தகுதிகள், அனுபவம் இருந்தும், குறைந்த நிலைப் பதவியில் இருப்போர், நல்ல பதவி நிலைகளை அடைய உதவும்.

வேலைக்கு ஏற்றபடி, தகுந்த சம்பளத்தைப் பெறாதோரும், உரிய சம்பளமும் பெறும் நன்னிலை கைகூடும். அடிக்கடி வேலை மாற்றிக் கொண்டிருப்பவர்கள், நிரந்தரமாக நல்ல வேலையைப் பெறவும் துணை புரியும். கணவனின் வருமானத்திற்குள் குடும்பத்தை நடத்த இயலாது தவிக்கும் குடும்பப் பெண்களுக்கு, நல்ல வேலையோ அல்லது கூடுதல் வருமானத்திற்கான நல்ல வழிமுறைகளோ கிட்டும்.

அஷ்டதிக் கஜங்களான எட்டு யானைகளையும் வைத்துப் பரணி நட்சத்திர லிங்க வழிபாடு ஆற்றுதல் மிகவும் விசேஷமானதாகும். கூட்டுக் குடும்ப ஒற்றுமையைப் பேணிட இதுவுதவும்.

இவ்வகையில் எட்டுத் திக்குகளிலும் எட்டு யானைகளை வைத்து, அஷ்ட திக்குக் கஜ பூஜை நிகழ்த்துவோர்க்கு, லட்சம் கோடிக்கணக்கான பெருமளவில் பணம் முதலீடு செய்த தொழில்களில், நஷ்டங்கள் ஏற்பட்டு இருந்தால், பெரும் பண இழப்பில் இருந்து மீண்டிட உதவும்.

மே 2005 பௌர்ணமி நாள்: 22.5.2005 ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை 4.30 மணி முதல் 25.5.2005 திங்கட்கிழமை நள்ளிரவு 1.48 மணிவரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படிப் பௌர்ணமித் திதி நேரம் அமைகின்றது. கிரிவல நாள்: 23.5.2005 திங்கட்கிழமை இரவு.

6.5.2005 வெள்ளிக்கிழமை மாலை 3.20 மணி முதல் 7.5.2005 சனிக்கிழமை மதியம் 2.25 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சித்திரை மாதச் சிவராத்திரித் திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள்: 6.5.2005 வெள்ளிக் கிழமை இரவு.

அமுத தாரைகள்

கணவன் அல்லது மனைவியை இழந்தோர், வாழ்வில் மன நிம்மதியை அடைந்திட, மக நட்சத்திர நாளில் மக நட்சத்திர லிங்க வழிபாடு ஆற்றி, வேளச்சேரிச் சிவத்தலத்தில் வழிபட்டு, வயதானோர்க்குக் கைத்தடிகள், கைக்கோல்களைத் தானமாக அளித்து வரவேண்டும்.

தினந்தோறும் இல்லத்திலும், வியாபாரத் தலங்களிலும் காலையிலும், மாலையிலும், அட்சர திருஷ்டி தோஷ நிவாரண தூப தீப கண்டியை ஏற்றி வழிபட்டு வருவதால் பிறருடைய பொறாமை, குரோதம், பகைமை போன்ற தீய எண்ணங்களால் பாதிக்கப்படாமலும், எப்போதும் திருஷ்டி தோஷங்கள் தாக்காதவாறும் நம்மைப் பாதுகாக்கின்றது.

தம் பிள்ளைகள் 20, 30 மார்க்குகளை வாங்கிக் கொண்டு படிப்பில் மந்தமாக இருக்கின்றார்களே என்று ஏங்கும் பெற்றோர்கள், கூகூர் சிவத்தலத்தில் புதன் கிழமை தோறும், பால், வெண்ணெய், அன்னம், கற்கண்டு, பொங்கல் போன்ற வெண்மை வகை உணவுப் பண்ட, திரவிய அபிஷேக ஆராதனைகளுடனும், இவ்வகையிலான பண்டங்களைத் தானமாகவும் அளித்து வருதலால், பிள்ளைகள் கல்வியில் நன்கு விருத்தி பெறுவார்கள்.

தொடரும் ஆனந்தம்...

நம் சற்குருவிற்கு நிகர், நம் சற்குருவே...
என்று ஆயிரமாயிரம் முறை சொன்னாலும் சுவாமியின் அருமை பெருமைகளை உணரும்போதுதானே குருவின் பெருமை பளிச்சிடுகிறது. ஐயர்மலையில் உள்ள தீர்த்தத்தில் பாதுகாப்பை அளிக்கும் பரம சக்திகள் ஆயிரமாயிரமாய் பெருகும் என்பதே இதன் மகத்துவமாகும். சதுரத்தில் சதுரம், சதுரத்தில் சதுரம் என்று ஆயிரமாயிரம் சதுர பாதுகாப்பு சக்திகள் விரிந்து பரந்திருப்பதே ஐயர் மலை தீர்த்தமாகும்.

மயிற்பீலி முக தரிசனம்
ஐயர்மலை

எதையும் வெறுமனே தெரிவிப்பதை விட ஒரு உதாரணத்துடன் வெளியிட்டால்தானே அதன் சுவை மிகும். நம் சற்குருவிடம் ஒரு அடியார் தன் சிறு வயது முதலே தொடர்பு கொண்டிருந்தார். அவர், தான் எப்படியாவது கடவுளை பார்த்து விட வேண்டும் என்று துடித்தார். ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் கடவுளை அவ்வளவு எளிதில் தரிசித்து விட முடியாது என்ற நிலை வந்தபோது தற்கொலை செய்து கொள்ளத் துணிந்து ஏகப்பட்ட தூக்க மாத்திரைகளை விழுங்கி விட்டார்.

விளைவு ...? அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து அவசர சிகிச்சை செய்து அவர் உயிரை நம் சற்குரு காப்பாற்றி விட்டார். ஆனால், இந்த விபரீத முயற்சியால் அவர் உடல் மிகவும் பலவீனம் அடைந்து விட்டது. இதைச் சரி செய்வது எப்படி? அவரையும் அறியாமல் ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் ஐயர்மலையில் உள்ள தீர்த்தத்தில் ஒரு கரையில் குதித்து மறு கரைக்கு நீந்தி ஏறிச் சென்று இரவு முழுவதும் இறை நாமங்களை அடியார்களுடன் ஓதி விட்டு மறுநாள் காலையே வீடு திரும்பும் அளவிற்கு ஆரோக்யமான உடல், மன நிலையை நாளடைவில் இவ்வாறு வளர்த்துக் கொண்டார் என்பதே நம் சற்குருவின் வழிகாட்டுதலாகும்.

பொதுவாக, நீர் நிலைகளில், தீர்த்தங்களில் நீந்துவதை அடியார்கள் தவிர்க்க வேண்டும் என்றாலும் இறைவன் மேலுள்ள ஆழ்ந்த அன்பினால் விளைந்த குழந்தைத்தனமான அந்த அடியாரின் இந்த ‘நீந்தலையும்’ பொறுத்துக் கொண்டு அவருக்கு ஆரோக்யம் என்னும் அருமருந்தை புகட்டியவரே நம் சற்குரு என்பதே குருமார்களின் சாலப்பரிந்து ஊட்டும் தாயின் கருணையாகும்.

ராம பிரானின் மந்திரியான சுமந்திரருக்கு அவர் ஆயுள் முடியும் ஒன்பது நாட்களுக்கு முன்னரே அவரை எமலோகத்துக்கு அழைத்துச் சென்றதை எதிர்த்து ராமர் எமலோகத்திற்கு படை திரட்டிச் செல்லவும் தயாரானார் அல்லவா? இவ்வாறு எத்தகைய ஆயுள்பங்கத்தையும் நிவர்த்தி செய்வதே ஐயர்மலை தீர்த்த மகிமையாகும். மயில் பீலி என்பது ஆயுளை விருத்தி செய்யும் சாதனங்களுள் ஒன்று என்பதால் இது மயிற்பீலி முக தரிசனம் என்றும் அழைக்கப்படுகிறது. சதுரம் என்றால் பாதுகாப்பை அளிக்கும் வடிவம் என்று பொருள். இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் ஆயிரமாயிரமாய் இணைந்து துலங்குவதே ஐயர் மலை அண்ட மகா தீர்த்தமாகும்.

ஸ்ரீகல்யாண சுந்தரி அம்மன் கூகூர்

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam