மலரின் மணமும் முள்ளின் கூர்மையும் தேவ லோகச் செல்வமே !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுலவாச அனுபூதிகள்!

அந்தந்த யுக நியதிகளுக்கேற்ப மக்களுக்கு அறவழிகளை உணர்த்துவதற்காக இறைவன் குருகுல வாசங்களை அமைத்துத் தந்து விதவிதமான வடிவங்களில் சற்குருமார்களை அனுப்புகின்றான்! கலியுகத்தின் இயந்திர ரீதியான வேகமய வாழ்க்கை, விஞ்ஞான மாயை, அரைகுறை இறை நம்பிக்கை இவற்றின் ஊடே சற்குருவின் மஹிமையை உணர்தல் அவ்வளவு எளிதா என்ன? சற்குருவின் தெய்வீகத் தன்மையை வெளிப்படையாக உணர வைத்தாலும் அவரைச் சுற்றி லட்சக்கணக்கானோர் சுயநலப் பிண்டமாய்ச் சூழ்ந்து தாம் சுகபோகங்களை அனுபவிக்க வேண்டும், உழைக்காது உறுபொருள் வந்திட வேண்டும், செய்த தீவினைகள் மலை போல் இருந்தாலும் அதனால் வந்த நோய்களை அனுபவித்திடாது உடனே தீர்த்து வைக்க வேண்டும் என்றவாறு புலம்பி, மொய்த்துப் பிய்த்துப் பிடுங்கி விடுவார்களே! இதனால் தாம் கலியுகத்தில் சற்குருமார்களே வெளிவருவதில்லை! கலியுகத்தில் நாம் காணும் சற்குருமார்கள் யாவரும் யுக யுகமாய்ப் பிரகாசித்து வரும் மகா வல்லமை நிறைந்து மகரிஷிகளும் சித்புருஷர்களும் ஆவர்! முக்தி நிலை அடைந்தும் குருகுல வாசம் தொடர்கின்றது! ஸ்ரீஹயக்ரீவரை சற்குருவாகப் பெற்ற கலைமகளே கற்றது கை மண் அளவே, ஸ்ரீஸரஸ்வதி அம்பிகையே ஸ்ரீஹயக்ரீவரிடம் இன்னமும் குருகுல வாச ஞானப் பாடம் பெற்றுக் கொண்டிருக்கின்றாள் என்றால், கல்லாத ஞானம் எந்த அளவோ!

சங்கரா சிவ சங்கரா !

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களைப் போல மீண்டும் கலியுக குருகுல வாசம் பூண்டு, கலியுக நியதிகளுக்கு ஏற்றாற் போல, அறவழி முறைகளைக் கைக்கொண்டு அவர்கள் நமக்குக் கருணை புரியக் காத்துக் கிடக்கின்றார்கள்! ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமையாக, சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் திருவடிக் கருவியாய்ப் பொலியும் ஸ்ரீவெங்கடராமன், பெறுதற்கரிய இறைபாக்யமாகப் பெற்ற ஆரம்பப் பள்ளிப் பிராய குருகுல வாச அனுபூதிகளே நமக்கு எண்ணற்ற இறைப் பாடங்களையும் புகட்டி, துன்பந் துடைக்கும் தூய மாமருந்தாகவும் அமைந்து, மன அமைதி தரும் மாதவச் சோலையாகவும் இத்தொடரில் பூரிக்கின்றது. இதை படித்துப் பார்ப்பதை விட ஊறி உணர்ந்திடில், அதியற்புத இறைப் பேரமைதியை உய்த்திடலாம்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் பரமானந்த விள்ளல் பருப்புத் தேங்காய் போல் பதிந்திருக்கும்!

ராயபுரக் கல்யாணப் படலத்தில் சிறுவன் கண்டறிந்த தெய்வீக உண்மைகள் ஏராளம், ஏராளம்! இவற்றையெல்லாம் தானே அறிந்திட நூறாண்டுகள் ஆகியிருக்கும்! அந்த ஏழை, நடுத்தரக் குடும்பக் கல்யாணத்தைத் நடத்திடப் பெரும்பாடுபட்ட பித்ருக்களே பல்வேறு வடிவங்களில் புரோகிதராகவும், எச்சில் இலை எடுப்பவராகவும் ..... அப்பப்பா! பித்ருக்கள் ஆங்கே ஆடிய தெய்வக் கூத்தை அவன் பின்னர்தான் உணர்ந்தான்! ஏதோ நம் முயற்சியால்தாம் திருமணங்கள் நடக்கின்றன என்று எண்ணுகின்றோமே அதன் பின்னணியில் இவ்வளவு தேவ சக்திகள் பரிணமிப்பதை அவன் போகப் போகத்தான் உணர்ந்தான் இதற்காகத்தானே குருகுலவாசம்!

ஒரு நாளை காலை ஏழு மணி இருக்கும், பெரியவர் வரச் சொல்லிடவே, அவன் அங்காளி கோயிலுக்கு வந்திருந்தான், வழக்கமாக அவர் அமரும் இடத்தை வணங்கி விட்டு ஆலயத்தை வெகுவேகமாகப் பிரதட்சிணம் செய்யத் தொடங்கினான்! அதற்குள் வாசலில் பெரியவரின் குரல் கேட்டிடவே விரைவாக வெளி வந்தான்! பெரியவர் சப்தம் போட்டு யாரையோ திட்டிக் கொண்டிருந்தார். அவர் திட்டினால் பெரும் கர்மங்கள் கரைந்திடுமே, யாரந்த பாக்யசாலி என அறியச் சிறுவன் ஆவலனான்!

“கோயில் இடத்தில் குந்திக் கிட்டு எத்தனை வருஷமா கொறச்ச வாடகை குடுத்துக் கிட்டு அங்காளியை ஏமாத்திக்கிட்டு இருக்கியே! இன்னிக்கு பிஸினஸ்ல ஒரு லட்ச ரூபா நஷ்டம், நடுத் தெருவுக்கே குடும்பம் வந்துடிச்சுன்னு சொல்றியே, உனக்கே நியாயமா இருக்கா? வட்டியும் முதலுமா நீ தர வேண்டிய முழு வாடகையை அங்காளி எடுத்துக்கிட்டான்னு நெனச்சுக் கிட்டு வீடு போய்ச் சேர்! போ, போ!....”

கோலம் தரும் புண்ய கோளம்!

அவன் தயங்கித் தயங்கி நின்றிடவே, “என்ன விஷயம்? அடுத்து என்ன பிஸினஸ் பண்றதுன்னு தானே! ஒரு வாரத்துக்கு உன் பொண்டாட்டியை இங்க கோயில்ல நீர் மாவுக் கோலம் போடச் சொல்லு, இந்த சொல் கேட்டான் பிள்ளையார் மூலமா அம்பாளே ஏதாச்சும் நல்ல வழி காட்டு வா.. போ ..போ...!”

அடுத்த அரைமணி நேரத்தில் அந்தக் குடும்பப் பட்டாளமே வந்து இறங்கியது! ஆலயம் முழுதும் நீர் விட்டுக் கழுவி நீர் கோலம் போட்டது! எங்கு கால் வைத்தாலும் ஜில்லென்று பச்சரிசி மாக்கோலம்! கோயிலே களை கட்டியது! அந்தச் சின்ன வாண்டுக் குழந்தை கூடத் தன் பங்கிற்கு அரை குறை சூரிய, சந்திர வட்டங்களைப் போட்டு ஜமாய்த்தது!

நாச்சியாள் நல்கிய நற்செல்வம்

“ஏய் நாச்சியா! இங்க வா..!”

அந்த மூன்று வயது வாண்டுக் குழந்தையைக் கூப்பிட்ட பெரியவர், “அப்பா கிட்ட போய் இந்தக் காசை உண்டியல்ல போடச் சொல்லி புதுசா மளிகை வியாபாரம் பண்ணச் சொல்லு போ!“ என்று சொல்லி அதனிடம் ஒரு நாலணா நாணயத்தை எடுத்துக் கொடுத்தார். அக்குழந்தையோ அந்த நாணயத்தை வாசல் படி அருகிலிருந்த மரக் கட்டையின் மேல் வைத்து விட்டுப் பெற்றோர்களைக் கூட்டிக் கொண்டு வந்து விட்டது! பெரியவரும் சிறுவனும் தூரத்திலிருந்து பார்த்தார்கள்! அந்த நாச்சியார், பெற்றோர்களிடம் என்ன சொல்லியதோ ஏது சொல்லியதோ தெரியவில்லை, கண்களில் நீர் பனிக்கப் பனிக்க, அவர்கள் நடுங்கும் கரங்களுடன் அந்த நாணயத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு உண்டியலில் போட்டு விட்டு விம்மி விம்மி அழுது, நா தழுதழுக்கப் பேச்சின்றிப் பெரியவரின் கால்களில் விழுந்தனர்! அந்த நாலணாப் புண்ய பலம்தான் இன்றைக்கு நம் நாட்டின் மிகப் பெரிய பிசினஸ் குரூப்களில் ஒன்றாக அக்குடும்ப சந்ததியின் வசம் திகழ்கின்றது!

“ஏன் வாத்யாரே! அந்தக் குழந்தை நாலணாவை அப்பாகிட்ட கொடுக்காம நேரே மரக் கட்டைல கொண்டு போய் வச்சுடிச்சே, எதுக்கு?”

“உங்கிட்ட குடுத்தா நேரே அந்த ஆள்கிட்ட கொடுத்துட்டுச் சொல்லிட்டு வந்துடுவே! ஆனா மூணு வயசு நாலு வயசுல குழந்தைங்க எல்லாம் முழு தெய்வீகத்தோட இருக்கும்டா! விதியறிஞ்சு வேலை செய்யும்! உனக்கும் எனக்கும் தாண்டா, அது சாதாரண மரக் கட்டை! ஆனா அது சக்தி வாய்ந்த நெல்லி மரக் கட்டை! குபேரன் வாசம் செய்யற இடம்! இன்னிக்கு அனுஷ நட்சத்திர நாள்! லட்சுமி கடாட்ச நட்சத்திர நாள்! நெல்லி மரப் பலகைல உக்காந்து குபேரன் பூஜை பண்ற நாளும் கூட! அதுவும் பாரேன், கோயில்ல நீர்க் கோலம் போடுன்னு சொன்ன உடனே திபு திபுன்னு குடும்பத்தோட வந்துட்டாங்க பாரு! என்ன நம்பிக்கை! கோலம் போடறது ஒரு சின்ன விஷயம்தான்! ஆனா அந்த ஆழ்ந்த நம்பிக்கை இருக்கு பாரு, அதுதான் தெய்வீகத்துல ரொம்பப் பவர் புல்லா, வேகமா வேலை செய்யும்! கோயிலுக்குக் குறைச்ச வாடகை கொடுத்ததுக்கெல்லாம் மனம் திருந்தி வட்டியும் முதலுமாச் சேர்த்து வச்சு அம்பாளுக்குப் பெரிய சேவை பண்ணனும்னு அவனுக்குப் புத்தி வந்துடிச்சு!”

“அதுவும் இன்னொரு அதிர்ஷ்டம் என்னன்னா அந்தப் பொண்ணு பேரு நாச்சியாள்! நாச்சியார் கோயில் மகா லட்சுமியே வந்த மாதிரி வெள்ளிக் கிழமையும் அனுஷமும் சேர்ற இன்னிக்கு குபேரன் பூஜை பண்ற நாள்ல அதுவும் கூட வந்திருக்கு! குபேர தேவதைகள் வர்ற நாள்னா கோயில்ல எங்க பாத்தாலும் நீர்க் கோலம் போட்டா அவங்களே பார்த்து சந்தோஷப்பட்டு குபேர சம்பத்தைக் கொடுத்துடுவாங்களே!”

ராஜன் வந்தார்....!

 “அடியேன் மேல நம்பிக்கை வச்சு நாளைக்கின்னு இதைத் தள்ளிப் போடாம இன்னிக்கே வந்து கோலம் போட்டாங்க பாரு, அந்த இறை நம்பிக்கை எவ்வளவு பெரிய தெய்வீகப் பரிசாத் திருப்பித் தருது பாத்தியா! நம்பினவனுக்கு நடராஜன்! நம்பாதவனுக்கு எமராஜன்!”

“அந்தப் பழமொழிக்கு என்ன அர்த்தம் வாத்யாரே!”

“அட கடவுளே! அது வெறும் பழமொழி இல்லைடா, தேவாதி தேவ வாக்கியம்டா, நல்ல இறை பக்தியோட இருந்தா உயிர் பிரியும் போது நடராஜ சிவபெருமானே காட்சி தந்து கூட்டிக் கிட்டுப் போவாரு, அரைகுறை பக்தினா எமனே உயிரை பறிச்சுக்கிட்டு போற மாதிரித் தோணும்!”

“அப்படீன்னா எமதர்ம ராஜா தரிசனமே விசேஷம்னு சொல்வீங்களே வாத்யாரே!”

“ஆமாண்டா நிச்சயமா விசேஷம்தான்! ஆனா ஆன்மீகத்துல இப்படி மடக்கி மடக்கிக் கேள்வி கேக்கறதுனாலயோ, பதில் கிடைக்கறதுனாலயோ என்ன சாதிக்கப் போரீங்க! ஏதோ தெளிவு கிடைச்சதுன்னா சரி! ஆனா இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட்டா எங்க Spiritual energy தான் போகும்! அந்த energyய நாங்க வேறு விதத்துல நல்லபடியாப் பயன்படுத்தி இருக்கலாமே!“

“ரொம்பக் கஷ்டப்பட்டு நிறைய சிஷ்யர்களை பல வருஷமா யோகம், தியானம் எல்லாம் டிரெயின் பண்ணி தெய்வீகத்துல ரொம்ப நல்லா develop பண்ணுவோம், ஆனா ஒரு சின்ன ego பிராப்ளத்துல, அகங்காரத்துல, ஆசைல எல்லாத்தையும் கோபத்துல விட்டுட்டு தெய்விகத்துலேந்து திடீர்னு பொத்துனு கீழே விழுந்துடுவாங்க! எங்களோட அத்தனை வருட divine energy என்ன ஆறது? மறுபடியும் அந்த நிலைக்கு இன்னொரு சிஷ்யனை தெய்வீகத்துல ஆளாக்கறது எவ்வளவு கஷ்டம்! அதனால ஒண்ணு தெரிஞ்சுக்க, தெய்வீகத்தில் சந்தர்ப்பங்கள் சிங்காரித்துக் கொண்டு வருவதில்லை, வரும்போது பயன்படுத்தா விட்டால் எத்தனை கோடி ஜன்மம் எடுத்தாலும் மீண்டும் திரும்பி வராது!”

Unwise “Sorry“ uninstalled spiritually!

“இப்ப கலியுகத்துல எதுக்கெடுத்தாலும் ரொம்ப சிம்பிளா Sorry, I apologize ன்னு சொல்லிடறாங்க! இந்தப் பருப்பெல்லாம் ஆன்மீகத்துல வேகாது! தெய்வீகத்துல sorryக்கே வேலை கிடையாது! அனுபவிச்சுத்தான் ஆகணும், கரெக்டா செஞ்சுதான் ஆகணும்!”

“Coming to the subject matter proper, எல்லோருக்குமே எம பகவான் நேர வர்றது கிடையாது! மார்கண்டேய மகரிஷி, நசிகேதன் மாதிரி உத்தம நிலை இருந்தாத்தான் அவர் தரிசனமே கிடைக்கும்! சில சமயங்கள்ள யம தூதுவர்கள் வருவாங்க! ஆனா கலியுகத்துல தீவினையும் பாவ கர்மாவும் மித மிஞ்சி இருக்கறதுனால உயிரும் அதுஅது தானா பிச்சிக்கிட்டுப் போய் எங்கெங்கேயோ அலஞ்சு landஆகி, பேயாவும், பிசாசாவும் திரியுது! சரிசரி இன்னிக்கி ஸப்ஜெக்ட் இத்தோட போதும்! இதுக்கு மேல உன் குருவி மூளைல ஏறாது...,” என்ற் அவர் சொல்லி முடிப்பதற்குள் சிறுவன் வழக்கம் போல் குறுக்கிட்டான்!

விதியை அறியும் குழந்தை மதி!

“..... அந்தக் குழந்தைக்கு இன்னிக்கு இங்க குபேரன் வந்து போவாருன்னு தெரியுமா வாத்யாரே! ”

“நிச்சயமாத் தெரியும்! என்னைவிட அதுக்கு ரொம்ப நல்லாத் தெரியும்! அதுக்கு குபேரன் தரிசனமும் நல்லாக் கிடைக்கும்! மூணு வயசு வரைக்கும் எல்லாக் குழந்தைக்கும் எல்லா தெய்வீகக் காட்சியும் புரியும், தெரியும்!”

“அப்படித் தெரியும்னா, அது அவங்க அப்பா, அம்மாவை directஆ இங்க கூட்டிக்கிட்டு வந்துடலாமே, நடுவுல உங்கிட்ட ஏன் வர்றணும் வாத்யாரே!” பெரியவர் மௌனமானார்! Perhaps it augurs a stormy divine session! அவருடைய மௌனத்தைக் கண்டாலே சிறுவனுக்குக் கிலிதான்!

“ஒண்ணு தெரிஞ்சுக்கடா, மூணு வயசுக் குழந்தைக்கு முழுசா தெய்வீகம் நிரம்பி இருக்குதுன்னு அது சத்யவானா, தர்மவாதியா இறைவனோட அடிமையா பக்தியோட இருக்கும்! சொந்த அப்பா, அம்மான்னு கூட பாரபட்சம் காட்டாம விதின்னா, விதிப்படிதான் நடக்க விடும்! ஒர் அங்குலம் கூட சத்ய நெறியைத் தாண்டாது!”

“அதுக்கு அந்த நெல்லிக் கட்டைல குபேர பகவான் வந்து பூஜை பண்ற சக்தி இருக்குன்னு தெரிஞ்சுதான் காசை அங்க வச்சது! விதிப்படி வைக்கணும்னு தெரிஞ்சுதான் வச்சது! அதுவும் ஒண்ணு தெரிஞ்சுக்கடா, அந்த குழந்தை மழலைல பேசற மாதிரி உனக்கு இருக்கு! Telepathicகா அது வண்டி வண்டியா எங்கிட்ட நெறயப் பேசிடுச்சு! சற்குரு சொன்னாத்தான் அது “Activate” ஆகும்!

“வாத்யாரே! இப்பத்தானே நீ மொத மொதல்ல அந்தக் குழந்தைய பாக்குற..., அந்தக் குழந்தையும் உன்னைப் பாக்குது! அதுக்குள்ளாற அதுக்கு நீ சற்குருன்னு சொல்லிட்டியே!”

சிறுவன் சற்றே மனத் தாங்கலாகக் கேட்டான் போலும்! ஏனென்றால் பொறாமைக் கறை சற்றே அதில் ஒட்டியிருந்தது!

‘உனக்கு அப்படித் தோணுது! நாங்க ரெண்டு பேரும் ஒரு ஜன்மத்துல தேவலோகத்துல பல்லாங்குழி ஆடியிருக்கோம்டா, நெறய இறைத் திருப்பணி பண்ணியிருக்கோம்! சரிசரி இந்த session இதோட முடியுது!” என்று சொல்லிப் பெரியவர் புறப்பட்டு விட்டார்!

சந்நிதியின் பின் சென்றவர் வெகு, வேகமாகத் திரும்பி வந்தார்! “இந்தா மாஜிக் ஷோ டிக்கட்! சாயந்திரம் மவுண்ட் ரோடுல நடக்குது, போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு!”

Grace in the Palm! அவன் கையில் டிக்கட்டைத் திணித்து விட்டுப் பெரியவர் மறைந்தார்! சிறுவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை! அவர் பேப்பர் படிப்பதாகவோ அவன் என்றும் பார்த்ததில்லை! மாயா பஜார் மற்றும் ஓரிரு ஆங்கில சினிமாக்களுக்கு அழைத்துச் சென்று அவற்றில் உள்ள தெய்வீக விளக்கங்களை மட்டும் சொல்வார்! ராமாயணம், மகாபாரதம், பாகவதத்தில் உள்ள பல சிறு பாத்திரங்கள் கலியுகத்தில் மீண்டும் தோன்றியுள்ள அதிசயங்களை, அற்புதங்களை விவரிப்பார்! தியேட்டரில் சினிமா பார்த்து வந்தவுடன்  குறித்த சில காட்சிகளை அவர் விவரிக்கும் போது தன் வலது கை விரல்களை விரித்திட, அவருடைய உள்ளங்கையில் அதே காட்சிகள் ஓடுவதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமோ ஆச்சரியமாக இருக்கும்!

“இதைத் தாண்டா கொஞ்ச நாள்ல Palmtopனு விஞ்ஞானத்துல சொல்லி மாத்திக் கொடுப்பாங்க!”

பெரியவர் அண்டம் அதிரச் சிரித்தார்! அன்று பெரியவர் சொன்னதை வியப்புடன் கேட்டுக் கொண்ட இன்று குருமங்கள கந்தர்வா வெங்கடராமனாக அவருடைய குருவின் palmtop குருமொழிகளை நமக்கு desktop (DTP) மூலமாக அளித்துக் கொண்டிருக்கின்றார்! மற்றபடி சினிமா, மாஜிக் என்றாலே வெறுக்கும் பெரியவர் தானே கூப்பிட்டு மாஜிக் ஷோ போய் வா என்று சொன்னால் அதில் ஏதோ விசேஷம் இருக்கும்தானே!

சிறுவன் பஸ் பிடித்து, இடம் தேடி, மவுண்ட் ரோட் போவதற்குள் ஷோ ஆரம்பித்துவிட்டது, பலத்த கை தட்டல்களுக்கிடையே! சிறுவன் போய் நின்றான்! தாமதமானதால் உள்ளே விட மறுத்தார்கள்! திரும்பிப் போனால் பெரியவரிடம் வசையும் உதையும் விழும் என்பதால் அவர்களிடம் அழுது புரண்டு, கெஞ்சிக் கூத்தாடிட, சிறுவன் என்பதால் உள்ளே அனுமதித்தார்கள்! என்ன அதிர்ஷ்டம் சிறுவனுக்கு! ஹவுஸ் ஃபுல் ஆனதால், முதல் வரிசையில் VIP சீட் ஒன்றிரண்டு காலியாக இருக்கவே அங்கே, மேடைக்கு வெகு அருகில் உட்கார வைத்து விட்டார்கள்! குட்டையாய் இருந்ததால் பின்னாடில் உட்கார்ந்திருந்தால் கூட எட்டி எட்டிப் பார்த்தால்தான் ஏதோ கொஞ்சம் தெரிந்திருக்கும்! இப்போது மேடை மாஜிக் நிகழ்ச்சிகள் Close-upல் தெரிகிறதே! எல்லாம் வாத்யாரின் லீலை! லேட்டாக அனுப்பி முன் சீட் வாங்கிக் கொடுத்து விட்டார்!

அவன் போகும்போது மூன்றாவது காட்சியாக ஒருவரைப் படுக்க வைத்து கத்தியால் வெட்டிட வெட்டுண்டவர் மீண்டும் எழுந்து வருவார்! பலத்த கரகோஷங்களுக்கிடையே once more, once more என்று ரசிகர்கள் விசில் அடித்திடவே, அதே காட்சி மீண்டும் தொடங்கும் போலிருந்தது!

Wisdom quits!  திடீரென்று pin drop silence! மேடையில் chief magician பதைப்பதைப்புடன் இங்குமங்குமாகப் பார்த்தார், ஓடினார்! ஒரு சில நிமிடங்களில் அவர் மேடையை விட்டு நைஸாகக் கீழிறங்கி வந்தார். அதற்குள் மூடுமந்திரமாக வேறு ஏதோ காட்சிகளை அட்ஜஸ்ட் செய்து நடத்தினார்கள்.! நல்ல தங்கக் கலர் கிரீடம்! பள பளா ஜிகினா டிரஸ்ஸுடன் முதல் வரிசையில் யாரையோ தேடிய மாஜிக் நிபுணர் சிறுவனிடம் வந்து கையெடுத்துக் கும்பிட்டார்!

“சுவாமி! இப்போதுதான் வந்தீங்களா?”

அவர் சுவாமி என்றதால் வேறு யாரையோ குறிப்பிடுவதாக எண்ணிப் பின்புறம் திரும்பிப் பார்த்தான் சிறுவன்! அவரோ சிறுவனைத் தொட்டுக் கையெடுத்துக் கும்பிட்ட. “சுவாமி! தயவு செய்து இந்த இடத்தை விட்டுப் போகணும்னு கெஞ்சிக் கேட்டுக்கறேன்! என்னால் மாஜிக் நடத்த முடியலை! என்னை நம்பி நூத்துக் கணக்கான ரசிகர்கள் டிக்கட் வாங்கியிருக்காங்க! பண்ண முடியலைன்னா என்னையும் என்னோட டீமையும் த்வம்சம் பண்ணிடுவாங்க சுவாமி! தயவு செய்து என்னைக் காப்பாத்தணும்! நீங்க நகண்டாத்தான் அது முடியும்!” என்று கூறிட அவர் கண்களில் நீர் வழிந்தது! சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை!

“வெளியே வந்திடு”, என்று பெரியவர் சூட்சுமமாகக் கூப்பிடுவது போலத் தெரிந்திடவே சிறுவன் மௌனமாய் வெளியே வந்தான்! மீண்டும் கரகோஷத்தினிடையே மாஜிக் தொடர்ந்தது! முதன் முதலாகத் தன் வாழ்க்கையில் orchestrated மௌனத்துடன், சிந்தனையே ஓடாது, வெற்று மனத்துடன் வெளியே வந்தான் சிறுவன்!

“ஏண்டா மாஜிக் ஷோ பார்க்கலையா ?

சிறுவன் குனிந்த தலையை நிமிர்த்தினான்! எதிரில் புன்சிரிப்பின் சப்தம் கொட்டிட... ஆங்கே gate அருகே பெரியவர் நின்றார்! கலகலவென்று கடலலைச் சிரிப்பு அவரிடம் ஆர்ப்பரித்தது! இவர் எங்கே இங்கு வந்தார்!

வெளியே spiritual magic show வா? சிறுவன் அதிசயித்தான்! உள்ளே என்னதான் பூடகமாய் நிகழ்ந்ததோ, அல்லது இந்த divine magician தான் நிகழ்த்தினாரோ! சிறுவன் குழம்பினான்!

பசுமடிக் காம்பு லிங்க முக தரிசனம்

ஸ்ரீசிவமூர்த்தி, ஸ்ரீமஹா விஷ்ணு, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீபார்வதி, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி உள்ளிட்ட கோடானு கோடி தேவ மூர்த்திகள் உறைகின்ற புனித உடலைத் தாங்கி இருப்பதே புனிதமான பசுவாகும். உலகெங்கும் உள்ள கோடானு கோடி குழந்தைகளுக்குத் தாயாக இ(ல)யங்கி அருட்பால் தந்து அரவணைக்கும் ஆத்மமே பசுவாகும்! காமதேனுவே ஆதிமூலப் பசுவாகத் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்திட்டான். பசுமடிக் காம்பு ஒவ்வொன்றும் பாண லிங்க மூர்த்தியே! ஸ்ரீகாமதேனு திருஅண்ணாமலையில் பெற்ற லிங்க முக தரிசனங்களே பசுமடிக் காம்புகளாயின! நீங்கள் அட்டைப் படத்தில் காண்பது ஸ்ரீகாமதேனுப் பசுதவம் புரிந்து, லிங்க முக தரிசனங்களே பசு மடிக்காம்புகளாக ஆகுதற்கு நல்வரம் பெற்ற மலைத் தரிசனமாகும். நாமனைவருமே உலகாளும் அன்னையாம் உண்ணாமுலையாளின் அருளால் நம்மை ஈன்ற தாய் சொரிந்த தாய்ப்பாலுடன், ஈன்றாத் தாயாம் கோமாதாவாகிய பசுவின் பாலும் உண்டுதானே வளர்ந்தோம். பெற்ற தாய்க்குத் தொண்டாற்றி நன்றிக் கடன் செலுத்தத் தலைப்பட்ட நாம், ஈன்றாத் தாயாம் பசுவிற்கு என்றென்றும் கடைமைப்பட்டுள்ளோம்! வருடத்திற்கு ஒருமுறை மாட்டுப் பொங்கலன்று மட்டும் வயிறு முட்ட முட்டப் பசுவிற்கு உணவு தந்தால் போதுமா? திருஅண்ணாமலையில் இந்த திவ்யமான மடிக்காம்பு லிங்க முக தரிசனத்தைப் பெற்று வணங்கித் துதித்து வந்திடில்தான் நற்சந்ததி தழைக்கும்! பசுவின் மடிக்காம்பு ஒவ்வொன்றும் திருஅண்ணாமலையின் மடிக்காம்பு லிங்க முக தரிசனங்களிலிருந்து இறைவனால் மடிக்காம்பு பாண லிங்கங்களாக வடிக்கப் பெற்றவை என்னும் தெய்வீக ரகசியத்தை இனியேனும் உணர்ந்திடுக!

ஸ்ரீஅநிருத்த கரிவரத மஹரிஷி தரிசித்தது! ஸ்ரீஅநிருத்த கரிவரத மஹரிஷி என்பார் புனிதம் நிறைந்த பசுக்களின் உதிரத்தின் எவ்விதப் புண்ய சக்தி அமிர்தமயப் பாலாக வடிவுறுகிறது என்று அறிய விழைந்தார். ஏனென்றால் புண்ணியத்திலும் நிறைய வகைகள் உண்டே! எத்தகைய புண்ய சக்திகள், ஐஸ்வர்யமாக, குழந்தைச் செல்வமாக, நகைகளாக, வீடு வாசல்களாக மாற்றப்படுகின்றன என்பதை உணர்ந்தால் மக்களை நல்வழிப்படுத்தி அவர்களுடைய முறையான விருப்பங்களைப் பூர்த்தி செய்து அறவழியில் செழிக்கச் செய்யலாமன்றோ! இவ்வகையில் மக்களுக்குத் தொண்டாற்றிட விழைந்தார் ஸ்ரீஅநிருத்த கரிவரத மஹரிஷி! மேலும் எந்தப் புண்ய சக்திக் குறைவால் துன்பங்கள் தோன்றுகின்றனவோ அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பூஜை முறைகளையும் விருத்தி செய்யலாமன்றோ! இதற்காக எத்தனையோ வழிபாடுகளை மேற்கொண்டு திருத்தலங்களுக்குச் சென்று அரிய யோகங்கள் பயின்று இறுதியில் திருஅண்ணாமலையை வந்தடைந்தார்!

வருடந்தோறும் மகா சிவராத்திரியன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஏனைய தினங்களில் ஆழ்ந்த தவத்தில் திளைத்தார்! இவ்வாறாக 108 மகா சிவராத்திரிப் புண்ய தினங்கள் கடந்த பின்னர்தாம் அவர்தம் அபிலாசை இறையருளால் நிறைவேறியது! அந்த யுகத்தின் விக்ரம ஆண்டின் மாசி மாதப் பௌர்ணமி திதியும் வந்தது! திடீரென்று கோடானு கோடி சூரியர்கள் ஒன்று சேர்ந்தாற் போல் மகத்தான ஜோதி உருவாகிட அம்மலை தரிசனத்தில் பசு மடிக் காம்புகள் போல் முகடுகள் பொலிந்தன! அவற்றிலிருந்து பொங்கிய ஜோதிக் கிரணங்களை ஈர்த்து தரிசனப் பகுதியில் சில அபூர்வ மூலிகைகளும் விளைந்தன! இவை யாவும் சிவராத்திரியின் 24 மணி நேரத்திற்குள் பொங்கி விளைந்து பூரிப்பவையாகும். பசு மடிக்காம்பு லிங்க முக தரிசனங்கண்டு பரமானந்தம் கொண்ட ஸ்ரீஅநிருத்த கரிவரதர் அம்மூலிகைகளை அருந்ததி சமேத வசிஷ்ட மாமுனிக்கு அர்ப்பணித்திட்டார்! காமதேனுவை போஷிக்கின்ற, காமதேனுவே தன் தாய்போல் மதிக்கின்ற அருந்ததி அம்மையார் க்ஷீர காஷ்டம், பாலாம்ருதம், முலைக் குவளை போன்ற சூட்சுமப் பெயர்களை உடைய அம்மூலிகைகளை மஹிரிஷி தம்பதியினர் காமதேனுவிற்கு அளித்திடவே அவற்றைக் காமதேனு, பசு உண்டிட, ஆதி மூல கோ க்ஷீராமிர்தம் (ஆதி முதற் பசும்பால்) அங்குதான் உண்டாயிற்று! ஆம்! அப்போதுதான் ஸ்ரீஅநிருத்த கரிவரத மகரிஷி, அருணாசல சக்தியால் விளையும் இத்தகைய அற்புத மூலிகைகளைப் பசு, ஆடுகள், எருமைகள், குரங்குகள் போன்று பாலூட்டி விலங்குகள் உண்பதாலேயே குறித்த புண்ய சக்தியை உடைய உதிரமானது பாலாகின்றது என்று தெளிந்தார்! அதன்பின் அப்புண்ய சக்தியைப் பிரபஞ்சமெங்கும் விருத்தி செய்யும் பொருட்டு மடிக்காம்பு லிங்க முக தரிசனப் பகுதியில் பெருந்தவம் பூண்டு அதன் மஹிமையைப் பிரபஞ்சத்திற்கே உணர்த்தினார்!

இவ்வாறாகப் பிரபஞ்சத்தின் ஆதிமூலப் பசுவான காமதேனு, க்ஷீர தேவ வகை மூலிகைகளை உண்டதன் அருட்பலனாகவே, அதன் குலமனைத்தும் ஏன் மனித குலத்திற்கும் விலங்கினங்களுக்கும் தாய்ப்பாலின் தேவ புண்ய சக்திகள் கிட்டின! இதற்கு இத்தரிசனம் அருள் புரிகின்றது என்ற தெய்வ ரகசியத்தையும் ஸ்ரீஅநிருத்த கரிவரத மஹரிஷியே கண்டுணர்ந்தார்! இவ்வுலகில் பால் வளம் நிறைந்த டென்மார்க், பின்லாந்து முதல் ஆஸிதிரேலியா, நம் பாரத நாடு உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பசும்பால் விருத்தியாகக் காரணமே, அந்தந்த நாட்டுப் பசுக்கள் சந்ததி சந்ததியாக இம்மூலிகைகளை உண்டதேயாம்!

ஸ்ரீஅநிருத்த கரிவரத மஹரிஷி இந்த மடிக்காம்பு லிங்க முக தரிசனப் பகுதியில் மேன்மேலும் தவம் பூண்ட போதுதான் தற்போது விஞ்ஞான முறையில் DNA என்றழைக்கப்படும் Genetic code ற்கான சிருஷ்டி ரகசியங்கள் நிறைந்த சந்ததி சந்தம் எனும் தேவ ரகசியங்களை  உணர்விக்கும் அதி அற்புத தரிசனப் பகுதி இதுவே என்றும் உணர்ந்தார்! எனவே சந்ததி சந்ததியாக நல்லொழுக்கமும், பக்தியும் பரவி நிலைத்திட இத்தரிசன பலன்கள் தாம் துணை புரிகின்றன! பசு, கன்றுடன் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திட்டு இங்கு தியானம் புரிந்து ஏழைகளுக்குப் பசு (கன்றுடன்) தானம் அளித்து வந்தால் தாய்ப்பால் சுரக்கும் பாக்யத்தை, வம்ச விருத்தியை, சந்தான பாக்யத்தை இறையருளால் பெற்றிடலாம்!

பசுவின் உடலில் சிவன், விஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட கோடானு கோடி தேவ மூர்த்திகளும் தேவதைகளும் உறைகின்ற திருமேனியே பசுமூர்த்தி என்றால் நாம் கோமாதாவை வணங்கும் போதெல்லாம்  சாக்ஷாத் பரம்பொருளையே, சர்வேஸ்வரனையே காண்கின்றோம் அல்லவா! எனவே, நாம் தினம்தோறும் கடவுளைக் கண்ணாரக் கண்டு கொண்டுதான் இருக்கின்றோம். வலது கண்ணில் சூரியமூர்த்தி, இடது கண்ணில் சந்திர மூர்த்தி, நடுமுகத்தில் சிவபெருமான், நாசிக்கு மேல் பிள்ளையார், முருகன், காதுகளில் அஸ்வினி குமார தேவர்கள், பிடரி அருகே பிரம்மா, கழுத்துப் பகுதியில் விஷ்ணு, வலது முன் காலில் பைரவர், இடது முன் காலில் ஆஞ்சநேயர், வயிற்றுப் பகுதியில் சரஸ்வதி, அக்னி, அமிர்த சாகர மூர்த்தி, பின் பகுதியில் லக்ஷ்மி, கங்கா தேவி, வால் பகுதியில் நாகராஜ மூர்த்திகள் என அனைத்து மூர்த்திகளையும் நாம் பசுவின் ரூபத்தில் வணங்கிக் கொண்டுதான் இருக்கின்றோம், எனவே கடவுளைக் கண்டாயா, என்று கேட்டால் கண்டேன், கண்டேன், கண்டேன் என்று அறுதியிட்டு ஆனந்தத்துடன் கூவிடுங்கள். தினமும் பசுவிற்கு, புல், பழங்கள், நீர் அளிப்பது இறை வடிவங்களுக்கு நாம் படைக்கும் நைவேத்தியம் என உணருங்கள். க்ருத யுகம், த்ரேதா யுகங்களில் தெய்வ மூர்த்திகள் வீதிகளில் முழு வடிவில் உலா வந்தனர். தற்போது கலியுகத்தில் பசு வடிவில் நமக்கு அருள்புரியக் காத்திருக்கின்றனர்!

திருஅண்ணாமலையே சுயம்பு லிங்கப் பிரபஞ்சம்!

திருஅண்ணாமலையின் திருமேனியில் உள்ள ஒவ்வொரு செடியும், கொடியும், மரமும், புல்லும், மூலிகையும், வண்டும், புழு பூச்சியும், பறவையும் ஒவ்வொன்றும் மகரிஷியின், சித்தரின், யோகியின், மாமுனியின், மும்மூட்சுவின் வடிவேயாம்! எவ்வாறு திருப்பதியில் படியாய்க் கிடப்பேனோ என்று பெருமாளை வேண்டி வேண்டி இறைவனுடைய அடியார்களின் திருப்பாதங்களைத் தழுவும் மலைப் படியாய் இருக்க வரம் வேண்டி மகரிஷிகள் தவங்கிடக்கின்றார்களோ, சபரிமலையில் 18 திருப்படிகளில் ஒவ்வொன்றிலும் கோடானு கோடி தேவ மூர்த்திகள் உறைகின்ற நல்வரம் வேண்டி ஸ்ரீஐயப்ப மூர்த்தியை வேண்டுகின்றார்களோ, இதைப் போலத் தான் திருஅண்ணாமலையாராம் சிவபெருமானின் அருட்திருமேனியைத் தீண்டிட கோடானுகோடி தேவ மூர்த்திகளும் எத்தனையோ கோடி யுகங்களாக திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து மலையின் திருமேனிக்கு நல்லாடை போல் திளைக்கின்றனர். ஏனென்றால் மலையின் மேலும், கீழும், உள்ளும், புறமும், விண்ணிலும், மண்ணிலும், அடியிலும் உள்ள ஒவ்வொரு மண் துகளும் கல்லும் பாறையும் சுயம்புச் சிவலிங்க மூர்த்திகளே. நீங்கள் கிரிவலம் வரும்போது உராய்ந்து செல்வதும் கூட கோடானுகோடி சூட்சும வாயு ரூப சிவலிங்க மூர்த்திகளே, எனவேதான் நாம் கிரிவலம் வரும்போது சாலை எங்கும் மேலும், கீழும் பொதிந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் சுயம்புச் சிவ லிங்க மூர்த்திகளின் மீது நம் பாதங்கள் பட்டு விடலாகாது என்பதற்காகத்தான் சடையப்ப சித்தர் பிரான் என்பார் பன்னெடுங்காலம் சிவலோகத்தில் தவம் புரிந்து தம் ஜடாமுடியை திருஅண்ணாமலை கிரிவலப் பாதை எங்கும் பரப்பி உள்ளார்.

எனவே நாம் இன்று திருஅண்ணாமலையில் நடந்து செல்வது சடையப்ப சித்தர்பிரானின் சடை முடிமேல் தாம். எனவே தான் அவ்வப்போது குனிந்தும், தரையைத் தொட்டும், கிரிவலம் வருதல் வேண்டும். இச்சித்தர்பெருமான் இப்பெரும் பேற்றைப் பெறுவதற்காகத் தவம் பூண்ட இடமே இன்றைக்கும் சடையப்ப சித்தலோக தரிசனம் என்று தேவாதி தேவர்களால் போற்றப்படுகின்றது. இவ்விடத்திலிருந்து மலையைத் தரிசித்தால் பூங்குழல்கள் போல இறைவனுடைய சடை குழல் வடிவம் தோன்றும். பதஞ்சலி முனிவர் நடராஜப் பெருமானின் திருச்சடைக் குழல் கூத்து வடிவைப் பெறுவதற்காக சடையப்ப சித்தரின் அருளாசியைப் பெற்று இம்மலைத் தரிசனப் பகுதியில் அவர் விரும்பிய நடராஜ நடனக் கோலத்தைப் பெற்றார். எனவே திருஅண்ணாமலை கிரிவலத்தில் கோடானு கோடி மகரிஷிகள் தவம் புரிந்த தலங்களே அதியற்புத மலைத் தரிசனங்களாக விளங்குகின்றன.. இவ்வகையில் நாம் அட்டைப் படத்தில் காண்பது மடிக்காம்பு லிங்க முகத் தரிசனமாகும். ஸ்ரீஅநிருத்த கரிவரதர் என்னும் மகரிஷியே இங்கு தவம் பூண்டு பெறுதற்கரிய இந்த தரிசனத்தைப் பெற்றுத் தந்துள்ளார். அடுத்த முறை கிரிவலம் வரும்போது இத்தெய்வீக காட்சியை எங்கு பெறுகிறீர்கள் என்று உணர்ந்தால் தான் திருஅண்ணாமலையில் கோடிக்கணக்கான மலைத் தரிசனங்கள் பிரகாசிக்கின்றன என்பதை நீங்களே உணர்வீர்கள். தேவலோகத்திலிருந்து காமதேனு, பட்டி போன்ற பசுதேவ மூர்த்திகள் பசுக்களின் வடிவில் வந்து பூஜிக்கின்ற அற்புதத் தரிசனப் பகுதி. முலைப்பால் ஊட்டும் பெறுதற்கரிய தாய்மைப் பாக்கியத்தைத் தருகின்ற மிகவும் அற்புதத் தரிசனம். உண்ணாமுலையாளாகிய உமையம்பிகையே அன்னபூரணி வடிவில் ஆதிமூல பசுதேவ மூர்த்தியாகிய காமதேனுவிற்கு அன்னம் தந்து தேவாமிர்தமாகிய பசும்பாலை அமிர்தமாக வர்ஷித்த தலம்.

காமதகனப் பண்டிகை

மனித வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான பண்டிகையான இதனை நம் நாட்டிலேயே பலரும் மறந்துவிட்டது வருத்தத்திற்குரியதாகும்., ஆங்காங்கே சில கிராமப் புறங்களில் மட்டுமே இதனை இன்றும் ஏதோ ஒரு வகையில் கொண்டாடி வருகின்றார்கள். காமம் என்றால் பொதுப்படையாக விருப்பம் என்று பொருள். மனிதன் தன் வாழ்வைத் தன் வருமானத்திற்குள் நடத்திக் கொள்வதற்காக முறையான விருப்பங்களை, நியாயமான ஆசைகளை வைத்திருப்பதில் தவறில்லை! பேராசை கூட ஒரு வகைத் தீய காமமே! லாட்டரிச் சீட்டில் பரிசு கிட்டி கோடீஸ்வரராக, லட்சாதிபதியாக ஆக வேண்டும் என்று எண்ணுவதும் காமமே! குறித்த தகுதியின்றி நாளையே சேர்மேனாக, MD, GM ஆக வேண்டும் என்று கோருவதும் முறையற்ற காமமே! தன் மாத வருமான நிலையை மீறி பங்களா, கார், விமானப் பயணம் அயல்நாட்டுச் சுற்றுலா என்று ஆசைப்படுவதும் முறையற்ற காமம்தான்!

எல்லாவற்றைவிட முறையற்ற காமமாக விளங்குவது பிறன் மனை நாடுதலாகும்! நல்லொழுக்கமில்லாது, முறையற்ற காமத்தின்பால் இச்சைகளைக் கொள்வதும், தீய வழக்கங்களில் ஈடுபதுவதும்தாம் கொடிய கர்மவினைகளாக, பாவச் சுமைகளாய்ச் சேர்க்கின்றன. ராமாயணமும் ஸ்ரீராம அவதாரம் மூலம் ஏகபத்னி விரதத்தை ஆணும், கணவனே கண் கண்ட தெய்வம் என்ற விரதத்தைப் பெண்ணும் பூண்டு புனிதமான கற்புடன் இருபாலரும் திகழ வேண்டும் என்பதையே முதற்பாடமாக உணர்த்துகிறது. தற்காலத்து சினிமா, டிவி, ஆடை குறைப்பு விழாக்களும், பேஷன் ஷோவும், ஆபாசப் பத்திரிகைகளும்/படங்களும் எல்லா இடத்திலும் விஷக் கிருமி போல் பரவி வருகின்றது. சாதாரணக் குடும்பப் பத்திரிகை கூட ஆபாசந் தழுவிய போட்டோ, படம் இல்லாமல் வெளிவருவதில்லை!

ஸ்ரீரதி மன்மதன் திரைலோக்கி

பெண்ணாய்ப் பிறத்தல் மகா புனிதமான பாக்யமாகும். தியானம், யோகம், தவம், பொறுமை, அடக்கம், பணிவு ஆகியவற்றில் ஆண்களை விடப் பெண்கள் பன்மடங்கு ஆன்ம சக்தியைப் பெற்றிருக்கின்றனர். எனவே சமுதாயத்தில் விஷக்களைச் செடிகளாய்ப் பரவி வரும் தீயொழுக்கத்தைத் தடுத்திடவும் குறிப்பாக இளைஞர் சமுதாயம் நல்லொழுக்கத்தில் பிரகாசித்திடவும், வருங்காலச் சந்ததிகள், புனிதமான கற்பு நெறியில் பக்தியுடன் திளைத்திடவும், கணவனே கண் கண்ட தெய்வம் என்ற நம் ஆன்றோர் மொழிப்படி ஆண், பெண் இருபாலாரும் கற்பு நெறியில் பிரகாசித்து இல்லறத்தை இனிய இறைவழியில் பூரிக்கச் செய்யவும் காமதகன பண்டிகை அருட்துணை புரிகின்றது. அறிந்தோ அறியாமலோ இதுவரை செய்த முறையற்ற காமச் செயல்களுக்குத் தக்கப் பரிகார வழிகளைப் பெற்றிடவும், சமுதாயமே கற்பு நெறியில் சிறந்திடவும் முறையற்ற தீயொழுக்கங்களை, தீவினைகளை அறவே தகித்திடவும் காம தகனப் பண்டிகை பெரிதும் உதவுகின்றது. இந்நாளில் சமுதாயப் பரவெளியிலும் மாந்தர்களின் மனத்திலும் அழுக்குப் படிமமாய்ப் பதிந்திருக்கும் முறையற்ற காம எண்ணங்களை, தீவினைகளை ஓரிடத்தில் கிரகித்துத் திரட்டி, பஸ்மம் செய்வதுடன் ஓரிடத்தில் கிரகித்துத் திரட்டி, பஸ்மம் செய்வதுடன் அவ்விடத்திலேயே காமத் தீவினைகளை வெல்ல வல்ல தெய்வீக சக்திகளை உற்பவிக்கவும் இந்த காமதகனப் பண்டிகை நல்வழி காட்டுகிறது. ஊர் மக்களும், அடியார்களும் இறை பக்தர்களும் ஒன்று கூடிச் செய்ய வேண்டிய சத்சங்க பூஜை இது! மஞ்சள் நிற ஆடைகளையோ மஞ்சளில் தோய்த்த ஆடைகளிலோ இன்று அணிதல் சிறப்பானது! நல்ல புதிய பருத்தித் துணியைக் கொண்டு காம பிம்பம் வடித்துப் பூஜை செய்து விநாயகரை வேண்டி, அனைத்து தெய்வமூர்த்திகளையும் பிரார்த்தித்து, ரதி மன்மத தம்பதியின் ஆசியை வேண்டிப் பிரார்த்தனை செய்திடுக! ரதிமன்மதன் இருவரும் சேர்ந்து இறைவனின் தரிசனத்தைப் பெற்ற திருலோக்கித் தலத்தில் இதனைக் கொண்டாடுதல் சிறப்புடையது.

காம தகன பண்டிகை

காம தகன பூஜையை எவ்வாறு நடத்துவது? காமன் பிம்பத்தை உருவகித்து ஒரு வஸ்திர வடிவம் கூட்டப்பட வேண்டும்! இதனையே காமன் பிம்பம் என்பர்! பிம்பத்தின் முக வடிவிற்காக நெல் மணிகள், முழு அரிசி மணிகள், கோதுமை இட்டு வட்ட வடிவத் துணியில் கட்டி முகமாக்கி, உளுந்து மணிகளால் சிறு மூட்டைகளாக்கி இரு காதுகளாக வடித்திடுக! மஞ்சளை வைத்து மூக்கை வடித்திடல் வேண்டும்! முகத்திற்கு விபூதி மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டிடுக! அனைத்துப் பருப்பு வகைகள், நவதானியங்கள், கேழ்வரகு, பசு விறட்டி, வைக்கோல், அத்தி, ஆல், புரசு போன்ற பலவித சமித்துகள் கொண்டு நிரப்பி வயிற்றுப் பகுதி ஆக்கிடுக! எள், எருக்கு, முந்திரி, பூவரசு, சமித்து கொண்டு துணியால் கட்டிக் கரங்களைச் செய்திடுக.. பார்லி, முழு நிலக் கடலை, பொட்டுக் கடலை போன்ற கடலை வகைகளைக் கொண்டு கால்களையும், பாதங்களையும் அமைத்திடுக! சிவலிங்கம் எதிரிலோ, சிவமூர்த்தி உருவம் முன்போ ஒரு குழி வெட்டி அதில் இந்த காமன் பிம்பத்தை இறக்கி வைத்து, வலம் வந்து நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசுநெய், வெண்ணெய், இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளை ஊற்றிச் சூடம் வைத்து, அக்னியை ஏற்றிடுக! இந்த வழிபாட்டின் போதெல்லாம் ஸ்ரீருத்ரம், சமகம், சிவபுராணம், திருத்தாண்டகம் போன்ற சிவத்துதிகளை ஓதிடல் வேண்டும்.. அக்னி எழுகையில் அனைவரும் மிகவும் கவனத்துடன் வலம் வந்து

பிறை சூடிப் பிஞ்ஞகனாய்
மறை நாலும் மாமலராய்
இறை ஆளும் ஈசபதி – எம்
குறை தீரும்! காமக் குறை தீரும்!

என ஓதி வலம் வந்திடுக! காம பிம்பம் அக்னியில் பஸ்மமாயின் சிவனுக்கு அபிஷேக, ஆராதனை, வழிபாடுகளை நிகழ்த்திட வேண்டும். உடலில் பெருந் தீக்கறையாய்ப் படிந்திருக்கும் காமக் குற்றங்களுக்குத் தீர்வு தரும் அதியற்புதப் பண்டிகை! இன்று புத்தாடைகளை அளிப்பதன் மூலம் முறையற்ற காம உணர்வினைக் களைந்திடலாம்.

கம்ப்யூட்டர் வைரஸ்

கம்ப்யூட்டர் வைரஸ் என்பது தீய சக்தியேயாகும் (Strong and powerful negative force !) தீய சக்தி எப்போதுமே நல்ல சக்திகளை எதிர்த்துப் போராடி, நல்லனவற்றை அழிக்க முற்படும். இறுதியில் நல்ல சக்தியே தார்மீகமாக வெல்லும் எனினும் எவ்வாறு ஒரு நல்ல மனிதர் கூடப் பல துன்பங்களைத் தன் வாழ்வில் அனுபவிக்கின்றாரோ, அதே போல நல்ல சக்தியானது, முதலில் தீய சக்திகளின் தீவினைக் கதிர்கள் முழுவதும் வெளிப்பட்டு அவை சக்தி இழக்குமாறு செய்த பின்னரே அதை முழுவதுமாக அழிக்கின்றது. ஏனெனில் தீய சக்தி அரைகுறையாக நின்று வெல்லப் படுமேயானால் அது எப்போது வேண்டுமானாலும் அதிபயங்கரமாக வளர்ந்து விடுமல்லவா? இதற்காகத்தான் இராவணன், கும்பகர்ணன் போன்றோர் தம் தவ சக்தியையெல்லாம் இழக்கும் அளவிற்கு அவர்களுடன் பல நாட்கள் பெரும் போரிட்டு, ஸ்ரீராமர் பல துன்பங்களை அனுபவித்தே அரக்கர்களை வென்றார், அரைகுறையாக அவிந்து நின்று போகின்ற அசுர சக்திகள் எப்போது வேண்டுமாயினும் துளிர்த்துவிடும்.

வைரஸ் ஒரு programme தானே எனக் கூறினாலும், இவ்வைரஸ் programme எழுதுபவர்களும் அசுர சக்திகள் நிறைந்தவர்களே! பிறரைத் துன்புறுத்துவதில் sadist ஆக இருப்பவர்கள்தாம் பல யுகங்களில் அசுரர்களாக பூமியில் வலம் வந்து, எத்துணையோ கோடி உயிர்களை மாய்த்தவர்கள், வைரஸ் என்பது ஆன்மீகத்திற்குத் தீங்கிழைக்கும் ஒரு தீய சக்தியாக இருப்பதால், ஆன்மீக ரீதியானத் தீர்வன்றி என்னதான் Anti virus programme எழுதப்பட்டாலும் கூட அது முழுமையான வெற்றியைத் தராது, இவ்வுலகில் எத்தகைய வைரஸையும் எதிர்கொள்ளும் வண்ணம் எந்த ஒரு perfect Anti virus programmeஐயும் விஞ்ஞானத்தால் உருவாக முடியவில்லையே, ஏன்? இதற்குக் காரணம், மெய்ங் ஞான விஞ்ஞானத்தை மதியாது, வைரஸை விஞ்ஞானம் மூலம் எதிர்க்க முற்படுவதுதான்! இதற்கு ஆன்மீகத்தில்தான் பரிபூரண வழிமுறைகள் உண்டு.

அசுர சக்தியே வைரஸ்! வைரஸை எதிர்கொள்வதற்கான சக்திகளைக் கொண்டதே சனி கிரஹமாகும். வைரஸ் என்பது ஒருவித அரக்க சக்தியாக விளங்குவதால், இதனை அழிப்பதற்கான தேவ அஸ்திர சக்திகள் நிறைந்ததே சனி கிரஹமாகும். எனவே முக்கியமான கம்ப்யூட்டர் துறையில் விளங்குபவர்கள், தம் தொழிலில் வைரஸால் பாதிப்பு ஏற்படும் என எண்ணுவோர் சனி பகவானை தினந்தோறும் பூஜித்து வரவேண்டும். சனிக்கிழமைகளில், சனி ஹோரை நேரத்தில் (காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9) சனீஸ்வரத் துதியை ஓதியவாறு திருஅண்ணாமலை, தேனி மலை, பர்வத மலை போன்ற மலைத் தலங்களில் சிவதர்பை மற்றும் விஷ்ணு தர்பையைக் கைகளில் ஏந்தி கிரிவலம் வருதலும், சனி பகவானுக்குப் ப்ரீதியான எள் கலந்த எள் உருண்டை, எள்ளோதரை மற்றும் கருநீல வஸ்திரங்களைத் தானமாக அளித்தலும் வைரஸை எதிர்கொள்வதற்கான தெய்வீக வழிமுறைகளாகும்! சனிக்கிழமையன்று கறுப்பு மற்றும் கருநீல ஆடைகளை அணிந்தும் கம்ப்யூட்டர் பணிகளைச் செய்வதும் நலமளிக்கும்.

ஸ்ரீஅனுராதாக்ரமண சரஸ்வதி
உடையார்கோவில்

ஸ்ரீஅனுராதாக்ரமண கணபதி -  THE GOD FOR THE DIGITAL!  ஸ்ரீஅனுராதா க்ரமண சரஸ்வதி – THE GODDESS FOR THE CYBER!

கம்ப்யூட்டர் துறை என்பது கலைமகள் லோகத்தில் ஸ்ரீஅனுராதா க்ரமண சரஸ்வதி என்ற கலைமகளின் ஆட்சியில் அமைவதால், கம்ப்யூட்டரைத் திறந்தவுடன், ஸ்ரீஅனுராதா க்ரமண கணபதி துணை, ஸ்ரீஅனுராதா க்ரமண சரஸ்வதி துணை எனத் தோன்றித் துதிக்கும் வண்ணம் desktopல் வைத்துக் கொள்வது சிறப்பானதாகும். மேலும் உங்கள் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட files, directories / folders, drive names, email/web URLS அனைத்துமே ஸ்ரீசரஸ்வதி சம்பந்தப்பட்ட பெயர்களாகவே நிறைந்திருக்கிட்டும். இதுவே பெயர்களாகவே நிறைந்திருக்கட்டும். இதுவே கம்ப்யூட்டரினுள் புண்ய சக்தியைப் பெருக்கும்! வைரஸைச் செயல் இழக்கச் செய்யும்! இவ்வாறாக உங்கள் கம்ப்யூட்டர் hard diskல் தெய்வீகம் நிறைந்த பல அறவழி முறைகளை மேற்கொண்டால் அது புண்ய சக்தி (positive forces) நிறைந்ததாக விளங்கும். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களும் கூடத் தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் போயிற்று என்பது போல நன்முறையுடன் தற்காத்துக் கொள்ளலாம். இக்காலத்தில் ஆலய பூஜை போல் digital poojaவாக நிறையச் செய்துள்ளனர். எனவே நீங்கள் ஸ்ரீஅனுராதா சரஸ்வதியையே பூஜை செய்வது போல் கம்ப்யூட்டரில் உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் உடலால் ஆன அங்க பூஜைக்குப் பின்னர்தாம் அனைத்துக் கம்ப்யூட்டர் பூஜைகளும்! இதன் பின் ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி பூஜை தொடரப்பட வேண்டும்.

கம்ப்யூட்டரானது ஸ்ரீஅனுராத க்ரமண சரஸ்வதி கடாட்சம் நிறைந்துள்ள ஒரு வஸ்துவே! ஏழ்மை நிலையிலுள்ள தையல்/பாதணித் தொழிலாளி எவ்வாறு தம் உபகரணங்களைத் தொட்டு வணங்கிப் பின் தம் தொழிலைத் தொடங்குகின்றாரோ, அதுபோல் கம்ப்யூட்டரை வைத்துத் தொழில் செய்வோரும் கம்ப்யூட்டருக்கு, மஞ்சள், சந்தனம் குங்குமமிட்டு நமஸ்கரித்துத் தியானம் செய்த பின்பே பணியைத் துவங்க வேண்டும். இதே போல் பணி முடிந்த பின்னரும் அதைத் தொட்டு வணங்குதல் வேண்டும். எனவே எதிலுமே தெய்வீகம் ததும்பத் ததும்பத்தான் கம்ப்யூட்டரை வைரஸின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்! வெறும்  Anti virus softwares மூலம் தற்காத்துக் கொள்ளலாம் என்று negative forcesயை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள்! கம்ப்யூட்டர் மூலம் பல அரிய தெய்வீக சாதனைகளையும் படைத்திடலாம், தக்க சற்குருவை நாடினால்!

ஸ்ரீபோடோ சித்தர் ஞானி! எனவே வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையானது நம்பிக்கை மிகுந்த தெய்வீகமாகும். உங்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லையெனில், உங்கள் அரைகுறை நம்பிக்கையில் ஊறும் இறை நம்பிக்கையை எந்த அளவு நம்ப முடியும் என எண்ணிப் பாருங்கள். ஸ்ரீசனீஸ்வர பகவானின் லோகத்தில் போடோ எனும் ஞானி உலவுகின்றார்! சுமார் ஒன்றரை அடி உயரமேயுள்ள ஸ்ரீபோடோ ஞானிதாம் இப்பூவுலகில் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட எதிர்வினைகளைத் தடுத்து நம்மைக் காக்கும் ஞானியாவார். இவருக்கு ஸ்ரீபோடோ எனும் பெயர் எப்படி வந்தது என ஆராய்வதைவிட இவர் எவ்வாறு வைரஸிலிருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பதற்கான அருள்வழி முறைகளை அளிக்கின்றார் என்று உணர்வதே சிறப்புடையதாகும். சனீஸ்வர லோகத்தில் அவ்வப்போது ஸ்ரீசனீஸ்வர பகவானைத் தரிசிக்க வருகின்ற சித்த புருஷர்களும், ஞானியரும், யோகியரும் முதலில் ஸ்ரீபோடோ ஞானி சித்தர்பிரானைக் கண்டு வழிபாட்டு முறைகளை அறிந்தே செல்வர்! அந்தந்த லோகத்தில் ஏற்படக்கூடிய இன்னல்களை முன் கூட்டியே உணர்ந்து அவற்றிற்கான பரிஹாரங்களுக்கான ஸ்ரீசனீஸ்வர வழிபாட்டு முறைகளை ஸ்ரீபோடோ ஞானி அவர்கட்கு எடுத்துரைக்கின்றார்! இவர் மிகவும் எளிமையானவர், பல கோடி உத்தம தெய்வீக நிலைகளை அடைந்தவர். பல யுகங்களாக இந்த லோகத்தில் ஸ்ரீசனீஸ்வர பகவானின் கருணைக் கடாட்சத்தால் பிரபஞ்சத்திற்கே ஞானமூட்டும் மகா ஞானியாக விளங்குபவர். அவர் பூலோகத்தில் வழிபாடு செய்கின்ற தலங்கள்யாவும் மாதாம்பர பீஜாட்சர மெய்ங்ஞான சக்திகளைக் கொண்டதாக இருக்கும்! இவைதாம் நவீன கம்ப்யூட்டர் துறையுடன் தொடர்பு கொண்டவையாம்! மாதாம்பர பீடம் என்பதே Mother board  என்பதாயிற்று!

திருவெறும்பூர்

இன்றைக்குக் கம்ப்யூட்டர் துறையில் பரிமாறப்படுகின்ற சிலிக்கான் சக்திகளைக் கொண்ட தலங்கள் நிறைய உண்டு. கம்ப்யூட்டர் துறையில் 1, 0 என்ற எண்கள் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக விளங்குவதால் 1க்கும், 0-க்கும் உரித்தான தலங்களில் ஸ்ரீபோடோ ஞானி தம்முடைய தினசரி பூஜைகளை நிகழ்த்தி வருகிறார். ஸ்ரீபோடோ ஞானி கிரிவலம் வருகின்ற தலங்களுள் ஒன்றே திருச்சி திருஎறும்பூர் ஸ்ரீஎறும்பீஸ்வரர் சிவத்தலமாகும். சிலிகான் சக்திகள் நிறைந்த மிகவும் அற்புதமான தலம், ஸ்ரீபோடோ ஞானி இன்றைக்கும் சூட்சும ரூபத்திலோ, மானுட வடிவிலோ வந்து மண்டியிட்டு முழங்கால் பிரதட்சிணம் செய்கின்ற அற்புதத் தலங்களுள் இதுவும் ஒரு முக்கியத் தலமாகும். இங்குதாம் பிரபஞ்சத்தின் தீவினை சக்திகளைக் களைகின்ற தெய்வீக நல்வரங்களைப் பெற்றார்!

செஞ்சுடர்த் தொடர் யோகம்! ஸ்ரீபோடோ ஞானி ஸ்வாமியின் மகத்தான யோக்த்திற்கு செஞ்சுடர்த் தொடர் யோகம் என்று பெயர். தர்ப்பைப் பாயில் முழந்தாளிட்ட அமர்வு நிலையில் பின் குதி கால்களில் மேலமர்ந்து பூணுவதே செஞ்சுடர்த் தொடர் யோகம். இவ்வாறு நன்முறையில் யோக பூர்வமாக அமர்ந்தவுடனேயே பிருத்வி பூத சுயம்பு லிங்க ஜோதி தியானத்தைத் துவங்க வேண்டும். அதாவது கல்லாலன்றிப் புற்று மண்ணாலான சுயம்பு ஜோதி லிங்கத்தை அல்லது சுதை மூர்த்தியாலான பெருமாளைத் (புற்று, சுதை) தியானிக்க வேண்டும். (திருவொற்றியூர், திருக்கருகாவூர், திருலோக்கிப் பெருமாள், சுரட்டப்பள்ளி etc.)  silicon மண் சம்பந்தப்பட்ட பொருட்களாதலால், இத்தகைய புற்று, சுதைச் சுயம்பு மூர்த்தித் தியானமே ஸ்ரீபோடோ ஞானி ஸ்வாமிக்கு இறைப் பெரும் சக்திகளை நல்வரமாக அளித்திடுகிறது!

கேளீரோ பிண்டத் துழாய் மலர்! ஸ்ரீபோடோ ஞானி இச்செஞ்சுடர்த் தொடர் யோகத்தில் அமர்ந்து தம் ஞானக் கண்களுக்குள் உருண்டை உருண்டையாக வெண்டைக்காய் விதை வடிவில் பல தியானச் சுடர்களை ஒளிரச் செய்வார். ஒன்று மாற்றி ஒன்றாக ஒளிர்விட்டு இத்தியானச் சுடரொளி தோன்றும். அதாவது ஒரு மெல்லிழை நூலில் வெண்மையான வெண்டைக்காய் விதைகளைக் கோர்த்துக் கட்டி ஒன்று விட்டு ஒன்றாக விதைகளில் சுடர் விடும் serial lamp ஒளிபோல் இது விளங்கும். இந்த தியானத்தில் ஒன்று விட்டு ஒன்றாக ஒளி பிரகாசிப்பது பகல் இரவைக் குறிப்பதாகும்! இதுவே இன்றைய கம்ப்யூட்டரின் மூலாதாரமான 0, 1 என்பதாகக் கொள்ளப்படுகின்றது! நாம் காணும் வெண்டை விதைதாம் தேவ லோகத்தில் காணப்படும் பிண்டத் துழாய் மலர் போன்றதாகும்! இம்மலர் உருண்டையாக வெண்டை விதை போல் வெண்மையாகக் கொத்துக் கொத்தாக இருக்கும்.. கலைமகளுக்கும், ஸ்ரீஹயக்ரீவ மூர்த்திக்கும், ஞானகாரகனாகிய கேதுவிற்கும் மிகவு ப்ரீதியானதே பிண்டத் துழாய்ப் புஷ்பமாகும்.. இதன் தேவ சக்திகளைக் கொண்டதே இப்புவியில் வெண்டைச் செடியாம்! ஸ்ரீஅனுராதா க்ரமண சரஸ்வதியின் திருவடிகளில் பிண்டத் துழாய்ப் பூக்களே நிறைந்திருக்கும்! பிண்டத் துழாய் மலர்த் தாவரங்கள், தேவலோகத்தில் ஸ்ரீஅனுராதா க்ரமண ஸ்வரஸ்தியின் லோகத்தில் தாம் அதிகமாகக் காணப்படுகின்றன. இம்மலரை நார் கொண்டு தொடுக்கத் தேவையில்லை. இது நாரில் பட்டவுடனேயே ஒட்டிக் கொள்ளும் தன்மை உடையது. மலர்க் காம்பு நிறைய இருந்தாலும் ஒன்று விட்டு ஒன்றுதான் செடியில் புஷ்பிக்கும்! எனவே இதனைச் சூரியச் சந்த்ர புஷ்பம் என்றும் சொல்வார்கள். ஏனெனில் பகல், இரவைக் குறிப்பது போல ஒன்று விட்டு ஒன்றாகச் சூல்  தோன்றுவதால்தான்! ஸ்ரீபோடோ ஞானி செஞ்சுடர்த் தொடர் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர் தம் ஞானக் கண்களுக்கு இந்தப் பிண்டத் துழாய் மலர்கள் தரிசனம் தொடராகக் கிட்டும். ஒன்று விட்டு ஒன்றாக மின்பல்பு எரிவது போல் ஒளி விட்டுப் பிரகாசிக்கும் இம்மலர்களின் தேவ சக்தியைப் பிரமாணமாகக் கொண்டு இன்றைய உலகில் கம்ப்யூட்டர் துறை பிரகாசிக்கின்றது. இதே யோக நிலையில் தியானம் பூண்டு கம்ப்யூட்டரில் குறைந்தது இரண்டு மணி நேரம் தியானம் செய்து திளைத்து அதீத யோக சக்தி பெறுவோர். சற்று நேரம் வைரஸ் நிறைந்த கம்ப்யூட்டரைப் பார்த்தாலே போதும். அந்த வைரஸ் செயலிழந்து விடும். ஆனால் இந்த யோக சக்திகளை அவ்வப்போது தேவ விருத்தி செய்து கொண்டேயிருத்தல் வேண்டும். இத்தகைய சக்தி நிறைந்தவர்கள் இன்றும் பூலோகத்தில் இருந்து கொண்டுதான் உள்ளனர். இவர்கள் இந்த செஞ்சுடர் யோகத்தில் தலை சிறந்தவர்கள் ஆதலின் கம்ப்யூட்டர் துறையில் வர இருக்கின்ற அனைத்துவிதமான பிரச்சனைகளையும் தீர்க தரிசனமாக உணர்ந்தவர்கள்! ஆனால் இவர்களை அறிந்தால் விஞ்ஞானமானது பொன் முட்டையிடும் வாத்து போல அவர்கள் மூளையைக் கூறு கூறாக்கி விடும்! எனவேதாம் தம் இறைசக்தியை வெளிக் காட்டாது இவர்கள் இன்றும் நம்மிடையே வாழ்கின்றார்கள்!

யோகமய ஸ்ரீதாந்த்ரீஸ்வரர்! இந்த யோகமானது இரவு, பகல் பற்றிய ஞான யோகமாதலாலும் காலத்தைக் கடந்த ஞானியாவதற்கும் இந்த யோக முறை பெரிதும் உதவுகிறது. முழந்தாளிட்ட நிலையில் பின்புறம் குதிகால்களைக் குறுக்கு நெடுக்காக வைத்து அதன்மேல் அமர்தலால் உடல் எடையானது கால் கட்டை விரல்களில் மட்டும் அழுந்தப் பெற்று அதனுடைய மேடையில் உடல் அமர்வதால் காலால் எழுப்பிக் கருத்தறிவித்து எனும் ஔவையின் யோக மொழிப்படி, கால் கட்டை விரலால் எழுப்பி நிற்கின்ற தாந்த்ரீக யோகத்திற்கும் இது வழிவகுக்கின்றது. இத்தகைய அபூர்வ யோகத்திற்கு அருள்வழி புரியும் தலமே சென்னை பூந்தமல்லி அருகிலுள்ள சித்துக்காடு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் சிவாலயமாகும்.. இன்றும் பலரால் அறியப்படாத அற்புத யோக சக்திகள் நிறைந்த சிவத்தலம். இத்தலத்தில் கால்கட்டை விரலால் பயிலப்படும் தாந்த்ரீக யோக முறையிலான ஆசன வழிபாடுகளும், அடிப்பிரதட்சிணமும் செய்து வருதலால் மகத்தான யோக சக்திகளை மிக எளிதில் பெறலாம். எத்தனையோ கோடி மந்திரங்களை ஜபித்துப் பெற வேண்டிய தாந்த்ரீக சக்தியைக் காலால் எழுப்பும் யோகத்தில் மிக எளிதில் குருவருள் கூடிட இத்தலத்தில் பெற்றிடலாம்! ஔவைப் பிராட்டி பன்முறை வந்து தரிசித்து எத்துணையோ யோக சக்திகளை சிவன் அருளாகப் பெற்ற சிவத்தலமிது!

எனவே கம்ப்யூட்டர் வைரஸ் என்ற தீவினையை ஆன்மீக முறையில் மிக எளிதில் தற்காத்துக் கொள்ளலாம். ஆனால் இதற்குரித்தான யோக முறைகளையும் தினந்தோறும் இரண்டு மணி நேரமாவது குறித்த வழிபாட்டுடன் பயில வேண்டும்.

கருவூர்ச் சித்தர் கண்ட கோ(கா)லத் திரை! இந்த தாந்த்ரீஸ்வர யோகத்தில் தலைசிறந்தோர் ஒரு சிலருண்டு. கண்டராதித்ய சோழன் என்னும் பேரரசன், என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாக  விளங்குகின்ற கருவூர்ச் சித்தரின் ஆசி பெற்று ஆண்ட மகத்தான சோழப் பேரரசன், சீர்மிகு சித்தர் பெருமான் ஆதலால் கருவூரார் எத்தலத்திலும், எந்நேரமும் தோன்றி அனைவருக்கும் அருள்பாலிப்பதுண்டு. இன்றைக்கும் அவருடைய அடியார்கட்கு நேரில் தோன்றி அருள்வழி காட்டும் உத்தம சித்புருஷர்! இச்சோழன் மிகச் சிறந்த முறையில் தர்மமிகு அரசாட்சி செலுத்திய மையால் கருவூரார் அவரிடம் பேரன்பு கொண்டு அளவளாவுவார். ஒருமுறை சோழப் பேரரசனும் பூலோகத்தில் வருங்காலத்தில் இனி நடக்கப் போவது என்ன என்று வற்புறுத்தி வினவிடவே கருவூர்ச் சித்தரும் ஒரு வெள்ளைத் துணியை விரித்து மஞ்சளும் மற்றும் பல அரிய மூலிகை ரசங்களையும் பூசி, அதில் இனி இப்பூவுலகில் நடக்க உள்ள காட்சிகளை ஞானப் பூர்வமாகக் காட்டினார்.!

தற்போதைய கம்ப்யூட்டர் mouse போல் அன்று கருவூரார் பயன்படுத்தியது என்ன தெரியுமா? ஒரு பச்சிளம் வெண்டைக் காயில் வால் பகுதியை உடைத்து அதனைத் தரையில் கீற்றுகளாக இட்டிட அவை வெண்திரையில் பல காட்சிகளாய் மின்னின! அதுவே அக்கால monitor screen ஆகப் பரிமளித்தது, எனவே வெண்டைக் காய்க்கும் ஞாபக சக்திக்கும், கம்ப்யூட்டர் துறையின் நினைவுப் படிமத்திற்கும் (ROM, RAM) அதன் விதைகளுக்கும் நிறைய ஆன்மீகத் தொடர்புண்டு. வெண்டைக் காய்களை மாலையாகக் கட்டி, அவற்றை 4 பட்டை லிங்கமாகவோ, 5 பட்டை லிங்கமாகவோ கருதி வழிபடுதலும் ஸ்ரீஅனுராதா க்ரமண சரஸ்வதி உபாசனைக்கு அருள்வழி காட்டும் , கம்ப்யூட்டர் துறையிலும் புகழும், பெருஞ் செல்வமும் பெற்றிடலாம்!

கண்டராத்திய சோழனுக்கு எதிர்கால விஞ்ஞானத்தின் காட்சிகளை ஒரு சிறிய மூலிகை ரசத் திரையில் உணர்வித்த கருவூர்ச் சித்தர் இதனை விண்ணுலக லோகங்களில் நன்முறையில் பயன்படுத்திடுவாயாக என்று அருளாசி கூறிட்டார்! அக்கண்டராதித்திய சோழனே இன்றைக்குப் பூவுலகில் மகத்தான கம்ப்யூட்டர் துறையில் உலக மஹா சக்கரவர்த்தியாகத் துலங்குகின்றான். அவனுக்கு இன்றும் கூடத் துணையிருந்து நல்வழி காட்டுபவர் கருவூர்ச் சித்தரே! இவையெல்லாம் ஞானபத்ர கிரந்தத்தில் கிட்டுகின்ற அதியற்புத தெய்வீக விளக்கங்களாம்!

எனவே ஸ்ரீபோடோ ஞானி காட்டிய யோகத்தில் திளைத்திருப்போர் மற்றும் இதில் பயிற்சி பெற்று வருவோர் மிக எளிமையான வகையில் கம்ப்யூட்டர் வைரஸுக்கானத் தற்காப்பினைப் பெற்றிட முடியும் போடோ என்ற பெயரில் கூட Anti virus programme எதிர்காலத்தில் வர இருப்பதாகவும் இது மிகவும் பிரசித்தி பெற்றுவிளங்குமென்றும் ஞானப்பத்ர வாக்கியங்கள் தெரிவிக்கின்றன. வெண்டைக்காய் சம்பந்தப்பட்ட வகையிலும் கூட Anti virus softwares வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாயும் ஞானப் பத்ரங்கள் விளக்குகின்றன... இவ்வாறாக எத்தகைய பிரச்சனைக்கும் ஆன்மீகத்தில் எளிதில் நல்ல தீர்வு காண இயலும் என்பதே ஞான பத்ர தெய்வீகம்!

மூட்டைப் பூச்சி

ஆண்டவன் படைப்பில் அனைத்தும் அற்புதமே! மூட்டைப் பூச்சியின் ஆன்மப் பணி!

நாயோ, கொசுவோ, நீர் யானையோ, கோழியோ, எதுவுமே இறைவனின் படைப்பில் மட்டமானவை அல்ல ! மனிதனைவிட மகத்தான தெய்வீக சக்தி கொண்டதாகவே பல உயிரினங்கள் விளங்குகின்றன! மூட்டைப் பூச்சி என்பது நசுங்கி இறப்பதற்காகத்தானே உருவாக்கப்பட்டது என்று பலரும் எண்ணிக் கொண்டுள்ளனர். மனிதனுடைய இரத்தத்தை உறிஞ்சி வாழும் மூட்டைப் பூச்சியின் பிறப்பிற்கும் கூடக் காரண காரியங்களும் பிறப்பு ரகசியங்களும் உண்டு. மூட்டைப் பூச்சியின் பிறப்பு பற்றிய ஆன்மீக விளக்கங்களைச் சித்தர்களின் ஞானப் பத்ரம் தருகின்றது. மனித உடலிலுள்ள தீயசக்திகள் நிறைந்த இரத்தத்தை மட்டுமே உறிஞ்சி அத்தீவினைகளைத் தன்னுள் ஏற்றுத் தியாகமயமாக வாழ்வு வாழ்ந்து அம்மனிதனைக் குறித்த சில தீவினைகளிலிருந்து விடுவித்து வாழ்வதே மூட்டைப் பூச்சியின் ஆன்ம வாழ்க்கை விளக்கங்களுள் ஒன்றாம்! தீயது, நல்லதென ரத்தத்தைப் பகுக்கும் சக்தி மூட்டைப் பூச்சிக்கும் மற்றும் கொசுவிற்கும் உண்டு! மூண்டு பூச்சிதான் கடித்தவுடன் நசுக்கப்பட்டு இறந்து விடுகிறதே, அது எப்படி தீவினைக் கர்மங்களைத் தன்னுள் தாங்கும் என நீங்கள் கேட்கலாம்.

மனித உடலிலுள்ள தீய சக்திகள் நிறைந்த இரத்தத்தைத் தாங்கியவுடனேயே அதன் கதியைப் பார்த்தீர்களா? இறப்போ, நசுக்குதலோதானே அதற்கு ஏற்படுகிறது.. அதாவது மனித உடலில் இருந்து கொண்டு அவனுக்கு அகால மரணத்தை அளிக்கும் தீய சக்திகளைத் தன் உடலில் தியாகமயமாகத் தாங்கி அதனைப் பெற்றவுடன் தன் மரணத்தைத் தருவித்துக் கொள்ளும் தியாக சீலப் பிறப்பே மூட்டைப் பூச்சியாகும்.. மூட்டைப் பூச்சி என்பது ஏழ்மை நிலையில் உள்ளவர் வீட்டில் தாமே பெரும்பாலும் உள்ளது.. பணக்காரர்களுக்கு இப்பிரச்சனைகள் இல்லையே என்று எண்ணுவோரும் உண்டு, நடுத்தரக் குடும்பத்திலும், ஏழ்மைக் குடும்பத்திலும் மூட்டைப் பூச்சி இருப்பதால் ஒரு விதத்தில் அவர்களுக்கு எளிய கர்மநிவாரணப் பரிகார முறையாக இறைவனே தீய சக்திகளிடமிருந்து அவர்களை விடுவிப்பதற்காக நல்வழியாக அருளியுள்ளார்.

ஆனால் பெரும் பணக்காரர்களோ அதே அளவு தீய சக்திகளைக் கொண்டிருந்தாலும் அவர்கள் அதற்கான பரிகார முறைகளாக லட்ச லட்சமாகச் செலவழித்து, தீர்த்த நீராடல், அன்னதானம், வஸ்திர தானம் போன்றவற்றைச் செய்திட வேண்டும். எனவே எந்த ஒரு உயிரினத்திற்குப் பின்னும் ஆண்டவன் எத்துணையோ கோடி காரண, காரியங்களை வைத்துள்ளான், அவரவர் நிலைக்கேற்பப் பரிகாரங்களையும் தருகின்றான் என்பதையும் உணருங்கள்.. மனித உடலில் எந்த ரத்தத்தையும் மூட்டைப் பூச்சி உடனேயே உறிஞ்சி விடுவதில்லை! மேலும் ஒரு மனிதனுடைய வாழ்வில் அவனுடைய பெரிய பெரிய கர்ம வினைகளின் ஊடே கோடிக் கணக்கான சிறுசிறு கர்ம வினைகள் குவிந்து கிடக்கும்! மூட்டைப் பூச்சியின் வாயினின்று திரள்கின்ற ஒருவிதத் திரவமானது மனித உடலுக்குத் தக்கதோர் ஆன்ம சக்தி அளிக்கிறது. அதுவே விடாமுயற்சியும், பொறுமையும் ஆகும். இவ்வாறாக ஒவ்வொரு உயிரினத்தின் மூலமும் இறைவன் நிறையப் பாடங்களை நமக்குப் புகட்டுகின்றான்!

நீர் யானையின் பிறப்பு தேவ ரகசியம்!

ஆமாம் டன் டன்னாக உண்ணும் நீர் யானையின் பிறப்பின் காரணமென்ன? இதையெல்லாம் நீங்களே ஆத்ம விசாரம் செய்து உணர்தல் வேண்டும்! இதுவும் இறைப் படைப்பின் மஹிமையை உணர்த்துவது தானே! நீர் யானை என்பது பலத்த எடையுடையது. நட்சத்திரங்கள், கிரகங்களிடமிருந்து இவ்வுலக விஞ்ஞானத்தால் பெற முடியாத யோக சக்தியைத் தன் காதுகளால் கிரகித்து நீரில் சேர்க்கிறது. உலகில் மூன்றில் இரண்டு பங்காக நீரானது கடல்களாக, ஆறு, நதிகளாக நிரம்பி இருப்பதால், மின்னல் சக்தியில் உள்ள இறை சக்தியைக் கிரஹித்து அதனை நீருக்கள் செலுத்தி அதன் மூலம் மின்னலின் இறைச் சக்தியை உலகிற்கு அளிப்பதே நீர் யானையின் வாழ்வின் இறைப் பணிகளுள் ஒன்றாகும்... இதன் காதுகளில் எப்போதும் சிலவகை தெய்வீகக் கிரணங்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.. இவை கடல் நீரில் நிறைந்துள்ள ஜல த்வீப தேவ புண்ய சக்திகளைப் பரவெளியில் divine antennae போல் பரப்பிக் கொண்டே உள்ளன. இவ்வுலகில் எத்தனையோ ஆயிரம் புண்ணிய நதிகள் உண்டு. இவற்றில் ஒரு சிலவற்றையே நாம் அறிகின்றோம். புண்ணிய நதிகள் விரயம் ஆவதாக நாம் எண்ணுகின்றோம். இது தவறு. கடலில் சேர்கின்ற நதி புண்ய சக்தியே நீர் யானை, மிருகங்கள், தாவரங்கள் மூலம் கிரகிக்கப்பட்டு மழை மூலமாக உலகிற்கு அளிக்கப்படுகின்றன. நீர் யானை எப்போதும் வெறுமனே சும்மா இருப்பது போல் நம் கண்களுக்குத் தோன்றினாலும் அதன் விசேஷ சுவாசமானது அதன் காதுகள் மூலம் நீரிலிருந்து கிரஹிக்கப்பட்ட புண்ய சக்தியை கிரஹித்துப் பிரபஞ்சப் பரவெளிக்கு அனுப்பிக் கொண்டே உள்ளது.. மிருகங்களுள் ஒன்றே நீர் யானை ஆகும். இது நம் மனித வாழ்வின் குணாதிசயங்களை நன்கு உணர்ந்ததாம்! மனித மொழிகள் அனைத்தும் அறிந்ததாம்!

மிருகங்களின் மொழியும் மௌனமும்! மனிதர்கள் எம்மொழியில் பேசினாலும் அனைத்து மிருகங்களும், தாவரங்களும் அவற்றை உணர்ந்து கொள்ளும் தன்மை பெற்றவையே.. மிருகங்களுக்கும், தாவரங்களுக்கும் கூட மொழிகள் உண்டு. பசுக்களும், காளைகளும், மனோ ரீதியான (telepathy) முறையில் பல விஷயங்களைப் பரிமாறிக் கொள்கின்றன. மா என்ற ஒரே வார்த்தையைக் கொண்டு பசுக்களும் மாடுகளும் ஒரே மாதிரியாகக் கத்துவது போல் நமக்குத் தோன்றுகின்றது. அம்மா என பசு கத்தும் போது அதில் ஏற்படும் சப்த அசைவுகளையும், நாளங்களையும் மற்றொரு பசு உணர்கின்றது.. அது மட்டுமின்றி எப்போதும் பேசிக் கொண்டே உள்ள மனிதன் தன்னுடைய ஒவ்வொரு வார்த்தையையும் தெய்வீகத்திற்குப் பயன்படுத்துவது கிடையாது... வாழ்நாளில் அவனுடைய வார்த்தைகள் 0.0001% சதவிகிதம் கூட தெய்வீகமாக அமைவதில்லை! அதிலும் அவன் பேசுவதில் பெரும்பான்மை சுயநலத்திற்குத்தான்!

ஆனால் விலங்குகள் எப்போதோ எழுப்பும் சப்தமானது இவ்வுலகிற்குத் தேவையான விண்வெளியில் நிரவியுள்ள பீஜாட்சர சக்திகளை உலகிற்கு அளிக்கின்றது.. அவை ஒன்றுக்கொன்று மனோலயத்தில் உரையாடுவதால் அவைகளுடைய ஒவ்வொரு ஒலியும் உலகிற்குத்தாம் நன்மை பயக்கின்றன! ஆகவேதான் பசுக்களை வதைத்துத் தோலுரிப்பது, பசு மாமிசம் உண்பதான பசு வதை பெரும் பாவத்தைத் தரும் என்பது பெரியோர் வாக்கு ஆகும்.. உங்களுக்கு மன அமைதி இல்லையென்றால் பசு, காளை, யானை உள்ள இடங்களுக்குச் சென்றிடுங்கள்! அவை உங்கள் மனோ நிலையை நன்கு உணர்ந்து உங்களுக்கு மன அமைதி ஏற்படுவதற்கான சப்த நாளங்களும் அங்க அசைவுகளையும் ஏற்படுத்தி உங்களுக்கு மனச்சாந்தியைத் தருகின்றன! நீங்கள் குளம், ஆறு, கடற்கரைக்குச் சென்றால் கூட அங்கு மீன்களும், நண்டுகளும், எண்ணற்ற ஜந்துக்களும் உங்களுடைய குழப்பமான மனோநிலையை உணர்ந்து நல்ல தெளிவைத் தந்திட தங்கள் தியான சக்தியைத் தியாகம் செய்கின்றன! ஏதோ சரணாலயத்தில் விலங்குகளை நாம் வேடிக்கை பார்த்து மகிழ்வது போல் தோன்றினாலும் மிருகங்களின் சாந்திப் பிரார்த்தனையே அந்த மன அமைதியைத் தருகின்றது! ஆனால் மனிதன் மிருகங்களுக்கு என்றாவது சந்தோஷத்தை அளிக்கின்றானா? மனிதன் தான் நன்றி மறந்தவனாக, சுயநலத் தற்குறியாய் வாழ்கின்றான்!

விலங்குகளில் துலங்கும் யோக சக்தி!

தற்போதெல்லாம் நிலத்திலிருந்தும், கடலிலிருந்தும் அரிய மிருகங்கள் மக்களின் கண்களுக்குப் புலப்படுகின்றன.. எறும்புண்ணி (Ant Eater), கடல் சிங்கம், சிம்புள் பறவை, வெள்ளைப் புலி போன்றவை மிகவும் அரிதென விலங்கியல் கூறினாலும், இறைவனுடைய கணக்குப்படி தான் அந்தந்த விலங்கினங்கள் தோன்றுகின்றன. இறக்கின்றன, மறைகின்றன, பிறக்கின்றன! அரிய விலங்குகள் தாங்கள் வசிக்கும் அடர்ந்த காடுகள், கடல், பூமியின் அடிப் பகுதிகள், அடர்ந்த மலைகள் போன்றவற்றிலிருந்து வெளிவருகின்றன. இவை பூலோக ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பல அற்புத யோக தவ முறைகளைக் கைக்கொள்கின்றன.. ஒவ்வொரு விலங்கும், நாம் அறியாத பல மலை மூலிகைகள், கடல் மூலிகைகளை உண்டு. அவற்றின் அற்புத மருத்துவ சக்தியை விண்வெளியில் பரப்புகின்றன.. அந்தந்த விலங்கினத்தால் உலகிற்கும், பிரபஞ்சத்திற்கும் அளிக்க வேண்டிய யோக சக்திகள் என்று பல உண்டு பூமியில் அந்தந்த யோக சக்திகள் குறையும் போது, அவ்விலங்குகள் தாமாகவே வெளி வந்து உலகிற்கு நேரிடையாகவே மணல், காற்று, நீர், ஆறு மூலமாக அவற்றைப் பரப்புகின்றன. ஆனால் அந்தோ பரிதாபம்! மனித சமுதாயம் அவற்றின் தியாகமய வாழ்வை உணராது அவற்றை இம்சைப்படுத்தியோ, கொன்று மாமிசமாகச் சுவைத்தோ அல்லது இரும்புக் கூண்டில் கண்காட்சிப் பொருளாக zooவில் அடைத்தோ தவறு செய்து விடுகின்றார்கள். இதையெல்லாம் நாம் எடுத்துச் சொல்வதற்குக் காரணம் மனிதனைத் தவிர அனைத்துத் தாவரங்களும், தம் உயிரைத் தியாகம் செய்து உலகின் பரவெளியைப் புனிதமாக்குவதற்கு யோகாம்ச பாவனைகளை மேற்கொள்கின்றார்கள்.

உதாரணமாக வெள்ளைப் புலி, மிகவும் கடினமான யோக பாத நிலைகளைப் பூண்டு பூமிக்குப் பல விசேஷமான அக்னிக் கதிர்களைப் பரப்புகின்றது. இதற்கென அது தக்க மூலிகா பந்தனங்களை தளப்பிரிப்பாக ஏற்படுத்திக் கொண்டு அதில் அமரும்! இந்தச் சூட்டில் கிளைக்கும் அக்னிக் கதிர்கள் தாம் சூரிய ஒளியிலும், பூமியின் உள் நீரோட்டம் மூலமாகக் கலந்தும் ஆறு, கிணறு, நதி நீர் வகைகளில் சேர்ந்தும் ஜீவன்களுக்குப் பல அற்புத யோக சக்திகளைத் தருகின்றது.. இவ்வாறாகவே புலித்தோலில் அமர்கின்ற தியான நிலை வழக்கில் ஏற்பட்டது. ஆனால் குலத்தைத் தழைக்கச் செய்வதாக எண்ணி நவீன விஞ்ஞானம் வெள்ளைப் புலிகளைக் கண்காட்சிப் பொருளாக ஆக்கிவிட்டமையால், வெள்ளைப் புலிக்குரித்தான பிரம்ம கடாட்ச சிருஷ்டி தேவ மூர்த்திகள் அவற்றைப் பூலோக வாழ்வினின்றும் தேவ லோகத்திற்கு மீட்டுக் கொண்டு செல்கின்றார்கள். இத்தகைய தேவ காரியத்தையே Endangered species என்று வேறுவிதமாக விஞ்ஞானப் பூர்வமாகச் சொல்கின்றோம்! இவ்வாறாக இறைவனின் லீலைகள் ஏராளம், ஏராளம்! எடுத்துச் சொல்வதற்கும் தக்க சற்குரு தேவையே!

பாலவ யோகம்

கடந்த ஜனவரி 2001 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் கீழ்ச்சூரிய மூலை பற்றிய விளக்கத்தில் பாலவ யோகத்தில் குறிப்பிட்ட யோகாம்சங்களைப் பயின்றால் பரவெளியிலிருந்து பல பீஜாட்சர மந்திர ஒலிகளை உணரும் பாக்கியத்தைப் பெற்றிடலாம் என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? இங்கு நாம் குறிப்பிடுவது பாலவ யோகாசன முறையே தவிர பாலவ கரண நேரமன்று! பஞ்சாங்கத்தின் பஞ்ச அங்கங்களான கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய 5 அங்கங்களுள் ஒன்றாகிய பாலவ கரணத்துடன் இந்த பாலவ யோகம் சார்ந்ததா எனப் பலர் விளக்கம் கேட்டுள்ளனர். பாலவ கரண நேரம் வேறு, பாலவ யோகாசன முறை வேறு! துருவ நட்சத்திரமாக ஒளிரும் துருவ மகரிஷி, சிறுவயதில் இலுப்பை மரத்தின் கீழ் பாலவ யோகாசன நிலையிலமர்ந்து பெற்ற பீஜாட்சர சப்த நாள தரிசனங்களையே பாலவ யோக தரிசனம் என்று நாம் குறிப்பிடுகின்றோம். நாரத மஹரிஷியே மனமுவந்து துருவனுக்கு ஊட்டி உணர்த்திய யோகமே பாலவ யோகாசனமாகும். கால் கட்டை விரலுக்கு அபரிமிதமான யோக சக்தி உண்டு. ஆனால் நடப்புலகில் இத்தகைய அரிய யோகாசனங்களைப் பயில்வோர் மிகவும் சொற்பமே! மகத்தான தெய்வீகக் கலையான யோகாசனத்தை ஒரு தெய்வீகத் தொண்டாகக் கருதி எவ்விதக் கட்டணமுமின்றிக் கற்றுக் கொடுப்பவரைக் காண்பதும் தற்காலத்தில் அரிது என்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.. ஏனென்றால், எப்போது யோகாசனங்களும், மந்திர உச்சரிப்புகளும், பீஜாட்சர தா(ந)ளங்களும் மறைந்து விட்டனவோ, அவற்றிற்குரித்தான பலாபலன்களையும் இந்த உலகம் இழக்க வேண்டியுள்ளதுதானே! இதனால்தான் இன்றைக்கும் பல நோய்களுக்கு விஞ்ஞான முறையில் தீர்வுகள் காணப்பட முடியவில்லை! ஆனால் இவற்றிற்கான ஆன்மீகத் தீர்வுகள் கொட்டிக் கிடக்கின்றனவே! அள்ளிப் பெறுவார் யாருளர்?

எந்தக் கடுமையான நோய்க்குரித்தான யோகாசனத்தையும், பீஜாட்சர மந்திரத்தையும் இவ்வுலகம் மறந்து விட்டதோ, பின் எவ்வாறு அந்நோய்கள், அத்துன்பங்கள், தீர்வு பெறும்? எனவே சர்க்கரை நோய், புற்று நோய் போன்ற நோய்களுக்கு நிரந்தரத் தீர்வு கிட்ட வேண்டுமெனில் இவற்றிற்குரித்தான தெய்வீகத் தீர்வுகளை அளிக்கக்கூடிய யோகாசனப் பயிற்சிகளும், பீஜாட்சர மந்திர வழிபாடுகளும் தக்க சற்குருவை நாடிப் பெறப்பட வேண்டும்.

பாண்டவ தூத பதீத யோகம்!

கால கட்டை விரலை நிலத்தில் அழுத்தி, ஒற்றைக் கால் மற்றும் இரண்டு கால் கட்டை விரல்களில் மட்டும் நின்று அமர்ந்து பயிலும் ஒருவகை யோகத்திற்குப் பாண்டவ தூத பதீத யோகம் என்று பெயர். ஏனென்றால் பாண்டவ தூதனாகிய ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, கால் கட்டை விரல்களை அழுத்திப் பலவித யோகாசன லீலைகள் புரிந்தவர். எங்கு பாண்டவ தூதப் பெருமானாக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அருள்பாலிக்கின்றாரோ (காஞ்சிபுரம்), அங்கு அவர் தம் திருச்சன்னதி முன் பாலவ கரண நேரத்தில் கால் கட்டை விரலை மட்டும் அழுத்தி அதன் மேல் நின்று ஓம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாய நம: ஸ்ரீகிருஷ்ணா உன் திருவிரல் சரணத் திருவடி போற்றி என்று பிரார்த்தனை செய்தவாறே பாலவ யோகாசன நிலையில் அடிப்பிரதட்சிணம் செய்து வருவாரேயானால், அவருக்கு சர்க்கரை வியாதியோ, புற்று நோயோ நிச்சயம் அண்டாது., இந்நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அவரவர் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்பத் தக்க பெரியோர்களிடம் பயின்றிட நோயைப் பரிபூரணமாக நீக்கிடலாம்! இந்த யோகாசனத்தை இளவயது முதலே முறையாகப் பயின்று வருவார்களேயானால் எத்தகைய கொடிய நோய்களும் அண்டாத வகையில் சிறப்பான ஆரோக்யத்திற்கு ஏற்பத் தக்க பெரியோர்களிடம் பயின்றிட நோயைப் பரிபூரணமாக நீக்கிடலாம்! இந்த யோகாசனத்தை இளவயது முதலே முறையாகப் பயின்று வருவார்களேயானால் எத்தகைய கொடிய நோய்களும் அண்டாத வகையில் சிறப்பான ஆரோக்ய சக்தியைப் பெற்றிடலாம்! பாண்டவ தூதராக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா காட்சி தரும் ஆலயங்களில் (காஞ்சிபுரம்) இவர்கள் அடிக்கடி அடிப்பிரதட்சிணம் செய்து வந்து ஏழைகளுக்கு நிறைய இனிப்புப் பண்டங்களைத் தானம் அளித்து வர வேண்டும். ஏனெனில் எந்த இனிப்பினை உண்டு தாம் அனுபவிக்க இயலவில்லையோ, அதனைப் பிறருக்கு தானமாய் அளித்து அதனை அவர்கள் உண்கையில் ஏற்படும் மகிழ்ச்சியை நீங்கள் காணும் போது பரமானந்தம் உண்டாகும்! இந்நோய்க்கு உரித்தான குணம் ஏற்படும் வரை இதனை ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்து வருதல் வேண்டும்.!

ஆயுள் முழுவதும் ஒருவர் சர்க்கரை நோயால் அவதியுறுவதைவிட இனிப்புகளைப் பரந்த மனதுடன் அடிக்கடி தானம் அளித்தலால், நிச்சயமாகச் சர்க்கரை வியாதியிலிருந்து பரிபூரண குணம் பெற முடியும். பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஆங்கில மருத்துவத்தை இயன்றவரைக் கைவிட்டு சித்த, ஆயுர் வேத, யுனானி முறைகளில் உள்ள மூலிகைகளால் ஆன மருந்துகளையே பயன்படுத்தி வருதல் வேண்டும். ஆன்ம சக்திகள் நிறைந்தவை மூலிகைகளே! இரத்தத்தில் இனிப்பு அதிகம் சேர்வதால் சர்க்கரை வியாதி உண்டாகிறது என்ற விஞ்ஞான விளக்கத்தை விடப் பிறர் கர்மத்தை ஏற்பதாலும், பூர்வ ஜென்ம வினையின் பலவிதக் கர்ம வினைப்படியும் சர்க்கரை நோயும் புற்றுநோயும் உண்டாகிறது என்பதை உணர வேண்டும்! இவ்வகையில் பல குருமார்கள் தம் அடியார்களுடைய துன்பங்களையும் நோய்களையும் தம் உடலில் ஏற்று அனுபவிக்கின்றார்கள்! பலவிதமான மூலிகைகளுக்கும், இந்திராட்சீ கவசம் போன்ற சக்திவாய்ந்த மந்திரங்களுக்கும் இத்தகைய தோஷங்களையும், கடுமையான கர்ம வினைகளையும் நிவர்த்தி செய்யக் கூடிய அற்புதத் தெய்வீக சக்திகள் உண்டு. இவற்றை யோகப் பூர்வமாக, குருவருளுடன் பெற்றுத் தரும் தெய்வீகத் தன்மைகளுடன் கூடிய யோகமே கால் கட்டை விரல்களில் நின்று பயிலக் கூடிய அரிய யோகமாகும். இந்த யோகத்தின் எளிய பயிற்சியாக, முதலில் கால்கட்டை விரல்களின் மேல் மட்டும் சில விநாடிகள் நின்று பயிலுங்கள். காலை இளஞ் சூரியன், மாலை சந்தியா வேளைகளில் இந்த யோகம் பயில்வது சிறப்புடையதாம்! எடுத்தவுடனேயே கால் கட்டை விரலை அழுத்தி  அதிக நேரம் நிற்பதென்பது குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 2 வருடம் வரை கால்கட்டை விரல்களில் மட்டும் நின்று நடக்கப் பழகினால் தான் இந்த யோகத்தின் ஆரம்பப் பாடத்தில் சிறந்திட இயலும்., மரத்தாலான பாதரட்சைகளில் நடந்து பயில்தல் இந்த யோகத்தை எளிமைப்படுத்தும்!

ஸ்ரீசூர்யகோஸ்வரர் கீழ்சூரியமூலை

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அரிய சிவ பூஜைகளைச் செய்து இந்த பாண்டவ தூத யோக முறைகளை சிவபெருமானின் பாதாஞ்சலி யோகத் திருநாட்டியக் கோலத்திலிருந்து பெற்றார். பதஞ்சலி மாமுனியும் பெற்ற திருக்காட்சியது! சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள சித்துக்காடு சிவாலயத்தில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீதாந்த்ரீஸ்வர மூர்த்தியே இக்கால் கட்டை விரல் யோகத்தில் நாட்டிய லீலைகளைப் புரிந்தவர். எனவே கால்கட்டை விரலால் இங்கு யோகாசன முறையில் இறைவனை வழிபடுதலால் அபரிமிதமான யோக சக்திகளைப் பெற்றிடலாம். ஆரோக்கியமின்மை, உடல் தளர்ச்சி, வயது, நோய் போன்ற பல காரணங்களால் பலரும் இந்த பாண்டவ தூத பதீத யோக முறையை மேற்கொள்ள இயலாமல் போகலாம். இவர்கள் இதற்கு சற்றே மாற்றாக பாலவ யோகாசனம் பயில வேண்டும்.. நன்றாகச் சம்மணம் கட்டி அமர்ந்து வலது முழங்காலை மட்டும் நேரே குத்திட்டு உயர்த்தி அமர்ந்து இருகை விரல்களையும் மலர விரித்துக் கோர்த்து வலது கால் விரல்களை அழுத்திப் பிடித்த வண்ணம் அமர்தலே பாலவ யோக ஆசன முறையாகும்.. இது சற்று எளிதாகத் தோன்றினாலும், இதனை ஆழ்நிலை தியானத்துடன் சேர்த்துப் பயில்வதால் பல அற்புத யோக நிலைகளைப் பெறலாம்.

யோக மாயையே காலச் சாயை! பஞ்சாங்கத்தில் நாள், கிழமை, திதி, நட்சத்திரம், யோகம் , கரணம் என்று 5 பகுதிகளாகப் பிரித்திருக்கக் காரணம் ஒவ்வொரு காலத்திற்கும் உரித்தான முறையான பூஜைகளைச் செய்து வந்தால் எத்தனையோ துன்பங்களுக்கும், நோய்களுக்கும் எளிதில் பரிகாரம் பெறலாம். ஏனெனில், பலகோடி தேவ மூர்த்திகளால் எத்தனையோ யுகங்களாக யோகத் தவம் பூண்டு, பெறப்பட்ட குறிப்பிட்ட யோக நேரத்தில் பயில்வதால் குறித்த நோய்க்கான நிவர்த்தியைப் பெறலாம் என தேவ மூர்த்திகளும் தேவதைகளும் பெற்றுத் தந்த இறைவரங்களே இன்றைக்கு நமக்கு காலப் பாகுபாடுகளாக காலத்தின் யோக அம்சங்களாக, வேத வாக்கியங்களின் தெய்வீக அம்சங்களாக விளங்குகின்றன.

அமாவாசைத் திதி என அமையக் காரணம் யாதோ? அமாவாசை சித்தர் போன்ற அதியற்புத சற்குருமார்களும் கால தேவதைகளும், ஸ்ரீமந்நாராயண மூர்த்திப் பெருமாளின் சயன யோகம், கேளாந்த்ர யோக தரிசனங்களைப் பெற்றுத் தந்த திதியே அமாவாசையாம்.. எனவே இந்த அரிய பாலவ யோகத்தைத் துருவ மகரிஷியின் ஆசியுடன் தக்கப் பெரியோர் துணையுடன் பயின்று வருவீர்களேயானால் கீழ் சூரிய மூலைக் கிராமத்தின் விசேடமான சூரிய வியூக அமைப்பின் தெய்வீகப் பலன்களாக பல அரிய பீஜாட்சர சக்திகளைப் பெறலாம்.. கோடானு கோடி சூரியர்கள் வரிசையாக நின்று வழிபட்ட தலமெனில் ஒரு காலத்தில் எத்தகைய பிரம்மாண்ட ஆலயமாக இது இருந்திருக்க வேண்டும்தானே! கோடானுகோடி சூரிய மூர்த்திகளுக்கு சூரியப் பிரகாசம் அளிக்கும் மூர்த்தியெனில் இவர்தம் மஹிமைதான் என்னே! ஆனால் இன்றோ கதவுகள் கூட இல்லாத வகையில் பாதுகாப்பின்றி இருக்கும் இச்சிவ லிங்க மூர்த்தி தன் எளிமையாய் தரிசனம் தருகிறார் எனில், இச்சிவ லிங்க மூர்த்தியின் மகத்துவத்தை என்னென்று சொல்லுவது! இத்திருக்கோயிலை சீரமைத்துத் திருப்பணி செய்கின்ற அதியற்புத பாக்கியத்தை எவர் பெற்றுள்ளாரோ, இறைவனே அறிவான்! ஔவைப் பிராட்டியின் காலாலெழுப்பிக் கருத்தறிவித்து எனும் மந்திரங்களை நினைவு கூறுவீர்களேயானால் இந்த அரிய யோகாசன மகிமையை நீங்கள் அறியலாம்.

கல்வியில் பாவ வினைகள்

கர்மவினைகளைத் தீர்க்க வேண்டிய கல்வியில் பாவ வினைகளையா பெருக்குவது?

எந்தப் புனிதமான கல்வி மூலமாகக் கர்மவினை பரிபாலனம் மற்றும் பக்தி பற்றி உணர்ந்து கர்ம வினைகளைக் கழித்திட அறிதல் வேண்டுமா அதே கல்வியில்தாம் கலியுகத்தில் கடுமையான, கொடிய கர்மவினைகள் சேர்கின்றனவே! என்ன கொடுமை இது!

பாரத ஜீவனின் உலகந் தழுவிய ஆன்மீகப் பொறுப்பு!

முறையற்ற வகையில் செல்வத்தைக் குவிக்கும் வியாபாரத் தலங்களாகக் கல்வி நிறுவனங்கள் ஆகி வருவது வேதனைக்கு உரியதாகும்! அதுவும் பிரபஞ்சத்தின் கர்ம பூமியாகிய பாரதப் புண்ய பூமியிலா இந்த அதர்மம் நிகழ்வது? ஆதியில் நாடு பேதமின்றிச் செழித்தோங்கிய சனாதன பூமியில் கலியுகம் தோன்றிய 5000 ஆண்டுகளுக்குள்ளேயே இத்தகைய ஒற்றுமையற்ற, தீய பழக்கங்கள் நிறைந்த உலக மனித சமுதாயம் ஏற்பட்டு விட்டது என்றால் எஞ்சியுள்ள கிட்டத்தட்ட 495,000 ஆண்டுகள் கூடிய கலியுகத்தில் எத்தகைய தீவினைகள் பெருகுமோ என்று எண்ணவே அச்சமாக இருக்கிறதே! கவலைப்படாதீர்கள். நீங்கள் எடுத்த இந்த மானுடப் பிறவியை பூஜைகளிலேயே லயித்து, பிறருடைய நல்வாழ்விற்காகவே இறைப் பணிகளைப் புரிந்து, குருவைச் சரணடைந்து, நம்முடைய உடலால் பிற ஜீவன்களுக்கு ஜாதி, மத, இன, குல பேதமின்றி எவ்விதத்தில் உதவிகளைக் கடவுட் திருப்பணிகளாக ஆற்ற முடியுமோ அவை யாவற்றையும் செய்து இப்பூவுடலை உகுத்து விட்டால், புண்ணிய சக்தி நிறைந்த உங்கள் வாழ்க்கையில் பிரதிபலிக்கின்ற தெய்வீகக் கதிர்கள் யாவு விண்ணில் நிறைந்து எதிர்காலப் பிரஜைகளை, நல்மக்களாக நல்வழியில் நிச்சயமாகக் காப்பாற்றும்!

ஒவ்வொரு விநாடியும் நம்மைக் காப்பாற்றுவது நம் புண்ய சக்திகளேயாகும். நம் மூதாதையர்கள் நன்முறையில் வாழ்ந்து சென்றுவிட்டமையால் அவர்கள் சம்பாதித்து வைத்துள்ள செல்வத்தோடு, அவர்களுடைய புண்ய மூட்டையையும் நாம் வெகு விரைவாகக் கரைத்து வருகின்றோம். வாழ்நாளில் மனதாலோ, உடலாலோ தவறுகளே செய்யாத நாளே கிடையாது என்று சொல்கின்ற அளவிற்கு நம்முடைய வாழ்வில் தினசரியே மூட்டை, மூட்டையாகத் தவறுகளைச் செய்து வந்தோமேயானால் எவ்வாறு புண்ய சக்தியைப் பெற்று நன்முறையில் வாழ முடியும்?

முற்காலத்தில் தேவார, திருவாசக, திவ்ய பிரபந்தப் பாடல்களும், புராண காவியங்களும் நிறைந்திருந்த கல்வித் திட்டத்தில் தற்போது நல்ல ஒழுக்கத்தைப் போதிக்கின்ற பாடங்கள் இல்லையே! கல்வி நிறுவனங்களை வியாபாரமாக ஆக்கி விட்டவர்கள் தாம் மறுபிறவியிலோ, தற்போதோ வறுமையிலும், வியாதிகளாலும் துடித்து, துடித்து வாழ்ந்து இறக்கின்றார்கள். பைத்தியங்களாகவும், மனநிலை நோயாளிகளாகவும், பிறப்பெடுக்கின்றனர். இவர்களே கல்வி கற்க முடியாத நிலையில் குறைப்பிறப்பு எடுத்து பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். படிக்க முடியா ஏழைகளுடைய மன ஏக்கங்களும், வருத்தங்களும் கல்வி நிறுவனங்களில் முறையற்ற வகையில் கோடி கோடியாகச் சம்பாதித்தவர்களையும், அவர்தம் சந்ததிகளையும் கடுமையாக பாதிக்கும்.

மேலும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் Tuition என்ற பெயரிலும், மாணவர்களை வதைக்கின்றதும் பல இடங்களில் நிலவி வருவது வேதனைக்குரியதாகும். தன்னிடம் Tuition படிக்க வரவில்லையே என்பதற்காக மாணவர்களுடைய எதிர் காலத்தைப் பாதிக்கக் கூடாது. அக்காலத்தில் Tuition என்ற முறையிலே வசதியற்ற ஏழை மாணவர்களுக்காகத் தனிப்பட்ட முறையில் பாடங்களைப் புகட்டிப் பெரும் புண்ய சக்திகளை ஆசிரியர்கள் பெற்றார்கள். எனவே ஆசிரியப்பணி என்பது மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வியை அளிக்கின்ற மிகச் சிறந்த இறைப்பணியே தவிர பணம் சம்பாதிப்பதற்காக ஏற்பட்டது அல்ல.. உண்மையிலேயே ஆசிரியப் பணியை மிகவும் புனிதமாகக் கருதி மிக அற்புதமான இறைப்பணி நிறைந்த வாழ்க்கையை நடத்தி வருவோர் சிலரும் உண்டு. இவர்களுக்கு மேலுலகில் நல்ல பதவிகள் காத்துக் கிடக்கின்றன.. மேலும் சதாசிவ பிரமேந்திரர், மகா அவதூது பாபா, திருஞானசம்பந்தப் பெருமான், திருநாவுக்கரசர் போன்ற ஞானிகளுடைய கருணைக் கடாட்சம் இத்தகைய ஆசிரியர்களுக்கு அவர்களுடைய பூலோக வாழ்க்கையிலேயே நிறைந்திருக்கும்.

அகத்தியரின் ஆசிரியர் யாரோ? கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூர்த் திருத்தலமே இறைப் பரம்பொருளே ஸ்ரீஅகஸ்தியப் பெருமானுக்குத் தமிழ், தேவ மொழி இலக்கணத்தை ஓதுவித்த தலமாகும். உலகத்தில் அனைத்து விதமான மொழிகளுமே கலைமகளுடைய கருணைக் கடாட்சத்தில் ஏற்பட்டவைதாம். அந்நிய மொழி, அயல் மொழி என்ற பேதமே இங்கு கிடையாது. இந்தப் பிரபஞ்சத்தின் கல்வியே கலைமகளின் அருளாட்சிக்கு உரித்தது என்றால் காக்கை மொழி, குருவி மொழியிலிருந்து கிரேக்கம், லத்தீன், ஆங்கிலம், தமிழ், தேவமொழி வரை அனைத்துமே கலைமகளுடைய செப்பு மொழிகள்தாமே!

ஸ்ரீநித்யகல்யாணி இன்னம்பர்

இந்த இன்னம்பூர்த் திருத்தலத்தில் தான் ஸ்ரீஅகஸ்தியப் பெருமானும் உலகத்தின் அனைத்துப் பகுதிகளுடைய மொழிகளையும் இறைவனிடமிருந்து உபதேசமாகப் பெற்றார். எனவே கல்வி நிலையங்களில் கோடி கோடியாய்ப் பேராசையால் சம்பாதித்தோரும் கல்விப் பணியில் முறையற்ற வகையில் செல்வத்தைச் சேர்த்தோரும் இத்திலத்திற்குத் தேவையான இறைப்பணிகளை முறையாக செய்து வருதல்தான் கல்வியில் கூடிய கர்மங்களைத் தணிக்கும் கர்ம வினைகளைத் தீர்க்க நல்வழி காட்டும். இங்கு எழுத்து அறிவித்தவராக விளங்குகின்ற சிவபெருமான் மனங்கனிந்தால் தான், சற்குருவின் குரு அருளும் கூடினால் தான் மேற்கண்ட கர்ம வினைகளுக்குத் தக்க பிராயச்சித்தத்தைப் பெற முடியும் என்பதை உணர்ந்திடுங்கள். வீணையின்றி ஞான சரஸ்வதியாக கலைமகள் அருள்பாலிக்கின்ற தலங்களில் (கோயம்பேடு) தக்க இறைப்பணிகளை மேற்கொள்வதும் சிறப்புடையதாகும். வெண்டைக்காய், முந்திரி, திராட்சை, வல்லாரைக் கீரை, முருங்கைக்காய், போன்றவை ஞான சக்தி நிறைந்த பொருட்களாகும்., பொதுவாக வெண்டைக்காயில் உள்ள விதைகளுக்கு வெண்மணிக் கலைத் திரள் என்று சித்தருடைய பரிபாஷையிலே குறிப்பிடுகின்றார்கள்.

ஈஸ்வரன் ஸ்ரீஅகஸ்தியப் பெருமானுக்கு தேவமொழி, தமிழ் இலக்கணங்களை ஓதுவித்து இவற்றிலிருந்து எண்ணற்ற செப்பு மொழிகளைப் படைத்தபோது உலகிற்குத் தாவரங்களைப் படைத்தளித்த ஸ்ரீசாகம்பரி தேவி இறைவனின் இலக்கணக் கவின் மொழிகளைக் கேட்டு, உய்த்து, உணர்ந்து, ஆனந்தித்துப் பரவசம் அடைந்தபோது இந்தப் பரவச தேவ நிலையில் ஸ்ரீசாகம்பரி தேவி தோற்றுவித்த காய்கறிகள்தாம் இன்றைக்கு ஞானப் பிரகாசம் கொண்டவையாக, திரண்ட ஞாபக சக்தி அளிப்பதாக வேத சக்திகள் நிறைந்ததாக நமக்கு தருவிக்கப்பட்டுள்ளன (வல்லாரை, வெண்டைக்காய், முந்திரி)

கலைமகளின் கடாட்சம் கனிந்திட.... கல்வியில் சேர்த்த கர்மவினைகள் கழிந்திட....!

ஞானப் பிரகாசக் காய்கறி உணவுகளை இன்னம்பூர் ஆலயத்தில் எழுத்தறிவித்த நாதருக்குப் படைத்து ஞானகாரகனாகிய புதன் பகவானுக்குரித்தான புதன் கிழமைகளிலும், ஸ்ரீஹயக்ரீவப் பெருமானுக்குரித்தான புனர்பூச நட்சத்திர நாட்களிலும் புத ஹோரை நேரத்தில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வெண்தாமரை மலர்களால் அலங்கரித்து வேத மறைகளையும், தமிழ் மறைகளையும் ஓதி ஏழைகளுக்கு இலவசக் கல்வி வசதிகள் அளித்து வந்தால் கல்வித் துறையில் பேராசை காரணமாகச் செய்த பெரும் பாவங்களுக்குத் தக்க பிராயச்சித்தத்தைப் பெற்றிடலாம்.. ஆனால் சற்குருவின் திரண்ட குரு அருளும் கூடிடுதல் வேண்டும்..! எங்கு ஸ்ரீஞானசரஸ்வதி ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளை சற்குருவாகப் பெறாளோ அங்கு ஞானப் புண்ய சக்தியைத் தருவது தான் இன்னம்பூர் திருத்தலமகிமையாகும்.. நவமி திதி தோறும் வெள்ளை நிற ஆண் குதிரைக்குக் கொள்ளு தானியத்தை அவித்து அளித்து வருதலும் சரஸ்வதியின் கடாட்சத்தைப் பெருக்குவதாகும்..

கொள்ளுச் செல்லில் கோடி ஞானம்!

பொதுவாக மந்த புத்தியுள்ளவர்கள், மனநிலைக் கோளாறு உடையோர் , பெற்றோர்கள் கல்வி அறிவு பெறாது தம் பிள்ளைகளை நன்முறையில் கல்வி புகட்ட விரும்புவோர் நவமி திதி தோறும் இந்த வைராக்யத்தைச் செய்து வருதல் வேண்டும்! கொள் என்பது நம் மூளைகளிலுள்ள பல வித்யா வடிவங்களை அணுச் செல்களின் ரூபத்தில் காட்டுவதாகும். 60 அல்லது 70 மூளைச் செல்களைப் பயன்படுத்தும் பாக்கியத்தைப் பெற்றவர்கள்தான் சதாவதானியாகவும், அபார ஞாபக சக்தி உடையவர்களாகவும் கல்வித்துறையில் வல்லவர்களாகவே விளங்குகின்றார்கள். ஆனால் அபார ஞாபக சக்தியைப் பெறுவதும் IAS/IPS என வெற்றி மேல் வெற்றி பெறுவது மட்டும் போதாது. வித்யா ஞானத்தில் பிரகாசம் பெறுபவன் தான் உண்மையான இறைப் பகுத்தறிவு கூடிய அறிவாளியுமாவான். எனவே நம் மூளையிலுள்ள வித்யா செல்கள் நன்முறையில் ஆக்கப் படுத்தப்பட வேண்டுமேயானால் கொள் வடிவிலுள்ள மூளைச் செல்கள்தாம் துணை புரியும்! கொள்ளுச் செல்லில் கோடி ஞானம் என்பது சித்தர் பரிபாஷையாதலால் கொள் வடிவத்திலுள்ள வித்யா ஞானத்தைத் தருகின்ற மூளைச் செல்களை பக்குவப்படுவதற்காகத் தான் அவித்த கொள்ளை ஆக்கத்தின் வடிவாக இருக்கின்ற வெள்ளை நிறக் குதிரைக்கு அளிக்கின்றோம்!

வெண்மை நிறமானது கலைமகளுக்குரித்தான ஞானலோகத்திலிருந்து கேது பகவானுக்கு அருளப்பட்டதாகும். ஞானகாரனாக விளங்குகின்ற கேதுபகவான் நவமி திதி தோறும் வெண்மை நிறக் குதிரையில் வித்யா லோகத்தை வலம் வருவதாலும், பச்சை நிறத்திற்கு உரித்தானவரும் வித்யாகாரகனுமாகிய புதன் பகவானும் புதன் கிழமைதோறும் புத ஹோரை நேரத்தில் பிரபஞ்சத்தில் ஆட்சி செய்வதாலும் புத கிரகத்திற்கு உரித்தான பச்சை நிறத்திலுள்ள கொள்தனை அவித்து வெண்மையான குதிரைக்குப் படைக்கின்றோம். அவித்தல் என்றால் ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்துதல் என்றாகும்! இதற்காகத்தான் இன்னம்பூர்த் திருத்தலத்தில் சிவபெருமான் அகஸ்தியப் பெருமானுக்கு ஞானத்தைப் புகட்டிய போது நெல் மணிகளில் ஓம் நமசிவாய என்று எழுதித்தந்தார். இதே போலத்தான் நெல்லே அரிசியாவது போல் ஆக்கப்பூர்வமாக அவிக்கப்பட்டுக் கொள்மணியில் உள்ள இறை சக்திகள் பூமியில் ஞானப் பிரகாசமாகப் பயன்படுவதற்கான நவ கோள்களின் சக்தி நிறைந்த நாளே நவமி திதி ஆகும்.!

காயத்ரீ ஓதும் நந்திமூர்த்தி
கரிவலம்வந்தநல்லூர்

பூலோகத்தில் உள்ள ஒவ்வொரு பிராணியும் மனிதனைவிடப் பல உத்தமமான தேவ நிலைகளைக் கொண்டவையாகும். அந்த தேவ நிலைகள் உருப்பெற்றுப் பூலோகத்திற்குப் பயன்படுகின்ற நாட்கள் பல உண்டு.. இவற்றில் ஒன்றுதான் மாட்டுப் பொங்கல் என்று சொல்லப்படுகின்ற விசேஷ தினமாகும்! இன்று பூலோகத்தில் உள்ள அனைத்துக் காளைகளும் பசுக்களும் தங்களுடைய தேவ நிலை சக்திகளை அருள் வரமாக ஜீவன்களுக்கு அர்ப்பணிக்கின்றன. மனிதனைப் போலன்றி மாடுகளும் பசுக்களும் முறையாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை முறையாக ஓதுகின்றன.. வலது காலை நீட்டிய நிலையில் அமர்ந்திருக்கின்ற பசுக்கள் ஸ்ரீகாயத்ரீ தியானத்தில் திளைத்திருப்பதாக சித்தர்கள் வர்ணிக்கின்றனர். எனவே வலது காலை நீட்டிய நிலையில் சயனித்திருக்கின்ற பசுக்கள் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபத்தில் நிலைத்திருப்பதால் இக்கோலத்தில் காணும் பசுவை வலம் வந்து வணங்குதல் மிகவும் சிறப்புடையாதாகும்.. இதே போன்று பைரவாஷ்டமி என்று சொல்லப்படுகின்ற நாளிலே பிரபஞ்ச்த்தில் உள்ள அனைத்து நாய்களும் தங்களுடைய தேவ தபோபலன்களை பூலோக ஜீவன்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணிக்கின்றன.. நாய் என்பது ஈனமான பிறவியன்று.. எமனுடைய தரிசனத்தைப் பெற்று எமனுடைய வருகையை அறிவிக்கின்ற அளவிற்கு ஞானப் பார்வைச் சக்தியைப் பெற்றிருக்கின்றது என்றால் நாயினுடைய மகிமையே மகிமை! எனவே இறைவனுடைய படைப்பில் எதுவுமே குறைவுடையது அன்று! இதே போன்று கஜகரி பூஜை நேரத்தின் போது பூலோகத்தின் உள்ள அனைத்து யானைகளுமே தங்களுடைய தேவ நிலைகளை மெய்ப்பித்துப் பூலோகத்திற்குத் தங்களுடைய தபோ பலன்களை அர்ப்பணித்து பிரபஞ்ச ஜீவன்களின் நற்கதிக்காக அளிக்கின்றன.

பூமாதேவிக்கு நாமிழைக்கும் அநீதிகள்!

நாம் வாழும் பூமிக்கு நன்றி மறந்தவராய் பூமிக்கு நாமிழைக்கும் துன்பங்களையும், அதற்கான பரிகாரங்களுக்காக நாம் வழிபட வேண்டிய சிறப்பான மூர்த்திகள் பற்றியும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் நாம் எடுத்துரைத்து வந்துள்ளோம். மெய்ங்ஞான விஞ்ஞானமே இப்பூவுலகில் எத்தகைய துன்பத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்க வல்லது என்பதை நாம் நன்கு உணர்தல் வேண்டும். இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட எத்துணையோ ஆன்மப் பூர்வமான காரண காரியங்கள் உண்டு! இவை வராமல் இருக்கும் வண்ணம் தக்க ஆன்மீகத் தீர்வுகளும் நிறைய உண்டு! ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இவற்றைக் கடைபிடிக்க வேண்டும்!

ஆங்கில மருத்துவத்தின் பக்க விளைவுகள் போல மனித சமுதாயம் இழைக்கின்ற பெருந் தீங்குகளே சூறாவளியாகவும், வெள்ளமாகவும் எரிமலையாகவும் மாறி வருகின்றன! எந்த பூமியில் நாம் பெறுதற்கரிய மானுடப் பிறப்பெடுத்து இறையருளால் வசிக்கின்றோமோ அந்த பூமாதேவிக்குப் பூஜை செய்து வழிபடவில்லை என்றாலும், பூமிக்கே துரோகம் செய்யும் அநீதிகளையாவது செய்யாமல் இருக்கலாமல்லவா! இந்த மனித சமுதாயத்தில் பூமிக்கு எங்கு தீங்கு இழைக்கப்பட்டாலும் அதன் விளைவுகளை உலகில் மனித சமுதாயம் பெற்றாக வேண்டும். பூமியில் கண்ட கண்ட இடங்களில் காறி உமிழ்தல், எச்சில் துப்புதல், கழிவு நீர்த் தேக்கம், இறைச் சொத்தான நீரை மாநிலம், நாட்டுப் பிரிவுகளால் நதி, கடல், குளம், ஏரி, அணை நீராகத் தடுத்தல், தண்ணீரில் இரசாயன அசுத்தம் சேர்த்தல், சாக்கடை நீரைத் தேக்கி வைத்தல் போன்ற எத்துணையோ அநீதிகளை நாம் பூமாதேவிக்கு இழைக்கின்றோம்.

பூமி புனிதமாக இருக்கட்டும்! ஆமாம்!  பூமியில் வாழ்க்கை என்று வந்த பின் இவையெல்லாம் சர்வ சாதாரணம் தானே என எண்ணலாம். நாம் சுயநலமாக வாழ்வதற்காக நாம் காறி உமிழும் எச்சிலையும், அணைக்காமல் விட்டுச் செல்கின்ற பீடி, சிகரெட், சுருட்டு மற்றும் திருடு, கொலை, கொள்ளை, பிறரிடத்தை அபகரித்தல் போன்ற கொடுமைகளையும் பூமாதேவி தன்னுள் ஏற்றுப் பொறுமையுடன் நம்மைக் காக்கின்றாள். பிறருக்கும் நமக்கும் தீமை செய்கின்ற அணுகுண்டு, ஏவுகணை சோதனை போன்றவையும் இயற்கைச் சீற்றங்களாக மாறுகின்றன! இவற்றையெல்லாம், தம்முள் ஏற்று நம்மைக் காக்கின்ற பூமாதேவிக்குரித்தான நன்றி வழிபாட்டையும் மேற்கொண்டால் தானே நாம் நன்முறையில் ஜீவிக்க இயலும். கழிவு நீர் போன்றவை மனித வாழ்வில் தவிர்க்க இயலாவிடினும் ஆங்காங்கே தேக்கி வைத்து, புனித நதிகளிலும், கடல்களிலும் அல்லவா இவற்றைச் சேர்த்து விடுகின்றோம். எம் தவறுகளுக்காக மன்னித்து எம்மைக் காப்பாற்றுவாயாக என்று வேண்டி பூமாதேவிக்கு உரித்தான வழிபாடுகளை ஸ்ரீவாஸ்து பூஜை நாட்களிலும், செவ்வாய்க் கிழமை மற்றும் செவ்வாய் கிரகத்திற்கான நட்சத்திர நாட்களிலும் பரிகார பூஜைகளாக மேற்கொள்ள வேண்டும்! உலக நன்மைக்காகவும் நமக்காகவும் எந்நாட்டவர்க்காகவும் இவற்றை நாம் கடைபிடித்தாக வேண்டும்!

தினந்தோறும் இருவேளையும் பூமியில் அரிசி மாக்கோலமிடல், தலை/நிலை வாசற்படிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு வழிபடுதல், பூமியின் மேல் ஹோம பூஜைகளின் புனித நீர் தெளித்தல், பூ சூக்த மந்திர ஹோம வழிபாடுகள், அங்க, அடிப் ப்ரதட்சிண வழிபாடு, பாத யாத்திரை, மலைத் தலங்களில் கிரிவலம் போன்றவை பூமாதேவிக்கு நாம் செய்கின்ற நன்றி வழிபாடுகளோடு பிராயச்சித்த முறைகளுமாகும்!

துரோகம், ஆயுத சோதனை அனைத்தும் பூமிக்கு வேதனை!

மேலும் பூமியில் நேர்மையாக இருப்போருக்குத் துரோகம் செய்வதாலும், வாக்கு நாணயம் தவறுவதாலும், பொய்ச் சத்தியம் செய்வதாலும், ஏமாற்று வேலையால் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதாலும் நம்பியவருக்கு நம்பிக்கைத் துரோகத்தில் ஈடுபடுவதாலும், நியாயமான விற்பனையை மறந்து பகடி, கையுறை கேட்பதாலும் குரு துரோகம் செய்வதாலும் இவ்வாறு பூமிக்கு இழைக்கப்படும் தீங்குகளும் இயற்கைச் சீற்றங்களுக்கு முக்கிய காரணமாகின்றன..!

இன்றைக்கு உலகின் பல நாடுகளில் கடலில் அணு சோதனைகளை நிகழ்த்துகின்றனர். கடல்தானே யார் மீது குண்டு வெடிக்கப் போகிறது என நினைத்துக் கப்பலில் நடுக்கடலுக்குச் சென்று பல ஏவுகணைகளையும் விண்ணில் ஏவுகின்றனர். ஆனால் இவற்றின் அதிர்வுகளால் ஏற்படும் வெப்பத்தாலும், நச்சு வாயுவாலும், விண்வெளியிலும், கடலிலும் எத்துணை கோடி உயிரினங்கள் மாய்கின்றன? எந்த அளவிற்கு இது பரவெளியில் பீஜாட்சரத் தன்மையைப் பாதிக்கின்றது? இத்தகைய சோதனைகள் தேவைதானா? கடல் நீருக்கு இழைக்கப்படும் அநீதிகள் கூட பூமா தேவியையே சார்கின்றது.. எனவே, உலகெங்கும் பூமிக்கு அடியிலும், மேலும், கடலிலும் நடத்தப்படுகின்ற தேவையற்ற, கொடுமையான, அணுகுண்டு / ஏவுகணை சோதனைகளே பூமா தேவிக்கு வேதனைகளை ஏற்படுத்தி நமக்கு இயற்கைச் சீற்றங்களாக மாறி வருகின்றன.!

சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகள் அடிக்கடி ஒன்றை நினைவு கூறுவார். ஒரு அணுகுண்டு போட்டால் அங்கு 10,000 மூட்டை தானிய மூட்டைகள் உருவாக வேண்டும், பல ஆயிரம் ஜனங்கள் அழியக் கூடாது என்று! ஓரிரவில் நெல் மூட்டைகள் விளைந்ததும், பஞ்சத்தால் விறகின்றி வாடிய ஏழைகளுக்காக நெல்மணியானது சோறாகவே விளைந்த அற்புதங்கள் நிகழ்ந்ததுமாகிய தெய்வத் தமிழ்நாடு இது! இதுவே உண்மையான மெய்ங் ஞான விஞ்ஞானம்! எனவே அழிவிற்காகக் கண்டு பிடிக்கப்படும் எந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் நமக்குத் தேவையில்லை. அழிவைத் தரும் விஞ்ஞானமுமே அழிக்கப்பட வேண்டியதே!

தர்மம் காக்கும் பிரம்மாஸ்திரம்!

முன் யுகங்களில் பயன்படுத்தப்பட்ட பிரம்மாஸ்திரம் என்பதெல்லாம் தற்போதைய அணு ஆயுதங்களுக்கெல்லாம் முற்பட்ட ஆயுதமாகும். பிரம்ம அஸ்திரம் என்பது அசத்தியைத்தை, அநீதியை அழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதே தவிர, இன்றைய நிலை போல நாட்டின் ஆற்றலைக் காட்டவோ, வேடிக்கைக்காகவோ, விளையாட்டிற்கோ, அநீதிக்காகவோ, பிற நாடுகளை அடக்கி, மிரட்டவோ பயன்படுத்தப்பட்டது கிடையாது.. முற்காலத்தில் அதைப் பயன்படுத்தியவர்கள் கூட தீய அரக்கர்களையும், தீய இராட்சதர்களையும் அழித்தார்களே தவிர தவறாகப் பயன்படுத்தவில்லை! தவப் பலன்களைத் தவறாகப் பயன்படுத்தியோரின் கதியை நாமறிவோம்! நன்முறையில் பயன்படுத்தியோரும் கூட அதற்கும் பலவிதப் பிராயசித்தங்களை நாடினர்.

பல உலகங்களையும் ஆட்டிப் படைத்த இராவணனையும், அரக்கர்களையும் அழித்த ஸ்ரீஇராமர் கூட அதற்காகப் பிராயச்சித்தம் தேடி இராமேஸ்வரம், திருப்புனவாசல் போன்ற பல இடங்களில் சிவ பூஜைகளையும், பல தர்ப்பண பூஜைகளும் செய்து பரிகாரம் பெற்றார். அவதார மூர்த்தியே பிராயச்சித்தம் தேடி பூமா தேவிக்கு ஏற்பட்ட வேதனைகளைத் தணித்த போது, மண்ணுலக வாசிகளாகிய நாம் பூமிக்கு இழைக்கும் அநீதிக்காகத் தக்கப் பிராயச்சித்த வழிபாட்டைக் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டுமல்லவா!

பூமிக்குக் களங்கம்! நமக்கு வில்லங்கம்!

புகை பிடித்தல், புகைத் துண்டுகளை அணைக்காமல் எறிதல், எச்சில், புகையிலையை உமிழ்தல், திருஅண்ணாமலை போன்ற புனித பூமியை வெறும் பாதங்களாலன்றிப் பாதணிகளுடன் கிரிவலம் வருதல், பெற்றோரை/சுபப் பொருட்களைக் காலால் உதைத்தல், மிதித்தல், மிருகங்களை வதைத்து உறிக்கப்பட்ட தோலால் ஆன காலணிகளை அணிந்து நடந்து பூமிக்கு வேதனைகளை அளித்தல், காரண காரியமின்றி பூமியை அநாவசியமாகத் தோண்டி குழி, பள்ளம் வெட்டுதல், பெண்களை மானபங்கப் படுத்துதல், கோயில் இடங்களை அதர்மமான முறையில் ஆக்ரமித்தல், கோயிலுக்கான குத்தகை / வாடகை தராது/ குறைந்த வாடகை தந்து ஏமாற்றுதல் போன்ற துரோகச் செயல்களும் நடத்தப்படுகின்றன. இவையாவும் பூமிக்கு இழைக்கும் தீங்குகளாதலின் இவைதாம் இயற்கைச் சீற்றங்களுக்குக் காரணமாகின்றன!

ஸ்ரீபூமா தேவியைப் ப்ரீதி செய்யக் கூடிய வழிபாட்டை முறையாக அவ்வப்போது கடைபிடித்து வந்தால்தான் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாமல் நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். மரங்களை வெட்டுதல், பசுமை வளத்தைக் குறைத்தல், வீட்டைக் கட்டுவதற்காகப் பிளாட்டில் உள்ள மரங்களை அநியாயமாக வெட்டுதல், பெரிய, பெரிய அணைக் கட்டுகளைக் கட்டி லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களைச் சேதப்படுத்துதல் / வறண்டிடச் செய்தல், காடுகளை அழித்தல், அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டி நீர் வளம் குறைத்தல், எல்லை தேவதைகளை முறையாக வணங்காதது, எல்லை, காவல் தெய்வங்களின் இருப்பிடங்களை மாற்றுதல் இவ்வாறாக நாம் பூமாதேவிக்கு ஏற்படுத்தும் வேதனைகள் தாம் எத்தனை? எத்தனை!

கர்மங் கழிக்கும் தீர்த்தத்தில் கழிப்பு நீரா?

சாக்கடை நீரை ஆலயக் குளங்களில் சேர்த்துவிடுதல் என்பது மிகவும் கொடிய பாவகரமான செயலாகும்.. கோயிலைச் சுற்றிக் குடியிருப்போர் தங்கள் வீட்டுக் கழிவு நீரையெல்லாம் கோயில் குளத்தில் இரகசியமாகச் சேர்த்து விடுகின்றனர்... இதற்குத் தண்டனையாக அவர்தம் சந்ததியினர் பெரிதும் பாதிக்கப்படுவர். மனவளம் குறைந்து பைத்தியம் பிடித்தல், கரு கலைதல், தற்கொலை, துர்மரணம் போன்ற பலவிதமான துன்பங்களை அவர்தம் சந்ததியினர் பெற வேண்டிய நிலை வரும்.

மேலும் இன்றைக்கும் ஆலயங்களைச் சுற்றிப் பல கழிப்பிடங்களைக் கட்டிக் அக்கழிப்பிடத்தின் கழிவு நீர் புனிதமான ஆலயக் குளத்திற்குள் செல்லும் வண்ணம் செய்து விடுகின்றனர். இதைவிட இறை நிலைக்கு எதிரான கொடூரமான செயல் எதுவும் இருக்க முடியாது! நம்முடைய சுகபோக வாழ்க்கை வசதிக்காக நம்மைப் படைத்த தெய்வத்தின் மீதா கை வைப்பது? சற்றே மன சாட்சியுடன், இறைப் பகுத்தறிவுடன் சிந்தித்துப் பாருங்கள்! தக்க சற்குருவின்றிப் பரிகாரமே எளிதில் கிட்டாது! இவற்றிற்கெல்லாம் பரிகாரம் தான் என்னே? ஸ்ரீபூமீஸ்வரராக, ஸ்ரீபூலோகநாதராக, ஸ்ரீபூமிநாதேஸ்வரராக இறைவன் அருள்பாலிக்கும் தலங்களில் ஆறுவேளை பூஜைகளை நிகழ்த்தி ஏழைகள் மனங்குளிரும் வண்ணம், தான தர்மங்கள் செய்து அவர்களையும் இறைத் திருப்பணிகளில் ஈடுபடச் செய்தலேயாம்! ஏழைகள் சாந்தமுற்றால் பூமா தேவியும் பரமானந்தம் அடைகின்றாள்!

தெய்வீகமாக வாழ்வது எப்படி?

இறைவன் ஏன் இந்த உலகைப் படைத்தான்? வேள்வியே தவறானது! உங்களைப் பார்த்து ஒருவர், உங்களுக்கு ஏன் இரண்டு முகங்கள் இருக்கின்றன என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? கேள்வியே தவறாயிற்றே என்றுதானே! இந்த உலகத்தைப் படைப்பது மட்டும்தானா இறைவனுடைய பணி? அல்லது இவ்வளவு பிரம்மாண்டமான உலகை அர்த்தமில்லாமலா இறைவன் நம் கண்களுக்குத் தோன்றச் செய்கின்றான்? நம் கர்ம வினைகளால் நாம் மாயப் பிறப்பு கொண்டு நமக்கு நாமே கற்பித்துள்ள இவ்வுலகை நிஜம் என்று எண்ணி உலகை இறைவன் படைத்தான் என்று மடமையுடனா கேட்பது? சற்றே இறைப் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள்! சிறியன சிந்தியாதீர்!

நீங்கள் உறங்கும்போது இந்த உலகைப் பற்றிய உணர்வு உங்களுக்கு இருப்பது கிடையாது.. நீங்கள் உறங்கும்போது உலகம் இருக்கின்றது தானே! அல்லது நீங்கள் உறங்கும்போது இது இயங்காமல் தான் போகின்றதா? எனவே உங்கள் கண்கள் விழித்திருக்கின்ற நிலையிலே இயங்குகின்ற உலகத்தை மட்டுமே நீங்கள் அறிவீர்கள்! அதுவும் அரைகுறையாக! ஏனென்றால் கண்களை மூடினால் எதிரில் நடப்பதை அறிய இயலா மனிதன் எந்த உலகை இறைவன் படைத்தான் என்று கேட்கின்றான்! மேலும் உறங்கும் போது வெளியே இயங்கும் உலகை நீங்கள் அறிதல் கிடையாது! ஆக, இந்த உலகத்தைப்பற்றிய அறிவோ, விழிப்புணர்வோ முழுமையாக உங்களுக்கு இல்லாத போது இந்த உலகை இறைவன் ஏன் படைத்தான் என்று கேட்பது நியாயமாகுமா?

அப்படியே இந்த உலகை இறைவன் படைத்திருந்தாலும் இவ்வளவு பிரம்மாண்டான உலகைப் படைத்திருக்கின்ற இறைவனைப் பற்றி அறிய வேண்டிய அறிவும் பிரம்மாண்டமானதாகத் தானே இருக்க வேண்டும், உறங்கும் போது என்ன நடக்கின்றது என்பதை ஒரு துளியும் அறிய முடியாத உங்களுடைய குறுகிய சுயநல மனித அறிவைக் கொண்டு எவ்வாறு இறைவனைப் பற்றிப் பகுத்தறிய முடியும்? இவ்வாறாக நீங்கள் தினந்தோறும் உங்கள் வாழ்க்கையில் சற்றே ஆத்ம விசாரம் செய்து வந்தால்தான் உங்களுடைய இறைப் பகுத்தறிவு பரிபூரணமாகச் செயல்படத் தொடங்கும். இறைவன் ஆறாவது அறிவாகப் பகுத்தறிவை மனிதனுக்கு அளித்திருக்கின்றானே, எதற்கு? இத்தகைய ஆத்ம விசாரத்திற்குத் தானே!

முழுமையான மனிதனாக வாழ்வதரிது!

இப்பூவுலகில் பலருமே பகுத்தறிவு உள்ள மனிதனாகச் செயல்படுவது கிடையாது. ஏனென்றால் கோடிக் கணக்கான மூளைச் செல்கள் நம் மூளையில் இருந்திட, மிக மிக உயர்ந்த அறிவாளி கூட 60-70 மூளைச் செல்களை மட்டும்தான் பயன்படுத்துகின்றான். எனவே இறைவன் அளித்த கோடானு கோடி மூளைச் செல்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாத மனிதன் பகுத்தறிவு உள்ள மனிதனா? அவனால் கூறப்படுகின்ற கண்டுபிடிப்புகள் எவ்வளவு உண்மையானது? மனிதனின் முடிவில் எதுவுமே நிச்சயமானதாக நிரந்தரமானதாக இல்லையே! உறங்கும் போது தன்னையே மறந்து விடுகின்றானே! சற்குரு ஒருவர்தாம் உறங்கிடினும் உறங்கா நிலையான விழிப்புணர்வுடன் திகழ்பவர்! ஆழ்ந்த இறை நம்பிக்கைக் கொண்ட பசுக்கள், விலங்குகள், தாவரங்கள் போன்ற அனைத்து உயிரினங்களுமே தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிவை முழுமையாகப் பயன்படுத்துகின்றன.. பகுத்தறிவுள்ள மனிதனும் தம்முடைய பகுத்தறிவைப் பயன்படுத்துவதற்கு இறை நெறியில் கண்டிப்பாக வாழ்ந்தாக வேண்டும்!

எனவே தெய்வீகமாக நீங்கள் வாழ்ந்தால்தான் உங்களுடையப் பகுத்தறிவு ஆக்கம் பெற்றுப் புலப்படத் தொடங்கும். உங்கள் பகுத்தறிவின் கண்களைத் திறந்து வைப்பவர்தாம் சற்குரு ஆவார். முடங்கிக் கிடக்கும் மூளைச் செல்களுக்கு ஆக்கம் தருபவர்தாம் சற்குரு! எனவே பகுத்தறிவுள்ள மனிதர்களே சத்குருமார்கள், சித்புருஷர்கள், மஹரிஷிகள், யோகியர்கள் ஆவர்! மற்றோரெல்லாம் முழுமையான மனிதர் ஆகார்! உங்கள் கண்முன் உலகத்தில், அலுவலகத்திலோ, வீட்டிலோ, செல்லும் வழியிலோ எங்கெங்கோ எத்தனையோ கோடி நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றனவே, இவற்றையெல்லாம் நீங்கள் கடந்து தானே செல்கிறீர்கள்! இவற்றையெல்லாம் நீங்கள் கண்டும் காணாதது போல்தானே செல்கின்றீர்கள். அப்படியானால் நீங்கள் அறியாதது நிறைய உண்டுதானே! இப்படி அறியாமையுடன் வாழ்ந்தால் நீங்கள் சம்பந்தப்படாத உலகம் என்ற ஒன்றும் உண்டுதானே! இவற்றையெல்லாம் உன்னித்துப் பார்த்தா வாழ முடியும் என்று கூட உங்களுக்கு எண்ணத் தோன்றும். உங்கள் கண் முன் நிகழ்கின்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்த உடனேயே பகுத்து அறிகின்ற மனப்பாங்கை நீங்கள் பெற்றால்தான் உங்கள் இறைப் பகுத்தறிவு பிரகாசமாக இருக்கின்றது என்பது பொருளாகும்.. பகுத்தறிவை ஆக்கப்படுத்தக் கூடிய நிறைய நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

கல்தடுக்கல் காட்டும் கல்லாக் கல்வி!

உதாரணமாக, தடுக்கிடும் கல்லால் மிடுக்கிடும் மூளை என்பது சித்தர்களுடைய பரிபாஷை, நீங்கள் வெளியே கிளம்பும்போது கால் தடுக்கினால் என்ன பொருள்? நீங்கள் செல்கின்ற பணியில் காரிய சித்தி ஆவதற்குத் தடங்கல்கள் / மாறு விளைவுகள் ஏற்படும் என்பது பகுத்தறிவு உங்களுக்கு ஊட்டுகின்ற உணர்வாகும். உடனே உள்ளே வந்து சற்றே அமர்ந்து நீர் அருந்திச் செல்ல வேண்டும் என்பது பெரியோர்கள் வகுத்துள்ள நியதி. உள்ளே வந்து உட்கார்ந்து தண்ணீர் குடித்து விட்டுச் சென்றால் மட்டும் காரியம் சித்தியாகி விடுமா? விளைவுகள் மாறுமா?

இவ்வாறாக மனிதனுக்குக் கேள்விகள்தான் கேட்கத் தெரியும்.. பதில் சொல்லத் தெரியாது! குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் நீங்கள் இருந்தால் உங்களுக்கு சில இடைஞ்சல்கள் ஏற்படும் என்பதற்காகவே அந்தக் குறித்த இடத்தில் குறித்த நேரத்தில் நீங்கள் அங்கே செல்லாமல் இருப்பதற்காகவே உங்களைக் கல்லால் தடுக்கி உட்கார வைத்து நீர் அருந்தி தாமதப்படுத்தி நேர, காரிய கர்ம பரிபாலன மாற்றப் பகுதியை உணர்த்திடவே கல்தடுக்கல் மூலம் இறைவன் உங்கள் பகுத்தறிவைத் தூண்டி விடுகின்றான்.

செருப்பு அறுதலின் சீர்மை அறிதல்!

இதே போல், கால் செருப்பு அறுந்து போவதும் உண்டு. இது தலைக்கு வருகின்ற துன்பம் காலோடு போயிற்று என்பதைக் குறிப்பிடுவதாகும்.. நீங்கள் உடனே செய்ய வேன்டியதென்ன? காதறுந்த செருப்பை நன்றாகத் தைத்து உடனடியாக காலணிகளைத் தானமாக அளித்திடுதல் வேண்டும்.! ஏனென்றால் அந்தக் காலணி தானம் மூலம் உங்களுக்கு கிடைக்கும் புண்ணியச் சக்தியால் உங்களுக்கு ஏற்படுகின்ற துன்பங்களுக்குப் பிராயச்சித்தமும் பரிகாரமும் கிட்டுமாதலின் உடனே ஆக்கப் பூர்வமாச் செயல்படு என்பதையே பாதணி அறுதல் தெரியப்படுத்துகிறது! பிற ஜீவன்களின் வாட்டத்தையும் பகுத்தறிவே இவ்வாறு குறிப்பால் உணர்த்துகிறது! எனவே எந்தப் புண்ணியச் சக்தியைக் கொண்டு உங்களுக்குப் பிராயச்சித்தம் ஏற்படுவதற்கும் காரிய சித்தியைத் தடுக்கின்ற இன்னல்களைக் களைவதற்குமான பல இறைவழி முறைகளை இறைவன் இயற்கையாகவே அளித்திருக்கின்றான். இவற்றைத் தாம் சகுனங்கள் என்று நம் பெரியோர்கள் வகுத்தார்கள்.

ஸ்வரம் மாறா நாயூளை! இதே போன்று நீங்கள் வெளியே செல்லும் போது நாய் ஊளையிடுகின்ற காட்சி தென்பட்டாலோ அல்லது நாய் குரல் கேட்டாலோ எங்கோ இறப்பு ஏற்பட இருக்கின்றது.. பயம் ஏற்படாமல் இருப்பதற்காக உடனடியாக பைரவ துதிகளையும், எம பகவானுடைய துதிகளையும் ஓதிட வேண்டும் என்பதே காலம் காட்டும் கருத்தாகும்.. நாய் ஊளையிடுகின்ற குரல் கேட்டவுடனேயே பைரவ சந்நிதிக்குச் சென்று பைரவரை வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். ஏனென்றால் எமத் தூதுவர்கள் வருவதற்கு காரண காரியங்கள் நீங்கள் செல்லும் வழியிலே நிறைய உண்டு. அவர்களுடைய காட்சிகள் மிகவும் அரிதானது என்றாலும் ஒரு வேளை பூர்வ ஜென்ம புண்ணிய வசத்தால் அக்காட்சி கிட்டினாலும் நீங்கள் அஞ்சாமல் இருப்பதற்காகவும், உயிர் பிரிந்திடும் அந்த ஜீவனுக்கு நல்லாசிகளைப் பெற்றுத் தருவதற்காகவும் உங்களுடைய எம துதிகளும் பைரவ தரிசனமும் பெரிதும் உதவும்.. இதுவே நாய் ஊளையிடுதலின் பின்னால் உள்ள ஆன்மீகச் சாரம் ஆகும்.!

ஸ்வரப் பெட்டி இல்லாமையால் அருகில் ஒலித்த நாயின் ஊளையிலிருந்து ஸ்ருதி சேர்த்து கான மழை பொழிந்த உத்தம இசைப் பெரியோர்கள் வாழ்ந்த நாடே நம் பாரத நாடு! நாயின் ஊளையில் கூட ஸ்வரந் தவறாது என்ற இறைப் பகுத்தறிவை ஊட்டுகின்ற புனிதமான பாரத நாடே நம் நாடு!

ஸ்ரீபெருமானந்த சித்தர்

வறுமைப் பணியாளர்க்கு நல்வாழ்வளித்த ஸ்ரீபெருமானந்த சித்தர்!

தேனிமலை ஸ்ரீமுத்துக் குமார சுவாமி முருகப் பெருமானை தரிசித்து கிரிவலம் வந்திடில் கார்ய சித்திகள் கிட்டுகின்றன! அங்காரக சக்திகள் வலுப்பெறுகின்ற தேனிமலையிலே இந்த சக்திகளை தம் யோகத்தால் கிரகித்துக் கொண்டு நற்கிரணங்களாக மாற்றித் தருகின்ற Spiritual antennaeவாகத் தேனிமலை ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகளின் ஜீவாலயம் தழைக்கின்றது.. ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகளின் ஜீவாலயத்தை அடிப்பிரதட்சணமாக வலம் வந்திட சித்தர்பிரான் தம் யோகத் தவப் பலன்களையும் ஆசிர்வதித்துத் தருகின்றார். ஸ்ரீபெருமானந்த சித்தர் சுவாமிகள் தம்முடைய பூலோக தேவ மானிட வாழ்க்கையில் எண்ணற்ற அன்பர்களுக்குப் பல அற்புதங்களை இறை லீலைகளாக நடத்தித் தந்துள்ளார்.

ஒரு வணிகரிடம் சாதாரணப் பணியாளராக இருந்த ஒருவன் தினந்தோறும் ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகளை தரிசித்துச் செல்வான். சுவாமிகளுடைய கட்டளைப்படி, அவனுடைய இளவயது காரணமாக தினந்தோறும் குறைந்தது 12 முறையேனும் கிரிவலம் வருவான். காலை 4.00 மணியிலிருந்து இரவு 10 அல்லது 11 மணிக்குள் தன்னுடைய வேலைகளுக்கிடையே குறைந்தது 12 முறையேனும் கிரிவலம் வந்து முடித்திடுவான். மிகவும் வறுமையில் வாடிய அவன், முதலில் சித்தர் பெருமானிடம் வந்த போது தன்னுடைய வறுமை நீங்க வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று எண்ணித்தான் அவரை நாடினான். அவரிடம் வந்து இரண்டு வருடம் ஆகியும் அவனுடைய வாழ்க்கையில் எவ்விதக் கூடுதல் பணவரவும் வந்து குவியவில்லை. ஆனால் வேறெங்கும் கிட்டாத தெய்வீக அமைதி அவரிடத்தில் தாண்டவமாடுவதை அவன் நன்கு உணர்ந்திட்டான்!  ஆனால் தாம் சித்தருடன் வந்தும் தாம் இன்னமும் வறுமையிலேயே உழல்கின்றோமே என்ற எண்ணம் முதலில் நான்கு, ஐந்து மாதங்களுக்கு அவனிடம் தோன்றினாலும், அவரிடம் ஏதோ இறையீர்ப்பு சக்தி மிளிர்வதை அவன் உணர்ந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் கிரிவலம் வரத் தொடங்கினான். ஏனென்றால் அவரிடம் வரத் தொடங்கியதியிலிருந்தே  ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள் “இவர்களுடன் நீ கிரிவலம் சென்று வா” “இவர்களுக்கு கிரிவலத்தைப் பற்றி நான் சொன்னதைச் சொல்,” என்று கிரிவல மகிமையினை நன்கு எடுத்துச் சொல்லிப் பலரையும் கிரிவலம் அழைத்துச் செல்ல ஆணையிடுவார்!

ஸ்ரீபெருமானந்த சித்தர்

கிரிவலம் சென்று வாராய்! அவர்தம் குருவாய் மொழிகள் யாவும் முதலில் சாதாரண வாக்கியங்கள் போல் அவனுக்குத் தோன்றினாலும் அவற்றில் பீஜாட்சர உபதேசங்கள் நிறைந்திருப்பதை அவன் உணர்ந்தான் இல்லை! இவ்வாறாகத் தான் இலை மறை கனியாகவே சித்தர்கள் தம்மிடம் நம்பிக்கை கொண்டவர்களுக்குப் பலவித பீஜாட்சரங்களை இரகசியமாகப் பதித்து வைத்துத் திருவாய் மொழிச் சொற்கள் மூலமாகவும், பிரசாதங்கள், விபூதி மலர்கள், குங்குமம் மூலமாகவும், ஆசியாகச் சேர்த்து விடுவார்கள். இவ்வாறு அன்பர்களிடம் சூட்சுமமாகப் பதிக்கப்பட்டு, அனுப்பப்படுகின்ற பீஜாட்சரங்களை அவர்கள் நன்முறையில் பயன்படுத்தி வருவார்களேயானால் அந்த இரகசிய உபதேச பீஜாட்சர மந்திரங்கள் நன்கு மலர்ந்து பலன்களைத் தரும். சித்தரின் ஆணைப்படி வந்து சேர்ந்த நான்கு, ஐந்து மாதங்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாகப் பல நூற்று அடியார்களைக்  கிரிவலத்தில் அழைத்துச் செல்கின்ற ஆனந்தத்தை அவன் அனுபவிக்கலானான். அவனுடைய ஏழ்மை மற்றும் மந்தமான புத்தியைப் பொறுத்துத் தேனிமலை கிரிவலத்திலுள்ள ஒரு சில கிரிவல மலைதரிசனப் பலன்களை மட்டும் சித்தர் அவனுக்கு எடுத்துரைத்து அவற்றைப் பலருக்கும் எடுத்துச் சொல்லுமாறு ஆணையிட்டார். அவன் காலை 4 மணியிலிருந்து இரவு 11 மணி வரை எப்போது கிரிவலம் வந்தாலும் நான்கு ஐந்து பேர்களாவது சித்தரின் அருகில் கிரிவலத்திற்காகக் காத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களை கிரிவலத்தில் அழைத்துச் செல்கின்ற அற்புத இறைப் பணி மட்டும் அவனுக்கு அளிக்கப்பட்டது. வேறு எந்த மந்திர உபதேசமும் அளிக்கப்படவில்லை என்றே அவன் எண்ணினான்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல மாதங்களுக்கு சித்தர் பெருமான் விபூதி, குங்குமம் கூட அவனுக்கு அளிப்பது கிடையாது, ஏனென்றால் நன்முறையில் அவன் பிரகாசிப்பதற்காகத் தன்னுடைய மானுட வடிவில் நம்பிக்கை கொள்ளாமல் தான் சொல்கின்ற வாக்கில் அவனுக்கு நம்பிக்கை ஏற்படச் செய்வதற்காகத்தான் சித்தப் பெருமான் புரிந்த இறைலீலை இது! வரிசையாக நின்று கொண்டிருந்த எத்தனையோ பேருக்கு பிரசாதம் அளிக்கின்ற சித்தர் பெருமான் இவனுடைய முறை வந்ததும் வேறு வேலையை கவனிக்கச் சென்றிடுவார்.! இது முதலில் அவனுக்குச் சற்று வருத்தத்தை அளித்தாலும், நாளடைவில் அதுவே அவனுக்குப் பழக்கமாகிவிட்டது.

பெருமளவில் அன்பர்கள் வரிசையில் நிற்கின்ற போது இவனும் நிற்பான். வழக்கம் போல் தனக்கு இன்று விபூதி பிரசாதம் கிடையாது என்று எண்ணும் போது திடீரென்று அவனைக் கூப்பிட்டு அவன் கையிலன்றி வாயிலேயே பிரசாதத்தை அளித்திடுவார். எந்தச் சமயத்தில் எதைச் செய்வார், எதைச் சொல்வார் என்று சொல்ல முடியாத அளவிற்குப் பரிபூரணமான அன்பு கனியாத அருளாசி கிட்டியதாகவே அவன் அறியாமையால் முதலில் எண்ணினான். ஆனால் ஸ்ரீபெருமானந்த சித்தர் அடிக்கடி ஒன்றைச் சொல்லுவார், என் உருவத்தை உன் மனதில் பிடிக்காதே, முருகனைப் பிடி, அவனளிக்கும் குருவருள் வாக்கியங்களைப் பிடி! இதுதான் அவருடைய எளிய உபதேச வார்த்தைகளாக இருக்கும். இதில் அவர் நிறைய பீஜாட்சரங்களைப் பொருத்திடுவார்!

கிரிவலத்திற்கு அடியார்களை அழைத்துச் செல்கின்ற பணியைத் தவிர சித்தர் பெருமான் அவனுக்கு வேறு எந்தப் பணியையும் கொடுக்கவில்லை. அவனுடைய இளம் வயது காரணமாக எத்தனை பேர் வந்தாலும் மனம் சலிக்காமல் மலை ஏறிச் சென்று கிரிவலத்தில் அவர்களைச் சுற்றிக் காண்பிக்க வேண்டிய வேலை மட்டும் அவனுக்கு இருந்தது. அவனுடைய கடுமையான பண்ணை வேலைகளை முடித்து விட்டு களைப்போடு வரும்போது தான் அவனைப் பல முறை கிரிவலம் வரச் செய்வார்.

முடியாதது முடியுமே! தன்னுடைய களைப்பை அவர் புரிந்து கொள்ளவில்லையே என்று அவனுக்குத் தோன்றும், சில சமயங்களில், “உன்னால் முடியாது என்று நினைத்தாயே, எப்படி கிரிவலம் மூன்று முறை வந்தாய், உன்னால் முடியும் என்று முருகன் நினைப்பதால் தானே உனக்குக் கடுமையான வேலைகளுக்கு இடையேயும் இந்த வேலையும் அளித்திருக்கின்றான்!” என்று சொல்லி விடுவார். அவன் சற்று யோசிக்கத் தொடங்கினான், “ஆமாம்,  களைப்பாக வந்திருக்கின்றோம் என்று தான் நினைத்தோம் ஆனால் அதன் பிறகு மூன்று முறை கிரிவலம் வந்து பலரையும் அழைத்துச் சென்றோமே, இது எப்படி முடிந்தது, அந்த சக்தி நமக்கு எப்படி வந்தது? கிரிவலம் வருகையில் பசியிருந்தும் கூட வயிறு நிறைய சாப்பிட்டது போல் ஓர் அற்புத உணர்வு எப்படி ஏற்பட்டு இருக்கின்றது என்று அவனுடைய குருவி மூளைக்கு ஏற்பச் சிறிது சிறிதாக அவன் சிந்திக்கத் தொடங்கினான். இதுதானே ஆன்மீகப் பசி, அவர் தம் குருமொழிகள் தாமே, ஆன்மீக உணவு இதைத்தானே சித்தர் பெருமான்கள் அற்புத இறைப் பணியாகச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு வருடம் ஆனதுமே அவனுடைய இறைப் பிடிப்புச் சற்று இறுகியது. எப்போதும் உள்ளே வந்து சித்தர் பெருமானைச் சுற்றி வந்து, தரிசித்து, வணங்கிச் சற்று நேரம் அங்கு நின்று கிரிவலம் செய்து வந்த அவன் இப்போதெல்லாம் வெளியிலிருந்தே அவரைக் கும்பிட்டுவிட்டு வாசலில் யார் நிற்கின்றார்களோ அவர்களைக் கூப்பிட்டுக் கொண்டு தானே கிரிவலம் செல்லத் தொடங்கினான். அவர் உள்ளிருந்தவாறே சைகை காட்டுவார் இவர்களை அழைத்துச் செல் என்று! அவ்வளவுதான் அடுத்து இரண்டு மூன்று வருடங்களில் சித்தர் பெருமானுடன் அவன் பேசுவதும் மிக மிகக் குறைந்துவிட்டது. இயந்திர கதியாக வருவதும், வந்தவர்களை கிரிவலம் அழைத்துச் செல்வதுமே அவனுக்குப் பெரும் இறைப் பணியாகிவிட்டது.. உண்மையில் அவருடைய உருவத்தைக் கூட அவன் மறந்திவிட்டான் என்று கூடச் சொல்ல வேண்டும். ஆனால் இதைத்தானே சித்தர்களும் எதிர்பார்க்கின்றார்கள். கண்ணால் காண்பதை விட மனதில் பிடி, உள்ளத்தில் நிறைவடையச் செய், இதுதான் நிரந்தரமானது. உருவத்தை மனதில் பிடித்தால், உருவம் உ(ம)றைந்தால் உள்ளம் சோர்ந்துவிடும்....” இந்த எளிய சித்த வாக்கியங்கள் தாமே சித்தர் பெருமானுடைய ஆரம்ப கால  அருள் மொழிகள்!

இவ்வாறாக நான்கு, ஐந்து, பத்து வருடங்கள் கழிந்தன. அவனுடைய வாழ்நாளில் கிட்டத்தட்ட 50,000ம் பேருக்கு மேலாக கிரிவலம் அழைத்துச் சென்று விட்டான். அவனை அறியாமலேயே பெரும் புண்ய சக்தியையும் சேர்த்துக் கொண்டு விட்டான். இல்லையில்லை! சித்தர்பிரான் ஐஸ்வர்யமாக அள்ளிக் கொடுத்தது இப்புண்ய சக்தியையே! எவரிடமும் அவன் ஒரு பைசா கூட வாங்குவது கிடையாது, உண்மையிலேயே தன்னுடைய கைக் காசைச் செலவழித்து டீ, பன் வாங்கி கிரிவல அடியார்களின் வயிறை நிறைத்து மனதாரத் திருப்பி அனுப்புவான். இந்த நான்கு ஐந்து வருடங்களில் தேனிமலையின் முப்பது/நாற்பது மலை தரிசனங்கள் அவனுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது.

சொத்தைச் சொத்து! அவனுடைய முதலாளிக்குப் பெரும் செல்வம் சேர்ந்திருந்தாலும் பிள்ளை குட்டிகள் சரியான ஒழுக்கப் பாதையில் அமைதாததால் அவர் மனம் நொந்து நொந்து சித்தர் பெருமானிடம் வருவார். அவரை உபசரித்து நான்கைந்து வார்த்தைகள் பேசி சித்தர் பெருமான் அனுப்பிவிடுவார். அவருடைய ஒரே ஒரு குறை, “என்னுடைய சந்ததிகள் சரியாக அமையவில்லை என்பதே!”  அவரும் பலமுறை சித்தர் பெருமானிடம், “நான் ஏதேனும் சுவாமிக்குச் செய்ய வேண்டுமா என்று கேட்கும் போதெல்லாம், நீ உழைத்துச் சம்பாதிப்பது கிடையாது.. உருப்படியாக வந்த செல்வமும் அல்ல, அது இறைவனுக்கு ஒட்டாது”, என்று வெளிப்படையாகச் சொல்லி அனுப்பிவிடுவார், அதை அவரும் உணர்ந்திருந்தார்.!

ஏனென்றால் அவனுடைய மூதாதையர்கள் குறித்த சில செல்வத் திரட்சிகளுடன் கர்ம வினைக் கழிவிற்கு என சித்தர் பெருமானிடம் வந்தபோது, “இது என்னால் முடியாத காரியம், அந்த அளவிற்குப் பெரும் கர்மவினை சேர்ந்துவிட்டது. இதற்கு என ஒருவன் வருவான் அதைச் செய்து தருவான் சென்று வா!” என்று சொல்லி அனுப்பி விட்டார். முதலில் அவர் பிள்ளைகளை நம்பியிருந்தார். ஆனால் முறையற்ற வழியில் வந்த செல்வம் என்பாதலோ என்னவோ தெரியவில்லை, அவருடைய பிள்ளைகள் அனைவருமே, கேளிக்கைகளில் ஈடுபட்டு உடலையும், உள்ளத்தையும் கேடு செய்து கொண்டார்கள். அவர் கண் முன்னரே ஒவ்வொரு பிள்ளையாக இறந்திடவே அவர் மனம் நொந்து போய் இறுதியில் அவர் சித்தர் பெருமானிடம் வந்து சேர்ந்தார்.

ஏழ்மையில் நேர்மை! சித்தர் பெருமானும் உன்னிடத்தில் ஒரு பணியாள் 10 வருடமாக இருந்திருக்கின்றானே அவனைச் சிறிது சோதனை செய்து பார்! அவன் நேர்மையாக இருக்கின்றானா, உண்மையாக உழைக்கின்றானா என்பதை உணர்ந்து வந்து என்னிடம் சொல் என்றார்! அவரும் அந்தப் பணியாளைச் சோதிப்பதற்காகப் பணக் கட்டுகளையும், நகைகளையும் வைத்து விட்டுச் செல்வார். ஆனால் அவனோ அவற்றில் ஒன்றைக் கூடத் தொடாது வைத்தது வைத்தபடியே வைத்திடுவான். அல்லது பத்திரமாக மூட்டை கட்டிக் கொண்டு வந்து அவரிடமே சேர்த்திடுவான். கொஞ்சம் கொஞ்சமாகச் சித்தர் பெருமான் அந்த செல்வந்தரிடம் இந்த நிலத்தை அவனிடம் குத்தகைக்கு விடு, இதனை அவன் மேற்பார்வையில் வை, என்று சொல்லி நான்கைந்து வருடங்களிலேயே அந்த வேலையாளை ஒரு சின்ன முதலாளியாக்கி விட்டார். செல்வந்தருக்கும் வயதாகி விடவே, ஏமாற்றுகின்ற உறவினர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, இப்பண்ணை ஆளையே பணிவான முதலாளியாய் தன்னுடைய இரண்டாவது இடத்திற்கான முதலாளி ஆக்கிவிட்டார்.!

அடுத்த பத்தே வருடங்களில் அச்செல்வந்தருக்குப் பின் அவருடைய செல்வம் யாவையுமே அவனுக்கு வந்து சேர்ந்தது.. எல்லாவற்றையும் சித்தர் பெருமானிடம் கொட்டிக் குவித்து விட்டு அவருக்கே அனைத்தையும் அர்ப்பணித்து நன்றி செலுத்தினான். அவரோ, “இந்தச் செல்வத்தில் உள்ள கர்மவினைகளைக் கழிப்பதற்காகவே இறைவன் உன்னை இத்தனை ஆண்டுகாலம் வறுமையில் வருத்தினான். வேறு எங்கு சென்று நல்ல பணியில் இருந்திருந்தாலும் கூட இந்த அளவிற்கு உன்னால் செல்வத்தைக் கொண்டு திரட்ட முடியாது. நீ நல்ல விதமான திருமண வாழ்வைப் பெற்று இந்தச் செல்வத்தைக் கொண்டு தேனிமலை முருகனுடைய உற்சவங்களில் திருவிழாக்களில் தான தர்மங்களுக்கும் பயன்படுத்தி நற்கதியை அடைவாயாக!” என்று ஆசீர்வாதம் அளித்தார். “இனிமேல் என்னை அடிக்கடி வந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான் கூப்பிடும் போது வந்து பார்த்தால் போதும்,” என்றும் சொல்லி அனுப்பி வைத்து விட்டார்.

அவரைக் கெஞ்சிக் கூத்தாடி அவருடைய ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்துச் சென்று அவன் தன் வாழ்நாள் முழுவதும் சித்தர் பெருமானுடைய நினைவுடனேயே வாழ்ந்து கர்ம வினைகளைக் கழித்தான். இன்றைக்கு மேலுலகிலே நல்லிடத்தில் பிரகாசிக்கின்றான். செவ்வாய் தோஷங்கள் நிறைந்திருந்தமையால் அவனுக்கு ஆரம்ப காலத்தில் வாழ்க்கையில், நல்ல விதமான வேலையோ, சொத்துக்களோ, நிலபுலன்களோ அமைந்திடவில்லை. சித்தர் பெருமானிடம் அவன் சேர சேரத்தான். அந்த தோஷங்களை எல்லாம் தன்னுடைய உடலில் ஏற்று பஸ்பம் செய்து அவனுக்கு நல்ல நிலைமையை ஸ்ரீபெருமானந்த சித்தர் பெற்றுத் தந்தார். எனவே சித்தருடைய ஜீவாலயங்களில் நீங்கள் பெறுதற்கரிய பலாபலன்களைப் பெற்றிடலாம். செவ்வாய்க் கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் இங்கு கிரிவலம் வருதலை உங்களுடைய முக்கியமான வழிபாடாகக் கொண்டிடுங்கள்.. நிறைய உணவு வகைகளைச் சமைத்து தேனிமலைக்கு எடுத்து வந்து தேனிமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அன்னதானம் செய்திடுங்கள். இதுவே தேனிமலை ஸ்ரீபெருமானந்த சுவாமிக்கு பரமானந்தத்தைத் தந்து தேனிமலை ஆண்டவனுக்கும் மிகவும் ப்ரீதி உடையதாகவும் அமைகிறது!

திருஅண்ணாமலை கிரிவலம்

ஸ்வர்ண கருடனும் ஜடாயு சிவப் பறவையும்! திருஅண்ணாமலை கிரிவல மஹிமை!

கடந்த சில வருடங்களாக திருஅண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் மகத்தான அளவில் பிரசித்தி பெற்று இலட்சக் கணக்கான மக்கள் கிரிவலம் வருகின்ற காட்சியைக் கண்டு பரமானந்தம் கொள்கின்றோம். ஆனால் பலரும் திருஅண்ணாமலையா? பௌர்ணமியன்று கூட்டமாக, நெரிசலாக இருக்குமே! அப்பப்பா, அங்கு அந்நாளில் செல்ல முடியாதே என்று சொல்லக் கேட்கின்றோம். உண்மையில் இலட்சக் கணக்கான மக்கள் திரண்டு வரும்போதுதான் சித்புருஷர்களும் மகரிஷிகளும் கூட்டத்தோடு கூட்டமாக மானுட ரூபத்திலே கிரிவலம் வந்து அதன் பலாபலன்களை அள்ளி வழங்கிச் செல்கின்றார்கள். எனவே கூட்டத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். ஏனென்றால் கலியுகத்தில் நல்பக்தியைப் பெருக்குவதுதான் ஒவ்வொருவருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். அனைவருமே பக்தி உடையவர்களாக இருந்தால் தானே திருட்டு, கொள்ளை, ஏமாற்றுதல், சூதாட்டம் போன்றவை மறையும். எனவே கூட்டம் கூட்டமாகப் பக்த கோடிகள் வருவதைக் கண்டு நீங்கள் சந்தோஷம் அடைய வேண்டுமே தவிர ஒதுங்குதல் கூடாது.

மேலும் இத்தனை ஆயிரம் மக்கள் ஆலய வழிபாட்டிற்காகத் திரண்டால் இத்தகைய தெய்வ மூர்த்திகளும், இன்னின சித்புருஷர்களும், மகான்களும், மானுட ரூபத்தில் வந்து மக்களோடு மக்களாய் வலம் வந்து பலாபலன்களைப் பொழிதல் வேண்டும் என்ற இறை நியதி உண்டு. உங்களருகில் கிரிவலம் வந்து கொண்டிருப்பவர் முக்கியமானத் தெய்வ மூர்த்திகளாய் இருக்கலாம், சித்த புருஷர்களாக, மகான்களாக, இருக்கலாம், எனவே கூட்டத்தைக் கண்டு ஒதுங்காதீர்கள், அஞ்சாதீர்கள்.

ஸ்வர்ண கருட தரிசனம்!

இத்தனை ஆயிரம் மக்கள் கூடும் போது தான் குறிப்பிட்ட தேவலோகங்களிலுள்ள பல அரிய பறவைகள் வலம் வந்து தேவலோகக் கதிர்களைப் பரப்பிச் செல்கின்றன.. ஒரு இலட்சம் மக்களுக்கு மேல் ஓரிடத்தில் இறை வழிபாட்டிற்காகத் திரண்டால் அவ்விடத்தில் சுவர்ண கருடன் என்ற தங்கமயக் கருடன் வட்டமிடும். இது பார்பதற்கு சாதாரணக் கழுகு போல் தோன்றும், இருந்தாலும் அதனுடைய சிறகுகள், அலகு, கால் நகங்கள் அனைத்துமே தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். இந்தத் தங்கமானது தங்கம் போல் அல்லது சுயம்பிரகாசத் தங்கமாக அபரஞ்சிதத் தங்கமாக மிளிரும். குறிப்பிட்ட சில புண்ணிய சக்திகளைப் பெற்றவர்களுக்கும் பல உத்தம தெய்வீக நிலைகளைக் கொண்டவர்களும்தான் இந்த சுவர்ண கருடனுடைய தரிசனம் கிடைக்கும். நமக்கு இந்தக் கருடனுடைய தரிசனம் கிட்டுகின்றதோ இல்லையோ? ஆனால் இந்த சுவர்ண கருடன் வட்டமிடும்போது அதனுடைய நேத்திரப் பார்வையில் நாம் பட்டால் போதும், அதுவே விசேஷமானதன்றோ?

எனவே திருஅண்ணாமலையில் லட்சக் கணக்கான மக்கள் கிரிவலம் வருகின்ற போது, ஸ்வர்ண கருடன் நிச்சயமாக அங்கு தோன்றுகின்றது. பலவிதமான கண் நோய்களால் அவதிப்படுவோர் அதனைத் தரிசிக்க இயலாவிட்டாலும் கூட அது வட்டமிட்டு வலம் வருகின்றபோது அபரஞ்சித ஸ்வர்ண லோகத்திலிருந்து அது திரட்டித் தெளித்துச் செல்கின்ற அபரஞ்சிதக் கிரணங்களின் பொழிவில் ஒரு சிறிது பட்டால் கூடப் போதும், கண் பார்வைக் கோளாறுகள் இருந்தாலும் கூட வயதானக் கால்த்தில் எவ்விதக் கண்கோளாறும் ஏற்படாது! கேட்ராக்ட் போன்ற வியாதிகளால் அவதிப்படாது நன்முறையில் ஆரோக்கியமாக வாழ்ந்திட இந்த ஸ்வர்ண கருட தரிசனம் வழிவகை செய்கின்றது. நீங்கள் லட்சோப லட்ச மக்களோடு மக்களாய் கிரிவலம் வந்தால் தானே இந்த ஸ்வர்ண கருடனின் தரிசனத்தைப் பெற முடியும், கூட்டமாக இருக்கின்றதே என்று ஒதுங்கிவிட்டால், பெறுதற்கரிய இறை பாக்கியத்தை இழக்கக் காரணமாகின்றீர்கள்.

என்றும் ஒளிரும் ஏகாந்த ஜோதி!

மேலும் திருஅண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று மட்டுமே (கார்த்திகை தீப) ஜோதி ஏற்றப் படுவதாக நீங்கள் எண்ணுகின்றீர்கள். திருஅண்ணாமலையில் எப்போதும் ஜோதி தரிசனம் உண்டு. ஆனால் நம் மானுடக் கண்களுக்குக் கார்த்திகை தீபத்தையொட்டி ஒரு 10 அல்லது 15 நாட்களுக்கு மட்டுமே இங்கு தோன்றுகின்றது.. இந்த சுயஞ்ஜோதிப் பிரகாசம் எப்போதும் நிறைந்திருக்கிறது. எனவே தான் உங்கள் கண்களுக்கு இந்த சுயஞ்ஜோதி சிவப் பிரகாசத் தீபம் தோன்றுகின்றதோ இல்லையோ தீபம் தோன்றுவதாக உள்ளத்தால் மனதார எண்ணி வழிபட்டு வந்தால் ஒரு நாள் உங்களுக்கு நிச்சயமாக இந்த தீப ஜோதி தரிசனம் கிட்டும். சபரிமலையில் ஏற்படுகின்ற மகர ஜோதியும் இந்தப் பிரபஞ்சத்திற்கே அக்னி லிங்கமாக விளங்குகின்ற இந்தத் திருஅண்ணாமலையில்லிருந்து சிவ ஜோதியாய்த் தோன்றுவதேயாகும்.

ஜடாயு சிவப் பறவை!  இந்த ஜோதி கிரணங்களை அணுகி வாழ்கின்ற தேவ லோகப் பறவைகளுள் ஒன்றே ஜடாவு சிவப் பறவையாகும்.. ஜடாயுவின் பாரம்பரியத்தில் தோன்றுகின்ற அதியற்புதப் பறவை திருஅண்ணாமலை கார்த்திகை தீபம் மானுட ரீதியாக ஏற்றும்போது அந்த கிரணங்களை தரிசித்துப் பிறகு யோகத்தில் ஆழ்ந்துவிடும். இந்த கார்த்திகை தீபத் தரிசனத்தை பெறுவதற்காகவே பூலோகத்திற்கு வருகின்ற இந்த ஜடாயு சிவப்பறவை எத்தனை நாள் மானுட ரீதியாக மானுடக் கண்களுக்குத் தீபம் தென்படுகின்றதோ அத்தனை நாளும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்தவாறே இருக்கும். எங்கும் தங்குவதும் கிடையாது, அமர்வதும் கிடையாது, உணவேற்பதும் கிடையாது.!

இது அக்னி லோகத்திலிருந்து எழுகின்ற பறவையாதலால் அக்னி சம்பந்தப்பட்ட திரவியங்களில் தான் இது யோக நிலையைக் கொள்ளும். ஜடாயு சிவப் பறவை என்ற இந்தப் பறவையானது கார்த்திகை தீப நாட்களில்தான் தென்படும். ஆனால் கார்த்திகை தீபம் மானுட ரீதியாக நிறைவு பெறும்போது அந்நாளில் இப்பறவையானது திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அக்னி சம்பந்தப்பட்ட பொருட்களிலும் தன்னுடைய கிரிவலப் பூஜாப் பலன்களை பல வடிவங்களில் நிலை நிறுத்திச் செல்கின்றது! உதாரணமாக ராமபாதம் என்று சொல்லப்படுகின்ற திருவடிகளின் கீழ் அமர்ந்து பூஜை செய்கின்ற இப்பறவையானது பூமியில் ஜாதவேதம் என்று சொல்லப்படுகின்ற பிருத்வி சக்தியை நிறைத்து செல்கின்றது. அதாவது இன்றும் சாஷ்டாங்கமாக மலையை நோக்கி தரையில் வீழ்ந்து ராம பாதத்தை வணங்குபவர்களுக்கு ஜடாயு சிவப் பறவை நிறைத்துச் சென்றுள்ள அக்னி சக்திகள் உடலில் சேர்கின்றன. இது உறவினர்களுடைய, நண்பர்களுடைய பொறாமையால், காழ்ப்புணர்ச்சியால், குரோதத்தால், ஏற்பட்டுள்ள வியாபார, சொத்து மற்றும் உறவு நஷ்டங்களுக்கு நல்ல தீர்வைப் பெற்றுத் தரும். இத்தகைய துன்பங்களால், கலியுகத்தில் வாடுவோர் பலரும் உண்டு.! எனவே இவற்றிற்கு தீர்வு பெறுவதற்காகவே சிலவிதமான யோகத் தவப் பலன்களை ஒவ்வொருவரும் பெற்றாக வேண்டும். அதற்குரித்தான தவமுறைகளை தக்க சற்குருமூலமாகப் பெற வேண்டிய இறை நியதிகளை யாரும் கடைபிடிப்பதில்லை. எனவே தான் இந்த ஜடாயு சிவப்பறவை இவற்றிற்கு உரித்தான பரிகார முறைகளைத் தருவதற்காக ராமபாதத்தில் அமர்ந்து தன்னுடைய பூஜா பலன்களில் ஒரு பங்கை நிரவிச் செல்கின்றது. இது வருடம் தோறும் நிகழ்கின்ற அதியற்புத இறைத் திருப்பணியாகும்.

திருஅண்ணாமலையில் அஷ்ட திக்கு லிங்கங்களில் அக்னி லிங்க மூர்த்தியிலிருந்து நாம் பெறுகின்ற மலைத் தரிசனங்களுக்குப் பலவிதமான விசேஷ நாமங்கள் உண்டு. அக்னி நாட்களாக விளங்குகின்ற செவ்வாய்க் கிழமை, செவ்வாய் ஹோரையிலும், சனிக்கிழமை, சனி ஹோரையிலும் அக்னி பகவானுக்குப் ப்ரீதியான பசு நெய் கொண்டு அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி இந்த தீப தரிசனத்தோடு சேர்த்து மலை தரிசனத்தையும் பெறுவோர்க்கு இந்த ஜடாயு சிவப் பறவை தன்னுடைய அருணாசல ஜோதித் தரிசனத்தின் ஒரு பங்கை நல்வரமாக தந்தருள்கின்றது. அக்னி பகவானுக்குப் ப்ரீதியான வேதமந்திர சக்திகள் நிறைந்த திராட்சை, கிஸ்முஸ், பாதாம் பருப்பு போன்றவை கலந்த உணவுப் பண்டங்களை (பாயசம், சர்க்கரைப் பொங்கல்) அக்னி லிங்க மூர்த்தியின் சன்னதியில் ஏழைகளுக்குத் தானமாக அளிப்பதால் ஜடாயு சிவப் பறவையின் நல்வரக் கதிர்கள் அருட்பரிசாகக் கிட்டுகின்றன.. இதன் மூலம் வறுமை, துக்கம் சம்பந்திகளின் கொடுமையில் வாடும் பெண்கள் தீர்வு பெறுவர்.

திரைப்பட உலகம்

சீர்மையும் தரும், சீரழிவும் தரும் திரைப்பட உலகம்!

எந்த விதத்தில் பயன்படுத்தப் போகின்றீர்கள் என்பதைப் பொறுத்து! இன்றைய கலியுகத்தில் நல்லொழுக்கம் மங்கி வருவதற்கும், தீய ஒழுக்கம் விஷக் கிருமிகள் போல் பரவி வருவதற்கும் முதற் காரணங்களுள் ஒன்றாக இருப்பது ஆபாசம் பொங்கி வரும் திரைப்படத் துறையும்/டி.வியும் ஆகும். விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் மனித சமுதாயத்தைப் பாழ்படுத்துமேயானால் அத்தகைய கண்டுபிடிப்புகள் நமக்குத் தேவையே இல்லை. அவை நிராகரிக்கப்பட வேண்டியவையே. திரைப்படத் துறை லட்சக்கணக்கான மக்களுக்கு, நல்லொழுக்கத்தையும், பக்தியையும், அறநெறிகளையும் புகட்டுவதற்கு மிகவும் மகத்தான துறையாக விளங்கினாலும் தற்காலத்தில் எந்த அளவிற்கு ஆபாசமும், அநாகரீகமும், அதர்மமும், வன்முறையும் சினிமா உலகில் புகுந்துவிட்டன என்பதை நன்கு அறிவீர்கள். எதிர்கால பக்தித் தூண்களாகப் பிரகாசிக்க வேண்டிய இளஞ்சமுதாயத்தை ஆபாச விஷத்தால் கெடுப்பது அதர்மமாய்ச் செயல்படும் சினிமாத் துறையே!

இளம் சமுதாயத்தினர் தாம் உலக மனித சமுதாயத்திற்கு இறைநெறித் தூணாக விளங்க வேண்டியவர்கள், அவர்கள் மனதிலே ஆபாசத்தைப் புகுத்தி, முறையற்ற காம உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, வன்முறைச் செயல்களையும் கிளறி விடுகின்ற திரைப்படத் துறை நம் மனித உலகத்திற்குத் தேவையில்லாத ஒன்றுதான். ஆனால் இறை பக்தியையும் நல்ல ஒழுக்கத்தையும், அறநெறி உணர்வுகளையும் திரைப்படங்கள் புகட்டுமேயானால் இது மகத்தான இறைப்பணியாக மாறிச் மிகச் சிறந்த சமுதாய இறைப் பணித் துறைகளில் ஒன்றாக மலர்கின்றது என்பதில் ஐயமேயில்லை. ஆபாசமாகப் படத்தை எடுப்பவர்களும், நடிப்பவர்களும் சம்பந்தப்பட்ட படத்தில் பங்கு பெற்றோரும் பல பாவ வினைகளைச் சுமந்து அல்லல்படுவர். எத்தனை லட்சம் மக்கள் மனதினிலே முறையற்ற காம எண்ணங்களைப் புகுத்தினார்களோ அவையெல்லாம் லட்சோப லட்சம் பிறவிகளாக, அருவருக்கத்தக்க வாழ்க்கைப் பிறவிகளாக சம்பந்தப்பட்டவர்க்கு எதிர்காலத்தில் வந்து சேரும். அநாகரிகமான முறையில் வன்முறையைத் தூண்டுகின்ற அளவில் கொலை, கொள்ளை, வெறியை ஏற்படுத்தக் கூடிய திரைப்படத்தைத் தயாரிப்பவர்கள், பங்கு கொள்பவர்கள், நடிப்பவர்கள், அனைவருமே நிம்மதியற்ற பிறப்புகளையே பெறுவர்!

ஏனென்றால் எத்தனைக் கோடி மக்களுடைய உள்ளத்திலே வன்முறையும், முறையற்ற காம உணர்வுகளும் புகுந்தனவோ அந்த அளவிற்குப் பாவ வினைகள் சேரும்தானே! இவை யாவும் தீரும் வரை எண்ணற்றப் பிறவிச் சுமைகளைத் தாங்கியே ஆக வேண்டும்.! ஆனால் அதே சமயத்தில் ஒரே ஒரு திரைப்படப் பாடல், அல்லது திரைக்காட்சி பக்தி நெறியை ஊட்டும் வகையில், உள்ளத்தைப் நெகிழ வைக்கும் வரையிலே இறைப் பண்பு மிளிர அமையுமேயானால் அந்த அளவிற்குப் பெரும் புண்ய சக்தியும் வந்து சேர்ந்து பல உத்தம நிலைகளை அவர்கள் பெற்றிடுவர். ஆகையால் பத்து மாதம் சுமந்து புனிதமான கருவைத் தாங்கி பிரசவ வேதனைக்கிடையே குழந்தையைப் பெற்றெடுத்துப் புனிதமான தாய்ப் பாலூட்டி, உணவு தந்து, உடை தரிக்கச் செய்து, பள்ளிக்கு அனுப்பி 10, 12 வருடங்களாகச் சிறுபருவத்தில் சீராட்டி, பாலூட்டி வளர்த்து 20 வயது ஆகின்றபோது, ஒன்று, இரண்டு திரைப்படங்களைப் பார்த்து ஒரு இளைஞன் உடனேயே முறையற்ற தீய ஒழுக்கத்திற்கு ஆளானால் அந்தத் தாயின் உள்ளம் எவ்வளவு வேதனைப்படும் என்று சற்றே சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். தாயின் சாபம் நியாயமாயின் விரைவில் விளைவுகளை ஏற்படுத்தும்! வியாபாரத்திற்காகத் திரைப்படத்தை எடுத்துப் பிறர் மனதில் முறையற்ற காமத்தைப் புகுத்தி லட்சம் லட்சமாக, கோடி கோடியாய்ச் சம்பாதித்து எதனை சாதிக்கப்போகின்றார்கள்?

ஆபாசந் தரும் துன்பப் பிறப்பு நிலை!

லட்சக்கணக்கான உள்ளங்களில் உள்ள புனிதத்தையும் மாசுபடுத்தி, அழித்து அவ்விடத்தில் ஆபாசக் கதிர்களை வித்திட்டால் அதுவே பல கோடிப் பிறவிக்களைகளாகத் தனக்கு வந்து சேர்ந்திடும் என்பதை எவர் உணர்ந்தார்? ஆபாசப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முறையான சந்ததிகள் தழைப்பதில்லை! அப்படியே சந்ததிகள் வாய்ப்பினும் அவர்களும் முறையற்ற தீய ஒழுக்கத்தில் தான் அவர்கள் கண்ணெதிரிலேயே அலங்கோலமான வாழ்க்கை வாழ்ந்திடுவர்.

எனவே திரைப்படத்துறையில் இருப்போர், தவறுகள் செய்திருப்பின் இனியேனும் தங்களுடைய அநாகரீகமான, ஆபாசமான தவறுகளுக்கு மனம் வருந்தித் தக்கப் பிராயசித்தங்களை இப்பிறவியிலேயே செய்திடல் வேண்டும். இறைவன் கண்களைப் படைத்தது புனிதமான காட்சிகளைக் காண்பதற்கும், வசதியற்றோர் கஷ்டப்படுவதைக் கண்டால் ஜாதி, மத பேதமின்றி அவர்களுக்கு இயன்றளவு உதவி செய்வதற்கும், திருஅண்ணாமலை, திருத்தணி, தேனிமலை போன்ற இறைமலைக் காட்சிகளைப் பெற்றுக் கொண்டே கிரிவலம் துதிப்பதற்கும்தானே தவிர முறையற்ற காட்சிகளைப் பார்த்தோ, கொடுத்தோ உள்ளத்தையும், உடலையும் கெடுத்துக் கொள்வதற்காக அல்ல.

குறிப்பாக ஆபாசமாக நடிக்கின்ற நடிகர், நடிகையர்களும், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் உள்பட ஆபாசப் படம் சம்பந்தப்பட்ட அனைவருமே எண்ணற்ற பாவங்களைச் சுமந்து தட்டுத் தடுமாறி அலங்கோலமாக வாழ்கின்ற சந்ததிகளைப் பெற்று கோடிக்கணக்கான உள்ளங்களையும் மனங்களையும் முறையற்ற கால அலைகளில் அலைக்கழித்ததினால் நிம்மதியில்லா பிறப்புகளே வந்திடும்! அநாகரீகமான வழியில் சம்பாதித்து இப்பிறவியில் வேண்டுமானால் லட்சத்திலும் கோடியிலும் புரண்டு சுகம் பெற்றிடலாம். ஆனால் எதிர்வரும் பிறவிகளோ சாக்கடையில் புழுக்கள் போன்று உழலுமாறு அமைந்து விட்டால் சற்றே சிந்தித்துப் பாருங்கள். பிறரைக் கெட்ட வழியிலே ஈடுபடுத்திச் சம்பாதித்த பணம் அனைத்தையுமே வஸ்திர தானத்தில் செலுத்தினால் தான் தக்கப் பிராயசித்த வழிகளைப் பெற முடியும்!

பாவத்தில் பங்கு வரும்! எவ்வளவு கோடி மக்களுடைய உள்ளத்தை எவ்வளவு காலத்திற்குப் பாழ்படுத்தினார்களோ, இத்தீய ஒழுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கை முழுவதும் ஏற்படுகின்ற துன்பங்கள் அனைத்திலும் ஒரு பங்கு சம்பந்தப்பட்ட படத்தில் ஈடுபட்டவருடைய வாழ்வில் வந்து குவிந்துவிடும். இதனால்தான் தலைப்பில் சொன்னது போல் சீர்மை தருவதும் திரைப்படமே, சீரழிவைத் தருவதும் திரைப்படமே!

ஒவ்வொருவரும் தங்களுடைய குடும்பத்திலுள்ள ஆண்களும், பெண்களும், நன்முறையில் வளர்ந்து, ஆளாகி நன்முறையில் திருமண வாழ்வைப் பெறுவதைத் தானே விரும்புவார்கள். ஆனால் லட்சக்கணக்கான இளைஞர்களுடைய மனதைக் கெடுக்கின்ற வகையிலே திரைப்படத்தை எடுத்தால் பிறருடைய அழிவிற்குக் காரணமாகி ஏன் மனசாட்சி இல்லாமல் வாழ்க்கை நடத்திட வேண்டும்? நடந்தது நடந்து விட்டது. இதுவரையில் சேர்த்த கொடுமையான கர்மவினைகளுக்கு ஏற்ற பரிகார முறைகளை இனியேனுமாவது தேடுவதற்கு முயற்சி எடுத்திடுங்கள்.

பாவ வழியில் வந்த பணம்! அடுத்தபடியாக கோடானுகோடி மக்களின் மனதைச் சீரழித்து சம்பாதித்த பெரும் பணத்தைத் தனியே பிரித்தெடுத்து வைத்து அல்லது அதனால் பெறப்பட்ட சொத்துக்களைத் தக்க முறையிலே, பிராயச்சித்த வழிமுறைகளிலே, தான தர்மங்களிலே பயன்படுத்தினால்தான் இவ்வாழ்நாளில் ஓரளவேனும் பிராயசித்த முறைகளைப் பெற முடியும். உதாரணமாக இவ்வாறு ஆபாச விளைவுகளினால் கிட்டிய பணம் நகைகளாகவும், மற்ற சொத்துக்களாகவும் இருக்குமேயானால் நகைகள் அனைத்தையும் ஆலயங்களில் இறைவனுக்கு அர்ப்பணித்திடுதல் வேண்டும். கணக்கு, வரி, பயம் காரணமாக நேரடியாக ஆபரணங்களை அளிக்க முடியாவிட்டால் ஆலய உண்டியல்களிலாவது இட்டு / அர்ப்பணித்திடுதல் வேண்டும். அல்லது பிறர் மூலமேனும் இறைச் சேவைக்கென அளித்திடுக! எத்தனை லட்சக்கணக்கான மக்கள் ஆபாசப் படங்களைப் பார்த்து உள்ளம் அழுகி வதைக்கப்பட்டார்களொ அவ்வாறு பெறப்பட்ட பணத்தைக் கொண்டு பெறப்பட்ட ஆபரணங்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்தால் தான் லட்சக்கணக்கான பக்தர்கள், அடியார்கள் இறைவனுடைய ஆபரணங்களைப் பார்த்து தரிசிப்பதின் மூலம் ஓரளவேனும் பிராயசித்தத்தைப் பெறலாம் அல்லவா? எதையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதோடு கடமை முடிந்தது! அதனை இறைவன் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றான் என்பது இறை விருப்பமே! இதற்காக கொள்ளையர்களைப் போல லட்சக்கணக்கான பணத்தைக் கொள்ளை அடித்து விட்டு அதில் ஒரு பங்கை உண்டியலில் இடுவதால் கர்மங்கள் கழிந்து விடாது. ஆபாசப் படங்களில் ஈட்டிய பணம் வங்கிகளில் இருக்குமேயானால் அவற்றை ஏழைகளின் வயிற்றில் அன்னமாக இட்டிடுக! திருஅண்ணாமலை, திருப்பதி காஞ்சீபுரம், தேனிமலை போன்றவை அன்னதானத்திற்கான சிறப்பான தலங்களாகும்!

ஆடை தானம் பாவ வாடை போக்கும்!

எலுமிச்சை சாதம், மாம்பழம், ஏழைச் சுமங்கலிகளுக்கு மாங்கல்யம், மஞ்சள் சரடு, மஞ்சள் கிழங்கு போன்றவற்றைத் தானமாக அளித்திடுதல் வேண்டும். மஞ்சள் நிறம் மூலமாகப் புனிதத்தைப் பன்மடங்கு பெருக்கிட முடியும். மஞ்சள் நிற ஆடைகளையும் தானமாக அளித்திடுதல் உள்ளம் புனிதம் பெற சிறப்பானதாகும். உடைக் குறைவால் ஏற்படுவது தானே ஆபாசம். எனவே எந்த அளவிற்கு உடைகளைக் குறைத்து லட்சக் கணக்கான உள்ளங்களை நாரிடச் செய்தார்களோ அதற்கு ஓரளவேனும் பிராயசித்த வழிகள் பெறவே எட்டு கஜம் புடவை, வேஷ்டி, போர்வை, ஜமுக்காளம் போன்ற பெரிய துணி வகைகளை எல்லாம் தானமாக அளித்து வருதல் வேண்டும். ஒன்று அல்லது இரண்டே இரண்டு ஆடை வகைகளை மட்டும் வைத்துக் கொண்டு வாடுகின்ற ஏழைகள் உண்டு. அவர்களுக்குத் தாராளமாக நிறையத் துணிகளை தானமாக வழங்குவதன் மூலம் ஆபாசப்படத்தால் வருகின்ற கர்மவினைகளுக்கு ஓரளவு பரிகார நல்வழி முறைகளைப் பெற்றிடலாம்.

கண்ணுக்குக் கண்ணான பரிகாரம்! கண்கள்தாம் புனிதத்தைப் பெற்றுத் தருபவை. ஆனால் லட்சக்கணக்கான மக்களுக்கு மிகவும் புனிதமான காட்சிகளை அளித்திட்டால் அது பிறவிப் பெரும் பாக்யம்தானே! மக்களின் மனம் கெடும் வகையில் கண்களுக்கு ஆபாசக் காட்சிகளை அளித்தமைக்கு மற்றும் ஒரு பிராயச்சித்தமாக, அறவழியாக ஏழை (கண்) நோயாளிகளுக்கு உரித்தான இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல் பலவிதமான கர்மவினைகளைப் போக்கிடும்!

பக்தி தரும் காமாக்யா சக்தி யோனி பீடம்!

ஆலய கோமுகம் போல தெய்வீக மனித உடலுக்கு யோனி தான் பிரம்ம வாயிலாகத் திகழ்வதால் யோனி சம்பந்தப்பட்ட கர்மவினைகள் தாம் நோயாகவும், மனக் கோளாறுகளாகவும் ஆபாசப் படங்களினால் சேருகின்றன. எனவே அம்பாளுக்கான சக்தி பீடங்களில் யோனிப் பீடமாக விளங்குகின்ற அஸ்ஸாமில் இருக்கின்ற காமாக்யா ஆலயத்தை அடிக்கடி தரிசித்தலும், இங்கு சிவப்பு நிறமான ஆடைகளை, சிவப்பு நிற உணவுப் பண்டங்களை, பழங்களை தானமாக அளித்தலும், சினிமாத் துறையில் அதர்மத்தால், ஆபாசத்தால் ஏற்பட்ட கர்மவினைகளுக்கு ஓரளவு பிராயசித்த அறவழிகளைத் தந்திடும்! நிறையப் பசுக்களை வளர்த்தலும், பசுக்களை வளர்க்கின்ற ஏழைக் குடியானவர்கள் / விவசாயிகள் மற்றும் பண்ணைக்காரர்களுக்குப் பசு வளர்ப்பதற்கான உதவிகளைச் செய்தலும், ஆலயங்களில் பசுக்களை வளர்த்துத் தினந்தோறும் பசும்பால் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்வதும் சினிமாத் துறை சம்பந்தப்பட்ட தீய கர்ம வினைகளுக்குப் பரிகார அறவழிகளைக் காட்டும்! கோடிக்கணக்கான தேவாதி தேவ மூர்த்திகளும், தேவதைகளும் நிறைந்திருக்கின்ற பசுக்களுக்கு ப்ரீதி கிட்டினால்தான் பலவித கர்மவினைகளுக்கு நாம் பிராயச்சித்தத்தைப் பெற முடியும். உடல் முழுவதும் புனிதமாக நிறைந்து விளங்குகின்ற பசுவே உடலில் உள்ள புனிதத்தை அழிக்கின்ற ஆபாசத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்திப் பெறுகின்ற தீவினைகளைத் தீர்த்திட அருள்வழி காட்டும்!

இவற்றிற்கெல்லாம் பிராயச்சித்தம் அறவழிகளைப் பெற்றுத் தருவதற்காகவே கோமாதா பூலோகத்தில் பசுவாகப் பிறப்பெடுத்து பலருக்கும் தீவினைக் கர்மங்களுக்கானப் பிராயச்சித்தத்தை அளித்துக் கொண்டிருக்கின்றாள். மேலும் பசு வதையைத் தடுப்பதற்காக கோசாலைகளில் வளர்க்கப்பட்டு வருகின்ற மலட்டுப் பசுக்களைப் போஷிப்பதற்காக தக்க உதவிகளைச் செய்து வருதல் வேண்டும்.

கோடி பலன் தரும் ஸ்ரீகோடீஸ்வரர்!

ஸ்ரீகோடீஸ்வரர் என்ற பெயரில் இறைவன் அருள்பாலிக்கின்ற ஒரு சில தலங்கள் உண்டு. இங்கு தாம் கோடி கோடியாகப் பெறுகின்ற தீவினைக் கர்மங்களுக்கு இறைவன் தக்க நிவர்த்தியைப் பெற்றுத் தருகின்றான். ஆனால் இத்தலங்களில் இறைப்பணிகளைச் செய்யும்போது நல்ல எண்ணங்கள் வருமேயானால் அவை கோடிமடங்காகும். தீய எண்ணங்கள் வருமேயானால் அவையும் கோடி மடங்காகும். எனவே இத்தகைய ஆலயங்களில் இறைப்பணி செய்யும் போது, “இறைவா! அறிந்தோ அறியாமலோ அடியேனிடம் எழுந்த அனைத்து எண்ணங்களையும் உன்னிடம் சமர்ப்பிக்கின்றேன். எனக்கு எது நன்மையோ அதனைச் செய்வாயாக!” என்று வேண்டுதலே சிறப்புடையதாகும். இவ்வாறு கோடீஸ்வர மூர்த்திகள் அருள்கின்ற ஆலயங்களில் சினிமாத் துறையினர் தக்க இறைப் பணிகளையும் தீர்த்தத் திருப்பணிகளையும் அன்னதானம், வஸ்திர தானம் அபிஷேக ஆராதனைகள் போன்றயாவையும் செய்து வருதல் வேண்டும். கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர், திருநெல்லிக்கா போன்ற ஸ்ரீகோடீஸ்வரராக ஈஸ்வரன் அருள்பாலிக்கின்ற தலங்களில் செய்யப்படுகின்ற இறைப்பணிகளுக்குக் கோடி மடங்கு பலன்கள் உண்டு. சினிமாத் துறையில் சம்பந்தபட்டோர் கோடிக்கணக்கான ஜீவன்களுடைய புனிதத்தை மாசுபடுத்தியதற்காகத் தக்கப் பிராயச்சித்த இறைவழி முறைகளை ஸ்ரீகோடீஸ்வர மூர்த்தியாக அருள்பாலிக்கும் தலங்களில் இறைவன் பொழிகின்றான்!

இவ்வாலயங்களில் ஸ்ரீருத்ரத்தைத் கோடி முறை ஜபம் செய்து, பாராயணம் செய்வித்து கோடிக்கணக்கான ஜீவன்களுக்கு அன்னதானம் அளித்திடுதல் வேண்டும். கோடிக்கணக்கான ஜீவன்கள் என்றால் மலைத்து விடவேண்டாம்.. எறும்புகள், விலங்குகள், பசுக்கள், காளைகள், யானை, ஆடுகள், புறாக்கள், காக்கை, மனிதர்கள் போன்று அனைவருக்குமே ஸ்ரீகோடீஸ்வரராக இறைவன் அருள்பாலிக்கின்ற தலங்களில் அன்னம் பாலித்தல் மிகவும் விசேஷமானதாகும். குறிப்பாக பிரதோஷ நேரத்தில் செய்யப்படுகின்ற தான தருமங்களுக்குப் பன்மடங்கு பலன்கள் உண்டு. மேலும் பிரதோஷ பூஜைகளை இத்தலங்களில் ஏற்று நடத்தினால் ஏற்கனவே கோடிக்கணக்காகப் பெறுகின்ற பூஜா பலன்கள் யாவும் பிரதோஷத்தில் பல கோடி மடங்காகப் பெருகுகின்றனதானே! ஒன்றே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்! மேற்கண்டவை யாவும் பிராயச்சித்தத்திற்கான அருள் வழி முறைகளைத் தருபவையே தவிர இவையே பரிபூரணப் பிராயசித்தமாகாது! தக்க சற்குருவை நாடி பல வகைப் பூஜை, ஹோம, தான தர்ம வழிமுறைகளை அறிதலே உத்தமமானது!

கர்மங்கள் கழிய திருக்கழிப்பாலையை நாடு!

இறைவனுக்கு வலது கண் சூரிய மூர்த்தியாகவும், இடது கண் சந்திர மூர்த்தியாகவும் விளங்குவதாலும் கண்களால்தான் ஆபாச விளைவுகள் ஏற்படுவதாலும் சூரிய, சந்திர தீர்த்தங்கள் நிறைந்த தலங்களை சினிமாத் துறையினர் அடிக்கடி தரிசித்து தான தருமங்களை மேற்கொள்வதும் சிறப்புடையதாகும். இத்தலங்களில் நீராடுதலால் பல அங்கங்களால் செய்த பாவங்களுக்கு ஓரளவு பிராயச்சித்தம் பெற்றிடலாம். சூரிய சந்திர மூர்த்திகள் அருள்மழை பொழிகின்ற தலங்களுள் ஒன்றே சிதம்பரம் அருகே உள்ள திருக்கழிப்பாலைத் திருத்தலமாகும். இங்கு ஸ்ரீதுர்கா விசேஷமாக அருள்பாலித்துப் பலவிதமான கர்மவினைகளைக் கழிக்கின்ற தலம்! மேலும் சூரிய சந்திர மூர்த்திகள் எதிர் எதிரே நின்று அருள்பாலிக்கின்ற தலமாக விளங்குகின்ற சிதம்பரம் ஆச்சாள்புரம் அருகே உள்ள திருமஹேந்திரப் பள்ளித் திருத்தலமும் மிகவும் சிறப்புடையதாம்! இங்கு சூரிய சந்திர மூர்த்திகளுக்கு ப்ரீதியான கோதுமை, அரிசி சம்பந்தப்பட்ட உணவு வகைகளைத் தானமாக அளித்திடுதல் வேண்டும். இவ்வாறாக சினிமாத் துறையினர் தம் வாழ்நாள் முழுதும் சமுதாய இறைத் திருப்பணிகளை மேற்கொண்டால்தான் கோடிக்கணக்கான மக்களுடைய உள்ளத்திலே முறையற்ற காம உணர்வுகளை எழுப்பியமைக்காகவும் இருந்த மூல கர்ம வினைகளுக்கு ஓரளவேனும் பிராயசித்த வழிமுறைகளைப் பெற்றிடலாம். ஏனைய இறைவழிப் பிராயச்சித்த முறைகளை தக்க சற்குருவை நாடி அறிந்திடவும்.

அன்பே சிவம்

அறிவால் அறிதல் அரிதே! அறிவீர் அவரை அன்பால்!

கலியுகத்திலே கடவுளை நம்புவோர் கூடத் தீய ஒழுக்கத்திலும், பாவச் செயல்களிலும் ஈடுபடுவர், சற்குருவே நேரில் வந்தாலும் உணர மாட்டார்கள் என்பதால் தான் கலியுகத்தில் சற்குருவின் பரிபாலனமும் இலைமறை கனியாகவே இறை நியதியாக விதிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய பாவங்களுக்கும் தீய கொடிய செயல்களுக்கும் உரித்தான கர்ம வினைகளை ஒருவர் அனுபவிப்பது தானே முறையானது. அதை விடுத்து சற்குருவின் காலடியில் வீழ்ந்து விட்டால் செய்த பாவங்கள் கரைந்து விடுமா?

பூர்வ ஜன்மவினைகள் குவிந்திருப்பதால் இதனால் பாதிக்கப்பட்டவர்களுடைய கஷ்டங்களை, துன்பங்களை முழுவதுமாக இன்னொருவர் ஏற்று நிவர்த்திதான் செய்ய முடியுமா? சம்பந்தப்பட்டவர்கள் தாமே அவற்றை எடுத்துச் செய்ய வேண்டும்! இப்பிறவியில் மனமறிந்து ஏதும் செய்யவில்லை எனில் வந்தது யாவும் ஊழ்வினை என்றுணர உள்ளம் மறுக்கிறதே!

ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் எந்த கிரக சக்தி நீச்சமாக இருக்கின்றதோ அந்த கிரகம் மூலம் பெற வேண்டிய நன்மைகளில், நல்வரங்களில் தடங்கல்கள் ஏற்படும். இதனால் அது சம்பந்தமாக அவருக்குப் பலவிதமான துன்பங்கள் ஏற்படும். அஷ்டமத்தில் சனி என்று சொல்லி ஸ்ரீசனீஸ்வர பகவானைத் துதிக்கின்ற போது அஷ்டமத்தில் சனி இருப்பதால்தான் துன்பங்கள் ஏற்படுகின்றன என்ற தவறான அபிப்பிராயம் ஏற்பட்டு விடுகிறது! ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் சனி வருகின்ற போது அவருடைய கர்மவினைப் பாங்கின்படி எத்தகைய துன்பங்களை ஜாதகக்காரர் எதிர் நோக்க வேண்டும் என்பதை உணர்ந்துவதாகவே அஷ்டமச் சனி அமைந்திருக்கின்றதே தவிர எட்டாம் இடத்தில் சனி இருப்பதால் துன்பங்கள் ஏற்படுகின்றன என்று மாற்றிச் சொல்வது தவறானதே! ஜோதிடர்களும் இவ்வாறு தவறாகச் சொல்வதைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

கிரகச் சட்டங்கள் எல்லாம் நமக்கு வருகின்ற கர்ம வினைகளைத் துல்லியமாகக் காட்டுகின்ற X-Ray ஆகும். கலியுகத்தில் ஒரு துன்பம் ஏற்பட்டுவிட்டால் அதைத் தன்னுடைய கர்மவினையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட, அந்தத் துன்பத்தை எப்படியேனும் துரத்தி அடிக்க வேண்டும். அதற்குக் காரணமானவர்களை வதைக்க வேண்டும்.. என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கின்றது.!

ஒரு வியாதி நிவாரணத்திற்காக நீங்கள் அலைகின்ற அலைச்சல், செலவழிக்கின்ற பணம், சந்திக்கின்ற, டாக்டர், நண்பர்கள் யாவருமே உங்கள் கர்மவினைப் பரிபாலனத்தில் தொடர்பு உடையவர்கள் என்று புரிந்துகொண்டால் துன்பங்களை ஏற்று அனுபவிப்பதும் அவற்றை நீக்குவதற்கான பிராயச்சித்த பரிகார முறைகளைத் தேடுவதும் நம்கர்ம வினைகளின் தொகுப்பே என்பது புரிந்துவிடும்.!

உதாரணமாக உங்களுக்குப் பணக் கஷ்டம் ஏற்பட்டு ஒருவரிடம் பெரும் வட்டிக் கடனாக வாங்கும் போது நீங்கள் சந்திக்கின்ற அன்பர் தெரிந்தவரோ, தெரியாதவரோ அவர் தருகின்ற பணம், செக், அவர் பயன்படுத்துகின்ற பேனா, பேப்பர், இடம் அனைத்துமே உங்கள் கர்ம வினைகளுடன் தொடர்பு கொண்டிருக்கும்.. இதென்ன, இதைவிட மிகவும் முக்கியமானது நீங்கள் யாரிடமிருந்து கடன் பெறுகிறீர்களே அவரே உங்களிடம் ஒரு ஜென்மத்தில் கடனாக வாங்கித் திரும்பித் தராத பணத்தையே இப்போது கடனாக பெறுகின்றீர்கள். இதுதான் திசை திரும்பி வருகின்றது என்பதும் சில கர்மத்தின் விளைவாகி விடுகின்றது!

இதுபோல ஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகள், ஸ்ரீவள்ளலார் சுவாமிகள், காஞ்சி ஸ்ரீபரமாச்சாரியார் போன்று பூலோகத்தில் நம்மோடு வாழ்ந்து வலம் வந்து, உறைந்து எத்தனையோ இறை அனுபூதிகளை உணர்த்தி விட்டுச் சென்றிருக்கின்றார்கள். கண்ணால் கண்டால் தான் நம்புவது என்ற அளவிற்கு கலியுகத்தில் இறை நம்பிக்கை மங்கிவிட்டதால் தான் மனிதர்கள் தம்முடைய கண்களால் காண்பதற்காகவே தன்னுடைய ரூபத்தில் இறைத் தூதுவர்களாக, மகான்களாக, யோகியர்களாக, சித்புருஷர்களாக, சற்குருமார்களாக இறைவன் அனுப்புகின்றான்.!

மானிட வடிவில் வந்திருக்கின்ற அந்த இறைத் தூதுவர்களை இந்த மனித உலகம் என்ன பாடுபடுத்துகின்றது. பட்டினத்தார், ஸ்ரீவள்ளலார் சுவாமிகளைப் பழித்தவர்கள் எத்தனை பேர்? இருப்பினும் கடைவிரித்தேன் வாருவார் இல்லை என்ற மனத் துயரத்துடன் தானே இறைத் தூதுவர்கள் திரும்பிச் செல்கின்றார்கள். அவர்கள்தாம் தீர்க்க தரிசிகள் ஆயிற்றே, அவர்கள் ஏன் மனம் வருத்தம் அடைய வேண்டும்.. முன்னரே தெரியாதா என்று எண்ணிடலாம். பத்தாயிரம் பேரில் 9980 பேர்கள் தூற்றினாலும் 10/20 மனிதர்களாவது நல்வழிக்குக் கடைதேறினால் அவர்களைத் திருத்த வேண்டும் என்பதற்காகவே இறைவன் இறைத் தூதுவர்களை சற்குருமார்களாக கொண்டு வருகின்றார்.. ஏனென்றால் ஒரே ஒரு நல்ல மனிதர் உலகில் உலவுவாரேயானால் அவரால் 10,000 தீயவர்களைச் சமாளிப்பதற்கான இறை நற்சக்திகளை உலகில் பரப்ப முடியும். எனவே ஒரே ஒரு நல்ல மனிதருக்காகப் பூவுலகில் மனிதப் பிறப்பு எடுத்து வந்த மகான்கள் ஏராளம், ஏராளம்.. ஒரே வடிவில் மகான்கள் தோன்றுவதை விட வித விதமான வடிவுகளில், உருவங்களில் மகான்கள் வந்திடில், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைக் கழியும் மனித மனத்திற்கு மாமருந்தாக இருக்கும் என்பதால் தான் ஸ்ரீராமகிருஷண பரமஹம்சர், ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள், ஸ்ரீபட்டினத்தார் போன்ற பலவிதமான வடிவங்களில், தாடி, மீசை உடையவராக, குண்டாக, ஒல்லியாக , நரை திரை மூப்புடன் இருப்பவராக, இறைவன் பல வடிவுகளில் அவர்களை அனுப்புகின்றான்.

அமுத தாரைகள்

1. சற்குருவை காண்பீரே! சித்தர்களுடைய ஞான பத்ர தேவ வாக்கியங்களில் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் பற்றிய ஆன்ம விளக்கங்கள் காணப்படுகின்றன.. சற்குருவைப் பெற்று விட்டால் இந்த ஜென்மம் என்ன, எத்தனையோ கோடி ஜென்மங்களில் சேர்ந்துள்ள கர்மவினைகள் பற்றி ஞான பத்ர விளக்கங்கள் மூலம் அறிந்து அவற்றிற்கு உரித்தான கர்மவினைப் பரிகாரங்களையும் அவரே தந்து உத்தம முக்தி நிலையையும் இறையருளால் தந்தருள்கின்றார். ஆனால் முக்தி, மோட்சம் என்றால் பிறவியற்றப் பெருநிலை எனப் பொருள் கொண்டாலும், அதிலும் சில ஆழ்ந்த இறை விளக்கங்கள் பொதிந்துள்ளன. சற்குருவே முக்தி நிலை பெற்றவர்தாமே! அப்படியிருக்க அவர் ஏன் ஒரு பிறவி எடுத்து மீண்டும் பூலோகம் வருதல் வேண்டும்? தாம் பெற்ற முக்தி, மோட்ச நிலையைப் பிறரும் பெறுதற்கான இறைப் பணிகளை ஆற்றுவதே உண்மையான முக்தி நிலையின் பெரும் கடமைப் பேறாகும்! சற்குருவோடு இணைந்த வாழ்வாக எத்தகைய பிறவியையும் எத்தனை கோடி முறையும் எடுத்திடச் சித்தமாயிருத்தலும் உத்தம முக்தி நிலை வழிபாடேயாம்! தக்க சற்குருவைப் பெறுதற்கு குருவாரமாகிய வியாழனன்று திருஅண்ணாமலையை குருஹோரை நேரத்தில் கிரிவலம் வருதலும், ஸ்ரீசிஷ்டகுரு நாதேஸ்வரராக ஈஸ்வரன் அருள்பாலிக்கும் பண்ருட்டி அருகே திருத்தளூரில் (திருதுறையூர்) உள்ள சிவாலயத்தில் இறைப் பணிகள் ஆற்றி வருதலும் சிறப்புடையதாம்!

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் முசிறி

2. தீயொழுக்கத்திலிருந்து விடுபட
அக்காலத்தில் சரியாக, முழுமையாக, பஸ்மமாக்கப்படாது விடப்பட்ட அசுர சக்திகள்தாம் மீண்டும் துளிர்த்து, மதுவாகவும், முறையற்ற காமமாகவும், சூது, விபச்சாரம் போன்ற தீய ஒழுக்கங்களாகவும் இன்று கலியுலகில் பலர் மனதில் புகுந்துள்ளன. எனவே கலியுகத்திலும் அரக்க சாம்ராஜ்யம் உண்டு! ஒவ்வொருவருடைய உடலிலும், உள்ளத்திலும், நிறைய அசுர சக்திகள் உள்ளனவே! இவையே ஒரு  மனிதனைத் தீய ஒழுக்கங்களுக்கு அடிமையாக்குகின்றன.. இந்தக் கலியுக அசுர சக்திகளை வதம் செய்து புத்தி, மனம், உள்ளம் ஆகியவற்றைப் புனிதப்படுத்திடும் அருள்வழி முறைகளை அளித்திடவே, இறைவன் யோகியர்களையும், மஹான்களையும், சித்புருஷர்களையும் சற்குருமார்கள் வடிவில் அனுப்புகின்றான்..! தீய செயல்களிலிருந்து விடுபடச் சிறந்த வைராக்யம் நிறைந்த மனம் வேண்டும்! மனதிற்கு அதிபதியான ஸ்ரீசந்திர பகவானுக்கு உரித்தான திங்கட்கிழமைகளில் திங்கள் ஹோரை நேரத்திலும், பௌர்ணமி திதியிலும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருதலும், ஸ்ரீசந்திர மௌளீஸ்வரராக சிவன் அருள்பாலிக்கும் தலங்களிலும் (திருவக்கரை, முசிறி) மன்மதன் ரதி தம்பதி சமேதராக ஈஸவரனை தரிசித்த திருலோக்கித் திருத்தலத்திலும் இறைப் பணிகளைச் செய்து வருதல் வேண்டும்! இறைப் பணிகள் எனில் பெரும் செலவான கும்பாபிஷேகங்கள் என்று பொருளல்ல! ஆலயத்தில் சுவர், பிரகாரம், தூண்களைத் துடைத்து சுத்தம் செய்து, நீர் விட்டுக் கழுவி, கோலமிட்டு வருதலும் ஸ்ரீஅப்பர் சுவாமிகள் காட்டிய அருட்திருப்பணியாம்! இத்தகைய உழவாரத் திருப்பணிகளே அங்கங்களால் செய்த வினைகளுக்குத் தக்க பரிகாரங்களைப் பெற்றுத் தரும்!

திருப்பூவனூர் தீர்த்தம்

3. புண்ய சக்தி பூவனூர் மூர்த்திக்கே! இன்றைக்குப் பல அலுவலகங்களிலும் குளிர் சாதன வசதிகளுடன் (Air conditioners) பலருக்கும் வேலை வாய்ப்புகள் அமையும்.. மனைவி A/C வசதியுடன் பணி புரிய கணவனோ, மேலே மின்விசிறி கூட இல்லாது வியர்வையால் வாடித் துடித்து வேலை செய்வார்.. சாலையில் ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டு சைக்கிளை மிதித்துச் செல்ல அல்லது ஸ்கூட்டரில் சென்றிடப் பக்கத்தில் A/C வசதி உள்ள காரில் வாலை ஆட்டிக் கொண்டு நாய் செல்வதைக் கண்டு பொருமுபவர்களும் உண்டு.. நாய் கெட்ட கேட்டிற்கு A/C வசதி பார் என்று வாய் நிறையச் சத்தம் போட்டுச் சொல்பவர்களும் உண்டு.. இதற்கும் பல ஆன்மீகக் காரணங்கள் உண்டு. தன் வாழ்நாளில் நிறைய நீர் மோர், நீர், தயிர் சாதம், கம்பளி எட்டு கஜப் புடவை போன்ற பெரிய ஆடைகள்,  போர்வைகள் போன்றவற்றை மனதார தானமாக அளித்தவர்களுக்குத்தான் இத்தகைய குளிர் சாதன வசதிகள் கூடிய சுகமான அலுவலக வாழ்க்கை அமையும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நல்லதுதும் கெட்டதும் நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப அமைவதே! குளிர் சாதன வசதி இருந்தும் ஆஸ்த்மா, ரத்த சோகை, உடல் பலவீனம் போன்றவற்றால் இவற்றை அனுபவிக்க முடியாமல் திணறுபவர்களும் உண்டு.. எனவே நாம் எந்த நற்காரியத்தைச் செய்தாலும், அதன் புண்ணிய சக்தியை இறைவனுக்கே அர்ப்பணிக்கின்ற சங்கல்ப வழிபாட்டைச் செய்து விட்டால் எது வரினும் நம் கர்ம வினைகளின் பலாபலனே என்று உணர்ந்து சாந்தமுடன் வாழலாம்.. நம் புண்ணிய சக்தியையெல்லாம் நன்முறையில் ஏற்று நமக்குரிய பலாபலன்களைத் தருகின்ற மூர்த்திகளும் உண்டு.. தஞ்சை மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூர் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் ஆலயத் தீர்த்தத்தில் நீராடி தம்முடைய வாழ்நாளின் நற்காரிய பலன்களையெல்லாம் ஸ்வாமியிடம் அர்ப்பணித்து, சதுரங்கா, நீ ஆடும் சதுரங்க இறை நாட்டியத்தில் நாம் ஒரு சோழியே! ஆடுவதும், ஆட்டுவதும், ஆட்டி வைப்பதும், நகர்த்துவதும், நகராமல் செய்வதும் உன் விருப்பமே என்று சங்கல்பம் செய்து சுவாமிக்கு 64 விதமான பூஜைப் பொருட்களைப் படைத்து அர்ப்பணித்து, ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் உடல் அமைப்பு, ஆரோக்கியம், குடும்பம், திருமணம், தொழில் போன்றவை ஒற்றுமையாய், சச்சரவின்றி அனைத்துமே இணைப்பதியமாய் அமையும்.. 64 வகை என்றவுடன் அஞ்சி விடாதீர்கள்! வகை வகையான பூக்கள், புனுகு ஜவ்வாது சாம்பிராணி போன்ற திரவியங்கள், வண்ண நிற ஆடைகள், உணவு வகைகள் போன்றவையும் 64ல் அடங்கும். சனிக்கிழமை தான் இச்சங்கல்ப பூஜைக்கு உரித்தான நாளாகும்.

4. உலகத்திற்கே, ஏன் இந்தப் பிரபஞ்சத்திற்கே ஆன்மீக வழிகாட்டியாகவே பாரதம் திகழ வேண்டும் என்பதற்காகத்தான் நாமெல்லாம் பாரத மக்களாகப் பிறப்பெடுத்துள்ளோம்.. பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஜீவன்கள், உலக ஜீவன்களின் நல்வாழ்விற்காக மகத்தான இறைப் பணிகளை ஆற்ற விரும்புகின்றார்களோ அவர்களைத் தான் ஆண்டவன் இப்புனித பாரத பூமியின் பிரஜைகளாகப் பிறப்பைத் தந்து பூலோகத்திற்கு அனுப்புகின்றான். ஏனென்றால் சுயம்பு லிங்க மூர்த்திகளும் அதிஅற்புதக் கோயில்களும், இறைமலைத் தலங்களும், புண்ணிய நதிகளும் தீர்த்தங்களும் மிளிர்கின்ற மிகவும் புனிதமான நல்பாரத பூமியாகையால் உலக மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உலகத்திற்கே வழிகாட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு  ஒவ்வொரு பாரதப் பிரஜைக்கும் உண்டு.. இன்றைக்கு நாம் காண்கின்ற இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாட்டு எல்லைகள் எல்லாம் மனித சமுதாயத்தால் உருவாக்கப்பட்ட மனிதக் கோடுகள்தாம்! உலகெங்கும் ஜீவன்கள் உண்டு, கழித்து, உறங்குவது ஒரே மாதிரிதானே! பின் ஏன் இந்த மாயைக் கோட்டாலான நாட்டு எல்லைகள்? சனாதன பூமியாக, பூமியனைத்தும் ஒரே நாடாக, இறை சாம்ராஜ்யமாக ஒரு யுகத்தில் விளங்கிய கர்ம பூமி இது! தன்னுடைய செல்வம், தன்மக்கள், குடும்பம், நாடு என்ற தன்னல எண்ணங்கள் எல்லாம் மறைந்து நாம் யாவரும் இறைவனுடைய குழந்தைகளே என்ற புனித எண்ணம் விளைந்து திளைத்த ஒரே நாடே ஆரம்ப உலகின் சனாதன பூமியாகும்.

5. புரியாத அரிய புண்ணியக் கணக்கு

சுயம்பு மூர்த்தியுள்ள திருத்தலங்களுக்குச் சென்று மூன்று முறை அடிப்பிரதட்சிணமாக வழிபட்டு வருவீர்களேயானால்  மூன்று நாட்கள் நன்முறையில் வாழ்வதற்கான புண்ணிய சக்தியை உங்கள் உடலில் பெற்று வருகின்றீர்கள். ஒரு முறை சுயம்பு மூர்த்தியைத் தரிசித்தாலே முக்தியைப் பெற்றுவிடலாம் என்று இருக்கின்றபோது மூன்று நாட்களுக்கான புண்ணிய சக்தி என்று இறைப் பரம்பொருட் தன்மையைக் குறைத்து மதிப்பிட்டு செய்யலாமா? சுயம்பு லிங்க மூர்த்தி தரிசனமே முக்தியைப் பெற்றுத் தரும் என்பது வேத உண்மையே! ஆனால் சுயம்புலிங்க மூர்த்தியைத் தரிசித்த பிறகு இறை தரிசனம் பெற்ற இராவணனைப் போல முறையற்ற காமச் செயல்களிலும், தீய காரியங்களிலும் ஈடுபட்டால் முக்தியா வந்து கதவைத் தட்டும்! பாவச் சுமைகள் தாமே தலையைக் குனிய வைக்கும்!

ஸ்ரீவெள்ளை வேம்பு மாரியம்மன்
திருத்தலம் திருவாவடுதுறை

எனவே கடவுள் வழிபாடு ஒருபுறம், தீச்செயல்கள் ஒரு புறம் என்று போலித்தனமான இரட்டை வேட வாழ்க்கை வாழுகின்ற போதுதான் இந்த 3 நாள் புண்ணிய சக்தி என்ற விகிதாச்சாரக் கணக்கு தோன்றுகின்றது.. ஆனால் மூன்று நாட்களில் நன்முறையில் வாழ்வதற்கான புண்ணிய சக்தியுடன் இல்லறத்திற்குத் திரும்புகின்ற நீங்கள், உங்களைச் சுற்றி நிறைந்திருக்கின்ற எதிர்வினைச் சக்திகளை எதிர்த்து நிற்கின்ற அளவிற்கான மனோதிடத்தையோ, வைராக்கியத்தையோ பெறவில்லையாதலாலும் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கான முயற்சிகளிலேயே உங்களுடைய பெரும்பான்மையான புண்ணியச் சக்தி கழிந்து விடுவதாலும் அடுத்த மூன்றே நிமிடங்களில் உங்களுடைய புண்ணிய சக்தி முற்றிலுமாகக் கரைந்துவிடுகின்றது. மேலும் உங்களை நம்பி இருக்கின்ற பெற்றோர்கள், குடும்பத்தினர்கள், உறவினர்கள் நண்பர்களுக்காகச் சிறிது புண்ணிய சக்தியை நீங்கள் செலவழித்தாக வேண்டும். நீங்கள் அலுவலகத்திலோ, தொழிற்சாலையிலோ நன்முறையில் நிலைத்து நிற்பதற்குச் சிறிது புண்ணிய சக்தி வேண்டும்.. உங்கள் குடும்பத்தாருடன் நீங்கள் மூன்று வேளையும் நன்றாக உண்டு, கழித்து உறங்கிப் பணி புரிவதற்கும் சிறிது புண்ணிய சக்தி வேண்டும்.. எனவே நீங்கள் ஆலயத்திற்குச் சென்று சம்பாதித்து வருகின்ற புண்ணிய சக்தி பல விதங்களில் சில நிமிடங்களில், மணித் துளிகளில் செலவழிந்து விடுகின்றதே..! நீங்கள் ஆலயத்தில் இருந்து, அலுவலகத்தில் இருந்து எந்த வாகனத்திலும் சிக்காது வீட்டிற்கு நன்முறையில் திரும்புவதற்கே நிரம்பப் புண்ணிய சக்தி தேவைப்படுகின்றதே!

6. வெள்ளை இலை வேம்புத் தல விருட்சம்

பலவிதமான தோல் சம்பந்தப்பட்ட நோய்களால் வாடுவோர் தம்முடைய பூர்வ ஜென்மக் கர்ம வினைகளால் மட்டுமே இத்தகைய நோய்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மனதார உணர்தல் வேண்டும்.. மிருகங்களை வதைத்துத் தோலைப் பதப்படுத்துதல், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் வசைபாடி தீய காரியத்தைச் செய்தல், பிறருக்குரித்தான ஆடைகளை ஏமாற்றிப் பெறுதல், வியாபாரத்தில் ஆடையின் அளவைக் குறைத்தல், குறைந்த ஆடைகளை அணிந்து பிறரைக் காமவயப்படுத்துதல் போன்ற பலவிதமான கர்மவினைகள் தாம் தோல் நோயாக மாறுகின்றன. ஆனால் மனித மனம் இவற்றை ஏற்குமா? இன்னும் பல காரணங்களும் உண்டு.. எனினும், இறைவனிடம் தனக்குரிய கர்ம வினைகளையே தாம் அனுபவிப்பதாக உணர்ந்து பிரார்த்தித்துத் தோலுடன் கூடிய கனி வகைகளை (சாத்துக்குடி, ஆரஞ்சு, மாம்பழம்) மற்றும் ஓட்டு வகை உணவுப் பண்டங்களை (தேங்காய், நிலக்கடலை, விளாம்பழம்) கும்பகோணம் திருவாலங்காடு அருகில் மஞ்சள் ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் ஸ்ரீவெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் படைத்து ஏழை மக்களுக்குத் தானமாக அளித்து வந்தால் அம்மனின் அருளால் நிச்சயம் தோல் வியாதிகள் தீர்வு பெறும்.. மஞ்சள் ஆற்றங்கரையில் நீராடுவது சிறப்புடையது. ஆற்றில் நீர் வற்றிப் புதுத் தண்ணீர் திறந்து விடப்படுகின்றபோது ஸ்ரீவெள்ளை வேம்பு மாரியம்மன் சந்நிதியிலிருந்து அந்த ஆண்டில் முதன் முதலாக நீர் புரண்டு வருகின்ற புனிதக் காட்சியைப் பெறுவோருக்குப் பல அற்புத நல்வரங்கள் அம்மனின் அருளால் கிடைக்கக் காத்திருக்கின்றன... இரவோ பகலோ எந்த வாரமோ, எந்த நாளோ இறைப் பெரும் பாக்கியம் உள்ளோருக்குத் தான் புத்தாற்று நீர் வாருணக் காட்சி இங்கு கிட்டும். சென்னை அருகிலும் திருவாலங்காடு உள்ளது.. ஆனால் இங்கு நாம் குறிப்பிடுவது கும்பகோணம் அருகில் உள்ள திருவாலங்காடு ஆகும்.

7. கட்டிட , நிலப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஸ்ரீபூமீஸ்வரர்

இப்பூவுலகில் சுயம்பு லிங்க மூர்த்திகள் நிறைந்த பாரதத் திருநாட்டில் நம்முடைய தெய்வத் தமிழ்நாட்டில் தான் அதியற்புத சுயம்பு லிங்க மூர்த்திகளும், சுதை மூர்த்திகளும், புற்று மண்ணாலான மகா தெய்வீக சக்தி நிறைந்த சுயம்பு லிங்க மூர்த்திகள் தாம் நாம் பூமிக்கு இழைக்கின்ற அநீதிகளுக்கு தக்க பரிகாரத்தைப் பெற்றுத் தருபவையாம்.. குறிப்பாக ஹரிகேன் போன்ற அதிபயங்கர புயல், எரிமலை மற்றும் இயற்கை சீற்றங்களுக்குத் தக்க பரிகாரங்களையும் அதியற்புத நிவாரணங்களையும் தருவதாகும்... புதுக்கோட்டை பொன்னமராவதி சாலையில் குழிபிறை மார்க்கத்தில் உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீபூமிநாதேஸ்வரராக, ஸ்ரீபூமீஸ்வரராக சிவபெருமான் அதியற்புத லிங்கமூர்த்தியாய் அருள்பாலிக்கின்றார்.. பக்தர்களுடைய அசிரத்தையால் இங்கு ஆறுவேளையும் பூஜா வழிபாடுகளை நிகழ்த்த முடியாமல் உள்ளன... உலக மக்கள் யாவரும் அவரவருடைய நாட்டில் பூமிக்கு இழைக்கின்ற அநீதிகளுக்குத் தக்கப் பரிகாரத்தைத் தரவல்ல சுயம்பு லிங்க மூர்த்தியாம் ஸ்ரீபூமீஸ்வரர் நம் தமிழ்நாட்டில் ஒரு மூலையில் ஓர் ஆவுடைத் துண்டுடன் மிக எளிமையான முறையில் சர்வ சக்திகளையும் கொண்டு அருள்பாலிக்கின்றார் என்றால் அவர் தம் கருணை கடாட்சத்தைத் தக்க வழிபாடுகளின் மூலம் பெறாதது நம் பிழை தானே!

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ மூர்த்தி
செவலூர்

பூகம்பங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும், நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கும் மக்களுக்கும் நல்ல நிவாரணங்களையும் மன சாந்தியையும், நல் வாழ்க்கையையும் பெற்றுத் தருவதற்கும் செவலூர் ஸ்ரீபூமீஸ்வர மூர்த்திக்கு ஸ்ரீவாஸ்து நாட்களிலும், பூமிக்குரித்தான செவ்வாய்க்கிழமைகளிலும், பூமாதேவி சமேத பெருமாளுக்குரித்தான புதன் கிழமைகளிலும் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் ஆகியவற்றுடன் புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி கலந்து ஸ்ரீபூமீஸ்வர லிங்க மூர்த்திக்கு தைலக்காப்பிட்டு பூமியின் கீழ் விளையும் உணவுப் பொருட்களை (கிழங்கு வகைகள், இஞ்சி போன்றவை) படைத்து ஏழைகட்குத் தானமாக அளித்து வந்தால் பூகம்பத்தில் இறந்தோர்க்கு நற்கதியும் அவருடைய சந்ததியினருக்கு நல்ல நிவாரணங்கள் கிட்டி நல்வாழ்வும் அமையும்.. மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி! கருணைக் கடாட்சத்தைப் பொழிபவர். நாம் தாம் தக்க பாத்திரங்களாகிய ஆறு கால வழிபாடுகள், பிரதோஷ வழிபாடுகள், வாஸ்து பூஜை வழிபாடுகள் போன்றவற்றை மேற்கொண்டு உலகைக் காப்பதற்கான சமுதாய பூஜைகளை நன்முறையில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்திட்டு திருஅருட்கடாட்சத்தைப் பெற்றிட வேண்டும்.. ஸ்ரீவாஸ்து நாட்களில் ஸ்ரீவாஸ்து பகவானுக்கும், ஸ்ரீபூமாதேவிக்கும் ப்ரீதியான வெற்றிலை மாலைகளை நிறையப் படைத்துச் சுண்ணாம்பு, பாக்கு, மஞ்சள், கருநீல நிறப் புடவை ரவிக்கையுடன் ஏழ்மை நிலையிலுள்ள இல்லறப் பெண்களுக்குத் தானமாக அளித்து வந்தால் தடைபட்டுள்ள நில சம்பந்தமான கோர்ட் விவகாரங்கள், நின்று போய் உள்ள கட்டிடங்கள் நன்முறையில் தீர்வு பெற்று நிலமும் கட்டிடமும் முழுமை பெறும்.

8. தேவர்களுக்குப் பகிர்ந்தவுடன் அமிர்தம் தீர்ந்து விட்டது என எண்ணாதீர்கள். விநாயகர்தாம் அமிர்தத்தைச் சங்கில் இட்டு சங்கு விநாயகராக அமிர்தமயமான தெய்வீக பாக்கியங்களைத் தருகின்றார். சங்கு விநாயகரை வைத்துப் பூஜிப்பது நிறைந்த ஐஸ்வர்யத்தையும் லக்ஷ்மி கடாட்சத்தையும் குபேர சம்பத்தையும்  சௌபாக்யத்தையும் பெற்றுத் தரும். இந்நான்கும் கூடினால்தான் செல்வம் நிலைத்து நிற்கும். இதற்கு அருள்பாலிப்பரே சங்கு விநாயகராவார். பூலோக அமிர்தம் என்று சொல்லப்படுகின்ற தேனைச் சங்கில் நிரப்பி அபிஷேகம் செய்து புது ஆடைகளைப் பிள்ளையாரப்பனுக்குச் சார்த்தி வந்தால் மூக்கு மற்றும் தொண்டை நோய்களால் அவதியுறுவோர் நன்முறையில் நோய் நிவர்த்தி காண்பர். குரல் வளம் மலிந்தமையால் பாடும் வாய்ப்பினை இழந்து அவதியுறுவோர் சங்கு விநாயகருக்கு (காஞ்சிபுரம்) தேனால் அபிஷேகம் செய்து வந்தால் நன்முறையில் இனிமையான குரலைப் பெறுவர். மேலும் இசைத்துறையில் இருப்போர் நன்முறையில் கீர்த்தி பெறுவதற்குச் சங்கு விநாயகர் வழிபாடு மிகவும் உதவிடும்.. பலவிதமான அற்புத தெய்வ வழிபாட்டுச் சங்குகள் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் கிடைக்கும்.

9. அருந்ததி தேவியும் வசிஷ்டர் மாமுனியும் ஐவிரல் சங்கு பூஜை முறைகளில் தேர்ந்தவர்கள்! இவர்தம் உத்தம சங்கு பூஜைகளின் போது சங்கிலிருந்து தெரிக்கின்ற பால் துளிகள் கடல்., ஆறுகளில் சேர்ந்து ஐவிரல் அமுதப்பால் சங்காகப் பெருகின! மேலும் இவை காமதேனுவின் புனிதம் பட்டமையால் இவற்றில் பல பசுமடிக் காம்புச் சங்குகளாகப் பரிணமித்தன! மகரிஷிகளின் விரல் பதிகங்கள் படிந்த இந்தச் சங்கானது அபிஷேகத்திற்கு மிகவும் உத்தமமானதாகும். யோக சித்திக்குப் பெரிதும் உதவும்! திங்கட்கிழமை தோறும் இதனால் ஸ்வாமிக்குப் பசும்பால் அபிஷேகங்கள் செய்திடில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும்! செவ்வாய்க் கிழமை பசும்பால், குங்குமம், பச்சரிசி கலந்து அபிஷேகம் செய்திடில் திருமண தோஷங்கள் நிவர்த்தியாகும்.. இவ்வாறாகச் சங்கு பூஜை பலாபலன்கள் நிறைய உண்டு. திருஅண்ணாமலைத் திருமேனியிலிருந்து உண்ணாமுலை அம்பிகை மலையின் மடிக்காம்பு தரிசனங்களிலிருந்து பசு மடியின் பாண லிங்க வடிவங்களாக உருவகித்து அதற்குச் சங்கால் கோடானு கோடி புண்யத் தீர்த்தங்களை நிரப்பி அபிஷேகம் செய்தனள், இதுவும் பசுமடிக் காம்பு வகையைச் சேர்ந்ததாம்! சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவில் இவ்வகையிலான அரிய அபிஷேக சங்குகள் கிடைக்கும்..!

10. ஒவ்வொரு தவறுக்கும், பாவச் செயலுக்கும் ஆண்டவன் பல பிராயச்சித்த முறைகளை வைக்கின்றான். ஆனால் பிராயச்சித்தங்கள் செய்து விட்டு மீண்டும் தவறுகளைத் தொடர்ந்தால் அந்த பிராயச்சித்தங்களுக்கும் பலனே இல்லாமல் போய்விடும், அவை மீண்டும் சம்பந்தப்பட்டவருக்குப் பலனும் தராது! பரிகார பூஜைகள் நன்கு பலனளிக்க வடக்கு நோக்கி காவிரி ஓடுகின்ற அபூர்வ தலமான கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் ஸ்ரீதுர்கை தேவி விசேஷமாக அருள்புரிகின்றாள்.

11. உத்தராயண புண்ய கால மாசி மாதம்!

தை முதல் ஆனி வரை உள்ள ஆறுமாத கால உத்தராயணப் புண்ய கால மாசி மாதத்தில் எத்தனையோ சிறப்பு அம்சங்கள் பதிந்துள்ளன. மஹா சிவராத்திரி, மாசி மகம், மாக ஸ்நானம், காம தகனப் பண்டிகை போன்ற விசேஷ தினங்கள் நிறைந்த புனிதமான மாதமிது! உபநயனமாகிய பூணூலைத் தரிப்பதற்கு உத்தமமான புனித காலமாக விளங்குவது மாசி மாத வளர்பிறை நாட்களாகும். மாசி மாத நாளில் எண்ணற்ற புண்ய நதிகள், தேவ மூலிகா பந்தனங்களையும், விசேஷமான கந்தர்வ லோக சமித்துகளையும், காமதேனு லோகத்திலிருந்து வெண்ணெய், நெய் போன்றவற்றின் சாராம்சங்களையும் தாங்கி வந்து வருடந்தோறும் கும்பகோணம் மகாமகக் குளத் தீர்த்தத்தில் சேர்க்கின்றனர்! இங்கு மாசி மகத்தன்று புனித நீராடுதலால் காம வயப்பட்ட குற்றங்களுக்குத் தக்க பரிகார வழிமுறைகள் கிட்டும்.. பொதுவாக முறையற்ற காமத் தீவினைகளை நிவர்த்தி செய்யும் பூஜைகளைக் கொண்ட சிறப்பான மாசி மாதமிது.. மேலும் காமத் தீவினைச் சக்திகளை வென்றிடவே இவ்விதழில் முறையற்ற காமவினைகள் சூழும் நாளை வகைப் படுத்திச் சில பரிகார முறைகளையும் காணலாம்! நன்கு கவனித்து செயலாற்றி முறையற்ற காமத்தின் தீய சக்திகளிலிருந்து தற்காத்துக் கொண்டிடுக!

English Edition of Sri Agasthia Vijayam – A divine bead in the Siddhopanishad Mala! – A gateway to Siddhopanishad!

By God’s Grace we have commenced from January 2001, the English Edition of your favourite Spiritual Magazine Sri Agasthia Vijayam.

Brimming with enriched Siddha divine heritage right on the foot steps of the Tamil version of the Sri Agasthia Vijayam, this magazine is 100% divinely source – coded! Please associate yourself fully in this divine mission for dissemination of Siddhopanishad in the universe as a whole for the pristine purity of the worlds.. Please enlighten yourself by browsing this spiritual digest. Activate your millions of dormant brain cells the divine way!

விசேஷ நாட்கள் : - பௌர்ணமி  8.3.2001வியாழன் பின்னிரவு 2.21 மணி முதல் 9.3.2001 வெள்ளி இரவு 10.53 வரை திருக்கணித பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள் : 9.3.2001

நித்ய கர்ம நிவாரணம்

1.3.2001 – புனுகு, ஜவ்வாது, சாம்பிராணித் தைலம் சார்த்தும் இறைவனுக்குப் புனுகு, ஜவ்வாது சட்டம் , சாம்பிராணித் தைலம் சார்த்துவதால் ஓடிய பொருள் தேடி வரும்... ( திருஎறும்பூர், திருவொற்றியூர், திருக்கருகாவூர், கும்பகோணம் கும்பேஸ்வரர்...)

2.3.2001 – காதலித்து ஏமாற்றியது – ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி – காம தகன விரதம் பூணுதலால் தக்க பிராயச்சித்த பரிகாரம் தேடலாம்.

3.3.2001 – இன்று உளுந்து போண்டா தானம். வெளியில் சொல்லாமல் பதுக்கி வைத்த ரகசிய நோய்களுக்கு மருந்து காண வழி பிறக்கும் நாள்.

4.3.2001 – கொட்டை அடிக்காத (uncastrated) காளை மாடுகளுக்கு வயிறார உணவு அளித்திடில் சந்ததி விருத்தியாக வழி செய்யும்.

5.3.2001 – திடீர்ப் பணக்காராய் மாற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இன்றிலிருந்து 12 வருடங்களுக்குக் குறையாமல் மாப்பிள்ளை கணபதி என்னும் தன லாப கணபதி வழிபாட்டைத் துவங்குதல் நலம் தரும்.

6.3.2001 – சமாதி வைத்து அடக்கம் செய்த முன்னோர் சமாதிகளை இன்று தூய்மைப்படுத்தி, சுண்ணாம்பு பூசி லிங்கத்திற்கு காப்பிட்டு அன்னதானம் செய்து வருதல் நலம்.

7.3.2001 – தோல் வாத்தியம் செய்பவர்கள் இன்று மிருகங்களின் தோலை வாங்கிப் பயன்படுத்தாமல் இருத்தல் நலம்! தோல் பிராணிகளின் முன்னோர்கள் கூடும் நாளிது! இவர்களுடைய பித்ரு லோக சஞ்சார சக்தி அபரிமிதமாக உள்ள நாள் ஆதலால் மிகுந்த கவனம் தேவை.!

8.3.2001 – இன்று தந்தமில்லா யானைகளுக்கு உணவிடுதலால் தகப்பனார் சேர்த்து வைத்த பணத்தை ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் புத்தி மாறும்!

9.3.2001 – தாய்மார்களே! பெண் குழந்தைகள் இன்று உங்களிடம் பக்குவமாகப் பேசித் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் நாளிது. ஆகவே தாய்மார்கள் இன்று பெண் குழந்தைகளிடம் கருணை காட்டி ஏமாந்து விடாதீர்கள்!

10.3.2001 – பிள்ளைகள் கையில் வியாபாரத்தில் உள்ள சுய அதிகாரத்தை இன்று தராமல் இருப்பது நல்லது.

11.3.2001 – தம் குலமின்றிப் பிற மணம் புரிந்தோர் இன்று வீட்டிலிருக்கும் பாட்டிமார்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! காழ்ப்பு, வெறுப்பு உணர்ச்சிகள் பொங்கும் நாள்! கவனம் தேவை! ஏவல் சக்திகள் தலை தூக்கும் நாள்!

12.3.2001 – கொல்லைப் புறக் காதல் நடுத்தெருவுக்கு வரும் நாளிது.. காமக் குற்றங்கள் மிகும் மாதம் ஆதலின் காம தகன பூஜையே முறையற்றக் காமத்தைத் தடுக்கும்.

13.3.2001 – வீட்டில் சமையல் மற்றும் பல பணிகளுக்காக அமர்த்தப்பட்டிருப்போர் இல்லப் பெண்களுடன் முறையற்ற காமத் தொடர்பு கொள்ள வாய்ப்புள்ள நாளிது.. மதி மயங்கும் நாளாதலின் ஆபத்து மிக அருகிலேயே உள்ளது என்று உணரவும்! காம தகன பூஜையை முறையாகக் கடைபிடிக்க வேண்டிய மாதம்!

14.3.2001 – வேதம் படித்தவர்கள் விபரீதமாகத் தவறான காரியங்களில் இறங்குவதற்கு வாய்ப்பு அதிகம்! மனம் கட்டுப்பாடின்றித் திரியும் நாள்! கவனம் தேவை! காம தகன பூஜைதாம் மனதை நல்வழிப்படுத்தும்!

15.3.2001 – கோயிலுக்குச் செலுத்த வேண்டிய பிரார்த்தனையை நீண்ட நாள் செலுத்தாதவர்கள் இன்று செலுத்தி விடுவது நல்லது.

16.3.2001 – கர்ப்பம் கலைக்கப்பட்ட உயிர்கள் கர்ப்பம் கலைத்தவர்களைப் பலி வாங்கும் நாளிது. சிவன் கோயிலில் தஞ்சம் புகுவதுதான் நலம்.

17.3.2001 – தமக்கையிடம் பொய் சொல்லி பணத்தை வாங்கி ஏமாற்றிய அண்ணன்  ஏமாற்றிய தொகையைத் திருப்பித் தர வேண்டிய நாளிது! ஏமாற்றிடில் பலவிதமான துன்பங்களையும், மன நோய்களையும் அனுபவிக்க வேண்டி வரும்!

18.3.2001 – திருமணம் ஆனோர் எதிர்பாராத விதமாக தான் இளமையில் காதலித்தவரை / காதலித்தவளை சந்திக்கும் நாளிது! தயவு செய்து கணவனிடத்திலோ/மனைவியிடத்திலோ கூறாதிருப்பது நல்லது.

19.3.2001 – கம்ப்யூட்டரில் வேலை செய்யும் ஆணும், பெண்ணும் இன்று கவனமாய் இருத்தல் நலம். புதிய காதல் பிறந்து பெருத்த வேதனையில் முடிந்து விடும்.

20.3.2001 – வீட்டில் வேலை செய்யும் இளம் பெண்களை வீட்டின் தலைவி பத்திரமாய்க் கண்காணித்தல் நலம்.. இல்லையேல் பணிப்பெண் கணவனுக்கு மனைவியாகி விடுவாள்.

21.3.2001 – வெளியூருக்குச் செல்லும் கணவன்மார்களிடம் சத்தியவாக்கு வாங்கிப் பெண்கள் அனுப்பி வைக்க வேண்டும், “தவறான வழிக்குப் போகக் கூடாது” என்று!

22.3.2001 – இன்று தண்ணீரை விற்கக் கூடாது! தானமாய் அளித்தல் நலம்.

23.3.2001 – ஒய்வு பெற்றவர்கள் (VRS, CRS) தங்கள் பணத்தை ஏமாற்றுபவர்களிடம் கொடுக்கும் நாளிது.. பேராசை பொங்கி வாட்டுகின்ற நாளிது.

24.3.2001 – இன்று லாரி உரிமையாளர்கள் லாரி ஓட்டுநர்கள் கவனமாய் இருத்தல் நலம்.

25.3.2001 – யானைப்பாகர்கள் கோயில் யானைகளை வைத்திருப்போர் கவனமாய் இருக்க வேண்டிய நாளிது.. யானையின் மனோ வேகம் மாறுகின்ற நாளிது.

26.3.2001 – ஓட்டல் தொழிலாளர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படுகின்ற நாளிது.. கவனம் தேவை.

27.3.2001 – Software Companyகளில் துரோகியால் உள் இரகசியங்கள் வெளியே போகும் நாளிது கவனமாய்ப் பார்த்துக் கொள்ளவும்.

28.3.2001 – கணக்குப் பிள்ளைகள், தங்களுடைய முதலாளிகளுடைய காலை வாரிவிடும் நாளிது முதலாளிகளே! கவனம் தேவை.

29.3.2001 – எஸ்டேட்டில் (காபி, டீ, etc..) பணிபுரிபவர்கள் இன்று தனியாக எங்கும் போகக் கூடாது! கவனம் தேவை.

30.3.2001 – பாதாள சாக்கடைகள், மதகு திறப்பவர்கள் போன்றோர் விஷ வாயுவால் தாக்கப்பட சந்தர்ப்பம் உண்டு.. இன்று கவனம் தேவை.

31.3.2001 – வக்கீல்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படும் நாளிது. கவனம் தேவை.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam