கண்ணால் கண்டதும் கூட பொய்த்து விடும், கருத்தோடு பல முறை சுயநலமில்லாமல் யோசி !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

உறக்கத்திலும் உத்தம யோக வாழ்வு

வெள்ளியங்கிரியில் குபேரத் தீர்த்தம் அருகே உறங்கியும், உறங்காமல் உறைந்த பெரியவரிடம் அவரை நன்கு உற்றுப் பார்த்த வண்ணம் இருந்தான் சிறுவன். இவ்வளவு அருகில் அமர்ந்து அவர் கண்களுக்குள் அவன் ஒரு போதும் ஊடுருவியதே கிடையாது. அவரும் அதனை அனுமதித்ததும் கிடையாது.

அவரிடமிருந்து அற்புதமான பொருட்கள், திரவியங்கள் வந்த போது அவை எங்கிருந்து வருகின்றன என அவன் பார்க்கத் துடித்து வியந்ததுண்டு. கோவணத்தின் அரைஞாண் கயிற்றிலிருந்து உலகமே திரளும் அன்றோ! எங்கோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தொலைந்து போன கார்ச் சாவி, காசியில் விட்ட நாணயங்கள், யமுனோத்ரியில் சுனையில் விட்ட அற்புத வெண் தாமரை இதழ்கள் முதல் பலவற்றையும் அவரிடம் காணக் கண்டு வியந்துள்ளான்.

பசியா நிலையும் பசித்த நினைவுகளும்!

“...... ஏண்டா இவ்வளவு நேரமாச்சு! என்னை எழுப்பக் கூடாது? ”

ஆம், பலவிதமான சிந்தனைகளில் லயித்துக் கொண்டு இருந்த சிறுவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை!

டக்கென்று எழுந்த பெரியவர் விறு விறு என்று நடக்கலானார்.

வானில் சுக்கிர கிரகம் மிக மிக அருகாமையில் வெள்ளியங்கிரியில் தெரிந்தது!

திடீரென்று சிறுவனுக்குச் சாப்பாட்டு ஞாபகம் வந்தது. ஆமாம், ஒழுங்காகச் சாப்பிட்டே பல நாட்கள் ஆயிற்றே! சற்றும் பசியே இல்லையே!

விழி கிடைக்குமா
அபய கரம் கிடைக்குமா !

இப்போது தான் சிறுவனுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. வெள்ளியங்கிரி மலையில் நடுவில் “வெள்ளைப் பிள்ளையார் மலைக்குச் செல்லும் வழி!” எனப் பெரியவர் குறித்த இடத்தில், அதர்வணத் தோப்புப் பகுதி ஒன்று வந்தது!

“இதுல பசிக்காம இருக்கறதுக்கான பசியா மூலிகை நோயே வராம இருக்கறதுக்கான காயாரோஹண மூலிகைங்க! இருக்குடா ராஜா”!

“கசப்பான கசப்பு அவ்வளவு கசப்பு, கசந்து, கசந்து வாந்தி கூட வரும்! ஆனா வாந்தி எடுக்காம, ஒரே ஒரு மூலிகை இலையைக் கூடக் குறித்த ஹோரை நேரத்துல தின்னுட்டா... அப்புறம் ஒரு மாசத்துக்குப் பசிக்காது!”

ஆனால் பெரியவர் அந்தப் பசியா மூலிகை எதனையும் தனக்குத் தற்போது தந்ததாக நினைவில்லையே! பின் ஏன் பல நாட்களாகப் பசியே இல்லை!

வழியில் நூற்றுக்கணக்கான மூலிகைகளை அவன் பல நாட்களிலும் ருசி பார்த்ததாலும், அவற்றுள் பலவும் கசந்தாலும்.... அவன் “பசியா மூலிகை தளத்தை அவரருளாலேயே” தின்றானோ!

இதுவும் “பெரியவருடைய திருவிளையாடல்” என்றே சிறுவன் முடிவுக்கு வந்தான்.

வெள்ளைப் பிள்ளையார் மலை

பெரியவர் உறங்குகின்றாரா, இல்லையா என்பதைச் சிறுவனால் சற்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் பூணுவது யோக சயனம் என்பதால், உத்தம நிலைகள் செறிந்த இந்த யோகசுதம், மனிதனின் ஆறறிவுப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட தெய்வீக நிலையைச் சார்ந்ததன்றோ!

இவ்வாறு பன்முறை அவருடைய அதீத (யோக சயன) உறக்க நிலையைக் கண்டு, கண்டு அவன் ஆன்மீகமாக நிறையவே அதிர்ந்துள்ளானே!

“இது தாண்டா வெள்ளைப் பிள்ளையார் மலை!” பெரியவர் திடீரென்று விடிவெள்ளியில் வெள்ளியங்கிரி நடைப் பயணத்தில் அருகில் தெரிந்த பகுதியைச் சுட்டிக் காட்டிக் கூறினார். அதில் ஏறிச் செல்லப் படிகள் சற்றே பள்ளமாகத் தெரிந்தனவே தவிரப் படிகள் சீராக இல்லை!

“கஷ்டப்பட்டு அடைஞ்சாத் தாண்டா கலியுகத்துல எதோட அருமையும் புரிய வரும்!”

ஆனால், வெள்ளைப் பிள்ளையார் மலையின் இரு பக்கமும் மிக, மிக உயரமான மரங்கள் ஓங்கி வளர்ந்து இருந்தது கண்டு அவன் அதிசயித்தான்! இவ்வளவு உயரமான செழுமையான மரங்களை அவன் இதுவரையில் கண்டதே இல்லை!

ஸ்ரீபடேசாகிப் சித்தர் ஜீவாலயம்
சின்னபாபு சமுத்திரம்

ஸ்ரீபடே சாகிப் சமாதியில் சந்தனம் அரைத்து சார்த்த ஓத வேண்டிய துதி
ஓம் மஜும் போட் துத்யாய வித்மஹே
மதிபூரண சந்தன சந்த்ராய தீமஹி
தந்நோ குரு பாத விருட்ச ப்ரசோதயாத்
மூன்றாம் பிறையாகி முக்கண் சுதமாகி
முச்சுடர் பரிமாணம் மூதையர் வழி தாங்கி
ஒன்றாய் புலன் சேர்ந்து ஓதிய சந்தனப் பூ மலர்
நன்றாய் நவின்றேன் நமசிவாய என மகிழம்பூ சாறல்
மறையொலியாய் மாதவனை அகிலம் புகழ் ஓங்கும் அரணே அரண் !

இமய மலையில் உயரமான மரங்களை அவன் பார்த்திருந்தாலும் அவை கூட இவ்வளவு செழுமையாக உயரமாக இல்லை!

மூட்டைப் பழத்தில் முகிழ்த்தத் தீர்க தரிசனம்

சிறுவனுக்குத் திடீரென்று பெரியவருடன் காசிக்கு ரயிலில் சென்ற பயணத்தில், வழியில் பார்த்த உயரமான, ஆனால் அடர்த்தியான மரங்களும் நினைவுக்கு வந்தன. இதை விட இந்தப் “பசித்த நினைவு வரக் காரணமே” அவருடைய குருகுல வாசத்தில் “பழுத்த லீலையே” ஆகும்.

காரணமும் உளதே! அந்த காசி ரயில் யாத்திரையில் வழியில் ஒரு ஸ்டேஷனில் திடீரென்று மூன்று மூட்டைகள் நிறையப் பழங்களை வாங்கி வைத்துக் கொண்ட பெரியவரை வியப்புடன் பார்த்தான் சிறுவன்!

எதற்கு இவ்வளவு பழங்களோ?

உயரமான மரங்கள் திரண்டு வந்த குன்றுக் காட்டுப் பகுதியில் திடீரென்று ரயில் அவ்விடத்தில் நின்றிடவே....

என்னவோ அவருக்காகவே ரயில் விசேஷமாக நின்றாற் போல..

பெரியவர் திபு திபுவென்று விரைவாக மூட்டைகளைத் தலையிலும், இடுப்பிலும் சுமந்து ரயிலை விட்டு இறங்கிக் கொண்டு சிறிது தூரம் வேகமாக நடந்தார். அவரது நடையும், ஏதோ அந்த ஏரியாவே அவருக்கு நன்கு பழகியது போல் இருந்தது!

சிறுவனோ வழக்கம் போல் அவர் பின்னாலேயே ஓடினான்! அவனுக்கோ.... ரயில் திடீரென்று புறப்பட்டு விட்டால் இந்த வனாந்திரத்தில் என்ன செய்வது என்ற அச்சம் வேறு பற்றிக் கொண்டது!

சற்று மரங்கள் அடர்ந்த பகுதி வந்தவுடன் .....

பெரியவர் நின்று மூட்டைகளைப் பிரித்துக் கொட்டிட....

எங்கிருந்தோ வந்த நூற்றுக் கணக்கான பஞ்ச வர்ணக் கிளிகள் அவற்றை மனதார உண்டு அவரை வாழ்த்திச் சென்றன. அவற்றோடு கிளி பாஷையில் பேசிய பெரியவர் திரும்பி வர நெடுநேரம் ஆயிற்று!

பிறகு சாவகாசமாக நடந்து வந்து ரயிலில் பெரியவர் ஏறிட...

சொல்லி வைத்தாற் போல் அடுத்த விநாடியே ரயில் புறப்பட்டு விட்டது கண்டு சிறுவன் அதிர்ந்து போனான்.

இக்காட்சியை அவன் வாழ்வில் முதன் முதலாகக் கண்டதோடு சரி,  அதன் பிறகு இன்றளவும் அவ்வளவு பஞ்சவர்ணக் கிளிகளையும் திரும்பவும் பார்க்க முடியவில்லை! இதன் பிறகு திருஅண்ணாமலையிலும் அவற்றுள் சிலவற்றை ஒரு பௌர்ணமி நாளில் தரிசித்தான்!

மற்றொரு இரயில் யாத்திரையில்....

இடையில் ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்ற போது....

மேல் பெர்த்தில் “பெரியவர் உறங்குகின்றாரே, அவரை எழுப்புதல் கூடாது!” என்ற நல்ல எண்ணத்தில் அவன் ரயில் பெட்டியை விட்டுக் கீழிறங்கி உணவு, பழங்களை வாங்கச் சென்றான் சிறுவன்! ஆனால் அவற்றை வாங்கிச் சில்லறை பெறத் தாமதமானதால் அவன் சற்றுத் தாமதித்து நின்றிட...

சிறிய ரயில்வே ஸ்டேஷன் ஆதலால் அதற்குள் ரயில் புறப்பட்டு விடவே... அவசரம் அவசரமாக, அதே ரயிலில், கண்ணுக்கு எதிரில் நகர்ந்த ஏதோ ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறிக் கொண்டான் சிறுவன்., நல்ல வேளை, பெரியவர் இருப்பது S-3 பெட்டி என்பதைத் தெரிந்து கொண்டிருந்தமையால் அடுத்த ஸ்டேஷன் வந்ததும் இறங்கிச் சென்று மாறிக் கொள்ளலாம் என்று எண்ணி இருந்தான்.

ஆனால் அடுத்த ஸ்டேஷனோ சீக்கிரமாக வருவது போல் தெரியவில்லை., ரயில் ஓடுகிறது., ஓடுகிறது.. ஓடிக் கொண்டே இருக்கிறது.

நேரம் ஆக ஆகச் சிறுவன் மிகவும் பயந்து போய் வெல வெலத்தும் போனான். நடுவில் டிக்கட் பயம் வேறு! டி.டி.ஆர் திடீரென்று வந்து விட்டால்....

மிஹிர மாமுனி

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம் மிஹிர மாமுனி அருணாசல சிவராத்திரி மஹிமை

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில் நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

யாக்ஞவல்கியர் மகத்தான சூரிய மண்டல மாமுனி என நாமறிவோம்! சாட்சாத் சூரிய பகவானிடம் இருந்தே நேரில் மந்திர உபதேசங்களைப் பெற்ற உத்தம மஹரிஷி! ஞாயிறு தோறும் குறித்த ஹோரையில் அருணாசலத்தைக் கிரிவலம் வரும் அருள்வள்ளல்! இவரிடம் சிஷ்யப் பரிபாலனம் கொள்ள விழைந்தார் மிஹிர மாமுனி எனும் உத்தமத் துறவிப் பெருந்தகை!

“யாம் எம் வாய் திறவாது மனதினுள் இருத்தியே மந்திரங்களை, ஏனையவற்றை உபதேசிப்போம். இவ்வாறே உனக்குக் குருகுல வாசம் அருள்தல் வேண்டும் என அடியேனுக்கு இறைவனின் திருக்கட்டளை! இதற்கானச் சத்குருவின் மனதிலிருந்து கிரகிக்கும் ஆற்றலைச் சூரிய மூர்த்தியே அளிக்க வல்லார்!” எனக் கூறினார். அப்போது மிஹிர மாமுனி, “இதுவே இறைச் சித்தம் போலும்!” என எண்ணி மௌனமானார்.

மனதினுள் மௌன குரு பீடம்!

சத்குருவாம் யாக்ஞவல்கியர் அடிக்கடி சூரிய மண்டலத்திற்குச் செல்பவர் ஆதலாலும், வாய் திறவாது உபதேசிப்பதெனில் பாடங்களில், மந்திரங்களில் விளக்கங்கள் பெற என் செய்வது? எங்கு அவரைச் சந்திப்பது? ஏனெனில் பிறருக்கு அவர் குருவாய் மொழியாய் பாடம் உரைக்கையில் ஆங்கே மிஹிர மாமுனி இருக்கலாகாதே!

எனவே அவர், “மிஹிரா! யாம் நின்னைச் சந்திக்கும் போது அறுபது நாழிகையும் இடைவிடாது மனதினுள் பாடங்களை அளிப்போம்! நீதான் அடியேனின் மனதில் இருந்து நன்கு கிரகித்துக் கொள்ள வேண்டும். இதற்கான ஞானக் கிரணங்கள் மூலம் மனதில் இருந்து கிரகிக்கும் ஆற்றலைச் சூரிய மூர்த்தியிடம் இருந்தே பெறுதல் கைகூடும்!” எனவும் உரைத்தார்.

“அடியேனுக்கென இறையருளால் அமைந்த ஆயிரமாயிரம் சிஷ்யர்களில் இத்தகைய அபூர்வமான நியதிகளுடன் நின் சிஷ்ய பாவனம் அமைவது அடியேனுடைய பெரும் பேறே! எனவே, எவ்வித சந்தேகமும் எழாதவாறு தெளிவாகத் திறம்பட மனதினுள் குருகுலம் வாசம் நிகழ்த்திட, நாமிருவரும் சேர்ந்து அருணாசலக் கிரிவலம் வரும் வகையில் இறைவன் வழிவகைகளை அளிப்பார்!“ எனவும் தெளிவுடன் உரைத்திட்டார்!

இதன் பிறகு மிஹிர மாமுனிக்கு மட்டுமாக இறை நியதிக்குக் கட்டுப்பட்டு சிஷ்யப் பரிபாலனத்தில் மௌனியானார் யாக்ஞவல்கிய மஹரிஷி! அதன் பிறகு ஒரு போதும் மிஹிர மாமுனியுடன் அவர் உரையாடலாகாது என்பதன்றோ இறைஆணை!  மனமும் மனமும் வாய் திறவாது எவ்வளவும், எந்நேரமும் பேசிடலாமாம்! பார்த்தீர்களா இறைவனின் திருவிளையாடல்களை? உத்தமத் துறவிகளுக்கே இவ்வாறெனில் நாமெல்லாம் எந்த மூலைக்கு?

மௌனப் பெரும் புலத்தார்!

அன்று முதல் இன்றும், என்றுமாய், மிஹிர மாமுனியுடன் ஒரு வார்த்தை கூடப் பேசாது மஹா குரு மௌனியாய் உறைகின்றார் யாக்ஞவல்கிய மஹரிஷி! ஒரு புறம் இறைவனின் திருவிளையாடல் என்று எண்ணினலும், மறுபுறத்தில் ‘மிஹிர மாமுனிக்குப்’ பெரும் சோதனை அன்றோ என்று உங்களுக்குத் தோன்றுகின்றது அல்லவா!

ஏனைய ஆயிரமாயிரம் சிஷ்யர்களுடன் நன்கு அளவளாவி மந்திரங்களை உரைக்கும் வண்ணம் யாக்ஞவல்கியரின் குருகுலப் பர்ண சாலை துலங்கிட, மிஹிர மாமுனிக்கு மட்டும் ஏனிந்த (சத்குருவின்) மௌனக் கோலமோ? யாரறிவார் இறைவனின் தேவ ரகசியங்களை?

மிஹிர மாமுனியும் தாம் வரும் போதெல்லாம், தமக்காக இறைநியதியால் யாக்ஞவல்கியர் “மௌனம்” பூண்டு மனதினுள் பாடங்களை நிகழ்த்த வேண்டி இருந்தமையால், அவருக்கு இடையூறின்றி இருக்கவும், தாம் சந்திக்கையில் சத்குருவின் முழுமையான ஞானப் பாடங்களை விரைவில் கற்றுச் செறிந்திடவும், பல அரிய தவங்களைப் பூண்டார். ஏனெனில் உடனடியாக அக்னிக் கோளமான சூரிய மண்டலத்தை அடைவது எளிதல்லவே!

மேலும் சத்குருவாம் யாக்ஞவல்கியர் அடிக்கடி சூரிய மண்டலத்திற்குச் செல்பவர் ஆதலாலும், மிஹிர மாமுனி, யாக்ஞவல்கியர் செல்லும் பல லோகங்களுக்கும் அவருடன் கூடவே செல்லும் பாக்யமும் கிட்டியது!

வாய் திறவாது உபதேசிப்பதெனில் பாடங்களில், மந்திரங்களில் விளக்கங்கள் பெற என் செய்வது? இதற்கும் யாக்ஞவல்கியரே அருமையான விடை தந்தார்!

ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் தவசிமடை

பூமியில் பழுத்தப் புண்ணிய பூசனைகள்!

மிஹிர மாமுனியும், யாக்ஞவல்கியர் ஓதும் மந்திரங்களை, எத்தகைய சூரிய மண்டலங்களின் கடுமையான உஷ்ண நிலைகளிலும் தொடர்ந்து கேட்டு, கிரஹித்து சத்குருவுடன் எண்ணற்றப் பல விண்ணுலக மண்டலங்களுக்கும் சென்று பல்வகையான அனுபூதிகளைப் பெற்றும் இவற்றின் பலாபலன்களை அருணாசல மலையின் பல முகடுகளிலும் பதித்து வைத்தார்.

சத்குருவின் மனதில் புலர்வதையே கிரஹித்து ஞானப் பூர்வமாக அறிந்து, அனுபூதிகளை அடையும் பலத்த மனோ வைராக்கியத்தைப் பூண்டு தவத்தில் ஒழுகினார் மிஹிர மாமுனி, அனைத்து மூன்றாம் பிறைச் சந்திரத் தரிசன நாட்களிலும், காலமறியாது உறைந்து வரும் சித்தர்கள், மஹான்களின் ஜீவாலயங்களிலும் அன்றும் இன்றுமாய்க் கலியுகத்திலும் வழிபடுகின்ற உத்தம மஹரிஷி! திண்டுக்கல் அருகே தவசி மடை ஸ்ரீமஹாலிங்கேஸ்வரர் சிவாலய வளாகத்தைச் சுற்றி இருக்கும் பரத்வாஜ மேடு ஆஞ்சநேயப் புழுதி வனம் போன்ற பகுதிகளில் மற்றும் இங்கு சூக்குமமாக பூமியடியிலும் நிறைந்திருக்கும் ஜீவாலயங்களில் தவம் பூண்டு அருள்பவர்.

யாக்ஞவல்கியர் உரைத்தவாறு ஆதிசூரிய மண்டலத்தில் கதிரவ மூர்த்தியைத் தரிசித்து ஆதவக் கிரண வைராக்யச் சித்தமும், யோக சித்திகளும் பெறுவதற்காக, தக்க சூரிய நட்சத்திர நாள் அமைவதற்குப் பல்லாண்டுகள் ஆயின. அதுவரையில் மிஹிர மாமுனியோ பல சூரியத் தலங்களிலும் செம்மையாக வழிபட்டு வந்தார். யாக்ஞவல்கியரோ குறித்த சூரிய நட்சத்திர நாளில் அவர் சூரியக் கோள உஷ்ணத்தைத் தாங்குமளவில் சீதளக் குளிகைகளை அவருக்காகவே வைத்திருக்க, மிஹிர மாமுனியோ தாம் 1008 சூரிய பூஜைத் தலங்களில் ஆற்றியத் தவமய பூஜைகளின் மகத்துவத்தால், ஏழு எருக்கு சமித்துகள், ஏழு தர்பைகள், ஏழு எருக்க இலைகள், ஏழு பூக்கள், ஏழு வகை முக்கனிகள் போன்ற ஏழு வகைத் திரவியங்களைத் தாங்கி பல கோடிப் பாகைகள் அதிஉஷ்ணமான சூரிய மண்டலத்திற்கு மானுட வடிவில் நேரில் செல்வதைக் கண்டு யாக்ஞவல்கியரே வியந்து, “இவருக்கு நாம் சூரிய மந்திரங்களை உபதேசிக்கும் பக்குவத்தினைப் பெற்றுள்ளோமா? இவரல்லவா நமக்கு உபதேசிக்க வேண்டும்!” என்று மனதார அடக்கமாகவும், பணிவுடனும் எண்ணினார்.

கடம்பவனம் குளித்தலை

ஆதவ மூர்த்தியுடன் அற்புதக் கிரிவலம்!

சூரிய மூர்த்தியையே நேரடியாகத் தரிசிக்கும் பேறுபெற்ற மிஹிர மாமுனி, தமக்குக் குருகுல வாசமளிக்க யாக்ஞவல்கியர் விதித்த நியதிகளை எடுத்துரைத்து அவற்றுக்குத் தம்மைத் தகுதியாக்குமாறு மனமுருக வேண்டினார். ஆனால் சூரிய மூர்த்தியோ “எம் சூரிய மண்டலத்தில் பல கோடி யுகங்களாக வெற்றுடலில் தவம் புரிந்தால்தான் இவ்வகை வைராக்யத்தை அடைய இயலும்! எனினும் பூவுலகில் அருணாசலப் புனிதத் தலத்தில் அடியேன் தினமும் வலம் வந்தே பூவுலக விஜயத்தைத் தொடங்குவதால் என்னுடன் வந்து அருணாசலக் கிரிவல முறைகளை அறிந்து பயன் பெறுவாயாக!” எனக் கூறி அருளினார்.

இதன் பிறகு சூரிய மூர்த்தியுடன் ஏழு நாட்கள் அருணாசலத்தை வலம் வந்து சூரிய மூர்த்தி அளித்த நல்வரங்களை “ஆதவக் கூபம்” என்ற அருணாசல மலை தரிசனப் பகுதியில் பதித்து வைத்து, மாத சிவராத்திரியில் கடம்ப மர வடிவில் கடம்ப மலர் வடிவில் காட்சி அளித்து அருளும் வண்ணம் சங்கல்பித்துப் பதித்தார்.

இதன் பிறகு எழுபது ஆண்டுகள் மனவழி குரு பரிபாலனம் பூண்டு யாக்ஞவல்கியரின் உத்தமச் சிஷ்யர்களில் ஒருவரானார். மிஹிர மாமுனி பகலில் சூரிய மண்டலத்தில் பாடமும், இரவில் அருணாசலக் கிரிவலமும் பூண்டு அளப்பரியத் தபோபலன்களைப் பெற்றுப் பூவுலக ஜீவன்களுக்கு அருளியவர்! இவர் அருணாசல மலையில் பன்முறைச் சூரியப் பிரகாசத்தில் மறைந்து மீண்டும் சூரிய மண்டலத்தில் தோன்றினார். இவ்வாறு “மிஹிரஜோதிப்” பூர்வமாகக் “கடம்பந் துறைத்” தரிசனத்தில் பூரித்த மஹா சிவராத்திரித் தினமே ஒரு யுகத்தின் பார்த்திப ஆண்டின் ஆனி மாத சிவராத்திரித் திருநாளாகும்.

இன்று உலகெங்கும் காணும் சுயம்பு லிங்க மூர்த்திகள் அருணாசலத்திலிருந்து தோன்றியவர்களே! எனவேதாம் கோடானு கோடி லிங்கத் தரிசனத்திற்காக அனைத்துச் சித்தர்களும், மகரிஷிகளும், மாதச் சிவராத்திரி தோறும், பௌர்ணமித் திதியிலும் அருணாசலத்தில் இன்றளவும் கிரிவலம் வந்து கொண்டுதாம் உள்ளனர்.

எனவே வரும் மாதசிவராத்திரி நாளில் 4.7.2005 ஏழு எருக்கம் பூக்கள், ஏழு கடம்பப் பூக்கள், ஏழு மஞ்சள் பூசிய தேங்காய்களுடன் திருஅண்ணாமலையில்,

“யாக்ஞ வல்க்ய யாமறையாளர்
மிகிர மாமுனி மேதகு சிஷ்யம்
ஆக்ஞா சக்கிர ஆதவப் பரலாய்
கண்வத் தவத்திரு தண்டுள போதம்
அருணாசல சிவ மயகுரு பாவன
உய்யும் மெய்யும் தையூர்ச் சிவனே!”

-என்ற குருபாவனத் துதிகளை ஓதியவாறு கிரிவலம் வந்து, இயன்றோர் மறுநாள் அமாவாசையில் கருவளர்ச்சேரியில் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி, ஸ்ரீலோபாமாதா சமேத அகஸ்திய மாமுனியைத் தரிசித்து, நற்பிள்ளைகளுடன் சந்ததி தழைக்க நல்வரங்களைப் பெறுவீர்களாக!

மாதசிவராத்திரி கிரிவலப் பலன்கள்!

திருஅண்ணாமலையில் சூரியப் பாளம் என்ற பகுதியில் பாக்யம் உள்ளோர்க்குக் கடம்பப் பூக்கள், எருக்கம் பூக்களைத் தாங்கிய நிலையில் மிஹிர மஹரிஷியின் தரிசனம் கிட்டும். பிள்ளைகள் நல்ல நினைவாற்றலைப் பெறவும் உதவும்.

ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையே நல்லிணக்கம் பெற, கல்லூரி, பள்ளித் தாளாளர்கள், உரிமையாளர்கள், தலைமை ஆசிரியர்கள் யாவரும் கிரிவலம் வர வேண்டிய உத்தமமான மாத சிவராத்திரி!

அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் நன்கு மேன்மை பெறவும், மருந்துகளைத் தயாரிப்போர் தம் துறையில் நன்கு விருத்தி அடையவும் உதவும் மாத சிவராத்திரிக் கிரிவலம்.

அருணன் என்றால் சூரியன் என்று பொருள், அருணாசலமானது இறைத் திருமேனி ஆதலின், திவ்யப் பிரகாசமாக எப்போதும் தேஜோமயமாக விளங்குவதால், மறுநாள் அமாவாசை என்றாலும், மாதச் சதுர்த்தசித் திதியான மாத சிவராத்திரி நாளின் நள்ளிரவில் கூட, அருணாசலத்தில் சுயம்ஜோதிப் பிரகாசம் எழுவதை நன்கு காணலாம்.

காரணம், வானில் உள்ள அனைத்துக் கோடி நட்சட்திரங்களுக்கான, கோள்களுக்கான ஒளிப் பிரவாகம் அனைத்தும் அருணாசல மலையிலிருந்து தான் பெறப்படுகின்றன. இவ்வாறாக, மிஹிர மாமுனி தாம் பெற்ற அரிதான சூரிய மண்டல மந்திர சக்திகளையும், தாம் கிரஹித்த தீப மந்தரப் பிரகாசச் சுடர்களையும், சூரிய தீபகாதம் எனும் தரிசனப் பகுதியிலும் பதித்து உள்ளமையால், இம்மாத சிவராத்திரியில் கடம்ப மலர்ச் சரம், கடம்ப மாலைகளைத் தாங்கிக் கிரிவலம் வருதல், லிங்கத்திற்குச் சார்த்தி வழிபடுதலும் மிகவும் விசேஷமானதாகும். இறைவனுடைய திருஉளத்தில் ஸ்ரீசாகம்பரீ தேவி பல சிருஷ்டிக் காரண மந்திரங்களைக் கிரகித்து மௌன யோக நிலையில் படைத்து வந்தவற்றுள் கடம்பப் புஷ்பமும் ஒன்றாகும்.

இம்மாத சிவராத்திரி கிரிவலப் பலாபலன்களால் பல்வகைத் துறையினரும் பலனடைகின்றனர். இரும்பு, டானிக் மருந்துகள் மற்றும் மெக்கானிக் துறையில் இருப்போர்க்கு நற்பலன்களை அளிக்கும் கிரிவலம்.

குடும்பத் தலைவர் விபத்துக்கு உள்ளாதல், சிறை செல்லல், பிரிதல் காரணமாக நொடித்துள்ள குடும்பம் சீர் பெற உதவும். குடும்பத் தகராறு, கம்பெனி நொடித்தல், சொத்துக்களை இழத்தல், பெரு வகையிலான பணக் கடன் போன்ற வகைகளில் துன்பப்படுவோர் தக்க நிவாரணம் பெறவும் உதவும்.

பட்டை லிங்கம்

பட்டைகளுடன் திகழும் லிங்க மூர்த்தங்கள்!

வாழ்க்கை (இவ்வகையில்) வாழ்வதற்கே!

சமுதாயத்தில் பெருகும் வன்முறைத் தீய சக்திகளைப் போக்க உதவும் பட்டை லிங்கத்திற்கான பொதுச் சமுதாயப் பூஜை! நோய் நிவாரணத்திற்கு உதவும் பட்டை லிங்கத்திற்கான அஷ்டக் காப்புப் பூஜை! நகைக் கடைக்காரர்களுக்கு உரிய பட்டை லிங்க வழிபாடு!

பட்டை லிங்கப் பூஜை மகத்துவம்!

சில வகைப் பட்டை லிங்கங்களில் சுயம்பாகவே, இயற்கையாகவே பட்டைகள் இருக்கும். ஒவ்வொரு பட்டைக்குமான கோடானு கோடி ரகசியங்கள் உள்ளன. ஒவ்வொரு பட்டையும் பல்லாயிரம் பூமிகளைக் குறிக்கின்றன. இவை சுயம்பாகவும், தேவப் பூர்வமாகவும் சுயம்பு லிங்கங்களில் வந்தமைவதாகும்.

பல கோடி அண்டங்களுக்கும் அனுகிரக சக்திகளை நிரவ வல்லவையே இத்தகையப் பட்டை லிங்கங்கள் ஆகும். எனவே, சுயம்புப் பட்டை லிங்க வடிவு என்றாலேயே, தேவேந்திரராகிய இந்திர மூர்த்தியே நேரில் வந்து, முப்பத்து முக்கோடித் தேவர்களையும் கூட வைத்துக் கொண்டு, பக்திப் பூர்வமாகத் தலைமை தாங்கி, மிகவும் கவனமாகப் பூஜித்திடுவார் எனில் என்னே பட்டை லிங்க மூர்த்திகளின் மஹிமை! நவரத்னங்களிலும், குறிப்பாக மரகதத்திலும், பவளத்திலும் பட்டை லிங்கங்கள் தாமாகவும், பட்டை தீட்டப் பெற்றும் அமைவதுண்டு.

சாதாரணமாகக் கண்களுக்குத் தெரியாத வகையில் – செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் இடையில் உள்ள திருவடிச் சூலம் போல – சூக்குமப் பட்டைகள்  உள்ள சிறப்பான லிங்கங்களும் உண்டு. பலத்த மன வேறுபாடுகளுடன் வாழும் தம்பதியர், நன்முறையில் ஒன்று பட்டு வாழ, “திருவடிச் சூலம்” ஆலயத்தில் பிரதோஷ வழிபாடுகளை ஆற்றி, முந்திரி, கடலை போன்ற இரட்டை வடிப் பொருட்கள் கூடிய உணவு வகைகளைப் படைத்துத் தானமாக அளித்து, இவ்வாலயக் கருவறையில் தீபச் சுடர்ப் பிழம்பில் லிங்கத்தில் ஒளிரும் மரகத கிரணங்களை தம்பதியர் ஒருமித்துத் தரிசித்து வழிபட்டு வர வேண்டும்.

வன்முறையை வேரறுக்க உதவும் பட்டை லிங்க வழிபாட்டு சக்திகள்!

போர், கலவரம், வன்முறைகள் நாட்டில் பெருகுகையில், நம் பழங்காலத்துத் தர்மநெறி சீர் மன்னர்கள், பட்டை வடிவ லிங்கங்களுக்கு, ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) தொடர்ந்து, தினமும் 1008 வகை மூலிகை, திரவிய, தைலங்களால் அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி, 1008 வகை ஹோம திரவியங்களுக்கும் மேலாக வேள்வியில் ஆஹூதிகளாக அளித்து, அகண்டகார விரிவான யாகங்களை இயற்றி வழிபடுவர். லட்சக் கணக்கான மக்கள் இவற்றில் பங்கேற்றிட, சமுதாயமே அமைதிப் பூங்காவாகத் துலங்கிக் கொழித்தது.

பட்டை லிங்கத் தலங்களில் ஆற்றும் ஹோம வழிபாடுகளுக்குப் பன்மடங்குப் பலன்கள் உண்டு. ஒவ்வொரு பட்டையிலும் பல கோடி தேவதா மூர்த்திகள் உறைந்து பூஜிப்பதால் பலன்களும் அபரிமிதமாகப் பொழிந்து வந்தருளும்.

ஸ்ரீமேற்றளிநாதர் திருமேற்றளி

சந்ததி வளத்திற்கு அருள்வரம் தரும் பட்டை வடிவ லிங்கங்கள்!

புதுக்கோட்டை – குழிப்பிறை – செவலூர் – பொன்னமராவதி மார்கத்தில் உள்ள செவலூர் ஸ்ரீபூமீஸ்வரர் ஆலயம்.

பட்டுக்கோட்டை – திருத்துறைப்பூண்டி மார்கத்தில் இடையே உள்ள திருக்கடிக்குளம் சிவாலயம்.

சென்னை – தக்கோலம் அருகே இலம்பையங் கோட்டூர் ஸ்ரீசந்திரசேகரர் ஆலயத் தலங்களில் – மூல லிங்க மூர்த்திகள் தம் லிங்கத் திருமேனியில் பட்டைகளுடன் திகழ்ந்து அருள்கின்றனர். பூவுலகில் காண்பதற்கு அரிய, மிகவும் சக்தி வாய்ந்த தலங்களிவை!

குறிப்பாக, ஆண் அல்லது சந்ததி இன்மை, பிள்ளைப் பேறின்மை, தத்தெடுத்தல் போன்ற வகையில் சந்ததிகள் இரு பாலாராகத் தொடர இயலாது அமைந்துள்ள குடும்ப பாரம்பரிய நிலை சீர் பெறவும், சந்ததித் தடையால், பிறரை அண்டி, நம்பி வாழ வேண்டிய நிலையில் உள்ளோரும் நன்னிலை பெறவும், திங்கள், பூசம், திருவாதிரை, பிரதோஷம் தோறும், இத்தகைய பட்டை லிங்க மூர்த்தித் தலங்களில் வழிபட்டு வருதல் வேண்டும்.

எதிர்பாராத மரணத்தால் அவதிப்படும் குடும்பங்கள் சீர்மை பெற...

பிறர் மனதை, விரோதம், பதவி, அதிகாரம், வசவு, வாக்கால் வதைத்தமையால் வரும் மிருத்யு தோஷங்கள்.,

பிறருடைய வாழ்வைப் பல்வகையிலும் சிதைத்தமையால் ஏற்படும் நாக தோஷங்கள்,

ஒழுங்காக, முறையாகத் தர்ப்பண, படையல் பூஜைகளை ஆற்றாமையால் ஏற்படும் பித்ரு சாபங்கள் காரணமாக உண்டாகும் பித்ரு தோஷங்கள்..,

இவற்றால் குடும்பத்தில் ஏற்படும் இளவயது மரணம், துர்மரணம் ஏற்பட்டுச் சந்ததிக் கொம்பு உடைதல், கடுமையான பாவ வினைகள் போன்றவாறாகச் சந்ததித் தழைப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மேற்கண்ட வகையிலான பட்டை லிங்கத் தலங்களில் படையல் வகை வழிபாடுகளை அமாவாசை, பௌர்ணமி தோறும் ஆற்றி வருதல் வேண்டும்.

ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் திருநல்லூர்

சமுதாயத்தில் சாந்தம் பொங்க உதவும் பட்டை லிங்க வழிபாடு!

மேலும் நாட்டின் தற்காப்பிற்காக, நம் பண்டைய மன்னர்கள் கடைபிடித்தது போல, பட்டை லிங்க மூர்த்தி ஆலயங்களில் சமுதாய நலவள வேள்வி, லட்சார்ச்சனைப் பூஜைகள் போன்ற அனைத்துச் சமுதாயத் தரப்பினருக்குமான பொதுநல வழிபாடுகளை ஆற்றி வருதல் வேண்டும். சமுதாயத்தைப் பாதிக்கும் இனக் கலவரங்கள், தீவிரவாதம், பயங்கரவாதம் இதனால் தணிவதுடன், தீயோரும் இவ்வகைப் பூஜைகளால் சீர்திருந்திடவும் இப்பூஜா பலன்கள் மிகவும் துணை புரியும்.

இவ்வகையில், இன்றையக் கலியுகத்தில் உலகில் பல நாடுகளிலும் நிலவும் அனைத்துத் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆன்மீக ரீதியாக மட்டுமே முழுமையான தீர்வு காண முடியும். மறைந்த இத்தகைய வழிபாட்டு முறைகளைத் தற்போது மீண்டும் புதுப்பித்தால், எந்த நாட்டிற்கும் துன்பங்களைத் தரும் கலவரம், பயங்கரவாதம், வன்முறைகளுக்கு உடனடியாக நல்முறையில் தீர்வுகளைப் பெற்றிட முடியும்.

ஒவ்வொரு பட்டைக்கும் விதவிதமான காப்பு வழிபாடுகள்!

பட்டை லிங்க மூர்த்திகளிலும் ஞானப் பட்டை, க்ஷேமப் பட்டை, கோணப் பட்டை, தீர்கப் பட்டை, ஸ்வேதப் பட்டை, ஸ்கந்தப் பட்டை எனப் பல வகைகள் உண்டு., இத்தகைய பட்டை லிங்க மூர்த்தி அருளும் ஆலயங்களில், தினமும், சூரிய உதயம் முதல் ஒவ்வொரு மணி நேரத்திலும் வருவதான – ஏழு வகை ஹோரைகளிலும், ஆறு ஜாமங்களிலும்...

எந்த ஜாமத்தில், எந்த ஹோரையில் எவ்விதமாக, எத்தகையக் காப்பினை பட்டை லிங்க மூர்த்திக்கு இட்டுப் பூஜைகளை ஆற்றிட வேண்டும் என்ற வகையானக் காப்பு நியதிகளும் உண்டு. இவ்வாறான ஹோரைக் காலக் காப்புப் பூஜைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தக்க சத்குரு மூலமே அறியப் பெற வல்லவை! ஒரு சிறு பூஜை கூட மகத்தான பலன்களை அருளித் தரவல்லவை!

ஆனால், சத்சங்கமாக ஜாதி, மத பேதமின்றிப் பலரும் ஒன்று கூடி, சமுதாயவளச் சங்கல்பத்துடன் இவற்றை ஆற்றுதலே அபரிமிதமான வகையில் பன்மடங்கான நற்பலன்களைத் தரும்.

பட்டை லிங்கத்தின் ஒவ்வொரு பட்டையிலிருந்தும், ஒவ்வொரு நொடியும் அந்தந்த நாள், வார, நட்சத்திர, யோக, கரண கால நிலைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு விதமான ஒளிக் கதிர்கள் வெளி வந்து கொண்டிருக்கும்.

ஒவ்வொரு வேளையிலும் பல்வண்ணக் கதிர்கள் பொங்கும் லிங்க மூர்த்தியைக் கும்பகோணம் திருநல்லூர்ச் சிவாலயத்தில் தரிசித்திடலாம். மனிதக் கண்களால் காண இயலாத வண்ண வகைகள் நிறையவே உண்டு. இவற்றைக் காண்பதற்கான சக்திகளைத் தர வல்லனவும் பட்டை லிங்க நேத்ர சக்திப் பூஜைகளாகும்.

பொதுவாக, பச்சை நிறக் கண்களை உடையவர்கள், பூனைகள், பறவைகள் நிறைய தேவ வண்ணங்களைக் காணும் வல்லமை பெற்றவர்கள் ஆவர். இத்தகைய அரிய மருத்துவ குணபாட லிங்க விபூதிக்கான விளக்கங்களைத் தக்க சத்குருவிடம் கேட்டறியவும்.

தொடர்ந்து பல மண்டல கால பூஜைகளை சிரத்தையுடன் ஆற்றி வர, மனித உடலில் 72000 நாடி நாளங்கள் பலவற்றுக்கும் சித்சுத்திகளுக்குத் தேவையான தேவவளப்ப சக்திகளை, சக்தி மாற்றங்களை அளிக்க வல்லவையும் பட்டை லிங்கத் தரிசனப் பலாபலன்களாகும்.

பட்டை லிங்கத்தின் ஒவ்வொரு பட்டையிலிருந்து வரும் ஒளிக் கதிரும், பல்வேறு வகையான நோய்கள், மன ஏக்கங்கள், பிரச்னைகளைத் தீர்க்க வல்லனவாகும்.

பட்டை லிங்கத்தின் மூலிகைக் குளிகைத்துவ சக்திகள்!

குளிகை என்பது மூலிகா திரவியங்களில் மருத்துவ, யந்த்ர, மந்த்ர சக்திகளைப் பிணைக்கும் வாடகசக்தி யோகக் குழல் ஆகும். ஒவ்வொரு பட்டையிலிருந்தும் வரும் ஒளிக் கதிர்களை நன்கு கிரகித்து, உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், ஜீவராசிகளுக்கும் ஏற்படும் எவ்வகை நோய்க்குமான மருந்துகளில் ஆகர்ஷணப் பூர்வமாகக் கலந்து அளித்திடலாம். இதற்கு மிகவும் உதவுபவையே குளிகைகள் ஆகும். ஒரு குளிகையின் மருத்துவ ஆகர்ஷண சக்திகளால் “உடலைப் பஞ்சினும் மெல்லியதாக்கி”, கோளங்களை விட விரைவான வேகத்தில் எந்த லோகத்திற்கும் சென்று வரலாம். ஆனால் நற்காரியங்களுக்கே இவை பயனாகும். சுயநலமாகக் குளிகைகளைப் பயன்படுத்திடில் பல தண்டனைகளை அனுபவித்தாக வேண்டும். எனவே, தக்க சத்குருவின் அருள்வழிகாட்டுதலுடன் இவற்றை அறிந்து சேவையாற்றுதலே நன்று.

இத்தகைய பட்டை லிங்க வழிபாடுகள் கோடானு கோடி பூஜை வழி முறைகளையும் எண்ணற்ற மருத்துவ குண ரகசியங்களையும் கொண்டவை! இதற்கான விளக்கங்கள் மாமறைப் பெருங் கடலாகும். சாதாரணமாகப் பகுத்தறிவாலோ, வெறும் புத்தக அறிவு முதிர்ச்சியாலோ அடைய இயலாதவை! இதில் ஒரே ஒரு தேவ இரகசியத்தை அறியவே, பல்லாண்டுகளாகப் ‘பரிபக்குவ யோகம்’ பயின்றிட வேண்டும்.

“தேரைச் சித்தர்” இத்துறையில் மஹா வல்லமை கொண்டவர். தேரையர் மருத்துவ வாடகங்களில், பட்டை லிங்க மருத்துவ சக்தி விளக்கங்கள், குளிகைப் பூர்வ சக்தி விளக்கங்கள் நிறையவே பரிபாஷைப் பாடல்களாகக் காணப்படும்.

எனவே, ஒரு பட்டை லிங்கத்தின் ஒரு பட்டையின் கூறு இரகசியத்தை அறியவே, ஒரு சராசரி மனிதனுக்குப் பல கோடி ஆண்டுகள் தேவைப்படும் எனில், என்னே பட்டை லிங்கங்களின் மஹிமையும், மகத்துவமும்!

ஞானப் பிரவாக சக்திகள் பூரிக்கும் பட்டை லிங்கங்கள்!

பொதுவாக, பட்டை லிங்கங்களில் பிருத்வி, அக்னி, நீர், வாயு, ஆகாசம் போன்ற பஞ்ச பூத வகை ஞானப் பிரவாகங்கள் உண்டு. இதில் பிருத்வி வகையானது, பூமிக் குற்றங்களையும், நோய்த் தன்மைகளையும், மன ஏக்கங்களையும் தீர்க்கும்.

எனவே, பட்டை லிங்க மூர்த்திக்குப் பிருத்வி நாளான செவ்வாய்க் கிழமைகளில் வெண்ணெய், புனுகு, எள் போன்று அஷ்ட (8) வகைக் காப்புகளை இட்டு, வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்று கிழங்கு வகை உணவு வகைகளைப் படைத்துத் தானம் அளித்து வர, பூமி நிலங்கள், வீடுகளில் உள்ள வாஸ்து நியதிகளுக்கு மாறாக உள்ள அமைப்புகளில் ஏற்படும் தோஷங்கள் நீங்கிட நன்கு உதவும். இதனை ஆற்ற வேண்டிய முக்கியமான பட்டை லிங்க மூர்த்தியே செவலூர் ஸ்ரீபூமீஸ்வரர் ஆலயமாகும்.

பட்டை லிங்க மூர்த்திகளுக்கான வேறு பல விசேஷமான வழிபாட்டு முறைகளை தக்க சத்குருவை நாடி அறியவும்.

ஐந்து வகை மூலிகைத் திரவியப் பூஜை

பூமியின் மேல்,
பூமியை ஒட்டியதாகத் தரையில்,
பூமியடியில்,
நீரில்,
“ப்ரகால பலாச” நிலையில், அதாவது சூரிய ஒளி, சந்திர ஒளி, நட்சத்திர ஒளி படாத குகை போன்ற இடத்தில்

-என ஐந்து வகை நிலைகளில் வளரும்/ பூக்கும்/ காய்க்கும் காய்கள், கனிகள், கிழங்குகள், மூலிகைகளால், திரவியங்களால் காப்பு இட்டு, புதன் கிழமைகளில், பட்டை லிங்கத்தை வழிபட்டு வருவதுடன், இயன்ற அளவிற்குப் பட்டை லிங்கத் தலங்களில் மிகவும் கவனமாக சிறிது தூரமேனும் அங்கப் பிரதட்சிணமும் செய்து வருதலால்,

சொத்தைப் பிறர் அபகரித்ததால் வாடும் குடும்பங்கள் நன்னிலை பெற உதவும். மேலும், வயிறு சம்பந்தமான நோய்களுக்கு தீர்வுகளும் இவ்வித புதவார பூஜையால் கிட்டும்.

வயிறு மற்றும் கர்பப் பை சம்பந்தமான நோய்கள் தீர்வதற்கு நல் மருத்துவ ஆன்மச் சாதனமாக இப்பூஜா பலன்கள் அமையும்.

அஸ்வினி, ஆயில்யம் போன்ற மருத்துவ சக்தி நாட்களில் பட்டை லிங்கத் தலங்களில் 64 வகை மூலிகாத் திரவியங்களால் காப்பிட்டு வழிபடும் முறையும் உண்டு.

இவ்வகைப் பூஜைகளில் கிட்டும் பலாபலன்கள் பல்வகை நோய்களை எவ்வகையில் தீர்க்கலாகிறது?

மனித உடலிலும் நாளப் பட்டைக் கோணங்கள்

மனித உடலில் உள்ள 72000 நாளங்களிலும் பட்டைக் கோணங்கள் உண்டு. இவற்றை “நரம்புத் கிரந்திகள், தசைக் கிரந்திகள், எலும்புக் கிரந்திகள்” என்றவாறாக உரைப்பர்.

பட்டை லிங்கங்களில் உற்பவிக்கும் ஆகர்ஷண மருத்துவ சக்திகளை, ஜீவன்களுக்குப் பயன்படும் வகையில் இத்திரவியங்கள் பண்படுத்தித் தருவதால், உடல்களின் பட்டைவடி நாளங்கள் இவற்றைக் கிரகித்து ஈர்த்து மருத்துவ சக்திகளை ஏற்றிடத் துணை புரியும். எல்லாவற்றையும் விட இத்தகைய மிகவும் விசேஷமான வழிபாடுகளில் கொண்டிருக்கும் வலுவான நம்பிக்கையைப் பொறுத்து நற்குணங்களும் விரைவில் நன்கு கூடி வந்தமையும்.

ஸ்ரீதன்வந்திரி மூர்த்தி
நெல்லுவாய்புரம்

ஏதோ ஓரளவு நம்பிக்கையுடன் பூஜைகளை ஆற்றி வந்தாற் கூட, இப்பூஜையில் அபரிமிதமானப் பலன்கள் கிட்டுகின்றன எனில், ஆழ்ந்த நம்பிக்கை திரண்டால் எத்தகைய நல்வர வளம் கொழிக்கலாகும். சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

புதனகிழமை இதிலும் தேய்ப்பிறையில் அமையும் செவ்வாய், புதன் நாளில் பட்டை லிங்க வழிபாடு மிகவும் விசேஷமானதாகும்.

பட்டை லிங்கத்தில் மத்யரேகைப் பரிமாணம்

பொதுவாக, தேய்பிறைப் புதன், தன்வந்த்ரீ பெருமாளுக்கு மிகவும் ப்ரீதியானதாகும். பட்டை லிங்கங்களில் புதன் தோறும் எட்டு மற்றும் ஒன்பதாம் பட்டைகளில் இருந்து மருத்துவ சக்திகள், தன்வந்த்ரீ ஜோதி மண்டல சக்திகளாகப் பூரித்தெழும். எதிலிருந்து எட்டாம் ஒன்பதாம் பட்டை அமைவதென்பது லிங்கத்தில் ஓடும் “மத்ய ருத்ர ரேகை” மூலம் நிர்ணயமாகும்.

கர்நாடக மாநிலத்தில், கொல்லூரில் அருளும் மூகாம்பிகைத் திருமேனி லிங்க வடிவில், தங்கமய மத்ய ரேகை இழைவது கண் கொள்ளாக் காட்சியாகும் எனப் பலரும் அறிவர்.

நகைக் கடைக்காரர்களுக்கான பட்டை லிங்க வழிபாடு!

விலை உயர்ந்த கற்களுக்கு நன்கு, தக்க முறையில் பட்டை தீட்டத் தீட்ட அவற்றின் தேவசக்திகள், ஆகர்ஷண சக்திகள், பிரபாச சக்திகள் போன்றவை நன்கு விருத்தியாகும். இதனால்தான் நன்கு பட்டை தீட்டப் பெற்ற கற்களாலான ஆபரணங்களை முதலில் பட்டை லிங்கத்திற்குச் சார்த்திப் பூஜித்துப் பிறகு அணிதல் விசேஷமானதாகும்.

எனவே ஆபரண சக்திகளையும் மேம்படுத்த வல்லவையே பட்டை லிங்கங்கள். பொற்கொல்லர்கள், நகை கடைக்காரர்கள் புதன், வெள்ளி, அனுஷ நட்சத்திர நாட்களில், பட்டை தீட்டப் பெற்றக் கற்களை உடைய ஆபரணங்களைப் பட்டை லிங்கத்திற்கு சார்த்திப் பூஜித்து வருவதால், நகைத் தொழில் துறை நன்கு மங்களகரமாக விருத்தி ஆகும். தங்கம் மற்றும் கற்களில் உள்ள தோஷங்களும் அகன்றிடவும் உதவும். இவற்றில் உள்ள தோஷங்கள் தொழிலிலும், வாழ்விலும் பலத்தத் தாழ்வையும் உருவாக்கி விடும். ஆதலால், பட்டை லிங்க மூர்த்தி வழிபாடு நகைக் கடைக்காரர்கள் கடைபிடிக்க வேண்டியதொன்றாகும்.

பிறந்த நாளில் பட்டை லிங்க வழிபாடு!

இளைஞர்கள், இளம் பெண்கள் மாதமொரு முறையெனும் பட்டை லிங்க தரிசனம் அல்லது இயற்கையாகவே பட்டைகள் தீட்டப் பெற்ற ஸ்படிக (நவரத்னக்) கல் வடிவ லிங்க தரிசனமும், இவற்றுக்குத் தக்கப் பூஜைகளை ஆற்றுதலும், இவர்கள் தீயதின் வசப்படாது நல்ஒழுக்கத்தில் திளைத்திடத் தக்க மனோ வைராக்யத்தைத் தந்து துணை புரியும்.

பட்டை லிங்கத்தின் ஒவ்வொரு பட்டைக்கும் புனுகுக் காப்பு, சந்தனக் காப்பு, கோரோஜனை, வில்வதளப் பச்சிலை, துளசிப் பச்சிலை, விபூதிப் பச்சிலைக் காப்புகள், கஸ்தூரி, ஜவ்வாது, வெண்ணெய் எனப் பலவகைக் காப்புகளை இட்டு, அவரவருடைய மாதாந்திர நட்சத்திர நாளில் வழிபடுவதுடன், பறங்கி, வாழை, பீர்க்கங்காய், முருங்கை, கரும்பு, பூசனி போன்ற பட்டை வகைக் காய்கறி வகை உணவினைப் படைத்து, தானமளித்து வருதலால், பிறருடைய பகைமையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் குடும்பங்கள் நன்கு மீட்சி பெறும்.

திதி நித்யா

“திதி நித்யா” என்ற வகையிலான திதி தேவதைகளுக்கான வழிபாட்டு முறைகள் நிறைய உண்டு. ஆதலால் ஒவ்வொரு திதியும் ஜீவ வாழ்க்கையில் நன்கு தீர்கமாகப் பிணைந்தவையே!

காரியத் தடங்கல்களை அகற்றுவதுடன் வெற்றியாகிய விஜயத்தைத் தரும் தசமித் திதிப் பூஜைகள், ஒவ்வொரு திதியிலும் சக்தி வாய்ந்த பூஜா பலன்கள் பதிந்துள்ளன, அமாவாசை, பௌர்ணமியில் நிறைவுறும் ஒவ்வொரு பதினைந்து காலச் சுழற்சியிலும் மனித உடலில் ரத்த ஓட்டம் மாறுபாடும் அடைகின்றது.

பூஜையில் தகைமை தரும் தசமி

வளர்பிறைப் பிரதமை, தேய்பிறைப் பிரதமை, பௌர்ணமி, அமாவாசை என்றவாறாக 30 திதி வகைகள் உண்டு. இவை சூரிய, சந்திர கதி மார்கத்தை வானிலும், மனித தேகத்திலும் புலப்படுத்துபவை ஆகும். அதாவது திதி மாறுகையில் உடல் இயல்புகளும், மன ஓட்டங்களும் நன்கு மாறும். இதனால் தான் பௌர்ணமி, அமாவாசையில் மனநலம் குன்றியோரை மிகவும் பத்திரமாகக் கவனித்துக் கொள்வார்கள்.

பொதுவான பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான 14 வகைத் திதிகளில், தசமித் திதி நாளில் துலங்கும் காலசக்திகள், மன சுத்தியை உடல் சுத்தி மூலமாகப் பெற உதவுவதாகும். ஏகாதசித் திதியானது மன சுத்தி மூலம், உடல் சுத்தி, புத்தி மஹாசுத்திக்கும் உதவும். எனவே, மகா நவமி, மகா பரணி, மகா அஷ்டமி போன்ற சித்சுத்தி நாட்களைப் பஞ்சாங்கம் மூலம் நன்கு அறிந்து வைத்துக் கொள்க! இவற்றுள் பலவும் மஹாளய பட்ச நாட்களில் வருவதாகும். இந்நாட்களில் எவ்வகையிலேனும் எளிமையாகவேனும் விரதத்தைப் பூண்டு இவற்றில் செறியும் பலாபலன்களைப் பெற்றடைதல் வேண்டும்.

வெற்றி தரும் முற்றிய தசமி!

எண் வரிசையில் ஒன்றில் தொடங்கி 9ல் முடிந்து பத்தில் நிறைவு பெறுவதால் தசமிக்கு வெற்றியுடன் நிறைவு தரும் தேவப்பண்புகள் உண்டு. நல்ல நாள் பார்ப்பதற்கும் ஒரு நல்ல நாள் பார்க்கும் போது, ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் வல்லவனான பாண்டவச் சகாதேவன் தசமியையே தேர்ந்தெடுப்பான். காரணம், மன சுத்தியைத் தரும் மகத்தான சக்திகள் வாய்ந்தது என்பதால்தான்!

இதனால்தான் விஜயமாகிய வெற்றியைக் குறிப்பதாக, தசமித் திதியையே மஹா தசமியாக, விஜய தசமியாகப் போற்றி வழிபடுகின்றோம். அசுர சக்திகளை அம்பாள் வென்று, வெற்றிக் கொடி நாட்டிய தினமாகவும் விஜய தசமி துலங்குகின்றது அல்லவா! இவற்றின் (வி)ஜயசக்திகள் பலவும் அனைத்துத் தசமித் திதிகளிலும் நிறைந்து வருவதால், தசமித் திதி தோறும் பத்து வகைப் பெருமாள் மூர்த்திகளின் – நின்று, கிடந்து, நடந்த கோல நிலை மூர்த்தங்களை வழிபட்டிடுக!

தசமியில் பிற ஜீவப் பரிபாலனப் பண்பு

பொதுவாக, தசமித் திதி நாளில் மிருகங்கள், பட்சிகளுடன் உரையாடுவதற்கான தசவித்யா சக்திகளும் நன்கு பரிணமிக்கின்றன. இவை, கலியுலகில் எவ்வாறு மனிதர்களுக்குப் பயனாகும்?

சில வகைக் கருங் காக்கைகள், புறாக்கள், கருடன்கள் பலவும் எண்ணற்ற பித்ரு மற்றும் ஏனைய லோகங்களுக்குச் சென்று வந்து, அரிய பல நற்செய்திகளையும், விசேஷமான ஆன்மீகத் தகவல்களையும் கொணர்கின்றன. உதாரணமாக, ஆலயங்களில் பல பறவைகள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்! காரணம், இந்நாளில் அவ்வாலயத்தில் எந்தச் சித்தர்பிரான், மஹரிஷி பூஜிக்க வருகின்றார் என்பது  முதல் அன்றையத் தரிசனப் பலன்கள் வரைப் பலவற்றையும் அவை விளக்கிக் கொண்டே இருக்கும். மனிதர்களில் பலரும் ஆன்மீகப் பேருரையாளர்களாக, உபந்யாசர்களாகத் துலங்குதல் போல, பறவைகளிலும் உபந்யாசகப் பேருரையாளர்கள் உண்டு. அவை நித்திய விரதம் பூண்டு அளப்பரிய பல ஆன்ம சக்திகளைப் பெற்று இவ்வகையில் கோயில்களில் மேற்கண்ட வகையிலும் மகத்தான சேவைகளை ஆற்றுகின்றன.

தசமிக்கு முந்தைய நவமி திதியில் பல்வகை ஞானசக்திகள் நன்கு பரிமளிப்பதால்தான், நவமித் திதி பூஜை ஹயக்ரீவப் பெருமாளுக்கும், கலைமகளுக்கும் உரித்தானதாகின்றது. ஆனால் இவற்றை அறிந்து நன்கு பயன்படுத்திக் கொண்டால்தானே மனிதப் பகுத்தறிவு உபயோகப்படுத்தப் பட்டதாகிறது!

உதாரணமாக, பஞ்சாங்கத்தில் தினசரி சூரிய உதய, அஸ்தமன நேரங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இதனை அறிந்து கொள்ளாதது யார் தவறு? ஏனெனில் இதனை அறிந்து கொண்டு, சந்தியா பூஜைகளையும் ஸ்ரீகாயத்ரீ தேவிக்கான மந்திர அர்க்யங்களையும் சரியான நேரத் துல்லியமாக நிகழ்த்தினால், தினமுமே காலையும், மதியமும், மாலையும் அதியற்புதப் பலாபலன்களை மிக எளிதில் அடையலாமன்றோ!

விஜய தசமியின் ஜயசக்திகள் விரியுமே ஏனைய தசமிகளில்!

எனவே, விஜய தசமியில் அம்பாள் நாட்டிய விஜய சக்திகள் வருடத்தில் பல வகைகளில் அனைத்துத் தசமித் திதிகளிலும் நிரவி வருவதால், எடுத்த நற்காரியத்தில் வெற்றிகளைத் தழுவ வல்ல ஜயசக்தி நாளாகவும் தசமித் திதி துலங்குகின்றது. இதில், வளர்பிறைத் தசமி, தேய்பிறைத் தசமி இரண்டுக்கும் வெவ்வேறான வகைப் பூஜை, விரத, தரிசனப் பலாபலன்கள் உண்டு.

தேய்பிறைத் தசமித் திதியில் அமர்ந்த கோலத்தில் அருளும் பெருமாள் ஆலயத்தில், 10, 20, 30, 40 என்று பத்தின் மடங்கில் தீபங்களை ஏற்றி வழிபடுதலால், ஆரம்ப நிலைகளிலேயே துவங்காது தத்தளிக்கும் நற்காரியங்கள், நன்கு தொடங்கிப் பூர்த்தி அடைய உதவிடும்.

வளர்பிறைத் தசமித் திதியில் நின்று, நடந்த கோலத்தில் அருளும் பெருமாளுக்கு, 10, 20, 30, 40 என்ற வகையில் தீபங்களில் திரிகளின் எண்ணிக்கைகளை நிர்ணயித்து வைத்து ஏற்றி வழிபடுவதால், பகைமை, பொறாமை, குரோதத்தால் பிறர் தரும் இன்னல்களால் பாதியில் அரையும் குறையுமாக நின்று போயுள்ள காரியங்கள் நன்கு நடைபெற உதவும். இரண்டுத் தசமித் திதிகளிலும், பத்து பேருக்காவது, குறைந்த பட்சம் பத்துப் பசுக்களுக்காவது பத்து, பத்துப் பழங்களையாவது அளித்திடுக! கிரிவலம், நவராத்திரி போன்ற இரவு நேர மலை வலம் மற்றும் வழிபாடுகளும் ஆகும்.

பிரதோஷ மகாத்மியம்

பிரதோஷப் பண்டிகை மகத்துவம்!

ஏழு நாட்களுக்கான “சப்தாமிர்தப் பிரதோஷ விரதம்”

ஆம், பிரதோஷம் என்பது ஒரு விரதப் பண்டிகையே! தினமுமே நித்தியப் பிரதோஷ விரதம் இருக்கும் சித்தர்கள் திருக்கயிலாயத்தில் இன்றும், என்றுமாய்ப் பொலிகின்றனர். சனிப் பிரதோஷம் வருவதற்கு முன் ஏழு நாட்களுக்கு தினசரிப் பிரதோஷ பூஜை விரதம் இருத்தலால் நல்ல பலன்களைப் பெற்றிடலாம். அதாவது தினமும் உண்ணாவிரதம் பூண்டு, மாலையில் பிரதோஷ நேரத்தில் சுயம்பு மூர்த்தி அருளும் ஆலயத்தில் சிவதரிசனம் பெற்ற பின், பசுவிற்கு வயிறு நிறைய உணவளித்துத் தான் உணவேற்றல் நித்தியப் பிரதோஷ விரதமாகும். இதற்கு “சப்தாமிர்தப் பிரதோஷ விரதம்” எனப் பெயர். மிகவும் சக்தி வாய்ந்த விரதம், சப்த (ஏழு) மஹரிஷிகள் இதனைக் கைக் கொண்டு அரிய நல்வரங்களைப் பெற்றனர்.

கொறுக்கை

இரட்டை நந்தி மூர்த்திகள் உள்ள தலங்கள் (கும்பகோணம் அருகே கொறுக்கை), நந்தீஸ்வரர் எனப் பெயர் பூண்டு சிவபெருமான் அருளும் தலங்கள், சப்தரிஷிகள் பூஜித்த ஆலயங்களில் (லால்குடி) மேற்கண்ட வகையிலான “சப்தாமிர்தப் பிரதோஷ விரதம்” பூண்டு வழிபட்டு வருதல், அளப்பரிய பலாபலன்களை, குறிப்பாக, குடும்பத்தில் நல்ல ஒற்றுமையைப் பெற்றுத் தரும்.

பிரதோஷ நாளன்று நிர்ஜல விரதமாக, அதாவது ஒரு துளி நீர் கூட அருந்தாது நல்விரதமோ அல்லது அவரவர் உடல் வாகிற்கேற்ப எவ்வகையிலேனும் எளிய, மிதமான, கடினமான விரதமோ பூண்டு, மாலையில் பிரதோஷ நேரத்தில், சுயம்பு மூர்த்தி அருளும் பழமையான சிவாலயத்தில், பிரதோஷ உற்சவம் பூண்டு, ஆலயப் பிரகாரத்தில் வலம் வரும் ஈஸ்வரப் பெம்மானின் சிவதரிசனத்தை எட்டுத் திக்குகளிலும் (அட்ட திக்குப் பிரதோஷ நாயகர் தரிசனம்) பெற்ற பின்னரே உணவேற்பது எனும் திவ்யமான விரதத்தை, வாழ்வில் சில பிரதோஷ நாட்களிலேனும் கடைபிடித்துப் பாருங்கள்!

நாலு திசைக் கோபுரங்கள், எட்டுத் திக்குகளிலும் பலி பீடங்கள் உள்ள ஆலயத்தில் (திருவானைக் கோயில்) எட்டுத் திக்குகளிலும் பிரதோஷ நாயகரின் தரிசனம் பெறுதல் வாழ்வில் பெறுதற்கரிய பாக்கியமாகும். இவ்வாறு முழு மூச்சுடன் இறங்கிப் பிரதோஷ நாளுக்கான விரதத்தை ஒரு முறையேனும் முனைப்புடன் கடைபிடித்துப் பார்த்தால்தானே வியக்கத்தக்க அளவில் மிக மிகத் துரிதமாக அருளும் பிரதோஷ விரதப் பலாபலன்களின் மகத்துவத்தை நன்கு உணரலாவீர்கள்!

எட்டு விமானங்களுக்கு மேல் உள்ள ஆலயங்கள், எட்டுத் திக்குகளிலும் பாண லிங்கங்கள் உள்ள ஆலயங்கள் மேற்கண்ட வகை வழிபாட்டிற்கு மிகவும் சிறப்புடையவை! பிறருடைய இழிச் சொல்லால், அதர்மமான காரியங்களால் வாழ்வில் தாழ்வடைந்தவர்கள் நன்னிலை பெற்று முன்னுக்கு வருவதற்கான நல்வழிகள் இப்பிரதோஷப் பூஜா பலன்களாகக் கிட்டும். எதையும் கடைபிடித்துப் பயின்றால்தானே ஐயா அனுபூதிகளும், பலன்களும் கைக்கு வரும்! ஒன்றுமே செய்யாது பலன்கள் வந்து பூரித்துப் பூத்துக் கொட்ட வேண்டும் என்று எண்ணுவது சுத்தமான பேராசைதானே ஐயா!

நித்தியப் பிரதோஷ வழிபாட்டை நமக்காக நிகழ்த்தும் சதாதபஸ் சித்தர்!

எந்த நாளில், நட்சத்திரத்தில், யோக, கரணக் கால அம்சங்களில் பிரதோஷப் பண்டிகை அமைகிறது என்பதைப் பொறுத்து, பிரதோஷ நாளின் பலாபலன்களைத் திவ்யமாகச் சித்தர்கள் பகுத்துத் தந்துள்ளனர். எந்த லோகத்தில் இருந்தாலும், எந்நேரமும் தவ நிலையில் பரிணமித்துப் பூரிக்கும் “சதாதபஸ் சித்தர்தாம்” இவற்றின் கலியுகப் பலாபலன்களையும் வகுத்துப் பகுத்து நிர்ணயித்துத் தருகின்றார். நிதமும், மாலையில் காளஹஸ்திச் சிவத்தலத்தில் நித்தியப் பிரதோஷப் பூஜையை ஆற்றும் இச்சித்தர் மஹராஜ், இறைவன் தாமே மனமுவந்தருளிய தபோ பலத்தால், அனைத்துச் சிவத்தலப் பிரதோஷ உற்சவக் காட்சிகளையும் எங்கிருந்தும் காணும் சங்கல்ப நேத்திரத் தவ சக்திகளைப் பூண்டவர். தஞ்சாவூர் அருகே கண்டியூர் சிவத்தலத்தில் சதாதபஸ் சித்தரின் திருஉருவைக் கண்டு தரிசித்து மகிழ்ந்திடலாம். குபேர மூர்த்திக்குப் பிரதோஷ மஹிமையை உபதேசித்த உத்தமச் சித்தர்பிரான்.

ஸ்ரீசதாதப சித்தர் கண்டியூர்

எனவே, பிரதோஷ நாட்களிலும், தினசரியும், மாலையில் பிரதோஷ வேளையிலும் “சதாதபஸ் சித்தரைச்” சிந்தனையில் இருத்திச் சித்தர்களின் சிவமயச் சிந்தனையில் திளைக்கும் சிவநாமத்தை ஈர்த்துப் பொருத்துதல் அற்புதமான நல்வர சக்திகளைத் தருவதாகும்.

திரயோதசித் திதி நிரவும் கால அளவைப் பொறுத்துப் பிரதோஷ நாட்களிலும், நேரங்களிலும் பல வகைகள் உண்டு. தினமுமே மாலையில் சதாதபஸ் சித்தர் திருக்காளஹஸ்தித் தலத்தில் பங்கேற்கும் நித்தியப் பிரதோஷப் பூஜை வகைகள் விதவிதமாகச் சூக்குமமாக நிகழ்கின்றதெனில், எவ்வளவு கோடி கோடியாம் பிரதோஷ வகைகள் அமைகின்றன் என எண்ணிச் சிவபாதத்தில் மலைத்துத் திளைத்திருங்கள்!

பிரதோஷ நடனக் காலம் எல்லையற்றது!

ஆதிசிவன், நந்தியெம்பெருமானின் திருக்கொம்புகளில் திருநடனம் ஆடிய நேரமே பிரதோஷம் என நாமறிவோம். ஆனால் சிவபெருமானின் பிரதோஷ நடனம் ஆடிய திருக்காலமானது, நாம் சாதாரணமாக எண்ணுவது போல, ஒரு திரயோதசித் திதிப் பிரதோஷக் காலமான மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலான நேரம் மட்டுமல்ல! இந்த நாள், இத்தனை மணி என்று கால அளவுக் கட்டத்திற்கு அடிமைப்பட்டுப் போன நமக்குப் புரிபடவே இத்தகையப் பிரதோஷத் திதி அளவை வந்தமைந்துள்ளது. உண்மையில் “காலத்தால்” மனிதனின், உலகின், ஆயுள், ஸ்திரம், தோற்றம் போன்றவை கட்டுப்படுவதையும் ஒரு வகை “தோஷம்” என்றே உத்தம ஆன்மீக நிலையில் குறிப்பிடுவர்! மொத்தத்தில் “மாறுகின்ற” எதுவுமே, “மாயா தோஷத்திற்கு” ஆட்பட்டதே! மாறாதது இறைப் பரம்பொருளே! எனவே எவ்வகை தோஷமும் இல்லாதவர் ஆண்டவரே! எனவேதான் பிற (வகைத்) தோஷங்கள் இல்லாத பிரதோஷ நேரம் பரம்பொருளாம் ஈஸ்வரனுக்கே உரியதான விசேஷமான பூஜை நேரமாகிறது.

ஆண்டவனே தந்தருளிய “சுயம்பு சக்தி” நேரமே பிரதோஷ நேரம்!

இதனால்தான் ஆண்டவனே நமக்குத் தேர்ந்தெடுத்துத் தந்த நேரமான பிரதோஷ நேரமாக, “பிற வகைத் தோஷங்கள்” எதுவுமே இல்லாத நேரமாக அமைகிறது. ஆம், நந்தியின் திருக்கொம்புகளில் திருநடனம் ஆடும் சிவபத நேரம் இறைவனாலேயே ஆக்கப் பெற்றதால் “சுயம்பு நேரமாக” இறைவனால் உற்பவிக்கப் பெற்றதாகவே அமைகின்றது.

நாம் வாழும் கலியுகத்தையுமே “கால தோஷம்” என்ற ஒன்று பற்றி உள்ளது. “கலிதோஷ வகைகளில்” இதுவும் ஒன்று. ஏனெனில் எல்லையற்றதான ஆதீதமான காலமானது, தற்காலத்தில் ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக, 60 நாழிகையாகக் குறுக்கப்பட்டுள்ளது அல்லவா! இதவும் ஒரு வகைக் கால தோஷமாகும்.

மேலும், கடவுள் அளித்த நேரத்தை நல்லபடியாக நல்வழியில் பயன்படுத்தாமல் கேளிக்கை, சும்மா இருத்தல், பயனின்றிக் கழித்தல், புகை, மது போன்ற மாயா மயக்கத் தீச்செயல்களில் பகுத்தறிவைத் தீயவற்றுக்கு அடிமைப்படுத்தி வாழ்தல் நன்றன்று. இவ்வகையில் காலத்தை விரயம் செய்யும் ஒவ்வொருவருக்கும் “கால தோஷம்” பலமாகப் பற்றுகின்றது. இவைதாம் “மிருத்யு தோஷம்” என்பதாக, இளவயது மரணம், அகால மரணம், உணர்வற்ற நிலையில் மரணமடைதல், புற்று நோய்க் கொடுமைகளுடன் நித்தியக் கண்டமாக வாழ்தல் போன்றவாறாக வந்தமைகின்றன.

ஸ்ரீஅகத்தியரும் ஸ்ரீராமரும்
நாச்சியார் கோவில் திருச்சி

நேரத்தை வீணாகக் கழித்தலும் “கால தோஷமாகும்”!

இவ்வாறு தினந்தோறும் வீணாகக் கழித்த காலமும், கால தோஷமாகப் பெருகிப் பெருகி, ஒவ்வொருவருக்கும் காலத்தை முடக்கிய பெரும் பாவமாக வந்து சேருகிறது. இவற்றை எல்லாம் அவ்வப்போதேனும், ஓரளவேனும் நிவர்த்தி செய்ய நல்வாய்ப்பளிக்கும் வண்ணமாக 15 நாட்களுக்கு ஒரு முறை வருவதாக பிரதோஷ காலமாக அருட்பெரும் பரிசாகக் கலியுக மக்களுக்கு வந்தமைந்துள்ளது. சந்தியா வேளையில் வந்தமையும் விரதப் பண்டிகையாகவும் பிரதோஷம் அமைவதால் சந்தியா வேளைப் பூஜா பலன்களும் இதில் திரண்டு வந்தருள்கின்றன. மேலும், பகலும் இரவும் சந்திக்கும் “முததீத வர” சக்திகள் நிறைவதாலும் பிரதோஷ பூஜை நன்கு மேன்மை பெறுகிறது.

பிரதோஷ நேரத்தில் ஆலயத்தில் இருந்து கொண்டு மிகச் சாதாரணமான முறையில் வணங்குவதால் கூட, எல்லையற்ற வகையில் கால தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன. அற்புதமான பலன்கள் விளைகின்றன என்றால், இதில் கூடுதல் வழிபாடுகளை ஆக்கப் பூர்வமாகப் பிணைத்திடில் என்னே இதன் மஹிமை!

கால விரய தோஷத்தை நீக்க வல்லதும் “பிரதோஷ பூஜையே!”

பிரதோஷ நேரம் அமைவதற்குக் காரணமான “சிவநடனம்” நிகழ்ந்த காலத்தைப் பகுத்தறிதலும் நம் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட விஷயமாகும். நமக்கு ஓரளவு புரியும் வகையில் சொல்வதானால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாகவே, நந்தியின் திருக்கொம்புகளில் “சிவநடனம்” நிகழ்ந்தது. எனவே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிகழ்ந்த இந்த இறையனுபூதியைத் திரயோதசித் திதியாக, சுமார் 60 நாழிகைக்குள்ளும், பிரதோஷ நேரமாகச் சுமார் மூன்று மணி நேரமுகாகக் குறுக்கித் தருவதெனில், பிரதோஷத்தின் ஒவ்வொரு நொடியிலும் திரளும் கோடி கோடியாம் சிவசக்திப் பரிமாணங்கள்தாம் என்னே என்னே! எனவே, இனியேனும் பிரதோஷ நாளில் ஒவ்வொரு நொடிக் காலத்தையும் நன்கு பயன்படுத்திக் கொள்க! இதனால் விளையும் கூடுதல் பலன்களில் ஒன்றே காலத்தை விரயம் செய்ததற்கும் பரிகாரமும் கிட்டுவதாகும்! இதுவே பெரும் பாக்யமாகி எண்ணற்ற ஜன்மங்களுக்கும் சாப விமோசனமும் தருவதாக ஆகின்றதன்றோ! கலியுகத்தில் பெரும்பாலானோரைச் சூழ்ந்து இருப்பது “காலவிரயச் சாபமே!” ஒரு நாளில் ஒரு மணி நேரத்தைக் கூட நல்வழியில் செலுத்தாமல் சுகபோகம், கேளிக்கை, அரட்டை தேவையற்ற உறக்கம், சோம்பேறித்தனத்தில் கழித்தலும் சகஜமாகி வருவது வேதனைக்குரியதே!

காலத்தை விருத்தி செய்யும் பிரதோஷப் பூஜைக் காலம்!

எனவே, பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக விரிந்து பரந்த பிரதோஷக் காலச் சிவநடனமானது, தேவகால அளவிலும் மிகவும் குறுகியதாகிறது! அதாவது சித்தர்கள், மஹரிஷிகள், யோகியர், ஞானியர்தாம் பிரதோஷத்தின் முழுக் காலஅளவோடு பூஜிக்க வல்லார். எனவே, பிரதோஷம் என்பது மனித காலத்துக்கு அப்பாற்பட்டதான இறையாண்மையாகப் பரந்து, விரிந்து நிறைந்து பரிபூரணமாக ஆக்கப் பெற்றுள்ளதாகும்.

இதனால்தான் தினமும் ஸ்ரீகால பைரவரைக் காலையும், மாலையும், வழிபடுவதே மனிதனுக்கு மிகவும் பழக்கப்பட்டுப் போன 24 மணி நேர வரையறைக்கு உட்படாத கால சக்திகளை உண்மையான பகுத்தறிவால் நன்கு உணரவும், காலதோஷங்கள் நம்மைப் பற்றாமல் இருப்பதற்கும் உதவுவதும் ஆகும்.

தினசரிப் பிரதோஷ வழிபாடு!

ஒரு நாளில் திரயோதசித் திதி எவ்வளவு நேரம் நிரவி உள்ள காலத்தைப் பொறுத்தும் பிரதோஷ வகைகளும், பலன்களும் நிர்ணயம் ஆகின்றன. தினமும் நித்தியப் பிரதோஷ நேரமான மாலை நேரத்தில் (மாலை சுமார் 4.30 மணி முதல் 6.30 மணி வரை), பிள்ளைகளுடன் பெற்றோர்கள் சேர்ந்து சிவத்துதிகளை, குறிப்பாக “திருவாசகத்தின் மூத்தத் திருப்பதிகம்” மற்றும் பிரம்ம முராரி.... எனத் தொடங்கும் துதிகளை ஓதி வருதல், மந்த புத்தியை நிவர்த்தி செய்வதற்கான பூஜா பலன்களைத் தருவதாகும்.

பிரஹ்ம முராரி சுரார்ச்சித லிங்கம் !

தினமும் மாலையில் நித்தியப் பிரதோஷ நேரமாக பாவனை செய்து, மந்தாரைப் பூக்களால் அர்ச்சனை, மந்தாரை இலையில் அன்னதானம் ஆற்றுதலும் பிரதோஷ பூஜா பலன்களை நன்கு விருத்தி செய்யும். இதனால் ஒருவரிடம் கொட்டிக் கிடக்கும் தேவையற்ற தாழ்வு மனப்பான்மை எண்ணங்கள் விரைவில் அகன்று, வாழ்வில் முன்னேற்றம் பெற உதவும்.

மொத்தத்தில், தினசரிப் பிரதோஷ நேரத்தில், வீட்டில் ஆற்றுகின்ற சிவபூஜையும், சிவாலயத்தில் ஆற்றும் தரிசனமும் புத்திக் கிரணங்களை நன்கு விருத்தி செய்யும் நல்ல நினைவாற்றலையும் பெற்றுத் தரும்.

ஆன்ம சக்திக்கும் ஆக்கம் தரும் ஆதித்ய ஹ்ருதயத் தோத்திரங்கள்!

அகஸ்திய மாமுனி ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை ஸ்ரீராமருக்கு உபதேசித்த தலங்கள் பல உண்டு. பிரதோஷ நாளில் காலையில் இத்தலங்களில் ஸ்ரீஆதித்ய ஹ்ருதயத் தோத்திரம் ஓதியும், மாலையில் பிரதோஷ வழிபாடுகளையும் ஆற்றுதல் மிகவும் விசேஷமான பலன்களை நல்குவதாகும். அதாவது நல்வகையில் பயனாகும் அறிவுக் கூர்மையையும் தருவதாகும்.

அகஸ்தியரும், சூரிய மூர்த்தியும் எழுந்தருளி இருக்கும் சிவத்தலங்களில் பிரதோஷ நேரத்தில் காலையில் இத்தலங்களில் ஸ்ரீஆதித்ய ஹ்ருதயத் தோத்திரம் ஓதி மாலையில் நித்தியப் பிரதோஷ தரிசனமாகப் பெறுவதால் பழைய துர்நினைவுகள், தகாத சம்பவங்கள், அதர்மமான காரியங்கள், இழிச்செயல்கள் அடிக்கடி நினைவுக்கு வந்து பாதிக்காமல் தக்க நிவாரணம் பெறவும், பாதிக்கப்பட்டோர்க்கு நிவாரணம் அளிக்கவும் வழிவகை செய்யும். மேலும் பிள்ளைகளுக்கு நல்ல ஞாபக சக்தியும், நினைவுத் திறனும் கூடவும் உதவும், வயதாகிய நிலையில் அடிக்கடி ஞாபக மறதி ஏற்பட்டுப் பிறருக்கு துன்பம் தரும் நிலை வாராது காக்கும்.

மனத் தெளிவு பெற

மனத் தெளிவு பெற உதவும் ஆத்ம விசார உரையாடல் !

அடியார்: தியானம், யோகம், ஆத்ம விசாரம் இவற்றைத் தினசரியே ஆற்றி வர வேண்டுமா?

சத்குரு: ஆம், இவையும் ஆலய வழிபாடு, தோப்புக் கரணம், அடிப்பிரதட்சிணம், அர்ச்சனை, அபிஷேகம் போலத் தினமுமே தூல உடலில் ஆற்ற வேண்டிய சூக்கும ரீதியான வழிபாடுகளாக அமைகின்றன.

வழிபாடு, பூஜை என்பதானவை அர்ச்சிப்பது, அபிஷேக ஆராதனைகள் செய்வது மட்டுமல்ல, உடல் உறுப்புகளால் பூஜை, கால்களால் வலம் வருதல் மற்றும் பாத யாத்திரை செல்லுதல், வாயால் ஓதுதல், பாடுதல், கைகளால் பூக்களைத் தொடுத்தல் எனப் பல வகைகளில் உடல் சுத்தியும், மன சுத்தியும் கிட்டும். உண்மையில், நாம் உண்ணும் உணவு கூட வயிற்றுக்குள்  எப்போதும் துலங்கிக் கொண்டு இருக்கும் அதீத நெருப்பு சக்தியான பிராணசக்தி அக்னிக்காக இடும் ஆஹுதி ஆகும்.

ஆம், உத்தம ஆன்ம விளக்கங்களில் வயிறு என்பது ஒரு ஹோம குண்டமே! உணவு உண்ணும் போது கூட உணவேற்றலையும், இறையருளைப் பெற உதவும் ஜீவ சக்திச் சாதனமாகவும், உடலாம் கோயிலில் இறைவன் ஆத்மமாய் உறைவதைப் பேணவும் – ஆற்றும் ஆஹூதி பூஜையே என உணர்ந்து வருதலும் உடல் சுத்திக்கும், மன சுத்திக்கும் மிகவும் உதவும்.

எளிய தியானம்!

தியானம் என்பது.. அலை பாயும் மனதை முதலில் தணித்தல், மன ஓட்டத்தைச் சீராக்குதல், பிறகு ஒரு நிலைப்படுத்துதல், பின் ஒருமுகப் படுத்துதல் எனப் பல நிலைகளைக் கொண்டது ஆகும்.

இதனைத் தினமும் கடைபிடித்து வந்தால்தான் பல ஆண்டுகளில் எழும்பிய பலவிதமான எண்ணங்களால் மாசுபட்டிருக்கும் மனம் சிறிது சிறிதாகச் சுத்தமாகும். ஆனால் மனம் சிறிது சுத்தமானால் கலியுகத்தில் அந்த நாளிலேயே சேரும் பகைமை, குரோதம், விரோத காம எண்ணங்கள் மீண்டும் மனதில் கூடி அழுந்தி வரும். எனவே, தினமுமே உடலைத் தூய்மை செய்வதைப் போல, மனதையும் சுத்திகரித்து வந்தாக வேண்டும் என்பதால் தான் தியானமும் தினசரி பூஜையாகிறது.

மிகமிக எளிமையானத் தியானம் யாதெனில், ஒவ்வொரு நாளும் ஒரு நற்காரியத்தைச் செய்து வருக! பசுவிற்கு, பட்சிகளுக்கு உணவிடல், ஆலயத்தில் விளக்கேற்றுதல், கோலமிடுதல், குப்பைகளைப் பொறுக்குதல், சிறு அளவிலாவது அன்னதானம் போன்று இவற்றைச் செய்தவுடன், வீட்டில் தியானத்துக்கென ஒதுக்கிய இடத்தில் நன்கு சீராக அமர்ந்திடுக!

பிறகு கண்களை மூடிக்கொண்டு ஓங்காரத் தியானம் செய்து விநாயகரை வணங்கிடுக! இதன் பின் அந்த நற்காரியத்தை நிமிடம், நிமிடமாக அது நிகழத் தொடங்கியது முதல், நிறைவேறியது வரை, மனதுக்குள் திரைப்படம் போல் உருவகித்துக் கொணர்தல் வேண்டும்.

உடலால் செய்த நற்காரியங்கள் ஆதலால், அவற்றைச் சிந்தையில் கொணர்கையில் அதில் பங்கு பெற்ற அனைத்து உடல் உறுப்புகளையும் அரவணைப்பதால் அலை பாயாது இந்த நற்காரிய சித்வழிமயத் தியானத்தில் முதலில் மனம் விலகிச் செல்வது கட்டுப்படும். இதுவும் சித்தர்கள் அளிக்கும் எளிமையான தொடக்க நிலைத் தியான முறையாகும்.

அடுத்தபடியான எளிய தியான முறை தனக்குப் பிடித்தமான தெய்வ மூர்த்தி, ஆலயம், சித்தர், மஹானை மீண்டும் மீண்டும் எண்ணுதலாகும். மனம் எப்படித்தான் வழி பிசகிப் போனாலும் அச்சிந்தனையை இடைவிடாது தொடர்வது நல்லது, இதுவும் மிகவும் முக்கியமானது.

யோகத்தில் எழும் சக்திகள்!

“யோகம்” என்பது கலியுகத்தில் சற்று உடலை வருத்திச் செய்வதாகும். நன்றாக நிமிர்ந்த பத்மாசனத்தில் அமர்தல் என்பது, நன்கு பழகினால் அன்றி ஆங்காங்கே உடலில் வலிகளை ஏற்படுத்தும். இந்த வலிகளின் ஊடே சுவாசத்தைச் சீராக்க முனைவதால், உடல் வலிகளை, வேதனைகளைப் பொறுத்துக் கொள்வதான சற்றுத் தியாக மனப்பான்மை எழுவதாலும், இதில் சுயநலம் சிறிது சிறிதாக அகல உதவுவதாலும் யோகத்தில் உடல், மனம், உள்ள சுத்திகள் சேர்ந்து கிடைக்கும்.

“ஆத்ம விசாரம்” என்பது பகுத்தறிவை ஊக்கப்படுத்தி, ஆக்கம் பெறச் செய்து தினசரி வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்ள உதவுவதாகும். புகை, மது, தீய சகவாசம் மற்றும் கெட்ட வழக்கங்களுக்கு ஆளாகிய கலியுக மனிதச் சமுதாயம், நாள் முழுதுமே முழுமையான ஆறறிவுடன் வாழ்வதில்லை. நாம் அடிக்கடி உரைத்து வருவது போல், ஓரறிவு, ஈரறிவு போன்ற குறைந்த அறிவு நிலைகளிலேயே பெரும்பான்மையான மனிதர்கள் வாழ்வதால், ஆத்ம விசாரம் என்பது தனக்குள்ளேயே எதற்குமே பகுத்தறிவுப் பூர்வமாக நல்விடை தேடுவதாகும்.

அனைத்தும் நிகழ்வது அவனருளால்தான்!

ஏன், எப்படி, எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விட..,

ஏன், எப்படி, எவ்வாறு “இறையருளால்” நடந்தது என்பதாவதே பகுத்தறிவு நிறைந்த ஆத்ம விசாரமாகும். இறைப் பொருளின்றிப் பகுத்தறிவு செம்மையாகாது, சாதாரணமானதையும், லௌகீகமானதையும், எதையுமே ஆத்ம விசாரம் செய்து பார்த்திடலாம். எனவே ஆத்ம விசாரமும் தினசரி ஆற்ற வேண்டியதே!

உதாரணமாக,

இன்று ஏன் ஸ்கூட்டர் பஞ்சரானது?

கால் ஏன் தடுக்கியது?

தலைவலி ஏன் வந்தது என்பது முதல், இந்தக் காரியம் இப்படி ஏன் நடந்தது, அடுத்து என்ன செய்வது?

-போன்ற வகையிலான அனைத்துக் கேள்விகளுக்கும் உங்களுக்குள் உட்பூர்வமாக விடைகளைப் பெற உதவுவதே ஆத்ம விசாரமாகும். பிறகு இத்தகைய விடைகளைத் தக்க சத்குருவிடம் உரைத்து மேலும் விளக்கங்களைப் பெற்றிட வேண்டும். இதனைத் தினமும் திறம்பட ஆற்றி வந்தால் சத்குருவே உள்ளிருந்து விடைகளை அளித்து மேன்மை தருவார்.

இதைக் கேட்ட உடனேயே, “என்னுடைய சத்குரு யாரெனத் தெரியவில்லையே!” என்றே பலரும் எண்ணுவர். எந்த சத்குருவும் “அடியேன் தான் உன் சத்குரு” எனக் கலியுகத்தில் நேரடியாக உரைப்பதில்லை! ஏனெனில் இன்று “சத்குரு” என ஏற்று, நாளையே வழிமாறி, சத்குருவாக வரித்தவரை ஏசிச் செல்லும் பித்து மனம் கொண்டவர்களே கலியுகத்தில் அதிகமாதலின், “ஆழ்ந்த, பரிபூரண நம்பிக்கை கொண்டு” சத்குருவை நாடி அமைவதாகவே கலியுகச் சத்குருவின் பரிபாலனம் அமைகின்றது. அதுவரையில் சித்தர்களின், மஹான்களின் ஜீவசமாதிகள் மூலமாகவும், முறையாக நிகழ்த்தப் பெறும் ஆத்ம விசார மண்டலங்கள் மூலமாகவும் எங்கேயோ இலைமறைக் கனியாய் உறையும் சத்குரு வழிகாட்டுவார் என அறிக!

தட்ப வெப்ப நிலை

கர்மச் சாரத் தட்ப வெப்ப நிலை !

உலகில் விஞ்ஞானத்தாலும், மனிதர்களாலும் கை வைக்க முடியாத இயற்கைத் துறைகளுள் ஒன்றே தட்ப வெப்ப நிலையாகும். இதிலும் “செயற்கை மழை” என்று துவங்கி, விஞ்ஞானமானது வானத்தை ரசாயனப் பொருட்களால் மாசுபடுத்திப் பின்வாங்கிய நிலையையும் அறிவோம். என்னதான் “செயற்கை மழை” முறை என்றாலும், மழையைப் பெய்வித்துத் தர வேண்டிய மேகங்களை விஞ்ஞானத்தால் சிருஷ்டிக்க முடியுமா? இதற்குப் பதிலாக, ஆழ்ந்த இறை நம்பிக்கையுடன் கூடிய பிரார்த்தனை எதனையும் சாதிக்க வல்லதே!

மேலும் தேவையான மழைப் பொழிவிற்காக ஆயிரமாயிரம் மந்திரங்கள், ஹோம வழிபாடு, ஆலய நந்தி குண்ட பூஜை முறைகள் இருக்கையில், இவற்றை முறையாக அறிந்தோரை நாடிக் கடைபிடிப்பதுதானே உத்தமமான பகுத்தறிவு! இதை விடுத்து, இயற்கையையே முறுக்கி, இயற்கையைப் பகைத்துக் கொண்டால், இதன் விபரீதங்கள் ஒட்டு மொத்தமாகச் சமுதாயத்தை அல்லவா இயற்கைக் கொந்தளிப்புகளாக வந்து தாக்கும்!

மூன்றில் முகிழ்ப்பது!

தட்ப வெப்ப நிலை என்பது இறைவனின் படைப்பு. அந்தந்த நிலப்பகுதிக்கு ஏற்ப தொன்று தொட்டுப் பருவக் கால தட்ப வெப்ப நிலை அமைந்து வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு பகுதிக்கு “த்ரய தூலம் அதாவது முக்கூட்டுப் புனற்புலம்” என்ற முறையில் மூன்று வகைத் தட்ப வெப்ப நிலை அமைப்புகள் இயற்கையாகவே அமைகின்றன.

இதில் முதலாவதாக, இயற்கையாகவே அந்தந்தப் பகுதிக்கு அமையும் தட்ப வெப்பப் பருவக் கால அமைவு., இதைத்தான் பாலை, நெய்தல் என அந்தந்த நிலப் பரப்பிற்கான தட்ப, வெப்ப நிலைகளைப் பொறுத்து நிலப் பகுதிகளைப் பகுத்துள்ளனர்.

இரண்டாவதாக, அந்தந்த நிலப் பகுதியில் வாழும் மக்களின் அறநெறிப் பாங்குகளுக்கு ஏற்ற வகையில் ஏற்படும் மழை புயல், சூறாவளி போன்றவை ஆகும். அதாவது தினசரி தட்ப வெப்ப அம்சங்கள் அந்தந்தப் பகுதி மக்கள் தினமும் ஆற்றும் காரியங்களின் நல்லது, கெட்டது என விளைவுகளைப் பொறுத்தும் மாறுபவையாகும். உண்மையில் இதை வைத்தே அந்தந்த நிலப் பகுதியின் இரவு, பகல் நேரம் அம்சங்களும் மாறுபடும், மக்களின் வழிபாட்டுப் பலாபலன்களும் இவற்றில் பங்குபெறும்.

மூன்றாவதாக மக்களின் பூஜைகளுக்கு ஏற்பச் சித்தர்களின், மஹான்களின் வருகைக்கு உரியதாக அமையும் தட்பவெப்ப நிலையாகும். திடீரென்று நல்மழை பொழிதல், சுகந்தமான, ஆரோக்யமான காற்று வீசுதல் போன்றவை இவ்வகையில் அடங்கும்.

உத்தராயனம், தட்சிணாயனம், கத்ரி போன்ற பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பெறும் பருவ வகைகள் யாவும் அந்தந்தக் காலத்தில் ஆற்ற வேண்டிய பூஜை வகைகளைக் குறிப்பனவாகும். இதில் தினமும் அந்தந்தப் பகுதியில் மக்கள் செய்யும் நல்லன, தீயவற்றுக்கு ஏற்ப இரவு, பகல், தட்ப வெப்ப அம்சங்கள் மாறுபட்டு கொண்டே இருக்கும்.

சுகந்தம் தரும் சுக்ர தீபங்கள்

ஆலய விளக்கில் அற்புத விளக்கங்கள்!

ஆலயங்களில் ஏற்றப்படும் விளக்குகளின் தீபங்களின் வண்ணமும் அந்தந்தப் பகுதியில் நிலவும் இயற்கைச் சக்தித் தன்மைகளை நன்கு சுட்டிக் காட்டும். விளக்குக் கதிர்களின் ஒளிக்கற்றைத் தன்மை, நிறம் மாறுதல், திரி நுனி கருப்பாதல் என்றவாறான தீப இலக்கணங்களைக் கொண்டு அந்தந்த நிலக் கர்ம பரிபாலனத்தை அந்தந்த ஆலய தரிசனத்திற்கு வரும் மகரிஷிகளும், சித்தர்களும் நன்கு கணித்துத் தேவையான பரிகாரங்களை வழிபாட்டு முறைகளாக அருள்கின்றனர். இதனால்தான் சமுதாயத்தில் எந்தவிதமான நற்சக்திகள் குறைகின்றனவோ அவற்றை நிவர்த்தி செய்யவே குறித்த தைலங்கள், குறித்த வகைத் திரிகளுடன் தீபங்கள் ஏற்றப் பெறுவதற்கான வழிமுறைகளைச் சத்குருமார்கள் அளிக்கின்றனர். எனவே இறைவன் அளித்துள்ள அந்தந்தப் பகுதிக்கான தட்ப, வெப்ப நிலைகளுக்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு.

சமுதாயத்தில் ஒவ்வொருவரும் செய்யும் காரியங்களின் விளைவுகளைப் பொறுத்துச் சமுதாயத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாகும் என்பதும் இறை நியதியே! இவற்றுக்கு ஏற்பத் தேவையான மாற்றங்களை ஆற்றுதற்கு இறைத் தூதுவர்களாகச் சித்தர்களும், மஹான்களும் வருகின்றனர். இவர்கள் வருவதையே சுகந்த மழை, சுகந்தத் தென்றல் உரைவிக்கும்.

தட்ப வெப்ப நிலைகள் மக்கள் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் நன்கமைய, தினமும் ஆலயங்களில் ஆறு கால பூஜைகளை ஆற்றி வர வேண்டும். இதற்கான விசேஷமான தலங்களே அக்னீஸ்வரர் என (திருக்காட்டுப்பள்ளி, வயலூர்) இறைவன் அருளும் ஆலயங்களும், நந்திக் குண்டம் என்பதாக ஒரு தொட்டிக்குள் நந்தி உறைந்தருளும் (புதுக்கோட்டை – திருக்கோகர்ணம்) தலங்களும் ஆகும்.

கலியுகத்தில் எல்லா இடங்களிலும் கொள்ளை, திருட்டு, தீய செயல்கள் தாமே பெரிதும் நிகழ்கின்றன என்று எண்ணி மனம் தளராதீர்கள். தெய்வீக நியதிப்படி ஒரே ஒரு நன்மகன் கூடப் பத்தாயிரம் தீயவர்களின் தீய செயல்களை அடக்கித் தணிக்க வல்ல யோக வல்லமையைப் பெறுதலும் உண்டு. தான, தர்ம விசேஷமான பூஜைகளை இப்பூவுலகு அறியா வண்ணம் ஆத்மார்த்தமாக ஆற்றுபவர்கள் ஆங்காங்கே இருப்பதால் இவ்வகை நற்காரியங்கள் தட்ப வெப்ப நிலைகளில் தேவையான நல்மாற்றங்களைத் தந்திடும். தட்ப வெப்ப நிலைகளை ஏற்படுத்தித் தர நல்வகையில் ஹோரை நேரப் பூஜைகள் உதவும்.

நந்தி குண்டம் நேமம்
திருக்காட்டுப்பள்ளி

மாமறையால் மாமழை!

எனவே தட்ப வெப்பம் என்பது பிருத்வி சக்தி மார்கமாக இயற்கையாக வந்தமைவதும் மட்டுமல்லாது, அந்தந்தச் சமுதாயப் பகுதி ஜீவன்களின் கர்ம பரிபாலனத்தைப் பொறுத்தும், அந்தந்தப் பகுதி மக்கள் தினசரி ஆற்றும் வழிபாடு, பூஜா சக்திகளின் திறன் மற்றும் அவர்களுடைய தினசரிச் செயல்களின் கர்ம வினைகளின் விளைவுகளைப் பொறுத்தும், அந்தந்தப் பகுதிக்கு விஜயம் செய்யும் சித்தர்கள், மஹரிஷிகளின் அருட்பாங்காலும் வந்தமைவதாகும் என அறிக!

எனவே வெயிலோ, மழையோ அனைத்தும் மேற்கண்ட வகையில் வந்தமைவதே என்றத் தெய்வீகப் பாடத்தை வாழ்க்கையில் நன்கு உணர்ந்து அறிதலும் வேண்டும். மழை வேண்டி வருண ஜபம், ஹோம பூஜைகளை ஆற்றுதல் போன்றவை மூலமாகவும் மூன்றாம் வகையில் தட்ப வெப்ப அம்சங்களை நன்முறையில் நிலை நிறுத்தித் தருவதாகும்.

மும்மாரிப் பெய்தல் வற்றாத நல்வரமே!

தமிழ் நாட்டில் பிற மாநிலங்களைப் போல ஆண்டு முழுவதும் நீர் வற்றாத ஜீவ நதிகள் அமையவில்லையே என்று பலரும் ஏங்குவதுண்டு. அனைத்தும் இறைவன் செயலன்றோ! மாதம் மும்மாரி பெய்த முத்தமிழ்த் தெய்வீகத் திருநாடே முற்காலத் தர்மமிகு தமிழகமாகும். பண்டைய அறம்சார்த் தமிழ் வேந்தர்கள் போல தர்ம ரீதியான ஆட்சி முறை, முறையான ஆறு வேளை ஆலய வழிபாடுகள், ஏழைகளுக்கான தான தர்மங்கள், ஜாதி, மத பேதமின்றி அமையும் சத்சங்க இறைப் பணிகள் மூலம் இன்றும் தமிழ்நாட்டிற்கே உரித்தான பூர்வீகமான இயற்கைச் சொத்தாகத் துலங்கும் “மாதம் மும்மாரி பெய்யும் புனிதமான தட்ப வெப்ப நிலையைக்” கொணர்தல் முற்றிலும் ஆன்மீகப் பூர்வமாகச் சாத்தியமானதே!

உண்மையில் நதிகளை விட, நிறைந்து பரந்த மழைப் பொழிவு மூலம் நற்கதிர்க் கிரணங்களை எளிதில் பூவுலக மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து வகை ஜீவன்களுக்கும் கிட்டும் வண்ணம் நன்கு அளித்திட முடியும். இதனால்தான் தற்போது எங்கு நன்மழை பெய்தாலும், ஏதோ நற்காரியம் நிகழ்ந்திருக்கிறது!” ஏதோ மஹான்கள், சித்தர்கள் வருகின்றார்கள., என்ற வகையில் சமுதாயத்தில் நல்உரையாடல் நிகழ்கின்றதைக் காண்கின்றோம்.

அருணையின் ஆத்மீக மழை

திருஅண்ணாமலை போன்ற திவ்யமான ஆதிமூலச் சிவத் தலங்களில் மழைப் பொழிவு ஏற்படும் போதெல்லாம் உத்தம லோகச் சித்தர்கள் குழுமி கிரிவலமாக வருகின்றார்கள் என்பது பொருளாகும். இதற்காகத் தான் பலரும் திருஅண்ணாமலையில், சித்தர்களின் தரிசனம் கிட்டும் என்பதற்காக இங்கு மழை பெய்யும் போதெல்லாம் கிரிவலம் வருவதைப் பெரும் பாக்கியமாகக் கொள்கின்றார்கள். ஆம், இது சத்தியமான, நிதர்சனமான உண்மையே! காரணம், இறைவனே மாமறைப் பெருமலையாய் இங்கு ஒளிர்ந்து உறைவதால் திருஅண்ணாமலையில் ஒவ்வொரு டிகிரி தட்ப வெப்ப அம்ச நிலை மாறுதல்களுக்கும் ஆயிரமாயிரம் தெய்வீகக் காரணங்கள் உண்டு.

மானுடர்கள் மட்டுமன்றி, எறும்புகளும், பாம்புகளும், பறவைகளும், ஊர்வனவும், உலாத்துவனவுமாய் அனைத்து ஜீவன்களும் எப்போதும், எந்நாளும், எந்நேரமும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்த வண்ணம் இருப்பதால், திருஅண்ணாமலைக்குரிய – உலகில் வேறெங்கும் காண இயலாத வகையில் மாபெரும் இறை மகத்துவமாக இருப்பதே – ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் எவரேனும், எந்த ஜீவனேனும் கிரிவலம் வந்த வண்ணமாக இருப்பதாகும்.

இதனை எக்காலத்தும் நன்கு அறுதியிட்டுக் கூறிடலாம். அந்த அளவிற்கு உலகின் ஆன்மீக மையப் பெருந்தலமாகத் துலங்குவதே அருணாசலப் புண்ணிய பூமியாகும்.

கீழ்ச்சூரிய மூலை

மலைச்சார மழைச்சாரலில் மாதவர்கள்!

ஒருமுறை பலத்த மழையில் மிகவும் வயதான முதியவர் மிகவும் தள்ளாடிய நிலையில் நள்ளிரவில் கிரிவலம் வந்து கொண்டிருந்த போது, “சற்று ஓய்வெடுத்து விடிந்து செல்லுங்களேன், தங்களுக்குத் தான் உடம்பு சரியில்லையே!” என்ற போது அவரும் ஆணித்தரமாக, “பலத்த மழைக்குக் காரணமே சித்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவது தானே! இந்த நிலையில் தானே அடியேன் அவர்களைத் தரிசிக்க முடியும். அப்படியே உயிர் போனால் என்ன? கிரிவல இறைப்பணியில் உயிர் பிரிந்ததாகச் சித்திர குப்த மூர்த்தி கணக்கெழுதுதல், அடியேனின் பிதுர்களுக்கு (மூதாதையர்களுக்கு) மிகவும் ப்ரீதி தருவதன்றோ!” என உரைத்து மிகவும் மனோ தைரியத்துடன், ஆழ்ந்த நம்பிக்கையுடன் கிரிவலம் புரிந்ததையும் கண்டு ஆனந்தமுற்றோம்!

எல்லாமே இங்கே பூஜைதான்!

எனவே, திருஅண்ணாமலையில் பெய்யும் ஒவ்வொரு மழைத் துளிக்கும் ஒவ்வொரு பாறைக்குள்ளும் எண்ணற்றச் சித்தர்களும், யோகியர்களும், ஞானியரும், மஹான்களும் தவம் புரிகின்றனர் எனில் இங்கு பெய்யும் ஒவ்வொரு சூரிய, சந்திர, நட்சத்திரக் கிரணத்திற்கும், மழைத் துளிக்கும் அபரிமிதமான அற்புதமான தெய்வீக சக்திகள் உண்டல்லவா! பூவுலகில் உள்ள அனைத்துச் சுயம்பு லிங்கங்களும் அருணாசலத்தில் இருந்தே உற்பவித்ததாய்த் துலங்குவதால் அண்ணாமலையில் பெய்யும் வெயில், மழை, சந்திர ஒளிப் பரல்கள் யாவும் பூவுலகின் அனைத்துச் சுயம்பு லிங்கங்களுக்கு அந்தந்த மூர்த்திகள் ஆற்றும் அபிஷேக ஆராதனைகளாகின்றன.

திருஅண்ணாமலையில் மழை பெய்தால் அது வருண பகவானின் பூஜை, மேகங்கள் சூழ்ந்தால் தேவர்களின் பூஜை, இடி இடித்தால் இந்திரனின் பூஜை, வெயில் எனின் சூரியனின் பூஜை, சந்திரன் வானில் மிதந்தால் அது சந்திர மூர்த்தியின் பூஜை... கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் தினமும் திருஅண்ணாமலையில் ஒளிப் பூஜை, ஜோதிப் பூஜைகள் நிகழ்த்துகின்றார்கள்.

மானுடர்களைப் போலவே அனைத்துக் கோள்களும், நட்சத்திரங்களும் பல்வகைத் தீபங்களை ஏற்றி வழிபடுகின்றார்கள். திருஅண்ணாமலையில் இருந்து தான் சூரிய, சந்திர, வருண, இந்திர சக்தித் தலங்கள் போன்றவை நிர்ணயிக்கப்படுகின்றன.

கீழ்ச் சூரிய மூலை – அகில உலக சூரியக் கேந்திர மையம்!

உதாரணமாக, கீழ்ச் சூரிய மூலை (கும்பகோணம் கஞ்சனூர் அருகில் உள்ளது.) எனும் சிவத்தலம் தான் உலகின் சூரிய கிரண அளவைகளைத் தினமுமே நிர்ணயித்து தருகின்றது. இங்கு பெய்யும் சூரியக் கிரணங்கள் ஆதி சூரிய மூர்த்தியிடம் இருந்து வருபவை. ஆம் சூரியக் கோளங்கள் பல உண்டு. இவற்றில் ஆதிமூலக் கோளச் சூரியக் கிரணங்கள் கீழ்ச் சூரிய மூலையில்தான் உற்பவிக்கின்றன. இத்தலத்தில் இருந்து பெறும் சூரியக் கோள தரிசனம் மிகவும் வித்தியாசமானதாகும்.

இதன் மகத்துவத்தை, தெய்வீக ரகசியங்களை பெரிதும் விளக்கினால், விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் இங்கு கூடாரங்கள் போட்டு நாள் கணக்கில் தேவையற்ற ஆராய்ச்சிகளில் இறங்கி விடுவார்கள். ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டதே ஆதவ லீலைகள்!

தெய்வீகத்தில், ஆராய்ச்சியை விட ஆழ்ந்த நம்பிக்கைதான் அனைத்தையும் புலனாக்க வல்லதாகும். சூரிய கிரஹண அமைப்பு இவ்விடத்திலிருந்து மிகவும் வித்தியாசமானதாகத் தெரியும். விஞ்ஞானப் பூர்வமாக சூரிய கிரஹணம் ஏற்படும் இடங்கள் எனச் சூரியன் வானில் இருக்கும் கோளக் கோணத்தைப் பொறுத்துப் பகுத்துத் தருவார்கள். ஆனால் எப்போது சூரிய கிரஹணம் எவ்விடத்தில் நிகழ்ந்தாலும் அதன் பல அம்சங்களை கீழ்ச் சூரிய மூலையில் நன்கு யோகப் பூர்வமாகத் தெரிந்து கொள்கின்ற அளவிற்கு பாஸ்கர யோக சக்திகள் நிறைந்த  தலம். ஞாயிறு தோறும் வழிபட்டு நல்வகையில் கண் சக்திகளை விருத்தி செய்து கொள்க!

உயிர் ஜீவித்தல்

நவீன விஞ்ஞானமானது, “உயிர்” பற்றிய எந்த விதமானக் காரண விளக்கங்களையும் தக்க வகையில் பெற இயலாது திகைக்கின்றது. வெறும் மருத்துவப் பூர்வ விளக்கமும் சரியாக அமைந்து வருவதில்லை. இதற்குக் காரணம் அனைத்தும் இறையருளால் அமைவதெனப் பகுத்தறியாது, ஆராய்ச்சியால் அடைய வல்லதாக எண்ணும் அகங்கார விஞ்ஞானமாகி விட்டதாகும்.

பூர்வ ஜன்மப் புண்ய வசத்தால் ஓர் உடலில் உயிரின் சில அம்சங்கள் ஜீவிக்கின்றன. எனவே, உடல் என்பது குறித்த பல புண்ய சக்திகளின் ஜீவிதமாக்கப் பெற்ற வடிவே ஆகும். மேலும் ஆத்ம சக்தியாலும் ஓர் உடலில் உயிரின் பல அம்சங்கள் ஜீவிக்கின்றன. அந்தந்த உடலில் ஜீவிப்பதற்கான காலம் முடிந்தவுடன், அதாவது குறித்த வகைப் புண்ய சக்திகளின் பரிபாலனம் முடிந்தவுடன், அந்த உடலுக்கு ஜீவபோதம் தந்த “ஜீவசக்தி” பிரிந்து, வேறு பல சூக்கும சரீரங்களை, அடுத்தடுத்த பிறவி நிலைகளில் அந்த ஜீவனுக்கு உரிய கர்மபரிபாலன நியதிகளின்படி அடைகின்றது.

மரணத்திற்குப் பின் உடனடியாக அடுத்த பிறவி என்றும் சொல்வதற்கில்லை! பூவுலகத்தில் எவ்வகையில் பிறப்பதுமே புனிதமான புண்ணிய வசத்தால் என்பதால், மீண்டும் பூவுலகில் நற்பிறப்புடன் தோன்றுதலும் ஒரு பெறும் பாக்கியமே! ஜீவன்களுக்கென நல்வழி காட்டி அருளிடத் தானே சத்குருமார்கள் பல உடல்களை இறையருளால் தாங்கி மீண்டும், மீண்டும் பூவுலகில் தோன்றுகின்றனர்.

எனவே, ஒரு உடலில் இருந்து உயிர் பிரிதலை மரணம் என நாம் எண்ணுவது ஆன்ம ரீதியாக எதைக் குறிக்கின்றது தெரியுமா? ஒரு உடலில் உள்ள ஜீவித சக்தியை அடுத்த உடலுக்குப் பூர்வ ஜன்மவசப்படி மாற்றும் சூக்குமக் காரணக் காரியமும் இதுவேயாம். இதனால்தான் மஹான்கள் ஒரு உடலில் உயிர் துறப்பதைச் “சட்டை மாற்றம்” என யோகப் பூர்வமாகக் குறிக்கின்றனர். சட்டை என்பது உயிரைத் தாங்கி வரும் தேகத்தைக் குறிக்கின்றது.

உயிர்ப் பிறப்பு, மறைவு விளக்கங்கள் பலவும் பலத்த தெய்வீக ரகசியங்களாகும். உத்தம ஆன்மீக நிலைகளில் தாம் இவை யாவும் பரிபூரணமாக அறியப் பெறவல்லவை! ஆனால் இவற்றை எவ்வளவுதான் விளக்கினாலும், தக்க சத்குருவின் துணையின்றி ஒரு துளியைக் கூட அறியவும் இயலாததாகும். பகுத்தறிவு, புத்தக அறிவு கொண்டு பிறப்பு, இறப்பின் ரகசியங்களை அறிந்து விடலாம் என்று ஆராய்ந்திடில் ஒன்றுமே புலப்படாது. ஆனால் இறையருளால் “அறிய வேண்ட வல்லவையே அறியலாகும்!” என்ற உணர்வுடன் திகழ்ந்திடில், தக்க விளக்கங்கள் உத்தமர்கள் மூலம் புலப்படலாகும்.

இறப்பு, பிறப்பு பற்றி முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது யாதெனில், இத்தகைய தெய்வீக ரகசியங்களை அறிந்த பின், ஒருவர் இவற்றை எவ்வாறு தெய்வீக ரீதியாகப் பயன்படுத்துகின்றார் என்பதைப் பொறுத்தே, இவற்றை ஓரளவேனும் அறிவதும் சாத்தியமாகும், வெறும் ஆராய்ச்சிக்காகவோ, இவற்றை வியாபாரமாக்கிச் சம்பாதித்தல், புகழ் பெறுதல் போன்ற சுயநல எண்ணங்கள் ஏற்பட்டாலோ, இவற்றைச் சற்றும் அறிந்து கொள்ளவே முடியாது! இவற்றை நன்கு அறிந்த உத்தமர்களோ சற்றும் வெளியில் காட்டிக் கொள்ளாது மிகவும் அமைதியாக மக்களின் நன்மைக்காகத் தக்க வகைகளில் சேவையாற்றுவர்.

இறைவன் தந்த பரிசே பகுத்தறிவு!

பகுத்தறிவு நிறைந்தது மனித குலம் என்பதால்தான், ஆத்ம விசார சக்தியும் நல்ல மகத்துவத்தோடு இயற்கையாகவே மனித குலத்திற்கு வந்தமைந்துள்ளது. மனித குலத்திற்கு உரிய இத்தகைய அரியத் தெய்வீக சக்திகளை மாடு, குரங்கு, பூச்சிகள் போன்றவை நன்கு அறிந்திருக்க, தன்னிடம் உள்ள தகைமையான ஆன்ம சக்திகளை மனிதனே அறியாமல் இருக்கின்ற அறியாமையை என்னென்று சொல்வது? இதற்குக் காரணம், இறைவன் மனித குலத்திற்குப் பரிசாக அளித்துள்ள ஆறாம் நிலைப் பகுத்தறிவோடு மனிதன் முழுமையாகத் துலங்காது, பல தீய வழக்கங்களுக்கும், அதர்மமான எண்ணங்களுக்கும் ஆட்பட்டுக் குறைந்த நிலை அறிவோடு வாழ்வதாகும். பகுத்தறிவால்தான் மனித குலத்திற்கு மகத்துவம் பெருகிற்று.

நாடித் துடிப்பு, இருதயத் துடிப்பு, உடல் உஷ்ணம் போன்றவை ஜீவித சக்திகள் உடலில் திளைப்பதை உணர்த்தும் ஆன்மச் சின்னங்களாகும். முக்தியோ, மோட்சமோ, நரகமோ, பிறவியோ, பிறவியற்ற நிலையோ அவரவர் தம்முள் அறிந்து தெளிந்து கொள்வதேயாகும். இவற்றைப் பிறருக்குச் சொல், பொருளால் ஒரு சிறிதும் உணர்த்த இயலாது.

அனுபூதிகளால் ஆத்மார்த்தமாக அவரவரால் முழுமையான ஆறாம் பகுத்தறிவோடு உணரப் பெறுபவை! இறப்பைத் தழுவிய இன்னார், மோட்சம் அடைந்தார் என்று எவரேனும் அறுதியிட்டுக் கூற முடியுமா? ஆனால், அவரவர் வாழ்ந்த உத்தம வாழ்க்கை நிலைகளை அனுபூதியாகக் கொண்டு “தெய்வீக நிலைகளை” அடைந்தார் என உரைக்கின்றோம். ஆனால் “இன்னார்” என்று ஒருவரைக் குறிப்பிடப் பெறும் பெயர், பதவி, உடல் வடிவ அமைப்புகள் மறைந்தாலும் “இன்னார்” என்றே இந்த உலகம் அவர் விடுத்துச் சென்ற பெயருடன் மனிதக் கூண்டுக்குள் அடைத்து, அடைத்துப் பார்க்கின்றதே!

மேலும், ஓருயிர் ஒரு உடலைப் பிரிந்தவுடன், அதனுடைய ஜீவித சக்தி சார்ந்து அமையும் அடுத்த பிறவியும் உடனடியாகவே மானுடப் பிறவியாக அமையும் என்று கூற இயலாது அல்லவா! மரணத்திற்குப் பின் மனிதக் கூடு மற்றொரு கூடாக மாறி ஜீவிக்கிறது என அறிகின்ற பக்குவத்தை உத்தமப் பகுத்தறிவு நிலையில்தாம், சத்குருவின் அருளால் பெற முடியும்.

உயிர் காத்தலும் ஆத்ம சாதனமே!

எனவே, ஒவ்வொருவரும் உடலை, உயிரை, ஜீவித சக்தியை உகுக்க வேண்டிய தருணம், புண்ய சக்தி மற்றும் கர்ம வினை விளைவுப் பரிபாலனத்தால் நிர்ணயிக்கப்படுகின்றது. அதற்குரிய காலம் வரும் வரை, உணவு, உஷ்ணம், நீர் போன்றவை மூலமாக உயிரை நன்கு உடலில் பேணி, ஜீவிதந்தனை ஜீவ சக்திகள் மூலம் போஷித்து வாழ்தல் வேண்டும். ஆம், மனித உடலில் உடலைத் தரிக்கச் செய்து வாழ்வதும் பெருங் கடமையே ஆகும். ஏனெனில் மனித உடல்தானே தெப்பம் போலப் பிறவிப் பெருங் கடலைக் கடக்க உதவும் ஆன்மப் பெருந்தோணி! இதை விட்டு விட்டால் மீண்டும் மானுடப் பிறவி கிட்டும் என்பது என்ன நிச்சயம் என்பதை அவரவரே மனசாட்சிப் பூர்வமாக ஆய்ந்து கொள்ள வேண்டும்.

உடலில் உயிரை ஜீவிக்கச் செய்தல், உடலில் உயிரைப் பேண யோக சாதனங்களை அடைதல், ஆரோக்யமாக வாழ்தல் போன்ற ஒவ்வொன்றுக்கும் உதவும் புண்ய சக்திகள் பல்வகைப்படும். ஒவ்வொரு ஜீவனும் தற்போதைய பிறவிக்கு என ஏற்று வரும் ஜீவிதப் புண்ய சக்திதாம் அது அந்த உடலில் தழைத்திட உதவும். இது பூர்வ ஜன்மப் பூர்வமாக ஏற்கனவே நிர்ணயிக்கப் பெற்றதே ஆகும். இதனையே விதியின் அம்சங்களாகவும் உரைக்கின்றனர். மூதாதையர்கள் அளிக்கும் புண்ய சக்தியும் சந்ததி சந்ததியாக வருமாதலின் இதன் பகுப்புகளும் இதில் பிணைகின்றன.

கரு காக்கும் கருவளர்ச்சேரி அம்பாள்!

ஒருவர் மனிதப் பிறவி எடுக்கும் முன் தாயின் கருப்பையில் பல்வகை ஜீவித மாற்றங்கள் ஏற்படும். இவையெல்லாம் கருப்பை வாழ் உயிர் ரகசியங்களாகும். அகஸ்தியர் பிரான் தமிழ் இலக்கணப் பாடங்களை இன்னம்பூர்ச் சிவத்தலத்திலும், பல்வகை மூலாதார மூலிகை மருத்துவ இலக்கணங்களை திருவான்மியூர் மருந்தீஸ்வரச் சிவமூர்த்தியிடமும் பெற்றது போல, கருவளர் ரகசிய வேதாந்தப் பூர்வ தெய்வீக விளக்க ரகசியங்களை கும்பகோணம் மருதாநல்லூர் அருகே உள்ள கருவளர்ச்சேரியில் ஸ்ரீஅகஸ்தீஸ்வர மூர்த்தியிடம் இருந்து நேரடியாகவே பெற்றார்.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களின் கருக்களைக் காத்து ரட்சிப்பதால் இங்கு நின்ற நிலை அம்பிகையின் தரிசனம் கழுத்து வரை மட்டுமே தென்படும். கருகாக்கும் அம்பிகை ஆதலின் புடவைப் பாவாடையால் அம்பிகையின் திருமேனி முழுதும் மறைக்கப்பட்டிருக்கும். வருடத்தில் சில நாட்கள் மட்டுமே அம்பிகையின் பரிபூரணத் தரிசனம் கிட்டும். நன்கு விசாரித்து நல்தரிசனம் பெறவும்.

கருவைச் சுமந்த, பிள்ளைகள் பெற்ற தாய்மார்கள் அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது இந்த கருவளர்ச்சேரி அம்பிகையின் முழு தரிசனத்தைப் பெறுதல் வேண்டும்.

கருவைச் சுமக்க ஏங்கும் பிள்ளைப் பேறில்லாத தாய்மார்களும் அடிக்கடி இங்கு வழிபட்டு வர வேண்டும். தம் பத்னியாம் லோபாமாதாவுடன் அகஸ்தியர் சேர்ந்து அருளும் அதியற்புத தலம்.

ஜீவப் பிறப்பு ரகசியங்களை தெய்வப் புலமாக உணர்விக்கும் அதி அற்புதத் தலம்.

பல்வகைப் புண்ய சக்திகளைப் பகுத்து, பூர்வ ஜன்மக் கர்ம வினைகளைப் பரிபாலித்து ஒரு உயிர் பிறக்கின்றது. எந்த வகையில் எவ்வகை உறுப்புகளுடன் பெறுதல் வேண்டும் என்பதும் அங்கவடிப் புண்ய சக்தி விதிமுறைகளால் ஆகும். கருத் துறை, கருமறை, ஜீவப் பிரிவு ரகசியங்களை அறிவுப் பூர்வமாக விளக்குவதும் மிகவும் கடினமானது.

உயிர் தரிப்பது புண்ய சக்தியால்!

கலியுகத்தில் பெரும்பாலோர் அவரவர் சுயநலமாகத் தத்தம் காரியங்களைத் தாமே சுயநலமாகச் செய்து கொண்டிருக்கின்றார்களே, புண்ய சக்தி எவ்வாறு திரளும்? பூர்வ ஜன்மப் புண்ய சக்திகளும் இதனால்தான் வெகுவாகக் கரைந்து வருகின்றன. எனவே மனித சமுதாயத்தில் ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு நொடியும் தழைக்க உதவுவது இறையருளால் பெறும் புண்ய சக்தியால்தாம் என்பதை மட்டும் தற்போதைக்கு ஆரம்ப நிலையாக உணர்ந்திடுக! ஏனைய விளக்கங்கள் சத்குரு மூலமாகப் புலப்படும்.

ஒரு புறம் நற்காரியங்கள், தான தர்மங்கள் பெரும்பாலும் குறைந்து வருவது போலும் இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் லட்சக்கணக்கானோர் கிரிவலம், பிரதோஷப் பூஜை, சரபேஸ்வர பூஜைக்கும் வந்து குவிவதும் நிகழ்கின்றன அல்லவா! ஆம் கலியுகத்தில் நல்லதும், கெட்டதும் கலந்து தான் வருகின்றன. மிக மிகத் தூய்மையாக வாழ விழைவோர் சற்று நேரம் கூட பூவுலகில் சாந்தமாக வாழ இயலாத வண்ணம் வல்வினைகளும், பீதிகளும் பெருகி வருகின்றன. இதற்காகவே ரஜஸ், தமஸ், சாத்வீகம் ஆகிய முக்குணங்களுடன் மக்கள் வாழ்வதாக கலியுக ஜீவ குண இலக்கணம் படைக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு நொடியும் பூவுலகில் ஜீவிப்பது புண்ய சக்தியாலும், இறை அருளாலும்தான் என்பது வேத வாக்கே!

இறையருளோடு வாழ்கின்ற மனிதன் எவ்வாறு தீய செயல்களுக்கு ஆட்படுகின்றான்? பூர்வ ஜன்மத்தில் விளைந்த நற்காரியப் புண்ய வசத்தால் மானுடப் பிறவியைப் பெற்று, பூர்வ ஜன்மங்களில் செய்த தீவினைகளின் பலன்களை கழிக்கவும் இந்த மானுட சரீரத்தையும் பெறுகின்றான், எனவே மானுடப் பிறப்பு என்பது கர்ம வினைகளைக் கழிக்க உதவும் ஜீவ சாதனமாகிய தெப்பமே!

காரணமின்றி எதுவும் நிகழ்வதில்லை!

கூட்டுக் கர்மப் பரிபாலனமே கூட்டுத் தேர்வுகள்!

வேலை வாய்ப்பிற்காகத் தேர்வோ, நேர்முகத் தேர்வு நடக்கும் போதோ, அவரவருடைய திறமை, மதிப்பெண்கள் போன்றவற்றைப் பொறுத்தும் வேலை வாய்ப்பு கிடைக்கும் எனப் பலரும் எண்ணிடலாம்.

உண்மையில், எவருக்கு அந்த வேலை கிடைக்க வேண்டுமென்று விதிப்பூர்வமாகத் தலையில் எழுதி இருக்கின்றதோ, அவருக்குத்தான் கிட்டும் என்பதே உலகெங்கும் ஆன்மீகப் பூர்வமாக நிகழ்வதாகும். ஆனால் இதனை இவ்வாறு உரைத்தால் பலராலும் ஏற்க முடியுமா?

ஆனால், இங்கு “முயற்சி” எனும் பிரயத்னம்தான் பூர்வ ஜன்மப் பூர்வமாக அனைவருக்கும் நிகழ்ந்தாக வேண்டும் என்ற நியதியாலும், இதன் மூலம் பலருக்கும் பல பாடங்கள் வாழ்க்கையில் கிட்ட வேண்டும் என்பதாலும்,

பூர்வ ஜன்ம பந்தமாக ஒருவரை ஒருவர் பார்த்துச் சந்தித்தாக வேண்டும் என்ற ஜன்ம பந்தக் காரணமாகவும், இன்ன காரியத்திற்கு ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பணம், பொருள், இன்ன நேரம் செலவழிதல் வேண்டும் – என்பதாகவும் பல ஜன்மப் பூர்வச் சம்பவங்களும் நிகழும் கலியுகச் சம்பவங்களே, பலரும் கூடும் எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் ஆகும். இவைதாம் தற்காலத்தில் 20 பணி இடங்களை நிரப்ப, 2000 பேர்கள் சேர்ந்து நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வுக்குமாக வருதலாகக் கூட்டுக் கர்மப் பரிபாலனமாக நிகழ்கின்றன எனவும் அறிதல் வேண்டும். இதற்கு ஆத்மவிசார அனுபவ குணாதீதப் பாடம் என்று பெயர். நடப்பதெல்லாம் நல்லதற்கே! நடப்பதனைத்தும் பரம்பொருளாம் சிவ ஆணையால்தாம்! எனவே, உலகில் நிகழும் கோடானு கோடி சம்பவங்கள் அனைத்திற்குமான காரணங்கள் நிச்சயமாக உண்டு என அறிந்தால் நல்ல மனத் தெளிவு உண்டாகும்.

இன்று குறுக்கே புகுந்தால் நாளைய வாழ்வில் நல்வாய்ப்பும் தவறும்!

எதுவுமே, எல்லாமே தனக்கே கிடைக்க வேண்டும் என்று பேராசையால், தவறான எண்ணங்களும், தவறான செயல்களிலும் பலரும் இறங்குவர். இவ்வகையில்தான் ஒவ்வொருவரிடமும், உலகில் ஒவ்வொரு இடத்திலும்  அசுர சக்தி உருவெடுக்கின்றது. இன்னொருவருடைய வாய்ப்பில் குறுக்கே புக யத்தனித்தலும் அசுர சக்தியே! இதுவே, இவ்வாறு குறுக்கே புகுந்தவருடைய வாழ்க்கையிலேயே வருங்காலத்தில் எந்த சம்பவத்திலாவது, எவரேனும், எச்சமயத்திலேனும் குறுக்கே புகுந்து, அவருடைய நல்வாய்ப்பையும் பறிக்கும் வண்ணம் வந்தமைந்து வேதனைகளையும் வட்டியாக அள்ளித் தரும்.

கோயில் தரிசனத்தில் வரிசையாகக் க்யூவில் சென்றிருக்கும் போது முண்டியடித்துக் கொண்டு பிறர் வாய்ப்பைக் கலைத்துச் செல்ல முற்பட்டால், அப்போதைக்கு அது கைக்கு எட்டி நிகழ்ந்தது போல் தோன்றினாலும், பிறகு வருங்கால வாழ்க்கையில் அவசியமான சந்தர்ப்பத்தில் இன்னொருவர் குறுக்கே புகுந்து தடுக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்பதை உணர்தல் வேண்டும்.

அருணாசலமாம் திருஅண்ணாமலையில் அன்னதானத்தில் பலரும் வரிசையில் வராது, குறுக்கே புகுந்து வர முயற்சிக்கும் போது, ஏழைகள் ஏதோ வயிற்றுப் பசியால் இவ்வாறு செய்யக் கூடும் எனினும் படித்தவர்களும் செய்திட்டால் என் செய்வது?

இப்படியாக, சிறு அன்னதான வரிசைக்கே இன்னொருவருடைய சந்தர்ப்பத்தில் குறுக்கே புகுந்தால், நாளைக்கு உங்கள் வேலை வாய்ப்போ, வேலையிலோ, பதவி உயர்விலோ, வாழ்க்கையிலோ எவரேனும் குறுக்கே புகுந்து உங்களுக்கு வர வேண்டியதைத் தடுத்து விடுவார்கள் என்று வலியுறுத்திச் சொல்லி வருகின்றோம், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமே!

இது விளைந்த விளைவா? புதுக் கர்ம வினைச் சம்பாதிப்பா?

இப்படி எவ்வளவுதான் வலியுறுத்தி உரைத்தாலும், ஒரு முறை, அருணாசலத்தில், அன்னதானத்தில் அனைவரையும் மீறி, பலரையும் அதர்மமான முறையில் வெகு வேகமாகத் தள்ளிக் கொண்டு தாண்டி வந்த ஒருவர், வேக வேகமாக வந்து அன்னதானத்தைப் பெற்று செல்லும் போது, “இப்படி நான் பலரையும் தாண்டிப் பிரசாதத்தைப் பெறுவது என்று என் தலையில் எழுதி இருக்கின்றதல்லவா! பூர்வ ஜன்மத்திலோ அல்லது இதற்கு முன்னேயோ எவரோ எனக்கு வருவதைத் தடுத்ததினால் தானே நான் இங்கு இவ்வாறு இதனைப் பெற்றிருக்கின்றேன்!” என்று சற்று விதண்டாவாதமாகக் கூறிச் சென்றார் எனில்,

அன்றையப் பொழுதில் அது பூர்வ ஜென்மமாக அமைந்ததா?

அல்லது அவராக இவ்வாறு பிறருடைய வாய்ப்புகளையும் தடுத்துப் புதுக் கர்ம வினைகளை அதுவும் திருஅண்ணாமலைப் புனித க்ஷேத்திரத்தில் சேர்த்துக் கொண்டாரா?

எந்த முடிவிற்கு வருவீர்கள்?

ஆனால், தற்போது பலருடைய ஏச்சுக்களுக்கும், மனத்தாங்கல்களுக்கும் ஆளாகிய நிலையில், அவற்றை அவர் மீண்டும் பாதிக்கப்படும் நிலை தானே வரும்! ஏனெனில் பூர்வ ஜன்ம வினையாக அமைவதெனில், இத்தகைய அகங்காரப் பேச்சே எழுந்திராதன்றோ! அவரவர் தாமே மனமார வழிவிட்டு இருப்பரே!

பகுத்தறிதலும் ஒரு நல்வழிகாட்டியே!

இவ்வாறாக, வாழ்க்கையின் பல சம்பவங்களிலும், புதிதாக ஏற்படுத்திக் கொண்ட கர்மாவா, பூர்வ ஜன்மக் கர்மக் கழிவா? என்று புரியாது, இத்தகைய நிலைகள் பலருக்கும் வாழ்க்கையில் ஏற்படுவதுண்டு. எது பூர்வ ஜென்ம விளைவாக நிகழ்வது , வாழ்க்கையின் எந்த சம்பவத்திலும் எது, எதுப் புதுக் கர்மச் சாரமானது?

என்பதைத் தக்க சற்குருவால்தான் சரியாகப் பகுத்துக் கூற முடியும். ஆனால் சற்குருவோ, ஒவ்வொரு முறையும் நேரே வந்து, “இது சரி, இது சரியில்லை!” என்று ஒவ்வொன்றுக்குமான விளக்கங்களைக் கூறிக் கொண்டு இருக்க முடியுமா?
இதற்காகவே இறைவன் சற்குரு மூலமாக வாழும் வழிமுறைகளையும் அருளி அளித்திருக்கின்ற போது, பகுத்தறிவு என்ற ஒன்றையும் பரிசாக மனித குலத்திற்கு அளித்துள்ளார்.

ஸ்ரீஅகஸ்திய விஜயம் ஆன்மீக இதழில் கடந்த பல ஆண்டுகளில் நிறைய வழிமுறைகள் சற்குரு மார்க்கமாக அளிக்கப்பட்டுள்ளன. இறைப் பகுத்தறிவுப் பூர்வமாக இது நல்லது, இது கெட்டது, இது தீயது என்று அவரவரே நிச்சயமாகப் பெரும்பாலான சமயங்களில் தார்மீகமாக, பகுத்தறிவுப் பூர்வமாக முடிவெடுத்து விடலாம். இதற்காகத்தான் “ஆழ்ந்த நம்பிக்கை” என்பதையே இறைவன் பக்தியின் அடித்தளமாகத் தந்துள்ளார்.

ஆழ்ந்த நம்பிக்கையில் அரவணைக்கும் குருவருள்!

எனவே, சற்குரு நேரில்தான் வந்து சொல்லி அறவழி காட்ட வேண்டும் என்று அல்லாது, எங்கெல்லாம் நேரடியாக வழிமுறைகளைப் பெற வேண்டுமோ அங்கு அவரிடமிருந்து நேரில் பெற்றும், பிற சமயங்களில், “சற்குரு நிச்சயமாக நமக்கு நல்வழி காட்டுவார்!” என்றும் பரிபூரணமாக நம்புகின்றவர்களுக்கு, ஆழ்ந்த நம்பிக்கை பூண்டு இருப்பவர்களுக்கு, தானாகவே நல்மார்கம் வந்தமைந்து, புதுக் கர்ம வினைகளும் புதிதாகச் சேருகின்ற தன்மைகளும் குறைந்து கொண்டே வரும். இதனால்தான் “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழில் அளிக்கப்பெறும் பூஜை முறைகளை, ஆலய தரிசனங்களை, தினசரி வாழ்வில் ஆற்ற வேண்டிய நித்திய இறைப் பணிகளை ஆற்றி வந்தால் இவையே “நரசிம்ம ஸ்தம்பமாக” நின்று எப்போதும் காத்தருளும். எங்கோ உறைந்து நல்வழிகாட்டும் “சத்குருவின்” மேல் கொண்டுள்ள “ஆழ்ந்த நம்பிக்கையும்” மென்மேலும் விருத்தியாகும்.

ஒரேயடியாக, ஒரே நாளில், ஒரே வாரத்தில் பலத்தக் கர்ம வினைகளைக் கழித்து விட முடியாது. அவரவர் மனசாட்சிக்கு நன்றாகத் தெரியும் “அவரவர்” எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று. எனவே, கர்ம வினைகள் பலவற்றையும் அனுபவித்தே கழித்தாக வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் தெளிவாக அறிதல் வேண்டும். செய்த வினைகளுக்குத் தக்கவற்றை அனுபவிக்கத் தயாராக இருப்பதும் பகுத்தறிவுப் பூர்வமான நல்ல மனப் பக்குவமே! அனைத்தையும் சூரிய, சந்திரர்கள் சாட்சியாக நின்று பார்க்கின்றார்கள் என்பதை நன்கு சிந்தனையில் இருத்துங்கள்!

இறைப் பகுத்தறிவால்தான் கல்வி மேன்மை பெறும்!

மேற்கண்ட உதாரணத்தில் வரிசையில் குறுக்கே புகுந்து பிரசாதத்தைப் பறித்துச் சென்றவர், உண்மையிலேயே நல்எண்ணம் பூண்டவராக இருந்தால், இவ்வாறு பகுத்தறிவுப் பூர்வம் நிறைந்திருந்தால் இவ்வாறு வார்த்தைகளே தவறாக வெளிப் போந்து, கூடுதல் வல்வினைகளுக்கு அவரை ஆளாக்கி இருக்காது! ஆம், ருத்ர பூமியான திருஅண்ணாமலையில் ஒரு சிறு தவறிழைத்தாலும் அது வல்வினையாகும்.

இங்கு, இவருடைய தவறான கல்வி அறிவு, பகுத்தறிவை மங்கச் செய்து, ஆறறிவு நிலையில் இருந்து கீழிறங்கி, அஃறிணைப் பூர்வமாக இயங்கச் செய்து விட்டது. இவ்வாறு தவறாக அவர் பேசியதில் இருந்தே அன்று அவர் புதியதாக ஒரு கர்ம வினையை, அதிலும் அருணாசலப் புனித பூமியிலேயே சேர்த்துக் கொண்டு விட்டார் என்று புலனாகின்றது அல்லவா. இதன் மூலம் கடவுள் பலருக்கும் எண்ணற்ற பாடங்களைப் புகட்ட இவரையே கருவியாக்கிக் கொண்டார். என்பதும் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் ஆகும். மென்மேலும் ஆத்மவிசாரம் செய்திடில் பற்பல பாடங்களும் உங்களுக்குத் தானாகவே புலப்படும்.

எனவே, வாழ்க்கையில் ஒவ்வொரு விநாடியிலும் புதிதாக எவ்விதக் கர்ம வினைகள் சேர்ந்து விடாது, மிக மிகக் கவனமாக, ஜாக்கிரதையாக இருந்திடவே பகுத்தறிவுப் பூர்வமாக இருந்து வாழ்ந்திட வேண்டும். கல்வி அறிவு வேறு, இறைவனே இயற்கையாகப் படைத்தளித்துள்ள பகுத்தறிவு வேறு! தற்காலக் கல்வி அறிவு ஆழமற்றது, மேலும் தெய்வீகப் பூர்வமானது அல்ல!

எனவே, கலியுகத்தில் இத்தகைய உபயோகமற்ற – அறிவுக்கு எதிரிடையான கல்வி முறை பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் கலியுகத்தில் பல நாடுகளிலும், குழந்தைப் பருவத்திலிருந்தே நிரவி, சிறிது சிறிதாகப் பகுத்தறிவை மயங்கச் செய்து, மக்களுடைய குறிப்பாக இளம் பருவத்தினரின் புத்தியை மாசுபடுத்தி, தீய எண்ணங்களை விதைத்து, தீய வழக்கங்களை உருவாக்கித் தவறான மனிதனாக ஆக்கி விடுகின்றது. “எனவே அனைத்தும் இறைவனால் ஆவதே!” என உணர்த்துவதே பள்ளி, கல்லூரிப் பாடத் திட்டங்களின் அடிப்படையாக ஆதல் வேண்டும்.

அறிவால் அழிவுக்கு அடிமை ஆதல்!

தற்போதையக் கல்வி முறையில் தெய்வீக சக்தி சாதனங்கள் நன்கு நிறையாமையால், தற்போதைய மனித சமுதாயம் இறைவனே மனமுவந்து அளித்துள்ள முழுமையான ஆறறிவுடன் வாழாது, மது, புகை, அகங்காரம், ஆணவம், பதவிச் செருக்கு, எவ்வகையிலேனும் பணம் சம்பாதிக்கும் பேராசை, நப்பாசை, நிராசை, பகைமை, குரோதம், விரோதம், முறையற்ற காமத் தீவினைகள், காம இழிவு எண்ணங்கள் போன்றவற்றில் சிக்கிச் சிற்றறிவு நிலையுடன் வாழ வேண்டிய துர்பாக்யமான அவல நிலைக்கு ஆளாகி உள்ளது. தற்காலத்தில் மனிதன் கேளிக்கை நடனங்கள் போன்ற சுகபோக அஃறிணைப் பொருட்களே அதிகம் என்ற கேவலமான நிலையே உருவாகி இருக்கையில், முழுமையான ஆறறிவுப் பகுத்தறிவு எப்படி வேலை செய்யும்?

நல்மனம் படைத்தவர்கள் கூட சமுதாயத்தில் பலரும் அதர்மமாக லஞ்சம், ஏமாற்றுதல் போன்று முறையற்று வாழ்ந்தும், அவர்கள் நலமாக, வளமாக வாழ்கின்றார்களே என்று எண்ணி மனதினுள்ளாவது குமைகின்றனர். நல்லனவற்றையே எண்ணி, நல்லதையே செய்து வருதலும் இத்தகைய தேவையற்ற எண்ணச் சுழலில் மனம் மயங்கி பலவீனமாவதைத் தடுக்கும்.

ஆனால் நல்லவர்களுக்கும் மனம் எப்போதும் நல்லதையா நினைத்துக் கொண்டிருக்கும்?

மனதினுள் மருகுதலா?

உலகில் வன்முறை, பயங்கரவாதம், அதர்மமான எண்ணங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் பெருகிக் கொண்டிருக்கையில், ஒருவர் எப்போதும் நல்ல எண்ணங்களிலேயே நிலைத்திருத்தல் கடினமே! எனவே, பத்து நல்ல எண்ணங்களை விட, ஒரு நல்ல செயல் எவ்வளவோ நல்லதாயிற்றே! எனவே ஏதேனும் நற்காரியத்தை ஆற்றுதலே மனம், உள்ளம், உடலை நல்வழியில் எப்போதும் நிலைக்கச் செய்யும், இதற்காக வண்டிப் பெட்டியில், பையில் எப்போதும் பழங்கள், மிட்டாய்கள் போன்ற உணவுப் பண்டங்களை வைத்திருந்து இவ்வாறு மனம் அலைபாயும் போது அலுவலகத்தை, கடையை விட்டு வெளியே வந்து, பையில் இருப்பதையோ, வெளியில் வாங்கியோ, ஏழைகளுக்கும், பசுக்களுக்கும், பட்சிகளுக்கும் கொடுத்துப் பாருங்கள். இந்த ஒரு சிறு நற்காரியத்தால் மனதில் தர்மப் பிரகாசம் உண்டாகி அலைபாயும் மனம் சற்றே அடங்கி, நல்லதையே எண்ணத் தொடங்கும்.

எனவே, அதர்மமான வழிகளில் முறையற்று வாழ்வோர் நலமாக, சுகமாக வாழ்கின்றார்களே என மனம் குமுறி எண்ணுகையில், “இப்படி நம்மிடையே எப்போதும் ஒட்டி இருக்கும் நம் மனதையே அடக்கித் திருத்த முடியாத போது, பிறர் சரியில்லையே எனப் பிறரைத் திருத்த நாம் யார்?” என ஒவ்வொருவரும் அவரவரையே நன்கு ஆத்மப் பரிசோதனை செய்து விசாரம் ஆற்றல் வேண்டும்! இதுவும், வாழ்வில் எப்போதும் நல்லதையே என்ணி, நல்லதையே ஆற்றுவதற்கான வழிமுறைகளுள் ஒன்றாகும்.

இவ்வாறு நல்லது, தீயதைப் பற்றித் தினமுமே ஆத்ம விசாரம் செய்வதால், “எங்கே, ஏதேனும் புதுக் கர்ம வினைகள் வந்து ஒட்டிக் கொண்டு விடுமோ?” எனப் பயந்து கொண்டே, தயக்கத்துடன் எதையும் செய்ய வேண்டும் என்று பொருளல்ல. இதிலிருந்து உண்மையாக நாமறிவதென்ன? உள்ளத்துக்கும், மனதுக்கும், புத்திக்கும், உடலுக்கும் இடையே ஒருமிப்பு இல்லாது செயல்படுவதால்தான் குழப்பங்களும், தவறான எண்ணங்களும் வருகின்றன. இவை வாராது காக்க நல்ஆதாரமாக இருப்பவையே நல்எண்ணங்களும், நற்காரியங்களும் ஆகும். இவை இரண்டும் நன்கு விருத்தியாக, விருத்தியாகத்தான் ஆரம்ப நிலை தியானமுமே கைகூடும்.

மனதுக்கும், உள்ளத்துக்கும், உடலுக்கும் இடையே ஒருமிப்பு ஏற்படுவதே தியானம். அதாவது மனம், முதலில் உடலுடன் ஒருமித்து இருப்பதே தியானத்தின் ஆரம்ப இலக்கண விளக்கம்.

தியானம் பற்றிப் பல “பெயர்களைச்” சூட்டித் தத்துவார்த்தமாகச் சொல்வதெல்லாம் மிக, மிக எளிதே! செயல்படுத்துவது சிறிது சிறிதாகவே வாழ்வில் நடைமுறைக்கு வரும். வெறுமனே கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தால், உடனே தியானம் கை கூடி விடாது. உடலோடு ஒருமித்ததாக அன்னதானம், ஆலயத்தில் குப்பைகளைப் பொறுக்குதல், கோலமிடுதல் – போன்ற ஏதேனும் நற்காரியத்தை ஆற்றி விட்டு, இதனை மனதில் எண்ணி அமர்ந்து தியானம் செய்து பாருங்கள். இதில் தான் மனம் நன்கு ஒருமித்து லயிக்கும். வெறுமனே உட்கார்ந்து தியானிப்பதை விட, நற்காரியத்திற்குப் பிறகு தியானம் செய்தால் சிறிது சிறிதாகப் பலன்கள் நன்கு துரிதமாகத் தெரியும்.

சற்குருவின் பரிபாலனம்

கலியுகத்தில் சற்குரு நேரில் வந்து அரவணைத்தல் கூடாதா, என்று பலரும் எண்ணுவர். தகுந்த பக்குவம் கனியும் போது, சற்குருவின் அருள் தானாகவே முன் வந்து கனியும். அதுவரையில் “நம்பிக்கைக் கனி” இன்னமும் பழுக்கவில்லை எனப் பொருளாகும். சற்குருவின் நேரடிப் பார்வையில் இருப்பவர்களுக்கும் வாழ்வில் பல சோதனைகள் ஏற்படுவது உண்டு. இவை இறைமார்கத்தில் ஸ்திரமான, ஆழ்ந்த நம்பிக்கை நன்கு விருத்தி செய்வதற்கான சாதன சோதனைகளாகும்.

கலியுகத்தில், இவர்தான் சற்குரு என்ரு சுட்டிக் காட்டப்பட்டாலும் – கலியுகத்தில் சற்குரு கூறுவதில் எது தனக்குச் சாதகமாக இருக்கிறதோ அதை மட்டுமே ஏற்றுக் கொள்பவர்களே இன்றைக்கும் உண்டு.

-எது தனக்கு சாதகமாக இல்லையோ அதை அவர் உரைத்தல் கூடாது என்றும்,

-அல்லது சற்குருவின் வாயிலிருந்து, தான் எண்ணுவதே தனக்குச் சாதகமாக இருப்பதாக இருப்பவையே வர வேண்டும்.,

-என்றும் எண்ணுவதால்தான் சத்குருவை அடைதலே, காணுதலே கலியில் அரிதாகி விடுகின்றது.

சற்குரு என்பவர் இறைவனுடைய பிரதிநிதியே, இறைத் தூதுவரே! பிறப்பு, இறப்பு நிலைகளைக் கடந்தவர், இறையாணையால் ஒரு வடிவெடுத்து ஜீவன்களுக்கு நல்வழி காட்ட வந்தவர்.

இத்தகைய சத்குருவிடம், இப்போதைய நிலை தனக்குச் சாத்தியமாகின்றதே, ஏற்று வருகின்றதே, சத்குரு வேறு எதையாவது செய்யச் சொல்லி விடுவாரோ, அவரிடம் பாதியைச் சொன்னால் போதுமே! என்று அவநம்பிக்கையோடு எண்ணுவதும் தவறே! இதுவும் சத்குருவின் தரிசனத்தை மறைக்கக் காரணமாகும். இவ்வாறு சுயநலமாக எண்ணுபவர்களும் கலியில் பெருகி வரும் போது, கலியுகத்தில் நேரடியாகவே சற்குருவை எப்படியப்பா எளிதில் பெற முடியும்?

சற்குரு சொல்வதைப் பரிபூரணமாக நம்பிச் செயலாற்றும் தகை சார்ந்தோர் கலியுகத்தில் மிக மிகக் குறைவு என்ற நியதியால்தான், மந்திர வழிபாடுகளை விட, சத்குருவைக் காணாமலேயே அவர்மேல் கொள்ளும் ஆழ்ந்த நம்பிக்கையே பக்தியின் மேன்மையைத் தருவதாகின்றது.

இவ்வாறாக, சத்குருவை நேரில் அடைய முடியாமைக்கு அவரவர்களே காரணமாக இருக்கும் போது, “எனக்குரிய சத்குரு எங்குள்ளார்? எப்போது நான் அவரை அடைவது?” என்ற வகையான வினாக்கள் எல்லாம் அர்த்தமற்றவை ஆகின்றன அல்லவா! இவ்வாறாக அவரவரை அவரவரே சீர்திருத்திக் கொள்ள உதவுவதே ஆத்மவிசாரமாகும். ஆத்ம விசார தீபச் சுடரைத் தூண்டும் சுடர்க்கோலாக ஸ்ரீஅகஸ்திய விஜயம் துலங்குகின்றது.

ஸ்ரீதுங்கபால ஸ்தனாம்பிகை
காஞ்சனாகரம்

இவ்வாறு சத்குருவை அடைபவர்களுக்கே உண்மையான வெற்றி எனபதை அம்பிகையே உணர்த்தி, வெற்றிக் கொடி நாட்டியத் திருத்தலமே மயிலாடுதுறை அருகில் உள்ள ஸ்ரீதுங்க பாலஸ்தனாம்பிகை ஆவாள். வேறெங்கும் காண முடியாத வகையில் நாலு கோடி நான்மறை வேதச் சாரமே அம்பிகையின் இடது கையில் கிளியாக அமர்ந்து காட்சி தரும் அற்புதத் தலம். சத்குருவின் திருவருளை பெற்றுத் தரவல்லது.

அம்பாள் விஜயம்

அம்பிகையின் சத்குருவே ஈஸ்வரன் என்பதால்தான் அம்பிகைக்கும் இறைவன் ஓங்காரப் பொருளை உபதேசித்தார்! இதையும் உணர்த்துவதற்காகத்தான் அம்பிகை இன்றும் பல தலங்களிலும், மக்களின் மனதிலும் தசமித் திருநாளில் விஜய யாத்திரை புரிகின்றாள்.

ஆம், எத்தனையோ கோடி பக்தர்களின் உள்ளத்தில் அம்பிகை விஜய யாத்திரை கொள்ளும் நாளாகத் தசமித் திதி விளங்குவதால், தசமித் திதி தோறும் விஜய விரதங்களைப் பூண்டு வழிபடுவீர்களாக! அம்பிகை தசமித் திதி நாளில் பல ஆலயங்களிலும் விஜய யாத்திரை புரிவதால் கலியுகத்திலும் தானாகவே தீவினை சக்திகள் பலவும் மறையும் நாளாகத் தசமித் திதி  துலங்குகிறது.

இவ்வாறாக ஒவ்வொரு பக்தரின் மனதிலும் அறிந்தோ அறியாமலோ படிந்திருக்கும் தீய எண்ணங்களை, தீய சக்திகளை, வல்வினைகளை மாய்த்திட, பகவதியின் விஜய யாத்திரை நிகழும் திதியும் தசமித் திதியாகும். இதிலும் அம்பிகைக்கு உரிய செவ்வாய், வெள்ளி கூடும் தசமித் திதி நாட்கள் மிகவும் சிறப்புடையவை!

எனவே, கலியுகத்தில் மனித மனதினுள் இருப்பதைப் போன்று வானிலும், மண்ணிலும் நிரவிக் கிடக்கும் தீவினைப் படிவுகளை அகற்றவே, பூஜா பலன்கள் நிறையத் தேவைப்படுகின்றனவே, என் செய்யப் போகின்றீர்கள்?

ராவண வதம், மகிஷாசுர வதமோ வெறும் புராண சம்பவங்கள் மட்டுமே என்று எண்ணாதீர்கள். ராவணனுக்கு இருந்த முறையற்ற காம இச்சைகளும்,  சூரபத்மனுக்கு இருந்த எக்கச்சக்கமான பேராசைகளும், துர்ஆசைகளும், நிராசைகளும் கலியுகச் சமுதாய மனித மனத்திலும், உடலிலும் ஆக்கிரமிப்புகளைச் செய்துள்ளன, எனவே, கலியில் உடலளவில், வடிவில் அவ்வளவாக அசுர வடிவு இல்லை எனினும், மனத்தளவில் ராவணர்கள், பகாசுரர்கள் நிச்சயமாக நிறையவே உண்டு. பிறன் மனை நோக்கும் ராவணத்தனங்களும், அசுர குணங்களும் அவ்வப்போது மனதில் வந்து மறைந்தாலும் அந்த நிமிட அளவில் ராவண அரக்க குணவாதிகள்தாமே! உடலாலும், மனதால் பிறன் மனையைத் தீண்டுபவர்களும், ராவணனைப் போல் அசுரர்களாக இருப்பவர்களே!

கோயில் நிலங்கள், கோயிலுக்குரிய இடங்கள், வீடுகள், கடைகளை மிக மிகக் குறைந்த வாடகைக்கு எடுத்தும், வாடகை கொடுக்காமலும் ஏமாற்றி ஆக்ரமித்து வருபவர்கள் அனைவருமே அரக்கர்களைப் போல் பேராசை கொண்டவர்களே!

லஞ்சம், ஏமாற்றுதல் மூலமாக அதர்மமான முறையில் பொருள் ஈட்டியோரும், பதவி, பணம், அந்தஸ்து காரணமாகப் பிறரை இம்சிப்போரும் ஹிரண்யாட்சகன் போலான அசுரர்களே! இத்தகையோர் தம்முடைய தீவினைகளை உணர்ந்து, இனியேனும் திருந்தி வாழ, தசமித் திதி நாளிலும், தினசரியுமே அமையும் நித்தியப் பிரதோஷ நேரமான மாலை நேரத்திலும், நன்முறையில் மனோவைராக்யச் சங்கல்பம் செய்து கொண்டு நன்கு திருந்தி மன சுத்தியுடன் வாழத் தொடங்குதல் வேண்டும். சிறிது, சிறிதாகவேனும் இன்றிலிருந்து முயற்சிக்க வேண்டும்.

அம்பாள் நல்லோர் மனதிலும், நற்காரியங்களைச் செய்யும் போதும், நல் எண்ணங்கள் அமையும் போதும் விஜய யாத்திரை கொள்கின்றாள். தினசரிப் பிரதோஷம் போல தினசரிக் காலத்திலும் 30 திதிகளும் வந்தமைவதாகப் புலப்படுத்தும் திதி நித்யா வகையிலான நித்யக் காலாமிர்தப் பூஜை முறைகளும் உண்டு. கலியுக மஹரிஷியான அடையப்பலம் அப்பய்ய தீட்சிதர் “நித்யக் காலாமிர்தப் பூஜைத்” திறத்தில் வல்லவராவார். இவருடைய ஜீவாலயத்தைக் கண்டறிந்து வழிபட்டு காலசக்திகளை அறிய வேண்டியது ஒவ்வொரு ஜோதிடரின், எண்  சாஸ்திரக் கர்த்தாக்களின் கடமையாகும்.

ஒவ்வொருவருக்கும் ஒன்பது சரீரங்கள் உண்டு என நாமறிவோம். இதில் ஒன்று பரிசுத்தமானது, மனிதன் இந்த ஒன்பதிலும் மாறி மாறி வாழ்வதால் தான், பல்வேறு மன நிலைகள் ஒவ்வொரு நிமிடமும் ஏற்படுகின்றன. எவ்வளவு கொடியவனாக இருந்தாலும், அவன் உடலில் ஓரிரு சரீரங்கள் நல்லனவாகவே இருக்கும். ஒவ்வொரு சரீரப் புனிதத்திற்கும் ஒவ்வொரு வழிபாடு தேவையாகிறது. இதற்காகத்தான் சிவ பக்தனாக, வைணவராக, சாக்தராகப் (அம்பாள் உபாசனை) பல பிறவிகளிலும் உத்தம நிலைகள் அமைகின்றன.

அம்பாள் உபாசனையில் இவை அனைத்தும் அடங்குவதால் இது பெரும் பேறுடையதாகிறது. எனவே, ஒவ்வொருவரும் வாழ்வில் குறித்த அம்பிகைப் பூஜையைச் சங்கல்பமாக எடுத்துக் கொண்டு (தசமியில் ஹோமம், பஞ்சமியில் நாக பூஜை, வெள்ளியில் தீப பூஜை) வாழ்நாள் முழுதும் ஆற்றி வர வேண்டும்.

வாரந்தோறும் 12 அம்பாள் ஆலயங்களில் அர்ச்சனை ஆராதனை என்று மட்டுமல்லாது – விளக்கேற்றுதல், குப்பைகளைச் சிறிதளவேனும் பொறுக்கி எடுத்துச் சுத்திகரித்தல் – போன்ற சரீர வகைப் பணிகளுடன் வழிபடுதல் நன்று. சரீர உழைப்புடன் கூடிய நற்பணிகள் தாம் மன பீதியை அகற்றும், மன அமைதியைத் தரும். நல்ல மனோ வைராக்யத்தையும் பெற்றுத் தரும். ஜாதி பேதமின்றி ஏழைப் பெண்களுடன் சத்சங்கப் பூர்வமாக இறைச் சமுதாய வழிபாடுகளை ஆற்றுதல் பலன்களை நன்கு விருத்தியாக்கித் தரும்.

48 வாரங்களுக்கு – வாரந்தோறும் 12 ஏழைகளுக்கு உணவளித்தல் என்ற வகையிலான சங்கல்பம் செய்து நற்காரியங்களை ஆற்றுதல் புதல்விகளுக்கு நன்கு உதவும்!

பணப் பிரச்னை அகல

“கையில் காசில்லை, பணமில்லை!” என்று எண்ணாது, மாதந்தோறும் 12 ஆலயங்களில் பிரகாரங்களைச் சுத்தம் செய்து, கோலமிடுதல், பசுக்களை நீராட்டி, மஞ்சள், குங்குமம் இட்டு வணங்குதல், ஆலய மடப்பள்ளி, பாத்திரங்களைச் சுத்திகரித்தல் போன்ற அதிகம் செலவில்லா இறைப் பணிகளை ஆற்றி வருதல் வியக்கத் தக்கப் பலன்களை அளிக்கும்.

இதனால் ஆலய தேவதைகள் உங்கள் உள்ளத்தில் யாத்திரை செய்து, மன சுத்திக்கு நல்முறையிலான தேவசகாய உதவிகளை ஆற்றுவதையும் நன்கு உணரலாம்.

பிரார்த்தனைகளில் “சிதறுகாய் உடைத்தல்” மன சுத்திக்கு மிகவும் நன்கு உதவும். குத்தகைக்காரர்களுக்கே சிதறுகாய்த் துண்டங்கள் போகும்படி அல்லாது குத்தகை முறை இல்லாத இடங்களில் அல்லது குத்தகைகாரரிடம் சொல்லி வைத்து, ஏழைகள் அனைவரும் சிதறு காயைப் பொறுக்கி மகிழும்படி ஆலயங்களில் காலையில், உச்சிப் பொழுதில், மாலையில் நான்கு மணி வாக்கில் என மூன்று வேளைகளிலும், வாரத்திற்கு ஒரு முறையாவது, குறைந்தது 24 சிதறு காய்களையாவது உடைத்து வழிபடுதல் ஒரு வகையில் இறைவனுக்கு சப்தவழிப் பூஜையாகவும், மறு புறத்தில் ஏழைகளும் மகிழ்ச்சி அடையும்படியும் ஆகும் வண்ணம் நன்கு மனதாரப் பூஜித்திடுக! தகாத குற்றங்களைச் செய்து வெளியில் சொல்ல முடியாதபடி வாடுவோரின் மன நிவாரணத்திற்கு இது உதவும்.

ஸ்ரீகண்வ மகரிஷி அவளிவநல்லூர்

மேற்கண்ட பூஜைகளைப் பலரும் ஒன்று கூடிச் செய்வதால், ஒவ்வொரு குடும்பத்திலும், வசதியற்ற நிலையிலும் பல வழிகளில் தான, தருமப் புண்ய சக்திகளை மிக எளிதில் பெற்றிடலாமே! ஒவ்வொரு மனிதனும் 32 வகை தான தர்மங்களை முழுமையாக ஆற்றினால்தான் முக்தி வழிப் பாதையே புலப்படும். மனிதன் பல கோடிப் பிறப்புகளை எடுப்பதே 32 வகை தான, தர்மங்களை எவ்வகையிலேனும் நிறைவேற்றிடவே!

கரு காக்கும் கருவளர்ச்சேரி அம்பாள்

ஸ்ரீஅகஸ்தியபெருமான் தன் பத்தினியாம் லோபாமாதாவுடன் வந்து தினசரி பூஜிக்கும் தலமாகவும் கருவளர்ச்சேரி துலங்குவதால் அம்பிகையிடம் ஸ்ரீலோபாமாதா ஒரு யுக கால மஹா சிவராத்திரி பூஜை நாளில், “வரும் யுகங்களில் கரு சம்பந்தமான நோய்கள், குற்றங்கள், கருச் சிதைவு, கரு நழுவுதல், கருப்பை அறுவை சிகிச்சைகள், கருப்பைப் புற்று நோய், வயிற்றில் பலத்த பிணிகள் போன்ற துன்பங்கள் நிறைய ஏற்பட வாய்ப்புகள் பெருகுவதால் இவற்றை அகற்றி அருளவும் விசேஷமாகக் “கருவைக் காக்கும்” அன்னையாகவும் அருளிட வேண்டிப் பெற்ற அபூர்வமான சிவத்தலமிது!

கரு உருவாவதற்கு அருளிடவும், கருவைக் காக்கவும், அதர்மமான கருச்சிதைவைத் தடுக்கவும், சுகப் பிரசவத்தில் தாயும் சேயும் நலம் பெற்று வாழவும் விசேடமான முறையில் அருளை பொழிந்திட, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்பிகை அவதாரிகையாக விளங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து ஸ்ரீலோபாமாதா சமேத அகஸ்தியரும் அம்பிகைக்குச் சீந்தில் கொடி எனும் விசேஷமான மூலிகைப் பாவாடை சார்த்தி வழிபட்ட தலம். சுகப் பிரசவத்திற்காகப் பிரசவ நேரத்தில் தாயின் கால் விரல்களில் சீந்தில் கொடியைக் கட்டுவது பண்டையச் சித்த வைத்ய முறையாகும்.

இங்கு ஸ்ரீலோபாமாதா சமேதராய் அகஸ்தியரே அருள்வது கலியுக மக்களுக்குப் பெரும் பாக்யமே! பலரும் கரு காக்கும் நாயகியாக தஞ்சாவூர் அருகே உள்ள திருக்கருகாவூர் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகையை மட்டுமே அறிவார்கள். கருவளர்ச்சேரியில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியே கருவளர் நாயகியாக அருள்வது பலரும் அறியாததாகும்.

புற்று மண்ணால் ஆகிய அம்பிகை! ஸ்ரீலோபாமாதாவும், அகஸ்தியரும் சார்த்திய ‘பனிக்குடக் கலிங்கம்’ எனும் “சீந்திலை மூலிகா வஸ்திரம்தனைச்” சூக்குமமாகத் தாங்கி அருளும் அம்பிகை! எனவே தான் இங்கு அம்பிகையின் சிரசு தரிசனம் மட்டுமே கிட்டும். கரு காப்பவள் ஆதலின் அம்பிகையின் திருமேனி தேவ அம்சமாக மறைந்திருக்கும்.

கருவறையுள் தேவப் புலன்கள்!

கருப்பைக்குள் இறைவன் இட்ட உணவை உண்டு, மனிதனாகப் பிறப்பதற்கு முன் தாயின் கருவறையில்தான் எத்தகைய தேவகாரியங்கள் நிகழ்கின்றன எனப் பலரும் அறியார்.

கண்வ மகரிஷிதாம் பெண்ணாய்ப் பிறத்தலின் புனிதத்தை, பெரும் பேற்றை, அரும்பெறும் பாக்யத்தை மஹரிஷினிகளுக்கு எடுத்துரைத்துப் போற்றினார். ஒவ்வொரு தாயும் பூவுலகில் “கரு தாங்கும் அரும்பணியை” பேரிறை வரமாகப் பெற்றுள்ளமையால் தம் புனிதமான மண வாழ்க்கையையே அனைத்து இல்லறப் பெண்டிரும் அருந்தவமாகப் பூண்டிட வேண்டும். கணவனையே கண்கண்ட தெய்வமாக வரித்து வாழ்தல் வேண்டும்.

இயற்கைப் பிரசவம் என்பது பெண்குலமானது 700 மடங்கு மனித வலியைத் தாங்கும் தவயோக ஞான சக்திகளைப் பூண்டு வருவதால், பிள்ளைப் பேறு காலத்தையே அருந்தவக் காலமாகக் கண்வ மஹரிஷி போற்றுகின்றார்.

இயற்கைப் பிரசவம் அல்லாமல் வயிற்றில் அறுவை சிகிச்சையில் (Caesarean operation) ஆகும் பிரசவத்தில் இத்தகைய உத்தம யோகத் தவத்திற நிலைகள் கிட்டுவதில்லை. கும்பகோணம் – மருதாநல்லூர் அருகே உள்ள கருவளர்ச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயமானது மிஹிர மாமுனி இன்றும் மாதசிவராத்திரியை அடுத்த அமாவாசையில் வழிபடும் நாளாக மலர்கின்றது. இங்கு இவர் வடிவம் சூக்குமமாக உள்ளது.

அதாவது சூரிய, சந்திரக் கோளங்கள் ஒன்றிணைந்த நாளில் அகஸ்திய மாமுனியும் இங்கிருந்தே சூரிய மண்டலத் தரிசனம் பெற்றத் தலமாகும். இங்கு அம்மன் சன்னதியின் வாசற்படிக்கு மிஹிரப் புலம் என்று பெயர். இங்கு அம்மன் சன்னதியின் மூலத்தான வாசற்படியில் பசு நெய்யால் மெழுகி வழிபடுவோர்க்குக் கரு தாங்கும் பிள்ளைப் பேறு பாக்கியமானது இயற்கையான சுகப் பிரசவத்துடன் மலர கருவளர் நாயகியாய் அம்பிகை அருள்கின்றாள்.

இங்கு கருவளர்ச்சேரி ஆலயத்தில் திருமணம் ஆனதில் இருந்தே அடிக்கடி வழிபட்டுக் கருவளர்நாயகியாம், கரு காக்கும் நாயகியாம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் மூலக் கருவறை வாசற்படியில் சுத்தமான பசு நெய்யால் மெழுகுதல், கரு தாங்கும் பாக்யத்தைப் பெண்களுக்கு அளிக்கும். சிசுப் பாதைச் செறிவை நன்கு முறைப்படுத்தும், பிள்ளைப் பேறும், சுகப் பிரசவமும் நன்முறையில் பெண் சந்ததிகளில் வந்து அமையத் துணை புரியும்.

பிள்ளைப் பேறு இல்லாதவர்களும், சஷ்டி, திருவோணம், திருவாதிரை நாட்களில் நிர்ஜல விரதம் – அதாவது ஒரு துளி நீர் கூட அருந்தாது நோன்பிருந்து – கருவளர் அம்பிகையை வேண்டி வந்தால் நற்பலன்களைப் பெற்றிடலாம். இத்தகைய சக்தி வாய்ந்த தெய்வ மூர்த்திகள் பூவுலகுக்கு வந்து கல் வடிவில் உறைந்து அருள்பாலிக்கக் காரணம் கண்வ மஹரிஷி, மிஹிர மாமுனி போன்ற எண்ணற்ற சித்தர்கள், மஹரிஷிகள் அண்ணாமலையில் ஆற்றும் கிரிவலப் பலாபலன்களால் தாம் எனவும் அறிதல் வேண்டும்!

ஆம், நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள், சத்தியமங்கலம் பன்னாரி அம்மன் போன்ற தேவி மூர்த்திகளும் பூவுலகில் எழுந்தருள வேண்டி அருணாசல கிரிவலச் சங்கல்பங்களை மேற்கொண்டு சித்தர்களும், மஹரிஷிகளும் நமக்கு உதவுகின்றனர். ஆம், இன்றும் பூவுலகில் உள்ள அனைத்து மூர்த்திகளுமே சித்தர்களின், மஹரிஷிகளின் தபோ பலன்களைக் கருதி ஜீவன்களாகிய நமக்கு அருள்புரிய எழுந்தருளி வந்தவர்களே ஆவர். இதனாலும் நாம் தினமும் ஆலய தரிசனத்தில் முதலில் அந்தந்த மூர்த்திகள் பூமியில் தோன்றக் காரணமான சித்தர்களையும், மஹரிஷிகளையும் சிந்தையில் முதலில் நன்றிப் பூர்வமாக இருத்திட வேண்டும். “சிவனை” எப்போதும் “சிந்தையில்” இருத்த வல்லவர்களாகிய “சித்தர்களை” நம் “சிந்தனையில்” முதலில் இருத்துதலே மேன்மை தரும் “நன்றி” வழிபாடாகும்.

கிரிவல மகாத்மியம்

திருஅருணாசலக் கிரிவல மஹாத்மியம்

சித்தர்கள், மகரிஷிகள், யோகியர், ஞானியர் யாவரும், இறைவனுடைய தூதுவர்களாக, இறைவனுடைய ஆணையைச் சிரமேற்கொண்டு, மானுட மற்றும் ஏனைய வடிவுகளையும் எடுத்துப் பூவுலகிற்கு வந்து ஜீவன்களைக் கடைத்தேற்றப் பெரிதும் நல்வழிகாட்டித் துணை புரிகின்றனர். இதற்கான சர்வ இறையாணைகள் நிகழும் சர்வதேவ இறைவளாகமே அருணாசலமாம் திருஅண்ணாமலையாகும்.

“முக்தாமிர்தத் தரிசனம்”

குறித்த சித்தாமிர்த சந்தி ஹோரை நேரத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலய வடக்குக் கோபுரத்தில் கிட்டும் “சர்வேஸ்வரத் தரிசனம்” பெற்று உடனே அண்ணாமலையைத் தரிசிக்கும் பாங்கிற்கு “முக்தாமிர்தத் தரிசனப்” பலன்கள் கிட்டுகின்றன. இதனால் 12 தலைமுறைக்கு முந்தையோர் நற்கதி அடையும் மார்கங்களைப் பெறுகின்றனர் எனில், முக்திக்கு எளிய வழிமுறை தரும் பாதையன்றோ பக்தி மிகு அருணாசலக் கிரிவலப் பாதை!

சித்த யோகமும், அமிர்த யோகமும், குறித்த நட்சத்திர திதி, வார, யோக, கரண ஆகிய ஐந்து காலச் சந்திப்படையும் மிகமிகப் புனிதமான நேரத்தில் ஆக்கப் பெறும் கிரிவலத்துடன் கூடிய “சர்வேஸ்வர தரிசன மஹிமையால்” புலப்படுவது யாதெனில், அனைத்துத் தெய்வ அவதாரப் புலங்களும் அருணாசலத்தில் மூலச் செறிவு கொள்கின்றன என்ற தெய்வீக ரகசியமாகும்.

அண்ணாமலையில் ஆர்பவிக்கும் அனைத்து அவதார மூர்த்திகள்

ஆம், திருஅண்ணாமலையில் இருந்து தாம் “அகில உலகத்திற்குமான ஜீவ பரிபாலன தேவ இயக்கங்களும்” இயக்கப் பெறுகின்றன. ஜீவன்கள் தோற்றுவிக்கப் பெறும் கும்பகோணத்தின் “கிராத மூர்த்திக்கான” அவதாரிகைகளும், அண்ணாமலையில் தெற்கு கோபுரத் திருமஞ்சன வீதியில் இருந்து பெறப்படும் குடமூக்கு வடிவிலான “கும்பகோண மஹாமகத் தரிசனப்” பகுதியில் தோன்றி அமைவதேயாம்.

ரோஹிணியில் அகஸ்தியத் தரிசனம்

எனவே, அனைத்து இறை அவதாரங்களும் அருணாசலப் புனித பூமியில் தாம் தோற்றுவிக்கப் பெறுகின்றன என்ற தெய்வீக ரகசியத்தை இதன் மூலம் தங்களுடைய பித்ருக்களின் ஆசிகளால் உணரப் பெறுவீர்களாக! இந்த அற்புதமான மலை தரிசனத்தை மக நட்சத்திர நாளில் பெற்று, அண்ணாமலையாரைத் தரிசித்து, அருணாசலக் கிரிவலம் வருதல், மஹாமக தரிசன, மஹாமகத் தீர்த்த நீராடற் பலன்களை அபரிமிதமாக அளிப்பதாகும்.

சித்தர்களின் பீடாதிபதியாம் அகஸ்திய மாமுனியின் தரிசனமும், ரோஹிணி நட்சத்திர நாளில் பாக்யமுள்ளோருக்கு மாத சிவராத்திரி கிரிவலப் பலனாகக் குருவருளால் கிட்டும்.

கோணிப் பட்டைக் கோவணச் சித்தர்

அருணாசல கிரிவல மார்கத்தில், வேலூர் சாலை பிரியும் இடத்தில் உள்ள மயானப் பகுதியில் இருந்து அண்ணாமலையை நோக்கித் தரிசித்திடில் கிட்டுவதே “கோண லிங்கத்” தரிசனமாகும். ஒரு சிறு கோணிச் சாக்கையே கோவணமாக அணிந்து கொண்டு, எப்போதும் எந்நேரமும் இடைவிடாது, அசராது கிரிவலம் வந்த “கோணிப் பட்டைக் கோவணச் சித்தரின்” ஜீவசமாதி இப்பகுதியில் மறைந்துள்ளது. பண்டைய யுகங்களில் இருந்தே எண்ணற்றச் சித்தர்களின் ஜீவ சமாதிகள் பொலிந்து வரும் “சித்தர்குல சீர்வளப்” பகுதி இது! கலியுகத்தில் தற்போது துரதிருஷ்ட வசமாக, இவற்றுள் பலவும் தோண்டப்பட்டுக் கட்டிடங்களாய் ஆகி உள்ளன.

வாரம் ஒருமுறை ஜீவசமாதித் தரிசனம்

மது, புகை, தீயவழிக் கேளிக்கைகள் போன்ற பலவற்றுக்கும் தம் பகுத்தறிவை அடகு வைத்து வரும் கலியுக மக்களைச் சீர்திருத்தி, நல்வழிப்படுத்த உதவுபவையே சித்தர்களின் ஜீவ சமாதி தரிசனங்களாகும்.

இதுவே கலியுக மக்களை நல்வழிப்படுத்தும் மிகவும் எளிமையான தெய்வீக சாதனமும் ஆகும். எனவே, வாரம் ஒரு முறையேனும், குடும்பத்தோடு சித்தர்களின் ஜீவ சமாதியில் தரிசனம் செய்து, இயன்ற அளவு அன்னதானமிட்டு வருவதால், குடும்பத்தில் நல்ல ஒற்றுமையும், தார்மீக ரீதியாகப் பணம் மற்றும் பொருள் வரவும் கை கூடும்.

டாக்டர்களுக்கான நியதிகள்

மருத்துவர்கள் தங்கள் பூர்வ ஜன்மப் புண்ய வசத்தாலும், பித்ருக்களின் ஆசிகளாலும் தான் புனிதமான மருத்துவத் துறைக்கு வந்துள்ளனர் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பூலோக வாழ்வில் மிகவும் முழுமையான அளவில், முதிய வயதில் ஓய்வு என்றில்லாது, வாழ்நாள் முழுதும் இறைப் பணியாக அமையும் அபூர்வமான துறைகளில் மருத்துவத் துறையும் ஒன்றாவதால் இதைப் பெற்றவர்கள் நல்வரங்கள் பலவற்றையும் பூர்வ ஜன்மப் புண்ய வசத்தால் அடைந்தவர்களும் ஆகின்றனர். எந்த அளவிற்கு மருத்துவர்கள் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவப் பணிகளை ஆற்றுகின்றார்களோ, அந்த அளவிற்கு மருத்துவத் திறமும், கைராசியும் நன்கு விருத்தியாகும்.

மருந்தீஸ்வரர், ஔஷதீஸ்வரர், பவ ஔஷதீஸ்வரர், அருமருந்து நாயகி, தன்வந்த்ரீ மூர்த்தி, கருட மூர்த்தி போன்ற மருத்துவ சக்திக்கான தெய்வ மூர்த்திகளின் வழிபாடு, செவ்வாய், ஆயில்ய நட்சத்திர நாள், பௌர்ணமியில் அருணாசல கிரிவலம், தேனி மலை கிரிவலம், அகஸ்தியர், போகர், புலிப்பாணி, காஞ்சிபுரம் போடா ஸ்வாமிச் சித்தர், சிங்கம்புணரி வாத்யாரையா முத்து வடுக நாதச் சித்தர், கோட்டையூர் எச்சில் பொறுக்கி ஆறுமுகம் சித்தர், சின்னபாபு சமுத்திரம் படே சாஹிப் சித்தர், தன்வந்த்ரீச் சித்தர் போன்ற மருத்துவத்துறைச் சித்தர்களின் வழிபாடு, வில்வம், துளசி, வேம்பு, மகிழம், அரசு போன்ற மருத்துவ விருட்சங்களின் வழிபாடு, சுற்றி வலம் வருதல் – இவற்றில் மருத்துவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

திருநீற்றுப் பதிகம், வைத்யநாதாஷ்டகம் போன்ற துதிகளைத் தினமுமே மருத்துவர்கள் நன்கு மனனம் செய்து, ஓதி வந்து, தங்கள் மருத்துவ குண சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் நன்கு விருத்தி செய்து கொள்ள வேண்டும்.

மருத்துவர்கள் தினமும் வலது, இடது கரங்களில் திருநீற்றுப் பட்டைகளை இட்டுக் கொண்டு, சாந்தமாகத் தர்பைப் பாயில் அமர்ந்து, வலது கை நடுவிரல், மோதிர விரல்களை இடது கை மணிக் கட்டு நாடிகளின் மேல் வைத்து வைத்யநாதாஷ்டகத் துதிகளையும், இடது கை நடுவிரல் மோதிர விரல்களை, வலது கை மணிக்கட்டு நாடிகளின் மேல் வைத்துத் திருநீற்றுப் பதிகங்களை ஓதியவாறும் ரத்த அலை அழுத்தங்களை, ஓம்கார நீற்றலைகளாக பாவனை செய்து தினமும் ஆறு முறையாவது, சிறிது நேரமாவது தியான பூஜை ஆற்றிட வேண்டும்.

பலா அல்லது தேக்குப் பலகை, கம்பளி, பச்சை வண்ணத்துணி, தர்ப்பைப் பாய் போன்ற எட்டு வகை ஆசனங்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து அமர்ந்து, வலது உள்ளங்கையை இடது மார்பின் மேல், நெஞ்சுத் துடிப்புகளை உணரும் வகையில் வைத்து, இடது கையால் வல்து தோளை அரவணைத்துத் கண்களை மூடிய வண்ணம் மேதா சூக்த மந்திரங்களை ஓதி, மேதா தட்சிணா மூர்த்தியை யோகித்துத் தியானிக்க வேண்டும்.

பிறகு மருந்தீஸ்வர லிங்கம், அருமருந்து நாயகி, தன்வந்த்ரீ மூர்த்தி, கருட மூர்த்திகளைக் கண்களுக்குள்ளும் சிந்தனைக்குள்ளும் கொணர்ந்து தாமறிந்த இறைத் துதிகளை ஓதுதல் வேண்டும்.

ஸ்ரீபடேசாகிப் ஜீவசமாதி
சின்னபாபுசமுத்திரம்

சித்தர்களின் ஜீவாலயங்கள், ஜீவசமாதி, அதிஷ்டானம் – இவற்றை அடிக்கடித் தரிசித்தும் வர வேண்டும். கலியுக மஹான்களாக அவதரித்து ஏழைகளின், பக்தர்களின் கடுமையான நோய்களை, தீராப் பிணிகளைத் தெய்வீக ரீதியாகத் தீர்த்து வைத்த போடா சித்தர், எச்சில் பொறுக்கி ஆறுமுக சித்தர், ஷீர்டி சாய்பாபா, சேஷாத்ரி சுவாமிகள், ரமணர், விசிறி சுவாமிகள் போன்ற சித்தர்களின், மஹரிஷிகளின் ஜீவாலயங்களில் அன்னதானத்துடன் வழிபட வேண்டும்.

தினமும் அருகம்புல், துளசி, வில்வம், ஓமம் இலைகள் சிறிதையும் உண்டு, கங்கை, காவிரி போன்ற புண்ணியத் தீர்த்தத்தையும் அருந்தி வர வேண்டும். மாதம் இருமுறை மலைத் தலங்களில் கிரிவலம் வருதலும், சஷ்டி, திருவோணம், ஏகாதசி, ஆயில்யம், செவ்வாய் நாட்களில் இயன்ற வகையில் விரதம் இருத்தலும் விசேஷமான மருத்துவ குணங்களைப் பெற்றுத் தரும். மருத்துவர்கள் மாதந்தோறும் கண்டிப்பாக வழிபட வேண்டிய ஜீவாலயமே, பாண்டிச்சேரி வில்லியனூர் அருகில் உள்ள சின்னபாபு சமுத்திரம் ஸ்ரீபடேசாஹிப் சித்தருடைய குருமூர்த்தம் ஆகும். மிகவும் சக்தி வாய்ந்த ஜீவ சமாதி! இங்குள்ள பழமையான மகிழ மரத்தை வலம் வருதல் வேண்டும்.

மருத்துவர்கள் தம் குடும்பத்தாருடன் அடிக்கடி ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். தாம் பயன்படுத்தும் மேஜை, பருத்தித் துணி, பேனா அனைத்திலுமே இயற்கையான உலோகம், மரம் இருப்பதே நல்லது. கூடிய வரையில் இரும்பைத் தவிர்க்கவும். இரும்பு வகைகளைப் பயன்படுத்த நேரிட்டால், இரும்புக்குரிய சனீஸ்வரக் கோள் துதிகளை ஓதியும், இரும்புக்கு அவ்வப்போது ராசிமான்ய வண்ணம் பூசியும் பயன்படுத்திட வேண்டும்.

வதைத்துக் கொல்லப் பெற்ற மிருகங்களின் தோலால் ஆன கையுறை, கைப் பை, பெட்டி, காலணிகளை ஒரு போதும் மருத்துவர்கள் பயன்படுத்துதல் கூடாது.

மருத்துவர்கள் நெற்றியில் எப்போதும் இறைச் சின்னம் தரித்திருக்க வேண்டும். கறுப்பு நிற இடுப்புக் கயிறு, கடுக்கன், பூணூல் (ஜாதி பேதம் இல்லாது அனைவரும் அணிய வேண்டியது), ருத்ராட்சம், மணி கங்கண், காஞ்சனாதி ஸ்படிகம் போன்ற தற்காப்பு ரட்சைச் சின்னங்களை எப்போதும் அணிந்திருத்தல் வேண்டும்.

இவ்வாறு புனிதமாகவே வாழ்ந்தால், டாக்டர் துறையில் எவ்வாறு தான் சம்பாதிப்பது, என்று பலரும் குறிப்பாக மருத்துவர்களின் குடும்பத்தார் எண்ணிடலாம். டாக்டர் துறை என்றாலே பணம் சம்பாதித்துக் கொடுக்கும் துறை என்ற எண்ணம் ஏற்படுதலே தவறானது. பெரும் பணத்தால் நிம்மதியோ, சந்தோஷமோ கிட்டுமா? எனினும், உண்மையில் அரும் பெரும் இறைப் பணியாக மருத்துவத் துறையை மிகவும் புனிதமானதாகக் கருதி அரிய சேவைகளை ஆற்றி வந்தாலே திருமகளே மனமகிழ்ந்து செல்வத்தை அருளிடுவாளன்றோ!

ஜுலை 2005 பௌர்ணமி நாள்: 20.7.2005 புதன் கிழமை இரவு 8.24 மணி முதல் 21.7.2005 வியாழக் கிழமை மாலை 4.30 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமித் திதி நேரம் அமைகின்றது. திருஅண்ணாமலை கிரிவல நாள் : 20.7.2005 புதன்கிழமை இரவு.

4.7.2005 திங்கட்கிழமை மதியம் 1.52 மணி முதல் 5.7.2005 செவ்வாய்க் கிழமை மாலை 3.34 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆனி மாதச் சிவராத்திரித் திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள் : 4.7.2005 திங்கட் கிழமை இரவு.

அமுத தாரைகள்

வான் செய்திகளை அளிக்கும் வான் பறவைகள், மிருகங்கள்!

உங்கள் வீட்டில் அலுவலகத்தில், அருகில் வந்து போகும் பறவைகள், மிருகங்கள், தாவரங்கள், யாவுமே பல வானியல் செய்திகளைத் தந்து கொண்டுதாம் இருக்கின்றன. சற்று உன்னிப்பாகக் கவனித்து வந்தால், அவை உங்களுடன் மனதார உரையாடத் தொடங்குவதை நன்கு உணரலாம். உண்மையில், ஒவ்வொரு பறவையும் பல வானியல் செய்திகளை உரைத்து, “பெறுதற்கரிய மானுடப் பிறவியை அரிய பகுத்தறிவுடன் பெற்றுள்ள மாமனிதர்களே! நாங்களே குறைந்த அறிவு நிலைகளுடன் எங்கள் குலத்திற்குள்தான் உரையாடிக் கொள்ள முடியும்! நீங்களோ, அனைவருமே அனைத்துத் தாவரங்களுடன், விலங்குகளுடன், பட்சிகளுடன் பேசும் வல்லமையை, திறமையை ஆறறிவுப் பகுத்தறிவாகப் பெற்றுள்ளீர்களே! தக்க சத்குருவை அடைந்து, பொன்னான இத்திறமைகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு, ஆன்மீக சக்திகள் ததும்பிட நன்கு வாழலாமன்றோ, ஏன் இவ்வாறு செய்வதில்லை!” என்று கேட்கின்றனவே! இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்?

ஆதவ அருட் கிணறு
ஞாயிற்றம்பலம்

சிவபதவி அடைதல் எளிதன்று!

“இறந்து போன இன்னார் மோட்சம் அடைந்தார்!” என்று எவரேனும் அறுதியிட்டுக் கூற முடியுமா? ஆனால், அவரவர் வாழ்ந்த உத்தம வாழ்க்கை நிலைகளை, அனுபூதிகளைக் கொண்டு “உத்தமத் தெய்வீக நிலைகளை” அடைந்தார் என ஆன்மீக மாண்புடன் உரைக்கின்றோம். ஆனால் ஒரு வகைப் பண்பாடு எனக் கருதி, இறந்தவரைத் தற்காலத்தில் “சிவபதவி” அடைந்தார் என உரைக்கின்றனர்.

ஆனால் “சிவபதவி” அடைதல் என்பது வெறும் சுவரொட்டியால் மட்டும் வரும் அடைமொழி அன்று. உண்மையில் “சிவபதவி” அடைந்தவர்கள், இவ்வகைச் சுவரொட்டிகளையே வர விடாது தடுக்கும் தன்மை உடையார்! பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் எடுத்துரைத்து வருவது போல, “மரண அறிவிப்பை அளிக்காதீர்கள். இவை ஆவி சம்பந்தமான சேஷ்டைகளுக்குக் காரணமாகி, குடும்பத்தில் பல கொந்தளிப்புகளுக்கும், பிரேத தோஷங்களுக்கும் காரணமாகி விடும். மின்சார வகைத் தகனம், சடலைத்தைப் பிரேத ஊர்தியில் ஏற்றுதலையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். தோள் தூக்கிச் சுமந்து வளர்த்த பெற்றோர்களின் உடலைப் பிள்ளைகளும், உற்றம், சுற்றமும் மயானம் வரைச் சுமந்து செல்லுதலும், பழமையான நெருப்பு வகையிலான விராட்டி, விறகு வைத்தமையும் சிதை மூட்டுத் தகனமுமே சிறப்பானது. இவையே இறந்தோருடைய நற்கதிக்கும், மேன்மைக்கும் உதவும்.

அருணாசலக் கிரிவலப் புனிதக் காலம் உங்கள் வாழ்வில் செறியட்டும்!

வாழ்க்கையில் எத்தனையோ தவறுகளைச் செய்தாலும் அருணாசல கிரிவலத்திலாவது, வாக்கால், மனதால், உள்ளத்தால், உடலால், பகுத்தறிவால் எவ்விதத் தவறும் செய்யாது, “அருணாசல சிவ, அருணாசல சிவ, அருணாசல சிவ” எனப் பரிபூரண உள்ளன்புடன் ஓதி வாருங்கள்! ஒரு அருணாசலக் கிரிவலத்தில் நீங்கள் கோடிக்கணக்கான லிங்கங்களைத் தரிசிக்கின்றீர்கள்! கோடானு கோடி சிவனடியார்கள் நடந்த திருப்பாதையில் நீங்கள் நடந்து செல்லும் பாக்யத்தைப் பெறுகின்றீர்கள்!

இரட்டைப் பனைமரம் ஞாயிற்றம்பலம்

உங்களையும் அறியாமல் எண்ணற்றச் சித்தர்களையும், மஹரிஷிகளையும், ஞானியரையும், யோகியரையும் தரிசிக்கின்றீர்கள்! நீங்கள் தரிசிக்கின்ற அருணாசல மலை பல பிறவிகளிலும் வெவ்வேறு சரீரங்களில் உங்களால் தரிசிக்க பெற்றதே! உங்களுடைய முன்னும், பின்னும் கிரிவலம் வருவோர் வேறு யாரும் புதிதானோர் அல்லர், பூர்வ ஜன்ம பந்தத்தால் உங்களுடைய பூர்வ ஜன்மப் பெற்றோர்களும், பிள்ளைகளும், உற்றமும் சுற்றமுமேதாம்! ஒவ்வொரு அருணாசல கிரிவலமும் உங்கள் வாழ்க்கையில் மிகமிகப் புனிதமான நேரமாக அமையட்டும். மனதால் கூடத் தவறு செய்யாத நேரமாகத் திருஅண்ணாமலைக் கிரிவலக் காலம் உங்கள் வாழ்வில் ஒளி வீசுவதாக! குடும்பத்துடனும், சத்சங்கமாகப் பலருடனும் “அருணாசல சிவ, அருணாசல சிவ, அருணாசல சிவ” என இடைவிடாது ஓதி கிரிவலம் வருதல், நல்ல புனிதமான மாற்றங்களை வாழ்வில் பெற்றுத் தருவதாகும்.

உண்மையில் ஒவ்வொரு நாளும் உத்தமக் காலசக்திகள் பலவற்றைப் பூண்டே வருகின்றன. இவற்றுக்கான அரிய பல விளக்கங்களை, http://www.agnisiksha.org – வெப்தளத்தில் தினமுமே பெற்றிடலாம். தினசரியே ஏற்றப்படும் அரிய விஷயங்களுடன் சுமார் 800 பக்கங்களுக்கும் மேலான அரிய ஆன்மீக விளக்கங்களைத் தாங்கிப் பூரிக்கும் முழுமையான தெய்வீக வெப்தளமிது!

“கடவுளைக் காணும் முன், கடவுளைக் கண்டவர்களைக் காணுதல் வேண்டும்! இதுவே சித்தர்களின், மாமுனிகளின் ஜீவசமாதி வழிபாட்டின் ஆதாரமாகும். “நின் சீர்அடியாரை முதலில் கண்டு, அவர்களுடைய ஆசிகளை ஆழ்ந்த நம்பிக்கையுடன் நாடினேன் சுவாமி!” என இறைவனிடம் உரைப்பதைக் கேட்பதைத் தானே இறைவனே விரும்புகின்றார்! – குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன்

உத்தமத் தேவ நிலைகளில், குழந்தை ஜனிக்கும் பிரசவ நேரத்தையும் “ஊர்மிள யோக பாவனமாகப்” பரந்த யோக நிலைகளில் விளக்குகின்றார்கள். ஏனெனில், ஒரு மனிதனால் தாங்க முடிகின்ற வலியை விட 700 மடங்கு வலிய வலியை சுகப் பிரசவத்தில் ஓர் உத்தமத் தாய் தாங்கி, ஒரு உயிரை உலகுக்கு ஈன்று தருகின்றாள் என எந்த மனிதரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை., அந்த அளவிற்குக் கலியுக மனிதனுக்குள் சுயநலப் பிணி முற்றிக் கிடக்கின்றது.

700 மடங்கு வலியைத் தாங்கும் அந்த உத்தமமானப் பிரசவ நேரத்தில், “ஊர்மிள யோகம், பார்சுவத் தியானம், கார்மிள ஞானம்” ஆகிய மூன்று அரும்பெரும் தேவநிலை அனுபூதிகளை உலகெங்கும் ஒவ்வொரு தாயும் அடைகின்றாள் எனில், என்னே தேவ பலம், தேவ வரம், தேவ குணம் கொண்டது உத்தமப் பெண்ணாய்ப் பிறத்தல் ஆகும்.

தொடரும் ஆனந்தம்...

அம்பலம் என்றால் எம்பெருமான் நடனமிடும், தாண்டவமாடும் ஆனந்த சபை திருக்கூடம் என்பதை நாம் அறிவோம். இதில் பொன்னம்பலம் என்பது சிதம்பரம் திருத்தலத்தில் அமைந்துள்ளது. சிற்றம்பலம் என்பது பொதுவாக மனிதனின் சிதாகாச அம்பலத்தைக் குறிக்கும். இது போன்ற சபைகள் உலகெங்கும், இந்தப் பூமியெங்குமே நிறைந்துள்ளன. இதில் கொச்சின் புனித பூமியில் வைபீன் தீவுகளின் இடையே ஞாயிற்றம்பலம் என்ற இடத்தில் அமைந்துள்ளதே ஸ்ரீஞாயிற்றம்பலம் பகவதி திருத்தலமாகும்.

ஸ்ரீஞாயிற்றம்பல சித்தர் ஜீவாலயம் கொச்சி

இத்திருத்தலத்தில்தான் எம்பெருமான் திருநடனமிடும் ஞாயிற்றம்பலம் அமைந்துள்ளது. இங்கு ருத்ர மூர்த்தியாகத் திகழும் சிவபெருமானின் திருத்தலத்தில் ஸ்ரீஞாயிற்றம்பல சித்தர் பிரான் எம்பெருமானின் செம்மேனி அம்பலக் கூத்து என்ற திருநடனத்தை தினமும் தரிசனம் செய்து அதன் பலன்களை எல்லாம் உலக மக்களுக்குத் தாரை வார்த்து அளிக்கிறார்.

காணாமல் கோணாமல் கண்டு சந்தியா வந்தன வழிபாடுகளை நிகழ்த்த வேண்டும் என்று சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்னும், சூரியன் தலைக்குமேல் உச்சியில் பிரகாசிக்கும் நண்பகல் வேளையிலும், சூரியன் மறையும் தருணத்தில் சூரியன் மறைவதைக் கண்டும் சந்தியா வந்தன வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்பது சந்தியாவந்தன விதி. இவ்வாறு காலையில் எழும்போது உள்ளங்கைகளை விரித்து இரு கைகளின் அடிப்பகுதிகளைப் பார்த்து ஓம் ஸ்ரீஉத்தாதலகராய போற்றி என்று கூறி வணங்க வேண்டும். இதனால் ஒரு நாளில் நாம் செய்யும் கர்ம வினைகளின் ஒரு பகுதியை ஸ்ரீஉத்தாலகர் அல்லது உத்தாதலக மகரிஷி ஏற்று நம்மை வினைச் சுழல்களிலிருந்து காத்தருள்கின்றார்.

அது போலவே மாலையில் சந்தியாவந்தனம் இயற்றும் பழக்கம் இல்லாதவர்களும் சூரியன் மறைவதைக் கண்டு சூரியன் செந்நிறக் கோளமாக இருக்கும்போது ஞாயிற்றம்பலா, ஞாயிற்றம்பலா, ஞாயிற்றம்பலா என்று கூறி மேற்கு திசை நோக்கி இரு கை கூப்பி வணங்குவதால் அன்று இரவு சேரும் கர்ம வினைகளின் ஒரு பகுதியை கொச்சி ஞாயிற்றம்பலம் திருத்தலத்தில் உறையும் ஸ்ரீஞாயிற்றம்பல மகரிஷி ஏற்று மக்களைக் காத்தருள்கிறார் என்பதே நம் சற்குரு கூறும் இரகசியம்.

கேரள பூமியில் ஞாயிற்றம்பலம் திருத்தலத்தில் பொலிவதே ஞாயிறம்பலம் ஆகும். இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஆடும் ஞாயிற்றம்பலக் கூத்தை நேரில் கண்டு களிக்கும் பாக்கியம் பெற்றவரே ஸ்ரீஞாயிற்றம்பல சித்தராவார். வெறுமனே இந்தக் கூத்தை கண்டு இரசிக்கிறார் என்பதை விட மக்கள் ஒரு இரவில் சேர்க்கும் கர்ம வினைகளின் பகுதியை தான் எம்பெருமானின் நடனக் கூத்தை நேரில் கண்டு களிக்கும்போது பெற்ற புண்ணிய சக்திகளையே இவ்வாறு ஜீவன்களின் கர்ம வினைக் கழிப்பிற்காக தாரை வார்த்து அளிக்கிறார் என்பதே இந்த பெருமான் வர்ஷிக்கும் அனுகிரக சக்திகளாகும்.

ஞாயிற்றம்பலம்

பலரும் தூக்கம் வராமல் படுக்கையில் படுத்து புரண்டு கொண்டே இருப்பார்கள், வெளியே சொல்லும் அளவிற்கு பிரச்னையோ, உடல் வியாதிகளால் இவர்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும் எந்த வெளி காரணமும் இல்லாமல் இவ்வாறு மக்கள் தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தால் அத்தகைய கொடுமையான மனோ நிலையையும் மாற்றுவதே ஞாயிற்றம்பல மண் பகுதி, மணற் பாங்கான பூமியாகும். ஆதிசங்கரரின் தாய் காலடியிலிருந்து தினமும் நடந்தே வந்து ஸ்ரீஞாயிற்றம்பல சித்தரை தரிசனம் செய்து அந்த மகாத்மியத்தின் பலனாகவே ஆதிசங்கரரைப் பெற்றெடுத்தாள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம்.

தினமும் ஆதிசங்கரரின் தாய் அன்று காலடியில் இருந்து நடந்து சென்று ஸ்ரீஞாயிற்றம்பல சித்தரை தரிசனம் செய்த அந்த அடிச் சுவடுகள் இன்னும் இத்தலத்தில் இருக்கின்றன என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் இரகசியம் ஆகும். ஆதிசங்கரரின் தாய் ஆர்யாம்பா ஸ்ரீஞாயிற்றம்பல சித்தரை தரிசனம் செய்யும்போது தினமும் ஒரு திருத்தலத்திற்கான குறிப்பைத் தருவார். இந்த குறிப்பை வைத்துக் கொண்டு ஆர்யாம்பா மணலில் அந்த ஆலயத்தை அமைப்பாள். மாலையில் ஆர்யாம்பா அந்த ஆலயத்தை ஸ்ரீஞாயிற்றம்பல சித்தரின் அருளால் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டு காலடியில் இருக்கும் தன் வீட்டிற்கு திரும்பும்போது சூரிய பகவானின் செம்மேனி கிரணங்களால் அந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு ஞாயிற்றம்பலத்தில் நாட்டியமாடும் செம்மேனி நாதனால் ஏற்றுக் கொள்ளப்படும். இறைவனால் அந்த ஆலயம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கு அறிகுறியாக அந்த ஆலயம் மண்ணில் புதைந்து மறைந்து விடும். இத்தகைய ஆலயங்களின் அருட் சக்திகளே நம் சற்குரு அமைத்த பரகாய பிரவேச கோபுர கலசங்களில் பதிந்துள்ளன என்றால் நம் சற்குருவிற்கு நிகர் நம் சற்குரு ஒருவர் மட்டுமே என்ற கூற்று உண்மைதானே?

குழந்தைகள் இத்தலத்தில் மணல் வீடுகள் கட்டி விளையாடுவது நாம் இரசிக்கக் கூடிய ஒரு தெய்வீக வழிபாடாகும்.

இவ்வாறு குழந்தைகள் மட்டுமே கட்டிய ஒரு மணல் வீட்டையும் இங்கு அடியார்கள் கண்டு இரசிக்கலாம். இத்தகைய மணல் வீட்டை ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் குழந்தைகள் கட்டி விளையாண்ட லீலையை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். இன்றைய உலகின் மிக வளர்ந்த நாடுகளில் கூட உயர்நிலை அரசு அதிகாரிகள் தங்கள் பிரச்னைகளிலிருந்து மனத்தளவில் விடுபட்டு சகஜ வாழ்க்கைக்குத் திரும்ப அவர்கள் அலுவலகத்தில் மணல் நிறைந்த தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. அதிகாரிகள் தாங்கள் தலையைப் பிய்த்துக் கொள்ளும் பிரச்னைகள் வரும்போது இந்த மணலில் தங்கள் கைகளை அளாவியே மன அமைதி பெறுகின்றனர். இதே போல் குடும்பத்துடன் இத்தலத்திற்குச் செல்லும் பக்தர்கள் குழந்தைகளோடு சேர்ந்து தாங்கள் மணல் வீடுகள் கட்டி ‘விளையாடுவதும்’ தவறு கிடையாது. அளப்பரிய மனச் சங்கடங்கள் களையும் பூஜையாக இது அமையும் என்பதும் பக்தர்கள் ‘விளையாண்டு’ அறியும் உண்மையாகும்.

ரோகிணுக்கு பலம் சந்திரனால்
சந்திரனுக்கு பலம் சூரியனால்
சூரியனுக்கு பலம் அம்பலத்தால்
அம்பலத்திற்கு பலம் பவள மேனி பால் வெண்ணீற்றான் நாட்டியத்தால்
என்று ஞாயிற்றம்பலம் திருத்தலத்தில் திகழும் எம்பெருமானின் நாட்டியக் கோல சூட்சும இரகசியங்களை சித்த சுவடிகள் வர்ணிக்கின்றன. இத்தகைய செம்மேனி அம்பல சக்திகள் அனைத்தும் பூர்ணமாய்ப் பொலிவதே நம் சற்குருவின் ஜனன ஜாதகம் என்பதே நம்மை பிரமிக்க வைப்பதாகும்.

நித்திய பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலான நேரத்தில் ஞாயிற்றம்பலம் திருத்தலத்திலுள்ள ஆதவன் அருட் கிணற்று நீரை தலையில் தெளித்துக் கொண்டு இத்தலத்தில் உள்ள பிரகாரத்தை வலம் வருவதால், அல்லது இரட்டை பனை மரத்தையோ, அல்லது இத்திருக்கோயிலின் எதிரில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதிகளிலோ வழிபாடுகள் நிறைவேற்றி வந்தால் எத்தகைய கண் நோய்களும், கண் திருஷ்டி நோய்களும் தீர்வு பெறும் என்பதே ஸ்ரீஞாயிற்றம்பல சித்தர் அளிக்கும் அனுகிரகமாகும்.

ஸ்ரீஞாயிற்றம்பல சித்தர் ஜீவசமாதி கொச்சி

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam