நெய்க்கொட்டா மரத்தில் கொட்டும் நெய் எதுவோ !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!)

வெள்ளியங்கிரி அடிவாரத்தை அடைந்த பெரியவர் சுற்றும் முற்றும் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

“உனக்கு மட்டும் விசேஷமான கண்ணை பகவான் கொடுத்தான்னு வச்சுக்கோ, இந்த வெள்ளியங்கிரி மலையில ஒவ்வொரு நிமிஷத்துலயும் எவ்வளவோ தேவலோகப் புஷ்ப விமானங்கள் வந்து போறதைக் கண்ணால கண்டு, கண்டு, சந்தோஷப் பட்டுக் கிட்டே இருக்கலாம்டா கண்ணு! அப்பப்பா எவ்வளவு சித்தர்கள், எவ்வளவு மகரிஷிங்க இங்க கூட்டம் கூட்டமா வர்றாங்க ... போறாங்க... தெரியுமா?”

கண்களில் ஆனந்தக் கண்ணீர் தளும்பத் தளும்ப ... பெரியவர் விவரித்திட அவர் உடலில் கூட விநோதமான ... ஆனால் அற்புதமான ஒளிப் பிரகாசம் மெருகேறுவதை அன்றுதான் அவன் கண் கூடாகக் கண்டான்.

பூலோக தெய்வ மூலிகை வளாகமிங்கே!

“இங்கே தாண்டா பிரபஞ்சத்துக்கான மூலிகைப் பண்ணையே இருக்கு! பூலோகத்து மூலிகை, தேவ மூலிகை, சூரிய குண்டல மூலிகை, சந்திர குண்டல மூலிகை, சந்திர மண்டல மூலிகை ..” கண்களை இங்கும் அங்குமாகச் சுழற்றிக் கொண்டு பேசிக் கொண்டே வந்த பெரியவர்..

திடீரென்று ஓரிடத்தில் நின்றார். வானத்தைப் பார்த்துப் பெரிதாய்க் கும்பிட்டார்.

“நம்ப அங்உங்சிங் சித்தர்கள் குழாம் வந்துருக்காங்க!”

“திருஅண்ணாமலை, திருக்கயிலாயம் போல் அவர் மிகவும் புளகாங்கிதமடைந்து பேசுகின்ற சிவமலைத் தலமும் வெள்ளியங்கிரிதான்” எனச் சிறுவன் அப்போதுதான் உணர்ந்தான். அதற்குக் காரணமும் இல்லாமலில்லை!

பெரியவர்தான் “அங் உங் சிங்” எனும் சிவ குருமங்கள கந்தர்வ லோக குருமூர்த்தி மண்டலத்தவர் ஆயிற்றே!

“அங்” கிரி என்பதாக ... வெள்ளியங்கிரியாக ... “அங்” வகைப் பீஜாட்சரங்கள் பூவுலகில் பிரகாசிக்கும் வெள்ளியங்கிரி மலை என்பதால் தான், பெரியவர் அன்று, அதிசயமான, அற்புதமான தேவகளையுடன் பிரகாசிக்கின்றாரோ!

சிறுவன் அவரைப் பார்த்து, பார்த்து, அதிசயித்து, வியந்து நின்றான்.

“பீஜாட்சரங்களைச் சித்தி செய்யறுதுக்குன்னு திருஅண்ணாமலையை விட்டா, இந்த உலகத்துல ஒரு சில சிவபீஜாட்சரத் தலங்கள் தாம்பா நமக்குன்னு கலியுகத்துலக் கொடுத்துருக்காங்க! அதுல வெள்ளியங் கிரியும் ஒண்ணு!”

வெள்ளியங்கிரியில் ‘வெள்ளிப் பனித் தலையர்’ தரிசனம்

“வெள்ளிப் பனித் தலையன்னு சிவபெருமானைச் சொல்லுவாங்க தானே! அந்த வெள்ளிப் பனித் தலையை, மலையில் புடிச்சு வச்ச மாதிரியே வெள்ளிப் பனித்தலை மலை தரிசனம்னு ஒண்ணு இங்கே இருக்குடா கண்ணு!”

பெரியவர் வெள்ளியங்கிரியின் பெருமைகளைச் சொல்லச் சொல்ல...

எங்கும் அன்னை வழியே !

சிறுவனுக்கு (ஆத்ம) நா ஊறியது.

“மெதுவாக நாம் ஏன் காட்டுக்குள் சென்று, இங்கு விளையும் தெய்வீக அற்புதங்களைத் தேடிப் பார்க்கலாகாது?” எனவும் அவன் எண்ணலானான்.

“உள்ளே போய்ப் பாக்கற பாக்யம்.. அதெல்லாம் அவ்வளவு ஈஸியா வந்துடாதுடா கண்ணு! வெள்ளியங்கிரி மலை மூலிகைக் காட்டுக்குள்ள ஒரு மைல் போகணும்னா ஒன்பது லட்சம் தடவை ருத்ர ஜபம் செஞ்சிருக்கணும்! இல்லாட்டி ஒன்பது லட்சம் பேருக்கு அன்னதானம் பண்ணி இருக்கணும், சும்மா காட்டுக்குள்ளாற போய் இங்க, அங்கேன்னு வெறுமனே வேடிக்கை பார்க்கற கூத்து இங்கே கிடையாதுடா நயினா! ஜோதி விருட்சம், புண்ய விருட்சம் பகல்லேயே சூரியனை விட வெளிச்சமா இருக்கற... ஜகத் ஜோதியா வெளிச்சம் தர விருட்சங்கள் நிறைய இருக்குது இங்க! இதையெல்லாம், பார்த்தா மனசு சந்தோஷத்துல ரொம்பவும் பதறும்டா கண்ணு! வெளிலேயும் வர மனசு வராது! எல்லாத்தையும் அமைதியாப் பார்த்து ஏத்துக்கற பக்குவம் வந்தாத்தான் உள்ளே போற பாக்யமே கிடைக்கும், இதை முதல்ல நல்லாப் புரிஞ்சுக்க!”

சிறுவன் சற்றுத் திகிலடைந்தே விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளியங்கிரிப் பயணத்தின் ஒவ்வொரு பாத அடியும், புண்ய சக்திகளின் திரட்சி எனில் என்னே இதன் மஹிமை!

வெள்ளியங்கிரிப் பயணத்திற்கு மூலாதாரமாக, அங்காளி தேவிக்கு இனிப்புகள் படைத்து, அம்பாளே உண்ட காட்சியைக் கண்ணால் காண அவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை என்ற குறை அவனுள் பொங்கிக் கிடந்தது. எனினும், பெரியவர் கூறிய வேத வாக்கியங்கள் அவன் உள்ளத்தில் பதிந்திருந்தன.

காணக் கண்கோடி

“அம்பாளைப் பார்க்கணும்னா சேஷாத்திரி சுவாமி கொடுத்த மாதிரி விசேஷமான கண் பார்வை வேணும்டா கண்ணு! ரெண்டாவது, அம்பாள் வர்றான்னா, அந்த ஜில், ஜில்னு கொலுசு சப்தம் கேட்கறதே ஒரு திவ்யமான பிரசாதம்டா ராஜா! மூணாவதா, அம்பாளே நேரே வந்து பிரசாதம் வாங்கிக்கிறது மஹா மஹா பாக்யம்! ஏதோ சித்தர்களோட ஆசினால மட்டும் தான் இப்படி நடக்கும்! ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்கோ! அம்பாளுக்குப் பிரசாதம் வைக்கற பாக்யம் கிடைச்சாத்தான் திருப்பதில, வெள்ளியங்கிரி மலையில, திருக்குற்றால மலையில, பொதிய மலையில சர்வ சித்தர்களின் தரிசனம் கிடைக்கும், சுயம்பு லிங்கப் பூஜையும் பரிபூரணமாகும்!”

பெரியவரின் வேத வாக்கியங்கள் சிறுவனின் மனதினுள் நன்கு பிரதிபலித்தன.

ஆயிற்று, விடுவிடு வென்று பெரியவரின் பின்னால் நடந்து வந்த சிறுவன், விடியலின் கருக்கலில் தான் வெள்ளியங்கிரியை சிறிது பனி மூட்டத்தின் ஊடே கண்டான். கீழிருந்தவாறே வெள்ளியங்கிரியின் தாழ்பரப்பை, மலைத்திருமேனி உச்சியைப் பெரியவர் நன்கு விளக்கலானார்.

சற்று நேரம் கழித்து, கீழிருந்து மேலே செல்ல, இரண்டு நீளமான மரக் கோல்களைப் பெரியவர் எடுத்துக் வைத்துக் கொண்டார்.

“ஒன்று அவனுக்கு வரும்” எனச் சிறுவன் எதிர்பார்த்தான். ஆனால் அது வருவதற்கான அறிகுறியே இல்லையே!

விடியற் காலையில் பெரியவர் வெள்ளியங்கிரி அடிவாரத்துக்கு வந்து விட்டாலும், அங்குமிங்குமாய் சென்று, வந்து, ஏதேதோ மூலிகைகளைப் புரட்டிப் பார்த்து... அப்படி, இப்படியாக.. மாலையும் கூட வந்து விட்டது.

“ஏண்டா! மேலே போகலாமாடா கண்ணு!” பெரியவர் விசனத்துடன் கேட்டிடவே, சிறுவனுக்கு வெகு வேகமாய்க் கோபம் வந்து விட்டது.

“ஏன் வாத்யாரே! சூரியன் இருக்கற பகல் நேரத்தை விட்டுட்டியே! இப்படி ராத்திரியில மேல போனாக்க... தடவிக்கிட்டே போக வேண்டியது தான்!”

“அப்படியா சொல்றே, ஏதோ ரெண்டு, மூணு மூலிகைத் தேடினேண்டா! பஞ்சமித் திதியில மட்டும்தான் அதுங்க கிடைக்கும். உனக்கு வெள்ளியங்கிரியில் மூலிகை தேடின படலம் நான் சொன்னேனே ஞாபகம் இருக்கா!”

சிறுவனுக்கு டக்கென்று ஞாபகம் வந்தது! இங்கு மூலிகை தேட வந்து... பெரியவருக்கே ஒரு பெரியவர் குட்டு வைத்த அனுபூதி ஆயிற்றே! எப்படி மறக்க முடியும்?

“ஆமாம் ஆமாம்!” சிறுவன் வெகு வேகமாகத் தனக்கே உரித்தான சந்தோஷத்துடன் தலையை ஆட்டினான்.

“ஆமாண்டா நான் கொட்டு வாங்கின கதைன்னா உனக்குச் சர்க்கரையாய் இனிக்குமே!”

“சரி, சரி! ஏதாச்சும் கிடைக்குதான்னு பார்க்கலாம்!” என்று சொல்லிய பெரியவர், வெகு வேகமாய் எங்கோ ஒரு பக்கம் இறங்கிச் சென்று, ஒரு பெரிய (ஹரிக்கேன்) விளக்கைப் பிடித்துக் கொண்டு வந்தார் அந்தக் காலத்து இரும்பு விளக்கு! தகரம் கூட இல்லை, நல்ல குண்டு இரும்பு! போதாக் குறைக்கு விளக்கை வேறு தூக்கி வருமாறு சிறுவனின் தலையில் கட்டி விட்டார்.

விளக்கில் விளக்காதது!

சிறுவனால் விளக்கைத் தூக்கிக் கொண்டு நடந்து வர முடியவில்லை. மனதினுள் திட்டிக் கொண்டே சிறிது தூரம் நடந்தான்.

“ஏதாவது டிராமா ஆடி, அவர் தலையில் இந்த விளக்கைக் கட்டி விட்டாலென்ன?” என்று முடிவு செய்து, சற்று ஆர்ப்பரித்தான், ஆரவாரம் செய்தான்.

பிரபஞ்சத்தின் உத்தமச் சித்தர்களில் ஒருவரிடம் தெய்வீகப் பாடம் தனக்கு ஆகின்றது என்று அவன் அறிந்தானில்லையே! ஆனால், அதையும் அறியும் நாள் வந்த போது, சிட்டாய்ப் பறந்து மறைந்து போனாரே!

“பாவம்டா ராஜா! உன்னால தூக்கிக் கிட்டு நடக்க முடியலை தானே! சரி, சரி என்கிட்டேயே அதைக் கொடு! நானே எடுத்துக் கிட்டு வாறேன்!” என்று கூறி, மிக எளிதில் பிரச்னையைத் தீர்த்தார் பெரியவர், பெரியவரிடம் சிறுவன் விளக்கைக் கொடுத்த போது, “இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது!” என்று எண்ணியே அரைகுறைச் சந்தேகத்துடன் தான் கொடுத்தான்! விளக்கைக் கொடுத்தப் பின்தான் “ஏண்டா கொடுத்தோம்?” என்றாகி விட்டது சிறுவனுக்கு! ஏனெனில் விளக்கு இவன் கையில் இருந்த வரை பக்கவாட்டில் மெதுவாக வந்த பெரியவர் விளக்கு தன் கைக்கு வந்தவுடன், வெகு வேகமாக நடக்கலானார், சிறிது சிறிதாகப் படிகள் உயர்ந்தமையால், சிறுவனால் அவரை எட்டிப் பிடிக்க முடியவில்லை.

“எங்கே அவரை விட்டு விடுவோமோ?” என்ற பயம் வேறு அவனை அண்டி விட்டது!

ஒரு வழியாய்த் தேற்றிக் கொண்டு அவரைத் தொடர்ந்து ஓடினான். எவ்வளவு நேரம் அவர்கள் நடந்தார்களோ தெரியாது நடந்தார்கள், நடந்தார்கள் நடந்து கொண்டே இருந்தார்கள்! சற்றுத் தொலைவில் மலைச் சாய்வில் எதிரில் ஒரு குடிசை தெரிந்தது! அதனருகே ஒரு ஒளிப் பிரவாகம் தென்பட்டது!

திருக்கோளக்குடி

திருக்கோளக்குடி ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி வழிபட்ட மூன்று லிங்கத் தலம்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சிங்கம்புணரி அருகே திருக்கோளக்குடி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்தும் செல்லலாம்!

முக்கூட்டுச் சிவத்தலம்

சித்தர்களால் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி வழிபட்ட – மூன்று லிங்க மூர்த்திகள் அருளும் – “த்ரய சூட வாஸ்து லிங்க மூர்த்தி” அம்சங்கள் நிறைந்த தலமாகத் திருக்கோளக்குடி நன்கு பொலிக்கின்றது.

வானவியல் சாத்திரப்படி, 1008 கிரகங்களைக் காண வல்ல பூகோள ரீதியான ஆதிகோளத் தலமாகவும் திருக்கோளக்குடி பிரகாசிக்கின்றது. தாழக்கோயில், மத்தியக் கோயில், உச்சிக் கோயில் என மூன்றிலும் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி, பூஜித்த, இன்றும், என்றுமாய்ப் பூஜிக்கும் மூன்று மூல லிங்க மூர்த்திகளுடன் கூடிய முக்கூட்டுச் சிவத்தலம் இதுவே.

மலைப் பாறையில் தேன்கூடுகள் மிளிர, தேன் கூட்டிலிருந்து பொழியும் அமிர்தத் தேன் துளிகள், பாறையின் கீழ் உள்ள அபிஷேகச் சுனைத் தீர்த்தத்தில் கலந்து தெய்வீக மெருகை ஊட்டி அருளும் தலம்.

தோண்டுதலில் கவனம் தேவை ஐயா!

எவராயினும் சரி, பூமியடியில் நீரெடுக்க, 100 அடிக்குக் கீழே தோண்டக் கூடாது என்பது வருண பூமி சாத்திரச் சட்டமாகும். இதற்கு மேல் பூமியைத் தோண்டினால், பலத்த பூமி தோஷங்களும், வாஸ்து தோஷங்களும் வந்து சேரும். இவ்வாறு செய்திருப்பவர்கள் இதற்குத் தகுந்த பரிகார வழிகளைப் பெற்றிட, திருக்கோளக்குடியில் செவ்வாய் தோறும் கிரிவலம் வந்து ஜாதி, மத, பேதமின்றி, நூறு ஏழைச் சுமங்கலிகளுக்கு, எட்டு கஜ நூல் சேலைகளை, ரவிக்கைத் துணிகளுடன் மனமாரத் தானமாக அளித்து வர வேண்டும்.

அரசுத் துறை சார்பாக, பொதுமக்களின் நலன்களுக்காக 200 அடிவரை பூமியின் கீழ் நீரெடுக்கத் தோண்டிடலாம். மன்னர்களுக்கு, பொது நலக் காரியமாக நீரெடுக்க பூமியின் கீழ் 300 அடிவரைத் தோண்டிச் சென்றிட விசேஷ நியதி உண்டு.

மூன்று லிங்க மூர்த்தியர்கள்
மூன்று அம்பிகைகள்
மூன்று தல விருட்சங்கள்

ஆகிய முப்புரத் தாண்டவ தெய்வாம்சங்களுடன், மூன்று முக்கியமான வாஸ்து சக்திகளையும், குணங்களையும், தன்மைகளையும் கொண்ட அதியற்புதத் தலம். இங்கு முக்கனி, மூன்று, இலைகள், மூன்று திலகங்கள் (மஞ்சள், சந்தனம், குங்குமம்) என்று மூன்று மூன்றாக அபிஷேக, ஆராதனையோடு, நைவேத்யப் பண்டங்களுடன், திருக்கோளக்குடி மலையை இயன்றால் மூன்று முறை வலம் வருதல் வேண்டும்.

வாஸ்து என்ற தெய்வீகப் பதத்திற்கு

வா = வாவஸ்ய பீஜம்
ஸ் = ஸ் ரீத பீஜம்
து = துரீயாம்பர பீஜம்

ஆகிய மூன்று பீஜ சக்திகள், பீஜாட்சரங்கள், பீஜ தலங்களைக் கொண்டதாகும். வாவஸ்ய பீஜத்திற்கு ஸ்ரீவஸ்ய சக்திகளே மூலாதாரம். இதில் அம், உம், சிம், லம், தம் எனும் ஐந்து உப பீஜ அட்சரங்கள் உண்டு, இவை ஐந்துமே வாவஸ்யம் எனப்படுகின்றன.

ஒவ்வொரு அட்சரத்திற்குமான கிரணம், கிரண வண்ணம், கிரண ஒளி, கிரணப் பாதை இலக்கணங்கள் உண்டு. இவை யாவும் ஓரிடத்தின் வாஸ்து நீரோட்டங்களை நிர்மாணம் செய்கின்றன. இவைதாம் வாஸ்து சாஸ்திரத்திற்கான பஞ்ச பூத வாஸ்து சக்திகளையும் நிர்ணயம் செய்து தருகின்றன. இவையாவும் திருக்கோளக்குடி மலையின் பஞ்ச கோணங்களிலும் நன்கு அமைந்து செறிந்துள்ளன. நம்முடைய ஐந்து விரல்களின் மூலமாகவும் யோக ரீதியாய்த் தோற்றுவிக்கப் படுகின்றன.

வாஸ்து பஞ்சாட்சர யோக பூஜை

கட்டை விரல் நுனியால் சுண்டு விரல், சூரிய விரல், நடுவிரல், மோதிர விரல்களின் உள்அடிக் கணுவைத் தொடுதல், பிறகு ஐந்தாவதாக ஆள் காட்டி விரல் நுனியால் கட்டைவிரல் உள் அடிக் கணுவைத் தொடுதலுடன் ஒரு வாஸ்து பஞ்சாட்சர யோகபாத யோகம் பூர்த்தியாகின்றது.

ஓம் வசி வஸ்ய சிவஸ்சமே வாஸ்து சுப சிவம் - என்று ஓதுதலே வாஸ்து பஞ்சாட்சரம் ஆகும்.

முக்திப் பெருவழி முனிவர்கள் போத்திவழி
சக்தித் திருவழி சகஸ்ர ஸ்ரீவாஸ்தவ்யம்

-என்று ஓதி மூன்று முறை விரல்களை மூடி மூடித் திறத்தலுக்கு சதார யோக ஹஸ்த நடை என்று பெயர். இதனால் மணிக்கட்டு நாளங்கள் நன்கு வலுப் பெறும். இவற்றை விரலோடு ஒட்டிய வாஸ்து முத்ரா விதானத்துடன் வாஸ்து பஞ்சாட்சர உரு ஏற்றி வந்திடில் ஜீரண கோசம், ஜீவித கோசம், ஜீவன கோசம், ஜீவ கோசம் ஆகிய நான்கும் ஜிதேந்திரக் கோசத்தில் ஐக்கியமாகி கபால, கரண, கார்தவ்ய, மூலாதார நரம்புகள் ஆக்கம் பெற்றிடும்.

ஆசியளிக்கத் தகுதி தரும் நாதயோகம்

இதன் பிறகு முத்தார யோகமாக, காதுகளில் திவ்யமான மணி நாத சப்தம் கேட்கும், இதுவே மந்திர சித்தி முற்றலுக்கான தெய்வீகச் சின்னமாகும். இந்த ச்யாமள கரணநாத ஒலி கேட்கக் கேட்கத்தான் யோக்யதாம்சங்கள் அளிக்கப் பெறுகின்றன. இத்தகைய நாத உள்ஒலி கேட்போர் அளிக்கும் ஆசிகள் பலவித சக்திகளைக் கொண்டிருக்கும். ஏனையவை எல்லாம் ஆசிர்வாதம் ஆகாது.

இதுவே ஸ்ரீவாஸ்துப் பிரயோக சித்தி ஏறும் யோக தந்திரத்தில் உள்ளபடி “வா” எனும் வாஸ்து வார்த்தையின் பீஜாட்சர சக்தி விளக்கங்களாகும்.

ஸ்ரீநாகராஜன் கோளக்குடி

வாஸ்து எனும் தெய்வீகப் பதத்தில் இரண்டாவதாக வரும் ஸ் எனும் பீஜாட்சரப் பரலானது நாக சித்தி, நாக யோக சித்தி, நாகபாணம், நாகராஜ சித்தி ஆகிய சித்தி நான்கையும் நாகேஸ்வர சித்திக்குள் இயற்கையாகவே ஒடுக்கி அடக்குவதாகும்.

வெட்ட வெளியில் அருள்வதாக ஸ்ரீநாகேஸ்வர மூர்த்தி இங்கு தோன்றியுள்ளார். ராகு, கேது தசாபுக்தி, அந்தர ஜாதக காலத்தில் இருப்போர் இங்கு கிரிவலம் வந்து வழிபட வேண்டிய மூர்த்தி!

“வாஸ்தவ்ய வாஸ்தம் வாஸ்து வாஸ்வதீம்
ஈஸ்வர ஸ்வயம்போதி வாஸ்து சாஸ்வத ப்ரபும்”

-என்ற மாமந்திரத்தின் ஒவ்வொரு பதமும் “ஸ்” எனும் பீஜாட்சர நாதத்துடன் பொலிவதாகும். இதற்கு வாஸ்து ஸ்வாயம்பு பஞ்சாத்காரம் என்று பெயர். இதனை 1008 முறை ஓதி கிரிவலம் வந்து திருக்கோளக்குடியில் ஸ்ரீநாகேஸ்வர மூர்த்தியைத் தரிசித்திடில் நல்ல வீடு பாக்யம் கிட்டும்.

துரீய வாஸ்து பஞ்சாட்சர யாக சக்திகள்

ஸ்ரீவாஸ்து எனும் தெய்வீகப் பதத்தின் மூன்றாவது அட்சரமான “து” என்பது துரீய பீஜங்களைக் கொண்டதாகும். ஷட, ஹட, கட என்ற மூன்று முக்கியமான துரீய வாஸ்து அட்சரங்களைக் கடை பீஜங்களால் அமைத்து அருள்வதாகும்.

இம்மூன்று அட்சரங்களும் கஷ்டம், துஷ்ப்ரயோகம், பிரஷ்டம் ஆகிய மூவகைப் பெருந்துன்பங்களைக் களைய வல்லதாகும். இவற்றால்தாம் உலகில் பல வியாதிகளும் ஏற்படுகின்றன. இவற்றை நீக்க வல்ல மேற்கண்ட துரீய வாஸ்து பஞ்சாட்சர பீஜங்கள் யாவும் பிரவேசிகா எனும் ஒளிப்ரவாக வாசலைக் கொண்டதாகும்.

இருள் நீக்கி ஏக ஷட ஹட கடனம்
மருள் நீக்கும் பீஜ ஷட ஹட கடனம்
அருள் ஈர்க்கும் ஷட ஹட கடனமாய
வாஸ்துப்யம், வாஸ்துப்யம், வாஸ்துப்யம்

இருள் விலக ஒளிக் கற்றை வேண்டுமன்றோ! “கடையில் கடைந்த கடைத்துரீயம்” – என்றவாறாக, ஒளிப் பிரவாக வாசலால், இருட்பிரவாகப் பூசலை மாய்க்க வல்ல துரீய பீஜப் பிரகாசங்களே இவை யாவும்!

இவற்றை வேறெங்கும் கிட்ட இயலா முத்தூல வாஸ்து பீஜ சக்திகள் பலவும் பரிமளிக்கும் தலங்களில் திருக்கோளக்குடியும் ஒன்றாகும்.

ஸ்ரீகாளான் குடைச் சித்தர்

திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்! பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

சித்தர்கள் காரணப் பெயரையே பூணுவர் என்பது நாமறிந்ததே, காளான் குடைச் சித்தர் அருணாசல கிரிவல வளாகத்தில் சிறு கட்டை விரல் ரூபத்திலிருந்து, குடை தாங்கிய பல வடிவுகளிலும் தென்படுவார். கட்டை விரலளவில் சிறு காளான் குடையை அலுங்காமல், நலுங்காமல் கைகளில் பிடித்துச் செல்வதும், வாழை மரம் போல் விரிந்து பெரிதான காளான் குடையின் கீழ் அமர்ந்து தவம் புரிவதும், காளான்கள் கிளைக்கும் இடத்தருகே எப்போதும் சஞ்சரிப்பதும் இவருடைய தெய்வீக இயல்புகளில் சிலவாகும்.

காளான்களில் பல வகைகள் உண்டு. காளான்களிலும் எண்ணற்ற மூலிகை வகைகள் உண்டு. மழை பெய்த பின் வருண லோக ஜீவசஞ்சயங்களாகத் தோன்றுபவையே காளான்கள்.

அருணாசல மழை அமிர்த மழையே!

வேறு எங்கு மழை பெய்தாலும் அது வான்மேக மழையே. ஆனால் திருஅண்ணாமலையாம் அருணாசலத்தில் ஏற்படும் சிறு தூறலோ, பெருமழையோ எதுவாயினும் அது அமிர்த மழையே ஆகும்.

திருஅண்ணாமலையில் மழை பொழிந்திடில் மனித வடிவில் சித்தர், யோகி, ஞானி, மாமுனிகள் அப்போது கிரிவலம் வருகின்றனர் என்பது பொருள். ஏனைய நேரங்களில் கோடிக் கணக்கான சித்தர்களும், மகரிஷிகளும் காரண, காரீதர வடிவுகளில் எப்போதும் அருணாசலத்தைக் கிரிவலம் வந்த வண்ணமே உள்ளனர். அவர்கள் மானுட வடிவம் பூண்டு வரும்போது அருணாசலத்தில் அமிர்த மழை பொழியலாகும்.

தன் மீது அளப்பரிய பக்தி பூண்டவர்கள், தன்னை அண்டிக் கிரிவலம் வருகையில், இறைவனே மனமுவந்து வானத்தைப் பிழிந்து அமிர்தத்தை நன்னீர்த் தீர்த்தத்துடன் கலந்து பொழிவிக்கின்றார்.

ஸ்ரீஅருணாசல அமுத மழை நீர்ப் பெருக்கில் கிளைக்கும் காளான்கள் சாதாரணமானவை அல்ல. அமிர்த மூலம், வபை மூலம், கருப்ப மூலம், ஜீராம்ப மூலம் எனப் பலவகை அமிர்த மூலிகா சக்திகளை இவை கொண்டிருக்கும்.

காளான் சித்தர் அருணாசலத்தில் ஆங்காங்கே முளைக்கும் காளான் குடை அருகே அமர்ந்து யோகம் புரிகையில், காளான்களின் வண்ணம், வடிவம், தன்மைகள் மாறிக் கொண்டே இருக்கும். தவ முடிவில் சிறு குடை வடிவக் காளானை எடுத்து, விண்ணில் சுழற்றிட, சங்குச் சக்கரமாய், அது விண்ணில் சுழன்று, அருட்கதிர்களைப் பரப்பும்.

பாறைக் காளான், புற்றுக் காளான், செம்புறாங் கற்காளான், ஊற்று மண் காளான், மரவேர் மண் காளான் என்று காளான்களில் பல வகைகள் உண்டு.

சிகியாம்பரக் காளான் என்பது மயில்களால் மட்டும் கண்டறியப்பட்டுத் தன் அலகுகளால் கொத்திப் பிரிக்கப்படுவதாகும். இவ்வாறு மயில் அலகு பட்ட காளானுக்கு எத்தகைய விஷத்தையும் முறிக்கும் பாஷாண குமுதசக்தி உண்டு.

குக்குடக் காளான் என்பது சேவலால் மட்டும் அறியப்படும் காளான். சேவல் அலகு பட்ட காளான்கள் வம்ச விருத்திகளை அளிக்கும் மூலிகாப் பலன்களைக் கொண்டிருக்கும்.

கஜபூதிக் காளான் என்பது யானைகளால் மட்டும் அறியப் பெற்றுத் தம் பாதங்களால் அழுத்தி, மூலிகா திரவிய திரவத்தைப் பூமியில் பாய்ச்சுவதாகும். பாத வகை நோய்களைத் தீர்க்க வல்லவை இவை. அனைத்துக் காளான்களும் மூலிகா சக்திகளைக் கொண்டிருக்க மாட்டா, பல காளான்கள் நோய்களையும் தருவதுண்டு.

மதம் பிடித்த யானைகள் பலவற்றையும் கஜகேசரி வகைக் காளான்களைக் கொண்டு, யானைகளின் மத்தகத்தில் தேய்த்து மதத்தை அடக்கிய சித்தர்பிரான் இவரே!

கன்றை ஈன்ற பின் விழும் நஞ்சுக் கொடியை பசு உண்டு விட்டால் சிசுவின் ஆயுளும், பசுவின் சினைத் தன்மையும் பாதிக்கப்படும். இதற்கு மாமருந்தாக கோமகோளக் காளானின் மூலிகா சக்திகளைப் அதிபந்தன மருந்தாக்கி நஞ்சுண்ட பசுவின் உடலில் செலுத்தி அதன் நான்கு இரைப்பைகளைச் சுத்திகரிக்க வல்லவராகவும் காளான் குடைச் சித்தர் திகழ்ந்தார்.

நீரற்று மங்கி இருக்கும் கிணறு, குளம் ஏரியில் நீர்ப் பெருக்கு ஏற்பட ஜலவ்யாப்த காளானை உண்ணும் நில ஆமைகளை அந்தந்த பூமியில் குறித்த திதி, நட்சத்திர நாளில் உலவச் செய்து நீரூற்றுப் பெருக்கித் தந்த சித்தர்பிரானும் ஆவார்.

இவ்வாறு காளான்களின் மூலிகா சக்திகளை, வகைகளை அறிந்து அவற்றைச் சமுதாய நலன்களுக்காகப் பயன்படுத்தியவரே காளான் குடைச் சித்தர் ஆவார். காளான் குடை மூலம் சமுதாயத்திற்கு அரும்பெரும் தொண்டாற்றிய காளான் குடைச் சித்தர் திருஅண்ணாமலையில் மாத சிவராத்திரியில் கிரிவலம் வரும் நாளே தாரண வருட ஆனி மாத இரண்டாவது சிவராத்திரி நாளாகும்.

சந்தனக் கல், சந்தனக் கட்டை
உரல், உலக்கை
அம்மி, அம்மிக் குழவி,
ஆட்டுக் கல், குழவி,
புடவை, ரவிக்கை
வேட்டி, துண்டு

இன்று ஆறுவகை பூஜைப் பொருட்களுடன் அருணாசலத்தில் மாத சிவராத்திரி கிரிவலம் வந்து, மேற்கண்ட ஜோடிப் பொருட்களில் குறைந்தது ஒரு ஜோடிப் பொருட்களையாவது, சட்டை, செருப்பு கூட அணிய இயலாது வறுமையுடன் வாழும் ஏழைக்குத் தானமாக அளித்திடில்,

தான் பெரிதும் நம்பி இருப்போர் ஏமாற்றாது உதவுவர்,

பிறருக்குச் செய்த உதவியும் நன்றிக் கடனாய்ச் சமயத்தில் கைகூடி வந்து உதவும்.

கணவனின் விநோதமான, விபரீதமான மனம் போன போக்கு கண்டு திகிலடைந்து வாடும் பெண்களுக்குத் தக்க உறுதுணை கிட்டிடவும், கணவன் திருந்திடவும் உதவும் மாத சிவராத்திரி கிரிவல நாள் இது. ஒவ்வொருவரும் தன்னுடன் இருவரையாவது கிரிவலம் அழைத்து வருதல் மிகவும் விசேஷமானது.

கலியுகப் பிறப்பு நியதிகள்

பொதுவாக, அவரவருடைய கர்ம வினைகளின் விளைவுகளைப் பொறுத்து மறுபிறவிகள் அமைகின்றன. ஆனால் மறுபிறவி, இப்பிறவிக்கு அடுத்த பிறவியாக அமையும் என்பதில்லை! வினைகளின் அழுத்தத்தைப் பொறுத்து, பிறவியே கிட்டாது ஆவி நிலையிலேயே அலைய நேரிடுவதும் உண்டு.

பிறப்பு, இறப்பு ரகசியங்கள் என்றும் புலப்படா!

மேலும், கலியுகத்தில் தற்போதைய பிறவியில் கிடைத்த கர்ம வினைகளின் பலன்களாக அடுத்த பிறப்பு அமையுமா அல்லது கடந்த காலப் பிறவிகளின் வினைகளையும் சேர்த்து மறுபிறவி அமையுமா என்பது தேவ ரகசியமாகவே துலங்கும். சற்குரு மூலமாகவே இவற்றை உணரக் கூடும். எனினும் சற்குருவும் அவரவர் ஆன்ம நிலைக்கு ஏற்ப இவற்றை ஓரளவே உணர்த்திடுவார்.

பிறப்பு, இறப்பு ரகசியங்கள் முழுமையான ஆறாம் இறைப் பகுத்தறிவில்தான் புலப்படலாகும். எனவே சற்குருவின் முதல் தெய்வீகப் பணியே மனிதன் மனிதனாக ஆறாம் இறைப் பகுத்தறிவுடன் துலங்க வழிகாட்டுவதாகும். ஏனென்றால் ஆறாம் இறைப் பகுத்தறிவு மூலமாகத்தான் முக்தி, மோட்ச நிலை என்பது பிறர் நலம் காண வாழ்தல் என உணரப் பெறும்.

மேலும் மனம், உள்ளம், உடல் ஒருமைப்பட்டால்தான் ஆறாம் பகுத்தறிவு பரிணமிக்கும். அதுவரையில் மனிதன் இரண்டு, மூன்றரை, நாலரை அறிவுக்குள்தான் முழுமை இன்றிச் செயல்படுகின்றான். பிறப்பு, இறப்பு ரகசியங்களை வேத, உபநிஷத் விளக்கங்களாக எவ்வளவுதான் எளிமையாக உரைகளாக, பக்கம் பக்கமாகப் புத்தங்களாக விரித்துச் சொன்னாலும், மனித அறிவால் புரிந்து கொள்வது மிக மிகக் கடினமே., புரிந்தது போலிருக்கும் பிறகு மறைந்து விடும். குருகுல வாச அனுபவப் படிப்பே நிரந்தரமான தேவ அறிவைத் தரும்.

பூர்வ ஜன்மம் அறிவதால்...

குருவருள் மூலமாகப் பெறும் வரை, பூர்வ ஜன்மப் பிறப்பு, இறப்பு இரகசியங்களை ஜாதகம், ஜோதிடம் மூலமாக ஓரளவே தெரிந்து கொள்ள முடியும். பூர்வ ஜன்மப் பிறவிகளை அறிதலால் யாது பலன் என முதலில் முடிவு கட்டிக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு சில பூர்வ ஜன்ம விளக்கங்களை அறிய வந்தாலும், இவை சரிதானா என அறிய மனம் வேகப்படும். பிறப்பு, இறப்பு ரகசியங்களை அறிதல் வேறு. பூர்வ ஜன்ம விஷயங்களை அறிதல் வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

 பிறப்பு, இறப்பு ரகசியங்கள் யாவும் மனதால் நன்கு அறிந்து பிறருக்குச் சொல்வது போலன்று, இவை எல்லாம் உள்ளத்தால் உணரப் பெறும் ஆத்மானுபூதிகள்! சொல்லால், உரையால், எழுத்தால் வடிக்கப் பெற முடியாதவை!

சொ(செ)ல்லா நிலை இதுவோ!

கலியுகத்தில் தற்போது நிகழ்கின்ற பயங்கரவாதம், வன்முறை, காமக் குற்றக் கடுவினைகளைக் கண்டால், பெரும்பாலான உயிர்கள் மறுபிறவியை நிர்ணயம் செய்யும் day of judgement எனும் தேவநாளையே சந்திக்காது ஆவி நிலை, சரீரமற்ற நிழல் நிலை, நரகமல நிலை போன்ற மிக மிகக் கேவலமான நிலைகளை அடைகின்றன என்பதே உண்மையாகின்றது.

ஒருவர் இறந்த ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே, அவருடைய சாயைச் சரீரம், பூமியிலிருந்து ஒரு சில அடிகளை கடக்கும் முன்னரேயே, ஈ, கொசு போன்ற பிறவிகளுக்கு ஆளாகி விடுகின்ற அளவிற்குக் கொடுவினைகளே கர்ம வினை மூட்டைகளாகப் பெருகிக் கிடப்பதாய்க் கலியுகக் கோலம் காட்டுகின்றது. இதற்காக புல், பூண்டு, புழு, வண்டு பிறவிகளைக் கேவலமான பிறவிகள் என எண்ணக் கூடாது.

அறிவு மயக்கம் ஆறைக் குறைக்கும்!

ஆறறிவும் பரிமளித்து வாழ வேண்டிய மனிதன், மது, காமம், களியாட்டம் என ஓரறிவு, ஈரறிவிற்குள் வாழத் தலைப்படுவதால், எந்த அறிவு நிலையுடன் இறந்தானோ அதே அறிவுடைய பிறவியைப் பெறலாகின்றான்.

பிறவிகளிலேயே மிகவும் உத்தமமான பிறப்பே மானுடப் பிறப்பு, உலக ஜீவன்களை மானுடர்கள், விலங்குகள், தாவரங்கள், அசையும் பிற பொருட்கள், அசையா ஜடப் பொருட்கள் என ஐந்து பெரும் வகைகளாகப் பிரித்துள்ளனர். மறுபிறவியானது, பொதுவாக இந்த ஐந்திற்குள் தான் அமைதல் வேண்டும். இவற்றைத் தாண்டி, ஆவி நிலை வாழ்வு வந்தால் ஆன்மீகத்தில் இது மிகவும் கேவலமான நிலையாகக் கருதப்படுகின்றது.

ஆனால் இவற்றிலும் ஆயிரக்கணக்கான பிரிவு வகைகள் உண்டு. எனவே தான், பிறப்பு, இறப்பு ரகசியம் கடலினும் பெரிதாய் விரிவதாக, ஆறறிவு கூடிய இறைப் பகுத்தறிவால் தான் இதனை நன்கு அறிந்து கொள்ள முடிவதாகவும் ஆகின்றது.

அதர்மமும் ஆறைக் குறைக்கும்!

ஆனால் உலக சமுதாயத்தில், பெரும்பாலான மக்கள் முழுமையான ஆறாவது இறைப் பகுத்தறிவை நன்கு பயன்படுத்திக் கொள்வதில்லை. கேளிக்கைகள், முறையற்ற காம இச்சைகள், பேராசை, பொறாமை, பகைமை, குரோதம், விரோதம், அளவுக்கு மீறிய ஆசைகள், அடக்க முடியாத எண்ணங்கள் போன்றவற்றால் மன மயக்கமுற்று, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு அறிவுகளுக்குள்ளேயே வாழலாகின்றனர்.

பூலோக சேவைப் பலன்கள் பிற லோகங்களையும் அடையுமே!

நமக்கு அளிக்கப்பட்டுள்ள மனித ஆயுளில் நம் பிறவித் தளையைப் போக்க வல்ல ஒரே தெய்வீக சாதனமாகிய குருவருளைப் பெறுவதற்கான நல்வழிகளை மேற்கண்ட ஆன்மீக சாதனங்களே அளிக்கவல்லவை. பூர்வ ஜன்மப் புண்ணிய வசத்தால் அடைந்துள்ள இந்த மனித சரீரத்தால், பிறர் நலம் பட வாழ்வதுடன், மூதாதையர்களுக்கு ஆற்ற வேண்டிய வழிபாட்டுக் கடமைகளையும் நிகழ்த்தி, பிற லோகங்களில் வசிப்போர், மறுபிறவிகளுடன் வாழ்வோர், பிறவி நிலை அடையாது ஆவி நிலையில் துன்பப்படுவோர் எனப் பல வகையினருக்கும் நலம்பட வாழ்தலே உத்தமப் பகுத்தறிவாகும். பூலோகத்தார் மட்டுமன்றிப் பிற லோகத்தாரும் உத்தம தேவ நிலைகளை அடையவும் இம்மானுடப் பிறவியின் நற்காரியங்களே துணை புரிகின்றன.

இவ்வாறு, ஒரு மனிதப் பிறவியில் எத்தனையோ ஆன்மப் பணிகளை ஆற்றிடலாம். ஆனால் புழு, பூச்சி போன்றவை ஓரறிவுக்குள் உழல்வதால், அங்கு பகுத்தறிவின் ஆக்கம் கை கூடுவதில்லை. இதனால் தான் புழுப் பிறவியிலிருந்து மேல் நிலைகளை அடைய வேண்டும். அதாவது இரண்டாவது, மூன்றாவது அறிவு நிலைகளை அடைந்து ஆறாவது உத்தம இறைப் பகுத்தறிவு நிலையை அடைதல் வேண்டும் என்ற மார்கத்தில்தான் மானுடப் பிறவி உத்தமமானதாகப் போற்றப் படுகின்றது.

அறிவால் தாழ்வதன்று! அன்பால் உயர்வதுண்டு!

இதற்காகப் புழுவைத் தாழ்ந்த இனம் என்றோ, மனிதனை உயர்ந்த இனம் என்றோ பாகுபாடு கொள்தல் கூடாது. ஆனால் ஓரறிவுப் புழுவோ, ஈரறிவு பூச்சிகளோ, மூன்றறிவுத் தாவரங்களோ அவையவை தம்முடைய அறிவு நிலைகளை முழுமையாகப் பயன்படுத்துகின்றன. ஆனால் ஆறறிவு வரை இறைப் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய மனிதன் தான், மது மயக்கத்தால் முறையற்ற காம இச்சைகள், கேளிக்கைகள், பேராசை, பண ஆசை, கொலை, கொள்ளை, திருட்டு போன்றவற்றால் ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவுக்குள் வாழ்வதால், இவ்வாறு இருக்கின்ற மனிதர்களை முழுமையான மனிதர்கள் என்றா சொல்ல முடியும்?

எனவேதாம் ஆறறிவாம் இறைப் பகுத்தறிவோடு வாழவேண்டிய மனிதன், முதலில் முழு மனிதனாக வாழ, தக்க சற்குருவை நாடுவதே முழுமுதல் இறைலட்சியமாக இருக்க வேண்டும். எனவே அவரவர் தம் நெஞ்சைத் தொட்டுப் பார்த்து எந்த அளவிற்கு ஆறாம் இறையறிவில் நம் மனதும் உள்ளமும் செயல்படுகின்றன என்பதை தம்முள் உணர்ந்து தெளிதல் வேண்டும். காணும் கனவுகள், மன நிலைகள், கண்களை இயக்கும் முறை, சுவாச முறை போன்றவை இவற்றை அறிய உதவும், நற்காரியங்களை ஆற்றுவதும், நற்காரியங்களுக்குத் துணை புரிவதுமே உத்தம அறிவைப் பெறத் திறம்படத் துணை புரியும்.

வாஸ்து ஹோம நியதிகள்

வாஸ்து ஹோமங்களில், சந்தனக் கட்டையை (குறைந்தது ஒரு அடி நீளம்) ஆஹுதியாகச் செவ்வாய் ஹோரை நேரத்தில் அளித்து, வாஸ்து ஹோமம் ஆற்றுவதால், பலவகை வாஸ்து தோஷங்களை நிவர்த்தி செய்திடலாம்.

வாஸ்து சக்திக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வல்ல ஸ்படிகம், கண்ணாடி சாதனங்கள், சங்குகள், யந்திரங்கள், சக்கரங்கள் போன்ற விசேஷமான ஆன்மீக சாதனங்கள் உண்டு என்பது உண்மையே. ஆனால், இவற்றில் மந்திர உரு ஏற்றப்பட்டால்தான், இவற்றில் வாஸ்து சக்திகள் பரிணமிக்கும்.

வாஸ்து ஹோமத்தில், ஒரு அடி நீள சந்தனக் கட்டையை, செவ்வாய் ஹோரை நேரத்தில் ஆஹூதியாக ஹோம குண்ட நெருப்பில் அளிக்கையில், அது முழுமையாக அக்னியில் பஸ்மம் ஆகும் வரை சற்றும் இடத்தை விட்டு நகராது, நெய் மற்றும் ஏனைய ஆஹூதிகளை அளித்து வருதல் மிகவும் முக்கியமானதாகும்.

இவ்வாறு ஓரடிச் சந்தனக் கட்டை முழுமையாக பஸ்மம் ஆகும் வரை ஆஹூதிகளைத் தந்து, ஹோமம் நடத்துதற்கு சந்தனத் துலாயனம் என்று பெயர். சந்தானச்சாரியார் இத்தகைய சந்தன யோக யாகங்களில் தலை சிறந்தவர் ஆவார்.

கொடிக் கம்ப வழிபாட்டில், உமாபதி சிவாச்சாரியார் உத்தம இறை நிலைகளை அடைந்தது போல, சந்தானச்சாரியாரும் சந்தனக் குண்ட ஹோம யாகங்களில் தலைசிறந்தவராக விளங்கினார். சந்தனக் காப்பு, சந்தனச் சாம்பிராணிக் காப்புக் கலைகளிலும் வல்லவராக விளங்கியவர்.

கொடிக்கம்பம் என்பது நம்முடைய பூவுடலின் ஆன்மச் சின்னமாகும். ஆத்மம் என்னும் ஜோதிப் பிரவாகத்தைத் தரித்து வருவதே நம் தேகமாகும். நம்முடைய கர்ம வினைகளைக் கழிப்பதற்காக நாம் பெற்றுள்ள வடிவமுமே நம் உடலாகும். உலகில் கோடிக் கணக்கான மனிதர்களின் உறுப்புகளின் செயல்பாடுகள், மருத்துவப் பூர்வமாக ஒன்றாக இருந்தாலும், கோடிக் கணக்கான மக்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவில் தானே இருக்கின்றார்கள். எனவே அவரவர் உடல் அமைப்பே, அவரவருடைய கர்மவினைகளின் தொகுப்பும், பகுப்பும் கர்ம வினைகளின் பாங்கை உணர்த்துவது ஆகும்.

கண்ணாடி ஓர் ஆத்மஅழகு சாதனமே!

அடிக்கடி கண்ணாடியைப் பார்த்தாலும், போட்டோ எடுத்தாலும் ஆயுள் குறையும் என்று சொல்வது உண்டு. இவற்றிற்கெல்லாம் நிறைய ஆன்மீக விளக்கங்கள் உண்டு. கண்ணாடியில் அவரவர் பிம்பத்தைப் பார்த்தால், “தன்னை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும், தன்னுடைய அழகு குறைந்துவிட்டது, தன்னை எவ்வாறு மேலும் அழகுபடுத்திக் கொள்ளலாம், பிறர் தன்னைப் பற்றி நன்கு எண்ணுமாறு உடலை சீர்படுத்திக் கொள்ளவேண்டும்!” என்றெல்லாம் எண்ணங்கள் வருவது உண்மைதானே!

தலை வாருதல், நெற்றிக்குப் பொட்டு வைத்தல், உடலை அலங்கரிக்கும் ஆடைகளைச் சீர் செய்தல் இவற்றைத் தவிர, தற்காலத்தில் கண்ணாடியை வேறு எதற்கும் ஆன்மப் பூர்வமாக யாவரும் பயன்படுத்துவது கிடையாதே! ஆத்ம விசாரம் என்பது உள்பூர்வமாகத் தன்னைப் பார்த்தல், கண்ணாடி என்பதால்தான்

ஆடி முன் ஆடிப் பார்த்து ஆடிடாதே!
(ஆடி = கண்ணாடி)
- என்ற கவி வழக்கும் பிறந்தது.

இதன் பொருள் என்னவென்றால், “கண்ணாடியைப் பார்த்துப் பார்த்துப் பல மாயையான எண்ணங்களை, விருப்பங்களை எடுத்துக் கொடுத்து மனதைக் கெடுத்துக் கொள்ளாதே!” என்பதே! ஆனால், கண்ணாடியில்தான் விசேஷமான, அற்புதமான பல ஆத்ம விசார விளக்கங்களை மிக எளிதில் தனக்குத் தானே உணர்த்துவதாகப் பெற்றிடலாம்.

கண்ணாடியின் ஆன்மக் காரணச் செயல் பற்றி, ஸ்ரீஆதிசங்கரருடைய “த்ருக் திருஷ்டி விவேக்” என்ற அற்புதமான தத்வார்த்த தீபிகா ஆன்ம மொழிக்கான விளக்கங்களை ஸ்ரீரமண மகரிஷி அருளி உள்ளார்.

எனவே, ஒரு கண்ணாடி கூட ஆத்ம ஞானத்தை உருவாக்குவதற்காகவே படைக்கப்பட்டுள்ளது! தினந்தோறும் நாம் பயன்படுத்துகின்ற கண்ணாடியைத் தெய்வீகப் பூர்வமாகப் பயன்படுத்தி வந்தால் நல்வழியில் நாம் நடந்திட எப்போதும் இக்கண்ணாடியே ஆன்ம மனப் பூர்வமாகத் துணை புரியும்.

கண்ணாடியில் உருவம் காணா கனிந்த குழந்தை

ஒரு வயதிற்கு உட்பட்ட எந்தக் குழந்தையும் பரிபூரண தெய்வாம்சங்கள் பலவும் நிறைந்த தெய்வீகக் குழந்தைதான். ஒரு வயது வரை குழந்தைகளுக்குக் கண்ணாடியைக் காட்டுதல் கூடாது என்ற தெய்வீக நியதியும் உண்டு. காரணம், குழந்தை தன்னுடைய ஆத்ம உருவத்தை மட்டுமே காண்கின்ற தெய்வத் தன்மைகள் பெற்றிருப்பதால், இவ்வுலகப் பொருட்களைப் பார்க்கப் பிடிக்காமல் போய்விடும். எனவேதான் குழந்தை பிறந்த பிறகு, இப்பூவுலக சம்பந்தத்தை அதனுள் நிலை நிறுத்தும் பொருட்டுத்தான், சிறு குழந்தைகளுக்குக் கண்ணாடியைக் காண்பிப்பது என்பது கிடையாது.

நாம் நம் உருவத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல, ஒரு சிறு குழந்தை – இன்னமும் பல தெய்வீகத் தன்மைகளோடு பரிணமிப்பதால் – அதற்குக் கண்ணாடியில் தன் உருவம் தெரியாமல் “ஆத்ம வடிவுதான்” புலப்படும். ஆத்ம ரூபத்தை அறிந்தவர்களுக்கு பூவுலகிற்கு வருவதற்கு விருப்பம் இருக்காது.

பொதுவாக, பெண்கள் மங்களகரமான ஆபரணங்கள், ஆடைகள் அணிவதற்கும் பொட்டு, கண் மை இடுவதற்கும், மங்களகரமாகப் பயன்படுத்துவதால் மாங்கல்ய சக்திகள் நிறைந்த கண்ணாடியை தானமாக ஏழைச் சுமங்கலிகளுக்கு அளித்து வருவதால் கணவனுடைய தீய வழக்கங்கள் அகல்வதற்கும் கணவனின் ஆயுள் விருத்தியாவதற்கும் துணை புரியும்.

ஸ்ரீஆதிவாஸ்து

ஸ்ரீபூமி அந்தர ஸ்ரீஆதிவாஸ்து சுந்தர மூர்த்தி மகிமை

ஜீவ சிருஷ்டி தோன்றுவதற்கு முன்னரேயே, பிரபஞ்சம் படைக்கப் பெற்றது. கோடிக் கணக்கான ஜீவன்களைப் படைத்திட, ஸ்ரீஆதிபிரம்ம மூர்த்தியும் (கடந்த இதழில், திடியன் மலை மகிமையில் விவரித்துள்ளது போல), அங், உங், சிங் ஆகிய மூன்று சித்தர்கள் மற்றும் பிரம்ம லோக மகரிஷிகள், யோகியரின் துணையுடன், சிருஷ்டி இலக்கணத்தைப் படைத்தார்.

இதில், நான்கு யுகங்களிலும் வாழ வேண்டிய கோடிக் கோடி உயிரினங்களின் வடிவுகள், உறைவிடங்கள், உடல் அமைப்புகள், ஆயுள் நிர்ணயம், சமுதாயத்தில் கூடி வாழ வேண்டிய இதர தாவர, ஜங்கம, மிருக உயிரினங்கள் போன்ற பற்பல ஜீவ அம்சங்கள் அனைத்துமே சிருஷ்டி இலக்கணத்தில் பதித்து வைக்கப் பெற்றன.

உயிரினத் தோற்றத்திற்கு வழிவகுக்கும் மும்மூர்த்திகளின் “த்ரய சூள(ட)டாமணி பிருந்த” பூஜை

ஸ்ரீஆதிமூல காலபைரவர் இவை அனைத்தையும் மேற்பார்வையிட்டு, “கால சிருஷ்டி” என்ற தாத்பர்யத்தையும், சிருஷ்டி இலக்கணத்தில் படிய வைத்து, கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றினுக்குள்ளும் ஜீவ ஆயுளை அமைத்தும், நிர்ணயித்தும் தருகின்றார். இதன் பிறகு, படைக்கும் கடவுள் பிரம்மர், காக்கும் கடவுள் திருமால், மறைக்கும் கடவுள் ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளின் சங்கல்ப பூஜைகள் நிகழ்கின்றன. இதற்கு “த்ரய சூள(ட)டாமணி பிருந்த பூஜை” என்று பெயர்.

மும்மூர்த்திகளின் இப்பூஜையில் எழும் யோகாக்னி சக்திக்கு “பூப்ரவாகம்” என்று பெயர். இந்த சக்திகளைக் கொண்டுதான் ஸ்ரீமகாவிஷ்ணுவே, ஆமையைக் (கூர்மம்) கொண்டு ஜீவ சிருஷ்டிக்கு அடிகோலினார். எனவே ஆதிமுதல் ஜீவன்களில் ஆமையும் ஒன்றாகும். இதனால் தான் இன்றைக்கும், பல யுகங்களைக் கடந்ததாக, யோக ஆமைகள் தீர்க ஆயுளைக் கொண்ட பூமயோக சக்திகளைப் பூண்டதாக இருக்கின்றன. கலியுகத்திலும் கூட, பல ஆமைகளின் சராசரி ஆயுளும் ஆயிரம் வருடங்களைக் கடந்ததாக, பூமயோக சக்திப் பூர்வமுடையதாக அமைகின்றது.

மும்மூர்த்திகளின் ஐக்ய பூஜையில் ஸ்ரீஆதிவாஸ்து அவதாரிகை!

மும்மூர்த்திகளும், ஜீவ சிருஷ்டிக்கு முன் “த்ரய சூள(ட)டாமணி பிருந்த பூஜையை” நிகழ்த்துகின்றார்கள் அல்லவா? இத்தருணத்தில் தான் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் அவதாரிகையும் பரிணாமம் பெற்றது.

பிரபஞ்சத்தில் ஜீவ வாழ்க்கை நிகழ்வதற்கான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்தும் கூடிய பஞ்சபூத சக்திகள் மிகவும் அவசியமானவைதாமே! இந்த பஞ்சபூத சக்திகளுக்கு ஆகர்ஷணமளித்து, பிரபஞ்சத்தை ஜீவ வாழ்க்கைக்கென நிர்ணயித்து அளித்துத் தருபவரே ஸ்ரீஆதி வாஸ்து மூர்த்தி! இவர்தாம் ஸ்ரீபூமி அந்தர ஸ்ரீஆதிவாஸ்து சுந்தர மூர்த்தி என்ற திருநாமத்துடன் போற்றப்படுகின்றார்.

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் தெய்வீக அம்சங்கள் பலவிதமாகக் கிளைத்து, பலவிதங்களில் பிரபஞ்சத்தில், ஜீவசக்தியை ஆக்கி, ஜீவன்களைப் போஷிக்க உதவுகின்றன. அதாவது நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்திற்குமாக  ஒவ்வொன்றிற்கும் விசேஷமான வாஸ்து மூர்த்திகளும் ஸ்தலங்களும் உண்டு.

திருக்கோளக்குடி – பூவுலகின் பூமி, அந்தர, கிந்தரத் தலம்

பிரபஞ்சத்தின் அமைப்பை சாதாரண அறிவால் புரிந்து கொள்ள முடியாது. எவ்வாறு உருவமில்லா இறைவனை, அருவுருவ லிங்க வடிவில் சிவபூஜை மூலம் இறைவனை உணர்தல் என்றாகின்றதோ, இதே போல பிரபஞ்சத்தின் மகிமையை அந்தரம் (வானம்), பூமி, பாதாளம் (கிந்தரம்) ஆகிய மூன்றாகப் பிரித்து எளிமையாக விளக்கிக் காண்பிக்கின்றார்கள். இம்மூன்றில், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான விசேஷமான வாஸ்து மூர்த்திகள் உண்டு. இவ்வாறு அனைத்து வாஸ்து மூர்த்திகளுக்கும் ஆதிமூலகர்த்தாவாக விளங்குபவரே, ஸ்ரீபூமி அந்தர ஸ்ரீஆதிவாஸ்து சுந்தர மூர்த்தி, இவருடைய அம்சங்களாகவே வாஸ்து சக்திகளைப் பொழியும் பல வாஸ்து மூர்த்தி வடிவுகள் திருமுருகனின் பல வடிவுகள் போல் தோன்றுகின்றன.

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

பூவுலகின் மகத்தான வாஸ்து சக்தித் தலங்களில் ஒன்றே புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள திருக்கோளக்குடி சிவாலயமாகும். அந்தரம் (உச்சி), பூமி (மத்திமம்), அடித்தளம் ஆகிய மூன்று நிலைகளில், மூன்று கோயில்களாக மலைவடிவ வாஸ்துத் தலமாகப் பொலிகின்றது.

பிரபஞ்ச வாழ்க்கையை நிர்ணயித்துக் காத்து, ரட்சிப்பவராக ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி விளங்குவதால், இவருடைய வடிவமும் மறைபொருளாகவே ஆலயங்களில் துலங்குவதாய் இதுவரையில் அமைந்துள்ளது. இதனை அவரவர் தாமே, குருவருள் மூலமாய் அறிந்து கொள்ள வேண்டும் என்பதும் தலையாய வாஸ்து நியதியாகும். இதனால்தான் இதுவரையில் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் வடிவம் வழிபாட்டிற்கு உணர்த்தப்படவில்லை.

செவலூர் ஸ்ரீபூமிநாதர் – ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி தினமும் பூஜிக்கும் தலம்!

தாரணம், வாரணம், காரணம் ஆகிய மூன்றும் அந்தரம், பூமி, கிந்தரம் எனும் அடித்தளம் ஆகிய மூன்றுக்கும், உரிய காரண சக்திகளாகும். இவை தாம் பல தலங்களிலும் மூன்று லிங்க மூர்த்திகளாகவும் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியாலேயே வழிபடப் பெற்ற வாஸ்துத் தலங்களாகவும் விளங்குகின்றன.

ஸ்ரீபூமீஸ்வரர், ஸ்ரீபூலோகநாதர், ஸ்ரீஜகதீஸ்வரர், ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீஜகன்னாதப் பெருமாள் போன்ற பூமி நாமங்களை உடைய மூர்த்திகள் யாவருமே ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியால் தினந்தோறும் பூஜிக்கப்படுகின்ற மூர்த்திகளாவர். இதிலும், ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்தி போன்று, தானாகத் தோன்றிய சுயம்பான அர்ச்சப் பெருமாள் மூர்த்தி, செவலூரில் உள்ளது போன்ற லிங்கத் திருமேனியில் பட்டை வடிவுள்ள சுயம்பு லிங்க மூர்த்திகள் யாவுமே, தினந்தோறும் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியாலேயே பூலோகத்தில் தினமும் பல வடிவுகளில் வழிபடப்படுபவைதாம்.

புதுக்கோட்டை – குழிபிறை அருகில் உள்ள செவலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீபூமிநாதர், பல பட்டை லிங்க வடிவ மூர்த்தியாவார்.

வாஸ்து திசைகள் வேறு, எண் திசைகள் வேறு!

செவலூர் திருத்தலப் பட்டை லிங்கத்தின் ஒவ்வொரு பட்டையும், ஸ்ரீஆதிவாஸ்து பூஜிக்கும் அருள் துறைத் தளமாகவும், அருளும் தலத் திசையாகவும் விளங்குகின்றன. அதாவது, இங்கு செவலூரில் உள்ள ஸ்ரீபூமிஸ்வரச் சுயம்பு லிங்கத்தின் மேல் காணப் பெறும் பட்டை வாரணங்கள் யாவும், ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி அனுகிரகம் செய்கின்ற பரிபாலனத் திசைகளாகும்.

வாஸ்துத் தத்துவத்தின்படி உள்ள திசைகள் வேறு, பூலோக ரீதியாக வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்ற வகையிலான திசைகளின் அமைப்பு வேறு. அதாவது, வாஸ்து சாஸ்திரத் திசைகளும், பூலோக சாஸ்திரத் திசைகளும் வெவ்வேறு சார்புடையவை ஆகும். ஏனென்றால், நம்முடைய திசை முறைகள் யாவும், சூரியன் உதிக்கும் இடத்தைப் பொறுத்து அமைபவை. ஆனால், ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியோ, ஸ்ரீசூரிய, சந்திர மூர்த்திகள் தோன்றுவதற்கு முன்னால் உற்பவித்தவர். மேலும், ஆதி சிருஷ்டி காலத்தில், பதினாறு திசைகள் இருந்தன. இவை, நட்சத்திரங்கள் உருவாவதற்கு முன் தோன்றியவை! எனவே சுயம்பு லிங்கப் பட்டைகள் காட்டுபவையே வாஸ்துத் திக்குகள் ஆயின. இதையே ஆலய ராஜகோபுரத்தில் நிர்மாணித்து வாஸ்து திசைகளை உணர்வித்தார்கள் . இதன் படியே அஷ்ட திக்குப் பாலகர்களும் நிர்ணயம் பெற்றனர். காலப் போக்கில், மக்களுடைய நம்பிக்கையுடன் கேட்டுப் பெறும் உத்தம அறிவு நிலை மறைய, மறைய, கண்ணால் படித்தறியும் சுவடி தோன்றியதை ஒட்டி, எட்டுத் திசைகளாயின.

ஸ்ரீஆரணவல்லி அம்மன்
செவலூர்

ஆதிகாலத்தில், ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் தலை, பாதங்களை வைத்து பதினாறு திசைகளின் அமைப்பை ஏற்படுத்தித் தந்தனர். சில பட்டை லிங்கங்களில், பதினான்கு பட்டைகள் அமைவது உண்டு. இத்தலங்களில் வாஸ்து சயன யோகம் பூண்டு நிறைவதால், அவருடைய தலை மற்றும் பாதம் தவிர, ஏனைய பதினான்கு திசைகள் உணர்விக்கப் பெறுகின்றன. எனவே எத்தனை பட்டைகள் லிங்கத்தில் உள்ளனவோ அதனைக் கொண்டு வாஸ்து சயனக் கோலம் விளக்கப்படுகின்றது.

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் கிடந்த, நின்று, இருந்து, நடந்த யோக நிலைகள்

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் கிடந்த (சயன) நிலை தவிர, நின்று, இருந்து, நடந்த யோக நிலைகள் உண்டா? ஆம், நிச்சயமாக உண்டு. அட்டைப் படத்தில் உள்ளது போல, ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் பால பருவ மேல் வண்ணக் கோலமே கலியுக வழிபாட்டிற்கெனச் சித்தர்களால் அளிக்கப்படுகின்றது. ஏனெனில், ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் ஏனைய நின்ற நிலை, அமர்ந்த நிலை, நடந்த நிலைக் கோலங்கள் யாவும், பிரபஞ்சத்தில் உள்ள பிற பூமிகளுக்கு, லோகங்களுக்கு என ஏற்பட்டவையாகும்.

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி அந்தர தீட்ச நிலையில் பால பருவ யோக பாவம் கொண்டவராவார். ஆம், ஸ்ரீகிருஷ்ணன் போல சிறிய குழந்தை வடிவத்தில் ஸ்ரீஆதிவாஸ்துவின் குழந்தை வடிவ மேல் நோக்கு வண்ணக் கோலமே, இக்கலியுகத்தில் நாம் சிறப்பாக வழிபடுவதற்கு ஏற்ற கோலமாகும்.

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி தம் வலது கையில் பூண்டிருக்கும் பூமர சியாமளக் கண்டீரசச் சின்முத்திரையில் தாம் பூலோக வடிவு சுழற்சி பெறுகின்றது. அதாவது, அவருடைய நான்கு விரல்களுக்குள் சுழற்சி அடைவதுதான் பூமியின் சுழற்சியானதாகும். இதற்காக ஸ்ரீஆதிவாஸ்துவின் கை விரல்களுக்குள் நம் பூமி மட்டுமே சுழல்வதாக எண்ணிடாதீர்கள்! அனைத்து பூமிகளும், கோளங்களும், அவர் கையில் தாம் சுழற்சி இயக்கத்தைப் பெறுகின்றன என்பதே வேதப் பிரமாணம்.

ரங்க ராட்டினத்தில், ராட்டினத்தைச் சுற்றுபவர் இரண்டு, மூன்று சுற்றுக்களுக்கு ஒரு முறை கையினால் தள்ளி விடுகின்றார் அல்லவா? எதற்கு? அதன் சுழற்சியை நிலை நிறுத்தவும், மேம்படுத்தவும் ஆகும். இதே போல, பூமியின் சுழற்சி இயக்கத்தை இயக்குவதற்காக, ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி செலுத்தும் விரல் ஆகர்ஷணச் சின்முத்திரா வாஸ்து இயக்கமே பல வகைகளில் – சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்றவாறாக அமைகின்றன. எனவே கிரகணங்களிலும் பல வகைகள் உண்டு.

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் அங்கீரண யோகச் சின்முத்திரை

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி அளிக்கும் அங்கீரண யோகச் சின்முத்திரைகளில் ஒன்றே, நடுவிரலை மடித்து, உள்ளங்கையில் கட்டை விரலுக்குக் கீழே உள்ள, உள்ளங்கை மேட்டைத் தொட்டு யோகித்து இருப்பதாகும். இதனால்தான், நடுவிரலானது சனி (கிரக) விரலாகவும், உள்ளங்கையில் கட்டை விரலின் கீழ் மேடு செவ்வாய் மேடாகவும் ஜோதிட ரீதியாகவும் உணர்த்தப் பெறுவதோடு, இவை இரண்டுமே வாஸ்து சக்திகளைப் பெற்றுத் தருபவையாகவும் குறிக்கப்படுகின்றன.

எனவே, செவ்வாய், சனிக் கிழமைகளில் மற்றும் பிற தினங்களில் செவ்வாய் ஹோரை நேரத்தில் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியைப் பூஜிப்பது மிகவும் விசேஷமானதாகும்.

மும்மூர்த்திகளின் “த்ரய சூட(ள)ளாமணி பிருந்தத்தில்” உற்பவித்தமையால், சின்னஞ்சிறு பாலகராகவே ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் வடிவம் சீர்மையாகப் பெறுகின்றது. ஏனென்றால், ரிஷி பத்னியாம் அனுசூயா தேவியும், பார்வதி, திருமகள், சரஸ்வதி தேவியரும், பல மகரிஷி பத்னியரும், மும்மூர்த்திகளையும் தரிசிக்கையில், குழந்தை வடிவத்தில் தானே தரிசனத்தைப் பெற்றனர்.

மும்மூர்த்திகள் காட்சி தரும் இடத்தில், அனைத்துத் தேவாதி தேவ மூர்த்திகளும், சித்தர்களும், மகரிஷிகளும் திரண்டு வந்து தரிசித்தமையால்,

“நிம்மை எம்முள் கட்டுண்டு,
எம்முள் வாஸ்தவ்யம் வாதூலமாய்
வாஸ்துப் பூரணமாய் வாழி வாழியவே!”

-என்று சர்வேஸ்வர சகஸ்ர ரூபத்தால் ஓதப் பெற்று உற்பவித்தமையால், பாலகராய்த் தோன்றிய ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் திருமேனியில் அனைத்துத் தெய்வாதி தெய்வத் தோற்றங்களும், குணங்களும் மிளிர்ந்தன. எனவே, வாஸ்து பூஜையிலேயே அனைத்துத் தெய்வ மூர்த்திகளின் வழிபாடும் அடங்கியுள்ளதாகச் சிறப்படைந்துள்ளது.

இளமையாக்கினார்! வளமையாக்கினார்!

சின்னஞ்சிறு குழந்தையாய் வாஸ்து மூர்த்தி உற்பவித்தவுடன் மும்மூர்த்திகளையும் தரிசிக்க வந்திருந்த அனைத்துத் தெய்வாதி தெய்வ மூர்த்திகளையும், சித்தர்களையும் வாஸ்து பாலக மூர்த்தி வணங்கித் திளைத்தமையால், தோன்றியவுடன் முதல் தரிசனமே இவ்வாறு திவ்யப் பிரகாசமாக அமைந்தமயால், அனைத்துத் தெய்வாதி வடிவுகளும் பிம்ப வடிவங்களாக வாஸ்துவின் தோற்றத்திற்குள் பதிந்தன.

இதனால்தான், ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியை

“நின்ற சீர் இளமையாக்கினார்
என்றும் பேர் வளமையாக்கினார்!”

என்று இளமையாக்கினாராக, வளமையாக்கினாராக சித்தர்கள் வாஸ்து மூர்த்தியைப் போற்றி வழிபடுகின்றனர். எனவே “இளமையாக்கினார், அபிவிருத்தீஸ்வரர்” என்ற நாமங்களைத் தாங்கி, சிவபெருமான் அருளும் தலங்களும், வாஸ்து பூஜைத் தலங்களாகின்றன (உ.ம் சிதம்பரம்). இத்தலங்களில் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி தினமும் சிவதரிசனம் பெற்று அன்றும், இன்றுமாய் ஆராதிக்கின்றார். இத்தலங்களில் ஆலய அமைப்பும் விசேஷமான வாஸ்திர இலக்கண அமைப்புகளைக் கொண்டிருக்கும்.

வாஸ்து சாஸ்திரம் என்பது என்ன?

பிரம்ம சிருஷ்டியில் உடலும் உயிரும் அளிக்கப்பட்டாலும், ஜீவ வாழ்க்கைக்குத் தேவையான உறைவிடம், உணவு, தொழில் முறை, உறவுகள், உற்றம், சுற்றம் போன்றவை கூடினால் தானே ஜீவ வாழ்க்கை நடைபெறும். இதில் ஜீவன்களுடைய உறைவிடத்திற்கான தெய்வீக இலக்கண நியதிகளை அளிப்பதே வாஸ்து சாஸ்திரமாகும்.

எவ்வாறு வேத சாஸ்திரங்கள் எத்தகைய ஒழுக்கத்துடன் உள்ளம், மனம், உடலுடன் வாழ வேண்டும் என்பதை உணர்விக்கின்றனவோ, இதே போல வாஸ்து சாஸ்திரங்கள், ஆலய அமைப்புகள், மனிதன் வாழத் தேவையான வீடு, நிலம், கட்டிட அமைப்புகள், தொழில் முறை இட இலக்கணங்கள் பற்றியும் விளக்குகின்றன.

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியே பிரபஞ்சத்தில் ஜீவ வாழ்க்கைக்குத் தேவையான நிலப் பரப்பு, நீர்ப் பரப்பு, ஆகாசப் பரப்புகள் அனைத்திற்குமான தெய்வ அவதார சக்திகளைப் பூண்டிருக்கின்றனர்.

“வாஸ்த்துப்யம்” என்பது நம் உடலுக்கும், பூமிக்கும் உள்ள பிணைப்பு, ஆகர்ஷண சக்திகள், காந்த சக்திகள், ஸ்பரிச சக்திகள் போன்றவற்றை விளக்குபவையாகும்.

“வாஸ்த்தவ்ய சக்தி” என்பது கண்களால் கண்டு, உணர்ந்து அறிவதாகும். இதற்கும் மனித உடல்படுகின்ற பூமியின் பகுதிகளுக்கும் நிறையத் தொடர்புண்டு. ஏனென்றால், எப்போதும் தொடர்பு கொண்டிருப்பது பூமியோடுதான். பிறப்பு முதல் இறப்பு வரை ஜீவன்கள் இடைவிடாது தொடர்பு கொண்டிருப்பதும் பூமியோடு தானே!

ஜீவப் பிறப்பிற்குத் தேவையான “விந்துக்கள்”, ஆண், பெண் உடல் நாளங்களை அடைவது பூமியில் விளைகின்ற உணவுப் பொருட்கள் மூலமாகத்தான்! மனிதனும் ஏனைய மிருக வகைகளும் நின்று, கிடந்து, நடந்து, அமர்ந்து, படுத்து, ஓடி, ஆடுகின்ற ஒவ்வொரு மனித நடவடிக்கையும் பூமியைச் சார்ந்து இருப்பதுதானே!

இறந்த பின்னும் மனித உடல் தகனமும், புதையல் அடைவதும் பூமியில் தான். இவ்வாறாக, ஒவ்வொரு வினாடியும், மனித உடலானது பூமியோடு தன்னையும் அறியாமல் வாஸ்து சக்தி மூலமாகத் தொடர்பு கொண்டு வாழ்கின்றது. இதனால் தான் பூம்ய தேவதைகளுக்கு நன்றி செலுத்தும் மிகச் சிறந்த வழிபாடாக அங்கப்பிரதட்சிணம் அமைகின்றது.

கர்ம வினைகளைக் களையும் அங்கப் பிரதட்சணம்

மனித உடலின் ஒவ்வொரு அங்கமும், பூமியில் பட்டு, பூம்ய தேவதைகளின் ஆசிகளைப் பெறுவதே அங்கப் பிரதட்சிணத்தின் ஆன்மீக லட்சணங்கள் ஆகும். எனவே, மாதம் ஒரு முறையேனும், பாடல் பெற்ற, பழமையான சுயம்பு மூர்த்தித் தலங்களில் அவரவர் உடல்வாகு, ஆரோக்யத்திற்கு ஏற்ப, சிறிது தூரமேனும் அங்கப் பிரதட்சிணம் செய்வதால், மிகவும் எளிமையான முறையில் பல கர்ம வினைகளைக் கழித்து விடலாம்.

மேலும் 72,000 நாளங்கள் உள்ள நம் உடலில், ஆன்மீக ரீதியாக, பலவீனமாக உள்ள பல நாளங்களைச் சீர்படுத்தி, இறைப்பூர்வமாக ஆக்கப்படுத்த உதவுவதே அங்கப் பிரதட்சண லட்சணங்களாகும்.

வருடத்தில், எட்டு முறை கண்டிப்பாக ஒவ்வொருவரும், அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டாக வேண்டும். திருஅண்ணாமலை கிரிவல மார்க்கத்தில், ஸ்ரீஉண்ணாமுலை அம்மன் மண்டபத்திலிருந்து சிறிது தொலைவில் வலது புறத்தில் மூன்று முகடுகளுடன் கூடிய உத்தமமான ஸ்ரீகாயத்ரீ லிங்க மலை தரிசனம் கிட்டும். இங்கு அங்கப் பிரதட்சணம் செய்வது மிகவும் சிறப்புடையதாகும் என்பதைப் பன்முறை உணர்த்தியுள்ளோம். ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி சிவதரிசனம் பெற்ற பகுதி இதுவே! மகத்தான வாஸ்து சக்திகள் நிறைந்த பகுதி!

இங்கு அங்கப் பிரதட்சிணம் (உடல் வலம்) புரிந்திட, திருஅண்ணாமலையின் புனித பூமி மண் நம் உடலில் சேர்வது என்னே பெரும் பாக்யம்! ஆனால், வெளியூர்களிலிருந்து அருணாசல கிரிவலத்தை நாடி வருவோர், தம் உடைகள் கசங்காது, அழுக்காகாது அங்கப் பிரதட்சணம் செய்ய இயலுமா? இதற்காக மாற்றுடைகளைக் கொண்டு வரவா முடியும் என்று எண்ணிடலாம்.

இதில்தான் இறைவன் இடும் சோதனை காத்துள்ளது. உண்மையிலேயே அருணாசல பக்தியைப் பூண்டவர்கள் எதற்கும் யோசிக்க மாட்டார்கள். ஆனால், நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ப, ஒரு பெரிய எட்டு முழ வேஷ்டி அல்லது போர்வையை கிரிவலப் பாதையில் விரித்து, இதன் மேல் உருண்டு அங்கப் பிரதட்சணமாக கிரிவலம் வருதலும் பெரிய சேவையாகும்.

வட பாரதத்தில் இவ்வாறு அங்கப் பிரதட்சணம் செய்வதற்காக, விசேஷமான புதுத் துணிகளை அளித்து சேவை ஆற்றுவோர் நிறைய உண்டு. கிரிவல அடியார்கள் அங்கப் பிரதட்சிணம் வருவதற்கும், புது வேட்டிகளை அளித்தல் மகத்தான புண்ணிய காரியமும் ஆகும். அங்கப் பிரதட்சிணத்தில் வாஸ்து அனுகிரக சக்திகள் நிறையக் கூடுவதால்தான் வருடத்தில் எட்டு நாட்களுக்கு வருகின்ற வாஸ்து தினங்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாஸ்துத் தலங்களில் அங்கப் பிரதட்சணத்தை ஆலயங்களில், கிரிவலப் பாதையில் நிறைவேற்றுதலும் மிகவும் விசேஷமானதாகும்.

வாஸ்து பூஜைக்கான எட்டு நாட்கள்

சித்திரை மாதம் – 10ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 1½ மணி நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்)

வைகாசி மாதம் – 21ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 6 மணி 24 நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்)

ஆடி மாதம் – 11ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 48 நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்)

ஆவணி மாதம் – 6ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 8 மணி 24 நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்)

ஐப்பசி மாதம் – 11ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 48 நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்)

கார்த்திகை மாதம் – 8 ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 4 மணி நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்) அதாவது உதாரணமாக காலை சுமார் 10 மணி முதல் 11.30 மணி வரை

தை மாதம் – 12ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 3 மணி 12 நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்)

மாசி மாதம் – 23ஆம் தேதி சூரிய உதயத்திலிருந்து 3 மணி 12 நிமிட நேரத்திற்கு மேல் (90 நிமிடங்கள்)

முன்னோர்களில் ஒரு சிலர் இழைத்த கொடுமையான பாவச் செயல்களின் விளைவுகள் சந்ததிகளைத் தாக்காது காத்திட, மேற்கண்ட எட்டு வாஸ்து நாட்களிலும், செவ்வாய்க் கிழமையிலும் அங்கப் பிரதட்சணம் செய்து வர வேண்டும்.

மேலும், உடல் மற்றும் மன ஊனங்கள், வம்ச வழி நோய்கள் சந்ததிகளுக்கும் தொடராமல் இருப்பதற்கான ரட்சா சக்திகளைப் பெற்றிட, வாஸ்து தினத்தில் செய்யப் பெறும், அங்கப் பிரதட்சிணப் பலாபலன்கள், சக்திகள் மிகவும் உதவும்.

ஸ்ரீஉலகளந்த பெருமாள்
காஞ்சிபுரம்

வாஸ்து பெருமாள்!

ஸ்ரீஉலகளந்தப் பெருமாள் (திருவிக்ரமர்) அவதாரத்தில், மகாபலிச் சக்கரவர்த்தி, ஸ்ரீவாமன மூர்த்தி கேட்ட மூன்றடி நிலத்தை அளந்து தரும் வைபவத்தில், ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கையில், ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியையே பெருமாள் சாட்சியாக வைத்துக் காலடியை எடுத்து வைத்தார். எனவே, திரிவிக்ரமப் பெருமாளின் திருவடி அளவை ஆனந்தக் கோலத்திற்குச் சாட்சியாக நின்றவரே ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி ஆவார்.

ஸ்ரீவாமனர் முதலடி எடுத்து வைக்கையில், பாலகராக ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி கிடந்த கோலமாய், சயனக் காட்சி தந்தார். ஸ்ரீவாமனரின் இரண்டாவது அடியில் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி நின்ற கோலம் கொண்டிருந்தார். மூன்றாவது அடியில், திரிவிக்ரமர் போலவே ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி, நடந்த கோலமாய், விஸ்வ ரூபக் காட்சி தந்தார்.

இம்மூன்று வடிவங்களிலும் ஸ்ரீவாமனரைப் போலவே சிறு பாலகர் ரூபத்தில் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் முதல் சயனக் கோலமே சித்தர்களால் நம் கலியுகத்திற்கு உரிய வழிபாட்டு உருவமாக அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு விதத்தில் சகல தெய்வ ரூபங்களும் பொருந்தியதாகத் துலங்குவதால், ஸ்ரீவாமன மூர்த்தியே வணங்குபவராகவும், ஸ்ரீவாமன மூர்த்தியை வணங்கியவராகவும் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி திவ்யமாகத் துலங்குகின்றார். எனவேதான் “மாவலி கண்ட மாதவ வாஸ்து மூர்த்தி” என்றும் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி சித்தர்களால் போற்றப்படுகின்றார்.

தோப்புக் கரணம் ஒரு திசை ஒடுக்க யோகமே!

பொதுவாக, ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்திக்கு நமஸ்கார வழிபாடு என்பது மிகவும் பிரீதி தருவதாகும். விநாயகப் பெருமானுக்கு தோப்புக் கரணம் மகத்தான யோகாசன வழிபாடாக அமைவது போல, ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்திக்கு சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரிப்பது மிகச் சிறந்த வழிபாடாகும்.

தோப்புக் கரணம் என்பது திசை ஒடுக்க யோக வகையாகின்றது. அதாவது விஞ்ஞானப் பூர்வமாகவும் கூட, இரண்டு காதுகளுக்கு இடையே உள்ள எலும்புச் சுருள்தான் மனிதனுக்கு சமநிலையைத் தருகிறது என்பது கோட்பாடாகும். இதனை விஞ்ஞானத்திற்கு அளித்ததே மெய்ஞானத்தின் தோப்புக் கரண யோகமே!

இரண்டு காதுகளையும் சற்றே இழுத்த நிலையில் வைத்து நின்று, அமர்ந்து, எழுந்து, கண்களை மூடியவாறு தோப்புக் கரணம் இடுகையில் நின்று, இருந்து, படர்ந்த ஆகிய மூன்று யோக நிலைகளைக் கடக்கின்ற கரணகுல யோக மார்க்கம் உடல் நாளங்களுக்கு ஏற்படுகின்றது.

பொதுவாக, ஒருவர் வேகமாக தன்னைத் தானே சுற்றிக் கொண்டால் தலை சுற்றுவது போலத் திசை மயக்கம் ஏற்படும். ஆனால், கண்களை மூடிய நிலையில் கரண சுதம்  (கர்ண = காது) என்ற வகையில் தோப்புக் கரண யோகம் செய்து உட்கார்ந்து எழுகையில், பிற நாளங்களில் எழும் ஆக்கங்களோடு சமன் பெறுகின்றது.

ஸ்ரீவாஸ்துவிற்குரிய பிட கர வலம்பத் தோப்புக் கரணம்!

எனவே, சிறு வயதிலிருந்தே, தினந்தோறும் 72 முறையாவது தோப்புக் கரணம் இட்டு வர, நாடி நாளச் சமன் நிலை ஆக்கம் பெறுவதால், இரத்த அழுத்த நோய், புற்று நோய், முழங்கால் நோய்கள், தலை சுற்றுதல் போன்ற இரத்த அழுத்த கபால நோய்கள், அடி வயிற்று நோய்கள், சிறுநீரக அடைப்பு நோய்கள் ஏற்படாதவாறு தற்காத்துக் கொள்வதுடன் இறைவன் முன் பணிகின்ற பாவனையும் உள்பரி யோகமாய்க் கூடி வரும்.

மேலும் தோப்புக் கரண யோகத்தால், அகங்காரம், ஆணவம் எனப்படும் மனப் புற்று நோயும் அண்டாது தற்காத்துக் கொள்ளலாம். தோப்புக் கரணம் என்பதில் பல வகைகள் உண்டு. காதுகளைப் பற்றிக் கொண்டு பொதுவாக இடுகின்ற தோப்புக் கரணம் விநாயக வணக்கம் ஆகும்.

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி, சயன நிலையில், தரையில் பின் திருமேனி சயனித்தவாறு யோகக் கோலம் பூண்டிருப்பதால் பிடகரவலம்பத் தோப்புக் கரணம் என்ற முறையில் கைகளை, முதுகின் பின்புறத்தில் இரு கைகளையும் கும்பிடுவது போல் வைத்துக் கொண்டு தோப்புக் கரணம் போல் உட்கார்ந்து எழுதலும் வாஸ்து முறை பிடத் தோப்புக் கரண யோகவகையில் ஒன்றாகும். இது கராவலம்ப தோத்திர யோக முறையில் வருவது, பயில்வதற்கு மிகவும் கடினமானது.

திசைமயக்கத்தைத் தீர்க்கும் கராவலம்ப யோகம்

இத்தகைய கராவலம்ப யோகத்தில் ஒரு சிலரே பாரதத்தில் தற்போது சிறந்து விளங்குகின்றனர். திசை மயக்கத்திலிருந்து ஒருவரை விடுத்து திசை ஒடுக்க யோகத்தில் திளைக்க வைப்பதே கராவலம்ப யோகமாகும். கராவலம்ப ஸ்தோத்திரம் என்று அபூர்வமான ஸ்துதிகள் கராவலம்ப யோக சித்திகளைத் தருவதாகும்.

திசை மயக்க யோகம் என்பது மாயையில் சிக்குவது. திசை ஒடுக்கம் என்பது மாயையிலிருந்து விடுபட்டு வெளிவருவதாகும். பலவிதமான துன்பங்களில் வாடுகின்ற நிலையில், வேதனைகளுடன் ஆலயத்திற்கு வந்து வழிபடுவோர் புனிதமான ஆலயச் சூழலில் தன் கவலைகளைச் சற்றே மறந்து, தெய்வீக உணர்வுகளோடு சில நிமிடங்களாவது பரிணமிக்கின்றார்கள் அல்லவா!

இதற்குக் காரணம், துன்பங்களின் திசை மயக்கத்திலிருந்து மனிதன் விடுபட்டு, ஆலயங்களில் பரிமளிக்கும் திசை ஒடுக்க யோகத்தில் லயிப்பதால் இத்தகைய திசை ஒடுக்க நிலை கிட்டுகின்றது. துன்பங்களை மறப்பது வேறு, திசை ஒடுக்க நிலையில் ஈடுபட்டுத் துன்ப மாயைகளிலிருந்து விடுபடுவது வேறு. ஆனால், ஆலயத்திலிருந்து வெளிவந்ததும் மறுபடியும் அதே துன்பங்கள் தாமே தொடர்கின்றன என்று எண்ணிடலாம்.

கர்ம வினைகளை அனுபவிப்பதே கர்ம யோகம்

ஆலய தரிசனங்கள் கர்ம வினைகளின் சுமைகளைக் குறைக்கின்றன. உண்மையில் உத்தமமான ஆன்மீக நிலை என்னவென்றால், அவரவர் கர்ம வினைகளுக்கு உரிய துன்பங்களை அனுபவித்தல் வேண்டும் என்பதே ஆகும்.  கர்ம வினைகளை அனுபவித்தாலன்றி அவற்றிலிருந்து தப்பிக்க முடியாது என்பது உண்மையே. ஆனால், ஆன்மீக சாதனங்கள், ஆன்மீக சாதனைகள், துன்பச் சுமைகளைப் பெருமளவு தணிக்க உதவும். சில ஆலயங்களின் கோபுர கலச தரிசனம், ராஜ கோபுர தரிசனம், தல விருட்சம், பசுமடம், தூண்கள், கொடி மரம், பிறைகள், விளக்கு ஸ்தம்பங்கள், தீர்த்தக் குள தரிசனமே பெருமளவில் கர்ம வினைச் சுமைகளைத் தணிக்க வல்லவையாக உதவுகின்றன. இவற்றுள் ஒன்றே காஞ்சீபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயமாகும்.

இவ்வாலயத்தின் வாஸ்து அமைப்பைத் திசை மயக்கம் களையும் படுகைகள் உடையதாக உரைப்பர். நம்முடைய விஞ்ஞான அறிவிற்கெல்லாம் எட்டாத, நம்மால் அறிவுப் பூர்வமாக உணர இயலாத, தொன்மையான காலத்து ஆலயமே காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயம்.

ஆலயங்களுக்கும் வாஸ்து சாஸ்திர நியதிகள் உண்டு. “பூஸ்ச வாஸ்து சாஸ்திரப்படி” மிகவும் சிறப்பாக அமைந்துள்ள ஆலயமே காஞ்சி ஸ்ரீகாமாட்சி ஆலயமாகும். வேறு எங்கும் காண இயலாத வகையில் ஜெயஸ்தூபம் என்னும் மிகவும் பழமையான ஸ்தூபியைக் கொண்டிருக்கும் ஆலயம்.

காஞ்சியில் கனியும் தொன்மையான வாஸ்து சாஸ்திரம்

சாதாரணமாக ஆலயங்களில் காணப்படும் மூர்த்திகளைப் போலன்றி ஸ்ரீஆதிசங்கரர் காலத்திற்கும் முந்தைய பழமையான ஆலயமாகவும், ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் தோற்றத்திற்கு முந்தைய கோயில் அமைப்பைக் கொண்டுள்ளது. இதனால்தான் இங்கு பிரதட்சணமாக வரும் போது எத்திசை இதுவென உணர முடியாத வகையில் பல அபூர்வமான ஆலய அமைப்புகளைக் கொண்டுள்ளமையால் விண்ணுலக ஸ்தபதியான மயன் மூர்த்தியே திசையறியாது மருகியதால் திசை மயக்க ஆலயம் என்றும் இதனைச் சிறப்பித்துக் கூறுவார்கள். இதனால் இந்த ஆலயத்தில் திசை ஒடுக்க யோக சக்திகள் நன்கு பரிணமித்துப் பிரகாசிக்கின்றன.

இங்கு தீர்த்தக் குள அமைப்பு, ஸ்ரீதுர்வாச மகரிஷி தோன்றும் திசை, ஜெய ஸ்தூபியின் அமைப்பு, இதன் ஒரு புறம் விநாயகரும், மறுபுறம் நாகமூர்த்தியும் அருள்கின்ற தன்மை, அம்பிகை அமர்ந்துள்ள 24 தூண்களைக் கொண்டுள்ள ஸ்ரீகாயத்ரீ மண்டபம், 108 வைஷ்ணவத் திருத்தலங்களுள் ஒன்றாக ஸ்ரீபெருமாள் மூர்த்தியை அர்த்த மண்டபத்தில் கொண்டிருக்கும் விசேஷமானத் தலமாகவும், மூன்று காமாட்சி மூர்த்திகள் அருளும் தலமாகவும், மிகவும் அபூர்வமான வாஸ்து சாஸ்திர அமைப்புகளுடன் துலங்குகின்றது. மிக மிகத் தொன்மையான வாஸ்து சாஸ்திர ஆலயங்களில் இவ்வாலயமும் ஒன்றாகும்.

ஸ்ரீவாஸ்து சரண 16 திசை வழிபாடு

மிக எளிமையான தினசரி வாஸ்து பூஜையாக, காலையிலும், மாலையிலும் 16 திசைகளையும் நோக்கி சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரித்தல் வேண்டும். ஐயப்ப சுவாமி சரணப் பாராயணம் போல,

ஒன்றாம் திருப்படி சரணம்
பொன் ஐயப்பா

இரண்டாம் திருப்படி சரணம்
பொன் ஐயப்பா

மூன்றாம் திருப்படி சரணம்
பொன் ஐயப்பா

என வரிசையாக 18 படிகளையும் சொல்லி ஸ்ரீசரண ஐயப்ப நமஸ்காரம் செய்வார்கள். இதைப் போலவே ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்திக்கும்

ஒன்றாம் திசைப்படி சரணாகதம்
வாஸ்து ஸ்ரீவாஸ்துவே

இரண்டாம் திசைப்படி சரணாகதம்
வாஸ்து ஸ்ரீவாஸ்துவே

மூன்றாம் திசைப்படி சரணாகதம்
வாஸ்து ஸ்ரீவாஸ்துவே

இவ்வாறு 16 திசைப்படி சரண நமஸ்காரம் செய்வதுடன், வானை நோக்கி அந்தர மூர்த்திக்கும், பூமியை நோக்கி பாதாள சுவாமிக்கும் நமஸ்காரம் செய்திடல் வேண்டும்.

16 திசைக் கோலம் போட்டு, மூன்று வெற்றிலைகளில் விரளி மஞ்சள் வைத்து ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி சயனிப்பதாகப் பாவனை செய்து வழிபடுதலால் பூமி சம்பந்தமான எத்தகைய பிரச்னைகளுக்கும் தீர்வு பெற உதவும்.

தினமும் செவ்வாய் ஹோரை நேரத்தில், வாஸ்து மூர்த்தியின் படத்திற்குச் சந்தனம் அரைத்து இட்டு, மஞ்சள், குங்குமத்தையும் இடுதல் மிகவும் விசேஷமானது.

வாடகை வீட்டில் அவதியுறுவோர் நல்ல வாடகை வீட்டை அடைவதற்கும், தொடர்ந்து பூஜித்து வர சொந்த வீடு அமையவும் உதவும் எளிய பூஜை இது! ஏற்கனவே இங்கு குறித்துள்ளது போல ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி, அந்தர வாஸ்து மூர்த்தி, பூம்ய வாஸ்து மூர்த்தி, பாதாள வாஸ்து மூர்த்தி ஆகிய மூன்று மூர்த்தங்களாகவும் அருள்கின்றார். அதாவது, பிருத்வி வாஸ்து தலம், ஆகாச வாஸ்து தலம், பாதாள வாஸ்து தலம் ஆகிய மூன்று வகை வாஸ்து சக்தித் தலங்கள் உண்டு. இம்மூன்றையும் ஒரு சேரப் பெற்றிருப்பதே மூன்று லிங்க ஆலயம், மூன்று அம்பிகை, மூன்று பிள்ளையார், மூன்று தல விருட்சங்களுடன், மூன்று வாஸ்து லிங்க மூர்த்திகள் அருளும் அற்புதமான திருக்கோளக்குடி சிவத் தலம்.

ஸ்ரீஞானவேல் முருகன் ஆலயம்
திருக்கோளக்குடி

திருக்கோளக்குடி ஸ்ரீஞானவேல் முருகர்

வாஸ்து சக்திகள் பூமியில் பிரதிபலிக்கின்ற தினமே செவ்வாய்க் கிழமை ஆகும். ஏனெனில், செவ்வாயும், சஷ்டி திதியும் கூடும் நாளில்தான் வாஸ்து மூர்த்தி தோற்றம் பெற்றார். செவ்வாய்க் கிரகத்திற்கு உரிய அதிபதியே முருகக் கடவுளாவார். திருக்கோளக்குடியில் மலை உச்சியில் ஸ்ரீஞானவேல் முருகர் அருள்கின்றார். அமாவாசையிலும் பௌர்ணமியிலும் கிரிவலம் வரவேண்டிய திருத்தலமே திருக்கோளக்குடியாகும். கிரிவலச் சுற்றளவும் மூன்று கிலோமீட்டருக்குள் தான் இருக்கும். நல்ல வாஸ்து சக்திகளைப் பெற்றுத் தரும் திவ்யமான தலம். இங்கு ஸ்ரீஞானவேல் முருகனுக்குச் செவ்வாய் தோறும் செவ்வரளி மாலை சாற்றி, கிரிவலம் வந்து, ஏழைகளுக்குச் செவ்வாய் கிரக நிறமான சிவப்பு நிறத்தில் தக்காளி சாதம், பீட்ரூட் கறி, சிவப்பு வண்ண ஆடைகள், பவள மாலை, சிவப்பு நிறக் காலணிகள் போன்றவற்றைத் தானமாக அளித்து வர சொந்தத்தில் நல்ல வீடு, வாசல் அமைவதற்கு நற்பலன்களைப் பெறலாம்.

வாஸ்து நாட்களில் இங்கு ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியால் வழிபடப் பெற்ற மூன்று மூல பூமி வாஸ்து அந்தர மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு, கோமுகத் தீர்த்தத்தைக் கலசத்தில் எடுத்துச் சென்று தேங்காய், மாவிலைகள் வைத்து ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் முன் வைத்துப் பூஜித்து தீர்த்தத்தை, இல்லம், கழனி, நிலம், தோட்டம், தொழிற்சாலை போன்றவற்றில் தெளித்து வருவதால் பூமி தோஷங்கள் அகல உதவும்.

பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை போன்ற பிரம்மாண்டமான நிலப்பரப்புகளை உடையவர்கள், இங்கு திருக்கோளக்குடியில் வாஸ்து நாட்களிலும் செவ்வாய்க் கிழமைகளிலும் கிரிவலம், கோமுக பூஜை, பூமி அந்தர வாஸ்து சுந்தர மூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, கோமுகத் தீர்த்தத்தைப் பெற்று, மாவிலைகளால் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை போன்ற இடங்களில் 16 திக்குகளிலும் தெளித்து வர வேண்டும். இவ்வகையில் மிகவும் எளிமையான முறையில் வாஸ்து சக்திகளைப் பெற்றிடலாம்.

நில, கட்டிட தோஷங்கள் தோன்றும் விதம்

தற்காலத்தில் வாஸ்து சாஸ்திர நியதிகளைப் பற்றி நிறையக் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கட்டிடங்களை உடைக்காமல், இடிக்காமல், தோஷங்களை நிவர்த்தி செய்வது என்பது ஒப்புதல் இல்லாதது. வீடு கட்டப் பட்டிருக்கும் நிலம். அந்த நிலத்தின் முதல் சொந்தக்காரர் அடுத்தடுத்து கை மாறி வாங்கியவர்களுடைய கர்ம வினை பந்தங்கள், நிலத்தில் இருக்கின்ற மிருக, தாவர, நுண்ணுயிர் ஜங்கமங்கள், நீர் ஊற்று அமைப்பு, நிலத்தின் அமைப்பு கட்டப்படுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மரம், செங்கல், மண் சிமெண்டின் ஆன்மீக ரீதியான நுண் அமைப்புகள், மண், செங்கல் வந்த விதம் போன்ற பலவும் வாஸ்து வகை தோஷங்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில் உள்ள குறைபாடுகள்தான் வாஸ்து தோஷங்கள் ஆகின்றன.

உண்மையில் வாஸ்து தோஷங்கள் என்று சொல்வதும் தவறே. வாஸ்து மூர்த்திக்கும், வாஸ்து அம்சங்களுக்கும் எந்தத் தோஷமும் கிடையாது. வாஸ்து நியதிகளுக்குப் புறம்பாக, முரணாக அமைபவைகளையே வாஸ்து தோஷங்கள் என்று புரியும்படி வழக்கில் குறிப்பிடுகின்றனர். நிவர்த்தி அல்லது பரிகார, பிராயசித்த முறைகளைப் பெறும் அளவில் உள்ள முரண்பாடு, தோஷங்களை மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும். உதாரணமாக பசுவதை, மிருக வதை (Abattoir) நிகழ்ந்த இடங்கள் எனில் எத்தகைய பிரம்மாண்டமான பிராயசித்தங்களினாலும் கண்டிப்பாக நில தோஷங்களை அகற்றவே முடியாது.

நிலக் குற்றங்கள் நீங்கட்டும்!

சுடுகாட்டு நிலம், 50 வருட வயதுள்ள மரங்களை வெட்டியதால் ஏற்படும் தெய்வக் குற்றங்கள், விளை நிலத்தை வீடு ஆக்கிய குற்றம், ஐந்து வருடங்களுக்கு மேலாகப் பழங்கள், காய்கள், இலைகளைத் தந்துவந்த விருட்சங்களை வெட்டிய தோஷங்கள், வேம்பு, வில்வம், அரசு, ஆல் போன்ற மரங்களை வெட்டுவதால் வரும் பலத்த தோஷங்கள் - இவை எல்லாம் சேர்ந்து விட்டால் தலைமுறை தலைமுறையாக அந்த வீட்டில் அல்லது அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ள flatsகளில் வசிப்போரைத் தாக்கிக் கொண்டே இருக்கும்.

இளவயது மரணம், கணவனை இழத்தல், ஊனம், மனநிலை நோய்கள், திருமணமாகிச் சென்ற பெண் பல பிரச்னைகளால் தாய் வீட்டிற்குத் திரும்பி வருதல், பிள்ளைகள் வாழ்க்கையில் திசைமாறிப் போகுதல் போன்ற பலவும் நில தோஷங்களால் நிகழ்பவை ஆகும்.

கட்டும் போதே கனியட்டும் வாஸ்து பூஜைகள்!

இதற்காகத்தான், வீடு கட்டும் போதே பூமி பூஜை, நிலத்தடி பூஜை, வாசக்கால் பூஜை என்று 21 வாஸ்து வகைப் பூஜை முறைகளை நிர்ணயித்துத் தந்திருக்கின்றார்கள். இவற்றை முறைப்படி ஆற்றி வந்தால் பெரும்பாலான தோஷங்களை ஆரம்ப நிலையிலேயே நிவர்த்தி செய்வதும், தணிப்பதும் எளிமையாகி விடும். வீட்டில் வைக்கப்படும் சுவற்று மாடங்கள், நிலைகள் போன்ற பலவும் வாஸ்து தேவதா மூர்த்திகள் வந்து அமர்வதற்கான தேவ சந்நிதிகள் ஆகும்.

அட்டைப் படத்தில் உள்ள ஸ்ரீஆதி வாஸ்து மூர்த்தியின் திருமேனியில் உள்ள ஒவ்வொரு தெய்வ பீடமும், பிரபஞ்சத்திலும், ஒவ்வொரு பூமியிலும், ஒவ்வொருவர் மனதிலும், உள்ளத்திலும், உடலிலும் பல்வகை தெய்வ மூர்த்திகள் உறைந்திருக்கும் திசைகளை, இருப்பிடங்களைக் குறிக்கின்றன. முறையான ஸ்ரீவாஸ்து பூஜையை ஆரம்பத்திலிருந்தே, சிறுபிராயத்திலிருந்தே கடைபிடித்து வந்தால், நிலத்தில், வீட்டில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் உள்ள தோஷங்களை நிவர்த்தி செய்து, நிவர்த்தி செய்ய முடியாத தோஷங்களின் கடுமைகளைத் தணிக்கவும் பெரிதும் துணை புரியும்.

கழிக்க முடியாத நில தோஷங்களை நிவர்த்தி செய்ய, பூமி தானம் எனப்படுவதான ஏழைகளுக்கு நிலம், வீடு, வீடு கட்டி அளித்தல் எனப் பல பரிகார வழிகள் உள்ளன. ஆனால், இவற்றை உணர்விக்க ஒரு சற்குரு தேவையன்றோ:

நில தோஷங்களை நிவர்த்தி செய்திட

1. இத்தனை வருடங்கள் கண்களால் ஸ்ரீஆதி வாஸ்து மூர்த்தி தரிசனம் பெறுதல்.

2. வாஸ்து சக்தி நிறைந்த செவ்வாய், சனிக்கிழமை, செவ்வாய் ஹோரை நேரம், எட்டு வாஸ்து நாட்களில் வாஸ்து பல தேவ மூர்த்திகள் வழிபாடு

3. இயன்ற அளவு வாஸ்து சக்திகள் நிறைந்த பொருட்களை, திரவியங்களைத் தானமாக அளித்தல்.

4. வாஸ்து சக்தித் தலங்களில் தொடர்ந்து வழிபாடுகளை மேற்கொள்தல்,

5. புதிதாக ஏற்படும் நிலதோஷங்கள், பண தோஷங்கள், வீட்டைச் சரியாக வைத்திடாமையால் ஏற்படும் அசுத்த தோஷங்கள் போன்றவை ஏற்படாமல் தற்காத்துக் கொள்தல், பூமி பூஜை, ஹோமம், பூமி தானம் போன்றவை நில தோஷங்களை நிவர்த்தி செய்யும்.

தற்போது அரசுத் துறை வங்கிகள், பொதுத் துறையில் பணி புரிகின்றவர்கள் குறைந்த வட்டிக்குக் கடன் பெற்று, நிலம், வீடு, flats வாங்குகின்றார்கள். ஆனால், இதிலும் சில வகைப் பண தோஷங்கள் ஏற்பட்டு, அவை நில தோஷங்களாக மாறி, வாஸ்து நியதிகளுக்கு முரணாக அமைந்து பல துன்பங்களைத் தரக் கூடும்.

இவ்வாறு குறைந்த வட்டிக்கு என்று வங்கிக் கடனை ஊழியர்கள் பெற்றால் பொது மக்களுடைய வைப்புப் பணத்திலிருந்துதான் இது சாத்தியமாகிறது. எனவே கடன் வழியாக சில வட்டிச் சலுகைகள், வசதிகளைப் பெறும் போது தமக்கு இத்தகைய உதவிகள் கிடைக்கச் காரணமானவர்களுக்கு நன்றிக் கடனையும் செலுத்தியாக வேண்டும். வங்கி, பொதுத் துறையில் உள்ள பலரும் வங்கியில் கடன் தீரும் வரை இந்த நன்றிக் கடனும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

நாம் வங்கியில், அரசுத் துறையில் வேலை செய்வதால் இது நமக்குச் சட்டபூர்வமாகக் கிட்டும் சலுகைதானே என்று எண்ணுகின்றார்கள். வீட்டுக் கடன் திட்டத்தில் (Housing Loan Scheme) பெற்ற கடன் தொகைக்கு தனக்கு இத்தகைய வட்டிச் சலுகைக்குக் காரணமான ஆயிரக்கணக்கான மக்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கின்றார்கள். இந்த நன்றிக் கடனை எவ்வாறு அடைப்பது?

நன்றிக் கடன் தீர்ப்பதும் ஸ்ரீவாஸ்து பூஜையே!

வீட்டுக் கடன் தொடரும் வரையிலாவது இவ்வகை வாஸ்து பூஜைகளை அவர்கள் நிறைவேற்றியாக வேண்டும். இவர்கள் தங்கள் அலுவலகங்களில் ஏனோ தானோ, கடனே என்று பணி புரியாது, வாங்குகின்ற சம்பளத்திற்கு நன்கு உழைத்திட வேண்டும். மற்ற துறையினரை விட, பொது மக்களுடன் பழகும் நல்ல சந்தர்ப்பங்கள் தினந்தோறும் இவர்களுக்குக் கை கூடி வருவதால், பலருடனும் அன்பாக, நல்ல தெய்வீக விஷயங்களை விளக்கி உரையாடிட வேண்டும்.

ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் மகிமைகளையும், ஸ்ரீஅகஸ்திய விஜயம் போன்ற முழுமையான தெய்வீக நூல்களில் உள்ள தெய்வீக விஷயங்களைப் பலருக்கும் விளக்கி, அவரவர் வாழ்க்கையில் தேங்கி உள்ள நில தோஷங்கள், வீட்டு தோஷங்களை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை எடுத்துரைத்து வருவதன் மூலம் மேற்கண்ட நன்றிக் கடனைக் கணிசமான அளவில் தீர்த்திடலாம்.

எனவே, குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் தீரும் வரை, ருணபாக்கியும், நன்றிக் கடனும் தொடர்ந்திருக்கும் என்பதை உணர்ந்திடுக! ஏதோ வங்கியில் கடன் வாங்கினோம், வீடு கட்டினோம், flat வாங்கினோம் என்று அசமந்தமாக இருந்து விடாதீர்கள். பலருடைய வாழ்விலும், வாஸ்து சக்திகளைப் பெற்றுத் தருவதற்கான பூஜை முறைகளை எடுத்துரைப்பதையும் உங்களுடைய தெய்வீகக் கடமையாக வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளுங்கள்.

சகல தேவதா பூஜையே ஸ்ரீவாஸ்து பூஜை!

உங்களிடம், உங்களையும் அறியாமல், வாஸ்து சக்திகள் கை கூடி இருப்பதால்தான், குறைந்த வட்டிக் கடன், நல்ல இடம் போன்றவை கூடி வீடாக, அலுவலகமாக வந்துள்ளன என்பதை உணர்ந்து, இந்த அனுகிரக சக்திகளைப் பிறரும் அடையும் வண்ணம் நற்பணி ஆற்றுவதும், உங்கள் வாழ்க்கை லட்சியங்களுள் ஒன்றே என்றுணர்வதும் வாஸ்து குணமே!

அட்டைப்படத்தில் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் திருவடிவத்தைச் சற்றே உற்றுக் கவனித்து நன்கு தரிசித்து, ஆத்ம விசாரம் செய்து பார்த்தீர்களேயானால், இதில் வெளிப்படையாக, பூகோளப் பூர்வமாக எட்டுத் திக்குகளும், சூக்கும ரீதியாக 16 திக்குகளும் இருப்பதைக் கண்டிடலாம். அஷ்ட திக்குப் பாலகர்களும் ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கு பிரபஞ்சத்தை இரட்சிப்பதில் துணை நிற்கின்றார்கள். எனவே, ஸ்ரீவாஸ்து மூர்த்தியைத் தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் தரிசனம் செய்வதானது, ஆதிசிருஷ்டி காலத்தில் நிலவிய 16 திக்கு வழிபாடுகளையும், அஷ்ட திக்குப் பாலகர்கள் பூஜையையும், நினைவுபடுத்துவதாகவும், ஆற்றியதாகவும் அமைகின்றது. அனைத்துத் தெய்வ மூர்த்திகளின் சாராம்சமாக விளங்குவதாலும், எல்லாத் தெய்வங்களையும் தரிசித்த பலன்களையும் இதன் மூலம் பெற்றிடலாம்.

ஸ்ரீவாஸ்துவிற்கு ப்ரீதி தரும் ஸ்ரீதனச் சந்தனம்!

சந்தனம் என்றால் என்றும் குறையாத, எங்கும் நிரவ வல்ல நறுமண ஆன்ம சக்தி என்று பொருள். ஒரு சிறு சந்தனக் கட்டையானது, அதனை நுகர்ந்து பார்க்கின்ற ஆயிரக் கணக்கானோருக்கும் நறுமணத்தைத் தரவல்ல தெய்வீகச் சக்திகளைக் கொண்டிருப்பதால், தினமும் சந்தனத்தை அரைத்து ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்திக்கு இட்டு வருவதும் நித்ய வாஸ்து பூஜை அம்சமே!

சந்தனவாச நீரோட்ட சக்தியால் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியில் சகல தெய்வ மூர்த்தியின் அம்சங்களும் நிறைந்திருப்பதால், சந்தன மணம் பல வானத் தலங்களுக்கும் நிரவி, பரவி, அளப்பரிய பலாபலன்களைத் தருகின்றது.

உண்மையில், ஒரு சில விநாடிகளில் நம் கரங்களால் அரைத்து சுவாமிக்கு இடப்படும் ஒரு சிறு சந்தனப் பொட்டிலும் நிரவிடும் ஆன்ம சக்தியானது, பரவெளியில் நிரவி எண்ணற்ற ஜீவன்களுக்குப்ப் புனித சுத்தி தந்து பரவெளியையும் தூய்மைப்படுத்தி, மகத்தான பலன்களைத் தருகின்றது என்பது பலரும் அறியாத தெய்வீக ரகசியமாகும். அனைத்து லோகங்களுக்கும் பரவிச் செல்ல வல்லதே சந்தன நறுமணம் என்பதால் தான் நாம் பூலோகத்தில் பார்க்கின்ற சந்தன மரத்தை இதே வடிவில் தேவ லோகங்களிலும் அனைத்துப் பிற லோகங்களிலும் கண்டு ஆனந்தித்திடலாம்.

ஆம், அனைத்து லோகங்களிலும் உருமாறாமல் ஒரே மாதிரியாக இருக்கக் கூடிய அபூர்வமான வஸ்துக்களில், திரவியங்களில் மாம்பழம், சந்தனம், பாரிஜாதம், ருத்ராட்சம், பசு, கோபுரக் கலசம், கொன்றை மரம், குங்குமம், திருநீறு, தேங்காய் போன்றவை அடங்கும்.

கைலாசமோ, வைகுண்டமோ, ஸ்கந்த லோகமோ, விநாயக லோகமோ, தேவ லோகமோ, பித்ரு லோகமோ, சொர்க்கமோ, அதல, விதல, சுதல ஆகிய 14 லோகங்களோ – மேற்கண்ட நித்திய பூஷணத் திரவியங்கள் இதே போலவே இருக்கும். இதனால்தான் அனைத்து லோகங்களிலும் காணப் பெறும் சந்தனம், பாரிஜாதம் போன்ற வஸ்துக்களும், நித்ய பூஷணம் என்ற பெயரைப் பெறுகின்றன.

இத்தகைய பொருட்களைத் தாங்கி அருளும் தலங்கள் நித்தியத்துவ சக்திகளைத் தர வல்லவை. இவற்றில் குருஅருள் திரண்டு, நிரவிப் பூரித்திருக்கும்.

பட்டுக்கோட்டை – திருத்துறைப் பூண்டி மார்கத்தில் உள்ள திருக்கடிக்குளம் தலத்தில் ஸ்ரீகற்பக விநாயகப் பெருமான் தாங்கி இருக்கும் மாங்கனி தரிசனமே எத்தனையோ கர்ம வினைகளைத் தீர்க்க வல்லதாகும். மாமரத்தில் வாஸ்து சக்திகள் நிறைய உண்டு. மேலும் சுப மங்கள சக்திகளை தாங்கி விருத்தி செய்து பரப்பும் சக்திகளும் நிறைந்ததாய் மாமரம் விளங்குகின்றது.

எனவேதான் மாமரப் பலகையைத் திருமண சடங்குகளில் பயன்படுத்துகின்றனர். மாவிலைத் தோரணங்களும் சுப சக்திகளைப் பரப்புபவை ஆகும். கும்பக் கலசத்தில் தேங்காயுடன் சுற்றி அமையும் மாவிலைகளுக்குத் தீர்த்த சுப சக்திகளும் நிறைய உண்டு. எனவே, மாமரங்கள் உள்ள வீட்டில் நில தோஷங்களை இயற்கையாகவே, தாமாகவே எளிதில் தீர்வதற்கான தேவ சக்திகள் நிறைந்திருக்கும்.

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் திருவடிவிற்கு மாவிலைத் தோரணத்தால் அலங்கரித்து வழிபடுவதும், மாம்பழ நிவேதனம் செய்து வழிபடுவதும் சிறப்பான பூஜை முறையாகும்.

ஸ்ரீஆதிவாஸ்து பகவான் வழிபாட்டு முறைகள்

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் படத்தை வடகிழக்கு, வடக்கு நோக்கிப் பார்க்கும்படி வைத்தும்

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் படத்தை வடக்கில், வடகிழக்கு திசைகளில் வைத்தும் வழிபடுதல் நலம் தரும்.

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் படத்தில், சுவாமியின் ஒவ்வொரு அங்கத்தையும், ஒவ்வொரு துறையினரைச் சேர்ந்தவர்கள் வழிபட வேண்டிய நியதிகள் உண்டு. இதைத் தக்க சற்குருவை நாடித் தெரிந்து கொள்ளவும். யந்திரம், தொழிற்சாலை, விவசாயம் என ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் ஸ்ரீவாஸ்து பகவானின் ஒவ்வொரு அங்கத்தையும் சௌந்தர்யலஹரி போல் தொட்டு, தோத்தரித்து வழிபட வேண்டும்.

பெண்கள், முதல் நாள் இரவே நீரில் மஞ்சள், வேப்பிலை போட்டு ஊற வைத்து, மறு நாள் காலை இதில் நீராடல் வேண்டும். பிறகு, சுத்தமாய்த் துவைத்தக் காய்ந்த ஆடைகளை அணிந்திட வேண்டும். ஸ்ரீவாஸ்து பூஜைக்காகப் பயன்படுத்தும் ஆடைகளை மற்றத் துணிகளுடன் சேர்த்திடாமல் ஸ்ரீவாஸ்து பூஜைக்கெனத் தனியே ஆடைகளைச் சுத்தமான இடத்தில் வைத்து, பிறர் தொடாமல் புனிதமாக வைத்துக் கொள்ளவும்.

ஆண்கள், முதல் நாள் இரவே நீரில் பன்னீர் இலை, பவளமல்லி புஷ்பம் இட்டு இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை இந்நீரில் நீராட வேண்டும். நீராடலின் போது ஆண்கள் கோவணம் அணிந்து நீராடுதல் சித்த வைத்யப் பூர்வமாக மிகவும் ஆரோக்யமானது. ஸ்ரீவாஸ்து பூஜையின் போதும், ஆண்கள் கோவணம் அணிந்து மேலாடைகளைத் தரித்தல் யோக சக்திகளைப் பெற்றுத் தரும் என்பதை மனதில் கொள்க.

அரைத்த சந்தனம், திருநீறு, குங்குமம் போன்ற காப்புச் சின்னங்களை அணிந்து கொண்டு, நான்கு அல்லது எட்டு முழ வேஷ்டியைத் துண்டுடன் அணிந்து இரட்டை வஸ்திரங்களுடன் பூஜிக்க வேண்டும்.

மேலும் பல விளக்கங்களை திருஅண்ணாமலை ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்தின் தெய்வீக வெளியீடான “ஸ்ரீபூமி அந்தர வாஸ்து சுந்தர ரகசியங்கள்” இரண்டு பாகங்களிலும் கண்டிடலாம்,

அரைத்த சந்தன உருண்டைகளால் ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கு நெற்றி திலகமிட்டு, த்ரிணலட்சுமி தூபம், லட்சுமி தூபம், ஆபத்சகாய தூபம், சத்ருபய நிவர்த்தி தூபம், சரபேஸ்வர தூபம், மணவாள க்ஷேம தூபம், அவரவர் குல தெய்வங்களான கருப்பன், ஐயனார், பைரவர், வீரபத்திரர் போன்ற குலதெய்வங்களுக்கு உரித்தான தீபங்களையும் ஏற்றி வைத்து வழிபடுக!

“ஓம் த்ரிவிக்ரம தரிசன
சகாய க்ஷேம க்ருபா மூர்த்தி
ஸ்ரீவாஸ்து தேவாய நமஹ”

அல்லது

“நீள் நெடுங்கால் கொண்டு
புவியோடு வானமும்
தலையோடு அளந்த பெருமாள்
அவதார வாஸ்து தேவாய நம:”

- என்று 18, 21, 108 முறை ஓதி, வாழைப் பழங்களை முழுமையாக அல்லது உரித்து வைத்து, நைவேத்யம் வைத்து வழிபட்டிடுக.

வருடத்திற்கு எட்டு நாட்கள் வரும் வாஸ்து நாட்களின் பூஜைகளின் பரிபூரணமான பலன்களை, குரு அருளால் பெற்றிட, ஒரு லட்சம் பேருக்குக் குறையாமல் அன்னதானம் செய்திடல் வேண்டும். காரணம், வாஸ்து பூஜை என்பது ஒரு ஊரில் அல்லது கிராமத்தில் உள்ள அனைவருமே மழை வளம், நீர் வளம், பயிர் விளைச்சல், சமுதாய அமைதிக்காக நிறைவேற்ற வேண்டிய சமுதாய பூஜை என்பதால், ஒரு சிறிய கிராமமாக இருந்தால் கூட அதன் ஜனத்தொகை 10,000 பேருக்குக் குறையாமல் இருக்கும் அல்லவா!

எனவே, ஒவ்வொருவரும் எண் திசைப் பலன்களாக எட்டுப் பேருக்கு அன்னம் அளித்தல் என்ற கணக்கில் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். இதற்காகவே, சத்சங்கமாகப் பலரும் ஒன்று கூடி, அன்னதானத்துடன் சமுதாய பூஜையாக, வாஸ்து வழிபாட்டை நிகழ்த்திட வேண்டும். தனித்த வகையில் அன்னதானம் அளிக்கும் போது, குறைந்தது 8 பேர் முதல் 108 வரையேனும் அன்னதானம் அளித்தல் சிறப்பானதாகும்.

ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தி

துடையூர் (திருச்சி – முசிறி மார்கத்தில் திருவாசி அருகே துடையூர் உள்ளது.)

“திகிசண்டளா” எனும் அற்புத வீணையைத் தாங்கி இருக்கும் தென்முகக் கடவுள் மூர்த்தி! சிவகுரு பகவானன்றி வேறு எவராலும் “திகிசண்டளா” வீணையைப் பூட்டவும், மீட்டவும் இயலாது!

வித்யா நிதிவதன மூர்த்தி என்று சித்தர்களால் போற்றப் பெறுபவர். விஞ்ஞானத்தால் எட்ட முடியாத அறிவினை ஊட்டித் தருபவர். விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் நோபல் பரிசு பெற்றோர் யாவரும் தத்தம் துறையில் முன்னேற வழிபட வேண்டிய மூர்த்தி. ஏனாதி நாயனார் வாரந்தோறும், குருவாரம் தோறும் வந்து வழிபட்ட அற்புதத் தலம்.

ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தி
துடையூர்

எத்துறையில் எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்தும் நல்ல முடிவிற்கு வர இயலவில்லையோ, அத்துறையைச் சார்ந்தோர் தினந்தோறும், குருஹோரை நேரத்தில் இங்கு வழிபட்டு வந்திடில் நன்முடிவுகள் துரிதமாக அறிவுப் பூர்வமாகத் தக்கோரால் உணர்த்தப் பெறும்.

வேத சாத்திரங்களுள் அடங்கியுள்ள விஞ்ஞான நிரூபணங்களை மனித அறிவிற்குள் ஒடுக்கி, அடக்கித் தருபவர். ஆனால் பிரம்ம சூத்திர தெய்வ ரகசியங்களோ, யாவும் விஞ்ஞான அறிவிற்கு எட்டாதவை. இவற்றையும் தம் வீணை நாதத்தால் உணர்விக்க வல்லவரே, துடையூர் ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தி.

பொதுவாக பல நரம்பு மண்டலக் கருவிகளும் நம் கபாலத்தில் உள்ள “பூ பூரண” நரம்புகளை ஆக்கப்படுத்திட வல்லவை. இதனால் அறிவு நன்கு விசாலமாகும். நினைவூட்டும் மூளைச் செல்களுக்கும், அறிவு விருத்தி மூளைச் செல்களுக்கும், நல்லிணைப்புத் தருபவையே “பூ பூரண நரம்புகள்” ஆகும். இவை, சில தலங்களில் தாம் நன்கு ஆக்கம் பெறும். இத்தகைய “பூ பூரண” பூமிகளுள் ஒன்றே துடையூர் ஆகும்.

மூளை நரம்புகள், மூளைச் செல்களைப் பலப்படுத்தும் அற்புதத் தலம். தெளிந்த அறிவு பெறுவதற்கும், தெளிவான முடிவெடுப்பதற்கும் இங்கு குருவார, குருஹோரை பூஜை உதவுவதாகும்.

அனைத்து விதமான நரம்பு நோய்கள், மூளை சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வுகளைத் தரவல்ல தலம் இதுவே ஆகும்.

I.A.S, I.P.S, I.F.S போன்ற பேரறிவு சார்கல்விப் பணிக்குத் தயாராக விரும்புவோர், இங்கு புதன் கிழமை தோறும் சரஸ்வதி, சூரிய மூர்த்தி, தட்சிணமூர்த்திகளை வணங்கி வருதல் வேண்டும்.

சூரியனுக்கு ஆரஞ்சுப் பட்டும், சரஸ்வதிக்கு வெண்பட்டும், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பட்டும் சார்த்தி இங்கு வழிபட்டு வருதலால் அறிவு நன்கு பிரகாசமாகும். பட்டு வஸ்திரங்களை எவரேனும் எடுத்துச் சென்று விடுவார்களே என்று எண்ணாதீர்கள். ஆடைகளைச் சார்த்த வேண்டியது நம் கடமை, பிறகு இறைவன் இஷ்டம்.

 

நரம்பியல் துறை, மூளை இயல் துறை மருத்துவர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீதட்சிணா மூர்த்தி. இவர்கள் செவ்வாய்க் கிழமையில் இங்கு தட்சிணாமூர்த்தியை வழிபடுதல் வேண்டும்.

கண்களுக்கும் நரம்பு மண்டலங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கண்களுக்குள் ஒரு விதமான தேவ ஒளி உண்டு. இந்த தேவ ஒளிப் பிரகாசத்தை உருவாக்குவதே “திகி சண்டளாவின்” இரண்டாம் நரம்பாகும்.

மூளைச் செல்கள் முடங்கி, உறுப்புச் செயல் இழந்தோர் இங்கு சனிக்கிழமை தோறும் வழிபட்டு வருதல் வேண்டும்.

துடையூர் வாதக்கல் முனி

இத்தலத்தில் வாதக்கல் முனி என்ற விசேஷமான மூர்த்தி, தேவகற்பக் கல் வடிவில் அருள்கின்றார்.

வாத நோய்கள் ஏற்படக் காரணமே நரம்பு முடக்கம் ஆகும். அக்காலத்தில் சித்த வைத்யர்கள், வாதக்கல் முனியிடம் விசேஷமான படிகாரக் கல், வாத நாராயணக் குச்சி, வழுக்குப் பாறைக் கல்புடம் போன்றவற்றை ஒரு மண்டலம் வைத்துப் பூஜித்து, வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று முழங்கை, முழங்காலில் சிறிது தட்டி, முடத்தைச் சரி செய்வர்.

துலா நுட வகை மருத்துவர்கள் தம் குலதெய்வமாய், தொழில் துறை தெய்வமாய் வாதக் கல் முனியை வழிபட்டு வருதல் சிறப்புடையது. வாதக் கல் முனிக்கு, செவ்வாய், சனிக் கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஸ்வினி, பூரம், ஆயில்ய நாட்களில் வாத நாராயணத் தைலம், நல்லெண்ணெய் காப்பிட்டு வழிபடுதல் வேண்டும்.

குறிப்பாக இருதயம் மற்றும் மூளை நோய்களால் பாதிப்பு வந்து, உடலின் ஒரு பகுதியில், அங்கங்களின் செயல் இழந்தோர், இங்கு 12 மணி நேரம் தங்கி, நல்ல சுவாசம் பெற்று, ஏழைகளுக்கு, புடலங்காய், முருங்கைக்காய், தட்டப் பயிறு ஆகியவை கலந்த உணவு வகைகளைத் தானமளித்து வர வேண்டும். தேங்காய்ப் பூவையும், சர்க்கரையும் கலந்து வாதக்கல் முனியை அர்ச்சித்தலால், பாதம், உள்ளங்கை சம்பந்தமான தோல் மற்றும் வாத நோய்கள் தீர நல்வழி பிறக்கும்.

பூராட நட்சத்திரம்

துர்மரணங்களை ஏற்படுத்தும் மிருத்யு தோஷங்களைக் களைந்திட உதவும் பூராட நட்சத்திர தின வழிபாடு!

விபத்து, நோய்க் கடுமை, இளவயதில் கணவனை இழத்தல், போன்ற வகையிலான ஆயுளைக் குறைக்கும் மிருத்யு தோஷங்களைத் தணிப்பதிலும், சந்ததிகளை இவை தாக்காது காப்பதிலும், பூராட நட்சத்திர தின வழிபாடு கணிசமான பங்கை ஆற்ற வல்லதாகும் என்பது பலரும் அறியாத ஆன்மீக ரகசியமாகும்.

நாய்கள் எம தூதுவர்களின் நடமாட்டத்தை அறிய வல்லவை. இதனால்தாம் கிராமப் புறப் பகுதிகளில் நாய் ஊளையிட்டு அழுதால் அருகில் மரணம் நிகழ இருக்கின்றது என உணர்ந்திட்டு, உடனடியாக தேவமொழி மற்றும் தமிழ் மறை ஓதுதலைத் தொடங்கிடுவர். அதாவது, மரணத் தறுவாயில் இருக்கும் ஜீவன், மறையொலியைக் கேட்டவாறு, மரண பயமின்றி, அமைதியாக இருக்கும் ஆற்றலைப் பெற்றிடவே, இந்த மறையொலி ஓதுகை.

பூராட நட்சத்திர நாளில், சற்றுக் கவனித்தால், நாய்களின் செய்கைகள் பெரிதும் மாறுபடுவதைக் கண்டிடலாம். இதற்காகத்தான் அக்காலத்தில் பூராட நட்சத்திர நாளில், ஸ்ரீகாலபைரவருக்கு விரிவான பூஜைகள் ஆற்றி, நாய்களை ஸ்ரீபைரவ அம்சங்களாக பாவித்து, இந்நாளில் நாய்களுக்கு நிறைய உணவிடுவர்.

ராகு காலத்தில் ஸ்ரீதுர்க்கை பூஜை விசேஷமானதாக, பன்மடங்குப் பலன்களைத் தருவது போல, மரண யோக நேரத்தில் எமபகவானின் துதி, மிருத்யுஞ்ஜயத் தோத்திர வழிபாடு, மிருத்யுஞ்ஜயர் வழிபாடு போன்றவை மிகவும் சக்தி வாய்ந்தவை.

மரண யோக நாள், பூராட நட்சத்திர தினங்களில், ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீஎமபகவான், பூராட நட்சத்திர லிங்க மூர்த்தி (திருவிடைமருதூர், சென்னை திருவொற்றியூர்), பூராட நட்சத்திரத் தலமான திருவையாறு அருகில் உள்ள கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரர், ஸ்ரீதர்மராஜா வழிபாடு போன்றவற்றை மேற்கொண்டிட அநாவசியமான பீதிகள், இறந்து விடுவோமோ என்று அடிக்கடி பலருக்கும் ஏற்படும் மிருத்யு தோஷ பயம் போன்றவை தணியும்.

ஸ்ரீஆகாசபுரீஸ்வரர்
கடுவெளி

கடுமையான நோய்களால் அவதியுறுவோர், பூராட நட்சத்திர நாளில் நிறையக் கயிறுகளை (பிளாஸ்டிக் கயிறு அல்ல – கொச்சைக் கயிறு, நார் வகைக் கயிறு) வாங்கி ஆலயங்களுக்கும், ஏழைகளுக்கும் பயன்படும் வகையில் தானமாக அளித்திட, விடுபட்ட நல்ல உறவுகள், நல்ல நட்புகள் மீண்டும் தொடர்ந்திட நல்வழி பிறக்கும்.

குடும்பத்தில் விபத்து, பரம்பரை நோய் காரணமாகத் தொடர் இறப்பு ஏற்பட்டு மிருத்யு தோஷம் தொடருமாயின், பூராட நட்சத்திர தின வழிபாடு தக்க காப்பு சக்திகளை அளிக்கும், மரண தோஷங்கள், மிருத்யு தோஷங்கள் அகலவும் உதவும்.

திடியன்மலை

ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயத் தலவிருட்சம் – நெய்க்கொட்டா மர மகிமை

அவரவர் நட்சத்திர விருட்சம் அறிவீர்!

ஒவ்வொரு ஆலயத்திற்கும் தல விருட்சம் இருப்பது போல, ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான நட்சத்திர மரமும் (விருட்சமும்) உண்டு. 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுமே நான்கு பாதங்களைக் கொண்டு இருக்கின்றன அல்லவா! ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதத்திற்கும், ஒரு தல மரமாக, ஒரே நட்சத்திரத்திற்கு நான்கு விருட்சங்கள் உண்டு. இவ்வாறாக, 27 நட்சத்திரங்களை உடைய, 12 ராசிகளுக்குமாக, 108 வகை நட்சத்திரத் தல மரங்கள் உண்டு.

ஸ்ரீமங்களாம்பிகை
கடுவெளி

அவரவர், அவருடைய மாதாந்திர நட்சத்திர நாளை மட்டும் அறிதல் அல்லாது, பஞ்சாங்கத்தின் மூலம், தம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் அமையும் நேரத்தையும் அறிந்து கொண்டு நான்கு கால, காலபாத நட்சத்திரப் பூஜையையும் தக்க முறையில் மேற்கொள்வதால், காரியத் தடங்கல்களை எளிதில் வெல்லும் புண்யசக்தி கிட்டும்.

மூல நட்சத்திர நால்பாதப் பதவழிபாடு!

உதாரணமாக 1.7.2004 அன்று வியாழக்கிழமை, பகல் 1.57 மணி முதல் 2.7.2004 வெள்ளிக்கிழமை காலை 10.55 மணி வரை, மூல நட்சத்திரம் சுமார் 20 மணி 53 நிமிடங்களுக்கு அமைகின்றது. இதனை நான்கு பங்குகளாக்கி, மூலம் முதல் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் எனப் பிரித்துக் கொண்டு, மூல நட்சத்திரத்திற்கான நான்கு பாதங்களுக்கான மரா மரம், பெரு மரம், செண்பக மரம், ஆச்சா மரம் ஆகிய நான்கையும் வலம் வந்து பூஜித்திடல் வேண்டும்.

ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கான மரங்கள் ஒரு சேர ஓரிடத்தில் இல்லாவிடில், அவரவர் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கு உரிய நான்கு மரங்களையும் அறிந்து வரைந்து, சித்திரமாக வைத்துக் கொண்டு அவரவருடைய நட்சத்திர நாளில், நான்கு பத நட்சத்திரக் கால நட்சத்திரத் தலப் பூஜைகளை ஆலயத்தில், இல்லத்தில் ஆற்றிட வேண்டும்.

“தாரா கனிந்திடில்
வாரா வெந்துயர்“
(தாரா = நட்சத்திரம்)

-என்ற சித்த வாக்கிய மொழிப்படி, நட்சத்திர மரப் பூஜைகளை ஆற்றிடில், மனம் நொந்து போகும்படி வந்துள்ள துயரங்கள் தீர நல்வழி பிறக்கும்.

மேலும் அந்தந்த நட்சத்திரம் உதயமாகும், மறையும் காலவரை நேரமுறையும் உண்டு. உதாரணமாக, 2.7.2004 அன்று மூல நட்சத்திரம் மாலை 5.41 மணிக்கு உதயமாகி, மறுநாள் விடியற்காலை சுமார் 4.36 மணிக்கு மறைகின்றது. இத்தருணத்தில், மூல நட்சத்திரம் தோன்றும் இடத்தை அறிந்து கொண்டு (வானில் 265 டிகிரி) அவ்விடத்தில் மூல நட்சத்திர மண்டலத்தினை பாவனை செய்து கொண்டு வழிபட வேண்டும். இவை எல்லாம் பலரும் அறியாத நட்சத்திர வழிபாட்டு முறைகள்! அபரிமிதமான பலன்களை அள்ளித் தருபவை!

(நட்சத்திர) ஜோதி விருட்சங்கள்

27 நட்சத்திரங்கள் மட்டுமல்லாது, மேலும் பல நட்சத்திரங்களும் பூமியின் ஜீவ வாழ்க்கைக்குப் பெரிதும் துணை புரிகின்றன. புண்ணிய விருட்சம், ஜோதி விருட்சம், நெய்க் கொட்டா மரம் போன்றவை எண்ணற்ற நட்சத்திர ஜோதி சக்திகளை நன்கு ஈர்த்துப் பூவுலக ஜீவன்களுக்காகப் பிரதிபலித்து அளிக்கின்ற மகத்தான தெய்வீக சக்திகளைக் கொண்டவை ஆகும்.

எவ்வாறு நெய் அல்லது தைலமானது, ஜோதியை ஏற்றத் தேவையானதோ, இதே போல ஜோதியிலிருந்து பொசிந்து திரளும் தைல ஜோதியும் (க்ருத ஜோதி) உண்டு. திருஅண்ணாமலை, கொல்லிமலை, சித்தர்வாழ் மலை போன்ற தலங்களில், தக்க சற்குரு மூலமாகவே காண வல்ல அரிய ஜோதி விருட்சங்கள் பல உள்ளன! மானுடக் கண்களால் தரிசிக்க இயலாத தேவ ஜோதியை இவற்றின் இலைகள் பெற்றிருக்கும்.

இந்த ஜோதிப் பிரகாசத்தைக் கொண்டு தான், விண்ணில், கோடானு கோடி மைல்கள் தூரத்தில் பிற மண்டலங்களில் இருந்து வரும் தேவாதி தேவ தெய்வாதியினர், சித்தர்கள், மகரிஷிகள், யோகியர், ஞானியர் யாவரும், நம்முடைய பங்கஜ பூமி மண்டலத்தை எளிதில் கண்டறிந்து வருகின்றனர். பகலிலும் ஒளி பரப்பும் தன்மையைக் கொண்ட இவ்வகை ஜோதி விருட்சங்களை, பகலிலும் நட்சத்திரங்களைக் காணும் தபோ பலம் பூண்டவர்களால்தான் தரிசிக்க இயலும்.

நெய்க்கொட்டா மரம்
திடியன்மலை

திண்டீர தைல ஜோதி நெய்க்கொட்டா மரம்

ஜோதி விருட்சங்களிலும் தேவ ஜோதி, புண்ய ஜோதி, பாதஜோதி, பர்வத ஜோதி, தைல ஜோதி, வர்ஷ ஜோதி என்று பல வகைகள் உண்டு. இவற்றுள் திண்டீர தைல ஜோதி வகையைக் கொண்டதே நெய்க் கொட்டா மரம் ஆகும். இதுவே திடியன் மலையின் அடிவாரத்தில் உள்ள ஸ்ரீகைலாசநாதர் ஆலயத் தலவிருட்சமும் ஆகும். ஒரு நாழிகை நேரமேனும், இதனடியில் அமர்ந்து ஜோதிப் பூர்வமாகத் தியானிப்போர்க்கு மனஸ்வர்ண சரப் பூர்வ முறையில், அதாவது மன தியான வழியிலேயே, எண்ணற்ற கர்ம வினைகளும் கழிவதற்கான மகத்தான தைல ஜோதி சக்திகளையும் இம்மரம் பெற்றுள்ளது.

இவ்வகையில் தாம் மஹான் ஸ்ரீலாஹரி மஹாசாயா, தம் சிஷ்யர்களின் பூர்வ ஜன்மத் திட்டைகளை, இமாலய ஜோதி மரத்தடித் தியானத்தில் கழித்துத் தந்து அதியற்புதமான முறையில் குருவருள் புரிந்தார்.

நெய்க் கொட்டா மரத்தடியே “தியான பூமி பீடம்”

நெய்க் கொட்டா மரத்தடியில் ஒரு சிறு மணல் மேடிட்டு, இதன் மேல் “தியான பூமி பீடம்” என்று வலது மோதிர விரலால் எழுதி, கம்பளி, தர்பைப் பாய், மெல்லிய பருத்தித் துணி, மரப்பலகை இவற்றில் எதையேனும் வைத்து அமர்தல் வேண்டும்.

பத்மாசனம், சுகாசனம், ஸ்ரீஐயப்ப மூர்த்தி போல் முழங்கால்களைக் குத்திட்டு அமர்தல், பீடமேற்பீடம் என்பதான முழங்காலுக்குக் கீழே குறுக்கே மடித்து இதன் மேல் அமரும் பீடாசனம் ஆகியவை சிறப்புடையவை.

முதலில் ஸ்ரீகிரிஜாத்மஜ கணபதியைச் சங்கல்பித்து வேண்டி, நெய்க் கொட்டா விருட்ச தேவ மூர்த்திக்கு நன்றி செலுத்தித் தியானத்தைத் தொடங்க வேண்டும். சுபலக்ன தியானம் சிறப்புடையதாம்.

கண்களை மூடிய நிலையில், திடியன் மலை அமைப்பை மனதினுள் சிறிது, சிறிதாகக் கொணர்ந்து, திடியன் மலையின் முழு ஓர விளிம்பிற்கும் மனதினுள் தொடுத்த நீண்ட நெடும் வில்வ மாலையை மெதுவாகச் சார்த்திய பாவனையில் தியானித்து வர வேண்டும். வெளிப் பார்வைக்குத் திடியன் மலை அமைப்பு, ஒரு முக்கோணம் போல் தோன்றினாலும், சதுர் தசபூதிக் கோண மலையாகச் (14 கோண, யோக சக்திகள் நிறைந்ததாகச்) சித்தர்கள் இதனை உணர்விக்கின்றனர்.

ஸ்ரீராமபிரான் திடியன்மலை

ஸ்ரீராமர் தியானித்த திருபூமியே திடியன் மலை!

ஸ்ரீராமர், அகஸ்திய மகரிஷி, சத்ருக்னனுடன் வந்து பூஜித்து, கிரிவலம் வந்து, மலை உச்சியிலும் ஆலய வளாகப் புண்ணிய பூமியின் ஆறு இடங்களிலும் தியானித்த மகத்தான பேறு பெற்ற தலம். வாரணாசி போல, சிவபெருமானே, ராம நாம தாரக மந்திர சக்திகளைப் பொழிகின்ற திவ்யமான தலம்.

“ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ராமா ராமேய ரமாராம நாமராம ராமகுணே
ராம் ராம் ராம்”

- என்று பதினான்கு சதுர்த்தச ராமநாமபத சக்திப் பதங்களை மனதினுள் ஓதியவாறு, இங்கு நெய்க்கொட்டா மரத்தடியிலும், மலை உச்சியிலும் தியானித்தல் மிகவும் விசேஷமானது.

ஸ்ரீராமர் பதினான்கு வகைப் புஷ்பங்களுடன் பூஜித்த அற்புத மலைத் திருத்தலம்!

சத்ருக்னன் பதினான்கு வகைத் தீர்த்தங்களுடன் அபிஷேகித்து ஆராதித்த ஆலயம்!

ஸ்ரீஅகஸ்திய மாமுனி பதினான்கு வகைப் புனித விருட்சங்களை ஸ்தாபித்து விருட்ச வழிபாடு ஆற்றி, ஸ்ரீசாகம்பரி தேவியைத் தரிசித்த சிவயோக வளாகம்.

பொதுவாக 14, 28, 42, 56, 70, 84, 98, 112 என்றவாறாக, பதினான்கின் மடங்கில் வயதைக் கொண்டிருப்போர் கண்டிப்பாக வழிபடவேண்டிய தலம்.

ஸ்ரீராமருக்கு ஸ்ரீஅகஸ்தியர் வானவியல் புகட்டிய திடியன் மலைத் திருத்தலம்!

ஸ்ரீஅகஸ்தியர், இம்மலை உச்சியிலிருந்துதாம் 14 இரவுகளில் ஸ்ரீராமர், சத்ருக்னனுக்கு வானவியலை போதித்தார். சகாதேவன் வானசாத்திரக் கலைகளைக் கற்ற தலங்களுள் 14 தலங்களுள் திடியன் பூமியும் ஒன்றாகும். சகாதேவன் ஜோதிட கிரந்தங்களில் நெய்க்கொட்டா மரத்தை ஸபரி நட்சத்திர விருட்சம் என்று குறிப்பிட்டும், பல நட்சத்திர ஜோதிகளைப் பரிணமித்துத் தரும் விசேஷமான மரம் என்று உரைக்கின்றார்.

ஜோதிடர்கள், தம் புனிதமான ஜோதிடத் துறையில் நட்சத்திர ஞானம் பெற உதவும் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இவர்கள் இங்கு ஞானபூஷண நாட்களான புதன், நவமி, புனர்பூச நாட்களிலும், நெய்க்கொட்டா மரத்தை வலம் வருதல் மிகவும் விசேஷமானதாகும்.

ஒவ்வொரு ஜோதிடரும் அனைத்து 27 நட்சத்திரங்களுக்கும் உரிய 27x4 பாதங்கள் = 108 பாதங்களுக்கான 108 நட்சத்திர விருட்சங்களைத் தரிசித்து வழிபட்டு வருவதால், ஜோதிட ஞானத்தில் நன்கு பிரகாசிக்கலாகும்.

ஸ்ரீசட்டநாதர் மகிமை

மஹாப் பிரளயத்திற்குப் பின் சிருஷ்டியைத் துவக்கிட ஏற்பட்ட ஸ்ரீகிராதமூர்த்தி எனும் சிவ அவதார மூர்த்தி போன்று, மஹாப் பிரளய காலத்தில், ஜீவன்களை பிரளயச் சுழலில் ஐக்யமடையச் செய்து காக்கும் கருணாமூர்த்தியான சிவ அவதாரிகைகளுள் ஒன்றாய் ஸ்ரீசட்டநாதர் என்ற அவதாரத்வம் உணர்த்துகின்றது.

லிங்க மூர்த்திகள் ஈஸ்வரனின் அரூவ வடிவை உணர்த்துபவை. ஸ்ரீகால பைரவர், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீசங்கர நாராயணர், ஸ்ரீசட்டநாதர் போன்ற வடிவுப் பூர சிவமூர்த்திகள் ஈஸ்வரனின் அர்ச்ச வடிவைக் கொண்டிருப்பவை.

ஸ்ரீசட்டநாதர்
பந்தணைநல்லூர்

(ஆன்மீக) அர்த்தமுள்ள சட்டமுதம்!

ஸ்ரீசட்டநாதரின் மஹிமையைப் பற்றிப் பலரும் அறியாது உள்ளனர். ஏதோ சீர்காழிச் சிவத்தலத்தில் ஸ்ரீகாலபைரவர் போன்றும், கட்டு மலைச் சந்நிதியில் அருளும் மூர்த்தி என்றே அறிந்துள்ளனர். ஸ்ரீசட்டநாதர் அவதாரத் தாத்பர்யங்கள் எண்ணற்றவை., கலியுகத்தில் சட்டம் என்ற சொல் வழக்கில் நிறையவே புழங்கி வருகின்றது. சட்டம் எனில் ஆன்மீகப் பூர்வமாக, ஜீவன்கள் பெற வேண்டிய அன்பு, தர்மம், கடமை, நேர்மை, கண்ணியம், சத்தியம், சமுதாயக் கட்டுப்பாட்டு, ஒழுக்க நெறிகள் போன்றவற்றைக் குறிக்கின்றன.

சட்டம் என்பது வெளியுடல் காரியங்களுக்கெனக் கலியுகத்தில் அமைந்தாலும், மனம், உள்ளம், மூன்றிற்குமான முப்புரிச் சட்டத்தை அளிப்பவரே ஸ்ரீசட்டநாதச் சிவ மூர்த்தி ஆவார். கலியுகச் சட்ட முறைகளினுள், சட்டத்தை மீறி, அதர்மமாக, வஞ்சித்தல், பழிவாங்குதல் மூலமாகப் பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் திருப்புறம்பியம் ஸ்ரீசட்டநாதருக்குத் தேனபிஷேகம், பசும்பால் அபிஷேகம், தயிர் அபிஷேகம், சந்தனாபிஷேகம், இளநீர் அபிஷேகம் ஆகிய ஐந்தும் கொண்டு, திங்கள் தோறும் வழிபட்டு வருதல் வேண்டும்.

ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர்
திருப்புறம்பியம்

திருப்புறம்பியம் ஸ்ரீபிரளயங் காத்த விநாயகர்

கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் தலம் பிரளயத்துடன் நிறையத் தொடர்பு கொண்டது. பிரளயத்தில் கடல் நுரை போல, பராபரச் சட்ட நுரை பொங்கித் திரண்டு வரும். இதனால்தான் இங்குள்ள ஸ்ரீபிரளயங் காத்த விநாயகர், விநாயகச் சதுர்த்தி அன்று எவ்வளவு தேன் அபிஷேகப் பிரளயத்தையும் சுவரேற்றுபவராக, அதாவது எவ்வளவு தேனும் அபிஷேகித்திடினும் ஈர்த்து, உறிஞ்சி அருள்பாலிப்பவராகப் பிரளயம் காத்த விநாயகராகத் துலங்குகின்றார்.

சுப முகூர்த்த நேரத்தில் அமைகின்ற சித்தர்களுக்கே மட்டும் உணர்த்தப் பெறுகின்ற மிகவும் விசேஷமான அமிர்த கடிகை நேரத்தினைக் கணக்கிட, (ஒரு சில விநாடிகளே இந்த அமிர்தக் கடிகை நேரம் அமையும்) திருப்புறம்பியம் விநாயகரைப் பெருமானைச் சங்கல்பித்துப் பூஜித்தே அமிர்த நேரம் காணும் தேவ சக்தியைப் பெறுகின்றனர்.

இவருக்கு வளர்பிறைச் சதுர்த்தித் திதியான, காரிய சித்தி சங்கல்பச் சதுர்த்தித் திதியில் முழுத் தாமரை மலர்கள், முழுத் தேங்காய், முழுக் கரும்பாலான வில் வடிவ மாலை, முழு முந்திரி மாலை ஆகிய நான்கையும் சார்த்தி வழிபடுதலால், பிறர் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கோர்ட் வழக்குகளால் துன்புறுவோர் நலம் பெற வழி பிறக்கும்.

சட்டத் துறையினர், நீதிபதிகள், வக்கீல்கள், சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய பணியில் உள்ள காவல் துறையினர், மாவட்ட ஆட்சியாளர்கள் போன்றோர் இங்கு வளர்பிறைச் சதுர்த்தி, புதன் கிழமை, புதன் ஹோரையில் ஸ்ரீபிரளயங் காத்த விநாயகருக்கு மஞ்சள் மற்றும் பச்சைப் பட்டாடை சார்த்தி வழிபட்டு வருதல் வேண்டும்.

எனவே தர்மத்தைத்தாம் சமுதாயச் சட்டமாக ஆன்மீகத்தில் உரைக்கின்றார்கள் என்பது புலனாகின்றது அல்லவா!

நாகதோஷங்களைத் தீர்க்கும் திவ்யமான துகில் தலம்

சட்டை என்பதற்கு நாகத் துகில் என்ற பொருளும் உண்டு. மகான்கள் இப்பூவுலக வாழ்க்கையைத் துகில்ப்பதை (உதிர்ப்பதை), சரீரச் சட்டை உரித்தல் என்றே குறிப்பிடுவர். சாதாரண மனிதனுக்கு, உடலில் இருந்து உயிர் பிரிதலானது மரணம் எனப்படுகின்றது. அதாவது உடலை விட்டு உயிர் பிரிய விருப்பம் இல்லாது உலக இயல்புகளில் பெருத்த ஆசை கொள்வோருக்குத்தான் மரணம் ஏற்படும்.

மரண நிலையானது சரீரச் சட்டை உரிக்கும் உத்தம நிலையாக ஆகிட, ஸ்ரீசட்டநாதர் வழிபாடு மிகவும் துணைபுரியும். திருப்புறம்பியம் ஸ்ரீசட்ட நாதரைத் திங்கள் தோறும் வழிபடுதலால் அநாவசியமான மன பீதிகள், மரணம் பற்றிய அச்சம் தீர உதவும்.

நாகச் சட்டை உரிதல் நல்யோகமே!

நாகம், பல்லி போன்றவை தம் உடல் தோலை உரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். பாம்புச் சட்டைச் சகுன சாஸ்திரம் என்ற ஒன்று உண்டு. பாம்பு தம் சட்டையைக் கழற்றுகையில் மிகவும் அற்புதமான, சாதாரண மனிதர்களால் அறிய முடியாத துரீயத் துரியத் துகிலம் என்ற யோக நிலையை அறிகின்றது. இத்தகைய யோக சக்திகளை, நாகங்கள் தாம் பெற்றிடத் தவம் புரிந்த தலமே கும்பகோணம் கஞ்சனூர் மார்கத்தில் உள்ள துகிலி என்ற அற்புதத் தலமாகும்.

துகிலி சிவாலயம்

பண்டைய காலத்தில் துகிலித் தலப் பரவெளியில், ஆண்கள் மேல் சட்டையின்றி, இடுப்பில் வேட்டு, துண்டுடன் மட்டும், வெட்ட வெளியில், அகண்டகார இறைநாம ஜபங்களை மண்டலக் கணக்கில் (தொடர்ந்து 48, 96, 144 நாட்கள்) வெயில், மழை, பகல், இரவு பாராது ஆற்றிப் பரவெளிக்கும், ஜீவ சமுதாயத்திற்கும் புனிதம், சித்சுத்தி மற்றும் புண்ணிய சக்திகளை பெற்றுத் தந்தனர்.

நாக தோஷம் உள்ளவர்கள் துகிலித் தலத்தில் மண் எடுத்து, மஞ்சள் துணியில் முடிந்து, இதற்கு நாகவாள பூஜை ஆற்றி, ஆறு, கடல்களில் மற்றும் நாகபூஜைத் தலங்கள், நாகப்புற்றில் துகிலி மண்ணைச் சேர்ப்பதால், பலவிதமான நாக தோஷங்கள் எளிதில் கரையும்.

சட்டம் ஒரு பக்தி நெறியே!

அடுத்ததாக, தீவிர பக்தியையும் சட்டம் என்று உரைப்பது உண்டு. கலியுகத்தில் போலித்தனமான பக்தியைப் பலரும் பெற்றுத் தவறாக வாழ்ந்தும், பிறருக்குத் தவறான வழிகளை அறிவுறுத்தியும் வருகின்றனர். இது பாவகரமானது. மாசற்ற பக்தியும், மிக மிகப் புனிதமான தெய்வீக அன்பும் ஒன்றே.

உண்மையான கடவுள் பக்தியைக் கொண்டவர்கள், தம் இறை அனுபூதிகளை ஒருபோதும் பறை சாற்றிப் பெருமை கொள்ளார். குடத்தில் இட்ட விளக்கு போல சமுதாய அழுக்குகளைக் களைய வல்ல சித்சுத்தித் சக்தியை அளிக்க வல்ல தெய்வீக சக்தியும் (தெய்வச்) சட்டம் என்றே போற்றப்படுகின்றது. இதனால் தான் சீர்காழிச் சட்டநாத மூர்த்திக்குப் புனுகுக் காப்பிட்டு வழிபட்டு வர, கொடிய பாவங்களால் உள்ளூர மனம் வெந்திருப்போர் நன்கு ஆன்மீக ரீதியாகப் பண்படத் துணை புரியும் என்ற தெய்வ நெறியும் உள்ளது.

அவரவர் ஜன்ம நட்சத்திர நாளில் திருப்புறம்பியச் சட்டநாதருக்குத் திருப்பாதப் புனுகுத் திருக்காப்பிட்டு வழிபடுவதால், சந்ததிகளைப் பற்றும் குலக் கோடாரித் தோஷங்கள் தீர்வு பெறும்.

துரீயம் துரீயம்!

மேலும் சட்டம் என்பதற்குத் துரிதம், விரைவு என்ற பொருளும் உண்டு. மஹாப் பிரளயச் சுழலின் போது, கண் இமைக்கும் நேரத்தில், 300 அடி உயரத்திற்கு நீர் மட்டம் உயர்ந்து விடும். தோணிபுரம் எனப்படும் சீர்காழி, சிவபுரம், கும்பகோணம் போன்றவையே பிரளயச் சுழலில் சிக்காது தனித்து இருக்கும். ஆனால் இதில் உள்ள இறைவிந்தை யாதெனில், மஹாப் பிரளயம் ஏற்படும்போது மஹா சிரஞ்சீவிகள் மட்டுமே இத்தலங்களுக்கு வந்து சேர்ந்து உறைவர் என்பதாகும்.

சிலவிதமானக் கர்ம வினைகளை உடனடியாக, துரிதமாகக் களைந்து விட வேண்டும். கீழே கிடக்கும் பிறருடைய பணம், பொருட்கள் எடுத்தல், மது மயக்கத்தால் ஆற்றும் தீய செயல்கள், முறையற்ற காம இச்சையால் இழைக்கும் பாவ வினைகள் போன்றவற்றைக் களைய, இவை நிகழ்ந்த உடனேயே தக்க பரிகாரங்களைச் செய்யத் தொடங்குதல் வேண்டும்.

கருகலைப்பு, தெய்வ நிந்தனை, குருதுரோகம் போன்றவற்றிற்கு ஒரு போதும் பிராயச்சித்தம் கிடையாது. தக்க சற்குருவே இவற்றுக்கான நல்வழி பரிகாரங்களை அளிப்பவராவார்.

ஆனால் அவரவர் மனம் திருந்தி, தம்மால் பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து வகைகளிலும் பரிபூரண நிவாரணம் தந்தாலன்றி, அவ்வளவு எளிதில் எந்த சற்குருவும், இவற்றிற்குப் பரிகார வழிகளைத் தருதல் கிடையாது.

எனவே வாழ்வில் மேற்கண்ட பெருங் குற்றங்களைச் செய்தோர், தாம் பிறந்த லக்னம் வரும் தன் நட்சத்திர நாட்களில், குறிப்பாக செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், தம்முடைய பிறந்த லக்னம் வரும் நேரத்தில், திருப்புறம்பியம் ஸ்ரீசட்டநாதருக்கு, முந்திரி, பச்சைக் கற்பூரம், சர்க்கரை, திராட்சை, குங்குமப்பூ கலந்த பாலால் ஏழு குடம் அபிஷேகித்து, ஏழைகளுக்கும் தானமாக அளித்து வர வேண்டும்.

உதாரணமாக, கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள், செவ்வாய், சனிக் கிழமைகளில் கும்ப லக்னம் வரும் நேரத்தில், ஸ்ரீசட்டநாதருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பூஜிக்க வேண்டும். இவ்வாறு செய்தால்தான் ஜன்மம் ஜன்மமாகச் சந்ததிகளையும் தம்மையும் பற்றும் கொடிய வகைக் கர்ம வினைகள், ஒரு சில பிறவிகளிலாவது கரைந்திட, துரிதமாக உதவி செய்யும், அதுவும் குருவருள் கை கூடிடில்தான்!

அடுத்ததாக, சட்டம் என்பதற்கு “சுகம்” என்ற பொருளும் உண்டு. கலியுலகில் மனித குலம், அற்ப சுகம், நிரந்தரமில்லா சுகம், நீடித்து நிற்காத சுகம் இவற்றுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்து, தான் சுகத்துடன் வாழ்ந்திட, சுயநலத்துடன் பல அற்பமான செய்கைகளைச் செய்து, பலத்த கர்ம வினைகளுக்கு ஆளாகி விடுகின்றது.

அலுவலகத்தில் பணி புரிபவர்கள், பொதுத் துறையினர் சிலரும் பிறர் பணத்தில், பிறர் பொருளில் சுகத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழவே விரும்புகின்றனர். இவையெல்லாம் பயங்கரமான கர்ம வினைகளாக மீண்டும் வந்து தாக்கும். அலுவலகப் பொருட்கள், கார் போன்ற வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தியே வாழ்ந்தவர்கள் அறுபது வயதடைகையில், இக்கர்ம வினைகள் திரும்பி வந்து, பலவிதங்களில் நோய், அவமானம், கோர்ட் வழக்காகத் தாக்கும்போது பெரிதும் நொந்து விடுகின்றனர்.

புனுகுச் சட்ட வழிபாடு

எனவே நிரந்தரமான சுகம், இன்பம், மகிழ்ச்சி, ஆனந்தம் என்பது இறை வழிபாட்டில்தான் கிட்டலாகும். எவருக்கு எத்தகைய இன்ப, துன்பங்கள் கிட்டலாகும் என்பது அவரவர் கர்ம வினைகளாய் அமையப் பெறுபவையே. எனவே நம் காரியங்களை, நல்வினைப் படுத்த உதவுவதும் ஸ்ரீசட்டநாதர் வழிபாடாகும். இதற்காகவே சுதை, புற்று மண்ணால் ஆன சுயம்பு லிங்க மூர்த்திகளுக்கு சென்னை திருவொற்றியூர் ஸ்ரீபடம்பக்கநாதர், காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், திருவலஞ்சுழிப் பிள்ளையார், கும்பகோணம் கும்பேஸ்வரர், திருக்கடவூர்ச் சிவமூர்த்தி – போன்ற மூர்த்திகளுக்கு, வளர்பிறை, தேய்பிறை இரண்டிலுமே ஒரு நாளேனும் புனுகுச் சட்டம் சார்த்தி வழிபட்டு வர வேண்டும்.  வாரம் ஒரு முறை சுயம்பு லிங்க மூர்த்திக்கு, வெண்பட்டு அல்லது வில்வ தளத்தால் ஆன ஆடையைச் சார்த்தித் துதித்து வர வேண்டும்.

சட்டம் என்பதற்கு இன்னும் பல அர்த்தங்கள் உண்டு. மேற்கண்ட ஐந்து அர்த்தங்களும் கலியுகத்திற்கு மிகவும் முக்கியமானவை. இவை ஐந்தையும் இணைத்துத் தாம் நீதியரசர், தர்ம மூர்த்தி, நீதி மூர்த்தி, நீதி பரம் தெய்வம் என்றும் ஸ்ரீசட்டநாதர் போற்றப்படுகின்றார். ஸ்ரீகாலபைரவருக்கு வஸ்திரம் சார்த்திப் பூஜிக்கப்படுவது போல, ஸ்ரீசட்டநாதருக்கும் பட்டு வஸ்திரம் சார்த்திப் பூஜித்து வர வேண்டும்.

சட்டை எனும் உடலை, உயிரானது உரித்து உதிர்த்திடத் தடையாக இருப்பவை மூன்று விதமான கர்மவினைகள் ஆகும்.

சஞ்சித கர்மா – கடந்த கால, கடந்த ஜன்ம வினைகள்
பிராரப்த கர்மா – நடப்புப் பிறவியில் சேர்ந்த, சேரும் – எதிர்காலத்தில் வடிவெடுக்கும் கர்ம வினைகள்

ஆகாமி கர்மா – நடப்புப் பிறவியில் சேர்ந்த, சேரும் – எதிர்காலத்தில் வடிவெடுக்கும் கர்ம வினைகள்

இம்மூன்றையும் களைய வல்ல பக்தி வழிபாடும் ஸ்ரீசட்டநாதர் வழிபாடாகும்.

ஸ்ரீவாஸ்து மூர்த்தி

சித்தர்கள் பூப்ரவாகக் கூர்ம தந்த்ர சாஸ்திர ரீதியாக அளிக்கும் – ஸ்ரீபூமி அந்தர ஸ்ரீஆதி வாஸ்து சுந்தர மூர்த்தி!

ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கு எத்தனையோ வடிவங்கள் உண்டு. இங்கு நாம் காண்பது சித்தர்கள் அருளிய கலியுக வாசுமேத வாஸ்து கல்பத்திற்கு உரிய அலங்கார பூஜா அர்ச்ச வடிவாகும். அனைத்து தெய்வாம்சங்களும், ஞானி, யோகி, சித்தர், மகரிஷி முமூட்சு, பித்ரு தேவ தெய்வாதி குணங்களும், அனைத்து யுகங்களுக்குமான பலாதிபலா தெய்வாம்சங்களும் நிறைந்ததாகும். சிரசு முதல் பாதம் வரை பூப்ரவாகத் தெய்வ உற்பவிப்புகளுடன் தேவாதி தேவ தெய்வீக அர்ச்ச குணங்களால் தோன்றிய மூர்த்தி. பூலோகம் மட்டுமல்லாது கோடிக் கணக்கான கோளங்கள், நட்சத்திர லோகங்களும் அடங்கிய பிரபஞ்சத்தின் எட்டு திக்குகளையும் போஷித்து ரட்சிப்பவரே ஸ்ரீஆதி வாஸ்து மூர்த்தியாவார். எத்தனை பிரம்ம மூர்த்திகள், இந்திரர்கள் வந்து மறைந்தாலும், ஆதி பிரம்ம மூர்த்தி ஒருவரே! ஆதி இந்திர மூர்த்தி ஒருவரே!

அட்டைப் படத்தில் உள்ள ஸ்ரீஆதி வாஸ்து மூர்த்தியின் அர்ச்ச வடிவில் அத்தனை தெய்வாம்சங்களும் பரமானந்தமாக நிறைந்துள்ளன. கலியுகத்தில், சமீபத்தில் ஸ்ரீவாஸ்து வழிபாடு நன்கு பிராபல்யம் அடைந்து வருகின்றதன்றோ! உண்மையில் நம்முடைய அனைத்துத் தினசரி வழிபாடுகள், ஆலய தரிசனங்கள், புண்ணியத் தீர்த்த நீராடல்களில் ஸ்ரீவாஸ்து தத்துவம் நன்கே நிறைந்துள்ளது. அதாவது இலைமறை கனியாக நம் வழிபாடு அனைத்திலுமே ஸ்ரீவாஸ்து பூஜைப் பிரவாகம் நிறைந்துள்ளது. இனியேனும் ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் அர்ச்ச வடிவு அனைத்து இல்லங்களிலும் நன்கு பொலிதல் வேண்டும். இல்லத்தில், அலுவலகத்தில், தொழிற்சாலையில் ஆலயத்தில் என அனைத்து இடங்களிலும் யாவரும் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் இவ்வடிவைச் சிலா ரூபமாகவோ, படமாகவோ வைத்துச் சிறப்பாக வழிபட்டிடலாம்.

ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

சித்தர்கள் தாம் அந்தந்த யுகங்களுக்கு ஏற்ற வகையில் பல வழிபாட்டு முறைகளையும் அந்தந்த கல்பதாரண ஜீவ சமுதாய நிலைகளுக்கு ஏற்ப, தக்க சற்குருமார்கள் மூலம் வேதப்பூர்வமாக அளிக்கின்றனர். இதன்படி, கலியுகத்தின் 5106ம் ஆண்டில், இதுவே தாரணீய சங்கல்ப வருடத்தில் தோன்றும் ஸ்ரீஆதி வாஸ்துவின் மூலவடிவாகும். இன்றும் ஒரு சில ஆலயங்களில் சூக்கும ரீதியாக இத்தகைய வாஸ்தவ்ய வாஸ்து பூஷண லட்சாதி லட்சணங்கள் வடிக்கப் பெற்றுள்ளன.

இப்படத்தை வைத்தும், சிலா ரூபமாகப் பலரும் வழிபடும் முறையில் குறித்த ஆகம நியதிகளுடன் சிலாரூபமாக வடித்தும் வழிபட்டு வருதலால், கடந்த பல ஆண்டுகளாகப் பெருத்து வரும் வாஸ்து லட்சணத்திற்கு முரணான கட்டிட அமைப்புகளினால் ஏற்படும் தோஷங்கள் தீர்வதற்கான நல்ல பரிகார வழிகளைப் பெற மிகவும் உதவும். அடுக்கு மாடிக் கட்டிடம் (flat system) என்பதான நவீனக் கட்டமைப்பில் நிறைய பூமி தோஷங்கள், கட்டமைப்புத் தோஷங்கள், செங்கல், மண் தோஷங்கள் எனப் பல்வகைப் பிருத்வி தோஷங்களோடு மரங்கள், தாவரங்கள், வயல்கள் போன்றவற்றை வெட்டி, பூமியடி வாழ் ஜீவன்களையும் அழித்து வீடுகளை எழுப்பும் போது தாவரஹத்தி, ஜங்கம ஹத்தி தோஷங்களும் ஏற்பட்டு விடுகின்றன. 20 பேர்கள் வசிக்கக் கூடிய இடத்தில் 350 பேர்கள் குடியிருப்பதால் ஜீவகிரஹ ரண தோஷமும் ஏற்பட்டுவிடுகின்றது. உண்மையில் ஆசார நெறிப்படி, ஆன்மீக முறைப்படி, கழிவறைகள் வீட்டை விட்டு வெளியில் அல்லது தோட்டப் பகுதியில் இருத்தல் வேண்டும். வீட்டிற்குள் கழிவறைகள் இருப்பின் தடுப்புச் சுவர், பரப்பு ஜன்னல்கள், பரந்த நீர்த்தாரை என்று பல தோஷத் தடுப்புகள் காப்புகளாகச் சேர்ந்து இருக்க வேண்டும்.

பல தேவாதி, தெய்வ அம்சங்களின் தொகுப்பாக சிறு குழந்தையாய், பால அம்சங்களுடன் பரஞ்ஜோதி ஜோதிப் பிரகாசமாய்த் துலங்கும் ஸ்ரீபூமி அந்தர ஸ்ரீஆதிவாஸ்து சுந்தர மூர்த்தி, கண்டு தரிசித்துப் பலருக்கும் உணர்வித்து இன்றிலிருந்து ஸ்ரீஆதி வாஸ்து பூஜையையும் தினசரி வழிபாட்டு மூர்த்தியாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

1008 வகையான ஸ்ரீஆதிவாஸ்து ஹோமங்கள், யாக சாலைகள் வேள்விகளைக் கடந்த பல ஆண்டுகளில் தம் குருவின் அருளாணையுடன் சித்தவேத பூஷணமாகப் பூர்த்தி செய்து, தம் சற்குருநாதர் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளின் அருட் கருணையுடன், நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீR.V வெங்கடராமன் அவர்கள் குருவின் திருமூலப்பிரசாதமாக கலியுகத்திற்கென ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் அருள் வடிவை இதன் மூலம் கலியுக ஜீவ சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கின்றார். கடந்த பல ஆண்டுகளில் ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி படோத்பவமாக, சித்திரப் பூர்வமாக இவ்வாறு உற்பவிப்பதற்கு, தாரண ஆண்டில் தோன்றுவதற்குத் தேவையான புரஸ்சரண, ஹோம ஆஹுதிகள், ஆவர்த்திகள், கோடிநாம ஜப, தப, தியான, நியம, தாரண நியதிகள் போன்ற பல பிரதிஷ்டாபன நியதிகள் முறையாகக் கடைபிடிக்கப்பட்டு, கலியுக ஜீவன்களுக்கு இங்கு சித்தர் குல குருபீடாதிபதியின் மூலமாக, இறையருளுடன் அர்ப்பணிக்கப்படுகின்றது.

ஸ்ரீவாஸ்து பூஜை என்பது ஒவ்வொரு யுகத்திலும் சில கல்பங்களில் மிகவும் பிரசித்தி பெறும். பிறகு காலப் போக்கில் மறையும், மறுபடியும் சிறப்புறும், ஸ்ரீஐயப்ப விரதம், பிரதோஷ பூஜை, ஆயுர் தேவி வழிபாடு, அருணாசல கிரிவலம் போன்றவை பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் பிரசித்தி பெற்றிருப்பது போல, வாஸ்து தின சகஸ்ர பூஜை, வாஸ்து தின கிரிவலம், வாஸ்து தின அங்கப் பிரதட்சணம், வாஸ்து நாள் தர்ப்பணம் போன்றவை வரும் ஆண்டுகளில் மிகவும் பிரசித்தி பெற உள்ளன. இதனால்தான் தாரண ஆண்டில் சித்தர்கள் அளிக்கின்ற அருட்பிரசாதமாக சற்குருவின் திருவாக்கால் ஸ்ரீபூமி அந்தர ஸ்ரீஆதிவாஸ்து சுந்தர மூர்த்தியின் திருவடிவம் பூஜைக்காக கலியுக மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றது.

அட்டைப்படத்தில் வாஸ்து மூர்த்தியின் சிரசில் இருந்து பாதம் வரை, எண்ணற்ற தெய்வ மூர்த்திகள், சித்தர்கள், மகரிஷிகளின் தோற்றங்களை நீங்கள் காண்கின்றீர்கள் அல்லவா! இவை தெய்வங்களின் உருவங்கள் என்று அறிவதை விட, தெய்வாம்ச குணங்கள் பரிபூரணமாக நிரவி இருக்கின்ற பரிபூரண சகஸ்ர தெய்வத் தோற்றம் என்று பக்திப் பூர்வமாக அறிதலே சிறப்புடையது. எவ்வாறு ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர் ரூபத்தில் பரமசிவன், பார்வதி அம்சங்கள் ஐக்யமாகி உள்ளனவோ, ஸ்ரீசங்கர நாராயண வடிவில் சிவ, விஷ்ணு அம்சங்கள் நிரவி உள்ளனவோ, ஸ்ரீதத்தாத்ரேயர் வடிவில் மும்மூர்த்தி இணைந்திருப்பதும் போல ஸ்ரீஆதிவாஸ்து பகவான் வடிவில் அனைத்துத் தெய்வ அம்சங்களும் பரிபூரணமாகப் பொலிகின்றன.

அமுத தாரைகள்

எந்தப் பிள்ளையும் மக்குப் பிள்ளை என்று ஓரம் கட்டி ஒதுக்கி விடாதீர்கள். இறைவன் ஒவ்வொருவருக்குள்ளும் பல அபூர்வமான திறமைகளைப் பதித்து வைத்துள்ளார். பள்ளிப் பருவமானது புத்தகங்களில் உள்ள வாக்யங்களை திணிப்பது என்று இல்லாமல் அவரவருக்குள் மறைந்துள்ள திறனை ஆக்கப்படுத்துவதே ஒவ்வொரு ஆசிரியருடைய தெய்வீகச் சேவைகளுள் ஒன்றாகும். ஆசிரியர்கள் யாவருமே கலைமகளுக்கு உரிய

ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி
கஞ்சனூர்

1. தினசரி புத ஹோரை நேரத்திலும்
2. புதன் கிழமை தோறும்
3. ஒவ்வொரு நவமித் திதியிலும்
4. ஒவ்வொரு வியாழனில் குரு ஹோரை நேரத்தில்

பல விசேஷமான பூஜைகளை, நடைவலங்கள், கிரிவலங்களைத் திறம்பட ஆற்றிவருதல் வேண்டும். வீணை இன்றி அருளும் ஸ்ரீஞானசரஸ்வதி, வீணையோடு அருளும் ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தி, திருமகளுடன் இணைந்து தோன்றும் ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவர், தலைக்கு மேல் உயரமான வால் உள்ள, வாலில் மணி கட்டியும் உள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திர தின வழிபாடு போன்ற கல்வித் துறைக்கான வழிபாடுகளைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளின் சிறு பிராயத்திலிருந்தே கடைபிடித்து வருதல் வேண்டும்.

மூலவர் முன் மங்கள நாண் வைபவம் நிகழட்டும்

இயன்ற வரையில் ஆண் பிள்ளைக்கு 26 வயதுக்குள்ளும் பெண்களுக்கு 23 வயதுக்குள்ளும் நன்முறையில் இறைச் சன்னதியில் திருமணம் செய்து வைத்திடுங்கள். தற்காலத்தில் அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்ற புனிதமான சடங்குகளை முறையாக நிகழ்த்துவதில்லை. வேத மந்திரங்களையும் முறையாக ஓதுவதில்லை. ஜாதகப் பொருத்தங்களையும் சரிவர உண்மையாகப் பார்ப்பதில்லை. இதனால் தம்பதிகளுக்கு சொல்லொணாத் துயரங்கள் வாழ்க்கையில் உண்டாகின்றன. திருமணம் எங்கு நடந்தாலும் தாலி கட்டும் வைபவத்தையாவது இறைவனின் திருச்சன்னதியில் நிகழ்த்துவதால் இறைவன் மூலத் திருமேனி முன் நிகழ்வதால், பலவிதமான தோஷங்களும், தாமாகவே களையப் பெறுகின்றன. இதிலும் திருநல்லம், வேதாரண்யம், திருவேற்காடு, காஞ்சி ஏகாம்பரம் போன்ற இறைவனின் திருமண வைபவத் தலங்களில் தமக்குத் திருமணமான திருமண லக்ன நேரத்தில் சுவாமிக்குத் திருக்கல்யாண உற்சவம் ஆற்றுதல், அபிஷேக, ஆராதனைகள், மஞ்சள், சந்தனக் காப்பு சார்த்துதல், சாம்பிராணிக் காப்பு இடுதல் போன்றவற்றை ஆற்றி வருதலால் முகூர்த்த நேரக் கணிப்பு தோஷங்கள் அகல உதவிடும்.

முக்தி, மோட்ச நிலைகள் அமைய, ஒவ்வொருவரும் எப்பிறவியிலேனும், 300 அடிச் சதுர பூமியை, கோயில்களுக்கு, ஏழைகளுக்குத் தானமாக அளித்திருக்க வேண்டும் என்பது தர்ம சட்டம், இதனை ஆற்ற இயலாதோர், இங்கு திருக்கோளக்குடியில் மூன்று லிங்க மூர்த்திகளையும் வழிபட்டு, கிரிவலம் வந்து, தக்க பிராய சித்தங்களை பெற வேண்டும்.

சாதி, குல, இன, மத பேதங்கள் இன்றி எந்நாட்டிலும், எங்கும், எவரும், பூஜை அறையிலோ, வேறெங்குமோ ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் திருவடிவப் படத்தை நன்கு வைத்து வழிபட்டிடலாம். ஆம், ஆலய வழிபாடு, பொது வழிபாடு, சமுதாய நல பூஜை என யாவர்க்கும், யாதிற்கும், யாங்கும் உரித்தானதே இந்த ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தியின் திருவடிவப் படமாகும்., இதனை வீட்டிலும் அலுவலகத்திலும், எந்த இடத்திலும் வைத்துப் பூஜித்திடலாம். குறிப்பாக, ஒவ்வொரு வருடத்திய எட்டு வாஸ்து நாட்கள், செவ்வாய்க் கிழமைகள், செவ்வாய்க் கிரகத்திற்கு உரிய மூன்று நட்சத்திர நாட்கள் (மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்), தினந்தோறும் செவ்வாய் ஹோரை நேரம் என வாஸ்து சக்தி மிகுந்த நாட்களிலும், நேரங்களிலும் பூஜித்தல் மிகவும் விசேஷமானது.

நகர் திருத்தலத்தில்
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

சொந்த வீடு, சொந்த பிளாட், சொந்தக் கடை இல்லாதவர்கள் ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கு செவ்வரளி மாலை சார்த்தித் தினந்தோறும் பூஜித்து, செவ்வாய்க் கிழமை தோறும் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டு வர, சொந்த இடம் அமையத் துணை புரியும். பூஜை செய்தவுடன் பலனை எதிர்பாராது, இதனைத் தெய்வீகக் கடமை உணர்வுடன் பொறுமையாக, பணிவாகச் செய்து வர வேண்டும்.

மும்மூர்த்திகளைப் பாலகர் வடிவில் தரிசிப்பதற்குப் பாக்யம் பெற்ற அனுசூயா, அருந்ததி போன்ற ரிஷிபத்தினிகளும், வாஸ்து பகவானின் பாலரூபத்தைக் கண்டு பரமானந்தம் கொண்டு, கலியுக இல்லறப் பெண்களுக்கு வாஸ்து சக்திகளும் விருத்தி ஆவதற்கு ஸ்ரீஆதிவாஸ்து பகவானை வேண்டி ஹோம பூஜையில் தாம்பூல ஆஹூதி முறையை நமக்குப் பெற்றுத் தந்தனர்.

பொதுவாக, வாஸ்து ஹோம குண்டமானது 16, அல்லது எட்டு திசைகளில் செங்கற்களை வைத்திருப்பார்கள். இதற்கு ஈரெட்டு வாசல் யாகம் என்று பெயர். அகண்டாகார வாஸ்து ஹோம குண்டம் 16 திசைகளைக் கொண்டிருக்கும். ஸ்ரீஆதிவாஸ்து ஹோமத்தில் சுமங்கலித்துவ சக்திகள் நிறைந்த வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கூடிய 54 தாம்பூலங்களை ஆஹுதிகளாக அளித்தல் மிகவும் விசேஷமாகப் போற்றப்படுகின்றது.

27 (2+7 = 9 செவ்வாய் கிரக எண்) வயதிற்குள் சொந்தமாக வீடு வாங்குபவர்கள், செவ்வாய் அனுகிரக சக்திகளையும் வாஸ்து சக்திகளையும் நிறையப் பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு வாஸ்து சக்திகள் உலகில் நிறையவே பொலிவதால் இவர்கள் ஸ்ரீவாஸ்து பூஜைகளை நிறைவேற்றுவதற்கான அனுகூல பாக்கியங்களை பிறருடைய நலன்களுக்காக நன்கு கடைபிடித்திட வேண்டும்.

வாழ்க்கையில் ஆடைகளைக் கூட முழுமையாகத் தரிக்க இயலாதபடி நோயின் கொடுமைக்கு ஆளாகி இறந்தோர், மேலுலகில், ஓரளவேனும் நன்னிலை அடைவதற்கு, மேற்கண்ட வாஸ்துத் தலத் தீர்த்தங்களில் நவகிரகங்களுக்கு உரிய ஒன்பது வண்ணத் துணிகளின் மேல் தர்பைச் சட்டம் வைத்துத் தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானது.

“பம்பூரண தரிசனம்”
தினமும், காலையில் சூரிய உதயத்திற்கு முன், கண்ணாடி முன் உள்ள பழங்கள் மற்றும் சுப மங்களப் பொருட்களைப் பார்த்த பின் கண்ணாடியைப் பார்ப்பது என்ற தெய்வீகப் பண்பாட்டை, ஒரு விடியற் காலை நற்பூஜையாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது, நெற்றியில் விபூதிப் பொட்டு, காதுகளில் உள்ள தோடு, கடுக்கன்கள், கழுத்தில் உள்ள ருத்திராட்சம் – இவற்றைப் பார்க்கும் போது ஒரு முக்கோண வடிவப் பார்வை ஏற்படுகின்றது. இதற்குப் “பம்பூரண தரிசனம்” என்று பெயர்.

பம்பூரண சக்திகள் பல்கிப் பெருகும் ஒவ்வொரு பூர நட்சத்திரத்தன்றும் கண்ணாடி முன் வாசனைப் பூக்கள், பழங்கள், கீரைகள் இவற்றை வைத்துப் பூஜிக்க வேண்டும். இவ்வாறு கண்ணாடி பூஜையை பூர நட்சத்திர தினம் தோறும் நிறைவேற்றி வந்தால், வாஸ்து சக்திகள் இல்லத்தில் நன்கு விருத்தியடையும்.

உண்மையாக உழைக்காது சம்பளமாக, ஊதியமாகப் பெறும் பணத்தால் வாங்கப்படும் பொருட்களால், திரவியங்களால் ஆக்கப்படும் உணவில் காழ்ப்பு தோஷங்கள் மிகுந்து இருக்கும். பூராட நட்சத்திர நாளில் நாய்களுக்கு உணவிடுகையில் இவ்வகைக் காழ்ப்பு தோஷங்கள் ஓரளவு தணியும்.

ஆன்ம சாதனங்கள் அறிவைப் பெருக்கும்!

ஆறாம் இறைப் பகுத்தறிவு மனிதப் பிறவியில் மட்டுமே பெறக் கூடியதாக அமைந்து இருப்பதால்தான் மானுடப் பிறவி உத்தமமானதாகப் போற்றப்படுகின்றது. நாம் கடைபிடிக்கின்ற ஆலய தரிசனங்கள், ஹோம, தியான, ஜபங்கள், தர்ப்பணங்கள், தான தர்மங்களின் பலன்களே பல வகைகளில் நம் பிறவிச் சுமைகளைத் தணிக்க முழுவதும் பயன்படுகின்றன. இவையாவும் நம்முடைய மானுடப் பிறப்பிற்கு உரித்தான ஆறாவது இறைப் பகுத்தறிவை நன்கு பயன்படுத்திக் கொள்ள உதவும் ஆன்ம சாதனங்களாகவும் அமைந்து துணை புரிகின்றன.

வர இருக்கும் பதினான்காவது கிரக வியூகம் பூப்பது – திடியன் மலையிலேயே!

ஆதிமுதலில் செவ்வாய், புதன், குரு, சனி, சுக்கிரன், ஆகிய 5 கிரகங்களை மட்டும் ஜோதிட ரீதியாகக் கொண்டார்கள். பிறகு, சூரிய, சந்திரரோடு ஏழு கிரகங்களாயின, ராகு, கேதுவோடு ஒன்பதுமாகி, மாந்தியோடு பத்தும் ஆயிற்று. யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய மூன்று கிரகங்களோடு தற்போது 12 கிரகங்கள் உள்ளன.

யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகியவை ஆங்கிலப் பெயரைக் கொண்டிருப்பது போல் தோன்றினாலும், சித்த கிரந்தங்களில் இவற்றின் தேவமொழி, தமிழ்ப் பெயர்கள் இருப்பதால், பண்டைய ஜோதிடத்தில், கலியுகத்தில் குறித்த ஆண்டில் இன்னின்ன கிரகங்கள் நடைமுறைக்கு வரும் என்று தீர்க தரிசனமாகவே குறித்துள்ளனர் என்பதும் நன்கு புலப்படும். இவற்றோடு தற்போதைக்கு 12 கிரகங்கள் ஜோதிடக் கணக்கில் உண்டு. கலியுகத்தில் பதினான்காவதாக ஜோதிட சாத்திரத்தில் வர இருக்கும் கிரகமானது, திடியன் மலைப் பகுதியிலிருந்துதான் புலனாகும் என்பது சித்தர்களின் துணிபு.

ஸ்ரீவாஸ்துவிற்குரிய பிட கர வலம்பத் தோப்புக் கரணம்!

ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி, சயன நிலையில், தரையில் பின் திருமேனி சயனித்தவாறு யோகக் கோலம் பூண்டிருப்பதால் பிடகரவலம்பத் தோப்புக் கரணம் என்ற முறையில் கைகளை, முதுகின் பின்புறத்தில் இரு கைகளையும் கும்பிடுவது போல் வைத்துக் கொண்டு தோப்புக் கரணம் போல் உட்கார்ந்து எழுதலும் வாஸ்து முறைத் பிடத் தோப்புக் கரண யோகவகையில் ஒன்றாகும். இது கராவலம்பத் தோத்திர யோக முறையில் வருவது, பயில்வதற்கு மிகவும் கடினமானது.

தொடரும் ஆனந்தம்...

குளிக்கப்போய் சேற்றைப் பூசிக் கொண்டு வந்த கதைபோல் ஆகி விட்டது என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இது எந்த அளவிற்கு தெய்வீகத்தில் பயன்படும் என்பதை அறிய இங்கு அளிக்கப்பட்ட நிகழ்ச்சி உங்களுக்கு வழிகாட்டும். ஒரு முறை ஒரு அடியார் திருச்சி லால்குடி அருகிலுள்ள ஸ்ரீஅப்ரதீஸ்வரர் அருள்புரியும் நகர் சிவாலயத்திற்குச் சென்றிருந்தார். முள் இல்லா வில்வ மரம் இத்தலத்தை அலங்கரிக்கும் தலவிருட்மாகும். காலம் கடந்து நிற்கும் ஆன்மீகப் பொக்கிஷம் இது. ஆயிரம் ஆயிரம் சூரிய பிரகாசத்தை ஒத்த சக்தியை ஒத்தது இந்த வில்வ மரத்தின் தளங்கள். இந்த வில்வ தளங்களில் ஒன்றே ஒன்றை முறையாக நாம் இறைவனுக்கு அர்ச்சித்தாலே போதும், அதனால் கிட்டும் பலன்களை நம்மால் உணரவே முடியாது. கனிந்த கனி பரமாச்சாரியார் இத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுவதற்காக வந்தபோது, அப்போது அங்கிருந்த சிவாச்சாரியாரிடம், “நீ ஒன்றும் செய்ய வேண்டாம், இத்தல வில்வ தளங்களைக் கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்து வந்தாலே போதும்...”, என்று வழிகாட்டினாராம்.

நகர் சிவாலயம் லால்குடி அருகே

நம் அடியார் இத்தல இறைவனை வழிபடச் சென்றபோது அங்கு ஒரு மூதாட்டி பிரகாரத்தை பெருக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அந்த மூதாட்டிக்கு உதவலாமே என்ற இரக்க எண்ணம் மேலிட அந்த மூதாட்டியுடன் சேர்ந்து தானும் அந்த பிரகாரத்தில் உள்ள வில்வ இலைகளை எல்லாம் கூட்டிப் பெருக்கி ஒரு சாக்குப் பையில் கட்டி துப்புரவுப் பணியை சிறப்பாக நிறைவேற்றி விட்டோம் என்ற திருப்தி மேலிட தன் இல்லம் திரும்பினார். சில நாட்கள் சென்ற பின் நம் சற்குருவிடம் இந்த “திருப்பணியை” பற்றி குறிப்பிட்டபோது நம் சற்குருவோ தமக்கே உரிய பாணியில், “இது நல்ல திருப்பணிதான், உங்களிடம் இருக்கும் ஒன்றிரண்டு பைசாவும் மறைந்து விடும், காசே இல்லாத வறுமை நிலையும் ஒரு பெரிய ஞானம்தானே...”, என்றாரே பார்க்கலாம். அந்த அடியாரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

நம் சற்குரு தொடர்ந்து, “சார், வில்வம் என்பது மகாலட்சுமி உறையும் தளம், சுருக்கமாகச் சொன்னால் திருமகள் உறையும் சிம்மாசனம் அது. முள் இல்லா வில்வம் என்றால் அது நவரத்தினங்கள் பதிக்கப்பெற்ற தேவலோக சிம்மாசனம், லட்சுமி லோகத்தில் மட்டுமே நாம் காணக் கூடிய திருமகள் சிம்மாசனம். உங்கள் மூதாதையர்கள் இயற்றிய நற்காரியத்தால்தான், புண்ணிய சக்தியால்தான் நீங்கள் இத்தகைய முள்ளில்லா வில்ல மரத்தையே தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றீர்கள். ஆனால், அதையே மறந்து விட்டு, லட்சுமி வீற்றிருக்கும் சிம்மாசனத்தையே துடைப்பத்தால் பெருக்கித் தள்ளி விட்டேன் என்று மார்தட்டினால் அடியேன் இதற்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை...”, என்றார்.

“சரி, போனது போகட்டும், தெரியாமல் ஒரு சீடன் செய்யும் தவறுக்கு அவனுடைய வழிகாட்டிதானே பதில் சொல்ல வேண்டும். உங்கள் தவற்றிற்கு உரிய பரிகாரத்தை அடியேன்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்...”, என்று புன்முறுவலுடன் கூறினார். அப்போதுதான் அந்த அடியாரின் மனதில் ஒரு நிம்மதி மூச்சு வெளிப்பட்டது. சற்குரு தொடர்ந்தார், “பிரகாரத்தில் விழும் குப்பைகள் அவை எத்தகைய வில்வ தளங்களாக இருந்தாலும் அதை கூட்டித் தள்ளுவது என்பது அந்த திருத்தலங்களில் பணிபுரியும் சிப்பந்திகளின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை அவர்கள் எப்படி நிறைவேற்றினாலும் அது பற்றி நமக்குக் கவலை இல்லை. அடியார்களைப் பொறுத்தவரை, தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களைப் பொறுத்தவரை வில்வ தளங்களை விளக்குமாறு கொண்டு கூட்டித் தள்ளக் கூடாது. அவர்கள் விரும்பினால் தாங்கள் பிரதட்சிணமாக செல்வதற்கான பாதையை மட்டும் கைகளால் பெருக்கி தூய்மை செய்து கொள்ளலாம். அவ்வளவே. ”

“நாரிகேளசிந்து என்ற ஒரு வகை தென்னைமரம் உண்டு. அந்த மரத்திலிருந்து தயார் செய்யப்பட்ட விளக்குமாறு கொண்டுதான் இத்தகைய வில்வதளங்களைக் கூட்டி தூய்மை செய்ய வேண்டும் என்று பரசுராமர் கூறியுள்ளார். இந்த நாரிகேள விளக்குமாற்றை சாதாரண மனிதர்கள் இனங்கண்டு கொள்ள முடியாது என்பதால் பரசுராமரை வேண்டி தென்னை விளக்குமாறுகள் குறைந்தது 12 கோயில்களுக்கு தானம் அளித்தால் உங்களுடைய தவறான “திருப்பணிக்கு” இது ஒரு பிராயசித்தமாக அமையும்,” என்று கூறி ஆரண்ய உள்ளத்தில் அகல் தீபம் ஏற்றினார் நம் சற்குரு.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam