அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஏட்டு ஞானம்

108 புராணங்களும் மேலும் 108 உபபுராணங்களும் நம்முடைய வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன. இவை தவிர நூற்றுக்கணக்கான புராணங்கள், கிரந்த வடிவிலும், ஓலைச் சுவடிகளிலும், நாடிகளிலும் அமைந்துள்ளன. இவற்றைத் தக்க குருமார்கள் மூலமாகப் பெற்றுப் பயன்பெற வேண்டும். பெண்கள் தங்கள் மாதவிலக்குச் சமயங்களில் பூஜை அறைப் பக்கமே செல்லக் கூடாது, தெய்வத்தைப் பற்றி எண்ணக் கூடாது என்ற தவறான வழக்கு காலப்போக்கில் ஏற்படுத்தப்பட்டு விட்டது. அக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலகுரு இருந்தமையால் அவரை நாடிப் பெரியோர்கள் விளக்கம் கேட்டுத் தெளிவு பெற்றனர். அந்த அளவிற்குக் குலகுருவும் குருவருள் பெற்றுப் பொலிந்தமையால் தெய்வீக அருள் நிரம்பப் பெற்றவராய் அனைத்திற்கும் விளக்கம் தந்து பரிபூரண நிறைகுடமாய் விளங்கினார். கலியுக  மக்களின் வாழ்க்கையில் ஆசாரம், அனுஷ்டானம், மதச் சடங்குகள், காம நெறி முறைகள், குழந்தைச் செல்வம், பூஜை முறைகள் போன்ற வாழ்க்கையின் பல அம்சங்களுக்குத் தக்க தெளிவு கிட்டாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
ஏட்டறிவோடு அனுபவமும் தேவை
வெறும் சாஸ்திர அறிவு பெற்றோர், தக்க அனுபவம் இல்லாமையால், தங்கள் அறிவு பூர்வமான விளக்கத்தால், ஏட்டறிவால் மக்களை மேலும் குழப்புகின்றனர். காரணம், குருவுடன் வாழ்ந்து, தக்க குருகுலம் பயின்று பல சோதனைகளுக்கு ஆட்பட்டு அனுபவப் படிப்பை அவர்கள் பெறாததேயாகும்! வெறும் சாஸ்திர ஞானத்தால் (arm chair elevation)  எவ்விதப் பயனுமில்லை. ஆனால் அதனுடன் குருகுல அனுபவப் படிப்பும் கூடுமாயின் அதுவே தெளிந்த ஞானத்தை விரைவில் குருவருளால் தரவல்லதாகும்.
சற்குருவைக் கண்டறிவீர்
அரும்பெரும் மஹான்களின் சரிதங்களை இறைவன் ஏன் படைத்தான்? ஒவ்வொரு மஹானின் பின்னணியிலும் ஒரு சற்குரு அமர்ந்து இலைமறைகாயாய் அவருக்கு ஞானம் புகட்டி, ஞானியாய், யோகியாய், மஹானாய் உருப்பெறச் செய்கிறார். அத்தகைய சற்குருமார்கள் கலியுகத்தில் இன்றும் இல்லாமலில்லை!
ஆங்காங்கே அவர்கள் சத்சங்கங்களை உருவாக்கி ஏழை, எளிய மக்களுக்குச் சேவை புரிந்து, இறைப்பணி ஆற்றி வருகின்றனர். இன்றைக்கும் சென்னை மாநகரிலேயே குறைந்தது இருபதுக்கும் மேற்பட்ட சற்குருமார்கள் ஆரவாரமின்றி அருட்பனி ஆற்றி வருவதாக நம் குருமங்கள கந்தர்வா அறிவிக்கின்றார். கோவணத்துடன், வேஷ்டி, சட்டையுடன், பாண்ட், டை, தொப்பியுடன், லுங்கியுடன் ஏதேதோ உருவெடுத்து அமைதியாக இறைப்பணி ஆற்றி வருகின்ற அவர்களைப் பார்த்தால் முதலில் நம்பிக்கை வராது. ஏனெனில் சற்குரு என்றால் ஜடாமுடி, காவி, கையில் கமண்டலம், ருத்ராட்சம் – என்று நாமே ஓர் உருவை எதிர்நோக்கினால் அது கிட்டுமா? சற்குரு எந்நிலையிலும் நம்மை அரவணைக்கலாம்! அவர் ஏன் நம்ப முடியாத தோற்றத்தில் வாழ வேண்டும்! புராணத்தில் வருவது போல ஜடாமுடி, கமண்டல சகிதத்தில் எழுந்தருளக் கூடாதா? நல்ல கேள்வியே!
சற்குருவின் ரூபம்
அக்காலத்தில் மஹரிஷி, யோகி, ஞானி என்றால் ஒரு அபரிமிதமான மதிப்பு, மரியாதை இருந்தது. காலப்போக்கில் அதுவும் அடுத்தவரை ஏமாற்றிப் பிழைக்கும் கலியுகத்தில் எவரையும் நம்புவதா என்ற அச்சத்தில் தான் தினசரி வாழ்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில் மக்கள் யாரை நம்புவர்? ஜடாமுடியுடமோ, காவி உடையிலோ, நடமாடினால் போதுமா?
நம்பிக்கையே குருவைக் காட்டும்
சற்குரு நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அதுவே நம்பிக்கை, முழு நம்பிக்கை (absolute faith). நம்பினோர் கைவிடப் படார். இவரை முழுவதும் நம்பினால் இவர் நிச்சயம் நம்மைக் கரையேற்றுவார் என்ற நம்பிக்கை! வாழ்க்கையில் என்ன கஷ்ட, நஷ்டங்கள் வந்தாலும், நாம் இவரைக் கைவிடலாகாது என்ற பரிபூரண நம்பிக்கை. “இவரை அண்டி வந்துள்ளோம், அப்படியும் துன்பங்கள் தொடர்கின்றனவே. இன்னும் சொல்லப் போனால் இவரிடம் வந்த பின்னர் வாழ்க்கைப் பிரச்சனைகள் அதிகரித்தாற் போல் தோன்றுகின்றதே! எதுவாயினும் சரி, இவரை நம்பிவிட்டோம், வருவதை ஏற்போம்! இன்பமோ, துன்பமோ எல்லாம் இவர் தருவதே!”
கடவுள், கடவுள் என்று வேண்டியும் இன்ப துன்பங்கள் மாறி மாறியே வந்துள்ளன. கடவுளிடமோ பேச முடியவில்லை. இறை ரூபத்தில் வந்திருக்கும் இந்த சற்குருவை நம்புவோம்! இங்கும் இன்ப, துன்பங்கள் மாறி மாறியே வருகின்றன. ஆனால் இவர் ஒவ்வொரு இன்ப, துன்பத்திற்கான காரண காரியங்களை விளக்குகிறார். கடவுளே இவர் ரூபத்தில் விளக்கந் தருகிறார்! இவர் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது என்ன? என்னை நம்பு! அதுவே நம்பிக்கை! இவர் கரையேற்றுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை! யாரென்ன சொன்னாலும், எதுவரினும் இவர்மேல் கொள்வோம் நம்பிக்கை! சற்குருவிடம் வந்த பின்னரும் துன்பங்கள் தொடரக் காரணம்! காரணம் அவரல்லவே! துன்பந்தீர்க்கும் தூயவன் குரு என்று சொல்கிறார்களே! அப்படியானால் துன்பம் உடனே தீரவேண்டும் என்று நாமல்லவோ எதிர்பார்க்கிறோம். பணம், பதவி, ஆரோக்கியம், நல்ல குடும்பம் என்று இந்த நான்கைச் சுற்றித்தானே இன்ப துன்பங்கள் அமைகின்றன. சற்குருவிடம் வந்தால் அனைத்துத் துயர்களும் தீரவேண்டுமென்றால் இந்த சற்குருவைச் சுற்றி லட்சக்கணக்கான மக்கள் குழுமியிப்பார்களே! குருவென்ன பணம் காய்க்கும் மரமா? நோய் தீர்க்கும் தன்வந்திரியா? எல்லாமும் அவரே, நம்பிக்கை பரிபூரணமாக இருந்தால்!
 சாதாரண மனிதனும் ஆன்மீக சாதகனும்
சாதாரணமானோரும் பல பிரச்சனைகளால் அவதியுறுகின்றனர். குருவிடம் வந்ததற்காக நாம் துன்பங்களையே சந்திக்கக் கூடாது என்று எண்ணினால் அது நியாயமாகுமா? அது சரி, குருவிடம் இப்போது தானே வந்தோம், நேற்றுவரை நாம் செய்த பாவங்களுக்கு/ கர்ம வினைகளுக்கு யார் ஜவாப்தாரி? அப்படியானால் அதர்மங்களை, அராஜகக் காரியங்களைப் புரிந்து விட்டு குருவிடம் வந்தால் உடனே விமோசனம் கிட்டினால் உலக வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போய்விடுமல்லவா? எனவே அவரவர் கர்மங்களை அவரவர் அனுபவிக்க வேண்டும் என்பதே சரியான இறை நியதி அல்லவா?
குருவின் மேற்பார்வையில் நம் கர்ம வாழ்க்கை
இதையல்லவோ குரு நம்மிடம் எதிர்பார்க்கிறார்? அனைவருக்கும் குரு உண்டே, அப்படியானால் மற்றவர்கள் தத்தம் கர்மாவை அனுபவிக்கும் போது அவரவர் சற்குரு அருகிலிருப்பதில்லையா? நிச்சயமாக இருக்கிறார்கள், ஆனால் அதை அவர்கள் உணர்வதில்லை, அவர்கள் குருவைத் தேடி, நாடி அடையாததால் அவர்கள் உணரவில்லை. ஆனால் இறையருளால் நாம் குருவை அடைந்துவிட்டோம், சாட்சி பூதமாக அருகிலிருந்து நம் வினைகளை நாமே அனுபவமிக்க உறுதுணையாக நிற்கிறார். நாம் அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டிய கர்ம வினைகளை அறிந்தவராதலின் அவ்வினைகளைத் தாங்குவதற்குரித்தான புண்ணிய காரியங்களையும், இதர நல்சக்திகளையும் (positive force)
1. கோயில் உழவாரத் திருப்பணி
2. ஏழை எளியோருக்குத் தான, தர்மங்கள் மருத்துவ உதவி
3. நாம சங்கீர்த்தனம், காயத்ரீ மந்திரம் போன்ற ஜபங்கள்
4. நல்ல நேரங்களைக் கணித்துக் காரியங்களை நிறைவேற்றி எதிர்வினைகளைக் குறைத்தல்.
5. பல்வேறு தியான, பிராணயாம, யோக முறைகள்
போன்றவற்றை நன்கு நிறைவேற்றி நமக்கு எதனையும் ஏற்கும் நல்வள மன ஆற்றலை (positive thinking) அளிக்கிறார். இது பெறற்கரிய தெய்வீக ஆற்றலல்லவா? (divine force) இதை அருள்பவர் சற்குரு தானே! எனவே வாழ்க்கைக்கு மட்டுமன்றி எப்பிறவிக்கும் உறுதுணையாக இருப்பவர் சற்குருவே! சற்குருவே நடமாடும் தெய்வம், அவரை நாடுங்கள்! சாந்தமான வாழ்வைப் பெறுங்கள்! இறைவன் சற்குரு ரூபத்தில் தான் காட்சி அளிக்கிறான்.

பெண்களின் தீட்டு

காலப்போக்கில் மறைந்த பல ஆன்மீக இரகசியங்களையும், ஸ்ரீஆயுர்தேவி, ஸ்ரீவிஷ்ணுபதி, அட்சய திரிதியை போன்ற வழிபாடு, பூஜை முறைகளையும், ராசலீலா, பெண்களுக்கான காயத்ரீ வழிபாடு, மாதவிலக்கின் வழிபாட்டு முறை போன்ற அரிய ஆன்மீக விளக்கங்களைம் நடைமுறைகளையும் மீண்டும் எடுத்துரைக்கும் தெய்வீகப் பேரருள் பெற்றவர்களே சற்குருமார்களாகவும், சித்த புருஷர்களாகவும், மஹான்களாகவும் மலர்ந்து புனிதப் பேரொளி வழங்கும் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சித்தர் போன்ற இறையருட் பெரியோர்களாவர்.
இவ்வகையில் சென்ற இதழில், பெண்களுக்கான மாத விலக்கின் போது வழிபட வேண்டிய மூன்று தேவி அம்சங்களைப் பற்றி ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களிலிருந்து நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் எடுத்தருளியவற்றை அளித்திருந்தோம். இதைப் பற்றிய மேலும் பல விளக்கங்களை ஈண்டு காண்போம்.
குழந்தை ஜனனம், பெண்கள் பூப்படைதல், மாத விலக்கு, மரணத் தீட்டு ஆகியவற்றைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் இல்லாமையால் பல தவறான கொள்கைகளும், வழக்கங்களும் நடைமுறையில் ஊறி இத்தீட்டு நாட்களில் தெய்வ வழிபாட்டை (அச்சத்தால்) ஒதுக்குவது என்ற அவலநிலை ஏற்பட்டு விட்டது. வேளை தோறும் படியளிக்கின்ற இறைவனை நாட்கணக்காக வழிபடாமல் ஒதுக்க வேண்டும் என்றா நம் ஆன்றோர்கள் விரும்பினார்கள்! சாஸ்திரங்களை அரைகுறையாகப் பயின்றோர் ஏதேதோ தவறான வழக்குகளைக் கூறிடவே அதை மக்கள் ஏற்க வேண்டிய சூழ்நிலை! காஞ்சி ஸ்ரீபரமாச்சார்யாள், ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகள் போன்ற நடமாடும் தெய்வங்களான மஹான்கள், மரணத் தீட்டுகளில் மக்கள் பித்ருதேவர்களையும், பித்ருக்களின் நாயகராம் ஸ்ரீமஹா விஷ்ணுவையும், ஏழை, எளியோர்க்கான தான, தர்மங்கள் மூலம் பத்து நாட்கள் பிரத்யேக விசேஷமான பூஜைகளால் வழிபடவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனரே தவிர இறைவழிபாட்டை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்று கூறினாரில்லை!
மௌன விரத பூஜை
மாத விலக்கின் போது பெண்கள் மௌன விரதம் மேற்கொள்வது மிகவும் உத்தமமானதாகும். ஒரு நாள் மௌனவிரதம் மேற்கொள்வதால் ஒரு மண்டலத்திற்கான (45 நாட்கள்) ஆன்மீக சக்தி உடலில் சேர்கிறது. இந்த மௌனவிரதத்தோடு மூன்று நாட்களிலும்
1. ஸ்ரீகோதாயி குல்கரணி தேவி
2. ஸ்ரீகுலாவி மலகரணி தேவி
3. ஸ்ரீபந்து பக்ஷண கரணி தேவி
என்ற மூன்று அம்பிகையரையும் (மானஸீக) பூஜை செய்வதால் மௌனத்தின் ஆன்மீக சக்தி பன்மடங்கு பெருகிக் குடும்ப பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான மாபெரும் புண்ய சக்தியை அளிக்கிறது. சென்ற இதழில், மாதவிலக்கிற்குரித்தான மூன்று தினங்களிலும் மூன்று தேவியரைப் பூஜிக்கும் எளிய முறையை விளக்கியிருந்தோம். பூஜை என்றால் ஏதோ கடினமானது, நம்மால் இயலாதது என்று எண்ண வேண்டாம். அந்தந்த நாளில் அந்தந்த தேவியை நாமஸ்மரணம் (பெயரை ஜபிப்பது) செய்வதே சிறந்த பூஜையாகும். இதனைச் சற்று விரிவாகவும் செய்யலாம். நேரம் கிட்டினால் இவ்விரிவான பூஜையையும், பிற சமயங்களில் ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ள எளிய முறை பூஜையையும் மேற்கொள்ளலாம்.
விரிவான பூஜை முறை
முதல் நாள் : ஸ்ரீகோதாயி குல்கரணி தேவி
மாத விலக்கின் முதல் நாளன்று ஸ்ரீகோதாயி குல்கரணி தேவியைத் தொழுது
1. நாதரூபாய நமசிவாயா
2.கங்கண ரூபாய கணபதி
3.வாக்ய தேவாய ஹரி ஓம்
என்ற துதிகளால் ஸ்ரீகோதாயி குல்கரணி தேவியைப் போற்ற வேண்டும். முதல் நாள் முழுவதும் இம்மூன்று துதிகளால் மானசீகமாகத் துதித்து மனதை நிரப்பி உள்ளத்தை ஸ்ரீதேவியின்பால் செலுத்த வேண்டும். இதனால் மனம் ஒரு சாத்வீகத்தைப் பெறும். இதனை ஏட்டில் எழுதி விவரிக்க முடியாது. இதன் அனுபவத்தை உய்த்துணரவே முடியும். இம்மந்திரங்களை வாயால் உச்சரிக்காது மௌனமாக மனதினுள் தியானிக்க வேண்டும்.
இரண்டாம் நாள்: ஸ்ரீகுலாவி மலகரணி தேவி
மாத விலக்கின் இரண்டாம் நாளன்று ஸ்ரீகோதாயி குல்கரணி தேவியைத் தொழுது
1. மங்கள சிவாய மனோஆனந்த சரவணபவ
2. குங்கும தேவீ குலாம்பா ஸ்ரீஓம்
3. பிக்ஷாம்பா பகவதி ஓம்
மாத விலக்கின் இரண்டாம் நாளன்று ஸ்ரீகோதாயி குல்கரணி தேவியைத் தொழவேண்டும். இரண்டாம் நாள் முழுவதும் இம்மூன்று துதிகளால் மானசீகமாகத் துதித்து மனதை வியாபித்து ஸ்ரீதேவியின்பால் உள்ளதைச் செலுத்த வேண்டும் . முதல் நாள் பூஜையால் சாத்வீகத்தைப் பெற்ற மனம், இரண்டாம் நாள் பூஜையால் அமைதி தவழும் சாந்தத்தைப் பெறுகிறது. சாத்வீகத்தால் எந்தப் பிரச்னையையும், அதிர்ச்சியைடையாமல் எதிர் நோக்கும் ஆன்மீக சக்தியும் பேரமைதியுடன் அதன் விளைவுகளைச் சந்திக்கும் பேராற்றலும் கிட்டுகிறது. இவைகளே வாழ்க்கையில் எதிர்படும் தீயசக்திகளை எதிர்த்துப் போராடும் மன ஆற்றல், வைராக்கியம், துணிவைத் தருகிறது. இதன் பின்னணியில் ஸ்ரீஅம்பிகையின் அருட்கடாட்சம் கவசமாக நிற்பதால் வாழ்க்கையில் விரக்தி (frustrations) ஏற்படாது. இம்மூன்று மந்திரங்களையும் மனதினுள் மௌனமாக தியானிக்க வேண்டும்.
மூன்றாம் நாள் பூஜை : ஸ்ரீபந்து பக்ஷண கரணி தேவி
மாதவிலக்கின் மூன்றாம் நாள் ஸ்ரீபந்து பக்ஷண கரணி தேவியைத் தொழுது
1. தைல தரதரணீ மாதா மங்களாம்பா ஹரி ஓம்
2. பாக்ய புத்திர பவதாரிணீ ஸ்ரீ ஓம்
3. பொன்னி சுகதாம்பா பவானி ஹரி :
என்ற மூன்று துதிகளால் மௌனமாக மனதினுள் ஜபித்து ஸ்ரீதேவியைப் பூஜிக்க வேண்டும். மூன்றாம் நாள் முழுவதும் இம்மூன்று துதிகளால் ஸ்ரீதேவியைப் போற்றி அவள்பால் மனதை ஈர்க்க வேண்டும். இந்த மூன்றாம் நாள் பூஜையால் சாத்வீகம், அமைதி இவற்றின் சாரமான அன்பு ஏற்படுகிறது. இந்த புனிதமான அன்பு, நட்பாலோ, உதவியாலோ, பாசத்தாலோ வருவதன்று. சாக்த (தேவி) பூஜையில் பொங்கிப் பெருகும் அன்பு, இதனால் எவர்மீதும் துவேஷம், பகை, வெறுப்புணர்ச்சி ஏற்படாது. அனைவரையும் அரவணைக்கும் சால்பு ஏற்படும். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள்!
இந்த ஒன்பது நாமாவளிகளை மௌனமாக, வாய்விட்டு உச்சரிக்காது, மனதினுள் தியானித்து மூன்று அம்பிகையினையரையும் துதிக்க வேண்டும். வழக்கத்திற்கேற்ப நான்காம், ஐந்தாம் நாளில் சர்க்கரைப் பொங்கலிட்டு அருகிலுள்ள கோயிலில் வறியவர்க்கு விநியோகம் செய்தலே ஸ்ரீகரணி அம்பிகையினரின் பூஜையைச் சம்பூர்ணமடையச் செய்யும். இந்த விரிவான பூஜை முறையில் மௌன தியானமே சிறப்பாக விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்பது நாமாவளிகளும் மனதினுள் மட்டுமே தியானிக்கப் படவேண்டும்.
பூஜா பலன்கள்
இத்தேவிகள் பூஜை பலன்கள் யாதெனில்
1. கணவரின் ஆயுள் விருத்தியாகி சுமங்கலித்துவம் மேன்மை பெறும்.
2. பெற்றோர் , மாமனார், மாமியார், நாத்தனார், மருமகள் இவர்களுக்கு / இவர்களால் விளையும் சச்சரவுகள்/துன்பங்கள் மறையும்.
3. சந்ததிகள் ஆல்போல் தழைக்கும்.
4. கணவன் – மனைவி பரஸ்பர அன்பு பெருகும். எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் நிவர்த்தியாகும்.
எனவே அனைத்துப் பெண்களும் ஸ்ரீகரணிதேவிகளின் பூஜையைக் கடைபிடித்து அறியாதோர்க்கும் அறிவித்து இதன் பலன் யாவரையும் சென்றடையுமாறு நற்பணி ஆற்ற வேண்டும்.
ஸ்ரீதுவார சக்தி அம்பிகை
பெண் குழந்தைகளைப் பெற்றோர் ஸ்ரீதுவார சக்தி என்னும் அம்பிகையை வணங்க வேண்டும். ஸ்ரீதுவார சக்தி அம்பிகை மிகவும் அரிதாக சில கோயில்களிலேயே எழுந்தருளியுள்ளாள். ஸ்ரீகோதாயி குல்கரணி, ஸ்ரீகுலாவி மலகரணி, ஸ்ரீபந்து பக்ஷண கரணி ஆகிய மூன்று அம்பிகையரின் திரண்ட ஆதிபராசக்தி அம்சமே ஸ்ரீதுவார சக்தி அம்பாள். சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் சிவன் கோயிலில் ஸ்ரீதுவார சக்திக்குத் தனி சந்நதி உள்ளது. கதவு துவாரம் மூலம் தரிசனம் பெற வேண்டிய நாயகி. மிகவும் சக்தி வாய்ந்த தேவி. இச்சந்நிதி வருடத்தின் சில நாட்களில் தான் திறக்கப்படும். ஏனைய நாட்களில் கதவு துவாரம் மூலம் அம்பிகையை தரிசிக்க வேண்டும்.
தன் பெண் குழந்தை தக்க பருவத்தில் பூப்படைந்து நல்ல முறையில் திருமணம் நடந்து சிறப்புற வாழவேண்டும் என்பதே ஒவ்வொரு தாயின் உள்ளக் கிடக்கையாம். பெண்கள் தக்க பருவத்தில் பூப்படைய ஸ்ரீதுவார சக்தி அருள்புரிகின்றாள். அதேபோல, பூப்படைந்த கன்னிப் பெண்களையும் இத்திருத்தலத்திற்கு அழைத்து வந்து, ஸ்ரீதுவார சக்தியை வணங்கி ஏழைகளுக்கு
1. தம் கையால் கோர்த்துக் கட்டிய பூச்சரங்களைத் தானமாக (மல்லிகை, ரோஜா, போன்றவை) அளித்தல், (கனகாம்பரம் போன்ற  மணமற்ற பூக்களைத் தவிர்க்கவும்)
2. ஏழைப் பெண் குழந்தைகளுக்குப் புதிய பட்டுப்பாவாடை, தாவணிகள், ரவிக்கை அளித்தல்
3. ரிப்பன், ஹேர்பின், சவுரி, கால் விரல் மெட்டிகள், வளையல்கள் போன்றவை அளித்தல்.
மேற்கண்ட தானதர்மங்களுடன் ஸ்ரீதுவாரசக்தியை வணங்க இத்தகைய தான தர்மங்கள் கன்னிப் பெண்களுக்குக் கவசமாய் நின்று வாழ்நாள் முழுவதும் காப்பாற்றும். கல்லூரி, அலுவலகம் செல்லும் தம் பெண்களைப் பற்றித் தினந்தோறும் கவலைப்படும் தாய்மார்கள் ஆயிரமாயிரம். இவர்கள் திருமுல்லைவாயில் ஸ்ரீதுவாரசக்தியை மேற்கண்ட தானங்களுடன் வழிபட இதுவே கவச சக்தியாக அவர்தம் பெண்களை எந்நேரமும் காப்பாற்றும். விரைவில் திருமணம் கைகூடும்.
நாளும் நிறமும்
ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ஏழு நாட்களுக்கும் உரித்தான சிறப்பான நிறங்கள் உண்டு. இவை ஸ்ரீஅகத்தியரின் “கிரஹமாலா”“ கிரந்த நாடிகளில் விவரிக்கப்பட்டுள்ளன. இவை ஆண், பெண் இரண்டு பாலாருக்கும் பொதுவான நிறங்களாகும். INTERVIEW, தேர்வுகள், சாரணி, அலுவலகம், பள்ளி, கல்லூரி போன்றவற்றிற்குச் செல்வோர் அந்தந்த நாளுக்குரித்தான வண்ணத்தில் ஆடைகள் தரித்தால்
1. எடுத்த (நற்) காரியம் கைகூடும்.
2. தேர்வில் / இண்டர்வ்யூவில் வெற்றி பெறுவர்
3. மேலதிகாரிகளின் / பெரியோர்களின் நன்மதிப்பைப் பெறுவர்
ஞாயிறு – ஆரஞசு நிறம்
திங்கள் – வெள்ளை கலந்த சிகப்பு நிறம்
செவ்வாய் – சிகப்பு நிறம்
புதன் – பச்சை நிறம்
வியாழன் – எலுமிச்சை மஞ்சள் நிறம்
வெள்ளி – நீலங்கலந்த வெள்ளை நிறம்
சனி – கருப்பு நிறம், (நீலம்)
பெண் பார்த்தல், நிச்சயதார்த்தம் போன்றவற்றில் மேற்கண்ட நிறங்களில் உடைகள், ரிப்பன் அணிந்தால் சுபகாரியங்கள் நன்கு நிறைவேறும்., ஆனால் ரேஸ், லாட்டரி போன்ற குறுக்கு  வழிகளுக்கு இதனைப் பயன்படுத்தினால் சாபங்கள் உண்டாகும்.

விஷ்ணுபதி

விஷ்ணுபதிப் புண்யகாலம் பெறற்கரிய புண்யகாலம். இந்த விஷ்ணுபதி என்னும் அற்புதப் பெருநிலையை தெய்வாவதார மூர்த்திகளே அடைந்து மனித குலத்திற்கு நல்வழி காட்டியுள்ளனர். தான தர்மங்கள், ஹோமங்கள், தர்பணாதிகள், பூஜைகள், நாம சங்கீர்த்தனம், ஜபம் தியானத்துடன் விஷ்ணுபதிப் புண்யகாலத்தைக் கொண்டாடுவது உன்னத நிலைகளைத் தரும். தினசரி பூஜைகளைச் சரிவரச் செய்யாது சோம்பேறியாய் வாழும் மனிதன், விஷ்ணுபதி போன்ற புண்யகால பூஜைகளையாவது தவறாமல் கடைப்பிடித்தால் தான் ஓரளவு முன்னேற்றம் பெறலாம்.
ஒரு விஷ்ணுபதிப் புண்ய கால பூஜையானது பலவருட ஏகாதசிப் புண்ய காலங்களின் திரண்ட ஆன்மீக சக்தியைப் பெற்றுத் தருகிறது. அதுவும் தனித்துச் செய்ய இயலா தான தர்ம, பூஜை முறைகளைப் பலர் ஒன்று கூடிச் சத்சங்கமாக அமைத்து கூட்டாகச் செய்கையில் அபரிமிதமான பலன் கிட்டும். அதுவும் சற்குருவின் ஆணையின் கீழ் நடக்கும் நற்பணிகளின் திரண்ட திருவருளை எழுத்தில் வடிக்க இயலாது! எண்ணத்தில் கூட்ட இயலாது! சொற்பொருள் கடந்த இறை சுகானுபவத்தைத் தரவல்லது. இந்த அரிய தெய்வீக வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! உற்றார், சுற்றார், நண்பர்கள், கற்றோர், கல்லாதோர் அனைவருக்கும் இதனை அறிவித்து இப்புண்ய காலத்தினால் யாவரும் பலனடையும்படி செவீர்களாக!
............ காஞ்சீபுரம் அருகே ஒரு கிராமம்.
விஷ்ணு பக்தராகப் பெருவாழ்வு வாழ்ந்தனர் ஒரு தம்பதியினர். இலட்சுமி கடாட்சம் பொங்கி வழிந்தது. ஆனாலும் அவர்கள் செல்வத்தைக் கட்டிக் குவித்து போஷித்து மகிழவில்லை! காரணம் இல்லையென்று வந்தோருக்கு ஈன்ற செல்வத்தை ஈயும் பெருங்குணம் அவர்தம் நிரந்தர மகிழ்ச்சியாக இருந்தது. தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கணவன் மனைவி இருவரும் உடல், மனத்தூய்மையுடன் ஸ்ரீவிஷ்ணு பூஜை செய்து பணியாட்களுடன் கூடிச் சேர்ந்து ஏழைகளுக்கு அன்னமிட சமையல் பணியைத் துவங்குவர். காலை 6 மணிக்கு அன்னதானத்திற்காக அவர் இல்லக் கதவுகள் திறந்தால் இரவு அவற்றை மூடுவதற்கு மணி பதினொன்றாகும். இவ்வாறு அன்னதானப் பிரபுவாய் மலர்ந்து அற்புத இறைப்பணியாற்றினர்.
சரணாகதி
ஸ்ரீவிஷ்ணுபக்தராக மிளிர்ந்த அவர் ஏழை, எளிய மக்களுக்கு அற்புத சேவைகள் புரிந்து மக்கள் சேவையே மகேசன் சேவையென ஸ்ரீவிஷ்ணுவின் திருப்பாதங்களைச் சேவித்து உன்னத வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இறை அடியார் எவர் வரினும் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் புரிந்து வந்தார். இவ்வாறு நாராயண சேவையில் திளைத்து மகிழ்ந்த அவர் உடையவராம் ஸ்ரீராமானுஜரின் தாஸானு தாஸனாக பாவித்து, அவரிடம் சரணடைந்தார். ஸ்ரீராமானுஜரின் அரிய மக்கள் சேவைக்குத் தன் செல்வமனைத்தையும் ஈந்து அன்னதானம், நீர்ப்பந்தல்கள், ஆடை தானங்கள், அன்னதான சத்திரங்கள், தங்குமிடங்கள், வழியெங்கும் சுமைதாங்கிகள் போன்றவற்றை நிறுவி ஸ்ரீராமானுஜரின் திருக்கூடத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். காஞ்சியில் அவருடைய இல்லத்தில் நாள் முழுதும் அன்னதானம் நடைபெற்றதல்லவா? அது தொடர்ந்து நடக்க ஆவன நிதிகளை ஏற்படுத்தினார் அந்த விஷ்ணுபக்தர்.
காஞ்சி மணி! ஸ்ரீரங்கத்தில் ஒலி!
பல வெள்ளி மணிகள் பதித்த அத்திருவீட்டின் கதவுகள், அன்னம் யாசிப்பார் எவரும் இல்லை என்று உறுதியானவுடன் தான் ஒவ்வொரு நாளின் நள்ளிரவிலும் மூடப்பெறும். அப்போது கதவில் எழும் வெள்ளி மணி ஒலி சப்தம் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதனின் கோயில் வளாகத்தில் ஒலிப்பதைப் பலர் கேட்டுள்ளனர். தினமும் இரவில் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் மணி ஒலிக்கும் சப்தம் எங்கிருந்து வருகிறது? எவருக்கும் தெரியவில்லை!
ஸ்ரீராமானுஜரும் தம் ஸ்ரீரங்க விஜயத்தில், தினமும் நள்ளிரவில் இவ்வொலியை கேட்டுப் பெருமகிழ்ச்சி கொண்டார். அனைத்தும் அறிந்த ஞானியல்லவா? அதன் காரணத்தை அறிந்தாலும் இதைப் பற்றிய விளக்கம் கேட்டுத் தன்னை நாடி வந்த பக்தர்களிடம், “தக்க தருணத்தில் ஸ்ரீரங்கநாதனே இப்புதிரை விடுவிப்பார், அதுவரை பொறுத்திருங்கள்” என்றருளினார்.
திருமகளின் திருஉள ஆசை
ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி புரியும் ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீரங்கநாதனிடம் வெள்ளிமணி ஒலி பற்றி விளக்கம் பெற்று அந்த விஷ்ணுபக்தரை ஸ்ரீரங்கத்திற்கு அழைக்குமாறு ஸ்ரீரங்கனை வேண்டினார். ஸ்ரீஅரங்கநாதனும் “பொறுப்பாய், ஸ்ரீதேவி! அவன் மூலம் யாம் பல திருவிளையாடல்களை இங்கு புனைய உள்ளோம்,“ என்றார். இவ்வாறு விஷ்ணுபக்தர்கள் தரிசிக்க தெய்வாவதார மூர்த்திகளே விழைகின்றனர் என்றால் எத்தகைய உன்னதமான பக்தி, விஷ்ணுபதி என்பது!  ஸ்ரீராமானுஜரின் திருச்சேவைக் கூட்டத்துடன் திருவரங்கம் வந்து சேர்ந்தனர் அவ்விஷ்ணு பக்தரும் அவர்தம் துணைவியாரும். விஷ்ணு சேவைக்குத் தம் வானளாவிய செல்வத்தை அர்ப்பணித்த அவர்கள் ஸ்ரீரங்கத்தில் வறியவராய் ஸ்ரீவிஷ்ணுபக்தியுடன் வாழ்க்கை  நடத்தினர்.
காஞ்சியம்பதியில் பலருக்குப் பல்லாண்டுகள் அன்னமளித்த அவ்விரு சரீரங்களும் திருவரங்கத்தில் பல நாட்கள் உணவின்றி வாடின. ஸ்ரீராமனுஜரோ அவ்விஷ்ணு பக்த தம்பதியினரைத் திருவரங்கத் தலத்தில் சேர்த்துவிட்டு அவர்களின் சீலமிக்க குடும்ப அந்தஸ்த்தை எவருக்கும் (அவர்கள் விருப்பப்படி) அறிவிக்கவில்லை. மேலும் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் தெய்வீகப் பெருநிலையை அறிந்த ஞானியாதலின் ஸ்ரீராமானுஜர் அமைதியாகத் தம் க்ஷேத்ராடனத்தைத் தொடர்ந்தார்!
............ அன்று சிரவணத் திருநாள். விஷ்ணுவிற்கு உகந்த நட்சத்திரம். வறுமையின் காரணமாக அந்த விஷ்ணு பக்தருக்கு எந்நாளும் நித்ய ஏகாதசியே! அவர்தம் பத்தினியார், அன்று சிராவண விரதம் முடித்தனள். தன் “கணவருக்கும் சிறிதளவாவது உணவு தேவையாயிற்றே!”– என்றும் கலங்காத அப்பெண்மணியின் கண்கள் கலங்கின!
“ஓ! ஸ்ரீரங்கா! உன்னிடம் நான் என்ன கேட்க முடியும்! என் கணவரின் ஆரோக்கியத்திற்காகத் தானே வேண்டுகிறேன் அவருக்கு இந்த ஒருவேளை உணவிற்காகவது வழி செய்வாயா? ஸ்ரீரங்கா! ஸ்ரீரங்கா.! “ அப்பெண்மணி மனதில் சிறிதே எண்ண, கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. பசி மயக்கத்திலிருந்த அந்த விஷ்ணு பக்தர் மெதுவாக நடந்து சென்று கதவுகளைத் திறக்க...... அங்கே...
தேஜோமயமாய்ப் பிரகாசித்த ஒர் அடியார், கையில் சர்க்கரைப் பொங்கல் நிறைந்த தட்டுடன் நின்று கொண்டிருந்தார். பெருமாளின் பிரசாதத்தை நாத்தழுதழுக்கப் பெற்றுக் கொண்ட அவர் சிறிது பிரசாதத்தை விண்டு, ஸ்ரீரங்கன் நாமம் ஓதி உண்டு, தட்டைத் தன் மனைவியிடம்  நீட்டினார், அப்போது தான் அவள் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்டார். “ஓஹோ! ஸ்ரீரங்கநாதனிடம் எனக்கு சாப்பாடு  கேட்டு வேண்டினாயோ! அதுதான் பிரசாதமாய் உடனே அனுப்பி விட்டான்! என்ன மாயை மறைத்ததோ! கேட்க வேண்டியது ஏதேதோ இருக்கே! சரி சரி! ஸ்ரீரங்கன் என்ன விரும்புகிறாரோ அது தானே நடக்கும்.!”
“நீ கொஞ்சம் பிரசாதம் சாப்பிட்டு விட்டுத் தட்டைக் கொடு... வீதியில் நிறைய அடியார்கள் பசியில் படுத்திருக்கிறார்கள்..” சிறிது பிரசாதம் உண்ட உற்சாகத்தில் பிரசாதத் தட்டுடன் வெளிவந்த அவர் எஞ்சிய பிரசாதத்தை அனைவருக்கும் விநியோகித்தார். என்ன ஆச்சரியம்...எடுக்க எடுக்கப் பிரசாதம் குறையவில்லை! அந்த இரவில் நூற்றுக்கணக்கானோருக்குப் பிரசாதம் அளித்துக் களைப்படைந்துத் தம் சிறிய வீட்டின் திண்ணையில் அமர்ந்தார்.
வெள்ளிமணி ஒலிக்கும் சப்தம் கேட்டது! தட்டு மறைந்து விட்டது. ஆம்! ஸ்ரீரங்கனே நேரில் வந்து பிரசாதம் அளித்தனன்! ஸ்ரீரங்கனும் தன் திருவிளையாடலைத் துவங்கி விட்டான். ஸ்ரீரங்கனின் சர்க்கரைப் பொங்கல் பிரசாதம் உண்டதன் தவப்பயனாய் அந்த விஷ்ணு பக்தை கருத்தரித்தனள். இறையருளால் அவர்கட்கு இரண்டு மகவுகள் பிறந்தனர். விஷ்ணு பக்தர் தம்பதியினர் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.. திருவரங்கத்தில் ஸ்ரீவிஷ்ணு பக்தியில் ஆழ்ந்து அவ்விரு குழந்தைகளும் வளர்ந்தன. சில ஆண்டுகளுக்குப் பின்னர்...
ஒரு நாள்....
திருவரங்கனுக்கு விடியற்காலை பூஜை....... கருவறைக் கதவுகளைத் திறக்க முடியவில்லை! நூற்றுக்கணக்கான சாவிகளைக் கொணர்ந்தும் கருவறையைத் திறக்க இயலவில்லை. ஸ்ரீரங்கன் காலைப் பிரசாதம் ஏற்கவில்லை! செய்தி நாலாவட்டமும் பரவியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமினர் ஸ்ரீரங்கன் பிரசாதம் ஏற்றாலே தாமும் பிரசாதம் ஏற்போம் என்று பலர் விரதமிருக்கத் தொடங்கினார்.
ஏனையோர் “ஸ்ரீரங்கா! தாள் திறவாய்” என்று மனமுருகப் பிரார்த்தித்தனர். அடியார்கள் உள்ளம் உருகினால் அரங்கனுக்குத் தாங்குமா? “எம் பிள்ளைகள் கதவைத் திறக்கட்டும், யாம் பிரசாதம் ஏற்போம்!”“ தெய்வீக அசரீரி ஒலித்தது. ஸ்ரீரங்கனின் திருமொழியை அனைவரும் கேட்டனர்., திருவரங்கத்திலும் சுற்றிலுமுள்ள அனைத்துக் குழந்தைகளும் ஆங்கே பிரசன்னமாயின! திருவரங்கன் மனம் கனியவில்லை! கதவைத் திறக்க முடியவில்லை.  ... அந்தச் சிறிய  ஓட்டு வீட்டில்.... அந்த விஷ்ணு பக்தர் தம்மிரு சிறுவர்களுடன் ஸ்ரீரங்கன் கோயிலுக்குப் புறப்பட்டார். வழி நெடுக ஒரே கூட்டம். காரணம் புரியாது அவர் விரைவாக சிறுவர்களுடன் கோயிலின் உள்ளே நடந்தார். ஸ்ரீரங்கன் திருச்சன்னதி திறக்கப்படவிடல்லை! ஸ்ரீரங்கன் இன்னமும் காலைப் பிரசாதம் ஏற்கவில்லை என்றவுடன் அவர் அதிர்ந்து போனார்!... “ஹே ரங்கா!“ என்னே சோதனை! யுகம் யுகமாகத் தவறாது அமுது ஏற்றாயே! இன்று ஏன் ஏற்கவில்லை?” ஸ்ரீரங்கன் திருச்சன்னதியில் தம் இரு பாலகர்களுடன் அழுது புரண்டார்.. “ஹே ரங்கா...” என்று இதயம் வெடிக்க அவர்கள் கதறிட அங்கிருந்தோர் கருவறைச் சாவிகளை அவர்பால் கொடுத்து, “உங்கள் பாலகர்களிடம் கொடுத்துப் பாருங்கள் “ என்றனர். “ஸ்ரீரங்கா , ஸ்ரீரங்கா“ என்று அமுத மொழிகளுடன் சிறுவர்கள் தந்தையுடன் கருவறைக் கதவுகளிடம் நிற்க,
“ஹே ரங்கா!“ என்று மூவரும் ஒரே சமயத்தில் கூவினர்!
டிங் .... டிங் ..... டிங்......
வழக்கமாக இரவில் கேட்கும் வெள்ளி மணி சப்தம் அன்று அப்போதே விடியற்காலையில் ஒலித்தது! கருவறைக் கதவுகள் சிறுவர்கள் கைபட்டதும் தாமாகவே திறந்தன. மூலஸ்தானத்தினுள் வெள்ளி மணிச்சப்தம் ஒலித்துக் கொண்டேயிருந்தது.. ஸ்ரீரங்கன் தம் குழந்தைகளை அடையாளம் காட்டி விட்டான்! வெள்ளி மணி சப்த ரகசியமும் தெரிந்து விட்டது!
இத்தகைய திருவிளையாடலினால் பராசர பட்டர், வியாஸ பட்டர் என்ற அவ்விரு குழந்தைகளையும் “ தம் திருக்குழந்தைகளே “ என்று உலகிற்கு உணர்த்தினார் ஸ்ரீரங்கமூர்த்தி. அது மட்டுமா! ஆண்டாண்டுகளாக ஸ்ரீரங்கம் கோயிலில் இரவில் வெள்ளி மணி சப்தம் கேட்கும் ஆன்மீக இரகசியத்திற்குக் காரணமானவரும் அந்த விஷ்ணுபக்தரே என மக்கள் அறிந்து அவர்தம் அன்னதான மஹிமையை அறிந்து தெளிந்தனர். ஸ்ரீரங்கனின் பிள்ளைகளை எடுத்து ஆளாக்கிய அந்த விஷ்ணுபக்தரே கூரத்தாழ்வார்!
ஈசனாம் திருஅரங்கநாதன் இத்திருவிளையாடல் நிகழ்த்திய வினோதமான தினமே அந்த யுக பவ வருடத்திய விஷ்ணுபதிப் புண்ணிய நாள்! வரும் 17.8.1994 நாளன்று ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் விடியற்காலையில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, ஸ்ரீகூரத்தாழ்வாரின் தியானத்துடன் ஸ்ரீபராசர பட்டர், வியாஸ பட்டரின் நாம ஸ்மரணத்துடனும் அதனை ஏழை எளியோர்க்குப் பிரசாதமாக வழங்குவதால்,
1. முறையான செல்வத்தைப் பெறலாம்.
2. குழந்தைகள் நன்னெறியில் ஒழுக்கமாக வாழ்வர்.
3. சேர்ந்த செல்வம் சிதறாமல் முறையாகச் செலவழியும்.
4. தங்கம், வெள்ளி நகை வியாபாரிகளுக்கு இந்த விஷ்ணுபதிப் புண்யகாலம் இன்றியமையாததாகும். அவர்கள் ஏழை தம்பதியருக்கு இலவச மாங்கல்யம் அளித்து விஷ்ணுபதியைக் கொண்டாடத் தம் துறையில் மேன்மை பெறுவர். வியாபாரம் விருத்தியடையும், மதிப்பு உயரும். எனவே வருகின்ற விஷ்ணுபதிப் புண்ய காலத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வீர்களாக!
ஒவ்வொரு மாதமும் கூரத்தாழ்வாரின் ஜன்மநட்சத்திரம் ஹஸ்தம் அன்று கூரத்தாழ்வார் திருச்சந்நதி அமைந்துள்ள திருக்கோயில்களில் இரவில் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து ஏழை எளியோர்க்குத் தானம் செய்து வந்தால் கூரத்தாழ்வாரின் அனுக்கிரஹத்தால் பிள்ளைப் பேறு இல்லாதோர்க்குப் பிள்ளை பேறு கிட்டும். இவர்கள் கூரத்தாழ்வாரின் மேற்கண்ட திருவரலாற்றைப் பதிப்பித்து இலவச நூலாகப் பலரும் பயன்பெறுபடி வெளியிட்டு ஸ்ரீவிஷ்ணுபக்தியைப் பரப்புதல் வேண்டும். கூரத்தாழ்வார் சந்நதி சிறப்பாக அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் போன்ற பெருமாள் ஸ்தலங்களில் மேற்கண்ட தானதர்மங்களை நிகழ்த்துவது மிகவும் விசேஷமானதாகும்.

தன்வந்திரி அவதாரம்

ஸ்ரீமன்நாராயணின் தசாவதாரங்கள் மட்டுமின்றி, அவர்தம் 24 அவதாரங்களுக்கும் மேம்பட்டும் பல அவதார வைபவங்கள் உள்ளன. அவற்றின் மஹிமைகளை விவரிக்க யுகங்கள் போதா !
ஆதிமூல ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ
பொதுவாகப் பாற்கடலில் அமிர்தம் பெறுமுன் தோன்றிய மூர்த்தியே ஸ்ரீதன்வந்த்ரீ ஸ்வாமி என்று கருதுகின்றனர். ஆதிமூல ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி அதற்கும் முந்தைய மூல அவதாரமாவார். பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தே அமிர்தமாகும். எனவே பிறவி நோய் தீர்க்கும் ஸ்ரீதன்வந்த்ரீயாய்க் கையில் அமிர்தக் கலசத்துடன் தோன்றியவரே ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ மூர்த்தி! இவரே ஆயுர்வேத மருத்துவத் துறையின் மூல மூர்த்தியாய்ப் போற்றப்படுகின்றார். கேரளாவில் நெல்லுவாய்புரத்தில் அருள்புரியும் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியே ஆதிமூல ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீயாவார். ஸ்ரீதன்வந்த்ரீயின் பல்வேறு அவதார அம்சங்களை அறியோதார் இவ்வற்புத ஆன்மீக இரகசியங்களைத் தக்க சற்குருமார்களிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டும்.

ஸ்ரீதன்வந்திரி மூர்த்தி மாத்தூர்

ஸ்ரீதன்வந்த்ரீ அவதாரங்கள்
ஒவ்வொரு ஊரிலும் ஒரு தன்வந்த்ரீ மூர்த்தி உறைகிறார். அவர் பெருமாள் அம்சமாகவோ அல்லது ஸ்தல விருட்சமாக விளங்கும் மூலிகை விருட்சங்களிலோ அல்லது சிலாரூபமின்றி வாயுஸ்தானங் கொண்டோ அருள் பாலிப்பதும் உண்டு. இந்த ஆன்மீக இரகசியங்களை சித்த புருஷர்களே அறிவர். நம் குரு மங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் பல ஊர்களுக்கும் உரித்தான ஸ்ரீதன்வந்த்ரீயின் திருநாமங்களை அருளியுள்ளார்.

அமிர்த நிலைகள்
பொதுவாக மனித தேகத்தில் அமிர்தம் சுரக்குமிடங்கள் பல உள்ளன. யோகிகள் இந்த தேக இரகசியங்களை அறிந்தவர்கள். அவர்கள் இந்த அமிர்த சுரப்பி அமைந்துள்ள இடங்களில் இரத்தத்தைத் தேக்கி, பிராணயாம சித்தியாய் நரம்புகளின் சக்திகளைப் பாதுகாத்துப் பல்லாண்டுகள் வாழ்ந்து அருள்புரிகின்றனர். இதுபோல ஒவ்வொரு ஊர்ப்பகுதிக்கும் அமிர்த சுனைகள் உண்டு. பொதுவாக இத்தகைய அமிர்த சுனைப் பகுதிகளில் தான் கோயில்கள் அமைந்திருக்கும். இந்த அமிர்த சுனைப் பகுதிகளில் தேவநீரோட்டம் பொழிவதால் இப்பகுதியில் உள்ள மூலிகைகள், கிணறுகள், கட்டடங்களில் ஆன்மீக சக்தி மிகுந்திருக்கும். இப்பகுதியில் தான் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி எழுந்தருளி அப்பகுதி மக்களைக் காத்தருள்கின்றார். அவரவர் ஊக்குரித்தான ஸ்ரீதன்வந்த்ரீயின் திருநாமத்தை அறிந்தால் ஜுரம், வயிற்றுப் போக்கு, சிரங்கு, டைபாய்ட், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படும் போது அத்திருநாமத்தை ஜபித்து மருந்துகளை உட்கொள்ள அற்புதமான குணங்கள் ஏற்படும்.
நோயைத் தரும் தேவதைகள்!
இது தவிர ஒவ்வொரு நோய்க்கும் உரித்தான தேவதைகள் உண்டு. நோயை அளிப்பதால் இது தீய தேவதையா? இல்லையில்லை. அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப நோய்களை அளிப்பவையே இந்த தேவதைகள். தண்டனை அளிப்பதால் ஒரு நீதிபதி தீயவராவதில்லை. சமுதாயத்தில் நீதி நிலைபெற அவர்தம் பணியைச் செவ்வனே ஆற்றவேண்டும். அதுபோல அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்ப இந்த தேவதைகள் நோய்களை அளிக்கின்றன. ஆயுர்வேத சாஸ்திரத்தில் உள்ள சுலோகங்களில் “எனக்கு இந்நோயை அளித்த தேவதையே! இன்ன கர்மத்திற்காக இந்த நோயை நீ எனக்கு அளித்துள்ளாய் . என் கர்மவினைகளுக்கேற்ற தண்டனையே இந்த நோய், இந்நோயைத் தளரா மனதுடன் இறையருளுடன் அனுபவிக்க நீயும் அருள் புரிந்து ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியின் அருளையும் பெற்றுத் தருவாயாக!“ என்றே காணப்படும். எனவே இத்தகைய பிரார்த்தனைகளுடன் நாமும் எந்நோயையும் எதிர் கொள்வோம். இது தவிர ஒவ்வொரு நோயையும் குணமாக்கக் கூடிய தன்வந்த்ரீ மூர்த்தியும் உண்டு. இதையும் சற்குருவே அருளும் வல்லமை பெற்றவர். எனவே அவரை நாடித் தெளிவு பெறுவோம்
நோய்க்கான பிராத்தனை
அடியார் : குருதேவா? நோயை உண்டாக்கும் தேவதையைத் துதிப்பதால் என்ன பயன்?
குரு : நோய் நாடி நோய் முதல் நாடி என்றார் வள்ளுவர். நோய் ஏற்படுவதற்கான காரணங்களை மருத்துவ விஞ்ஞானம் விளக்கினாலும் ஆன்மீகத்தில் கர்ம வினைகளே நோய்களுக்குக் காரணம் என்று எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதுவே உண்மையும் கூட. நோயை உண்டாக்கும் தேவதையைத் துதிப்பதால் நோய்க்கான மூலகாரணங்களை மனிதன் உணர்கிறான். நோய் வந்த காரணமறிந்தால் நோயால் வருகின்ற துன்பங்களை எதிர்நோக்குகின்ற திடமான மனதும், வைராக்கியமான உள்ளமும் அமையும். சாதாரணமாக, உடல் நோவுற்றால், மனமும் பலவீனமடையுமல்லவா? இத்தகைய நோய் முதல் நாடும் பாங்கினால் மனம் பலவீனமடைவது குறையும்.

ஸ்ரீஅகத்திய பிரான் மாத்தூர்

அடியார் : நோய்கள் வருவது கர்மவினைகளால் என்றால் கர்மவினைகள் கழியும் வரை அந்நோயின் தன்மையானது  உடலில் தங்கும், அப்படியானால் மருந்துகள் ஏன், குருதேவா?
குரு : நோய் வந்தவுடன் கர்ம வினைப் பற்றியோ, இறைத் துதி பற்றியோ எந்த மனிதன் நினைக்கின்றான்? சிறிய தலைவலி வந்தால் கூட அதனை எவ்வாறு விரட்டியடிப்பது, எந்த மாத்திரையை விழுங்குவது என்ற எண்ணமே எழுகின்றது. இந்நிலையில் கோடியில் ஒருவரே ஆன்மீக வழியில் நோய்க்குத் தீர்வு காண விழைகின்றார். அவரும் சாதாரண தலவலி, காயச்சல் என்றால் பொறுப்பார்.. தீவிட வயிற்று போக்கு என்றால் மருந்துகளின் உதவியை நாடத்தானே வேண்டும். ஆன்மீக சாதகனும் மருந்தை நாடுவதில் தவறில்லை. சுவரை வைத்துத்தானே சித்திரம்! மருந்தினை உண்ணும்போது, அந்த ஊர்ப் பகுதிக்குரித்தான, நோய் நிவாரணத்திற்குரித்தான தேவதை, ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியைத் துதித்தவாறே மருந்தை ஏற்க வேண்டும்.
கர்ம வினை கழியும் வரை அதற்குரித்தான நோய் இருந்துதான் தீரும் என்பது உண்மை. ஆனால் நோய்க் கொடுமையைத் தாங்க இயலாது உடலும், மனமும் தளர்வுற்றால் அடுத்தடுத்து ஆற்ற வேண்டிய காரியங்கள் தடைப்படுமல்லவா! எனவே மருந்தை உண்கையில், “ஹே தன்வந்த்ரீ மூர்த்தி.!“ அடியேனுடைய கர்மவினைக்கேற்ப இந்நோயைப் பெற்றுள்ளேன். இந்நோயின் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அளிப்பவன் நீயே! நோய் நிவாரணக் கற்பகமும் நீயே! உன் நாமம் ஜபித்து இந்த மருந்தினை ஏற்கிறேன்! உன் நாமங்களால் ஜபிக்கப் பெற்ற இம்மருந்தின் மூலம் ஜபசக்தி உடலில் சேர்ந்து நோய்ப்பிணியைத் தாங்கும் வல்லமையையும் தந்து அருள்பாலிப்பதாக! குணமாக்குபவன் நீயே! மருந்து ஒரு கருவியே! என்று தெளிந்த பிராத்தனை அறிவைப் பெறல் வேண்டும்.
அடியார் : குருவே! இறைவன் மீது அதாவது சற்குரு மீது பரிபூரண நம்பிக்கை கொண்டவன் ...
குரு : அத்தகைய அடியார் எப்போதும் சாந்தமாக மௌனமாக இருப்பார். மருந்து தேவையா, தேவையில்லா என்ற சச்சரவில் இறங்குவதில்லை. தனக்கு வந்த நோயைப் பற்றியும் பேசுவதில்லை. எல்லாம் அவன் செயல் என்று இயல்பாகவே வாழ்வர். இதுவே உண்மையான குரு பக்தி! இந்நிலையை அடையும் வரை பிரார்த்தனை, மருந்து, நம்பிக்கை அனைத்தும் தேவையே.

வாழ்க்கை இரகசியங்கள்

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சாதாரண இரகசியம் முதல் வெளியில் கூற இயலா பெரும் இரகசியங்கள் வரை நிறைய இருப்பதுண்டு. வெளியிட்டால் அதன் விளைவுகள் விபரீதங்களாகும். சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் இக்கட்டான சூழ்நிலை! கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள், ஊட்டி வளர்த்த பெற்றோர்கள் எவரிடமும் மனந்திறந்து பேச இயலா நிலை! என் செய்வது! இரகசியங்களை வெளியிடாமலேயே வாழ்க்கை முடிந்து விட்டால்...!?
இதற்கு ஆன்மீகம் என்ன பதில் சொல்கிறது?
எந்த ஒரு மனிதனும் தன் வாழ்வின் இரகசியங்களை ஒருவரிடமோ, பலரிடமோ தன் வாழ்நாளினுள் பகிர்ந்து கொண்டேயாக வேண்டும். பலவித இரகசியங்களோடு அவன் வாழ்க்கை முடிந்தால் அந்த இரகசியங்களை விடுவிப்பதற்காக அவன் பல பிறவிகளைப் பெற்றேயாக வேண்டும். இதுவே ஆன்மீக விதியென சித்தர்கள் அருள்கின்றனர். வாழ்க்கை இரகசியங்களை எவரிடமாவது தன் வாழ்நாளின் இறுதிக்குள் பகிர்ந்தே ஆக வேண்டும். ஆனால் பலவற்றை வெளியிட்டால் விபரீதமான விளைவுகள் ஏற்படுமே. இக்கட்டான சூழ்நிலையில் என் செய்வது? மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஆன்மீகத் தீர்வை வழங்கும் சித்த புருஷர்கள் மேற்கண்ட வாழ்க்கை ரகசிய வெளிப்பாட்டிற்கும் எத்தகைய தீர்வை அளிக்கின்றனர். எவரிடமும் சொல்ல இயலாத் தீய கனவுகளை சிவன் கோயில் சென்று நந்தீஸ்வரரின் காதுகளில் சொல்கின்ற பழக்கம் இருப்பதை இன்றும் காணலாம். இது மிகவும் நன்மை தரும். தீய கனவுகளின் விளைவுகளைத் தணிக்க இம்முறை உதவும். இம்முறையும் நந்தி சித்தர் என்பர் அருளியதே!
ஸ்ரீகீரபாணேஸ்வர மஹிரிஷி
நம் வாழ்க்கையின் அரிய இரகசியங்களைப் பெற்று நம்மைப் பல பிறவிகளிலிருந்து விடுவிக்க, கீரபாணேஸ்வர மஹரிஷி என்பவர், சென்னை வடபழனி ஸ்ரீவெங்கீஸ்வரர் சிவன் கோயிலில் ஜீவசமாதி பூண்டுள்ளார். ஸ்ரீசனீஸ்வர பகவான் தனிச் சந்நதி கொண்டுள்ள இடமே இவருடைய ஜீவசமாதியாகும். கீரபாணேஸ்வர மகரிஷியின் ஜீவசமாதி மேல் தான் ஸ்ரீசனீஸ்வர பகவானின் சந்நதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய ஆன்மீக இரகசியங்களை ஸ்ரீஅகஸ்தியரின் கோயில் ஸ்தலபுராண நாடி கிரந்தங்களிலிருந்து மக்களின் நன்மைக்கென எடுத்துரைத்து நற்பணி ஆற்றி அருள்பவரே நம் குருமங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள்.
மகரிஷியின் பணி
கீரபாணேஸ்வர மஹரிஷி யார்?
இறைவன் நவகிரஹ தெய்வமூர்த்தியை படைக்கும் முன்.... பல கோடி சதுர்யுகங்களுக்கு முன்னர்..... பூலோகத்தில் தான் நவகிரஹ மூர்த்திகள் அப்போது எழுந்தருளவில்லையே தவிர ஏனைய லோகங்களில் நவகிரஹ மூர்த்திகளின் வழிபாடு தொடங்கி விட்டது. கீரபாணேஸ்வர மஹரிஷி தம் கழுத்தில் இருதயத்திற்கு எதிரே ஒரு ஸ்படிக லிங்கத்தைத் தாங்கியவாறு யாங்கணும் சிவநெறியைப் பரப்பி வந்தார்.
அந்த ஸ்படிக லிங்கத்தின் மஹிமையாவது : எவர் எதிர்படினும் அவருடைய எண்ணங்களை நல்லவையோ, தீயவையோ அந்த அம்மனிதனை நல்லுரைகள் கூறி தான, தருமங்களைச் செய்ய ஊக்கி நல்வழிப்படுத்துவார். அவர் செல்லுமிடமெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். அவர்களுக்கு அந்தந்த ஊரிலுள்ள ஆலயத்தின் மஹிமைகளை விவரித்து தெய்வீகத் திருப்பணிகளைச் செய்யுமாறு உற்சாகப்படுத்துவார். அதுமட்டுமில்லாது அவரவர் எண்ணப் பாங்கினை ஸ்படிக லிங்க மூலம் அறிந்து நல்வழி காட்டியமையால் மக்கள் அவரை யாங்ஙனும் மொய்த்தனர்.
இவ்வாறாக மனதை அறியும் கலையில் தேர்ச்சி பெற்ற கீரபாணேஸ்வரர் பல ஆண்டுகள் மக்கள் சேவையில் தம்மை அர்ப்பணித்ததின் பயனாய்க் கலியுகத்தில் பெரும்பாலான மனிதர்களின் தலையாய் பிரச்னையாக ஒன்றைக் கண்டறிந்தார். அது என்ன?
வாழ்க்கை இரகசியத்தின் விளைவுகள்
எல்லா மனிதர்களும் தன் ஆழ்ந்த மனதில் பல இரகசியங்களுடன் வாழ்வதைக் கண்டறிந்தார். வெளிக்காட்ட இயலா இரகசியங்களுடன் ஒருவருடைய வாழ்க்கை முடியுமானால் அந்த இரகசியங்களை வெளியிடுவதற்காகவே அவன் பல பிறபிகள் எடுக்க நேரிடும். இரகசியங்களை வெளியிட்டாலோ அது பலருடைய வாழ்க்கையை பாதிக்கும். என் செய்வது? கலியுக மக்களை இக்கட்டான இத்தகைய சூழ்நிலையிலிருந்து மீட்க, கீரபாணேஸ்வரர் பல ஆண்டுகள் தவமிருந்தார். அவருடைய ஆழ்ந்த யோக நிலையின் பலனால் அவரணிந்திருந்த ஸ்படிகம் போல் அவர் அவர் மனமும் பரிசுத்தமாகி ஸ்படிகப் பேரொளியாய்ப் பிரகாசித்தது.
ஸ்ரீபரமேஸ்வர மூர்த்தி பிரசன்னமானார். “கீரபாணேஸ்வரா! இதுவரை எவரும் செய்திடா தவத்தைப் புரிந்து கலியுக மக்களின் தெளிந்த மனோநிலைக்காக உன்னை அர்ப்பணித்துள்ளாய். உன்னைப் போல ஸ்படிகமான மனதை மக்கள் பெற வேண்டுமாயின் எவ்விதத் தீய எண்ணங்கள் மட்டுமல்லாது, எந்தவித இரகசியங்களையும் மனதில் கொள்ளாது நல்வாழ்க்கை வாழவேண்டும். ஆனால் அது நடைமுறையில் சாத்யமல்லவே! எனவே மக்களின் வாழ்க்கை இரகசியங்களை நீ கேட்டறிந்து அவர்களை இரகஸ்ய மாயா பந்தத்திலிருந்து விடுவிக்கும் அதிஅற்புத சக்தியினை உனக்கு யாம் அளிக்கின்றோம்.
உன் பூலோக வாழ்வு முடிந்தபின் நீ ஜீவசமாதி பெற வேண்டிய இடத்தை யாமே அறிப்போம். அவ்விடத்தில் நீ ஜீவசமாதி கொண்டு கலியுக மக்கள் உன்னிடம் வெளியிடும் அவர்தம் வாழ்க்கை இரகசியங்களைப் பெறுவதன் மூலம் அவர்களுடைய நல்வாழ்விற்கு அருள்புரிவாயாக! மேலும்
1. இரகசியங்களின் வெளிப்பாடினால் மனப்போராட்டங்கள் குறைந்து ஆயுள்விருத்தியடையும் என்பதையும்
2. ஸ்படிகம் போன்ற தூய்மையான மனோநிலையை உத்தம பக்தியைத் தரும் : இதற்கு இரகசியங்களற்ற சுத்தமான மனதைப் பெறவேண்டும் என்பதையும் உன் ஜீவ சமாதி தரிசனம் மூலம் அவர்கள் உய்த்துணர்வார்களாக!” என்று சிவபெருமான் அருளினார்.
சிவபெருமானிடம் அற்புத வரம் பெற்றது முதல் கீரபாணேஸ்வரர் மௌனமானார். அவரைத் தொடர்ந்து வந்த மக்கள் யோகியின் மௌன நிலை கண்டு அதிசயித்து ஆனந்தித்தனர். அவரவர் தம் மன நிலைகளை, இரகசியங்களை கீரபாணேஸ்வரரிடம் மனந்திறந்து கொட்டினார். ஆண்டாண்டுக் காலமாய் ஆழ்மனதில் அழுந்தியிருந்த இரகசியார்த்தங்கள் அவர் முன்னிலையில் வெளிவந்தன.
இரகசியங்கள் வெளிப்போந்தமையால் ஏதோ பெரும் பாரம் இறங்கினாற் போல் ஒரு சந்தோஷ நிலை ; மனச்சுமை குறைந்தாற் போல் ஒரு ஆனந்த மய நிலை ; ஏதோ ஒரு பெரிய குற்றத்திலிருந்து விடுபட்டாற் போல ஒரு தெளிந்த மனோலயம்; செய்யத் தகாத குற்றத்திற்குப் பரிகாரமும் மன்னிப்பும் கிட்டினாற் போல் ஒரு மனோபாவனை! இவையனைத்தும் உண்மையாகவே அவர்களுக்கு அமைந்தன.
இத்தகைய மனோவிசாரங்களினால் மனத் தெளிவோடு மக்கள் தம் தம் இல்லம் திரும்பினார்கள். செல்வம், பலம் இவற்றால் சாதிக்க முடியாததை கீரபாணேஸ்வரரின் மௌனம் சாதித்துக் காட்டி விட்டதே. எத்தகைய மகத்தான மக்கள் சேவை! இவ்வாறாக அருஞ்சாதனைகளைப் படைத்தவாறே பல தலங்களுக்குச் சென்ற கீரபாணேஸ்வரர் சென்னையில் புலியூர்க் கோட்டம் எனப்படும் வடபழனி இடத்திற்கு வந்தார். அன்று சனிக்கிழமை .... அழகான சிவன் கோயிலின் கோபுர வாசலில்.... கறுப்பு உடையணிந்த ஊனமுற்ற ஓர் ஏழை......
அவனைத் தாண்டிச் சென்ற கீரபாணேஸ்வரர் அந்த ஏழையின் மேல் இரக்கம் கொண்டு அவனருகில் சென்றார். என்ன ஆச்சரியம்... அனைவருடைய எண்ணங்களையும் பிரதிபலிக்கும் சக்தி பெற்ற அவர்தம் ஸ்படிக லிங்கம் அசைவற்று நின்றது. கீரபாணேஸ்வரர் திடுக்கிட்டார். என்ன இது! ஸ்படிக லிங்கம் தன் சக்தியை இழந்து விட்டதா! தீவிர யோசனையுடன் அவர் கோயிலின் உட்சென்று வலம் வர, சுற்றுப் பிரஹாரத்தில் அம்பாள் சந்நிதியின் வெளியில் இடப்புறம் அதே ஏழை அமர்ந்திருந்தான்!
ஊனமுற்ற இவன் அதற்குள் இங்கு எப்படி வந்தான்? கீரபாணேஸ்வரர் யோசித்தவாறே மீண்டும் ஏழையின் அருகில் சென்றார். அவர் கழுத்திலிருந்த ஸ்படிகமாலை மறைந்து விட்டது! கீரபாணேஸ்வரர் புரிந்து கொண்டார்.. “ஆம்! இது இறைவனின் திருவிளையாடலே! நாம் இம்மானுட உடலை உகுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.” கீரபாணேஸ்வரர் அந்த ஏழையின் திருவடிகளில் விழுந்து நமஸ்கரித்தார். மறைந்த ஸ்படிக லிங்கம், பூமிக்குள் மெல்ல இறங்குவதைக் கண்ட கீரபாணேஸ்வரர் அதுவே தாம் ஜீவசமாதி பெறவேண்டிய இடம் என்பதை உணர்ந்து அதனை வணங்கினார். அங்கு ஸ்ரீவெங்கீஸ்வர மூர்த்தியாய் தரிசனமளித்த சிவபெருமான்.
 “கீரபாணேஸ்வரா! இந்த ஏழையே சனீஸ்வர மூர்த்தி! நீ சனீஸ்வர மூர்த்திக்கு இங்கு தனி சந்நதி அமைத்து அவர் திருப்பார்வையில் அவர் தம் சந்நதியிலேயே நீ ஜீவசமாதி ஏற்பாயாக! இன்று சனிக்கிழமை, சனிக்குரித்தான நட்சத்திரம், சனி ஹோரை ! இன்றே நீ ஜிவசமாதி பெற வேண்டிய திருநாள்.
ஆயுள் விருத்தி
இங்கு சனீஸ்வர மூர்த்தியின் பிணைப்பு எவ்வாறு வந்தது என்று கேட்கிறாயா? எவனொருவன் இந்த சிவாலயத்திற்கு வந்து உன் ஜீவசமாதியை வணங்கி உன்னைத் துதித்துத் தன் வாழ்க்கை இரகசியங்களை உன்னிடம் சமர்பிக்கின்றானோ அந்த இரகசியங்களை நீ ஏற்று அருள்புரிவாயாக!”
“இரகசியங்களை வெளியிட்டால் மனச்சுமை குறைந்து ஆயுள் விருத்திடையுமல்லவா! ஆயுள் விருத்திகாரனாகிய சனீஸ்வர மூர்த்தியே உன் ஜீவசமாதி மேல் இங்கு தனித்து எழுந்தருளி அவர்களுக்குப் பிரத்யேகமாக ஆயுள்விருத்தியை அளிக்கின்றார். இந்த ஆன்மீக இரகசியத்தை சித்த புருஷர்கள் மூலமாக கலியுக மக்களுக்கு அறிவிப்போம்“ என்று அருளினார்.
இந்த இடமே சென்னை வடபழினியில் உள்ள ஸ்ரீவேங்கீஸ்வரர் சிவாலயமாகும். மிகவும் சக்தி வாய்ந்த சனீஸ்வர மூர்த்தி, இவரை கீரபாணேஸ்வர மஹரிஷியின் திருநாமத்தை ஓதி அவர் தியானத்துடன் இவரை வணங்குவதே இவருக்குப் ப்ரீதியளிக்கும். தமிழ்நாட்டில் முதன்முதலில் தனிச்சந்நதி கொண்டு எழுந்தருளிய சனீஸ்வர மூர்த்திகளுள் இவரும் ஒருவராவார்.
தம் வாழ்க்கையில் எவரிடமும் வெளியிட இயலாத இரகசியங்களை இந்த சிவாலயத்தில் சனீஸ்வர பகவான் சந்நதியின் முன் அமர்ந்து கீரபாணேஸ்வரர் ஜீவசமாதியை மானசீகமாக தரிசித்து அவர் தியானத்துடன் அவரிடம் வாய்விட்டுச் சொல்லி ஒப்படைக்க வேண்டும். இந்த இரகசியங்களை அவர் ஏற்று அதற்குரித்தான கர்மவினைகளைச் செவ்வனே நிறைவேற்ற அருள்புரிகின்றார்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சனீஸ்வர பகவானின் சந்நதி முன் கீரபாணேஸ்வரரின் ஜீவ சமாதி மாபெரும் தியான மண்டபமாக அமைந்திருந்தது. இது பற்றிய குறிப்புகள் ஸ்ரீஅகஸ்தியரின் “ஸ்தலபுராண கிரந்த நாடிகளில்“ காணப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலின் ஒவ்வொரு தூணிலும் உறையும் மஹான்கள், யோகிகள், சித்தபுருஷர்களைப் பற்றிய விளக்கங்கள், இந்த கிரந்தங்களில் காணப்படுகின்றன. இத்தகைய ஆன்மீகப் பொக்கிஷங்களைக் கலியுக மக்களின் நல்வாழ்விற்காக எடுத்தருளி எவ்வித படாடோபமுமின்றி அமைதியுடன் இறைப்பணி ஆற்றி வருபவரே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள், மூலிகா பந்தன இரகசியங்கள், நவபாஷாண, பாதரஸ , ஸ்படிக வடிவ மூர்த்திகளின் அமைப்பு இரகசியங்கள் இவ்வாறான ஆன்மீக பொக்கிஷங்களை அவரை நாடிச் சரணடைந்து பெற்று மக்களுக்கு அளிப்பது நம் தலையாய கடமையல்லவா!
கீரபாணேஸ்வர மஹரிஷியின் மஹிமையை உணர்ந்த பின்னராவது ஆன்மீக பக்தர்கள் இம்மஹரிஷிக்குரித்தான ஜீவசமாதி மண்டபத்தை இக்கோயிலில் எழுப்புதல் செயற்கரிய இறைப் பணியாகும். ஸ்ரீகீரபாணேஸ்வர மஹரிஷி கீ ஜெய்!

திருமண தோஷங்கள்

முந்தைய ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் திருமண தோஷங்கள் பற்றியும் அவை நிவர்த்தி செய்யும் பல நல்வழி முறைகளையும் நம் குருமங்கள கந்தர்வா அளித்துள்ளார்.
அடியார் : குருதேவா! திருவிடந்தை ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் ஆலயம், திருமணஞ்சேரி சிவாலயம்  இரண்டிற்கும் சென்று வந்தும் திருமணம் கை கூடவில்லை என்று பல குடும்பங்களில் கவலைப்படுகிறார்களே!
சற்குரு : நம்பினோர் கைவிடப்படார், இது நான்கு வேதங்களின் தீர்ப்பு, வேதவாக்கு என்றேனும் பொய்க்குமா? மக்கள் நிறையப் பொறுமை குணத்தைப் பெற வேண்டும். தீவிர தெய்வ நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். திருமணஞ்சேரி சென்று வந்து ஓராண்டு ஆகிறது, இன்னமும் என் பெண்ணிற்குக் கல்யாணம் ஆகவில்லை என்று புலம்பினால் சிவபெருமானிடம் முழுநம்பிக்கை ஏற்படவில்லை, தெய்வத்தின் மீதே அவநம்பிக்கை என்றல்லவா பொருளாகிறது. ஒவ்வொரு விநாடியும் நாம் இறையருளால்தான் வாழ்ந்து வருகிறோம். அவன் அருள் இன்றி விரலைக் கூட அசைக்க முடியாது! எனவே திருமணஞ்சேரி சிவனை/திருவடந்தைப் பெருமாளை நம்பி விட்டோம். அவன் நிச்சயம் வழி காட்டுவான் என்று எண்ணி வாழ்வதே உத்தமமானது.
அடியார் : எத்தனை ஆண்டுகள் காத்திருப்பது என்று தாய்மார்கள் கலங்குவது இயற்கைதானே, குருதேவா!
சற்குரு : கலங்கும் மனத்திடையே ஆழ்ந்த நம்பிக்கை வளர்வதையே இறைவன் எதிர்பார்க்கிறான். திருமணஞ்சேரி/திருவிடந்தை சென்று வந்தோம், இத்தனை மாதங்களுக்குள் திருமணம் ஆகவேண்டும் எனக் கணக்குப் போடுதல் தவறு. இத்தலங்களுக்குத் சென்று வந்தபின் அந்த இறைமூர்த்திகளிடம் பெண்ணை/பையனை ஒப்படைத்து விட்டதாக மனப்பூர்வமாக எண்ணி அமைதியாக வாழ்க்கையை நடத்த வேண்டும். அவ்வப்போது மனம் கலங்கினாலும் இது இறைவன் நமக்களிக்கும் சோதனை, இச்சோதனையில் நம் இறை நம்பிக்கையை நன்கு வளர்த்து வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர வைராக்கியத்துடன் வாழ வேண்டும்.
அடியார் : தோஷ நிவர்த்தி முறைகள் பல உள்ளனவே குருதேவா! எதைச் செய்வது, எதை விடுவது?
சற்குரு : ஆம்! மனிதனுடைய இறை நம்பிக்கை போதாது என்பதனால் தான் பலபரிகார முறைகள் தரப்படுகின்றன. ஆழ்ந்த தெய்வ பக்தியுடையவன் ஒரு நிவர்த்தி முறையோடு சந்தோஷமடைவான். திருவிடந்தை பெருமாளிடமோ, திருமணவூர் சிவனிடமோ தன் பாரத்தை ஒப்படைத்து ஆழ்ந்த பக்தியோடு இறைவனுடைய திருவருளை வேண்டி நிற்பான். ஆனால் எல்லோரும் அப்படியல்லவே! இதைச் செய்வோம், அதையும் செய்து பர்ப்போம் என்று மனம் மாறி மாறி இயங்குவதால் சித்தர்களும் மஹரிஷிகளும் பலவிதமான பரிகார முறைகளை அருளியுள்ளனர். பலவித பரிகார முறைகளும் பலவித தானதர்மங்களையே வலியுறுத்துவதால் அனைத்தும் நற்காரியங்கள் தாமே! முடிவில் எல்லாம் வல்ல ஒரே இறைவனே அனைத்துப் பரிகாரங்களையும் செயல்படுத்தி ஏற்று அருள்கின்றான். எனவே பலவித தோஷ நிவர்த்தி முறைகளையும் மனிதனின் மாறும் மன இயல்பை ஒட்டியே அமைந்துள்ளமையால், அவற்றில் பலவற்றைச் செய்வதையும் கூட ஏற்கிறார்கள் குருமார்கள். இவை அவர்களுடைய தீய கர்ம வினைகளின் வேகத்தைப் பெருமளவில் நிவர்த்தி செய்கிறது.
அடியார் : செவ்வாய் தோஷத்திற்கு விசேஷமான பரிகாரம் உண்டா குருதேவா? ஏனெனில் செவ்வாய் தோஷத்தினால் திருமணம் தடைபடுவதாக பல பெற்றோர்கள் வருந்துகின்றனர்.!
குரு : (சிரித்துக் கொண்டே) செவ்வாய் தோஷத்திற்கு விசேஷமான பரிகாரமா? திருமணஞ்சேரி சிவபெருமானும், திருவிடந்தைப் பெருமாளும் தீர்க்காத தோஷங்கள் ஏதேனும் பிரபஞ்சத்தில் உண்டா என்ன? ஹரியும் சிவனும் ஒன்றே! ஹரிஹரனால் முடியாதது ஏதேனும் உண்டா? ஒன்றே இறைவன் என்னும் மனோபாவ நிலை வரும் வரையில் பலவித தெய்வ மூர்த்திகளையும் பல பரிகார முறைகளையும் மனிதன் நம்பித்தான் ஆக வேண்டும்.
நம் கர்ம வினைகளே கிரஹ சஞ்சாரங்களால் ஏற்படும் தோஷங்களாக வந்து தாக்குகின்றன என்பதைத் தெளிவாக் அறிந்து கொள்ளவேண்டும். எனவே தோஷம் என்பது மனிதனுடைய தீவினைகளின் தொகுப்பே! நம்முடைய செயலுக்கு நாம்தானே பொறுப்பு! நாம் செய்த குற்றங்களுக்கு நாம் தண்டனை பெறுவது தானே நியாயம்! அவையே தோஷங்களாக வந்து அமைகின்றன. நம் ஜாதக தோஷங்களுக்காகப் பிறரை நோகக் கூடாது. கலியுக மக்களின் மன  நிலையை ஒட்டிப் பல எளிய செவ்வாய் தோஷ பரிகாரத்தையும் சித்தர்கள் அருளியுள்ளனர்.
செவ்வாய் தோஷம் – சில ஆன்மீக விளக்கங்கள்
மனிதனுடைய வாழ்வில் செவ்வாய் கிரஹமானது அவனுடைய பூமி பாக்யம், வீடு, சகோதரம், பகை, மார்பு சம்பந்த நோய்கள், சத்ருத்வம், கோபகுணம், சத்யம், கற்பு, கடன், ரண வியாதிகள், வீரம், சாகஸங்கள், சுவை, மாரகம், போர்த்தொழில் போன்ற குணாதிசயங்களின் முன் ஜன்ம, நடப்பு, ஜன்ம நிலைகளைக் குறிக்கின்றது. எனவே ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என அறிந்தால் முதலில் செவ்வாய் தோஷம் அமைந்தற்கான காரணங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அடிமை கண்ட ஆனந்தம்

1955ம் ஆண்டு .... கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்தாகி விட்டது. அந்தச் சிறுவன் பள்ளியிலிருந்து ஒடி வந்து கொண்டிருந்தான். தலை தெறிக்க ஒடி வருவானேன்! பள்ளிக் கூடம் விட்டாயிற்று என்று ஒரே மகிழ்ச்சி!
.. சர்ரென்று ஏதோ தடுக்கி விட.......
சிறுவன் பல்டி அடித்துக் கொண்டு விழுந்து எழுந்தான்! கால் ட்ராயர் கிழிந்து விட்டது! அப்பாவிடம் இன்று செம்மையாக உதை வாங்க வேண்டியதான்!
“அடடே முட்டியில் ரத்தம்!”
இரத்தம் வழிந்திட..... தோல் உராயுவுகளின் ஊடே.... நாலைந்து சிராய்ப்புகள்! வீதிமண் பட்டு திகுதிகு என்று எரிச்சல்! உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை ரண எரிச்சல்! சிதறிய சிலேட், புத்தகங்களை அள்ளி எடுத்துக் கொண்டு சிறுவன் மெதுவாக எழுந்தான். “ஹா ஹா ஹா..” எதிரே ஒரு வயதான பெரியவர் சிறுவனைப் பார்த்துப் பெரிதாகச் சிரித்தார். “நம்மைப் பார்த்துத்தானா சிரிக்கிறார்!” சிறுவன் சுற்றும் பார்த்தான்! இப்போது பெரியவர் நன்றாகக் கை கொட்டிச் சிரித்தார். போதாக்குறைக்கு “விழுந்தாயா, நல்லா வேணும்” – பெரியவரின் சிரிப்பு பலமாகியது.
சிறுவனுக்குக் கோபம் வந்து விட்டது. முட்டி எரிச்சலின் ஊடே விறுவிறுவென்று பெரியவரிடம் சென்றான். எரிச்சலான பார்வையுடன் அவரை நன்றாக உற்று நோக்கினான்! கோவாணாண்டி! முன் வழுக்கைத் தலை! மீடியம் தாடி! கட்டை குட்டையான உருவம்! பளபளக்கும் கண்கள்!
“ஓம், வா ராஜா”
அன்பு ததும்பி நிற்கும் சொற்கள்! தாயன்பினை இறையருளால் பூரணமாய்ப் பெற்ற சிறுவன் அன்றுதான் தாயன்பினை விஞ்சி நின்ற “வா ராஜா” என்ற அமிர்த மொழிகளில் லயித்து நின்றான்! யாரிவர்?
பரிபூர்ணா மௌனம் நிலவியது!
சிறுவன் இப்போது தன்னை சுதாகரித்துக் கொண்டான். “தன்னை கேலி செய்த இவரை ஒரு வாங்கு வாங்க வேண்டும்“ என்ற வெறியில் அல்லவா வந்தோம்! ஏமாந்து விட்டோமா? சேச்சே இவரை சும்மா விடக் கூடாது” சிறுவன் தனக்குள் கோபத்தைக் கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டு“,
“நான் விழுந்ததைப் பார்த்து சிரிச்சியே, உனக்கே நல்லா இருக்கா!”
பெரியவர் முன்னைவிட பலமாகவே அண்டம் அதிர கலகலவென்று சிரித்தார். சிறுவனுக்கு உண்மையிலேயே கோபம் வந்து விட்டது. “இது என்ன சிரிக்கிற வயசா “நான் விழுந்ததுக்கு என்னைத் தூக்கி விடாட்டாலும் பரவாயில்லை! முட்டி நெறய காயத்தோட அவஸ்தைப் படறேன்! நீ இந்த சிரிப்பு சிரிச்சா என்ன அர்த்தம்!”
சிறுவன் படபடவென்று பொரிந்தான்.
“ஓம், ஓம், ஓம் முட்டில அடிபட்டுடுச்சா“ – ஓங்காரத்தோடு பெரியவர் சிறுவனின் முழங்காலைப் பிடித்தார், பத்தாயிரம் வோல்ட் ஷாக் அடித்தது போலிருந்தது சிறுவனுக்கு.! சாக்த சக்திக்கு அளவேது! காலை விடுவிக்க அவன் பிரயத்தனம் செய்யவில்லை! “என்னாச்சு எனக்கு” சிறுவன் தன்னையே கேட்டுக் கொண்டான். கோபக் கனல் என்னவாயிற்று?
“அடடா, என்னமா ரத்தம் கசியுது” பெரியவர் சிறுவனை உற்று, நோக்கினார். அவர் கண்களை எதிர் நோக்க சக்தியின்றித் தன் பார்வையை முட்டிக் காயத்தில் செலுத்தினான் சிறுவன்! “என்ன பெரியவரே செய்யப் போற” – தன்மையுமறியாமல் தான் பேச்சில் சற்று மரியாதை கலப்பதை அவன் உணர்ந்தான்.
சிறுவன் திடுக்கிட்டான். இல்லை, இல்லை, வியந்து நின்றான்! “நான் ஏன் இப்படிப் பேசுகிறேன்” – இதுதான் அச்சிறுவனுடைய வாழ்க்கையின் முதல் ஆத்ம விசார வினா! பெரியவர் மெதுவாக சிறுவனின் முட்டிக் காலில் தம் உள்ளங் கையை வைத்து மூடித் தேய்க்க..... “ஆங் .... எரியுமே” .... என்று எண்ணி அதைச் சிறுவன் வெளிக் காட்டுமுன்..... பெரியவர் கையை எடுத்து விட்டார்.
“முட்டியில் எரிச்சல் அதிகமாகுமே” என்று எதிர்பார்த்துக் கண்ணை இறுக மூடிய சிறுவன் பெரியவர் தம் கைகளை எடுத்ததும் முட்டியைப் பார்த்தான்... “ஹை! ரத்தம், காயம் எல்லாம் போயிடுச்சே” சிறுவன் வானுக்கும் பூமிக்குமாய்க் குதித்தான்! முட்டிக்காலில் அடிபட்டுக் காயங்கள் வந்த சுவடே தெரியவில்லை! இவையனைத்தும் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து விட்டன! பெரியவர் சிறுவனை இழுத்து அவன் முழங்கைகள், உள்ளங்கை மேடு, கால் சுண்டு விரல், சிராய்ப்புகள் இருந்த இடங்களெங்கும் தம் திருக்கரங்களால் நீவி விட காயங்கள் அனைத்தும் மறைந்தன! அச்சத்தால் வெடுக்கென்று அவரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான் சிறுவன் !
யாரிவர்?
......... இவ்வாறகவே 1955ம் ஆண்டில் ஒரு கோடை நாளில் நம் குருமங்கந்தர்வா, நம் சிவ குரு மங்களகந்தர்வாவாம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளால் அரவணைக்கப் பெற்று ஆட்கொள்ளப்பட்டார்.., இதுவே முதல் சந்திப்பு!
யாரிவர்? சிறுவன் யோசித்தான்..... “இத்தனை நாள் இவரைப் பார்த்தது கிடையாதே! எங்கிருக்கிறார்..?” சிறுவன் தனக்குதானே ஏதேதோ பேசிக் கொண்டான். இப்போது  பெரியவர் படபடவென்று பேசலானார். .. இது பாரு ராஜா! அதோ அந்த அங்காளி கோயில்லதான் எப்பவும் குந்திக்கினு இருப்பேன்! உனக்கு இஷ்டம்னா என்னை நீ அங்க பார்க்கலாம்!  “அங்காளியா! அங்காளின்னா யார் பெரியவரே பெரிய சாமியா? இங்கே தொடங்கிவிட்டது சிறுவனின் குருகுலவாசம். அவரிடம் கேட்ட முதல் கேள்வியே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியைப் பற்றித்தான்!
“அங்காளியையா யார்னு கேக்கறே! இப்ப உன் முட்டிக் காயத்தை சரி பண்ணினா பாரு, அவதான் அங்காளி!” சிறுவன் தன்னை மறந்து நின்றான். “அப்ப நீ யாரு” என்று அவன் கேட்க நினைத்தானே தவிரக் கேட்கவில்லை.., “நானா, அடியேன் ஸ்ரீலஸ்ரீஅங்காள பரமேஸ்வரி மாதாவின் அடிமை அங்காளி அடிமை!” – கேட்காமலேயே பெரியவர் பேசினார்!
சிறுவனுக்குக் குஷி பிறந்து விட்டது. சராசரி மாணவனான அவனை மதித்து அவனுடைய அசட்டுக் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஓர் ஆத்மா இருப்பது குறித்து அவனுக்குக் கனக குதூகலம் வந்து விட்டது!

தியான விளக்கங்கள்

அடியார் : குருவே! தியானம் என்பது என்ன?
குரு : உன்னை நீயே தெரிந்து கொள்வது, மன எண்ணங்களை அடக்குவது, உள் ஒளியைத் தேடுவது, நான் யார் என்பதைத் தெரிந்து கொள்வது என இவ்வாறு தியானத்திற்கேற்ப பலதத்வார்த்த விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இவையெல்லாம் கடினமானவை! ஆனால் உன் குரு உனக்கு தியானம் என்று எதைச் சொல்கிறாரோ அதுவே உனக்குத் தியானமாகும்.
அடியார் : சற்குருவே! அப்படியானால் பொதுவாகத் தியானம் என்று எதை எதையோ ஏற்றுக் கொண்டு பயிற்சி செய்கிறார்களே?
குரு: அவையெல்லாம் வெறும் பயிற்சிகளே! குரு அருகிலிருந்து தியானம் பயிற்றுவித்தால் தான் எளிதில் தியானம் கூடும். எல்லோருக்கும் ‘குரு இல்லையே!’ என்ற வினா எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்! குரு கிட்டும் வரை தனக்கு விருப்பமான மகானையோ, யோகியையோ, சித்த புருஷரையோ மானசீகமாகக் குருவாக ஏற்று அவர் உருவத்தையோ, நாமத்தையோ, நினைத்து வரவேண்டும். தக்க தருணத்தில் அவர்கள். நிச்சயமாக அருள் புரிவர்.
அடியார்: பிராணாயாமம், பீஜாட்சர மந்திர தியானம் இவையெல்லாம் எப்படி குருவே?
குரு : இவையெல்லாம் தியானத்திற்கான பாதைகளே! சாலையே ஊராகிவிடுமா? இவற்றை அளிப்பவர்கள் அதில் சித்தி பெற்றிருக்க வேண்டும் அரைகுறை அறிவும் அநுபவமில்லாப் பயிற்சியும் விபரீதத்தில் முடியும்.
அடியார் : குருதேவா! கோயிலில்/வீட்டில் கண்ணை மூடி தினமும் மௌனமாக அமர்ந்து வந்தால்?
குரு : இது ஓரளவு மனதை நிலைபடுத்த உதவும் எளிய பயிற்சியே தவிர, இதுவே தியானமாகாது. ஏனென்றால் தியான நிலையைச் சொல்லியோ, எழுத்திலோ வடிக்க இயலாது. ஆனால் தியான நிலையை அடைந்த பின் அதற்கு மேல் அடைய வேண்டிய இறைநிலைகள் நிறைய உண்டு. தியான நிலையே இறுதி நிலையாகாது.
அடியார் : குருவே! தியான நிலை எப்படியிருக்கும் என்று எங்களுக்குப் புரியும்படி பல பயிற்சிகளை அளித்துள்ளீர்கள். அவற்றை மக்களுக்கு உரைகள், நூல்கள் மூலம் பரப்பி வருகிறோம். சாதாரண மனிதனுக்குப் புரியும்படி ஏதேனும் எளிய உதாரணம் மூலம் தியான நிலையை உணர்த்த வேண்டுகிறோம்.
குரு : ஜோதி ஸ்வரூப புண்ணியாத்மாக்களான தேவர்களே அமிர்தத்தைப் பெறுவதற்குப் பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டியதாயிற்று! நீயோ அமிர்தத்தின் ருசி எப்படியிருக்கும் என்று எளிதாகக் கேட்கிறாய்.... ...ம்..ம்...
தியான நிலை என்பது..... காலையில் எழுந்ததும் பல்துலக்கி, ஸ்நானம் செய்து இறைநாமாவை ஒலித்தவாறே சந்தனம் அரைத்துச் சுவாமிக்கு இட்டு, நீயும் இட்டுக் கொண்டு சிறிது சந்தனத்தைப் பிரசாதமாகத் தனியாக எடுத்து வைத்துக் கொள். இறை நாம/பஜன்/சுவாமி பாட்டு ஒலித்தவாறே சுடச்சுட இட்லியோ, தோசையோ செய்து, அதில் சிறிது சந்தன பிரசாதத்தையும் சேர்த்துக் கோயிலிக்குச் சென்று அங்கு வரும் ஏழைக்கு கொடுத்து விட்டுச் சற்று ஓரமாக நின்று வேடிக்கை பார். அவ்வேழை அதனைப் பிரித்து இட்லி/ தோசையை உண்ணும்போது ஒரு வித மகிழ்ச்சியோடு உண்பான்!
நன்றியோடு உன்னை ஓரக்கண்ணால் பார்க்கவும் கூடும். இந்நிகழ்ச்சியில் உனக்கு ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். இந்நினைவோடு அக்கோயிலிலோ அல்லது வீட்டிற்கு வந்ததுமோ உடனே ஓரிடத்தில் அமர்ந்து கண்களை மூடி இந்நிகழ்ச்சிகளை நினைவு கூர வேண்டும். இதனால் ஒரு வித சாந்தம் உண்டாகும். இது தியான நிலையின் முதல்படியே!
சாதாரணமாகக் கண்களை மூடி மௌனமாக இருந்தால் ஆயிரத்தெட்டு எண்ணங்கள் சூழும். ஆனால் இந்தத் தர்ம காரியத்திற்குப் பின் கண்களை மூடி மௌனமாக இருந்து அந்த தர்ம காரியம் நடந்த விதத்தை நினைவு கூர.... இந்தத் தர்ம காரிய எண்ண ஒட்டமே மனதை வியாபிக்கும். வேறு எண்ணங்கள் வராது. இதுவே தியான நிலைக்கான ஆதாரம்!
அடியார் : சற்குருவே! தியானம் என்றால் இறைவனைப் பற்றிய எண்ணமல்லவா? ஒரு தர்ம காரிய நினைவு எப்படி தியானமாகும்?
குரு : உண்மையே! ஆனால் எப்போது இறை நாமா சொல்லி சந்தனம் அரைக்கத் தொடங்கினாயோ இறை பூஜை அப்போதே தொடங்கி விட்டது. அந்த ஏழைக்கு அன்றைக்குக் காலையில் டிபன் கிடைத்ததே இறையருளினால் தானே! அதற்கு உன்னை ஒரு கருவியாக இறைவன் ஏற்றுக் கொண்டான். இறைவன் உன்னைக் கருவியாகப் பயன்படுத்தி நிகழ்த்திய திருவிளையாடலையே மீண்டும் நினைத்துப் பார்ப்பதும் இறைவனைப் பற்றிய எண்ணம் தானே!
அடியார் : ஆம் குருதேவா! மக்கள் அறியாமையால் உட்கார்ந்த இடத்தில் தியானம் வரும் என்று எண்ணி விடுகிறார்களே!
குரு : அப்படிச் சொல்லாதே! குரு அருளியபடி பயிற்சி செய்தால் எந்நிலையிலும் தியானம் கூடும்! எனவே குருவைத் தேட வேண்டும். திரவியம் தேடும் போது குருவையுந் தேட வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமாக குரு உண்டு. இதற்கான முதல் முயற்சியாக அன்னதானம், கோயில் திருப்பணிகள், பூஜைகள், ஹோமங்கள் போன்ற இறை பணிகளைப் புரிகின்ற சத்சங்கங்களில் சேர வேண்டும். அதுவரையில் மேற்கண்ட முறையில் தியானம் செய்தால் மனம் அடங்கும் நிலை புரியும்.
அடியார் : தினமும் தியானம் புரிய தினமும் ஒரு தர்மம் என்றால் இயலுமா குருதேவா?
குரு : அப்படியானால் தியானம் என்பது இலசவமாக எவ்வித முயற்சியுமின்றி உட்கார்ந்த இடத்தில் free gift ஆகப் பெறுவதா? தினமும் தர்மம் என்பது சற்றுக் கடினமே! பலர் ஒன்று சேர்ந்து தினமும் ஒருவர் என்று முறை மாற்றி தர்மம் செய்யலாமல்லவா? குறைந்தது ஓரிரண்டு வாழைப் பழங்களையாவது தினமும் பசுவிற்குக் கொடுக்கலாமன்றோ. ஏன் ஓரிரண்டு பிஸ்கட்களை ஒரு நாய்க்காவது கொடுக்க முடியாதா?  கொஞ்சம் அரிசி, சர்க்கரை சேர்த்துக் கோயிலில் எறும்புகளுக்கு இட முடியாதா? மனமிருந்தால் மார்க்கமுண்டு. இன்றைக்கு ஒரு நல்ல காரியத்தையாவது செய்தோம் என்ற நினைவோடு எந்த நாளையும் முடிக்க வேண்டும். இல்லையேல் அது வீணாகக் கழிந்த நாளே!

ரேவதி திரிதினம்

ஜுன் 30, ஜுலை 1, 2 தேதிகள் ஆகிய மூன்று நாட்களிலும் ரேவதி நட்சத்திரம் அமையும் அபூர்வமான விசேஷ நாட்கள். இம்மூன்று நாட்களிலும் (அறிமுகமாகாத) பழுத்த சுமங்கலிகட்குப் பாத பூஜை செய்தல் விசேஷமானது. அவர்கள் பாதங்களைக் கழுவி மஞ்சளிட்டு நமஸ்கரித்து ஆசிர்வாதம் பெறல் வேண்டும். (பின்னமில்லாத) முழு அரிசி மணிகளை அட்சதைகளாகச் சேர்த்து ஆசிர்வாதம் பெறுதல் உத்தமமானது. இம்மூன்று நாட்களிலும் ஏழை சுமங்கலிகட்குரித்தான தானங்களைச் செய்ய வேண்டும். இது தவிர,
ஜுன் 30 – வியாழனன்று – ஸ்ரீஹயக்ரீவர் சந்நதியில் பூஜை – கல்கண்டு கலந்த அன்னதானம்.

ஜுலை 1 – வெள்ளியன்று – ஸ்ரீமகாலட்சுமி/அஷ்டலட்சுமி சந்நதியில் பூஜை – பாயசம் அன்னதானம்.
ஜுலை 2 – சனிக்கிழமையன்று – ஸ்ரீரங்கநாதன் சந்நதியில் பூஜை – சர்க்கரைப் பொங்கல் அன்னதானம் லட்சுமி, வரலட்சுமி போன்ற லட்சுமி நாமங்களை உடையோர் ஜுலை இரண்டாம் தேதி தான தர்மம் செய்தல் வேண்டும். லட்சுமி, ரங்கன் போன்ற நாமங்களை உடைய ஏழைகளுக்கு தான தர்மங்கள் செய்தலும் மிகவும் உத்தமமானது.
இந்த தான தர்மங்களில் ஸ்ரீரேவதி நட்சத்திர தேவி ஸ்ரீகுசலாம்பா கல்பனா ரஹிதா தேவி என்னும் திருநாமம் பூண்டு நேரிலோ, சரீர ஆவாஹனம் மூலமாகவோ அரூவமாகவோ தோன்றி இம்மூன்று நாட்களிலும் ஆசிர்வதிக்கின்ற மிகவும் அபூர்வமான நாட்களாகும்.
ஜுலை 8 – ஸ்ர்வ அமாவாசை – தர்ப்பணங்கள், அன்னதானம் (குறிப்பாக குருடர்கள், ஊனமுற்றவர்கட்கு அன்னதானம்).
ஜுலை 12 – மாணிக்கவாசகர் திருநட்சத்திரம் : குழுவாக அமர்ந்து சிவபுராணம் பாராயணம் மற்றும் மக நட்சத்திரத்திற்குரிய தானங்கள்
ஜுலை 14 – ஆனித் திருமஞ்சனம் – சிவன் கோயிலில் அன்னதானம், இம்மாதம் முழுதும் எந்நாளிலும் கோ ஸம்ரட்சணை (பசு பாதுகாப்பு) , கோ தானம் செய்தல் விசேஷமானதாகும்.
ஜுலை 17 – தட்சிணாயனப் புண்யகாலம் – கங்கை காவிரி போன்ற நதி தீரங்களிலும், கும்பகோணம் சக்கரப்படித்துறை, திருவிடைமருதூர் போன்ற ஸ்தலங்களில், தர்ப்பணம், அன்னதானம் (தெற்கு நோக்கிய வீடு அமைந்தோர் தெற்கு நோக்கும் இறைவனுடைய திருக்கோயில்களில் அன்னதானம் செய்தல் வேண்டும்.)
ஜுலை 22 – வியாஸ பூஜை – ஹரி – சிவ சயனப் பௌர்ணமி
தமிழ்/வடமொழி வேத பாராயணம் – சுருட்டப்பள்ளி, ஸ்ரீரங்கம் போன்ற சயனக் கோலத் திருக்கோயில்களில் அன்னதானம்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam