பூர்ணத்தைக் காண்பவனே பூர்ணமான மனிதன்!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

கொல்லி மலைப் பெருமாள் காண்! அல்லல்போம்! வல்வினை போம்!

கொல்லி மலை உச்சியில் பொலிந்து பிரகாசித்து அருளும் ஸ்ரீஅறப்பளீஸ்வரர் ஆலயத்திலிருந்து நேரே பார்த்தால், தொலைவில், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஒரு பெரிய ஆலயம் இருக்கும் பகுதியைச் சுட்டிக் காண்பிப்பார்கள், மிகவும் சக்தி வாய்ந்த பெருமாள் ஆலயம். தக்க வழிகாட்டி இன்றிச் சென்றடைவது மிகவும் கடினமே!

பெரியவருடன் சிறுவன் பன்முறை கொல்லி மலைக்குச் சென்றிருந்தாலும், இப்பெருமாள் ஆலயத்திற்கு தன்னுடைய முழு குருகுலவாசத்திலேயே ஒரு சில முறையே சென்று தரிசித்துள்ளான். பிற லோக, பிற கிரக வாசிகள் அடிக்கடி வந்து புழங்கும் ஆலய பூமி இது. குறிப்பாக, தேவலோக கந்தர்வர்கள் இவ்வாலயத்தின் அருகே கமழும் நறுமண மூலிகைப் புஷ்ப வாசத்திற்காக வந்து, தங்கி, சுவாசித்து, தியானித்துச் செல்வார்கள்.

ஸ்ரீஅறப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து சுற்றி வளைந்து சென்றால், சுமார் 30 மைல் தூரத்தில் இருக்கும் இவ்வரிய பெருமாள் ஆலயத்தைப் பற்றி முதலில் சிறுவனுக்கு ஒன்றும் தெரியாது. அடர்ந்த கொல்லி மலைக் காட்டிற்குள் மூலிகைகளைத் தேடித் தனித்துச் செல்லும் பெரியவர், அவனை இதுவரையில்  ஒருபோது கூட அழைத்துச் சென்றதில்லை. கோரக்கர் தவமிருந்த குகைக்கு மட்டும் சில நடை யாத்திரைகளில் அழைத்துச் சென்றார். தற்போதும் கூட, காட்டுப் பகுதியில் இருக்கும் கோரக்கர் குகைக்குக் கூடத் தக்க வழிகாட்டி இல்லாமல் செல்ல முடியாது. பாதை மாறினால் வனவிலங்குப் பகுதி வந்து இடறும். மிகுந்த கவனம் தேவை! பகல் 12 மணிக்குக் கூட இருட்டாக இருக்கும் அளவிற்கு, ஆழ்ந்த காடுகள் உள்ள பகுதி வழியே செல்ல வேண்டும்.

ஒரு முறை....

“குச்சிப் புடி” நடை

கொல்லி மலை விஜயத்தின் போது, பெரியவர் சிறுவனை அழைத்துக் கொண்டு விடியற்காலை நாலு மணி வாக்கில் பௌர்ணமி நிலவொளியில் கிளம்பி விட்டார். நடந்தார்கள், நடந்தார்கள், நடந்து கொண்டே இருந்தார்கள். காலில் செருப்பு இல்லாது புதர்கள், தழைகளைத் தள்ளி நடந்தனர். நடை வழியை மறைத்த அடர்ந்த மர இருட்டில் நடை பாதையைப் பார்த்தறிய மட்டும் கைக்குச்சியை எடுத்துக் கொண்டார்கள். அது ஒன்றே பாதுகாப்பு! வழியில் சலசலவென்று, சரசரவென்று பல வண்ணப் பாம்புகள் ஊர்ந்தன. சிறுவனுக்கு வாயெல்லாம் ஒரே அஸ்தீக சித்த நாம ஜபமயம் தான்!

அந்தப் பிரம்ம முகூர்த்த நேரத்திலும் கூடப் பெரியவர், பல அரிய மூலிகைகளைக் காட்டி அரும் பெரும் விளக்கங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். ஒரு வழியாகப் பகல் 2.30 மணி வாக்கில் அந்தப் பெருமாள் கோயிலை இருவரும் அடைந்தார்கள். பழைய காலத்துக் கோயில் பெருமாளுக்குத் தூய மூலிகைத் தைலக் காப்பு இடப் பெற்றுப் பளிச்சென்று இருந்தார்.

வற்றா பலத் தலச் சுற்று!

பெரியவர் சொன்னபடி, சிறுவன் பெருமாள் கோயிலை 41 முறை மிகவும் கஷ்டப்பட்டு வலம் வந்தான். சிறுவன், கல்லும், முள்ளும், தழையும், கொடியும், மட்டையும், குச்சியும் மலிந்த ஆலய வலம்! பூச்சி பொட்டுக்களுக்கோ குறைவில்லையே! என்ன 41 எண் சுற்றுக் கணக்கோ அது? யாரறிவார் ஹரிபரமே!

“இந்த 41 தடவைப் பிரதட்சிணமும் உனக்காக இல்லைடா கண்ணு! இங்கே நடக்கப் போற இன்னொரு தெய்வீக விஷயத்துக்காகவும்தான் இந்த 41 தடவைச் சுத்து வலப் பூஜை! பெருமாளுக்குன்னு நீ அப்புறம் சுத்தலாம்!”

“மீண்டும் சுற்றலா?” சிறுவனுக்குத் தலைதான் சுற்றியது!

“சில வகைக் காட்டு மூலிகைப் பழ தரிசனம் கெடைக்கணும்னா இந்தப் பெருமாளை இத்தனை வாட்டி வலம் வந்தாத்தான் பார்க்கணும்னே ஒரு வனதேவதா நியதி இருக்குடா ராஜா! நீ இதைச் சுத்தி வர்றப்போ, குறைஞ்ச பட்சம் ஒரு ஐநூறு மூலிகை இலைகளாவது உன்மேலே படும்! ஒரு ஆயிரம் மூலிகையாவது கண்ணுல படும். இதெல்லாம் உன் நேத்ர சக்தியை நல்லா வளப்படுத்தும்டா கண்ணு! அப்பத்தான் நீ நெறய தேவதா தரிசனம், தெய்வ தரிசனம் எல்லாம் பிற்காலத்துல பார்க்க முடியும்! அபூர்வமான தங்கம், வெள்ளி, நவரத்னம், ஷோடச ரத்ன தரிசனம் கூடக் கெடைக்கும்டா!”

பெரியவர் கண்ணைச் சிமிட்டுக் கொண்டே சிரித்தார்.

“நல்லா பக்தியோட இங்க நீ கோயிலைச் சுத்தலைன்னு வச்சுக்கோ, கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமப் போயிடும்!”

சிறுவன் உஷாரானான்!

“என்ன இது சந்தடி சாக்கில் இவரிடமிருந்து நைஸாக ‘எச்சரிக்கை நோட்டீஸ்’ வருகிறதே!”

பெரியவர் தொடர்ந்தார்.

சந்ததி வளம் பெற சத்தான கொந்தம் பழம்!

“ஏன், இங்கே ஒரு சின்னக் கொந்தம் பழம் தரிசனத்துக்கே ஒடம்பு தெனவெடுத்துடுமே, என்ன சொல்றது? ஆனா, கொந்தம் பழம் தின்னா உடனே குழந்தை பாக்யம் தந்திடும்னா, என்ன அபூர்வமான மூலிகைப் பழம் அது! பிரான்ஸ்காரங்களுகு, ஜெர்மன்காரங்களுக்கு இந்தக் கொந்தம் பழம் ரகசியம் தெரிஞ்சாப் போதும், மரத்தோட கெளப்பிக் கிட்டுப் போயிடுவானுக!”

“இன்னிக்குப் புதன் கிழமை! பெருமாள் நாள்! திருமாலுக்கானத் திருவோண நட்சத்திரமும் சேருது! ஆயுஷ்மான் யோக நேரமும் சேருது! இந்த நாள்ல தாண்டா ஒரு சாவித்ரி கல்பாதி காலத்துல கொந்தம் பழ தேவதையே இங்கே பெருமாள் முன்னாடி வந்து தபஸ் பண்ணினா!”

சிறுவன் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

கிட்டுமா கீர்த்தி மிகுக் கனிந்த வரம்?

“கொந்தம் பழமா?” சிறுவன் அதைப் பற்றிச் சித்த வைத்தியப் பெரியவர்கள் சொல்லக் கேட்டதோடு சரி!

அப்போது அங்கு ஒரு மலைவாசிப் பெண், முதுகில் ஒரு கூடை நிறையப் பழங்களைச் சுமந்து கொண்டு வந்தாள், பெரியவரைப் பார்த்து மிகவும் அதிசயத்துடன் வணங்கி நின்றாள்.

“எப்படி சாமீ கால்ல செருப்பு இல்லாம, இவ்வளவு தூரம் நடந்து வந்தே?”

அப்பெண்ணிடம் அன்பாக உரையாடிய பெரியவர், “இன்னிக்கு நல்ல நாளும்மா! பெருமாள் கிட்ட உனக்கு என்ன வேணுமோ கேளு, நிச்சயமாக கொடுப்பார்!” என்றார்.

அப்பெண் மிகவும் சங்கோஜப்படவே, பெரியவ மெதுவாக அப்பெண்ணிடம் குசலம் விசாரித்துப் பேசி பயத்தைத் தெளிவித்தார்.

“உனக்குக் குழந்தைப் பொறக்கணும் அவ்வளவுதானே? இந்த பெருமாளைச் சுத்தி வர்ரறது தானே?”

“தெனமுந்தான் ஒரு மண்டலமா வெயில், மழை பார்க்காம சுத்தி வர்றேன் சாமீ! ஒரு உத்தம பெரியவரு 41 நாள் இந்தப் பெருமாளைச் சுத்தி வா, குரு அருள் மூலமாப் பிள்ளை பாக்யம் கனியும்னாரு! அந்த நாள் கணக்கு நேத்திக்கோ, இன்னிக்கோ முடியும் போல இருக்கு! தினக் கணக்கு எனக்குத் தெரியலையே சாமீ!”

“அந்தப் பெரியவரு சொன்னது சரிதான் புள்ளே! இன்னிலேந்து உனக்கு நல்ல வழி பொறந்துடுச்சு!”

“அப்ப எனக்குப் புள்ளை பொறந்துடும்தானே!”

அப்பெண்ணின் கண்கள் ஆனந்தத்தால் மலர்ந்தன!

“நிச்சயமா, அதுக்கு நீ கொந்தம்பழம் சாப்பிடணுமே!”

“கொந்தம் பழம்” என்றதும் அவள் முகம் சுருங்கியது....

கார்த்திகை மகா தீபம்

சித்தர்களின் குருவாய்மொழி தேவ உரை!

பார்த்திப ஆண்டின் அருணாசல கார்த்திகை தீபம்

அருணாசல சகஜ ப்ராண சங்கமதீப சக்திகள்! கார்த்திகை தீபக் கிரண மஹிமை!

நடப்பு பார்த்திப ஆண்டு கார்த்திகை தீபத்திற்கு, சகஜப் ப்ராண சங்கம தீபம் என்று பெயர்! ஒவ்வொரு வருட அருணாசலக் கார்த்திகை தீபத்திலும், பிரபஞ்சமெங்கும் அனைத்துக் கோடி நட்சத்திர மண்டலங்களிலும், பூமிகளிலும் (பூமி ஒன்றல்ல), கோள்களிலும், லோகங்களிலும் எத்தனையோ கோடி அற்புதங்கள் நிகழ்கின்றன. சித்தர்களே, சிவனருளால் இதன் மகத்துவத்தைப் பரிபூரணமாக நன்கு எடுத்துரைக்க வல்லவர்கள்.

இறைவனே மலை வடிவாய்த் துலங்கும் அருணாசல மலையானது, நாம் வாழும் பூமியின் ஆன்மீக மையமாக மட்டுமல்லாது, விண்ணும், மண்ணும், வானும் உள்ளடக்கியப் பிரபஞ்சத்தின் தெய்வீகப் பெருமையமாகவும் பிரகாசிப்பதாகும் (Spiritual epic centre of the universe).  திருஅண்ணாமலைச் சிவத்தலத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதக் கார்த்திகைத் திருநாளில் ஏற்றப்படும் “மஹாஜோதி தீபமானது” அனைத்து வகை ஜோதிகளுக்கும் தலையாயது! பிரபஞ்சத்தில் உறையும் சர்வ ஜீவன்களின் மற்றும் அனைத்து ஜடப் பொருள்களின் மேன்மைக்காகவும் ஏற்றப்படுவதாகும்.

நம் மானுடக் கண்களுக்குத்தான் மனித முயற்சியால், அருணாசல மலை உச்சியில் ஏற்றப் பெறும் தீபமாக இது தோன்றுகிறது. ஆனால், உண்மையில் சகல கோடிச் சித்தர்கள், மகரிஷிகள், ஞானிகள், யோகியர்கள், முமூட்சுக்களால், முப்பத்து முக்கோடி தேவாதி, தேவ தேவர்களின் அருட்பணியாக, சகல தெய்வ மூர்த்திகளின் அருட் பிரசன்னத்தில், தீபாதி தீப அருட்பிரசாதமாக, இறையாணையாக வருடந்தோறும் கார்த்திகை தீபமாக ஏற்றப் பெறுகின்றது. இது வேத சத்தியப் பூர்வமாக, பல கோடி யுகங்களாகத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் தெய்வீக அனுபூதியாகும். இதன் பின்னணியில் கோடானுகோடி தேவ ரகசியங்கள் உண்டு.

நடப்பு பார்த்திப ஆண்டின், ஏப்ரல் 2005 தமிழ்ப் புத்தாண்டுக்கான “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழில் குருவாய்மொழியாக, அருளப் பெற்றமை போல, இந்த ஆண்டில் இயற்கைச் சீற்றங்கள், புயல்கள், பூகம்பங்கள், சூறாவளிகள் மிகுந்து உயிர்ச் சேதம் ஏற்படும். இத்தகைய பலத்த உயிர்ச் சேதங்களுக்கான உண்மையான, பூர்வஜன்மப் பூர்வமான காரணங்களை சர்வ மனித குல சிருஷ்டி ராசிகுண ரீதியாக பிறப்பு, இறப்பு, ஜீவ இரகசியங்களில், அடங்கும். தக்க உத்தமர்கள் மூலமாகவே அறிதல் வேண்டும்.

விண்ணில் காத்திருக்கும் வினயங்கள்!

எனினும், உலகில் நிகழும் மிதமிஞ்சிய அதர்மச் செயல்களின் விளைவுகளைக் கண்டு, இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுகின்றன என்பது அனைத்து மதங்களின் சத்தியக் கோட்பாடாகும். இவற்றில் உயிர் இழந்தோரின் சாயைச் சரீரங்களில் (இறந்தபின் அனைவரும் பெறும் அடுத்த வகை உடல் வடிவு) நிரவும் நிறைவேறாத ஏக்கச் சுவடுகள், விருப்ப அலைகள், நிறைவேறாத ஆசைப் படிவுகள் போன்ற அனைத்தும் விண்வெளியில் திரண்டு, தக்கத் தீர்வுகளை சந்ததிகளிடம் இருந்தும், ஏனையப் பூவுலகத்தாரிடம் இருந்தும், தற்போது எதிர் நோக்குகின்றன. மொத்தத்தில், மிருத்யு தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சாயைச் சரீரங்கள் யாவும், நடப்பு மனிதகுல சமுதாயம் ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஆற்ற வேண்டிய ஆன்மீக வகையிலான நிவாரணங்களுக்காக ஆன்ம சாதன வழிபாடுகளுக்காக மிகவும் ஏங்கி விண்ணுலகில் காத்திருக்கின்றன.

இவர்களின் ஆன்ம சாந்திக்கான யோக தீப சாதன சக்திகளை அளிக்கவல்ல மூல சக்தியே பார்த்திப ஆண்டின் அருணாசலத் திருக்கார்த்திகை தீபக் கிரண சக்திகள் ஆகும். எனவே, அனைத்து நாடுகளிலும், ஜீவன்களின் ஆன்ம சாந்திக்கான பக்திமிகு வழிபாடுகளை ஆக்கம் பெறச் செய்ய வல்ல மகத்தான தெய்வீக சாதனமுமாகவும் அருணாசல தீபம் துலங்குகிறது.

இதற்காக மக்கள் சமுதாயம் ஆற்ற வேண்டிய கடமை என்ன?

தீப நேரத்தில் திவ்யமன பூஜை

அருணாசல கார்த்திகைத் தீபத் திருநாளில் திருஅண்ணாமலையில் இருக்கும் பாக்கியத்தைப் பெற்றோர், தங்கள் வீட்டில் இருந்து கொணர்ந்தப் பல்வகை விளக்குகளிலும், தாமரைத் தண்டுத் திரியையும், பருத்தித் திரியையும் பசு நெய்யில் தோய்த்து இணைத்து, இந்தப் பார்த்திப ஆண்டின், “சகஜ ப்ராண சங்கம தீப” சக்திகள் பரிணமிப்பதற்காக, இதற்கான விசேஷமான 21 வகைத் தைலங்கள் நிறைந்த “ப்ராணசுப சுதபூஷண சக்தித்” தைல தீபமாக (வைதீஸ்வரன் கோயில் அபிஷேகக் காப்புப் பிரசாதத் தைலம், கற்பூரத் தைலம், வெட்டிவேர்த் தைலம், சந்தனத் தைலம், பிரண்டைத் தைலம் போன்ற 21 வகைத் தைலங்கள் சேர்ந்தது), கிரிவலப் பாதை வளாகத்தில் மிகவும் பாதுகாப்புடன் விளக்குகளை ஏற்றி, அருணாசல மலையை நோக்கி சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரிக்க வேண்டும்.

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலய வளாகத்திலோ, கிரிவலப் பகுதியிலோ பாதுகாப்புடன் கார்த்திகை தீப நேரத்தில் இங்கு இறுதியில் தரப்பட்டுள்ள மந்திரங்களை ஓதி தியானித்து, ஒரு நாழிகையேனும் திருஅண்ணாமலை சிவாட்சர பூமியில் விளக்கைப் பிரகாசிக்கச் செய்து, பிறகு தீபத்தை கவனமாகச் சாந்தப்படுத்தி விளக்கு, திரி, தைலத்தைத் தீபப் பிரசாதமாக இல்லத்திற்கு எடுத்து வந்து ஒரு மண்டல காலத்திற்கு (48 நாட்கள்) தினமும் காலையிலும், மாலையிலும், குறைந்தது ஒரு மணி நேரமேனும் தீபப் பிரசாதத் தைலத்தோடு கூடுதலாக எண்ணெய் வகைகளைச் சேர்த்துக் கொண்டு. விளக்கில் தீபம் ஏற்றியும் வழிபட்டு வருதல் வேண்டும்.

தீபப் பிரசாதத் தைலத்தோடு கூடுதலாகத் தைலத்தைச் சேர்த்துக் கொண்டு, தாங்கள் திருஅண்ணாமலையில் இருந்து தீபப் பிரசாதமாகக் கொணர்ந்த விளக்குகளை, திரிகளை, தைலத்தைப் பிறருக்குத் தானம் அளிப்பதும் சிறப்புடையதாகும்.

இல்லத்தில் இனிய தீப பூஜை!

இந்நாளில் திருஅண்ணாமலைக்கு வர இயலாதவர்கள், டீவி, செய்தித் தாள், வானொலி மூலமாகவோ தீபம் ஏற்றும் நேரத்தை அறிந்தும், கண்டும், சரியாக அந்நேரத்தில் ஐந்து முக தீபத்தை, தாமரைத் தண்டு + பருத்தித் திரியுடன், “ப்ராணசுப சுதபூஷண சக்தித்” தைலத்தில் குறைந்தது 21 விளக்குகளை ஏற்றி மூன்று மணி நேரமேனும் தீபப் பிரகாசத்தில் (வேறு மின் விளக்கு இல்லாது, விளக்கொளியில் மட்டும்) இறைவனை வழிபடுதல் வேண்டும்.

இச்சமயத்தில் சத்சங்கமாக ஆலயத்தில் விளக்குப் பூஜைகளை ஆற்றுதலும் விசேஷமானதாகும்.

ஏழைகள் வீட்டில் எழிலான தீப பூஜை!

ஒவ்வொருவரும் ஐந்து ஏழைக் குடும்பங்களுக்கான குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, “ப்ராணசுப சுதபூஷண சக்தித்” தைலம், தாமரைத் தண்டுத் திரி, பருத்தி (பஞ்சுத்) திரி, தீப்பெட்டி இவைகளைத் தானமாக அளித்து, கார்த்திகைத் தீப நேரத்தில் ஜாதி, மத பேதமின்றி ஏழைகளின், பாமரர்களின் வீடுகளிலும் கார்த்திகை தீபத்தைப் பிரகாசிக்கச் செய்தல் வேண்டும். இந்தத் தீபத்தில் இருந்து ஏற்றப்படும் ஜோதியால் அடுப்பைப் பற்ற வைத்து, சர்க்கரைப் பொங்கல் வடித்துப் பிரசாதமாகப் படைத்துத் தானமாக அளித்தல் குடும்பத்தில் நல்ல மன ஒற்றுமையைப் பேணிட உதவும்.

நிறைவேறாத கற்பனைகள், கனவுகள், ஏக்கங்கள், ஆசைகள், விருப்பங்களுடனும் இறந்தோர் மீண்டும் பிறப்பெடுத்து நிறைவேறாததை, நிறைவேற்றும் வரை பிறவிகள் தொடரும். ஆன்ம சாந்தி என்பது மேற்கண்டவற்றைக் களைந்து பிறவிச் சுமையை அவரவர் ஆற்றிய தான, தர்மப் பலன்களுக்கு ஏற்பத் தணித்துத் தருவதாகும். முழுமையான ஆன்ம சாந்தி என்பது பிற ஜீவன்களின் நலன்களுக்காகத் தம்மை அர்ப்பணித்து உத்தமமான வாழ்க்கை வாழ்வோர்க்கே சாத்யமாகும்.

நிரவட்டும் சகஜ ப்ராண தீப சக்தி!

ஆலயத்திலும், இல்லத்திலும், ஏற்றப் பெறும் அருணாசல தீபப் பிரகாசக் கிரணங்கள் நீரிலும்,  நெருப்பிலும், மண்ணிலும், விண்ணிலும், நிரவி, கோடானு கோடிக்கணக்கான சாயைச் சரீரங்கள் நல்மார்கம் பெறவும், தக்க பிறவிகளை அடையவும், அவர்களுக்காகப் பூவுலகத்தார் தக்க வழிபாடுகளை ஆற்றவும் முதற்காரியமாக உதவும். மேலும் இதற்கான எளிய பரிகார வழிபாடு முறைகளையும் பெற்றுத் தருகின்றன.

இவ்வாறு யாங்கனும் நிரவும் “சகஜ ப்ராண தீபக் கிரணங்கள்”, விண்வெளியில் பொலிந்து, ஆவிகளின் வடிவுகளுக்குத் தக்க நிவாரணங்களையும் பெற்றுத் தர உதவுகின்றன.

ஆவிகள் என்றால் தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம். மனித உடலைப் பிரிந்த பின் ஒவ்வொரு உயிர் சக்தியும், சாயைச் சரீரம் ஏற்றுப் பிறிதொரு ஜீவ நிலையை அடையும். இதில் சில வடிவங்களே ஆவிகளாகப் போகும். ஆவி எனில் நீராவி போல விண்ணில் பறக்க வல்ல எளிய வடிவுடைச் சரீரத்தில் உள்ளது என்றுதான் பொருள். தற்கொலை மற்றும் கொலைக்கு ஆட்பட்டவர்கள் தீய ஆவி வடிவு நிலையைப் பெறுகின்றார்கள்.

அக்ரமங்களையும், அதர்மச் செயல்களையும், ஏமாற்று வேலைகளையும், கொலை, கொள்ளைகளையும்  செய்பவர்கள் பேய்வழித் தீய சரீரத்தை அடைகின்றனர். இதிலிருந்து மீள்தல் மிக மிகக் கடினமே. நரக வாழ்வைப் பெற்றுத் தீவினைகளைக் கழிக்கும் நிலையைக் கூடப் பெற இயலாது. இவர்கள் ஆவி வடிவிலேயே பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தத்தளிக்கின்றனர். இவர்களைக் கரையேற்றுதல் மிக மிகக் கடினம். இந்நிலை இவர்களுடைய சந்ததிகளையும் பாதிக்கும். எனவே பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல் வாழ்தலும் கலியில் உத்தம அம்சமே!

உண்மையில், சகஜ ப்ராண தீப சக்திகள் அவரவர் விதிப்படி நடப்பதை மனதார ஏற்று நடக்கும் சித்தத்தை எளிமையாக்கித் தருகிறது. இதுவே பிரம்மாண்டமான அனுக்ரகம் ஆகும்! விதிப்படி அனைத்தும் நடப்பதே இயற்கை, மக்கள் சமுதாயம், சமுதாய தர்ம விதியை மீறி நடப்பதால், இயற்கைச் சீற்றம் கொள்கிறது.

திருமண தோஷ நிவர்த்தி!

தற்காலத்தில், திருமணத் தடங்கல்களால் வாடும் – இளைய பருவத்தினர் குறிப்பாகப் பெண்கள் ஏராளம் ஏராளம். இவர்களுடைய தோஷங்களை நிவர்த்திக்கவும் நன்முறையில் திருமண வாழ்வு அமையவும், ஒவ்வொருவரும் சகஜ ப்ராண சக்தி தீப நாளில், சத்சங்கமாக ஜாதி, மத பேதமின்றிப் பலரும் ஒன்று சேர்ந்து, குறைந்தது ஒவ்வொரு குடும்பத்தாரும் ஒரு பொன் மாங்கல்யம், வஸ்திரங்கள், உணவு, மற்றும் 12 வகை மங்களப் பொருட்களை ஏழைகளுக்குத் தானமாக அளிக்க வேண்டும். இதில் எழும் தர்மப் பிரகாச சகஜ ப்ராண சக்திகள்தாம் வாழ்வில் தொடர்ந்து வந்து காத்து அருள்கின்றன.

நடுத்தரக் குடும்பத்தினரும், நடுத்தர வர்க்கத்தினரும் பலவிதமாகத் தங்கள் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு வேதனைகளை அடையும் நிலை ஏற்படாதும் காக்க சகஜ ப்ராண தீப சக்திகள் உதவி புரிந்து, இதற்கு மூலாதாரமாக, தக்க மன சாந்தத்தையும் சிறிது, சிறிதாகப் பெற்றுத் தரும்.

ஆத்திரம், படபடப்பு, உணர்ச்சி வசமாதல், அவசரப்படுதல் போன்றவற்றால் எந்தத் துன்பத்தையும் சமாளிக்க முடியாது. பொறுமை, அடக்கம், பணிவு, சாந்தமான மனம், மனோ வைராக்கிய சக்திகள் நிறைந்த குணங்களை முதலில் பெறுதலே அமைதியான வாழ்க்கைக்கு மூலமாகும். இதற்கான, “அருணாசல சகஜ ப்ராணத் தீப சக்திகளைப்” பெற்றிட, உங்கள் ஊரில் உள்ள ஆலயங்களிலும், இல்லத்தின் வாசலிலும் தினமுமே ஒரு மண்டலத்திற்கேனும் பச்சரிசி மாக்கோலமிட்டு, அகல் தீபங்களை ஏற்றிட வழிவகை செய்க!

கார்த்திகை தீப நாளில் ஏற்றப்பெறும் அருணாசலத் தீபமானது, உலகின் அனைத்து இடங்களிலும் நிரவ வல்லது. ஒவ்வொரு குக்கிராமத்தின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஏற்றும் தீபத்திலும் அருணாசல சகஜ ப்ராண தீப சக்திகள் அடைந்து, அனுக்ரக பிரசாதத்தைத் தந்து மீண்டும் அருணாசல தீபத்தை அடையும்.

கலியுக மக்களின் அதிர்ஷ்டமாக, நல்வாழ்வை மலர வைக்க வல்ல அருணாசல தீப யோக ராஜ வைபவ தீபக் கிரணங்களும் நன்கு பரிணமிக்க வைக்க வல்லதாக வந்தமைகிறது.

சிறிது குங்குமப் பூவையும், தாமரைத் தண்டுத்  திரி, பருத்தித் திரியுடன் சேர்த்துத் திரித்து 3, 5 திரிகளாக விளக்குகளில் வைத்து ஏற்றி வழிபடுக!

கார்த்திகை தீபஜோதி தரிசனத்தின் போது ஓத வேண்டிய மந்திரம்:-

ப்ராணே த்ருப்யதி சக்ஷுஸ் த்ருப்யதி
சக்ஷுஷி த்ருப்யத் ஆதித்யம் த்ருப்யதி
ஆதித்யே த்ருப்யதி த்யௌங் த்ருப்யதி
திவி த்ருப்யந்தாம் யத்கிஞ்ச சர்வம் த்ருப்யதி
ப்ரஜயா ப்ரஸன்ன தேஜஸி ப்ரம்ம வர்ச்சஸ்யோ ஜோதீய:
அன்னம் பசுபாலி தேஜஸ், ப்ரம்ம ஜோதீனாம் ஜோதி:
சிவஜோதி, பரஞ்ஜோதி, அருணாசல ஜோதீனாம் பதயே நம:

அருணாசல கருணாமய பரஞ்ஜோதித ப்ரம்மம்
கருணாலய கருணாகர பரமேஸ்வர தீபம்
வருணாம்ருத வரபாலித உண்ணாமுலை சகிதம்
அருணாசல ஜோதீ குண சர்வாலய தீபம்
அருணாசல அருணாசல அருணாசல பரதீபம்
அருணாசல அருணாசல அருணாசல சிவதீபம்
அருணாசல அருணாசல ஜோதீ சிவபாதம்
அருணாசல அருணாசல அருணாசல சிவ ஜோதி

ஓம் மஹா தீபேஸ்வராய வித்மஹே
சதா சர்வஜோதீஸ்வராய தீமஹி
தந்நோ அருணாசல தீப ப்ரசோதயாத்

ஓம் தீபசாராய வித்மஹே
சார பரமேஸ்வராய தீமஹி
தந்நோ அருணாசல தீப ப்ரசோதயாத்

ஓம் ஜோதீஸ்வருபாய வித்மஹே
ஹரி ப்ரம்ம சர்வ தெய்வ வாசாய தீமஹி
தந்நோ அருணாசல தீப ப்ரசோதயாத்

நவசேகர மகரிஷிகள்

“நவசேகர மஹரிஷிகள்” கிரிவலம் வரும் பார்த்திப ஆண்டு அருணாசலத் திருக்கார்த்திகை தீபாம்ச கிரிவல மகத்துவம்!

“நவசேகர மகரிஷிகள்” நலம் பயக்கும் பார்த்திப வருட அருணாசல தீபோற்சவம்!

தினமுமே கோடானு கோடிச் சித்தர்களும், மகரிஷிகளும், யோகியரும் ஞானியரும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து, தம் தவத் திரட்சியை அருணாசல மலை முகடுகளிலும், கிரிவலப் பாதையிலுள்ள தாவரங்களிலும், புல், பூண்டுகளிலும், மண் துகள்களிலும், சிறு கற்களிலும், மேகங்களிலும், மர இலைகளிலும், கொடிகளிலும் இவ்வாறாகப் பல இடங்களிலும், சாதனங்களிலும், பொருட்களிலும், நீர், நிலைகளிலும், ஆகாயத்திலும், பதித்துச் செல்வதால், அருணாசலத்தின் எந்நாளின் எந்தத் தீப தரிசனமுமே, கிரிவலமுமே அபரிமிதமானப் பலன்களைப் பொழிகின்றன.

ஒவ்வொரு வருட அருணாசல கார்த்திகைத் தீப உற்சவ நாட்களிலும், விசேஷமான லோகங்களிலிருந்து எண்ணற்றச் சித்தர்களும், மகரிஷிகளும் தினமுமே குழுக்களாய் வலம் வந்து, அபரிமிதமான தபோ பலன்களைப் பதித்துச் செல்கின்றனர்.

நடப்புப் பார்த்திப ஆண்டில், “நவசேகர மகரிஷிகள்” எனும் ஒன்பது வகை அருந்தவ மாமுனிகள் அருணாசலமாம் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். இந்த நவசேகர அருள் மகத்துவங்கள். பூமியில் வாழ்க்கை முறை பலவற்றிலும் மக்களுக்கு மிகவும் அருள்பலிப்பனவாகும்.

இந்த அரிய விளக்கங்களை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், தம் சற்குருநாதராம் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தரின் திரண்ட குருவருளால் அளிக்கின்றமையால், இதனை நன்கு படித்து, அறிந்து கடைபிடித்து, பிறரும் செய்யும்படி உணர்வித்து, அருட்பணியாற்றிடுக!

பெறுதற்கரிய மானுடப் பிறவியை அடைந்துள்ளதன் காரணமாக, இவ்வகையில் சுயநலமின்றிப் பிற ஜீவன்களின் நலனுக்காக அன்புடன் சேவை புரியும் ஆன்ம சாதனமாக விளங்கிட வேண்டுகின்றோம். இந்த அன்புதான் இறைவனிடம் பக்தியாகக் கனியும். இதுவே, உண்மையாகவே மானுட வாழ்வைத் துய்க்கும் முறையாகும்.

அருணாசலத் திருக்கார்த்திகை உற்சவ தினசரிக் கிரிவலச் சிறப்பம்சங்கள்!

1. “சிரேயஸ் திரிதண்டி” மகரிஷி

கட்டிடத் துறை மேன்மைக்கு உதவும் அருணாசல கிரிவலப் பலாபல சக்திகள்

கட்டிடத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்கள் துறையில் மேன்மைகளையும், நன்மைகளையும், செல்வப் பெருக்கையும் முறையாகப் பெற உதவும் அருணாசல கிரிவல நாள் இதுவேயாம். வாஸ்து சக்திகள் நிறைந்த நாள்!

நன்கு வளர்ந்த பெரிய மரங்களை வெட்டுதல், பாம்புகளைக் கொல்லுதல், வதைத்தல், பாம்புப் புற்றைச் சிதைத்தல், பல செலவினங்களைக் காட்டிக் கூடுதலான தொகையைப் பெறுதல் போன்ற வகையில், கட்டிடத் துறையில் அறிந்தோ, அறியாமலோ சேரும் பெருந்தவறுகள், தீய செயல்கள், பாவ வினைகளுக்கு, ஓரளவேனும் தக்கப் பரிகாரங்களைப் பெற உதவும் அருணாசல கிரிவலம்!

இனிமேல் இவ்வகையான வல்வினைகளைச் செய்யாது தற்காத்துக் கொள்ளவும் துணை புரியும் அருணாசல கிரிவலம்.

இதுவரையில் நிகழ்ந்த இத்தகையப் பெருங்குற்றங்களால், பாவச் செயல்களால் பாதிக்கப் பட்டோர்க்கு உரிய நிவாரணம் தந்து, தக்க வகைப் பிராயச் சித்தங்களைப் பெறவும், “சிரேயஸ் திரிதண்டி” மகரிஷி அருணாசலத்தை வலம் வரும் இன்றையக் கார்த்திகை மாத நாளின் கிரிவலப் பலாபலன்கள் மிகவும் உதவும்.

“திரிதண்டம்” எனும் மூன்று கலவைகள் கொண்ட தண்டமாகிய தவக்கோலைக் கொண்டு, சிவலோகம், திருக்கயிலாயம், வைகுண்ட லோகம் என அனைத்து வகையான லோகங்களுக்கும், நட்சத்திர மண்டலங்களுக்கும் தம் யோகப் புலத்தால் சென்று வரவல்ல மஹரிஷியே, சிரேயஸ் திரிதண்டி மஹரிஷி!

ஸ்ரீபூமிநாதர் மண்ணச்சநல்லூர்

பொதுவாக, ஒரு லோகத்தை சிருஷ்டி செய்வதற்கு முன்னால் ஸ்ரீபிரம்ம மூர்த்தி, சிரேயஸ் திரிதண்டி மகரிஷியைத் துணைக்கு அழைத்துக் கொள்வார். அந்த அளவிற்கு சிருஷ்டித் தத்துவங்களில் கரை கண்டவராயினும், சிரேயஸ் திரிதண்டி மகரிஷி மிகுந்த அடக்கத்துடன் சகல லோகங்களிலும் உறைய வல்லவராய்த் துலங்கிப் பிரகாசிப்பவர்.

ஸ்ரீபிரம்மரின் லோக சிருஷ்டிக்கு உதவும் சிரேயஸ் திரிதண்டி மகரிஷி!

ஸ்ரீபிரம்ம மூர்த்தி ஒரு லோகத்தைச் சிருஷ்டி செய்யும் முன், முதலில் அந்த மண்டலத்திற்கான கட்டிட அமைப்பைக் கோதுமை மாவில்தான் வாஸ்து பூஜைகளை ஆற்றி, நல்பிம்பமாக வடிவமைப்பார். இதன் மேல், சிரேயஸ் திரிதண்டி மகரிஷி, தன் தவப்புலத் தண்டத்தைச் சார்த்தி வைத்துப் பூமி பூஜையைத் தொடங்கிடுவார். இதை ஒட்டித்தான் “சிரேயஸ் திரிதண்டம்” எனும் கொடிக் கம்பமும், தற்போதைய பூமி பூஜையின் போது தரையில் நட்டு வைக்கப்படுகின்றது.

வாஸ்து பூஜையில் வந்தமரும் மாமஹரிஷி!

எனவே, கட்டிடக்காரர்கள் தங்களுடைய பூமி பூஜையின்போது, சிரேயஸ் திரிதண்டி மகரிஷியின் வாஸ்து தன தண்டத்தை, அதாவது அவருடைய அருந்தவக் கோலைச் சிந்தனையில் இருத்தி, “ஸ்ரீதண்டீஸ்வரரைப்“ பிரார்த்தித்து, பூமியில் வைத்திட வேண்டும். இதன் நுனியில் பச்சை, மஞ்சள், நீல நிறப் பட்டு வஸ்திரங்கள், “திரயம்பகப் பரல் கோது” என்பதாகிய மூன்று கோண முடிச்சைப் போல் கட்டப் பெறும்.

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

மேலும், பூமி பூஜைக்கான வாஸ்து ஹோமத்திலும், சிரேயஸ் திரிதண்டி மஹரிஷிக்கான குறித்த காயத்ரீ மந்திரங்களை ஓதி, சந்தனம், அரசு, ஆல் ஆகிய மூன்று சமித்துகளையும், வெட்டிவேர், பிரண்டை, நன்னாரி ஆகிய மூன்று வாஸ்து சக்தி வஸ்துக்களையும் பச்சை, மஞ்சள், நீல வஸ்திரங்களுடன் சேர்த்துச் சுற்றிக் கட்டி, பசு நெய்யில் தோய்த்து,

ஓம் சிரேயஸ் மந்த்ர வதனாய வித்மஹே
தண்டீஸ்வர பாதாய தீமஹி
தந்நோ சிரேயஸ் திரிதண்டி மகரிஷி ப்ரசோதயாத்

என்று ஓதி, ஆஹூதியாக அளித்தல் வேண்டும்.

இன்றைய கிரிவலத்தை வாஸ்து சக்திகள் நிறைந்ததான ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்தின் கம்பத்து இளையனார் சன்னதி அருகே உள்ள சிவகங்கைத் தீர்த்தக் கரையில், தலையில் தீர்த்தத்தைத் தெளித்துக் கொண்டு (இயன்றால் நீராடியும்) தொடங்குதல் வேண்டும்.

அருணாசல கிரிவல நிறைவாக, ஆலயத்தின் பிரம்ம தீர்த்தக் கரையில் (யானையடிப் பகுதி) தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டு யானையை நன்கு தரிசித்து, அதற்கு வயிறு நிறைய உணவளித்துக் கிரிவலத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

கிரிவலப் பாதையில் வாஸ்து சக்திகள் நிறைந்த கிழங்கு உணவு வகைகள், முருங்கைக் காய், புடலங்காய் போன்ற நீளக் காய்கறி உணவு வகைகளைத் தானமாக அளித்தல், கிரிவலப் பலாபலன்களை விருத்தி செய்து, கட்டிடத் துறையில் நல்ல மேன்மைகளைத் தரும்.

ஒரு புறம் பெற்றோர்களைக் காக்க வேண்டிய கடமை, மறுபுறம் மனைவிசார் உற்றத்தையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் இருதலைக் கொள்ளியாக இருப்போரின் வேதனைகளைத் தணிக்க உதவும் கிரிவலப் பலாபலன்களைத் தரும் நாள்.

சொந்தமாக வீடு, வாசல் இல்லாது தவிப்பவர்கள் தக்க நல்வரங்களையும் பெறுவதற்கான தக்க பூஜை முறைகளைத் தந்தருளும் கிரிவல நாள்.

வாஸ்து பூஜைத் தலங்கள்

செவ்வாய்க் கிழமையானது வாஸ்து சக்திகள் நிறைந்த நாளாகும். கட்டிடத் துறைக்காரர்கள், புதுக்கோட்டை – பொன்னமராவதி இடையில் குழிபிறை அருகில் உள்ள செவலூர் ஸ்ரீபூமிநாதர் ஆலயத்திலும், திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் பூமீஸ்வரர் ஆலயத்திலும் வழிபடுதல் விசேஷமானதாகும்.

கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரர் ஆலயத்திலும், செவலூரிலும் வாஸ்து நாளில், சுவாமிக்கு 64 வகை வாஸ்து சக்தித் திரவியங்கள் நிறைந்த அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி, அபிஷேகப் பூஜா சக்திகளை, இங்கு கோமுகத் தீர்த்தப் பிரசாதமாகப் பெற்று, கட்டிட மண், செங்கலில் தெளித்துச் சேர்த்துக் கட்டிட வேலைகளைத் தொடர்தல் நல்ல பலன்களைத் தரும். சக்திமிகு காப்பு சக்திகளையும் தரும்.

ஹோமத்தில் பயனான செங்கல்களை வைத்துக் கட்டிடம் கட்டுதல் மிகவும் விசேஷமானதாகும். சிரேயஸ் திரிதண்டி மஹரிஷி கிரிவலம் வரும் இன்றைய நாளில் ஓத வேண்டிய மாமந்திரங்களாவன:-

மனோயோயம் புருஷோ பா:
ஸத்யஸ் தஸ்மிந் நந்தர் ஹ்ருதயே
யதா வ்ரீஹிர் வா யவோ வா ஸ ஏ ஷ ஸர்வஸ்யேஸான:
ஸர்வஸ்யாதிபதி: ஸர்வமிதம் ப்ரஸாஸ்தி யதிதங்கிஞ்ச

மனோமயமாய் மந்திரப் புருடன்
இருதயப் பாரில் நெல்லி வடிவோன்
ஜோதிப் பிரமாணம் அதுவே அதுவே!
சர்வம் அவனே ஈசன் என்போம்!
ஆயன யாவும் அவன் பொருளேயாம்!
அவனே பீடம் அவனே ஆள்வோன்
யாவும் யாதும் யாவையும் ஈசா!
அருணாசலமே எல்லாம் எல்லாம்!!

2. “உத்தால நேத்திரதாரி மகரிஷி”

ஜவுளித் துறை மேன்மைக்கு உதவும் அருணாசல கிரிவலப் பலாபல சக்திகள்

“உத்தால மரம்” எனும் அபூர்வமான் தல விருட்சமும் உண்டு. திருமண தோஷங்களை நிவர்த்தி செய்யும் சக்திகளைக் கொண்ட தல மரம் இதுவாகும்.

உத்தால மரம் ஆதிமுதலில் பூவுலகில் தோன்றத் தம் தபோ பலன்களை அர்ப்பணித்து, “ஸ்ரீசாகம்பரீ தேவிக்குத் துணை புரிந்தவரே உத்தாதலகர் மகரிஷி ஆவர். பிரசித்தி பெற்ற உத்தாலக வாருணி மஹரிஷியின் சிஷ்யர் இவரே!

திருமகளுக்கு முன்னால் ஜேஷ்டா தேவி தோன்றிய போது, பலரும் ஏற்க அஞ்சிய ஜேஷ்டா  தேவியி உத்தாதலக மஹரிஷியே மனமுவந்து முன் வந்து மணம் புரிந்து கொண்டமையால், சர்வேஸ்வரனே உவப்புடன் அவருக்கு அளித்த பெருவரம் யாதென அறிவீர்களா?

தினமும் காலையில் உறங்கி எழுந்தவுடன், இரு உள்ளங்கைகளையும் விரித்துத் தரிசித்து,  உத்தாதலகர் மகரிஷியை நினைந்து வணங்கிடில், ஜீவன்களுக்கு வாழ்க்கையில் ஒருபோதும் தரித்திரம் அண்டாது காக்கும் என்பதே அச்சிவப் பெருநல் வரமாகும்.

இதனால்தான் பூலோக மானுடர்கள் யாவரும் தினமும் காலையில் எழுந்தவுடன் உள்ளங் கைகளைத் தரிசித்து உத்தாதலகர் மகரிஷியைப் போற்றித் துதிக்க வேண்டும் என்ற நித்தியக் கர்ம நியதியும் உள்ளது. தரித்திரம் என்றால் பணத் தட்டுபாடு என்ற அர்த்தம் மட்டுமல்ல, நல்ல எண்ணங்கள், தவ சித்திகள், யோக சக்திகள், தான ,தர்மச் சிந்தனைகள், தியானப் பலன்களின் குறைபாடும் தரித்திர நிலையேயாம்.

ஸ்ரீசூக்த ஹோமங்களில் உத்தாதலகர் மகரிஷிக்காக, முழு வெண்தாமரைப் பூக்களை, வெட்டி வேர், பிரண்டை, பஞ்ச வில்வ தளங்களை, யானைச் சாணமும், பசுஞ் சாணமும், பசு நெய்யும் கலந்த கோளவகை விராட்டி மேல் வைத்து விசேஷமாக ஆஹுதியாக அளித்து வைத்து ஹோம வழிபாட்டை நிகத்துவதால் தொழிலில் உள்ள பண நஷ்டங்கள் நிவர்த்தியாக நன்கு உதவும்.

உத்தாதலகர் மகரிஷியின் தலைமைச் சிஷ்யப் பீடமே உத்தால நேத்ரதாரி மகரிஷி ஆவார். இவருடைய விசேஷமான யோகப்புல அம்சங்கள் யாதெனில், எந்த லோகத்திலும், விண்ணிலும், மண்ணிலும், வானிலும், நீரிலும், நெருப்பிலும் தனக்குப் பின்புறம் நிகழ்வதைத் துல்லியமாக அறியும் “சூக்கும நேத்திர யோக சாகர சக்திகளைப்” பெற்றவர் ஆவார்.

இந்த அபூர்வமான யோக நேத்திர சக்தியானது, அவருக்கு சர்வ லோகங்களிலும் குருவருளால் சித்தி பெற்று நிகழ்வதால், அனைத்து வகையான தேவ லோகங்களிலும் கூட, மானுட உடலிலேயே தனக்குப் பின்னால் நிகழும் சம்பவங்களைக் காணும் யோக நேத்ர சக்தி ஆற்றல் பெற்றவர் ஆவார்.

சல்லடைக் கண் வஸ்திர வில்வ ஆஹுதி ஹோமம்!

டாக்கா மஸ்லின் போன்று “சல்லடை கண் ஆடை” என்று மிகவும் மெல்லிய ரக ஆடையைக் கூறுவார்கள் அல்லவா! பருத்தி வகை சல்லடைக் கண் வஸ்திரங்களை உத்தால மரத்தடியில் வைத்துப் பூஜித்து, வில்வ ஓட்டிற்குள் வைத்து ஆஹுதியாக இடுதலே விசேஷமானது, கோர்ட் வழக்குகளால் முடங்கிப் போனச் சொத்துக்களை மீட்க இந்த ஆஹூதிப் பூஜை உதவும்.

உத்தால நேத்திரதாரி மகரிஷி அனைத்து வகையான, சகல வண்ண வஸ்திரங்களையும் ஹோமத்தில் ஆஹூதியாக இட்டு, விசேஷமான வஸ்திர வேள்வி யாகத்தை, மயிலாடுதுறை அருகில் உள்ள “நல்லாடை” கிராமத்தில் உள்ள சிவாலயத்தில் மிருகண்ட மஹரிஷியுடன் இணைந்து ஆற்றியவர் ஆவார். இங்குதான் மாமுனிவர் தனக்குப் பேரரசர் அளித்த பட்டாடைகளை ஹோமத் தீயில் இட்டு விட, மாமன்னன் வெகுண்ட போது, அவை அனைத்தையும் நல்லாடைத் தலச் சுயம்புச் சிவலிங்கத்தின் மேல் காணப் பெற்று அருளியவர்.

ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர் நல்லாடை

ஆடையில் உறையும் வஸ்திர தேவதைகள்!

பஞ்சை நூலாக்குகையில், ஒவ்வொரு இழையிலும் தறி, க்னா போன்ற வஸ்திர தேவதைகள் வந்து உறைவதைப் பலரும் அறியார். இவ்வாறு பல வஸ்திரத் தேவதைகள் உறையும் நாம் அணிந்திருக்கும் ஆடைகளே நம்மைப் பலவிதங்களிலும் காக்கின்றன என்பதை இனியேனும் நன்கு அறிக!

ஒரு மனிதனுக்கு அரிய மதிப்பைத் தருவதோடு, மானத்தை இழக்காமலும் காப்பதற்கும் காரணம் ஆடையில் உறையும் சற்குண தேவதைகளே ஆவர். வஸ்திர தானத்திற்குக் கற்பைக் காக்கும் தெய்வீக சக்திகள் உண்டு. பொதுவாக, பருத்தி ஆடைக்கு எதற்குமே முழுமையான பரிபூரணத்துவம் அளிக்கும் ஆன்ம சக்தி ஆற்றல் உண்டு. இதனால்தான் அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானத்தை வைத்துப் போற்றுகின்றார்கள்.

ஹோமப் பூஜை நிறைவுக்குத் துணை புரியும் வஸ்திர சக்தி!

மேலும், பருத்தி வஸ்திரத்தின் மேன்மையை உரைக்கும் வகையில் இதனால்தான் ஹோமப் பூஜையின் இறுதியில் நிறைவாக, பூர்ணாஹூதி அளிக்கையில், அந்தந்த ஹோம குண்டப் பூஜைக்கு ஏற்ற வகையில் குறித்த வண்ண ஆடையில், அனைத்து ஹோம திரவியங்களையும் சிறிது வைத்துப் பூர்ண ஆஹுதியாக அளிக்கின்றோம்.

எனவே, ஜவுளித் துறையில் இருப்பவர்கள், தேவதா சக்திகள் நிறைந்த வஸ்திரப் பண்டங்களுடன் எப்போதும் புழங்குகின்றார்கள் என்பதை இனியேனும் நன்கு அறிந்து நினைவில் வைத்திருக்க வேண்டும். ஜவுளித் துறையினர் உத்தால நேத்ர மஹரிஷி அருணாசல கிரிவலம் வரும் இந்நாளில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து வழிபடுதல் ஜவுளித் தொழிலில் நல்ல மேன்மையும், முன்னேற்றமும் பெற உதவுவதாகும்.

ஜவுளித் துறைக்காரர்கள் (புடவை, ரெடிமேட் என அனைத்து வகைத் துணி வர்த்தகத் துறையினர்) மயிலாடுதுறை அருகே உள்ள நல்லாடை கிரமாத்தின் ஸ்ரீநூதன வஸ்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் மிருகசீரிஷ நட்சத்திரத் தினம் மற்றும் புதன் கிழமைகளில் ஹோம பூஜைகளை ஆற்றியும், ஆலய மூர்த்திகள் அனைவருக்கும் பட்டாடைகளைச் சார்த்தியும், ஏழைகளுக்கு வஸ்திர தானம் அளித்தும் வழிபடுதல் தம் துறைகளில் நன்முறையில் மேன்மை பெற உதவும்.

உத்தால நேத்ரதாரி மஹரிஷி கிரிவலம் வரும் இந்நாளில் கீழ்க்கண்ட மந்திரங்களை ஓதியவாறு அருணாசலமாம் திருஅண்ணாமலையில் மலைவலம் வருதல் அரிய பலா பலன்களைத் தரும்.

புண்யேனான் வாகதம்
பாபேன தீர்ணோ ஹி த தா
ஸர்வான் லோகான் ஸோகான்
ஹ்ருதயஸ்ய பவதி
ஹ்ருதயஸ்ய பவதி
ஹ்ருதயஸ்ய பவதி

பெற்றோர் உற்றோர் கற்றோர் மற்றோர்
சற்றும் இல்லா சாஸ்வத நிலையாம்
தேவம், வேதம், பேதம் காணா
புண்ணிய, பாவம் படரா சுத்தம்
இத்தகு லோகம் இருதய லோகம்
சத்யாகாசம் ஈசன் வாசம்
அருணாசலமே உள்மணி வாசம்
அருணாசலமே உள்மணி வாசம்
அருணாசலமே உள்மணி வாசம்

3. “பரிதண்ட மகரிஷி”

இரும்பு போன்ற உலோகத் தொழில் துறை மேன்மைக்காக உதவும் அருணாசல கிரிவலப் பலாபல சக்திகள்

ஸ்ரீசனீஸ்வரருக்கு உரித்தான உலோகம் இரும்பு என்பது போல, ஒவ்வொரு கிரகத்திற்கும் உரித்தான உலோகமும் உண்டு. மேலும், இரும்புக் கோட்டை, வெள்ளிக் கோட்டை என்பது போலான அந்தந்த உலோகத்தால் ஆன லோகங்களும் விண்வெளியில் உண்டு.

ஒவ்வொரு உலோகத்திற்கும் மூலாதாரக் கனிமங்கள், திரவியங்கள், திரவச் சாரல்கள் உண்டு அல்லவா! இவ்வகையிலான அனைத்து மூலாதார அணுக் கனிமங்களையும் தம் பூமியடி தபோபலன்களால் நன்கு அறிந்தவரே “பரிதண்ட மகரிஷி” ஆவார்.

அனைத்து உலோக சம்ரட்சகப் “பரிதண்டச் சக்கரப் பூஜை”

ராசி சக்கரம் போலான, 108 கட்டங்கள் உடைய பரிதண்டச் சக்கரத்தில் அத்தனை லோகங்களுக்குமான மூலாதாரக் கனிமங்களை வைத்துத் தினமும் தம் சர்வ உலோக லோக மண்டலத்தில் பரிதண்ட மகரிஷி பூஜித்து வருகின்றார். இவருடன் லோக பரிபாலன சக்திகள் நிறைந்த ஆயிரக்கணக்கான மகரிஷிகளும் இந்தப் பரிதண்டச் சக்கரத்தைப் பூஜித்து வருவதால்தான், இதற்கு ஏற்பவே பூவுலகில் உலோகங்களின் இருப்பு அளவு மாற்றம் பெறும்.

பொன் முதல் பிளாட்டினம், தகரம் வரை அனைத்து லோகப் பரிமாணமும் இந்தப் பரிதண்டச் சக்கரப் பூஜை சக்திகளால் வருவதே! பரிதண்ட மஹரிஷியும், சிரேயஸ் திரிதண்ட மகரிஷியைப் போல், ஒரு தவக்கோலைத் தாங்கி பூவுலகை வலம் வருபவர் ஆவார். இந்தப் “பரிதண்டத் தவக்கோலில்” அனைத்து உலோகங்களாலான பூண்களும் அடங்கி இருக்கும்.

இரும்பு, செம்பு, அலுமினியம், பித்தளை, வெள்ளி, தங்கம் போன்ற உலோகத் துறைகளின் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், பாத்திரம், குத்து விளக்கு போன்ற உலோக சாதனங்களைச் செய்பவர்கள், இத்துறைகளில் பணிபுரிவோர் – போன்ற யாவரும் பரிதண்ட மகரிஷி அருணாசலத்தைக் கிரிவலம் வரும் நாளில், இங்கு அருணாசலத்தில் மலை வலம் வருதல் நன்று. இன்று முதியோர்களுக்கு நல்ல உறுதியான பூண்கள் உடையக் கைத்தடிகளைத் தானமாக அளிப்பது பெற்றோர்கள் – பிள்ளைகள் இடையே உள்ள மன வேறுபாடுகளைத் தணிக்க உதவும். பிறரை நம்பி வாழ்வோர் தம் சொந்தக் காலில் நிற்க உதவும் கிரிவல நாள்.

உலோகச் சத்துக்கள் நிறைந்த பொன்னாங்கண்ணிக் கீரை, கொத்தவரங்காய், ஜம்பு நாவல் பழம், தாம்பூலம் போன்றவற்றுடன் பலவகைக் காய்கறிகளும் நிறைந்த சாம்பார் சாத அன்னதானத்துடன் கிரிவலம் வருதல் விசேஷமானது.

ஸ்ரீசனீஸ்வரர் விளங்குளம்

அந்தந்த உலோகத் துறையைச் சார்ந்தோர் வழிபட வேண்டிய ஆலயங்கள் பல உண்டு. இரும்பு வியாபாரத் துறையில் இருப்பவர்கள், பட்டுக்கோட்டை – பேராவூரணி அருகில் உள்ள விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில் மிகவும் அபூர்வமாகத் தம் பத்னியருடன் அருளும் ஸ்ரீசனீஸ்வரரை வழிபட்டு வரவேண்டும்.

தாமிரப் பொருட்களில் வியாபாரம் செய்து வருபவர்கள் அத்தாழநல்லூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் வழிபட வேண்டும்.

இன்றைய அருணாசலக் கிரிவலத்தில் பழங்களை மட்டும் உண்டு, நிறையப் பழங்களைத் தானமளித்தவாறு கிரிவலம் வருதலும் விசேஷமான பலன்களை அளிக்கும்.

பரிதண்ட மஹரிஷி சிறப்பிக்கும் இன்றைய கிரிவலத்தில் ஓத வேண்டிய மாமந்திரங்களாவன:-

ஏஷ நித்யோ மஹிமா
ப்ராமணஸ்ய ந வர்த்தததே
கர்மணா நோ கனீயான்!
தஸ்யைவ ஸ்யாத் பதவித்தம் விதித்வா ந லிப்யதே
கர்மணா பாககே நேதி
விபாபோ விரஜோ விசிகித்ஸோ
ப்ராமணோ பவத்யேஷ ப்ரம்ம லோகே!

அறிவாய் பிரம்மம் அறியாதெதுவோ?
கூடல் இல்லை குறைதல் இல்லை
பூர்ணம் நிறைவு நிறைவே பூர்ணம்
பாவம் தீண்டா பரமம் பிரம்மம்
உன்னுள் ஆத்மம் உறைவது ப்ரம்மம்
ஆத்மம் காண்பாய் ப்ரம்மன் ஆவாய்
நீயும் நானும் எல்லாம் ப்ரம்மம்
அருணாசலமே ப்ரம்மத் துறையாம்!

4. “அரகண்ட தாதோனர் மகரிஷி”

அரசியல் துறையினர் மேன்மைக்கு உதவும் அருணாசல கிரிவலப் பலாபல சக்திகள்!

தாம் பிறந்தது முதல் நல்ல தவநிலைகளை அடைந்து, இறை தரிசனம் பெற்று நிர்மல முக்தி கொண்டது வரை, எத்தகைய சிறு தவறையும் செய்யாத உத்தம மகரிஷியே அரகண்ட தாதோனர் மஹரிஷி ஆவார்.

துர்வாசர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர், ஜனக மகரிஷி, ஔர்வர், ச்யவனர், பாத(நா)ராயண மகரிஷி, பாதநாராயண மகரிஷி, பாதவாரணர், பாதராயணர் போன்ற பாதாம்புஜ மகரிஷிகளாலும் போற்றப்படுபவர். இவர் மகரிஷியாக ஆவதற்கு முன், தம்முடைய தபோ பலன்களால், தாம் சற்றும் எதிர்பாராத இந்திர பதவியைப் பெற்றும். அதை அவர் ஏற்க விரும்பவில்லை.

ஆனால் அப்போது சூரபத்மனின் அடக்கு முறையால் இந்திர லோகமே சிதறிக் கிடந்தமையால், பெரும்பாலான மகரிஷிகளின் விருப்பத்திற்கு ஆட்பட்டு, பெறுதற்கரிய இந்திர பதவியைச் சில காலம் பூண்டவர்.

மேலும், எண்ணற்றச் சுகபோகங்களை உடைய இந்திர பதவியைப் பூண்டும், எவ்விதச் சலனத்திற்கும் ஆளாகாமல், ஒரு தவறும் செய்யாமல் இந்திர லோக ஆட்சியில் பிரகாசித்த இந்திர சக்திப் பூர்வ மகரிஷி, இறுதியில், தம் கடுமையான தவநிலைகளுக்கு இந்திர பதவி ஏற்று வராது என உணர்ந்து, இந்திர லோகத்தைச் செம்மைப்படுத்திய பின் வனத்திற்குத் தவம் பூண மீண்டார்.

இந்திர பதவியில் இருந்த பன்னெடுங்காலத்தும் ஒரு சிறு தவறுக்கும் ஆளாகாத உத்தம மாமுனி! 32 வகை தர்ம நெறிகளிலும் சிறந்தோங்கியவர். சிவபெருமானுடைய தொண்டையில் தங்கிய நஞ்சானது அமிர்தமாக மாறிய இந்த அரிய வைபவத்தை ஸ்ரீஅகஸ்திய மஹரிஷியுடன் சேர்ந்து தரிசிக்கும் பாக்யம் பெற்றமையால், அரகண்ட தாதோனர் மகரிஷி ஆனார்.

விதேக முக்தராம் ஜனகருக்கே அரசியல் பாடம் போதித்த அரகண்ட தாதோனர் மகரிஷி!

பேரரசராக இருந்தும், கைவல்ய முக்தராக, வெள்ளரிப் பழம் கொடியில் கிடப்பது போல், உலகியலில், அரசியலில், ஆட்சியலில் (பூமியில்) பட்டும் படாமலும் தர்ம நெறிகளில் கொழித்த ஜனக மகரிஷி, அரசியலில் அரகண்ட தாதோன மகரிஷியிடம் நித்தியப் பாடங்களைக் கற்றவர்.

நித்திய ஜீவன் முக்தராய்ப் பொலிந்த ஜனக மஹாராஜாவிற்கே பாடம் புகட்டும் அரும் பெரும் ஞானியாய்ப் பிரகாசித்தவர். எனவே ஜனக மாமுனியாலேயே “அரசியல் (தர்மத்) தாத்தா” என போற்றப் பெற்றார். தற்போதையக் கலியுக அரசியல் துறையினர் யாவரும் தினமும்,

“அரகண்ட தாதோதனா! ஆனந்த சிவசாதனா!
அறந் தந்துயரிய ஆகம வித்தே!
எத்துறைச் சத்திரஜித் எந்துறையாளா!
இந்திரப் பருப்பதப் பரஞ்சுடர்ப் பாதா!
குல மங்களத் துறை கூவபுருஷா!
சத்தியத் துறைச் சாதக மாமுனியே!
சரணத் துறையே போற்றி! போற்றி!!”

என தினமும் ஓதி வருவதுடன், அவ்வப்போதும், பிரதோஷ நாளிலும், சங்க நிதி, பதும நிதி தேவதா மூர்த்திகள் அருளும் திண்டுக்கல் – நிலக்கோட்டை அருகே உள்ள மல்லனம்பட்டி ஸ்ரீகலியுகச் சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் தக்க வழிபாடுகளையும், 32 விதமான தர்மங்களையும் ஆற்றி வரவேண்டும்.

இவ்வகை வழிபாடுதான் கலியுகத்தில், பெரும் குழப்பங்களும், எண்ணற்ற மன சஞ்சலங்களும், பகைமையும், சூதும், வாதும், பழிவாங்கும், குணமும், அதர்ம சக்திகளும் நிறைந்த அரசியல் துறையில் பிழை செய்யாது காக்க உதவும்.

பதவி வெறியில் பெரும் பிழை செய்தல், ஜீவன்களை வதைத்தல், பிறர் பொருளை அபகரித்தல், மக்கள் வரிப் பணத்தைச் சூறையாடுதல் போன்ற பெரிய பாவ வினைகளுக்கும், சொல்லொணாக் கடுமையான குற்றங்களுக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ள உதவும்.

அரகண்டநல்லூர்

குடியரசுத் தலைமை, நாட்டின் பிரதம மந்திரி, முதன் மந்திரி, அமைச்சர்கள் என்றவாறாக அனைத்து நாடுகளிலும், அரசியலில் பெரும் பொறுப்புகளை வகிப்பவர்களும் அரகண்ட தாதோனர் மகரிஷியைச் சிந்தையில் இருத்தித் தக்க நெறிமுறைகளைப் பெற வேண்டி வழிபட்டு வருக! இந்த மஹரிஷியே அகில உலகின் அரசியல் துறைக்கான, தெய்வீக வழிகாட்டி என்பதை மனதில் இருத்திக் கொள்க!

திருஅண்ணாமலை அருகே உள்ள “அரகண்ட நல்லூர்” ஆலயமானது அரகண்ட தாதோன மஹரிஷி தினமும் தூல, சூக்கும வடிவுகளில் வழிபடும் தலமாகும். அரசியல் துறையில் இருப்பவர்கள் அரகண்ட தாதோன மஹரிஷி கிரிவலம் வருகின்ற இந்நாளில் அருணாசலத்தைக் கிரிவலம் வருதல் சிறப்புடையது. பலவிதமான அலுவல்களால், தவிர்க்க முடியாத காரணங்களால் இவர்களால் இயலாவிடில், இவர்களின் குடும்பத்தாரேனும் நிச்சயமாக முழுமையாக அருணாசலக் கிரிவலத்தில் பங்கேற்க வேண்டும்.

சூலை நோய், குடல் சுருட்டு நோய் உள்ளவர்களுக்கும் இன்றைய கிரிவலம் நன்மை பயக்கும். அரகண்ட தாதோனர் மஹரிஷி கிரிவலம் வரும் இந்நாளில் கீழ்கண்ட மந்திரங்களை ஓதியவாறு திருஅண்ணாமலையில் மலைவலம் வருதல் சித்தர்களின், மாமுனிகளின் அரிய தபோ பலன்களைப் பித்ருக்களின் ஆசியாகப் பெற்றுத் தரும்.

யா ப்ருதிவ்யாம் திஷ்டன்
ப்ருதிவ்யா அந்தரோ
யம் ப்ருதிவீ ந வே த
யஸ்ய ப்ரிதிவீ ஸரீரம்
ய: ப்ருதிவீமந்தரோ
யமயத் யேஷத
ஆத்மாந்தர்யாம் யம்ருத:

நிலமாய் நிறைவோன் நிர்ச்சலச் சிவனே
ப்ருதிவிப் புலமே ப்ரம்மம் ப்ரம்மம்
நிலமே வாசம் நிலமே வாசி
நிலமே ஞானம் நிலமே அறிவாம்
நின்றே ஆள்வான் ஆலத் துறையான்
நிலை பெறும் நிலமாய் நின் பத நிலமே!
அருணாசலமே நிர்மல நிலமே!

5. அஷ்டபாதத் தினகர மகரிஷி

கப்பல் மற்றும் நீர்வழித் துறை மேன்மைக்கு உதவும் அருணாசல கிரிவலப் பலாபல சக்திகள்

அஷ்டபாதத் தினகர மஹரிஷி அனைத்து விதமான லோகங்களுக்கும் தம் யோகத் திறத்தால் எந்த வடிவிலும் சென்று வரவல்லவர். இவர் ஓரிடத்தில் ஓர் அடி எடுத்து வைத்தால், எட்டு பாதங்களை வைத்து நடப்பது போல் பாத பிம்பங்கள் இருக்கும். எட்டு லோகங்களில் அவருடைய பாத வடிவுகள் காணப் பெறும்.

நீருக்குள் செல்லும் ஜலகமலப் புஷ்ப விமானம், நீருக்கு அடியில் செல்லும் ஜல மண்டல பூதக் கப்பல், காற்றை விட நீரிலும் வானிலும் வேகமாகச் செல்லும் அணு காந்த நீர்வானக் கணை, நெருப்பை ஊடுருவிச் செல்ல வல்ல கண்ணாடித் துழாய்ச் செப்பம் போன்ற விதவிதமான வாகனங்களையும் யோகப் பூர்வமாக இயக்க வல்லவர்.

கால்நடையாகவும் அனைத்து லோகங்களுக்கும் சென்று வருபவர். சைக்கிள் முதல் இரு சக்கர வாகனங்கள், கார், விமானம், கப்பல், ஹெலிகாப்டர், ராக்கெட் போன்ற அனைத்து வித வாகனங்களையும் ஓட்டுபவர்கள், “அஷ்ட பாதத் தினகர மகரிஷியே போற்றி” என்று எட்டு முறை ஓதி வாகனத்தை துவக்குதல், செலுத்துதல், நிறுத்துதல் நன்மை பயக்கும். அனைத்துவிதமான தரை, கப்பல், இரயில், விமானம், கார், பஸ், லாரி, ஆட்டோத் துறையில் பணிபுரிகின்ற சேர்மன் முதல் டைரக்டர், மேனேஜர், ஜெனரல் மேனேஜர், கடைநிலைத் தொழிலாளி வரை அனைவருமே அஷ்ட பாதத் தினகர மகரிஷி அருணாசல கிரிவலம் வரும் இந்நாளில் அடிமேல் அடி வைத்து மெதுவாக கிரிவலம் வருதல் அவரவர் துறையில் நல்ல மேன்மைகளைத் தரும்.

நல்ல பதவி உயர்வும், இட மாற்றம் பெறவும், மேலதிகாரிகள் அல்லது கீழ் பணிபுரியும் ஊழியர்கள் துன்பங்களிலிருந்து விடுதலை பெறவும் உதவும்.

“ஏன் தான் ஆபீசிற்குச் செல்கின்றோமோ?” என்று வாழ்க்கையில் சலித்துக் கொண்டே ஆபீஸிற்குச் செல்பவர்களுக்கு வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாக இந்நாளில் கிரிவலம் வருதல் வேண்டும்.

அஷ்ட பாதத் தினகர மகரிஷி கிரிவலம் வரும் இந்நாளில் கீழ்க்கண்ட மந்திரங்களை ஓதியவாறு திருஅண்ணாமலையில் மலைவலம் வருதல் சிறப்பானப் பலன்களைத் தருவதாகும்.

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத தற்பதம்
தானென்று நானென்ற தத்துவம் நல்கலால்
தானென்றும் நானென்றும் சாற்றகில்லேனே! – திருமந்திரம்

நானென்றறிவது நானதுவாகி
நானிலமாகி நனிப்புலமாகி
அருணாசலமே அருணாசலமே!

யத்ர ஹி த்வைதமித பவதி
ததிதர இதரம் ஜிக்ரதி
ததிதர இதரம் பஸ்யதி
ததிதர இதரம் விஜானாதி
ஸர்வம் விஜானாதி ஸர்வம் விஜானாதி!

6. குஞ்சல கேதார நாத மகரிஷி

கடல் பொருள் துறை மேன்மைக்கு உதவும் அருணாசல கிரிவலப் பலாபல சக்திகள்

கங்க ஜடாதரராக ஈஸ்வரன் அவதரித்த போதும், மஹா விஷ்ணுவான நாராயண மூர்த்தி, மத்ஸ்ய மூர்த்தியாக (மச்சாவதாரம்) அவதாரம் பூண்ட போதும், இம்மூர்த்திகளின் ஜடா கேசத்தில் குஞ்சலமாகப் பிரகாசித்தவரே குஞ்சல கேதார மகரிஷி ஆவார்.

ஸ்ரீகிருஷ்ணரைக் கைக் குழந்தையாய், வாசுதேவர் யமுனை நதியினுள் சுமந்து சென்ற போது, யமுனையால் வருடப் பெற்ற ஸ்ரீகிருஷ்ணரின் பாத கொலுசுவாய்ப் பிரகாசித்தவரும் குஞ்சல கேதாரநாத மகரிஷி ஆவார்.

கடல் பொருட்களான சங்கு, சிப்பி, முத்து, பவளம் போன்ற கடல் பொருட்களை எடுத்துச் சீர் செய்வோர், இத்துறைக்கான வியாபாரிகள், இத்துறைகளில் பணிபுரிவோர் யாவரும் கிரிவலம் வரவேண்டிய நன்னாள்.

நதி, கடல் நீர் மற்றும் கடல்துறை, துறைமுகம் சம்பந்தமான பெருந்தொழிலில் ஈடுபட்டிருப்போரும் கண்டிப்பாகக் கிரிவலம் வரவேண்டிய நாள்.

சில வகைப் பீடாதிபதிகள் எப்போதும் “தண்டமாகிய” மந்திர சித்சக்திகள் நிறைந்த(அறக்) கோலைச் சுமந்திருக்க வேண்டும் என்ற நியதி உண்டு. தபோ சக்திகள் நிறைந்த தண்டம் (மரக்கோல்) இது. குறித்த வகை மூலிகை மர விருட்சமே இதற்கெனப் பயன்படும். குஞ்சல கேதார நாத மகரிஷி இவ்வகையில் “அழிஞ்சல்” மரக் கோலைத் தாங்கி இருப்பார். இவர் தாங்கும் மரக் கோலின் நுனியில் ஒரு குஞ்சலம் கட்டப் பெற்றிருக்கும். அபூர்வமான மரமிது. இதன் விதைகள் மரத்தில் இருந்து தரையில் விழுந்து, தரையில் ஊர்ந்து மீண்டும் மரத்திலேயே ஒட்டிக் கொள்ளும் பண்புடையது.

ஒரு வருடத்தில் வரும் வசந்த ருது, க்ரீஷ்ம ருது, வர்ஷ ருது, சரத் ருது, ஹேமந்த ருது, சிசிர ருது ஆகிய ஆறு ருதுக் காலங்களில், ஒவ்வொரு ருதுக் காலத்திலும் சந்தனம், வில்வம், வேம்பு, தேக்கு, அரசு, புண்ணிய விருட்சம் ஆகிய ஆறு மரங்களிலிருந்து பூஜித்து பெறப்பட்ட (அறக்) கோலை, அதாவது தண்டத்தைக் கொண்டு அருணாசல கிரிவலத்தை மேற்கொண்டு பலதலங்களிலும் உள்ள பைரவ மூர்த்திக்குச் சார்த்துவார்.

பைரவருக்கு மரத் தண்டம் சார்த்தும், நேர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டச் சிவாலயங்களே “பைரவ பூமி” எனப் போற்றப் பெறுகின்றன. இப்பகுதியில் பைரவ மூர்த்திக்கு (மரத்) தண்டம் சார்த்தும் பூஜை முறை உண்டு. இந்நேர்த்தியானது தீய பழக்க, வழக்கங்களைச் சிறிது சிறிதாக நிவர்த்தி செய்ய மிகவும் உதவும்.

குஞ்சல கேதார மகரிஷி தாங்கி வரும் தண்டத்தில் பொன், வெள்ளி, தாமிரம், வெண்கலம் போன்று மிக முக்கியமான உலோக வளையங்கள் மாட்டப் பெற்றிருக்கும். இவை வேத, மந்த்ர, யந்த்ர சக்திகளைக் கொண்டவை. கூந்தலுக்குக் குஞ்சலம், ஜடை, சவுரி, ரிப்பன், ஹேர்பின் இடுகையில், “குஞ்சல குஞ்சல கேதார நாத, கூர்ம நாராயண கேசவ கவசம்!” என்று ஓதி அணிதல் வேண்டும்.

கடல்துறைப் பொருட்கள் லட்சக்கணக்கில் உண்டு. மீன் போன்ற ஜீவன்கள் முதல் முத்து, சிப்பி, சங்குகள் – எனப் பல கடல் துறைப் பொருட்களிலும் உள்ளோர் கிரிவலம் வர வேண்டிய நன்னாள்.

கடல் அடியிலும் பல்வகை ஜீவன்களும், மனிதர்களும் வாழும் லோகங்கள் பல உண்டு. பவளம் போன்ற கனிமங்களும் உண்டு. குஞ்சல கேதார மகரிஷி தெய்வ மூர்த்திகளின் திருமேனியில் குஞ்சலமாகப் பொலிந்தவர். கேசவப் பெருமாள், ஆதிகேசவ மூர்த்தி, சென்ன கேசவன், ஆதி கேசவன் போன்ற பெயர்களுடன் அருளும் இறை மூர்த்திகளின் கேசத்தில் தவம் புரிந்தவர்.

இன்றைக்கும் திருவையாறு தலத்தில் சிவஜடையை பஞ்ச நதிகளால் போஷிப்பவராகவும் திகழ்கின்றார். கடல்துறை பொருட்களில் வணிகம் செய்வோர், தயாரிப்போர் இன்று அருணாசலத்தில் கிரிவலம் வருதல் சிறப்பைத் தரும். இன்று சிப்பி மாலைகள், கடல் முத்து மாலைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்து கிரிவலம் வருதல் மிகவும் சிறப்புடையது.

இந்நாளில் கீழ்க்கண்ட மந்திரங்களை ஓதியவாறு அருணாசலமாம் திருஅண்ணாமலையில் மலைவலம் வருதல் அரிய பலா பலன்களைத் தரும்.

“ப்ரஜ்ஞானம் ப்ரம்மேதி வா அஹம்
ப்ரம்மாஸ்மீதி வா பாஷ்யதே
தத்வமஸீத்யேவ ஸம்பாஷ்யதே
அயமாத்மா ப்ரம்மேதி வா
ப்ரம்மைவாஹ மஸ்மீதி வா”

ஆத்மம், பிரம்மம், அம்பாள், வித்யை
ஆத்ம சாகரம் பரசுத சிவமாம்
ஆத்ம தேவம் அகச்சிவப் பரமாய்
ஆத்ம நாதம் அருணாசலமே!
ஆத்ம தேவம் அருணாசலமே!
ஆத்ம சாதனம் அருணாசலமே!
ஆத்ம தீபம் அருணாசலமே!

7. வருண வாஹலீச மகரிஷி

எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் துறை மேன்மைக்கு உதவும் அருணாசல கிரிவலப் பலாபல சக்திகள்

வருண லோகத்தில் எப்போதும் தவம் புரிகின்ற வருண வாஹலீஸ மகரிஷியின் தபோபலன்கள், மின்னல், இடி, மழை, மூலமாகப் பூமியை வந்தடையும். இவருடைய அற்புதச் சீடரே வாமனருக்குத் தங்கக் குடை பிடிக்கும் பாக்யம் பெற்ற வருணா ஜ்வாலதீப ஜாலேந்த்ர மகரிஷி ஆவார்.

எலக்ட்ரிகல் துறை, எலக்ட்ரானிக்ஸ் துறையில் இருப்பவர்கள், படிப்பவர்கள், பணி புரிபவர்கள், பேரராசிரியர்கள் போன்று யாவரும் வருண வாஹலீச மகரிஷி அருணாசல கிரிவலம் வரும் இந்நாளில் கிரிவலம் வருதல் சிறப்புடையதாகும்.

இன்னிசைக் கருவிகளை இசைக்கின்ற் ஏழை வித்வான்களை இசைக்கச் செய்து, அவர்களுடன் கிரிவலம் வருதல் நன்று. எலக்ட்ரிக் பல்ப், ரேடியோ, டீவீ, மானிட்டர், தயாரிப்பாளர்களும் போன்ற வண்ணத் துறையில் இருப்பவர்களும் இந்நாளில் கிரிவலம் வந்திடல் வேண்டும்.

மின்சாரச் சாதனங்களை இயக்கும் முன்பு, “வருண வாஹலீசா வந்தித சரணம் அருண பாதுகாபவன மாச்ரயந்தம்” – என்று ஓதுதல் நன்று.

இந்நாளில் கீழ்க்கண்ட மந்திரங்களை ஓதியவாறு அருணாசலமாம் திருஅண்ணாமலையில் மலைவலம் வருதல் அரிய பலாபலன்களைத் தரும்.

“ஸர்வம் ஜகதிதம் த்வத்தோ ஜாயதே
ஸர்வம் ஜகதிதம் த்வத்தஸ்திஷ்டதி
ஸர்வம் ஜகதிதம் த்வயி லயமேஷ்யதி
ஸர்வம் ஜகதிதம் ஸர்வம் ப்ரத்யேதி
த்வம் சத்வாரி வாக்பதானி!”

பரமும் நிலமும் பாரும் வானும்
சிவபத பதசிவ சிவப் பொருளாமே
ஐந்துறை, ஐம்பொருள் அத்தனைப் புலமும்
அருணாசலமே நின் பொருளாமே!

8. தும்பி சிரபங்க மகரிஷி

பெட்ரோல் மற்றும் ஆழ்நிலை மூலப்பொருள் துறை மேன்மைக்கு உதவும் அருணாசல கிரிவலப் பலாபல சக்திகள்

ஆழ்நிலைக் கனிமங்களான பெட்ரோல், நாப்தா போன்ற பூமியடிக் கனிமப் பொருட்களைத் தயாரிப்பவர்கள், இத்துறையில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் உரித்தான கிரிவல நாளே “சிரபங்க மஹரிஷி” அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்ற இத்திருநாளாகும்.

பெட்ரோலைப் பிரித்தெடுக்கும் பெரும் தொழிலதிபர்கள், பெட்ரோலியத் தயாரிப்பாளர்கள், பெட்ரோல் விநியோகத் துறையினர், பெட்ரோலைப் பயன்படுத்தும் துறையினர் என அனைவரும் வந்திட வேண்டிய நன்னாள்.

“சிரபங்கம்” எனில் தலையைச் சாய்ப்பதல்ல. கலியுக மனித சமுதாயத்தைப் படாதபாடு படுத்தி, மனதிற்குள் குடி கொண்டு ஆட்டிப் படைக்கும் பிரம்மாண்டமான அரக்க சக்திகளான ஆணவம், கர்வம், அகங்காரம்,  ego எனப்படும் ஆணவத் தீய மலம் போன்றவற்றைக் களைய வல்ல முறையே ஆன்மீக ரீதியான சிரபங்கம் ஆகும். ஸ்ரீ(ஆர்த்ர) கபாலீஸ்வரரை உபாசித்து உன்னதமான ஸ்ரீகபாலீஸ்வரத் தரிசனத்தை அனைத்து லோகங்களிலும் பெற்ற மஹரிஷி!

கலியுலகில், மேற்கண்ட ஆணவம், கர்வம், அகங்காரம், ego யாவும் பதவி, செல்வச் செழிப்பு, அதிகாரம், உடல் வலிமை, பண பலம், ஆள் பலம், அதிகார பலம் போன்றவற்றால் மனிதர்களுக்குள் எளிதில் புகுந்து விடுகிறது.

குறிப்பாக, இவையாவும் பெரும் பணக்காரர்களையும், பெரும் பதவி வகிப்பவர்களையும், அரசியல் துறையில் இருப்பவர்களையும் அண்டிக் குடிகொண்டு விடுகிறது. மனிதனை மெல்ல, மெல்லச் சாய்க்கும் பெரும் அரக்க நோய்கள் இவை.

தும்பி சிரபங்க மகரிஷி யோக மார்கமாக எந்த லோகத்தும் சென்று வரவல்லவர். அனைத்து நட்சத்திர மண்டலங்களுக்கும் விண்ணில் பறந்து செல்ல வல்லவர். பிறக்கும் போதே ஸ்வர்ண ஜடாமுடியுடன் பிறந்தவர். அனைத்துக் கிரக மண்டலங்களும் இவருக்கு பாதநடைத் தூரமே! இவருடைய ஜடாமுடி, தரையைத் தொடும் அளவிற்குப் பூரித்து விரிந்திருக்கும்.

பூமியடிலிருந்து தோன்றிய மாமுனி, இவர் பூவுலகில் தோன்றும் போதே ஆழ்நிலை மூலத் தைல எண்ணெய் வகைகளைச் சிரசில் சுமந்து வந்தார். எனவே, மூல எண்ணெய் வகைத் திரவியங்களையும், இதற்கான மூலப் பகுப்புச் சூத்திரங்களையும் நன்கு அறிந்தவர்.

அபிஷேக ஆராதனைகள் இல்லாது தைலக் காப்பு, மூலிகைப் பூச்சு மட்டுமே இட்டுப் பூஜிக்கப் பெறும் திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள், திருநின்றவூர் ஸ்ரீராமர், திரைலோக்கி ஸ்ரீரங்கநாதர் போன்ற மூர்த்திகளுக்கான தைலக் காப்புகளை அனைத்து யுகங்களிலும் பல வழிமுறைகள் மூலமாக அளித்து வருபவர்.

இம்மாமுனி இன்றைய நாளில் அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்ற திருநாளாகும். எனவே, தும்பி சிரபங்க மஹரிஷி நாமத்தைச் சிந்தையில் இருத்தி, கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதி அருணாசலக் கிரிவலம் வருதல் வேண்டும். ஆழ்கனிமத் துறையினருக்கு நன்மை பயக்கும் நாள். மேற்கண்ட துறைகளில் இருப்போர் பாதாள லிங்கம், பாதாள விநாயகர், பாதாள ஐயனார் போன்ற பூமியடியில் உள்ள மூர்த்திகளுக்குக் கிழங்கு வகை உணவு வகைகளை வைத்தும், வெட்டிவேர் மாலை சார்த்தியும், வெட்டிவேர் தைலக் காப்பிட்டும் வழிபட்டு வருதல் வேண்டும்.

இந்நாளில் கீழ்க்கண்ட மந்திரங்களை ஓதியவாறு அருணாசலமாம் திருஅண்ணாமலையில் மலைவலம் வருதல் அரிய பலாபலன்களைத் தரும்.

பும்லிங்கம் ஸர்வமீசானம்
ஸ்த்ரீ லிங்கம் பகவத்யுமா
உமா ருத்ராத்மிகா ஸர்வா: ப்ரஜா:
ஸ்தாவர ஜங்கமா:
ப்ரயோஜனார்த்தம் ருத்ரேண மூர்த்திரேகா த்ரிதாக்ருதா:
ருத்ரோ விஷ்ணு ருமா லக்ஷ்மீஸ்
தஸ்மை தஸ்யை நமோ நம:

ஆணாய் பெண்ணாய் அத்தனையாமே
காணாய் ஒன்றாய் சிவனுறை உமையது
வானாய் மரமாய் ம்ருகமாய் யாவும்
அண்ணாமலையே அருணை வடிவாம்!

9. மச்சகால லாவண்ய மஹரிஷி

கப்பல் மற்றும் வாகனத் துறை மேன்மைக்கு உதவும் அருணாசல கிரிவலப் பலாபல சக்திகள்

சிவபெருமான் மீனவராக வடிவெடுத்து வந்த போது, ஸ்வர்ண மீனாக வந்து ஆதிசிவனுடன் அருளியவரே பெருமாள் மூர்த்தியாவார். இத்தருணத்தில் பிரம்ம மூர்த்தியும் பொன் வலையாகத் தோன்றிப் பிரகாசித்தார். மும்மூர்த்திகளின் சர்வசாகர ஜோதி தரிசனத்தை ஒருசேரப் பெற்றவரே மச்ச கால லாவண்ய மஹரிஷி ஆவார். இந்த தெய்வத் திருவிளையாடலில் மும்மூர்த்திகளின் சதங்கைகளாகவும், அவர்கள் தம் திருக்கரங்களில் அணிந்திருந்த மணி கங்கண் ஆகவும், அம்பிகையின் மூக்குத்தியாகவும் பொலிந்தவரே மச்சகால லாவண்ய மகரிஷி ஆவார்.

பன்னெடுங்காலம் பாற்கடலில் கூர்ம அவதாரமாகப் பொலிந்திருந்த விஷ்ணு மூர்த்தியின் கூடவே இருந்து பாற்கடலின் அடியில் அதியற்புதமான சேவைகளை ஆற்றியவர். பாற்கடல், தேன் கடல், உப்புக் கடல், நன்னீர் கடல் என விண்ணுலகில் பல கடல்கள் உண்டு. இவை அனைத்திலும் கூர்ம மூர்த்தி உறைந்த போது மச்ச வடிவிலும் பெருமாளுக்கும், திருமால் அர்ச்சங்களுக்கு மகரிஷி அரும்பெரும் சேவைகளை ஆற்றி உள்ளார்.

அவருடைய மகத்தான சேவைகளில் மற்றொன்றாக, பூவுலகில் உள்ள அனைத்து சிவகங்கைத் தீர்த்தங்களையும் ஸ்தாபித்தவரே மச்சகால லாவண்ய மகரிஷி ஆவார். கங்கா தேவிக்காகச் சிவபெருமானின் சிரசில் மதகுப் புனலை அமைத்துத் தந்தவர். திருஅண்ணாமலை ஆலயச் சிவகங்கை தீர்த்தமும் ஒரு சாவித்ரீ கல்ப காலத்தில் இறையருளால் இவரால் தோற்றுவிக்கப் பெற்றதே!

இவர் கார்த்திகை தீப உற்சவத்தின் விஷ்ணு தீப நாளில் அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்றார். கப்பல் வணிகம், கப்பல் கட்டும் துறை, கப்பல் போக்குவரத்து, கப்பல் துறைப் பணியாளர்கள் என்று கப்பல் துறையைச் சார்ந்த யாவரும் கிரிவலம் வரவேண்டிய திருநாள் இதுவாகும். பருத்தி ஆடைத் துணிகளை அணிந்து கிரிவலம் வருதல் வேண்டும்.

பூக்குடல் எனப்படும் பூக்கள் நிறைந்த பூக்குடையைச் சுமந்து  ஆங்காங்கே இறை மூர்த்திகள் நாக மூர்த்திகள், தீர்த்தங்கள், மூலிகை விருட்சங்கள், பசுக்களுக்கு புஷ்பங்கள் இட்டு வழிபட்டவாறே கிரிவலம் வருதல் நன்று.

சிறு, சிறு பிரச்னைகளால் அடிக்கடி மனக்கசப்பு பெறும் தம்பதிகள் நல்ல சுமூகம் பெற உதவும் கிரிவல நன்னாள். இந்நாளில் கீழ்க்கண்ட மந்திரங்களை ஓதியவாறு அருணாசலமாம் திருஅண்ணாமலையில் மலைவலம் வருதல் அரிய பலா பலன்களைத் தரும்.

ஓங்காரேணாந் தரிதம் யோ ஜபதி
கோவிந்தஸ்ய பஞ்சபதம் மனும்
தஸ்யை வா ஸோ தர்சயே தாத்மரூபம்
தஸ்மான் முமூட்சுரப்யஸேந் நித்ய சாந்த்யை
வைஷ்ணவம் பஞ்சவ்யா ஹ்ருதிமயம் மந்த்ரம்
க்ருஷ்ணாவ பாஸம் கைவல்ய
ஸ்ருத்யை ஸதத மாவர்த்தயேதிதி

ஹரிபஜம் உள்ளாய் ஓங்காரத்வம்
ஓங்காரஜபம் கோவிந்தமதே
பஞ்சத் துறையும் மாதவன் துறையே
ஸ்ரீஹரி கிருஷ்ணா சின்மயம் தாராய்
ஹரிஹர ஹரஹரி எல்லாம் சிவமே
அருணாசலமே அரிஅரக் கூடம்!

கோதூளிக் குளம்படி தூசி லிங்கச் சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே!

திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

“கோதூளி” என்றால் பசுவின் கால் குளம்படிப் பட்ட புனிதமான மண் என்று பொருளாகும். பிரம்மா, விஷ்ணு, சிவன் முதல் திருமகள், கலைமகள், பார்வதி தேவி உட்பட அகஸ்தியர் மாமுனி, குபேர மூர்த்தி வரை அனைத்துத் தேவாதி தேவ தேவதா மூர்த்திகளும், சித்தர்களும், மாமுனிகளும் பசுவின் உடலில் உறைகின்றனர் என்றால், பசு எத்தகைய உத்தம தெய்வீக சக்திகளை உடையது எனச் சிந்தனையில் இருத்தி வைத்துப் பாருங்கள்!

தினமும் பசுவைத் தொட்டுக் கும்பிட்டு வலம் வந்து வணங்குவது தரித்திர நிலையை நீக்க வல்ல மிகவும் எளிய வழிபாடு ஆகும். “கோதூளி நீராடல்” என்பதாகப் பசுவின் கால் குளம்படி பட்ட மண் துகள்களை நீரில் இட்டு நீராடுதல், “கோதூளி ஸ்நானம்” ஆகும். மிகவும் சக்தி வாய்ந்த நீராடல் முறை! தலைமுறை, தலைமுறைகளாகத் தொற்றி வரும் தோஷங்களைப் போக்க வல்லது.

பசுவின் குளம்படித் திருமண் லிங்கம்

பசுவின் கால் குளம்படி பட்ட மண்ணை, ஒரு மஞ்சள் துணியில் கட்டி, வீட்டில் வைத்திருந்தால், எத்தகைய காத்துக் கருப்பு தோஷங்களும் வாராது, அண்டாது காப்பதுடன், தற்காப்புச் சக்திகளையும் பெற்றுத் தருவதாகும். அருணாசலமாம் திருஅண்ணாமலைப் புனித பூமியில், பன்னெடுங்காலம் உறைந்து, பல்லாயிரக்கணக்கான பசுக்களின் குளம்படித் திருமண்ணை பக்தியுடன் திரட்டி, பல “கோதூளி லிங்கங்களைப்” பிரதிஷ்டை செய்து, ஜாதி, மத பேதமின்றிச் சகல விதமான மக்களும் வழிபடும்படி அருணாசலத் திருப்பணிகளை ஆற்றியவரே “கோதூளிக் குளம்படி தூசி லிங்கச் சித்தர் பெருமான்” ஆவார்.

திருத்தவத்துறையில் பசுந்தவம்

திருத்தவத்துறை எனப்படும் லால்குடியில், 1675 ஆண்டு வாக்கில் “பினாகீ சிவாச்சாரியார்” எனும் உத்தமர் தவ வாழ்வை நடத்தி, மக்களுக்கும் பிற ஜீவன்களுக்கும் நலம் பயக்கும் முறையில் தியாகமயமாக அருட் தொண்டாற்றி வந்தார்.

இவருடைய நித்தியக் கர்மங்களுள் ஒன்றே, தினமும், ஊர், ஊராக நடந்து சென்று, (தானியத்) தவிடைப் பிட்சையாகப் பெற்றுப் பசுக்களுக்கு அன்புடன் அளித்துப் போஷித்து வருவதாகும். அக்காலத்தில் லால்குடி ஆலயக் கோசாலையில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்டப் பசுக்கள் பொலிந்தன.

அரிசி, கோதுமை மற்றும் ஏனைய தானியங்களின் தவிடைப் பிட்சையாகப் பெறும் போது, பினாகீ குருக்கள் நிறைய வேத மந்திரங்களை ஓதி, தவிடைத் தானமாக அளிப்பவர்களின் நலத்திற்கும் உரிய ஆசீர்வாத மந்திரங்களையும் ஓதுவார். அக்காலத்தில் தண்ணீரையும், தவிடையும் எவரும் விற்பது கிடையாது. வீட்டு வாசலில் தான, தர்மத்திற்காக நீர்ப் பானையை, தவிட்டுப் பானையை எடுத்து வைத்து விடுவார்கள்.

தவிடு தானம் தரித்திரம் போக்கும்!

“பினாகீ சிவாச்சாரியார் தவிட்டு பிட்சை எடுக்க வருகின்றார்!” என்றால் வீட்டு வாசலில் ஆவலுடன் நின்று வரவேற்று அவர் சுமந்து வரும் கூடையில் தவிட்டை நிரப்புவார்கள். இவரும் கொட்டிய தவிட்டிலிருந்து ஆசீர்வாதப் பிட்சையாக ஒரு சிமிட்டிகைத் தவிடை எடுத்து அளித்தவருடைய பாத்திரத்தில் இடுவார். இது மிகவும் சக்தி வாய்ந்த ஆசீர்வாதப் பிரசாதம் ஆகும். இதனை மீண்டும் அவரவர் வீட்டு அரிசி மற்றும் தவிட்டுப் பானையில் சேர்த்திட்டால், “தவிட்டுப் பானையில் பொன் கூட்டம்” என்பது ஐதீகம். இதனால் பலருடைய தரித்திர நிலையும் மாறி நன்னிலைகளை அடைந்தனர். தவிடு தானத்திற்கே இவ்வளவு மஹிமை!

இதிலும், “அவிட்ட நட்சத்திரம் தவிட்டுப் பானை நிறையத் தங்கம்!” என்ற முதுமொழிக்கேற்ப, அவிட்ட நட்சத்திர நாளில், பசுக்களுக்கான உணவாகத் தவிடைத் தானமாக அளிப்பது, வீட்டில் செல்வ கடாட்சத்திற்குப் பெரிதும் உதவும். இவ்வாறு, லால்குடியிலும் சுற்றுப் புறத்திலும் இவருடைய அருட்பணி மிகவும் பிரசித்தி பெற்றதாயிற்று.

தவிடைப் பறித்த தனசேகர சிவம்!

50 வருடங்களுக்கும் மேலாக ஒரு நாள் கூடத் தவறாது, இந்தக் “கோ தர்மக் கைங்கர்யத்தைப்” பினாகீயார் ஆற்றி வந்த போது, சிவபெருமான் இவரைச் சோதித்து ஆட்கொள்ள விழைந்து, ஒரு பண்ணையார் வடிவில் வந்து திருவிளையாடலைப் புனைந்தார்.

ஒரு நாள்...

எப்போதும் பிரம்ம முகூர்த்தத்தில் தவிடு பெறும் பிட்சைக் கைங்கர்யத்தைத் தொடங்கும் வழக்கம் உள்ள பினாகீ சிவாச்சாரியாருக்கு, அன்று ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. எங்கு சென்றாலும் இவருக்கு முன்னரேயே குதிரை வண்டியில் வந்த ஒரு பண்ணையார் அனைத்து வீடுகளிலும் தவிட்டைத் தானமாகப் பெற்றுச் சென்று விட்டார் என்ற் செய்தி தான் அது! இது பற்றி அவர் சந்தோஷப்பட்டாலும், சென்ற இடமெங்கும் இதே பதில், வந்தமையால், இது ஒரு “இறைலீலை” என உணர்ந்தார். ஆனால் இந்த இறைச் சோதனையில் வெற்றி பெற வேண்டுமே!

பசுக்களை வைத்து யாகங்கள் ஆற்றுவதற்காகப் பண்ணையார் அதிக அள்வில் தவிடை வண்டியில் அள்ளிச் சென்றார் என்ற செய்தியே அனைத்துப் பகுதிகளிலும் மிதந்து வந்தது. பசுவேள்வி என்பதால் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த அனைத்துத் தவிட்டையுமே அவருக்கே அளித்து விட்டார்கள்.

“ஏன் அள்ளிக் கொண்டீரையா?”

பினாகீ குருக்களும் திருத்தவத்துறைப் பகுதி முழுவதும் அலைந்து, அலைந்து களைப்படைந்து, அருகில் உள்ள பூவாளூர், சிறுதையூர், அன்பில், திருமாந்துறை, வாளாடி போன்ற அனைத்துக் கிராமங்களுக்கும் சென்றார். எங்குமே அதே பண்ணையார் தவிட்டை வாங்கிச் சென்று விட்டதாக அறிந்த போது, அவருக்கு ஒருபுறம் வியப்பும், மறுபுறம் வருத்தமும் ஏற்பட்டது.

“பசுக்களை ஒரு வேளை கூட வாட விடலாகாது அல்லவா? ஒரு வேளை, “பசுக்களுக்கு தான் தான் உணவளிக்க வேண்டும்!” என்ற அகந்தையும், ஆணவமும், கர்வமும் தன்னுள் ஏறி விட்டதோ! இதை அகற்றத்தான் இந்தச் சிவலீலையோ!” என்று அவர் எண்ணலானார். அன்று, அவருடைய பயணம், சிறிது சிறிதாக ஸ்ரீரங்கம், திருஆனைக் கோயில் என்று திருச்சி வரைசென்றது. அனைத்து இடங்களிலும் பண்ணையார் சம்பவத்தையே அனைவரும் உரைத்த போது, இதில் ஏதோ இறை சூட்சுமம் நிறைந்துள்ளது, என்ற முடிவிற்கு வந்தார்.

எனினும், “பசுக்களுக்குத் தவிடு இல்லாமல் ஊர் திரும்புவதில்லை!” என்ற சங்கல்பம் கொண்டு, அதுவரையில் திருத்தவத்துறை காயத்ரீ நதிக் கரையையே பன்னெடுங்காலம் தாண்டாதவர் அன்று தஞ்சாவூரில்தான் நிறைய தவிடு கிடைக்கும் என்று கேள்விப்பட்டு குதிரை வண்டியில் பயணித்தார்.

கிட்டியதே கிட்டாதது!

அந்தி சாயும் முன் ஊர் திரும்பிட, வேண்டி அவர் தஞ்சாவூருக்கு வண்டியில் விரைந்து சென்று விசாரித்த போது, அங்கே ஒரே ஒரு கடையில் மட்டும் தவிடு இருந்தது. அவரும் சோதனையாக “விலைக்குத்தான் தருவேன்!” என்று உறுதியாகக் கூறி விட்டார்.

“பசுவின் உணவான தவிடை விற்றால் பாவங்களே சேரும்!” என்று கூறியும் அவர் பிடிவாதமாக தவிடை இலவசமாகத் தர மறுத்து விட்டார். ஆங்காங்கே தன் நிலையைச் சொல்லிக் கடனாகப் பணம் பெற முயன்றும், சோதனையாக எவருமே அவருக்கு உதவ முன் வரவில்லை. இதனைக் கண்டு மிகவும் மனம் நொந்த பினாகீ சிவாச்சாரியார் காவேரி ஆற்றங்கரையில் அமர்ந்து, “இறைவா! என்ன சோதனை இது” என்று கண்ணீர் மல்க வானத்தை நோக்கி மனதாரப் பேசி அழுது, அங்கிருந்த ஒரு சிறு கற்பாறையில் தன் தலையை மிகவும் பலமாக மோதினார்.

முட்டிய பாறைக்குள் ஒட்டிப் பரந்த மாமுனி..!

என்ன ஆச்சரியம்! அவர் மோதிய சிறு பாறை இரண்டாகப் பிளந்திட....

அதன் நடுவே ஒரு மகரிஷி தவக்கோலம் பூண்டு அமர்ந்திருந்தார். “மாமுனியின் தவத்தைக் கலைத்து விட்டோமே!” என்று அஞ்சிய சிவாச்சாரியார், அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் நெடுநேரம் வீழ்ந்து கிடந்த அவரை, அந்த மாமுனிவர் எழுப்பி அவரைப் பற்றிக் குசலம் விசாரித்தார். இவரும், தான் தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்த நிலையைச் சொல்லித் தன்னை நம்பித் தன் ஊரில் நீர் கூட அருந்தாது காத்துக் கிடக்கும் பசுக்களின் வருத்தத்தை எடுத்துரைத்துத் தனக்கு மாமுனியின் ஆசிகளை விட, அப்போதைக்குத் தவிடுதான் வேண்டும்!” என்று கூறிடவே, மாமுனிவர் சிரித்தார்.

“அடியேன் இந்தப் பாறைக்குள் தவம் புகப் பூண்டு பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. அடியேனுக்கு உலக நடப்பே எதுவும் தெரியாது. நான் வாழ்ந்த யுக தர்மம் வேறு, இப்போது நிகழும் கலியுக தர்மம் வேறு!, அக்காலத்தில், பசுக்கள் புல்லையும், தழைகளையும் புசித்தமையால், “தவிடு” என்றால் என்னவென்றே அடியேன் அறியேன்!” என்று உரைத்த அந்த மகரிஷியார், ஒரு பிடி மண்ணை எடுத்துப் பினாகீ குருக்களிடம் தந்து, உனக்கு வேண்டியதை இதில் ஆக்கிக் கொள்!” என்று சொல்லி, மண்ணோடு, பொன்னான ஆசியும் தந்தார்.

“தவிடு போதுமப்பா! அடியேனுக்கு உதவிடு!”

ஆனால், இன்றோடு உன்னுடைய பசுக்களுக்கான அறப் பணிவு நிறைவு பெறுகின்றது. இப்பணியை இனி நன்கு தொடரும்படி ஊர் நல்லோரிடம் அளித்து விட்டு, அடியேனிடம் வந்து சேர்!” என்று உறுதியான குரலில் ஒலித்தார்.

அவரளித்த மண்ணை சிறிதே உதறினாலே மூட்டை மூட்டையாய்த் தவிடு கொட்டிடுதே! தவிடை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பிய பினாகி சிவாச்சாரியாருக்கு ஒரே ஆச்சரியம்! ஊர் முழுதும் இருந்த பசுக்கள் எல்லாம், காலையில் இருந்தே “அம்மா, அம்மா!” என்று குரல் கொடுத்தபடி, ஊர் எல்லையில் இவர் வரவை எதிர்நோக்கி நின்றன. இதில் அனைத்து வீட்டுப் பசுக்களும், பக்கத்து கிராமத்துப் பசுக்களும் ஒன்று சேர்ந்து கொண்டன. இதைக் கண்டு ஊரே வியந்தது!

எந்தப் பசுவுமே பினாகீயார் வரும் வரை ஒருவாய் கூட நீர் அருந்தவில்லை, ஒரு சிறிது துளி புல்லைக் கொடுத்தாலும் கூட அதையும் உண்ண மறுத்தன! அனைத்துப் பசுக்களுமே, ஊர் எல்லையில் திரண்டு பினாகீயாரின் அன்பான வரவுக்காகக் காத்திருந்தன.

அக்கம் பக்கம் ஊர் மக்களும் இந்தக் கலியுக அற்புதத்தைக் கண்டு சந்தோஷத்துப் பெருந் திரளாய்க் கூடினார்கள்.

பசுக்குல வலம்

அனைத்துப் பசுக்களும் எழுப்பிய “அம்மா” கோஷம் விண்ணை எட்டியது. இவற்றை எல்லாம் பரமானந்தத்துடன் பார்த்துக் கொண்டே வந்து சேர்ந்த பினாகீ சிவாச்சாரியாரைச் சுற்றி அனைத்துப் பசுக்களும் வலம் வந்தன. சுற்றுப் புற கிராமங்களில் உள்ள அனைத்துப் பசுக்களும் இதில் கலந்து கொண்டன.

உடனே பீனாகீ சிவாச்சாரியாரும் நடுவில் அனைத்துப் பசுக்களையும் நிற்க வைத்து, ஆனந்தமாக “கோசூக்த மந்திரங்களை” ஓதிடவே, ஊர் மக்கள் யாவரும் கலந்து கொண்டு வலம் வந்து வணங்கினர். அக்காலத்தின் பிரம்மாண்டமான மகத்தான கோ பூஜையாக அது மலர்ந்திடவே, நன்மழை பெய்து வருண மூர்த்தியும் ஆசீர்வதித்தார்.

இதில் நிகழ்ந்த பிரமாதமான அற்புதம் என்னவென்றால், தஞ்சாவூரிலிருந்து ஒரு பிடி மண்ணை மட்டுமே தாமரை இலையில் கொணர்ந்த பினாகீ சிவாச்சாரியார், அந்த இடத்தில் காவேரிப் பிடி மணலானது, கவினுறு நறுமணம் கூடிய தவிடாய்ப் பல்கிப் பெருகி விருத்தி அடைந்து, அனைத்துப் பசுக்களுக்கும் நிறைந்து வந்ததாலும் இந்த இடத்திற்குப் பசும்பொன் கொல்லை என்று பெயர்.

பிடித்த பிடி, சிவப் பிடியே!

இதன்பிறகு, இந்தக் கைங்கர்யத்தைப் பல சத்சங்கங்களிடம் பிரித்து அளித்து அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு, கண்ணீர் மல்க திரும்பிப் பாராது தஞ்சாவூர் பூமிக்கு வந்து சேர்ந்தார் பினாகீ குருக்கள். தனக்குப் பிடி மணல் தந்து, “பிடியதன் உருஉமைப் பாகனின்” அருட் கனலையே ஆசியாகத் தந்த மாமுனியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார்.

பிறகு அவரைத் தன் தோளில் சுமந்து கொண்டு பல சுயம்புத் தலங்களில் அவருடன் சேர்ந்து தரிசனம் செய்து வந்தார். இறுதியில் அவர்கள் அருணாசலமாம் திருஅண்ணாமலை புண்ணிய பூமியை வந்தடைந்தனர். இங்குதான் அம்மாமுனிவர்  பினாகீயாருக்கு கோதூளி லிங்கப் பூஜை முறையையே உபதேசமாகத் தந்து அருளினார். அதாவது பசுவின் கால் குளம்படி பட்ட மண் துகள்களைத் திரட்டித் தக்க மாமறை மந்திரங்களை ஓதி, மூலிகா பந்தனம் செய்து லிங்கமாக்கி, “கோ பாத தூளி லிங்க தரிசனமாக” மக்களுக்கு அளித்து விளக்கினார்.

வந்தவர் “கோ பாத துளிச் சித்தரே!”

இது போன்று திருஅண்ணாமலை கிரிவல வளாகத்தில், “108 பாதத் துளி லிங்க தரிசனங்கள்” உண்டு. இவருவருமே சேர்ந்து கிரிவலம் வந்து பூஜித்த 108 கோ பாத தூளி லிங்க வடிவுகள் அனைத்தும் திருஅண்ணாமலையில் ஐக்யமடைந்து, இன்றைக்கும் பல பசுந்துறை தரிசனங்களாகக் காட்சி அளிக்கின்றன.

பினாகீ சிவாச்சாரியாரும் அங்கு மாமுனிவர் போல் வந்திட்டவரே “கோ பாத துளிச் சித்தர்” என அறிந்த போது “என்னே பிறவிப் பயன்!” என உரைத்துப் புளகாங்கிதம் அடைந்தார்! இருவரும் ஒரு பார்த்திப ஆண்டின் மகா சிவராத்திரியில் ஒன்றி திருஅண்ணாமலையில் ஐக்யமாயினர்.

குறித்த யுகங்களில் குறித்த சில ஆண்டுகளில் இருவராகவும், ஒருவராகவும் மாத சிவராத்திரியில் கிரிவலம் இவர்கள் மிகவும் அபூர்வமாக இருவராகக் கிரிவலம் வரும் நாளாக இம்மாத சிவராத்திரி நாள் அமைகின்றது. லட்சக் கணக்கான பசுக்களின் குளம்படி மண்ணிலிருந்து திரட்டிய துகள்களிலிருந்து ஆகிய கோ பாத தூளி லிங்க மூர்த்திகளைத் தாபித்த சிவநெறிக் கோமான்கள் ஆதலின், இந்த கார்த்திகை மாத சிவராத்திரியில், மஹா பக்தியுடன் கோ பாத தூளி லிங்கச் சித்தர் மற்றும் பினாகீ நாத சிவாச்சாரியாரின் அருள் தொண்டினைச் இருத்திய வண்ணம் அருணாசலமலை வலம் வருதல் மிகவும் விசேஷமானதாகும்.

பசுமறைத் துதியுடன் மலைவலம்!

“கோ சூக்தம்” (பசுக்களுக்கான வேதமறைத் துதிகள்) ஓதியவாறு கிரிவலம் வருவோர்க்கு, அவரவருடைய பக்தி நிலையைப் பொறுத்து, பசுக்களைப் பூஜித்த கோபூஜா பலன்கள் வந்தமைய அருள் சுரக்கும், “கோசூக்தம்தனை” அறியாதோர் “கோசூக்தம்” ஓதுபவர்களையும் வரவழைத்து, “கோசூக்தம்” ஓதியவாறு கிரிவலம், வருதல் சிறப்புடையதாகும்.

பால், தயிர், வெண்ணெய், மற்றும் பால் வகைப் பொருட்களைத் தானமாக அளித்தல் கிரிவலப் பலன்களைப் பன்மடங்காக்கும்.

மாதசிவராத்திரி கிரிவலப் பலாபலன்கள்!

பால், நெய், பால் துறைப் பொருட்களைத் தயாரிப்போர், வியாபாரிகள், பாலாடை மற்றும் பால்துறைத் தயாரிப்பு, விற்பனைத் துறையில் இருப்பவர்கள், பசு வளர்ப்பவர்கள், கண்டிப்பாக கிரிவலம் வந்து வழிபட வேண்டிய அருணாசல கிரிவல நாள் இதுவேயாம்.

பால் உறை குளிர் பதனத் துறை, பாலாடை, பால்கோவா, பால் பவுடர் துறையைச் சேர்ந்த அனைவரும் நிச்சயமாகத் திருஅண்ணாமலையில் கிரிவலம் வரவேண்டிய நாள்.

வீட்டில் பசுவை வளர்ப்பவர்கள் அறிந்தோ, அறியாமலோ பசுவிற்குச் செய்த குற்றங்கள் (அடித்தல், உதைத்தல், உணவளிக்காமை, நீராட்டாமை) போன்ற தோஷங்களிலிருந்து ஓரளவேனும் மீள்வதற்குத் தக்கப் பிராயச்சித்தம் கிடைக்க வழி பிறக்கும்.

ஊசி போட்டுப் பசுவிடம் பால் கறத்தல் மகா கொடிய செயலாகும். இதற்குப் பரிகாரமே கிடையாது. கன்றுக்குப் பால் ஊட்டாது, வியாபாரத்திற்காகப் பாலை முழுதும் கறத்தலும் கொடிய பாவமே, இவற்றுக்கெல்லாம் ஓரளவேனும் பரிகாரங்களைப் பெற, இத்தகைய பாவங்களைச் செய்தோர் இன்று கிரிவலம் வர வேண்டும்.

பால் வளத் துறைப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வோரும் தங்கள் துறையில் வளம் பெற வேண்டி கிரிவலம் வர வேண்டிய நாள், பசுவிற்கும், கன்றுக்கும் வயிறார உணவளித்து விட்டுப் பசு, கன்றுடன், தம் குடும்பத்தோடு கிரிவலம் வருதல் சிறப்புடையது.

பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கவும், குடும்பத்தோடு ஆற்றும் இம்மாத கிரிவலப் பலன்கள் நன்கு உதவி செய்யும். இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தோர், இருவரும் சேர்ந்து வலம் வருதலால் வாழ்வில் நல்ல நன்மைகள் கிட்டும். இரட்டையர்களில் ஒருவர் மட்டுமே இருந்தாலும் அவரும் இம்மாத சிவராத்திரி நாளில் கிரிவலம் வருதல் நலம் பயக்கும்.

பிறர் மனம் நோகப் பேசியவர்கள் பிறர் மனம் நொந்து போகும் வகையில் காரியங்களைச் செய்பவர்கள் தம் வாழ்வில் ஓரளவேனும் பரிகாரம் பெற இதுவும் ஒரு நல்வாய்ப்பே! நன்கு பயன்படுத்திக் கொள்க!

நட்சத்திர லிங்கங்கள்

27 நட்சத்திரங்களுக்குமான வழிபாட்டுத் தலங்களும், நட்சத்திர மரங்களும் உண்டு. அந்தந்த நட்சத்திர நாளில் அந்தந்த நட்சத்திர லிங்கத்தையும், நட்சத்திர மரத்தையும் தரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும்.

நட்சத்திர லிங்க வழிபாட்டு மஹிமை!

நம் திருஅண்ணாமலை அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பாக, 27 நட்சத்திர வழிபாட்டுத் தல விளக்கங்களை, அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான வகைகளை மட்டும் ஆயுட்கால நட்சத்திர வழிபாட்டுத் தல விளக்கங்களாக, மூன்று நூல் தொகுதிகளாக அளித்துள்ளோம். படித்து அறிந்து, பிறருக்கும் உரைவிக்கும் அருட்பணியை மனதார ஆற்றுவீர்களாக!

நீங்கள் பலருக்கும் எடுத்துரைத்தால், உங்களால் இயலாததை அவர்கள் செவ்வனே நன்கு ஆற்றுதல் கூடும் அல்லவா!

ஒவ்வொரு நட்சத்திர தேவியும், தத்தம் நட்சத்திர மண்டலத் தேவதாமார்களுடன் ஒன்று சேர்ந்து வழிபட்டுச் சிவலிங்க பூஜைகளை ஆற்றிச் சந்திர மூர்த்திக்குப் பெருந்துணையாய் நின்றனர். இதனால்தான் நட்சத்திர தேவதா வழிபாடு கணவனுடைய நலம் பேணும் உத்தம வழிபாடாக விளங்குகின்றது.

புராண வைபவங்களில், மானுடர்கள் போல் அனைத்து வகை விரதங்களையும், பூஜைகளையும் கடைபிடித்து, சந்திர மூர்த்திக்குப் பக்க பலமாய்த் துலங்குவதுடன், அந்தந்த நட்சத்திர நாட்களில் தக்க பூஜைகளை ஆற்றுவோர்க்கும் தம் பூஜா பலன்களையும் நல்குவதால்தான், சந்திர மூர்த்தியை மணக்கும் பெரும் பாக்யம் பெற்று, ஜீவன்களின் வழிபாட்டிற்கும் உரியவர்கள் ஆகின்றனர். மேலும் நட்சத்திரப் பூஜையும், நட்சத்திரத் தல வழிபாடும் கலியுகத்தில் எளிய பூஜையாக நன்கு மேன்மை பெற்று விளங்குகின்றது.

தட்சனின் புதல்விகளான 27 நட்சத்திரத் தேவியருமே சிவபூஜையின் சிறந்த சிவச் செம்மல்கள் ஆவர். 27 நட்சத்திர லிங்கங்களையும் ஒரு சேர தரிசிப்பது மிகவும் விசேஷமானதன்றோ! நட்சத்திர மூர்த்திகள் வழிபட்ட சிவலிங்கங்கள் தாம், அந்தந்த நட்சத்திரப் பெயரிலேயே சிவலிங்கங்களாக, சில சிவத்தலங்களில் (சென்னை – திருவொற்றியூர், திருவிடைமருதூர்) இன்றும் வழிபாட்டிற்கு உள்ளன.

ஆதிமூல நவகிரக மூர்த்திகள்

தேவர்களுக்குக் குரு, “பிரகஸ்பதி” என்றும், அசுரர்களுக்கு குரு “சுக்ராச்சார்யார்” எனவும் நாமறிவோம். கலியுகத்தில் மனிதன் தேவ குணங்கள், நல்குணங்களுடன் கலந்து வாழ்வதால் இரு குரு அம்சங்களும் ஒருமித்து வழிபடும் ஞான தட்சிணாமூர்த்தி வழிபாடே நல்ல பகுத்தறிவைப் பெற்றுத் தரும். சூரியன் முதல் ராகு, கேது வரை இம்மூர்த்திகளை நவகிரக மூர்த்திகளாக மட்டுமே பலரும் அறிந்திருக்கின்றார்கள். நவகிரக மூர்த்திகளுக்கும், மூத்த ஆதி கிரக மூர்த்திகள், நவகிரக சக்தி பரிபாலன மூர்த்திகள், உற்சவத் திருமேனி மூர்த்திகள் என்று நவகிரக மூர்த்திகளிலும் வகைகள் உண்டு. ஆதி மூல நவகிரக மண்டலங்களில்தாம், ஆதிமூல நவகிரக மூர்த்திகளை நாம் தரிசிக்க முடியும். இத்தகைய ஆதிமூல நவகிரக மண்டலங்களில் இருந்துதாம் அந்தந்த நவகிரக மூர்த்திகள் தோன்றுகின்றனர். ஆலயங்களில் பொதுவாக நாம் காண்பவை நவகிரக மண்டல அதிபதி மூர்த்திகள் ஆவர். தனித்துச் சன்னதி கொண்டருளும் சூரிய, சந்திர சனீஸ்வர மூர்த்திகள் தனித்துறை தெய்வ அம்சங்களைப் பூண்டு அருள்பவர்கள் ஆவர்.

தேவர்கள், அசுரர்கள் எனப் புராண சம்பவங்களில் நாம் காண்பது நற்குணங்களுக்கும், தீய குணங்களுக்கும் உள்ள குண மாறுபாடு ஆகும். தீய குணங்களின் வசப்பட்டால் எத்தகைய தீமைக்ள் ஏற்படும்?

தவத்தால், இறை வழிபாட்டால் கிட்டும் புண்யசக்திகளை விரயம் செய்தால் எத்தகைய பாதகங்கள் உண்டாகும்?

பல்வகை விரதங்கள், பூஜைகள், தான தர்மங்களில் மிகவும் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் புண்ய சக்தி எவ்வாறு பேராசை, பொறாமை, தீய குணங்கள் போன்ற தீயவற்றில் கழிகின்றது?

எவ்வாறு நல்லோர்க்கும் சோதனைகள் ஏற்பட்டுத் தீயதின்பால் வசப்படுகின்றனர்?

என்றவாறாக புனிதத்திற்கு, புனிதமற்றனவற்றுக்கும் இடையே உள்ள பெருத்த சோதனைப் போராட்டங்களின் நிகழ்வே, தேவர்கள், அசுரர்களின் புராணச் சம்பவங்களாகும்.

கலியுலகிலும் அசுரர்கள் உண்டே!

கோபம், விரோதம், குரோதம், பகைமை, பொய்மை, பொறாமை, முறையற்ற காமம் போன்ற அனைத்துமே அசுர குணங்கள்தாம்! இவை அகன்றால்தாம் முழுமையான ஆறறிவு உடையவனாக மனிதன் பரிபூரணமாக வாழ முடியும்.

கலியுகத்திலும் அசுரர்கள் உண்டு என்பதை நாம் பன்முறை விளக்கி வந்துள்ளோம். கலியில் உருவத்தளவில் தேவர்கள், அசுரர்கள் இல்லையானாலும், மனிதர்களுக்கு மனத்தளவில் எத்தகைய அசுர எண்ணங்கள் எல்லாம் ஏற்படுகின்றன என அறிந்து கொண்டால்தான் கலியிலும் அசுர குணம் உண்டு என உணர முடியும்.

மேற்கண்ட அசுர குணங்களை நிவர்த்தி செய்ய நட்சத்திர லிங்க வழிபாடுகள் உதவும். ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், வாழ்வில் அனைத்து நட்சத்திர நாட்களிலும் வாழ்வதாலும், பூர்வ ஜன்மங்களில் பல நட்சத்திரங்களில் பிறந்திருக்கக் கூடும் என்பதாலும், குடும்பத்தாரும் பல நட்சத்திரத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதாலும், அனைவருமே அனைத்து நட்சத்திரத் தலங்களிலும் வழிபடுதலே நன்று.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய நட்சத்திர விருட்சமும் உண்டு. இதனை அவரவர் இடத்தில்  வளர்த்துத் தினமும் வீட்டிலேயே நட்சத்திர விருட்சப் பூஜையை ஆற்றி வருதல் பெரும் பாக்யமன்றோ!

மற்றவர்கள் அல்லது பிளாட்களில் வசிப்பவர்கள் விருட்சம் வளர்க்க இட வசதி போதாமையாக இருப்பவர்கள். கோயில் அருகாமையில் இருக்கின்ற பூந்தோட்டங்களில், நந்தவனங்களில் வளர்த்து, பராமரித்து பூஜித்தல் வேண்டும்.

ஸ்ரீவிளக்கொளிப் பெருமாள்

மின்சாரத் தடைத் துன்பங்கள் அகல உதவும் காஞ்சிபுரம் ஸ்ரீவிளக்கொளிப் பெருமாள் ஆலயம்!

மின்சாரம் கலியுக இயந்திரங்களின் மூலமாக இருக்கிறது. எனவே, மின்துறையில் பணி புரிவோர், மனித சமுதாயத்தின் ஒட்டு மொத்த ஏசலுக்கு ஆளாகாது மிகவும் பொறுப்புடனும், லட்சியத்துடனும், பணிபுரிதல் வேண்டும், மின்சக்தி ஒரு நிமிடம்கூட இல்லையெனில், வீட்டு வாழ்க்கையும், அலுவலகப் பணியும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்பது உண்மைதானே! ஆனால், இதற்காக மின்துறையில் பணி புரிவோர், “தம் பணியால்தாம் அனைத்துலகும் இயங்குகிறது!” என அகங்காரமாக ஒரு போதும் எண்ணுதல் கூடாது!

ஸ்ரீவிளக்கொளிப் பெருமாள் ஆலயம்
காஞ்சிபுரம்

உலக மனிதச் சமுதாய வாழ்க்கைக்குத் தினமும் உதவ வல்ல மின்துறையில் தாம் பணிபுரியும் பாக்கியம் பெற்றமைக்காக, ஸ்ரீதீபப் பிரகாச பெருமாளுக்கு நிதமும் நன்றி செலுத்த வேண்டும், மேலும் மின்துறையில் இருப்போர், “தங்களால்தான் வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும், பெரிய பெரிய கம்பெனிகளுக்கும் மின்சாரமே வரும். தாங்கள் மின் இணைப்பு கொடுக்கா விட்டால், அனைத்துமே இயங்காது, மக்களுடைய நித்ய வாழ்க்கை ஸ்தம்பித்து விடும்” எனறு ஒரு போதும் தற்பெருமையாக, ஆணவமாக எண்ணுதல் வேண்டாம்.

மின் இணைப்புகளைத் தக்க சமயத்தில் கொடுப்பது, சமுதாயத்தில் நிறைய ஆசிகளைப் பெற்றுத் தரும். இதில் தாமதம் வந்திடில், பலரும் ஏசுவதால், மக்கள் மிகவும் வேதனைப்பட்டுச் சபிக்கும் போது சம்பந்தப்பட்ட மின்துறையினருக்கு வாழ்க்கையில் பலத்தத் துன்பங்கள் உண்டாகும்.

மின்சக்தி இல்லாததாலோ, அடிக்கடி மின்இணைப்புத் துண்டிக்கப்படுவதாலோ, மின்இணைப்புத் தாமதமானாலோ, பலத்த நஷ்டங்களும், மனவேதனைகளும் பலருக்கும் ஏற்படுவதுண்டு. இதற்கு என்ன நிவர்த்தி செய்வது?

காஞ்சீபுரத்தில் அருட்பெருஞ் சோதியாய், தீபப் பிரகாசராய், விளக்கொளிப் பெருமாள் என்ற பெயர் கொண்டு அருள்கின்றார், சூரிய ஜோதி, சந்திர ஜோதி, நட்சத்திர ஜோதி, விளக்கு ஜோதி, விறகு ஜோதி, சாம்பிராணி ஜோதி, கற்பூர ஜோதி, ஊதுவர்த்தி ஜோதி என உலகின் பல்வகை ஜோதிப் பிரகாசங்களுக்கு அக்னி, தீப சக்திகளை அருள்பவர்.

அனைத்துக்கோடி நட்சத்திரங்கள், சூரிய, சந்திர கிரகங்களுக்கும் பிரகாச வரம் அளிப்பவர். இத்தலத்தில் வருடம் முழுவதும், பெருமாளுக்கு எல்லா நாட்களிலும், முடிந்த போதெல்லாமும் எட்டுத் திக்குகளிலும் பல்வகைத் தைலங்களால் விளக்குகளை ஏற்றி வழிபட்டும். இல்லத்திலும்,

“ஓம் தத்புருஷாய வித்மஹே தீபப் பிரகாசாய தீமஹி
தந்நோ நாராயண தீபப் பிரசோதயாத்”

என்று, 108 முறை ஓதி, தீபங்களை ஏற்றி வழிபட்டு வந்தால், தேவையான மின்சாரமும், மின்இணைப்பும் தக்க தருணத்தில் தடைபடாது கிட்டிட விளக்கொளிப் பெருமாளின் அனுகிரகம் கைகூடும். மின் சக்தியும் ஆன்ம தீப சக்தியின் வகையே! மின்னலில் ஏற்படுவதே மின்சார தீப சக்தி!

நட்சத்திர சமையல்

பெண்களுக்கு உரித்தான ஆன்மீகச் சமையல் முறை (அஸ்வினி நட்சத்திரம்)

அம்மாமாருங்கோ கேளுங்கோ, ஐயாமாருங்கோ, நல்லாப் பாருங்கோ...! – ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தர் வாக்கு!

அன்னசாரமே கலியுக மனிதனை வாழ வைப்பதால் மனித குணம் உண்ணும் உணவைப் பொறுத்தே அமையும். பல உடல் நோய்களையும், மன நோய்களையும், மனச் சுமைகளையும் தக்க உணவு முறை மூலம் நன்கு குணப்படுத்த முடியும், கலியில் உணவே சர்வ ரோக நிவாரணி! உணவே மாமருந்து! உணவே ஆன்ம சக்திப் பொருள்! அவசர அவசரமாய் உண்ணாமல் நிதானமாய் உணவு ஏற்றல் நலம் தரும்!

பொதுவாக, அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரித்தான பெண்கள் அழுத்தமானவர்கள், மனதில் இருப்பதை மிக எளிதில் வெளியில் சொல்ல விரும்ப மாட்டார்கள், தனக்கு ஒருவர் மீது பூரண நம்பிக்கை வந்த பிறகே, தன் மனதில் இருப்பதை வெளியில் சொல்வார்கள்.

அஸ்வினி நட்சத்திரத்திற்கு 360 கலைகள் உள்ளன. இந்த 360 கலைகளையும், மேம்படுத்துவதற்கான 360 விதமான ஆன்மீக உணவு வகைகள் உள்ளன. இவற்றை அந்தந்த நட்சத்திரக்காரர்கள் நன்கு அறிந்து, பயின்று, சமைத்துத் தன் குடும்பத்தினருக்கும் கொடுத்து, அன்னதானமும் செய்து வந்திடில், அவரவருடைய நட்சத்திரக் கலைகளில் அருட்சக்தி பெருகி, சமயோஜித புத்தியும், காரியங்களில் திறம்படச் செயல்படுவதற்கான உத்தமர்களின் அனுகிரகமும் பெற வழி வகுக்கும்.

அஸ்வினி நட்சத்திரத்திற்கான 360 கலைகளில், 12ஆவது கலையை இந்த மாதம் எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த கலையின் பெயர் “திரிபலம்” ஆகும். இக்கலை தரும் அருள் யாதெனில், அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய உணவு வகைகளை இவர்கள் கையால் செய்தால், இவர்கள் செய்கின்ற காரியங்களில் மனோதிடமும், நலன்களையும் பெறலாம்.

இந்த உணவுப் பொருளை இறைவனுக்கு படைத்துத் தான, தர்மம் செய்வதால் குடும்பத்திலுள்ள எதிரிடை சக்திகள் தீரும். நல்ல காரியங்களுக்காகக் கேட்டவரிடம் கடன் வசதிகள் கிடைக்கும். ஆனால் கடனாக வாங்கியதை முறையாகத் திருப்பித் தருதல் வேண்டும்.

இவ்வாறாக ஆன்மீக ரீதியாகவும், லௌகீகமாகவும் அளப்பரிய பலன்களைத் தரும் வகையில் நம் பெரியோர்கள் ஆன்மீக சமையலை வருத்துத் தந்தார்கள். இங்கு நாம் காணும் அஸ்வினி நட்சத்திர சக்திகள் நிறைந்த “வெந்தய இட்லி” உணவால், சூரியனின் திரிகோணப் பார்வையில் வேகம் தணிந்து நல்விளைவுகள் கிட்டும்.

வெந்தயம் என்பது மூலிகைத் தானியமாகும். உஷ்ணத்தைத் தணிக்கும். மூளைச் சூட்டையும் தணிக்க வல்லதாகையால் மூளை நாளங்களை மேம்படுத்தும். அறிவுத் திறனை விருத்தி செய்து, தேவையற்ற கோபம், பகைமை, விரோத உணர்வுகளைத் தணிக்கும்.

இந்த “வெந்தய இட்லி” உணவைச் சமைத்தலும், குடும்பம், உற்றம், சுற்றத்துடன் உண்ணுதலும், தான தர்மமாக அளித்தலும் நிறைய நன்மைகளைத் தரும். அரசியல், அரசாங்கத் துறை, அரசுத் துறை அலுவலகர்கள், பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் பல்வகைத் துன்பங்களைத் தணித்துத் தீர்க்கவல்லதாகும்.

மேலும் வெந்தய உணவு தர்மம் செய்பவர்களை நன்கு காக்கின்றன. இந்த ஆன்மீக சக்திகள் நிறைந்த சமையலாலும், அன்னதானத்தாலும் குடும்பமும், உற்றமும், சுற்றமும், சமுதாயமும் பகைமை உணர்வுகள் இன்றி நன்கு அமைதியுடன் வாழ உதவும். அனைவரும் இதனைச் சமைத்துப் பலாபலன்களைப் பெற இயலும் எனினும்,

குறிப்பாக அஸ்வினி நட்சத்திர நாளில் சமைப்பதும், அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் சமைப்பதும் விசேஷமாகப் பன்மடங்கான பலாபலன்களைத் தரும்.

வெந்தய இட்லிக்குத் தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 3கப்
வெந்தயம் – 25 கிராம்
சோயா பீன்ஸ் – 50 கிராம்
கல் உப்பு – 3 டீ ஸ்பூன்

செய்முறை விளக்கம்

வெந்தயத்தையும், சோயா பீஸ்ன்ஸையும் 3 மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். அரிசியைத் தனியாக 2 மணி நேரம் முதல் 3 மனி நேரம் வரை ஊற வைக்கவும். வெந்தயத்தையும், சோயா பீன்ஸ்ஸையும் கிரைண்டரில் தனித் தனியாக மிருதுவாக அரை மணி நேரம் அரைத்துக் கொள்ளவும்.

திருத்துறைப்பூண்டி

இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து பிறகு உப்பைச் சேர்க்கவும்., எப்போதும் மாவை அரைத்த பின்புதான் உப்பைச் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க!

குறைந்தது 15 மணி நேரம் வைத்து (இட்லி மாவுத் தன்மைக்காகப்) புளிக்க வைக்கவும், மறுநாள் அனைத்தையும் நன்றாகக் கலந்திடுக! குக்கர் தட்டில் எண்ணெய் தடவி, ஒரு அங்குலம் உயரத்திற்கு மாவை ஊற்றவும், சுமார் அரை மணி நேரம் நன்றாக வேக வைத்து “வெந்தய இட்லியாக” எடுத்து வைக்கவும்.

விநாயகர், சந்திர மூர்த்தி, அஸ்வினி நட்சத்திர மூர்த்திக்குப் படைத்துப் பரிமாறவும்.

குறிப்பு: வெந்தய இட்லி தயாரிக்கத் தொடங்கும் முதல் அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய துதிகளை ஓதியவாறே சமைத்தல், மாவு அரைத்தல் போன்று அனைத்துக் காரியங்களையும், நிகழ்த்துதல் உணவின் சுவையையும், ஆன்மீக சக்திகளையும் நன்கு மேம்படுத்தும்.

அஸ்வினி நட்சத்திரத் தலமாகப் பொலிவது திருத்துறைப்பூண்டி “ஸ்ரீபவஔஷதீஸ்வரர்” ஆலயமாகும். ஆலயத்தில் வழிபட்டு, வேதசக்திகள் நிறைந்த வெந்தய இட்லிகளைத் தானமாக அளித்தல் சிறப்புடையதாகும்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் அஸ்வினி நட்சத்திர சமையலின் போது ஓதவேண்டிய மந்திரங்கள்!

சுமனாய வந்தித தேவ மனோகரி
அஸ்வினி தேவி சஹாய க்ருபே!

வண்டமர் பூஞ்சோலைக் கற்பகமே
வந்தெனக்கருள் அஸ்வினி பொற்பாதமே! போற்றி!

வருவன கண்டேன் வளர்மதி திருஅஸ்வினி அரும் பூண்டு
இரு வினை களையும் இரட்டைக் கணபதி பாதக் காப்பே!

கரியடி தூசி லிங்கச் சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்.

மனிதனுக்கு நல்வரம் தரவல்ல தெய்வீகப் பிராணிகள்!

“கரி” என்றால் யானை என்று பொருள் உண்டு அல்லவா, கரி அடி தூசி லிங்கம் என்றால், யானையினுடைய காலடி பட்ட மண் துகள்களைத் திரட்டி ஆக்கப் பெற்ற லிங்கம் என்று பொருள். ஒரு பிராணியின் காலடியில் இருக்கும் மண், எவ்வாறு புனிதமாக இருக்க முடியும்?

அனைத்து விலங்குகளுக்கும் இவ்வாறு சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். சகல கோடி தேவதா மூர்த்திகளும், தேவதைகளும் குடியிருக்கும் ஜீவ சாதனமெனில் என்னே பசுவின் மஹிமை! மனித மலமும், சிறுநீரும் நாற்றமெடுக்க, பசுவின், சாணம், கோமேயம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் சேர்ந்தது தானே மகத்தான மாமருந்தாய், இறைவனுக்கே பூஜிக்கப் பெறும் அபிஷேகத் தீர்த்தமாய் சர்வ வியாதி நிவாரண சக்திகளைக் கொண்ட பஞ்ச கவ்யமாய்த் துலங்குகின்றது அல்லவா!

இதே போல, லட்சுமி கடாட்சம் நிறைந்ததே யானையாகும். யானையின் சாணத்திற்கு, லட்சுமி கடாட்சத்தைப் பெற்றுத் தரவல்ல வேதாக்னி சக்திகள் உண்டு.

அபிஷேக யோக யோக்யதை பூண்ட யானைகள்!

பிராணிகளிலேயே யானைக்கு மட்டும்தான், ஆலயத்தின் மூலமூர்த்திக்கு நேரடியாகவே மாலையைச் சார்த்தும், அபிஷேக நீரை வார்க்கும் யோக யோக்யதா சக்திகள் உண்டு.

இதற்கான மூலகாரணம், உலக ஜீவன்களில் யானை மட்டுமே எப்போதும் சுழுமுனை யோக சுவாசத்தில் துலங்குவதாகும் (இரு முனைச் சமன சுவாசம்), மாமுனிவர்களையும், சித்தர்களையும், மகரிஷிகளையும், உத்தமர்களையும், சிறு குழந்தைகளையும், பெரியோர்களையும் அனைவரையும் ஆசீர்வதிக்கும் தெய்வீக மாண்பைப் பெற்றதே யானை ஆகும்.

யானை என்பது திருமகளின் லட்சுமி கடாட்ச வடிவம், யானை தரிசனம் மகத்தான சுப தரிசனம், நிலையான செல்வ சக்திகளைத் தரும், பலத்தத் தோஷங்களை நீக்க வல்லதாகும். இவ்வாறாக யானையின் தெய்வீக மகத்துவத்தை விவரித்துக் கொண்டே செல்லலாம். யோகச் சுழுமுனைச் சக்திகளின் மூல வடிவமே யானைதான், பல ஆலயங்களில் யானைதான் மூல மூர்த்திக்கான அபிஷேக நீரைத் தாங்கி வருகின்றது.

எப்போதும் தேகசுத்தி கொண்டவையே யானைகள்!

மனிதனுக்கு நீராடினால்தான் புறத் தூய்மை வரும். இதுவே ஆகமப் பூர்வமாகவும் உள்ள நியதி. ஆனால், யானை மட்டுமே எப்போதுமே புறத்தூய்மை கொண்டதாகும். எந்தவிதமான தோஷமும் யானையை அண்டாது. பிரதே தோஷம் கூட யானையைத் தீண்டாது. உண்மையில், தோஷங்கள் மிகுந்த திரவியங்களை, பொருட்களை யானையின் முன் வைத்து, யானையின் துதிக்கையால் மாவிலைத் தீர்த்தமாக அவற்றுக்கு புரோட்சணம் செய்யும் கஜவர கேசரி பூஜை முறையும் உண்டு.

ஜாதகப் பூர்வமாக, கஜகேசரி யோகம் உள்ளவர்கள் ஆற்ற வேண்டிய விசேஷமான கஜ பூஜை முறைகளும் நிறைய உள்ளன. இவர்கள் கரிநாள் தோறும் கஜ பூஜைகளை ஆற்றுதலும், கவள உணவு அளித்தலும் நன்று. யானைகளுக்கும் நிறைய அங்கக் கழிகள் உண்டு. யானையின் அங்க லட்சணங்களைக் கொண்டுதான் ஆலயப் பூஜை, போர்ப் படை, பிற யானைகளைப் பயிற்றுவித்தல், காட்டுப் பணிகள், ஆலய உற்சவங்கள் என்று பலவற்றிற்குமாக, ஒவ்வொரு யானையையும் பகுத்துப் பிரிக்கும் முறையும் உண்டு.

தொடு சுழி, நடுச் சுழி, ஒலிச் சுழி, அங்குச சூர்ய பாஹ்யம், கோகரி நடை என்றவாறாக யானையின் அங்க லட்சணங்களுக்குமான விசேஷமான பெயர்களும் உண்டு.

விஜய சக்திகள் நிறைந்த வீர முத்திரையர்

“வீர முத்திரையர்” என்ற மகத்தான வீரரே, கடையேழு வள்ளல்கள் காலத்தில், துலங்கி, வீரத்தில் பிரகாசித்து, இந்த யானைப் போர்ப் படைத் துறையில் எவராலும் வெல்ல இயலாத, ஈடு இணையற்ற மாவீரனாய்த் துலங்கினார். வீரத்திற்கே முத்தாய் விளங்கியமையால் “வீரமுத்துக் கேசரி” என்ற பட்டப் பெயரையும் பெற்றார். (கேசரி = யானை).

“வீரமுத்துக் கேசரி” யானைப் போர் முறைகளில் மகா வல்லமை நிறைந்த மஹாவீரர். தர்ம யுத்தங்களில் மட்டுமே பங்கேற்பார். ஆயிரம் யானைகளை இருந்த இடத்தில் இருந்து கொண்டே இயக்கும் மனோயோக வல்லமை பெற்றவர். நல்ல உயரமான யானை மீது கூடத் தரையில் இருந்தவாறே எகிறிக் குதித்து அமரும் யோகப் பூர்வமான யோக உடற் பொலிவை உடையவர்.

யோகப் பண்புகளின் பாசறை வீரர்!

நல்லொழுக்கங்கள், நற்பண்புகள் நிறைந்தவர், உத்தமச் சிவபக்தர், யானையைப் பேணி வளர்ப்பதில் சிறப்பான தகுதிகளைப் பெற்றிருந்தார். தெய்வ பக்தி, நேர்மை, நாணயம், தெளிந்த அறிவு போன்ற அனைத்தையும் பூண்டவர்.

கடையேழு வள்ளல்களின் காலம் முடிவு பெறுகையில், “அதர்மம் தலை தூக்கி வருகின்றது!” என்பதை நிதர்சனமாக உணர்ந்த வீரமுத்து, சிறிது சிறிதாக உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டுத் துறவறம் பூண்டு, வனத்தில் சிறிது காலம் தவம் புரிந்து, இறுதியில் அருணாசலமாம் திருஅண்ணாமலை வந்தடைந்தார்.

ஆனால் கடையேழு வள்ளல்களைத் துன்புறுத்தி, அவர்களை அதர்மமான முறையில் வென்ற, சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும், வீர முத்துவின் யானைத் திறம் பற்றி அறிந்து அவரைத் தேடலாயினர். ஆனால், காவி தரித்து ஜடாமுடி பூண்டு அடையாளம் தெரியாதவராய், அருணாசலம் பூமியில் தவம் பூண்டு, அனைத்துப் பிராணிகளுக்குமான மருத்துவ சேவைகளைத் திறம்பட ஆற்றி வந்த “வீரமுத்துக் கேசரியை” எவரும் அறிவாரில்லை. மூவேந்தர்களோ இவரைத் “தேடோ தேடு” என்று யாங்கனும் தேடினர். எவரிடமும் சிக்காது, பிராணிகளுக்கு அருட்சேவையை ஆற்ற வேண்டி, அருணாசலத்தை கிரிவலம் வந்தார்.

ஜீவ தர்மத்தைக் கட்டிக் காத்தவர்

குறுநில மன்னர்களும் ஏன், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் கூட, தங்கள் யானைகளையும் விலை மதிப்பில்லா அரபு நாட்டுக் குதிரைகளையும், நோய் நிவாரணத்திற்காக, பிராணிகளின் ஆரோக்யத்திற்காகவும் இவரிடம் கொண்டு வந்தனர்.

தினமும் அருணாசலத்தை ஆறுமுறை கிரிவலம் வந்து, பிராணிகளுக்கு சிகிச்சை அளித்த வீரமுத்து, யானை சிகிச்சையில் நாட்டிலேயே பிரசித்தி பெற்றவர் ஆனார். இவருடைய மிருக வைத்தியசாலை, பல நாடுகளிலிருந்தும் ஆராச்சியாளர்களையும், மிருக வைத்தியர்களையும் வர வைத்தது. எதற்கும் எந்தக் கட்டணமும் வசூலிக்கவில்லை. இவருடைய சேவையைப் பாராட்டி, அருளாளர்கள் தந்த உதவியினால், வைத்யசாலை நன்கு விருத்தியாகி, இவருடைய மிருக வைத்தியசாலை நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றதாயிற்று.

தன்னுடைய ஐந்தாவது வயதிலேயே யானை ஏற்றப் பயிற்சியை மேற்கொண்ட வீரமுத்து, 25 ஆண்டுகள் இந்தத் துறையில் நன்கு பயிற்சி பெற்று, கற்று, நன்கு அறிந்து, தன்னுடைய 30வது வயதிலேயே யானைப் பராமரிப்பில், யானைச் சிகிச்சையில், யானை வளர்ப்புத் துறையில் உயர்ந்த முத்துவாகப் பிரகாசித்தார்.

 இவர் இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாய் வரும் யானைகளின் ஊடேயும், யானைகளின் மீது ஆடாது, அசங்காது, அமர்ந்தும் தியானம் புரிந்தார். அக்காலத்தில் திருஅண்ணாமலையைச் சுற்றி அடர்த்தியான வனங்கள் இருந்தன. தபோவனர்கள் அமைதியாகத் தவம்புரியும் பொருட்டு, திருஅண்ணாமலை நகரமும், மனித சமுதாயமும் மலையை விட்டுச் சற்றுத் தள்ளித்தான் இருந்தமையால் யானைகள் ஜவ்வாது மலையில் இருந்து அடிக்கடி வந்து போகும். தற்போதுதான் மலை அடியில் நகரம் வளர்ந்துள்ளது.

“கரி”யாய் வந்த மாமுனி

அக்காலத்தில், ஜவ்வாது மலையில் “முக்கண் மாளாளன்” என்ற தேவ யானை ஒன்று இருந்தது. இந்திர லோகத்தைச் சார்ந்தது. பூர்வ ஜன்மங்களில் பல மகரிஷியளின் வடிவில் தவம் புரிந்து செறிந்த யானை, ஒரு முறை, வன பூஜையில் ஏற்பட்ட சிறு குற்றத்தால், யானையாகி, பரிகார மார்க்கமாக, குறித்த நாட்களில் இரவு வேளையில் திருஅண்ணாமலைக்கு வந்து, சிவகங்கைத் தீர்த்தத்திலும், உண்ணாமுலைத் தீர்த்தத்திலும் நீராடிடும், பிறகு அம்பிகைக்கும், மூலவருக்கும் தாமரைப் பூக்களை வைத்து வழிபட்டு ஜவ்வாது மலைக்குத் திரும்பி விடும்.

கரியடி மண் திரட்டும் திவ்வியச் சேவை!

முக்கண் மாளாளன் யானை கிரிவலம் வரும் நாளை வீரமுத்து நன்கறிந்தவர் ஆவார். இந்த யானை திருஅண்ணாமலைக்கு வரும்போது, இரவிலேயே, எல்லையிலேயே நின்று இதனை வரவேற்று, அதன் பாதங்கள் படும் இடத்தில் எல்லாம் தெறிக்கும் மணலைத் திரட்டி வைத்து கரியடி தூசி லிங்க வடிவாக்கிப் பூஜித்து இதன் மகிமையை மக்களுக்கு உணர்த்தி வந்தார்.

இவ்வாறு, 108 கரியடி தூசி லிங்க மூர்த்திகளை, மூலிகைகளின் பந்தனங்களுடன் பிணைத்து லிங்க வடிவாக்கி மலையைச் சுற்றிலும் பிரதிஷ்டை செய்து மக்களை வழிபடச் செய்தார். இவையாவும் ஒரு மாத சிவராத்திரி நாளில், அருணாசல மலையில் ஐக்யமடைந்தன.

இந்த “முக்கண் மாளாளன்” யானை, ஜவ்வாது மலைக்குத் திரும்பியவுடன் அது விநாயக வடிவுடைய கல் ஆகிவிடும். இந்த விநாயக வடிவினைக் “கொண்டன் குரத்தன்” என்ற மகரிஷி வழிபட்டு வந்தார். இவர் “முக்கன் மாளாளன்” பூர்வ ஜன்மங்களில் மஹரிஷியாக இருந்த போது, அவருடைய சிஷ்யராகப் பரிமளித்தவர்.

ஒரு முறை திருஅண்ணாமலையில் கோயில் யானைக்கு மதம் பிடித்திடவே, ஊரே வெருண்டோடியது, அக்காலத்தில் பசுவையோ, பாம்பையோ, எறும்பையோ, பறவைகளையோ, யானையையோ எவரும் அடித்துத் துன்புறுத்தார், அத்தகைய தர்மம் செழித்தோங்கிய காலம். மத யானை ஊருக்குள் வெருண்டோடி, அதன் மதம் இயற்கையாகவே தணிந்திடுவதற்காக, மக்கள், ஊரையே காலி செய்து அடுத்தடுத்த கிராமங்களுக்குச் சென்றனர்.

“யானைக்கு மதம் பிடித்தல்” என்பது மனிதச் சமுதாயத்தில் சிலர் இழைக்கும் கொடூரமான பாவச் செயல்களின் விளைவே என்று மக்கள் உண்மையாகவே உணர்ந்து நம்பி, பிராயச்சித்தத்தைத் தேடி, நாடிய காலம், எனவே, அக்காலத்தில் “யானைக்கு மதம் கண்டால்” ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து, பூஜை முறைகளால் சமுதாய வினை மாசைக் கழித்து ஊரைச் சுத்திகரிக்கத் தாமே வெளிச் சென்று வாழ்வர். இதற்கிடையில் ஊருக்குள் பலவிதமான பூஜைகளுடன், கோ பூஜைகள், கஜ பூஜைகள், அக்னி பூஜைகள் தக்க சான்றோர்களின் முன்னிலையில் நிகழும், மக்களும் தக்க விரதம் பூண்டு இவற்றில் பங்கு பெறுவர்.

இந்தக் கோயில் யானை பகலில் மதம் பிடித்து அலைந்தாலும், இரவில் அமைதியுடன் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்தது. அனைவரும் யானையின் மதம் பிடித்தத் தன்மையைக் கரியடி தூசி லிங்கச் சித்தரிடம் எடுத்துச் சொன்னார்கள். அவரும், “வருகின்ற பிரதோஷ நாள் வரை, இந்த மத குணம் யானையிடம் தங்கித்தான் இருக்கும். இந்த மதத்தைப் பிறிதொரு யானையால்தான் நிவர்த்திக்க முடியும். இதற்கான ஆரோக்ய சுத யானை, ஜவ்வாது மலையிலிருந்துதான் வந்து சேரும். அதுவரையில் பொறுமையாக கஜ பூஜையை ஆற்றி வாருங்கள். மதம் பிடித்த யானையால் சேதங்கள் ஏற்படாதவாறு இருக்க அடியேன் முயற்சி செய்கின்றேன்!” என்று உரைத்தார்.

கண்டதும் கழன்ற “கரி மதம்”

அனைவரும் எதிர்நோக்கிய அந்தப் பிரதோஷ நாளும் வந்தது. ஜவ்வாது மலையிலிருந்து “முக்கண் மாளாளன்” என்ற தேவ யானையும் வந்தது. வழக்கம் போல் உண்ணாமுலைத் தீர்த்தத்தில் நீராடி, அம்பிகையையும், அண்ணாமலையாரையும் வழிபட்டு வந்த போது, வழியில் மதம் பிடித்த யானையைக் கண்ட்து. முக்கண் மாளாளனைக் கண்ட உடனேயே, கோயில் யானையின் மதநீர்ச் சுரப்பு நின்று அதனுடைய மதமும் அகன்றது.

அது தேவ யானையைப் பணிந்து வணங்கிய உடனேயே, கோயில் யானை மறைந்து ஆங்கே ஒரு கந்தர்வன் தோன்றினார். அந்தக் கந்தர்வனே “சசிபால கந்தர்வன்” ஆவார். அற்புதமான பல உருவங்களை எடுக்க வல்ல தவ சக்திகளைக் கொண்டவர். இந்த தவசக்தியைக் கொண்டு, பல லோகங்களில் பல வடிவுகளை எடுத்துத் தேவையில்லாத வகையில் பிறலோக வாசிகளின் மனதை பேதலிக்கச் செய்து தவத்தைக் கலைத்தமையால், அவர்களுடைய சாபத்திற்கு ஆளாகி கோயில் யானை ஆனார்.

“முக்கண் மாளாளன்” என்ற தேவ யானையின் தரிசனத்தால் கந்தர்வன் தற்போது சாப விமோசனத்தையும் பெற்றார். இவ்வாறு கந்தர்வன் சாப விமோசனம் அடைந்ததும், முக்கண் மாளாளன் யானை, இந்திர லோகத்தை அடைந்து, விநாயகப் பெருமானின் திருவடிகளை அடைந்ததும் இத்தகைய பார்த்திப ஆண்டின் மார்கழி மாதச் சிவராத்திரியில் தாம்.

வாழ்விலும், அலுவலகத்திலும் செய்த சிறு தவறுகளுக்கும் பலத்த தண்டனைகளையும், கொடுமைகளையும் அனுபவித்து வருபவர்கள், நன்முறையில் பிராயச்சித்தம் பெற, இந்த கார்த்திகை மாத அருணாசல கிரிவலம் நன்கு உதவும்.

ஆள் மாறாட்டம், தவறான கையெழுத்து, போலிப் பத்திரங்கள் போன்றவற்றால் பெருத்த நஷ்டத்தை அடைந்தவர்கள் தக்க நிவாரணம் பெற உதவும் மாத சிவராத்திரி கிரிவலம்.

உயர் பதவிகளை அடைந்து வரம்பற்ற அதிகாரங்களைப் பெற்று “ஆடோ ஆடு” என்று தன் வாழ்வில் ஆடித் தீர்த்து, பலரையும் பந்தாடியவர்கள், வாழ்வில் தொபுக்கென்று கீழே விழுந்து பிறரால் மிதிக்கப் பெறும் நிலையும் வந்து சேர்ந்து வாடுவோரும் உண்டு. இத்தகைய பதவி வெறியர்கள் திருந்த உதவும் அருணாசலக் கிரிவலமும் இதுவேயாம்.

இறையருளால் நல்ல பதவி, நல்ல செல்வம், நல்ல குடும்பம், நல்ல உற்றம், சுற்றத்தைப் பெற்றும், இவற்றை ஒரு சிறிதும் இறைச் சமுதாயப் பணிகளுக்கும், பிற ஜீவன்களின் நல்வாழ்விற்கும் பயன்படுத்தாதவர்கள், இனியேனும் இவ்வாறு சுயநலமாக வாழாது, தக்க இறைப் பணிகளை மீண்டும் செய்வதற்கு ஓரளவேனும் நல்வாய்ப்புகளைப் பெற உதவிடும் கிரிவலம்.

பிறருடைய அதிகாரத்தையும், பதவி வெறியையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, கோள்மூட்டிப் பலருடைய தாழ்விற்கும் காரணமானவர்கள், நன்கு திருந்தி வாழவும், தன்னால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க நிவாரணம் அளிக்கவும், வாழ்வில் கடைசியாகவேனும் ஒரு நல்வாய்ப்பைத் தந்திடும் கிரிவலம், இதனை விட்டு விட்டால், எப்பிறவியிலும் இந்தக் கொடிய குற்றத்திற்குப் பரிகார வழிகள் கிட்டவே கிட்டாது.

வாழ்வில் கஜ பூஜைகளையும், கோ பூஜைகளையும் முறையாக ஆற்றாதவர்கள், இவற்றை நன்கு ஆற்றிய உத்தமர்களின் ஆசிகளைப் பெறவும், இனியேனும் இவற்றை ஆற்றுவதற்கான நல்வாய்ப்புகளைப் பெறவும் உதவும் கிரிவலம். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

நாடி சுத்திக்கு வண்ண ஆடைகள்

பெண்களுக்கான ஆன்மீக ரீதியான ஆடை அணிதல்

சித்தர்கள் அளிக்கின்ற தேகசுத்தி, மனசுத்தி முறைப்படி, தினமும் பெண்கள் மூன்று வேளைகளில் ஆடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.  அந்தந்தக் கிழமைக்கு உரித்தான  நிற ஆடைகளை வெளியில் செல்லும்போதோ அல்லது முக்கியமான வேலைகளுக்குச் செல்லும் பொழுதோ அணிவது மிகவும் சிறப்புடையதாகும்.

மற்ற காலங்களில் காலையில் இளஞ் சிகப்பு நிற ஆடையையும், பகலில் வானத்து நீல நிற ஆடையையும், மாலையில் பச்சை நிற ஆடையையும் அணிதல் வேண்டும். இது இயலாவிடில், சிகப்பு, பச்சை, நீலம், வெள்ளை  பார்டர் உள்ள ஆடைகளையாவது  அணிந்திடுக! வெளியில் சென்று வருகையிலும், இல்லத்தில் இருக்கும் போதும், மேற்கூறிய வகையில் ஆடைகளை அணிந்திடலாம்.

வசதியே இல்லாதவர்கள் அல்லது நாலைந்து செட் ஆடைகளை வாங்க இயலாதவர்கள், பாமரர்கள் என் செய்வது? இத்தகையோர்க்கு, வசதி உள்ளவர்கள் கிழமை நிற ஆடைகளை வாங்கித் தருவது நலம் தரும்.  அல்லது இவர்கள் அந்தந்த நாளின் கிரகத்துக்குப் பகைமை கிரக நிறம் இல்லாத வகையில் நட்பான நிற வகை ஆடைகளை அணிதல் வேண்டும். பெரும்பாலான பஞ்சாங்கங்களில் எந்தெந்த கிரகத்துக்கு, எந்தெந்த கிரகம் நட்பு, பகைமை, சமம் என்பதற்கான அட்டவணை உள்ளது.

இல்லத்தில் ஏன் தினமும் மூன்று வேளைகளிலும் மூன்று விதமான ஆடைகளை அணிய வேண்டும்? பெண்களுக்குக் காலையில் வாத நாடி ஓடுகையில், இளஞ் சிவப்பு நிற ஆடை அணிவதால் வாத நாடியின் வேகத்தைக் குறைக்கும். மாலையில் பச்சை நிற ஆடை அணிவதால், பித்த நாடியின் வேகத்தைத் தணிக்கும்.  பகலில் நீல நிற ஆடைகளை அணிவதால், சிலேத்தும நாடியின் வேகம் குறையும். ஆகவேதான் மூன்று முறையாவது ஒரு நாளில் ஆடைகளை மாற்றுவதானது, ஆன்ம சக்தி  ரீதியாகவும், ஆரோக்ய  ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் நலம் பயப்பதாகும்.

இதோடு மட்டுமல்லாமல், சிலந்தி நாடித் துடிப்பு உள்ளவர்களுடைய உடலிலிருந்து “மருவு கந்தம்” என்ற நாற்றம் வருவதால், இவர்கள் சிகப்பு நிற ஆடைகளை அணிய வேண்டுமெனப் பெரியோர்கள் விதித்துள்ளர்கள்.

அடுத்ததாக, “பளிரு கந்தம்” என்ற வகை நாற்றம் பகலில் உடலில் இருந்து வருவதால், நீல நிறம் இதற்கான ஒரளவு தீர்வைத் தரும்.

மாலை நேரத்தில், “சுருட்டி கந்தம்” என்ற நாற்றம் வருவதால், பச்சை நிற ஆடை இதனை ஓரளவு நிவர்த்திக்கும்.

இரவு நேரங்களில் “ரகமி கந்தம்” என்ற நாற்றம் வருவதால், வெள்ளை நிற பார்டர், பூக்கள் உள்ள ஆடை அணிதலே நன்று. இவ்வாறாக ஆடைகளுக்கான ஆன்மீக விளக்கங்கள் நிறைய உண்டு. தக்க சத்குருவை நாடி விளக்கங்களைப் பெற்றுப் பயனடைக!

கரி நாள் மகத்துவம்

கரிதோஷங்கள் குடும்பத்தைப் பற்றுவதால் விரயச் செலவுகள், தீயால் காயங்கள், நஷ்டங்களும் ஏற்படும். பிறர் மனம் புண்படப் பேசுவதும் கரிஷோஷத்தையே தரும்!

கரிநாள் என்பது கரி தோஷங்களைத் தீர்ப்பதற்கான சனீஸ்வர பூஜா சக்திகள் நிறைந்த நாளாகும் என்பதைப் பலரும் அறியார். கரிநாள் என்பது சுப காரியங்களுக்கு ஏற்புடையது அல்ல., எனினும் மிகவும் கொடிய வல்வினைகளைத் தரும் கரிஷோஷங்களை அகற்றுவதற்கான சனீஸ்வர பூஜைகள், கஜபூஜைகளை ஆற்ற வேண்டிய காலம் என்பதையும் பலரும் அறியாது இருக்கின்றார்கள்.

கரிதோஷங்கள் யாவை என்று நாம் பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களிலும், http://www.agnisiksha.org வெப்தளத்திலும் விளக்கி வந்துள்ளோம். எப்போதெல்லாம் தம்மிடம் ஏற்படும் தீய எண்ணங்களாலும், தீய காரியங்களின் விளைவுகளாலும் மனமும், உள்ளமும், புத்தியும், உடலுமாகிய நான்கு மனித ஜீவிதத் துறைகளிலும் மாசு படிகின்றதோ, அப்போதெல்லாம் பல்வகைக் கரிதோஷங்கள் இந்த நான்கு மனித ஜீவத் துறைகளிலும் சேர்ந்து விடுகின்றன. ஒருவரிடம் கரிதோஷங்கள் சேர்ந்துள்ளன என்பதைப் பலவழிகளில் அறிந்து கொள்ளலாம்.

வாகனப் பகுதி உடலில் பட்டு சூட்டுக் காயம் ஏற்படுதல், பல வகைகளிலும் தீக்காயம் உண்டாகுதல், வீட்டில் துணியில் நெருப்பு பற்றிக் கொள்தல் போன்றவை கரிதோஷங்கள் மிகுந்திருப்பதைக் காட்டும் சகுனங்கள் ஆகும்.

கண்களுக்குக் கீழ் களைப்பால், நோயால், உடல் பலவீனத்தால் சிலவகைக் கருவளையங்கள் ஏற்படுவதும் கரி தோஷத்தால்தான், முக்கியமான ரெகார்டுகள், பத்திரங்கள் தீயில் எரிபடுபவதும் பலத்த கரி தோஷங்களைக் குறிக்கின்றன. பூஜை அறை அல்லது பூஜை அலமாரித் திரைத் துணியில் தீப்பற்றுதல் பலத்த கரிதோஷங்களைச் சுட்டுவதால், உடனடியாக இதற்கானப் பரிகாரங்களை ஆற்றியாக வேண்டும். பிறர் உள்ளத்தைச் சுட்டுப் புண்படும் வகையில் பேசினாலும் கரி தோஷங்கள் ஏற்படும். இது கலியுகத்தில் குடும்பங்களில், உற்றம், சுற்றத்தில் அடிக்கடி நிகழ்கிறது. அசிங்கமாக, ஆபாசமாகப் பேசுவது கலியில் அனைத்து நாடுகளிலும், மொழிகளிலும் சகஜமாகி வருவதால், கரிதோஷங்கள் நாக்குக் கரி, வாக்குக் கரி, தொண்டைக் கரி, வயிற்றுக் கரி, குடற்கரி தோஷங்களாக உடனே பற்றிக் கொள்ளும்.

Acidity எனும் நோய் வருவது ஒரு வகைக் குடல் கரி தோஷத்தால்தான், பதவி, செல்வம், வலிமை, செல்வாக்கு, ஆணவம், அகங்காரம் காரணமாகத் தொழிலிலும், அலுவலகத்திலும் தன் கீழ் பணிபுரிபவர்களை அலைக்கழித்து, அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடுத்து மனதை நோகடித்தலும் கரிதோஷத்தில் ஒரு வகையே. இவற்றை அவ்வப்போது நீக்காவிட்டால் நெருப்பு சம்பந்தப்பட்ட விபத்துக்கள், பண இழப்பு நஷ்டங்கள் ஏற்படும். காசைக் கரியாக்குதல் என்பது போல விரயமான செலவுகள், அடிக்கடி உண்டாகும். இயந்திரம் வாகனத்தால் விபத்துகள் ஏற்படும்.

கரிதோஷத்தின் மற்றொரு அடையாளம் திடீரென்று இருதயம் ஸ்தம்பித்து நின்றாற்போல் ஆவதும், தொண்டையில் அழுகையால் கேவுவதும் ஆகும். மேலும் படபடவென்று இருதயம் அடித்துக் கொள்வதும் கரிதோஷ வகையே ஆகும். விஞ்ஞானப் பூர்வமாகக் கரியமில வாயு என்பதுதானே வெளித் தள்ளப்படுகின்ற அசுத்தமான வாயுவாகின்றது. இந்தக் கரியமில வாயுவுடன் கரிதோஷப் படிவுகளும் இருதயச் சுத்திகரிப்பு மூலமாக நிகழ்கின்றது. எனவே, கரிதோஷ நிவர்த்திக்கு இருதய சுத்திகரிப்பும் ஒரு வழிமுறையாகும். இதனால்தான் ஆயுள்காரகராக, ஆயுள் சக்திகளை விருத்தி செய்பவராக, இருதய சுத்திக்கு உதவுபவராக சனீஸ்வர மூர்த்தி விளங்குகின்றார். எனவே தான் விசேஷமான சனீஸ்வரப் பூஜை நாளுமாக ஸ்திரவாரம் எனப்படும் ஆயுள் சக்திகளை விருத்தி செய்யும் சனிக்கிழமையும், கரிநாளும் வந்தமைகின்றன.

ஸ்ரீகோலாகலேஸ்வர சனீஸ்வரர்
வடகுரங்காடுதுறை

ஸ்ரீகடுவெளி சித்தர் கடுவெளி

இருதய சுத்திக்கு புஷ்ய சக்தித் தீர்த்தம், அனுராத சக்தி தீர்த்தம், பல்குனித் தீர்த்தம் ஆகிய மூன்றும் உதவுகின்றன. இந்த மூன்றிலும் இருதய நாளங்களும், நாடிகளும், வால்வுகளும் சுத்திகரிக்கப் படுகின்றன. இதனால்தான் இந்த மூன்று சக்திகளையும் உடைய மூன்று நட்சத்திரங்கள் சனி கிரகத்திற்காக அளிக்கப்பட்டுள்ளன.

ஒருவர் இறந்தபின் அவருடைய சாயைச் சரீரமானது விண்ணுலகில் விரஜா நதித் தீர்த்தத்தில் மூழ்கும்போதுதான் அந்த சாயைச் சரீரத்துக்குத் தன்னுடைய கர்ம வினைகளின் ஒட்டுமொத்த நகல் வடிவு நன்கு உணர்த்தப்படுகின்றது. இந்நிலையில் அவரவர் தாமே தன்னுடைய ஆன்ம நிலைகளை உணர்கின்றார்கள். தன்னுடைய கர்ம வினைகளுக்கு எத்தகைய புண்ணிய சக்திகள், பிறவி வகைகள், தண்டனைகள், பிறப்புகள் ஏற்படும் என்பது இறப்பிற்குப் பின் விரஜா நதி வாசத்தில் பல சாயை  சரீரங்களுக்கும் பட்டவர்த்தனமாக உணர்த்தப்படுகின்றன.

இந்த விரஜா நதித் தீர்த்தமும், புஷ்யம், அனுராதனம், பல்குனீயம் ஆகிய மூன்று தீர்த்த சக்திகளையும் கொண்டிருக்கும். எனவே, கரிநாளன்று இத்தகையப் புண்ணிய சக்திகள் நிறைந்த தீர்த்தங்களில் சனீஸ்வரரை வழிபடுவது மிகவும் விசேஷமானது. கும்பகோணம் – திருவையாறு மார்கத்தில் கணபதி அக்ரஹாரத்தை அடுத்து 3 கி.மீ தொலைவில் உள்ள வடகுரங்காடு துறை அருள்மிகு ஸ்ரீஜடாமகுடேஸ்வரி சமேத ஸ்ரீதயாநிதீஸ்வரர் ஆலயத்தில் தனிச்சன்னதி கொண்டு அருளும் ஸ்ரீகோலாகலேஸ்வர சனீஸ்வர மூர்த்தி மிகவும் சக்தி வாய்ந்தவர். பொங்கு சனிக் காலத்தில் சிறப்புடன் அருள்கின்ற அற்புதமான மூர்த்தி, கரிநாளிலும், சனிக்கிழமைகளிலும் இங்கு வழிபடுவது சிறப்புடையதாகும்.

29.11.2005 செவ்வாய்க் கிழமை இரவு 10.58 மணி முதல் 30.11.2005 புதன் கிழமை இரவு 10.02 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி கார்த்திகை மாதச் சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள்: 29.11.2005 செவ்வாய்க் கிழமை இரவு!

டிசம்பர் 2005 பௌர்ணமி நாள்: 14.12.2005 புதன் கிழமை இரவு 9.22 மணி முதல் 15.12.2005 வியாழக் கிழமை இரவு 9.46 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படிப் பௌர்ணமித் திதி நேரம் அமைகின்றது. திருஅண்ணாமலையில் கிரிவல நாள்: 14.12.2005 புதன்கிழமை இரவு!

29.12.2005 வியாழக்கிழமை மதியம் 1.53 மணி முதல் 30.12.2005 வெள்ளிக்கிழமை காலை 11.31 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மார்கழி மாதச் சிவராத்திரித் திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள்: 29.12.2005 வியாழக்கிழமை இரவு!

அமுத தாரைகள்

1. புண்ணிய பாரத பூமியில் பிறந்துள்ளமையால், ஜாதி, மத, குல, இன, பேதமின்றி உலக ஜீவன்களுக்காகத் தினமும் ஆலயப் பூஜைகளை, அந்தந்தக் காலத்திற்கான உற்சவங்களை, அக்னி வழிபாடுகளை, பித்ருத் தர்ப்பணப் பூஜைகளை விரதங்களைக் கடைபிடித்து, ஆற்ற வேண்டிய (இறை) லட்சியக் கடமை பாரத வாசிகளுக்கு நிச்சயமாக உண்டு. இதில் இருந்து ஒரு போதும் வழுவுதல் கூடாது.

2. கும்பகோணம் – திருவையாறு அருகில் உள்ள கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரர் ஆலயமானது, வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களிலும் பூஜிக்கப்பட வேண்டிய அதிஅற்புதமான வாஸ்து பூஜைத் தலமாகும். குறிப்பாக, வானளாவிய கட்டிடங்களை, அடுக்கு மாடிகளைக் கட்டுவோர்கள், கண்டிப்பாக இந்த ஆலயத்தில் வாஸ்து நாட்களிலும், செவ்வாயன்றும் இங்கு தொடர்ந்து பூஜித்து வருதல் கட்டிடத் துறையில் நல்வளத்தைப் பெற்றுத் தருவதாகும். வெட்டிவேர்த் தைலத்தில் அத்தர், புனுகு கலந்து தைலக் காப்பிட்டு வாஸ்து நாட்களில் இங்கு தொடர்ந்து வழிபடுவது கட்டிடத் துறையில் நல்ல முன்னேற்றத்தைத் தருவதாகும்.

3. யானையின் சாணத்தை பூமியில் விழுமுன் தாமரை இலையில் பிடித்து, கால், கை, மண் படாது விறாட்டி ஆக்கிக் குறித்த நாளில், இதை வைத்து ஸ்ரீஸூக்த ஹோம பூஜை ஆற்றி, நெய், தேன் கலந்த சர்க்கரைப் பொங்கலைப் படைத்துத் தானமாக அளித்து வந்திடில் நல்ல செல்வச் செழிப்பு உண்டாகும். யானையின் சாணத்துடன், வெட்டி வேர், வைக்கோல், நெல், பிரண்டை சேர்த்துக் காய வைத்து, விறாட்டியாக்கி இதனை வைத்து, குறித்த நாளில் கஜலக்ஷ்மிக்கான ஹோம பூஜை ஆற்றுவதால் இழந்த செல்வம், சொத்தை மீட்கும் நல்வாய்ப்புகள் கூடி வரும்.

4. கடவுளுக்கான “சுப்ரபாதத் துதி மெட்டை“ செல்போனின் ரிங்டோனாக வைத்திருப்பவர்கள், இதனை விடியற்காலை நேரத்தில் மட்டுமே ஒலிப்பதாக அமைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பகல், இரவு எந்நேரமும் இதனை ஒலிக்க வைப்பதால் காலப் பிழைகளே வாழ்வில் ஏற்படும். ஆன்மீக ரீதியாகவும் காலம் மாறிய துதி ஒலிப்பு ஏற்புடையதல்ல.

தொடரும் ஆனந்தம்,,,

பரிமாணம் கடந்த பரிணாமம்...
நம் சற்குருவைப் பற்றி ஒரு தூசி தூசி அளவு புரிந்து கொண்டால் கூட போதும் நாம் எல்லையில்லா ஆனந்தத்தை எளிதில் பெற்று விடலாம்.

உதாரணத்திற்கு நம் சற்குருவின் இருப்பிடமான குருமங்களகந்தர்வ லோகத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு முறை நம் சற்குருவிடம், “வாத்யாரே, தாங்கள் இருக்கும் குருமங்களகந்தர்வ லோகத்தை, இப்பிறவியில் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு பிறவியில் நம் அடியார்கள் அடைய முடியுமா?” என்று அப்பாவித்தனமாக ஒரு அடியார் கேட்டார். நம் சற்குரு சிரித்துக் கொண்டே, “இது உங்களுடைய நல்ல எண்ணத்தைக் காட்டுகிறது. ஆனால் இது சற்றும் சாத்தியமல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் அடியேன் இருக்கும் லோகத்தில் 108 சூரியன்களும் 108 சந்திர மூர்த்திகளும் பிரகாசிக்கின்றனர்...”, என்றார்.

ஒளியில் குளிக்கும் ஒளிவேந்தன்
திருமீயச்சூர்

“நம்முடைய பூமியிலும்தான் ஒரு சூரியனும் ஒரு சந்திரனும் பிரகாசிக்கின்றனரே, அப்படி இருக்கும்போது நாம் ஏன் நம் சற்குருவின் லோகத்திற்குச் செல்லக் கூடாது?” என்று அடியார்கள் சாதாரணமாக நினைக்கலாம். இங்கு சூரியன் சந்திரன் எனும்போது அது பரிமாண சக்திகளைக் குறிக்கிறது. அதாவது 108 பரிமாணங்கள் கடந்த நிலையில் உள்ளதே குருமங்களகந்தர்வ லோகம் (beyond 108 dimensions). ஒரு பொருள் நான்காம் பரிமாணத்தை அடைந்தாலே அது கண்ணிலிருந்து, காட்சியிலிருந்து மறைந்து விடும். இது சம்பந்தமாக அமெரிக்காவில் நான்காம் பரிமாணம் குறித்து நடத்திய ஆராய்ச்சியில் மறைந்துபோன கப்பலைப் பற்றியும் அதிலுள்ள பணியாளர்களின் கதியைப் பற்றியும் நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

இதுவரை ஐன்ஸ்டீனுக்கு இணையான அறிவு வளர்ச்சி உடைய விஞ்ஞானி தோன்றியது இல்லை. அவ்வாறு இருக்கும்போது 108 பரிமாணங்களை நாம் என்று தெரிந்து கொள்வது? இதைத் தெரிந்து கொள்வதே சாத்தியம் இல்லை எனும்போது இந்த பரிமாணங்களுடைய லோகத்திற்கு நாம் செல்வது என்ற கேள்விக்கே இடமில்லை. அப்படியானால் இதனால் நமக்கு ஒரு பிரயோசனமும் இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். இங்குதான் நம் சற்குருவின் அறிவுத் திறனை நீங்கள் நினைக்க வேண்டும். உதாரணமாக, ஒரு பெரிய பாம்பு உங்களைத் துரத்தி வருவதாக நினைத்துக் கொள்ளுங்கள்... அதிலிருந்து உங்களை யாரும் காப்பாற்ற முடியாது, ஆனால் நம் சற்குரு நினைத்தால் உங்களை அடுத்த பரிமாணத்திற்கு ஒரே நொடியில் மாற்றி விடலாமே, அப்போது நீங்கள் பாம்பின் பிடியிலிருந்து மிக மிக எளிதாக மீண்டு விடுவீர்களே.

பரிமாணம் பற்றிய மற்றோர் கோணம்...
நம் சற்குரு அடிக்கடி கூறுவார். கனிந்தகனி பரமாச்சாரியாரை எந்த அயல்நாட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தாலும் அவர்கள் தாய்மொழியிலேயே சகஜமாக உரையாடுவார், அவருக்கு எந்த ‘இண்ட்ராபிரட்டரும்’ தேவையில்லை...” என்பார். இதில் உள்ள “ரா” என்பதை அழுத்திச் சொல்வார். இதை அருகில் இருந்து செவிமடுத்தவர்களே இதன் சுவையை உணர முடியும் என்பது ஒருபுறம் இருக்க, interpreter அதாவது மொழிபெயர்ப்பாளர் என்பதை ஏன் intrapreter என்று கூற வேண்டும்?

உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் உணரக் கூடிய சக்தியை இறைவன் நம் உள்ளேயே வைத்துள்ளான். அதை உணர முடிந்தால் (through introspection), அதாவது நாம் உள் நோக்கிச் செல்ல முடிந்தால் நமக்கு அனைத்து மொழிகளும் அத்துப்படியே.

இப்போது நாம் தொடங்கிய கருத்திற்கு வருவோம்...
நான்கு பரிமாணங்களே நம் உயிரைக் காப்பாற்றும் சக்தி வாய்ந்தது என்றால் 108 பரிமாணங்கள் என்னவெல்லாம் செய்யும்? இந்தப் பரிமாண லோகத்தில் கொலுவிருக்கும் நம் சற்குரு நமக்காக என்னவெல்லாம் செய்வார்? இதை நினைத்துப் பாருங்கள், அடிக்கடி நினைத்துப் பாருங்கள்... அப்போது ஏன் 51 பரிமாணங்களைப் பற்றி உலகிற்கு அறிவித்த ராமன் என்ற புகழ்பெற்ற விஞ்ஞானி இன்று லலிதா பரமேஸ்வரி லோகத்தை விட்டு வெளிவரவே மனமில்லாமல், அன்னையின் அரவணப்பை நீங்க மனமில்லாமல் இருக்கிறார் என்பதைப் பற்றி நீங்களே உங்களுக்குள் உணர்ந்து கொள்வீர்கள்...
இதுவே இறையன்பு, அன்னையின் அரவணைப்பு ...!

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam