உறக்கமும் ஒரு யோகமே, எப்படி ?

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஆருத்ரா தரிசனம்

நம் சிவகுரு மங்களகந்தர்வா, ‘யாரெல்லாம் ருத்திரரோ அவருக்கு அபிஷேகம் செய்து தரிசனம் செய்ய வேண்டும்’ என்று ஆருத்ரா தரிசனத்தைப் பற்றிக் கூறியுள்ளார். சிவபெருமான், திருவாதிரை நக்ஷத்திரத்தன்று உலக ஜீவன்களை உய்விக்கும் பொருட்டு, தன் திவ்யமான நடனக் காட்சியை அருள்கின்றார். ஆதிசிவனை லிங்க சொரூபத்தில் தரிசனம் செய்தவர்கட்குப் பேரானந்தத்தை அளிக்கும் பொருட்டு, ஆடல் வல்லவனாக இன்று சிவபெருமான் காட்சியளிக்கின்றார். உடுக்கை ஒலிக்கேற்ப ஆடுகின்ற நாட்டியம் இது. வாத்தியங்களில் ஆதிமூல வாத்தியமாக அமைந்திருக்கும் உடுக்கை ஒலியில் எழுவது வெறும் ஒலியன்று, அதில் எழுவதெல்லாம் பீஜாட்சரங்களே! மனிதனிலிருந்து புல், பூண்டு வரை ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு பீஜாட்சரம் உண்டு. தன் பீஜாட்சரத்தை என்று ஒருவன் அறிகின்றானோ அன்று முதல் அவன் மகானாக, யோகியாக, ஞானியாக மாறுகின்றான். தன்னை யார் என்று அறிந்தால் அதாவது ஏன், எதற்காக, எப்படி, எவ்வாறு பிறந்தோம் என்பதை உணர்ந்தால் அதுவே உயர்ந்த ஞானநிலை ஆகும். ஆருத்ரா தரிசனம் அனைவருக்கும் குறிப்பாக நாட்டியக் கலைஞர்களுக்குரித்தான விசேட தினமாகும். கழைக் கூத்தாடி, தெருக் கூத்தாடுவோர்கள், நடன வல்லுநர்கள், நாட்டியக் கலைஞர்கள், நட்டுவாங்கம் செய்வோர் போன்ற அனைத்து நாட்டியப் பெருமக்களும் ஆருத்ரா தரிசனத்தைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
சலங்கை பூஜை
இன்று நாட்டியமாடும் சலங்கைகளைச் சுத்தம் செய்து சந்தனம், மஞ்சள், குங்குமம், இட்டு ஆடை, ஆபரணங்களால் அலங்கரித்துப் பூஜையில் வைத்து நமஸ்கரிக்க வேண்டும். மாதுளம் பழம், ஜவ்வரிசி பாயசம் இரண்டையும் நைவேத்தியம் செய்து ஏழைக் குழந்தைகட்குத் தானம் அளிக்க வேண்டும். ஏனையோர் வறுமையில் வாடும் நாட்டியக் கலைஞர்கட்கு உபகாரச் சம்பளம், நாட்டிய ஆடைகள், சலங்கைகள், ஆடை ஆபரணங்கள் அளித்துப் போஷிக்க வேண்டும். இன்றைய தினம் கழைக் கூத்தாடி, கிராமியக் கலைகள் நடத்துவோருக்கு அன்னதானத்துடன் ஏனைய உபசரணைகளையும் செய்து அவர்களை மகிழ்விக்க வேண்டும்.
இன்று ஆருத்ரா அபிஷேகத்திற்குரிய கறந்த பசும்பால் மற்றும் திரவியங்களை அளித்து ஆருத்ரா அபிஷேகம் சிறப்புற நடைபெறுவதற்குச் சேவைகள் செய்ய வேண்டும். ஆருத்ரா அபிஷேகப் பலன்கள் அபரிமிதமானவை. இவை பிரதோஷ கால, விஷ்ணுபதி புண்யகாலத்திற்கீடான பலன்களைத் தரவல்லவை.
எத்தனையோ பிரதோஷ புண்யகாலங்களையும் புனிதமான விஷ்ணுபதி, ஷடசீதி போன்ற புனிதமான நேரங்களையும் இழந்து வருகின்ற மனிதனுக்கு இறைவன் கருணைப் பெருங்கடலாய் இக்குற்றங்களுக்கு மன்னிப்பளித்து ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி போன்ற அதி அற்புத விசேட பூஜைகளை ஏற்படுத்தியுள்ளார். இப்பூஜைகளை நிகழ்த்தி இப்புனிதமான நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  ஆருத்ரா அபிஷேகத்திற்கான பலன்களாக சித்த புருஷர்கள் அருள்வதாவது :

அபிஷேகப் பொருட்கள்

பலன்கள்

1. கறந்த பால்

பால் பாக்யம், சந்தான விருத்தி.

2. இளநீர்

வெப்பு நோய்கள் தீரும்.

3. தயிர்

மூலம் போன்ற குடல்வாய் நோய்கள் தீரும்.

4. பன்னீர்

உடல், மனம் சாந்தமடைந்து இரத்த அழுத்தம் குறையும்.

5. பஞ்சாமிர்தம்

‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரம் தீர்க்கமாக ஓதிய பலன்

6. திருநீறு

மிருத்யுஞ்ஜய ஹோமம் நடத்திய, மந்திரம் ஓதிய பலன் (மரணபயம் அகலும்)

7. சந்தனம்

கண் திருஷ்டி, பில்லி, சூன்ய, ஏவல் மறையும், நீண்ட நாள் ஏக்கங்கள் தீரும்.

8. புஷ்பாலங்காரம், திருவுலா நடத்த உதவிபுரிதல்

தீர்க புண்யசக்தி – ஆபரணங்கள், தங்கக் காசுகள் போன்றவை மூலமாகப் பொன் வரவு

9. தேன்

திடீர் தன பாக்கியம்

10. எலுமிச்சம் பழம்

‘படர் ஒளிசக்தி’ என்ற ஆன்மீக சக்தியால் முறையற்ற காம, குரோத மன சஞ்சலங்கள் தீரும்.

11. எண்ணெய்க் காப்பு (நல்லெண்ணெய்)

‘தீட்சா விதி சுழி’ என்ற ஆன்மீக சக்தியால் தர்ப்பணங்களை முறையாகச் செய்யாத தோஷங்கள் தீரும் – பித்ரு சாபங்கள் அகலும்.

12. பழங்கள் (5,10,28 வகைகள்)

வயதானோர்க்கு நிம்மதியான வாழ்க்கை – சாந்தமான ஓய்வு பெற்ற வாழ்க்கை கிட்டும்.

சலங்கை பூஜையின் போது, ஸ்ரீபதஞ்சலி முனிவர் இயற்றிய சம்பு நடன அஷ்டகத்தைப் பாடி, அதற்கேற்ற முறையில் நடனம் பயில்வது அல்லது நடனத்தை அமைத்து அனைவரும் கண்டு களிக்கும்படி செய்வதால் நாடியக் கலையில் உன்னதமான இடத்தைப் பெற்று, மேலும் புகழுடன் நல்வாழ்க்கை அமையும்.

சௌர விரதம்

ரதசப்தமி போன்று மிகவும் உன்னதமான இந்தச் சூரிய வழிபாடு அனைவருக்கும், குறிப்பாக ஸௌராஷ்டிர இனத்தவருக்கு உரித்தான சூரிய பூஜையாகும். சூரிய நமஸ்காரம், விடியற்காலையில் சூரிய ஒளி தரிசனம் போன்ற சூரிய பூஜைகளை சரிவர நிறைவேற்றாமையால் தான் மனிதகுலம் மாலைக்கண், க்ளொகோமா, காட்ராக்ட், மாறுகண், பூவிழுதல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற கண் நோய்களால் அவதியுறுகின்றது.

நித்திய சூரிய வழிபாட்டினைத் தன் கடமையாகச் செய்ய மறந்த மனிதனுக்கு ஸ்ரீசூர்யநாராயண ஸ்வாமியே பெரும் மன்னிப்பளிக்க ரதசப்தமி, மகர சங்கராந்தி (பொங்கல்), ஸௌர விரதம் போன்ற விசேட விரத பூஜா நெறிகளை ஏற்படுத்தியுள்ளார். எளிமையான இத்தகைய பூஜை முறைகளையாவது மனிதர்கள் நிறைவேற்ற, தங்கள் கண்களைப் பாதுகாத்து, நல்ல தரிசனங்களைக் கண்டு நற்கதி பெறுவார்களாக! ஸௌரவிரதம் எனப்படும் இந்நாளில் ஆதித்ய ஹ்ருதயம் , சூர்ய நமஸ்கார மந்திரங்கள், சூர்ய அஷ்டோத்திரம், ஸகஸ்ர நாமம், காய்த்ரி மந்திரம், என்றவாறாகத் தமிழ், வடமொழி மந்திரங்களைப் பாராயணம் செய்து சூரிய உதயத்தின் பொழுதோ, பகல் உச்சி நேரத்திலோ சர்க்கரைப் பொங்கல் அல்லது கோதுமை உணவினைப் (சப்பாத்தி, பூரி,உப்புமா etc) படைத்துக் கோயிலில் நவக்கிரஹத்தை 21 முறை வலம் வந்து அவ்வன்னத்தை/உணவினை ஏழைகட்கு அளிக்க வேண்டும்.
இயன்ற  வரை பிரசாதத்தைப் படைக்கும் வரை உண்ணாமல், ஸ்ரீசூர்யாய நம: , ஸ்ரீசூர்யா போற்றி, ஸ்ரீபாஸ்கரா போற்றி போன்ற இறை நாமங்களைத் துதித்தவாறே அன்னத்தைச் சமைப்பதே ஸௌர விரதமாகும். இன்று உறவினர்கள், நன்பர்களுடன் சேர்ந்து ஏழை, எளியோருடன் கூடி சமபந்தி போஜனம் செய்வது விசேஷமானதாகும். சூரிய ஒளிபடுகின்ற மூல லிங்க மூர்த்திகள் தமிழ்நாட்டில் பல உண்டு.  சென்னை பூந்தமல்லி ஸ்ரீவைதீஸ்வரன் கோயில், கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரர் கோயில், திருச்சி திருநெடுங்களம் ஸ்ரீஇடர்களையும் நாதர் திருக்கோயில் போன்ற திருக்கோயில்களிலும், ஆடுதுறை ஸ்ரீசூரியனார் கோவில் மற்றும் ஸ்ரீசூரிய பகவான் தனிச் சந்நிதி கொண்டுள்ள கோயில்களிலும், மேற்கண்ட அன்னதானத்தை முறையாகக் கூட்டாக ஸ்ரீசூரிய நாராயண ஸ்வாமிக்கு அபிஷேக, ஆராதனைகளுடன் நடத்துவதால், தீர்க்கமான கண்பார்வையைப் பெறலாம். நேத்ர திருஷ்டிகள், தோஷங்கள், நோய்கள் அகலும்.
திருச்சி அருகில் திருநெடுங்களம் ஊரிலுள்ள ஸ்ரீஇடர்களையும் நாதர் சிவன் கோவிலில் ஸ்ரீசம்பந்தருடைய இடர்களையும் பதிகத்தைப் பலர் ஒன்றாகச் சேர்ந்து, குறிப்பாக ஸௌராஷ்டர மக்கள் கூட்டுப் பாராயணம் செய்தல் அற்புதமான வரங்களைத் தரும்.

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

இந்நாளில் தஞ்சை, கும்பகோணம், மதுரை போன்ற பகுதிகளில் அருட்பெரும் இறைப்பணி ஆற்றிய மகானாகிய ஸ்ரீ நடன கோபால நாயகி சுவாமிகளின் தியானத்துடன் திருநெடுங்கள நாதரைத் தரிசனம் செய்ய வேண்டும். இத்திருநெடுங்களம் திருக்கோயிலில் ஸ்ரீசுவாமிகள் பல ஆண்டு தவம் புரிந்து பல யோக தரிசனங்களில் இறைவனைக் காணும் பேறு பெற்றார் . ஸ்ரீஆண்டாள் போல் திருக்கொண்டையை தரித்து இறைவனின் பாதார விந்தங்களில் சரணடைந்து உத்தம சித்புருஷராய் விளங்கிய ஸ்ரீநாயகி நடன கோபால சுவாமிகள் ஸௌர விரதத்தின் சிறப்பினை யாங்கணும் பரப்பிய மஹரிஷியாவார். ஸ்ரீசூர்ய பகவானிடமிருந்து வேதம் கற்கும் பாக்கியம் பெற்ற ஸ்ரீயாக்ய வல்கிய மஹரிஷி ஸௌர விரதத்தால் பல உன்னத நிலைகளை அடைந்தார். எனவே இந்நாளில் சுக்ல யஜுர்வேத பாராயணம், வேதம் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வேண்டியவற்றை அளித்தல், வடமொழி தமிழ் மறைகளை ஓதுகின்றோர்க்கு உதவி புரிதல் போன்றவையும் ஸௌர விரதத்தின் அங்கமாகும். நித்ய சூர்ய நமஸ்காரத்திற்குரித்தான பலன்களைத் தரவல்ல மேற்கண்ட ஸௌர விரதத்தை சித்த புருஷர்கள் அருள்கின்ற எளிய முறையில் கொண்டாடி அளப்பரிய பலனைப் பெறுவோமாக!

ஆரோக்கிய விரதம்

ஆரோக்கியம் என்பது உடலைப் பேணுவது மட்டுமன்று; மனம், தேகம் இரண்டையும் ஆனந்த நிலையில் வைத்திருப்பதே ஆரோக்கிய விரதத்தின் மகிமையாகும். மத, இன, ஜாதி பேதமின்றி கொண்டாட வேண்டிய விரதமாகும். இந்நாளில் பிறருடைய ஆரோக்கியத்திற்காக ஒரு தர்மமேனும் செய்த பிறகே உணவை ஏற்பது என்று விரதம் ஏற்க வேண்டும். ஆரோக்கியம் என்பது மதபேதமின்றி அனைத்து உயிரினங்கட்கும், மனிதருக்கும் ஏற்பட்டதல்லவா? இந்த ஆரோக்கிய விரத நாளில்
1. இன்னொரு மனிதருடைய ஆரோக்கியத்திற்காக உணவு, உடை, மருந்து அளித்த பின்னரே.
2. ஆடு, பசு, குதிரை, கோழி போன்ற இன்னொரு உயிரினத்திற்கும் அல்லது கால்நடைக்கும் மருத்துவம், உணவு, அளித்த பின்புதான் இன்றைய உணவை உட்கொள்வது என்று ஒவ்வொரு குடும்பத்தினரும் விரதம்/வைராக்கியம் கொள்வதே ஆரோக்கிய விரதமாகும். இந்நாளில் ‘ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி’, ஸ்ரீஜுரஹரேஸ்வரர்’ போன்ற விசேட மூர்த்திகள் எழுந்தருளியுள்ள தலங்களில்/கோயில்களில் ஆரோக்கியத்தைத் தரும் பூண்டு, வெங்காயம். பால், வெண்ணெய், கீரைகள், பழங்கள், முந்திரி, திராட்சை, போன்ற உலர்ந்த பழங்கள் ஆகியவற்றையும்.
a) ஸ்ரீ வைத்தியநாத சுவாமி, ஸ்ரீதன்வந்த்ரீ, ஸ்ரீஜுரஹரேஸ்வரர் எழுந்தருளியுள்ள கோயில்களிலும்,
b)  ஸ்ரீஆரோக்கிய மாதா, ஸ்ரீவேளாங்கன்னி அன்னை எழுந்தருளியுள்ள கிறித்துவத் திருத்தலங்களிலும்
c) பாண்டிச்சேரி அருகில் சின்னபாபு சமுத்திரத்திலுள்ள ‘ஸ்ரீபடே சாஹிபு’ மஹானின் ஜீவசமாதி, சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள சையத் மூசா ஷா காதிர் என்ற மஹானின் தர்க்கா, நாகூர் ஆண்டவர் தர்க்கா, ஏர்வாடி தர்க்கா போன்ற இஸ்லாமிய மஹான்கள் ஜீவ சமாதி கொண்ட இடங்களில் மேற்கண்ட ஆரோக்கியம் தரும் உணவு வகைகளை அன்னதானமாகவும் மற்றும் ஆரோக்கியம் தரும் பருத்தி, கம்பளி ஆடைகள், வைட்டமின் மாத்திரைகள், டானிக்குகள், ஏனைய மருந்துகள் ஆகியவற்றையும்.
கால்நடை மருத்துவமனை போன்ற இடங்களில் தேவையான கால்நடை உணவுகள், மருந்துகள், கோழி, புறா போன்ற உயிரினங்கட்கான மருந்துகளையும் அவற்றை வளர்ப்பவர்களுக்குத் தானமாக அளிக்க வேண்டும். இவற்றைத் தனித்துச் செய்வதை விட சத்சங்கமாகப் பலர் ஒன்று சேர்ந்து செய்தால் இதன் பலன்கள் பலருக்கும் சென்றடையும். மனிதனாகப் பிறந்தவன் தினந்தோறும் சுயநலமற்ற சேவையாக சிறிய அளவிலாவது தருமங்களைச் செய்தல் வேண்டும். காக்கைக்கு உணவளித்தல், எறும்பிற்கு சீனி ரவை போடுதலும் சிறந்த தினசரி தர்மங்கள். இதனால் தான் பச்சரிசி மாவினால் கோலமிடும் பழக்கம் ஏற்பட்டது. தினசரி கடமையை மறந்த மனிதனுக்கு ஆரோக்கிய விரதம் போன்ற விசேட தினங்கள் பரிஹாரமாக அளிக்கப்பட்டுள்ளன.

இதனையேனும் நிறைவேற்றித் தன் தினசரி கடமையினின்றும் வழுவிய பெரும் பாவத்திற்குப் பரிகாரத்தை மனிதர்கள் பெறுவார்களாக! ஆரோக்கிய சுவாமியானவர் ஆண்டவராம் வைத்தியநாத சுவாமியே! ஏழைகளின் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் சேவையே ஸ்ரீவைத்திய நாத சுவாமிக்குரித்தான ஆரோக்கிய விரதமாகும்.
த்ரிதின பௌர்ணமி
வரும் மார்கழி 1, 2, 3 தேகிகளிலும் பௌர்ணமி திதியானது இம்மூன்று நாட்களிலும் விரவி வருகிறது. ஷடசீதி புண்ய காலத்துடன் இணைந்து வருகின்ற இம்மூன்று தின பௌர்ணமி திதியானது மிகவும் விசேஷமான வரங்களைத் தரவல்லதாகும். ‘த்ரிகுண ஸ்வயம் ஜோதி’ என்றும் ‘முக்கரு கலை ஒளி’ என்றும் அழைக்கப்படும் இந்தப் பௌர்ணமியானது தேவ லோகங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. விண்ணுலகங்களில் சைவ, வைணவ ஏனைய மத பேதங்கள் கிடையாது. இத் த்ரிதின பௌர்ணமியில், தேவலோகத்தில் ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீமத்வாச்சாரியார், ஸ்ரீஇராமானுஜர் ஆகிய மூன்று மஹான்களையும் ஆங்கே ஒருங்கே எழுந்தருளச் செய்து, திருமஞ்சனம் செய்வித்து அவர்கட்கு விசேஷமான பாத பூஜைகளை நிகழ்த்துகின்றனர். இவ்வரிய காட்சியைச் சித்தபுருஷர்கள், மஹரிஷிகள், ஞானிகள் போன்று உத்தம இறையனுபூதி பெற்றோர் கண்டு களித்து அதன் அருள் சக்தியைச் சந்திர பகவானின் அருளினால் நிலாக் கதிர்களின் மூலமாகப் பூலோகத்திற்கு அனுப்புகின்றனர்.
இந்நாளில் பௌர்ணமி விரதம், பூஜை ஆகியவற்றைச் சத்சங்கம் மூலமாகக் கொண்டாடுகின்ற அடியார்கட்கு இத் த்ரிதின பௌர்ணமியின் விசேஷ பலன்கள் சந்திரனின் ஒளிக்கதிர் மூலமாக அளிக்கப்படுகின்றன. எனவேதான் இவ்வொளிக் கதிர்களைப் பெறும் வண்ணம் பௌர்ணமியில் மாலையில் ஸ்நானம் செய்யும் வழக்கம் நிலவி வருகிறது. இத் த்ரிதின பௌர்ணமியை முறையாகக் கொண்டாடும் வழியினைச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர். இப்பூவுலகில் இத் த்ரிதின பௌர்ணமியை எவ்வாறு கொண்டாட வேண்டும்?
ஸ்ரீஇராமானுஜர், ஸ்ரீமத்வாச்சாரியார்,  ஸ்ரீஆதிசங்கரர் இம்முப்பெரும் மஹான்கள் விஜயம் செய்த, எழுந்தருளியுள்ள திருக்கோயில்களில் இப்பௌர்ணமி பூஜையைக் கொண்டாடுதல் மிகவும் சிறப்பானதாகும். சித்ரான்னம் (தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் etc) இனிப்பு ஆகியவற்றைப் படைத்து ஏழைகட்கு அளித்து நாம சங்கீர்த்தனம் பஜனை ஆகியவற்றில் அவர்களையும் பங்கு பெறச் செய்து இத் த்ரிதின பௌர்ணமியைக் கொண்டாட வேண்டும். இம்மூன்று நாட்களிலும் கோயிலில் நீர்விட்டுக் கழுவி சுத்தம் செய்தால் த்ரிதின பௌர்ணமியின் ஒளிக்கிரணங்கள் நீர்த் திவலைகளில் பரவி கோயிலுக்கு வருகின்ற அனைத்து பக்தர்கட்கும் இப்பௌர்ணமியின் தெய்வீக சக்தியை அளிக்கின்றது. இது மஹா புண்ய கார்யமாகும். இம்மூன்று நாட்களிலும் அன்னதானம், ஆடைதானம் மருத்துவ உதவி போன்ற இயன்ற சேவைகளைப் புரிந்து பஜனை, கூட்டு நாம சங்கீர்த்தனம், பக்திப் பாடல் நிறைந்த இன்னிசைக் கச்சேரிகள் நடத்துதல் – இவையே இத் த்ரிதின பௌர்ணமியைக் கொண்டாடும் முறையாகும்.
முப்பரிணாம சக்தி
மூன்று தினங்கட்கும் பௌர்ணமி திதி பரவி இருப்பதால் ஓர் அற்புதமான ‘முப்பரிணாம சக்தி’ என்ற தெய்வீக சக்தி உருவாகின்றது. இச்சக்தியின் ஒளிக் கதிர்கள் முழுநிலாவில் பரிபூரணமடைகின்றன. இவற்றை மக்கள் பெற்று பயன் பெற வேண்டுமெனில், மேற்கண்ட முறையில் பௌர்ணமியைத் தக்க பூஜை, தான தருமங்களுடன் கொண்டாட வேண்டும். இது மட்டுமன்றி, இத் த்ரிதின பௌர்ணமியின் முப்பரிணாம சக்தி பெண்களுக்கு ஒரு தெய்வீக அருளைத் தருகின்றது. மாதவிலக்கு காரணமாகப் பல பெண்கள் நவராத்திரி, வரலக்ஷ்மி விரதம், பொங்கல், தை, ஆடிவெள்ளிக் கிழமைகள், தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற விசேஷமான பண்டிகைகளை மூன்று நாட்களுக்குக் கொண்டாட இயலாமல் போய்விடுகிறது.
இதற்குப் பிராயச்சித்தமாக பெண்கட்கு இத் த்ரிதின பௌர்ணமி பூஜை சித்த புருஷர்களால் அளிக்கப்படுகின்றது. பெண்கள் இம்மூன்று நாட்களிலும், தங்கள் இல்லம், இயன்ற கோயில் சன்னதிகளையும் நீரால் கழுவி பச்சரிசி மாக்கோலமிட்டு பஜனை, நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றை நிகழ்த்தி மூன்று நாட்களிலும் சர்க்கரைப் பொங்கல், சித்ரான்னம், பழங்கள் ஆகியவற்றை ஏழைகட்கு அளிக்க வேண்டும். ஏழை கர்ப்பிணிகள், பிரசவித்த பெண்கள் ஆகியோருக்கு உள்ளாடைகள் அளித்தல் முப்பரிணாம சக்தியின் அருளைப் பரிபூரணமாக்கும். இதனால் நவராத்திரியை முழுதும் கொண்டாட இயலாத பெண்களுக்கு இத் த்ரிதின பௌர்ணமி பூஜையானது ஸ்ரீதுர்கா, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூன்று தேவியர்களின் பலன்களையும் எளிதில் பெறும் நல்வழியை அடையலாம்.
த்ரிதின பௌர்ணமி – தர்ப்பண நியதி
பொதுவாக அமாவாசை அன்று தான் பித்ருக்களுக்குத் தர்ப்பணங்கள் அளிப்பது வழக்கம். காரணம் ஸ்ரீசூரியபகவானும், ஸ்ரீசந்திரபகாவனும் இணைகின்ற இந்நாளில், இந்த சங்கமத்தில் உருவாகும் சூட்சும ஒளிப்பாதையில் பித்ருக்கள் பல லோகங்கட்கும் விஜயம் செய்வதற்கு தெய்வீக அனுமதி கிட்டுகின்றது. எனவேதான் அமாவாசையன்று, பூலோகத்திற்கு பித்ருதேவர்கள் வருகின்றனர். பௌர்ணமி திதியில் அனைத்து லோகங்களிலும் சற்குருமார்களுக்கான பூஜைகள் நிகழ்த்தப் பெறுகின்றன இந்நாளில் ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீஇராமானுஜர், ஸ்ரீமத்வாச்சாரியார், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஸ்ரீவள்ளலார், ஸ்ரீரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீஷீரடி சாய்பாபா, ஸ்ரீமெஹர் பாபா, ஸ்ரீகசவனம்பட்டி சுவாமிகள் போன்ற சற்குருமார்கள், ஒன்று கூடி தங்கள் அடியார்கட்கு ஆசிகளை வழங்கிட அவ்வருள் ஜோதியானது பல லோகங்களையும் அடைகின்றது.
குருபூஜைகள் மூலம் சற்குருமார்கள் இவற்றை நிலாக் கதிர்களிடமிருந்து பெற்று அடியார்களுக்கு அளிக்கின்றனர். இத் த்ரிதின பௌர்ணமியோடு ஸ்ரீகிருஷ்ணனுக்குப் ப்ரீதியான மார்கழி மாதப் பிறப்பு, ஷடசீதி புண்ய காலம் ஆகியவையும் ஒன்று சேர்வதால், இப்பௌர்ணமியில் தர்ப்பணம் அளிப்பது அரியதொரு வாய்ப்பாகும். எத்தனையோ அமாவாசைகள், கிரகண காலங்களை எவ்விதத் தர்ப்பணமும் செய்யாது, வீணாகக் கழித்து இதனால் பித்ரு சாபத்திற்குள்ளாகி, எண்ணற்ற பல துன்பங்களில் வாடும் மனிதர்கட்கு இத் த்ரிதின பௌர்ணமியில் அவர்கள் மூதாதையர்க்கு அளிக்கும் தர்ப்பணம், பல பெரும் பாவங்களைக் கழிக்கும் உன்னத தர்ப்பண பூஜையாக அமைந்து அவர்களைக் காக்கின்றது. இவ்வரிய தர்ப்பணத்தையாவது மக்கள் செய்து தங்களைப் பாவச் சுமையினின்று காத்துக் கொள்வார்களாக!
இவ்வரிய ஆன்மீக  இரகசியங்களை நம் நல்வாழ்விற்காக எடுத்தருளும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகட்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
1. இத்திரிதின பௌர்ணமியன்று மட்டும் தர்ப்பணம் அளிக்குமுன் சிகை அல்லது மீசை மழிப்பது விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பௌர்ணமியின் விசேஷமான ஒளிக்கதிர்கள், சிரசு, முகம் மூலம் உடலுக்குள் பாய்ந்து தெய்வீக நரம்புகளை ஊக்குவித்து நல்லெண்ணங்களைத் தூண்டுகிறது இதனால் முறையற்ற துர் எண்ணங்கள், தவறான காம உணர்ச்சிகள் அகல்கின்றன.
2. கிராப்பு வைத்து பழக்கப்பட்டோர், மாதப் பிறப்போடு கூடிய பௌர்ணமி தினத்திலாவது சிறுஅளவேனும் குடுமி வைத்துத் தர்ப்பணம் மற்றும் பூஜைகளை நிகழ்த்த வேண்டும். குடுமி வைப்பது கேலிக்குரியதன்று! குடுமி வைத்தவர்களைப் பழித்தல், துன்புறுத்துதல், கிண்டல் செய்தல் பெரும் பாவச் செயலாகும். இவ்வாறு செய்திடில் வாய் குழறித் திணறி, நோயால் அவதியுறுகின்ற நிலை ஏற்படும்.
இவ்வாறு, ஜாதி, இன பேதமின்றி அனைவரும் தீட்சை (குடுமி) வைத்துத் தர்ப்பணம் செய்தால் பல வருடங்களாகத் தர்ப்பணம் சரிவரச் செய்யாமைக்கு இது ஒரு பெரும் பிராயச்சித்தமாக அமைகிறது. இது பெறற்கரிய பரிகாரம் அல்லவா? சற்குரு அருள்கின்ற இந்த வாய்ப்பை நழுவ விடலாமா?
3. இப்பௌர்ணமித் திதி தர்ப்பணத்தில் எள், நீருடன் வெல்லம் சேர்த்து அளிக்க வேண்டும் இதனால் தீராத நோய்கள் தீரும். விடுபட்ட உறவுகள் நன்முறையில் தொடரும். இழந்த நன்மதிப்பு மீண்டும் உருவாகும். பிறர் முன்னிலையில் அவமானம் அடைந்தவர்கள் அவச் சொல் நீங்கி, அவர்களாலேயே அரவணைக்கப்படும் நன்மதிப்பைப் பெறுவர்.
பிசாச விமோசன தீர்த்த சிராத்தம்
ஒவ்வொரு குடும்பத்திலும், இறந்த ஒவ்வொருவருக்கும் வருடம் முழுவதும் அமாவாசை, மாதப்பிறப்பு, கிரகண காலங்கள், ஷடசீதி, விஷ்ணுபதி போன்ற புண்ய காலங்களில் 96 வகையான சிராத்தங்கள் (தர்ப்பணங்கள், திவசங்கள் etc) பித்ருக்களுக்காக செய்யப்பட வேண்டும் என்ற நியதி உண்டு. ஜாதி மதபேதமின்றி அனைவருக்கும் இது உரித்தானதாகும். இவற்றைச் சரிவர நிறைவேற்றாமையால் தான் ஒவ்வொரு குடும்பத்திலும் நோய்கள், பணப்பிரச்சனைகள், உறவினர்களால் துன்பங்கள், சந்ததியின்மை, திருமணத் தடங்கல்கள், தம்பதியினரிடையே மனஸ்தாபங்கள், மது, கேளிக்கைகள் இவற்றால் விளையும் தினசரி கஷ்டங்கள் போன்றவை பரவிக்கிடக்கின்றன.
மேற்கண்ட பித்ரு காரியங்களைச் சரிவர நிறைவேற்றாமையால் தினசரி வாழ்க்கையைச் சமாளிப்பதே கலியுக மக்களுக்கு சிரமமாக உள்ளது என்பதை நன்கு உணர்ந்த சித்த புருஷர்கள்
1. 96 வகையான பித்ரு கடன்களை அனைவராலும் நிறைவேற்ற இயலாது என்பதாலும்
2. பித்ரு காரிய முறைகளை உள்ளன்போடு, சிரத்தையாக பிரதிபலன் எதிர்பாராது எடுத்துச் சொல்வோர், நடத்தி வைப்போர் அருகிவிட்டமையாலும்.. 
3. பித்ருக் காரியங்களின் அற்புதமான பலாபலன்களை ஜாதி மதபேதமின்றி பாமரர் உட்பட, எல்லோருக்கும் எடுத்து உரைத்து, இயங்கும் சுயநலமற்ற மக்கள் சேவையாற்றும் பெரியோர்களை சமுதாயம் சரிவரப் பேணுவதில்லை ஆதலின், நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள், சித்தர்களின் அருள் மொழிகளாக தம் குருவிடம் பெற்றப் பல பரிகாரங்களை அனைவருக்குமாக அருள்கின்றார். இவ்வாறாகவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் அவ்வப்போது மாளய தர்ப்பணம், விஷ்ணுபதி, யமதர்ப்பணம் போன்ற எளிய தர்ப்பண தான, தர்ம முறைகளை ஏழை எளியோர்க்கும் புரியும்படி எளிய முறையில் விளக்கி அனைத்து மக்களும் கடைத்தேற அருட்பெரும் தொண்டாற்றி வருகின்றார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது மார்கழி முதல் தேதியன்று அமையும் ஷடசீதி புண்ய காலம் என்று அழைக்கப்படும் நாளன்று நிறைவேற்றப்பட வேண்டிய பல நற்காரியங்களுள் ஒன்றான ‘பிசாச விமோசன தீர்த்த சிராத்தம்’ பற்றி நம் குருமங்கள கந்தர்வா விளக்குகின்றார்.
தற்கொலை, கொலை, தீவிபத்து, இதர விபத்துகள் போன்றவற்றால் மட்டுமின்றி ‘ஒப்புதல் மரணம்’ (Euthanasia or Mercy killing) மூலமும் உயிர் பிரியும் ஜீவன்கள் மரணத்திற்குப் பின் பல நிலைகளைச் சந்திக்கின்றன. இவ்வாறு இயற்கையற்ற முறைகளில் ஏற்படும் மரணங்களுக்கு பிரத்யேகமான பித்ரு கடன் நிவர்த்தி முறைகள், பிராயச்சித்தங்கள், பரிகாரங்கள் உண்டு. இவற்றை அறிந்தோ அறியாமலோ செய்யாமல் விட்டிருந்தால் மேற்கண்ட ‘பிசாச விமோசன தீர்த்த சிராத்த முறை’ அருளப்படுகிறது.
பிசாசு, பேய்கள் போன்றவை ஆவிகளின் பல நிலைகளைக் குறிக்கின்றன என்பதை உணர்ந்தால் தேவையற்ற அச்சம் ஏற்படாது. குறிப்பாக, தீவிபத்தில் மரணமுற்றோர்க்கு சாந்தி பரிகாரமாக மேற்கண்ட விமோசன சிராத்தம் அமைவதாக சித்த புருஷர்கள் அருள்கின்றனர்.
மேற்கண்ட இயற்கையற்ற முறையில் இறந்தோருக்குத் தர்ப்பணங்களை இந்நாளில் மூன்று சந்தி காலங்களிலும் அளிக்க வேண்டும்.
காலை சந்திகாலம் : காலை சுமார் 5.30 – 6.00 ; மதிய சந்திகாலம் : பகல் சுமார் 12 மணி ; மாலை சந்திகாலம்  : சுமார் 6.30 மணி
தீவிபத்து மற்றும் ஏனைய விபத்துகள் நிகழ்ந்த இடத்தில் அங்கே பிரசன்னமாயிருந்தவர்கள். சாட்சியாகப் பார்த்தவர்கள் ஆகியவர்கள் ஒன்று கூடி அங்கு இறந்தவர்களுக்கு இந்தத் தர்ப்பணங்களை இந்நாளில் அளித்தால் இதன் பலன்கள் பரிபூரணமாக அமையும். இதனை உத்தமமான சேவையாகக் கருதி அத்தகையோர் தக்க ஒத்துழைப்புத் தரவேண்டும். விபத்து நிகழ்ந்த இடத்தில் இது அமைந்தால் சிறப்பானதாகும். இயன்ற வரையில் கூட்டமாக அல்லாது மேற்கண்ட நபர்கள் மட்டும் மனம் ஒருமித்த நிலையில் தர்ப்பணங்களைச் செய்வாராயின் அதன் பலன்கள் இறந்தோருக்கு எளிதில் சென்றடைந்து அவர்கள் உன்னத நிலைகளை விரைவில் பெறுவர். செய்தவர்களுக்கும் பரிபூரண ஆசீர்வாதம் கிட்டும்.
தானதர்மங்கள்
இயற்கையற்ற முறையில் மரணமுற்றோருக்கு (நிறைவேறா) முறையான ஆசைகள் இருந்திருப்பின் அவற்றை இயன்ற அளவு நிறைவேற்றுவது விசேஷமாகும்.
உதாரணம் : தீ விபத்தில் இறந்த ஒருவருடைய திருப்பதி ஏழுமலையானுக்கான நேர்த்திக் கடன்களை அவருடைய உறவினர்களும் நண்பர்களும் நடத்திவைத்தனர். இதன் பலன்கள் இறந்தவர்களின் ஆவி நிலைக்கு மாபெரும் புண்ய சக்தியாக அமைந்து உதவி புரிந்தது. இறந்தவருக்குப் பிடித்தமான ஆடைகள், உணவு வகைகள் போன்றவற்றை இந்நாளில் ஏழை எளியோருக்கு (ஜாதிமத பேதமின்றி) அளிக்க வேண்டும். எளிய முறையில் பாமரரும் தர்ப்பணம் அளிக்கும் முறை இவ்விதழில் பிறிதொரு இடத்தில் விளக்கப்பட்டுள்ளது. அரிவாள் போன்ற ஆயுத வெட்டுக்கள் மற்றும் தீ விபத்தில் இறந்தோருக்குச் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீதிருவட்டீஸ்வரன் கோயிலில் மேற்கண்ட முறையில் தர்ப்பண தான முறைகளை நிறைவேற்றுவது மிகச் சிறப்பானதாகும்.
ஸ்ரீதிருவட்டீஸ்வர சிவபெருமான் வெட்டுக்காயங்களுக்கான கர்மங்களைப் பரிபாலிக்கும் அருட்பெரும் ஜோதி ஆவார். தீக்காயங்களால் அவதியுறுவோர் இத்திருக்கோயிலில் இயன்ற அளவு திருப்பணிகள், ஏழைக் குழந்தைகளுக்குக் கற்கண்டு கலந்த பால் தானமளித்தல், தேங்காய் எண்ணெய், வெண்ணெய், மெல்லிய பருத்தி ஆடைகள் போன்றவற்றைத் தானமளித்தல் மூலம் உன்னதமான முறையில் தோல் காயங்களுக்கு தழும்புகளுக்கு நிவாரணம் பெறலாம். இராமேஸ்வரம், வாரணாசி, திருவிடைமருதூர், திருவள்ளூர் (சென்னை), திருஅண்ணாமலை, சக்கரப் படித்துறை (கும்பகோணம்) , மற்றும் கங்கை, காவிரி, தாமிரவருணி போன்ற புண்ய தீரங்கள் ஆகியவற்றிலும் மேற்கண்ட தர்ப்பணங்கள்/தான தருமங்களை நிறைவேற்றலாம். இதனால் தர்ப்பண பூஜையின் பலன்கள் பன்மடங்கு பெருகும்.

மார்கழி சிறப்பு

விண்ணுலக லோகங்களில், உத்தம தேவலோகங்களுக்கான பிரம்ம முகூர்த்த நேரமே மார்கழி மாதத்தின் 30 நாட்களாகும். எனவே மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் (காலை 3.30-5.30) நாம் செய்யும் பூஜைகளில் தேவர்களும் உவந்து பங்கேற்பதால் இது உத்தம பூவுலக- தேவலோக இணைப்பு சத்சங்க பூஜையாக மலர்ந்து அபரிமிதமான பலனை வர்ஷிக்கின்றது. மார்கழி மாத விடியற்காலை நேரம் பனிப்படல் போல் தோன்றினாலும் அது ‘ஓசோன்’ (ozone) என்றழைக்கிறோம். கலியுகத்தில் மார்கழி மாதவிடியற்காலைப் பூஜை என்பது மார்கழி மாதம் பனியிடையே 30 நாட்களும் சாத்தியமானதா? இதை வைராக்கியத்துடன் பின்பற்றும் உத்தம பக்தர்களுக்கு ஸ்ரீமஹாவிஷ்ணுவின் தெய்வ கடாட்சம் மங்களகரமான வாழ்வைத் தரும். நோய், குடும்பச் சூழ்நிலை, வீட்டமைப்பு, (Flat system etc), பாதுகாப்பு காரணமாக இவற்றைச் செய்ய இயலா சாதாரணமக்கள் என்ன செய்வது? இதற்கு சித்த புருஷர்கள் தானே நல்வழி காட்ட இயலும்! மார்கழி மாதத்தில் விடியற்காலையில் எழுந்து பூஜை செய்ய இயலாதோர் தங்களால் முறையான மார்கழி மாத பூஜையினைச் செய்ய முடியவில்லையே என ஏங்குகின்றனர். அவர்களுக்குரித்தான சில எளிய வழிபாடு முறைகளாக நம் குருமங்கள கந்தர்வா அருள்வதாவது :-
எளிய பூஜைமுறை :- காலையில் பிற நாட்களில் எழும் நேரத்தை விட ஒரு மணி நேரமேனும் முன்னதாக மார்கழியில் எழுந்திருந்து பல் துலக்கி கை கால்களைச் சுத்தம் செய்துகொண்டு முடிந்தால் ஸ்நானம் செய்து இயன்றவரை துவைத்த ஆடைகளை மாற்றி நெற்றிக்கு திருநீர்/திருபுரண்டம்/நாமம்/சந்தனம்/குங்குமம் தரித்து பூஜை அறையில் அமர்ந்து குத்துவிளக்கு ஏற்றித் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களைப் பொருள் புரிந்து பாராயணம் செய்தல் வேண்டும். பாடல்ளோடு விளக்க உரையையும் படிப்பதே முறையானது. இதேபோல் மதிய நேரத்திலும், மாலையிலும் மீண்டும் பல் துலக்கி கை கால்களை சுத்தம் செய்துகொண்டு நெற்றிச் சின்னம் அணிந்து மார்கழி மாதத்திற்குரித்தான பாசுரங்களைப் பொருள் அறிந்து பாடி துதிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், அதிரசம், மிளகு வடை – இதில் இயன்றதை ஓர் ஏழைக்கேனும் தினந்தோறும் அளித்தல் மிகவும் விசேஷமானதாகும்.
பொதுவாக வருடம் முழுதும் தினசரி நித்யபூஜை செய்ய இயலாதோருக்கு மார்கழி மாத நித்யபூஜை ஓர் வரப்பிரசாதமாக விளங்குகிறது. மூன்று வேளை தந்த சுத்தி (பல்துலக்குதல்) குச்சிகளைக் கொண்டு பல்துலக்குதலும் ஆலம்பட்டை கஷாயத்தால் (லலாடங்க கஷாயம்) கொப்புளித்தலும் நாவன்மையைப் பெருக்கி வாக்கு சுத்தியைத் தரவல்லது.  தேவமொழியாம் சமஸ்கிருதத்தை நன்கு கற்று வேதத்தை ஓதும் வாய்ப்புக் கிட்டவில்லையே என்று ஏங்குவோர் பலர் உண்டு. இத்தகைய ஏக்கம் உள்ளோருக்கு மார்கழி மாத முறையான பூஜையானது தேவமொழியில் வேதம் ஒதியதற்கான பலனைத் தருகின்றது.
இவர்கள் மேற்கண்ட முறையில் மூன்று வேளை பல்துலக்குதலான தந்த சுத்தியுடன் தானதருமங்களைச் செய்து திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி மூன்றையும் முறையாக ஓதிட வேண்டும். தெய்வ தரிசனம் பெற்ற மகான்களான ஸ்ரீமாணிக்க வாசகர், ஸ்ரீஆண்டாள் இருவரும் திருவாய் மலர்ந்தருளியுள்ள தமிழ்ப் பாடல்களின் அட்சரங்களில் தேவமொழி மந்திரங்களுக்கு ஈடான பீஜாட்சரங்கள் பொதிருந்திருப்பதால் வேத பாராயணத்திற்கு நிகரான உத்தம பலன்களை இவை அளிக்கவல்லதாம். இறைவனே மாணிக்கவாசகர் மூலம் மனமுவந்து அளித்த திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, ஸ்ரீஆண்டாள் திருஅரங்கப் பெருமாளுக்குச் சூட்டி மகிழ்ந்த திருப்பாவைத் தமிழ் ஆரங்கள் – இவற்றின் மகிமையை எழுத்தில் வடிக்க இயலாது.
ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிரியமான மார்கழி மாதத்தின் இத்தகைய எளிமையான நித்ய பூஜையினைக் கடைபிடித்து நற்கதி அடைவோமாக! மார்கழி மாத நித்ய பூஜையானது, ஆண்டுகள் பலவற்றை நித்யப் பூஜையின்றிக் கழித்த பாவத்திற்குச் சிறந்த பரிஹாரமாக அமைகின்றது.

கன்யாகுமரி அம்மன்

கண்ணைப் பறிக்கும் வைரக்கல்.... கோடி சூர்யன்களை நிகர்த்தாற்போல் சுடர் விட்டுப் பிரகாசித்தது... தாங்க இயலா உஷ்ணம்! எவராலும் அருகிற் செல்ல இயலவில்லை! தாஸ்கோவும், காப்ளாகாப்களாவின் சீடர்கள் குழாமும் கன்யாகு தேவியை நோக்கித் தொழுதனர். ‘அம்மா! தாயே! இதுவரை நீ தான் எங்களுக்கு அருள்வழி காட்டி வந்தாய். அதுவும் உன் அடிமையாம் காப்ளா காப்ளாவின் மூலமாக! உன் அடிமை இன்றோ உன்னுள் கலந்து விட்டான்! அவன் விருப்பமோ இந்த அற்புத சக்தி வாய்ந்த வைரக்கல் உன்னைச் சேர வேண்டும் என்பதே! நீ என்ன விரும்புகிறாயோ அதை நிறைவேற்றி வைப்பாயாக!
......ஆங்கே... அந்த திவ்யமான வைரக்கல்லைச் சுற்றி பேரொளி படர்ந்தது.....ஸ்ரீகன்யாகு தேவியின் அசரீரி ஒலித்தது! பக்தர்களே இந்த யுகத்திற்கான எமது சக்தி அவதாரம் இத்துடன் நிறைவுற்றது! யாம் இந்த வைரக்கல்லுடன் மீண்டும் பூமியில் புதைந்து பிறிதொரு யுகத்தில் பாரதத் திருமண்ணில் புனிதமான முக்கடல்களின் சந்திப்பில் கன்யாகுமரியாக அவதாரம் பெறுவோம்! உங்களை இதுகாறும் சற்குருவாய் அரவணைத்துக் காத்த ‘மாயா கன்மல சித்தர்’ அந்த யுகத்தில் பத்தாம் சித்தகுலப் பெண்மணியாக உன்னத சித்த ஞானியாக ‘மாயி’ என்று அழைக்கப் பெற்றுப் பலகோடி மக்களுக்கு கன்யாகுமரி என்னும் அத்தலத்தில் சற்குருவாய் அருளாட்சி புரிவாள். காப்ளாகாப்ளா, அங்கு முதல் நம்பூதிரியாகப் பிறவி எடுத்து மாயிதேவியின் உதவியுடன் இந்த வைரக்கல்லை எமக்கு அந்த யுகத்தின் கன்யாகுமரி ஆதிபராசக்தி தெய்வாவதாரத்திற்கு மூக்குத்தியாக அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவான். அந்த மாயி தேவி பல ஆயிரம் ஆண்டுகள் அத்தலத்தில் சற்குருவாய் உலவி அருள்புரிவாள். நீங்கள் அனைவரும் நன்றியுள்ள பிரஜைகளாக நாய்களின் உருவத்தில் ‘மாயி’ தேவிக்கு சேவை புரிவீர்களாக! என்று கன்யாகு தேவி அருள்பாலித்தனள்.
எவருமறிந்திரா இத்தகைய அற்புதமான கன்யாகுமரி திருத்தல வரலாறு ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் காணப்படுகிறது என்று ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தர், குருமங்கள கந்தர்வாவிற்கு தலப் பயணத்தில் கூறிய வரலாறு இதுவே ஆகும். ஸ்ரீமாயா கன்மல சித்தரே, ஸ்ரீமாயி தேவியாக கன்யாகுமரி கடற்கரையில் பல்லாயிரம் ஆண்டுகள் வலம் வந்து சில ஆண்டுகளுக்கு முன் தான் ஜீவசமாதி பூண்டார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் கன்யாகு தேவி முன்பு அவதாரம் கொண்ட பகுதி இன்று கென்யா நாடாக மருவி வழங்கப்படுகின்றது. அங்கு வனவாசியரிடையே கன்யாகுதேவி வழிபாடு சிறப்பிடம் பெற்றுள்ளது.
ஞானானந்த கிரி சுவாமிகளைப் போல் பல்லாயிரம் ஆண்டுகளாக ‘மாயி’ தேவியாக கன்யாகுமரி கடற்கரையில் உலவி எப்போதும் நாய்களுடன் உலவி அருள்புரிந்தாள் அந்த சித்தமணி! சுற்றிலும் நாய்கள்! எத்தனையோ கோடி பேர்களுக்கு சற்குருவாய் அருள் புரிந்து மாயி தேவி சில ஆண்டுகளுக்கு முன் தான் ஜீவசமாதி பூண்டாள்.. அவளே மாயாகன்மல சித்தரின் திருஉரு! பிறவியென்பது சித்தர்களுக்குச் சட்டையைக் கழற்றுவது போல! மாயி தேவியைச் சுற்றி நாய்களாக அலைந்து சேவை புரிந்தோர் தாஸ்கோவும் காப்ளா காப்ளாவின் இனத்தவருமே!
இறைவனின் படைப்பில் இன ஜாதி, மத வேறுபாடு கிடையாது! ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஞானத்தைப் பெறும் வரை பிறவிச் சக்கரம் சுற்றிக் கொண்டேயிருக்கும்! பல்வேறு மதங்களில் பலவகை மனிதர்களாக, ஏனைய உயிரினங்களாக அப்பிறவிகள் அமையலாம். அவரவருடைய மதத்தின் மார்கத்தில் நின்று அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டுதலே பிறவிப் பிணியைத் தீர்க்கும் பெரு மருந்தாகும். தான, தருமங்களே உண்மையான அன்பினை போதிக்கும், குருவை நாடி அறிந்திட்டால் தான் தான தருமங்களை முறையோடு நிகழ்த்துகின்ற பாங்கினை அறியலாம். மனம் போனபோக்கின்படி தான, தர்மங்களைச் செய்தாலும் அதற்குரிய பலன்கள் உண்டு. நம்முடைய கர்மவினைகளுக்கேற்ப முறையான தான தர்ம முறைகளை சற்குருவே அளித்து நம்மைக் கரையேற்றுகின்றார்.
1. தான தர்ம வழி முறைகள்
(உம்) மாசி மகத்தில் புனித நீராட ஆசை கொண்டு அது நிறைவேறுமுன் உயிர் நீத்த ஒருவருடைய ஆவிரூப வேட்கையை நிறைவேற்ற நம் குருமங்கள கந்தர்வா அவருடைய புதல்வனுக்கு திருஅண்ணாமலை கிரிவலத்தில் ‘கும்பகோண தரிசனம்’ என்ற அற்புத தரிசனத்தை அறிவித்து அவ்விடத்தில் தக்க தானங்களைச் செய்யுமாறு நல்லாசி வழங்கினார். சற்குருவின் அருள்வாக்கன்றோ! இதனால் இறந்தவருடைய நல்லாசை பரிபூரணமாக நிறைவேறியது மட்டுமன்றி இத்தகைய முறையான கிரிவல தரிசனம், தக்க தான தர்மங்கள் (அதுவும் குறித்த நட்சத்திரத்தில் அமைந்த தான தர்மங்கள்) இவற்றால்
a) மூதாதையர்களான பித்ருக்கள் மேனிலை அடைந்து
b) பித்ருக்களின் ஆசியால் அவருடைய புதல்வருக்கு புத்திர பாக்கியம் அமைந்து
c) பல்வகைக் கர்ம வினைகளால் தத்தளித்த அக்குடும்பம் சீர்பெற்று விளங்கியது!
குரு அளிக்கும் தரிசனம் மற்றும் தான தர்ம முறைகளினால் எத்தகைய பலாபலன்கள் பார்த்தீர்களா!
2. தானதர்மங்களை நிறைவேற்ற வேண்டிய க்ஷேத்திரங்கள், நேர, நட்சத்திர கால முறைகள் இவற்றையும் சற்குருவே அளிப்பதால் தானதர்மங்களின் பரிபூரண பலன்கள் வந்தடைகின்றன.
3. தானதர்மத்தின் முழுப் பலன்களையும் அடைதல் எங்ஙனம்?
தனித்தே ஒருவர் எவ்வளவுதான் சிரமப்பட்டாலும் குறித்த அளவுதான் அவரால் செய்ய இயலும். சற்குரு நடத்துகின்ற சத்சங்கம் மூலம் நிகழ்கின்ற அன்னதானம், பல்லாயிரக் கணக்கானோரின் பசிப்பிணியைப் போக்குகின்றது. இதில் இணைந்து கொண்டால் பல்லாயிரக் கணக்கானோருக்குச் சேவை புரியும் வாய்ப்பைப் பெறலாமல்லா! இதுவே பகுத்தறிந்து பல்லுயிர் ஓம்பும் பாங்கு!
இவ்வாறாக இன்னோரன்ன ஆயிரமாயிரம் ஆன்மீக நல்வழி முறைகளைக் காட்டி நம்மை அரவணைத்துச் செல்லும் சிவநெறிச் செல்வரே திருமாலின் திருவடி நிழலே, ஆதிபராசக்தியின் அடிமையே சற்குரு ஆவார். அவரைத் தேடி, நாடி, அடைந்து குருவருளுடன் கூடிய திருவருளைப் பெறுவீர்களாக! எனவே கன்யாகுமரியில் ஸ்ரீஆதிபராசக்தியைத் தொழும் முன்னர், ஸ்ரீமாயாகன்மல சித்தராம், ஸ்ரீமாயி தேவியை மானசீகமாகத் தொழுது அவர்கள் நல்லாசியுடன் ஸ்ரீகன்யாகுமரி தேவியைத் தொழுதிட பரிபூரண இறையருள் கிட்டும். ஸ்ரீதேவியின் தரிசனமும் சம்பூர்ணமாகும்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உயரிய எண்ணம் வளர, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதலே உண்மையான இறைநெறி! எந்த மதத்தை தூஷிக்கின்றோமோ, எந்த உயிரினத்தை வெறுக்கின்றோமோ, அந்த மதத்தில் நமக்கு மறு பிறவி! அந்த உயிரினமாக மறுபிறவி! இவ்வாறு தான் பிறவிச் சக்கரம் சுழல்கின்றது!
எனவே இந்தப் பிறவி மாயையை நீக்கவே இன்றும் கன்யாகுமரி திருத்தலத்தில் ‘மாயி தேவி’ அருவமாக நடமாடி எவ்வுருக்கொண்டும் ஆசீர்வதித்து அருள் பாலிக்கின்றாள். இத்தலத்தில் நாய்களுக்குப் பிரியமான உணவையளித்து ஏழைக்கன்னிப் பெண்கட்கு ஆடைகள், வளையல் போன்ற ஆபரணங்களையும் அளித்து ஸ்ரீமாயிதேவியின் தியானத்துடன் ஸ்ரீகன்யாகுமரி தேவியை வணங்கிட
1. அன்பு உணர்வு பெருகும் – பகை உணர்ச்சி தணியும்.
2. பிற மத துவேஷ வெறுப்புணர்ச்சி  மறையும், சம நிலை அடையும்.
3. உலக மக்கள் யாவரும் இறைவனின் படைப்பே என்ற நினைவு மேலோங்கி குரோத மனக்கொந்தளிப்புகள் விலகும்.
இவையே தியானத்தின் முதல்படியாகும். மேற்கண்ட தான தர்மங்கள், மாயா கன்மல சித்தராய் ஆப்பிரிக்கப் பகுதியில் அருள்புரிந்து ஸ்ரீமாயிதேவியாய் சித்த உருக்கொண்டு பல்லாயிரம் ஆண்டுகள் இங்கு அருள் பாலித்து இத்தலத்தில் இன்றும் சூட்சும ஜீவசமாதியில் அருள்புரியும் ஸ்ரீமாயிதேவியின் தியானம். ஸ்ரீகன்யாகுமரியின் திவ்ய தரிசனம் இவற்றோடு ஸ்ரீவிவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் புரிந்தால் ஏற்படும் இறை அனுபவத்தை எழுத்தில் வடிக்க இயலாது. இதுவே ஸ்ரீவிவேகானந்தர் அற்புதமாக தியானம் புரிந்து பெற்ற பலனில் அணுவினும் சிறிதேனும் பெறுவதற்கான நல்வழி தியான முறையாக சித்த புருஷர்கள் அருள்கின்றனர்.
இத்தகைய இறையனுபூதியை முறையாக கடைப்பிடித்து உண்மையான தியானத்தின் முதல்படியின் பேரின்பத்தை உணர்வோமாக! பல்லாயிரம் தேவி பக்தர்களின் தியாகத்தில் விளைந்த அம்மனின் மூக்குத்தி ஒளியின் தரிசனமே ஸ்ரீஅம்மனின் திவ்யதரிசனத்திற்கு ஈடானதாகும். இவ்வொளியின் தரிசனத்தால் மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கேற்ப மக்கள் சேவைக்கு சுயநலமற்ற சேவை புரியும் தியாக மனப்பான்மை இறையருளாகப் பரிணமிக்கும்! இறையருள் பொங்கும் வழிமுறைகளுள் இதுவும் ஒன்று! பிறருக்குச் சேவை புரியும் புனிதப் பணியைத் தொடர்ந்தால் இறையருள் தானே கனியும்!
ஸ்ரீவிவேகானந்தர் பாறையில் தியானம்
ஸ்ரீஅகஸ்தியர் கிரந்தங்களில் கலியுக நடைமுறை நிகழ்ச்சிகள் யாவும் தீர்க்க தரிசனமாக விவரிக்கப்பட்டுள்ளன! இவை முக்காலமும் உணர்ந்த சித்தர்கள் ஞானிகளுக்கே உணர்த்தப்படும். ஸ்ரீவிவேகானந்தர் அமர்ந்து தியானம் புரிந்த புனிதப் பாறையில் கன்யாகுமரி திருத்தலத்தில் ஜாதி, மத, பேதமின்றி ஏழைக் கன்னிப் பெண்களுக்கு பாவாடை, தாவணி, புடவை, மேல் ஆடை, ரிப்பன் போன்றவற்றையும், ஹேர்பின், சீப்பு, கண்ணாடி, நல்ல குங்குமம் நிறைந்த குங்குமச்சிமிழ், மஞ்சள், கருஞ்சிவப்புப் பனையோலை ஆபரணங்கள், நல்ல கண் மை, மருதாணி போன்ற மங்களப் பொருட்களை தானமாக அளித்து இயன்ற அளவு அன்னதானம், நாய்களுக்கு பிஸ்கட் போன்ற உணவிட்டு ஸ்ரீமாயா கன்மல சித்தர், ஸ்ரீமாயிதேவியை நினைவு கூர்ந்து ஸ்ரீகன்யாகுமரி தேவியை முக்குத்தியின் ஒளியோடு தரிசிக்க வேண்டும்.
இதற்குப் பின் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து கண்களை மூடியவாறு மேற்கண்ட தான தர்ம நிகழ்ச்சிகளைத் திரைப்படம் போல் மனக் கண்களுக்குள் செலுத்தி பார்க்க வேண்டும், சித்த புருஷர்களின் இத்தகைய தியான முறையில்
1. எண்ணங்களை அடக்கிப் பயில்வதை விட நல்எண்ணங்களைப் பயிராக்கி வளர்த்து எண்ணங்களைச் சீராக்கும் எளிய நல்வழி எடுத்துக் காட்டப்படுகின்றது.
2. எண்ணங்களை அடக்கி ஆளுதல் கடினம். கண்களை மூடியவுடன் காம, குரோத, லோப உணர்வுகள் கட்டுக்கடங்காது மிதந்து வரும். ஆனால் மேற்கண்ட முறையில் இந்த மனித தேகத்தில் செய்த இப்புனிதத் தலத்தில் நிறைவேற்றப்பட்ட தான தர்மங்களைக் கோர்வையாக எண்ணிப் பார்ப்பதால் மனம் சீரடைகின்றது!
3. தியானம் என்பது எண்ணங்களில் பால் மனம் செல்வதன்று! மனம் உடலுடன் சம்பந்தப்பட்டது! எனவே இவ்வுடல் செய்த நற்காரியங்களை நினைவு கூர்ந்தால் உடலுடன் ஒன்றிய மனமும் தர்ம சிந்தனையில் சிறிது நேரமாவது ஊறிய மனமும் ஒத்துழைத்து உடலுடன் ஒன்றும், தேகத்தால் செய்த நற்காரியங்களின் பால் மனதைச் செலுத்துவதே எளிய தியானம்.
4 மேற்கண்ட தர்ம, தான காரியங்களை நினைவு கூர்கையில் குறைந்தது ஐந்தாறு நிமிடங்களாவது மனம் ஒருமித்து நல்வழியில் செல்கின்றதல்லவா? இவ்வாறாக தியானம் என்பது மனதைக் கட்டுபடுத்துவதைவிட நல்வழியில் செலுத்துவதே ஆகும்.
நடைமுறைக்கு உகந்த, பயில்வதற்கு எளிதான தியான முறை அல்லவா?
பத்து நாய்களுக்கு உண்விடுகையில் இந்த தேகம் ஒரு நற்காரியத்தைச் செய்கின்றது. கண்களை மூடியவாறு இதனை நினைவு கூர மேலும் சில நிமிடங்களுக்கு மனமானது அந்த நற்காரியத்தில் லயிக்கின்றது! இந்த லயிப்பே தியானத்தின் முதல்படி, ஒரு முகப்பட்ட நற்காரியத்தில் மனம் லயிக்க, லயிக்க தியானமுறை மேம்படும்!

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வாவின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள்)
இராயபுரம் கல்மண்டபம் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில், டிசம்பர்31ஆந் தேதி....., மாலை 6 மணி இருக்கும்..., அச்சிறுவன் கோயில் முகப்பு மண்டபத்தில் குட்டிபோட்ட பூனைபோல் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தான்! ‘இந்த வாத்யார் தக்க சமயத்தில் வராமல் எங்கோ போய்விட்டாரே! எப்பவும் இவர் இப்படித்தான். பெரிய பிரச்னை என்று வரும்போது திடீரென்று காணாமல் போய்விடுவார்! எல்லாம் முடிந்தவுடன் ‘எங்கேயும் போகல ராஜா, இங்கேயே தான் இருக்கேன்!’ என்று திடீரென்று தோன்றுவார்! இவரைப் புரிந்து கொள்ள முடியவில்லையே...!!
யோசித்தவாறே சிறுவன் படுவேகமாக, குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். கோவணாண்டிப் பெரியவரின் தரிசனம் முக்கியமாகத் தேவையென்றால் ஸ்ரீஅங்காளி கோயிலை 108 முறை சுற்ற வேண்டும் என்று சிறுவன் ஒரு கணக்கு வைத்திருந்தான். இன்றோ, சுற்றுக் கணக்கு இருநூறையும் தாண்டி விட்டது...!
தன் கணக்கு பலிக்கவில்லையே? சிறுவன் ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டான்.
‘உன்னோட சொந்த காரியத்துக்கு இந்த 108 சுத்துக் கணக்கு பலிக்காது ராஜா’ பெரியவர் என்றோ சொன்னது, சிறுவனுக்கு இன்று நினைவில் வந்த்து. என்ன விஷயமாக சிறுவன் கோவாணாண்டிப் பெரிய்வரைத் தேடினான்? அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது அல்லவா? ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதல் தேதியன்று கோவணாண்டிப் பெரியவர் சிறுவனுக்கு ‘வருட வைராக்கியம்’ என்ற ஒரு நற்காரியத்தையோ, பல நற்காரியங்களையோ அளிப்பார். அவற்றைச் சிறுவன் அந்த வருடத்திற்குள் செய்தாக வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், 365 கோயில்களில் சந்தனம் அரைத்துக் கொடுத்தல், 52 சனிக்கிழமைகளில் ஸ்ரீஆஞ்சனேயருக்கு பசு வெண்ணை சாற்றுதல், 12 மாதப்பிறப்புகள், அமாவாசைகளில் 300 பேருக்கு தர்ப்பணங்கள் செய்து வைத்தல்.... இவ்வாறாகப் பலவித நற்காரியங்களை இறையருளால் அச்சிறுவன் செய்து வந்துள்ளான். அந்த வருடத்திற்குரிய வைராக்கியமானது தினந்தோறும் ஒரு குருடருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதாகும்.
ஏழைக் குருடர்களுக்கு அன்னதானம், ஆடைதானம், ஆடை கட்டிவிடுவது, எண்ணெய் ஸ்நானம் செய்து வைத்தல், புத்தகங்கள் படித்துக் காட்டுதல், தேவையான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல்... என்றவாறாகப் பலவிதங்களில் ஸ்ரீஅங்காளியின் கருணையால் 364 நாட்களும் ஒரு நாள் விடாமல் தினந்தோறும் அதனை நிறைவேற்றி விட்டான்.
அன்று டிசம்பர் 31..... 365 ஆவது நாள்!
சிறுவன் விடியற்காலையிலேயே 4 மணிக்கு எழுந்து பீச், திருவொற்றியூர் கோயில், கந்த கோட்டம், ஸ்டான்லி ஹாஸ்பிடல், ஜி,எச்., எக்மோர் ஸ்டேஷன் என்று பல இடங்களில் அலைந்து விட்டான்.., பலத்த மழை வேறு! ஓரிரண்டு குருடர்கள் அகப்பட்டார்கள்! ஆனால்...
“போடா! எனக்கு உதவி செய்யறேன்னு சொல்லி எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு ஓடிடுவே’.., எனக்கு எவனோட உதவியும் தேவையில்லை’ ஏன் தம்பி இந்த வயசுல இந்தக் குருட்டுப் பிச்சைக்காரனோடவா சுத்தணும்., உனக்குத் தான் கண், கை, காலு எல்லாம் நல்லா இருக்கே, வீட்டோட போய்ச் சேர்!’ எனக்கு  உதவி செய்யனும்னா ஒரு பெரிய கெடிலாக் கார் வாங்கிக் கொடு!’ .... அப்பப்பா என்னென்ன சோதனைகள்! என்னென்ன சூடான பதில்கள்! கிடைத்த குருடர்களும் இவ்வாறாகப் பேசி சிறுவனை அனுப்பி விட்டனர். அன்ன ஆகாரமின்றி கடும் மழையில் எங்கெங்கோ அலைந்து வாடித் திரும்பினான் சிறுவன்...,
மாலை மணி ஆறு ஆகிவிட்டது.., காலையிலிருந்து கோவணாண்டிப் பெரியவரை இன்னும் சந்திக்கவில்லை. மழையினால் முன்னரே இருட்டத் தொடங்கிவிட்டது! சிறுவன் தவித்தான், ‘ரொம்பக் கஷ்டமான வைராக்கியம்டா! 365 நாளும் டெய்லி இதப் பண்றது சாதாரண விஷயம் இல்லே!~ ரொம்ப பிராப்ளமா இருந்தா ஏதாச்சும் ஹெல்ப் வேணும்னா எனக்கு டயல் பண்ணு..., என்று சொல்லியவாறே பெரியவர் வினோதமாகச் சிரித்தார், கடந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில்...!
நாளை விடிந்தால் அடுத்த ஜனவரி முதல் தேதி! இந்த இருட்டில் எந்தக் குருடரைத் தேடுவது! சிறுவன் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினான். மனம் பதைபதைத்தது! இந்த நாளை மிஸ் பண்ணினால் பெரியவர் என்ன தண்டனை தருவாரோ! நினைத்துப் பார்க்கவே சிறுவனுக்கு பகீரென்றது! சோர்ந்து போய் ஸ்ரீஅங்காளி சந்நதியின் முன், முழங்கைகளை ஜில்லென்றிருந்த வாசற்படியில் ஊன்றியவாறே அங்காளியை உற்றுப் பார்த்தான் சிறுவன்! ‘ஆத்தா ஏன் இப்படி சோதனை பண்றே! காலைல எழுந்திருச்சு நாய் படற பாடு படறேனே, கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா? வாத்யாரு பாட்டுக்கு ரொம்ப பராப்ளம்னாக்க டயல் பண்ணுடான்னுப் போய்ட்டாரு!’ சிறுவன்  மனதிற்குள் பேசிக் கொண்டான்.
.......’திருவான்மியூரில் ட்ரை பண்ணிப் பாரு ராஜா!’ யாரோ டெலிபோனில் பேசுவது போல் மெல்லிய குரலில்.... என்ன இது வாத்யார் குரலா! சிறுவன் திடுக்கிட்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான். யாருமில்லை.., வாத்யார்தான் அங்காளி சிலைக்குப் பின்னாலிருந்து பேசுகிறாரா...?’ சிறுவன் தட்டுத் தடுமாறினான். .... ‘எனக்கு டயல் பண்ணு’
‘திருவான்மியூரில் ட்ரை பண்ணு ராஜா’....? இரண்டு வாசகங்களும் சிறுவனைச் சூழ்ந்தன. ...’உண்மையிலேயே இது நம்ப வாத்யாரோட குரல் தான்’ ... சிறுவன் அழுத்தந் திருத்தமாகக் கூறிக் கொண்டான். இந்த எண்ணம் வந்ததுதான் தாமதம், சிறுவன் வெகுவேகமாய் அங்காளிக்கு நமஸ்காரம் செய்துவிட்டு வெளியில் சிட்டெனப் பறந்தான். தெருவில் தலைதெறிக்க ஓடி, மெயின் ரோடை அடைந்து நடுரோட்டில் நின்று கொண்டு வருகின்ற லாரி, கார் அனைத்தையும் நிறுத்த ஆரம்பித்தான்..
....ஒரே வெறி...... எப்படியானாலும் திருவான்மியூருக்கு உடனே சென்றுவிட வேண்டும். அங்கு ஏதேனும் ஒரு குருடராவது கிட்டமாட்டாரா... பலத்த மழை மீண்டும் தொடங்கியது. சிறுவனுக்காகப் பரிதாபப்பட்டுப் பலர் தங்கள் கார்களை நிறுத்தினர். திருவொற்றியூர் எங்கே, திருவான்மியூர் எங்கே ? யாரும் அங்கு செல்வதாகத் தெரியவில்லை..., இரவு மணி எட்டை நெருங்கலாயிற்று. எங்கும் மழையாதலின் மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. கும்மிருட்டில் நடு ரோட்டில் சுத்திக் கொண்டிருந்தான் சிறுவன். லாரி ஒன்று வந்துகொண்டிருந்த்து! லாரி டிரைவர் சிறுவனைப் பார்த்துப் பச்சாதாப்பட்டு லாரியை நிறுத்தினார்..,
சிறுவன் ஓவென்று கதறி அழுதான்., ‘எங்கப்பா என்னை உட்டுட்டுப் போய்ட்டாரு! நான் திருவான்மியூர் போகணும், கையில் காசு இல்லை., சிறுவன் பரிதாபமாக அழுதுகொண்டே நாடகமாடிட லாரி டிரைவருக்கு மனம் இளகிவிட்டது..  ‘ஏலேய்! இந்த லாரி திருவான்மியூர் போகாது! வேணும்னா மகாபலிபுரம் ரோட்ல எறக்கி விடறேன்! அங்கேந்து உன் ரூட்டைப் புடிச்சுக்கோ! சிறுவனுக்கு வழியும் தெரியாது! ஏதோ அங்கிருந்து நகர்ந்தால் சரியென்று லாரியில் தொற்றிக் கொண்டான். வழியெங்கும் லாரி டிரைவரிடம் கடகடவென்று தனக்குத் தெரிந்த தெய்வீக விஷயங்களையெல்லாம் கொட்டிவிட....
டிரைவர் பிரமித்தான்.. ‘அடேயப்பா...., என்ன சரக்கு வச்சுருக்கே உன் மூளைக்குள்ளற...! அவனுக்கு அச்சிறுவன்  மேல் அலாதியான அன்பு ஏற்படவே லாரியைத் திருவான்மியூர் வழியாகத் திருப்பி அங்கு அவனை இறக்கி விட்டுவிடவே நமுட்டுச் சிரிப்புடன் சிறுவன் கீழிறங்கினான்! அவன் அழுகையெல்லாம் பறந்தோடி விட்டது! வந்த காரியத்தில் பாதி நடந்துவிட்டதே!  மழையினூடே திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்தை அடைந்தான். கோவணாண்டிப் பெரியவருடன் இதற்கு முன்னர் அக்கோயிலுக்குப் பலமுறை வந்திருக்கின்றான்..., உட்பிரகாரத்தில் 108 அற்புத சிவலிங்கங்களுடன் அமைந்த அற்புதமான கோயில்! சடநட ஈஸ்வர சித்தர் என்ற சித்த மஹாபுருஷர் அம்பாள் சந்நதியில் ஒரு தூணில் ஜீவசமாதி கொண்டு அனைத்து விதமான நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் உன்னதமான திருக்கோயில்! திருவான்மியூர் கோயிலின் நடைசாத்தும் நேரம், அர்த்த ஜாமப் பூஜை ஒலிகள் முழங்கின, உள்ளே கும்மிருட்டு.... சிறுவன் தயங்கித் தயங்கி மூலவரை தரிசித்து உட்பிராகாரத்தில் லிங்க மூர்த்திகளையும் ஒவ்வொன்றின் பெயரைச் சொல்லி வணங்கினான்.. சூட்டுக் கோல் சித்தர்... தம்பிக் கலையான் சித்தர்,என்றவாறாக .. மற்றவையெல்லாம் ஆன்மீக இரகசியங்கள்! சற்குருவை நாடி அறிவீர்களாக! இறையருளால் 108 சிவலிங்க மூர்த்திகளின் திருநாமங்களையும் உச்சரித்துத் துதித்த சிறுவன் அந்த இருட்டில் 108 சிவலிங்க மூர்த்திகள்  உள்ள சிறுமண்டபக் கோடியில் ஏதோ ஓர் உருவம் புரண்டு, புரண்டு அசைவதைக் கண்டான்!  முதலில் பயமாக இருந்தது! இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு அங்கு சென்றான்.. .. இருட்டில் ஒன்றும் புரியவில்லை..., மெல்ல தடவித் தடவி அருகில் சென்றிட,,,, ஒரு வயதான கிழவர்... படுக்கவோ, உட்காரவோ முடியாத நிலை., புஸ்.. புஸ் என்று மூச்சிரைப்பு வேறு! இந்நிலையில் இவரெங்கு இங்கு வந்தார்? சிறுவன் மெதுவாகக் கீழிறங்கி தட்சிணாமூர்த்தி சந்நதியில் எரிந்து கொண்டிருந்த மங்கலான அகல் விளக்கை எடுத்து வந்தான். அங்கிங்கெனாதபடி போர்த்தியிருந்தமையால் அக்கிழவரைச் சிறுவனால் சரியாக பார்க்க முடியவில்லை.
ஒரு கையில் அகல் விளக்கு... மற்றொரு கையில் அக்கிழவரைத் தாங்கிப் பிடித்து..., ‘அடடா .. குருடர் போலிருக்கிறதே!’ மங்கிய விளக்கொளியில் அவருடைய கண்களைப் பார்த்தான் சிறுவன். வெள்ளை விழிகள்! பளிச்சென்று மின்னலடித்தாற் போலிருந்தது..ஓஹோ!... அகல் விளக்கின் ஒளியினால் கண்கள் கூசுகின்றனவோ! குருடருக்குக் கண் கூச்சம் உண்டா என்ன? கிழவர் அவசரம் அவசரமாய்க் கந்தல் துணியை இழுத்து முகத்தைப் பாதி மறைத்துக் கொண்டார். அதெப்படி இதற்கு மட்டும் அவ்வளவு சுறுசுறுப்பு! சிறுவன் வியந்தான்! ‘ பசி.... பசி....’ கிழவர் வாய் குழற...., அவருக்கு விக்கலெடுத்து விட்டது..

கிழவரை மெதுவாக உட்கார வைத்துவிட்டு வெளியே ஒடிவந்தான் சிறுவன்! அவருடைய பசிக்கு என்ன செய்வது? இரண்டு கால்சட்டைப் பைகளும் ஓட்டை! காசு சேர்க்கும் எண்ணம் வரக் கூடாது என்பதற்காகக் கோவணாண்டிப் பெரியவர் சிறுவனின் கால்சட்டைப் பைகளின் துணிகளைக் கத்திரித்து ஓட்டையாக்கி விட்டார்! கையில் ஒரு நயா பைசா கூடக் கிடையாது! பசிக்கு என்ன செய்வது? விக்கலாவது பரவாயில்லை. ஆபத்திற்கு தோஷமில்லை என்று மழைத் தண்ணீரை வாயில் ஊற்றலாம்! வயிற்றுப் பசிக்கு! இறைவனாக அனுப்பி வைத்த குருடராயிற்றே!
‘ஏதேனும் உதவி செஞ்சால் 365 கணக்காயிடுமே!.... ‘சிறுவன் ஏதோ மனக் கணக்குப் போட்டவாறே சிறிது நேரம் வெளியில் உணவு தேடிச் சுற்றினான்! கொட்டு மழையில்... ஏதோ ஒரு சிலரே ஆங்காங்கு இருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை டீக்கடை இல்லை. மற்ற கடைகள் மூடப்பட்டுவிட்டன. சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை! சற்று நேரம் யோசித்தான். ‘யாரிடமாவது பிச்சை கேட்டாலாவது அவர் பசியைத் தீர்க்கலாமே! ஆபத்திற்குப் பாவமில்லை! சிறுவன் துணிந்து விட்டான்.

ஹனுமத் விரதம்

ஹனுமத் விரதத்தைப்  பரிபூரணமாக அனுஷ்டித்த பிறகு வரும் ஹனுமத் ஜயந்தியைக் கொண்டாட வேண்டும். இம்முறையில் தான் ஹனுமத் ஜயந்தியின் உத்தமமான முழுப் பலன்களையும் பெறலாம். ஹனுமத் விரதமென்பது ஒரு வருட காலத்திற்கு அனுஷ்டிக்கப்பட வேண்டிய எளிய விரதமாகும். விரதம் என்றால் வெறும் உபவாசம் என்று பொருள் கொள்ளல் ஆகாது. ஹனுமத் விரதத்தில்
1. ஒவ்வொரு சனிக்கிழமையும் கூட்டாகப் பலருடன் சேர்ந்து ‘ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்’ என்று ராமர்/ஆஞ்சநேயர் கோயிலில் நாம ஜபம் செய்து ஸ்ரீஆஞ்சனேயருக்குப் பசு வெண்ணெயைச் சார்த்தி வடைமாலை சார்த்த வேண்டும். பிறகு பசுவெண்ணெய், வடைகளை பிரசாதமாக ஏழைகளுக்குத் தானமாக அளிக்க வேண்டும். ஸ்ரீஹனுமான் சிரஞ்சீவியாக நின்றுப் பல்லாயிரம் நோய்களினின்றும் பக்தர்களைக் காக்கின்றார்.
2. சித்த வைத்தியத்தில் சிறப்பான ஆரோக்கிய வாழ்வைப் பெற நாளிரு முறை (மலம் கழித்தல்) வாரமிரு முறை (எண்ணெய் ஸ்நானம்) மாதமிரு முறை (புணர்ச்சி) வருடமிரு முறை (குடல் சுத்தத்திற்கான பேதி மருந்து)
ஆகிய நான்கையும் ஒவ்வொரு மனிதனும் ஒழுங்குடன் கடைப்பிடித்தால் சிறப்பான வாழ்க்கை அமையும். குறிப்பாகப் புணர்ச்சி விதிகளில் பல நெறி முறைகள் உண்டு. இவற்றில் மாதமிரு முறை தக்க முறையில் அனுஷ்டித்தாலே போதும், முறையற்ற காம எண்ணங்கள், தகாத நினைவுகள் விலகும், உன்னதமான ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை அமையும். ஸ்ரீஆஞ்சநேயர் நைஷ்டிகப் பிரம்மச்சாரியாயினும் இல்லறத்தில் நற்பண்புகளுடன் வாழ மேற்கண்ட நெறிகளை அனுகிரஹிப்பார்.
3. தேவமொழி – தமிழ் மறைகளைப் பாராயணம் செய்யும் பிரம்மச்சாரிகளுக்குத் தக்க உதவிகளை அவ்வப்போது செய்ய வேண்டும்.
 மேற்கண்ட முறையில் ஹனுமத் விரதத்தைக் குறைந்தது ஒரு வருஷமேனும் அனுஷ்டித்த பிறகு ஹனுமத் ஜயந்தியைக் கொண்டாடினால் தான் ஸ்ரீஅனுமத் பிரபுவின் அருள் பரிபூரணமாகக் கிட்டும்.
ஹனுமத் ஜயந்தி
இதுவரையில் ஹனுமத் விரத்தை அனுஷ்டிக்காதவர்கள் இவ்வருடத்திலிருந்தாவது மேற்கண்ட முறையில் இந்த அரிய விரதத்தை மேற்கொள்வார்களாக! இதனால் அற்புதமான ஞாபக சக்தி, ஒழுக்கமான வாழ்க்கை, வஜ்ரம் போன்ற வலுவான நோய் நொடியில்லாத தேகம், தீவிர ராம பக்தி, ஏகபத்னி விரத அனுஷ்டான பலன்கள் போன்றவை கைகூடும். ஹனுமத் ஜயந்தியன்று ஸ்ரீஆஞ்சனேயருக்குப் பசு வெண்ணெய், வடை மாலை சார்த்தி ஹனுமான் சாலீஸா, ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம் முதலியவை பாராயணம் செய்து பிச்சிப் பூவால் ஸ்ரீஆஞ்சனேயருக்கு அர்ச்சிக்க வேண்டும். பசுவெண்ணெய், வடைகள் ஆகியவற்றை வறியோர்க்கு அளிக்க வேண்டும். ஸ்ரீஹனுமத் ஜயந்தியன்று நின்ற நிலையில் ஆறடிக்கு குறையாமல் உயரங்கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமிக்குப் பலர் ஒன்று கூடி வடை மாலை, பசு வெண்ணெய் சார்த்தி ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தல் மிகவும் விசேஷமாகும்.

முறையான சயன நிலைகள்

ஆண்கள், பெண்கள் இரு பாலாரும் உறங்கும்போது குறிப்பிட்ட சயன நிலைகளை (sleeping posture)  மேற்கொண்டால் ஆயுள் விருத்தி, ஆரோக்கியமான சுவாச பந்தனங்கள், இருதயத்திற்குச் சுகமான ஓய்வு, தெய்வீக ரீதியான நற்கனவுகள், தலை, கழுத்து நரம்புகளுக்கு சீரான ரத்த ஓட்டங்கள் போன்ற நற்பலன்களைத் தருகின்றன. இரு பாலருக்கும் உரித்தான சயன நிலைகளாகச் சித்த புருஷர்கள் அருள்வதாவது:
1. ஆண்கள் இடப்புறமாக ஒருக்களித்துப் படுத்து., இடது உள்ளங்கையை இடது காதின் கீழ்வரும்படி வைத்து உறங்க வேண்டும்.
2. பெண்கள் வலப்புறமாக ஒருக்களித்துப் படுத்து, வலது உள்ளங்கை வலது காதின் கீழ் வரும்படி வைத்து உறங்க வேண்டும்.
இவ்வித வலப்பக்க சயன முறையினால் பெண்களுக்கு தெய்வ பக்தியில் உன்னத நிலை, எத்தகைய துன்பங்கள் வந்தாலும் தாங்கும் மனோதிடம் , சுமங்கலித்துவம் , மன சஞ்சலமில்லா சீரான வாழ்க்கை எல்லாவற்றிற்கும் மேலாக மன திருப்தி உண்டாகும். ஆண்கள் மேற்கண்ட முறையில் இடப் பக்க நிலையில் சயனிப்பதால் அவர்கள் சுவாசம் சூரிய கலையில் சீராக ஓடி ஆணினத்திற்குரிய மனோ தைரியம், வீரம், பக்தி, கடும் உழைப்பு போன்ற நல்லியல்புகளை மேம்படச் செய்யும். எத்தனையோ சுவாச நிலைகள் உண்டு. அவற்றுள் மூன்று முக்கியமான நிலைகளைப் பற்றி அறிவோமாக!

தூங்கும் முறைகள்

வலது நாசியில் சுவாசம் ஓடுவது சூரியகலை , இடது நாசியில் சுவாசம் ஓடுவது சந்திர கலை, இரண்டு நாசிகளிலும் சுவாசம் சமமாகச் செல்வது சுழுமுனை சுவாசமாகும்.
சயனநிலையில் ஒரு யோகப் பயிற்சி!
இவை தவிர சூர்யகலை, சந்திரகலை, சுழுமுனை ஒவ்வொன்றிலும் பிருதிவி பூதம், அக்னி பூதம், வாயுபூதம், ஆகாச பூதம், ஜல பூதம் என்று ஐந்து வகை வாசி நிலைகள் உண்டு. இத்தகைய ரகசியங்களை சற்குரு மூலம் அறிந்து கொண்டால் நம் எண்ணங்களை நல்முறைப்படுத்தி தீய எண்ணங்களை அறவே நீக்கிவிடலாம். இதனால் முகத்திற்கு தேஜோமயமான ஒளி உண்டாகும். இந்த யோக நிலைகளின் எளிய பயிற்சி முறையையே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் இல்லறவாசிக்குரித்தான சுலபமான வழிமுறைகளாக அருளி வருகின்றார்கள். அவற்றுள் ஒன்றே சயன நிலை யோகமாகும். இல்லறவாசிகளுக்குரித்தான எனவே சற்குரு ஒருவரைப் பெற்றுவிட்டால் அவரே தம் அடியாரை தியானம், யோகம், பிராணாயாமம், அன்னதானம், கிரிவலம், இலவச மருத்துவ உதவி, கோயில் திருப்பணி போன்ற பல வழிகளில் இறைநிலைக்குரிய தெய்வீகப் பயிற்சிகளையளித்து தெய்வ தரிசனத்திற்கு அற்புத வழிகாட்டியாக அமைகின்றார். எனவே சற்குருவைப் பெறுவோம்! கடவுகளைக் காண்போம்! பிறவிப் பிணி தீர்ப்போம்!
சயனநிலை  சில பிரச்னைகளும் தீர்வுகளும்
மேற்கண்ட சயன நிலை முறைகளில்,
1. உறங்கும்போது இந்த சயனநிலை மாறுமே, என் செய்வது?
2. ஆஸ்துமா போன்ற சுவாச நிலைக் கோளாறுகளால் இத்தகைய சயனநிலையை மேற்கொள்ள முடியாதே!
3. படுத்தால் தூக்கம் வருவதற்கே ஒரு மணி நேரம் ஆகுமே, அவ்வளவு நேரம் இந்நிலையிலேயே படுக்கமுடியுமா?
4. இருக்கின்ற இடவசதியில் இதனை குடும்பத்தினர் அனைவரும் கடைப்பிடிக்க முடியுமா? – இத்தகைய நடைமுறைப் பிரச்சனைகள் பல இருக்கலாம்! இதற்கும் தக்க விடைகளைச் சித்த புருஷர்கள் அளிக்கின்றனர்.
1. படுத்தவுடன் சில நிமிடங்களுக்காவது தொடக்கத்தில் இத்தகைய சயனநிலையை வேண்டும். நாளடைவில் இந்நிலை பழக்கமாகிவிடும்., பிறகு எந்நிலையில் புரண்டாலும் கவலை வேண்டாம்.
2. ஒவ்வொரு நாளும் படுத்தவுடன் அந்நாளில் செய்த காரியங்களை நினைவுகூர வேண்டும். இது சிறந்த தியானமாகும். மேற்கண்ட சயனநிலை ஒருவித பிராணாயாம யோக நிலையாகும். என்ன எளிமையான யோகம் கூடிய தியானப் பயிற்சி! இல்லறத்திலேயே பின்பற்றக் கூடிய தியான யோக நிலை!
3. ஆஸ்த்மா போன்ற சுவாச நோயுள்ளோர்க்கு இது சிறந்த பயிற்சியாகும். எனினும் உடல் இதனை ஏற்கும்வரை படுத்தவுடன் முதலில் சில நிமிடங்களுக்கு மேற்கண்ட நிலையைக் கைக்கொள்ளலாம்.
4. படுத்து ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் தூக்கமில்லாமல் அவதியுறுவோர் உண்டு. நீடித்த புகைபழக்கம், தொடர்ச்சியான கட்டுபாடில்லாத எண்ண ஓட்டங்கள், நிறைவேறாத பல்லாண்டு ஆசைகளின் எதிரொலிகள், விரலுக்கு மிஞ்சி வீங்குவது போலான தகுதி, வசதிக்கு மேலான திட்டங்கள்  போன்றவையே தூக்கமின்மைக்குக் காரணம்.
இத்தகையோர்க்கு மேற்கண்ட சயனநிலையும் நற்காரிய தியானமும்  அருமருந்தாகும். இவர்கள் தூக்கமின்மையால் புரண்டு படுப்பினும் இயன்ற அளவுக்குப் பல நிமிடங்களுக்கு (தொடர்ச்சியாக இல்லாவிடினும்) இச்சயன நிலையை மேற்கொண்டால் சிறப்பான பலன்களைக் காணலாம். இச்சயன நிலை முறைகளைக் கொண்டு கனவுகளை ஆளும் முறைகளும் உண்டு. இவையெல்லாம் ஆன்மீக இரகசியங்களாகும். சற்குரு அருள்கொண்டே இவற்றை அறியக்கூடும். தன்னலமின்றிப் பிறர்க்கு சேவையும் மனப்பான்மையுள்ளோர்க்கே சற்குரு இதனை அளித்தருள்வார். ஏனெனில் ஒருவருடைய கனவில் பங்கேற்று சில கர்மவினைகளைக் கழிக்கும் ஆன்மீக அற்புதங்கள் பல உண்டு.
சயன நிலைகளும் கனவுகளும்
கனவுகளை ஆள்வதினால் என்ன பலன்கள் ஏற்படுகின்றன? நாம் பிறவியெடுத்தற்கான கர்மவினைகளில் பலவற்றைக் கனவுகளிலேயே கழிக்கக் கூடிய ஆன்மீக முறைகள் உண்டு! எவ்வாறு கனவினைப் பொய் என்று விழித்தவுடன் உணர்கின்றோமோ அதே போல இந்த விழிப்புநிலை வாழ்வும் ஒரு மாயையே! இந்த விழிப்பு நிலை உண்மை என்றால் விழிப்பு நிலைச் சூழ்நிலைகள், உறவுகள், நேரம், வயது அனைத்தும் கனவில் அப்படியே தொடர வேண்டுமல்லவா? இதற்கு சித்த புருஷர்கள் அளிக்கின்ற விளக்கம் என்ன?
ஒருவனுடைய உண்மையான நிலையை – விழிப்புநிலை, கனவுநிலை இரண்டும் மாயையே – என்பதை எப்போது உணரலாம்? இந்த தேகத்தில் உணர முடியுமா? முடியும்!
1. எப்போது தூங்குகின்றோம் என்பதை அறிந்தால்
2. விழித்து எழுகின்ற அந்த கண் சிமிட்டும் நேரம்- அதாவது விழிப்பு நிலைக்கும், கனவு நிலைக்கும் இடைப்பட்ட அந்த சிறு கால அளவு.
இவ்விரண்டில் எதை உணர்ந்தாலும் மாய நிலையை இவ்வாழ்வில் அறியலாம். முதல் வகை, யோகத்தின் பால் அமைந்தது. இரண்டாவது நிலை தியான நிலையில் பெறுவதாகும். இதனை அறிவுறுத்துவதாக அமைவதே மேற்கண்ட சயனநிலைகள்!
இரவு நேரப் பிரார்த்தனைகள்/ தியானங்கள்
பகல் நேர தியானங்கள், இரவு நேர தியானங்கள் என்று இரண்டு வகை உண்டு. அதே போல பகல் நேரப் பிரார்த்தனைகள், இரவு நேரப் பிரார்த்தனைகள் என்றும் உண்டு! ஆன்மீகம் என்றாலோ எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றனவே, இவையெல்லாம் அவசியமா, அனைத்தையும் கடைப்பிடிப்பது என்பது இயலுமா?  ஆன்மீகம் தருகின்ற தான தருமங்களுடன் வாழ்ந்தால் சாதாரண வாழ்க்கையே ‘costly life’ ஆக மாறி விடும் போலிருக்கிறதே என்று எண்ணுவோரும் உண்டு! இவையெல்லாம் சாதாரணமாக அனைவர் மனதிலும் எழக் கூடிய கேள்விகள்!
நம் வாழ்க்கையின் ஆடம்பரச் செலவுகளைக் கருத்தில் கொண்டால் தான தர்மங்கள் ஒரு பொருட்டல்ல!
ஆட்டோ ரிக்ஷா கட்டணம், அழகு பொருட்கள், காபி, டீ, உடைகள், புத்தகங்கள், செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், திரைப்படம், விடியோ போன்றவற்றிற்காகும் செலவினங்களை உண்மையான மனசாட்சியுடன் கணக்கிட்டால் தான தருமங்களில் செலவழிப்பது ஒரு குறைந்த சதவீதமே என்பது புலப்படும். மனமிருப்பின் மார்க்கம் உண்டு! அந்தஸ்து, தகுதி, கௌரவம், சமுதாய நிலை, மதிப்பு, செல்வாக்கில் நாட்டம் , டாம்பீகம், - இவற்றைச் சார்ந்தது தான் சாதாரண மனித வாழ்க்கை அமைந்திருக்கிறது. எந்த தெய்வத்தால் வாழ்க்கை வசதிகள், உத்யோகம், குழந்தைகள், வீடு, வாகனம் கிட்டியதோ அதற்குரித்தான தெய்வ பக்தி கீழே தள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில் நமக்கு வசதிகள் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் முறையே தான தர்மங்களாகும்.

தவறான பழக்கங்கள்

1. குங்குமத்திற்கு பதில் ஒட்டுப் பொட்டு ( stickers)  வைத்தல் – இதனால் கணவனின் ஆயுள், ஆரோக்யம் சீர் குலையும்.
2. பச்சரிசிமாவிற்கு பதிலாக மொக்கு மாவுக் கோலம் போடுதல், இதனால் வறுமை, வயிற்றுக் கோளாறுகள், கர்ப்பபை நோய்கள் , மாமியாருடன் மோதல், பெண்களின் திருமண வாழ்வு பாதிக்கப்படுதல் போன்ற பெருந்துன்பங்கள் ஏற்படும்.
3. வளையலில்லாது வெறும் கைகள் – இதனால் மாங்கல்ய பாக்யம் பாதிக்கப்படும்.. கைக்கடிகாரம் ஒரு அணிகலனே! அதை எடுக்கும் போது வளையல் போட வேண்டும்.
4. மெட்டியில்லாது இருத்தல் :- கணவனுக்கு தீரா நோய்கள் ஏற்படும், புகை, மது மற்றும் தகாத சகவாசம் உண்டாகும்.
4. தலையைப் பின்னாது வெறுமனே ரப்பர் கிளிப்புடன் விடுத்தல் :- கணவனுக்குக் கோமா, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உண்டாகும்.
6. கூந்தலைப் பின்னி ரிப்பன் அணிய வேண்டும். எக்காரணம் கொண்டும் தலை விரித்திருக்கக் கூடாது. ஸ்டைலுக்காக கூந்தல் பின்னலை முன்புறம் தொங்க விடுதல் கூடாது. இத்தகைய தவறான பழக்கங்களே தீராத தலைவலி, சயனைஸ் போன்ற மூக்கு சம்மந்தப்பட்ட நோய்களுக்கான காரணங்களாகவும் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதற்கான முக்கிய காரணமாகவும் அமைகின்றன.
உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தினமும் செய்ய வேண்டிய நித்ய பூஜைகள், கோயில் தரிசனங்கள், ஹோமங்கள், இறைப் பணிகள் நிறைய உண்டு. இவை தவிர யோகாப்யாசங்கள், தியான நியதிகளும் உள்ளன. ஆனால் இவற்றுள் எதனையும் சரிவரச் செய்யாது ஓர் இயந்திரம் போல அலுவலகம், வீடு என்று மூழ்கியிருப்பவர்களே அதிகம். இதனால் ஏற்கனவே பல ஜென்மங்களில் கூடியிருக்கும் கர்மச் சுமையோடு இந்த இயந்திர கதியான வாழ்க்கையில் கூடுதல் கர்மவினைகளைச் சேர்த்துக் கொள்கிறான். தினசரி பூஜைகள் நியம நிஷ்டைகள் இருந்தாலாவது ஓரளவு கர்மவினைகளின் தொகுப்பாக மனித வாழ்க்கை அமைந்து விடுகிறது. இதிலிருந்து எவ்வாறு மீள்வது?
சற்குருவை நாடுவதே தக்க வழி, நம் குருமங்கள கந்தர்வா போன்ற சற்குருமார்கள் மனித குலத்தின் கர்மச் சுமையைக் குறைப்பதற்கான எளிய தான தர்மங்கள், இல்லறத்தில் கடைப்பிடிக்கக் கூடிய தியான முறைகள், யோக நிலைகள், குறிப்பிட்ட கொடிய கர்ம வினைகளைத் தீர்க்கும் இறைப் பணிகள், கோயில் தரிசனங்கள் போன்ற நல்வழிகளை அருள்கின்றனர். இவற்றைக் கைக்கொண்டாலே போதும் கலியுக மக்கள் நிச்சயம் கடைத்தேறிவிடுவர் . ஆழ்ந்த நம்பிக்கை, குருவின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கையே இதற்கு பலத்த அஸ்திரமாகும்.
சித்தபுருஷர்கள் சற்குரு மூலமாக அருள்கின்ற நல்வழி முறைகளுள் ஒன்றே இரவு நேர, பகல் நேர தியான முறைகளாகும். சுயநாம ஜபம், பாத பூஜை, நற்காரிய தியானம், மானசீகக் கோயில் எழுப்புதல், ஸ்ரீராம நாமச் சக்கர பூஜை மற்றும் குருவாயூர், ஸ்ரீஅங்காளியம்மன், சுவாமிமலை, தரிசன முறைகள் போன்றவை முந்தைய ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
இரவு நேர தியானம்
இரவு நேரதியானம் ஏன்? ஒவ்வொரு மனிதனையும், ஆட்டிப் படைப்பது மரண பயமே! காரணம் உயிர் மேல் அளவற்ற ஆசையா? வசதிகளை போகங்களை இன்னமும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமா? பிள்ளைகள், பேரன் , பேத்திமார்களைப் பிரிகின்றோம் என்ற துக்கமா? என்ன காரணம்? சற்று சிந்தித்துப் பாருங்கள்!
‘எண்ணால் இயன்ற அளவு இறைப் பணிகளைக் குரு அருளால் நிறைவேற்றியுள்ளேன் இனி இறைவனின் விருப்பம்’ என்று எவரேனும் மனத்திருப்தியுடன் மரணத்தை எதிர்நோக்குகின்றார்களா? ‘நான் நிம்மதியாகக் கண்ணை மூட வேண்டும்’ என்று சொல்லுபவர்கள் உண்டு. நோயில் விழுந்து வாடி, வதங்கிப் பிணியை எதிர் நோக்க அஞ்சி, எவ்வித வலியுமின்றி உயிர்பிரிய வேண்டும் என்பதே அவர்களுடைய அவா!  ‘நோயோ நொடியோ இறைவனின் நினைவுடன், இறை நாமத்தைத் துதித்தவாறே உயிர்பிரிய வேண்டும்’ என்பது உத்தமமான ஆசை அல்லவா! ஆனால் நாள் முழுதும் இறை நாமம் சொல்லிப் பயிற்சி கொண்டிருந்தாலல்லவா இது நிறைவேறும். இந்த எளிய முறையைக் கற்றுத் தருபவரே சற்குரு ஆவார். அதில் ஒன்றே இந்த இரவு நேர தியானமாகும்! இரவு நேரத்தில் குறித்த ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுத்துத் தினமும் அந்நேரத்தில் இந்த இரவு தியானத்தைப் பயில வேண்டும். இதனைத் தனித்துச் செய்வது விசேஷமானதாகும். பரந்த வெளி, மாடி, பூஜையறை என்று எவ்விடத்தையும் தேந்தெடுத்துக் கொள்ளலாம்!
பத்மாசனம் சிறந்தது. இயலாதோர் சுகாசனம் (சாதாரண முறையில் சம்மணமாக அமர்வது) ஏற்கலாம். தர்ப்பைப் பாய், பருத்தித் துணியாலான  விரிப்பு, பாய் போன்றவை ஏற்றதாம். பலகை ஆசனம் சிறப்பானது.
1. கண்களை மூடி அமர வேண்டும்.
2. முதலில் நமக்கு ஊனுடம்பு தந்த பெற்றோர்களை எண்ணி மானசீகமாக வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும்.
3. தம் குலதேவதையை எண்ணிப் பிரார்த்திக்க வேண்டும்.

வாகனத்தில் செல்வோர்க்கு

1.இயன்றவரையில் நம்முடைய சொந்த வாகனத்தில் செல்வதே உகந்தது. இரவல் வாங்கி வாகனங்களை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். முன்பின் அறிமுகமாகாதவர்களை நம் வாகனத்தில் ஏற்றிக் கொள்ளுதல் பல பிரச்சனைகளை உருவாக்கும்.
2. வாகனத்தை உபாயோகிக்கும் முன்னர் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி சிறிது நகர்த்திய பின்னரே வெளிச் செல்ல வேண்டும். இதற்காக கிழக்கு அல்லது வடக்கை நோக்கிய வண்ணம் வண்டியை நிறுத்தி வைப்பது நல்லது.
3. ‘வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்’ என்று துதித்து ‘ஸ்ரீபாஸ்கராய நம!’ என்று 18முறை இறைநாமம் ஓதிய பின்னரே (ஸ்ரீபாஸ்கரனே போற்றி) வாகனத்தைச் செலுத்த வேண்டும்.
4. புது வாகனமாயின், வாங்கியவுடன் சென்னை கோயம்பேடு ஸ்ரீகுறுங்காளீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று தர்ம்சம்வர்தினி ஸ்ரீஅம்பாள் சந்நிதி எதிரே தூணில் உறைந்து அருள்பாலிக்கும் ‘ஸ்ரீஆபத் சகாய ஆஞ்சநேயரை’ மாலை சார்த்தி வழிபட்டு அம்மாலையை வாகனத்திற்குச் சார்த்த வேண்டும் வாகனங்களின் மேல் பிற மனிதர்களின் கண்படும் முன் மஹான்களின் தெய்வ மூர்த்திகளின் அருட்பார்வை படுதலே உத்தமமானது.

ஸ்ரீஆபத்சகாய ஆஞ்சநேயர்
கோயம்பேடு

ஏழைக் குழந்தைகளுக்கு இக்கோயிலில் இனிப்புகளை வணங்கிட ஸ்ரீஆபத் சகாய ஆஞ்சநேயரின் அருட்கடாட்சம் பூர்ணமாகும். லாரி, சைக்கிள், ஸ்கூட்டர், அனைத்து வாகனங்களுக்கும் இவ்வழிபாடு பொருந்தும்! பிரபஞ்சத்தில் உள்ள தேவர், மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவன்களின் வாஹன பரிபாலத்தை மேற்கொண்டு அருள் பாலிக்கும் இந்த ஸ்ரீஆபத் சகாய ஆஞ்சநேயரின் திருஉருவத்தை வேறு எங்கும் காண இயலாது! எங்கோ ஒரு தூணில் எளிமையாக அமர்ந்து பிரபஞ்சப் போக்குவரத்தையே ஆளும் அற்புத மூர்த்தி!
5. வெளியூர்க்காரர்கள் தத்தம் ஊரிலுள்ள ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியையே ஸ்ரீஆபத்சகாய ஆஞ்சநேயராக பாவித்துப் பூஜித்துப் புது வாகனத்தை அவருக்கு அர்ப்பணித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
6. போக்குவரத்துத்துறை காவல் அதிகாரிகளுக்கு (traffic police) உரித்தான விசேஷ மூர்த்தியே ஸ்ரீஆபத்சகாய ஆஞ்சநேயர். புதிதாக வேலை நியமனம். பதவி உயர்வு, உத்தியோக மாற்றம், விருதுகள் பெறுதல் போன்ற முறையான கோரிக்கைகள், பிரார்த்தனைகளை நடத்தி வைக்கும் வரப்பிரசாதி! இவர்கள் ஸ்ரீஆபத் சகாய ஆஞ்சநேயருக்குப் பசு வெண்ணெய், வடை மாலை சார்த்தி இவற்றுடன் ஏழைகளுக்குத் தக்காளி அன்னத்தை தானம் செய்திடல் வேண்டும்.
7. சொந்த வாகனம் உடையோர், வாடகை வண்டி ஓட்டுபவர்கள் ‘வேல் மாறல் சக்கரம்’ படத்தைத் தங்கள் வாகனத்தில் பொருத்துவது சிறந்த இரட்சையாக அமையும். விபத்துக்களிலிருந்து காக்கும் கவசமாக இந்தச் சக்கரம் அமையும்! தத்தாத்ரேய சக்கரமும் அமைக்கலாம்.
8. ஸ்ரீஆபத்சகாய ஆஞ்சநேயரின் உருவப்படம், வேல் மாறல் சக்கரம் இரண்டையும் எப்போதும் கண்களில் படுமாறு வாகனத்தில் வைத்திருப்பது இறை நினைவை ஊட்டிப் பெரும் துன்பங்களிலிருந்து ஆபத்பாந்தவராகக் காப்பாற்றும்.
9. செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் வாகனத்திற்கு கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்தலும், எலுமிச்சைக் கனி பலியிடுதலும் முக்கியமானதாகும்.
10. ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலில் மூலஸ்தான கோமுகத்திலிருந்து (அபிஷேக நீர் வெளி வரும் வழி தாரை) தீர்த்தத்தைப் பெற்று வாகனங்களின் மேல் குறிப்பாக கார், லாரி, பஸ் போன்ற நான்கு சக்கர வாகனங்களின் மேல் தெளிப்பதால் தோஷங்கள், கண் திருஷ்டி, சூன்யப் பார்வை தோஷங்கள் போன்றவை விலகும்.
11. நம் நெற்றிக்கு இறைச் சின்னம் அணிவது போல் வாகனத்தில் எப்போதும் சந்தனம், குங்குமம், சிந்தூரம், கண்மை இடப்பட்டிருக்க வேண்டும்.
12. வாகனம் வைத்திருப்பவர்கள் அவ்வப்போது காளை, மயில், கருடன், கிளி, காக்கை போன்றவற்றிற்கு தானியம், அன்னம், உணவு இடுதல் விசேஷமான புண்ய சக்தியைப் பெற்றுத் தரும்.

விஷ்ணு சகஸ்ரநாமம்

 விஷ்ணு சஹஸ்ரநாமம் எவ்வாறு பிறந்தது?
(“மனம் தான் தருவேன் மஹாதேவா” என்னும் தலைப்பில் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள் சென்னையில் ஆற்றிய ஆன்மீக உரையின் கருத்துக் கோவை)
மஹாபாரதத்தில் ஸ்ரீபீஷ்மாச்சார்யார் அம்புப் படுக்கையில் சயனித்தவாறே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் விஸ்வ ரூபத்தைக் கண்டிட அவர்தம் திருவாயில் மலர்ந்ததே ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் ‘இருடிகள் மஹாபாரதம்’ என்னும் சித்த புருஷர்களுக்கான இதிகாசத்தில் கிரந்த வடிவில் பல ஆன்மீகப் பொக்கிஷங்கள் விரவிக் கிடக்கின்றன. அவற்றுள் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமப் பிறப்பின் ஆன்மீகச் செறிவை ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சித்த சுவாமிகள் அருளியவற்றைக் கலியுக ஜீவன்கள் நல்வாழ்விற்கென மீண்டும் எடுத்துரைக்கின்றார்.
......... அதோ! ஈடு இணையற்ற வீரனாய் வாலிபப் பருவ பீஷ்மர் பிரம்மச்சரிய காந்த ஒளி பிரகாசிக்க.... பகீரதப் பிரயத்தனத்தினால், விண்ணுலகத்திலிருந்து பூலோகம், பாதாள லோகம் மூன்றிலும் விரவி ஓடும், அதிப்பிரவாகத்துடன் சீறிடும் கங்கை நதியின் ஓட்டத்தை இதோ பீஷ்மர் தன் ஒரே அம்பினால் தடுத்து நிறுத்திட..... முப்பத்து முக்கோடி தேவர்களும் வியந்தனர். யாரிந்த இளைஞன்? சகர வம்சத்தைப் பாதுகாக்க சாட்சாத் பரமசிவனின் சிரசிலுள்ள கங்கா தேவியிடுமிருந்து பெறப்பட்ட ஒரு திருத்துளியே மூன்று லோகங்களிலிருந்தும் மாபெரும் கங்கை நதியாகப் பெருக்கெடுத்து ஓட....
இந்த இளைஞனோ ஒரே அம்பில் ஸ்ரீகங்கா தேவியையே தடுத்து நிறுத்தி விட்டானே! பலகோடி ஆண்டுகளின் உத்தம தவத்தால் கூடச் செய்ய இயலாத சாதனை ஆயிற்றே! இந்த இளைஞன்  எவ்வாறு இதனைச் சாதித்தான்? ஞானியரும் யோகியரும் தேவர்களும் ஸ்ரீஅகஸ்தியரைச் சூழ்ந்து கொண்டனர்! விளக்கம் பெற! ‘ஸ்ரீபீஷ்மாச்சாரியாரின் புனிதமான பிரம்மச்சரியமே பல கோடி ஆண்டுகள் உத்தம தவத்திற்கு ஈடான சக்தியைப் பெற்றது! கனவிலும் பிரம்மச்சர்யத்தைக் கைவிடாத உத்தமர்! ஸ்ரீகங்கா தேவியின் உத்தமப் புதல்வர்! பாருங்கள். ஸ்ரீகங்கா தேவி அந்த அம்பினை அரவணைத்து முத்தமிடுவதை! அதன் பிறகு ஸ்ரீஅகஸ்தியர் வரவிருக்கும் ஸ்ரீபீஷ்ம ஏகாதசியின் சிறப்பினை தீர்க்கதரிசியாக முன்னரே அறிவித்து அதனை அனுஷ்டிக்கும் முறையினையும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
.........ஆங்கே..., தன் மகனை ‘சான்றோன்’ எனக் கேட்டு ஈன்ற பொழுதினிலும் பெரிதும் உவந்த ஸ்ரீகங்கா தேவி ஸ்ரீபீஷ்மாச்சாரியாரை தன் தவப் புதல்வனை உச்சிமுகர்ந்து அன்புப் பிரவாகம் பெருக்கினாள்! புதல்வனின் அம்புப் பிரவாகத்திற்கு பதிலாக (தாயின்) அன்புப் பிரவாகம்! ‘உனக்கு என்ன வரம் வேண்டும் குழந்தாய்!’ இளவயதிலேயே வேண்டுதல், வேண்டாமை இலானாகப் பிரகாசிக்கும் பீஷ்மருக்கு என்ன வேண்டும்?
‘அம்மா! உன் அன்பான ஆசியைக் கொடு!’ ஸ்ரீகங்கா தேவி திகைத்தனள்! பூர்ணத்தினுள் பூரணமாய்  நிலவுவது அன்பு! கொடுத்தாலோ, எடுத்தாலோ குறையாது! குழந்தைக்கு அன்புத் தாய் முத்தமிட்டால் அவள் தம் முத்தங்களில் குறைவா ஏற்படும்? அன்பே ஆசியாகக் கூடிடுமா? .... ‘தவப்புதல்வன் எதையெதையோ கேட்பானென்று பார்த்தால் ... விதை ஒன்று போட்டால் சுரையா முளைக்கும். தன் பாலகன் எப்படியிருப்பான்?
ஸ்ரீகங்கா தேவியின் வாழ்வே தியாகத்தின் பரிமாணங்கள் தாமே! எனவ தான் தியாகச் செம்மலாய் புவனியில் பூத்தார் ஸ்ரீபீஷ்மர்! தன் தெய்வப் புதல்வனின் பெருமைகளை விண்ணோர்கள் கூறக் கேட்டுப் பெருமிதம் கொண்ட ஸ்ரீகங்கா தேவிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. தாயுள்ளம் அன்றோ! நமஸ்கரித்துத் தன் பாதங்களில் வீழ்ந்து கிடக்கும் மாபெரும் வீரனை, அஞ்சா நெஞ்சனை வாழ்த்தத் திருவுளம் கொண்டனள் ஸ்ரீகங்காதேவி! ஸ்ரீபரமசிவனின்  சிரசில் உறையும் தேவியன்றோ!! ஸ்ரீபீஷ்மரின் எதிர்கால மஹாபாரத வாழ்வு ஸ்ரீகங்கா தேவிக்கு தீர்க்கதரிசனமாகத் தெரிந்தது!
எத்தனைய சோதனைகள் தன் திருப்புதல்வனுக்கு!..... வாழ்நாள் முழுதும் நைஷ்டிக பிரம்மச்சாரி! சந்ததி தழைக்கவா ஆசிவதிக்க முடியும்? மாபெரும் சாம்ராஜ்யச் சக்கரவர்த்தி ஆவதற்கா ஆசியளிக்க முடியும்? நீடுழி வாழ்க என்று கூறியா ஆசி கூறுவது?
ஏனெனில் ஸ்ரீபீஷ்மரின் பிரம்மச்சர்யம் மிளிரும் தெய்வத் திருவாழ்வுதான் பட்டவர்த்தனமாகத் தெரிகின்றதே!  ‘என்ன சொல்லி வாழ்த்துவேன் என் திருமகனை’‘  ஸ்ரீகங்காதேவி திகைத்து நின்றாள்!
‘தாயாய் நின்று ஆசீர்வதிப்பேனா! தேவி அம்சம் பூண்டு வாழ்த்துவேனா? சாதாரணப் பெண்ணாய் இருந்து பதினாறும் பெற்றுப் பெறுவாழ்வு என்று நான் வாழ்த்துவதற்கு பீஷ்மனுக்கு அத்தகைய மண வாழ்வு விதிக்கப்படவில்லையே!’ ஸ்ரீகங்கா தேவி யோசித்து நின்றனள்! அன்பின் வெளிப்பாட்டை ஆசியால் தான் அளிக்க வேண்டுமா? ஸ்ரீகங்கைத் தாய் யோசனைக்குள் யோசனையாக மருகி நின்றனள். தன் தெய்வத் திருமகன் பெறவிருக்கும் ஸ்ரீகிருஷ்ணனின் விஸ்வரூப தரிசன ஆசி அவள் கண்களில் தெரிந்தது. இதைவிடப் பெரிய ஆசி உண்டா என்ன? ஆனால் இப்போது கேட்கின்றானே! எதனைச் சொல்வது? எதனை விடுவது?
தன் தெய்வ மகனுக்கு எதனை அன்பின் வெளிப்பாடாய் ஆசியாய் அளிப்பது! ஸ்ரீகங்கா தேவியின் கண்கள் பனித்தன! விழியோரம் திரண்ட ஆனந்தக் கண்ணீரா! தன் ஆனந்தக் கண்ணீர்த் துளிகளைத் தம் திருக்கரங்களில் ஏந்தினாள் ஸ்ரீகங்கா தேவி! கங்கையென்றாலே குளிர்ச்சி என்ற பொருளுண்டல்லவா! இளஞ்சூட்டில் திரண்ட ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் ஸ்ரீகங்கா தேவியின் பொற்கரங்களின் குளிர்ச்சியில் ஸ்படிகங்களாக மாறின!
ஆம்..... பிரபஞ்சத்தில் முதன் முதலாக ஸ்படிகம் தோன்றிய வரலாறு இதுவே!
இவ்வாறாகவே ஈரேழு உலகங்களிலும் முதல் முதலாக ஸ்படிக மணிகள் தோன்றின! ஸபடிகம் பிறந்ததின் ஆன்மீகப் பின்னணியை அறிந்து கொண்டீர்களா? இதுவே சித்த புருஷர்களின் கருணைக் கடாட்சம்! ஆம், ஸ்படிகத்தின் இதிகாச வரலாற்றை நமக்கு எளிதாக எடுத்தருளி உள்ளார்களன்றோ! ஸ்ரீகங்கா தேவி பலகோடி நட்சத்திரங்கள் கூடி ஒருங்கே பிரகாசித்தாற் போல் தன் கரங்களில் ஜ்வலித்த ஸ்படிக மணிகளை ஹாரமாகத் தொடுத்து ஸ்படிக மாலையாகத் தன் அற்புத  சற்புத்திரனின் திருமார்பில் அணிவித்து மகிழ்ந்தாள்! மீண்டும் மறைந்தாள்! இதுவே பிரபஞ்சத்தின் முதல் ஸ்படிக மாலை!
 மஹாபாரதத்தில் பீஷ்ம பர்வதத்தில் .... இதோ அம்புப் படுக்கையில் பீஷ்மாச்சாரியார் சயனித்திருக்கிறார்... அர்ஜுனன் ஸ்ரீபீஷ்மரின் தாகசாந்திக்காக பாணத்தை பூமியில் விட...., அவன் எதிர்பார்த்ததோ ஓர் அற்புத நீருற்று! ஆனால் பெருக்கெடுத்ததோ கங்கைப் பிரவாகம்! ஆம் ஸ்ரீகங்கா தேவியே தம் திருபுதல்வனைக் கடைசி முறையாக இந்தத் தேகத்தில் காண நேரில் வந்து விட்டாள்!
முன்போ பகீரதன் பல கோடி ஆண்டுகள் தவமியற்றி மிகுந்த பிரயத்தனத்துடன் கங்கையை மூவுலகங்களுக்கும் கொணர்ந்தான்! ஆனால் இன்றோ! எவ்விதப் பிரயத்தனமுமின்றித் தானே கீழிறங்கி வந்து விட்டனளே! தாயுள்ளம் கரை புரண்டு ஓடினால் அடைப்பார் யாரோ? அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாள்! இறுதியை உளமார ஏற்று அம்புப் படுக்கையில் கிடக்கும் தன் தெய்வத் திருபுதல்வனைக் காண கங்காதேவி ஓடோடி வந்தாள்!
தாய், மகனுக்குக் கங்கை நீரை வார்க்கின்ற காட்சி! புனிதமான நீர், பீஷ்மரின் உள்ளத்தை நனைத்து விட்டதோ! ஸ்ரீபீஷ்மர் கண்களை திறந்து கரங்களைக் குவித்து ‘ஹே கிருஷ்ணா!’‘ – அண்டங்கள் அதிர கிருஷ்ண நாமம் விண்ணைப் பிளந்து பல லோகங்களையும் சென்றடைந்ததோ! அப்பப்பா...! என்ன கம்பீரமான குரல்!
அன்பு பெருகி வெடித்திடில் அதன் ஆத்ம சக்தி விண்ணைப் பிளக்குமோ! ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா மஹாவிஷ்ணுவாய் விஸ்வரூப தரிசனம் தந்தார்! ஸ்ரீவிஷ்ணுவின் நாமங்களை, ஆயிரம் நாமங்களைத் துதிப்பாராயினர் ஸ்ரீபீஷ்மாச்சாரியார்! ஆம்...விஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்து விட்டது ஸ்ரீபீஷ்மாச்சாரியாரின் திருவாயிலிருந்து! கங்கைப் பொழிவினைப் போல் ஆயிரம் விஷ்ணு நாமங்கள் ஸ்ரீகிருஷ்ணனின் விஸ்வரூபத்தை அலங்கரித்தன! விஷ்ணு சஹஸ்ரநாமத்தை, அதியற்புத வரங்களையும் மாலவனின் மணிப் பாதங்களையும் அருளவல்ல ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஸ்ரீபீஷ்மர் இவ்வகையில்தான் முதன்முதலாக உலகிற்கு அளித்தார்.
முக்தி, மோட்சம், பகவானின் பாதார விந்தங்கள், ஸ்ரீவிஷ்ணு பாதம் இன்னோரன்ன இறை அனுபூதிகளைத் தரவல்ல ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்! இதுவரையில் இத்திருவரலாற்றை ஓரளவே யாவருமறிவர்! ஆனால் இதன் பிறகு நிகழ்ந்த அற்புதமான தெய்வீகத் திருவிளையாடலை சித்தபுருஷர்களின் இருடிகள் மஹாபாரதமே அளிக்கின்றது! நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தம் சற்குருவிடம் பெற்று அதனை எடுத்தருள்கின்றார்.
ஸ்ரீபீஷ்மாச்சாரியார் ஓதிய உன்னதமான ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டுப் பூவுலகின் சகல கோடி ஜீவன்களும் விண்ணுலக தேவாதி தேவரும் கேட்டு ஆனந்தித்தனர். ஸ்ரீகிருஷ்ணர் எழுந்தருளினார்.,, ‘யாவரும் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்தைக் கேட்டீர்களா?‘
‘கேட்டு மகிழ்ந்தோம் பிரபோ!’
‘எங்கே திரும்பச் சொல்லுங்கள் பார்ப்போம்!’ - ஸ்ரீகிருஷ்ணர் புன் முறுவலுடன் கேட்க அனைவரும் திகைத்தனர்.. ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்தில் அனைவரும் தம்மை மறந்து லயித்து விட்டமையால் எவராலும் திருப்பிச் சொல்ல இயலவில்லை! என் செய்வது...

விசேஷ தினங்கள்

தினசரி இறைபூஜைகள், நித்ய கடமைகளைச் செய்யாமையால்தான் பல குடும்பங்களில் நோய், பணப் பிரச்னைகள், மனஸ்தாபங்கள், ஒழுங்கீனமான நடத்தைகள், கேளிக்கைச் செயல்கள், குழந்தைகளின் தீய வழக்கங்கள் போன்றவை மலிந்துள்ளன. ஒவ்வொரு மாதத்திலும் அமையும் விசேஷ தினங்களையாவது குறித்த தான தர்மங்களுடன் கொண்டாடினால் நித்ய பூஜா விதிகளைத் தவற விட்டமைக்கு நல்ல பரிஹாரமாக அவை அமைகின்றன. பண்டிகைகளின் கோட்பாடு இதுவே!
நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள், பல பிரசித்தி அடையா விசேஷ தினங்களின் ஆன்மீக இரகசியங்களையும், அறிந்த விசேஷ  பண்டிகைகளின் (யாவரும் அறிந்திரா) ஆன்மீக விளக்கங்களையும் ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களிலிருந்து தம் குருவிடமிருந்து பெற்று அருள்கின்றார். இவற்றை முறையாகக் கடைபிடித்து அளப்பரிய தெய்வத் திருவருளைப் பெற்று உய்வோமாக! மேலும் பலருக்கும் அறிவித்தால் இதன் பலன்கள் யாவரையும் சென்றடைந்து மிகச் சிறந்த மக்கள் சேவையாக மலரும்!
4.12.1994  - ஸௌர விரதம்
15.12.1994  - ஹனுமத் விரதம்
16.12.1994 – பிசாச விமோசன தீர்த்த தர்ப்பணம்/சிராத்தம்
18.12.1994 – ஆருத்ரா அபிஷேகம்
19.12.1994 – ஆருத்ரா தரிசனம்
1.1.1995 – ஹனுமத் ஜயந்தி
2.1.1995 – ஆரோக்ய விரதம்
16.12.1994 (காலை 5.28 முதல் – 18.12.94 காலை 7.47வரை) – மூன்று நாட்களுக்கும் பௌர்ணமி திதி அமைகிறது.. திரிதின பௌர்ணமி

மரணத்திற்கு பின் ...

இறப்பிற்குப் பின்னான நிலைகள் – சில ஆன்மீக விளக்கங்கள்
தர்ப்பணம் என்பது நம் மூதாதையர்களுக்கு உரித்தான பூஜையாகும். மூதாதையர்களின் ஆசியினால் தான் குழந்தைச் செல்வம், சொந்த வீடு, வாகனப் பேறுகள் போன்றவை கிட்டுகின்றன. அப்படியானால் தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் என்ன என்ற வினா எழும். பித்ருக்கள் எனப்படும் மூதாதையர்கள் பித்ரு லோகம் என்ற லோகத்தில் வாழ்கின்றனர். ஊண், உறக்கம், பசியில்லா உன்னத நிலையது. மனிதனின் மனதிற்கும் அறிவிற்கும் அப்பாற்பட்ட ஆன்மீக நிலைகளிவை...

சூரியனார் கோவில்

இறந்தோர் அனைவரும் ஒளிப் பகுதியான பித்ருலோகத்தை அடைவதில்லை. நரகத்திற்கு நிகரான இருள் பகுதிக்குச் செல்வோரும் உண்டு. மீண்டும் பிறவிகள் எடுப்போரும் உண்டு. பிறவிகளிலும், ஆவி நிலைகள், (பேய், பிசாசு, துர்ஆவிகள் போன்றவை) நன்னிலை ஆவிகள், (தேவதைகள், நல் ஆவிகள்) பூலோகப் பிறவிகள், ஜடப் பொருள் பிறவிகள் (கல், உலோகம், மண் ....) என்று பல நிலைகள் உண்டு. சற்குருவுடன் வாழும் பாக்கியம் பெற்றால் தான் பிறவி, உயிர் பற்றிய முழு ஞானத்தையும் பெறலாம். வெறும் ஏட்டுப் படிப்பினால் அறிவு விருத்தியாவது போல் தோன்றும், அதுவும் மாயையே. அதனால் எவ்விதப் பயனும் இல்லை. புத்தக அறிவைக் கொண்டு ஆத்மவிசாரம் செய்வதைவிட ஞானம் பெற்ற குருவைத் தேடுவதே உகந்தது. இறந்த நம் மூதாதையர் தற்போது எந்த நிலையில் உள்ளனர் என்பதை நாமறியோம். ஆனால் ஒருவர் இறந்த பின் அவருக்குக் கடைசிப் பிறவியில் அமைந்த கணவன், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், மட்டுமன்றி அவர் எத்தனையோ ஆயிரம் பிறவிகளில் தனக்கு அமைந்த பல்லாயிரக் கணக்கான மனைவியர் கணவர்கள் பிள்ளைகள் உறவினர்களைப் பற்றி அறிகின்ற போது தான் தன்னுடைய உண்மையான கடமையை உணர்கின்றார். பல்லாயிரக்கணக்கான தன் சொந்த பந்தங்களில் எவருக்குத் தன் புண்ய சக்தியை அளிப்பது? கடைசிப் பிறவி உறவுகளுக்கா? கடந்த ஜன்ம உறவுகளுக்காகவா?
அவர்தம் கடைசிப் பிறவியில் அவர் ஒரு சற்குருவைப் பெற்றிருந்தால் அந்த சற்குருவே, மரணத்திற்குப் பின் உள்ள நிலையிலும் அந்த ஆவிக்கு நல்வழி காட்டுகிறார். எனவே கோடிக்கணக்கான பிற ஆவிகள் தத்தளித்து  அலைகின்றன. சற்குருவை இறையருளால் பெற்ற அந்த ஆவியோ சற்குருவின் பாதத்தை நினைந்து துதிப்பதால் இரட்சையாய்க் கவசமாய் இறுதியில் ஞானம் கிட்டும் வரை சற்குருவே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், பித்ரு லோகம் என அனைத்து லோகங்களிலும் தன் அடியாரைத் தொடர்ந்து காக்கின்றார்!
 பூலோகத்தில் ஒரு சற்குருவைப் பெற்றால் எத்தகைய பேறு பார்த்தீர்களா? இன்றே சற்குருவைத் தேடுங்கள் ! உண்மையாகத் தேடினால் அவரே உங்களை நாடி வருவார்!
சற்குரு எங்கே? (நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளுடன் நிகழ்ந்த உரையாடலின் தொகுப்பு )
அடியார்:  குருவே! கலியுகத்தில் சற்குரு பரிபாலனம் உண்டா? சற்குருவை எவ்வாறு அடைவது என்று பலரும் கேட்கின்றனர். ஜாதி, மத பேதமில்லாது சத்சங்கம் மூலம் மக்களுக்குச் சேவை புரிகின்ற சற்குருவை நம் சமுதாயத்தில் எப்படிக் கண்டுபிடிப்பது என்பதே பலருடைய வினா!
குரு : சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. நம் சென்னை மாநகரில் மட்டும் பத்தாயிரம் சற்குருமார்கள் மக்களோடு மக்களாக இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம்.மனிதர்கள் தான் சிரத்தையுடன் தேடிப் பிடிக்க வேண்டும்...
 சற்குரு இப்படித்தான் இருப்பார் என்று சிலர் வரைமுறைகளை மனிதன் வகுத்துள்ளான். இது தவறு! அவர் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் சரி, பாண்ட், சூட், காவி வஸ்திரம், ஜிப்பா, கோவணம் என்று எந்தத் தோற்றம் கொண்டும் இந்த 10000 குருமார்களும் தக்க அடியார்கள் கிட்டமாட்டார்களா என்று தெய்வீக வேட்கை கொண்டு பூலோகம் வந்துள்ளனர். ஆனால் தங்கள் தெய்வீக சக்திகளை இவர்கள் வெளிக்காட்டுவதில்லை, இலைமறை காயாக அருள் பாலிக்கின்றனர்!

நோய்க்கு மருந்து

ஆடுதுறை ஸ்ரீசூரியனார் கோயில் வாசலில் இன்றைக்கும் ஒரு சிறிய (பழைய) குளத்தில் பல சித்த புருஷர்கள் தினமும் வந்து ஸ்நானம் செய்து புனிதப்படுத்துகின்றனர். தற்போது குப்பை, கூளங்களுடன் நாற்றமடிப்பது போல் புறக் கண்களுக்குத் தோன்றினாலும் உண்மையில் இது தேவலோக தீர்த்தமாகும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்த (அழுக்கடைந்த) தீர்த்தத்தை உண்டால் எத்தகைய கொடிய நோயும் தீரும்! இது எவருமறியா ஆன்மீக இரகசியம்!
கோயிலுக்கு எதிரே அதன் இடப்புறத்தில் அமைந்திருக்கும் இச்சிறிய தீர்த்தமனது பாழடைந்தது போல் தென்படுகின்றது. இதன் தீர்த்தம் பல நேரங்களில் வற்றியது போலவும் அழுக்கு, பாசி நிறைந்தது போலவும் தென்படும்! புறக் கண்களுக்கே! உண்மையில் இது வற்றாத தீர்த்தம், தீராத நோய்களை வினைகளைத் தீர்க்கும் தீர்த்தம்! ஆழ்ந்த நம்பிக்கையுடன் அள்ளிப் பருகினால்! ஆனால் இந்த நம்பிக்கை எளிதில் வருமா? ‘சீச்சீ.... நாற்றமடிக்குது.... வயிறு குமட்டுது’ என்றல்லவா மனமும் உடலும் ஒதுக்கும். ஆனால் இத்தகைய இடங்களில் தானே சித்த புருஷர்கள் வாசம் செய்கின்றனா? நம்பினோர்க்கு நடராஜா! நம்பிக்கையுடன் செயல்படுவீர்! கைமேல் பலனைப் பெறுவீர்!

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam