எத்திக்கும் தானாகி என் இதயத்தே ஊறி தித்திக்கும் ஆனந்தத் தேனே அற்புதமே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

எப்படி வந்தாரோ?

ஓடும் ரயிலில் தனித்துக் கிடந்த சிறுவன் நன்கு வாய் விட்டே புலம்பலானான்!

“மத்தியப் பிரதேசத்தில் கொள்ளையர்கள் அதிகமாமே, ஒரு வேளை பெரியவருடன் இருந்த ரயிலை விட்டு விட்டு, வேறு ரயிலில் ஏறி விட்டோமோ!” என்றவாறாகச் சிறுவன் நன்கு தன்னைக் குழப்பிக் கொண்டான்!

திடீரென்று அவன் தோள் மேல் கால்களை வைத்து… யாரோ மேல் பெர்த்தில் இருந்து இறங்கிட,

ஐந்தெழுத்து என்றும்
துணை நிற்குமே !

வலி தாங்காத சிறுவன் முறைப்பதற்காக மேலே நிமிர்ந்தான்! ஆம்…. பெரியவர் தான் சாதுவாக இறங்கிக் கொண்டிருந்தார்.

ஆபத்பாந்தவனாக இப்போது வந்த “இவர்” எப்போது இந்த ரயில் பெட்டிக்கு வந்தார்? சிறுவன் வழக்கம் போல் விடை காண முடியாது, தலையைப் பிய்த்துக் கொண்டான்.

“நீ தான் அவசரக் குடுக்கையா இந்தப் பெட்டியில் ஏறிடுவேன்னுதானேடா, முதல்லேயே இங்க வந்து படுத்துக்கிட்டேன்!”

பெரியவரோ சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டாரே, சிறுவனுக்குக் கோபம் கோபமாய் வந்தது? கோபத்துக்குக் காரணமும் இல்லாமல் இல்லை!

“தவறு” செய்வதைத் தடுக்காமல் “தவறைச்” செய்ய வைத்துப் பின் அதனைச் “சரி” செய்வானேன்!” – என்பதுதான் அவனுடைய கோபத்துக்குக் காரணம்.
இதுதானே தற்போதையக் கலியுலகத்தில் பலரும் – தெய்வத்தைப் பற்றியும், சத்குருவைப் பற்றியும் கொண்டிருக்கும் வினாப் படலங்கள்!

“இவர் எப்படி இந்த ரயில் பெட்டிக்கு வந்தார்? இவர் சொல்வதை நம்புவதா வேண்டாமா?”

அவன் மனதைக் கப்பென்று பிடித்த பெரியவர், “நம்பறவனுக்குத் தாண்டா நடராஜா!” என்றார்.

ஆனால் அந்தப் பிராயணத்திலோ அதற்குப் பிறகோ, இதுவரையிலும் “அந்தப் பெட்டிக்குப் பெரியவர் எப்படி வந்தார்?” என அவன் இறுதி வரையில் அறிந்தானில்லை! எத்தனையோ அதியற்புதமான இறைப் பெரும் பேராற்றல்களை அவரிடம் கண்டவனுக்கு இது பெரிய விஷயம் இல்லைதான்! ஆனால், “இது எப்படி நடந்தது” எனத் தெரிந்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டி, அதில் சுத்தமாக ஏமாந்து போனான் சிறுவன்.

சூரிய மண்டலத்திற்கு வா! விளக்குவோம்!

இதில் சிறுவனுக்கு என்ன பாடம் கிட்டியதோ, அதுதானே பிறருக்கும்!

“எது, எப்போது எவருக்குத் தெரிய வர வேண்டுமோ, அதுதான் தெரியலாகும்! எல்லாம் தெரிய வேண்டுமானால், பூமியில் நடக்கும் அனைத்திற்கும், சாட்சியாக இருக்கும் சூரிய, சந்திர மண்டலத்திற்கு வா, பூவுலகின் அனைத்து சம்பவங்களையும் அங்கே போட்டுக் காட்டுகிறோம்!”

பெரியவர் உதிர்த்த நம்பிக்கை டானிக் வாக்கியங்கள் இவற்றை ஒவ்வொரு முறையும் படிக்கப் படிக்க, அற்புதமான மனோ சக்திகள் தோன்றி, இறைப் பேருவகை அளிப்பதை நன்கு உணரலாம்! இம்மட்டோ!

“இதற்காகவா சூரிய, சந்திர மண்டலம் போகணும்? அக்னிக் கோளமான சூரிய மண்டலத்திற்கு வரவழைத்து ஆயிரமாயிரம் பிறவிகளில் நிகழ்ந்தவற்றுக்கு சகல விளக்கங்களையும் தரவல்ல சத்குருவை, இங்கேயே பூமியில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் சரணடைந்தால் போதுமே! இங்கேயே எல்லாவற்றுக்கும் விளக்கங்கள் குருவருளால் தாமாகவே வந்திடுமே!” என்று, சரணாகத ரீதியான ஆத்ம விசாரத்திலும் சற்று உய்ந்து உறைந்துதான் பாருங்களேன்!

மகத்தான மகா அவதூது பாபா தரிசனம்!

இமாலயத்தில் மணாலி, கூலு பகுதியில்தான், ஒரு வனாந்திரத்தில் “மஹா அவதூது பாபாவின்” தரிசனத்தையும், ஆங்கே விண்ணில் தெரிந்த தங்க மாளிகைகளையும் பெரியவரின் ஆசியால் அவரருகிலேயே நின்று கண்ட சிறுவன் வாயைப் பிளந்து அப்படியே கல்லாய்ச் சமைந்து விட்டான்.

“அப்போது என்ன, ஏதென்று கேட்க வேண்டும்” என்று அவன் சற்றும் எண்ணாத நிலையில், பெரியவர் அவனை இழுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, மஹா அவதூது பாபாவின் மகத்துவத்தைப் பற்றி, ஆறு மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து பேசி விளக்கினார்.

இதெல்லாம் அவன் வாழ்வில் கேளாமல் கிட்டிய மஹா அற்புத பாக்கியங்களாக இருக்க….

இந்த ரயில் பெட்டி விஷயம் அவனுக்கு ஓர் அல்ப ஆசையாகவே பெரியவர் தானாகவே தன் உடலை மறைத்துக் கொண்டது வரையில் இருந்து அதுவும் நாளடைவில் மறைந்தது,  தானாகவே!

இந்த ரயில் பெட்டி வைபவ நினைவுடன் தான் வெள்ளியங்கிரி மலைப் பிரயாணத்தில்…

திருஅண்ணாமலை போல், அங்கேயும் உள்ள குபேரத் தீர்த்தத்தின் அருகே உறங்கியும், உறங்காமலும் யோக சயனத்தில் கிடந்த பெரியவரிடம் அருகில் அமர்ந்த சிறுவன்…

அவரை நன்கு உற்றுப் பார்த்த வண்ணம் இருந்தான், இதன் பிறகு எண்ணற்ற குருகுல சம்பவங்கள் தொடர்ந்தன. கலியுகத்திலும் இத்தகைய குருகுலவாச அனுபூதிகள் உண்டு என்பதை அப்போதுதான் நன்கு உணரலானான். தற்போது நீங்களும்தானே!

பெரியவர், வெள்ளியங்கிரியில் சுட்டிக் காட்டிய “வெள்ளைப் பிள்ளையார்” மலைக் காட்சிகளைக் கண்டு கொண்டே அவர் சொல்லி வந்த விளக்கங்களையும் கேட்டு வந்தான் சிறுவன்!

திரிதியைத் திதியில் திவ்ய தரிசனம்!

நடுவில் மற்றொரு சுனை வந்தது, சிறுவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

பெரியவர் ஏற்கனவே பன்முறை அவனுக்கே “எம தூதுவர்களின்” தரிசனத்தைக் காட்டி உள்ளார் என்பதால், இப்போது சிறுவன் அச்சுனையில் நீராட வந்துள்ள எம தூதுவர்களைக் கண்டு அதிசயித்தான்.

பெரியவர் மெதுவான குரலில், “இன்னிக்குத் திரிதியைத் திதி! சாட்சாத் எம மூர்த்தியே பூலோகத்துக்கு வந்து நிறையத் தீர்த்தங்கள்ல நீராடி இதோட பலாபலன்களை திரிதியைத் திதிப் பூஜா பலன்களோட சேர்த்துச் சங்கல்பம் பண்ற நாள்! இதுவும் குபேர தீர்த்தம் மாதிரித்தான்! எம மூர்த்தி ஸ்நானம் பண்ணின பிறகு இதுல நீராடறவங்களுக்கு மரண பயமே கிடையாது! மார்கண்டேயர் மாதிரி என்றும் பதினாறுதான்! இங்க இருந்து குளிச்சுட்டுப் போகலாமா?”

பெரியவர் மிகவும் சீரியஸாகக் கேட்டார்.

ஆனால் பெரியவரின் “கிருஷ்ணச் சாதுர்யம்” சிறுவனுக்குத் தெரியாதா என்ன?

“நீ என்ன சொல்றீயோ அப்படியே செய்யறேன் வாத்யாரே!”

பெரியவர் நன்கு அழுத்தமாகச் சிரித்து அவனைத் தட்டிக் கொடுத்தார்!

“வெள்ளியங்கிரி வந்து அதுக்குள்ளாறேயே கொஞ்சம் தேறிட்ட ராஜா!”

“ஏன் வாத்யாரே சொல்றதுதான் சொல்றே! “நல்லாத் தேறிட்டேன்னு” சொல்லக் கூடாதா?

“சர்வேஸ்வரனே உக்கார்ந்து இருக்கற வெள்ளியங்கிரியில் எப்படிடா பொய் பேசறது”

சிறுவன் “கப்சிப்” ஆனான், “மௌனமே” நன்று என அத்தருணத்தில் அவன் எண்ணியதால்!

மாண்டோரை மீட்கும் மார்கண்டேயச் சுனை!

சற்று நேரம் கழிந்து, திடீரென்று அவனுக்கு ஏதோ தோன்றியது! அதுவும் அந்த சுனையைப் பார்த்ததும்தான்! மாண்டோரை மீட்கும் “மார்கண்டேயச் சுனை” அன்றோ!

சில மாதங்களுக்கு முன் கொங்கு நாட்டுப் பகுதியில், “பழநிச்சாமி” என்பவருக்கு ஏற்பட்ட நீர்க்கண்டம் பற்றிச் சொல்லிட, அந்த சம்பவத்தின் முடிவைச் சிறுவனால் அவரிடம் முழுமையாகக் கேட்க முடியவில்லை! இப்போது சிறுவன் “அதைக்” கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்!

மிகவும் அதிசயமாக இப்போது பெரியவரும், “சரி, சரி இங்கேயே, இந்த மார்கண்டேயச் சுனை கிட்டேயே ஆயாசமா உக்காந்துக்க, சொல்றேன்! எது எது எங்க தெரியணுமோ, அது அது அங்கதான் தெரியலாகும்!” என்ற பீடிகையுடன் சொல்லலானார்.

தண்ணீருக்குள் விழுந்த தன் மகன் பழநிச்சாமியைத் தேடி, அவருடைய தந்தை பெருத்த அழுகையுடன் நீர்ப் பெருக்கோரமாகவோ நடந்து நடந்து வெள்ளியங்கிரிப் பக்கமே வந்து விட்டார்.

நடந்து நடந்து நெடு நேரமும் ஆகி விட்டது. நீரோட்டப் பகுதியில் சிக்கிய பழநிச்சாமியின் சுவடே தெரியவில்லை! நீர்க் கண்டத்தால், நீருக்குள் சிக்கிய தன் மகன் பழநிச்சாமியின் கதி பற்றிய வேதனைகளில் அவருடைய தந்தை வேலப்பரின் உடல் தளர்ந்தாலும்,

“என்னப்பன் வெள்ளியங்கிரியான் என்னை ஏமாத்த மாட்டான்!” என்று அவருடைய உள்மனம் ஓயாது உரைத்துக் கொண்டே இருந்தது.

சற்றுத் தூரத்தில் ஏதோ நிழலாடுவது போல் தெரியவே, அந்த முதிய வயதிலும் அங்கே விரைந்தார்!

அங்கே…

வெள்ளியங்கிரியார் தந்த தெள்ளிய பரிசு!

அவருடைய மகன் பழனிச்சாமி அங்குள்ள சிறு பாறையில் களைப்போடு உட்கார்ந்திருந்தார். உடனே “வெள்ளியங்கிரி அப்பா! வெள்ளியங்கிரி அப்பா! வெள்ளியங்கிரி அப்பா!” என மகிழ்ச்சி பொங்கக் கதறி அழுது, வேலப்பர் தன் மகன் பழநிச்சாமியைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். ஆனந்த மிகுதியால் நெடு நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை!

“ஏம்ப்பா! அங்கே தண்ணீருக்குள்ள விழுந்த நீ எப்படியப்பா இங்கே வந்தே?”

பழநிச்சாமி விளக்கலானார்.

அவர் தண்ணீரில் மூழ்கின உடனேயே, தர்மராஜாவினுடைய பெண் தூதுவர்கள் (பிராண யோகினிகள்), அவரை மேலுலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ஆங்கே, மேலோகத்திலே வழிகாட்டிப் பலகை ஒன்று இருந்தது. அதில் “நிதம்பபுரி” என்று எழுதி இருந்தது. ஒரு பெரிய விசாலமான மண்டபம். பொற் கிரீடம், ஆபரணங்களுடன் அங்கே சிவப் பிரகாசமாய் ஒரு மாதா எழுதுகோல், ஓலைச் சுவடியோடு அமர்ந்திருந்தார்!

“தாயே! தாங்கள் யாரென அடியேன் அறியலாமா?” எனப் பழநிச்சாமி கேட்டார்.

“உன் பெயரென்ன?” என்று அம்மாதா திரும்பிக்  கேட்டிட,

பழநிச்சாமிக்கு, சகலமும் அறிந்த இம்மாதா இதை ஏன் நம்மிடம் கேட்டிட வேண்டும் என எண்ணித் தன் பெயரைச் சொன்னார்.

“நீ கோவிந்தசாமியின் மகனா?”

“இல்லையம்மா, வேலப்ப கௌண்டரின் மகன்!”

உடனே அம்மாதா பிராண யோகினித் தூதுவர்களை அழைத்து, “இவருக்குத் தண்ணீர்க் கண்டம் உண்டு. ஆனால் நீர்க் கண்டத்தில் இவர் பிராணன் போகாது என்று உள்ளதே, இவரை ஏன் அழைத்து வந்தீர்கள்” எண்று பிராண யோகினிகளைப் பார்த்துக் கேட்டார்.

வால் நட்சத்திரம்

விண்வெளி வான மண்டப வளாகம் தெய்வ வழிபாட்டிற்கே! விஞ்ஞான சாதனங்களின் விபரீத விளையாட்டு மோதல்களுக்காக அல்ல!!

விண்வெளி வால் நட்சத்திரத்துடன் மோதுதல் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும்!

“வால் நட்சத்திரம்” என்பது அந்தந்த நட்சத்திரங்களின் விரிவுப் பகுதி ஆகும். இவை கோடிக் கோடியாக உண்டு.. வான் நட்சத்திரத்தில் கோடானு கோடி பகுபதப் பொருட்கள் உண்டு. ஜீவ வாழ்க்கையும் இவற்றில் உண்டு. இவற்றுள் பெரும்பாலானவை கண்களுக்கோ, தொலைதூரக் கருவிகளுக்கோ புலப்படா!

சிந்துப்பட்டி

“வால் நட்சத்திரம்” பற்றிய விஞ்ஞான விளக்கங்கள் மாறிக் கொண்டே இருக்கும், ஏனெனில் கண்களால் மற்றும் தொலைகாட்சி சாதனங்கள், ஆராய்ச்சிக் கருவிகளில் காண்பதை வைத்தே விஞ்ஞான முடிவுகள் அளிக்கப் பெறுகின்றன. தெய்வீகத்தில் அற்புத யோக, தபோ சக்திகள் மூலமாக, அந்தந்த கிரக மண்டலங்களை, நட்சத்திர உலகுகளை, வால் நட்சத்திரப் பகுதிகளை நேரிடையாகவே அடைதல் கூடும். அதே சமயத்தில், உத்தம யோக நிலைகளில் பூமியில் இருந்தவாறே இவை அனைத்தையும் காணவும் இயலும். ஆனால் இவற்றைக் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்!

ஆராய்ச்சி என்ற பெயரில் செயற்கை விண் கப்பலை வானில் ஏவி அதிலிருந்து தனிக் கலத்தை அனுப்பி சமீபத்தில் வால் நட்சத்திரத்தின் மீது (temple1) கருவிகளை மோதச் செய்து, அது மோதியது கண்டு கைகொட்டி ஆர்ப்பரித்த சம்பவம் மிகவும் வேதனை தருவதாகும். எந்த இயற்கைப் பொருளை மனிதனால் உருவாக்க இயலவில்லையோ, அதனுடன் மோதி அதனைச் சிதற வைக்க எவருக்கும் உரிமை கிடையாது.

சிந்துப்பட்டியில் கொடிக் கம்பத்திற்கு தேன் கலந்த தயிர் காப்பு இட்டு, வலம் வந்து வணங்கினால் உடுத்தாள உஷ்ணம் உருவாகும். இதனால் அனைத்துவித தோல் நோய்களும் குணமாகும்.

எனவே, விஞ்ஞான ஆராயச்சி என்ற பெயரில், எக்காரணம் கொண்டும் வானியல் பொருட்களுடன் மோதுதலே கூடாது, இதனால் அந்தந்த ஆராய்ச்சி நாடுகளுக்கு இயற்கைச் சீற்றங்களால் பேரழிவு ஏற்படும். இவற்றைக் கண்டு வாளாவிருக்கும் உலக மக்களையும் இது பல்வகைகளில் பெரிதும் பாதிக்கும்.

வால் நட்சத்திரம் என்பதற்குக் கோடி கோடியான விளக்கங்கள் உண்டு. கடந்த வினைக் கர்மங்கள் (சஞ்சித வினைகள்), நடப்புக் கர்மங்கள் (பிராரப்த வினைகள்), எதிர் வரும் கர்மங்கள் (ஆகாமி வினைகள்) ஆகிய மூன்றில் பழவினைகள் பலவும், வால் நட்சத்திரம் போன்ற நட்சத்திரப் பகுப்புகளில் பதிக்கப்பட்டிருக்கும், பழவினைகளை அனுபவித்தே கழிக்க வேண்டும் என்பது தர்ம நியதி, வால் நட்சத்திரங்களில் இவை பதிந்திருப்பதால், உலக மக்களின் கர்ம வினைத் திரட்சிகள் பலவும் இவற்றில் நிறைந்திருக்கும். இவ்வாறு விஞ்ஞான சாதனங்கள் வால் நட்சத்திரத்தோடு மோதும் போது, தேவையற்ற வகையில் இயற்கையை பழவினைகளைச் சீண்டுவதும் ஆகிறது.

இன்னொரு வகையில் சொல்லப் போனால், அந்தந்த நட்சத்திர தாரருக்கான பூர்வ ஜன்மப் பதிவுகள் – ஆகார்ஷிக் ரெகார்டுகள் – வால் நட்சத்திரங்களில் பதிந்திருக்கும், வால் நட்சத்திரத்தின் எந்தப் பகுதி சேதமுற்றதோ அதற்கேற்றபடி அந்தந்த திசைகளில் அதிபயங்கர விளைவுகள் ஏற்படும்.

வால் நட்சத்திரத்தின் சில பகுதிகளில் ஜீவன்களின் புண்ய சக்தித் திரட்சிகளும், கொடிய தீவினைகளும் பதிந்திருக்கும், அனுபவித்துக் கழிக்க வேண்டிய, இத்தகையக் கொடியத் தீவினை மூட்டைகளின் மீது விஞ்ஞான சாதனங்களை ஏவி மோதினால், இந்தக் கொடூரமான, அதர்மமானப் பாவச் செயல்களுக்குப் பரிகாரமே கிடையாதே!

மேலும் சித்தர்களும், மஹரிஷிகளும் தங்களுடைய பூஜா, யோக, தியானப் பலாபலன்களை வால் நட்சத்திரப் பகுதிகளில் வைத்து, ஆழ்ந்த நம்பிக்கையுடன் பூவுலகில் வழிபடுவோரின் வினைகளைக் கரைக்க இவற்றை ஆகர்ஷண ஸ்தூபிகளாக வால் நட்சத்திரங்களில் பதிக்கின்றனர். இவற்றின் மீது, இத்தகைய தேவ புண்ய ஸ்தூபிகள் மீது, ஆராய்ச்சி என்ற பெயரில் பலத்த ரசாயன விஷ சாதனத்தை மோத விடுவது கை கொட்டிச் சிரிக்க வேண்டிய ஒரு சாதனையா? என்னே அவலம் இது! சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

வால் நட்சத்திரத்தின் எந்தத் திக்கு அத்தருணத்தில் அடிபட்டதோ, அத்திக்கில் இருப்போர்க்கு பலத்தத் துன்பங்களும் கபால, எலும்பு, முதுகு வகை நோய்களும் உண்டாகும். முதுகுத் தண்டின் கிரந்திகள் வெகுவாக பாதிக்கப்பட்டு அங்கங்கள் சிறிது சிறிதாகச் செயல் இழக்கும். தெரிந்தே செய்யும் இத்தகைய பாவ வினைகளுக்கு எவ்வகையில்தான் பிராயச்சித்தம் தேட முடியும்?

ஆலயக் கொடிமரங்களுக்குத் திருப்பணி செய்தல், கொடி மரங்கள் பழுதடைந்துள்ள தலங்களில் கொடி மர ஸ்தூபிகளை வேதாகமப் பூர்வமாக எழுப்புதல், மூங்கில் மரங்களை நிறைய வளர்த்தல், ஆலயங்களில் சுவாமிப் புறப்பாட்டிற்கு இயந்திர மோட்டார்களைப் பயன்படுத்தாது, பெரிய மூங்கில் கட்டைகளைத் தானமாக அளித்து சுவாமியைச் சுமந்து வருதல், மூங்கில் விருட்சம் தல மரமாக உள்ள ஆலயங்களில் கூடுதல் பூஜைகள், 27 நட்சத்திர ஆலயங்களிலும் அந்தந்த நட்சத்திர நாளில் கொடிக்கம்ப வழிபாடுகள்,  கொடிக்கம்ப சக்திகள் நிறைந்த மதுரை அருகே  உள்ள சிந்துப்பட்டிப் பெருமாள் ஆலய வழிபாடு போன்றவற்றைத் தொடர்ந்து ஆற்றி வந்தால்தாம் வால் நட்சத்திர தேவதைகளை ஓரளவேணும் ப்ரீதி செய்திடலாம்.

சிந்துப்பட்டியில் பெருமாள் ஆலயக் கொடிக் கம்பத்திற்குத் தொடர்ந்து ஒரு மண்டல காலப் பூஜைகளை ஆழ்ந்த நம்பிக்கையுடன் தினமும் ஆற்றி வந்தால், “வால் நட்சத்திரத்துடன் மோதுதல்”  போன்ற கொடிய செயல்களுக்கு ஓரளவு பரிகாரம் பெறலாகும். இதிலும் சித்தர்கள் விரும்பினால்தான் தக்க சத்குரு மூலமாக அளிக்கப் பெறும். வால் நட்சத்திரங்களில் எண்ணற்ற தேவதா மூர்த்திகள் உண்டு. இவற்றின் சாபங்களுக்கு ஆளாதல் உலக மக்களையே பாதிக்கும். இயற்கைச் சீற்றங்கள் பெருகும், கனிமச் சுரங்கங்கள் தாமாகவே வெடித்துத் துன்பங்கள் ஏற்படும்.

தாலாட்டு பாணசித்தர்

அருணாசல கிரிவலம் வரும் மாத சிவராத்திரி தாலாட்டுப் பாணர் சித்தர் மஹிமை!

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

ஓவ்வொரு சித்தரும், மஹானும் ஒவ்வொரு வகையில், துறையில் சிறந்து விளங்கி அருள் வழிகாட்டிகளாகப் பொலிகின்றனர். உத்தமத் தெய்வீக நிலைகளில் உய்ந்து, சதாசர்வ காலமும் சிவச் சித்தத்தில் துய்த்துப் பரமானந்தமுற்றாலும், மக்களை உய்விக்கின்ற காரணத்திற்காக, இறைத் தூதுவர்களாக இறைவன் இவர்களை பூமிக்கு அனுப்பும் போது, ஏதேனும் ஒரு குடும்பத்தில், மானுடராகத் தோன்றித் தானே சமுதாயத்தில் வாழ்ந்து பல்லாயிரக் கணக்கானோருக்கு நல்வழி காடியருள வேண்டும்.

எனவேதான், காஞ்சீபுரம் போடா சித்தர், கசவனம்பட்டிச் சித்தர், சிங்கம்புணரி வாத்யாரையா சித்தர், கோட்டையூர் எச்சில் பொறுக்கி ஆறுமுகச் சித்தர் என்றவாறாக, சித்தர்கள் பலரும் ஜாதி, மத, இன பேதமின்றி உலகெங்கும் பல குடும்பங்களிலும் தோன்றி, நேரடியாகவே மக்களுக்கு அருள்வழி காட்டுகின்றனர்.

தாலாட்டில் தழைத்த தகைமையர்

மேலும், இறைவன் மீது நன்கு பக்தி செலுத்தி, பாமரனாக, இல்லறவாசியாகவே வாழ்ந்தே, எவ்விதமான மனிதனும் மஹானாகலாம் என்பதை உணர்வித்திடவுமாக, மகான்களும், சித்தர்களும் மானுடக் கூடு தரித்து, ஒரு குடும்பத்தில் உதிப்பதையும் இவ்வாறாகவும் உரைக்கின்றோம்.

பண்டைய சேது நாட்டுப் பகுதியில் 1875ஆம் ஆண்டில், உத்தம வேளாளர் மரபில் தோன்றியவரே தாலாட்டுப் பாணர் சித்தர் ஆவார். இவர் தொட்டில் குழந்தையாக இருந்த போது தினமும் ஒரு சில நிமிடங்களே தூங்கிடுவார். ஆனால், “பிள்ளை சற்று நேரத்தில் தூங்கிடும், பிள்ளை சற்று நேரத்தில் தூங்கிடும்” – என்ற நம்பிக்கையில், நிறையத் தாலாட்டுப் பாடல்களை இவருடைய உத்தமத் தாயார், வாய் ஓயாது பாடிக் கொண்டே சற்றும் அசராது தொட்டிலை ஆட்டுவார்.

இவ்வகையில் ஓரிரு வயதிற்குள்ளேயே இவருடைய தாயார் நூற்றுக்கணக்கானத் தாலாட்டுப் பாடல்களைப் பாடிப் பாடி, கிராமீயத் தெய்வீகப் பாடல் மணத்துடன் இவரைத் தொட்டிற் குழந்தையாய் வளர்த்திட்டார்.

இறைமை நன்கு ஒலிப் புலமாய்ப் பூரித்து வரும் இத்தகைய தெய்வீகமானத் தாலாட்டுப் பாடல்களைக் கேட்டுக் கேட்டுத் தாலாட்டு வகை இசை, இன்னிசை ஒலிக் கிரணங்களில் இச்சித்தர் பிரானின் மனம் முதல் வயதிலிருந்தே லயிக்கலாயிற்று.

தாலாட்டு வீரனானார்!

இந்த அற்புதமானத் தாலாட்டுத் தொட்டில் கானம் ஓதியவாறான நல்வர வளர்ப்பு முறையால், நான்கு வயதிலேயே இவர் சிறு பிள்ளையாய் ஊரெங்கும் வலம் வந்து, அவ்வூர்ப் பகுதிகளில் மரங்களில் கட்டிய தொட்டில்களில் இடப்பட்டிருக்கும் பிள்ளைகளுக்காக இனிமையான குரலில் தாலாட்டுப் பாக்களை இசைத்து, குழந்தைகளை ஆன்மீக சக்திகளுடன் தேவபுல நிறைவாய்ச் சாந்தமுடன் உறங்க வைக்கும் மாண்பினை இறையருளால் பெற்றிட்டார். இத்தகைய அபூர்வமான தெய்வீகமான தகைமையால், உற்றம், சுற்றம், ஊர் மக்களால் “தாலாட்டு வீரன்” என்றே அழைக்கப் பெற்றார்.

இவருடைய தாலாட்டு லயிப்புத்தான் இவரிடம் பூரித்திருக்கும் உத்தம தெய்வீக நிலையாயிற்று! இதுவே இவரிடம் சாசுவதமாக உறைந்திருக்கும் தெய்வீக நிமித்தங்களை, சித்சக்திகளை மக்கள் சமுதாயத்திற்கு “தெய்வப் பிள்ளை” என்பதை நன்கு வெளிப்படையாகவே குறித்துக் காட்டியது.

தன்னுடைய நான்கு வயது முதலே, தன் ஊரைச் சார்ந்த பகுதிகளில், கிட்டத்தட்ட அனைத்து வீட்டுக் குழந்தைகளையும், தொட்டிலில் இட்டு, ஆட்டி, அருமையான, இனிமையான தாலாட்டுப் பண்களை இசைத்து உறங்க வைத்தமையால், வானிலும், விண்ணிலும் நல்வர அமைதிக் கிரணங்கள் சமுதாயத்தில் பொலிந்தன.

கைக் குழந்தை என்றாலே ஜுரம், சளி, இருமல், வயிறு வீக்கம் என பல நோய்ப் பிணி வேதனைகளுடன், நோய் வேதனையால் நாள் முழுவதும் சிணுங்கிக் கொண்டிருக்கும் அல்லவா. சிறு சிறு நோய்களால் வாடிச் சிணுங்கும் கைக்குழந்தைகள் மட்டுமல்லாது, கடுமையான நோயால் வாடும் குழந்தைகள் கூட, தாலாட்டு வீரனின் தாலாட்டுப் பண்ணிற்கு இசைந்து அமைதியாக உறங்கி, அதியற்புதமான முறையில் நோய் நிவாரணமும் பெற்றன.

“அருணாசலமே வாராய்!”

மேலும் இச்சிறுவனின் தாலாட்டுப் பண்களும், மகத்தான தெய்வீக வாக்கியங்களுடன், “அருணாசலமே வாராய்!” என்று நிறைவுற்று நன்கு தெய்வீகச் செழுமையுடன் அமைந்திருந்தது. ஆனால் அருணாசலமாம் திருஅண்ணாமலையோ இச்சிறுவன் வசித்த ஊரிலிருந்து 250 மைல்களுக்கு அப்பால் இருந்தது. இவ்வாறு நான்கு வயதிலேயே அச்சிறுவன் நூற்றுக்கணக்கான தாலாட்டுப் பாடல்களை மனனம் செய்து சுருதி பிசகாத ராக, தாளங்களுடன் இணைந்து நன்கு பாடி, எண்ணற்றக் குழந்தைச் செல்வங்களுக்கு அமைதியான உறக்கத்தையே நல்பரிசாக அளித்து, எண்ணற்றக் குடும்பங்களுக்கும் நல்அமைதியை வார்க்கும் தெய்வீகச் சாதனமாக, ஊரோர் புகழ வளர்ந்து வந்தான்.

கருவில் இருக்கும் போதே தாய் பாடிய பாடல்களைக் கூட அவன் நினைவு கூர்ந்து பாடியது, தாயை ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கச் செய்தது, விவசாயக் குடும்பங்கள் பலவும், நிறைய குழந்தைகளுடன் மரத்தடிகளில் தொட்டில்களைக் கட்டி, விவசாய வேலைக்குச் செல்லுங்கால் இச்சிறுவனே அத்தனைக் குழந்தைகளையும் ஒவ்வொன்றாகத் தூளியில் ஆட்டி நன்கு உறங்க வைத்திடுவான். விவசாயமும் நன்கு தழைக்கும்.

அருணையே துணை!

இச்சிறுவனின் தாலாட்டுப் பாடல்கள் அனைத்திலும் அருணாசல நாம சக்திகள் பொங்கி வழிந்தமையால் “அருணாசலத்தைத் தரிசித்து அங்கேயே உறைந்திட வேண்டும்!” என்ற உள்ளார்வமும் அவனுடைய இருதயத்தில் பூரித்தது. இவ்வாறாக நாலைந்து ஆண்டுகள் சென்றிட, சிறுவனோ தாலாட்டு வீரனாய் அனைத்துக் குழந்தைகளையும் தாலாட்டுப் பண்ணால் பராமரிக்கும் அற்புதமான தெய்வீகக் குழந்தையாய்ச் செறிந்ததோடு, “எப்படியேனும் அருணாசலப் புனித பூமியை அடைந்திட வேண்டும்!” என்ற தீரா தாகமும் அவனுள் துளிர் விட்டுக் கொண்டே இருந்தது.

பெற்ற தாயோ “எங்கோ உள்ள  திருஅண்ணாமலையில் உன்னைப் பராமரிப்பார் யார் இருக்கின்றார்கள்?” என்று கேட்டுச் சிறுவனைச் சமாதானப் படுத்தும்போதெல்லாம், “அருணாசல பூமியில் உள்ள குழந்தைகளைத் தாலாட்டி உறங்க வைத்து, அவர்களுடைய தாய்மார்களின் ஆதரவில் இருந்திடலாம் அன்றோ!” என்று அச்சிறுவனும் குழந்தைத்தனத்துடன் எடுத்துரைத்தான்.

இச்சிறுவனின் விடா முயற்சியையும், இடைவிடாத அருணாசலச் சிந்தனையையும் கண்டு மகிழ்ந்த அத்தாய் அருணாசல கிரிவல மகிமையையும் சிறிது சிறிதாக எடுத்துரைக்கத் தொடங்கினாள்.

அப்போதெல்லாம் குறுநில மன்னர் ஆட்சிகள் தழைத்த காலம். சிறுவன் வாழ்ந்த பகுதியைச் சார்ந்த சேது மன்னருடைய குழந்தைக்கு “உறங்கா நோய்” பற்றிக் கொண்டது. அதாவது பல நாட்களாக மன்னனின் குழந்தை உறங்காமையால் குழந்தையின் கழுத்தும், வயிறும் தொங்கி வீங்கலாயிற்று. அரண்மனை வைத்தியரோ, “இன்னும் இரண்டு நாட்களில் குழந்தை உறங்கா விட்டால் குழந்தை நச்சுப் பற்றால் மடிந்து விடும்!” என்று அச்சுறுத்தினார்.

“உறங்காப் பிள்ளை உறங்கியதே!”

அரண்மனை ஆஸ்தான ஜோதிடரோ “சுக போகச் சுக்கிர சக்திகள் குழந்தைக்கு மங்கி வருகின்றமையால், குழந்தையின் ஆயுள் பாவம் ஒரு வாரத்திற்கே தங்கும்!” என உரைத்திடவே, மன்னர் குடும்பம் வேதனையில் ஆழ்ந்தது. நாடு முழுவதும் மன்னரின் குழந்தை பற்றிய செய்தி பரவிடவே, இச்சிறுவன் வாழ்ந்த இருந்த பெரியோர்கள் மன்னரின் தூதுவர்களிடம் தாலாட்டு வீரனின் பெருமையைப் பற்றி உரைத்திடவே, இந்த இனிய செய்தி மன்னனை அடைந்தது.

அந்த நாளின் பகலிலேயே, அழகிய பல்லக்குடன் பற்பலக் குதிரை வீரர்களும் தாலாட்டு வீரனின் ஊருக்கு விரைந்தனர். அவர்களுடன் அரண்மனைக்கு வந்த, ஒன்பது வயது பாலகனாய்ப் பரிமளித்த சிறுவன், மன்னனின் குழந்தையை உற்று நோக்கினான். ஜோதிடர், வைத்தியரின் அணுகுமுறைகளைக் கேட்டு அவர்களுடைய பூஜா பலன்களின் தன்மை போதாததைச் சுட்டிக் காட்டி உரிமையுடன் கண்டித்த சிறுவன் அவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றினான்.

அவையோர் முன்னரேயே தொட்டிலில் குழந்தையைத் தவழ விட்ட தாலாட்டு வீரன், அற்புதமான தாலாட்டுப் பண்களைப் பாடிடவே, சாந்தமான முகத்துடன் குழந்தை தூங்கலாயிற்று. மன்னரும் அவையவரும், மக்களும் மனம் மகிழ்ந்தனர். இத்தனை நாள் உறங்காமைக்குச் சேர்த்து வைத்து நன்கு உறங்கிய இளவரசுக் குழந்தை மறுநால் அமைதியுடன் கண் விழித்து முதன் முதலாகத் தாய்ப் பால் அருந்திட்டது. அதனுடன் சிறுவனும் விளையாடி, மீண்டும் தாலாட்டுப் பாடல்களைப் பாடி உறங்க வைத்தான்.

அருணையை அடைதலே யாம் கோரும் பரிசு!

மன்னன் மனம் மகிழ்ந்து மகத்தான பரிசுகளையும் கிராமம், தோட்டம், பல்லக்கு, குதிரைகள், அரண்மனை போன்ற வீடு அனைத்தையும் அளித்திட முன் வந்த போது, சிறுவன் அவற்றை மறுதளித்து, தன்னை அருணாசலத்திடம் கொண்டு சேர்க்கும்படி வேண்டிக் கொண்டான்.

மன்னர் அனுப்பியப் பாதுகாப்புக் குழுவுடன் திருஅண்ணாமலை பூமியை வந்தடைந்த சிறுவன், அருணாசல தரிசனம் தெரிய ஆரம்பிக்கின்ற பகுதியிலேயே மன்னர் குழாம்தனை நன்றி செல்லுத்தித் திருப்பி அனுப்பி விட்டு, அங்கிருந்து  அண்ணாமலையை நோக்கி நடக்கலானான். அதன் பிறகு அருணாசலக் கிரிவலத்தைத் தொடங்கிய சிறுவன் தாலாட்டுப் பாணர் சித்தராய்ப் புகழ் பெற்று இறுதியில் பூவுடலை உதிர்த்து ஜோதியாகி அருணாசல ஜோதிக்குள் ஐக்யமான தினம் வரை எப்போதும் கிரிவலச் சுற்றில்தான் பரிணமித்தார்.

இச்சிறுவனின் மகிமை நாடெங்கும் பரவிடவே, கிரிவல வளாகத்தைச் சுற்றி இருந்த கிராமங்கள் அனைத்திலும், கிராமங்கள் வீட்டு வாசலிலும், எண்ணற்ற மரங்களிலும், மரத் தொட்டில்கள், தூளிகள், கட்டப் பெற்று, தாலாட்டுப் பாணர் சித்தரின் வருகைக்காக அனைவரும் காத்திருப்பர். எப்போதும் தாலாட்டுக் கீதங்களை ஓதி குழந்தைகளை உறங்க வைத்து அமைதிக் கதிர்களைப் பூத்தளித்த சித்தர்பிரானைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் அருணாசலத்திற்கு வந்து திரண்டனர்.

பெரும்பாலும் மாத சிவராத்திரி போன்ற தினங்களில், ஆயிரக்கணக்கான குழந்தைகளைத் தன் மடியிலும், கைகளிலும் ஏந்தியும், ஆங்காங்கே மரங்களில் கட்டப் பெற்றிருந்த தொட்டில்களில் வைத்தும் தாலாட்டுப் பாடல்களைப் பாடிய சித்தரின் பேரருளைத் துய்த்திட, மாதந்தோறும் இவருடைய அருணாசலக் கிரிவலக் காலத்தில் மாதசிவராத்திரி நாளில் திருஅண்ணாமலையை வந்தடைந்து, சத்சங்கமாக, தற்போதைய பௌர்ணமி கிரிவலம் போல், லட்சக்கணக்கான மக்கள், அருணாசல மலைவல வழிபாட்டைக் கொண்டனர்.

யோகசயனத்தை உய்ந்து உய்த்தவர்

அக்காலத்தில் எப்போதும் கொம்பு வாத்தியத்தை ஓதியவாறு திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்த ஓர் உத்தமர், என்றுமே உறங்காது எவ்வித ஓய்வுமின்றி யோகப் பூர்வமாகத் தொடர்ந்து, அருணாசலத்தைக் கிரிவலம் வந்தவாறு இருந்தார். திருஅண்ணாமலைக் கிரிவலத்தில், இவர் ஓரிடத்தில் அமர்ந்து கொம்பு வாத்தியத்தை ஊதுவதைக் கண்ட சிறுவன், அவரருகே சென்று, அருகில் ஒரு தொட்டிலில் கிடந்த குழந்தையைத் தாலாட்டி உறங்க வைத்திடுவதற்காகத் தாலாட்டுப் பண்களைப் பாடிடவே, இதைக் கேட்ட அந்த உத்தமரும் பன்னெடுங்காலத்திற்குப் பிறகு, ஆழ்ந்த (யோக) நித்திரை கொண்டார்.

அதுவரையில் அந்த யோகி சுவாமி படுத்துறங்கி எவரும் கண்டதில்லை ஆதலால், அவருடைய சீடர்கள் “சுவாமி! எழுந்திருங்கள், சுவாமி, எழுந்திருங்கள்!” என்று எழுப்ப முயன்ற போது, சிறுவன் அவர்களிடம், “இது சாதாரண மனித வகை உறக்கமல்ல! உத்தம யோக நிலையில், பிறலோகப் பயணங்களில் துய்க்கின்ற நிலையாகும். யோக சயனம் பூண்ட இந்த யோகி சுவாமிகள் ஒரு வாரம் கழித்து, அடுத்த வெள்ளிக்கிழமை, காலையில் சுக்கிர ஹோரை நேரத்தில் தானே எழுந்திருப்பார்! அதுவரையில் இவருடைய யோக சயனத்தைக் களைந்து எழுப்புதல் வேண்டாம். அருணாசலத்தில் இவருடைய இத்தகைய யோக நிலைச் சயனம் அகில உலகிற்கு நன்மை பயக்கும்!” என்று சொல்லிச் சென்றதைக் கண்டு, பலரும் அதிசயித்து வியந்தனர்.

அக்காலத்தில் இத்தகைய உத்தமர்களின் அருள் வாக்கியங்களை மதித்து நடக்கும் உத்தமத் தெய்வீக மாண்பு சமுதாயத்தில் நிலவியமையால், சமுதாயத்தில் சாந்தம் கொழித்தது. தற்போதோ, இத்தகைய யோக நிலையை வெளிப்படையாக யோகியர் எவரும் பூண்டால், உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து, இருதய அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்று விடுவார்கள். இதனால்தான் கலியுகத்தில் சித்தர்களும், மஹரிஷிகளும் உத்தமச் சத்குரு வடிவில் சமுதாயத்தில் மக்கள் இடையே வந்துறைந்தாலும், அவர்களுடைய யோகாப்யாசங்கள் எவையுமே வெளிப்படையாக அமைந்திரா. ஆழ்ந்த நம்பபிக்கை உடையோர்க்கு மட்டும் இத்தகைய யோக விளக்கங்கள் நல் அனுபூதிகளாக அளிக்கப் பெறும். பாத்திரம் அறிந்துதானே பிச்சை இடுதல் வேண்டும்!

உறக்கத்தில் ஒடுங்கிய நோய்கள்

இவ்வாறு, கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து அருணாசலத்தைக் கிரிவலம் வந்து, கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான தாலாட்டுப் பாடல்களைப் பாடிக் குழந்தைகளை தூங்க வைத்ததுடன், உறக்க, யோக, சயன நிலையில், பல குழந்தைகளின் நோய்ப் பிணிகளையும் தீர்த்தும் அருட்பணி ஆற்றினார். இவருடைய அருட்பெருங்குணத்தால், பேசாத ஊமைக் குழந்தைகளும் பேசின. தோல் நோய் வகைகளால் வாடிய குழந்தைகள் உறக்கத்திற்குப் பின், உற்சாகத்தோடு நோய் நிவாரணத்துடன் எழுந்தன.

இவ்வாறாகப் பல அற்புதங்களை சின்னஞ் சிறுவராகவே நிகழ்த்தத் தொடங்கிய சித்தருக்குத் ‘தாலாட்டுப் பாணர் சித்தர்’ என்ற பெயரை அளித்து மக்கள் போற்றலாயினர்.

யோகப் புலம் உரைத்தச் செம்மல்

18 வயது நிறைவடைவதற்கு முன்னரேயே, லட்சக்கணக்கான கிரிவல மக்களை, மாதச் சிவராத்திரிக்காக அருணாசலப் புனித பூமிக்கு ஈர்க்கும் தெய்வீகச் சக்திகளைப் பெற்ற சித்புருஷர், அற்புதமான அருணாசலத் துதித் தாலாட்டுப் பாடல்களைப். பாடியதோடு மட்டுமல்லாது, தன்னை நாடி வந்தவர்களுக்கும், கிரிவலம் வந்த லட்சக்கணக்கான மக்களுக்கும், அவ்வப்போது அருளுரைகள் நிகழ்த்தி, “உறக்கம்” என்பதற்கான சத்தியப் பொருள், உறக்கத்தின் யோகத் தன்மைகள், தியான குணங்கள், உறக்கத்தில் உண்டாகும் பல்வகை யோக நிலைகள், உறக்க நிலையிலும் உத்தம நற்காரியங்களை ஆற்றும்  வழிமுறைகள், பிற மண்டல வானியல் யாத்திரைகள் போன்று அது வரையில் பலரும் அறிந்திடாத உறக்கம் பற்றிய எண்ணற்ற யோக, தேவ இரகசியங்களைப் பலருக்கும் உணர்த்தினார். இவர் உரைத்த “உறக்க நிலை யோக” விளக்கங்கள்தாம் அகில உலகெங்கும் இன்றும் பரவி, நிரவி உள்ளன.

ஒரு நாள், ஒரு கைக் குழந்தையுடன் தாலாட்டுப் பாணர் சித்தரிடம் வந்த ஒரு பெண்மணி, தன் குழந்தை பன்னெடுங்காலம் உறங்காது அவதியுறுவதாகத் தெரிவித்தார். முதலில் அக்குழந்தையைத் தொட்டிலில் இட்டுச் சில தாலாட்டுப் பாடல்களைப் பாடியும், அக்குழந்தை உறங்காது கொட்டக் கொட்டக் கண்களை மூடாது விளையாடிக் கொண்டிருந்தது கண்டு அவர் அதிசயித்தார். பின் அக்குழந்தையைத் தன் மடியில் இட்டு, மேலும் பல பாடல்களைப் பாடியும், அவற்றை எல்லாம் கேட்டு, அக்குழந்தை ரசித்துப் புன்னகையையே பொன்னகையாகப் பூட்டிப் பூரித்ததே தவிர, சற்றும் உறங்குவதாக இல்லை.

உறக்கத்தை வென்ற பிள்ளை!

மேலும், அக்குழந்தையின் சிரிப்போ சாதாரண மனிதச் சிரிப்புப் போலும் தெரியவில்லை.  என்னே தெய்வீகச் சிரிப்பு! இதைக் கண்ணுற்ற சித்தர், ஆழந்த பக்தி  நிறைந்த அன்பாரந்த தெய்வீகப் பண்புடன் அக்குழந்தையைக் கரங்களில் ஏந்தியவாறு கிரிவலம்  வரத் தொடங்கிடவே, குழந்தையின் தாயும் தூங்கிப் பல காலமான தன் குழந்தையின் உடல் நலத்தைப் பற்றிச் சித்தர்பிரானிடம் மிகவும் வருத்தத்துடன் பேசினார்.

தாலாட்டுப் பாணர் சித்தரோ, “இது என்ன இறைத் திருவிளையாடலோ!” என எண்ணி, ஒன்றும் புலப்படாதவராய், ஒன்றும் பேசிடாது, மௌனத்துடன் குழந்தையைத் தாங்கியவாறே கிரிவலத்தில் நடக்கலானார். தானறிந்த அனைத்துத் தாலாட்டுப் பாடல்களைப் பாடியும், அத்தனை ஆயிரம் பாடல்களும் இரண்டு மணி நேரத்திற்குள் பாடப் பெற்றதைக் கண்ணுற்றச் சித்தர், “என்ன இது காலத்தைக் கடந்த கோலமாக உள்ளதே!” என எண்ணி மௌனத்தில் ஆழ்ந்தார்.

இரண்டு மணி நேரத்தில், பல்வகை ராகத் துதிகளுடன் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடுவது சாத்தியமில்லையே என்னே விந்தை இது! என எதையும் அறிய முடியாத நிலையிலும், விசித்திரமாகவும், தன் கிரிவலத்தைத் தொடர்ந்தார். இதுவரையில் தன் வாழ்க்கையில் தன் தாலாட்டுப் பாடல்களைக் கேட்டு அனைத்துக் குழந்தைகளும் உறங்கி வந்திட, இக்குழந்தையின் வித்தியாசமான போக்கைக் கண்டும் சித்தர் பெரிதும் வியப்படைந்தார்.

ஏனிந்த லீலை ஐயா ஏழை என்னிடத்தில்!

“இது என்ன இறைத் திருவிளையாடலோ! இதனால் இறைவன் புகட்டும் பாடம் யாதோ? தன்னுள் ஏதேனும் கர்வம் புகுந்துள்ளதோ? இதனை இறைவன் களைந்திட விழைகின்றானோ! அல்லது தன் பூமி வாழக்காலம் நிறைவுறும் தருணம் வந்ததோ?” என்று பல வகைகளிலும் எண்ணியபடியே, குழந்தையைத் தாங்கியவாறு, ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் சந்நதி அருகே வந்து, குழந்தையைப் பெருமாளின் சன்னதியில் படுக்க வைத்து, மீண்டும் தாலாட்டுப் பாடல்களைப் பாடிடவே… என்ன ஆச்சரியம்! குழந்தையும், தாயும் மறைந்தனர். ஆங்கே…..
இறைவனும், இறைவியும் பார்வதி பரமேஸ்வரராக இணைந்து எழுந்தருளி சித்தர்பிரானுக்குக் காட்சி தந்து அருளினர்.

மாத சிவராத்திரி கிரிவல பலன்கள்!

குழந்தைகள் மெலிந்திருத்தல், மனம் பலவீனமாக இருத்தல்,

“ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு” என்று பன்னெடுங் காலத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள சந்ததியை விருத்தி செய்ய இயலுமா என்று அச்சத்துடன் வாழ்வோரைத் தொற்றி இருக்கும் சந்ததி தோஷங்கள்…

ஒரு பிள்ளை அல்லது ஒரு பெண்ணை மட்டும் பெற்றவர்கள்…

ஒன்றுக்கு மேல் பிள்ளை வேண்டாம் என முடிவு செய்து கொண்டவர்கள் (இது தவறான அணுகுமுறை, ஆன்மீகத்திற்கு ஒவ்வாதது)

அடுத்த குழந்தைப் பிறப்பைத் தவிர்த்தார்கள் போன்றவற்றில் எழும் கர்ம வினைகள் தீர நற்பாரிகாரங்களை அளிக்க வல்ல மாத சிவராத்திரி கிரிவல வழிபாடு! ஆனால் கருச் சிதைவு, கருத் தடைக்குப் பரிகாரங்கள் பெறுதல் மிகவும் கடினமே!

குழந்தை நல மருத்துவ நிபுணர்கள், குழந்தைப் பேறு மருத்துவர்கள், நல்ல திறமையுடன் தம் மருத்துவத் துறையில் பிரகாசிக்க உதவும் மாதச் சிவராத்திரி கிரிவல நாள். ஒரே ஒரு ஆண் அல்லது பெண் சந்ததியுடன் மட்டும் இருக்கின்ற தம்பதிகள், தங்கள் சந்ததி நன்கு தழைத்திடத் தரணி பந்துப் பித்ருக்களின் ஆசிகளை வேண்டி கிரிவலம் ஆற்ற வேண்டிய மாத சிவராத்திரி நன்னாள்.

அம்பிகையும் ஈஸ்வரனும் தாயாக, குழந்தையாக சித்தருடன் கிரிவலம் வந்த நன்னாள் ஆதலால், அம்பாள் உபாசகர்கள் தங்கள் பூஜைகளில் மேன்மை பெற உதவும் மகத்தான மாத சிவராத்திரி கிரிவலம்.

குடும்பத்திலும், தொழிலிலும், அலுவலகத்திலும் எத்தனையோ அடர்ந்த பொறுப்புகள் இருந்திட, குழந்தைத்தனமாக வெகுளியாக இருக்கின்ற தன் கணவன், பிள்ளைகள் பிறரிடம் ஏமாந்து விடாது தற்காத்துக் கொள்ளவும், நல்ல பொறுப்புணர்ச்சிகளைப் பெறவும் இந்த மாத கிரிவலத்தை ஏற்று நடத்திட வேண்டும்.

பொதுவாக, தத்து எடுத்துக் கொண்டவர்களும், தத்தாக வந்த பெண்கள், ஆண்களுக்கு ஏற்படும் சந்ததி மாற்றுக் குறைபாடுகள் நீங்க கிரிவலம் வர வேண்டிய நாள்.

பிள்ளைப் பாசத்திற்கு அடிமைப்பட்ட பெற்றோர்கள் ஒரு புறம், பெற்ற பிள்ளையோ தன் மனைவியின் பேச்சைக் கேட்டுப் பெற்றோர்களை உதாசீனம் செய்வது மறுபுறம் .. இந்நிலையில் மனம் பதறி அழுகின்ற பெற்றோர்களின் மனத் துயரங்கள் நீங்க, நல்வழிகளை அளிக்கும் கிரிவலம்.

பெற்றோர்களின் முழு சம்மதமின்றி, தானே முடிவு செய்து கொண்ட திருமணத்தாலும், பெற்றோர்களைப் பிரிந்து வாழும் பெண் அல்லது பிள்ளைகளைப் பற்றிப் பெரிதும் கவலை தோய வாழும் பிள்ளைகள், பெண்கள், பெற்றோர்களும் உண்டு. இவர்களுக்கும் நல்ல மன நிவாரணத்தைப் பெற்றுத் தரும் கிரிவலம்.

“தாலாட்டு” எனில், ஆன்மீக ரீதியான அர்த்தத்தில், “ஆதிமூலமான மூலதார மூலத்தைப் பற்றிக் கொண்டு, ஆன்மப் பூர்வமாக, நிறைவுடன் இயங்குவது” எனப் பொருளாகும்.

மூலம் என்பது, குழந்தை உறங்குவதற்கான தாலாட்டுத் தூளி கட்டப்படுவதில், தூளியைத் தாங்கும் மையப் பகுதி மற்றும் தூளியைத் தாங்கும் மரக்கிளை அல்லது உச்சி மேல் வளையப் பகுதி, தூளித் துணியின் மையம், தொட்டிலை ஆட்ட உதவும் புவி ஈர்ப்பு விசை, காற்று விதானம் போன்ற பல யோகமய மைய சக்திகளைக் கூட்டாகக் கொண்டதாகும்.

மேலும் “பிள்ளையைத் தொட்டிலில் இட்டு ஆட்டுதல்” என்பது யோகப் பூர்வமான பயிற்சியாகும். தாலாட்டுத் தூளியானது, இது தொட்டிற் பிள்ளைகளுக்கு முதுகு மையம், கபால மையங்களுக்கு நல்ல பிராண யோக சக்திகளை அளிக்கின்றது. தாலாட்டுத் தொட்டிலினுள், “த்ரயுகி பால சுந்தர சக்திகள்” தாலாட்டு அசைவுகளில், சலனங்களில் யோகமைய ஆகர்ஷண சக்திகளாக உருவாகின்றன. இது பண்டைய காலத்தில் பிரசித்தி பெற்ற “பீதாம்பர யோக” முறையைச் சார்ந்ததாகும். இதனால் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்ய ஆகர்ஷண சக்திகளும் நன்கு வளமுடன் வந்து பதிகின்றன. இத்தகைய யோகமய விளக்கங்களை அளித்தவரே தாலாட்டுப் பாணர் சித்தர் ஆவார்.

வளரும் குழந்தைகளுக்குத் தாலாட்டுத் தூளி மிகவும் அத்யாவசியமானது, இதில் கிளைக்கும் “சலனபாந்தவப் புவியீர்ப்பு விசை யோகம்”, குழந்தையின் கபால வளர்ச்சிக்கும், மூளைத் திறனுக்கும் மிக மிக முக்கியமானது., இரட்டை மண்டை, கோணல் மண்டை, அபாயகரமான முன் மண்டைக் கபாளப் பிளவு போன்றவை வராமல் காப்பதற்கு தாலாட்டுத் தொட்டிலின் யோக சக்தித் திறன்கள் உதவும். இத்தகையத் தாலாட்டு யோகப் பலன்கள் பலவற்றையும், “தாலாட்டுப் பாணர் சித்தர்” இம்மாத அருணாசல மாத சிவராத்திரி கிரிவலப் பலன்களாக அளிக்கின்றார்.

தம்முடைய பதினெட்டாவது வயதில் அருணாசலத்தில், கிரிவல வளாகத்தில் தாயாகவும், சேயாகவும் வந்து சிவக் கூத்தினை நிறைவேற்றி, அருள்புரிந்த ஸ்ரீபார்வதி, ஸ்ரீபரமேஸ்வர தரிசனத்தைப் பெற்ற உடனேயே, அருணாசல மலைத் தரிசனங்களுள் ஒன்றான “தாலாட்டு யோகக் கூட்டுத் தரிசனத்தில்”, தாலாட்டுப் பாணர் சித்தர் ஜோதி மயமாய் ஐக்யமடைந்தார்.

இவ்வாறு “சிவ பார்வதி தரிசனம்” பெற்றவுடன், மலையின் கண் மாமறைப் பொலிவுடன் மறைந்த அருணாசல மலை வளாகத்தில் இருந்தும், மலையின் பல பகுதிகளிலும், இம்மாத சிவராத்திரிக் கிரிவலத்தில் தாலாட்டுப் பண்களைக் கேட்கும் பாக்கியம் அல்லது தொட்டிற் குழந்தையின் தரிசனம் பெறுதல் வாழ்வில் அபரிமிதமான நன்மைகளைச் சுரந்து அருள் பயக்கும். வாழ்வில் நல்மாறுதல்களையும் பெற்றுத் தரும். இச்சித்தர்பிரான் இவ்வகையில் திருஅண்ணாமலையில் ஜோதிப் பூர்வம் கொண்ட நாளே ஆடி மாத சிவராத்திரி நாளாகும்.

திருத்தங்கல் விஷ்ணுபதி

ஓம் நமோ நாராயணாய ஸ்ரீமத் ராமானுஜாய நம:
திருமால் நெறி வாழி! திருத்தொண்டர் செயல் வாழி!

சிவனும், விஷ்ணுவும் பாறை மீது கோயில் கொண்டருள்வதால் திருத்தங்கல் கிரிவலம் சிவ-விஷ்ணு மூர்த்திகளின் அனுகிரக நல்வரங்களை ஒன்றாய்த் திரட்டித் தரும் அற்புதக் கிரிவல பூஜையாகின்றது.

விஷ்ணுபதிப் புண்ய காலத் தலம் திருத்தங்கல் ஸ்ரீசெங்கமலத் தாயார் சமேத ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் ஆலயம் (மதுரை – விருதுநகர் – திருத்தங்கல் – சிவகாசி பஸ் மார்கம்)

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரும் விஷ்ணுபதிப் புண்ணிய காலப் பூஜையை சகல வைணவத் தலங்களிலும் கொண்டாடுதல் சிறப்புடையது.

அர்ச்சுன நதி திருத்தங்கல்

திருத்தங்கல் தலத்தில் மூலத்தானத்தில் துலங்கும் “அநிருத்தர் – உஷ” தம்பதிகளுக்குப் பட்டு வஸ்திரமும், ஒன்பது கஜப் புடவையும் சார்த்தி, மெட்டி, வளையல்கள், பொன் மாங்கல்யம் போன்ற மங்களப் பொருட்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வழிபடுதல் நல்வரப் பிரார்த்தனையாகும்.

கலியுகத்தில், மக்கள் மூன்று விதமான தோஷங்களுக்கு – பேராசை, உழைக்காமல் சம்பாதிக்கும் எண்ணம், பிறர் மனை தீண்டல் அல்லது முறையற்ற காம எண்ணங்கள் போன்ற அதர்மச் செயல்களுக்கு – ஆளாகி, ஆயுள் சக்திகளுக்கு பங்கங்களைத் தேடிக் கொள்வர் என தீர்க தரிசனமாகக் கண்ட பிருகு மஹரிஷி, இவற்றுக்குத் தக்கப் பரிகாரங்களை வேண்டி, இங்கு அங்கப் பிரதட்சிண வழிபாடுகளை ஆற்றி, “பூசுரபத யோக தியானத்தில்” அமர்ந்து, பெருமாளின் நல்வரங்களைப் பெற்றுத் தரும் நிலையில், மூலத்தானத்தில், பெருமாளைச் சேவித்தமர்ந்த நிலையில் துலங்குகின்றார்.

நாள்தோறும் குறைந்தது 12 திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை ஓதுதல், ஐந்து மணி நேரமேனும் தொடர்ந்து
“ராம, ராம, கிருஷ்ண, கிருஷ்ண, நாராயணா! நாராயணா நின்ற நாராயணா!
“கிருஷ்ண, கிருஷ்ண, ராம, ராம, நாராயணா! நாராயணா நின்ற நாராயணா!
ராம, கிருஷ்ண, கிருஷ்ண ராம, நாராயணா! நாராயணா நின்ற நாராயணா!” – என மூவகைப் பெருமாள் நாமங்களை ஆயிரக் கணக்கில் நின்றும், அமர்ந்தும், நகர்ந்தும், ஆடியும், பாடியும் மலைவலம் வருதல்,

தினந்தோறும் 12 பெருமாள் ஆலயக் கோபுரத் கலசங்களை தரிசித்தல், தினமும் விஷ்ணு சகஸ்ர நாமத் துதிகளை (1008) ஓதுதல், நிதமும் பசு, காக்கை, ஏழை மனிதர்களுக்கு உணவிடல் இவற்றை முறையாக ஆற்றி வருவதானது மனிதனை நல்வழிபடுத்தும், இல்லையேல், பாசம், கோபம், விரோதம், காமம், பகைமைக்குக் கலியுக மக்கள் ஆட்படுவர். பழைய வினைகளுடன், கலியுகத்தில் தினந்தோறும் மனிதன் செய்யும் பாவ வினைகளின் விளைவுகளாலும் கலியுக மனிதனின் ஆயுள்காரக சக்திகள் பாதிக்கப்படும் என்பதைத் தீர்கத் தரிசனமாகத் தெளிந்து, உணர்ந்த மார்கண்டேய மஹரிஷியும்,

பாஸ்கர தீர்த்தம் திருத்தங்கல்

இங்கு பத்மாசனமிட்ட நிலையிலேயே கைகளை ஊன்றி, ஊன்றி, சம்மணப் பிரதட்சிணம் ஆற்றி, ஆலயத்தை குந்திப் பிரதட்சிணமாக வலம் வந்து, கலியுக மக்களின் வல்வினைகளுக்குத் தக்கப் பரிகாரங்களைப் பெற்றுத் தரும் தலங்களில் ஒன்றாகத் திருத்தங்கலை உணர்வித்தவாறு, இங்கு மூலத்தானத்தில் அமர்ந்து பெருமாளைச் சேவித்த யோக தியான நிலையில் துலங்குகின்றார்.

“ஸ்ரீநாராயணப் பெருமாள்” என்ற நாமத்தினும், “ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள்” என்ற பெயர் மிகவும் விசேஷமான அம்சங்களைப் பூண்டுக் கலியுகத்தில் அருள்கின்றது.

பக்தியும், மங்களமும், சுப சக்திகளும், செல்வமும், கல்வியும், ஆரோக்கியமும் நிலைத்து நின்று அருள்கின்ற மூர்த்தியே “நின்ற நிலைப் பெருமாளாக” உயர்ந்து நின்ற கோலத்தில் “செங்கமலத் தாயார்” என்ற திருநாமத்துடன், மிக மிக அபூர்வமாக அருளும் ஸ்ரீமகாலட்சுமித் தாயாருடன், அனைத்து யுகங்களிலும் “திருத்தங்கல்” செய்து அருள்வதால், திருத்தங்கால், திருத்தங்கல், திருத்தண்கால் – என்ற பெயர்களைச் சூடி இவ்வரிய வைணவத் தலம் பிரகாசிக்கின்றது.

சிவா -விஷ்ணு சக்தித் தலம்

உண்மையில், சிவா – விஷ்ணு சக்திகள் ஒன்று கூடி (தங்கி) அகிலத்திற்கே அருளும் தலங்கள் ஒரு சிலவே, இதிலும் “நின்ற நாராயணப் பெருமாளாக” அருள்வது அரிதலும் அரிதாம், சிவாலயமும், பெருமாள் ஆலயமும் அடுத்தடுத்து அமைந்து, அதியற்புதமான சிவா – விஷ்ணு தெய்வீகச் சக்திகள் இணைந்து பிரகாசிக்கும் மகத்தான (சிறு) மலைத் தலம். பெருமாளுடைய பல அவதாரங்களின் அனுபூதிகளும், திருவிளையாடல்களும், புராண வைபவங்களும் கொழித்து அருளும் திவ்யமான திருமால் தலம்.

ஒவ்வொரு தலமும் மூர்த்தி, தீர்த்தம், தலம் நிறைந்தருளும் பாங்கில், சுயம்பாய், அர்ச்சாவதாரமாய், தெய்வ மூர்த்தியே தாமே அனுபூதி கொண்டு எழுந்தருள்தல் தேவாதி தேவ மூர்த்திகளின் தீர்த்தம் தோன்றப் பெற்று அமைதல், புராண அனுபூதிகள் பலவும் நிறைவேறுதல் ஆகிய மூன்று சிறப்புகள் பாங்குடன் வந்தமைகின்ற அரிய தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

திருத்தங்கல்

நாம் பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் எடுத்துரைத்து வருவது போல, எத்தனையோ கோடி சதுர் யுகங்கள், சதுர் கோடித் திரோதா யுகம், சதுர் கோடிக் கிருத யுகம், சதுர் கோடித் துவாபர யுகம், சதுர் கோடிக் கலியுகங்கள் வந்து சென்று மறைந்துள்ளமையால், ஒவ்வொரு தலத்தின் பின்னணியிலும் ஆயிரமாயிரம் யுகங்களின் புராண வைபவங்கள், இறை லீலைகள், மாமறைத் திருவிளையாடல்கள், அனுபூதிகள் நிறைந்திருக்கும். இவற்றுள் ஒரு சில மட்டுமே இதுகாறும் பல தலங்களிலும் வெளி வந்துள்ளன.

நமக்குக் கிட்டியுள்ள தல புராண அனுபூதிகள் ஒரு சிலவே! இவை தவிர பல்லாயிரக் கணக்கான புராண அனுபூதிகள் அந்தந்தத் தலத்தில் நிகழ்ந்து மறைந்துள்ளன. விஷ்ணுபதி போல, அந்தந்தத் தல அனுபூதிச் சிறப்புகளை, விளக்கங்களை அந்தந்தப் புராண வைபவங்களில் பங்கு பெற்ற சத்குருமார்களே, இறையாணையாக மீண்டும் பூவுலகத்தில் பல மானுட வடிவுகளிலும் தோன்றி, கடந்த தரிசனமாகப் பல யுகப் புராண வைபவங்களில் நேரிலேயே கண்டவர்கள் ஆதலின், சத்குரு அளிக்கும் ஆலயப் புராண விளக்கங்கள் யாவும் தாமே உய்த்துணர்ந்த பழமையான, தொன்மையான இறை அனுபூதிகள் தாம் என அறிக! இதனால் தான் “கடவுளைக் காணும் முன், கடவுளைக் கண்டவர்களைக் காண்!” எனும் இறைவனுக்கே உவப்பான சித்தர்களின் அருள் வாக்கியம் தோன்றியது. ஆழ்வாராதியர், நாயன்மார்களின் தரிசனம், ஜீவாலய, ஜீவசமாதி, குரு மூர்த்த, பிருந்தாவன, அதிஷ்டான வழிபாடுகளும் இவ்வகைத்தே!

திருமண பாக்ய நல்வரந் தரும் திருமாலப்பன்!

இவ்வகையில், திருத்தங்கல் தலப் புராண அனுபூதிகள் பலவற்றையும் பலரும் அறிந்திருப்பர். ஆனால், பலரும் அறிந்திரா, காலப் போக்கில் மறைந்த இத்தலத்திற்கான எண்ணற்றப் புராண அனுபூதிகளும் உண்டு.

மகாலட்சுமியின் சிறப்பினை, திருமகள் வழிபாட்டினை உலகிற்கு உணர்த்துவதற்காக, இத்தலத்தில் நெல்லி மரத்தடியில் தவம் புரிந்த திருமகளுக்குக் காட்சிக் கொடுத்து, பெருமாள் மணம் புரிந்து, மணக் கோலத்தோடு தங்கியத் தலமாதலின் “திருமகளோடு நின்ற திருமாலின் திருவருளை” மிகவும் எளிமையாகச் சுரந்து தரும் தலம்.

பெருமாளுக்கும், தாயாருக்கும் 108 நெல்லிக் கனிகளாலான மாலை சார்த்தி புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், நெல்லிக்காய் ஊறுகாயுடன் தயிரன்னம், கேசரி, லட்டு, திண்டு தோசை, அதிரசம் படைத்துத் தானம் அளித்தலால், எத்தகையத் திருமணத் தோஷங்களுக்கும் நிவர்த்திகளைப் பெற்றுத் தரவல்ல மகத்தான பெருமாள் தலம்.

அமிர்தத்தைத் தாங்கி வந்த “கருடாழ்வார்” சற்று சிரமப் பரிகாரத்திற்கெனத் தங்கிய தலமாதலாலும், நெல்லிகாய்க்கு அமிர்த சக்தி இயற்கையாகவே மிளிரும் தாவரப் படைப்புத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். அமிர்த சக்தித் தலம் என்பதால், உற்சவருக்கு மலைத் தேன் அபிஷேகம், தேன் கலந்த சர்க்கரைப் பொங்கல், பாயசம், தேனில் ஊறிய நெல்லிக்காயைப் படைத்துத் தானம் அளித்தலால்,

ஸ்ரீகருடாழ்வார் திருத்தங்கல்

அளவுக்கு மீறிய துன்பங்களால், குறிப்பாக, திருமண வாழ்வில் கணவன் வீட்டு வகையினரால் பலத்தத் துன்பங்கலை அனுபவித்து, “வாழ்க்கை கசக்கிறது” என்று புலம்புவோர், நல்ல தீர்வுகளைப் பெற உதவும் தலம். பகைமையும், அன்பு சக்திகளும் நிறைந்த உலகில், பரிசுத்தமான அன்பால், அமிர்த சக்திகளால் குரோதம், விரோதம், பகைமை போன்றவற்றை வெல்ல முடியும் என்பதை கருடபிரான் கையில் நாக மூர்த்தியைத் தாங்கி, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், மானுடர்களுக்கும், ஏனைய ஜீவன்களுக்கும் உணர்விக்கும் தலம்.

நாக சக்திகளும் வாழ்விற்குத் தேவையே, நாக தோஷங்களை நாகசக்திகள் தான் வெல்ல முடியும் என்பதை கருடாழ்வாரே உணர்த்திடும் அதியற்புதத் தலம்.

நாகங்களை அநாவசியமாக வதைத்தல், நாக பூஜைகளை ஆற்றாது, நாகப் புற்றுகளை இடித்துக் கட்டிடம் கட்டுதல், நல்ல பாம்பைக் கொன்று தக்க பரிகாரப் பூஜைகள் இன்றி அலட்சியமாகத் தூக்கி எறிதல், வாகனங்களில் அடிபடும் நல்ல பாம்புகளை அலட்சியப்படுத்துதல், தக்க பூஜையின்றி நாகங்களைப் புதைத்தல், உணவில் கலப்பட வஸ்துக்களைச் சேர்த்தல், மளிகைச் சாமான்களில், தானியங்களில் கலப்படம், ஹோட்டல் துறைகளில் தூசி, கல், மண்ணுடன் சமைத்தல், கீழே விழுந்தவற்றையும் அள்ளிப் போட்டு, தூசி தும்புகளுடன் சமைத்தல், பரிமாறல், காய்கறிகளை நீரில் போட்டு கால்களில் மிதித்துக் கழுவுதல், சுருக்கென்று பிறரை விஷம் போல் குத்திக் குத்திப் பேசுதல்,

“வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுதல்” என்பதாக ஏற்கனவே பலத்தத் துன்பங்களில் வாடுவோரை, மேன்மேலும் குரூரமாகப் பேசுதல், வதைத்தல், பதவியில், உறவுப் பகைமையில், அரசியலில், பிறர் மேல் விஷம் போல் “கர்வம்” கட்டிப் பழி வாங்கும் காரியங்களைச் செய்தல் …

இவை யாவும் கலியுகத்தில் பெருகும் நாக தோஷங்களின் வகைகளாகும். இவற்றை நாக சக்திகள், நாகப் புற்று வழிபாடுகள் மூலமாகவே தீர்க்க முடியும். மேற்கண்ட வகையில் வன்மையான கர்மங்களைச் சேர்த்துக் கொண்டோர், இத்தலத்தில் சனிக்கிழமை தோறும் ஆலயத்தை நன்கு கழுவி, சத்சங்கமாகப் பலருடன் ஒன்று சேர்ந்து, உழவாரத் திருப்பணிகளை ஆற்றி வரவேண்டும்.

நாகங்களுக்கு மிகவும் ப்ரீதியான பால் வகை உணவுகளைத் தானமாக அளித்திட வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ணர் தம் பேரனாம் அநிருத்தருக்கும், உசைக்கும் திருமணம் செய்வித்தத் திருத்தலம். வானுலகிலும், விண்ணிலும், மண்ணிலும் எத்தனையோ கோடித் திருத்தலங்கள் இருந்திட, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, தம் பேரரின் திருமணத்திற்கு இத்தலத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணமென்ன?

அவதார புருஷர் ஆயினும் மானுட உரு தரித்துச் சமுதாயத்தில் உறைந்து, மக்களிடையே சர்வ சாதாரணமாக உலா வந்தமையால், ஸ்ரீராமரைப் போல அவதார லீலைகளின் இடையே, பல பழிகளைச் சுமந்து, எண்ணற்ற வகையான துன்பங்களைக் கடந்துதான் ஸ்ரீகிருஷ்ணர், தன் பேரருக்குத் திருமணம் செய்விக்க, எத்துனையோ யுகங்களுக்கு முன்னரேயே இத்தலத்தையே அநிருத்தரின் திருமணத் தலமாக நிர்ணயித்திருந்து பலருக்கும் உரைவித்தார். மேலும் தேவாதி தேவர்கள் பலருடைய திருமண வைபவங்கள் நிகழ்ந்த மகத்துவத்தைக் கொண்ட அற்புதமான திருமணப் பிராப்தித் தலமும் இதுவேயாம்.

திருத்தங்கல்

1008 திருமண சுப மங்கள சக்திகள் பூரிக்கும் திருமணப் பிராப்தித் தலம்

இத்தலத்தில்தான், பரிபூரணத் திருமணத்திற்கான, 1008 வகை சுப மங்கள சக்திகள் பூரித்திருக்கும். 108 வகைத் திருமணப் பொருத்த அம்சங்களாகும். தற்காலத்தில் 10 விதமானப் பொருத்தங்களுடன் முடித்து விடுகின்றார்கள். ஜோதிடக் கலையில், சுயநலமின்றித் தியாகப் பூர்வமாகப் பிரகாசித்த உத்தமர்களில் பெரும்பாலானோர் மறைந்து விட்டனர். தற்போது எஞ்சி உள்ளோரின் உத்தமத் தெய்வீக நிலைகளை தற்காலக் கலியுக மானுடச் சமுதாயம் மதியாமையால், அவர்ளும் இலைமறை கனியாகவே சமுதாயத்தில் தம் அருட்புலன்களை வெளிக்காட்டாது உறைகின்றனர்.

சுப லட்சண சக்திகள் பூரிக்கும் சுபமங்களத் தலம்!

திருமணம் மங்களகரமாக நிகழ்வதற்காக 1008 வகைக்கும் மேலான மங்கள முகூர்த்த சக்திகளும் உண்டு. பந்தக் கால் வாஸ்து லட்சண சக்திகள், சுப கால லட்சண குணங்கள், பஞ்ச பூத மங்கள சக்தித் தன்மைகள், சுப மங்கள ஜோதி வாடகங்கள், முகூர்த்தக் கால் முத்து மாம்பழ சக்திகள், மங்கள பட்சண லட்சணங்கள், சுப வடுத் தேங்காய் பூரித சக்திகள், மங்கள புஷ்ப மாதவ சக்திகள், குங்குமாங்க்ருத பூஷண நிறைவுகள், சுப மஞ்சள் மங்களத் தரிப்பு சக்திகள், ஸ்வர்ணத் தாம்பூல சக்திகள் போன்ற 1008 வகையான திருமண முகூர்த்த வைபவ சக்திகள் நிறைந்த தலமாதலின் இங்குத் திருமண வைபவங்களை நிகழ்த்துவதும், சுவாமி மற்றும் தாயார் சன்னதியில் தாலி கட்டும் வைபவத்தை நிறைவேற்றுதலும் பெறுதற்கரிய பாக்யம் ஆகும்.

இவ்வாறு எண்ணற்ற சுப சக்திகள் இத்தலத்தில் பொலியக் காரணம் என்ன? ஸ்ரீமன்நாராயணப் பரம்பொருள், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, திருமகள் போன்ற சகல மூர்த்திகளின் திருவடிகளை, தியான, யோக சக்திகளைத் தாங்கிய தலமாதலின் சமன் பூமியை விடச் சற்றே உயரத்தில் இத்தலம் பொலிகின்றது.

திருத்தங்கல்

சிவா விஷ்ணு சக்திகள் பூரிக்கும் மலைத் தலமாதலின், மூர்த்தி, தீர்த்தம், தலம் விருட்சம், கோபுரம், கலசம், கிரிவலப் பிரகாரம் போன்ற 36 வகை அரிய ஆலய சுப லட்சணங்களைக் கொண்டும் விளங்குவதும் இதன் சிறப்பம்சமாகும். இவ்வாறாக எத்துணையோ புராண வைபவங்களில் இத்தலம் பங்கு பெற்றுள்ளது. இவற்றிற்கான தக்க விளக்கங்கள் அவ்வப்போது தக்க சற்குரு மூலமாக உரைவிக்கப்பெறும்.

திருமணத் தடங்கல்களுக்குக் காரணமான நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், பல வகை களத்ர தோஷங்களுக்கும் நிவர்த்தி தரவல்ல திருமால் தலம்! வாழ்க்கையில், அலுவலகப் பணியில், செய்யும் தொழிலில் சுற்றிலும் பகைமை பூண்டவர்களுடன் வாழ வேண்டிய சூழ்நிலைகளில் இருப்போர்க்குத் தக்க காப்பு சக்திகளை அளிக்க வல்ல வகையில் ஒரு கரத்தில் அமுதக் கலசத்தையும், மறு கரத்தில் மிகவும் அபூர்வமாக நாகத்தையும் தாங்கி, கருடாழ்வார் அருளும் அற்புதத் தலம்!

இறைப் பரம்பொருளாம் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியும், அருண கமல லக்ஷ்மியாம், ஸ்ரீசெங்கமலத் தாயாரும், பேரதிசய அற்புத அர்ச்சாவதாரமாக, நின்ற கோலம் பூண்டு. 1008 வகையான சுபமுகூர்த்தக் கால அமுத சக்திகளைத் திரட்டி, அருள்வரமாய் நல்கும் அற்புதத் தலம்!

ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஸ்ரீநீளா தேவி, ஸ்ரீஜாம்பவதி ஆகிய நான்கு தேவியருடன், பெருமாள் சேவை சாதிக்கும் அரிய காலாமிர்த சக்தித் தலம்!

இப்பூவுலகில் பெறுதற்கரிய மானுடப் பிறவி கொண்டு திருமண வாழ்வைக் கொண்டுள்ள அனைவரும், தம் வாழ்வில் ஒரு முறையேனும், கணவன், மனைவி இருவருமாகச் சேர்ந்து,

திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாளை ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி, ஸ்ரீநீளாதேவி, ஸ்ரீஜாம்பவதி தேவி ஆகிய நான்கு தேவியருடன் சேவை சாதிக்கும் பரம்பொருட் பெம்மானைத் தரிசிக்க வேண்டும். இதற்குக் காரணமும் உண்டு.

கலியுகத்தில், பெரும்பாலும் அனைத்துத் திருமணங்களும், முழுமையான ஜாதகப் பொருத்தங்களுடன் அமைவதில்லை, பரிபூரணமான சுபமுகூர்த்த அம்சங்கள் கூடிய நாளிலும் நிகழ்வதில்லை. ஏனெனில், இவற்றுக்கான “அமிர்த கடிகை” நாழிகையைக் கணிக்க வல்ல உத்தம ஜோதிடர்கள் பெரும்பாலும் மறைந்து விட்டார்கள். எஞ்சியுள்ள இவ்வரிய அமிர்தக் காலக் கடிகைக் கணிப்பை அறிந்தோரையும், சமுதாயத்தில் மக்கள் மதித்துப் போற்றுவது இல்லையாதலின், இவர்களும் “இலைமறை ஞானக் கனியாகவே” சமுதாயத்தில் உறைகின்றனர். சத்குருவிடம் ஆழ்ந்த நம்பிக்கை பூண்டவர்களுக்கே சத்குருவின் மூலமாக இவை உணர்த்தப் பெறுவதாகும்.

மேலும், 1008 வகை சுபமுகூர்த்த அம்ருத நேர சக்திகள் நிறைந்த சுபமங்கள தெய்வீகப் பெருவளாகமாகப் பொலியும் திருத்தங்கல் தலத்தில் ஆற்றும் இறைப் பணிகள், தான தர்மங்கள், கிரிவலம், அபிஷேக ஆராதனைகள், தர்ப்பணப் பூஜைகள்தாம், திருத்தங்கல் தல வழிபாட்டுப் பலன்களாக, காலதோஷங்களுக்கான நற்பரிகாரங்களைப் பெற்றுத் தரும். இதற்காகவே கால சக்திகளின் அமிர்த சக்திகளைத் தந்தருள்வதாகப் பெருமாள் அருணனுடன் அபூர்வ சேவை சாதிக்கும் ஆலயமே திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோயிலாகும்.

ஸ்ரீசெங்கமலத் தாயார் திருத்தங்கல்

கருநெல்லி மூலிகா சக்தித் தலம்!

பண்டைய யுகங்களில், கருநெல்லி மூலிகா சக்திகள் பொலிந்து பிரகாசித்த “அனுமூலி” சக்தித் தலமே திருத்தங்கல், பூமியடி மூலிகா சக்திகள் நிறைந்த தலம். பொதுவாக, குளிர்ச்சியான தன்மை உடையதாக நெல்லி கருதப்படுகிறது. ஆயிரம் நெல்லி மரங்களுக்கு ஒரு கருநெல்லி மரம் என்ற விகிதாசாரத்தில் ஸ்ரீசாகம்பரி தேவியால் படைக்கப் பெறும் கருநெல்லி சக்தித் தலமிது! நல்ல திறனுடைய சாசுவதமான அமிர்த சக்திகள் நிறைந்ததே கருநெல்லி மலை நெல்லிக் கனி கமலாமிர்த சக்திகள் நிறைந்ததும் கருநெல்லி மரமாகும். பண்டைய யுகங்களில் நிறையக் கருநெல்லி மரங்கள் பூரித்த தலமிது. கலியுகத்தில் நீண்ட ஆயுளைத் தரவல்ல “கருநெல்லிக் கனியைத்” தவறாகப் பயன்படுத்துவர் என்பதால் தற்போது இவை இங்கு பூமியில் ஆழ்ந்து விட்டன.

கருநெல்லி மரத்தின் வேர் முதல் நுனி இலை வரை அனைத்துமே தேவ மூலிகா சக்திகளைக் கொண்டவை. பாற்கடலில் திருமகள் கருநெல்லிக் கட்டையில்தாம் தோன்றினார். இதனால்தான் கிணற்று நீரானது அமிர்தமாய் இனித்துச் சுரக்கக் கிணற்றில் கருநெல்லிக் கட்டையை இடுவர்.

தீர்க தரிசன சக்தி மகரிஷிகள் அருளும் தலம்

ஜீவன்களுக்கு நல்ல தீர்கமான ஆயுர் சக்திகளை பகவானின் அனுக்ரக சக்திகளாகப் பெற்றுத் தந்திடத் திருவருட் தியானத்தில் மூலக் கருவறையில் துய்க்கும் பிருகு மகரிஷியும், பக்தியில் துய்த்துப் பரம்பொருட் பணிகளை ஆற்றிட நீண்ட நெடும் ஆயுளைப் பெற்றுத்தர அருளமுதத் தியானத்தில் மூலத்தானத்தில் துய்க்கும் மார்கண்டேய மஹரிஷியும் இருவரும் மூலத்தானத்தில் அமர்ந்து பெருமாளைத் தியானித்த நிலையில்,

பெருமாளின் திருவடி நிழலை அண்டித் துதிக்கும் தலமாகத் திருத்தங்கல் பிரகாசிக்கின்றது. நாக தோஷங்கள் அண்டாதவாறும், நாக தோஷங்களால் ஆயுளுக்குப் பங்கம் ஏற்படாதவாறும் காத்து, நாகதோஷங்களை நிவர்த்திக்கும் தலம் என்பதும், கருடாழ்வார் வலக் கரத்தில் அமுதக் கலசத்தையும், இடக் கரத்தில் நாகத்தையும் ஏந்திப் பெருமானுக்கு முன் வழிபடும் நிலையில் இத்தலத்தில் காட்சி தருகின்றார்.

“சாகாவரம் தரும் அமிர்தம்” என்பதில் அமிர்த சக்தி என்பது ஆயுளை வெறுமனே நீடிக்கச் செய்வதல்ல, ஆயுளைத் தீர்கமாக நல்ல இறைத் திருநெறியில் நிலைக்கச் செய்வதாகும்.

மேலும், “நின்ற நிலைப் பெருமாள்” என்பதாக, சாசுவதமாக என்றென்றும் நிலைத்து நிற்கும் பேரருளையும் அருள்பவராகிறார். அதாவது இறைவனே காருண்ய மூர்த்தியாய்த் தானே அருள் சுரந்து வந்தரவணைக்கும் எளிய வர குண மூர்த்தியாய் அருள்கின்றார்.

கருடாழ்வாரின் கை கட்டிய தரிசன தேவ காரணங்கள்!

கருடாழ்வார், பெருமாளின் முன் நின்று காட்சி அளிப்பதோடு, கருவறைக்குள்ளும் இரு கைகளையும் கட்டிய நிலையில் காட்சி தருகின்றார். இவ்வாறு மூலத்தானத்திலும் அர்த்த மண்டபத்திலுமாக கருடாழ்வார் அருள்வது அபூர்வமானதே, பல கோடி யுகப் புராண அனுபூதிகளையும் இத்தலத்தில் பெற்ற கருடாழ்வாரின் மகத்துவத்தையே இது குறிப்பதாகும்.

“அம்மா! என்னைப் பெற்ற தாயாரே!” என வருணனே போற்றி அழைத்த தேவியாக, சென்னை திருநின்றவூர் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் ஆலயத்தில் தாயார் அருள்கின்றாள். எனவே, பிரபஞ்ச ஜீவன்கள் அனைத்திற்கும் தாயாய்க் கனிந்து அருள்பாலிப்பதால் பெருமாள் தலங்களில் இறைவியைத் “தாயார்” என பக்தி நிறை அன்புடன் போற்றி அழைக்கின்றனர். எந்த ஜீவனையும் சதாசர்வ காலமும் தன் மேல் சுமந்து, தாங்கிக் காக்கும் பூமாதேவியாகிய பூதேவியும் அகிலத் தாயே!

அடுத்ததாக, தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த அன்னை, குடும்பத் தாயாக வருகின்றாள்.

கோமாதாவாகிய பசுவும், தாய்ப் பாலுக்கு அடுத்த ஸ்தானத்தில் பசும்பால் தந்து குழந்தைகளைக் காப்பதால், அனைவருக்கும் தாயாகி, “கோமாதா” என்று போற்றப் பெறுகின்றாள்.

இந்த நான்கு தாய்மார்களின் அருட்துணையுடன் தான் எவரும் பரப்பிரம்மான பரம்பொருளாம் ஸ்ரீமன் நாராயணப் பெருமாளின் திவ்யமான திருவடிகளை அடைதல் முடியும்.

நகார அட்சர சக்தி பீஜாட்சர சக்தித் தலம்!

நற்றிரு நாங்கூர் நல்லான் நதிமுக நாத நாமம்
நற்றவம் நாடி நல்கி நற்றுணை நந்தன் பாதம்
நற்றமிழ் நாதபோதம் நம்மாழ்வானா னனாகி
நற்பதம் நன்றி நின்ற நாமமே நாராயணனே!

என்றவாறாக “நம்” வகை பீஜாட்சர சக்திகள் நிறைந்த தலம். “நகரம்” எனப்படும் “ந” அட்சர பீஜ சக்திகள் மிகுந்த தலமிது.

முற்காலத்தில் ஏகாதசி விரதம் பூணுவோர், இத்தலத்தில் தாம் துவாதசிப் பாரணைப் பிரசாதம் எனப்படுவதான துளசித் தீர்த்தம் அருந்துதல், நெல்லி முள்ளிப் பச்சடி, அகத்திக் கீரை, உணவு ஆகியவற்றை ஏற்று விரதத்தை நிறைவு செய்வர்.

“தங்கல்” என்பது செல்வம் விருத்தியாகி நிலைத்து நிற்பதைக் குறிப்பதாகும். நரசிம்ம அவதாரம் பூண்ட பெருமாள், உலகெங்கும் உக்ரத்துடன் வலம் வந்த போது, புளி(ய)ங்குடி போன்ற தலங்களில், நடந்த நிலையிலேயே மகாலக்ஷ்மி, நரசிம்மப் பெருமாளைப் பின் தொடர்ந்து பெருமாளின் நிழலைத் தன் மேல் படிய வைத்து சுவாமிக்குச் “சீதளம்” (குளிர்ச்சித் தன்மை) தந்தனள்.

வள்ளலார் போன்ற மஹான்களுக்கே, நிழல் தரையில் விழாத போது, ஸ்ரீநரசிம்மருக்கு எவ்வாறு நிழல் ஏற்பட்டிருக்கும்?

நீழல் தேஜோ மயப் பிரகாச சக்திகள்!

“நீள நிழல் நீழல்” என்பது பெருமாளின் திவ்யமான ஒளிப் பிரகாச வடிவின் பரபிம்ப வடிவைக் குறிப்பதாகும். ஆலயங்களில் நைவேத்யம், அலங்காரத்தின் போது கருவறைக்கு முன் நிழல் திரை இடுவார்கள், துணித் திரை இட்டபோதும் மூலத்தான, விளக்குப் பிரகாசத்தால் முலத்தான பூஜைக் காரியங்களின் பிம்பங்கள் திரையில் படிந்து நமக்கு “சேவித்த பிம்ப உணர்வாகின்றது” அல்லவா! இந்தத் திரையின் பாங்கே உண்மையை அறிய விடாது மனதைப் பீடிக்கும் “மாயைத்” திரையாகும். இதனை அகற்ற உதவுவதே ஆலய வழிபாடு! நரசிம்மரின் நிழல் என்பது திருமகள் தாங்கிய திருமாலின் திவ்யமான அட்சர அஷ்டாட்சர அர்ச்சமாகும்.

இலங்கையில் கதிர்காமம் முருகன் ஆலயத்தில், மூலத்தானத்திற்கு முன் எப்போதும் திரையிடப்பட்டிருக்கும், முருகன் ஓங்காரப் பொருளை உபதேசம் பெற்று உபதேசித்தத் தேவ ரகசிய மண்டலங்களுள் ஒன்றாக கதிர்காமம் விளங்குகின்றது. கதிர் என்பது ஒளி, காமம் என்பது மாயை, திரை போன்றதாகும்.

கடலூர் அருகே திருமாணிக்கக் குழி எனும் தலத்திலும் பீம ருத்திரத் திரை உண்டு. மன மாயைகளைப் போக்கும்.

ஸ்ரீராமராய், ஸ்ரீகிருஷ்ணராய்த் தோன்றிய பெருமாள் மூர்த்திகள் சாதாரண மானுடராய்த் தோன்றி மக்களோடு மக்களாய் சமுதாயத்தில் நிரவி, பாமரர்களையும் அரவணைத்துக் காருண்ய மூர்த்திகளாய் அருள்பாலித்தனர். இன்றும், என்றுமாயும், கலியிலும், எந்த யுகத்திலும் அருள்கின்றனர்.

மஹாபாரதத்தில், கிருஷ்ணாவதார லீலைகளில், தினமும் எட்டுப் பாரம் பொன் தரவல்ல “சியமந்தகமணி” எனும் மணியை எடுத்துக் கொண்டதாக ஸ்ரீகிருஷ்ணன் மீது வீண் பழி எழுந்தது. அவதார புருஷர் ஆயினும் துவாரகாவைத் தலைநகராகக் கொண்டு ஆண்டமையால், “மக்கள் செய்வது மன்னன் தலையில்!” என்பதாக,  துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணன் இப்பழியை ஏற்றார். இதன் பின்னணியில் ஆயிரமாயிரம் ஸ்ரீகிருஷ்ண லீலைகள் உண்டு. “அவனன்றி ஓரணுவும் அசையாது அன்றோ!”

எந்த மன்னரிடம் “சியமந்தக மணி” இருந்ததோ அவனை ஒரு சிங்கம் கொன்றிட, அந்த சிங்கத்திடம் இருந்து ஜாம்பவான் மணியைப் பெற்றுக் குழந்தையின் தொட்டிலில் வைத்திட…

இதனைச் சாக்காக வைத்து ஸ்ரீகிருஷ்ணன் ஜாம்பவானுடன் “மாயப் (பொய்ப்) போர்” புரிந்திட.., “ராமாயண காலத்தில்” தாம் கண்ட ராம தரிசனத்தை “ஸ்ரீகிருஷ்ணனிடம்” கண்ட ஜாம்பவான் வியந்து, ஸ்ரீகிருஷ்ணனிடம் ஸ்ரீராம தரிசனமும், ஸ்ரீராமரிடம் ஸ்ரீகிருஷ்ண தரிசனமும் பெற்றுப் பரமானந்தம் அடைந்தார். திரேதா யுக முடிவில் ஸ்ரீராமர் சரயு நதியில் மறைந்ததில் இருந்து ராம தரிசனத்திற்காக ஏங்கிப் பல தலங்களையும் தரிசித்த ஜாம்பவானுக்கு., “ராம தரிசனம் நின் மனதில் தங்கலாகும்” என்ற அருட்புலன் கிட்டியத் தலமாதலின் ஜாம்பவதியின் திருமணத்தை ஜாம்பவான் திருத்தங்கல் தலத்தில்தான் பூர்த்தி செய்தார். இதுவும் “சியமந்தக மணியை வைத்து” நிகழ்ந்த கிருஷ்ண லீலைதானே!

தங்கால் திருத்தலத்தில் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் மகாலட்சுமியே செங்கமலத் தாயாராக நின்ற கோலத்தில் அருள்கின்றாள். எனவே அருண கமலத்தில் என்றும் பொலியும் திருமகள் அருட்பொழிவுத் தலமே திருத்தங்கல் ஆகும்.

படி தாங்கும் பாகவதப் பெம்மான்கள்

திருத்தங்கல் பெருமாள் தலத்தின் ஒவ்வொரு படியிலும் நின்று

“நின்றே நின்று நின்றறியும் நின்றறிவாளத் திரு நின்ற நாராயணா!
நின் திருவடிக் கீழ் நின்றேன் நின்ற நாராயணா! திரு நின்ற நாராயணா!
நின் திருவடிப் பதம் நின்று நின்தங்கல் திருபூமி நின்றேனே நின்ற நாராயணா!”

என்று ஓதி, ஓதியே ஒவ்வொரு படியிலும், இத்தலத்திற்கு உரிய திவ்யபிரபந்தப் பாசுரங்களையும் ஓதி வழிபட்டுப் பெருமாளைத் தரிசித்தல் “படி பூஜையாகும்.” திருத்தங்கலின் ஒவ்வொரு படியும் திருமாலின் ஆயிரமாயிரம் வாரணப் பதிகளை ஓதும். காரணம் யாதெனில்,

“நின் படியாய்க் கிடப்பேனோ பவள வண்ணா!
நின் ஆலய திருப்படியாய்க் கிடப்பேனோ திருமகள் கேள்வனே!”

என்று சித்தர்களும், மஹரிஷிகளும் ஆழ்வாராதியர்களும், உத்தமப் பெருமாள் அடியார்களும் தான் யாங்கணும் பெருமாள் ஆலயப் படிகளாய்க் கிடக்கின்றார்கள். திருமாலின் அடியார்கள் பாதம் தம் உடல் மேல் படிதல் வேண்டும் என்று விரும்பி, வேண்டி, வேண்டிப் படியாய்க் கிடக்கின்றார்கள் எனில், இதில் ஏறிச் செல்பவர்கள் எத்தகைய பணிவு, அடக்கம், பொறுமையைக் கைக் கொள்ள வேண்டும்!

ஸ்ரீகருடக்கொடி சித்தர்
சித்துக்காடு

கருடக் கொடி சித்தர் வழிபடும் தலம்!

மூலத்தானத்தில் கருடாழ்வார் கைகட்டி நின்ற கோலத்தில் அருளக் காரணம் என்ன?

தாம் “பெருமாளின் வாகனம்” எனக் கிஞ்சித்துச் சற்றே கருடர் பெருமை கொண்ட போது, ஔஷத மூர்த்தியான கருடாழ்வாரே அறியாத வகையில், பல அரிய மூலிகைகளைச் சுமந்தவாறு சதாசர்வ காலமும் திருமால் பூஜையில் திளைக்கும் கருடக் கொடிச் சித்தர் கருட மூர்த்தியின் முன் பறந்து சென்றதுடன், கண்ணுக்கு எட்டாத தொலைவில், கருடப் பறவைகளும் பறக்க முடியாத உயரத்தில், கருடக் கொடி சித்தர் பறப்பதைக் கண்டு நாணிய கருடபிரான்,

“தமக்கு இவ்வகையில் திருமால் பாடம் புகட்டியது” அறிந்து, சித்தரை நாடிட, கருடக் கொடி சித்தரோ, கருடாழ்வாரைக் கண்டதும், சடாரென்று அவருடைய திருவடிகளில் கண்ணீர் மல்க வீழ்ந்து வணங்கி, எமையாளும் “கருடாழ்வாரே!” என போற்றிப் போற்றிப் பன்முறை வலம் வந்து, வலம் வந்து வீழ்ந்து வணங்கினார்.

கருடமூர்த்தியே அறியாத வகையிலான பல்வகை மூலிகை தலங்களாலான மாலைகளை அவருக்குச் சார்த்தித் தொழுதார். “அடியாருக்கு சேவை ஆற்றுதலே அனந்தன் சேவை!” எனத் தெளிந்து மூலத்தானத்தில் கருடாழ்வார் கை கட்டி நின்று, உத்தமப் பெருமாள் அடியாரைத் தரிசித்துத் தரிசித்துத் தனது கர்வத்தைப் போக்கிக் கொண்ட தலங்களுள் இதுவும் ஒன்று, “கருடக் கொடி சித்தர்” தினமும் தரிசித்து வழிபடும் தலம். இதனால்தான் திருமணப் பிராப்தித் தலமாகத் திருத்தங்கல் தலத்தில் வழிபட்டு,

“திருமணம்” எனும் பண்டையப் பெயர் பெற்றத் தலமான சென்னை பூந்தமல்லி அருகே சித்துக்காடு சுந்தரராஜப் பெருமாள் தலத்தில் கருடக் கொடிச் சித்தர் தூணில் குடிகொண்டார்.

முற்காலத்தில் திருத்தங்கல் தலத்தில் நிறைந்திருந்த கருநெல்லி மரத்திற்கும் திருமணம் தலத்தில் உள்ள நெல்லி மரத்திற்கும் இன்றும் என்றும் தெய்வீகத் தொடர்புகள் உண்டு.

பழமையிற் பொலிந்த அகோராத்ரத் தீர்த்தம்!

இத்தலத்தில் பௌர்ணமி தோறும் கிரிவலம் வந்து இறைவனை வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். சிறிய பாறைத் தலம். எளிதில் கிரிவலம் வந்திடலாம். “அருண வருண தருணத் தீர்த்தம்” உள்ள தலமாகும்.

பலரும் அறியாத இத்தல அற்புதம் யாதெனில், கருடக் கொடிச் சித்தர் நீராடி, ஆயிரக் கணக்கான மூலிகைகளின் சாற்றை நிரவிச் செல்லும் தலமும் ஆகும். அருண மூர்த்திக்கும் ஆயுள்காரக மண்டலங்களில் பித்ரு மூர்த்திகளுக்கும், ரிஷிகளுக்கும் பெருமாள் தரிசனம் தந்து அருளிய தலமாதலாலும் இங்குள்ள தீர்த்தம் ஒப்பிலியப்பன் ஆலயத் தீர்த்தம் போம் “அகோராத்ரத் தீர்த்தம்” என்று முந்தைய காலத்தில் போற்றப் பெற்றது. இது தற்போது மறைந்துள்ளது.

“அகோராத்ரத் தீர்த்தம்” என்பது இரவு, பகல் என எந்நேரமும் தோஷமின்றி நீராடவல்ல தெய்வீகத் தீர்த்தம். கங்கை, காவிரியில்கூட காலை, மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நீராடக் கூடாது என்ற நியதி உண்டு. ஆனால், அகோராத்ரத் தீர்த்தம் என்பது இரவு, பகல் என எந்நேரமும் நீராடிடலாம். இவ்வகையில் ராமேஸ்வரம் போல் திருத்தங்கலில் அகோராத்ரத் தீர்த்தம் பண்டைய யுகங்களில் இருந்தது. நின்ற நிலைப் பெருமாள், நின்ற நிலைத் தாயார் அருளும் தலமாகவும், தீர்த்தமும் நின்ற நிலை கொண்டு எப்போதும் விளங்குவதால் அதாவது தீர்த்த தேவதைகள் எப்போதும் விழித்திருந்து அருளும் தலமாதலின் அமாவாசை, பௌர்ணமியில் கிரிவலம் வருதல் மிகவும் விசேஷமானதாகும். சிவ, வைணவ ஆலயங்களைக் கிரிவலத்தில் ஒரு சேர வணங்கும் பாக்யமும், ஒரு சேர கிரிவலம் வரும் புண்ணிய சக்தியும் நிறையும் தலம்.

“தண்(மையான)கலம்” – குளுமையான மூலிகை சக்திகள் நிறைந்த தீர்த்தங்கள் என்பதாக திருத்தங்கல் ஆயிற்று. திருமகள் தங்கிய தலம் ஆதலினால் திருத்தங்கல் என்றும் ஆயிற்று. மேலும், இந்தத் தலத்தின் கீழ் எண்ணற்ற புராண அனுபூதிகள் நிகழ்ந்த புண்ணிய வளாகங்கள் ஒன்றின் கீழ் ஒன்றாக அடுக்காக உள்ளன. இதனால்தான் இது சற்று உயரமாக மேடாகக் காணப்படுகின்றது. சென்னை – மாடம்பாக்கம் ஸ்ரீதேனுபுரீஸ்வரர் சிவாலயம் போன்று பண்டைய ஆலயங்கள் கீழே பதிந்திருப்பது வருங்காலத்தில் அறியலாகும்.

பௌர்ணமி கிரிவலத் தலம்

பௌர்ணமி தோறும் சத்சங்க பூர்வமாக இங்கு கிரிவலம் வருதலை நிறைவேற்றி வருதல் வேண்டும். நல்ல திருமண பிராப்தித் தலமாக விளங்குவதால் பெற்றோர்கள் தம் பிள்ளைகள், பெண்களுடன் கிரிவலம் வருதல் விசேஷமானதாகும். புதன், அமாவாசை, சனி, பௌர்ணமி, பிரதோஷ நாட்கள் கிரிவலம் வருவதற்கு மிகவும் விசேஷமான தினங்கள், கிரிவலத்தில் அன்னதானம் ஆற்றுதல் பலன்களை நன்கு விருத்தி செய்யும்.

தங்கம், ஆபரணங்கள் காரணமாக எத்தனையோ குடும்பங்களில் சொத்து தகராறுகள், பிரிவுகள், உறவு முறிவுகள் ஏற்பட்டு ஆபரணங்களை இழந்தோரும் உண்டு. இவர்கள் இங்கு அனுஷம், வெள்ளிக்கிழமைகளில் வழிபடுதல் நல்ல பலன்களைத் தரும்.

தோல் சம்பந்தமான வியாதிகளால் வாடுவோர் இங்கு கிரிவலம் வந்து ஆலயத்திற்குத் தக்க காணிக்கையுடன் நெல்லிக் கனிகளாலான மாலை சார்த்தி, தீர்த்தத்தை சிறு அளவில் ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து தினமும் வில்வம், வேம்பு, தேனில் கலந்து உண்டு வர வேண்டும். அருகம்புல் சாற்றுடன் இத்தீர்த்தத்தைச் சூரியோதய நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்தி வரவேண்டும்.

திருமண தோஷங்களால் அவதியுறுவோர் இங்கு பௌர்ணமி, புதன், சனிக்கிழமைகளில் கிரிவலம் வந்து திருமண நாளில் விரதம் பூண்டு வரவேண்டும்.

அகங்காரம், ஆணவம், பதவி பலம், ஆள் பலத்தால் பிறருக்குத் துன்பங்களை இழைத்தோர் பலத்த சந்ததிக் குற்றங்களை அடைவர். இவர்கள் இங்கு கிரிவலம் வந்து நெல்லிக்காய் ஊறுகாயுடன் கூடிய அன்னதானம் ஆற்றிட வேண்டும்.

பலரும் அறியா ஜாம்பவானின் பக்திப் பெருக்கு

உத்தம சிவ பக்தரான ஜாம்பவான் ராமாயணம் முதல் மகாபாரதம் வரை பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து புராண அனுபூதிகளில் பங்கு பெற்ற உத்தம மூர்த்தி ஆவார். தினமும் ஆஞ்சநேயர் போல, திருக்கைலாயம் மற்றும் வைகுண்டத்தில் சிவ தரிசனம் பெருமாளை தரிசித்து வருபவர். ஜடாயுவுடன் சேர்ந்து அற்புதமான இறைப் பணிகளை ஆற்றியவர். எண்ணற்ற பெருமாள் மூர்த்திகளை நேரிலேயே தரிசிக்கும் தெய்வீக மாண்பினைப் பெற்றவர்.

இவருக்கு மிகவும் வித்தியாசமான முறையில் ஸ்ரீகிருஷ்ணனின் தரிசனம் கிட்டியது. பாசுபத அஸ்திரத்தைச் சிவபெருமானிடம் இருந்து பெற பல ஆண்டுகள் தவம் புரிந்து அர்ச்சுனன், வேடனாக வந்த சிவபெருமானிடம், வந்தவர் ஈஸ்வரன் என அறியாது அவருடன் சண்டையிட்டுப் பல்வகைகளிலும் சிவ ஸ்பரிசம் பெற்று, சிவ தரிசனம் பெற்று, உளம் பூரித்தான். இதே போலவே ஜாம்பவானும் வந்தவர் கிருஷ்ண பகவான் என அறியாது அவரோடு பல நாட்கள் தொடர்ந்து சண்டையிட்டும். அவர் சற்றும் களைப்புறாதது கண்டு, அதிசயித்து இது தெய்வ லீலை என உணர்ந்தபோதுதான் கிருஷ்ண தரிசனம் கிட்டியது. ஸ்ரீகிருஷ்ணர் ஜாம்பவதியை முறையாகத் திருமணம் புரிந்து கொண்ட தலம் இதுவேயாம்.

இவ்வாறு பல்வகை அனுபூதிகள் நிகழ்ந்த வளாகங்கள் பூமியில் அவ்வப்போது அமிழ்ந்து அடுத்த பூமிப் பகுதி வெளிவந்து அடுத்த புராண அனுபூதிக்குத் தயாராகும்.

விதர்ப்ப ராஜனுக்குக் குழந்தை பிறக்க வரமளித்த அகஸ்திய மாமுனி இத்தலத்தில் கருநெல்லிக் கனி மரத்தடியில் தவம் புரிந்து விதர்ப்ப ராஜனின் புத்திரிக்கான ஆயிரத்தெட்டு வகை சாமுத்ரிகா லட்சணங்களைத் தம் தபோ பலத்தால் நிர்மாணித்துத் தந்த தலமும் இதுவேயாம். எனவே, ஜாதகம், முகூர்த்த காலம் அனைத்திலும் சர்வ லட்சணங்களையும் பூரித்துப் பரிணமித்த தலம் இதுவேயாம்.

நான்கு தேவியருடன் நின்ற நாராயணப் பெருமாள் அருளும்  திருத்தங்கல் தலத்தில் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாளுக்கு – மல்லிகை மாலை, ஸ்ரீதேவிக்குத் தாமரைப் பூ மாலை, ஸ்ரீபூதேவிக்குச் சாமந்திப்பூ மாலை, ஸ்ரீநீளாதேவிக்குச் செம்பருத்தி அல்லது கதம்ப பூமாலை, ஸ்ரீஜாம்பவதி தேவிக்கு ரோஜாப்பூ மாலை – சார்த்தி வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். பக்தர்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் தாமே தொடுத்தளிக்கும் மாலைகளை, பூச்சரங்களை இறைவன் உவப்புடன் ஏற்கின்றார்.

பைரவ தோஷம், நாக தோஷம், பித்ரு சாபம், மிருத்யு தோஷம், கால சர்ப தோஷங்களால், திருமணம் தக்க பருவத்தில் நிகழாது வருந்துவோர்க்கும், இவற்றால் குடும்பத்தில் துன்பங்கள் மிகுந்து அவதியுறுவோர்க்கும் தக்க பரிகாரங்களையும், நிவர்த்திகளையும் அளிக்கும் திருமணப் பிராப்தித் தலம்.

தினமும் கணவருக்குப் பாத பூஜை ஆற்றுதல், பெற்றோர்களுக்கும் பணிவிடை செய்தல், ஆலயத்தைச் சிறிதளவேனும் தூய்மை செய்ய உதவுதல், தினசரி சிவ, விஷ்ணு தரிசனங்களும் கலியுகத்திற்கென மாமுனிகள் அருளும் வழிமுறைகளாகும். இவ்வாறு பதினொருவரும் சேர்ந்து அருளும் பெருங்கருவறைத் தலமே திருத்தங்கல் ஆதலின் இதன் மூலத்தான தரிசனம் விசாலமான “நேத்ரப் பூரண தரிசனமாகக்” குறிக்கப்படுகிறது. அதாவது இரு கண்களாலும் நன்றாகத் திறந்து பார்த்து எவ்வளவு மூர்த்திகளின் தரிசனங்களைப் பரந்த அளவில் பெற முடியுமோ அதுபோல் நேத்ர யோகமாகிறது.

இவ்வாறு பல அற்புதக் காட்சிகளைக் கொண்டதே திருத்தங்கல் பெருமாள் ஆலயமாகும். எவ்வளவு பணம் வந்தாஅலும் உடனடியாக எவ்வகையிலேனும்  செலவாகி விடுகின்றது என வருந்துவோர், இங்கு அருண கமல மஹாலட்சுமி தேவிக்கு 108 முழுத் தாமரை மலர்களைச் சார்த்தி, 108 முழுத்தாமரை மலர்களை ஆஹூதியாக அளித்து ஹோம வழிபாடு இயற்றி வழிபடுதல் நல்ல பலன்களைத் தரும்.

எமதர்மராஜா வழிபாடு

மரண பயம் நீங்கிட உதவும் “எம தர்மராஜா” வழிபாடு!

“எம மூர்த்தி” என்றாலேயே “மரணத்தைத் தருபவர்” என அஞ்சுதல் கூடாது. தர்ம ராஜ மூர்த்தியாக, நந்தி மூர்த்தியுடன் சேர்ந்து “அறத்தைக்” காக்கின்ற எம மூர்த்தியா மரணத்தைத் தருவிப்பவர்? இறைப் பகுத்தறிவுடன் சிந்தித்திடுக! எம மூர்த்தியை மரணத்தைத் தரும் மூர்த்தியாக ஒரு போதும் எண்ணுதல் கூடாது.

மரணம் என்பது பூவுலக ஜீவன்களால் தவிர்க்க முடியாது எனும் போது, எம மூர்த்தியைத் தக்க முறையில் வழிபட்டு வந்தால், “மரண பயமே” வாழ்வில் அண்டாது தவிர்த்து விடலாம் அல்லவா! “மரண பயத்தைக் களைதல்” மூலம், அவரவருடைய “வாழ்க்கை முடிவதற்குள்” குறித்த லட்சியங்களை, கடமைகளை ஆற்றிடுவதற்கான ஆக்க சக்திகளைப் பெற்றிடவும், “எம தர்ம ராஜா வழிபாடு”  மிகவும் உதவும்  இதனால் தான், பல இடங்களிலும் “தர்ம ராஜ மூர்த்தியாக” , எம மூர்த்தி அருள்கின்றார்.

ஸ்ரீஎமதர்மர் திருகோடிக்கா

திரிதியைத் திதி நாள், “எம மூர்த்தி” வழிபாட்டிற்கு மிகவும் உரித்தானது, அஷ்டத் திக்குப் பாலக மூர்த்தியாகவும், அறக் கடவுளாகவும் தர்ம மூர்த்தியாகவும் அருளும் எம மூர்த்தியும் தினசரி வழிபாட்டிற்கு உரியவரே! பணம், அதிகாரம், பதவியும், இளமையும், உடல் பலமும், நல்ல ஆரோக்கியமும் இருக்கும் வரை எவருக்கும் மரண பயம் தோன்றாது, நாற்பது வயதைத் தாண்டியவுடன், குடும்பம் பெரிதான உடன், குடும்ப பொறுப்புகள் நெரு(ங்)க்குகையில், அல்லது, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் என்று ஏதேனும் வந்து விட்டாலோ, அல்லது இவற்றால் அவதியுறும் பிறரைக் கண்டாலோ – உடனே மரண பீதி, உடலை மனதை ஆக்ரமித்துக் கொண்டு விடும். இவ்வாறு நடு வயதில் இத்தகைய மனபீதிகள் வந்து விட்டால், இதனைக் கழற்றுவது கடினமோ கடினம்.

எனவே, மிருத்யுஞ்ஜய சக்திகளும், மருத்துவ குண சக்திகளும் நிறைந்த திரிதியைத் திதி நாளில், “எமதர்ம ராஜா” வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். கும்பகோணம் – திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவல், ஸ்ரீவாஞ்சியம் போன்ற தலங்களில் எம மூர்த்தி எழுந்தருள்கின்றார். திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலியில் எம மூர்த்தி தம் குடும்பத்துடன் தனிச் சன்னதி கொண்டு அருள்வதால் இங்கு திரிதியைத் திதி தோறும் 96 வகைத் தீபங்களை ஏற்றிக் குடும்பத்தோடு வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்று நோய்களுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அல்லது இவற்றால் பாதிக்கப்பட்டோர் இங்கு திரிதியை, மற்றும் மக நட்சத்திர நாட்களில் எம மூர்த்தியைக் குடும்ப சகிதம் வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும். நோய் பற்றிய பயங்கரமான சிந்தனைகள், வலிச் சிந்தனைகள் தணிந்து நல்ல மன அமைதி பெற எட்டு வகைக் காய்கறிகள் கலந்த சாம்பார் சாத அன்னதானத்துடன் கூடிய திரிதியைத் திதி, மக நட்சத்திர வழிபாடு உதவும். “எமத் திரிதியை” என்ற விசேஷமான திரிதியைத் திதிப் பண்டிகையும் உண்டு.

தட்சிணாயனம்

36 தலைமுறைகளுக்குத் தர்ப்பணம் அளிப்பது கலியுகத் தேவையே! வானத்தில், மனித தேகத்தில் மலரும் கிரக அசைவுகள்!

பலருமறியா பாலமுத நேர வகைகள்!

ஒரு தமிழ் வருடக் காலத்தை நாள், கிழமை, யோகம், பட்சம், மாதம், அயனம் எனப் பல வகைகளில் பகுத்துத் தந்துள்ளனர். இவையாவும் காலதேவதா மூர்த்தியின் அங்கங்களாகும். நாம் பஞ்சாங்கத்தில் காணும் காலப் பகுப்புகளுக்கும் அப்பாற்பட்ட “அமுத நேரம், கற்பஜோதி நேரம், பவனபூபதி நேரம், பூம்யசுத நேரம்” எனப் பல வகை அமுத தேவ நேர வகைகளும் உண்டு.

சற்குருவின் அருளால்தாம் இத்தகைய அமிர்த சக்தி நேர வகைகளை அறிய இயலும். மேலும், சுயநலத்திற்காக இவற்றைப் பயன்படுத்தும் எண்ணம் உடையோர்க்கு, ஒரு போதும் இவை உணர்த்தப் பெற மாட்டா! சத்குருமார்கள், சத்சங்கப் பூர்வமாக ஜாதி, மத, குலபேதமின்றி அனைத்து ஜீவன்களின் நலன்களுக்காகவும் ஆற்றும் சமுதாய இறைப் பணிகளான ஹோமம், பொது ஜனத் தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றிற்காக இத்தகைய அரிய அமிர்தநேர சக்தி வழிமுறைகளைக் கடைபிடித்துப் பல கோடி மடங்கான பலாபலன்களைப் பெற்று, அனைத்தையும் உலக ஜீவன்களின் நலன்களுக்காகவே அர்ப்பணிப்பர். உண்மையாகவே தியாகமயமாக இறைப் பணிகளை ஆற்றும் இறையடியார்களின் இறைவள மேன்மைக்காகவும் இவற்றுள் ஒரு சில அனுகிரகங்களையும் சத்குரு மனமுவந்து அளிப்பதும் உண்டு. இத்தகைய தியாகமயமான உள்ளங்களுக்காகவே கலியுகத்தில் சத்குருமார்கள் ஏங்குகின்றனர். ஏனெனில் தியாகம் பரிமளிக்கும் இடத்தில்தான் சத்தியமயமான தூய அன்பு நன்கு பரிமளித்து விருத்தியாகும்.

வானக் கோளங்களும், ஜீவ உடற்கோளப் பகுப்புகளும்!

வானத்தில் உள்ள கோளங்கள் ஒவ்வொன்றும் மனித அங்கங்களில் பல இடங்களில் துலங்கும் கோளப் பகுப்புகளுடன் தொடர்புடையவை ஆதலின், இவ்விரு கோள அமைவுகளின் சாராம்சமே, ஜீவ வாழ்வை வரையறுத்துக் காட்டும் அற்புத ஜோதிட முறையாகப் பிறந்தது.

சுட்டு விரலில், குரு கிரக சக்தி வலது கண்ணில் சூரிய சக்தி, கட்டை விரலில் சுக்கிர சக்தி – என்றவாறாக, பல்வேறு கிரக அம்சங்களும் ஒவ்வொருவர் உடலிலும் அமைந்திருப்பதால், ஜோதிடம் என்பது வானியல், கிரக அம்சங்களையும், மனித உடலியல் கிரக அம்சங்களையும் இணைத்துப் பகுத்துத் தருவதாகும்.

ஸ்ரீபைரவேஸ்வரர் சோழபுரம்

கிழமை, நட்சத்திரம், கரணம் போன்ற பல்வகையான கால அங்கங்களும், ஏனைய பிற கால அம்சங்களுடன் கால இலக்கண நியதிப் பூர்வமாக, முறையாகப் பின்னிப் பிணைந்து பஞ்சாங்கத்தில் காண்பது போல சாதாரணமாகவே, முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டக் கூட்டுக் கால அம்சங்களுடன் காலச் சக்கரமாக வந்தமைந்துள்ளன. உதாரணமாக ரோஹிணி நட்சத்திரமானது, பிரதமை, செவ்வாய்க் கிழமையுடன் சேர்ந்து வருவது, இதே ரோஹிணி நட்சத்திரமானது, பிறிதொரு நாளில் ஏகாதசி, வெள்ளியுடன் வருவது என்றவாறாக ஒவ்வொரு திதி, கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் சேர்ந்து வருவதைக் கணக்கிட்டால் லட்சக்கணக்கில் எண்ணற்றதாக காலக் கூட்டம்சங்கள் வருமல்லவா!

இத்தகைய கோளச் சிறப்புகளைப் பாமர மக்களால் உணர முடியாதன்றோ! மேலும் பழுத்த அறிவுத் திறன் பூண்டவர்களாலும் தம் வாழ்நாளில் இவற்றைப் பரிபூரணமாக அறிய இயலாது என்பதால்தான், “காலபைரவ வழிபாட்டில்” இவை அனைத்தையும் சித்தர்களும், மஹரிஷிகளும் பகுத்துப் பதித்துத் தந்துள்ளனர். எனவே கால பைரவ வழிபாட்டில் அனைத்து மூர்த்தி வழிபாட்டுப் பலன்களும் கிட்டுகின்றன.

இவை அகில உலகுக்குமாக நிர்ணயிக்கப் பெறும் தலங்குகள் ஒன்றே சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் சிவாலயமாகும்.

ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரில் அருளும் ஆதிசிவாலயத்தைக் கலியுலகில் காணுதலே அரிதிலும் அரிதாம். சோழபுரத்தின் இத்தொன்மையான அதியற்புத ஆலயம், திருப்பணிகளை நாடிக் கிடக்கின்றது. இதற்கு உதவுவோருக்குப் பெறுதற்கரிய பூரித்துத் திரண்டருளக் காத்துள்ளன. பெறுதற்கரிய இந்த மானுடப் பிறவியில் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பூமிப் பொருட்களின் கூட்டுப் புலசக்தியே புவிஈர்ப்பு விசை

புவி ஈர்ப்பு விசைக்கும், காலத்துக்கும் (time dimension) பெரும் பிணைப்பு உண்டு என்பது சித்தர்களின் மெய்மைப் பூர்வமான வேத வாக்கு, விஞ்ஞானத்தில் கூட, நவீனக் கண்டுபிடிப்பாக, “புவி ஈர்ப்பு விசையானது, பூமியில் உள்ள பொருட்களின் ஒட்டு மொத்த உள்விளைவே!” என உரைக்கின்றனர். இக்கருத்து, விஞ்ஞானத்தின் மிகவும் தாமதமான கருத்து! தொன்மைக் காலத்தே, வேதப் பூர்வமாக, பண்டைய கால வானியற் சித்தாந்தமாக இது மெய்ஞானிகளால் உரைக்கப்பட்டுத்தான் வருகின்றது என்பதையும் அறிக! ஆனால், “நான்தான் கண்டு பிடித்தேன்!” என எந்த மெய்ஞான விஞ்ஞானியும் அகங்காரத்தால் உரைப்பதில்லை!

உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய “இரு அயன காலப் புண்ணிய காலங்களிலும், புவி ஈர்ப்பு விசைகள் மாறுகின்றன” என்பதும் சித்தர்களின் வேதசத்தியமான சத்சித்தாந்தம்! புவி விசைக்கு மாற்று விகிதமாக அளிக்கப் பெறும் அர்க்யம், தர்ப்பணம் வழிபாட்டு ஆன்ம சாதனங்கள் யாவும், பீதாம்பர யோகமார்க ரீதியாக, பூமி மட்டும் அல்லாது அனைத்துக் கோள்களின் ஈர்ப்பு விசைகளையும் ஆன்மப் பூர்வமாக மாற்ற வல்லதாகும். இவ்வாறான புவி விசைப் புறத்தியக்க சாதனங்களாகவே, “மண்டலக் கோள் யாத்திரை” மார்கத்தில் (astral travel) ஆக்கப் பூர்வமாக நன்கு துணை புரிகின்றன.

காதுகளில் கனியும் ஈர்ப்பு விசை நாளங்கள்!

“மாயை” என்பதற்கும் புவி ஈர்ப்பு விசைக்கும் தொடர்பு உண்டு. மாயையைக் கண்கூடாகக் காணுதலை விட, உணர்வால் அறிவதே அதிகம். ஒவ்வொரு விநாடியிலும் மனித உடலில், மனதில், உலகின் அனைத்துப் பொருட்களிலும் மாற்றங்கள் நிக்ழ்கின்றன. இதை நீங்கள் நன்கு கண்ணால் காண்பதை விட அதிகமாக உணர்கின்றீர்கள் அல்லவா! இதுவே “மாயை” ஆகும். இது வளர்ச்சியாகவோ, தேய்மானமாகவோ, உருவ மாற்றமாகவோ எவ்வகையிலும் இருந்திடும். தட்சிணாயனத்தில் தேய்மன சக்திகள் அதிகமாக இருக்கும். மனிதனுக்குத் தேய்மானமும் பல வகைகளில் அத்யாவசியமானதே! அதே சமயத்தில் தேய்மானத்தால் பல துன்பங்களும் ஏற்படும். இவற்றைச் சமன் செய்து ஆக்குவதும் “புவி ஈர்ப்பு” விசையின் அம்சமாகும். உடலுக்குள்ளேயே வயதாக, வயதாக, எலும்புகள் தேய்மானம் அடைகின்றன. ஆனால் ஆபரணங்கள் உடலில் உராய்ந்து, உராய்ந்துதாம் தேய்மானமுற்ற உடலுக்கு தங்க பஸ்ப சக்திகளை, ஸ்வர்ண சக்திகளாக அளிக்கின்றன. இவ்வகையில் ஒரு வகையில் தேய்மானமும், மறுவகையில் விருத்தி அம்சமும் ஆவதும் உத்தராயண, தட்சிணாயன கால அம்சங்களைக் கொண்டவையே! எனவே உடலிலும் அயன அம்ச மாற்றங்கள் உண்டு.

பூமி நிலவளத்திற்கு உதவும் அர்க்ய, தர்ப்பணப் பூஜைகள்

இத்தகைய விளக்கங்கள் சாதாரண மக்களுக்கு எவ்வாறு பயன் தரும்?

தினமுமே அனைவரும் தர்ப்பண, அர்க்யப் பூஜைகளை ஆற்றி வர வேண்டும் என்பதை நன்கு உணர வைக்கவே இவ்வளவு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. அதாவது இறைவன் அளித்துள்ள இயற்கையான புவி விசையை, மனிதன் ஆக்கப் பூர்வமாகவே மென்மேலும், பயன்படுத்திட வேண்டும். மக்கள் பணத்தைக் கோடி, கோடியாக விரயமாக்கி, புவி விசைக்கு எதிராக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி மாசுபடுத்தி, வால் நட்சத்திரங்களின் மீது அநாவசியமாக மோதச் செய்து, மனித சமுதாயத்திற்குப் பாவ வினைகளைச் சேர்த்துத் தரும் இழிச் செயல்கள் இனி நடக்கலாகாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

மனித விஞ்ஞானத்தில் இயற்கைக்கு முரணான ஆராய்ச்சிகளுக்கு ஓரளவு நிவாரணம் பெற்றுத் தந்து உலக மக்களுக்கு உதவிடவே, யோக சக்திகள் நிறைந்த ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்யம், அர்க்யப் பூஜைகள், தர்ப்பணங்களை முறையாக ஆற்றி வர வேண்டும். இவை மனிதனுக்குள் உள்ள ஈர்ப்பு சக்திகளை நன்கு மேம்படுத்தும், எனவே இவற்றை முறையாகக் கடைபிடித்து வந்தால், இவை பூவுலக நிலச் சமுதாய மேன்மைக்கு நன்கு உதவும். எந்த இடத்தில் பூகம்பம் நிறைய ஏற்படுகின்றனவோ, அங்கு சமுதாயப் பொதுத் தர்ப்பணப் பூஜைகள், ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்ய பூஜைகளை ஆற்றி வந்தால், பூமியின் நில ஓட்டத்தில் நல்மாற்றங்கள் ஏற்படும்.

ஈந்து வளம் பெறும் ஈர்ப்பு விசையாக்கம்

மனிதனை விட ஈர்ப்பு விசைச் சித்தாந்தங்களை நன்கு அறிந்தவையும், மனிதனால் செல்ல முடியாத பல கோள மண்டலங்களுக்கும் செல்ல வல்ல பறவைகளுக்கும் உணவளித்தல்,

புவி விசை, வான் விசை சக்திகளை ஈர்த்துப் பரிணமிக்க வல்ல கோபுர, கோபுரக் கலச, கொடி மர தரிசனங்களைத் தினமும் காலையிலும், மாலையிலும் பெறுதல் , ஈர்ப்பு சக்திகள் மிகுந்திருக்கும் ஆலயக் கோமுகங்கள் (அபிஷேக நீர்த் தாரை வழி), பலி பீடங்களுக்கான பூஜைகளை முறையாக ஆற்றுதல்  போன்ற வகையான வழிபாடுகள், ஒவ்வொரு மனிதனின் கபாலத்திலும், இரு காதுகளுக்கும் உள் இடையிலும் உள்ள ஈர்ப்பு விசை சமன பாவன நாளங்களை மேம்படுத்தும், காது கேட்கும் திறனையும் ஆக்கப்படுத்தும். இவை சாதாரணப் பாமரர்களுக்கும் உதவுவதுதானே!

ஓராண்டில், இரு மாதங்களுக்கு ஒன்றாக, ஆறு ருதுக் காலப் பிரிவுகள் வந்தமையும். (வசந்த ருது, க்ரீஷ்ம ருது போன்றவை), இவை மிகுந்த அர்த்தம் செறிந்தவை! உடலின் முதுகுத் தண்டில் ஆறு கிரந்திகளிலும் அந்தந்த ருதுக் காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால்தான் அந்தந்த ருதுக்காலங்களில், குறித்த நோய்களுக்கான மருந்துகளைத் தயாரித்தலால் அவற்றில் மருத்துவ குண வீரிய சக்திகள் நன்கு மிகுந்து வரும்.

முதுகுத் தண்டில் “ருதுமிள  யோகநாள சக்திகள் பூரிக்கும்” சித்துக்காடு சிவாலயம்

ஸ்ரீநந்திமூர்த்தி சித்துக்காடு

உண்மையில், முதுகுத் தண்டில் “ருதுமிளம்” என்ற கண் இமையினும் மெல்லிய “தாந்த்ர நாளம்” உண்டு. இதனைத் “திருமண்ணீய நாளம்” என்றும் கூறுவர். இந்த “தாந்த்ர நாளமாகிய” “திருமண்ணீய நாளம்” சிருஷ்டிப் பூர்வ சக்திகள் ஆக்கம் பெறும் தலமே, சென்னை – பூந்தமல்லி, அருகில் உள்ள சித்துக்காடு (திருமணம் என்பது இதன் பண்டைய கிராமப் பெயர்) ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் சிவ ஆலயமாகும். “தாந்த்ரீஸ்வரர், யோக மஹேஸ்வரர்” என்ற பல பண்டையப் பெயர்களைத் தாங்கி இறைவன் அருளும் அதியற்புதத் தலம்.

ஒவ்வொரு ருதுக் காலத்திலும், உத்தராயண, தட்சிணாயனக் காலத்திலும் அருமையான யோகவள சக்திகள் பூரிக்கும் சிவத்தலம். இங்கு நந்தவனத்தில் விளையும் பூக்களிலும் அந்தந்த ருதுக்களில் சூக்கும யோக மாற்றங்களை, நறுமண சக்திகளை உணரலாம். தாமே சுயம்பு மார்கமாக சித்சக்திகள், சத்சித்திகள் பூரிக்கும் தலமாதலின், மருத்துவ குணங்களும், மாமருந்தாம் ஔஷத சக்திகளும் நிறைந்த கருடக் கொடிச் சித்தர் இங்குள்ள ஸ்ரீசுந்தராஜப் பெருமாள், ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் இரண்டு ஆலயங்களிலும் வழிபட்டு, வைத்யப் பூரண சக்திகளை யோக மார்கமாகச் சிவாலயத்திலும், பூஜா பலன்களாகப் பெருமாள் கோயிலிலும் நன்கு நிரவி உள்ளார்.

பெருமாள் ஆலயத்தில் ஆண்டாள் சந்நதித் தூணில் பொலியும் கருடக் கொடிச் சித்தரின் திருஉருவத்திற்கும், கருடாழ்வாருக்கும் மருத்துவ சக்திகள் நிறைந்த ஆயில்ய நட்சத்திரம் தோறும் தைலக் காப்பிட்டு வழிபடுவது முதுகுத் தண்டு மற்றும் கபால சம்பந்தமான நோய்களுக்கு நல்ல நிவர்த்திகளைத் தருவதாகும்.

ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் சிவாலயத்தின் நந்தி மூர்த்தி அபூர்வமான யோகசார மண்டபத்தில் வீற்றிருந்து அருள்வதால், இவ்வாலயத்தில் நந்தீஸ்வரரின் திருமேனி, நந்தி யோக மண்டபம் முழுதும் பூக்களால் அலங்கரித்து, ஸ்ரீதாந்த்ரீஸ்வரருக்கு வெள்ளிக் காப்பிட்டு வழிபடுவது, இத்தலத்தில் பிரதோஷ காலத்தில் சுவாமி புறப்பாடு வைபவத்திற்கு ஆவன செய்து துணை புரிதல்..,

ஸ்ரீசூர்யகோடீஸ்வரர் கீழ்சூரியமூலை

போன்ற இறைப் பணிகளால் வாழ்வில் நல்ல வேலை, சொந்த வீட்டுடன் ஸ்திரமான வாழ்வைப் பெறவும் நன்கு உதவும். தியானம், யோகத்தில் சிறப்படைய விரும்புவோர் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலமே சித்துக்காடு ஆகும். யோக சக்திகள் நிறைந்த பூமியாதலால், உத்தராயண, தட்சிணாயன நாட்களிலும், சமநோக்கு, கீழ்நோக்கு நட்சத்திர நாட்களிலும், இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வருவது மிகவும் விசேஷமானதாகும்.

தட்சிணாயன வழிபாட்டிற்கு உரிய கீழ்சூரிய மூலைச் சிவாலயம்!

தட்சிணாயனப் புண்ணிய நாளில் வழிபட வேண்டிய வழிபட வேண்டிய தலங்களுள் மற்றொன்று கும்பகோணம் – கஞ்சனூர் அருகில் உள்ள கீழ்சூரிய மூலைச் சிவாலயமாகும். 64 விதமான மூலிகா திரவியங்களுடன், கீழ்சூரிய மூலை ஸ்ரீசூர்ய கோடீஸ்வரரை வழிபட்டு, இங்குள்ள பண்டைய யுகத்தில் ஸ்ரீசூரிய நாராயண சுவாமியாகப் பொலிந்த பெருமாளுக்கு ஆராதனைகளை நிகழ்த்தி, தாய், தந்தை இரு வம்சாவளி முறைகளிலும் 36+36 வகைத் தர்ப்பணங்களைத் அளித்து, வணங்குவதால் பெற்றோர்கள் – பிள்ளைகள் – பெண்களிடையே உள்ள மனஸ்தாபங்கள் தணிந்து நல்ல மன ஒற்றுமை கிட்டும்.

தட்சிணாயனம், உத்தராயணத்தில் சூரியனுடைய கதியில் திசை, விசை (வான்) இசை மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏழு ஒளிக் கதிர்களுடன் சப்தமித் திதியில் ஏழிசைத் துறைக்கு வளம் தருபவரும் சூரிய மூர்த்தியே! தும்புரு வீணாதாரி மஹரிஷியான தும்புரு மாமுனியும் சூரிய மண்டல வாசியே! இவர் தினமும் வழிபடும் தலங்களில் கீழ் சூரிய மூலைச் சிவாலயமும் ஒன்றாகும்.

மனித உடலிலும் கோள் சலனங்கள் உண்டு

தட்சிணாயனத்தில் “வானில் சூரியப் பாதையில் மாற்றங்கள் ஏற்பட்டால், நமக்கென்ன வந்தது?” என எண்ணாதீர்கள். ஏனெனில், வானில் உள்ளது போலவே, மனித உடலிலும், கோள்களின் பிம்பங்கள் உண்டு. ஆகையால், வானியலில் கோள நிலைகள், வேக மாற்றங்கள் ஏற்படுகையில், இவற்றின் விளைவுகள் மனித உடலிலும் ஏற்படும்.

ஆனால், இதனைப் பலரும் இத்தகைய ஆன்மீக ரகசியங்களை, விளக்கங்களைத் தக்க சத்குருமார்கள் மூலம் அறிவது கிடையாது. சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, சந்திராஷ்டமம் போன்ற கோள சலன நாட்களில், நாம் ஆற்றும் பூஜைகள் பலவும், நம்முடைய உடலில் உள்ள அந்தந்தக் கோள அம்சங்களை வானியல் கோளத்தோடு – synchronize – இழையச் செய்வதாகும். இதைத்தாம் நாம் “நவகிரக பூஜா பலன்கள்” என எளிதாகச் சொல்லி முடித்து விடுகின்றோம்.

ஆனால், இத்தகைய வழிபாடுகளில் ஆறறிவுக்கும் புலப்படாத வகையில், பல்லாயிரக் கணக்கான நாளக் கோளப் பரிபாலன நிகழ்வுகள் தினமுமே, ஏன் ஒவ்வொரு நிமிடமுமே ஏற்படுகின்றன என்பதைப் பலரும் அறியார்.

இதே போலவே, ஏகாதசி, துவாதசி போன்ற முக்கியமான திதிகளும், சூரிய, சந்திரக் கோள கதி மாற்றங்களைத் தாங்கி மனித உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி வருபவையே ஆகும்.

திதிக்குத் திதி – மனித மதிகதி மாறும்

திதி என்பது என்ன? திதிக்குத் திதி மனதில் மாற்றச் சலனங்கள் உண்டாகும். மதிகாரக மூர்த்தியே சந்திரன்!

சூரிய, சந்திர கதி தூர மாறுபாடுகளே தினசரித் திதிகள் ஆகின்றன. இதனால்தான் தினமும் ஒரே மாதிரியான மனநிலை அமைவது கிடையாது. அந்தந்த திதிகளுக்கு ஏற்ப, ஏகாதசி விரதம், பௌர்ணமி, அமாவாசை என அமைகையில், நாம் ஆற்றும் தர்ப்பணம், உண்ணாநோன்பு, கிரிவலம் போன்றவை, வானத்தில் அந்தந்த கோளத்தின் சலனங்களுக்கு ஏற்ற வகையில் நம் உடல் கூறுகளையும் ஒருமிக்கச் செய்து தருவதாகும்.

இதனால்தான், பூஜைகள், கிரிவலம் போன்றவற்றை ஆற்றியவுடன், மனதினுள், உடலின் களைப்பிற்கு ஊடே மனம் அமைதியுற்று, ஒருவிதமான அலாதியான சாந்தப் புலனும் கிடைக்கும்.

ஆடி மாதம் ஒன்றாம் நாள், தட்சிணாயனப் புண்ணிய காலமாக, சூரியக் கோளத்தில் சற்று கதி மாற்றப் பாதையுடன் துலங்குகின்றது. அதாவது, சூரியன் கடக ராசியில் பிரவேசிப்பது தட்சிணாயனமாகவும் போற்றப்படுகின்றது அல்லவா! இத்தருணத்தில், சூரிய சக்திகள் உறையும் உடலின் பல பகுதிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். இதனை ஒட்டியே அந்தந்தக் காலப் பண்டிகைகளுக்கான பொங்கல், கொழுக்கட்டை போன்ற உணவு மாற்றங்கள் அளிக்கப்படுகின்றன.

மனித உடலிலும் அயனகதி மாற்றங்கள் உண்டு

தட்சிணாயனப் புண்ணிய காலத்தில் சூரியப் பாதையில் மாற்றங்கள் ஏற்படுவது போல, அவரவர் உடலிலும், மனதிலும் பல மாற்றங்கள் ஏற்படும். உத்தராயணம், தட்சிணாயனம் இரண்டையுமே புண்ணிய காலம் என்று அழைப்பதிலிருந்தே, இவற்றின் தெய்வீக மகத்துவத்தை நன்கு அறிந்து கொள்ளலாம்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் சுப மங்கள வாழ்க்கைக் காரியங்கள் அமைய வேண்டிய அயனம், பட்சக் குறிப்புகள் கூட நிறையவே அளிக்கப்பட்டுள்ளன. தேய்பிறையில் நோய் (அறுவை) சிகிச்சைகளும், வளர்பிறையில் சுப காரியங்களும் நிகழ்தல் வேண்டும். பூணூல் அணிவிக்கப் பெறும் உபநயன நிகழ்ச்சி, கண்டிப்பாக உத்தராயணத்தில்தான் அமைதல் வேண்டும் என்ற வகையிலான வாழ்க்கைக் காரியக் காலக் குறிப்புகளும் பலத்த ஆன்ம சக்திகளை மூலபலமாகக் கொண்டே அமைவனவாகும்.

நற்குழந்தை பிறக்க நலந்தரும் நல்வழிகள்!

அனைத்துக் குடும்பத்தினரும், குறிப்பாகப் புதுமணத் தம்பதிகள், பிள்ளைப் பேறு இல்லாமல் வருந்துகின்ற பலரும், தாம்பத்ய உறவிற்காகப் புனிதமான காலக் குறிப்புகளை கண்டிப்பாகத் தக்க பெரியோர்கள் மூலம் அறிதல் வேண்டும்.

காலற்ற நாட்கள் – கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
உடலற்ற நாட்கள் – மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்
தலையற்ற நாட்கள் – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

போன்றவற்றைப் பஞ்சாங்கம் மூலமாக அறிந்து இத்தகைய நட்சத்திர நாட்களைக் கண்டிப்பாகத் தாம்பத்ய உறவிற்குத் தவிர்த்தல் நன்று. இவை எல்லாம் உத்தமப் பெரியோர்களிடம் தனிப்பட்ட முறையில் அறிய வேண்டிய வாழ்க்கை நெறி முறைகளாகும்.

பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். கண், கை கால்கள் முடமின்றி நன்கு பிறக்க வேண்டும் என்பதற்கான நல்வழி முறைகளாகவே, காலற்ற நாட்கள், உடலற்ற நாட்கள், தலையற்ற நாட்கள், குருட்டு நாட்கள் போன்ற கால வரையறைகள் நிர்ணயித்து அளிக்கப்பட்டுள்ளன. இவற்றை உத்தமச் சற்குருமார்களிடமும், பெரியோர்களிடமும் கேட்டறிந்து நல்வழிமுறைகளை வாழ்க்கையில் கடைபிடிக்காதது கலியுக மனித குலத்தின் பெரிய குற்றம் அல்லவா.

இத்தகைய நாட்களில் கருத்தரித்துப் பிறக்கும் குழந்தைகள்தாம், பூர்வ ஜன்மக் காரணங்களுடனுமாக குருட்டுத் தன்மை, கை, கால் ஊனங்கள், மன ஊனம், உடல் ஊனத்துடன் பிறக்கின்றார்கள். ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமான குழந்தையைப் பெற பல அரிய நல்வழி முறைகளைப் புனிதமான குடும்ப இலக்கணத்திற்காக நம் முன்னோர்கள் அளித்துள்ளனர். இவற்றைப் போற்றிக் கடைபிடித்துப் பாதுகாக்க வேண்டியது வருங்கால சந்ததிகளுக்கு நாம் ஆற்றும் லட்சியக் கடமை ஆகும்.

நட்சத்திரப் பகுப்புகள் பல உண்டு. தக்க உத்தமர்களிடம் இவற்றுக்கான விளக்கங்களைப் பெறுதல் வேண்டும். உதாரணமாக சனிக்கிழமையும், ரேவதியும் கூடுவது “கூடாநாள்” ஆகிறது. இதற்காக ரேவதி நட்சத்திர நாளை வாழ்க்கையில் இருந்து ஒதுக்கிட முடியுமா? ஏனெனில் திருமணத்திற்கான சுபமுகூர்த்த நட்சத்திரங்களுள் ரேவதி சிறப்பான இடத்தைப் பெறுகிறது. எனவே, நட்சத்திரப் பொருள் பகுப்புகளை நன்கறிந்து கடைபிடித்திட வேண்டும்.

வினை அழுத்தங்களே பிறவி வடிவங்கள்

பூவுலகில் நடக்கும் அனைத்திற்கும் பூர்வ ஜன்மக் கர்ம வினைகள் என்று குறிப்பிடக் காரணமென்ன? கடந்த பிறவிகளில் அறிந்தோ அறியாமலோ செய்த காரியங்களின் விளைவுகள் என்பதாகவே, பொதுவாக, பூர்வ ஜன்மக் காரணங்கள் என்று குறிப்பிடுகின்றோம். ஒவ்வொருவருடைய கண், காது, மூக்கு போன்று அங்க அமைப்புகள் அனைத்தும் பூர்வ ஜன்மப் பிறப்புகளின் விளைவுகளாக அமைவதேயாம். தற்போது பிறவி எடுத்துள்ள ஒருவர், தன் பூர்வ ஜன்ம வினைகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றார்?

தற்போதைய மனிதப் பிறவியின் அமைப்பும், ஒவ்வொரு அங்கமும், பூர்வ ஜன்மக் கர்ம வினைகளின் விளைவுகளே ஆகும். இதில், ‘பிராரப்தம்” எனப்படுகின்ற நடப்புப் பிறவியில் கழிக்கப்பட வேண்டியவை, இந்த உடலுடன் ஒட்டி வரும், ஆகாமி எனப்படும் கர்ம வினைகள் வரும் பிறவிகளில் கழிக்கப்பட வேண்டியவை ஆகும்.

பித்ரு வழிபாடுகள் ஜன்ம நிவர்த்திக்குமே!

கடந்த பிறவிகளில் சேர்ந்து வரும் வலிவினை பளுவில், இப்பிறவிக்காக வந்தது போக, மிஞ்சி இருக்கும் பூர்வ வினைகள், வானிலும், இப்போதைய பிறவிக்கான உடலிலும் தங்கி இருக்கும். இத்தகைய வானியல் பதிவுகளே உடலிலும் கிரக உறைவிடங்களாக ஜாதகத்தில் கிரகப் பார்வைகள் மற்றும் திரிகோண, ஷஷ்டாம்சம் போன்ற கோண அம்சங்களாக இருக்கும். இவற்றை எல்லாம் இணைத்துச் சீரமைத்துத் தருபவைதாம் பித்ரு வழிபாடுகள் ஆகும்.

தர்ப்பணம், படையல், திவசம் போன்றவற்றில், தான, தர்மப் பூர்வமாக மற்றும் வழிபாட்டுப் பூர்வமாக எழுகின்ற கதிர்கள் பலவும். சூரியக் கதிர்கள் மூலமாக, வானில் மிதக்கும் மேற்கண்ட பூர்வ ஜன்ம வினை பந்தத்தை அடையும். இதுவே சூரிய, சந்திர சாட்சியாகவே அனைத்தும் நிகழ்கின்றன என்பதும், வானில் மிதக்கும் பூர்வ ஜன்ம வினைப் பந்தக் கட்டையும் குறிப்பதாகும்.

தர்ப்பணம் ஒரு தற்காப்பு வழிபாடுமே!

தர்ப்பணம் என்பது மூதாதையர்களுக்கான வழிபாடு மட்டுமல்ல! மேற்கண்ட வகையிலான விண்ணுலக வினை மோதல்களைத் தவிர்த்து மக்களைக் காத்து ரட்சித்திடவும் மிகவும் உதவும்.

எனவே, தர்ப்பணம் என்பது கலியுக மனிதனுக்கான ரட்சா வழிபாடும் ஆகிறது. கலியுகத்தில் தர்ப்பண சக்திகள், பூமி ஈர்ப்பு விசை, பித்ரு மண்டலங்களுடனான தொடர்புச் சாதனம், தற்காப்புச் சக்திக் கவசம் எனப் பல்வகைகளில் உதவுகின்றன. சூரிய உதயத்திற்குப் பிறகும், உச்சிப் பொழுதிற்கு முன்னுமாகவே அனைத்து வகைத் தர்ப்பணங்களையும் அளித்தலே உத்தமமான பித்ரு வழிபாடாகும். ஸ்ரீமன்சூரியநாராயண மூர்த்தி தாம் அனைத்துப் பித்ருக்களுக்கும் அதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லி சாட்சித் தர்ப்பணம்

தட்சிணாயனப் புண்யகாலமாகிய ஆடி மாத முதல் நாளில், 36 பெரிய மலை நெல்லிக் கனிகளை வைத்துக் கொண்டு, “பித்ருக்களின் பீடமாம் ஸ்ரீமன் சூரிய நாராயண மூர்த்திக்கு வந்தனம்! இந்த நெல்லிக் கனிகளில் அடியேனின் தாய், தந்தையர் வழியிலான 36 தலைமுறைப் பித்ருக்களும் ஆவாஹனம் ஆகி, பித்ருத் தர்ப்பணப் பூஜைகளை ஏற்று, ஆசீர்வதிக்கத் துணை புரிய வேண்டும்!”

என்று சங்கல்பித்துத் தர்ப்பணப் பூஜையைத் தொடங்குதல் வேண்டும்.

தாய், தந்தை இரு வர்கத்திலுமாக, 36 + 36 = 72 தலைமுறையினருக்கும், காலையில் நீராடி வெறும் வயிற்றில் தர்ப்பணம் அளித்திடுக. தற்போது பலரும் அமாவாசை நாட்களில் மூன்று தலைமுறைகளுக்கு மட்டும் தர்ப்பணம் அளித்து வருகின்றார்கள். கலியுகத்தில் பெருகி வரும் வல்வினைகளைப் பார்க்கையில் இது போதவே போதாது.

மேலும் வெறுமனே மூன்று தலைமுறைகளுக்கு மட்டும் தர்ப்பணம் அதுவும் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே தர்ப்பணம் அளிப்பதால், இதனால் கடந்த 108 தலைமுறைக்குள், பல தலைமுறை மூதாதையர்களுக்குத் தர்ப்பணங்கள் அளிக்கப்படாமல், பல நூறு, ஆயிரம் ஆண்டுகளாக, இவர்களுள் பலரும் “சாயைச் சரீரங்களோடே” மேலேயே தங்கி, நற்கதியையும் அடைய முடியாது, மறுபிறவிகளும் எடுக்க இயலாது, தலைகீழாகத் தொங்கிக் கிடக்கின்றார்கள்.

தர்ப்பண யாகம் ஆற்றுவீர்!

நெடுங்குடி, பூவாளூர், குருவி ராமேஸ்வரம், திருவிடைமருதூர், வேதாரண்யம், திருவள்ளுர், ராமேஸ்வரம், காசி, பிரயாக், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற பித்ரு முக்தித் தலங்களில், இந்த தட்சிணாயனப் புண்ய காலத்தில் 108 தலைமுறைகளுக்கும் 36+36 நெல்லிக் கனிகளை வைத்துத் தர்ப்பணம் அளிப்பது, “தர்ப்பண யாகம்” என அழைக்கப்படுகின்றது.

ஹோம குண்டத்தில் “பித்ருநலவள யாகம்” வளர்த்து, பிரண்டையை ஆஹூதியாக அளித்து, இந்த நறுமணத்தோடு, அக்னி மற்றும் 72 நெல்லிக் கனிகளின் சாட்சியாக 108 தலைமுறைகளுக்குக் கங்கை, காவிரி போன்ற புண்யத் தீர்த்தத்தினால் தர்ப்பணம் அளித்திடுக!

திருஅண்ணாமலையில் அபய மண்டபம் அருகில் உள்ள “பித்ரு முக்தித் தீர்த்தம்” உள்ளது. தட்சிணாயன நாளில் கிரிவலம் வந்து, 108 மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பது “மஹா தர்ப்பண யாகமாக” ஆகி, மிகவும் விசேஷமான பலன்களைத் தருகின்றது.

தட்சிணாயன நாளில், 108 மூலிகைகளை ஆஹூதியாக இட்டு, இந்த நறுமண ஹோமப் புகையை நுகர்ந்தவாறே தர்ப்பணம் அளித்தல் உடல், மன உள்ள சுத்திக்கும் உதவும். இந்தப் பார்த்திப தட்சிணாயனப் புண்ணியக் கால ஆடி முதல் நாள், ஏகாதசியில் பிறப்பதால், இதனை திருவள்ளுர், நவபாஷாணம் (தேவிபட்டினம்) போன்ற பெருமாளுக்குரிய பித்ரு முக்தித் தலங்களில் 36, 64, 108 மூதாதையர்களுக்கான தர்ப்பணத்துடன் அளிப்பது மிகவும் விசேஷமானதாகப் போற்றப்படுகின்றது. ஏகாதசியில் பிறக்கும் தட்சிணாயனம், பித்ரு பரிபாலன சக்திக்கு மிகவும் துணை புரிவதாகும்.

தட்சிணாயண மற்றும் உத்தராயணப் புண்ணியக் காலத் துவக்கத்தில் பித்ருக்களே சூரிய மண்டலத்தின் அருகில் வந்து வழிபடுவதால் நம்முடைய தர்ப்பண சக்திகள் அவர்களை எளிதில் சென்றடைய ஏதுவாகின்றது. எனவே இந்தத் தட்சிணாயணப் புண்ய காலத்தில் இருந்தாவது 36 + 36 மூதாதையர்கட்குத் தர்ப்பணம் அளிக்கின்ற விஸ்தாரமான நீத்தார் பூஜைகளைத் திறம்பட ஆற்றி நல்வாழ்விற்கு வழிவகுத்துக் கொள்வோமாக! தர்ப்பணத்திற்குப் பிறகு நெல்லிக்காய்களை ஊறுகாய் ஆக்கி திண்டு தோசை மற்றும் அன்னதானத்துடன் அளித்திடுக!

ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனப் புண்ணிய காலத்தில் நோய் நிவாரண சக்திகள் பரிணமிக்கின்றன. தட்சிணாயனம், உத்தராயணம் இரண்டிலுமே கேதார்நாத், பத்ரிநாத் தரிசனங்களைப் பெறுதல் வேண்டும்.

தட்சிணாயனப் புண்ணிய காலம் – கால சக்திகளின் வடிவுகளே நாள் பகுப்பு முறை

ஒரு தமிழ் வருடத்தை உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரு அயன காலப் புண்ணிய காலங்களாகவும், ஆறு ருதுக்களாக இரு மாதங்களுக்கு ஒன்றாக வருகின்ற பாங்காகவும் பல்வகைகளில் நமக்குப் பிரித்துத் தந்திருக்கின்றார்கள். பெண்கள் எந்த மாதத்தில் ருதுவாகின்றார்களோ, அதாவது பருவம் அடைகின்றார்களோ, அந்த ருதுக் காலத்தை வைத்து, பருவம் காலத்திலிருந்து திருமணம் ஆகும் வரை கடைபிடிக்க வேண்டிய வாராந்திரப் பூஜைகளும், திருமணத்திலிருந்து மாத விலக்கு இயற்கையாக நிற்கும் காலம் வரையில் கடைபிடிக்க வேண்டிய பூஜைகளும் நிச்சயமாக உண்டு.

ஆனால், இவற்றை எல்லாம் உரைவிக்கின்ற உத்தமப் பெரியோர்களைத் தேடி, நாடி அறிகின்ற மாண்பினை நம் பாரத சமுதாயம் இழந்து வருவது மிகவும் வேதனைக்குரியது ஆகும். இதனால்தான் பல குடும்பங்களிலும் பெண்களுக்குத் திருமணம் ஆகாமை, பிள்ளைப் பேறு இல்லாமை, திருமண வாழ்வில் பலத்தத் துன்பங்கள், தம்பதிகளிடையே வலுத்த மன வேறுபாடுகள், விவாகரத்து, மறுமணம், இளமையிலேயே கணவனை/ மனைவியை இழத்தல், கர்பப்பைக் கோளாறுகள், கர்பப் பையில் அறுவைச் சிகிச்சை, கர்பைப் பையை அறவே நீக்குதல் போன்ற பலவும் தற்காலத்தில் பெண் குலத்திற்கு நிறையவே ஏற்பட்டு வருகின்றன.

இவற்றிற்கெல்லாம் எளிமையான ஆன்மீகத் தீர்வுகள் நிறையவே உள்ளன. குடும்பப் பெண்கள் இவற்றை ஆரம்ப நிலையிலிருந்தே கடைபிடித்து வந்தால், ஜாதக ரீதியாக அமைகின்ற களத்திர தோஷம் எனப்படும் திருமண தோஷங்களான நாக தோஷம், ஆயுள் பங்கம், பித்ரு சாபம், பைரவ தோஷம், காலச் சந்தி தோஷங்கள், காலச் சர்ப்ப தோஷங்கள் போன்ற பலவற்றின் விளைவுகளையும் பெருமளவில் தணித்து விடலாம்.

எனவே, முதலில் அந்தந்த நாளில் பஞ்சாங்கத்தில் தினசரிக் குறிப்புகளைப் பார்த்தல் என மட்டுமில்லாது, ஒரு வாரம் அல்லது 10 நாளைக்குமான தினசரிக் குறிப்புகளை முன்னரேயே பஞ்சாங்கத்தில் பார்த்து நன்கு பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். நல்வகைக் கால சக்திகள் பதிந்த பெட்டகமே பஞ்சாங்கம் என்று நீங்கள் உணர்ந்தால்தான் பஞ்சாங்கத்தைத் தொடுவதும், பிரிப்பதும், படிப்பதும், பிறருக்குச் சொல்வதும் அனைத்துமே கால பைரவ வழிபாடுகளின் வழிமுறைகளே என அறியலாகும்.

பஞ்சாங்கத்தில் ஒரு நாளுக்கு உரிய வரியில் உள்ளனவற்றை முழுமையாகப் படிக்கக் கற்றுக் கொள்வீர்களேயானால், தமிழ் மாதத் தேதி, கிழமை, எந்த வகை ருது, எந்த வகை அயனம், நட்சத்திரம், யோகம், கரணம், சித்தாதி அமிர்த யோகங்கள், பண்டிகைக் குறிப்புகள் போன்ற பல காலச் சக்திகளை நீங்கள் ஸ்பரிசித்தவர்கள் ஆகின்றீர்கள். இவ்வாறு பஞ்சாங்கத்தில் ஒரு வரியைப் படிப்பதற்கே கால ஸ்பரிச பூஜா பலன்கள் கிட்டுகின்றன என்றால் ஒவ்வொரு நாளின் மகத்துவத்தை என்னென்றுதான் விளக்குவது!

எத்தனை கோடி ஆண்டுகள் வந்து சென்றாலும், எந்த ஒரு நாளிலும் அமைகின்ற தமிழ் மாதத் தேதி, கிழமை, எந்த வகை ருது, எந்த வகை அயனம், நட்சத்திரம், யோகம், கரணம், சித்தாதி அமிர்த யோகங்கள், பண்டிகைக் குறிப்புகள் அனைத்துமே மீண்டும் ஒரே மாதிரியாக எந்நாளிலும் ஒரு போதும் திரும்பி வராது, எனவே, உங்கள் வாழ்நாளில் ஒரு நாளின் கால அம்சங்கள் நன்கு பயன்படுத்தாமல் இழந்து விட்டால், இழந்தது இழந்தது தான், மீண்டும் எந்த ஜன்மத்திலும் திரும்பி வராது என்பதை மனதில் ஆழ வேருன்றி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இந்த இதழில் இங்கு இந்நேரத்தில் இதனைப் படிக்கும் போதோ, கேட்கும் போதோ கிடைக்கின்ற உத்வேகம், அடுத்த சில நிமிடங்களிலேயே மறைந்து  விடும். இதற்குக் காரணம், மனித மனமானது எப்போதும் உண்மையான இறைமைப் பொருளைத் தவிர, பிறவகைப் பொருட்களிலேயே ஊர்கின்றது. பணப் பிரச்னைகள் , குடும்பத் துன்பங்கள், அலுவலகப் பணிகள், உடல் பிணிக் கவலைகள், பாசத் திவலைகள் போன்றவற்றிலேயே மனித மனம் உழல்வதால், இனியேனும் நம் வாழ்நாளில் ஒவ்வொரு விநாடிக் காலத்தையும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சுயம்பாகத் தோன்றுகின்ற உத்வேகம் அடுத்த சில நிமிடங்களில் உள்ளேயே அழுந்தி விடுகின்றது.

மனிதன் ஒரு நாளில் பாதிக் காலத்தில் சூரிய கிரணங்களோடுதான் வாழ்கின்றான் என்பதைப் பலரும் உணர்வதில்லை, காண்பது, படிப்பது, அறிவது, உணர்வது, உயிர்ப்பது போன்ற அனைத்திற்குமே சூரிய ஒளிச் சக்திகள்தாம் தேவைப்படுகின்றன. அடுத்த அரை நாள் பகுதி சந்திர, நட்சத்திர ஒளியிலும், மின்சாரச் செயற்கை ஒளியிலுமாக வாழ்க்கை கரைந்து விடுகின்றது. நகர்ப் புறப் பகுதியிலோ இரவிற்கு இயற்கையாக உரித்தான இரவின் தன்மைகளைக் காணாமலேயே, செயற்கை ஒளியிலேயே மனிதன் இரவைக் கழிப்பதால்தான் கண் சம்பந்தமான கண் வகைப் பிணிகள் கிட்டத்தட்ட மனித உலகிற்கு நாற்பது வயதிற்குள்ளேயே நூற்றுக்கு நூறு சதவீதம் வந்து விடுகின்றது.

கிராமப் புறங்களில்தாம் மக்களின் கண்கள் இயற்கையான இருளுக்கும் பழகி இருளிலும் காணும் ஒளி வளத்தை நிலை நிறுத்திக் கொள்கின்றார்கள். கிராமங்களிலும் மது, புகையிலை போண்ற தீய வழக்கங்கள் தொற்றிக் கொண்டு இறைமையையும், ஆரோக்யத்தையும் பாதிக்கலாகின்றன. இரவில் ஒளிரும் சந்திரனும் சூரிய சக்திகளின் விளைவுகளை அளிப்பவரே, சூரியனும் நம் கண்களால் நன்கு காண வல்ல ஒரு நட்சத்திர வகையுமாகும். சூரிய கோளத்தின் அசைவுகள் ஒவ்வொன்றும் தனித்த மனிதனின் வாழ்விலும் ஒட்டு மொத்தமாக மனித சமுதாய வாழ்விலும் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. தட்சிணாயனப் பூஜைகளில் நோய் நிவாரண சக்திகள் நன்கு பூரிக்கின்றன.

தலைமுடியின் தாத்பர்யங்கள்

பெண்கள் தங்கள் புருவத்தைச் சிரைத்தால் மாங்கல்ய பலம் குறையும், ஆண்களுக்கு குடுமி வகை தலைமுடி அமைப்பினால் நல்ல புத்திப் பிரகாசமும் கூர்மையான அறிவும் இயற்கையாகவே உண்டாகும், குழந்தைகளின் முதல் முடியை ஆலயத்திற்கே அர்ப்பணிக்க வேண்டும்.

தலைமுடியில் உள்ள முடிச்சுகள் உணர்த்தும் அர்த்தங்கள்!

கலியுகச் சராசரி மனிதன், தன் உடலில் பல அங்கங்களைப் பற்றியே சரியாக அறிந்து கொள்ளாமல் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகின்றான். அங்கங்களுக்கான விளக்கங்கள் எனில், மருத்துவ ரீதியாக அறிதல் எனப் பொருளல்ல! பூர்வ ஜென்ம விளைவாக அமைபவையே அங்க அமைப்புகள்.

“ஏதோ ருசிக்காக நன்கு சாப்பிடுகின்றோம், உடலில் அது சக்தியாகின்றது. எஞ்சியது மலமாகவும் சிறுநீராகவும் கழிகின்றது!” என்றே பலரும் உணவு உண்ணும் காரியத்தைச் சர்வ சாதாரணமானக் காரியமாக ஆக்கி விட்டார்கள். பிரயாணத்தின் இடையில் ஏதாவது கடையைக் கண்டால் கூல்டிரிங்கஸ் குடிப்பது, தேவையற்ற வகையில் இயந்திரம் போல டீக் கடையைக் கண்டாலேயே உடனேயே டீ, காபி குடிப்பது, அர்த்தமில்லாமல் பாக்கை மென்று தின்பது, சிப்ஸ், மிக்சர் என்றால் மனம் அலை பாய்தல் – என்பதாக, புனிதமான வாய்ப் பகுதியை வெறும் “தின்னும் மெஷினாகவே” கலியுக மனிதன் ஆக்கி வருவது மிகவும் அவலமானதாகும். “நல்லதும், கெட்டதும் ஒரே அவயம் மூலமாகவும்” மனித வாழ்க்கையில் நிகழ்வதுண்டு. இந்த ஒரு வாக்கியத்தைப் பற்றியே நன்கு ஆத்மவிசாரம் செய்து பார்த்தால், நீங்கள் அறியாத அளவில் எண்ணற்ற ஆன்ம விளக்கங்கள் புலப்படும்.

ஆக்கம் தரும் சூரிய சக்திகள்

இவ்வகையில் முடி என்பது தலை, புருவம், காது, கால், பாதம் வரை பல இடங்களில் அமைகின்றது. முடியை வைத்தே வயதையும், ஜோதிடப் பூர்வமானதான ஆயுளையும் கணித்துடலாம். முடி என்பது உடலில் ஆக்கப் பூர்வமான சக்திகளையும் குறிப்பதால், எல்லா நாட்களிலும் நினைத்தபடி முடி வெட்டுதலோ, ஷேவ் செய்து கொள்தலோ கூடாது. முடி வெட்டுதலைத் தவிர்க்க வேண்டிய நாட்களை நன்கு அறிந்து கொள்ளுங்கள். சூரிய சக்திகள்தாம் மனிதனுக்கு தினமுமே ஆக்கம் தருபவையாம். எனவே ஆக்க சக்திகள் நிறைந்த ஞாயிறன்று விடுமுறை தானே எனக் கருதி முடி வெட்டுதல், நகம் வெட்டுதல் கூடவே கூடாது.

எக்காரணம் கொண்டும் ஆணோ, பெண்ணோ புருவ முடியை ஒரு போதும் சிரைத்தல் கூடாது என்பது வேதப் பூர்வமான, சாத்திரப் பூர்வமான நியதி மட்டுமல்லாது, ஆரோக்யப் பூர்வமான நியதியும் கூட, ஆணோ, பெண்ணோ புருவத்தைச் சிரைத்தல், அட்ட தரித்திரத் தீயசக்திகளும் வீட்டை, செல்வத்தைச் சூழ்ந்து வந்து ஆக்கிரமித்துக் கொள்ளும், கணவனுடைய ஆயுள் சக்திகளையும் குறைக்கும்.

மேலும், இதனால் கணவனுக்கு மனசஞ்சலங்கள் அதிகமாகித் தீயவழிகளின்பால் செல்லும் நிலை ஏற்படும். இதற்குக் காரணமும் உண்டு. கணவனையே கண் கண்ட தெய்வமாகப் போற்றுவதான, பாரதப் பண்பாட்டின்படி இல்லற தர்மம் நிலவுவதால், இதன் மூலம் மனைவிக்குப் பல தீர்கப் புலப் பலன்கள் செறிகின்றன. பூர்வ ஜன்மப் பூர்வமாகவே கணவன் – மனைவி உறவுத் திறம் அமைகின்றது. இதனையே “திருமணங்கள் சொர்கத்தில் (விண்ணுலகப் பூர்வமாக) நிச்சயிக்கப்படுகின்றன!” என்பதாக உரைக்கின்றனர். மனைவியின் முகத்தை நோக்குகின்ற கணவனுக்கு, பூர்வ ஜன்மக் கோர்வையாலும், மனைவியின் பதிவிரத நோன்புப் பாங்காலும், முன் நெற்றி, மத்திய நெற்றி மற்றும் மாங்கல்யத்தில் செறியும் மங்களகரமான மூன்று தள வகைக் குங்கும சக்திகளால் கணவனுக்கு ஆயுள் சக்தி விருத்தியாகும். இதில் நெற்றிப் புருவத்தைச் சிரைப்பதால் இத்தகைய மங்கள சக்திகள் ஊனமுற்று, கணவனுக்கு ஆயுள் குறைவையும், மன சஞ்சலங்களையும் தந்துவிடும்.

எனவே பெண்கள் தங்கள் தலை முடியின் முன் நெற்றி முடிகளையோ, புருவ முடிகளையோ வாழ்நாளில் ஒரு போதும் கத்தரித்தல் கூடாது. இதுவும் கணவனுக்கு மூர்க்கக் குணத்தையும், தீய பழக்கங்களையும், ஆயுள் குறைவையும் தந்து விடும். உடலின் பல பகுதிகளிலும் வளரும் முடி அந்தந்த அவயங்களின் உள்நாளங்களோடு பிணைவதால், இவற்றுக்கான முடி மருத்துவ விளக்கங்களும் நிறைய உண்டு.

உடலின் பிற பகுதிகள் அடிபட்டாலோ, வெட்டுப்பட்டாலோ, கத்தரித்தாலோ வலியும் வேதனைகளும் ஏற்பட்டுக் காயமும், ரத்தமும் பீறிட்டிடும் அல்லவா! ஆனால் மனித உடலில் நகமும், முடியும் மட்டுமே மேற்கண்ட உபாதைகளின்றி எளிதில் கத்தரிக்கப்படுவதாக அமைந்துள்ளது. இதற்கான காரணங்கள் எண்ணற்றவை. பிற அங்கங்கள் வெட்டுபட்டால் அவை ஜீவ சக்திகளை இழந்து விடுகின்றன. ஆனால் நகமும், முடியாகிய ரோமமும் வெட்டுப்பட்ட பிறகும், கத்தரிக்கப்பட்ட பிறகும் அவரவருடைய ஜீவித சக்திகளில் சில அம்சங்களைத் தாங்குவதால், பில்லி சூனியம், ஏவல் தீய மந்திரங்களுக்கு ஆட்பட்டு அந்தந்த மனிதரைப் படாத பாடுபடுத்தி விடும். எனவே, உதிரும் முடியையும், நகத்தையும் பிறர் அறியாவண்ணம், காணா வண்ணம் நீர்த் தாரைகளில், ஆழமான குழியில் குறித்த நாளில் சேர்த்திடுக.

முடியில் செறியும் தெய்வீக சக்திகள்!

ஆண்கள் குடுமி வகை அமைப்பில் முடியை வைத்திருத்தல் நல்ல புத்திப் பிரகாசம், கூர்மையான அறிவு போன்ற பல நல்ல அம்சங்களை இயற்கையாகவே பெற்றுத் தருவதாகும். சூரிய அரை வட்டம் என்பதாக, தலையின் மேற்பகுதியில் அரை வட்டப் பகுதியை விடுத்து, பின் குடுமி வைக்கும் முறையால், கபாலத்தில் “பாஸ்கர ஆகர்ஷண சக்திகளும், சந்திர ஆதித்ய சக்திகளும்” நன்கு விருத்தியாகி, ஞான வளத்தையும், சுக்ர தசையால் பெறும் சாசுவதமான செல்வ வளத்தையும் பெற்றிட உதவும்.

பிறந்த குழந்தைகளுக்கான முதல் முடி இறக்குதலை நேர்த்திப் பிரார்த்தனையாக ஆலயத்தில் வைப்பது உண்டு. கருப் பையிலிருந்து சிசு தாங்கி வரும் தலைமுடி தேவ சக்திகளைப் பூண்டு, “தேவ முடி” என்ற பெயரைப் பெறுகின்றது. கைக் குழந்தையின் முதல் முடியானது இயற்கையிலேயே நறுமணம் உடையது. சூரிய சந்திர வெளிச்சமும், நிழலும் படாது கருப்பை (மூல)க் கருவறைக்குள் வளர்கின்ற சிசுவின் முடியில், அதியற்புதமான நாளபுலச் செறிவுச் சக்திகள் பதிந்துள்ளன.

குழந்தைகளின் இம்முதல் முடியை இறைவனுக்கு அர்ப்பணிப்பது தான் உத்தமமானதாகும். குழந்தையின் முடி நேர்த்திக்காகத் தலை முடி வளர்கையில், தலை முடியில் முடிச்சுகள், சிக்கல்கள், ஜடைகள் ஏற்படுவது உண்டு. பிறந்த குழந்தை ஒரு வயது வரை பரிபூரணமான பூர்வ ஜன்மத் தொடர்புகளைத் தாங்கி வருவதால், இவற்றுக்கான பல செறிந்த அர்த்தங்களும் உண்டு. இவையாவும் தேவ ரகசியங்களாகும். தான் அறிந்தாலும் இவற்றை வெளியிடுதல் கூடாது என்பதற்காகவே, குழந்தைக்கு ஒரு வயது வரை மழலையே நிலவும். இந்த மழலை மொழியிலும் எண்ணற்ற அர்த்தங்கள் தொனிக்கின்றன, அறிந்து பயன் பெறுவார் யாருளர்?

ஒரு வருடக் குழந்தைக்கு ஏற்படும் இந்த ஒவ்வொரு வகைமுடிச் சிக்கலுக்கும் நிறையக் காரண, காரியங்கள் உண்டு. குழந்தையின் பின் தலையில் சடை ஏற்பட்டால் பெற்றோர்களுக்கு  நிறையப் பித்ருத் தர்ப்பணப் பாக்கி நிறைய உள்ளது என்று பொருளாகும்.

எனவே, ஒரு வயதிற்குள் உள்ள குழந்தைக்குத் தலையில் பின் முடிப் பகுதியில் சடை விழுந்தால், உடனடியாகக் குழந்தையின் தகப்பனார் நெடுங்குடி, பூவாளுர், ராமேவரம், குருவி ராமேஸ்வரம், திருவிடைமருதூர், வேதாரண்யம் போன்ற பித்ரு முக்தித் தலங்களில், எள்ளும் நீரும் வார்த்து, குறைந்தது 36 தலைமுறைகளுக்குத் தர்ப்பணம் அளித்து, பித்ருக்களுக்குப் ப்ரீதி தருவதான எள்ளுருண்டை, அதிரசம், வடை, பஜ்ஜி, வாழைக்காய் மற்றும் புடலங்காய்ப் பொரியல், பிரண்டைத் துவையல், பச்சரிசி சாதம், பருப்புப் பாயசம், அப்பளம் போன்ற பல பண்டங்களையும் ஒரு பெரிய நுனி வாழை இலையில் வைத்து, இதே அளவில் குறைந்தது எட்டு ஏழைகளுக்கு நன்றாக வயிறு நிரம்பும்படி தானம் அளித்தல் வேண்டும்.

கருப்பையில் குழந்தை வளர்கையில் ஒவ்வொரு முடியும், கபால நாளங்களும் பல்வேறு தேவ லோகங்களோடு தொடர்பு கொள்பவை ஆதலின், பித்ரு மண்டல அம்சங்களும் முடிப் பரிபாலனத்தில் அடங்கும்.

பெரும்பாலும், “அட்ட பாசப்” பூர்வ ஜன்ம பந்தத் தன்மை காரணமாக, அவரவருடைய முந்தையத் தலைமுறையினரே மீண்டும் வந்து, பூவுலகில் கர்ம வினைப் பாக்கிகளைத் தீர்ப்பதற்காக, அதே குடும்பத்தில் பிறப்பதால், பிறந்த குழந்தையின் முதல் முடி பல தேவ லோக சம்பந்தங்களைக் கொண்டிருப்பதாகும். இதனால்தாம் முதல் முடியை இறைச் சன்னதியிலேயே அர்ப்பணிப்பது விசேஷமாகிறது. ஆனால் இறைவனுக்குக் காணிக்கை அளிக்கும் முடியை எவ்வாறு “பகுபதப்படுத்தித் தீர்வளிப்பது” என்பதற்கான விளக்கங்களைத் தக்க சத்குரு மூலம் அறிதல் வேண்டும்.

கோயிலில் இட்ட முடியை ஏலத்தில் விட்டு அதனை மீண்டும் பயன்படுத்துவது என்பது பலத்த சிக்கல்களைக் கொண்டதாகும். இவ்வாறு நேர்த்தியாக அளிக்கப் பெற்ற முடியில் இருந்து செய்யப்படும் “சௌரி, சடை, டோபாவை” அணிதலால் கடுமையான கபால நோய்கள் ஏற்படும்.

ஆகஸ்ட் 2005 பௌர்ணமி நாள்: 18.8.2005 வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின், 19.8.2005 வெள்ளிக்கிழமை அதிகாலை 3.15 மணி முதல் இதே வெள்ளிக்கிழமை இரவு 11.23 மணி வரை திருக்கணிப் பஞ்சாங்கப்படிப் பௌர்ணமித் திதி நேரம் அமைகின்றது.

2.8.2005 செவ்வாய்க் கிழமை நள்ளிரவுக்குப் பின், 3.8.2005 புதன் கிழமை விடியற்காலை 3.50 மணி முதல் 4.8.2005 வியாழக்கிழமை காலை 6.9 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆடி மாதச் சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள்: 3.8.2005 புதன் கிழமை இரவு

அமுத தாரைகள்

குமரகுருபரருடைய “மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழ்த் துதிகளை” ஓதியவாறு இம்மாத சிவராத்திரி அன்று கிரிவலம் வருதல் விசேஷமானது. பலரும் ஒன்று சேர்ந்து சத்சங்கமாக ஒருங்கே கிரிவலம் வந்து, ஆங்காங்கே விளக்கு வெளிச்சத்தில் “மீனாட்சி அம்மைப் பிள்ளைத் துதிகளை” ஓதிட,  ஏனையோர் இதைக் கேட்டு ஓதி வலம் வருதலால், தம் பிள்ளைகளைப் பற்றிய கவலைகளே எப்போதும் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற தன்மைகளும் தணியும்.

கோலமிட்டுக் கோலாகலமான வாழ்வைப் பெறுவீர்!

விருதுநகர் – சிவகாசி மார்கத்தில், விருதுநகரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள திருத்தங்கல், 108 வைணவத் திருப்பதிகளில் ஒன்று. ரயில் நிலையம் உள்ளது. மிகவும் சிறிய பாறைத் தலம் என்றவுடன், “மலையா?” என மருகி விடாதீர்கள்! சமன் பூமியை விடச் சற்று உயரத்தில் உள்ளது. அவ்வளவே! சிறு பாறையின் மேல் கோயில் இருக்கின்றது என்பதே அறியாத வகையில், அகன்ற பெரிய படிக்கட்டுகள் உள்ளன. சிவாலயம் வழியாகவும் பெருமாள் ஆலயத்தை அடையலாம். பெருமாள் கோயிலுக்கெனத் தனி வாசல் உண்டு. படிகள் முழுதும் நிறையக் கோலமிட்டு, செங்காவி பூசுதலும் மங்களகரமான வழிபாடே! காரைக்குடி – கீழாநெல்லிக்கோட்டை – அறந்தாங்கி மார்கத்தில், கீழாநெல்லிக் கோட்டை அருகே உள்ள அமாவாசைத் தர்ப்பணத்திற்கான பித்ரு முக்தித் தலமான நெடுங்குடி ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் போல, சற்று உயரத்தில், சிறுவர்களும், முதியவர்களும் ஏறிச் செல்லும் வண்ணம் வழிபட வல்ல தலம்.

பித்ரு முக்தித் தலமுமாம் திருத்தங்கல்

ஆயுள்காரக மண்டல மாமுனியாம் மார்கண்டேயரும், பித்ரு மண்டல வாசியான பிருகு மஹரிஷியும் மூலத்தானத்தில் பெருமாளை துதிக்கும் தியானத்தில் இங்கு உறைகின்றனர். இவ்விரு மஹரிஷிகளும் திருத்தங்கலை பித்ரு முக்தித் தலமெனப் போற்றுகின்றனர். கணவன் தீய வழக்கங்களில் இருந்து விடுபட்டு, நன்னிலைக்கு மீளவும் இவ்வாலயப் படிக்கட்டுகள் முழுதும் பச்சரிசி மாக்கோலமிட்டு வழிபடுதலை நேர்த்தியாக கொண்டு ஆற்றி வரவேண்டும். ஆலயத்தினுள் நீர்க் கோலமிட்டு, சாம்பிராணி தூபமிட்டு வழிபடுதல் மனசஞ்சலங்களை நீக்கும். மிகச் சிறிய பாறை ஆதலின் எளிதாகக் கிரிவலம் வந்திடலாம். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வருதல் மகத்தான பலன்களைத் தரும். பித்ருக்களின் வானியல் ஆகர்ஷணத் தலம்.

உத்தராயணத்திலிருந்து, தட்சிணாயத்திற்குள் அமையும் ஆறு வ்யதீபாத யோக நாட்களில், கும்பகோணம், சக்கரப் படித்துறை, தென்காசி, பூவாளூர், வேதாரண்யம் அருகே கோடிக்கரை, திருக்கழுக்குன்றம் சங்குத் தீர்த்தம், கீழ்சூரிய மூலை, மதுரை அருகே திருப்பூவனம் போன்ற பித்ரு முக்தித் தலங்களில், அன்னத்தைப் பிண்டமாக உருண்டையாக வைத்து, அன்ன சாட்சியாகத் தர்ப்பண வழிபாடு ஆக்கி பால், தயிர், வெண்ணெய், நெய் ஆகிய நான்கு பாலமுதப் பண்டங்களாலான உணவுப் பண்டங்களைத் தானமாக அளித்து வருதலால், பெற்றோர்களை அவமதித்த, வேதனை அடையச் செய்த, வருத்தமுற்றுக் கவலைகளே அடையக் காரணமாக இருந்த பல பாவ வினைகள் ஓரளவேனும் கழியப் பரிகார வழிகள் கிட்டும். இதிலும் பரிகார வழிகள் கிட்டுமே அன்றி, பூரணமாக நிவர்த்திக்கு மேலும் அடுத்தடுத்தான வழிமுறைகளும் உண்டு என அறிக! இவற்றை முறையாக ஆற்றி வந்தால்தான், ஓரளவேனும் பாவ வினைகள் தணியலாகும், ஏனைய நல்வழிமுறைகளும் புலனமாகும். பெற்றோர்கள் மனம் வருந்தினால், மனதில் பிரளயமே ஏற்பட்டுக் குடும்பத்தைப் பல தலைமுறைகளுக்கும் வாட்டுவதாகும்.

திருந்துதேவன்குடி

“சிவபூஜையில் கரடி” என்ற சிவ வாக்கியத் தொடர் ஒன்று உண்டு. நடைமுறையில் இது தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது. “பூஜையில் கரடி போல வந்து இடையூறு செய்வதாகத் தவறாக அர்த்தமாக்கிப்” பொருள் கொள்ளப்படுகிறது. “கரடி” ஒரு சாதுவான பிராணி. மேலும், மனிதர்களைப் போல, கரடி நிச்சயமாகப் பூஜைக்கு ஒரு போதும் இடையூறு செய்யாது. “விதி இருந்தாலன்றித் தீண்டுதல் கிடையாது!” என்ற நாக விதி போன்று விலங்குகள் ஒரு போதும் தமக்குரிய விலங்கின மாண்புகளை மீறுவது கிடையாது. கலியுக மனிதனே மனித குல மாண்பான பக்தி, கற்பு, சத்தியம், நேர்மை, நாணயம் அனைத்தையும் சுகத்திற்காக, பணத்திற்காக, சிற்றின்பத்திற்காகத் துறந்து, தறி கெட்டு வாழலாகின்றான், “சிவ பூஜையில் கரடி” என்பதற்கான விளக்கங்கள் ஏற்கனவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் அளிதுள்ளோம். கரடி ரூபரான ஜாம்பவானும் திருத்தங்கல் தல புராணத்தில் பங்கேற்பதால், “சிவபூஜையில் கரடி” என்பதற்கான சித்தர்கள் அளிக்கும் கூடுதல் விளக்கங்களை இவ்விதழில் அளிக்கின்றோம்.

மருந்துண்ண, மருத்துவ சிகிச்சைக்கு உரிய ஆயில்ய நட்சத்திரத் திருநாள்

மிகவும் இன்றியமையாத மூலிகை மருந்துகளை சித்த, ஆயுர்வேத வைத்ய முறைகளில், ஆயில்ய நட்சத்திரத்தன்று ஸ்புடம் செய்வர். கும்பகோணம் திருவிசநல்லூர் அருகே உள்ள திருக்கற்குடி ஸ்ரீஅருமருந்து நாயகி அருளும் சிவாலயத்தில், மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திர நாளில் நோய் நிவாரணத்திற்காக “மிருத்யுஞ்ஜய ஹோமம்” மற்றும் நோய் நிவாரணங்களுக்குமான வைத்ய சக்திகளை நன்கு நிவர்த்தி செய்து தருவதுமான ஹோமங்களை நடத்துதல் சிறந்த இறைச் சமுதாய இறைப்பணியாகும். இங்கு அம்பிகையே அருமருந்து நாயகி எனப் பெயர் பெற்று அருள்தல் மிகவும் சிறப்பானது அன்றோ! எனவே, மாதந்தோறும் இத்தலத்திலும், மேலும், வைத்யநாத ஸ்வாமி, வைத்தீஸ்வரர் போன்ற தலங்களிலும் நோய் நிவாரண சக்தி ஹோம வழிபாடுகளை ஆற்றி, இறைவனைத் தரிசித்து நற்பலன்களை அடைவீர்களாக, இத்தகைய நோய் நிவாரண சக்தி ஹோமத்தில் 36 வகையான மூலிகைகளை ஆஹுதிகளாக அளித்தல் மிகவும் விசேஷமானது.

ஆஞ்சநேயர் குரங்கு வடிவில் வந்தாற் போல, ஜாம்பவான், கரடி வடிவில் வந்த சிவோத்தம விஷ்ணுப் பிரியர், பெருமாளுக்குப் பிரியமான பக்தர், அனுமார் போலத் தினமும் திருக்கயிலாயத்தில் ஈஸ்வரனையும், வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியையும் அன்றும், இன்றும், என்றுமாய்த் தரிசித்து வருபவர். இவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிவாகம நியதி யாதெனில், யாரொருவர் ஆத்மார்த்தமாகச் சிவபூஜை ஆற்றுகின்றாரோ, அவர்களுக்கு உடனடியாகத் தாமே நேரடியாகத் தோன்றி உத்தமச் சிவநிலை அனுபூதிகளை உணர்விக்க வேண்டும் என்பதாகும். இவ்வாறாக எண்ணற்ற சிவோத்தமர்களுக்குச் சிவபூஜையில் உத்தம சிவாத்மிக அனுசரணங்களை உய்வித்தவர். எனவே, ஆத்மார்த்தமாகச் சிவபூஜை ஆற்றுவோருக்கும் தம்மைச் சிவாத்மிகத்தில் உய்விக்க வந்தவர் ஜாம்பவான் மூர்த்தியே என அறிவர். பிறருக்கோ சிவபூஜையில் (ஏதோ) கரடி புகுந்தாற் போல் தோன்றும். பக்குவமின்மையால் உண்மையை அறியாத நிலை என்பதே இதன் பொருளாகும். தற்போது சிவபூஜைக்கு இடையூறாகக் கரடி வருவதாகத் தவறாகப் பொருள் கொள்கின்றனர். எனவே, சிவபூஜையில் கரடி நுழைவது நன்றே! இவ்வாறு நடக்க வேண்டும் என்று ஏங்குவதும் உத்தமமான பிரார்த்தனையே!

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ஜாம்பவானின் மகளாம் ஜாம்பவதியைத் திருமணம் புரிந்து கொண்ட புராண அனுபூதிகளில் ஒரு சிலப் புராண வைபவங்களையே பலரும் அறிவர். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் ஒவ்வொரு அசைவிற்கும் கோடானு கோடி காரணங்கள் உண்டு எனப் பரிபூரணமாக உணர்ந்தவர்களில் பாண்டவப் பெருந்தகை சகாதேவனும் ஒருவன். சியமந்தகமணி எனும் தினமும் எட்டுப் பாரம் எடை நிறையப் பொன் தரும் விலை மதிப்பற்ற மணியை எடுத்ததான பழி ஸ்ரீகிருஷ்ணரின் மீது விழுந்தது. ஆனால் இதனையும் இறைத் திருவிளையாடலாக ஆக்கியவர் கிருஷ்ணரன்றோ! இம்மணியைத் தேடிச் செல்லும் சாக்கில்தான் ஜாம்பவானைக் கண்டிட, ஜாம்பவானுக்கும் ஸ்ரீகிருஷ்ண தரிசனம் கிட்டியது. ஸ்ரீராமரின் திரேதாயுகம் முதல் பற்பல யுகங்களிலும் தொடர்ந்து பூவுலகில் உறைபவரே ஜாம்பவான் எனில் காலத்தைக் கடந்த ஞானயோகி மூர்த்தி அம்சங்களைப் பூண்டவர் தாமே!

அகில உலகத்திற்குமான சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரத் திருத்தலம்

அன்றும், இன்றும் என்றுமாய்க் கலியுகத்திற்கான பல்வகைக் காலப் பகுப்புகளும் சூக்குமமாக நிர்ணயிக்கப் பெறும் தலமே கும்பகோணம் அருகே சோழபுரத்தில் உள்ள ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயத் திருஉண்ணாழி வளாகமாகும். ஆனால் இதன் மகத்துவத்தைக் கலியுக மக்கள் சற்றும் அறியாமையால், முற்காலத்தில் பிரம்மாண்டமான ஆலயமாகப் பொலிந்த இத்திருக்கோயில் தற்போதோ அடையாளமே தெரியாதவாறு ஜீரணமாகி உள்ளது. இதனை நன்கு சீரமைத்துப் பரிமளிக்கச் செய்திடில் அகில உலகத்தின் அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் “ஈஸ்வரரான பைரவேஸ்வரருக்கு” மிகவும் ப்ரீதி தந்து நாட்டின், அகிலத்தின் மகத்தான பைரவத் தலமாகப் பிரகாசிக்கும்.

பூமியின் மேல் யோகமாக மிதக்க உதவும் “பீதாம்பர யோகம்”
உண்மையில், உலகியல் பொருட்களில் ஒன்றுக்கொன்றின் இடையே உள்ள ஈர்ப்பு சக்திகளையே “மாயை” என்பதாக, “எப்போதும் எப்பொருளும் மாற்றமடைந்து” கொண்டிருப்பதாக உத்தம ஆன்மீக விளக்கங்களில் உரைக்கின்றனர். மாயைக்கும் புவி ஈர்ப்பு விசைக்கும் நிறையத் தொடர்பு உண்டு. திருஅண்ணாமலை, செஞ்சியின் சந்திர கிரி மலைத் தொடர், வெள்ளியங்கிரி, பொதிய மலை, திருக்கயிலாயம், பர்வத மலைத் தொடர் போன்ற இடங்களில் சில அபூர்வமான குகைகளில் புவி ஈர்ப்பு விசையற்ற “பீதாம்பர” யோகப் புலப் பூமிகள் உண்டு. இதில் தியானிப்போர் அந்தரத்தில் மிதப்பர்.

ஸ்ரீகோடிசூர்யபிரகாசர் பயரி

நாம் விஞ்ஞானத்தில் காணும் “meteors, comets” பலவும் ஜீவன்களின் வினை முடிச்சுகள் நிறைந்துள்ள கிரந்தி லோக வடிவுகளே! இவற்றுடன் விஞ்ஞானத்தார் பரிசோதனை என்ற பெயரில் மோதுதல் கூடாது. சமீபத்தில் “tempel 1” என்ற comet உடன் செயற்கை விண்கப்பல் மூலமாகக் குண்டை வெடித்து மோதியது அதர்மமானது. இதன் விபரீதங்கள் அந்தந்த நாட்டு மக்களையும், உலக ஜீவன்களையும் பெரிதும் பாதிக்கும். பரிகாரத்துக்கு அப்பாற்பட்ட பெருவினை இதுவெனினும், உடனடியாகத் தக்கப் பெரியோர்களை நாடி இவற்றுக்கான பரிகாரங்களை ஓரளவேனும் பெற்றாக வேண்டும். கீழ்சூரியமூலைத் திருத்தலம். பயரி சூர்யப் பிரகாசர் ஆலயங்கள், கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரம் ஸ்ரீசூரிய நாராயண மூர்த்தி போன்ற ஆலயங்களில் ஒரு மண்டல கால அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்தி, இவற்றுக்கான பரிகார நல்வழி முறைகளைத் தரவல்ல உத்தம சத்குருவை நாட வேண்டிய கடமை பூலோகத்தார் அனைவருக்கும் குறிப்பாக, பாரத வாசிகளுக்கு நிச்சயமாக உண்டு.

பள்ளி, கல்லூரிப் பிள்ளைகளுக்கு நல்ல நினைவாற்றல், நல்ல புத்தி, நல்விஷயங்களை நன்கு கிரஹிக்கும் தன்மை, பொது இடங்கள் மற்றும் உற்றம், சுற்றத்தில் மிகவும் சாதுர்யமாக நடந்து கொள்ளுதல், அறிவு முதிர்ச்சியுடன் எக்காரியத்தையும் செய்தல் – போன்ற நற்குணங்கள் நன்கு கைகூடி வர, ஸ்ரீராமருக்கு அகஸ்திய மாமுனி உபதேசம் செய்த ஸ்ரீஆதித்ய ஹ்ருதய மந்திரத்தைத் தினமும் காலையில் 12 முறை ஓதி வருதல் வேண்டும்.

நல்ல கண் பார்வையைப் பெறுவதோடு, தீய வழக்கங்களையும் நாடாது நல்ல புத்தியையும் பெற ஆதித்ய ஹ்ருதயம் மந்திரத்தைத் தினமும் காலையில் 36 முறை ஓதி வருதல் வேண்டும்.

காலையில் சூரியன் அடிவானத்தில் எழுகையில் சிகப்புப் பிழம்பாய்க் கெம்பு நிறத்தில் இருக்கையில், இந்த வழிபாட்டை நிகழ்த்துதல் அதியற்புதமானப் பலன்களைத் தருவதாகும். மாணிக்கவாசகப் பெருமானின் பிடித்த பத்துப் பதிகங்களும் நல்ல அறிவுத் திறனைத் தருவதாகும்.

பலத்த கண் நோய்களால் அவதியுறுவோரும், இயன்றால் தாமே படித்தும், அல்லது பிறரை ஓதச் சொல்லித் தாம் திரும்ப ஓதியும், ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஸ்ரீஆதித்ய ஹ்ருதய மந்திரத்தைத் தினமும் காலை நேரம் முழுதும் ஓதி வந்தால், நல்ல நிவாரணத்தைப் பெற முடியும்.

கும்பகோணம் – துகிலி – கஞ்சனூர் மார்கத்தில் துகிலி அருகே உள்ள கீழ்சூரிய மூலை சிவாலயமும் ஸ்ரீஆதித்ய ஹ்ருதய மந்திர வழிபாட்டுக்கான சக்தி வாய்ந்த தலமாகும். கரூர் அருகே வாங்கல் ரவீஸ்வரர் ஆலயம், திருச்சி அருகே சூரியூர், குணசீலம் அருகே ஆமூர் போன்றவையும் ஸ்ரீஆதித்ய ஹ்ருதய மந்திர வழிபாட்டுத் தலங்களாம். நல்ல கண் பார்வைக்கு துணை புரியும் ஆலயங்களிவையாகும்.

குழந்தை பாக்யம் பெற உதவும் கருவளர்ச்சேரி சிவாலயம்

கரு நழுவுதல், ஜீவ அணுக்குறைவு, பித்ரு சாபங்கள், நாக தோஷங்கள், பைரவ சாபங்கள் காரணமாகப் பிள்ளைப் பேறின்றி வாடும் தம்பதிகளும், குடும்பத்தினரும் வழிபட வேண்டிய தலமே கருவளர்ச்சேரி சிவாலயமாகும். ஆண் அல்லது பெண் சந்ததிகளுக்காக ஏங்குவோரும், கும்பகோணம் – மருதாநல்லூர் அருகே உள்ள கருவளர்ச்சேரி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்தில், வெள்ளி பூர நட்சத்திர நாள், சஷ்டித் திதிகளில் நோன்பிருந்து, இங்கு ஆலயக் கருவறை வாசற்படியைப் பசுநெய்யால் மெழுகி பூஜித்திடுக!

இங்கு, மூன்று பானைகளில் வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் பொங்கல், வைத்துப் படைத்து வழிபட்டு, ஏழைகளுக்கு அன்னதானத்துடனும், புதுப் பானையில் அரிசி, கோதுமை, உப்பு, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்களை இட்டு நிரப்பிப் பானைகளுடன் ஏழைகளுக்குத் தானமளித்து வழிபட்டு வரவேண்டும்.

பால் பொங்கல் சாதத்தை ஆற வைத்து, நல்ல கெட்டித் தயிர் ஊற்றிப் பிசைந்து, பித்ரு சக்திகள் நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாயுடன் தானமளித்தல் சந்ததிப் பிராப்தத்திற்கென தரணி பந்து மூதாதையர்களின் விசேஷமான ஆசிகளைப் பெற்றிட உதவும்.

எல்லோரும் வாழும் பகுதிக்கு ஏற்ப, பற்பல பித்ரு முக்தித் தலங்கள் ஆங்காங்கே உலகெங்கும் பரந்து, நிறைந்து அமைந்துள்ளன. தக்க உத்தமர்களை நாடி, இவற்றைப் பற்றி அறிந்து நன்கு பயன் பெறுதல் வேண்டும். உத்தராயணத்திலிருந்து தட்சிணாயனம் வருவதற்குள்ளுமாய், மூதாதையர்களின் ஆசிகளைப் பெற்றிட, அனைவரும் வைதிருதி யோகம், வ்யதீபாத யோக நாட்களில் வழிபட வேண்டிய பித்ரு சக்தித் தலங்கள் நிறையவே உண்டு.

பஞ்சாங்கத்தைப் பார்த்து 27 வகை யோக நாட்களில், பித்ரு தர்ப்பண வழிபாடுகளுக்கான வைதிருதி யோகம், வ்யதீபாத யோக நாட்களை முன்னரேயே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

தட்சிணாயன வைதிருதி யோக நாட்களில், நெடுங்குடி, திருவள்ளூர், திலதைப்பதி, தேவிபட்டினம் (நவ பாஷாணம்), திருச்செந்தூர் நாழிக் கிணறுத் தீர்த்தம், கன்யாகுமரி, (திருவாரூர் அருகே) குருவி ராமேஸ்வரம் போன்ற இடங்களில் 36 தலைமுறைகளுக்குத் தர்ப்பணம் அளித்திடுதலால்தாம் பித்ரு சாபங்களில் இருந்து குடும்பத்தைத் தற்காத்துக் கொள்ள முடியும். பித்ருக்கள் ஒரு போதும் சபிப்பதில்லை! ஆனால் முறையான படையல், தர்ப்பணம், திவச வழிபாடுகளை நிறைவேற்றாது இருக்கையில் இவற்றால் கழிய வேண்டிய வல்வினைகள் கழிபடாது பூதாகாரமாகப் பெருகிப் பெருந் துன்பங்களாக வந்து குடும்பத்தைத் தாக்கும். இதுவே பித்ரு சாபமாக உரைக்கப்படுகின்றது.

கால குணங்கள்  அறியாது தவறாகக் கணிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் பதிந்திருக்கும் காலதோஷங்களை நிவர்த்திக்க வல்ல தலமும் திருத்தங்கல் ஆகும். தற்காலத்தில் “பிரபலாரிஷ்டம்” எனும் “கூடா நாளிலும்” (ஞாயிறு – பரணி, திங்கள் – சித்திரை, செவ்வாய் – உத்திராடம், புதன் – அவிட்டம், வியாழன் – கேட்டை, வெள்ளி – பூராடம், சனி – ரேவதி) “விஷநேரம்” எனப்படும் ‘தியாஜ்ய’ நேரத்திலும் திருமணம் போன்ற சுபமுகூர்த்தங்களை வைத்து விடுகின்றார்கள். இது தம்பதிகளின் வாழ்க்கையையே பாதிப்பதாகும். “கூடாநாளுக்கு” இதுவரையில் சித்தர்கள் கூடப் பரிகாரம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் ஆனந்தம்...

மூன்று நாட்களும் அமாவாசை திதி தொடர்ந்து வருவது திரிதின அமாவாசை என்று அழைக்கப்படும். இந்த திரிதின அமாவாசை மாளய பட்சத்திற்கு முன் நிகழ்வது முக்குண ரங்க அமாவாசை ஆகும். வரும் ஆவணி மாத அமாவாசை இவ்வாறு 13.9.2023, 14.9.2023, 15.9.2023 ஆகிய மூன்று தினங்களிலும் தொடர்ந்து நிரவி வருகிறது. இது மாளய பட்சத்திற்கு முன் அமைவதாலும் இடையின மெல்லின வல்லின அட்சரங்களால் அமைவதாலும் முக்குண ரங்க அமாவாசை என்று சித்தர்களால் புகழப்படுகிறது.

ராம பிரானுக்கு முன் தோன்றியதே ராம நாமம். இது மிகவும் அற்புதமான தெய்வீக சக்தியுடன் கூடியிருந்ததால்தான் பெருமாள் இந்த ராம நாமத்தைத் தேர்ந்தெடுத்தார். அது போல் ‘ரங்க’ என்ற முக்குண சக்தி நாமமும் ரங்கநாதருக்கு முன் தோன்றியதே. கூர்ம சக்திகளுடன் பொலிவது.

புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகள் முகூர்த்த நாட்களாய் அமைவது சிறப்பு. ஆதியில் இந்த மூன்று தினங்கள் மட்டுமே முகூர்த்த நாட்களாய் வைக்கப்பட்டன. பின்னர் ஏற்பட்ட கால மாறுதல்களால் திங்கள், ஞாயிறு போன்ற கிழமைகளும் முகூர்த்த தினங்களாய் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த ஆதி முகூர்த்த தினங்களில் திரிதின அமாவாசை ரங்க சக்திகளுடன் பூரிப்பது என்பது வாழ்வில் ஒரே ஒரு முறை கிட்டும் பேறு என்பதை நினைவில் கொள்க.

திருமங்கலம் ஸ்ரீசாமவேதீஸ்வரர் சிவாலயம்

சாதாரண திரிதின அமாவாசையைப் போல் நதிக்கரை, திருத்தல குளக்கரை, கடற்கரை என்றவாறு இந்த அமாவாசையை நிறைவேற்றலாம். அல்லது பரசுராமர் வழிபட்ட லால்குடி திருமங்கலம், சென்னை ஸ்ரீரேணுகாம்பாள் ஆலயம், சீர்காழி அருகே தென்திருமுல்லைவாயில் போன்ற தலங்களில் வழிபாடுகள் இயற்றுவதும் சிறப்பே. திருமங்கல திருத்தலத்தில் பரசுராமர் வழிபட்ட சிவலிங்கம் இன்றும் பக்தர்களின் வழிபாட்டிற்காக அமைந்துள்ளது நம்முடைய பேறே. நம் சற்குரு கோயில் கும்பாபிஷேகம் போல் இந்த பரசுராம லிங்கத்திற்கும் புனருத்தாரண வழிபாடுகள் நிறைவேற்றினார் என்பதும் கூடுதல் சிறப்பே.

அபூர்வமாக சில சிவத்தலங்களில் மட்டும் நம் சற்குரு பலமுறை எழுந்தருள்வது உண்டு. அத்தகைய சிறப்பு பெற்றதே திருமங்கலம் திருத்தலமாகும். ஒரு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இங்கு நம் சற்குரு எழுந்தருளி வழிபாடுகள் நிறைவேற்றினார் என்பது நமக்கு உற்சாகமூட்டும் ஒரு செய்தியே.

ரங்க திரிதின அமாவாசையை கொண்டாடும் விதமாக திரிதின அமாவாசை தினங்களில் நம் சற்குரு விவரித்த முறையில் தர்ப்பணங்களை நிறைவேற்றி, முதல் நாள் இளநீர் தானமும், அடுத்த நாள் தேங்காய் சாதம், தேங்காய் பர்பி போன்றவையும், மூன்றாம் நாள் தேங்காய் எண்ணெயில் குறைந்தது 21 தீபங்கள் ஏற்றி வழிபடுவதும் இந்த ரங்க திரிதினத்தை வழிபடும் முறையாகும்.

இதன் பலனாய்...
       1. திருமண வயதை தாண்டி இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைய ஏதுவாகும்
       2. நீண்ட நாள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் அவதியுறுவோர் நன்னிலை பெறுவர்
       3. குடும்பத்தினர், உறவினர் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் மறையும்.

மேற்குறித்த வகையில் நத்தம் முக்கூடல் பெருமாள் தலம், திருமங்கலம் ஸ்ரீசாமவேதீஸ்வரர் திருத்தலங்களில் நம் அடியார்கள் இயற்றிய வழிபாட்டை இங்குள்ள வீடியோவில் அடியார்கள் கண்டு இரசிக்கலாம். ஒரு முறை விஷ்ணுபதி மகிமை குறித்து அறிய நத்தம் பெருமாள் திருத்தலத்திற்கு நம் அடியார்கள் சென்றிருந்தபோது அங்கு ஒரு மாணவர் ஆராய்ச்சிக்காக சிதம்பரத்திலிருந்து 18 முறைகளுக்கு மேல் வந்தும் பெருமாளைத் தரிசிக்க முடியாத தன் நிலை குறித்து வருத்தம் தெரிவித்தார். அபபோதுதான் முதல் தடவையே நம் அடியார்களுக்கு காட்சி அளித்த பெருமாளின் மகிமையைப் பற்றியும் நம் சற்குருவின் பெருங்கருணை மழையைப் பற்றியும் நாம் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam