அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீஆறுமுகப் பெருமான்

ஆன்மீக வினா-விடை
வினா : வீட்டில் ஆறுமுகம் கொண்ட முருகனையோ அல்லது தெய்வானையோடு கூடிய ஆறுமுகக் கடவுளையோ வைத்து வழிபடலாமா?
விடை : தனித்திருக்கும் ஸ்ரீஆறுமுகப் பெருமான் அல்லது ஸ்ரீதெய்வானையுடன் கூடிய ஸ்ரீஆறுமுகப் பெருமானை இல்லத்தில் தாராளமாக  வழிபடலாம். ஸ்ரீஅருணகிரிநாதரின் ஸ்ரீஆறுமுகனுக்குரிய “ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்று” என்ற திவ்யமான திருப்புகழைத் தினமும் ஓதி இயன்ற அன்னம், கற்கண்டு, திராட்சை, வாழைப்பழம் இவற்றில் ஏதேனும் ஒன்றையேனும் நைவேத்யம் செய்வதால் பிரத்யட்ச பலன்களைப் பெறலாம்.

ஸ்ரீதனுசு சுப்ரமண்யர் திருவையாறு

ஸ்ரீதெய்வானையுடன் கூடிய ஆறுமுகனை வழிபட தேவசக்தி கிட்டும். ஸ்ரீவள்ளியையும் வேண்டுமானாலும் இணைத்து வழிபடலாம். ஸ்ரீபாம்பன் சுவாமிகளின் “பகை கடிதல்” என்னும் பாடல்களை ஓதி வழிபட வறுமை, வேலையின்மை, திருமணமாகாமை போன்ற துன்பங்கள் நீங்கும். ஸ்ரீதெய்வானை, ஸ்ரீவள்ளி இருவரும் இச்சா, கிரியா சக்திகளின் அம்சமாதலின் ஸ்ரீஆறுமுகனுடன் சேர்த்து வழிபடுதலால் குடும்ப ஒற்றுமை, பெற்றோர்களின் ஆசிர்வாதாம், சாந்தமயமான வாழ்க்கை கிட்டும். பொதுவாக தெய்வானையை மணம் புரிந்த பின்னரே ஸ்ரீஆறுமுகப் பெருமானாக, (ஸ்ரீவள்ளியை மணம் புரியும் முன்னர்) பூலோகத்தில் பலருக்கும் பல திருத்தலங்களிலும் தரிசனம் தந்த ஸ்ரீமுருகனை எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். ஸ்ரீபாலதண்டாயுதபாணி ரூப ஸ்ரீமுருகனுக்கு உள்ள உபாஸனை நியதிகள் ஸ்ரீஆறுமுகனுக்குக் கிடையாது.
வினா : எல்லா கோயில் நிர்வாகம் சரியாக நடைபெறவும் விரையில் கும்பாபிஷேகம் நடக்கவும் எந்த தெய்வத்தையும் மகரிஷியையும் வணங்க வேண்டும்?
விடை : விரைவில் கும்பாபிஷேகம் நடப்பதற்கு அருள்புரிபவர் ஸ்ரீஸர்வாங்க ருத்ர மஹரிஷியாவார். இவர் “தீனதயாளன்” என்ற நாமமுடைய தெய்வ மூர்த்தியைப் பல கோடி யுகங்கள் உபாஸித்துப் பிரபஞ்சத்தில் உள்ள கோயில்களின் புனருத்தாரணத்திற்கும் கும்பாபிஷேகத்திற்கும் அளப்பரிய இறைப்பணி செய்தவர், செய்து வருபவர். எனவே ஸ்ரீஸர்வாங்க ருத்ர மஹரிஷியைப் பக்தியுடன் தியானித்து ஸ்ரீதீனதயாள மூர்த்தியையும் முறையாக வழிபட்டு வந்தால் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெறும்.
வினா : வைகுண்டத்தில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமஹா விஷ்ணு எப்பொழுதாயினும் இந்தப் பூமியில் தம் உறைவிடங்களைக் கண்காணிக்க நேரிடையாக வருகிறாரா? இல்லையெனில் வைகுண்டத்தில் இருந்த வண்ணம் கண்காணிக்கிறாரா? இல்லையெனில் தம்முடைய பிரதிநிதிகளின் மூலம் கண்காணிக்கிறாரா?

விடை : சிவபெருமானின் திருக்கண்களை ஸ்ரீபார்வதிதேவி விளையாட்டாகப் பொத்திட விளைந்த விபரீதங்களை நாமறிவோம். ஸ்ரீமஹாவிஷ்ணு பள்ளி கொண்டிருப்பது ஒருவித “சயனயோக நிலையே” ஸ்ரீவாஸ்து புருஷருடைய நித்திரையும் மற்றொரு வித “சயன யோக நிலையே!” தெய்வ மூர்த்திகள் என்றும் உறங்குவதில்லை. நம்மைப் போல் உருவ வழிபாட்டில் இறைவனைப் பாவிப்பதால் உறங்குவது போல் தோன்றும். ஸ்ரீமஹாவிஷ்ணு கோடி கோடியாம் “நித்ய சூரிகள்” மூலம் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து லோகங்களிலும் தினமும் சஞ்சாரம் செய்கின்றார். அவர்தம் பரிபூரண அம்சங்களைப் பூண்டவர்களே பல்வேறு உறைவிட மூர்த்திகள்! லௌகீகமான காம்யபிரார்த்தனைகளைத் தம் “அம்ச ரூபங்களின்” மூலம் கேட்டு அருள்பாலிக்கின்றார். பெரும்பாலான பிரார்த்தனைகள் காம்யமாதலின் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சமான நித்யசூரிகளே அவற்றை ஏற்று அவரவர் கர்மவினை, பக்தி நிலைக்கேற்ப அருள்கின்றன.
உத்தம பக்தி பூண்டவர்களை ஸ்ரீமஹாவிஷ்ணுவின் விஸ்வரூபமே நேரடியாகத் தடுத்தாட்கொண்டு அருள்பாலிக்கும். ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீவிஷ்ணுவின் நாமம் இரண்டும் ஒன்றே! தம்மிடம் சரணாகதி அடைந்தவர்களுக்கு வைகுண்டத்திலேயே தமக்குச் சேவை சாதிக்கும் பாக்யத்தை அளிக்கின்றார் ஸ்ரீமஹாவிஷ்ணு. எனவே ஸ்ரீமஹாவிஷ்ணு பூலோகம் வருகின்றார் என்பதைவிட அடியார்களின் பக்தி நிலைக்கேற்ப திருவருளின் சஞ்சாரம் அமைகிறது என்பதை அனுபவத்தால் உணர வேண்டும்.

வினா :   இரவு நேர குளிகை காலம் உண்டா?
விடை : இரவு நேர குளிகை காலம் உண்டு. குளிகை பற்றிய விளக்கத்தில் இதை அளிக்க இருக்கிறோம்.  
வினா : உபநயனம் போல் திருமணத்தை எளிமையான முறையில் நட்த்த ஏதேனும் முறை உண்டா!
விடை: சென்னை-மஹாபலிபுரம் சாலையில் உள்ள திருவிடந்தை ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள் ஆலயத்தில், ஸ்ரீவராஹ மூர்த்தியாய் தினமும், நித்ய கல்யாண உற்சவ சேவை சாதிக்கிறார் ஸ்ரீமஹாவிஷ்ணு. இங்கு பெருமாளின் திருவடியில் திருமாங்கல்யத்தை வைத்து ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து இம்மந்திர கோஷத்தின் இடையே பெண்ணிற்குத் தாலிகட்டி எளிமையாக திருமணத்தை நிறைவேற்றிக் குறைந்தது 101 பேருக்கு அன்னமிட வேண்டும்.   
மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி சிவத்தலத்தில் ஸ்ரீஈஸ்வரனின் திருவடியில் மாங்கல்யத்தை சமர்பித்து ஸ்ரீசிவசகஸ்ரநாமம் ஒதி குறைந்தது 51 பேருக்காவது அன்னமிட்டு திருமணத்தை எளிமையாக நடத்தலாம்.       
இதைவிட எளிமையாகச் செய்ய வேண்டுமாயின் திருச்சி அருகே திருப்பஞ்ஞீலியில் உள்ள சிவாலயத்தில் ஸ்ரீலிங்கபீடத்தில் மாங்கல்யத்தை சமர்பித்து சிவசகஸ்ரநாமம் ஓதி குறைந்தது 9 பேருக்கு அன்னதானம் இட்டு திருமணத்தை மிகமிக எளிமையாக நடத்தலாம்.

நாகங்களும் மனிதனும்

ஒரு மனிதன் இறைவனை அடைவதற்கு முன், இறை தரிசனத்தைப் பெறுவதற்கு முன்னர் கோடிக்கணக்கான தேவதைகளின் தரிசனம், அருட்கடாட்சத்தைப் பெற்றிடல் வேண்டும் . ஆயிரமாயிரம் அங்கங்கள் உள்ள நம் தேகத்திலேயே ஆயிரக்கணக்கான தேவதைகள் வசிக்கின்றனர். கோமாதாவாகிய பசுவின் உடலிலோ, கோடிக்கணக்கான தேவதைகள் உறைந்து அருள் பாலிக்கின்றனர் என்பதையும் நாம் அறிவோம்! இது மட்டுமல்லாது, அரசு, ஆல், வேம்பு, புரசு, துளசி, வில்வம், தாமரை போன்ற பூ, மரம், செடி, கொடி, விருட்சங்களிலும், சாளகிராமக் கல், நவரத்தினங்கள், புண்ணிய நதிகள், தீர்த்தங்கள் போன்றவற்றிலும் ஆயிரமாயிரம் தேவதைகள் இன்றைக்கும் வாழ்ந்து தம்மை நாடி வருவோர்க்கு அருளாசியை வழங்குகின்றனர்.
ஆயிரமாயிரம், கோடி கோடியான தேவதைகள் என்று ஒரு சராசரி மனித மனம் புரிந்து கொள்வதற்காக எண்ணிக்கையை எடுத்துக் கூறுகின்றோமே தவிர, நம்மால் அறிய இயலா எண்ணற்ற லோகங்கள், தேவதைகள், தேவர்கள், கந்தர்வர்கள் போன்றோர் நிறைந்த  பிரபஞ்சத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்பதை மறந்து விடலாகாது. இதை தவிர, நாக தேவதைகளும், நாக கன்னிகளும் நிறைய உண்டு. ஒரு நாக தேவதையின் பரிபூரண அருளைப் பெற்றாலே போதும், ஒரு மனிதன் முக்தி பெறும் நல்வழியை எளிதில் பெற்று விடலாம்! ஆனால் இவற்றின் மூலத்தை அறிய சற்குருவின் அருள் தேவை. நாகதேவதையைச் சில மந்திரங்களால் வசப்படுத்தி சுயநலங்களுக்காகப் பயன்படுத்துவோரும் உண்டு. ஆனால் அவர்கள் வாழ்க்கையில் கடுமையான சாபங்களுக்கு நிச்சயமாக உள்ளாவார்கள்.  எனவே சற்குருவை ஒருவன் பெற்றிட்டால் அவரே முறையான தேவதா உபாசனைக்கு நல்வழி காட்டி பரிபூரணமான பலன்களைப் பெறுகின்ற அறவழி முறையையும் எடுத்துரைத்து, அப்பலன்கள், யாவரையும் சென்றடைவதற்கான தானதர்ம வழிகளையும் கடைபிடிக்கச் செய்து பரிசுத்தமான ஆன்மநிலையை உணர்த்துவார்.
நாக சதுர்த்தி/பஞ்சமி
வரலட்சுமி விரதத்துக்கு முன்னர் வரும் சதுர்த்தியை நாகசதுர்த்தியாகவும் அல்லது பஞ்சமியை நாக பஞ்சமி என்றும் இப்பஞ்சமி திதியை கருட பஞ்சமியாகவும் கொண்டாடுவதுண்டு. நாக சதுர்த்தி அல்லது நாக பஞ்சமி அன்று காலையில் சூரியோதய காலத்தில் நாகபுற்றுக்குப் பால் வார்த்து, பருத்திப் பஞ்சினில் மஞ்சள் தடவி இப்பஞ்சு மாலையை நாகப்புற்றிற்குச் சார்த்த வேண்டும். இதனால் சகலவித நாக தோஷங்களும் நிவர்த்தி பெறும்.
பாம்பினால் கடிக்கப்படுவது, பாம்பு தன்மேல் விழுதல், பாம்பினை மிதித்தல், நாகப்பாம்பினை அடித்து வதைத்துத் துன்புறுத்தல் போன்றவற்றினால் ஏற்படும் தோஷங்களுக்கு நிவர்த்தியாக இந்த நாக பஞ்சமி நாளில் சாத்தான் என்கிற நட்சத்திர தேவதையை வேண்டி “ஸ்ரீசாம தந்த நாக ஸ்வரூபாயை நம : “சாம தந்த நாகமே போற்றி” என்று வணங்கி நாகப்புற்றிற்கு, குறிப்பாக வேப்ப மரத்தடியில் உள்ள புற்றிற்குப் பால் வார்த்தல் சிறப்பானதாகும். இந்த உத்திர நட்சத்திரத்தில் எழுந்தருளும் நாகதேவதைக்குச் சாமதந்தன் என்று பெயர். இந்நாளில் நாகராஜன், நாகலட்சுமி, நாகப்பன் போன்ற நாகப் பெயர்களை உடையோர் கண்டிப்பாக நாகப் புற்றிற்குப் பால் வார்க்க வேண்டும். இப்பெயரை உடைய ஏழைகளுக்குத் தேவையான உணவு, உடையினை வழங்குதலால் திருமணத் தடைக்கான நாக தோஷங்கள் தீரும். வருடத்திற்கு ஒரு முறையே வரும் இந்த நாகசதுர்த்தி, பஞ்சமி திதி மிகவும் விசேஷமானதாகும்.

ஸ்ரீசசபிந்து மகரிஷி
நாகநாதசுவாமி திருக்கோயில்

நாகத்திற்குரிய தலங்கள்
பூலோகத்தில் குறித்த சிலதலங்களில் நாக தேவதைகள் வாசம் செய்து தினந்தோறும், அத்தலத்திற்குரிய தெய்வமூர்த்திக்கு வழிபாடு செய்து வருகின்றன. நாகர்கோவில், மருதமலை ஸ்ரீபாம்பாட்டி சித்தர் ஜீவசமாதி, திருச்சி ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயில், தேவகோட்டை திருவாடானை அருகிலுள்ள ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயில், திருநாகேஸ்வரம் இராகு தலம், கர்நாடகத்திலுள்ள சுப்பிரமண்யம் போன்ற இறைத் தலங்களிலுள்ள நாகப்புற்றினை வழிபடுவது அபரிமிதமான பலன்களைத் தரும். இத்தலங்களில் நாகபஞ்சமியினைக் கொண்டாடுவதால் ஏற்படும் பலன்களை விண்டுரைக்க இயலாது. அற்புதமான தெய்வீக சக்தியைப் பெற்றுத் தருவதோடு நாக கன்னிகைகள், நாக தேவதைகளின் தரிசனத்தையும் பெற்றுத் தரும்.
மஹாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் திருஅண்ணாமலை அருணாசல ஷேத்திரத்தை வலம் வருகையில் நாக கன்னிகையின் அருளைப் பெற்ற அருச்சுனன் , ஸ்ரீஅருணாசல மலையில் ஸ்ரீகோஹிதாய லிங்கம் என்னும் சிவலிங்க தரிசனத்தைப் பெற்று அதன் மூலம் பல அனுக்கிரஹங்களைப் பெற்றான்.

திருக்குற்றால நீரருவி, கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வர சிவத்தல தீர்த்தம், நாகர்கோவில் தீர்த்தம், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாக தேவதைகளின் பீடங்கள் (வெளிப் பிரகாரம்) போன்ற இடங்களில் நாகதேவதைகளின் நடமாட்டம் அதிகம். நாகக் கன்னிகைகள், நாக தேவதைகள் என்றவுடன் அஞ்சுதல் வேண்டாம்! இவர்கள் மகரிஷிகளைப் போல் எவ்வித உருவமும் எடுத்து நமக்கு அருள்பாலிப்பர். நாக உருவில்தான் அவை வரவேண்டும் என்பதில்லை..

ஸ்ரீஅஸ்தீக சித்தர்
நாகசதுர்த்தி, நாக பஞ்சமி அன்று ஸ்ரீஅஸ்தீக சித்தரைத் தியானித்தே அனைத்து நாக வழிபாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்திலுள்ள அனைத்து கோடி நாக லோகங்களும் ஸ்ரீஅஸ்தீக சித்தரின் அருளாட்சியில் தான் அமைந்துள்ளன. பாகவதத்தில் தன் தந்தை பரீட்சித்து மகாராஜா நாகம் தீண்டி இறந்தமையால் சினமுற்ற ஜனமேஜயன் உத்தங்க மகரிஷியின் தலைமையில் சர்ப்ப யாகம் ஒன்றை மேற்கொண்டிட பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நாகங்களும் வேள்வித் தீயில் விழுந்து மாண்டன. எஞ்சிய தட்சக சர்ப்பம் இந்திரனை நாட, தேவர்களும் சர்ப்ப யாக மந்திரங்களின் சக்திக்கு அஞ்சி ஸ்ரீமஹாவிஷ்ணுவைச் சரணடைய, அவரோ, “பிரபஞ்சத்திலுள்ள நாக தெய்வங்களுக்குச் சிவகுரு ஸ்ரீஅஸ்தீக சித்தரே! அவரைச் சரணடையுங்கள்“ என்று அருளாணையிட்டார்.
ஸ்ரீஅஸ்தீக சித்தர் ஜனமேஜயனுக்கும், உத்தங்க மகரிஷிக்கும் நல்அறிவுரை கூறி அனைத்து நாகங்களையும் வேள்வித் தீயிலிருந்து மீட்டுப் புனர்வாழ்வு தந்திட்டார்.
“ஸ்ரீஅஸ்தீக சித்தரே! எம் நாக இனத்திற்குப் புத்துயிர் தந்தமையால் உலகெங்கும் ஸ்ரீஅஸ்தீக சித்தாய நம : (ஸ்ரீஅஸ்தீக சித்தரே போற்றி) என்று எவர் தங்கள் திருநாமத்தை உச்சரித்துத் தியானிக்கின்றாரோ, அவரை நாங்கள் தீண்ட மாட்டோம்!“ என்று அவரிடம் நாகங்கள் சத்தியம் செய்தன.
 
ஸ்ரீஅஸ்தீக சித்தர் பெயர் சொல்ல அரவம் அடங்கும்
 எனவே எங்கு பாம்பு கண்ணில் தென்பட்டாலும் உடனே ஸ்ரீஅஸ்தீக சித்தரின் நாமத்தைக் கூறிட அப்பாம்பு விலகிப் போகுமே தவிர நம்மை ஒரு போதும் தீண்டாது. தம் திருநாமத்திற்கே இத்தகையே தெய்வீக சக்தி பெற்ற ஸ்ரீஅஸ்தீக சித்தரை நாகபஞ்சமியன்று தியானித்திடல் மிகவும் உத்தமமானது!  ஸ்ரீஅஸ்தீக சித்தரின் குருபாரம்பரிய வழித்தோன்றலே நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஸ்வாமிகள்.. சந்தியா வந்தன மந்திரத்திலும் ஸ்ரீஅஸ்தீக சித்தரைப் போற்றி வணங்கும் ஒரு மந்திரம் வருகின்றதென்றால், நாம் தினமும் பூஜிக்க வேண்டிய சித்த புருஷரே ஸ்ரீஅஸ்தீக சித்தர் என்பது புலனாகின்றதல்லவா?

புற்றிற்குப் பால் வார்த்தல்  : புற்றிற்குப் பால் வார்த்தல் என்றால், நாகப் புற்றின் அருகே ஒரு கிண்ணத்திலோ அல்லது தேங்காய் ஓட்டிலோ நல்ல பசும்பாலை ஊற்றி வைப்பது ஆகும். நாம் ஊற்றிய பாலைப் பாம்பு குடிக்கின்றதா? இல்லையா? என்று சோதனை செய்யக் கூடாது. புற்றிற்குப் பால் வார்ப்பதோடு நம் கடமை முடிகிறது. அப்புற்றில் வசிக்கும் நாக தேவதை பாம்பு ரூபத்திலோ அல்லது எறும்பு, ஈ, பூச்சி, பூனை, நாய், பறவை போன்ற எந்த ரூபம் எடுத்தும் பாலை உண்ணக் கூடும். அது ஐந்து தலை நாகமாகக் காட்சி அளித்தால் பக்தர்கள் அஞ்சி ஓடி விடுவார்களன்றோ! எனவே, நாக தேவதையைப் பூஜிக்கும் மனிதன் எம பயத்தால் அந்த நாகமே நேரில் தரிசனம் அளித்தால் கூட பயந்து நின்று விடுவான்! அவனுடைய ஆன்மீக நிலை அவ்வளவே! எனவேதான் நாகக் கன்னிகள், நாக தெய்வங்கள் அவ்வளவு எளிதில் தரிசனம் தருவதில்லை.
நாகப் புற்றினைச் சுற்றி புற்றைச் சிதைக்காமல் (விளக்குமாறு கொண்டும் கூட்டாமல்) வெறும் தேங்காய் நார் கொண்டு மட்டும் அங்கு கிடக்கும் முட்டை ஓடு, தேங்காய், வாழைப்பழத் தோல், பால், நீர் ஆகியவற்றைச் சுத்தம் செய்தல் மிகவும் கிடைத்தற்கரிய பேறாகும். இதையே சிறந்த ஸ்ரீநாகபூஜையென நாகதேவதைகள் ஏற்கின்றனர்.

திருச்சி நாகநாத சுவாமி கோவில்
நாக தேவதைகள் வசிக்கும் திருத்தலங்களில் திருச்சி நாகநாத சுவாமி சிவாலயமும் ஒன்றாகும். இங்கு பிரகார மண்டபத்தில் உள்ள தூண்களில் விதவிதமான நாக வடிவங்களைக் காணலாம். நாக தோஷம் தீர வேண்டி, இத்திருக்கோயிலின் ஒவ்வொரு தூணையும் சுத்தப்படுத்தி மஞ்சள் தடவி குங்குமமிட்டு, தூணின் கீழ் நாககோலம் அல்லது ஏதேனும் தெரிந்த கோலமிட்டுப் பசுநெய் தீபமேற்றி வழிபடுதல் வேண்டும்.
இன்றைக்கும் பல நாகதேவதைகள் சதுர்த்தசி திதியன்று மலைக்கோட்டையைச் சுற்றி சூட்சும, ஸ்தூல ரூபங்களில் கிரிவலம் வருகின்றன. அனைத்தையும் ஆற்ற வல்ல நாக தேவதைகளே இறைவனின் திருவடியை நாடி மலைக்கோட்டையைக் கிரிவலம் வருகின்றனவெனில்  மனிதர்களாகிய நாம் எம்மாத்திரம்?
ஸ்ரீசஸபிந்து மஹரிஷி
ஸ்ரீசாரமா முனிவரின் சற்குருவே ஸ்ரீசசபிந்து சித்த மஹரிஷி! ஸ்ரீஅஸ்தீக சித்தரின் வழித் தோன்றல்!
ஸ்ரீசசபிந்து மஹரிஷியே நாக ரூபத்தில் தினமும் ஸ்ரீநாகநாத சுவாமிக்கு நித்ய பூஜை செய்கின்றார். இக்கோயிலில் உறையும் அனைத்து நாக தேவதா மூர்த்திகளுக்கும் இவரே அதிபதியாவார். இக்கோயிலுக்கும் நாக லோகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. இத்திருத்தலத் திருக்குளத்தின் மூலம் நாக லோகத்திற்கான வழிகள் உண்டு. சூட்சும ரூபத்தில் நாக லோகம் செல்வோர் கூட ஸ்ரீசசபிந்து மஹரிஷியைத் தொழுது இக்கோயில் மூலமாகவே நாகலோகத்தை அடையமுடியும்.

ஸ்ரீநாகநாத சுவாமிக்கு எதிரில், மண்டபத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு வலப்புறம், கொடிக்கம்பம் அருகில் உள்ள முதல் தூணின் கீழ்ப்புறம் ஸ்ரீசசபிந்து சித்த மஹரிஷி காட்சியளிக்கின்றார். நாக தோஷங்களுக்கு நிவாரணம் அளிக்கும் சித்தபுருஷரே ஸ்ரீசசபிந்து மஹரிஷி ஆவார். நாக சதுர்த்தி/நாக பஞ்சமியன்று ஸ்ரீசசபிந்து மகரிஷிக்கு எண்ணெய்க் காப்பிட்டு, அபிஷேகம் செய்து பருத்திப் பஞ்சில் மஞ்சள் தடவி, மாலையாகத் திரித்து இந்தப் பஞ்சபூத சக்தி மாலையைச் சாற்றி வழிபட்டு ஏழைகளுக்குப் பால்பாயசம் அளித்திட எவ்வித நாகதோஷங்களுக்கும் இது சிறந்த பரிகாரமாக அமைகின்றது.
அதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதம்பிக்கலையான் சித்த சுவாமியை நம்பி அவர் பெயர் சொல்லி இருட்டில் நடந்தால் பாம்புகள் துன்பம் தராது . இவரே சென்னை திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்தில் உள்ள 108 சிவலிங்கங்களில் ஸ்ரீதுர்கைக்கு நேரில் இரண்டாவது லிங்கத்தில் ஐக்யமடைந்து இன்றைக்கும் அருள்பாலிக்கின்றார். கோமா நிலையில் உள்ளோர்க்காக இந்த லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பாதாம் பருப்பு கலந்த இனிப்பு/பாயசம் தானம் செய்திட குணமடையும். நல்வழி பிறக்கும்.
கருடபஞ்சமி
நாக பஞ்சமியையே சிலர் கருடபஞ்சமியென்று கொண்டாடுவதுண்டு. ஸ்ரீரங்கநாதர் பாற்கடலில் சயனம் கொள்ளத் தம் திருமேனியை வளைத்துத் தருகின்ற பாக்கியத்தைப் பெற்றவரே ஸ்ரீஆதிசேஷநாகப் பெருமான்! ஸ்ரீரங்கநாதர் உலா வருகையில் அவரைத் தம் திருமேனியில் தாங்கும் பேறு பெற்றவரே ஸ்ரீகருடாழ்வார்!
நாக பஞ்சமியன்று, கருடபஞ்சமியன்று ஸ்ரீஆதிசேஷனும் கருடாழ்வாரும் ஸ்ரீரங்கநாதரை வலம் வருகின்றனர். எனவே கருடபஞ்சமியன்று ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளியுள்ள தலங்களைப் பிரதட்சிணம் வருவது மிகவும் விசேஷமானதாகும். கருடபஞ்சமியன்று தான் ஸ்ரீகருடன் தம் தாயாருக்காக அமிர்த கலசத்தைக் கொண்டு வந்தார். இத்திருநாளே கருடபஞ்சமியாகும்.
பாதபூஜை பாவந் தீர்க்கும்
வட இந்தியாவில் பெற்றோர்களையும், மூத்த சகோதர, சகோதரிகளையும் தினந்தோறும் (பாதம் தொட்டு) வணங்குகின்ற புனிதமான வழக்கம் இன்றும் நிலவுகிறது. தமிழ் நாட்டில் இந்த நற்பழக்கம் மறைந்து விட்டது. தற்காலத்தில் சில குடும்பங்களில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளே பகைவர்களாகவும் மாறி வாழ்கிறார்கள். இது மிகவும் வேதனைக்குரியதாகும்.
இதுகாறும் தினந்தோறும் பெற்றோர்களையும், உடன் பிறந்த மூத்தோரையும் வணங்காத தோஷத்திற்காக கருட பஞ்சமியன்று அவர்களுக்கு பாதபூஜை செய்து நமஸ்கரிக்க வேண்டும். அத்தகையோர் இல்லாவிடில், அவர்கள் வயதையொத்த பெரியோர்களுக்குப் பாதபூஜை செய்து வணங்க வேண்டும்.
வெட்கம், சங்கோஜம் இல்லாது இனியேனும் பெற்றோர்களைத் தினந்தோறும் வணங்குகின்ற அறவழியை இந்தக் கருட பஞ்சமியிலிருந்தாவது கடைபிடிப்போமாக! பூசல்கள், மானம், மரியாதை, மனைவியின் பிடிவாத அறிவுரை காரணமாகப் பெற்றோர்களைச் சேவிக்கின்ற நன்னெறியை மேற்கொள்ள இயலாவிடில் கருடபஞ்சமி தினத்திலாவது அவர்களிடம் நேரில் சென்று ஆசி பெற்று அதன் பிறகு தினந்தோறும் மானசீக முறையிலாவது பாதபூஜையால் அவர்களைத் தொழவேண்டும். இவ்வழக்கத்தை இளவயது, நடுத்தர வயதிலேனும் முறையாக, மேற்கொண்டால் சந்ததியின்மை, கடன் தொல்லைகள், சிறுசிறு நோய்த் துன்பங்கள், தீராத அலுவலகப் பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து தற்காத்து கொள்ளலாம். இது மிகச் சிறந்த, எளிமையான வழியன்றோ! கருடபஞ்சமியன்று கருட தரிசனம் மிகவும் விசேஷமானதாகும்.
கருட தரிசனமுறை
சித்தர்கள் அருளும் எளிய தரிசனமுறையாவது : முதலில் கருடபட்சியை அறிந்து கொள்ளும் முறையில் நன்கு பயிற்சி பெற வேண்டும் கீழ்க் கழுத்து வெண்மையாக உள்ள பட்சியே கருடன் ஆகும்.
கருடனை கண்டவுடன் வலதுகை மோதிரவிரல் இடது கன்னம், வலது கன்னம், இரண்டையும் மாறி மாறி மூன்று முறை (மொத்தம் 6 முறை) “நாராயணா” என்று இறைநாமம் ஓதி தரிசிக்க வேண்டும். இத் தரிசனத்துடன் சிறிய அளவிலேனும் அன்னதானம் செய்தால் கருடபகவானின் பரிபூரண அனுக்கிரஹம் கிட்டுவதோடு, கருட தரிசனத்தின் பலன்களும் பூரணமடையும்.

கிழமை

அன்னதானம்

பலன்

ஞாயிறு

ஒருவருக்கு

நோய் தீரும்

திங்கள்

இருவருக்கு

குடும்பத்தில் நிம்மதி

செவ்வாய்

நால்வருக்கு

எதிரியால் வரும் துன்பம் தீரும்

புதன்

ஐவருக்கு

எதிரிகளிடமிருந்து காக்கப்படுவர்.

வியாழன்

மூவருக்கு

தீர்க்க ஆயுள்

வெள்ளி

அறுவருக்கு

பணவரவு

சனி

எழுவருக்கு

எவ்விதத் தொல்லைகளும் தீரும்

ஸ்ரீவரலட்சுமி விரதம்

1. அனைத்து இல்லங்களிலும் கண்டிப்பாக ஸ்ரீவரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். “புகுந்த வீட்டில் விரதம் எடுக்கும் பழக்கம் இல்லை” என்றெல்லாம் காரணம் சொல்லாது அனைவரும் ஸ்ரீவரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
2. அஷ்டலட்சுமிகளின் பரிபூரண அம்ஸங்கள் நிறைந்த ஸ்ரீவரலட்சுமி தேவி கலியுகத்தின் பிரத்யட்ச சக்தி ஆவாள்.
3. செம்பில் ஸ்ரீலட்சுமியின் முகம் வரைதல், பித்தளை, வெள்ளி, தங்க முகங்கள் கொண்டு எவ்விதத்திலும் விரதத்தை ஏற்கலாம்.
4. செம்பில் முகம் வரைந்து பூஜை செய்வோர் உலோக முகம் கொண்டு பூஜை செய்யும் முறைக்கு மாற்றிக் கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை. அதேபோல் முகம் வைத்துப் பூஜை செய்பவர்களும் முகம் வரைந்து பூஜை செய்வதில் எவ்விதத் தவறுமில்லை.
இவ்விளக்கம் ஏன் தரப்படுகிறது என்றால் சில குடும்பங்களில் பூஜை முறைகளை மாற்றினால் ஏதேனும் விளைவுகள் நேருமோ என்று அஞ்சுவதே ஆகும். பெண்கள் இத்தகைய கவலைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். பூஜையைத் தொடர வேண்டும் என்பதே முக்கியம், நாம் மனதாரச் செய்யும் எவ்வித பூஜையையும் ஸ்ரீஅம்பாள் ஏற்று அனுக்கிரகம் செய்கின்றாளே தவிர “மாற்றிச் செய்து விட்டாயே!” என்று தெய்வானுகிரகத்தைக் குறைப்பதில்லை. இவ்வித எண்ணங்கள் மனித வியாபகத்தின் இடைச் செருகலே தவிர இதில் எவ்வித உண்மையுமில்லை.
5. லட்சுமி தேவியின் முகத்திற்குப் பதிலாக லட்சுமி தேவியின் முழு உருவம் பதித்த வெள்ளிக் காசுகளை பித்தளை அல்லது வெண்கல செம்புகளில் கட்டி வழிபாடுகளை மேற்கொள்வதும் ஏற்புடையதே. பொதுவாக, தெய்வ மூர்த்திகளின் முழு உருவத்தையே தரிசிக்கும்படி, வழிபடும்படி நம் சற்குரு வலியுறுத்துவதால் இத்தகைய வழிபாடுகள் பூரணமான பலன்களை அள்ளித் தருவதாகும்.

6. லட்சுமி தேவியின் முகத்திற்குப் பதிலாக லட்சுமி தேவியின் முழு உருவம் பதித்த செம்புகளில் வழிபாடுகள் மேற்கொள்வதும் சிறப்புடையதே.

7. “நாம் மட்டும் ஸ்ரீவரலட்சுமி விரதத்தை ஏற்றுக் கொண்டாடி மகிழ்ந்தோம்!” என்று ஆனந்திப்பதை விட இதைப்பற்றி அறியாதவர்களுக்கும் எடுத்துரைத்து குறைந்தது நாலு புதுக் குடும்பங்களையாவது செம்பு வைத்து ஸ்ரீவரலட்சுமி விரதபூஜையைக் கொண்டாடச் செய்தால் ஆனந்தம் பல்கிப் பெருகுவதோடு அவர்களுடைய பூஜாபலன்களின் ஒரு பங்கையும் நாம் இறையருளாகப் பெற்றிடலாம். குருதட்சிணை போல் பூஜையைச் சொல்லிக் கொடுத்தற்கான தெய்வீகப் பரிசு இதுவே!
8. மாத விலக்கு போன்ற இயற்கை நியதிகளால் விரதம் ஏற்க இயலாவிடில் வீட்டில் உள்ள சுமங்கலிப் பெண்களை வைத்துப் பூஜை செய்யலாம். ஆனால் ஸ்ரீவரலட்சுமி தேவியிடம் மனமுருகப் பிரார்த்தித்து, “ஸ்ரீஅம்பிகையே! உன் விரதபூஜையை ஏற்று நடத்த நீயே எனக்கு அருள் புரிய வேண்டும். உன் அருள் இருந்தால்தானே நான் உன்னை வணங்க முடியும். உன்னிடம் நான் வேறெதையும் கேட்கவில்லை. உன் பூஜையை நடத்துவதற்கு நீயே எனக்குத் தயை புரிய வேண்டும்!” என்று உளம் உருகி, கதறி, அழுது அம்பிகையிடம் விடாமல் பிரார்த்தனை செய்தால் ஸ்ரீவரலட்சுமி தேவியின் கருணை கடாட்சத்தால் எவ்வித இயற்கை இடையூறும் கூட தானாக வழிவிட்டு தெய்வ பூஜைக்கு நல்வழி காட்டும்.
நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகளின் தாயார் ஸ்ரீமதி முத்து மீனாட்சி அம்மாள் அவர்கள் இவ்வாறாகவே அன்புடன் கண்ணீர் மல்கிக் கசிந்துருதி மன்றாடி ஸ்ரீஅம்பிகையிடம் பிரார்த்தித்துத் தொடர்ந்து 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவருடம் கூட விடாது ஸ்ரீவரலட்சுமி, ஸ்ரீகேதார கௌரி விரதத்தை ஏற்றுக் கொண்டாடும் நல்பாக்கியத்தைப் பெற்றார்கள்.  ஸ்ரீராம பக்தையான ஸ்ரீமாதா முத்துமீனாட்சி அவர்கள் இவ்வித வைராக்கிய பூஜைகளின் பலன்களாலும், ஐந்து வயது முதலே தொடங்கிய அன்னதானப் பணிகளாலும் இன்றைக்கும் விண்ணுலகில் ஸ்ரீராமச்சந்திரிணி லோகத்தில் உறைந்து நமக்கெல்லாம் அருள்பாலிக்கும் உத்தம நிலையைப் பெற்றுள்ளார்கள்.

ஸ்ரீவரலட்சுமி விரத முறை
வெண்கல/வெள்ளி/செம்பை சுத்தப்படுத்தி அதன் சாய்வான கீழ்ப்பகுதியில் சுத்தமான (கண்) மை, மஞ்சள், குங்குமம், வெள்ளை திருநீறு, அரிசிமா, சந்தனம் கொண்டு ஸ்ரீலட்சுமியின் திருமுகத்தை வரைய வேண்டும். வசதியுள்ளோர் வெள்ளி, தங்க முகங்களை செம்பில் இணைத்து வழிபடலாம். ஆபரணங்கள், நவரத்தினக் கற்கள் கொண்டும் அலங்கரிக்கலாம். எக்காரணம் கொண்டும் ஸ்ரீஅம்பாளின் முகத்தை வரைய சாயம்/வர்ணம் பெயிண்ட்டைப் பயன்படுத்துதல் கூடாது.
கலச பூஜை : வெள்ளிக் கிழமையன்று ஸ்ரீவரலட்சுமி விரதம் தொடங்குகின்றது. சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் கொண்டாடிய நன்கு பழுத்த சுமங்கலியின் திருக்கரங்களிலிருந்து “செம்பினைப்” பெற்று விரத பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
கிழக்கு நோக்கிய நுனிவாழை இலையில் பச்சரியைப் பரப்பி (குறைந்தது ஒரு படி அரிசி) அதில் “உ” பிள்ளையார் சுழியிட்டு “ஓம்” வரைந்து குல தெய்வம், இஷ்ட தெய்வத்தினைப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
முகம் வரைந்தோ அல்லது முகவடிவம் வைத்தோ செம்பினை நன்கு அலங்கரித்து  அதனுள் பாதிக்கு மேல் பச்சரிசியை நிரப்பி செம்பின் மேல் நன்கு முற்றிய (மட்டை உரித்த, குடுமியுடன் கூடிய) தேங்காயை வைத்து, பூ சூட்டிச் செம்பினை வாழையிலையின் மேல் வைக்க வேண்டும். தேங்காயின் மேல் பருத்தி/பட்டு இரவிக்கை/வஸ்திரத்தையும் (வசதியிருப்பின்) சார்த்தலாம். கருகமணி, கருவோலை சாற்றுதல் மிக முக்கியமானதாகும். இதற்குக் “கலசம்” வைத்தல் என்று பெயர்.
ஐந்து முகக் குத்து விளக்கேற்றி, ஊதுபத்தி, சாம்பிராணியுடன் தெய்வீகச் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். நோன்புக்கான சரடை ஸ்ரீஅம்பிகைக்கு, (கலசத்திற்கு) சார்த்த வேண்டும், பின்னர் அவரவர் குடும்ப வழக்கப்படி ஸ்ரீவரலட்சுமி விரத பூஜையைக் கடைபிடிக்க வேண்டும் புதிதாக விரத பூஜையை மேற்கொள்வோர்க்கு :-
1. மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து ஸ்ரீவிநாயகரைத் தொழுது பூஜையைத் தொடங்க வேண்டும்,
2. மந்திரங்களை அறியாதோர் ஸ்ரீவரலக்ஷ்ம்யை நம : ஸ்ரீவரலட்சுமியே போற்றி! “ஸ்ரீவரலட்சுமியாம் திருமகளே வா, வா” எம் இல்லம் எழுந்தருள்வாய் என்று குறைந்தது 108 முறையேனும் கூறி கலசத்தை மேற்கண்ட முறையில் அமைக்க வேண்டும்.
3. ஸ்ரீசூக்தம், அஷ்டலட்சுமி தோத்திரம், அபிராமி அந்தாதி போன்றவற்றையும் ஓதிடலாம்.
4. ஸ்ரீவரலட்சுமி விரதமென்பது உண்ணாநோன்பு அல்ல. உண்ணா விரதம் இருப்பினும் கூடுதல் விசேஷமே. ஆடி வெள்ளியன்று குறிப்பிட்ட எண்ணிக்கையில் (12, 21, 30) சுமங்கலிகளை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், பூ, தேங்காய், இரவிக்கை வஸ்திரம், பெரிய கண்ணாடி, சீப்பு போன்ற (இயன்ற) மங்களப் பொருட்களை அளித்து குங்குமம் கொடுத்தலே விரதம் ஆகும்.
5. ஸ்ரீவரலட்சுமி விரத பூஜைக்காக வீட்டிலேயே குங்குமம் தயாரிப்பது உத்தமமானது.
6. வீட்டில் தயாரிக்க இயலாவிடில் கடையில் சுத்தமான குங்குமம் வாங்கி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் ஓதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அபிராமி அந்தாதியையும் ஓதிடலாம்.
7. எவ்வளவு சுமங்கலிகளுக்குக் குங்குமம் அளிக்கின்றோமோ அதன் பலாபலன்களாய் முறையான தீர்க்கமான சுமங்கலித்வம் கிட்டும்.
8. நம் வீட்டிற்கே அனைவரும் வரவேண்டும் என்று எண்ணாது நாமும் பிறருடைய இல்லங்களுக்குச் சென்று குங்குமம் கொடுத்துப் பெற வேண்டும்.
9. சுமங்கலிகளைக் கௌரவித்தபின் “கலசத்தில்” ஆவாஹனமாகியுள்ள ஸ்ரீவரலட்சுமியை அரிசிப் பானையில் குடிகொள்ளச் வேண்டும். அதாவது மங்கள ஆரத்தி எடுத்துக் கலசத்தை மெதுவாக அரிசிப் பானையில் (அரிசி வைத்திருக்கும் பாத்திரம்) இறக்கி வைக்க வேண்டும்.
10. அடுத்த வெள்ளிக்கிழமை வரை ஸ்ரீவரலட்சுமி அரிசியில் வாசம் செய்வாள். அதுவரையில் தினந்தோறும் மாலையில் சுமங்கலிகளுக்குக் குங்குமம் அளித்து வர வேண்டும். கோயிலுக்குச் சென்று அங்கு வரும் சுமங்கலிகளுக்குக் குங்குமச் சிமிழ்  அளிப்பதும் உத்தமமானதே! பிறகு ஆரத்தி எடுத்து கலச அரிசியை அரிசிப் பானையில் சேர்த்து விட்டுப் பூஜையை நிறைவு செய்ய வேண்டும்,

கோலாகலப் பௌர்ணமி

பொதுவாக பண்டிகைகள் பல நிறைந்ததே ஆடி மாதமாகும். நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, ஸ்ரீவரலட்சுமி விரதம், மங்கள கௌரி விரதம், ருக், யஜுர் உபாகர்மாக்கள் (பூணூல் அணிவித்தல்) காயத்ரீ ஜபம், ஸவர்ண கௌரீவிரதம், ஆடிக்கிருத்திகை, ஆடிப் பூரம், தூர்வாகணபதி விரதம் போன்ற பல கோலாகலமான பண்டிகைகள் நிறைந்த மாதம் ஆடி மாதம். பண்டிகை என்ற ஒன்றை அமைத்து விசேஷ பூஜை, தான தர்மங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி அவ்வப்போது திரண்ட புண்யசக்தியைப் பெறுவதற்கான நல்வழிகளை நம் பெரியோர்கள் அமைத்துத் தந்துள்ளனர்.
தினசரி வாழ்விற்கான சக்தி
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தினசரி வாழிவினை நன்கு நடத்துதற்கு
50% புண்ய சக்தி | 25% உணவு மூலம் பெறும் சக்தி | 25% பெரியோர்களுடைய ஆசி
என்ற மூன்றும் அந்தந்த விகிதாசாரத்தில் தேவையானதாகும். இம்மூன்றில் ஏதேனும் குறையுமெனில் அந்நாளில் சிறு விபத்து, நோய், கடன், மனக்கவலை, குழந்தைகளுக்குத் துன்பங்கள், அலுவலகத்தில் பிரச்சனைகள், அநாவசியமான காலதாமதம் போன்ற இடர்கள் ஏற்படுகின்றன. தினசரி நேரந் தவறாத பூஜை, பெரியோர்களை வணங்குதல், கோயில் தரிசனம், சிறிய அளவிலேனுமான தான தர்மங்கள், ஸ்ரீகாயத்ரீ ஜபம், தேவமொழி/தமிழ் மறை வேத பாராயணம் , சந்தியா வந்தனம் போன்றவற்றை முறையாகக் கடைபிடித்தால் தான் மேற்கண்ட அளவில் ஆன்மீக சக்தி தேகத்தில் நன்கு உருவாகி தினசரி வாழ்வினைச் சுமூகமாக்கும். ஆனால் இது சாத்தியமானதா?
இந்நாளில் குறிப்பிட்ட நாள், நட்சத்திரம், திதி, ஹோரைகளில் செய்யப்படும் பூஜைகள் தாம் அபரிமிதமான பலன்களைத் தரவல்லவையாம். இத்தகைய  விசேஷ நாட்களே பண்டிகை நாட்களாகக் குறிக்கப் பெற்றன. எனவே இத்தகைய பண்டிகை நாட்களின் மகத்துவத்தை அறிந்த பிறகாவது அவற்றை நாம் முறைப்படி கொண்டாடி அபரிமிதமான புண்ணிய, தெய்வீக சக்திகளைப் பெற்று, எதிர்காலத்தில் மட்டுமல்லாது தற்போதைய துன்பங்களிலிருந்தும் காக்கும் ரட்சையைப் பெற்று ஆனந்திப்போமாக!
 இவ்வகையில் மேலே குறிப்பிடப் பெற்றுள்ள ஆடிமாதப் பண்டிகைகளை நம்குருமங்கள கந்தர்வா அருளியுள்ளது போல் கொண்டாடிட, இதன் முழுப்பலன்களையும் பரிபூரணமாகப் பெறும் வண்ணமாய் கோலாகலப் பௌர்ணமி அமைந்துள்ளது. இந்நாளில் ருக்வேதத்தைச் சார்ந்தவர்களுக்கு உபாகர்மா (பூணூல் அணிதல்) சேர்ந்து வருவதால் இப்பௌர்ணமி விசேஷத்தன்மை பெறுகிறது.
ஆடிப் பௌர்ணமி
இத்தினத்தில் ருக்வேத மந்திரங்களையும் ருக்வேதத்திற்கு ஈடான தமிழ்மறைப் பாடல்களையும் பாராயணம் செய்வது சந்திர பகவானின் அருளைப் பெற்றுத் தருவதோடு அவர்தம் திருவருளால் சாந்தமான பலனைப் பெற்றுத் தரும். இந்நாளில் தான் ஸ்ரீஹயக்ரீவப் பெருமாள் சரஸ்வதிக்கு விசேஷ சக்தி தரும் வித்யா ரகசியங்களை உபதேசித்தார். ஸ்ரீலக்ஷ்மியுடன் கூடிய ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளுக்கு இப்பௌர்ணமி நாளில் மஞ்சள் நிறசாமந்திப் பூவினால் ஆன திண்டுமாலை சாற்றி வழிபட்டு ஏழைக் குழந்தைகளுக்குப் புத்தகம், பள்ளிப்பை, கற்கண்டினை வழங்கிட படிப்பில் மந்தமாயுள்ள பிள்ளைகள் நல்ல புத்தியைப் பெறுவர். ஸ்ரீஹயக்ரீவப் பெருமாள் ஸ்ரீசரஸ்வதி தேவியின் சற்குரு தேவமூர்த்தி ஆதலின் இவ்வித ஸ்ரீஹயக்ரீவ வழிபாட்டின் மூலம் ஸ்ரீசரஸ்வதி தேவியையும் வணங்கிய பேற்றினையும் பெற்றிடலாம்.
 பொதுவாக இப்பௌர்ணமியைக் குழந்தைகள், சிறுவர், சிறுமியருடன் கூடிக் கொண்டாடுவது பன்மடங்கு ஆனந்தத்தைத்  தரும். ஆடிமாதம் ஸ்ரீஅம்பாளுக்குரிய மாதமாதலின் அம்பாள்/அம்மன் சன்னதிகளில் லலிதா சகஸ்ரநாமம், போற்றிகள், குங்குமார்ச்சனை, தீபவழிபாடு, மாவிளக்கு ஏற்றுதல் போன்றவை சிறப்பான பலன்களைத் தரும்.

விஷ்ணுபதி

ஒவ்வொரு வருடத்திலும் பொதுவாக நான்கு மாதப் பிறப்புகள் விஷ்ணுபதி புண்ய காலங்களாக வருகின்றன. அடுத்து வரும் விஷ்ணுபதி புண்யகாலம் கோகுலாஷ்டமியுடன் இணைந்து அமைகின்றது. பிரதோஷம் போன்ற விஷ்ணுபதி காலம் மிகப் புனிதமான நேரமாதலின் இச்சமயத்தில் செய்யப்படும் பூஜை, அபிஷேகம், ஆராதனை, தியானம், தானதர்மங்கள், தர்ப்பணம், வேதபாராயணம், ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம், யோகம், ஹோமம், ஜபம், இறைப்பணிகள் போன்றவற்றிற்கு எண்ணிறந்த மடங்குகள் பலனுண்டு. மிகமிக அபூர்வமான இத்தகைய தெய்வீக வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்துவோமாக! பிரதோஷ கால சிவபூஜை போன்று உலக நன்மைக்காக விஷ்ணுபதி காலத்தில் அனைத்து வைஷ்ணவத் தலங்களிலும் விஷ்ணுபூஜை, சுவாமி புறப்பாடு போன்றவற்றை நிகழ்த்திட வைணவப் பெரியோர்களும் பக்த கோடிகளும் ஆவன செய்தல் வேண்டும். விஷ்ணுபதி புண்ய காலம் தற்போது ஒரு சில வைணவத் தலங்களில் கொண்டாடப்படுகிறதெனினும் பிரதோஷ பூஜை போல் யாங்கணும் அனைத்துத் தலங்களிலும் சிறந்த வைபவமாகக் கொண்டாடப்பட வேண்டும்.
இவ்விஷ்ணுபதியின் மஹிமையைக் காண்போமா!!!

.....................  மகாபாரதக் காட்சி
துச்சாதனன் அவையோர் நடுவில் திரெளபதியின் சேலையைக் கை கடுக்க இழுத்துக் கொண்டிருக்க..... பலமிருந்த மட்டும் போராடிப் பின்னர் .., .... ‘ஹே கிருஷ்ணா கோவிந்தா! என்று கூவிய திரௌபதி தேவி தோளிலிருந்து தம் கரங்களை எடுத்திட, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் திருவிளையாடலைத் தொடங்கினான், இல்லையில்லை தொடர்ந்தான்! ஸ்ரீகிருஷ்ணன் லீலா விநோதம் புரியாத நேரமுண்டா என்ன?
சேலையை இழுத்து இழுத்து துச்சாதனனின் கைகள் கன்னிச் சிவந்தன. விரல்கள் வீங்கின, தினவெடுத்த தோள் ரணம் கொண்டது! களைத்து, மயங்கித் தள்ளாடிச் சாய்ந்தான் துச்சாதனன்! அப்பப்பா! எவ்வளவு நீள சேலை ஆடை! சேலையாலான பாசறை போல் அஸ்தினாபுர அரண்மனைத் தரை எங்கும் சேலை தவழ்ந்து நிரம்பியது! அவையோரெல்லாம் வெளிச் செல்ல எண்ணி எங்கும் இமயமலைபோல் குவிந்து கிடந்த சேலையை விலக்க முயன்றனர்.
ஆனால்.........
சேலை நிரவிய இடமெங்கும் அக்னி நிறைந்தது போல் சூடாக இருந்தது. சேலையைத் தொட்டாலே கை சுட்டது! காரணம்...... திரௌபதி துர்கையின் அம்சங்களைத் கொண்டவள், பதிவிரதா தேவி! வெளியுலகிற்குப் பஞ்ச பாண்டவர்கள் ஐவரெனத் தோன்றிடினும் அவள் தம் கண்களுக்கு ஐவரும் ஒருவராகவே தெரிந்தனர். அவர்களைத் தெய்வமெனத் துதித்து பாத பூஜை, செய்து வழிபட்டு வருபவள்.
பத்னி  தெய்வமாய்ப் பொலிந்த திரௌபதி நினைத்திருந்தால் துரியோதனையோ துச்சாதனனையோ தன் கண் பார்வையாலேயே எரித்துச் சாம்பலாக்கியிருக்கக் கூடும். அத்தகைய பதிவிரதா தெய்வத் தன்மை நிறைந்தவள். ஆனால் அவள் அவ்வாறு செய்ய எண்ணவில்லை.
கலியுகத்தில் கூட எத்தனையோ மகான்கள் கோடிக் கணக்கானவர்களுடைய நோய்த் துன்பங்களை இறையருளால் தீர்த்து வைத்த போதும் தங்கள் உடல்நிலைக்குச் சிறு துன்பமோ பெரு நோயோ  எது வந்திடினும் அதைச் சாதாரண மனிதன் போல் அனுபவித்தே கழிக்கின்றனர். என்னே பரந்த உள்ளம்!
பத்தினிகளுக்கு இரட்சையாக நிற்பவர் அக்னி பகவான். எனவேதான் ஸ்ரீசீதாதேவி அக்னிப் பரீட்சையை ஏற்று நின்றனள். நைஷ்டிக பிரம்மச்சாரியான ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி, இலங்கையில் அரக்கர்கள் தம் வாலுக்குத் தீ வைத்த போதும் ஒரு சிறிதும் துன்பமுறாதது ஸ்ரீசீதையின் பிரார்த்தனையால் , ஸ்ரீராமஸ்மரணையிலேயே அவரும் லயித்து நின்றார்!
ஸ்ரீஅக்னி பகவானே கூட இருந்தால் எந்த அக்னிதான் கூடும்?
பதிவிரதா தெய்வமான திரௌபதியின் திருமேனி பட்ட வஸ்திரமாகையால் அச்சேலை தொடுபவரையெல்லாம் சுட்டது. பரந்த சமுத்திரமாயும் மலையாயும் உயர்ந்து நின்ற சேலையை யார் எடுப்பது? இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? எல்லோரும் என்ன செய்வதென்று அறியாது விழித்தபடியே கல்லெனச் சமைந்து நின்றனர்.
கவேரன் என்பவர் மாபெரும் பேரரசன் மட்டுமல்ல, சிறந்த ராஜரிஷியும் யோகியும் ஆவார். அஸ்தினாபுர அரண்மனையில் கவேரன் நுழைந்திட...... அனைவரும் மரியாதை நிமித்தமாய் எழுந்து நின்றனர். ஒருபுறம் தர்மசீலம் மிக்க தனிப்பெரும் பேரரசன்! மறுபுறம் பக்திநெறி பூண்ட அப்பழுக்கற்ற பரிசுத்தமான ராஜயோகி....... இதுவே கவேரனனின் இருபுற விமர்சனம்! கவேரன் நுழைந்தவுடன் மௌனம் நிலவியது.
“எவ்வித முன்னறிவிப்புமின்றி கவேரன் வந்திருப்பது ஏன்!” அனைவர் முகத்திலும் தொக்கி நின்ற வினா இது! “துரியோதனா! பதிவிரதா தேவியாம் திரௌபதியின் புனிதத் திருமேனியைத் தீண்டிய, வேறு எவராலும் தீண்ட இயலா பவித்ரமான இச்சேலையை அது சேர வேண்டிய இடத்தில் சேர்த்து விடுகிறோம் யாம் அதற்கு உன் அனுமதி தேவை!”
துரியோதனனுக்கு வெட்கம், இயலாமை, அவமானம், பயம், ஆச்சரியம், குழைவு, மனதில், பளு குறைந்த உணர்வு.... இத்யாதிகள்! “ஸ்வாமி ! கரும்பு தின்னக் கூலியா வேண்டும். தங்கள் சித்தம் என் பாக்கியம்” என்று மகிழ்ச்சியுடனும் பயத்துடனும் பதிலளித்த துரியோதனனுக்கு வியப்பு மேலிட்டது. “ஏனிந்த அக்ரமச் செயலைச் செய்தாய்?” என்று கடிந்து கவேரன் நமக்கு சாபமளிப்பார் என்று எண்ணினோமே! ஆனால் இக்கட்டான சூழ்நிலையில் அக்னியெனப் பிரகாசிக்கும் இவ்வளவு வஸ்திரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நான் தவிக்கின்ற வேளையில்.......................
மஹரிஷிகளை ஆலோசனை கேட்கலாமென்றால்........... இந்த வெட்கக் கேடான சம்பவத்தை அவர்களிடம் எப்படி எடுத்துச் சொல்வது என்று நான் துடிக்கின்ற பொழுதில்...... எவரும் எதிர்பாராத விதத்தில் புனித தேகரான கவேரனே வந்து நிற்கின்றாரென்றால்... இது யார் செய்த பாக்யமோ!”.............இவ்வாறாகப் பலவித மனவோட்டங்களில் லயித்த திரியோதனனை,
“நன்றி துரியோதனா! சென்று வருகிறேன். இவ்வுற்புத வஸ்திரத்தைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து விடுகிறேன்.” என்று கூறி விடை பெற வந்த கவேர ராஜரிஷியின் கம்பீரமான குரல் தட்டி எழுப்பியது. உடல் சிலிர்ப்பது போன்றும், நடுங்கி எழுந்த துரியோதனனை, அங்கு அவன் அச்சமயத்தில் கண்ட காட்சி மயிர் சிலிர்க்க வைத்தது.
தொடுபவரைச் சுட்டு அக்னிப்ரவாகமாகத் தரையில் படர்ந்துகுன்றென உயர்ந்து விரவிய சேலையினைக் கவேரன் தான் ஒருவராகச் சுருட்டி எடுத்துத் தம்முடைய இருபது இரதங்களில் வெண்பாறை போல் திரட்டி வைத்து விடைபெறத் தயாரானார். அக்னி, கவேரனைத் தீண்ட வில்லையா! தீண்டாதா! தீண்டக் கூடாதா?
எதனை, எங்கு, எதற்கு எவ்விடத்தில், எப்படி, ஏன் செய்ய வேண்டும் என்பதை அறிந்து அவ்விடத்தில் அவ்வாறே செய்து தீர்க தரிசியாக விளங்குபவரே சற்குரு! அவரே ராஜரிஷியாகவும், மஹானாகவும், யோகியாகவும், சித்த புருஷராகவும், ஞானியாகவும் விதவிதமான ரூபங்களில் இப்பூவுலகில் வலம் வருகிறார். அவரே பஞ்சபூத சக்திகளின் தன்மையை நன்கு உணர்ந்தவர். அப்படியானால் அக்னி பகவானின் திரண்ட அருளை இயற்கையாகவே அவர் பெற்றவராகின்றாரல்லவா! குருவருள் திருவருளாகத் திரண்டு நடக்கின்ற லீலா இதைத் திருவிளையாடல்கள், வினோதங்கள், எத்தனை, எத்தனை!
கவேர மஹரிஷி தம் கமண்டலத்துடன் இதோ தியானத்தில் ஆழ்ந்திருக்கின்றார்! ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தந்த சேலை வஸ்திரம் அவர்முன் சிறு கடல்போல் பரந்து கிடக்கின்றது!
“ஹே ஸ்ரீகிருஷ்ணா! மாதவா! கோவிந்தா! மதுசூதனா! யான் ஆதிசிவனருளால் இக்கமண்டலத்தினுள் புனித நீரைப் பல ஆண்டு காலமாகச் சுமந்து வருகிறேன். இதுவே என்னை அக்னிலிருந்து காக்கின்றது. உன்னருளால் இப்புனித நீரை இந்த வஸ்திரத்தின் மேல் தெளிக்கின்றேன்” என்று ஸ்ரீகிருஷ்ணனை வேண்டி, கவேர மஹரிஷி வஸ்திரத்தின் மேல் கமண்டல நீரைத் தெளித்திட,  
கடலென விரிந்த வஸ்திரம் மறைந்தது. அங்கே.....................................
மணம் நிறைந்த புஷ்ப வனங்கள், மூலிகைச் செடிகள், உயர்ந்த தென்னை மரங்கள், சமித்திற்குரிய விருட்சங்கள்.... இவை தோன்றி கண்ணுக்கினிய காட்சி யளிக்க........ ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீமஹா விஷ்ணுவாகக் காட்சியளிக்க, அருகில் தாயார் சௌந்தர்ய ரூபியாய்க் காட்சியளித்தாள். கவேர மஹரிஷி பக்தியின் உச்சத்தில் தன்னை மறந்தவராய் அப்படியே சிலையென நின்றார். அவர்தம் கண்களில் தாரை தாரையாய் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
“கவேர மஹரிஷியே! இதுகாறும் தாங்கள் செய்து வந்த இறைப் பணிகளைக் கண்டு ஆனந்திக்கிறோம்! தங்களுடைய திருக்கமண்டலத்தில் ஸ்ரீகங்கா தேவியே ஸ்ரீகாவேரி அன்னையாய் பிறிதொரு யுகத்தில் அவதரிக்க இருக்கிறாள். தங்களுடைய பக்திநெறியை மெச்சி விஷ்ணுபதியாம் நன்னிலையை அளிக்கின்றோம்”, என்று அருளிய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பாதங்களில் மஹரிஷி சரண் அடைந்தார்.
இவ்வாறு கவேர மஹரிஷி விஷ்ணுபதியைப் பெரும்பேறாக அடைந்த நேரமே அந்த யுகத்தின் யுவ வருடத் திருநாளாகும். மஹரிஷியின் வேண்டு கோளின்பேரில் அவ்விடத்திலேயே பெருமாள் கோயில் கொண்டு எழுந்தருளினார். இவ்வாறு கவேர மஹரிஷி விஷ்ணுபதியை அடைந்த திருத்தலம் சிறுபுலியூர் ஆகும்.
மாயவரம் அருகே கொல்லுமாங்குடியிலிருந்து 2 மைல் தொலைவிலுள்ளது சிறுபுலியூர்.
மூலவர் : சலசயனப் பெருமாள்
உற்சவப் பெருமாளின் நாமம் : ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள்
அம்பாளின் நாமம் : திருமாமகள் நாச்சியார்
17.8.1995 அன்று வரும் விஷ்ணுபதி புண்ய தினத்தன்று திருச்சிறுபுலியூர் (சிறுபுலியூர்) ஸ்ரீசலசயனப் பெருமாள் ஆலயத்தில் அபிஷேக, ஆராதனைகளுடன், கவேர மஹரிஷிக்கு அருள்பாலித்த ஸ்ரீசலசயனப் பெருமாளைச் சேவிப்பது மிகவும் விசேஷமானதாகும். இந்நாளில் இத்திருத்தலத்தில் துணிமணிகளைக் குறிப்பாக 9 கஜ சேலைகளை ஏழைகளுக்குத் தானமாக வழங்குவது பெரும் புண்ணியத்தைத் தரும்.
அடியார் : குருவேதா! ஒன்பது கஜசேலைகளைப் பெரும்பாலும் மடிப்பு வைத்த முறையிலேயே அணிவார்கள். ஏழைகள் இதனை எவ்வாறு பயன்படுத்த இயலும்?
சற்குரு: தானம் கொடுப்பதோடு ஒருவருடைய கடமை முடிகிறது. அதை அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்று ஆராய்ச்சி செய்தால் “நாம் கொடுத்தோம்” என்ற அகம்பாவமே மிஞ்சும். இது நல்லதல்ல!  முதலில் 9 கஜ சேலையைத் தானம் செய்வதின் தாத்பர்யத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்களாக!
9 கஜ சேலையை ஓர் ஏழைப் பெண்மணி அணிகின்ற போது தன் தேகத்தைச் சுற்றிச் பெரிதாக இரண்டு சுற்றாக தவழும் புதிய சேலையைக் கண்டு பரமானந்தமடைகின்றாள். அந்த ஆனந்தத்தை விவரிக்க இயலாது. இத்தகைய ஆனந்தத்தின் பலன் என்ன தெரியுமா? இச்சிறுபுலியூர்த் தலத்தின் விசேஷத்தால், பஞ்சபூத சக்திகளின் உறைவிடமான வஸ்திரத்தின் மேல் அதுவும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் பேரருளால் விளைந்த வஸ்திரத்தின் மேல் அமைந்த தலம் இது ஆதலின், அந்த ஏழையின் ஆனந்தத்தின் பலன் ஆயிரம் ஒன்பது கஜ சேலைகளைத் தானமாக வழங்கினால் கிட்டுகின்ற புண்ய சக்தியினை ஒருங்கே திரட்டிக் கிட்டுகின்ற ஆன்மீக சக்திக்கு ஈடானதாகும். மேலும் 9 கஜ சேலை பெரிதாக இருந்தால் என்ன, இரண்டு சேலைகளாக பகிர்ந்து பயன்படுத்தப் படுமே! இதனால் இரு புடவைகளை தானம் செய்த பலன்தான் வந்துவிடுமே!
அது சரி, ஒன்பது கஜ சேலை தானத்தின் பலன்கள் என்ன தெரியுமா!
1. சேலை தானம் செய்பவர்களின் எவர்க்கும் வாழ்க்கையில் எக்காலத்திலும் துணிப் பஞ்சம் ஏற்படாது.
2. மானபங்கத்திற்குரிய பிரச்சனை எதுவும் ஏற்படாது. சேலை தானப் பலன் இரட்சை போல் எங்கும் காத்து நிற்கும்.
3.அமைதியான முறையில் இறுதி வாழ்வு கழியும். பாயில் படுத்து சிறுநீர், மலத்தினைத் துணியில் கழிக்கின்ற நிலை ஏற்படாது!
4. சரும நோய்களுக்கு இது சிறந்த பரிஹாரமாகும்.
விஷ்ணுபதி மஹத்துவம் கொண்ட இத்தலத்தில் தான, தர்மங்கள் செய்துவர எத்தகைய நீடித்த கோர்ட் வழக்கும் நன்முறையில் பைசலாகும். மஹரிஷி கவேரன் போன்றோர் மட்டும் தொடக் கூடிய சேலையை எப்படி துச்சாதனன் மட்டும் தொட்டு இழுத்தான் ? அவனை அக்னி சுடவில்லையா?

கோகுலாஷ்டமி ஸ்ரீஜெயந்தி

இரண்டில் எதனைக் கொண்டாடுவது, ஸ்ரீகிருஷ்ணன் பிறந்த அஷ்டமி திதியைக் கொண்டாடுவோர் கோகுலாஷ்டமியையும், பிறந்த நட்சத்திரத்தைக் (ரோஹிணி) கொண்டாடுவோர் ஸ்ரீஜயந்தியாகவும் அனுஷ்டிப்பர். இரண்டும் ஒன்றே! அவரவர் குடும்ப பாரம்பரியப் படியும், பெரியோர்களின் அறிவுரையின் படியும் நடத்தல் நலம். இதுவும் இயலாவிடில் தத்தம் ஊரில் உள்ள அல்லது ஊரருகில் உள்ள பெருமாள் ஆலயத்தில் உள்ள கோயில்  நியதிப்படி ஏதேனும் ஒன்றையோ அல்லது இரண்டினையுமோ கொண்டாடலாம்.
ஸ்ரீகிருஷ்ணனைப் பூஜை செய்வதற்குப் பெரும் பாக்கியம் பெற்றிருக்க வேண்டும். இந்நாளில் முறுக்கு, சீடை, அப்பம், வெண்ணெயினையும் குழந்தைகளுக்குத் தானமாக அளிக்க வேண்டும். நாம் மட்டும் உண்பது அல்ல. இந்நாளில் துறவிகளுக்கோ, முதியவர்களுக்கோ “கௌபீன்ன தானம்” (கோவணம்) அளித்தலால் நீடித்த நோய்கள் எதுவும் அணுகாமல் தற்காத்துக் கொள்ளலாம். 70 வயது 80 வயது பெண்களுக்குச் சேலை தானம் மிகச் சிறந்தது.

திரௌபதியைக் காப்பாற்றிய ஸ்ரீகிருஷ்ணன்
மஹாபாரதத்தில் துச்சாதனன் துகிலுரிகையில் ஸ்ரீகிருஷ்ணன் திரௌபதிக்குத் “தீர்க வஸ்திரம்” அளித்துக் காப்பாற்றியதை நாம் அறிவோம். துச்சாதனன் அநாகரீகமாக, அதர்மமான முறையில் சேலையை இழுத்திட, திரௌபதி தன் தோளில் பலங்கொண்ட மட்டும் காத்திட முனைந்தாள். ஆனால் அப்போதும் “ஸ்ரீகிருஷ்ணா! கோவிந்தா! ஸ்ரீகிருஷ்ணா! இரட்சிப்பாயாக!” என்று கதறி அழுது புலம்பினாள் ஆனால் ஸ்ரீகிருஷ்ணன் அமைதியாயிருந்தான். காரணம் என்ன?
“தன்னால் தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்” என்றே திரௌபதி தன் கரங்களின் வலுவில் நம்பிக்கை கொண்டாள். ஆனால் தன்னால் முடியாது என்ற நிலை வந்தவுடன்.....ஸ்ரீகிருஷ்ணனால் தான் முடியும் என்ற முடிவிற்கு வந்தனள்.
........ இதுவே முழு சரணாகதி!!!
தன்னிடம் அடைக்கலம் புகுந்த  க்ஷணமே தெய்வம் வந்து நின்று காப்பாற்றும். ஆனால் அதுவரையில் முயற்சி செய்தேயாக வேண்டும். அதுவும் இறையருளால் முயற்சி செய்கிறோம் என்ற எண்ணத்துடன்! தன்னால் முடியும் என்ற எண்ணத்தினால் அல்ல!
திரௌபதி “ஸ்ரீகிருஷ்ணா” என்று உள்ளம் உருகக் களைத்துத் தோளிருந்த தன் கரங்களை எடுத்தாள்! துச்சாதனன் வெட்கமறச் சிரித்தான்! அதோ! ஆஹா! அந்த க்ஷணத்திலேயே ஸ்ரீகிருஷ்ணன் தன் திருவிளையாடலைத் தொடங்கி விட்டான். அரச சபையே வஸ்திரத்தால்  நிரம்பி விடுமோ என்ற அளவிற்குத் திரரௌபதியின் சேலை வளர்ந்து கொண்டே இருந்தது! துச்சாதனன் துகிலுரித்துக் களைத்துச் சோர்ந்து தரையில் விழுந்தான்! இதுவரை புராணத்தை நாமறிவோம்.......
திரௌபதிக்கு இவ்வித அனுக்ரஹத்தை ஸ்ரீகிருஷ்ணன் அளிப்பானேன்! இதன் விளக்கத்தை சித்தர்கள் அழகுபட அளிக்கின்றனர்!
............ இதோ! பஞ்ச பாண்டவர்கள் நதியில் ஆனந்தமாய் நீராடிக் கொண்டிருக்கின்றார்கள்... காலை சூர்யோதயத்தில் நதியில் இறங்கியவர்கள் ... ஒவ்வொருவராகக் களைத்து உச்சிப் பொழுதில் தான் வெளிவந்தார்கள். ஆனால் ஸ்ரீகிருஷ்ணன் மட்டும் கரையேறவில்லை!  “கிருஷ்ணா, கிருஷ்ணா வந்து விடு” என்று பலர் கூக்குரலிட்டும் ஸ்ரீகிருஷ்ணன் வெளிவரவில்லை! எல்லோரும் பயந்து விட்டனர். ஸ்ரீகிருஷ்ணனோ நீரினுள் கைகளை ஆட்டி ஆட்டி விளையாடிக் கொண்டிருந்தான்.  
மதியம் வந்து விட்டது! விஷயம் புரியாது அனைவரும் சகாதேவனைத் தேடிக் கூட்டி வந்தனர். இளவயதிலேயே ஞானியாய் ஜ்வலித்தான் சகாதேவன்! தீர்க தரிசியாயிற்றே! சகாதேவன் வரும் பொழுதே, திரௌபதியையும் கூட்டி வந்தான்.
சகாதேவன் ஸ்ரீகிருஷ்ணன் நீரிலிருந்து வராததை எடுத்துக் கூறினான் திரௌபதையிடம்.. “இவனுக்கே காரணம் புரியவில்லை. இந்தப் பெண்ணிற்கு என்ன தெரியும்?” என அனைவரும் நகைத்தனர். திரௌபதி நதிக் கரையில் நின்று பார்த்தாள். ஸ்ரீகிருஷ்ணனோ பரமானந்தமாய் நீரில் கொட்டம் அடித்துக் கொண்டிருந்தான். திரௌபதி சகாதேவனை அழைத்தாள். சர்ரென்று தன் முந்தானையை சற்றுக் கிழித்து “இதனை நீரினுள் இருக்கும் கிருஷ்ணனிடம் தூக்கிப் போடுவீர்களாக!” என்றாள். அனைவரும் திகைத்து நின்றனர். திரௌபதி விரைந்து திரும்பி விட்டாள்.
ஒரு முழம் ..........ஓராயிரம் கஜம்
ஸ்ரீகிருஷ்ணன் தன் ஆட்டங்களை நிறுத்தி விட்டு இரு கரங்களையும் உயர்த்தினான். “கிருஷ்ணா! இந்தா! என்று திரௌபதி அளித்த வஸ்திரத்தைச் சகாதேவன் ஸ்ரீகிருஷ்ணனிடம் தூக்கி எறிந்திட,
ஸ்ரீகிருஷ்ணன் அதனை “லபக்” என்று பிடித்துக் கொண்டான்! அனைவரும் நிசப்தத்துடன் கண் இமைக்காது பார்த்து நின்றனர்.
இதோ.. ஸ்ரீகிருஷ்ணன் எழுந்து விட்டான்! கரைக்கு வந்து கொண்டிருக்கிறான்! அவன் இடுப்பில் திரௌபதி அளித்த வஸ்திரம்! அனைவர் முகத்திலும் ஈயாடவில்லை! வெட்கித் தலைகுனிந்தனர் =. ஏன்?  ஸ்ரீகிருஷ்ணன் த்ரௌபதி அளித்த முந்தானைத் துணியை இடைத் துணியாகச் சுற்றிக் கட்டியிருந்தான்!
இப்போது தெரிகிறதா, ஏன் ஸ்ரீகிருஷ்ணன் நதி நீரை விட்டு வெளியில் வரவில்லையென்று! “இந்தச் சின்ன விஷயத்தை நாம் புரிந்து கொள்ளாமல் போனோமே!” – என்று எண்ணி அனைவரும் வெட்கி நின்றனர். அதனைப் புரிந்து கொண்டவள் திரௌபதி மட்டுமே! பிரச்சனையை அறிந்தவுடன் அதற்கான தீர்வை அளித்துச் சென்று விட்டாள்!
அப்போது அவள் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கு அளித்த. “சிறு முந்தானை ஓரத் துணியைத்” தான் பிற்காலத்தில் ஆயிரமாயிரம் கஜ சேலைத் துணியாய்ப் பெற்றாள்! .ஸ்ரீகிருஷ்ணனுக்கு வஸ்திர தானம் தந்து மானம் காத்தவள் அன்றோ!
அன்று திரௌபதி அளித்த “ஓரத் துணிக்கு” பரிசாகப் பரமாத்மா ஆயிரமாயிரம் கஜ சேலையாகத் திருப்பியளித்துத் தன் “பாக்கியைத்” தீர்த்து விட்டான். அது “பாக்கிய” மாகத் திரௌபதிக்கு அமைந்து விட்டது!
கௌபீன தானம் : எனவேதான் கோகுலாஷ்டமியன்று “கௌபீன தானம்” செய்தால் வாழ்க்கையில் எவ்வித  மானமிழக்கும் சம்பவமும் ஏற்படாது. மேலும் கடுமையான நோயில்படுத்துத் தன்னிலை இழந்து அலங்கோலமாய்க் கிடந்து படுக்கையிலேயே மலஜலம் கழிக்கின்ற நிலையும் ஏற்படாது! கௌபீனத்தைத் (கோவணம்) தானம் செய்வது சாத்யமா? இதை எவரேனும் ஏற்பார்களா?
திருஅண்ணாமலை போன்ற தலங்களில் பல வறிய முதியோர்கள், வறிய சாதுக்கள் காவி உடையணிந்து பிச்சை கேட்கின்றனர். இவர்களுக்குக் கௌபீனத்துடன் வேஷ்டி, துண்டு அளித்தால் அவற்றை மனமுவந்து ஏற்பர். ஆனால் புதுத் துணியில் கௌபீனத்தை நன்கு பெரிதாக மடிப்புகள் வைத்து இடைச் சுற்றுடன் ஓரங்களைத் தைக்க வேண்டும். வெறுமனே துணியைக் கிழித்துத் தருவது கௌபீனமாகாது! செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டும். திருஅண்ணாமலை, பழனி போன்ற தலங்களில் நூற்றுக்கணக்கான சாதுக்கள், முதியோர், கௌபீன வஸ்திரத்தை ஏற்கின்றார்.

ஸ்ரீவாஸ்து புருஷன்

ஸ்ரீநாராயண மூர்த்தியின் அம்சமே வாஸ்து புருஷனாவார். சர்வ கோடி லோகங்களின் அடிப்பகுதியில் வாசம் செய்யும் ஸ்ரீவாஸ்து புருஷன் வாமன, கூர்ம, மத்ஸ்ய அவதாரங்களின் அம்சங்களைப் பூண்டவர். புது வீடு, கட்டிடம் கட்டுவதற்கும் ஸ்ரீவாஸ்து ஹோமம், பூஜை செய்வர். ஸ்ரீவாஸ்து புருஷன் சயனித்து எழுகின்ற கால நேரமும் உண்டு. இதை நம் பெரியோர்கள் கணித்துத் தந்துள்ளனர்.
ஸ்ரீவாஸ்து புருஷனின் நித்திரை : ஸ்ரீவாஸ்து புருஷன் இடது கையைத் தலையின் கீழ்வைத்து கீழ் கண்ட திசையில் சிரசை வைத்துச் சயனித்திருப்பார்.

மாதங்கள்

சிரசு திசை

புரட்டாசி , ஐப்பசி, கார்த்திகை

கிழக்கே சிரசு

மார்கழி ,தை,மாசி

தெற்கே சிரசு

பங்குனி,  சித்திரை, வைகாசி

மேற்கே சிரசு

ஆனி , ஆடி, ஆவணி

வடக்கே சிரசு

ஸ்ரீவாஸ்து புருஷன் பார்க்கின்ற திசையிலும் கால் புறமுள்ள திசையிலும் வீடுகள், கட்டிடங்கள் கட்டக் கூடாது
ஸ்ரீவாஸ்து புருஷன் நித்திரை விடுதல்
ஸ்ரீவாஸ்து புருஷன் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்கள்  முழுதும் நித்திரையில் ஆழ்ந்திருப்பார். எனவே பொதுவாக இம்மாதங்களில் புதுக் கட்டிட வேலைகளைத் துவங்குவதில்லை.
ஸ்ரீவாஸ்து புருஷன் ஏனைய மாதங்களில் குறித்த தேதிகளில் சயனத்தை விடுத்து எழுந்து தந்த சுத்தி (பல் துலக்குதல்), நீராடுதல், ஸ்ரீநாராயண பூஜை, போகனம் (உணவு ஏற்றல்) தாம்பூலம் தரித்தல் ஆகிய ஐந்து பணிகளை ஆற்றி மீண்டும் சயனிப்பார்.
ஸ்ரீவாஸ்து புருஷனின் சயன நிலை: ஸ்ரீவாஸ்து புருஷன், ஸ்ரீரெங்கநாதர் போன்ற தெய்வ மூர்த்திகள் சயனித்தல் கோலத்தை மேற்கொண்டு அருள்பாலிக்கின்றனர். இது ஒருவித யோகநிலையாகும். சயனித்தல் என்றால் உறங்குதல் என்ற பொருள் கொள்ளுதலாகாது! பிரளயத்திற்குப் பின் ஆதிசிவன் சிருஷ்டிக்கு முந்தைய யோக சயன நிலையைப் பயில்கின்றார். இத்தருணத்தில் அனைத்து ஜீவன்களும் இறைவனிடம் ஐக்யமடைகின்றன. இந்நிலையில் அவதாரம் பெற்ற தெய்வ மூர்த்திகளே ஸ்ரீரெங்கநாதரும் ஸ்ரீவாஸ்து புருஷரும்!

நித்திரை காலத்தில்.... ஸ்ரீவாஸ்து புருஷன் சயனிக்கையில் சகலகோடி நில தேவதைகள், நீரோட்ட தேவதைகள், பிருதிவி பூதங்கள், தாவர தேவதைகள், சிலாக்கல் தேவதைகள், உலோக தேவதைகள், அக்னி தேவதைகள் போன்ற அனைத்தும் அவரிடம் ஐக்யமடைகின்றன. எனவே இந்நாட்களில் புதுக் கட்டிட வேலைகளைத் தொடங்கலாகாது. காரணம் அந்நிலப் பகுதிக்குரித்தான தேவதைகள் அச்சமயத்தில் யோக நிலை பூண்டிருக்கும். அவர்களின் யோக நிலைக்குப் பங்கம் வரும் வண்ணம் அஸ்திவாரம், குழிதோண்டுதல் போன்ற கட்டிட வேலைகளைச் செய்தால் அவை தேவதா சாபங்களுக்கு உள்ளாகி அந்நிலப் பகுதியில் நிலச்சரிவு, இடி விழுதல், பூகம்பம், மின் அதிர்ச்சி, கட்டிடம் இடிந்து விழுதல், அரைகுறை நிலையில் கட்டிடம் நின்று போதல், வாடகைதாரர்களிடம்  தகராறு, கட்டிடத்தில் கட்டிடப் பொருட்களின் நஷ்டம், தாங்க இயலா விலையேற்றம், சூன்ய தோஷங்கள் போன்றவை ஏற்படும்.எனவே ஸ்ரீவாஸ்து புருஷ தத்துவத்தை ஒட்டி வீடு, கட்டிடங்களைக் கட்ட வேண்டும்.
சிருஷ்டி நியதிகள்
இந்த நவீன விஞ்ஞான யுகத்தில் கட்டிட வேலைகள் தொடர்ந்து நடக்கத்தானே வேண்டும் என்று தோன்றலாம். சிருஷ்டி நியதியில் எவ்வித இயக்கமும் பல மாறுதல்களுக்கு உள்ளாகின்றன. விவசாயம் கூட சில பருவங்களில் ஓய்வு பெறும். புதிய வேத அத்யயனங்களைக் கூட ஒரு பருவத்தில் நிறுத்தி விடுகின்றார்கள். மல மாதங்கள் என்று சில உண்டு. இவற்றில் பல இயக்கங்கள் நிறுத்தப்படுகின்றன. எனவே பெரியோர்கள் இட்ட நியதிப்படி நடப்பதே நன்மை தருவதாகும்.           எனவே ஸ்ரீவாஸ்து புருஷன் நித்திரையில் இருக்கின்ற காலங்களில் புதுக் கட்டிட வேலைகளைத் துவங்கலாகாது! இதற்குப் பல ஆன்மீக காரணங்கள் உண்டு! தக்க சற்குருவை நாடி விளக்கங்களைப் பெற்று பயன் பெறுதல் நலம்.
பூமியின் நீரோட்டம், சுழற்சி வேகம், புவியீர்ப்புத் தன்மை, யோக, கரணநியதிகள், அயன மாறுதல்கள் – இத்தகைய பிருதிவி, அப்புத் தத்வங்களைக் கருத்தில் கொண்டே ஸ்ரீவாஸ்து புருஷன் நித்திரைக் காலமும் விழித்திருக்கும் காலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நல்ல நேரம்

ஸ்ரீவாஸ்து புருஷன் கீழ்க்கண்ட தினங்களில் சயனத்திலிருந்து எழுகின்றார். இந்நாளில் குறித்த நேரங்களில் மட்டுமே கிரஹ ஆரம்பம் செய்வது உத்தமம் ஆகும். கீழ்க்கண்ட தினங்களில் குறித்த நாழிகைக்கு மேல் சுமார் 90 நிமிடங்கள் வரை ஸ்ரீவாஸ்து புருஷன் விழித்திருப்பார்.
எழுந்தவுடன்................

தந்த சுத்தி

18 நிமிடங்கள்

ஸ்நானம்

18 நிமிடங்கள்

பூஜை

18 நிமிடங்கள்

போஜனம்

18 நிமிடங்கள்

தாம்பூலம்

18 நிமிடங்கள்

இவற்றில் ஸ்ரீவாஸ்து புருஷன் போஜனம் கொள்கின்ற நேரம், தாம்பூலம் தரிக்கும் நேரம் ஆகிய 36 (18+18) நிமிடங்களே கிரஹ ஆரம்பத்திற்கான புனிதமான நேரம் .

அமாவாசையும் கரிநாளும்

25.8.1995 வெள்ளி அன்று கரிநாளுடன் சர்வ அமாவாசை கூடி வருகிறது. இதற்குப் பலித்ருவ கரிநாள் என்று பெயர். கரிநாளுடன் அமாவாசை சேர்ந்திடில் சனிப் ப்ரீதிக்கு உகந்த நாள் என்றூ பொருள். மேலும் மறுநாள் சனிக்கிழமை காலை 10 மணி வரை அமாவாசை திதி கூடிட, சனி வக்ர காலமாதலாலும். சனி மகாதசை உள்ளவர்கள் சிறப்பான பரிகாரங்களைச் செய்யக் கூடிய திருநாளாகும்.
சனிக்கிழமையும் கரிநாள் கழிந்து கூடிய அமாவாசை தினம் அமைவது மிகவும் அபூர்வமானதாகும். இந்நாளில் சனீஸ்வர ப்ரீதிக்கான எவ்வித நற்காரியங்களும் மூன்று மடங்குப் பலனைத் தருகின்றன. மேலும் இவ்வித தான தர்மங்களைத் திருநள்ளாறு, இராமேஸ்வரம், திருஅண்ணாமலை, காஞ்சிபுரம், திருவிடைமருதூர், மதுரை கம்பம் அருகே கூச்சனூர் சூரியனார் கோயில் போன்ற தலங்களில் செய்வது மும்மடங்குப் பலன்களாகப் பல்கிப் பெருகும்.  வெள்ளி, சனிக்கிழமையில் அமாவாசை உள்ள காலை 10 மணி ஆகிய இருநாட்களில் தர்ப்பணம் செய்வது உத்தமமானது.
சனி மகா தசையில் மாரகம் அடைந்தவர்களுக்கு இது சிறந்த பரிஹாரம் தரும் நாளாகும். இந்நாளில் செய்ய வேண்டிய விசேஷமான தர்ப்பண முறை ஒன்று உண்டு. சாதாரணமாகத் தர்ப்பணம் அளிப்பதை விட இத்தகைய முக்கியமான நாட்களில் சித்த புருஷர்கள் அருள்கின்ற வழியில் தர்ப்பணங்களை அளித்தால் அவற்றைப் பித்ரு தேவர்கள் மிகுந்த ஆனந்தத்துடன் ஏற்று அளப்பரிய ஆசீர்வாதங்களை தந்தருள்கின்றனர்.
பலித்ருவ தர்ப்பணம் : வாமன அவதாரம் பூண்ட ஸ்ரீமகாவிஷ்ணு இன்றைக்கும் பாதாள லோகத்தில் பலிச்சக்கரவர்த்திக்குக் காவல் தெய்வமாய் நின்று அருள்பாலிக்கின்றார். கரிநாள் கூடிய அமாவாசையன்று செய்ய வேண்டிய பலித்ருவ தர்ப்பண முறையானது வாமன அவதார காலத்திலிருந்து   தான் நடைமுறைக்கு வந்தது.
காய்ந்த நெல்தானியத்தை வட்டமாகப் பரப்பி அதன் மேல் நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய் என்ற இவ்வைந்தில் ஏதேனும் மூன்று கலந்த கூட்டு எண்ணெயை ஓர் அகலில் ஊற்றி தாமரைத் தண்டு அல்லது பஞ்சுத் திரியால் தீபம் ஏற்ற வேண்டும். ஒரு கறுப்புத் துணியில் நவதானியங்களைச் சேர்த்து சிறு முடிச்சு செய்து முக்கூட்டு எண்ணெயில் தோய்த்துத் தனியே எடுத்து நெல்லின் மேல் மற்றொரு அகலில் வைக்க வேண்டும்.
முக்கூட்டு ஜோதி, நவதானிய முடிச்சு உள்ள அகல் இவற்றின் முன் நெல்லின் மேல் தர்ப்பைகளைப் பரப்பி தர்ப்பைச் சட்டம் அமைத்துப் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளிக்க வேண்டும். தர்ப்பணம் முடியும் வரை அகல் விளக்கில் முக்கூட்டு ஜோதி எரிந்து கொண்டிருக்க வேண்டும். ஒன்று அல்லது மூன்று ஜோதிகள் ஏற்றலாம். தர்ப்பணங்களை வார்த்த பின் அதாவது தர்ப்பணம் கொடுத்து முடித்த பின்னர் பலித்ருவ ஜோதிக்கு ஆகுதியாக நவதானிய முடிச்சினை அகல் ஜோதியில் ஏற்றி அதனை அகலிலேயே விட்டுவிட வேண்டும். இதனுடன் பலித்ருவ தர்ப்பண பூஜை பரிபூரணமடைகிறது. இந்த ஆன்மீக இரகசியத்தின் விளக்கம் என்னவெனில், அகலில் ஏற்றப்படும் பலித்ருவ ஜோதியே பித்ருக்களுக்கு உரித்தான ஹோம அக்னியாகும். ஹோமத்திற்குரிய பூர்ணாஹுதியே நவதான்யம் சேர்ந்த பஞ்சபூத சக்தி மிகுந்த (கருப்பு வஸ்திரமாகிய) முடிச்சாகும்.
கருப்பு வஸ்திரம் சனீஸ்வரனுக்கு உரித்தானது. நவதான்யங்கள் கிட்டாவிடில் கறுப்பு எள் சேர்ந்த முடிச்சு கொண்டு ஆஹுதியிடலாம். இவ்வாறாக நவக்கிரகங்களுக்கு உரித்தான தான்யங்களைச் சிறுதுணியில் கட்டி தீபமாக ஏற்றுவதற்கு தான்ய ஹோமத் தீபம் என்று பெயர். இந்நாளில் கறிவேப்பிலைப் பொடி சாதத்தை அன்னதானம் செய்வது சிறப்பானதாகும். பொதுவாகக் கரிநாளன்று கருப்பு/கருநீல நிற உணவுப் பண்டங்களை அன்னதானமாக வழங்கலாம். (கருப்பு திராட்சை, நாவற்பழம் etc…)  
ஆத்மலிங்கம் என்ற பெயருடைய ஈஸ்வரத் தலங்களில், கோயில் தீர்த்தங்களில் பலித்ருவ தர்ப்பணம் செய்தல், பலித்ருவ ஹோம தீபம் ஏற்றுவது விசேஷமானதெனச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர் (உ-ம். ஸ்ரீஆத்மநாதர் எழுந்தருளியுள்ள ஆவுடையார் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி – மீமிசல் மார்க்கத்தில் உள்ளது).

அடிமை கண்ட ஆனந்தம்

கடந்த “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” மே 1995 இதழில் நமக்குப் பரிச்சயமான அந்த அரை டிராயர் சிறுவன் தம் சற்குருவாம் கோவணாண்டிப் பெரியவருடன் செஞ்சி மலையில் பெற்ற அனுபவங்களில் ஒரு பகுதியை மட்டும் அளித்திருந்தோம். “கோலக் கரு இரகசியங்கள், பரகாயப் பிரவேச முறை, தெய்வீக காரியங்களுக்காக வாமன தந்திரமான கூடு விட்டு கூடு பாய்தல்” போன்ற பல ஆன்மீக இரகசியங்கள் நிறைந்துள்ள அனுபவமது. பெரியவரின் உடலருகே சிறுவன் இரவு முழுதும் அமர்ந்திருந்ததோடு அவ்வனுபூதியை நிறுத்திருந்தோம்.
“சிறுவனுக்கு என்னவாயிற்று? கோவணாண்டிப் பெரியவர் தம் தேகத்தை மலைக்குகையருகே கிடத்திவிட்டு எவ்வாறு மீண்டார்? ஸ்ரீஇராமானுஜரே தம் சற்குரு அருளிய மிகமிக இரகசியமான மந்திரத்தை அதன் பலன்கள் கருதி, மத, இன, குல பேதமின்றி யாவரையும் சென்றடையட்டும் என்ற புனிதமான எண்ணத்தில் கோவில் கோபுரத்தின் மேலேறி அம்மந்திரத்தை குருவின் ஆணையையும் மீறி யாவருக்கும் அளித்தாரல்லவா? இதேபோல் ‘சிறுவனுடைய பூத உடல் பரிமாண மாற்ற இரகசிய அனுபூதிகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாகாதா?” என்று பல அன்பர்கள் பரிவுடன் கேட்டுள்ளமையால் சிறுவனுடைய செஞ்சிமலை ஆன்மீக அனுபவங்களை மீண்டும் தொடர்கின்றோம்.
“இது உன் முதல் அனுபவம் என்பதாலும் என் உடம்புல சூடு, உயிர்த்துடிப்பு இரண்டை மட்டும் வைச்சிட்டுப் போறேன்”.. பெரியவரின் அறிவுரை இது! காலை சுமார் 3½ மணி இருக்கும். பெரியவர் சிறுவனை அழைத்தார். தன்மார்பில் ஏறி அவனை உட்காரச் சொல்லிட......   

அவர் உடலில் அசைவுகள் ஸ்தம்பித்தன போலிருந்தன. இருட்டில் அதைத் தொட்டுப் பார்த்த சிறுவனுக்கு அழுகை வந்துவிட்டது.! “ஓ” வென்று கதறினான். பெரியவர் கலகலவென்று சிரித்தார். அதற்குப் பிறகு பெரிய நிசப்தம்! சுற்றிலும் இருட்டு! சிறுவன் வேகமாக வேத மந்திரங்களையும் இறை நாமங்களையும் உச்சாடனம் செய்யத் துவங்கினான். கண்களை இறுக்க மூடிக்கொண்டான். பெரியவரின் உடல் மேல் நன்கு படுத்துக் கொண்டான். தூங்கி விட்டால் பொழுது ஓடுவது தெரியாதே!
மறுநாள்............
எப்போதும் கோவணாண்டியாகவே தரிசனம் தந்த பெரியவர் அந்த செஞ்சிமலை குகை அருகே தம் பூத உடலைக்கிடத்தி விட்டுச் சிறுவனைக் காவலுக்கும் வைத்து விட்டுச் செல்லுமுன் ஒரு எட்டுமுழத் துணியைப் பல மூலிகைகளின் திரண்ட சாற்றில் நனைத்து அதனைத் தம் உடலின் மீது போர்த்துமாறு சிறுவனிடம் சொல்லியிருந்தார்.
அன்றிரவு சிறுவன் பெரியவரின் தேகத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு நன்றாகவே தூங்கி விட்டான்...... பறவைகளின் ரீங்காரத்திலும் காற்றின் ஒசையிலும் பதைபதைத்து எழுந்தான் சிறுவன். அலறி அடித்துக் கொண்டு எழுந்தமையால் பெரியவர் சொல்லித் தந்த கரதரிசனங்களை (உள்ளங்கையை விரித்துப் பார்த்தல்) அறவே மறந்து விட்டான். ஆனால் அசைவற்ற ஓர் உடலின் மீது படுத்து எழுந்தால் தானே அந்த பீதியைப் புரிந்து கொள்ள முடியும். அந்நேரத்தில் தரிசனமாவது, நமஸ்காரமாவது!
கர தரிசனம் ,அங்காள பரமேஸ்வரி தியானம், குருபாத நமஸ்காரம், குல தெய்வப் பிரார்த்தனை, பெற்றோர்களை மானசீகமாக வணங்குதல், திருஅண்ணாமலை தரிசனம் அனைத்தையுமே அன்றைய தினம் “பயத்தில்” சிறுவன் விட்டுவிட்டான். ஆமாம்! ஜில்லிட்டுக் கொண்டிருக்கும் ஒரு உடலின் மேல் பல மணிநேரங்கள் உட்காந்திருந்தால் யாருக்கு என்னதான் தோன்றும் ? காட்டு மந்திரவாதியா என்ன அனைத்தையும் சகித்துக் கொள்வதற்கு!
“அடடா! வாத்தியார் என்ன சொல்லிட்டுப் போனார்? மொதல்ல உடம்புல கொஞ்சம் சூடு இருக்கும். அப்புறம் ஜில்லுனு ஆயிடும். எதுக்கும் பயப்படாதே, என் உடம்பை விட்டு இங்க அங்க நகரக் கூடாது. உனக்குத்தான் பசி எடுக்காத மூலிகை ரசத்தைக் கொடுத்துட்டேனே. ஆனால் ஒண்ணுக்கு, ரெண்டுக்கு போயித்தான் ஆகணும். இதோ பாரு! திருஅண்ணாமலையைப் பார்த்த திசையில அந்த வேப்பமரம் வரைக்கும் நீ போகலாம். ஆனா அங்க போனாக்கூட என் உடம்பை நீ பார்த்துக்கிட்டே போகணும். மலமோ, சிறுநீரோ எதையும் கண்ட்ரோல் பண்ணாதே! அப்பப்ப போய்ட்டு வந்துடு.
“அதுதான் பசிக்காதே. மல, மூத்திராதி எப்படி வரும்னு கேட்காதே. இது உனக்கு ஒரு டிரெயினிங். நீ சாப்பிடாட்டாக் கூட இந்த பரகாயப் பிரவேச அனுபவத்துல என்னோட “பாடில” உள்ள மல, மூத்திராதிகள் உன் மூலமாகத்தான் வரும். அதெல்லாம் உனக்குப் புரியாது. “அந்த வேப்பமரம் பக்கத்துல ஒரு சுனையில தண்ணி இருக்கும். ரொம்ப ஊத்திடாம அளவோட பயன் படுத்திக்கோ. ஏன்னா அது அபூர்வமான தீர்த்தம். அதுக்காக ஆயிரமாயிரம் தேவதைங்க இங்க சுத்திக்கிட்டிருக்கு... இது பல அற்புதமான ஆன்மீக இரகசியங்கள் நெறஞ்ச மலைடா ..... பல அண்டத்துலேந்தும் தியானத்துக்கு இங்க ஓடி வராங்கன்னா பார்த்துக்கோயேன் இதோட மஹிமையை...!
சிறுவன் பெரியவருடைய வார்த்தைகளை அசைபோட்டான். “நல்லாத் தூங்குடா ராஜா. ஆனா கீழே படுக்காதே. என் உடம்புமேல ஏறி நல்லாக்கட்டிப் பிடிச்சுக்கோ. தூங்குறது தப்பு கிடையாது. உனக்கு “ராத்திரி சூக்தம்” மந்திரத்தைச் சொல்லித் தந்திருக்கேன். அதை மூணு தடவை சொல்லிட்டுப் படுத்துக்கோ.........” பெரியவருடைய இவ்வார்த்தைகளை நினைவுக்குக் கொண்டு வந்தவுடன் தான் சிறுவனுக்குச் சற்று நிம்மதி வந்தது. தான் தூங்கியது தப்பில்லை என்ற திருப்தி வந்ததால்!  அந்த விடியற்காலையில் இவை நினைவுக்கு வந்தவுடன் சிறுவன் துள்ளி எழுந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். ஆபத்து ஒன்றுமில்லை. நன்றாக விடிந்து கொண்டிருந்தது.  
“டேய் தண்ணி குடிக்கிறதோ, இல்லாட்டி அசூயை காரியம்னோ எதையும் பார்க்காம” இந்த திருவோட்டுலதான் நீ எதையும் செய்யணும்.” இது பெரியவரின் கட்டளை ஒரு பழைய காலத்துத் திருவோட்டையும் கொடுத்திருந்தார். வேப்பமரக் குச்சியில் பல் துலக்குதல், காலைக் கடன்கள் முடிந்தன. திடீரென்று சிறுவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது! “ஆமாம் நமக்குத் தான் பசிக்காதே அப்புறம் ஏன் பல் தேய்ப்பது”- இந்த எண்ணம் தான் சிரிப்புக்குக் காரணம்! இந்த நினைப்பு வந்ததுதான் தாமதம். சிறுவனுக்கு அடிவயிற்றில் பசிப்பது போல் தோன்றியது! சிறுவனால் எத்தகைய  வேதனைகளையும் குருஅருளால், திருஅருணாசலத்தின் கருணையால் தாங்க முடியும், பசியைத் தவிர! “ ................... ஏதோ மூலிகை கொடுத்தாரு, நமக்குத்தான் பசிக்காதுன்னு கர்வம் வரக் கூடாது. அப்படி வந்தா உடனே பசிக்கும். அது மூலிகையோட தப்பில்லை, உன் தப்புதான். மூலிகை ரசத்தினால் பசிக்காதுன்னு சொன்னேனே தவிர உன்னைச் சாப்பிட வேண்டாம்னு சொல்லலை. ஆசைப்பட்டா, பசிக்காட்டினாக் கூட பரவாயில்ல, எதையும் சாப்பிடலாம். எதுக்கும் இந்தப் பையில் கொஞ்சம் பழம் வெச்சிட்டுப் போறேன்...” என்று கூறிய பெரியவர் ஒரு சிறு துணி மூட்டையையும் தம் காலடியில் வைத்து விட்டுப் போயிருந்தார். வரும்போது “ஹாய்யாக” ரெண்டு கைகளையும் வீசியவாறு வந்த பெரியவர் இந்தத் திருவோடு, எட்டு முழத் துணி, பழமூட்டை ஆகியவற்றை எப்படிக் கொணர்ந்தார்? இதுதான் சித்தன் போக்கு சிவன் போக்கு போலும்!
சுனை சென்று திரும்பி வருகையில் பெரிய்வரின் கால்மாட்டில் கிடந்த அந்தத் துணிமூட்டையைப் பார்த்தவுடன் தான் பெரியவருடைய மேற்கண்ட வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. “பசியா அல்லது பசிக்கின்ற உணர்வா  இரண்டும் ஒன்றுதானோ! இருக்கின்ற பயத்தில் இந்தக் குழப்பம் வேறு!” சிறுவனுக்கு மீண்டும் சிரிப்பு வந்து விட்டது!
காரணம் என்ன? “சோத்து மூட்டை சுப்பராயடு” என்று வாத்தியார் அடிக்கடி நம்மைக் கிண்டல் செய்வது சரியாகத்தான் இருக்கு!” திருநீறணிந்து கொண்டு மூட்டையைப் பிரித்தான். வாழைப்பழம், அன்னாசிப்பழம், பப்பாளி, தக்காளி, மாம்பழம் இத்யாதிகள். (அப்போது ஏதோ இரண்டு வாழைப் பழங்களைத் தின்றதற்காகப் பின்னால் பெரியவர் பாடிய வசையை/சிறுவனுக்கு இட்ட தண்டனையைப் பின்னர் பார்ப்போம்!)
சிறுவன் உடனே நாம சங்கீர்த்தனத்தை ஆரம்பித்தான். “ராமா, கிருஷ்ணா , கோவிந்தா, சிவா, குரு”............. என்றவாறாக பொழுது போவதே தெரியவில்லை. மாலையும் வந்தது. இருளும் சேர்ந்தது. “என்ன ஆச்சரியம்! நேரம் போனதே தெரியவில்லையே! பசியும் இல்லையே!” சிறுவன் அதிசயித்தான்.
ஆனால் ஒரு சித்த புருஷரின் திருவுடலின் மீது 12 மணி நேரங்களுக்கு மேலாக ஸ்ரீகாயத்ரீ மந்திரம், ருக், யஜுர், வேத மந்திரங்கள், குறிப்பாக அதர்வண தாந்த்ரீக மந்திரங்கள் போன்ற உத்தம மந்திரங்களை ஒரு மஹானின் புனிதமான உடலில் அமர்ந்து ஜெபித்து அளப்பரிய ஆன்மீக சக்தியை, பெறற்கரிய தெய்வீக சக்தியை, கிடைத்தற்கரிய குருவருளை, காண்பதற்கரிய இறை தரிசனத்தை நன்றாகத் திரட்டிச் சிறுவனுக்கு இவ்வனுபூதி மூலம் பெரியவராம் சித்த புருஷர் அளிக்கின்றார் என்பதை அச்சிறுவன் அறியவில்லை.
இருள் சூழச்சூழ, சிறுவனுக்குப் பயம் கவ்விக் கொண்டது. சுற்றிலும் கும்மிருட்டு, வனம் போல் இல்லாவிட்டாலும் ஆங்காங்கே அடர்ந்த மரங்கள். க்ரீச், க்ரீச் சென்று ஏதோ விலங்குகளின் நடமாட்டம். “காட்டு விலங்குகள் இந்நேரத்தில் தானே குகை திரும்பும்!” இவ்வாறு கற்பனை பெருகப் பெருக சிறுவன், அச்சத்தில் பெரியவரின் உடலை இரும்புப் பிடிபோல் பிடித்துக் கொண்டான்.
எங்கு திரும்பினாலும் ஏதோ நகர்வது போல் ஒரு பிரமை! கண்களை மூடிக்கொண்டாலோ எதிரிலேயே ஏதோ நிற்பது போன்ற உணர்வு! எனவே கண்களைத் திறந்து கொண்டிருப்பது என்ற முடிவுக்கு வந்தான் சிறுவன். திடீரென்று  .............. மசமசவென்று ஒரு வாடை, அழுகிய உடல் வாடையா? அல்லது பிணவாடையா? தெரியவில்லை. நரியோ ஓநாயோ  எதையோ இழுத்துக் கொண்டு வருகிறதா அதுவும் புரியவில்லை.!
நிமிடங்கள் கரையக்கரைய அருவருக்கத் தக்க முறையில் வாடை பெருகிக் குடலைக்குமட்டும் வண்ணம் வீசியது. பயத்தில் சிறுவன் “கிருஷ்ணா, ராமா” என்று பலத்த குரல் கொடுக்கத் துவங்கினான்.
திருஅண்ணாமலை கிரிவல முறை
திருஅண்ணாமலையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலய தரிசனமுறை, திருஅண்ணாமலை (மலை சுற்று) முறை, திருஅண்ணாமலை தீர்த்த ஸ்நான/ தரிசன முறை என்று பலவித மூர்த்தி, தீர்த்த, தல, கிரிவல முறைகள் சித்த புருஷர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை முறையாகக் கடைபிடித்தால் ஒவ்வொன்றின் பரிபூர்ண பலன்களைப் பெறலாம்.
கடந்த “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” மே 1995 இதழில் கோயில் தரிசன முறையுடன் கிரிவல முறையும் இணைத்துப் பொதுப்படையாக அளிக்கப்பட்டுள்ளது. திருஅண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் பொதுவாக கிரிவலத்துடன் கோயில் தரிசனத்தையும் இணைந்து செய்வதால் அவ்விதழில் பொது நியதிகளை அளித்துள்ளோம். இப்போது திருஅண்ணாமலை கிரிவல முறையை மட்டும் தனித்த முறையில் இங்கு விசேஷமாகக் காண்போம்.
நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகளிடமிருந்து குருகுல வாச அனுபூதிகளாக உய்த்து உணர்ந்ததை இங்கு நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் கலியுக மக்களின் நல்வாழ்விற்கென எடுத்துரைக்கின்றார்கள்.

திருஅண்ணாமலை கிரிவலம்

1. குலதெய்வம், இஷ்ட தெய்வம், சற்குருவை நினைந்து வணங்கி கிரிவலத்தைத் திருஅருணசலேஸ்வரர் சிவாலயத்தின் தெற்குக் கோபுரம் அருகே பிரம்ம தீர்த்ததின் எதிரிலுள்ள ஸ்ரீபிரம்ம லிங்கத்திலிருந்து, ஸ்ரீபிரம்ம லிங்கத்தை வணங்கித் தொடங்க வேண்டும்.
2. ஸ்ரீபிள்ளையார், ஸ்ரீமுருகன், ஸ்ரீநந்தீஸ்வரரைக் கடந்தே ஸ்ரீபிரம்ம லிங்கத்தை அடைய வேண்டுமாதலின் அனைத்து மூர்த்திகளையும் தொழுது ஸ்ரீபிரம்ம லிங்கத்தை அடையலாம். எனினும் சித்தர்கள் அருளும் முறையான கிரிவல முறை ஸ்ரீபிரம்ம லிங்கத்தினிடமிருந்தே தொடங்கி ஸ்ரீபூதநாராயணன் சந்நிதியில் நிறைவு பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
3. பிரம்மா சிருஷ்டித்த இப்பூதவுடலைக் காத்து இரட்சிப்பவர் ஸ்ரீநாராயண மூர்த்தியாகிய மஹாவிஷ்ணு. எனவே தான் இப்பூத உடலுடன் செய்யவிருக்கின்ற கிரிவலத்தை ஸ்ரீபிரம்ம லிங்கத்திலிருந்து துவங்கி ஸ்ரீபூத நாராயணன் சந்நதியில் முடிக்கின்றோம்.
4. மேலும் ஆதிசிவனின் அடி, முடி காணும் போட்டியில் தான் ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணுவிற்கு ஜோதிரூபத்தில் காட்சி தந்து திருஅண்ணாமலையாராக, திருஅருணாசலேஸ்வரராக அருள்பாலித்தமையால் நமக்கு ஜோதி தரிசனம் கிட்ட மூலகாரணமாய் இருக்கும் ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணுவைக் கிரிவலத்தின் தொடக்கத்திலும், நிறைவிலும் தரிசித்து நன்றி தெரிவிக்கின்றோம்.
 5. திருஅண்ணாமலையே சாட்சாத் சிவபெருமானின் ஸ்தூல ரூபமாக விளங்குவதால் திருஅண்ணாமலையின் கிரிவலமே மும்மூர்த்திகளின் நிறைந்த தெய்வான்னுக்ரஹத்தைப் பெற்றுத் தருகின்றது.
6. ஸ்ரீபிரம்ம லிங்கத்தை வணங்கி, பிரம்ம தீர்த்தக் குளக்கரையோரத்தில் (ஸ்ரீபிரம்ம லிங்கத்தின் எதிரில் தெற்கே சற்றுத் தள்ளி நின்று) முக்கூட்டுத் தரிசனமாகிய மூன்று கோபுரங்களையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்க வேண்டும்,
7. தெற்குக் கோபுரம் வழியே வெளிவந்து ஸ்ரீகற்பக விநாயகர் சந்நிதியில் ஊதுபத்தி ஏற்றி வணங்க வேண்டும். இங்கிருந்து கிரிவலம் முழுவதும் ஊதுபத்திகளை ஏற்றிக் கையில் தாங்கியவாறே வலம் வருவது மிகவும் விசேஷமானதாகும். இந்த ஊதுபத்தி ஜோதியானது ஸ்ரீபூதநாராயணன் சந்நிதியில் நிறைவடைய, அங்கு ஊதுபத்திகளைச் சமர்பிக்க வேண்டும். இடையில் புது ஊதுபத்திகளை ஏற்றுவதில் தவறில்லை.
8. ஸ்ரீகற்பக விநாயகரைத் தரிசித்தபின் நேரே முச்சந்திப்பை அடைந்து வலப்பிறமுள்ள செங்கம் சாலையில் திரும்பி, கிரிவலம் தொடர்கிறது.
9. செங்கம் செல்லும் சாலையில் கிரிவலப் பாதையில் பல மண்டபங்கள் தீர்த்தங்கள் உள்ளன. சற்குருவுடன் கிரிவலம் வரும் பாக்கியம் பெற்றவர்களுக்குத் தான் இவற்றின் விளக்கங்கள் தெரியவரும். அதுவரையில் எங்கெல்லாம் மண்டபங்கள் எழுந்துள்ளனவோ, அங்கிருந்து  மலையை விசேஷமாகத் தரிசனம் செய்து  கொள்ள வேண்டும். இவ்விடங்களில் எல்லாம் சித்த புருஷர்களும், யோகியர், ஞானியர்களெல்லாம் அன்றும், இன்றும், என்றும் தங்கி அருள் பாலிக்கும் இடங்களாகும்.
கிரிவலத்தில்....................
a) தனித்து கிரிவலம் வருவதை விடக் குடும்பத்துடன், பலருடனும் சேர்ந்து இறைநாமம், தேவமொழி, தமிழ் மறைகள், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திவ்யப்ரபந்தம் போன்ற தமிழ் மறைகள், நாம சங்கீர்த்தனம், பஜனை, பஞ்சாட்சரம், அஷ்டாட்சரம் துதித்தவாறே வரும் வழியில் அன்னதானம், ஆடை தானம் போன்ற (இயன்ற) தான தர்மங்களுடன் கிரிவலம் வருதலால் அளவற்ற புண்ய சக்தியைப் பெறலாம்
b) இயன்ற போதெல்லாம் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருக! மாதப் பிறப்பு, பௌர்ணமி போன்ற விசேஷ தினங்களிலேனும் மாதம் ஒரு முறையேனும் கிரிவலம் வருக!
c) அவ்வாறு மாதந்தோறும் கிரிவலம் வருகையில் குறைந்தது ஒரு புது அடியாரையேனும் நம்முடன் கிரிவலத்திற்குக் கூட்டி வந்து அவருக்கும் இறையருளுக்குப் பாத்திரமாகும்படி செய்து “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்” என்ற வகையில் சுயநலமின்றி சேவை செய்யத் தயாராக வேண்டும்.
d) பலரையும் கிரிவலத்தில் ஈடுபடுத்தினால் கிரிவலத்தின் பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும்.
e) பொதுவாக ஒவ்வொரு அடிக்கும் திருஅண்ணாமலையைச் சிரம் தூக்கி தரிசித்தவாறே கிரிவலம் வருவது மிகவும் சிறப்பானது. இது தியான நிலையை மேம்படுத்தும்.
10) செங்கம் சாலையில் இந்திர தீர்த்தம், ஸ்ரீஇரமணாஸ்ரமம், ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமம் வழியே கிரிவலம் தொடர்கிறது. இடையில் பல முக்கியமான மலை தரிசனங்கள் உண்டு.
11) ஸ்ரீஅண்ணாமலை ஆஸ்ரமம், மயானம் தாண்டியபின் வலது பக்கம், சிங்க வடிவசுதை ரூபம் கூடிய முக்யமான தீர்த்தம் இருக்கின்றது. பல கொடிய வியாதிகளைப் போக்கும் தெய்வ சக்தி கொண்டது இத்தீர்த்தம்.
12) செங்கம் மெயின் ரோடிலிருந்து வலப் பக்கம் கிரிவலப் பாதை திரும்புகிறது... 

ஸ்ரீகாயத்ரீ தபஸ்

(ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் பரிபூரண பலனை யாவரும் பெறும் வண்ணம் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபத்துடன் இணைந்த பல அரிய அற்புதமான முத்திரைகளை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் இத்தொடரில் எளிமையான முறையில்  எடுத்துரைக்கின்றார்கள் )

மனத்துக்கண் மாசிலன் ஆதல்..... சென்ற இதழில் ஸ்ரீகாயத்ரீ முத்ரா விதானத்தின் முதல் அங்கமாக “ஏக நாம ஸ்மரண (ஒலி) கூட்டு தியான முறை” விளக்கப்பட்டது. தினந்தோறும் ஸ்ரீகாயத்ரீ முத்ரா விதானப் பயிற்சிக்கு முன் இக்கூட்டு தியான முறையைப் பிரதானமாகக் கொண்டால் வெளிச் சுழல்களிலிருந்து மனம் (ஓரளவு) விடுபட்டு, உடலுக்குரித்தான மற்ற எளிய யோக முத்திரைப் பயிற்சியுடன் ஒன்று படும். இதனால் எண்ண அலைகள் சீராகும். மன ஓட்டம் அடங்கும். எண்ண அலைகளை அடக்குவது கடினம். ஏனெனில் 20/30/40 வருட எண்ணங்கள் பாசி போல் படர்ந்து பாறையாய் இறுகிப் பதிந்திருக்குமல்லவா? கற்குவாரி போல சிறிது சிறிதாக எண்ணங்களைப் பிரித்து மேலே கொணர வேண்டுமன்றோ!
சற்குருவைப் பரிபூர்ணமாக நம்பி வாழ்ந்தால் அவர் மிகவும் கருணை கொண்டு தம்மைச் சரணடைந்தோரின் தீய எண்ணங்களைப் பிராண வாயுவாக்னியில் எரித்து நம் கர்மவினைகளைப் பொசுக்கி நல்வழி காட்டுவார்.
பிங்கள ஸ்தம்ப த்யான முத்திரை
1. பத்மாசனத்திலோ, சுகாசனத்திலோ சாந்தமாக அமர வேண்டும்.
2. இயன்ற வரை நிமிர்ந்த முதுகு, நேர் பார்வை.
3. இடது கையை மெதுவாக மேலே உயர்த்தி விரல்களை ஒன்று சேர்த்துக் கையைக் திறந்த நிலையில் கையைச் செங்குத்தாக உயர்த்தவும்.
4. கையைத் தூக்கிய நிலையில் உள்ளங்கையையும் சம மட்டத்தில் என்ற வகையில் நிலை நிறுத்தவும். (படத்தைப் பாக்கவும்)
5 இடது கை சற்று  நிலை நின்றவுடன்
      “ஓம் பூர்புவஸ் ஸுவஹ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
       தியோயோந : பிரசோதயாத்”
என்ற காயத்ரீ மந்திரத்தை மனதில் உச்சரித்தவாறே நேரே முகத்தை வைத்து தியானிக்கவும். கண்களின் பார்வை நேரே இருக்க வேண்டும். இந்நிலையில் சில நிமிடங்கள் தியானிக்க வேண்டும்.
6. பிறகு முகத்தைச் சற்றே சாய்த்து இருகண்களால்.... இடக்கையைப் பார்க்கவும். இடது கை தோளின் கீழ்ப்பகுதியிலிருந்து முழங்கை, மணிக்கட்டு, கட்டைவிரல் இதர விரல்கள் வழியாக மெதுவே பார்வையை ஊடுருவிச் செலுத்தி இடக்கையின் மறு ஓரம் வழியாகச் சுண்டு விரல், மணிக்கட்டு , முழங்கை , வழியாகத் தோள்பட்டை வரை பார்வையை இறக்கவும்.
 7. அதாவது கண்களின் பார்வையை இடறுகையின் முழுப் பகுதி மேல் ஓட்ட வேண்டும். விரல் பகுதியில் ஆள்காட்டி விரலில் துவங்கி ஒவ்வொரு விரலின் ஓரங்களிலும் பார்வையை மெதுவாக ஒட்டி ஆள்காட்டி விரல், சுட்டு விரல், கட்டை விரல், மோதிர விரல், சுண்டு விரல் வழியாக , பார்வையை மணிக்கட்டில் இறக்கி முழங்கை வழியே தோளின் அடுத்த ஓரத்தில் முடிக்க வேண்டும்.
8. இடது கை ஓரம் முழுதும் பார்வை ஊடுருவும் போது மனதில் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபத்தைத் தொடர வேண்டும்.
9. ஆரம்பத்தில் பழக்கமில்லாததினால் அவ்வவ்போது ஸ்ரீகாய்த்ரீ ஜபம் நின்று பார்வை மட்டும் ஓடிக் கொண்டிருக்கும். இது பயிற்சியில் சரியாகி விடும்.
10. துவக்கத்தில் ஐந்து நிமிடங்களேனும் இதைப் பயிற்சி செய்ய வேண்டும். பார்ப்பதற்கு எளிதாக இருப்பினும் செய்யும் போது வலி ஏற்படும்.
பிங்கள ஸ்தம்ப முத்திரை விளக்கம்
ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை இடதுகைப் பகுதி முழுதும் பார்வை மூலம் செலுத்தும் போது இதற்கு “நேத்ரா மந்திரான்னம்” என்று பெயர். அதாவது இடது நரம்புகள், இரத்த அணுக்கள், திசுக்கள், எலும்புகள், தோல் அணுக்கள் போன்ற அனைத்திற்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியே உணவாக செலுத்தப்படுகிறது. வலி ஏற்படுகின்றதல்லவா? அதன் பொருள் என்ன?

பித்ரு தர்ப்பணம்

வெள்ளை எள்ளின் முக்கியத்துவம்
அடியார் : குருதேவா! பெண்கள் நீருடன் எள் சேர்த்துத் தர்ப்பணம் செய்யலாம் அல்லவா?
சற்குரு : பெண்கள் வெள்ளை எள் கொண்டு தான் நீர் வார்த்துத் தர்ப்பணமிடல் வேண்டும். எள் வகையில் வெள்ளை எள், பெண்ஜாதி ஆகும். தர்ப்பணம் பூஜைகளில் ஆண்களுக்குக் கறுப்பு எள்ளும் பெண்களுக்கு வெள்ளை எள்ளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் வெள்ளை எள்ளுடன் நீர் சேர்த்தும், ஆண்கள் கறுப்பு எள்ளுடன் நீர் சேர்த்தும் தர்ப்பணமிட வேண்டும்.
பெண்கள் இம்முறையில் தர்ப்பணம் அளித்தால், தர்ப்பணத்தின் பலன்கள் சிறந்த ஆசீர்வாதங்களாக மாறி பல வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்கின்றன. பல கோயில் தரிசனங்களுக்கு நிகரான பலன்களை முறையான பித்ரு பூஜையால் பெற முடியும்.!
ஆண் வாரிசற்ற குடும்பங்களில் பெண்கள் ஒன்று கூடி, இறந்த தம் தந்தைக்கு வெள்ளை எள்ளுடன் தர்ப்பணமளிக்க, பித்ரு லோகத்தில் அவர்தம் தந்தையின் ஆத்மா ஆனந்தித்து, அவருடைய குடும்பங்களைக் காத்து ரட்சிக்கின்றது.. கலியுகத்தின் நடுப்பகுதியில் பெண்களே அனைத்துத் தர்ப்பணப் பூஜைகளையும் ஏற்று நடத்துவர். இது ஸ்ரீஅகஸ்தியர் வாக்கு!
அடியார் : குருதேவா! வெள்ளை எள்ளின் தாத்பர்யம் யாது?
சற்குரு : சூரிய பகவானின் மைந்தர்களான எமதர்மராஜாவிற்கும், சனீசுவர பகவானுக்கும், இடையே உண்டான பிணக்கில், எமதர்மராஜா, தம் தண்டத்தால் அடித்து விட , சனீஸவரனுக்குக் கால் ஊனமாயிற்று. தெய்வமூர்த்திகளுக்கிடையே இத்தகைய சம்பவங்கள் நிகழுமா ? என்ற வினா எழும்.
எமதர்மராஜா, சனீஸ்வரருக் கிடையே, எப்போது இச்சம்பவம் ஏற்பட்டதெனில், ஒரு யுகத்தில் எமதர்மனும், சனீஸ்வரனும், ஈஸ்வரப் பட்டம் பெறுவதற்காகப் பல அரிய தவங்களை மேற்கொண்ட போது எமனுக்கு ஈசுவரப் பட்டம்தனை முதலில் பெற வேண்டும் என்ற ஆசையின் விளைவே இறைவனின் இத்திருவிளையாடல், இருவரும் செயற்கரிய தெய்வத் திருப்பணிகள் புரிந்து மக்கள் சேவையாம் மகேசன் சேவையே ஈசுவரன் பட்டத்தை அருளவல்லது என்பதை இன்றும் ஓர் ஆன்மீக அனுபவப் பாடமாக இத்திருவிளையாடலில் பங்கு பெற்று அனைவர்க்கும் உணர்த்தி நிற்கின்றனர்.
ஊனமுற்ற சனீஸ்வரர், அதுவரை தாம் மேற்கொண்ட, அரிய தபோ பலன் கொண்டு தம் காலுக்கு நிவாரணம் தேடியிருக்க முடியும்! ஆனால் இதுவும் இறைவனின் விருப்பமே என்று கருதி மீண்டும் தவமிருந்தார். சிவபெருமானும் தரிசனம் தந்து “ஸ்ரீஅம்பாள் அனுக்ரஹமின்றி எவ்வித ஆன்மீக நிலையையும் எவரும் அடைய இயலாது“ என்று அறிவுறுத்திட, சனீஸ்வரன் பல அம்பிகைத் தலங்களுக்குச் சென்று இறைப் பணிகளாற்றி மூர்த்தி, தீர்த்தம் தலம், தரிசன சேவா நியதிகளை மேற்கொள்ள, ஸ்ரீஅகிலாண்டேசுவரி காட்சியளித்து, “நீ ஏற்கனவே நிறைய தபோபலன்களைப் பெற்று விட்டாய். அதனைக் கொண்டு மீண்டும் தவம் செய்வதை விட நீ பெற்றுள்ள தபோ சக்தியைக் கொண்டு பல அரிய தெய்வப் பணிகளை நிறைவேற்றினால் அந்த தபோ சக்தி தானாகவே பல்கிப் பெருகுவதோடு, அதன் பலன்களும் எளிதில் ஈஸ்வர அனுக்ரஹமாக மாறும்!” என்று அருள்பாலித்தனள்.
பெண்களின் முதன்மை நிலை
அது வேதங்கள் பூத்துக் குலுங்கிய காலம்.............. மைத்ரேயி, கார்க்கி, அனுசூயா போன்ற உத்தம பத்தினிகள் பெண்களுக்குரித்தான வேதங்களைப் புகட்டி வேத தர்மத்தை நிலை நிறுத்தச் செய்த விசேஷமான யுகமது. எத்துறையிலும் பெண்களே சிறந்து விளங்கினர். இந்த அபூர்வமான யுககாலத்தின் இறுதியில் தான் மேற்கண்ட புராணச் சம்பவம் நிகழ்ந்தது.
இதற்குப் பிறகு யுகங்களில் வேத நெறி மங்கி பித்ரு பூஜை, சூர்யபூஜை, ஹோம, வேள்வி, யாகங்களும் குறைவடையும். ஜீவன்களில் பெரும்பாலோர் பெண்களாக இருந்தமையால் வேதத்தின் மகிமையை உணர்த்துவோர் இருந்தும் அதை எவரும் சரியாக உணராமையால் சந்ததிகளின்றி பல குடும்பங்கள் வாழும்.
இந்நிலையைத் தீர்க்க  தரிசனமாக உணர்ந்த ஸ்ரீஅம்பிகை, சனீசுவரனிடம், “பெண்களுக்குரித்தான பித்ரு பூஜையை நீ யாங்கணும் பரப்புவாயாக! ஆண்களினம் குறைந்து பெண்களினம் பல்கிப் பெருகியுள்ள இந்த யுகத்தில் பெண்களுடைய பித்ரு பூஜையே ஆண்-பெண் ஜீவ நிலையைத் தார்மீக முறையில் விகிதப்படுத்தும். எனவே பெண்களுக்குரித்தான பித்ரு பூஜையைப் பல லோகங்களிலும் பரப்புவாயாக! பித்ரு லோகங்களின் நாயகரான ஸ்ரீவிஷ்ணுவின் பாதங்களில் பணிந்து உன் தபோசக்தியை அவரிடம் சமர்ப்பணம் செய்வாயாக! பிரபஞ்சத்தில் தவமோ, அருளோ, பொருளோ எதற்கும் நமக்கு உரிமையில்லை. எதையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதே உண்மையான தவம்” என்று அருளாசி வழங்கினள்.
வெள்ளை எள்ளின் தோற்றம்
பராசக்தியின் அருளாணைப்படி சனீஸ்வரர் ஸ்ரீவிஷ்ணுவின் பாதம் பணிந்தார். விஷ்ணு லோகத்தில் அவரை மகரிஷிகளும், யோகிகளும், ஞானியரும் ஆனந்தத்துடன் வரவேற்றனர். சனீசுவரன் வியப்பு மேலிட்டு ஸ்தம்பித்து நின்று விட்டார்.
“ஊனமுற்ற தமக்கு, ஸ்ரீவிஷ்ணுலோக தரிசனம் எவ்வாறு கிட்டியது என்று அவர் யோசித்திட, ஸ்ரீநாரத மகரிஷி , “சனீஸ்வரா! நீ உன் தபோபலனை ஸ்ரீஅம்பிகையின் அருளுடன், ஸ்ரீவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிக்க வந்துள்ளாயல்லவா? அந்தச் சரணாகதியே உனக்கு விஷ்ணுலோகத்தை எளிதில் காட்டியது. குருவருளுடன் தான் திருவருளைப் பெறலாம். உனக்கு அம்பிகையே குருவாய் அமர்ந்து விஷ்ணுவின் திருவருளைப் பெற்றுத் தந்து விட்டாள். உன் தபோபலனையும் அர்ப்பணித்துத் தியாகம் புரிய வந்துள்ளாய்! நம்பிக்கை, சரணாகதி தியாகம் இவையே குருவருள் கூட்டும் முப்பெரும் நிலை” என்று விளக்கிட ஸ்ரீவிஷ்ணுவின் திருப்பாதங்களில் தம் தபோபலனைக் காணிக்கையாக அர்க்கியம் வார்த்து சனீஸ்வரன் அர்ப்பணத்திட, ஸ்ரீவிஷ்ணு பகவான் அதனை ஏற்று அந்நீர்த்துளிகளைத் தம் இடக்கண்ணில் பூசிக் கொண்டார். அவையே வெள்ளை எள் தான்யங்களாக மலர்ந்தன!

வெள்ளை எள் தர்ப்பணத்தின் மகிமை
“சனீஸ்வரா! பெண்கள் இந்த வெள்ளை எள் கொண்டு தர்ப்பணம் செய்வார்களாக! எவரொருவர் (பெண்) வெள்ளை எள் கொண்டு முறையாகத் தர்ப்பணம் வார்க்கின்றார்களோ அவர்களுக்கு உன் அருளோடு விஷ்ணு லோகத்தில் வசிக்கும் பித்ருக்களின் தரிசனமும், அருளாசியும் கிடைத்திட யாம் அருள் பாலிக்கின்றோம்” இதுவே ஸ்ரீவிஷ்ணு பகவானின் திருமொழிகளாகும்.

பழநி திருக்கோயில்

 இறைச் செயலே திருத்தலங்கள்
பிள்ளையார் மாம்பழம் பெற்ற கதை, ஸ்ரீபார்வதி, ஸ்ரீலட்சுமி பல பரிகாரங்களுக்காகப் பூலோகத்திற்கு வருதல், ஸ்ரீபிரும்மா தண்டனை பெறுதல் போன்ற சம்பவங்கள் எல்லாம் தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் போன்றோருடைய தெய்வீக நிலையை மேம்படுவதற்காக, இறைவனால் ஏற்படுத்தப்பட்ட திருவிளையாடல்களாகும். தெய்வ, தேவதா மூர்த்திகளும் பேரானந்தத்துடன் தங்கள் பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்துப் பலகோடி ஜீவன்களுக்கும் அனுபவப் பாடம் புகட்டி நல்வழி காட்டுகின்றனர்.
இப்புராண சம்பவங்களின் பின்னணியாகவே இன்றைக்கும் பூலோகத்தில், ஆயிரமாயிரம் திருக்கோயில்கள் பழனி, காஞ்சீபுரம், திருவேற்காடு, திருத்தணி, ஸ்ரீரங்கம், குருவாயூர் போன்ற திருக்கோயில்கள், புண்ணிய நதிகள், திருச்சி மலைக்கோட்டை, அய்யர்மலை போன்ற புனித மலைகளில் பல சுயம்பு மூர்த்திகள் தோன்றி  இன்றைக்கும் நமக்குத் திருவழிகாட்டி தெய்வ தரிசனம் தரும் புனிதத் தலங்களாகவும் காட்சியளிக்கின்றன.
இவ்வாறாக பூமியின், கோள்களின் நட்சத்திரங்களின், ஜீவன்களின் ஒவ்வொரு அசைவிற்கும் பின்னால் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும். காரண காரியமின்றி எதுவும் நிகழ்வதில்லை. எனவே இறையருளால், நம் முயற்சிகளை எடுத்தோம், நடந்தது அனைத்தும் இறைவனுடைய விருப்பமே என்ற மனத் திருப்தியுடன் வாழ வேண்டும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam