அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பஞ்சாங்க படனம்

பஞ்சாங்க படனம் என்றால்.......
முற்காலத்தில் பீடாதிபதிகளும், மஹான்களும் ஸ்ரீஜெயந்தி, ஸ்ரீராமநவமி, ஸ்ரீஹனுமத் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், விநாயக சதுர்த்தி, ரதசப்தமி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடும் சிறப்பு முறைகளை ஆண்டுதோறும் உபந்நியாசங்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் மூலமாக விளக்குவர், ஸ்ரீபரமாச்சார்யாள், ஸ்ரீவள்ளலார், ஸ்ரீபாடகச்சேரி ஸ்வாமிகள் போன்றோர் இவ்வாறாகவே மக்களுக்கு அரிய அறவழிகளைத் தந்துள்ளனர். “பஞ்சாங்க படனம்” என்ற முறையில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று புத்தாண்டின் கிரஹ சஞ்சார நிலைகள், திதி, கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் என்ற நாளின் பஞ்ச (ஐந்து) அங்கங்களை விளக்கி, எதிர்வருகின்ற இன்ப, துன்பங்களைத் தம் பூஜா, தெய்வீக, அருட்சக்தியினால் எடுத்துரைத்தனர். அதற்குரித்தான அந்தந்த ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய விசேஷ பூஜைகள், சிறப்புக் கோயில் வழிபாடுகள், பரிஹார தானதர்மங்கள், செய்ய வேண்டிய ஹோம, ஆராதனை, அபிஷேக முறைகளை நன்கு விளக்குவர்.
இத்தகைய சிறப்புடைய “பஞ்சாங்க படன முறை” தற்காலத்தில் மறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். காரணம் ஜாதி, சமய பேதமின்றி பெரியோர்களை மதித்து வாழ்கின்ற தெய்வீகப் பண்பாடு மறைந்து விட்டதுதான். ஜோதிடம், சாஸ்திரம், வேதம், பூஜை முறைகள் போன்றவற்றை நன்கு அறிந்த சிலரும் சுயநலமின்றி, பேராசையின்றி, தியாகவுணர்வுடன் வாழ்ந்த நிலை மாறி, தாம் கற்ற வித்யா ஞானத்தின் மூலம் வாழ வேண்டிய நிலையையும் காண்கின்றோம்.  தன் தெய்வீக அறிவு சமுதாயத்தில் அனைவருக்கும் சென்றடைய, வசதிகள் குறைந்து வறுமை ஏற்பட்டுவிடினும் கூட தியாக வாழ்க்கையை, பிறருடைய நலன்களுக்காகத் தன் வாழ்க்கை வசதிகளைத் துறந்து மக்கள் சேவையை மஹேஸன் சேவையாகச் செய்கின்ற உத்தம வாழ்க்கையாக வாழ்ந்தால்தான் வேத, ஜோதிட, சாஸ்திர சக்திகள் தீர்க தரிசனத்தைத் தரும். தனக்காகவும், பணம் ஈட்டவும் நுண்கலை அறிவினைப் பயன்படுத்திடில் அது வீண் வாழ்க்கையே!
ஸ்ரீ ஈஸ்வர வருடப்பிறப்பு
ஸ்ரீஈஸ்வர வருடம் பிறக்கின்ற 14.4.1997 அன்று நாம் செய்ய வேண்டிய பூஜை யாதோ? பஞ்சாங்கத்தைப் படிக்கத் தெரிந்தோர் ஒரு சிலரே! சாதாரண மனிதர்களும் பஞ்சாங்க படனத்தின் ஆன்மீக இரகசியங்களையும், தெய்வீகப் பலன்களையும் பெறவேண்டி, ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் பஞ்சாங்க படனத்தின் சிறப்பு அம்சங்களை விவரித்துள்ளோம். யாவரும் இதனைப் படித்து அறிந்து தெளிவு பெற்று இறையருள் பெற்று நல்வாழ்வைப் பெற வேண்டுகிறோம். எந்த அளவிற்கு நம் மனதால், உள்ளத்தால், சரீரத்தால், பிறருடைய நல் வாழ்விற்காக, ஆன்மீக முன்னேற்றத்திற்காக இறைப்பணி புரிகின்றோமோ அந்த அளவிற்கு நம்முடைய தெய்வீக நிலையும் அமையும் என்பதை நாம் உணர்ந்திட வேண்டும். ஈஸ்வர வருடம் திங்கள் அன்று பிறக்கிறது. ஸ்ரீசெவ்வாய் பகவானே இவ்வருடத்திற்குரிய ராஜா ஆகின்றார். அதாவது ஈஸ்வர வருடம் முழுதும் கிரஹ மூர்த்திகள் செவ்வாய் பகவானின் அருட்பேரரசில் இயங்குகின்றனர்.
 தமிழ் வருடம் ஒவ்வொன்றிற்கும் அந்தப் பெயர் வந்ததற்கான காரணங்கள் பல உண்டு. ஈஸ்வரப் பட்டம் வேண்டி, பல தேவதா மூர்த்திகள் பெரும் தவம் பூண்ட ஆண்டே ஈஸ்வர வருடம் ஆகும். ஈஸ்வர தரிசனம் வேண்டி அதற்குரித்தான ஜப, தப , ஹோம, யாக வேள்விகளை முறையாகச் செய்ய வேண்டிய காலமும் இதுவே. அம்பிகையானவள் ஈஸ்வரனின் பல்வேறு அவசரங்களை (அவதார ரூபங்களை) கண்டு ஆனந்தித்த வருடமும் ஈஸ்வர வருடமே.. யுக நியதிகளுக்கேற்ப மறைந்து வரும் வேத சக்திகளை மீண்டும் ஓரளவேனும் நிலை நிறுத்தி ஜீவன்கள் பயன்பெறும் பொருட்டு ஆக்கப்பூர்வமான தெய்வப் பணியில் ஈடுபவதற்கு உரிய காலமும் ஈஸ்வர ஆண்டே. இவ்வாறாக ஈஸ்வர ஆண்டின் பெயர் குறித்துப் பல்வேறு முறைகளில் விளக்கிடலாம். ஈஸ்வர வருட்ப்பிற்ப்பன்று 14.4.1997 இயன்ற வரையில் விடியற்காலையிலேயே விழித்தெழுவது சிறப்புடையது. தமிழ் பஞ்சாங்க நியதிப்படி சூர்ய உதய நேரமான 6.01 க்கு ஈஸ்வர வருடத்தின் முதல் நாள் தொடங்குகின்றது. ஸ்ரீசூர்ய பகவான் மேஷராசியில் பிரவேசிக்கும் நேரத்திலிருந்து சித்திரை மாதப்பிறப்பை ஏற்கும் கணித முறையும் உண்டு. இதன்படி 13.4.1997 இரவு 10.50 மணிக்கு மேஷராசியில் சூர்யபகவான் பிரவேசிக்கின்றோர்.

1.  14.4.1997 வருடப்பிறப்பன்று விடியற்காலையில் எழுந்தவுடன் கரங்களைத் தரிசனம் செய்துகொண்டு குலதெய்வம், இஷ்ட தெய்வம், மூதாதையர்களை வணங்கித் துதித்து அவர்களுடைய அனுக்ரஹம், ஆசிகளை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும். சற்குருவைப் பெற்றவர்களோ சற்குருவையும், ஏனையோர் தாமறிந்த மகான்களையும், பெரியோர்களையும் வணங்கி மானசீகமாக அவர்களின் பாதாரவிந்தங்களைச் சரணடைய வேண்டும். பின்னர் நீராடி, பூஜையில் அமர்ந்து புத்தாண்டுப் பூஜையைப் பஞ்சாங்க படனத்துடன்  துவங்கிட வேண்டும். பசுநெய் அகல் தீபத்தினைத் தாமரைத் தண்டுத் திரியால் ஏற்றுவது மிகவும் சிறந்தது. இத்தினம் சப்தமி திதியில் துவங்குவதால் குறைந்தது ஏழு முகமுள்ள விளக்குகளையோ அல்லது ஏழு அகல் விளக்குகளையோ ஏற்றிட வேண்டும்.
2. இயன்ற வரையில் தக்க பெரியோர்களுடைய பஞ்சாங்க படன வாசக வைபவத்தில் கலந்து கொள்வது உத்தமமானது. அல்லது கோயில்களில் இறைச் சன்னதியின் முன் நிகழும் பஞ்சாங்க படனத்தில் பங்கேற்க வேண்டும். கோயில்களில் மாலையில் பஞ்சாங்க படனம் நிகழுமாயின் காலையில் இல்லத்தில் தக்க பெரியோரைக் கொண்டு பஞ்சாங்க படனத்தை முறையாக நிறைவு செய்திடுக!
3. பஞ்சாங்க படனத்தில் கலந்து கொள்ள இயலாதோரும், இதைப்பற்றி அறியாதோரும் விரும்பினால் நம் “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழில் அளிக்கப்பட்டுள்ள பஞ்சாங்க பூஜை முறையைக் கடைபிடிக்க வேண்டுகிறோம்.
4.  முதலில் 14.4.1997 ஈஸ்வர வருடப் புத்தாண்டு தின, பஞ்ச தேவதைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்... சித்திரை மாதம் முதல் தேதி – ஈஸ்வர வருடம் திங்கட்கிழமை ,
சப்தமி திதி – காலை 9.39 வரை , அஷ்டமி திதி – காலை 9.40 முதல் , புனர்பூச நட்சத்திரம் இரவு 3.12 வரை , பிறகு பூச நக்ஷத்திரம், யோகம் – சுகர்ம யோகம் இரவு 3.04 வரை.., பிறகு திருதி யோகம்.., கரணம் – பத்திரை கரணம் இரவு 10.30 வரை ., பிறகு சகுனி கரணம்.., அமிர்த யோகம் – இரவு 5.12 வரை.., பிறகு சித்த யோகம்.
5. ஒவ்வொரு கிழமை, திதி, நக்ஷத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்திற்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம், என்பது போல நமது முகத்தில் வார, திதி, நக்ஷத்திர, கரண, யோக தேவதைகள் குடி கொண்டுள்ளன.
தலை (நெற்றி) – கிழமை,
வாய் – யோகம்
கண்கள் – திதி
மூக்கு – நக்ஷத்திரம்
செவி – கரணம்
எனவேதான் சில பண்டிகைகளில் குறிப்பாகக் கேரளப் புத்தாண்டான விஷு தினத்தன்று விடியற்காலையில் எழுந்த உடன் கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் நற்பழக்கம் நிலவுகிறது. இதற்குப் பஞ்சாங்க தேவதா தரிசனம் என்று பெயர். நம் முகத்திலேயே உறைகின்ற பஞ்சாங்க தேவதைகளை எண்ணித் துதிக்காமலேயே தினசரி வாழ்க்கையை வீணாய்க் கழிக்கின்றோமே! இது நியாயமாகுமா?
6. நம் முகத்தைக் கண்ணாடியின் உதவியின்றி நாமே பார்க்க இயலாது. தலையை வாருவதற்கும், அழகுபடுத்திக் கொள்வதற்கும் மட்டும்தானே இது வரையில் கண்ணாடியைப் பயன்படுத்தி வருகின்றோம். நம்முகத்தில் உறையும் பஞ்ச தேவதைகளை நமக்குக் காட்டும் அற்புதமான மங்களப் பொருள் தானே கண்ணாடி! அதாவது நம்மால் காண இயலா பஞ்ச தேவதைகளை நமக்குக் காட்டும் புனிதப் பொருளாக விளங்குவதால் தான் கண்ணாடியை மங்களப் பொருட்களில் ஒன்றாக அமைத்துள்ளனர்.
கண்ணாடி தரும் ஆத்ம விசாரம் – நம்முடைய பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கேற்ப நம் வாழ்க்கை அமைகின்றது என்பதில் ஐயமில்லை. நம் வாழ்க்கை என்பது இவ்வுலகில், இப்பூதவுடலில், நமக்களிக்கப்பட்டுள்ள அவயங்களோடு வாழ்தல்தானே! ஆனால் இப்பூதவுடல் பிறந்து அழியும் வரை உள்ள காலத்தையே ஆயுள் என்கிறோமல்லவா ? அப்படியானால் ஒவ்வொரு நாளின் ஆயுளையும் கிழமை, திதி, நட்சத்திரம், கரணம், யோகம் ஆகிய ஐந்தும் சேர்ந்துதானே நிர்ணயிக்கின்றன! எனவே நமது ஆயுளுக்குரிய வருடங்களை, நாட்களை நிர்ணயிக்கின்ற இவ்வைந்து தேவதைகளின் ரூபத்தையே நம் முகமாகக் கண்ணாடியில் பார்க்கின்றோம். எனவே நம் ஆயுளின் தாத்பர்யத்தை நமக்குக் காட்டுவதே கண்ணாடி! அது வெறும் அழகை மட்டும் காட்டுவதல்ல.
தினமும் அழகிற்காக மட்டும் கண்ணாடியைப் பார்ப்பதைவிட நம் கர்மவினைகளைக் காட்டுகின்ற கண்ணாடி என்பதை அறிந்து ஓர் ஆன்மீகப் புதுநோக்கோடு நம் முகத்தை நாமே பார்க்கின்ற பாங்கினை மேற்கொண்டால் நாளடைவில் கண்ணாடி மூலம் நம் எதிர்காலத்தை அறிகின்ற ஆன்மீக சக்தியைப் பெறலாம். இது பற்றிய விளக்கங்களை எமது திருஅண்ணாமலை ஆசிரம வெளியீடான ‘அஷ்டதிக்கு பாலகர்கள் (கிழக்கு திசை)’ என்னும் நூலில் காணலாம். எனவே தமிழ்ப் புத்தாண்டு பூஜையில் புதிய புனிதமான பஞ்சாங்கப் புத்தகத்தை ஒரு புதுக் கண்ணாடியின் மேல் மஞ்சள், குங்கும, சந்தனமிட்டு வைத்திட வேண்டும்.
7. சிரவண பலன்களாகத் திதி தேவதையைத் தினந்தோறும் நாம் முறையாகத் துதிப்பதால் செல்வமும், சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.  நிதமும் வார (கிழமை) தேவதையைத் துதித்திடில் நீண்ட ஆயுள் கிட்டும். நட்சத்திர தேவதையைத் துதித்திடில் தீவினைகளும், பாவங்களும் அகலும். யோக தேவதை நோய்களைத் தீர்த்து நல்ல ஆரோக்கியத்தைத் தரும்; கரண தேவதை காரிய சித்தியைத் தரும்.
எனவே தினந்தோறும் பஞ்சாங்கத்தைப் பார்த்துப் படிக்கத் தெரியாவிட்டாலும் குறைந்த பட்சம் தினசரி காலண்டரில் உள்ள வார, திதி, நட்சத்திர, யோக, கரண விவரங்களையேனும் ஒரு முறை படித்திடல் வேண்டும். நம் தினசரி வாழ்க்கையின் கர்மவினை ஓட்டத்தை நிர்ணயிக்கின்ற, பரிபாலிக்கின்ற பஞ்சாங்க தேவதைகளைத் தினந்தோறும் துதிக்காமையால் ஏற்படும் தோஷங்களுக்குப் பிராயச்சித்தமாகவே புத்தாண்டு தினத்திலேனும் பஞ்சாங்க படனம் மூலம் இவ்வைந்து தேவதைகளையும் போற்றித் துதித்திடுக!
துவாதச நவக்கிரக சட்ட பூஜை
8. பன்னிரெண்டு கட்டங்கள் உள்ள ஜாதக கட்டத்தை பார்த்திருக்கின்றோம். எவ்வாறு கண்ணாடியானது நம் முகத்தைப் பிரதிபலிப்பதன் மூலம் நம் சரீரத்தின் கர்மவினைக் கோட்பாட்டைக் காட்டுகின்றதோ அதே போல் நம்முடைய பிறந்த தேதிக்கான கிரகசஞ்சாரக் கட்டமும், நம்முடைய கை ரேகைகளும், கால் ரேகைகளும், உடல் மச்சங்களும், நம்முடைய சுழியின் அமைப்பும் நம் வாழ்க்கையின் தன்மையைச் சூசகமாகக் குறிக்கின்றன. ஒவ்வொரு நாளிலும் கிரக சஞ்சாரங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தினசரி பஞ்சாங்கத்தைப் படிப்பதன் மூலம் எவ்வாறு பஞ்சாங்க தேவதைகளைப் பூஜிக்கின்றோமோ அதுபோல் அந்தந்த நாளிற்குரிய கிரகங்களின் இருப்பைக் காட்டும் கிரக ஸ்தான ஜாதகக் கட்டத்தையும் வணங்கும் முறை ஒன்று உண்டு. உதாரணமாக ஈஸ்வர வருடப்பிறப்பு அன்று (14.4.1997) கீழ்க்கண்டவாறு கிரக நிலைகள் அமைகின்றன..
மேஷ ராசி.... சூரியன், சுக்கிரன், புதன் (வக்கிர கதி ஆரம்பம்)
சிம்ம ராசி -  செவ்வாய்
கன்னி ராசி – ராகு
மகர ராசி – குரு
மீன ராசி – சனி , கேது
மிதுன ராசி – சந்திரன்
எவ்வாறு திருமணத்திற்காக பிள்ளை, பெண் வரன்களின் ஜாதகத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு புனிதம் அளிக்கின்றோமோ அதே போல நம்முடைய நித்திய வாழ்க்கை மங்களகரமாக அமைய கால தேவதையின் ஜாதகமாகிய மேற்கண்ட துவாதச நவக்கிரக சக்கரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜிக்கும் முறையைச் சித்புருஷர்கள் நமக்கு அருளியுள்ளனர். புத்தாண்டு தினத்தில் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பன்று அத்தினத்திற்குரிய துவாதச நவக்கிரக சட்டத்தை வரைந்து பூஜித்திடில் பஞ்ச தேவதைகளின் அனுக்கிரகத்தைப் பெற்று மேற்குறித்தவாறு செல்வம், ஐஸ்வர்யம், நீண்ட ஆயுள், பாப நிவர்த்தி, ரோக நிவர்த்தி, காரியசித்தி, ஆயுள் விருத்தியைப் பெற்றிடலாம்.
ஈஸ்வர வருட புத்தாண்டு தினத்திற்கான துவாதச நவக்கிரக சட்ட பூஜை
(அ) இந்நவக்கிரக சட்டத்தை வரையும்  விசேஷமான முறையொன்று உண்டு.. செல்வந்தர்கள் தங்கத்தட்டில் தங்கக் கம்பியால் குங்குமத்தைக் குழைத்து, தங்கத் தட்டிற்குள் ஈசுவர புத்தாண்டிற்கான மேற்கண்ட ஜாதகக் கட்டத்தை வரைய வேண்டும். தங்கக் கம்பியைப் பசும்பாலில் தோய்த்து அந்தந்த ஜாதகக்கட்டத்திற்குரித்தான அந்தந்த கிரகங்களின் பெயர்களை முழுமையாக எழுத வேண்டும். சூரி, சுக் என்று சுருக்கி எழுதலாகாது.
(ஆ) வசதி உடையோர் வெள்ளித் தட்டில் வெள்ளி அல்லது செப்புக் கம்பி கொண்டு மேற்கண்டவாறு துவாதச நவக்கிரக சட்டத்தை வரைந்திடல் வேண்டும்.
(இ) நடுத்தரக் குடும்பத்தினர் மடக்கு எனப்படும் மண் அகல் தட்டில் வெள்ளி/செப்புக் கம்பி கொண்டு மேற்கண்டவாறு துவாதச நவக்கிரக சட்டத்தை அமைத்திடலாம்.
(ஈ) ஏழ்மை நிலையிலுள்ளோர் மேற்கண்டவாறு பெரிய மண் அகல் தட்டில் சர்க்கரை கலந்த பச்சரிசி மாவினால் துவாதச நவக்கிரக சட்டத்தை வரைந்து துளசி அல்லது வில்வ காம்பினைக் காய்ச்சிய பசும்பாலில் தோய்த்து அந்தந்த ராசிக்கட்டத்திற்குரித்தான கிரகங்களின் பெயர்களை எழுதிட வேண்டும்.
செல்வந்தர்களுக்குக் கிட்டும் அரிய பாக்கியம் :-
பலர் ஒன்று சேர்ந்து சத்சங்க பூஜையாக இதனைச் செய்திடில் அபரிமிதமான பலன்களைப் பெறலாம். செல்வந்தர்கள் சாதி மத பேதமின்றி பலரை ஒன்று சேர்த்து அனைவர் சார்பாகவும், தங்கத் தட்டில் இத்தகைய பூஜையைக் கோயிலில் நிகழ்த்துவார்களேயானால் இவ்வரிய அற்புதமான பூஜையின் பலன்கள் சமுதாயத்திற்குச் சென்றடையும் மாபெரும் இறைப் பணியை ஆற்றிடலாம். வசதியுள்ளோரும் இவ்வகையிலேயே வெள்ளிகொண்டு சத்சங்க பூஜை நிகழ்த்தி, இப்பூஜா பலன்கள் ஏழை எளியோரைச் சென்றடையும் வண்ணம் சிறப்பாக இறைப்பணியை ஆற்றிடலாம். நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றிற்கு அற்புதமான, தெய்வீக சக்திகள் உண்டென்பதாலும், வேத, மந்திர, யந்திர, தந்திர, ஹோம, பூஜா சக்திகளையும் கிரகிக்கும் சக்தியை இயற்கையிலேயே கொண்டிருப்பதாலும் ஆன்மீகத்தில் இவை சிறப்பிடம் பெறுகின்றன... எனவே ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று அளவிற்கதிகமாக நவரத்தினம், தங்க ஆபரணங்களைச் சேர்த்திடாது கோயில்கள், தெய்வ மூர்த்திகளுக்கு இவற்றை அளிப்பார்களேயானால்..
அ). சுயம்பு மூர்த்திகளின் தெய்வானுகிரகமும்,
ஆ) கோயில்களில் நிகழ்த்தப் பெறும் சமுதாய நலனுக்கான நித்திய பூஜைகளின் பலன்களும்,
இ) கோயில்களில் நிகழ்த்தப்படும் ஹோம, வேள்விகளின் சக்திகளும்
ஈ) பாராயணம் செய்யப்படும் வடமொழி, தமிழ் வேதமறைகளின் உன்னத சக்தியும்
தெய்வத் திருமூர்த்திகளின் வஸ்திரங்கள், ஆபரணங்கள் மூலமாகப் பிரதி பலிக்கப்படும் தீப ஜோதியின் மூலமாக அதைத் தரிசிப்போருக்கும் – இவ்வாறாக அனைத்து மக்களுக்கும் சென்றடையுமாறு அருட்பெரும் திருப்பணியைச் சிறந்த முறையில் ஆற்றிடுவார்களாக!
2. துவாதச நவக்கிரக சட்ட பூஜையின் விளக்கமானது எத்தகைய ஆழ்ந்த ஆத்ம விசாரத்திற்கு வித்திட்டு, சித்புருஷர்களின் அரிய விளக்கங்களைத் தந்துள்ளது! ஈசுவர வருடத்திற்கான ராஜாவாகச் ஸ்ரீசெவ்வாய் பகவான் விளங்குவதால் அங்காரகனுக்குரித்தான சிவப்பு நிறத்தில், குங்குமத்தாலான நவக்கிரக சட்டத்தை வரைகின்றோம். பசுவின் தேகத்தில் கோடி கோடியாக தேவதைகள் வசிப்பதாலும், இவ்வருடத்திற்கான தான்யாதிபதியான சந்திர பகவான் வெண்மை நிறத்திற்குரியவர் ஆதலாலும் துவாதச நவக்கிரக சட்டத்தில் கிரகாதி பதிகளின் நாமங்களானது பசும்பாலால் எழுதப்படுகின்றது.
பசுநெய் தீப வழிபாடு :- மேற்கண்ட முறையில் துவாதச நவக்கிரக சட்டத்தை அமைத்து அதற்குத் தாமே அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, புஷ்பங்கள், சங்கு மணிகளால் அலங்கரித்து வலதுபுறம் வில்வ தளங்களாலும் (வில்வ இலைகள்) இடதுபுறம் துளசி தளங்களாலும் அலங்காரம் செய்திடல் வேண்டும். தாமரைத் தண்டு, பசுநெய் கூடிய தீபத்தை ஒன்பது அகல் விளக்குகளில் ஏற்றி நவக்கிரக சட்டத்தின் நான்கு மூலைகள், நான்கு மத்திய பகுதிகள், முக்கிய பகுதி ஆகிய ஒன்பது இடங்களில் வைத்திடல் வேண்டும். ஈசுவர வருடத்திற்குரிய ரசாதிபதியாக சுக்கிர பகவான் விளங்குவதாலும்ல் சஸ்தியாதிபதியாகவும், நீரசாதிபதியாகவும் புதபகவான் விளங்குவதாலும் சுக்கிரனுக்குரிய வெண்மை நிறம் மற்றும் வெள்ளி உலோகமும், புதனுக்குரிய பச்சை நிற வில்வ, துளசி தளங்களும் பூஜையில் முக்கியத்துவம் பெறுகின்றன..
இரு பூஜைகள் :- எனவே இவ்வாறாக ஈஸ்வர புத்தாண்டு தினத்தன்று.., முதலில், புது கண்ணாடிக்கும் அதன் மேல் வைக்கப்படும் பஞ்சாங்க புத்தகத்திற்கும் தாமே அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமப் பொட்டிடுவது பஞ்சாங்க படன பூஜையின் முதல் கட்டமாக அமைகின்றது. இரண்டாவதாக துவாதச நவக்கிரக சட்ட பூஜை அமைகின்றது.
இவ்விரண்டு பூஜைகள் பற்றிய விளக்கங்கள் விரிவாக அளிக்கப்பட்டிருப்பினும் உண்மையில் இவ்விரண்டு பூஜைகளையும் மிக எளிதில் நிறைவேற்றி விடலாம். முன்னரே குறிப்பிட்டுள்ளவாறு ஈஸ்வர புத்தாண்டு பற்றிய விளக்கங்களாக இந்த இதழில் கொடுத்துள்ளவற்றைத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று (14.4.1997) வாசித்தாலே பஞ்சாங்க படனம் முழுமையாகக் கடைபிடித்த பலன்களை அடையலாம் என்று சித்தபுருஷர்கள் அருளியுள்ளனர்.
முதல் பூஜை – பஞ்சாங்க படனம் :-
1. ஸ்ரீவிநாயகரைத் தியானித்து “சுக்லாம்பரதரம் விஷ்ணும்.... “ அல்லது அறிந்த விநாயகர் துதியை ஓதி சப்தமி திதிக்குரிய சித்தி விநாயகரைப் போற்றி வணங்கிடுக. மேலும் ஒன்பது முறை தோப்புக்கரணம் இடுதல் விசேஷமானதாகும். இது, திதிக்குரிய இன்றைய தினத்திற்கான பத்திரை மற்றும் சகுனி கரண தேவதைகளின் ப்ரீதியைப் பெற்றுத் தரும்.
வாரதுதி : ஸ்ரீசந்த்ராய நம ( ஸ்ரீசந்திரனே போற்றி)
திதி துதி :- ஸ்ரீசப்தமி தேவ்யை நம: (ஸ்ரீசப்தமி தேவதையே போற்றி)
நட்சத்திர துதி :- அம்புஜ வாஸினி தேவ கண சேவித புனர்பூச தேவி சகாயக்ருபே.
(ஆதிபராசக்தி உறைகின்ற புனர்பூச மண்டல தேவியே போற்றி! தேவாதி தேவர் போற்றுகின்ற புனர்பூச தேவியே போற்றி போற்றி!)
யோக துதி :- ஸ்ரீசுகர்மயோக தேவாய நம: (ஸ்ரீசுகர்ம யோக தேவதையே போற்றி) ஸ்ரீதிருதியோக தேவாய நம: (ஸ்ரீதிருதி யோக தேவதையே போற்றி)
கரண துதி :- ஸ்ரீவணிசை தேவ்யை நம: ஸ்ரீபத்ரை தேவ்யை நம:
      ( ஸ்ரீவணிசை தேவதையே போற்றி ., ஸ்ரீபத்ரை தேவதையே போற்றி)
யோக துதி :- ஸ்ரீஅம்ருத தேவ்யை நம: (ஸ்ரீஅமிர்த யோக தேவதையே போற்றி)
                          ஸ்ரீசித்த தேவ்யை நம : ( ஸ்ரீசித்த யோக தேவதையே போற்றி)
மாத தேவதை துதி :-  ஸ்ரீசித்ரா தேவ்யை நம : (ஸ்ரீசித்ரா தேவியே போற்றி)
வருட தேவதை துதி :- ஸ்ரீஈஸ்வர தேவாய நம : (ஸ்ரீஈஸ்வர வருட தேவா போற்றி)
நவநாயக துதி :
ஸ்ரீகுஜாய நம:
ஸ்ரீசூர்யாய நம:
ஸ்ரீசனீஸ்வராய நம:
ஸ்ரீபுதாய நம:
ஸ்ரீசுக்ராய நம:
ஸ்ரீராகுப்யாய நம:
ஸ்ரீசந்த்ராய நம:
ஸ்ரீகுரவே நம:
ஈஸ்வர வருட ராஜாவாகிய ஸ்ரீஅங்காரகனுக்கு நமஸ்காரம்.
மந்திரியாகிய ஸ்ரீசூரிய பகவானுக்கு நமஸ்காரம்.
சேனாதிபதியாகிய ஸ்ரீசனீஸ்வரருக்கு நமஸ்காரம்.
அர்க்காயதிபதியாகிய ஸ்ரீசூரியபகவானுக்கு நமஸ்காரம்.
ஸஸ்யாதிபதியாகிய ஸ்ரீபுத பகவானுக்கு நமஸ்காரம்.
ரஸாதிபதியாகிய ஸ்ரீசுக்ர பகவானுக்கு நமஸ்காரம்.
தான்யாதிபதியாகிய ஸ்ரீசந்திர பகவானுக்கு நமஸ்காரம்.
மேகாதிபதியாகிய ஸ்ரீசூரிய பகவானுக்கு நமஸ்காரம்.
நீரஸாதிபதியாகிய ஸ்ரீபுத பகவானுக்கு நமஸ்காரம்.
ஸ்ரீநவகிரஹாதிபதிகளுக்கு நமஸ்காரம்.
ருது திதி : - ஸ்ரீவசந்த ருது தேவ்யை நம: (ஸ்ரீவசந்த ருதுதேவதையே போற்றி:)
அயன திதி :- ஸ்ரீஉத்தராயண தேவ்யை நம : (ஸ்ரீஉத்தராயண தேவியே போற்றி)
லக்ன தேவதை துதி: ஸ்ரீமேஷலக்ன தேவாய நம: (ஸ்ரீமேஷ லக்ன தேவா போற்றி)
யோகினி தேவதை துதி :- ஸ்ரீபத்ரப்ரியா தேவ்யை நம:
                     (வடமேற்கில் அருள்புரியும் பத்ரப்ரியா யோகினி தேவியே போற்றி)
ஹோரா தேவதை துதி :- ஸ்ரீசந்த்ர ஹோர தேவாய நம:
                          ஸ்ரீசந்திரஹோர தேவதையே போற்றி)
இதர தேவதா துதிகள் : -
ஸ்ரீராகு கால தேவதையே போற்றி
ஸ்ரீஎமகண்ட தேவதையே போற்றி
ஸ்ரீகுளிகைக் கால தேவதையே போற்றி
ஸ்ரீஅர்த்தபிரகரணன் தேவதையே போற்றி
ஸ்ரீகாலன் தேவதையே போற்றி
இறுதியாகக் ‘காலபைரவாய நம:” என்று துதித்து பஞ்சாங்க படனத்தை நிறைவு செய்ய வேண்டும். இதற்குப் பின்னர் அவரவர் சம்பிரதாயப்படி குல தெய்வத் துதி, இஷ்ட தெய்வத் துதியை ஓதிடல் வேண்டும். ஒரு நாளில் குறைந்த பட்சம் இவ்வளவு கால தேவதைகளையும் துதித்திடில் தான் தினசரி வாழ்க்கை சுமுகமாக அமையும் என்பதை உணர்ந்திடுக!
துவாதச நவக்கிரக சட்ட பூஜை முறை
மேலே விளக்கியவாறு துவாதச நவக்கிரக சட்டத்தை அமைத்து அதில், குறித்த ராசிக் கட்டத்தில் ‘, குறித்த கிரகங்களின் பெயர்களை எழுதியபின், தாமரைத் தண்டு திரி, பசு நெய்யுடன் கூடிய ஒன்பது அகல் விளக்குகளை ஏற்றிட வேண்டும். வசதியற்றோர் ஒன்பது அகல் விளக்குகளுக்குப் பதிலாகக் கற்பூரத்தை ஏற்றி துவாதச நவக்கிரக சட்டத்தை வழிபடலாம். கலியுகாதி ஈஸ்வர வருட உத்தராயண, வஸந்த ருது, சித்திரை மாத முதல் தினத்திற்குரிய பஞ்ச கால தேவதைகளை உலகிற்கு நன்மையளிக்க வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
14.4.1997 ஆகிய இத்தினத்தில்..
மேஷராசியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீசூர்ய பகவானே போற்றி
மேஷ ராசியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீபுத பகவானே போற்றி
மேஷ ராசியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீசுக்கிர பகவானே போற்றி
சிம்ம ராசியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீசெவ்வாய் பகவானே போற்றி
கன்னி ராசியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீராகு பகவானே போற்றி
மகர ராசியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீகுரு பகவானே போற்றி
மீன ராசியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீகேது பகவானே போற்றி
மிதுன ராசியில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீசந்திர பகவானே போற்றி
இத்துதிகளுக்குப் பிறகு வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்களுடன் இயன்ற பிரசாதங்களை நைவேத்யம் செய்து புத்தாண்டு பூஜையை நிறைவு செய்திடல் வேண்டும். டிசம்பர் 1996 ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள நட்சத்திர சகாய திருவாக்கியத் திரட்டில் அமைந்துள்ள 27 நட்சத்திரங்களுக்கான துதிகளைக் குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து 27 முறை ஓதுதல் விசேஷமானதாகும். இன்று காலையிலோ, மாலையிலோ ஸ்ரீபைரவரைத் தரிசித்து முந்திரிப் பருப்புகளாலான மாலையைச் சாற்றி ஸ்ரீகால பைரவரைப் போற்றி வழிபட்டிடில் இறைநினைவில் ஈடுபடாது வீணாகக் காலத்தைக் கழித்தமையால் ஏற்பட்ட சாபங்களுக்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும். பிரசாதமான முந்திரிப் பருப்புகளைத் தானமாக அளித்திடல் வேண்டும். இரவும் பகலும் சேர்ந்த ஒரு தினத்தையே முந்திரிப் பருப்பு குறிக்கின்றது. இரவிலும் பகலிலும் இறைவனை மனம் நாடாது கேளிக்கைகளிலும், தீவினைகளிலும், தீய எண்ணங்களிலும், எவ்வளவு வருடங்களை வீணே கழித்துள்ளோம். இதற்கான பிராயச்சித்தத்தைத் தரவல்லதே ஸ்ரீகாலபைரவ வழிபாடாகும்.

ஸ்ரீராம நவமி

நாமெல்லாம் பிறந்த தேதியையும் நட்சத்திரத்தையும் கொண்டாடுகின்றோம். மகான்களுடைய பிறந்த திதியையும், ஜீவசமாதி பூண்ட மகான்களின் திதியையும் கொண்டாடும் வழக்கும் நிலவுகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பிறந்த அஷ்டமி திதி “ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி” அல்லது கோகுலாஷ்டமி யாக அமைய, ஸ்ரீராமர் பிறந்த நவமி திதி, ஸ்ரீராம நவமியாகப் பிரசித்தி பெற்றுள்ளது. புராணங்களின்படி ஸ்ரீகிருஷ்ணரும், ஸ்ரீராமரும் தாங்கள் ஏற்ற மனித  சரீரங்களுக்கான முடிவைச் சாதாரணமாக ஏற்றுக் கொண்டிருப்பினும், தெய்வ மூர்த்திகளின் இத்தகைய லீலானுபூதிகள், ஜீவன்களுக்குப் பாடம் புகட்டும் வகையில், வழிகாட்டும் திருநிகழ்ச்சியாக சர்வேஸ்வரனால் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை மறந்து விடலாகாது.
தெய்வாம்சமான ஸ்ரீராமர் மனிதர்களுள் மாணிக்கமாக வாழ்ந்து, மனித சரீரத்திற்குரிய முடிவை ஏற்றுக் கொண்டாலும் அன்னவரை உற்ற தெய்வமாய்ப் பூசித்த சற்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளும், பத்ராசலம் ஸ்ரீராமதாசரும் பெற்ற ஸ்ரீராமானுபூதிகளை இன்றும் நாம் கண்டும் கேட்டும் ஆனந்திருக்கின்றோம். எனவே அன்றும் இன்றும் என்றும் சர்வேஸ்வரனின் அம்சமாய் அருள்புரியும் ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திதிகளே முக்கியமானவை ஆகின்றன. இன்றும் ஸ்ரீராமா என்று உள்ளன்புடன் அழைத்திடில் ஓடோடி வருபவன் ஸ்ரீராமன். ‘ஸ்ரீகிருஷ்ணா’ என்று அழைத்திடில் நம்மிடம் பறந்தோடி வருபவன்தானே ஸ்ரீகிருஷ்ணன். முடிவில்லாத பரம் பொருளாய் ஆதியும் அந்தமுமாய் விளங்கும் தெய்வ மூர்த்திகளுக்கு எல்லையையா நிர்ணயிக்க முடியும்! அழகிய ஸ்ரீராமனே சர்வேஸ்வரன், அற்புதமான ஸ்ரீகிருஷ்ணனே பரம்பொருள்.
திதி விளக்கம் :- விஞ்ஞானப் பூர்வமாகவும் பஞ்சாங்க ரீதியாகவும், சூரிய கிரகத்திற்கும் சந்திர கிரகத்திற்கும் இடையிலுள்ள விண்வெளி தூரத்தையே திதியாகக் கணக்கிடுகிறார்கள்.. ஈஸ்வரனின் வலது கண்ணே சூரியன், இடது கண்ணே சந்திரன் என்று புராணங்கள் கூறுகின்றன. அனைத்து ஜீவன்களுக்கும் ஒளி தந்து உய்விக்கும் சூரிய பகவானே பரமாத்மா! மனம்தனை ஆட்டி வைத்து மனோபாவங்களை முறைப்படுத்துகின்ற சந்திரனே ஜீவாத்மா! இறைவனின் இரு நேத்திரங்களான பரமாத்மாவும், ஜீவாத்மாவும் இணைந்து கிட்டுவதே முக்தி என்ற தெளிந்த நிலை! இரு கண்களின் ஒருமித்த பார்வையே நல்ல தெளிவைக் கொடுக்கும்.
எனவேதான் சூரியனும் சந்திரனும் இணைகின்ற அமாவாசை தினம் மிகவும், புனிதமானதாக, ஜீவாத்மா, பரமாத்மா ஐக்ய நிலையைத் தருகின்ற உத்தம தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அமாவாசையன்று பித்ருக்கள் சூர்ய சந்திர கிரஹ சங்கமத்தில் பல அற்புதமான தவங்களையும், பூஜைகளையும் மேற்கொள்கின்றனர். அமாவாசை பித்ரு தர்ப்பணத்திற்குரிய நாள் என்பதை மட்டுமே நாமறிவோம். ஆனால் அமாவாசை மஹிமை என்று விவரித்திடில் அதைக் கேட்டு ஆனந்திக்கவே பல ஜென்மங்கள் எடுத்திட வேண்டும். அத்தகைய உத்தம நிலைகளைத் தரவல்லது அமாவாசையாகும். சூரிய, சந்திர சங்கமத்தில் ஏற்படும் ஒளிப்பிழம்பை நம்மால் காண இயலாது. பளிச்சென்று வானில் தோன்றும் மின்னலைக் கண்டு நம் கண்கள் இருண்டு விடுவது போல, நம் கண்களால் காண இயலாத அளவிற்குத் தோன்றும் இந்த ஜோதியில் தான் தேவாதி தேவர்களும், தெய்வமூர்த்திகளும், தேவதைகளும், விண்ணுலக உத்தம ஜீவன்களும், பித்ருக்களும் புனித ஒளியில் நீராடுகின்றனர். அதே நேரத்தில் தான் நாமும் கடலில் புனித நீராடலை மேற்கொள்கின்றோம். சூர்ய, சந்திர மூர்த்திகள் இணைந்து அருள் பாலிக்கின்ற அற்புதத் திருநாளன்றோ அமாவாசை!
இவ்வாறாக மனித வாழ்விற்கு உத்தம நிலைகளைத் தரவல்லதாகத் திதி பூஜை அமைவதால்தான் மஹான்கள், யோகியர் ஜீவசமாதி பூண்ட திதி நாட்களை விசேஷமானதாகக் கொண்டாடுகின்றோம். எந்த ஒரு மஹானும் பிறந்த நாளிலேயே தம் தெய்வ அருள் நிலையை உடனடியாக உணர்த்திடுவதில்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்து இன்பதுன்பங்களை அனுபவித்து மக்களுடைய தீவினைக் கர்மங்களைத் தாமே ஏற்று, நோய்களாக, விரயங்களாகத் தாமே அனுபவித்து தம் தெய்வீக சக்திகளை வெளிக்காட்டிடாது மக்களே அதனை உணரும் வண்ணம் நடமாடுந் தெய்வமாய் வாழ்ந்து மனித உடலைச் சட்டையெனக் கழற்றி ஜீவசமாதி ஏற்கின்ற நாள்தான் அவருடைய திதியென நாம் அழைக்கின்றோம். அவர் பிறந்தபோது மஹான் என்று அறியாத நாம் அவருடைய வாழ்க்கையின் தெய்வானுபூதிகளின் மூலம் உய்த்துணர்ந்து ஜீவஸமாதி பூணுகின்ற பொழுதுதான் மஹானின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவருடைய திதியை விசேஷமாகக் கொண்டாடுகின்றோம். தினசரி பஞ்சாங்க சிரவண பலன்களாகத் திதித்து துதியால் ஐஸ்வர்யமும், நட்சத்திரத் துதியால் பாபநிவர்த்தியும் கிட்டிடுமெனவும் அறிகின்றோம். இது நித்யபூஜா பலன்கள்.. ஆனால் பிறந்த திதி, பிறந்த நட்சத்திரம், இறந்த திதிப் பூஜைகளினால் கிட்டும் பலன்கள் வேறு.
பொதுவாக சாதாரண மனிதர்கள் இறந்த திதியில் செய்யப்படும் தர்ப்பணம், திவசம், அன்னதானம் போன்ற தான தர்மங்கள், ஹோமங்களுக்கு ஆயுள்விருத்தி தரும் சக்தியுண்டு. இறந்தவர்களுக்கு ஆயுள்விருத்தியா? ஆம், ஆயுள் என்பது பூலோக வாழ்வோடு முடிவது என்பது கிடையாது. மேலும் ஆயுள் விருத்தி என்றால் ஆயுளை, ஆரோக்யமாக, நல்மனதுடன் இறை நெறியில் செலுத்தி வாழ்வதாகும். இறந்த மனிதன் 80, 90 ஆண்டுகளாக நீண்ட வருடங்கள் வாழ்ந்திருப்பினும் அதனை ஆயுள்விருத்தியென ஏற்க இயலாது. ஏனெனில்... நோய், தீய எண்ணங்கள், முறையற்ற காமக்குரோத தகாத கார்யங்களில் தாம் ஆயுளில் எத்துணை ஆண்டுகளை அவர் வீணே விரயம் செய்திருப்பார். இதற்குரிய பிராயச்சித்தத்தை அவர் எப்பிறவியிலேனும் செய்தே ஆக வேண்டும். எவ்வாறாக மறு பிறவி எடுப்பினும் நன்முறையில் மேற்கண்டவாறான ஆயுள் விருத்திக்கும், உத்தமமான பித்ரு நிலையை அடைவதற்கும் திதி தேவதையே அருள்புரிவதால் ஒருவருடைய இறந்த திதியே முக்யத்துவம் பெறுகின்றது.
நக்ஷத்ர பூஜை நித்ய பூஜையாக அமைந்தால் பாபங்களை நிவர்த்தி செய்யும். ஆனால் பிறந்த நக்ஷ்த்ர பூஜை வாழ்க்கைக்குத் தேவையான இக, பர சுகங்களைத் தரவல்லது. எனவேதான் நம் வாழ்க்கையில் முறையான சுகபோகங்களுடன் வாழ்வதற்காகப் பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டாடுகின்றோம்.
இராமாவதாரத்தின் சிறப்பு
இறைபக்தி உன்னதமாக விளங்கிய திரேதாயுகத்திலேயே மனிதனோடு மனிதனாக வாழ்ந்து தன்னுடைய அவதாரத்தன்மையைச் சற்றும் வெளிக்காட்டாது சாதாரண மனிதனைப் போல் இன்ப துன்பங்களை அனுபவித்து அனைத்து ஜீவன்களுக்கும் வழிகாட்டியாக இருப்பவரே ஸ்ரீராமராவார்.
ஸ்ரீராமர், ஜடாயு என்ற கழுகிற்கும் சாதாரண மனிதனைப் போல் தகனக் கிரியைகள் செய்த இடமே வைத்தீஸ்வரன் கோயிலாகும். இன்றும் இக்கோயிலில் பிரசித்தி பெற்றுள்ள ஜடாயு ஹோமகுண்ட சாம்பல், இறைவனுக்குச் சார்த்தப்பட்ட நேத்ரபடி சந்தனம், வில்வ தளம் மூன்றும் சேர்ந்த உருண்டையே இங்கு தெய்வத் திருப்பிரசாதமாக அளிக்கப்படுகின்றது.  ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே ஆஹுதிகள் அளித்து அக்னி வளர்த்து ஹோமம் செய்த குண்டம் என்றால் என்னே அதன் மஹிமை!
சர்வேஸ்வரனாக விளங்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே ஹோமங்களை நிகழ்த்தி சாதாரண மனிதரைப் போல் வாழ்ந்தாரெனில் நமக்குக் கிட்டும் அனுபவங்கள் எத்தனை எத்தனை! ஹோமம் என்பது ஒவ்வொரு இல்லத்திலும் குறைந்தது மாதம் ஒரு முறையேனும் நிகழ்த்தப்பட வேண்டிய இறை பூஜையாகும். ஹோமத்தைப் பற்றி அறியாத சாதாரண பாமர மக்களும் தம் குடும்பத்தினருடன் தாமே ஹோமத்தை எளிதில் நிகழ்த்துகின்ற வழிமுறைகளை எமது ஆஸ்ரமத்தின் வெளியீடான ‘அருகம்புல் அற்புதனின் மகிமை’ (ஹோம வைராக்யம்) என்ற நூலில் காணலாம்.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி வனவாசத்தை ஏற்றபோதுதான் தசரதரின் பூதவுடல் பூவுலகை நீத்த செய்தி வந்தது. அப்பொழுதே முறையான கிரியைகளை, தர்ப்பண முறைகளை ஸ்ரீராமர் செய்யத் தொடங்கினார். பரதர் தகன முறைகளை ஸ்ரீராமரின் அருளாணைப்படி நிறைவு செய்தார்.
தசரதர் பெற்ற உத்தம நிலை
கலியுக மக்களுக்கு ஸ்ரீராமரின் வாழ்க்கைச் சரிதமே நிறைய ஆன்மீகப் பாடங்களைப் புகட்டுகின்றது.
1. “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்ற திருவாக்கியத்தின் உண்மைப் பொருளாய் வாழ்ந்து காட்டியவர்.
2. ஏகபத்னி விரதனாய் வாழ்ந்து சீதாபிராட்டியை அன்றி வேறெவரையும் சிந்தனையில் கூட தீண்டாதவர்.
3. நீதிநெறி தவறாத பேரரசனாக இறைநினைவோடு ஆட்சி புரிந்தவர்.
4. தெய்வாவதார மூர்த்தியாக இருந்த போதும் அவதாரத் தன்மையை வெளிக்காட்டாது சாதாரண மனிதனாக சகல இன்ப துன்பங்களையும் அனுபவித்து வாழ்ந்தவர்.
5. பேரரசனாக விளங்கியும், அவதார புருஷனாக இருப்பினும் பெரியோர்களுக்கும், மகரிஷிகளுக்கும், தலைவணங்கி பாமர மக்களின் மேல் பரிபூர்ண அன்பைச் செலுத்தி வாழ்ந்து காட்டியவர்.
இத்தகைய தெய்வத் திருஅவதார மூர்த்தியான ஸ்ரீராமரின் திருக்கரங்களில் தர்ப்பணங்களைப் பெறும் பாக்யத்தை தசரதர் பெற்றாலுங்கூட, தசரதருடைய ஆன்மா உய்வு பெற பல ஆண்டுகள் ஆயினவாம். கேட்பதற்கே மிகவும் வியப்பாக இருக்கின்றதல்லவா? இதற்குரிய காரணமென்ன? ஸ்ரீராமர் நினைத்திருந்தால் தந்தையான தசரதருக்கு எத்தகைய உத்தம நிலையையும் தந்து அருள் செய்திருக்க முடியும். ஆனால் தந்தையாயினும் கூட அவரவர்க்குரிய கர்ம வினைகளை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நியதிக்கு உட்பட்டு ஒரு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவரே ஸ்ரீராமர். தசரதர், வனத்திற்கு வேட்டையாடச் சென்றபோது, குருடரான தன் தந்தையின் தாகம் தீர்க்க, தடாகத்தில் நீர் எடுக்கச் சென்ற சிராவணன் என்ற சிறுவனை, நீரின் சலசலப்பில் மான் எனத் தவறாக எண்ணி அம்பெய்து கொன்று விட்டார். மாமன்னராயினும் தசரதர் அடக்கத்தால் பணிவன்புடன் குருடரான பெரியவரிடம் சென்று நடந்ததை விளக்கினார்.
அவரோ, “என்னைப் போல் புத்ரசோகத்தால் நீ துன்பமடைவாய்”, என்று சாபம் அளித்ததும் அதனால்தான் ஸ்ரீராம, லக்ஷ்மணரின் வனவாசத்தால் தசரதர் துன்பமடைந்தார் என்பதையும் நாம் நன்கறிவோம். இங்கு தசரதர் சாபத்தின் விளைவுகளைப் பற்றிய அச்சத்தால்,, சிறுவனாகிய சிராவணனுக்கு நடைபெற வேண்டிய தகனக் கிரியைகளுக்கு முறையாக ஏற்பாடு செய்யத் தவறி விட்டார். மேலும் சிரவணச் சிறுவனை இழந்த குருடரான தந்தையும், அவர்தம் பத்னியும் புத்திரனை இழந்த சோகத்திலேயே தம் எஞ்சிய வாழ்நாளைக் கழித்தனர். இதற்கு நஷ்ட ஈடாக அவர்கள் எத்துணை வசதிகளைப் பெற்றிடினும் புத்ர நஷ்டத்தை எவ்வாறு ஈடு செய்வது? அவர்களுடைய சோகச் சூழல்களே தசரதருக்குப் பெருங்கர்ம வினைகளாயின., இதனால் மேலும் கர்ம வினைகள் பெருகின. இது காரணமாகவே, தசரதர் பூவுடலை நீத்திடினும் ஆன்மா புனிதம் பெற பல ஆண்டுகள் ஆயின. அப்படியானால் அதுவரையில் ஸ்ரீராமர் அளித்த தர்ப்பணங்களின் சக்தி என்னவாயிற்று? சிரவணனை, அறியாமல் செய்த பிழையாக, அம்பெய்து கொன்றமையால் தசரதருக்கு ஏற்பட்ட பெரும் தீவினை கழிந்து அவரைக் கரையேற்ற உதவியது!
கலியுகத்தில் மாதமொரு முறை வரும் அமாவாசைத் தர்ப்பணமளிப்பதே சிரமமாகத் தோன்றுகின்றதல்லவா! ஆனால் ..,ஸ்ரீராமரும் லக்ஷ்மணரும் முறையோடு நித்ய தர்ப்பணாதி, சிராத்த, திவச, பூஜைகளைச் செய்து வந்தனர். ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீராமதூதனாக ராவணனின் அரசவைக்குச் சென்றபோது ஆஞ்சநேயரின் வாலில் தீ வைத்திட, சீதையின் கற்புக்கனலே ஆஞ்சநேயருக்கு உஷ்ணத்தின் தன்மையைச் சிறிதும் உணராதவாறு குளிர்ச்சியைத் தந்தது என்பதை நாம் அறிவோம். சித்தர்களுக்கே உரித்தான ‘இருடிகள் ராமாயணம்’ பல அரிய, நாம் அறிந்திராத புராண நிகழ்ச்சிகளை அளிக்கின்றது.
ஆஞ்சநேயர் சீதாதேவியிடம் அரக்கர்கள் தம் வாலில் தீ வைத்த போது, அதன் வெப்பத்திலிருந்து தம்மைக் காத்தருளிய சீதாபிராட்டிக்குத் தம் நன்றித் துதியை அளித்திடுகையில், “ஆஞ்சனேயா! உன் நன்றியை ஏற்கும் தகுதி எனக்கில்லை. ஏனெனில் அக்னி பகவானே அரக்கர்கள் இட்ட தீயைத் தம்முள் ஏற்று உன்னைக் காப்பாற்றினார்”, என்று சீதா தேவி பணிவன்புடனும், அடக்கத்துடனும் தெரிவித்தனள். சீதாதேவியின் நிழலாயமைந்து காவல் காத்து நிற்பவரான ஸ்ரீஅக்னிபகவானை ஆஞ்சநேயர் தரிசித்து, “ஸ்வாமி! தாங்களே சீதாதேவியின் கருணையால் என்னை ரட்சித்தீர்கள். தங்களுக்கு நன்றியறிதலாக, அடியேனால் ஆக வேண்டிய பணி ஏதேனும் இருப்பின் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்”, என்றார். அக்னி பகவானும் தம் பத்னியாம் ஸ்வாஹா தேவியுடன் தரிசனம் தந்து மகிழ்ந்து, “ஆஞ்சநேயா! ராம கார்யத்திற்கு நாங்களும் சேவை செய்கின்ற பாக்யம் உன் மூலமாகக் கிட்டியதே என ஆனந்திக்கின்றோம், என் பத்னியாம் ஸ்வாஹா தேவியின் ஒரு சில அபிலாசைகளைப் பூர்த்தி செய்வாயாக!’’, என்றார்..
அக்னி பகவானின் பத்னியான ஸ்வாஹா தேவியே ஹோமத்தில் ‘ஸ்வாஹா’ என நாமிடும் ஆஹூதிகளை அந்தந்த லோகத்திற்கு எடுத்துச் செல்லும் தெய்வீக சக்தி பெற்றவள்! “ஆஞ்சநேயா! மனிதர்கள், தேவர்கள், அசுரர்கள், தேவாதி தேவ மூர்த்திகளெனப் பலரும் நிகழ்த்துகின்ற ஹோமங்களின் ஆஹுதிகளை, அந்தந்த தெய்வமூர்த்திகளின் லோகங்களுக்கு எடுத்துச் செல்லும் பாக்யத்தைப் பெற்றுள்ளேன். அண்டசராசரத்தில் எவர், எங்கு ஹோமம் நிகழ்த்திடினும் நான் ஆங்கு உடனே பிரசன்னமாக வேண்டும். நீயோ காற்றினும் கடுகிச் செல்லும் சக்தியைப்  பெற்றுள்ளாய்! நவ வியாகரணங்களிலும் பாண்டித்யம் பெற்றுள்ளாய். எனவே பிரபஞ்சத்தின் ஸகல லோகங்களுக்கும் வெகு விரைவில் ஹோம ஆஹுதிகளை எடுத்துச் செல்லும் தவசக்தியை அடியேனுக்கு அருள்வாயாக”, என்றாள் ஸ்வாஹா தேவி. உடனே ஆங்கே ஸ்வதா தேவி பிரசன்னமானாள்.. உலகில் யார் எங்கு தர்ப்பணம் அளித்திடினும் அதனை அந்தந்த பித்ரு லோகத்திற்கு எடுத்துச் சென்று அளிக்கும் தேவியே ஸ்வதா தேவியாவாள். எனவே தான் பித்ரு தர்ப்பண மந்திரத்தில் மூதாதையரின் பெயரைச் சொல்லி “ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி!” என்று நாம் தர்ப்பணம் அளித்திட, அதனை அம்மூதாதையர் உறைகின்ற பித்ரு லோகத்திற்கு எடுத்துச் சென்று அளிப்பவளே ஸ்வதால் தேவி!
“ஆஞ்சநேயா! அடியேனுக்கு இந்தப் பிரபஞ்சமெங்கும் கந்தர்வர்கள், தேவர்கள், தேவர்கள், தேவமூர்த்திகள், மனிதர்கள் என எவர் எந்நேரத்தில் தர்ப்பணமளித்திடினும் அதனை அந்தந்தப் பித்ரு லோகங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு உண்டு! எனவே எனக்கும் துரித கதியில் பித்ரு தர்ப்பணத்தினைப் பல்வேறு பித்ரு லோகங்களுக்கும் எடுத்துச் செல்கின்ற தவசித்தியினைத் தந்தருள வேண்டுகிறேன்”, என்று ஸ்வதா  தேவியும் வேண்டினள்.. ஸ்ரீஆஞ்சநேயர் திகைத்து நின்றார். “ஸ்ரீராமநாமம் தவிர நான் ஒன்றும் அறியேனே!’’, என்று உரைத்தவரும், அடக்கத்தின் தவப் பெருஞ்சின்னமானவரும், ஒன்பது (நவ) விதமான வியாகரணங்களை உய்த்துணர்ந்தவரும், நைஷ்டிக உத்தம பிரம்மச்சர்ய விரதம் பூண்டவருமான ஸ்ரீஆஞ்சநேயர்  ஸ்வாஹா, ஸ்வதா தேவியருக்குத் துரித கதிக்கான,
1. பூமி மற்றும் ஏனைய கிரஹங்களின் சுழற்சி ரகசியங்கள்
2. துரித கதிக்கு உதவும் சஞ்சீவி மலை மூலிகா பந்தன ரகசியங்கள்
3. அஷ்டமா சித்திகளைவிட சக்தி வாய்ந்த வாயுப் பிரமாண யோக நிலைகள்
4. மலைகள், பள்ளங்கள், நட்சத்திரங்கள், அண்டங்கள், சமுத்திரங்களைக் கடக்கவல்ல தவசித்தியைத் தரும் “ராக பாவ சப்த தியான நிலைகள்”
போன்ற வியாகரண ரகசியங்களைப் போதித்துச் சிறப்புச் செய்தார். இதற்காக ஸ்ரீஆஞ்சநேயர் பெற்ற பரிசு என்ன தெரியுமா? ஸ்வாஹா, ஸ்வதா தேவியர் ஆஞ்சநேயரிடம்,  “ஆஞ்சநேயா! நீ விரும்பும் போது எங்களுடைய இறைப்பணியை அதாவது ஹோம ஆஹுதியையும், தர்ப்பண சக்தியையும் எவருக்கும் எங்கும் அளிக்கும் சக்தியை உனக்கு வழங்குகிறோம்”, என்று ஆசி கூறினர்.
இது சர்வேஸ்வரன் நடத்தும் திருவிளையாடல் தானே!
தம் தந்தை தசரதருக்காகப் பல இடங்களில் நித்ய தர்ப்பணத்தை நன்கு நிகழ்த்தியவாறாக வந்த ஸ்ரீராம, லக்ஷ்மண மூர்த்திகள் ஓர் அற்புதமான திருத்தலத்தை அடைந்தனர். .... அதோ ஸ்ரீராம, லக்ஷ்மண மூர்த்திகள் எள் (திலம்) கொண்டு தர்ப்பணம் அளிக்கின்றனர். ஸ்ரீலக்ஷ்மணர் பித்ருஹோமத்தைப் பூர்ணாஹுதியுடன் நிறைவு செய்திட, அக்னியில் பஸ்மமான பூர்ணாஹுதியிலிருந்தும் , பூமியில் படிகின்ற தர்ப்பண நீரிலிருந்தும் ஒரு ஜோதி எழுகின்றது. ..... கண்ணிமைக்கும் நேரத்தில் ஜோதி விண்ணில் எங்கோ மறைந்து விட்டது. ஸ்ரீராம, லக்ஷ்மண மூர்த்திகள் ஆச்சரியத்துடன் விண்ணை நோக்கினர். அதுவரையில் அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீஆஞ்சநேயரையும் காணவில்லை! இருவரும் திடுக்கிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தனர். வானில் பெரிய சப்தம்! அந்த ஜோதி எங்கு மறைந்ததோ, அதே இடத்திலிருந்து ஒரு பிரகாசமான மேக வட்டம் எழுந்தது!

மேக வட்டத்தைச் சுமந்தவாறு, ஸ்ரீராமநாம ஜபத்துடன் ஸ்ரீஆஞ்சநேயர் ஆங்கே பிரசன்னமானார். இதையெல்லாம் இவ்வாறு விவரிக்கின்றோமே தவிர இவை அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தை விட குறைந்த காலத்தில் நிகழ்ந்து விட்டன! ஸ்ரீஆஞ்சநேயர், கைகூப்பி நின்றார். மேகவட்டம் விரிந்தது! அதனுள்... ஜடாயு கழுகு ஸ்ரீராம, லட்சுமணரை வணங்கித் துதித்தவாறு எழுந்தது. அதன்மேல் ஸ்ரீதசரதர்! ஸ்ரீராம, லக்ஷ்மணர்கள் தம் தந்தையை தண்டமிட்டு வணங்கிட, “ஸ்ரீராமச்சந்திரா! ஸ்ரீலக்ஷ்மணா! நீங்கள் இதுகாறும் எனக்காகச் செய்து வந்த தர்ப்பண பூஜாபலன்கள் இன்று பரிபூர்ணம் அடைந்தன. ராமா! இன்று நீ பிறந்த திதியான நவமி திதியும் கூடியுள்ளது என்னுடைய பெரும்பாக்யமே! இன்று தான் இந்தத் தசரதனுக்கும், ஜடாயுவுக்கும் கர்மவினைகள் நீங்கி, புண்ய, பாவம் அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீராமா! இந்த ஈஸ்வர வருட நவமி திதியில் அடியேனுக்கும், ஜடாயுவிற்கும் மோட்சம் கிட்டுவதற்கு நீ சிரத்தையோடு அளித்து வந்த நித்ய தர்ப்பண பூஜையும், பித்ரு ஹோமமும் ஆகும். இவற்றின் உத்தராங்கப் பரிபூர்ணப் பலன்களாக யாமிருவரும் மோட்சநிலை பெற்றோம். இதில் எவ்வித ஐயமும் இல்லை. எனவே இத்தலத்தில் ஸ்ரீராமநவமியன்று  தர்ப்பணம், பித்ருஹோமம் மற்றும் தான, தர்மங்களைச் செய்வோர் பலவிதமான அதிஅற்புதப் பலன்களைப் பெறுவார்கள்”, என விளக்கினார் தசரதர். இத்தலமே திலதைப்பதி என்னும் கோயிற்பத்து, திருவாரூர் அருகே உள்ளது. திலம் என்றால் எள் என்று பொருள். ஸ்ரீராம, லக்ஷ்மண மூர்த்திகள் நித்ய தர்ப்பண, பித்ரு ஹோம பூஜைகளைப் பல இடங்களில் செய்து, இந்தத் திலதைப்பதியிலும் செய்திடவே, இத்தலத்தில் தான் அவை பரிபூரணமடைந்து ஜடாயுவும் தசரதரும் மோட்ச நிலையை அடைந்தனர்.
திலதைப்பதியில் ஸ்ரீராமநவமி
வரும் ஸ்ரீராமநவமியினை (16.4.1997) புதன்கிழமை திலதைப்பதி திருத்தலத்தில் அபிஷேக ஆராதனைகளுடனும், ஹோமம், அன்னதானம், வஸ்த்ரதானம், ஜாதி, இன, பேதமின்றி ஏழைகளுக்கு மாங்கல்ய தானம், ஏனைய பிற தானங்களுடன் கொண்டாடுவது பல அரிய பலன்களைப் பெற்றுத் தரும். இன்று பித்ரு ஹோமம், பித்ரு தர்ப்பணங்கள், சிராத்தம், திவசங்களுடன் மூதாதையர்களுக்கான பூஜைகள் மிக மிக விசேஷமானது ஆகும். இங்கு ஸ்ரீராமநவமி அன்று மூதாதையர்களுக்கான தர்ப்பண பூஜைகளோடு, கழுகாய்ப் பிறந்த ஜடாயுமேல் அன்பு கொண்டு அதற்கும் ஸ்ரீராம, லக்ஷ்மணர் தர்ப்பணம் அளித்தனரல்லவா? அதைப் போல் நாம் அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ அனைவர்க்கும் தர்ப்பணம் அளிப்பது சிறப்புடையது.. நாம் உண்டு களித்த மீன், நண்டு, ஆடு, மாடு , கோழிகள் எத்தனை, எத்தனை?  எத்தனை கோடி தாவரங்களை உணவாக உண்டு நாம் ஆனந்தித்து இருக்கின்றோம்!! ஸ்ரீராமரைப் போல் இங்கு ஸ்ரீராம நவமி அன்று உற்றார், சுற்றம், அயலார் மட்டுமின்றி அனைத்து வகையான பிராணிகள், தாவரங்கள் போன்று அனைத்து ஜீவன்களுக்கும் தர்ப்பணம் அளிப்பது சிறப்புடையதாகும். எத்தனையோ பேர் இல்லத்தில் பூனை, நாய், கிளி, புறா, முயல், மான், பசு, எருமை, மயில் போன்றவற்றை வளர்த்து அவை மடியும் போது கண்ணீர் விடுகின்றனர்.. வெறும் கண்ணீரானது அவ்வுயிர்களுக்கு எவ்வித மேன்மையும் தராது. இதற்குப் பதிலாக நாம் வளர்த்து நம் கண் முன்னரே மடிந்த பிராணிகளுக்கு மட்டுமின்றி , நாம் வளர்த்த, நாம் பயன்பெற்ற பூச்செடிகளுக்கும், தென்னை, மா, பலா போன்ற மரங்களுக்கும் தர்ப்பணங்களை அளிப்பது பெறற்கரிய பாக்யமாகும்.

புள்ளபூதங்குடி

ஏனைய தலங்களில்....
 ஈஸ்வர வருட ஸ்ரீராமநவமியைத் திலதைப்பதியில் கொண்டாடுவது எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது என்பதை நன்கு விளக்கியுள்ளோம். ஏனையோர் ஸ்ரீராமர் பூஜித்த தலங்களில் (திருப்புல்லாணி, ராமேஸ்வரம் போன்றவை), ஸ்ரீராமர் மூலவராக விளங்கும் தலங்களிலும் (புள்ளபூதங்குடி, மதுராந்தகம், கும்பகோணம், தில்லை விளாகம், வடுவூர், தஞ்சாவூர்), புனிதமான ஆற்றங்கரையிலோ, திருக்கோயில் திருக்குளத்திலோ, தீர்த்தக் கிணறுகளிலோ முறையான தர்ப்பண பூஜை, ஹோமங்களை நிகழ்த்தி ஸ்ரீராமருக்கும், ஸ்ரீஆஞ்சநேயருக்கும், அபிஷேக ஆராதனைகள் செய்வது சிறப்புடையதாகும்..
பலாபலன்கள் :-
ஈஸ்வர வருட ஸ்ரீராம நவமியை மேற்கண்ட முறையில் கொண்டாடிட,
1. இதுவரையிலும் முறையாகத் தர்ப்பணங்களைச் செய்யாதோர்க்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும்.
2.  தாய், தந்தை, தாத்தா, பாட்டி போன்றோர் இறக்கும் போது அருகினில் இருக்கும் பாக்யத்தைப் பெறாதோர் ஸ்ரீராமநவமி அன்று திலதைப்பதி தலத்தில் முறையான பூஜைகளை, தர்ப்பணங்களைச் செய்திட தகுந்த பிராயச்சித்தம் கிட்டும்.
3. மூதாதையர்களோ, தாய் தந்தையரோ செய்த தவறுகளினால் சாபங்களோ, தோஷங்களோ, அல்லது பிறருக்குப் பெருந்துன்பங்களோ ஏற்பட்டிருப்பின் இப்பூஜை முறைகள் தக்க பரிகாரங்களைத் தந்து குடும்பத்தினரைக் காப்பாற்றும்.
4. பல சமயங்களில் அறியாமல் செய்கின்ற பிழைகளால் பெரும் துன்பங்கள் விளைகின்றன. இதனால் ஏற்படும் அவதூறு பழிகளிலிருந்து மீட்சி பெற இப்பூஜை பெரிதும் உதவுகின்றது.
5. இப்புனிதத் திருநாளில் தர்ப்பணத்தின் மகிமையை அறியாத ஏழை எளியோர்க்கும் இதன் பலன்கள் சென்றடையுமாறு நாம் தேவையான உதவிகளைச் செய்வது மிகச் சிறந்த மகேசன் சேவையாக அமைகின்றது.
6. ஈஸ்வர வருட ஸ்ரீராமநவமி பூஜையின் முத்தாய்ப்பாக ஸ்ரீஆஞ்சநேய ப்ரபாவம் ஒன்று அமைகின்றது. அதாவது இன்று அளிக்கப்படும் தர்ப்பண பூஜைகளின் சக்தியையும், ஹோமங்களின் ஆஹுதியையும் ஸ்ரீஸ்வாஹா, ஸ்ரீஸ்வதா தேவதையரின் பூரண அனுக்ரஹத்தைப் பெற்று, இவற்றை அந்தந்த பித்ரு லோகங்களுக்கும், தேவாதி தேவலோகங்களுக்கும் அளிப்பவர் ஸ்ரீஆஞ்சநேய மஹாப்ரபு எனில் நாம் எத்தகைய பாக்யம் செய்திருக்க வேண்டும்!
ஸ்ரீஆஞ்சநேயரின் அதிஅற்புதப் பணி : திலைதப்பதியில் ஸ்ரீராம, லக்ஷ்மண மூர்த்திகள் தர்ப்பணம் இடுகையில் ஓர் ஜோதி வெளிப்பட்ட வைபவத்தை முன்னர் கண்டோம் அல்லவா? அதனை மீண்டும் இங்கு தொடர்கின்றோம். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆஞ்சநேயர் அந்த ஜோதிப் பிரவாகத்துடன் சென்று மீண்டும் வருகையில் ஒரு மேக வட்டத்தைச் சுமந்து வந்தாரல்லவா? இதன் பொருள் என்ன?
இறைலீலையாக ஸ்ரீஆஞ்சநேயர், நவமி திதியான அன்று திலதைப்பதி திருத்தலத்திலே ஸ்ரீராம, ஸ்ரீலக்ஷ்மண மூர்த்திகள் ஜடாயுவுக்கும், தசரதருக்கும் உரிய தர்ப்பண பூஜைகளைச் செய்யும் போதுதான் ஸ்ரீஸ்வாஹா, ஸ்வதா தேவிகளிடமிருந்து தாம் பெற்ற வரத்தை நினைவு கூர்ந்தார். “..... நீ விரும்புகையில் எங்களுடைய இறைப்பணியை ஏற்றுச் செய்திடலாம்“ என்ற அருள்வாக்கினை நினைவு கூர்ந்த ஆஞ்சநேயர், அன்று ஸ்ரீராமரும், ஸ்ரீலக்ஷ்மணரும் அளித்த பித்ரு தர்ப்பண சக்தியை ஜடாயுவும், தசரதரும் வசித்த லோகங்களுக்கு எடுத்துச் செல்வதுடன், ஸ்ரீலக்ஷ்மணர் செய்த ஹோமத்தின் பூர்ணாஹுதியைப் பித்ரு லோகங்களுக்கும் எடுத்துச் செல்லும் பாக்யத்தைப் பெற விரும்பி இரண்டு தேவியரையும் தம் மனமுருகப் பிரார்த்தித்தார். ஸ்ரீஸ்வாஹா, ஸ்ரீஸ்வதா தேவியர் மகிழ்ந்து, பரிபூர்ணமான ஆனந்தத்துடன் ஸ்ரீஆஞ்சநேயரை நன்கு ஆசீர்வதித்து அனுப்பினர். ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீராமரின் திருக்கரங்களிலிருந்து வழிந்த எள்ளையும், நீரையும் சூட்சுமமாகத் தம்முடைய கமண்டலத்தில் ஏந்தி ஜடாயுவின் ஆன்மா உறைந்த கந்த பர்வத ஸ்ரீபுரம் லோகத்திற்கும், தசரதர் நிலைத்திருந்த ஸ்ரீவாசிஷ்ட வைகுந்தபுரி லோகத்திற்கும் எடுத்துச் சென்று சமர்ப்பித்தார்.
ஜடாயுவிற்கும், தசரதருக்கும் என்னே பெரும் பாக்கியம்! தர்ப்பண சக்தியையும், ஆஹுதிகளையும் ஸ்ரீஆஞ்சநேயரே சுமந்து வருகின்றார் என்றால் என்னே அதன் மஹிமை! திலதைப்பதி திருத்தல மகிமையால் ஸ்ரீராமர் பிறந்த நவமி திதியிலேயே ஜடாயுவும், தசரதரும் ஸ்ரீஆஞ்சநேய ப்ரபாவத்தின் மூலமாக மோட்சநிலை பெற்றனர். இத்திருத்தலத்தில் நிகழ்ந்ததால் இந்த புராண வைபவத்தால் ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்வச்சித்த தில தர்ப்பண அனுக்கிரக சக்தியைப் பெற்றார். இதன் மூலமாக ஈஸ்வர வருடத்தில் ஸ்ரீராமநவமியன்று திலதைப்பதியில் அபிஷேக, ஆராதனைகளுடன் பித்ருஹோமம், பித்ரு தர்ப்பணம் போன்றவற்றை முறையாகச் செய்வோருக்கு ஸ்ரீஆஞ்சநேயரே ஸ்ரீஸ்வதா, ஸ்ரீஸ்வாஹா தேவியர்களின் பரிபூரண ஆசியோடு அவரவருடைய பித்ரு லோகங்களுக்கு எடுத்துச் சென்று அளிக்கின்ற பாக்கியத்தைப் பெற்றுத் தருகிறார். ஸ்ரீஆஞ்சநேயரின் பூஜையுடன் தான் ஸ்ரீராமநவமி பூஜை பரிபூரணம் அடைகின்றது.
ஸ்ரீஹவிமுக்தேஸ்வர ஆஞ்சநேய பூஜை
ஈஸ்வர வருடத்தில் ஸ்ரீராமநவமி அன்று ஸ்ரீராமரைப் பூஜிப்போருக்கும் , தம் மூதாதையருக்கான பித்ரு பூஜைகளை நிகழ்த்துவோருக்கும் சில விசேஷமான பலன்கள் கிட்டுகின்றன..
1. பித்ரு ஹோம ஆஹுதிகளையும் , பித்ரு தர்ப்பண சக்தியையும், அந்தந்த மூதாதையருடைய பித்ரு லோகங்களுக்கு எடுத்துச் சென்று அளிக்கின்ற இறைப்பணி புரிகின்ற பாக்கியம் பெற்றவரே ஸ்ரீஹவிமுக்தேஸ்வர மாருதி.
2. ஸ்ரீஹவிமுக்தேஸ்வர மாருதி என்னும் அவதார நிலையைப் பெற, ஸ்ரீஆஞ்சநேயர் ஐந்து விதமான யோக நிலை தவங்களை மேற்கொண்டார்.. இந்த ஐந்தும் சேர்ந்ததே பஞ்சமுக ஆஞ்சநேயர் என்னும் வடிவு நிலை.
3. ஸ்ரீஹவிமுக்தேஸ்வர மாருதியே ஸ்ரீராமநவமியன்று பூஜா சக்திகளை நம்முடைய மூதாதையர்களுக்கு அளிப்பதால் அவருடைய, ஐந்துவித யோக நிலைகளையும் ஸ்ரீராமநவமியன்று பூஜிக்க வேண்டும்.
முதல் கால பூஜை :- (காலை 6 மணி)
வாலில் மணிகளில் கட்டிய நிலையில் இருக்கின்ற கோலத்தில் இருக்கின்ற ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
இரண்டாம் கால பூஜை :- (காலை 9 மணி) :- சஞ்சீவி மலையைத் தூக்கி நிற்கின்ற ஸ்ரீஆஞ்சநேயரை வழிபடுதல்.
மூன்றாம் கால பூஜை :- (பகல் 12 மணி) : கைகளைக் கூப்பி வணங்கி நிற்கின்ற கோலத்தில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்குப் பூஜை .
நான்காம் கால பூஜை :- (மாலை 5 மணி) பத்மாசனத்தில் , யோக நிலையில் அமர்ந்திருக்கின்ற ஸ்ரீஆஞ்சநேயருக்குப் பூஜை.
ஐந்தாம் கால பூஜை :- (இரவு 8 மணி) இருகைகளையும், தூக்கி தாள கட்டைகளைத் தாங்கிய நிலையில் ஸ்ரீராம பஜனையில் இருக்கின்ற ஸ்ரீஆஞ்சநேயருக்குப் பூஜை.
மேலே கண்ட ஐந்து விதமான ஸ்ரீஆஞ்சநேய மூர்த்திகளுக்கு உரித்தான ஜபநாமங்களும் உண்டு. ஒவ்வொன்றையும் குடும்ப சகிதமாக சத்சங்க பூஜையாகக் குறைந்தது 1008 முறையேனும் ஜபித்திடுதல் சிறப்புடையதாகும்.
முதல் கால பூஜை :- “ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம்”
இரண்டாம் கால பூஜை :- ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரேஹரே’
‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரேஹரே’

மூன்றாம் கால பூஜை :- ‘சீதாராம் ஜெய்சீதாராம் ஜெயராம் ஜெய சீதாராம்‘
நான்காம் கால பூஜை :- ‘ராமச்சந்திர ஜானகி ஜெய்போலோ ஹனுமான் கீ ஜெய்’
ஐந்தாம் கால பூஜை :- ‘ஜெய்ஜெய் ராம் ஜெயராம் ஜெயராம் ஜெய்ஜெய்ராம்’
மேற்கண்ட முறையில் ஐந்து காலங்களிலும் ராமநாமங்களை ஜெபித்து அவரவர் வசதிக்கேற்ப வெண்ணெய், வடைமாலை, துளசி மாலை சார்த்துதல் என்றவாறாகப் பூஜைகாய் நிறைவேற்றல் வேண்டும்.
ராமநாம லிகித ஜபம் :- இந்நாளில் அனைவரும் ‘ஸ்ரீராம ஜெயம்’ என்ற பீஜாட்சரங்கள் பொதிந்த ராமநாமத்தை குறைந்தது 3000 முறையேனும் எழுதி, ராமநாமம் எழுதப்பட்ட அத்தாள்களை மாலையாக ஸ்ரீஆஞ்சநேயருக்கு அணிவித்திடல் வேண்டும். ஸ்ரீராமநாம லிகித ஜப தாள்களைச் சிதைவுறாது, கிழித்திடாது, சுழல்களாக ஒன்றுக்குள் ஒன்றாகக் கோர்த்து ஸ்ரீஆஞ்சநேயருக்கு மாலையாக அணிவித்திட நம்முடைய முறையான பிரார்த்தனைகள் நிறைவேறும். குறிப்பாக ராமன், ராமலிங்கம், ராமச்சந்திரன், வெங்கடராமன், சீதாராமன் போன்ற ராமநாமங்களைத் தங்களுடைய பெயராக உடையவர்கள் ராமநாம லிகித ஜபத்தை ஈஸ்வர வருட ராமநவமியன்று நிறைவேற்றுவது பெறற்கரிய பாக்கியங்களுள் ஒன்றாகும். அடுத்த ஈஸ்வர வருடம் வரை காத்திருக்காது இப்பொழுதே இவ்வரிய பூஜையை நிறைவேற்றிடுக.
மணிமாலா பூஜ்ய பூஜா
இதுவும் சத்சங்க பூஜையே. அதாவது ஜாதி, மத, இன பேதமில்லாது பலர் ஒன்று சேர்ந்து குறைந்தது 10,000 துளசி மணிகளில், “ஸ்ரீராம்” என்ற நாமத்தை எழுதி, மாலையாக ஸ்ரீஆஞ்சநேயருக்கு அணிவித்திடில் முறையான எவ்வித காரியமும் வெகுவிரைவில் சித்தியாகும். ஒரே துளசி மணியில், ‘ஸ்ரீராம்’ என்றோ அல்லது ‘ஸ்ரீராம’ என்ற ஒரு நாமத்தை இரண்டு மூன்று மணிகளில் பிரித்தோ எழுதி மாலையாகக் கோர்த்திடலாம். மிக மிக விரைவாக எளிதில் எவ்வித காரிய சித்தியையும் தரவல்ல அற்புதமான பூஜை முறைகளுள் இதுவும் ஒன்றாகும். ஸ்ரீஆஞ்சநேயருக்கு இம்மாலையைச் சார்த்தி குறைந்தது ஒரு மண்டலமேனும் அவர் திருமேனியில் வைத்திருந்து பிறகு அதனைப் பிரசாதமாக இல்லத்தில் பூஜை அறையில் வைத்திடுக. மிகவும் முக்கியமான நற்காரியம் எனில் இம்மாலையை அணிந்து சென்றால் எவ்வித நற்காரியமும் எளிதில் நிறைவேறும். ஆனால் சுயநலத்துடனோ குறுகிய நோக்குடனோ, பிறரைப் பாதிக்கும் வகையிலோ அமையும் காரியங்களுக்கு இம்மணிமாலையினைப் பயன்படுத்துதல் கூடாது. இதனால் சாபங்களே விளையும்.

சித்ரா பௌர்ணமி

ஒவ்வொரு மாத பௌர்ணமியும் பலவித மகத்துவங்களைக் கொண்டதாகும். வாசவி தேவி அவதரித்த மாதம் ஆதலாலும், ஸ்ரீநடராஜருக்குரித்தான ஆறு விதமான அபிஷேகம் அமைவதாலும், வசந்த நவராத்திரிக்குரித்தான மாதமாக விளங்குவதாலும் சித்திரை மாதம் பல தெய்வீக அம்சங்களைக் கொண்டு விளங்குகிறது. ஈஸ்வர வருடத்தின் சிறப்பு அம்சங்களைப் பற்றி இவ்விதழில் விளக்கியுள்ளோம். ஈஸ்வர வருடத்திற்குரித்தான சித்திரை பௌர்ணமிக்கும் பக்தி நெறியில் பல புதிய மனோவைராக்கியங்களை ஏற்பதற்கான சிறப்பான சூழ்நிலைகளைத் தருகின்ற குணங்கள் உண்டு. சித்திரை பௌர்ணமியில் ரௌச்யக மன்வாதி என்னும் காலம் தொடங்குகிறது.
ரௌச்யக மனு என்னும் தேவமூர்த்தி ரௌச்யக மனு காலத்தில் ஆட்சிபுரிகின்றார். இவர் பல அற்புத தவநிலைகளாலும், விசேஷ பூஜைகளாலும் உத்தமப் பெருநிலைகளை அடைந்தவர். இவருடைய நித்திய வழிபாடுகளுள் ஒன்றே நட்சத்திர லிங்க வழிபாடாகும். ஒவ்வொரு நாளும் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய லிங்க மூர்த்தியின் திருத்தலம் சென்று இவர் விசேஷமான அபிஷேக ஆராதனைகளுடன் நட்சத்திரலிங்க வழிபாட்டை மேற்கொண்டு வந்தார். இவருடைய நட்சத்திர லிங்க வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமியில் சந்திர பகவானுக்குரித்தான தலங்களான திங்களூர் (திருவையாறு அருகே) மற்றும் திருப்பதி தலங்களில் இவருடைய புதுவருட நட்சத்திர வழிபாடு துவங்கும்.
27 நட்சத்திர தேவியருக்கும் உரித்தானவர் ஸ்ரீசந்திர பகவான் அன்றோ! எனவே ரௌச்யக தேவ மூர்த்தி தன்னுடைய நித்திய நட்சத்திர லிங்க வழிபாட்டில், முதலில் ஸ்ரீபாலச்சந்திர விநாயகரைத் தொழுது விக்ன நிவர்த்தியை வேண்டிடுவார். ஏனெனில் ஸ்ரீபாலச்சந்திர விநாயக மூர்த்தி தம்முடைய சிரசில் தாங்குகின்ற சந்திர பிறையானது ஆதிமூல சந்திர பகவானின் திரிகுண வடிவமாகும். அதாவது தட்சனின் சாபத்திற்குப் பின் தானே சந்திர பகவானுக்கு வளர்பிறை, தேய்பிறை கலைகள் உண்டாயின., அதற்குமுன் 16 கலைகளுடன் நன்றாகப் பூரணமாகப் பிரகாசித்தவரே சந்திரபகவான்.

ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள்
திருவையாறு

ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வர மூர்த்தி
திருவையாறு

கஜமுகாசுரனை ஸ்ரீகணபதி வதம் செய்கையில் சந்திரபகவானுடைய ஒளிப்பிரகாசத்தில் தான் இப்புராண நிகழ்ச்சி நடந்தது. வானில் சந்திரன் இருக்கையில் தனக்கு மரணம் நிகழலாகாது என்ற அரிய வரத்தையும் கஜமுகாசுரன் பெற்றிருந்தான்.. அவன் இத்தகைய வரத்தைப் பெறக் காரணம் அச்சமயத்தில் சந்திரன் வானில் உலா வராத நாளே கிடையாதல்லவா? நித்தியத்துவத்தையும், சாகாவரத்தையும் பெறுதல் கடினமாதலின் கஜமுகாசுரன் பல குறுக்கு வழிகளைக் கையாண்டு, தன்னை மரணம் தீண்டாத வண்ணம் பல அபூர்வமான வரங்களைத் தற்காப்பிற்காகப் பெற்று வைத்துக் கொண்டான். அவன் பெற்ற வரங்களின் நியதிகளுக்குட்பட்டு ஸ்ரீகணபதி, கஜமுகாசுரனைப் போலவே தோற்றமெடுத்துத் தம் நெற்றியில் சந்திர பகவானைச் சூடி, சிறு குழந்தையாய் வடிவெடுத்துக் கொண்டு கஜமுகாசுரனை வெற்றி கொண்டார். வானில் இருக்க வேண்டிய சந்திரன் ஸ்ரீகணபதியின் சிரசில் பிரகாசிக்க, அவரே ஸ்ரீபாலச்சந்திர விநாயக மூர்த்தியானார். இது மட்டுமின்றி ஏனைய பல புராண சம்பவங்களிலும் வெவ்வேறு தெய்வீக அம்சங்களுடன் இப்பாலச்சந்திர கணபதி அவதரித்துள்ளார். கார்த்திகைப் பெண்கள் தங்கள் மூலமாகத்தான் ஸ்ரீமுருகன் பிரபஞ்சத்தில் அவதாரம் கொண்டார் என்று பெரும் கர்வம் கொண்டனர். ஸ்ரீமுகப் பெருமானே அவர்களுடைய கர்வத்தைத் தணிக்க எண்ணி ஒரு திருவிளையாடல் புரிந்தார்..
ஒரு நாள்...
கார்த்திகைப் பெண்கள் பால், அமுதம் , அன்னம், தேன , நீர் ஆகியன புகட்டியும் பாலமுருகனின் அழுகையை நிறுத்த முடியவில்லை. ‘பசியோ, ‘வயிற்றுவலியோ’ என்று கார்த்திகைப் பெண்களே குழப்பம் அடைந்து நின்றபோது, ஸ்ரீபாலச்சந்திர விநாயகர் தோன்றி பால முருகனின் கையில் மோதகத்தை அளித்திட, முருகனின் அழுகை நின்றது. எனவேதான் திங்கட்கிழமையன்று பிள்ளையாருக்கு மோதகம் நைவேத்யம் செய்து வழிபட்டிடில் அகங்காரம், கர்வம், ஆணவம், போலி கௌரவம் ஆகியவை தணிந்து ஆன்மீக நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறாக ரௌச்யக மனு சித்திரை பௌர்ணமி அன்று இன்றியமையாது நிறைவேற்ற வேண்டிய முக்கிய நட்சத்திர வழிபாட்டு முறைகளை விளக்கியுள்ளார். ஈஸ்வர ஆண்டில் சித்திரை பௌர்ணமியில் இதை முறையாக நிறைவேற்றுவதால் நாம் பெறற்கரிய பலன்களைப் பெறலாம். சித்ரா பௌர்ணமியைக் கொண்டாட வேண்டிய முக்கிய திருத்தலங்கள் பல உண்டு. சென்னை திருவொற்றியூர் ஸ்ரீபடம்பக்கநாதர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், அழகர் கோயில், திருவகீந்திபுரம், திருக்கண்ணங்குடி, ஸ்ரீமுஷ்ணம், திருவையாறு போன்ற தலங்கள் குறிப்பிடத்தக்கவை.
சித்ரா பௌர்ணமி பற்றிய விரிவான விளக்கங்களை ‘ஸ்ரீஅகஸ்திய விஜயம் மே 1996 இதழில் அளித்துள்ளோம். ஈஸ்வர ஆண்டு சித்ரா பௌர்ணமியைக் கொண்டாடும் முறை பற்றி ரௌச்யக மனு தேவர் அளித்துள்ள முறைகளையும், பொதுவாக அனைத்து இடங்களிலும் சித்ரா பௌர்ணமியைக் கொண்டாடும் முறை பற்றியும் இங்கு விளக்குகின்றோம்.
சித்திரை தேவியின் மஹிமை :-
திருஅண்ணாமலையில் பௌர்ணமி கிரிவல மகிமை பற்றி கலியுக மக்களுக்கு எடுத்துரைப்பது ‘ஸ்ரீஅகஸ்திய விஜயம்’ இதழின் தலையாய இறைப் பணிகளுள் ஒன்றாகும். பிரதோஷம் மற்றும் ஸ்ரீவிஷ்ணுபதி போன்ற விசேஷமான பண்டிகைகளும் யாங்கணும் வழிபடப்பட வேண்டியதை எடுத்துரைப்பதும் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தின் மற்றோர் அரிய இறைத் தொண்டாகும். சித்திரை தேவியானவள் ஏழுவிதமான புஷ்பங்களைச் சூடி அருள்பாலிக்கின்றாள். நவரத்தினங்கள் போல் ஒவ்வொரு நாளும் அந்தந்த தினத்திற்குரிய வண்ண ஆடைகளை  அணிதல் காரிய சித்தியையும், துரித பலன்களையும் அளிக்கும், இந்த வண்ணங்களுக்குரிய சக்தியை அளிப்பவள் சித்ரா தேவியே..
சப்த ஸ்வரங்களைப் போள் சப்த வர்ணங்களும் உண்டு. இவ்வேழு வண்ணங்களையுடைய ரதங்களில்தான் சூரிய பகவான் தினந்தோறும் பிரபஞ்சத்தை வலம் வருகிறார். சித்ரா தேவி, ஸ்ரீசூரிய நாராயண சுவாமியைப் பிரார்த்தித்து, சூரிய பகவானுடைய ரதம் 27 நட்சத்திரங்களின், நட்சத்திர மண்டலங்களின் வழியே சென்றிட வேண்டும் என்ற வரத்தை வேண்டினாள். இவ்வாறாக ஸ்ரீசூரிய பகவான் தனக்களித்த வர்ண சக்திகளைக் கொண்டு கலியுக ஜீவன்களுக்குச் சித்ரா தேவி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீசித்ரா தேவியைப் ப்ரீதி செய்யும் வகையில் சித்ரான்னம் என்னும் பலவித நிற உணவுகளைச் சித்ரா பௌர்ணமி அன்று அம்பிகைக்குப் படைக்கின்றோம். ஸ்ரீசூரிய நாராயண சுவாமியைப் பிரார்த்தித்துச் சித்ரா தேவி தவமிருந்த  இடங்களில் சித்ரா பௌர்ணமியைக் கொண்டாடுவது சிறப்புடையதாகும். தட்சனின் சாபத்தால் கலைகளை இழந்த சந்திர பகவான், சிவபெருமான் திருவருளால் வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டையும் பெற்றார். தட்சனின் சாபத்திற்குப் பிறகு முதன்முதலாக 16 கலைகளும் நிரம்பப் பெற்றுப் பரிபூரணமாகப் பிரகாசித்தார். அந்த தினமே சித்ரா பௌர்ணமி ஆகும்.
ஆகவே இன்று 27 நட்சத்திரங்களும் பரமானந்தத்துடன் தம் நட்சத்திர வழிபாட்டை ஏற்று அருள்பாலிக்கின்றன. இன்று கடலில் நீராடுதல் எத்தகைய புனிதத்துவத்தையும், விசேஷ பலன்களையும் தரும் என்பதை ஸ்ரீஅகஸ்திய விஜயம் மே 1996 இதழில் கண்டிடுக.
சித்ரான்னங்கள்
1. தேங்காய்
2. புளியோதரை
3. எலுமிச்சை
4. தயிர்
5. பருப்புப் பொடி
6. கருவேப்பிலைப் பொடி
7. மாங்காய் சாதம்
8. வெண்பொங்கல்
9. சர்க்கரைப் பொங்கல்
10. அரிசி உப்புமா
11. அவல் உப்புமா
12. கோதுமை உப்புமா
இவையெல்லாம் மேலும் பல விதமான சித்ரான்னங்கள் உண்டு. இத்தகைய சித்ரான்னங்களை முறையாகச் சமைத்துத் தானம் அளித்திடில் கடல் அமையாத இடங்களில், கடலில் நீராடுவதால் உண்டாகும் பலன்களைப் பெற்றிடலாம்.
நட்சத்திர வழிபாடு – பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்:
ஈஸ்வர வருடத்தில் இந்நட்சித்திரக்காரர்களுக்கு வருமானம் வர வழியிருப்பினும், இடையில் பல பொறாமைக்காரர்களால் தடங்கல்கள் ஏற்படும். இதனை நிவர்த்தி செய்ய மேற்கண்ட ஆறு நட்சத்திரக்காரர்களும் சித்ரா பௌர்ணமியன்று,
1. கடலில் நீராடி சித்ரான்னங்களைப் படைத்துச் சந்திர பகவானுக்கு நைவேத்யம் செய்து தானம் அளித்திட வேண்டும்.
2. அருகில் கடல் இல்லாவிடில் ஸ்ரீசந்திர மௌலீஸ்வர மூலவராக அல்லது சந்நிதி கொண்டுள்ள தலங்களில் சித்ரான்னங்களைப் படைத்துத் தானம் அளித்தல் வேண்டும்.
3. ஸ்ரீசந்திரபகவானுக்குரிய தலங்களில் (திங்களூர், திருப்பதி) நாம் சித்ரான்னங்களைப் படைத்துத் தானமாக அளிக்க வேண்டும்.
4. ஏனைய தலங்களில் – ஸ்ரீசந்திர பகவான், ஸ்ரீகஜலட்சுமி சந்நிதி கொண்டுள்ள தலங்களில் முதலில் தமக்கையான ஸ்ரீகஜலட்சுமிக்குச் சித்ரான்னங்களைப் படைத்து, பிறகு சகோதரரான சந்திர பகவானுக்குப் படைத்து தானமளித்திட, பணக்கஷ்டம் நீங்கும். சித்புருஷரான திருமூலர் யோக நிலையிலிருந்து ஆண்டிற்கு ஒரு பாடலாக பல்லாயிரமாண்டுகளின் தவப்பயனாய் 3000 பாடல்களுடைய திருமந்திரம் என்னும் அற்புதமான பீஜாட்சரங்களை உடைய தெய்வீக சக்தி வாய்ந்த நூலை அளித்துள்ளார். சித்ரா பௌர்ணமியன்று அவருக்கு இறையருளால் கிட்டிய சிவதிருமந்திரப் பாடல்களைப் இங்கு அளித்துள்ளோம். மேற்கண்ட ஆறு நட்சத்திரத்தினர் முறையான பண வரவிற்கான இடையூறுகளைத் தீர்த்திட திருமூலருடைய,
“உடலாய் உயிராய் உலகமதாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தானாகி
அடையார் பெருவழி அண்ணல் நின்றானே”
என்னும் பாடலை ஓதி சித்ரா பௌர்ணமியன்று குருஹோரை நேரத்திலோ அல்லது சுக்கிர ஹோரை நேரத்திலோ ...
1. திருஅண்ணாமலை கிரிவலத்தைத் தொடங்கிடுதல்
2. சுக்கிரபகவானுக்கு வெண்பட்டு ஆடை சார்த்தி, குறைந்தது 21 முறை அடிப்பிரதட்சிணம் செய்தல்
3. சந்திர ஹோரையில் பசுவிற்கு நீராட்டி, தாமே அரைத்த மஞ்சள், குங்குமம் இட்டு உணவளித்து 3 முறை நமஸ்கரித்தல்
4. சித்திரை நட்சத்திரக்காரர்கள் கண்டிப்பாகக் கடலில் நீராடுதல் ஆகியவற்றால் விசேஷ பலன்களைப் பெற்றிடலாம்.
அனுஷம், கேட்டை, மூலம் :  இடமாற்றமும், இல்லத்தில் குழப்பங்களும் பிறரால் தேவையற்ற பிரச்னைகளுக்குப் பதில் சொல்லும் நிலையும் ஈசுவர ஆண்டில் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். திருஅண்ணாமலை திருக்கோயிலை முதலில் வலம் வந்து கிழக்குக் கோபுரத்திலிருந்து கிரிவலத்தைத் தொடங்க வேண்டும். கிரிவலம் வந்து சூரிய, எம, சந்திரலிங்கப் பகுதிகளில் (தற்போது காணப்படவில்லையாதலின் மானசீகமாகத் தரிசித்து) தேங்காய் எண்ணெய் + தாமரைத் தண்டு தீபம் ஏற்றி, வடக்குக் கோபுரத்தின் மேலுள்ள சர்வேஸ்வர தரிசனத்தைப் பெற்று, ஸ்ரீபூதநாராயணண் சந்நிதியில் கிரிவலத்தை நிறைவு செய்தல் வேண்டும். சித்திரை நட்சத்திர பூஜை, சித்ரா தீர்த்தவாரி நடக்கின்ற தலங்களிலும், சித்ரா பௌர்ணமி விசேஷமாகக் கொண்டாடப்படும் இறைத்தலங்களிலும் சித்ரான்னங்களை ஏழை சலவைத் தொழிலாளர்களுக்கு அன்னதானம் செய்வதாலும் ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவிகள் செய்வதாலும் நன்முறையான உத்தியோக மாற்றங்கள் கிட்டும். இந்த மூன்று நட்சத்திரக்காரர்களும் திருமூலரின் கீழ்க்கண்ட பாடலை ஓதுதல் நலம்.
“உற்று வனைவான் அவனே உலகினைப்
 பெற்று வனைவான் அவனே பிறவியைச்
 சுற்றிய சாலுங்குடமுஞ் சிறுதூதை
 மற்றும் அவனே வளைய வல்லானே”
பூசம், ஆயில்யம், மகம் :- இவர்களுக்கு ஈஸ்வர வருடத்தில் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தங்கள் ஏற்படுமாதலின், மூன்று நட்சத்திரக்காரகளும் மேற்குறித்த மூன்று நட்சத்திர நாட்களிலும் மற்றும் சித்ரா பௌர்ணமி அன்றும் பின்வரும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.
பூசம் :- ஏனைய தலங்களில் சித்ரான்னங்களை முருகனுக்குப் படைத்து ஏழைகளுக்குத் தானமளித்து கம்பு, தினைமாவு, சர்க்கரை மாவினைக் கோயிலில் எறும்புகளுக்கு இட்டு தன விரயத்தினைத் தடுத்திடலாம். திருஅண்ணாமலையில் கம்பத்திளையனார்க்குப் புனுகு சார்த்தி கிரிவலம் வந்து, ஸ்ரீபூதநாராயணன் சந்நிதியில் கம்பு, தினை, சர்க்கரை மாவினைக் கோயிலில் எறும்புகளுக்கு இட்டு வரவேண்டும்.
ஆயில்யம் : ஏனைய இடங்களில் ஸ்ரீபுதபகவானுக்குப் பச்சை நிற வஸ்திரங்கள் சார்த்தி பச்சைப் பயறு சுண்டல்/ சித்ரான்னங்களைச் சிறுவர்களுக்கும், சிறுமியர்களுக்கும் தானமாக அளிக்க வேண்டும். திருஅண்ணாமலையார் திருக்கோயிலில் ஸ்ரீவேணுகோபால சுவாமியைத் தரிசித்து கிரிவலம் வந்து புதனுக்குரிய தேவதை விஷ்ணு ஆதலின், பூதநாராயணர் கோயிலில் கிரிவலத்தை நிறைவு செய்து, சித்ரான்னங்கள்/பச்சைப் பயிறு சுண்டல் தானம் செய்யவும். பணவிரயத்தைத் தடுக்க தீர்வு கிடைக்கும்.
மகம் :
1. இன்று கடலில் நீராடுதல் சிறப்பு உடையது.
2. ஏனைய இடங்களில், ஸ்ரீஎமதர்ம ராஜர் எழுந்தருளியுள்ள தலங்களில் சித்ரான்னங்கள்/எள் கலந்த உணவினைப் படைத்து வணங்குதல் வேண்டும்.
3. திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து குறைந்தது 21 நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி, தெற்கு நோக்கி அமர்ந்து கீழ்க்கண்ட மந்திரத்தை 12 முறை ஜபிக்க வேண்டும்.
“ஓம்
ஸ்வர்காபவர் சுதாதாரம் ஸ்ருஷ்டி
ஸ்தித்யந்த காரிணம்:
நமாமி ஸிரஸா தேவம் கிம்நோ
ம்ருத்யு: கரிஷ்யதி:: “

4. கிரிவலத்தில் சித்ரான்னம், புளியோதரை, எள் கலந்த உணவுகளை அன்னதானம் அளித்தால் அநாவசியமான செலவுகளைத் தவிர்த்துக் கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் பெறலாம்.
இந்த மூன்று நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமூலரின் கீழ்க்கண்ட பாடலை ஓதுதல் நலம்
“இன்பப் பிறவிக் கியல்லது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில் பலஎன்னினும்
அன்பிற் கலவி செய்தாதிப் பிரான்வைத்த
முன்பிப் பிறவி முடிவது தானே.”
பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி :
இந்நட்சத்திரக்காரகளுக்கு உரிய திருமந்திரப் பாடல்
“விடை யுடையான் விகிர்தன் மிகுபூதப்
படை யுடையான் பரிசே உலகாக்குங்
கொடை யுடையான் குணம் எண்குண மாகுஞ்
சடை யுடையான் சிந்தை சார்ந்து நின்றானே”
ஈசுவர வருடத்தில் இந்நட்சத்திரக்காரர்களுக்குப் பதவி மாற்றம், உயர்க்கல்வி வாய்ப்பு, மனைவி கணவன் மனமாற்றம், முதியோர்களின் உயில்/சொத்து பரிவர்த்தனை, கணவனை இழந்தோருக்கு மனசாந்தி, பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம், புதிய காதல் வாழ்வு போன்றவை ஏற்படக் கூடும்.
இந்நட்சத்திரத்தினர்
1. இன்று கடலில் நீராடுதலும், கடற்கரைக் கோயில்களில் சித்ரான்னம் வழங்கி வழிபடுதலும் விசேஷமானதாகும்.
2. ஏனைய இடங்களில் உள்ளோர் காவிரி, வைகை, தாமிரபரணி, போன்ற புனித நதி தீரங்களில் நீராடி சித்ரான்னங்களைத் தானம் அளித்தல் வேண்டும்.
3. திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து சித்ரான்னங்கள்/ஆறு விதமான காய்கறிகள் கலந்த உணவினைக் கோபுரத்து இளையனார் கோயிலில் தானமளித்தல் மேற்கண்ட விளைவுகள் நல்ல முறையில் நடைபெறும்.
உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி – இம்மூன்று நட்சத்திரக்காரர்களுக்கு உரிய திருமந்திரப் பாடல்
“நந்தி எழுத்து நடுவுற ஓங்கிய
செந்தீக் கலந்துட் சிவனென நிற்கும்
முந்திக் கலந்தங் குலகம் வலம் வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே.”
கணவன் – மனைவி மாறுபட்ட சூழ்நிலையைச் சந்திக்க வேண்டிய நிலைமை, தேக ஆரோக்கியத்தில் மாறுதல்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டாமல் போதல், கோர்ட் மற்றும் அரசாங்கத் துறைகளில் இடர்ப்பாடுகள் ஏற்படுதல் போன்றவற்றை ஈசுவர வருடத்தில் இந்நட்சத்திரக்காரர்கள் சந்திக்க வேண்டி வரும். இவர்கள் சித்ரா பௌர்ணமியன்று கடல்/புனித நதிகள், தீர்த்தங்களில் நீராடி, சித்ரான்னங்கள் நைவேத்யம், தானம் அளித்து இரட்டைப் பிள்ளையார் கோயிலில் கணவன் மனைவி இருவரும் பிரதட்சிணம் செய்து வழிபடுதல் வேண்டும். திருஅண்ணாமலையில் இந்த நட்சத்திரத்தினர். ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலின் கிழக்குக் கோபுரம் அருகே உள்ள இரட்டைப் பிள்ளையாரைத் தரிசித்து, சித்ரான்னங்களைக் கிரிவலம் வருகையில் தானம் அளித்து ஸ்ரீபூத நாராயணர் சந்நிதியில் கிரிவலத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
பரணி, கிருத்திகை, ரோகிணி :-
இந்த நட்சத்திரக்காரர்களுக்குரிய திருமந்திரப் பாடல்,
“காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து  கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
காதல் வழிசெய்து காக்கவு மாமே”
முறையான பூஜைகளாலும் தான தர்மங்களாலும் ஏற்படும் பக்தியானது, அரசாங்க உதவிகளின் பரிபூர்ணமான பலன்களைப் பெற உதவும். மேலும் நற்காரியங்களில் கணவனின் ஆதரவும், மனைவியின் ஒத்துழைப்பும் பெருகும். தினசரி வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் குழந்தைகளைப் பற்றிய கவலை குறையும். முதியோர்களின் பிடிவாத குணம் தளர்ந்து ஒத்துழைப்பர். நல்லோர்களுடைய ஆதரவும், நம்பிக்கையும் பெறவல்ல கீழ்க்கண்ட  பூஜை முறைகளை இந்நட்சத்திரக்காரர்கள் கடைபிடிக்க வேண்டும். அற்புத சித்புருஷரான திருமூலர் 3000 ஆண்டுகளுக்குக் கடுமையான யோக நிலையில் அமர்ந்து வருடத்திற்கு ஒரு திருமந்திரப் பாடலாக நமக்கு திருமந்திரத்தை அளித்துள்ளார். திருமந்திரத்தை ஓதுதல் என்பது தமிழ்நாட்டில் மறைந்து விட்டது என்றே சொல்லுதல் வேண்டும். வேத மந்திரங்களின் பீஜாட்சர சக்திகளும், நிறைந்த தெய்வீக சக்தியும், திருமூலருடைய வேத மந்திர, யந்திர, தந்திர சக்திகளும் நிறைந்தவையே ஒவ்வொரு திருமந்திரப் பாடலுமாகும். அந்தந்த நட்சத்திரத்திற்குரித்தான திருமந்திரப் பாடலை அடிக்கடி ஓதி வந்திடில் இதுவே பெரும் ரட்சையாக அமைந்து நம்மை என்றும் எவ்விடத்திலும் காத்து நிற்கும்.
மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் :
1. இந்நட்சத்திரத்தினர் சித்ரா பௌர்ணமியன்று ஆறுகள், புனிதநதிகள் கடலுடன் சங்கமமாகின்ற இடங்களில் நீராடுதல் வேண்டும்.
2. சித்ரான்னங்களை ஆறுமுகனுக்குப் படைத்துத் தானமளித்தல் நலம் தரும்.
3. ஏனைய இடங்களில் புனித தீர்த்தங்கள், திருக்கோயில் குளங்களில்/ தீர்த்தங்களில் நீராடுதல் நன்று.
4. திருஅண்ணாமலையில் கிழக்குக் கோபுரத்தில் இருந்தவாறே பசு நெய், தாமரைத் தண்டு திரியினால் அகல் விளக்கு தீபமேற்றி அதை உயர்த்திப் பிடித்து, தீப ஒளியோடு மலையைத் தரிசித்தவாறே, மலையைக் கிரிவலம் வர வேண்டும். கிரிவலத்தில் சித்ரான்னங்கள், மணமுள்ள புஷ்பங்கள் தானமளித்து பூதநாராயணன் கோயிலில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
இந்த நட்சத்திரக்காரர்களுக்கான திருமந்திரப் பாடல்
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
இவ்வாறாக 27 நட்சத்திரக்காரர்களும் சித்ரா பௌர்ணமியன்று முறையுடன் இறைவழிபாடுகளை நிகழ்த்தி நலம் பெற வேண்டுகிறோம்.

அட்டைப்பட விளக்கம்

ஸ்ரீஅகஸ்திய மகாபிரவு பலகோடி விதமான சிவலிங்கங்களைப் பூஜிக்கும் பெரும் பேற்றைப் பெற்றவர். ஆனால் அனைத்து சிவலிங்கங்களுக்கும் ஆதிமூல கர்த்தா திருஅருணாசல மலையாகும். இம்மலையிலுள்ளவற்றை வெறும் கற்கள் என்றோ, பாறைகள் என்றோ எண்ணிடாதீர்கள். ஒவ்வொரு கல்துகளும் சுயம்புலிங்க மூர்த்தியாகும்.. ஆவுடைகளும், பாணலிங்கங்களும், சுவர்ண லிங்கங்களும் இங்கு தான் உற்பவிக்கின்றன. கேட்டதைத் தரும் சித்ரபூர்வ லிங்கமும், கேளாததைத் தரும் மகாதேவலிங்கமும் இங்குதான் காணப்படுகின்றன. பல ஆண்டுகள் திருஅண்ணாமலையைக் குருவருளுடன் முறையாகக் கிரிவலம் வந்திடில் இந்த லிங்கங்கள் தாமே தரிசனம் தந்து தாமே பேசும்.
ஸ்ரீஅகஸ்திய மகரிஷி ஒவ்வொரு லிங்கத்தையும் தரிசனம் செய்து பூஜிப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் அருணாசலத்தைக் கிரிவலம் வந்தார். இராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் ஸ்ரீராமர், ஸ்ரீஅகஸ்தியரின் ஆசிரமத்திற்குச் சென்று, அவரைத் தரிசித்தபோது, ஸ்ரீஅகஸ்தியர் தாம் பல ஆண்டுகள் பூஜித்து வந்த உத்தம சிவலிங்க மூர்த்திகளை ஸ்ரீராமருக்கு அளித்தார்., மகரிஷிகளுக்குக் கூட க்ருத, த்ரேதா, துவாபர யுகங்களில் திருஅண்ணாமலையில் ஆஸ்ரமம் அமைப்பது எளிதான காரியமன்று,. அத்ரபூர்வம், மகாதேவம், கந்தர்வதாளம், ஆக்கோட்ட லிங்கம், கேதகீவன லிங்கம் போன்ற அபூர்வமான லிங்கங்களைப் பூஜிக்கும் பாக்கியம் பெற்றவர்களே திருஅண்ணாமலையில் ஆஸ்ரமத்தை அமைக்க முடியும்.
இத்தகுதியைப் பெறுவதற்காகவே ஸ்ரீதுர்வாச மகரிஷி திருஅண்ணாமலையில் அஷ்டதிக்குகளிலும் கடுந்தவத்தை மேற்கொண்டார். கலியுகத்தில் தற்போது எவ்வாறு மக்கள் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்றார்களோ அதே போல் க்ருத, த்ரேதா, துவாபர யுகங்களில் மகரிஷிகளும், யோகியரும், ஏனையோரும் மக்களோடு மக்களாகச் சேர்ந்து கிரிவலம் வந்தனர். பல கோடி யுகங்களாகத் தொடர்ந்து வருகின்ற கிரிவலம் இது. எத்தனையோ கோடி மகான்கள் நடந்த புனிதப் பாதையில், நாம் நடப்பதற்கு என்னே பாக்கியம் செய்திருக்க வேண்டும்! அவர்களுடைய தரிசனத்தைப் பெறுவதற்குத்தான் நமக்குத் தகுதியோ, பாக்கியமோ இல்லாவிடினும் அவர்களுடைய புனித பாதங்கள் பட்ட திருமண்ணைக் காணும் அரிய பாக்கியத்தையாவது பெறலாமன்றோ! ஸ்ரீதுர்வாசர், ஸ்ரீகௌதமர் போன்ற மகரிஷிகள் திருக்குடில்கள் கொண்டிருந்த தலம் இது! மேற்கண்ட லிங்கங்கள் மீது பௌர்ணமித் திதியில் மட்டும் தழுவி வருகின்ற காற்று கிரிவலம் வருகின்றோர் மீது பட்டால் கிடைக்கின்ற புண்ணிய சக்திகளும், தெய்வீக நிலைகளும் ஏராளம், ஏராளம்! உத்தம தெய்வீக நிலைக்கு எதுதான் எல்லை! திருஅண்ணாமலையில் மேற்சொன்ன லிங்கங்களைப் பூஜிக்கும் பேறு பெற்ற ஸ்ரீதூர்வாச மகரிஷிக்குக் கிட்டிய தெய்வீக தரிசனமே இம்மாத அட்டைப் படத்தை அலங்கரிக்கின்றது.

கர்ம வினைகள் தீர

கர்ம வினைகளைத் தீர்க்கும் எளிய வழிமுறைகள் ‘ஸ்ரீஅகஸ்திய விஜயம்’ மற்றும் எம்முடைய திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் மூலம் வெளியிடப்படும் அரிய ஆன்மீகப் புத்தகங்கள் மூலமாக எளிய முறையில் கர்மவினை தீர்க்கும் வழிகளை அளித்து வருகின்றோம். இத்தகைய அரிய எளிய முறைகளுள் ஒன்றே ராக த்வீப வழிமுறையாகும். அதாவது ஈஸ்வர வருடத்திற்குரிய சில முக்கியமான கர்நாடக சங்கீத ராகங்கள் சித்புருஷர்களால் அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராகமும் விதவிதமான தெய்வீக சக்திகளைக் கொண்டவை. ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீஆஞ்சனேயர் ஆகியோரின் வீணை கானத்தால் மலைகளே உருகுவதையும், அமிர்த வர்ஷினி ராகத்தால் மழை பொழிவதையும், குழந்தைகளுக்கு உறக்கத்தைத் தருகின்ற நீலாம்பரி ராக பாடல்களையும், மற்றும் சில ராகங்களால் தாவரங்கள் நன்கு வளருவதையும், நோய்கள் குணமாவதையும் நாம் அறிகின்றோமல்லவா! இவ்வகையில் தான் ஈஸ்வர வருடத்திற்குரித்தான ஐந்து வகையான ராகங்களை இசைப்பதன் மூலம் பல வகையான கர்மங்களை எளிதில் களைந்துவிடலாம். இது பற்றிய விளக்கங்களைச் சென்ற ஸ்ரீஅகஸ்திய விஜயம் மார்ச் 1996, ஏப்ரல் 1996, மே 1996 இதழ்களில் காணலாம். யுவ தாது வருடங்களில் ராக பாவ கீர்த்தனம் பித்ருக்களுக்குப் ப்ரீதி அளிக்கக்கூடியதாக இருந்தது. ஈஸ்வர வருடத்தில் குறித்த சில ராகங்கள் :-
1. குறிப்பிட்ட சில நோய்களுக்கு நிவாரணத்தையும்,
2. ஆழ்ந்த இறை நம்பிக்கையையும்,
3. எதிர்பாராத விபத்துக்களிலிருந்து காக்கும் ரட்சையாகவும்,
4. பெற்றோர்களை, பெரியோர்களை மதியாததினால் விளையும் பல சாபங்களையும், தோஷங்களையும் நீக்குவதாகவும்,
5. வீடு, நில, புலன்கள் போன்றவற்றை முறையான வழிகளில் பெற்றுத் தருவதாகவும் அமைகின்றன.
ராகங்களின் சக்தி
ராகத்திற்கு இத்தகைய சக்திகள் எவ்வாறு உண்டாகின்றன? ராகங்களுக்கும் கிரஹ சஞ்சாரங்களுக்கும் தொடர்பு உண்டோ? ஈஸ்வர வருடத்திய புதன் மற்றும் செவ்வாய் கிரஹங்களின் சஞ்சாரங்களை நோக்குமிடத்து இசைக் கலை விருத்தியடைவதற்கு நிறைய வாய்ப்புகளுண்டு என்பதை அறியலாம். இசையை ஆக்குகின்ற சப்த ஸ்வரங்களும் பீஜாட்சரங்களின் தன்மைகளைக் கொண்டவையே. உதாரணமாக, அமிர்தவர்ஷினி ராகத்தின் ஆரோகன, அவரோகனங்கள் சுக்கிரன் மற்றும் புத கிரகங்களை அடையும் வல்லமை உடையவை. மேலும் இவை இந்திர லோகத்திலிருந்து ஸ்ரீநாரதராலும், வருண லோகத்திலிருந்து ஸ்ரீதும்புரு மகரிஷி மூலமும் பெறப்பட்டவை யாதலாலும், பக்தியோடு இசைக்கப் பெறின் மேக மூட்டத்தையும், மழையையும் வர்ஷிக்கும் தெய்வீக ஆற்றலைக் கொண்டவையாம். இவ்வாறாக ராகங்களின் தெய்வீக சக்தியை விளக்குவோமாயின் அதுவே பல காண்டங்களாக மலர்ந்திடும்.
ஈஸ்வர வருடத்தில் இசைக்கப்பட வேண்டிய முக்கிய ராகங்களாவன
1. பைரவி
2. யமுனா கல்யாணி
3. சாரங்கா
4. உசைனி
5. கேதாரம்
பைரவி :- பைரவி ராகத்திற்கு சுவாசக் கோளாறுகளை நீக்கும் வல்லமையுண்டு. ஒவ்வொரு ஜீவனுடைய ஆயுளும், குறிப்பாக மனிதனுடைய ஆயுளும் மூச்சுக்களின் எண்ணிக்கையில் நிர்ணயிக்கப்படுகின்றன. முறையான பிராணாயாம, யோக, சயன பயிற்சிகளைக் கடை பிடித்திடில் ஒவ்வொரு மூச்சின் அங்குலாஸ்திதியை, அதாவது மூச்சின் நீளத்தை விரிப்பதன் மூலம் ஆயுளை எளிதில் நீடிக்கச் செய்யலாம்.
எமலோகத்திலுள்ள சுவாச தேவதைகள் இறப்பின் நியதியை சுவாசம் மூலமாக நிர்ணயிக்கின்றன. அதாவது ஒருவருடைய ஆயுள், எண்பது, தொண்ணூறு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்படுவது கிடையாது. மாறாக இத்துணை சுவாசங்களை அவருடைய இருதயம் ஏற்க வேண்டும் என்றே நிர்ணயிக்கப்படுகின்றது. இறப்பின் ரகஸ்யங்கள் பல உண்டு. இதைச் சற்குருவின் அருளால் அறிந்து தெளிந்திடில் மரண பயத்தை அறவே அகற்றிடலாம். அதாவது மரணத்தை வென்றிடலாம். இறப்பை வெல்லுதல் என்றால் சாகாமல் இருத்தல் என்பது பொருளல்ல. தனக்குரிய மரணத்தை அறிந்து எவ்வித சலனமுமின்றி அதை அரவணைத்தல் என்பதே பொருள். மரணம் பற்றிய பல அபூர்வமான விளக்கங்களை எங்கள் ஆஸ்ரம வெளியீடான ‘இறப்பின் ரகஸ்யம்‘ என்ற புத்தகத்தில் கண்டிடுக. சுவாச நிலை மட்டுமின்றி காலவரையறை மூலமாகவும் இறப்பை நிர்ணயிப்பதுண்டு. இதனைக் காலபைரவ தேவதைகள் இயற்றுகின்றனர். சப்த ஸ்வர த்வனிகளுக்கும், சுவாசத்திற்கும் தொடர்புண்டு. ஆரோகன, அவரோகண இலக்கணங்கள் இதன்பால் பட்டவையே, பைரவி ராகத்தில் பாடுகையில், சூர்ய, சந்திர, சுழுமுனை வாசிகலைகள் மாறுவதுடன் அவை ப்ருத்வி, வாயு பூதங்களின் வாசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவை இருதயத்திற்கு, குறிப்பாகச் சுவாச நாளங்களுக்கு வலிமை ஊட்டுபவை. எனவேதான் பைரவி ராகம் சுவாசக் கோளாறுகளுக்கு நிவாரணம் தரும் வல்லமை பெறுகின்றது. இவ்வருட மேகாதிபதியாக சூரியன் விளங்குவதால் மேகம், காற்று, இடி, மின்னல், வாயு பரிமாணங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்படுமாதலின் சுவாச நோய்கள் பெருகும் என்பதை அறிதல் வேண்டும்.
யமுனா கல்யாணி
ஈஸ்வர வருடத்தின் குருகிரஹ சஞ்சாரங்கள் தெய்வ நம்பிக்கையையும், பக்தியையும் பெருக்கும் என்று அறிகின்றோம். ஸ்ரீகிருஷ்ணனின் மேல் கோபியர்களைவிட சிறந்த பக்தி ப்ரேமை கொண்டவளே யமுனா தேவி, சென்னை மஹாபலிபுரம் சாலையில் திருவிடந்தை என்னும் இடத்தில் நித்ய கல்யாண வராஹ மூர்த்தியாகப் பெருமாள் சேவை சாதிக்கின்றார். தினமும் கல்யாண கோலத்தில் பெருமாள் காட்சி தருகின்ற அபூர்வமான தலமிது., திருமண தோஷங்களை நிவர்த்தி செய்யும் அற்புதமான க்ஷேத்திரம் இது..
பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை நைவேத்யம் :
யாவரும் அறிந்த புராணக் கதை ஒன்றுண்டு. சர்வேஸ்வரனுடைய ஜீவ பரிபாலனத்தைச் சோதிக்கும் பொருட்டு... பார்வதி தேவி ஒரு பாத்திரத்தில் சில எறும்புகளை விட்டு மூடி வைத்து விட்டாள். மறுநாள் ஈசனிடம் அவ்வெறும்புகளுக்கு உணவளித்தாரா என்று ஐயமுடன் கேட்டு, அதனைத் திறந்து பார்க்க எறும்புகளின் வயிறு நிரம்பி அருகில் சிறு சிறு அன்னத் துகள்களும் கிடந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தாள். இதற்குப்பின் நிகழ்ந்ததைச் சித்புருஷர்கள் அருளிய இருடிகள் புராணத் தொகுப்பில் காணலாம். சர்வேஸ்வரனுடைய நித்ய ஜீவ பரிபாலனத்திலேயே சந்தேகம் கொண்டது நம்பிக்கையின்மையைத் தானே குறிக்கிறது? எனவே இது அம்பிகைக்கு ஒரு சாபத்தை உண்டாக்கி, அம்பிகையின் குடும்பத்தையே பாதித்தது. எவ்வாறு?
ஈசுவரனையே சோதனை செய்யத் துணிந்த தன்னுடைய நிலைக்குப் பிராயச்சித்தம் காண அம்பிகை மேரு மலையை அடைந்தாள். அங்கே தன் புதல்வனாகிய விநாயகப் பெருமான் மெலிந்த வயிறுடன் இருப்பதைக் கண்டு அச்சமடைந்தாள். உடனே விநாயகரும், “அன்னையே! இதில் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. நீ இரண்டு பிழைகளைச் செய்து ஈசனுடைய சாபத்திற்கு ஆளாகி உள்ளாய். ஒன்று ஈசுவர பரிபாலனத்தையே சந்தேகித்தது. இரண்டாவது எறும்புகளுக்கு உணவிடாது அடைத்து வைத்துப் பாவத்தைச் சேர்த்துக் கொண்டது. தாயின் பழி தனயனைத்தானே சாரும். எனவே அந்த எறும்புகளுடைய பசியை நான் என் தேகத்தில் ஏற்றுக் கொண்டு விட்டேன். நீ எனக்கிட்ட உணவு எறும்புகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டது., இப்போது என் பசியை நீ எவ்வாறு தீர்க்கப் போகிறாய்?” என்று வினவினார்.
“மேரு மலையில் சென்று தவமிருப்பதைவிட சர்வேசுவரனையே சரணடைவது மேல்”, என்று முடிவு செய்த பார்வதி தேவி, விநாயகருடன் திருக்கயிலாயம் சென்று சிவபெருமானைச் சரணடைந்தாள். அடைக்கலம் அடைந்தவருக்கு அருள்வழி காட்டுவது தானே ஆண்டவனின் கருணை!!
“தேவீ! எம்முடைய இத்திருவிளையாடல் மூலம் நீயும் சகல ஜீவன்களும் பலவிதமான பாடங்களைப் பெற வேண்டும். நம்பிக்கைக்கு ஈடான, வழிபாடோ, பூஜையோ எதுவும் கிடையாது! நீ பிள்ளையாருக்கு அளித்த உணவு அந்த எறும்புகளுக்குப் போய் சேர்ந்தமையால் அன்னபூரணியே உணவளித்த பேறு பெற்ற அவ்வெறும்புகள் ‘பிள்ளையார் எறும்புகள்‘ என அழைக்கப்படும்!”“என்று அருளினார். அவ்வெறும்புகளிடம் மீந்து கிடந்த அன்னத் துகள்களை எடுத்துப் பிள்ளையாரின் கரங்களில் அன்புடன் கொடுத்து “நீ உண்பாயாக!” என்றும் ஈசன் அருளினார்.
அன்னையின் திருக்கரங்கள் தீண்டிய அன்னமானது அம்மையப்பரின் கரம் பட்டதால்,, பிள்ளையாரின் பெரும்பசியைத் தீர்த்தது. மேலும் பெருவயிறு உடையவனுமாகி , பெரும் பசியில்லாத பசிப்பிணி தீர்க்கும் பெருங்கடவுளாய் பிள்ளையார் விளங்கத் தொடங்கினார். அந்த அன்னத் துகள்களே கொழுக்கட்டையும், மோதகமும் ஆகும். இது நிகழ்ந்த தினமே சதுர்த்தி திதி. பிள்ளையார் பெரும் பசியோடு இருந்து அம்மையப்பரின் திருக்கரங்களினால் உணவு பெற்றமையால் இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆயிற்று. பிள்ளையாரின் சங்கடத்தையும் தீர்த்தமையால் சங்கரஹட சதுர்த்தியாயிற்று. சங்கரனின் கரத்திலிருந்து உணவு பெற்றமையால் சங்கர ஹர சதுர்த்தி எனவும் சித்புருஷர்கள் அழைக்கின்றனர்.

திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர்

சென்னை திருமுல்லைவாயில் – ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் ஆலயம்
சென்னையில் அம்பத்தூர் – ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் உள்ள ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் லிங்கத் திருமேனியின் மேல் வருடத்திற்கு ஒருமுறை, சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று இடப்படும் சந்தனக் காப்பு வருடம் முழுவதும் லிங்கத் திருமேனியை அலங்கரித்திருக்கும். மறு வருடம் சித்திரை மாத சதயத்தில் இக்காப்பு எடுக்கப்பட்டுப் பிரசாதமாக வழங்கப்படும். மீண்டும் புதிதாகச் சந்தனக் காப்பு இடப்படுகின்றது. ஒரு வருடம் முழுவது சுயம்புலிங்கத்தின் திருமேனியில் தோயும் பாக்கியம் பெற்ற சந்தனமெனில் என்னே அதன் மகிமை! ஸ்ரீமாசிலாமணீஸ்வர லிங்கமூர்த்தி மகிமை பற்றி “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” மே 1996 இதழில் விரிவாக அளித்து இருக்கிறோம்.
2.5.1997 அன்று ஒப்புயர்வற்ற ஸ்ரீமாசிலாமணீஸ்வரருக்குப் புது சந்தனக்காப்பு இடும் வைபவம் நடைபெறும். இதில் சாதி, சமய வேறுபாடின்றி யாவரும் பங்கு கொண்டு, தாமே பக்திப் பூர்வமாக அரைத்த சந்தனத்தைச் சுவாமிக்கு அளித்திடலாம். சென்ற ஆண்டு ‘ஸ்ரீஅகஸ்திய விஜயம்‘  இதழ் மூலமாக அறிந்து கொண்டு பலரும் மிகவும் சிரத்தையுடன் குடும்ப சகிதமாய் சந்தனத்தை அரைத்து எங்கள் அலுவலகத்தில் சேர்ப்பித்தனர். இதனுடன் திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆசிரமத்தின் அடியார்கள் அரைத்துத் தந்த சந்தனமும் சேர்க்கப்பட்டு, சித்தர்கள் அருளிய சுயம்பு சந்தனக் களிம்பு சாற்று முறையில் பூஜைகளும், ஹோமமும் நிகழ்த்தப் பெற்று ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் திருக்கோயிலில் அளிக்கப்பட்டது.
மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெறற்கரிய இத்திருப்பணியில் தபால் மூலமாகவும், Courier Mail மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் சந்தனத்தை அனுப்பி நன்முறையில் பலரும் இத்திருப்பணியில் பங்கு பெற்றனர். இவ்வாண்டும் ‘ஸ்ரீஅகஸ்திய விஜயம்‘ வாசகர்களும், அவர்கள் மூலமாக உற்றார், சுற்றம், மற்றும் ஏனையோரும் 2.5.1997 ஸ்ரீமாசிலாமணீஸ்வரரின் சந்தனக் காப்பிற்காகச் சந்தனத்தை அரைத்துத் தந்து இறையருள் பெற வேண்டுகின்றோம்.
சுவாமியின் திருமேனியில் ஒரு வருட காலம் பரிணமிக்கவிருக்கின்ற சந்தனத்தைப் பக்தியுடன் அரைப்பதற்கான எளிய விதிமுறைகளாவன:
1. கடையில் சந்தனப் பவுடரை வாங்கிக் கரைத்தல் கூடாது.
2. குடும்பத்தினர், உறவினர் , நண்பர்கள், சாதி, சமய, இன, குலபேதம் இன்றி, ஆண் , பெண், குழந்தைகள் அனைவரையும் ஈடுபடுத்திச் சந்தனத்தை அரைப்பதே உத்தமமானது.
3. சந்தனம் அரைக்கையில் கை, கால்களைக் கழுவிக் கொண்டு குடும்ப நெறிப்படி நெற்றிக்குத் திருமண், விபூதி, குங்குமமிட்டு இறைநாமம் ஜபித்தவாறே சந்தனத்தை அரைத்திடல் வேண்டும்.
4. இயன்றளவில் குறைந்த அளவு நீர் சேர்த்துக் கெட்டியாக அரைப்பது நல்லது.
5. கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிகளின் புனித நீர் சேர்த்து அரைத்தல் சந்தனத்தின் புனிதத் தன்மையை மேம்படுத்தும்.
6. சந்தனம் அரைக்கையில் கூறவேண்டிய இறைத்துதிகள் :
“சந்தன கந்த தேவா அனுக்ரஹ யக்ஷய யக்ஷணி
தேவஸ்ய ஸேவார்த்தம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி” “
(அல்லது)
“சிவாய பவாய பவாத்மஜாய சந்தான விருக்ஷாத்மா நாத்புத கந்தாய
சித்ரூப சிதானந்த சின்மயாய சந்தோஷ ரூபாய
புதபுத்ர ஸேவார்த்தம் நமோ நம:“
(அல்லது)
“அத்ரி, பிருகு, குத்சர், வசிஷ்டர், காஸ்யபர், ஆங்கீரசர், கௌதமர் மகரிஷிகளுக்கு நமஸ்காரம்” “(அல்லது) “ஏழு முனி ஏற்றருள வேண்டும் எம் குருவே போற்றி ”
1.5.1997 இரவு ஏழு மணிக்குள் சென்னையில் மேற்கூறிய முகவரிகளில், பக்தர்கள், அரைத்த சந்தனத்தை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பிற இடங்களில் 30.4.1997 இரவு ஏழு மணிக்குள் அளித்திட வேண்டும்.

புத்தாண்டு செய்தி

ஈஸ்வர ஆண்டு புத்தாண்டுச் செய்தி
திருஅண்ணாமலையிலுள்ள ஸ்ரீ-ல-ஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் ஒவ்வொரு மாதப்பௌர்ணமியிலும் அன்னதானம், பௌர்ணமி பூஜை, நாம சங்கீர்த்தனம் இவைகளுடன் மாதந்தோறும் சத்சங்கமாகக் கோயில் உழவாரத் திருப்பணிகளிலும்; ஜாதி சமயசார்பின்றி ஏழை மக்களுக்கான மாதாந்திர இலவச மருத்துவ முகாம்களும்; சென்னையிலும், திருச்சியிலும் வசதியற்ற ஏழைக்குடும்பங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு மாங்கல்யதானமும் ; வருடந்தோறும் திருஅண்ணாமலை கார்த்திகை தீபப் பெருவிழாவில்ல் 10 நாட்களுக்குப் பெரிய அளவில் அன்னதானம், ஆடைதானம் போன்றவையும் பலர் ஒன்று சேர்ந்து நடத்தும் சத்சங்க திருப்பணிகளாக, நடத்தி வரும் ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஈஸ்வர புத்தாண்டு பற்றி அளித்த அரிய விளக்கங்களின் சிறு தொகுப்பு.
பரம்பொருளின் இரு கண்களே தமிழ் மொழியும், வடமொழி எனப்படும் தேவமொழியும் (சமஸ்கிருதம்) ஆகும். இதில் தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாயான கலைவாணியை முறையாக வணங்கிடில் மொழிபேத உணர்ச்சிகளே தோன்றாது. எம்மொழியாயினும் ஸ்ரீசரஸ்வதியே அதற்குரிய தெய்வமாவாள். சரஸ்வதி தேவிகளில் பல அவதாரங்கள் உண்டு. உதாரணமாக கம்ப்யூட்டராகிய (Computer) கணிப்பொறித் துறைக்கு ஸ்ரீஅனுராதாக்ரமண சரஸ்வதி தேவியும்; ஓலை, கிரந்தங்கள், புத்தகங்கள் துறைக்கு ஸ்ரீசுசரித சரஸ்வதியும் அருள்பாலிக்கின்றனர். கரங்களில் புத்தகமின்றி அருள்புரிபவள் ஸ்ரீஞான சரஸ்வதி. இசைத்துறைக்குரிய வீணையேந்திய சரஸ்வதியே ஸ்ரீஸ்வரகுண சரஸ்வதி ஆவாள்.
ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு குரு உண்டு! ஸ்ரீஹயக்ரீவரே ஸ்ரீ சரஸ்வதி தேவியின் குரு ஆவார். பலகோடி யுகங்களாக மட்டுமின்றி இன்றும் திருஅண்ணாமலை மஹிமையினை ஸ்ரீநந்தீஸ்வரர் எடுத்துரைக்க, அதனை ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் கிரந்தங்களாக வடித்து வருகின்றார். எதற்காக? இதே பூலோகம் போல் எத்தனை எத்தனை பூலோகங்கள் இருக்கின்றன. நாமறிந்த பன்னிரெண்டு கிரஹங்களைத் (யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ உட்பட) தவிர எத்தனை, எத்தனை கிரஹங்கள், விண்வெளியில் சஞ்சரிக்கின்றன. நம் கண்ணுக்குத் தெரிகின்ற ஆயிரமாயிரம் நட்சத்திரங்களோடு நாம் அறியாதவை எத்தனை, எத்தனை! இவற்றிலெல்லாம் எத்தனை கோடி ஜீவராசிகள்  வாழ்கின்றன! இவையனைத்தும் நாடிவருவது நம் திருஅண்ணாமலையைத் தானே!
இத்தகைய கோடி கோடியாம் அண்டங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும், பூலோகங்களுக்கும், அதல, உதல, சுதல, என்பன போன்ற 14 லோகங்களுக்கும் ஸ்ரீஅகஸ்திய மகரிஷி வடிக்கின்ற திருஅண்ணாமலை மஹிமையைப் பறைசாற்றும் கிரந்தங்கள் சென்றடைகின்றன என்றால் திருஅருணாசல மஹிமையை எவர்தான் விண்டுரைக்க இயலும்! அந்த சர்வேஸ்வரனே நம் சற்குருவாய் வந்து ஆண்டுகொண்டாலன்றி!
இதேபோல் ஸ்ரீசரஸ்வதி தேவி பணிவன்புடன் தக்கதொரு சிஷ்யையாய், தம் சற்குருவிடம் இன்றும் இன்னமும் பாடம் பயில்கின்றாளெனில் கல்விக்கும் வித்தைக்கும், கலைக்கும் எல்லைதான் என்னே! மொழியில் தொடங்கி (கட்டுரையின் தொடக்கம்..) திருஅருணாசல மஹிமை, ஸ்ரீசரஸ்வதியைப் பற்றிச் சொல்லிய நிலையில் அடியேனுடைய குருநாதரின் மகிமைக்கு வருகின்றேன்.
அடியேனுடைய சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகள், அடியேனுடைய குருகுலவாசத்தில் 1956ம் வருடத்திலேயே இந்த ஈஸ்வர வருட மஹிமையைப் பற்றி விளக்கமாகச் சொல்ல, அதைக்கேட்டு ஆனந்தமடைந்துள்ளேன். ஸ்ரீஅகஸ்தியரின் பரிபூர்ண அனுக்ரஹத்தையும், தரிசனத்தையும் பெற்ற எம் குருநாதர், ஸ்ரீஅகஸ்திய கிரந்த நாடிகளை வரகவியாய்ப் பொழிகின்ற போது எத்தனையோ முறை ஆனந்தக் கண்ணீருடன், கேட்டு உய்த்துணர்ந்து அனுபவித்துள்ளேன். ஸ்ரீசரஸ்வதி தேவியின் பரிபூர்ண கடாட்சத்தைப் பெற்ற அவர் தெய்வீகத்தில் எதைப்பற்றிக் கேட்டிடினும் தங்குதடையின்றி தெய்வ அனுக்ரஹத்தால் விரிவாக, தெளிவாக, அருவியாய்ப் பொழிகின்ற ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களுடன் எடுத்துரைப்பார்.
நான் சிறுவனாயிற்றே! எனக்கு எப்படி அவ்வளவும் ஞாபகமிருக்கும்? – என்று அடியேன் அப்பாவித்தனமாக அவரைக் கேட்டிட, “அந்தந்த டயம் வரும்போது, அததுக்கான காலம் வரும் போது நான் சொல்றதெல்லாம் உன் காதுல ஒலிக்கும், கவலைப்படாதே! ஆனால் நான் சொல்ற நல்ல விஷயமெல்லாம் எல்லோர்க்கும் போய்ச் சேர்ற மாதிரி, நீ தெய்வத் திருப்பணி, பிரசாரம், உழவாரத் திருப்பணியெல்லாம் பண்ணனும்”, என்ற சற்குருவின் திருவாய்மொழிகள் இன்றும் அடியேனுடைய காதுகளில் ரீங்காரமிடுகின்றன. கோவணாண்டியாகத் தோற்றமளித்த அவர் மஹத்தான சித்புருஷர் என்று தம்மை வெளிக்காட்டிக் கொண்டதே கிடையாது. அப்பப்பா! அவருடன் எவ்வளவு தூரம் நடைப் பிரயாணங்கள்! தனுஷ்கோடி முதல் மானஸரோவர் வரை! வெயில், மழை, வெள்ளம், பனிக்கட்டி என்று பாராது சுற்றிக் காண்பித்த திருத்தலங்களும், மூலிகைகளும், காணுதற்கரிய தெய்வ மூர்த்திகளும் எத்தனையெத்தனை! நீங்கள் அனைவரும் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் காண்பவை அனைத்தும் எம் சற்குருநாதர் அருளியவைதாம். கால, வர்த்தமான நியதிகளுக்கேற்பவும், நடைமுறை மொழியிலும் எடுத்தியம்புவதில் சொற் குற்றமிருப்பின் அடியேனை மன்னித்திட வேண்டுகிறேன்!
இறை நம்பிக்கையில் குறை ஏன்?
ஈஸ்வர வருடம் பொதுவாக ஒருவருக்கு வாழ்வில் ஒரு முறையே வருவதாகும். ஆயுள் தேவதையின் அருளிருப்பின் இரு முறையும் வருவதுண்டு. ஈஸ்வராகிய இறைவன்மேல் நம்பிக்கைக் கொள்வது மட்டும் போதாது! இந்நம்பிக்கை நன்கு வேரூன்றுவதற்கான முறைகளை வாழ்வில் கடைபிடித்தால் தான் அது பரிபூர்ணமான பலன்களைத் தரும். ஒருபுறம் பூஜை, தானதர்மம், ஹோமம், தல தரிசனங்கள் எனச் செய்து கொண்டு மறுபுறம் புகைபிடித்தல், சூது, குதிரை ரேஸ், மது, முறையற்ற, தகாத, அதர்மமான, மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுதல், லஞ்சம், ஏமாற்றுதல், தீய எண்ணங்கள் போன்ற தீவினைக் கர்மங்களும் தொடர்ந்தால் இறைநம்பிக்கை எவ்வாறு பரிபூர்ணமடையும்? எனவே இறைநம்பிக்கையை நன்கு வேரூன்றச் செய்வதற்கான வாய்ப்புகளை அளிப்பதே ஸ்ரீஈஸ்வர வருஷம் !
கலியுகத்தில் பல முக்யமான பூஜை முறைகள், பித்ரு தர்ப்பண முறைகள், தமிழ்மொழி/வடமொழி மறை, வேத பாராயணங்கள், ஹோம வழிபாடுகள், தானதர்மங்கள் போன்றவற்றை மக்கள் கைவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒருபுறம் பிரதோஷம், கும்பாபிஷேகம் போன்ற இதர வழிபாட்டு முறைகள்/தெய்வீகத் திருப்பணிகள் பெருகிவரினும் தினசரிப் பூஜைகளுக்கான நேரம் குறைந்து வருவதோடு தெய்வீக நற்காரியம் என்றாலே அசிரத்தையும், சோம்பேறித்தனமும், ஈடுபாடின்மையும் அனைவரிடமும் ஏற்பட்டு விடுகின்றன. நாம் நிறைய பூஜைகள் செய்து ஆன்மீகத்தில், தெய்வீகத்தில் முன்னேற வேண்டும் என்ற உந்துதல் இயற்கையாகவே ஏற்படும். இது பெறுவதற்கரிய பாக்கியமாதலால் தெய்வத் திருவருளால் ஈஸ்வர வருடத்தில் இவ்வாறு எழுகின்ற இறையாக்கத்தை நன்கு விருத்தி செய்து நிறைய இறைப்பணிகளைச் செய்து ஆண்டவனால் அளிக்கப்பட்ட இந்த மானுட சரீரம் பிறருக்குப் பயன்படும் வகையில் இறைநெறியில் வாழ்ந்தால் தான் உத்தம தெய்வீக நிலையை அடைய முடியுமே தவிர தனக்காகவோ, தன் குடும்பத்திற்காகவோ சுயநலமாக வாழ்வது ஒரு வீணான வாழ்க்கையே!
ஈஸ்வர வருடத்தில் தமிழ்மொழி!/வடமொழியில் உள்ள மறைகளை, வேதமந்திரங்களை குறிப்பாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை எவ்வித இனவேறுபாடின்றி அனைவரும் ஓதிட வேண்டும். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருமந்திரம், திவ்யபிரபந்தம், பெரியபுராணம், திருஅருட்பா போன்ற தமிழ் மறைகளில் ருக், யஜுர், சாம, அதர்வண மந்திர சக்தியும், பீஜாட்சரங்களும் நிறைந்துள்ளன. தேவமொழியிலும் மிக எளிதான பல ஸுக்தங்களும், ருத்ரம், சமகம் போன்ற அரிய சக்திவாய்ந்த மந்திரங்களும் உள்ளன. அனைவரும் இவற்றைச் சத்சங்க பூஜையாக ஜாதி, குல, இன, மத பேதமின்றி ஒன்று சேர்ந்து பாராயணம் செய்து சிறப்புடன் வாழவேண்டும். தனிமனிதனாக பூஜிப்பதை விடப் பலருடன் சேர்ந்து நடத்துகின்ற கூட்டுப் பிரார்த்தனை மூலமாகப் பன்மடங்குப் பலன்களையும், ஆன்மீக ஆற்றலையும், தெய்வத் திருவருளையும் மிக எளிதில் பெற்றிடலாம். ஒவ்வொரு வருடத்திற்கும் உரித்தான பல சிறப்பம்சங்கள் உண்டு. இதுபற்றிய “பஞ்சாங்க படனம்“ என்ற விளக்கத்தை இவ்விதழில் அளித்துள்ளோம்.
முற்காலத்தில் அந்தந்த வருடத்திற்கான விசேஷமான பூஜைகளை மஹான்களே முன்வந்து அளித்திடுவர். தற்காலத்தில் பெரியோர்களை மதிக்கின்ற நற்பண்பு மறைந்து வருவதால் மஹான்களும் தங்களுடைய தெய்வீகத் தன்மைகளை வெளிக்காட்டாது சாதாரண மனிதரைப் போல் வாழ்கின்றனர். இத்தகைய மஹான்களையும், யோகியரையும், ஞானியரையும் நாடிச் சென்று தக்க சற்குருவைத் தந்தருளுமாறு ஈஸ்வர வருடத்தில் பிரார்த்தனை செய்திடுங்கள்! சற்குருவை உளமாரத் தேடி அலைவோர்க்கு ஈஸ்வர வருடம் உற்ற துணையாக நின்று உரிய சற்குருவைப் பெற உறுகால தேவதையாய் உதவும்..
புத்தாண்டிலிருந்து.....
1. ஸ்ரீவிநாயகருடைய சித்தி கணபதி, வரகணபதி, தருண விநாயகர் என்ற பல அவதார நிலைகளை நாமறிவோம். ஸ்ரீவிநாயகப் பெருமானின் சில அவதார அம்சங்கள் சிறப்பாக ஈஸ்வர ஆண்டில் தோன்றியவையாதலின் ஈஸ்வர ஆண்டு முழுதும் “ஸ்ரீமஹா கணேச ப்ராத ஸ்மரணம்” என்ற மந்திரத்தைத் தினமும் 5 முறை ஓதுதல் வேண்டும். காலங்காலமாக மகரிஷிகள் முதல் அனைவரும் பாராயணம் செய்துவந்த அற்புத சுலோகமிது!
2. ஈஸ்வர ஆண்டில் சுவாச நோய்கள் மிகும். ஆஸ்த்மா போன்ற சுவாச நோயுடையோர் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். ஆரோக்யமுள்ளோரும் பிராணாயாமம், ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் போன்றவற்றில் அதிக அளவில் ஈடுபட்டு மூச்சுக் குழாய் நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ஆரோக்யம் தரவல்ல, சித்த மருத்துவ குணங்கள் மட்டுமின்றி, ஆன்மீக குணங்களும் நிறைந்த “சித்த ஸ்புட வாடிக திரவியம்” ஒன்றுண்டு. தினமும் இதனை இரவு சிறிது உண்டுவர, நல் ஆரோக்யமும், நற்பண்புகளும், அனைத்தையும் விட தெய்வீக குணங்களும் கூடி வரும். சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கம், ஏலக்காய், சர்க்கரையுடன் சிறிது தேன் சேர்த்துத் தினமும் இரவில் உண்டு வருக! இவற்றைப் பொடி செய்து ஒன்றாகக் கலந்து தினமும் இரவில் தேன் சேர்த்து உண்டிடலாம். அல்லது நம் இல்லத்துப் பெரியோர்களைக் கொண்டு இதனைச் செய்தல் மிகவும் சிறப்புடையதாகும்.
3. இவ்விதழில் பிறிதொரு தலைப்பில் விளக்கியுள்ளவாறு ஈஸ்வர ஆண்டில் ஐந்து விதமான ராகங்களில் (தெய்வீக) பாடல்களைப் பாடி வருதல் வேண்டும். இது எளிய முறையில் பல தீய கர்ம வினைகளைக் கழிக்க உதவும் முறையாகும்.
ஸ்ரீமஹா கணேச ப்ராத ஸ்மரணம்
(ஈஸ்வர ஆண்டு தொடக்கம் முதல் தினமும் ஐந்து முறை ஓதுதல் வேண்டும்.)
ப்ராத: ஸ்மராமி கணநாத மனாத பந்தும்
ஸிந்தூர பூர்ண பரிசோபித கண்ட யுக்மம்:
உத்தண்ட விக்ன பரிகண்டன சண்ட தண்டம்
ஆகண்டலாதி ஸுரநாயக ப்ருந்த வந்த்யம்::
ப்ராதர் நமாமி சதுரானன வந்த்யமானம்
இச்சானுகூல மகிலம் ச வரம் ததானம்:
தம் துந்திலம் த்விரசநாகி பயஞ்ஜ ஸுத்ரம்
புத்ரம் விலாஸ சதுரம் சிவயோ: சிவாய::
ப்ராதர் பஜாலம்ப பயதம் நிஜ பக்த சோக
தாவானலம் ஸுரவரம் வரகுஞ்ச ஜாஸ்யம்
அஜ்ஞான கானன விநாசன ஹவ்ய வாஹம்
உத்ஸாக வர்த்தனமஹம் ஸுதமீச்வரஸ்ய
ச்லோகத்ரய மிதம் புண்யம்
ய: படேத் ப்ரயத: புமான்:
ப்ராதருத்தாய ஸததம் ஸ
ஸாம்ராஜ்ய மாப்னுயாத்::”
ஸ்ரீமஹா கணேச ப்ராத ஸ்மரணம்

அமுத தாரைகள்

ஸ்ரீமதே ராமானுஜாய நம: திருமால் நெறிவாழி! திருவருட் செயல் வாழி!
1. ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீஆஹுய வரதரைத் தரிசனம் செய்து வெண்பொங்கல் தானம் செய்திடில் தொழிலில் திறமை பெருகும். வியாபாரம் விருத்தியாகும்.
2. வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளைப் பற்றி நம் பெரியோர்கள் பெரிதும் கவலைப்படுகின்றனர். குறிப்பாகத் தம் பேத்திகள்/பேரன்கள் நல்ல ஒழுக்கத்துடன் அங்கு வாழ வேண்டும் என்ற பிரர்த்தனையிலேயே காலம் கழிக்கின்றனர். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ நேரத்தில் வெள்ளிப் பூணூலை மருந்தீஸ்வரருக்குச் சார்த்தி, ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபிக்கப்பட்ட வெண்மை நிற ஆடைகளை ஏழைகளுக்குத் தானமளித்து வர, வெளிநாட்டில் வாழும் உறவினர்கள் நல்வாழ்வு பெறுவர். நல்ல செய்திகளும் தேடி வரும். “சிவயசிவ! கோகழி கோவே போற்றி!“
3. சீர்காழி அருகே குறையலூரில் ஸ்ரீபஞ்ச நரசிங்க மூர்த்தி அருள்பாலிக்கின்றார். பிரதோஷ காலத்தில் அவதாரம் செய்தமையால் ஸ்ரீநரசிங்க மூர்த்தியை இங்கு பிரதோஷ நேரத்தில் தரிசித்து அடிப்பிரதட்சிணம் செய்து வந்திடில் நோய்களின் கடுமை குறையும். தேக ஆரோக்கியம் பெருகும். சர்க்கரைப் பொங்கல் தானம் சிறப்புடையது.

ஸ்ரீஆதிநாதர் வயலூர்

ஸ்ரீஆதிநாயகி வயலூர்

4. சஷ்டி திதியில் இரவில் முருகனுடைய வேலிற்குப் பவள மணிகள் கோர்த்த மாலை சார்த்தி 1008 போற்றிகள் துதித்து, மறுநாள் காலை அப்பவள மாலையை அணிந்திடில் கோர்ட்டு விவகாரங்களுக்கு, நிலபுல சொத்து அம்சங்களுக்குரிய நியாயமான தீர்ப்புகள் வழங்கப்படும். சிவப்பு நிறத்திற்குரியவர் செவ்வாய் பகவானே ஆவார். பவளக் கல்லிற்குச் செவ்வாய் கிரஹத்தின் தேவதா மூர்த்தியே முருகப் பெருமான்!.. வேல் முருகா! வெற்றிவேல் முருகா!
5. திருக்கோலக்காவில் அருள்புரியும் ஸ்ரீதாளபுரீஸ்வரருக்கு மல்லிகைப்பூ மாலை சார்த்தி, உளுந்து வடை தானமளித்து, இறைப் பிரசாதமான மல்லிகைப்பூவைக் காதில் வைத்து வந்தால் காது கோளாறுகள் நிவர்த்தியாகும். காது கேளாதவர்களுக்கும் நல்வழி கிடைக்கும். ENT துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் தங்கள் துறையில் சிறப்புப் பெற இத்திருத்தலத்தில் தங்கள் வசதிக்கு ஏற்ப திருப்பணிகளையும், தான தர்மங்களையும் செய்ய வேண்டும்.
6. சிவசிவ ஏகம்பத்துறை எந்தாய் போற்றி! ஸ்ரீஏகாம்பரேஸ்வரருக்குத் திருஆதிரை நட்சத்திர தினத்தன்று பசுநெய் அபிஷேகம் செய்து அப்பிரசாதத்தைத் தானமாய் அளித்திடில் கொடுக்கல் வாங்கலில் வருகின்ற துன்பங்கள் விலகும். திருஆதிரை நட்சத்திரம் ராகு கிரஹத்திற்குரியது.
7. ஓம் சக்தி! பராசக்தி! இராகு காலத்தில், நிற்கின்ற கோலத்திலுள்ள துர்க்கை அம்மனின் பாதத்தின் பத்து விரல்களுக்கும் தாமே அரைத்த சந்தனத்தால் பொட்டு வைத்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து, உணவு தானம் செய்திடில், நடனத் துறையைச் சேர்ந்தவர்கள் நலம் பெறுவர்.
8. அலுவலகத்தில் மட்டுமல்லாது உறவினர்களினாலும் பிறர் சூட்டுகின்ற பழி, அவதூறினால் அகௌரவமும், பண இழப்பும், சொத்து நஷ்டமும் பலருக்கு ஏற்படும். இந்த வேதனைகளிலிருந்து நீங்கவும், இழந்தவற்றை முறையான வழிகளில் பெறவும் குறையலூர் ஸ்ரீபஞ்ச நரசிங்க சுவாமியை ஞாயிறு அன்று சூரிய உதயத்திலும், சூரிய அஸ்தமனத்திலும் அங்க பிரதட்சிணமோ, மருதாணியிட்ட கால்களுடன் அடிப்பிரதட்சிணமோ செய்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து, தானமளித்திட வேண்டும்.
9. ஜெய ஜெய கணபதி! ஸ்ரீஜெய கணபதி! சதுர்த்தி திதியில் கணபதிக்குக் கொழுக்கட்டை மாலை செய்து  அணிவித்து, பிறகு அவற்றைத் தானம் செய்திடில், சாப்பிடுவதற்கு அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட நன்றாகச் சாப்பிடும்! சதுர்த்தி திதியில் அவதரித்த பாலவிநாயகரே பசிப்பிணி தீர்க்கும் பெருவயிறுடையோனாய் அருள்பாலிக்கின்றார்.
10. கோர்ட் வழக்குகளினால் பலர் மனவேதனைகளுடன் வாழ்கின்றனர். நியாயமான தீர்ப்பைத் துரிதமாகப் பெறவும், இவ்வித குழப்பமான மனோநிலையிலிருந்து (disturbed mind) விடுதலை பெறவும், மன சாந்தியை அளிக்கவல்ல ஸ்ரீசந்திர பகவானுக்கு உரித்தான திங்கட்கிழமை அன்று குறையலூர் ஸ்ரீபஞ்சநரசிங்க சுவாமிக்குப் பால் பாயசம் நைவேத்யம் செய்து, தானம் அளித்துவர வேண்டும்.
11. நம் இல்லங்களில் சில சமயத்தில் பிள்ளையார் எறும்புகள் திடீரென்று கூடும். பிள்ளையார் எறும்பை எக்காரணம் கொண்டும் துன்புறுத்துதலோ, விரட்டுதலோ, நசுக்குதலோ கூடாது. இவ்வாறு திடீரென்று பிள்ளையார் எறும்புகள் கூடுமாயின் பிறருடைய பசிக்கோ, ஏக்கத்திற்கோ, அறிந்தோ, அறியாமலோ நாம் காரணமாக இருக்கின்றோம் என்பது பொருளாகும். இதற்குப் பரிகாரமாக உடனடியாக அருகில் உள்ள பிள்ளையார் சந்நிதியிலோ, கோயிலிலோ ரவை அரிசியினை, தான்ய மாவு, சர்க்கரை கலந்த உணவுப் பொடியை எறும்புகளுக்கு உணவாக இடவேண்டும். இவ்வாறு இட்ட உடனேயே நம் இல்லத்தில் பிள்ளையார் எறும்புகள் மாயமாய் மறைந்துவிடும்.
12. சிவனே போற்றி! அரனே போற்றி! சிவன் கோயிலில் பள்ளியறை பூஜைக்குப் பால் நைவேத்யம் அளித்துப் பிரசாதமான அந்தப் பாலைத் தர்மம் செய்திடில் தீய கனவுகளின் விளைவுகளை அறவே தடுத்திடலாம். காரணம் பள்ளியறை பூஜையின்போது நித்ரா தேவி பிரசன்னமாவதால், தேவியின் அனுக்ரஹத்தால் நித்திரைத் துன்பங்கள் நீங்கும்.
13. செவ்வாய்க் கிழமையன்று, ஸ்ரீதுர்க்கா தேவிக்கு உரித்தான சிவப்பு நிற உணவு வகைகளைக் (தக்காளி சாதம், etc.) குறையலூர் ஸ்ரீபஞ்சநரசிங்க சுவாமிக்கு நைவேத்யம் செய்து தானம் அளித்து, குடும்பத்தினருடன் 12 முறை பிரதட்சிணம் செய்து வர நற்காரியங்கள் சுபமாக முடியும்.
14. சிறந்த கல்விக்குரிய அனுக்கிரகங்களைத் தருபவர் ஸ்ரீபுதபகவான், சரஸ்வதி தேவியும் தம் குருவான ஸ்ரீஹயக்ரீவ பெருமாளுக்குப் புதன்கிழமையன்று விசேஷ பூஜைகளைச் செய்து வருகின்றாள். தம் பிள்ளைகளுடன் புதன் கிழமையன்று குறையலூர் ஸ்ரீபஞ்சநரசிங்க சுவாமிக்கு வடைமாலை சாற்றி, 18 முறை நமஸ்காரங்கள் செய்துவர, குழந்தைகள் படிப்பில் நன்கு முன்னேறுவர். கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர். ஆசிரியைகள் மாணவ, மாணவியருக்கான சுற்றுலாவின் போது புதன் கிழமையன்று இத்தல தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தால் தேர்வு சதவீதம் நன்கு அமையும்.
15. சிவசிவ! ஓம் ஜெய்சக்தி! எந்த வியாபாரத்திற்கும் அடிப்படையாகத் திகழ்வது நல்ல வாடிக்கையாளர்கள். நல்ல வாடிக்கையாளர்களின் தொடர்ந்த ஆதரவு பெற்றால் தான் வியாபாரம் விரைவில் நல்ல முன்னேற்றத்தை அடையும்.
“மின்னும் சடைமேல் இள வெண்திங்கள் விளங்கவே
துன்னும் கடல் நஞ்சிருள் தோய்கண்டர் தொன்மூதூர்
அன்னம் படியும் புனலார் அரிசில்
அலைகொண்டு பொன்னும் மணியும்
பொருதென் கரைமேற் புத்தூரே. “
இனிமையான இத்தேவாரப் பாடலைத் தினந்தோறும் பலமுறை ஓதி, அம்மன் கோயிலில் தயிர் சாதம் அன்னதானம் அளித்து வந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவர், வியாபாரம் விருத்தி ஆகும்.
16. குரு மற்றும் புதனின் கிரக சஞ்சார அமைப்புகளினால் வெளிநாட்டுக் கல்வியும், வேலை வாய்ப்பும் நன்கு அமைகின்றன. குரு பகவானுக்குரிய வியாழன் அன்று குறையலூர் ஸ்ரீபஞ்ச நரசிங்க சுவாமியைத் தரிசிக்க, குரு கிரக ப்ரீதியாக மஞ்சள் நிற வஸ்திரங்களைச் சுவாமிக்குச் சார்த்தி எலுமிச்சை அன்னம் தானம் செய்து வர வெளிநாட்டுக் கல்வியும், வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் சிறப்புற அமையும்.
17. இல்லற சுகத்தை அளிப்பவர் சுக்கிர பகவான். வெண்மை நிறமும் அவருக்கு உரித்தானதே. சுக்கிரனுக்குரிய கிரக தேவதை ஸ்ரீலட்சுமி ஆவாள். பணக்கஷ்டம் போன்ற பலவித தடங்கலால் திருமணம் தடைப்பட்டு வந்திடில் சுக்கிர பகவானுக்குரித்தான வெள்ளி அனறு குறையலூர் ஸ்ரீபஞ்சநரசிங்க சுவாமிக்கு வெண்பட்டாடை சார்த்தி, மஞ்சள் தடவிய பஞ்சு மாலையும் அணிவித்து, வெண்பட்டினை ஏழை மக்களுக்குத் தானமாக அளித்து வர திருமண தோஷங்கள் நிவர்த்தியாகி, திருமணம் விரைவில் கைகூடும்.
18. நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பிரசன்ன பிரதிஷ்டை என்னும் தந்திர ரகசியப்படி நூற்றியெட்டு லிங்கங்கள் பெரியோர்களால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன ஒவ்வொரு லிங்கத்திற்கும் கோண தீட்சண்ய சக்திகள். இந்த லிங்கங்களுக்கு மாதசிவராதிரிகளில் அபிஷேகம் செய்து, அன்னதானம் செய்ய, மனக் குழப்பங்களும் தேவையற்ற சந்தேங்களும் நீங்கிக் குடும்பத்தில் சுமூகமான நிலை ஏற்படும்.
19. ஆயுள்காரகனாகிய சனீஸ்வர மூர்த்தி சனிக்கிழமையன்று சனி ஹோரையில் ரோக நிவர்த்தீஸ்வரராகவும் அருள்பாலிக்கின்றார். இதற்கான அனுக்கிரகத்தை ஸ்ரீநாராயணன் சொரூபமான ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியிடம் இருந்தே பெற்றார். பெருமாளுக்கும் புதன் கிழமையும், சனிக்கிழமையும் உகந்த நாட்கள் ஆதலின் சனிக்கிழமையன்று குறிப்பாக, சனி ஹோரையில் அல்லது புதன் ஹோரையில் குறையலூர் ஸ்ரீபஞ்சநரசிங்க சுவாமிக்கு நல்லெண்ணெய் கலந்த புளியோதரையை நைவேத்யம் செய்து தானமளித்திடில் கடுமையான நோய்கள் குணமடையும்.
20. ஸ்ரீபாம்பன் சுவாமிகள் துணை! வேல்வேல் வெற்றிவேல்! பாம்பன் சுவாமிகளின் சமாதியில் புதன்கிழமை அமிர்த யோகத்தில் அரைத்த அகில், சந்தனம் அபிஷேகம் செய்திடில் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். ஏனெனில் மஹான்களின் ஜீவசமாதிகளில் அமிர்தயோக நேரத்தில் வித்யாதாரை என்ற நீர்க் கிரணங்கள் சுரக்கின்றன.
21. சிவசிவ! ராம்ராம்! செவ்வாய்க் கிழமையகளில் அரைத்த சந்தனத்தைச் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரருக்கு இரவு சாற்றி மறுநாள் எடுத்து உபயோகித்திடில் வைத்தியர்களால் கைவிடப்பட்ட நோய்களுக்கு நல்ல முடிவு தெரியும்
22. ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் துணை! பாம்பன் சுவாமிகளின் சமாதியில் சித்த யோகத்தில் அகில் கட்டை, சந்தனக் கட்டையைக் காவிரி, கங்கை, போன்ற புண்யதீர்த்தம் கொண்டு அரைத்துச் சார்த்தி, வேல்மாறல் தோத்திரத்தைப் பாடினால் வியாபாரத்தில் பணநஷ்டம் அடைவது விலகும். “வேல் வேல் வெற்றிவேல்! வேல்வேல் வெற்றிவேல்! சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமணிய வேல்” என ஓதிடுக.
23. சீர்காழி அருகிலுள்ள குறையலூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஉக்ர நரசிங்க மூர்த்தித் தலமானது இங்குள்ள பஞ்ச (ஐந்து) நரசிம்மத் தலங்களுள் ஒன்றாகும். பெருமாள் வலது பாதத்தைத் தாமரை மலரிலும், வலது மார்பில் சக்கரமும் கொண்டு அருளும் அற்புதத் தலம் இது.
நித்ய கர்ம நிவாரணி

தேதி

 தான தர்ம பூஜா முறைகள்

 அருள்வழியாக கிட்டும் நிவாரண நலன்கள்.

1.4.1997

சனீஸ்வரருக்குக் கருவேப்பிலைப் பொடி சாதம் நைவேத்யம்-  முடவர்களுக்குத் தானம்

தீய எண்ணங்கள் மனதை விட்டு அகலும்.

2.4.1997

ஹயக்ரீவர் கோயிலில், அமிர்தயோக நேரத்தில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் , தானம்

குழந்தைகளின் கல்வி விருத்தியாகும்.

3.4.1997

ஸ்ரீமகாலக்ஷ்மி சன்னதியில் வெண்பொங்கல் நைவேத்யம், தானம்

துர் எண்ணங்கள் அகலும்.

4.4.1997

வாஸ்து நாள்: கட்டிடத் தொழிலாளர்களுக்கு அன்ன, ஆடைதானங்கள்,.

அக்னீஸ்வரர் என்ற பெயருடைய  சிவன் கோயிலில் (திருக்கானூர், கஞ்சனூர், குமார வயலூர் etc.) செய்திடில் கட்டிட துறையில் உள்ளோர்.(Flat promoters engineers ) நலம்பெருவர்.

5.4.1997

ஸ்ரீநந்தீஸ்வரருக்கு வேர்க்கடலை மாலை, எண்ணெய்க் காப்பு, சுண்டல் தானம்

வெல்டிங் (welding), தீயனைப்புத் துறையினர் தொழிலில் முன்னேற்றம் அடைவர்.

6.4.1997

போதாயன அமாவாசை: தர்ப்பணமிட்டு தயிர் சாத தானம்

தபால் தந்தித் துறையில் உள்ளோர்க்குத் துன்பங்கள் நீங்கும்.

7.4.1997

அமாவாசை : பல்கலைக்கழகத்தில் பணிபுரிவோர் 60வயது நிரம்பிய தம்பதியர்க்குப் பாத பூஜை செய்து தேவையான உதவிகளை அளிப்பதால்...

 அலுவலகத் துன்பங்கள் நீங்கப் பெறுவர்.

8.4.1997

இன்று சந்திரனைத் தரிசித்து சந்திரபகவானுக்குப் பால் சாதம் நைவேத்யம் , தானம்.

 இருதய சம்பந்தமான  நோய்கள் விலகும். இருதயத் துறை மருத்துவ நிபுணர்கள் (CARDIOLOGISTS) தம் துறையில் சிறப்படைவர்.

9.4.1997

இன்று தசாவாதார மூர்த்திகளுள்ள கோயிலில் அபிஷேக ஆராதனைகளுடன் எலுமிச்சம் பழ சாதம் தானம் செய்திடல் வேண்டும்.

பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம்.

10.4.1997

இன்று முருகன் கோயிலில் தேன் குழல் தானம்

மோட்டார் பம்ப்செட் துறையில் உள்ளோர் நலம் பெறுவர்.

11.4.1997

நரசிம்மர் கோயிலில் பானக நைவேத்யம், தானம்

IAS/IPS போன்ற உயர் அதிகாரிகளுக்கு வரும் அலுவலகத் துன்பங்கள் விலகும்.

12.4.1997

இன்று முருகன் கோயிலில் அன்னதானம்

காவல் துறையினருக்கு இடமாற்றத்தால் வரும் இன்னல்கள் தீரும்.

13.4.1997

புதுவருடம் பிறக்கும் இரவு 10.50க்கு மேல் சிவன் கோயிலில் அபிஷேக ஆராதனைகள், தானதர்மங்கள் செய்திட

தெய்வத் திருப்பணிகளில் ஈடுபடும் வாய்பபு கிட்டும்.

14.4.1997

ஈஸ்வர வருடப்பிறப்பு- ஸ்ரீராமர் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் தானம்

பிள்ளைகள் பெற்றோர்களின் சொற்களை மதித்து நடப்பர்.

15.4.1997

துர்க்கை கோயிலில் அபிஷேக ஆராதனைகள், சிவப்பு நிற உணவு தானம். (தக்காளி சாதம்)

வியாபாரத்தில் வரவேண்டிய கடன்கள் வசூலாகும்.

16.4.1997

ஸ்ரீராமநவமி- ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடைமாலை சார்த்தி, ஸ்ரீராமர் கோயிலில் அதனைத் தானமளித்திட

குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவது தணியும்.

17.4.1997

இன்று சித்ரகுப்தனை வழிபட்டு சித்ரான்னங்கள் தானம்

கடுமையான நோய்கள் தீரும்.

18.4.1997

எருமைக்கு அகத்திக் கீரை அளித்தல்

எதிர்பாராத துன்பங்கள் நீங்கும்.

19.4.1997

கரிநாள், கருவேப்பிலை சாத அன்னதானம்

மின்சாரத் துறையைச் சார்ந்தோருக்குத் தொழிலில் வரும் துன்பங்கள் நீங்கும்.

20.4.1997

வன்னிமரப் பிள்ளையாருக்கு அபிஷேக ஆராதனைகள்

மோதக நைவேத்யம், தானம் – மாமனார், மாமியாரின் கொடுமைகள் தணியும்.

21.4.1997

சித்ரா தீர்த்தம் .சோடா நீர்மோர் போன்ற தாகம் தீர்க்கும் பணிகளில் உள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்திடில்

வாகன பாக்யம் கிட்டும்.        

22.4.1997

வடமொழி, தமிழ்மறை ஓதுபவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்திடில்

குழந்தைகளின் கல்வி விருத்தியாகும்.

23.4.1997

இன்று தலைவாசலில், தாமே அரைத்த மஞ்சள், குங்குமம் மற்றும் சந்தனத்தை இட்டு தலைவாசல் பூஜையைச் செய்திட,

பெண்களின் மாங்கல்ய பலம் விருத்தியாகும். கணவன் நல்ல ஆரோக்யம் பெறுவார்.

24.4.1997

கணபதிக்குக் கொய்யாப்பழம் நைவேத்யம்

குழந்தைகளுக்குப் பழ தானம்., சீதள நோய்கள் தீரும்.

25.4.1997

தேக்கு, மா, பலா, அத்தி, அரசு, வில்வ மரப்பலகைகளை (மனைகளை)கோயில்களுக்கோ, நன்முறையில் பூஜைகளைச் செய்பவர்களுக்கோ அளித்திடில்,

புளி வியாபாரம்  செய்பவர்களுடைய வியாபாரம் மேன்மை பெறும்.

26.7.1997

கொன்றையடி விநாயகருக்கு வஸ்திரம் சார்த்தி விளாம்பழம் , வெல்லம், கொழுக்கட்டை நைவேத்யம் செய்து தானம்...

அடிக்கடி ரெயில், விமானப் பயணம் செய்பவர்களுக்கு ரக்ஷைபோல் காக்கும்.

27.4.1997

பாத்திரக் கடையில் வேலை செய்யும் ஏழைகளுக்கு உதவி செய்திட,

மளிகை வியாபாரம் விருத்தியாகும்.

28.4.1997

ஏழை டிரைவர்கள் சூர்ய பகவானுக்குத் தேன் அபிஷேகம் செய்து ஏழைகளுக்கு இயன்ற உதவி

வாழ்வில் முன்னேற்றம்

29.4.1997

சிகப்பு நிற ஆடையை அணிந்தோர்க்கு வஸ்திர தானம் அளித்திட

இரத்த சம்பந்தபட்ட நோய்கள் நீங்கும்.

30.4.1997

நடராசருக்கு அபிஷேகம் – மண்பாண்டம் செய்யும் ஏழைகளுக்கு அன்னதானம்.

இரவில் ஏற்படும் விபத்துகள் நீங்கும்.

ஸ்ரீமுருகப் பெருமான் வயலூர்

கூடா நாட்கள்
(பிரபலாரிஷ்ட யோகம் எனப்படும் கூடாநாட்களில் எல்லாவிதமான சுபகார்யங்களையும் தவிர்க்கவும்..)
1.4.1997 - செவ்வாய்க் கிழமை – மாலை 5.30 வரை..
21.4.1997  - திங்கட்கிழமை இரவு 7.42க்கு மேல் மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 5.58 வரை
29.4.1997 – செவ்வாய்க்கிழமை காலை 5.53 முதல் இரவு 9.53 வரை
30.4.1997 – புதன்கிழமை – இரவு 8.24க்கு மேல் மறுநாள் வியாழன் காலை 5.52 வரை

விசேஷ தினங்கள்
4.4.1997 – வாஸ்துநாள்
11.4.1997 – லக்ஷ்மி ஸ்ரீபஞ்சமி
13.4.1997 – இரவு 10.50க்கு மேஷத்தில் சூரிய பிரவேசம் (தமிழ்வருடம் பிறக்கும் நேரம்).
14.4.1997 – தமிழ் வருடப்பிறப்பு
16.4.1997 – ஸ்ரீராமநவமி
22.4.1997 – சித்ரா பௌர்ணமி (இன்று இரவே பௌர்ணமி கிரிவலம் மேற்கொள்ள வேண்டும்)
23.4.1997 – வாஸ்து நாள்.

ஓம்ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam